Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘markets’ Category

Stock Markets & Growth Index – Budget Analysis: Developed Country Indicators

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2008

பங்குச் சந்தையும் பசித்த வயிறுகளும்

உ . ரா. வரதராசன்

இன்று ஆட்சியிலிருப்போரின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருவதும் ஊடகங்களின் வணிகச் செய்திப் பகுதியை ஆக்கிரமித்து நிற்பதும் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண்ணின் ஏற்ற இறக்க சதிராட்டம்தான்.

கடந்த 2007ம் ஆண்டில் இந்த சென்செக்ஸ் புள்ளிகள் 45 சதவீத உயர்வையும் தாண்டியது. மும்பை பங்குச் சந்தையில் அன்றாடம் வாங்கி விற்கப்படும் 30 பெரும் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பை மட்டுமே வைத்து இந்த சென்செக்ஸ் குறியீட்டுப் புள்ளிகள் கணக்கிடப்படுகின்றன. 21,000 புள்ளிகளைத் தொட்டு சாதனையை நிகழ்த்திய இந்த சென்செக்ஸ் இப்போது 14,000 புள்ளிகளாகச் சரிந்தும், பின்னர் ஏறுவதுமாக இருக்கிறது.

இன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற 2004-ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையிலான நான்காண்டுகளில் மும்பை மற்றும் தில்லி பங்குச் சந்தைகளில் நடைபெற்ற வர்த்தகத்தின் அளவு 286 சதவீதம் (சுமார் 3 மடங்கு) உயர்ந்துள்ளதாக சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்களின் ஊஞ்சலாட்டத்தை உற்றுக் கவனிப்பதிலேயே நாட்டின் நிதியமைச்சர் குறியாக இருக்கிறார்.

இப்போது வெளிநாட்டு மூலதனம் வரவு அதிகரிப்பதானாலும், சர்வதேச அளவில் டாலர் மதிப்பு சரிந்ததானாலும், இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே உயர்ந்து வருவது, நிதியமைச்சருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைச் சமாளிப்பதற்காகக்கூட அன்னிய நிதி மூலதனத்தின் மீது எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்க மத்திய அரசு முனையவில்லை. மாறாக இந்திய நாட்டுக் கம்பெனிகள் அயல்நாடுகளில் வாங்கும் கடன் தொகைகளை இந்தியாவுக்குக் கொண்டு வரக்கூடாது. வெளிநாட்டிலேயே மூலதனச் செலவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது நம் நாட்டவர்களே வெளிநாட்டில் கடன் வாங்கி அன்னியச் செலாவணியை நாட்டுக்குள் கொண்டு வருவது தடுக்கப்பட்டுள்ளது. அதே கடன் தொகைகள் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மூலம் பங்குச் சந்தைக்கு வந்து போவது என்பது இப்போதும் நடந்து வருகிறது.

நம் நாட்டின் நிதியமைச்சரின் பார்வை பங்குச் சந்தை வர்த்தகத்திலேயே பதிந்து கிடப்பது, நிதியமைச்சகம் கவலையோடு பரிசீலிக்க வேண்டிய எண்ணற்ற பிரச்னைகள் குறித்துப் பாராமுகம் காட்டுவதில் முடிந்திருக்கிறது.

இந்த ஆண்டின் பட்ஜெட்டில்தான் (அரசியல் காரணங்களுக்காகவேனும்) விவசாயக் கடன் ரத்து போன்ற சில அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. எனினும், பங்குச் சந்தையில் சரிவு ஏற்படுகையில் கம்ப்யூட்டரில் முகம் பதித்திருக்கும் தரகர்களின் முகத்தில் தெரியும் கவலைக்குறிகள் நிதியமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு, ஒவ்வொரு நாளும், பசித்த வயிறுகளோடு இரவில் படுக்க நேரிடும் கோடானகோடி சாமானிய இந்தியர்களின் துயரந்தோய்ந்த முகங்கள் ஈர்க்கவில்லை என்பது வருந்தத்தக்கது.

வளரும் நாடுகளில் பசித்த வயிறுகளின் சவால் பற்றிய ஓர் ஆய்வறிக்கை, உலகப் பட்டினிக் குறியீட்டெண் 2007 என்ற பெயரில் வெளியாகியுள்ளது. 2000 – 2005ம் ஆண்டுகளில் 118 வளரும் நாடுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தப் பட்டினிக் குறியீட்டு எண் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகம் 21ம் நூற்றாண்டில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்முயற்சியில் 189 நாடுகளின் ஆட்சியாளர்கள் கூடி விவாதித்து அடுத்த இரண்டாயிரமாவது ஆண்டின் வளர்ச்சி இலக்குகளை வரையறுத்து வெளியிட்டனர். 1990-ல் தொடங்கி 2015-க்குள் எட்டப்பட வேண்டிய இந்த இலக்குகள், கடுமையான வறுமையையும் பட்டினியையும் ஒழிப்பது, அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகள், குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைப்பது, தாய்மைக் காலத்தில் பெண்கள் ஆரோக்கியம், எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களை எதிர்கொள்வது போன்றவற்றை உள்ளடக்கி அமைந்தன. இந்த இலக்குகளைப் பாதியளவாவது 2003-ம் ஆண்டுக்குள் எட்டிவிட முயற்சிகள் மேற்கொள்ளப்படவும் முடிவெடுக்கப்பட்டது. இதை மையமாக வைத்து மூன்று முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்த உலகப் பட்டினிக் குறியீட்டு எண் தயாரிக்கப்பட்டுள்ளது.

1. ஒரு நாட்டின் மொத்த மக்கள்தொகையில் ஊட்டச்சத்து குறைவான மக்கள் எண்ணிக்கையின் விகிதம் (உட்கொள்ளும் உணவின் அளவு உடலின் தேவைக்குக் குறைவாக உள்ள மக்கள்தொகைகளின் எண்ணிக்கை).

2. ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை (வளர்ச்சி குறைந்த, சோகை பிடித்த குழந்தைகளின் சதவிகிதம்).

3. பிறந்த ஐந்தாண்டுகளுக்குள் இறந்துவிடும் குழந்தைகளின் (ஆரோக்கியமற்ற சூழல், போதுமான உணவு இல்லாமை காரணமாக நேரிடும் குழந்தைச் சாவுகளின்) எண்ணிக்கை.

இந்த மூன்று அளவுகோல்களை வைத்துக் கணக்கிட்டு 118 நாடுகளில் நிலவும் நிலைமைகளை இந்தப் பட்டினிக் குறியீட்டெண் படம்பிடித்துள்ளது. இதில் குறைவான புள்ளிகள் முன்னேற்றமான நிலையையும் கூடுதலான புள்ளிகள் மோசமான நிலையையும், சுட்டிக்காட்டுவதாக அமையும். 10 புள்ளிகளுக்கும் அதிகமாக உள்ள நாடுகளின் நிலைமை மோசமானது என்றும் 20 புள்ளிகளுக்கும் அதிகமாக உள்ள நாடுகளின் நிலைமை கவலைக்குரியது என்றும் 30-க்கும் அதிகமான புள்ளிகளைப் பெறும் நாடுகள் கடும் கவலைக்குரியது என்றும் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்தக் குறியீட்டு எண்ணில் இந்தியா பெற்றுள்ள புள்ளிகள் 25.03.

118 நாடுகளின் பட்டியலில் இந்தியா 94வது கவலைக்குரிய கட்டத்தில் இடம் பெற்றுள்ளது. கடும் கவலைக்குரிய நாடுகளின் எண்ணிக்கை வெறும் 12 மட்டுமே. நமது அண்டை நாடுகள் சிலவற்றின் இடங்கள் நம்மைவிட மேலான நிலையில் இலங்கை – 69, பாகிஸ்தான் – 88, நேபாளம் – 90 என்றுள்ளன. பங்களாதேஷ் மட்டுமே நமக்குப் பின்னால் 103வது இடத்தில் உள்ளது. 0.87 என்ற மிகக் குறைவான புள்ளியோடு லிபியா என்ற சின்னஞ்சிறிய நாடு முதலிடம் பெற்றுள்ளது.

இந்தியா பட்டினிக் குறியீட்டில் இவ்வளவு தாழ்வான நிலையில் இருப்பதற்குக் காரணத்தைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. இந்தியக் கிராமங்களைக் கவ்விப் பிடித்துள்ள துயரம்; பொருளாதார வளர்ச்சி விகிதம் பற்றிய ஆரவாரத்திற்கிடையிலேயும், விவசாயத்துறை மிகவும் பின்தங்கியுள்ள பரிதாப நிலை; சாதிய ஒடுக்குமுறை மற்றும் சிறுபான்மையருக்கு எதிரான பாரபட்சங்கள் காரணமாகக் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் கணிசமான மக்கள் பகுதி புறக்கணிப்புக்கு ஆளாகியுள்ள அவலம்; குடும்பத்தில் ஆண்மக்கள் உண்டதுபோக மிச்சமிருப்பதைப் பங்கிட்டுக் கொள்ளும் பெண்களின் உடல்நலம் குன்றல்; அத்தகைய பெண்களுக்குப் பேறுகாலத்தில்கூட ஊட்டச்சத்து குறைவாக அமைவதால் பிள்ளைப்பேற்றின்போதே குழந்தை இறப்பதும், பிறக்கும் குழந்தைகள் சவலையாக இருப்பதுமான சோகம்; எல்லாவற்றுக்கும் மேலாகப் பொது விநியோக (ரேஷன்) முறை, கல்வி, சுகாதாரம் இவற்றுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகள் அற்பமாகவே அமைந்துள்ளவை. எல்லாம் சேர்ந்துதான், இந்திய மக்களில் பெரும் பகுதியினரைப் பசித்த வயிற்றோடும், நோய்களுக்கு எளிதில் இலக்காகும் சோகைபிடித்த உடல் நிலையோடும் நிறுத்தி வைத்துள்ளன.

பங்குச் சந்தையில் சூதாடுபவர்களில் பெரும்பாலோர் கொழுத்த பணமுதலைகளும், வெளிநாட்டு மூலதனச் சொந்தக்காரர்களும்தான். ஆட்சியாளர்கள் அவர்கள் மீது மட்டுமே பதிந்துள்ள தங்கள் பார்வையைச் சற்றே முகம் திருப்பி, பசித்த வயிறுகளுக்கு மட்டுமே “சொந்தம்’ கொண்டாடும் நம் நாட்டின் பாவப்பட்ட ஜென்மங்களைக் கண் திறந்து பார்ப்பார்களா?

Posted in Agriculture, BSE, Budget, Capital, Currency, Dow, Economy, Employment, EPS, Exchanges, Farmers, Farming, Finance, Hunger, Index, Jobs, Malnutrition, markets, Money, Needy, Poor, Rich, Sensex, Shares, Stocks, Wealthy | Leave a Comment »

Viduthalai Editorials: BSE brokers blame bull vaastu for bear maul – Bull on Dalal Street

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2008

பங்குச் சந்தையும் – மூடத்தனமும்!

பங்குச் சந்தையில் பணம் புரளும் விசயத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது உலகம் முழுக்க ஏற்படும் வழமையான நிலைதான். கடந்த வாரத்தில் மும்பைப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியது என்பது செய்தித் தாள்களில் வந்த செய்தி. லட்சணக்கணக்கான கோடிகளில் சொத்து வைத்திருப்பவர்களின் பங்கு மதிப்பு பேப்பரில் குறைந்துவிட்டது. அன்றாடக் கூலிக்காரரின் வாழ்வை இது பாதித்துவிடப் போவதில்லை எந்த வகையிலும்! பேரம் நடத்துபவர்கள், தரகர்கள், வர்த்தகச் சூதாடிகள் வேண்டுமானால் இழப்பைச் சந்திக்கலாம்.

ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு படிப்படியாக பங்குச் சந்தைப் புள்ளி உயர்ந்து கொண்டே போனபோது மகிழ்ச்சிக் கடலில் மிதந்தவர்கள் இப்போது மட்டும் துக்க சாகரத்தில் மிதப்பதுபற்றிக் கவலைப்படலாமா? ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், சில மாதங்களுக்கு முன்பு, ஒருவர் கேள்வி கேட்டபோது தமிழர் தலைவர் கூறினார்: இது கோடீசுவரர்களின் பிரச்சினையே தவிர, நமக்குச் சம்பந்தம் இல்லாதது எனக் கூறிப் பதில் அளிப்பதைத் தவிர்த்துவிட்டார்.

இப்போது மட்டும் சம்பந்தம் வந்துவிட்டதா? பொருள் அடிப்படையில் இல்லை என்றாலும், அறிவு அடிப்படையில் சம்பந்தம் வந்துவிட்டது!

பங்குச் சந்தை ஏறுமுகமாக இருந்தால் காளை (bull) என்பார்கள். இறங்குமுகமாக இருந்தால் கரடி (bear) என்பார்கள். எப்போதும் ஏறுமுகமாகவே இருக்கவேண்டும் என்பதற்காக, ஒரு காளை பொம்மையைப் பங்குச் சந்தை அலுவலகத்தில் வைத்திருக்கிறார்கள். அதுவும் கடந்த 12 ஆம் தேதிதான் வைத்தார்கள். மூன்று அடி உயரச் சிலை.

பங்குச் சந்தைக் கட்டடத்தின் வாயில் பக்கம் தன் பின்பக்கத்தைக் காட்டிய நிலையில், கட்டடத்தை விட்டு வெளியேறுவதுபோல இருக்கிறது எனக் கூறி அதை மாற்றி வைக்கவேண்டும் என்றார்களாம். இம்மாதிரி சிலை இருக்கும் திசை சரியாக இல்லாததால்தான், பங்குச் சந்தையில் பங்குகள் அடி வாங்குவதாகத் தரகர்கள் கூறுகிறார்கள். ஏற்ற இறக்கத்தால் நேரடியாகப் பலனோ, நஷ்டமோ அடையும் இவர்களுக்குத்தானே இதைப்பற்றிக் கவலை!

மூட நம்பிக்கை அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இரண்டாவது பொருளாக உள்ளது. முதல் பொருள் கரப்பான்பூச்சி. உலகின் எல்லாப் பகுதிகளிலும் இது இருக்கிறது. வாஸ்துப்படி காளைச் சிலையைக் கட்டடத்தின் தென்மேற்குப் பகுதிக்கு மாற்றவேண்டும் என்று ஒரு சிலர். இதே இடத்திலேயே வடக்குப் பக்கத்தை நோக்கியவாறு திருப்பி வைத்தால்போதும் என்று சில பேர். இந்த மூடர்களுக்குள் நம்பிக்கை ஒரே மாதிரியாக இருந்தாலும், பரிகாரம் மாறுபடுகிறது!

திறக்காத கதவுக்கு எதிரில் சிலை வைத்ததற்கே இந்தப் பாடு என்றால், வாசலில் வைத்திருந்தால் என்ன சொல்வார்கள்?
– அரசு

காளைச் சிலையால் பங்குச் சந்தை வீழ்ச்சியா?

மூட நம்பிக்கை – படிக்காத பாமர மக்கள் மத்தியில் மட்டுமா? – பட்டம் பெற்ற மனிதர்கள் மத்தியிலும்கூட ஆழ மாகப் பதிந்து இருக்கிறது என்பதற்கு ஆதாரத்தைத் தேடிக்கொண்டு ஓடவேண்டியதில்லை. இரு நாள்களாக வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு செய்தியே போதுமானது.

கடந்த வாரம் – பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்தது. அதனால் ஒரு கலவரமான மனப்பான்மை கூட பொதுவாக பொருளாதார வட்டாரத்தில் நிலவியது உண்மையாகும்.

இதற்கான காரணங்கள் பல உண்டு என்பது பொருளா தாரம் அறிந்தவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும். இத்தகைய சரிவுகள் அவ்வப்போது ஏற்படக்கூடியவைதான்; இந்தியாவில் மட்டுமல்ல – உலகின் பல்வேறு நாடுகளிலும் நடைபெறக் கூடியவைதான்.

ஆனால், இந்தியாவில் இருக்கக் கூடிய படித்தவர்கள் – தங்களிடம் பதிந்துள்ள மூட நம்பிக்கையின் காரணமாக, திடீர் என்று ஒன்றைக் கண்டுபிடித்தார்களே பார்க்கலாம்!

மும்பையில் உள்ள பங்குச் சந்தை அலுவலகத்தின் இரண்டாவது கதவை நோக்கி வெண்கலத்தால் ஆன காளைச் சிலை நிறுவப்பட்டது. இந்தச் சிலை சரியான வாஸ்து சாஸ்திரப்படி நிறுவப்படாததால்தான் பங்குச் சந்தையில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டது என்று மனப் பிராந்தியில் உளறிக் கொட்டியிருக்கின்றனர்.
காளையின் பின்புறம் – பங்குச் சந்தையை நோக்கியி ருக்கிற
தாம். பங்குச் சந்தையிலிருந்து காளை மாடு வெளி யேறுவதுபோல் உள்ளதால், அதற்கு மாறாக பங்குச் சந்தை அலுவலகத்தை நோக்கி காளையின் முகம் இருக்க வேண்டுமாம் – இப்படிக் கதைத்தவர்கள் பலர்.

இந்தக் காளையை நிறுவிய சிற்பி – இந்தப் படித்த பாமரர்களின் முகத்தை வீங்க வைக்கும் அளவுக்குச் சரியான சாட்டையடி கொடுத்துள்ளார். கோலாப்பூரைச் சேர்ந்த பகவான் ராம்பூர் என்ற சிற்பி சொன்னார்: அமெ ரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகத்தான் இந்தியப் பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது; இதற்கும் காளை மாட்டுக்கும் சம்பந்தா சம்பந்தம் இல்லை; சம்பந்தம் இருப்பதாகக் கூறுவது மூடநம்பிக்கையின் உச்சக்கட்டம் என்று பளார் என்று பதில் சொன்னார்.

காளைச் சிலை, வாஸ்து சாஸ்திரப்படி வைக்கப்பட வில்லை என்பது உண்மையானால், சில நாள்களிலேயே பங்குச் சந்தை சரிவிலிருந்து மீண்டு விட்டதே – அது எப்படி சாத்தியமானது? காளைச் சிலை அப்படியேதானே – இருந்த இடத்தில்தானே இருக்கிறது.

பிரச்சினைக்கான காரணத்தை, அறிவு கொண்டு நுட்பமாக ஆய்வதுதான், மனிதனுக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவு இருக்கிறது என்பதற்கு அடையாளமாகும்.

வாஸ்து சாஸ்திரப்படி ஒரு வீட்டைக் கட்டவேண்டும் என்றால், எந்த வீட்டிலும் கழிவறை கட்ட முடியாதே – காரணம் வாஸ்துவில் கழிவறைக்கோ, நூலக அறைக்கோ இடமில்லையே!
இதிலிருந்து ஓர் உண்மை தெரியவில்லையா? காட்டு விலங்காண்டிக் காலத்தில் யாரோ ஓர் ஆரியன் கட்டிவிட்ட கரடி என்பது விளங்கவில்லையா?

அண்டகாசுரனுக்கும், சிவபெருமானுக்கும் சண்டையாம்; சிவன் உடலிலிருந்து சிந்திய வியர்வை பூமி மீது விழுந் ததாம். உடனே பார்ப்பனப் புராணங்களில் நெளியும் ஆபா சப்படி, சிவபெருமானின் வியர்வைக்கும் – பூமாதேவிக்கும் ஒரு பிள்ளை பிறந்ததாம் – அவன்தான் வாஸ்து புருஷனாம்.

இந்தக் கதையின் யோக்கியதை எப்படி அறிவுக்கும் ஆய் வுக்கும் பொருந்தாதோ, அதேதான் இவனால் உருவாக் கப்பட்டதாகக் கூறும் வாஸ்து சாஸ்திரத்தால் அறிவின்முன் ஒரு நொடிகூட நிற்க முடியாது.

அளவுகோல்கள், மட்டக் கோல்களுக்குக்கூட வருண தர்மப்படி வேறுபாடுகள் கூறப்பட்டுள்ளன.

பார்ப்பானுக்கு வெள்ளை நிறம், சத்திரியர்களுக்கு சிவப்பு நிறம், வைசியர்களுக்கு கறுப்பு நிறம், சூத்திரர்களுக்குக் கறுப்பு அல்லது பாசி படர்ந்த காட்டு மண்ணில்தான் வீடு கட்டவேண்டுமாம்.

இதற்குமேல், இந்த வாஸ்து சாஸ்திரத்தின் யோக்கிய தைக்கு விளக்கமும் தேவையோ!
பார்ப்பானின் கைச்சரக்கு அனைத்திலும் உண்டு; அதனைத் தூக்கி எறிவதற்குத்தான் மான உணர்ச்சியும், அறிவு உணர்ச்சியும் தேவை.

மானமும், அறிவும் மனிதனுக்கு அழகு என்று தந்தை பெரியார் கூறுவதன் பொருள் இப்பொழுது புரிகிறதா?

Posted in bear, Belief, Brokers, Bull, Culture, Economy, Exchanges, Finance, Heritage, Hindu, Hinduism, Hindutva, markets, Religion, Returns, Risk, Shares, Speculation, Stocks, Traders, Vaasthu, Vaastu, Viduthalai | Leave a Comment »

Is Communism & Socialism exist for namesake in India – TJS George

Posted by Snapjudge மேல் ஜனவரி 15, 2008

சோஷலிஸத்துக்குத் துரோகம் செய்யும் சோஷலிஸ்டுகள்

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

சோஷலிஸத்தை ஒழித்துக்கட்டியவர்கள் யார்? வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், சோஷலிஸத்தை சோஷலிஸ்டுகளே, அதிலும் குறிப்பாக உலகின் பல பகுதிகளில் கம்யூனிஸ்டு அரசுகளை அமைத்தவர்களே ஒழித்துக் கட்டியிருக்கின்றனர் என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டியிருக்கும்.

உலக நாடுகளில் கம்யூனிஸ ஆட்சி நடைபெற்றுவந்த அனைத்து நாடுகளும் ~ ஒன்றே ஒன்றைத் தவிர ~ தம் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு முதலாளித்துவப் பாதையைத் தழுவிக்கொண்டுவிட்டன. விதி விலக்கான அந்த நாடு இந்தியா. அதனால்தான், ஜோதி பாசுவால் தொடங்கிவைக்கப்பட்டிருப்பதை ஆரோக்கியமான விவாதம் என நாம் வரவேற்க வேண்டும்.

நாம் முதலாளித்துவ சமுதாயத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கும் பொழுது, சோஷலிஸம் சாத்தியமல்ல என்றே அவர் கூறியிருக்கிறார். கடுமையான சுரண்டல் நிலவும் சமூகமுறையான முதலாளித்துவத்தை அங்கீகரிப்பதாக அதைக் கொள்ள முடியாது.

எனினும், இந்தியாவின் மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான அவர், மார்க்ஸ் உருவாக்க எண்ணிய சோஷலிஸ சமுதாய முறைக்கு எந்த நாட்டிலும், கம்யூனிஸ ஆட்சிமுறை அமலில் இருந்த நாடுகளில்கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதை உணரத் தவறிவிட்டார்.

எடுத்துக்காட்டாக, சோவியத் ஒன்றியத்தில் மார்க்சிஸம் ஒருபொழுதும் நடைமுறைப்படுத்தப்படவேயில்லை. தொடக்கத்திலிருந்தே அங்கு லெனினிஸம்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. நடைமுறை அரசியலுக்கு ஏற்ப அக் கொள்கையைத் தகவமைப்பதாகக் கூறி, மார்க்சிஸத்துக்கு மறுவிளக்கம் அளித்து, முற்றிலும் புதியதான கொள்கைகளை அறிமுகப்படுத்தினார் லெனின். சோவியத் கம்யூனிஸத்தின் அடிப்படைக் கொள்கையானது, “மார்க்சிஸம் ~ லெனினிஸம்’ என அழைக்கப்பட்டது.

சீனாவில் அது, “மார்க்சிஸம் ~ லெனினிஸம் ~ மா சே துங் சிந்தனைகள்’ என மாறியது. அதன் உட்பொருள் தெளிவானது: சீனாவில் சோஷலிஸக் கொள்கையைப் பொருத்தவரை “மா சே துங் சிந்தனை’களே இறுதியானவை. அந்த நிலைமை மாவோவின் காலத்தோடு முடிந்துபோய்விட்டன. அதன் பிறகு, சிறந்த யதார்த்தவாதியான டெங் சியாவோபிங், “மனிதாபிமானத்துடன்கூடிய சோஷலிஸம்’ என்ற கொள்கையைக் கொண்டுவந்தார். அது ஒரு முக்கியமான கோஷமாகும்.

எந்தப் பெருந்திரளான மக்களை சோஷலிஸத்தை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமோ அவர்களையே கம்யூனிஸம் கவர்ந்திழுக்காமல் போனதற்கு, அதில் மனிதாபிமான அம்சம் குறைவுபட்டிருந்ததே காரணமாகும்.

ஸ்டாலினும் மாவோவும் தனிநபர் சர்வாதிகாரத்தைத்தான் நிறுவினார்களே தவிர, தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தையல்ல. அந்தக் கால கட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பெருமளவிலான மரணதண்டனைகள் சோஷலிஸத்தின் முகத்தையே கோரமாக்கிவிட்டன.

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது மாநாட்டில் நிகிடா குருஷ்சேவ் ஆற்றிய வரலாற்றுப் புகழ்மிக்க உரை அதை அம்பலப்படுத்தியது. அது உணர்ச்சிபூர்வமான உரை. ஆனால், அவர் ஆற்றியது அவரது வரைவு உரையைவிட சற்று மென்மையாக்கப்பட்ட வடிவமாகும்.

மாலட்டோவ் போன்ற பழைய ஸ்டாலினிசவாதிகளின் வற்புறுத்தலை அடுத்து, ஸ்டாலின் “கட்சிக்கு ஆற்றிய பெரும் சேவைகளை’ குருஷ்சேவ் அங்கீகரித்தார். ஆனால், பூர்வாங்க விவாதங்களிலும் மூல வரைவு அறிக்கையிலும், “”கட்சியை ஸ்டாலின் அழித்துவிட்டார். அவர் மார்க்சியவாதியே அல்ல. மனிதன் புனிதமானவை எனக் கருதுவனவற்றையெல்லாம் அவர் அழித்தொழித்துவிட்டார்” என்று குருஷ்சேவ் குறிப்பிட்டிருந்தார். (2007-ல் “த கார்டியன்’ இதழில் கொர்பச்சேவ் எழுதியிருந்த கட்டுரையில் இதைத் தெரிவித்துள்ளார்)

அமைதியின் மீதான விருப்பம், பாதுகாப்பு உணர்வு, உழைப்பின் மூலமாக தானும் தனது குடும்பமும் வளம் பெற முடியும் என்னும் நம்பிக்கை போன்ற, மனிதன் புனிதமாகக் கருதுவனவற்றை எந்தக் கொள்கையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்டுகள் இதைப் புறக்கணித்தனர். அதன் விளைவாக அவர்கள் அதிகாரத்திலிருந்து வீழ்ந்தார்கள் அல்லது அவர்கள் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

60 ஆண்டுகளாகியும் ஏன் வளர்ச்சி அடையவில்லை என்ற கேள்வியை இந்திய இடதுசாரிகள் தமக்குத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

உண்மையில், மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் அவர்கள் தமது செல்வாக்கை இழந்திருக்கின்றனர். மிகச் சிலரால், பெருவாரியான மக்கள் சொல்ல முடியாத அளவுக்குச் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையிலும் அவர்களால் வளர முடியவில்லை.

இடதுசாரித் தலைவர்களில் பலர் தமது தனிப்பட்ட வாழ்க்கையில் முதலாளித்துவ ரசனைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், சுரண்டலுக்கு ஆளான மக்களோ நக்சலிஸம் போன்ற இயக்கங்களை நோக்கியும், மத அடிப்படைவாதத்தை நோக்கியும் சென்றுகொண்டிருக்கின்றனர்.

இடதுசாரிகள் சோஷலிஸத்துக்குத் துரோகம் இழைத்துவிட்டனர். சமத்துவம், சமதர்மம் என்ற அடிப்படையில் ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகள் சோஷலிஸத்தை நெருங்கிச் சென்றுகொண்டிருக்கின்றன.

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 30 ஆண்டுகளாகப் பதவியில் இருந்தபோதிலும் வறுமையின், சிறுமையின் அடையாளமாக விளங்கும் கைரிக்ஷாவை இந்திய இடதுசாரிகளால் ஒழிக்க முடியவில்லை.

இடதுசாரிகளின் தோல்வியானது, அபாயகரமான ஓர் அரசியல் தோன்றுவதற்கு ~ ஜமீன்தாரி சிந்தனை கொண்ட வகுப்புவாத அரசியலுக்கு ~ வழிவகுத்துக் கொண்டிருக்கிறது. என்னே துயரம்!

Posted in Baasu, Basu, Capitalism, China, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Corporate, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, East, Economy, entrepreneurs, Finance, global, Globalization, Growth, HR, Jobs, Jothibasu, Jyothibasu, Kerala, Lazy, Lethargy, Mao, markets, Nandhigram, Nandigram, Nanthigram, Poor, Rich, Russia, SEZ, Socialism, TATA, Union, USSR, West, workers | Leave a Comment »

Farmer suicides – Turning risk into an opportunity: Case study of a Agriculture Success Story

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

முகங்கள்: பத்து லட்சம் கடன்… முப்பது லட்சம் வட்டி!

ந.ஜீவா

“கடன் பெற்றார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பது கம்பராமாயண வரிகள். ஆனால் கடன் பெற்றவர்கள் கலங்கினால் அது தற்கொலையில்தான் முடியும். நாடெங்கும் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. அதற்கு முக்கியக் காரணம், கடன்… வட்டி… விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமை அல்லது தண்ணீர்ப் பஞ்சம், பூச்சிகளினால் விவசாயம் பாதிக்கப்படல் இன்னும் பல.

ஆனால் கோவை ஏ.ஜி.புதூரைச் சேர்ந்த சுப்பையன் என்கிற விவசாயி கலங்கவில்லை. வட்டியும் கடனுமான நாற்பது லட்சம் ரூபாயைத் தனது கலங்காத மன உறுதியாலும் தெளிவாகத் திட்டமிடும் திறனாலும் கடுமையான உழைப்பாலும் திருப்பி அடைத்து வெற்றிகரமாக கடன் தொல்லையில் இருந்து மீண்டிருக்கிறார். அவரிடம் பேசினோம்…

நாற்பது லட்சம் ரூபாய் கடன் எப்படி ஆனது?

நான் நான்கு வருடத்துக்கு முன் கோவையில் இருந்து மைசூர் அருகே உள்ள குண்டன்பேட்டைக்குப் போய் 35 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பண்ணினேன். அதற்காக எங்கள் பகுதியில் உள்ளவர்களிடம் நான்கு வட்டிக்கும் மூன்று வட்டிக்குமாகப் பத்து லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். நானும் இன்னும் நான்கு பேரும் சேர்ந்து மைசூர்-குண்டன்பேட்டைக்குப் போனோம். அங்கே போய் வெங்காயம், கனகாம்பரம், கரும்பு, மஞ்சள் எல்லாம் பயிர் செய்தோம். ஆனால் நாங்கள் விவசாயம் பண்ணின நேரம் உற்பத்தி பண்ணின பொருள்களெல்லாம் விலை குறைந்துபோனது. பத்துலட்சம் வாங்கின கடன் இரண்டு வருடத்துக்குள்ளே வட்டியெல்லாம் சேர்த்து நாற்பது லட்சம் ரூபாய் ஆகிவிட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் ஊருக்குத் திரும்பி வந்துவிட்டேன்.

திரும்பி வந்து என்ன செய்தீர்கள்?

இங்கே எனக்குப் பத்து ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விவசாயம் செய்ய முடியவில்லை. நிலத்தடி நீர் விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாத அளவுக்குக் கெட்டுப் போயிருந்தது. நொய்யல் ஆற்று நீரில் கோயம்புத்தூர் நகர்க் கழிவு எல்லாம் கலந்ததால் அது ஓடுகிற எங்கள் பகுதியில் நிலத்தடி நீரும் உப்பாகப் போய்விட்டது. செடி வளர்க்க இந்தத் தண்ணீர் ஆரோக்கியம் இல்லை.

இந்தக் கெட்டுப் போன தண்ணீரை வைத்துக் கொண்டு எப்படி விவசாயம் பண்ணுவது? என்ன விவசாயம் பண்ணுவது? கடனையெல்லாம் எப்படி அடைப்பது? யோசனை பண்ணிப் பார்த்தேன்.

எங்கள் பகுதிக்குத் தோட்டக்கலைத்துறை, விரிவாக்கத்துறை அதிகாரிகள் எல்லாரும் வருவார்கள். வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் சி.ராமசாமி அடிக்கடி வருவார். அவர்களிடம் கேட்டதில் எங்கள் பகுதியில் நெல், கரும்பு போன்றதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது என்று தெரிய வந்தது. வேறு எந்த வேளாண்மை பண்ண வேண்டும் என்று யோசித்து கீரை விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். இந்தத் தண்ணீருக்குக் கீரை நன்றாக வரும். குதிரை மசால் நன்றாக வரும். தென்னை நன்றாக வரும்.

அரைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, சிறுகீரை என விவசாயம் செய்தேன். இதில் 30 சதம் செலவு ஆகும். 70 சதம் லாபம் வரும்.

குதிரை மசால் என்பது கால்நடைகளுக்கானத் தீனி. இது தவிர கறிவேப்பிலை இரண்டரை ஏக்கரில் விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். எனது 10 ஏக்கர் நிலம் தவிர மேலும் 20 ஏக்கர் நிலத்தைக் குத்தகை எடுத்தேன். 12.5 எச்பி மோட்டார் போட்டு கிணற்றில் தண்ணீர் எடுத்து விவசாயம் பண்ணினேன். கிணற்று தண்ணீர் நாளொன்றுக்கு 3 ஏக்கர் நிலத்திற்குப் பாயும்.

எங்கள் விவசாயத்தில் அதிக அளவு ரசாயன உரங்கள் போடுவதில்லை. மண்புழு உரம், மாட்டுச்சாணம் போடுவோம். கோயம்புத்தூரில் ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் பகுதியில் நிறைய மாடுகள் வளர்க்கிறார்கள். அதனால் மாட்டுச் சாணிக்கென்று நாங்கள் அலைய வேண்டியதில்லை.

விவசாயம் செய்து விளைவித்த பொருள்களை எங்கே விற்பனை செய்கிறீர்கள்?

கீரை ஒரு நாளைக்கு 5000 கட்டிலிருந்து 10000 கட்டு வரை விற்பனையாகும். ஒரு நாளைக்கு சுமார் பத்தாயிரம் ரூபாய்க்கு கீரை விற்பனையாகும். கறிவேப்பிலை ரூ.1500 க்கு விற்பனையாகும். கடைகளுக்கு வாடிக்கையாக கறிவேப்பிலையைக் கொடுத்துவிடுவோம். கிலோ ரூ.10 இலிருந்து ரூ.15 வரை போகும். குதிரைமசால் 400 கிராம் கட்டு சுமார் 3000 கட்டுவரை விற்பனையாகும்.

காலையிலே எங்கள் காட்டுக்குள்ளிருந்து இந்தப் பொருள்களை ஏற்றிக் கொண்டு வண்டிகள் வெளியே போகும். எத்தனை வண்டி எவ்வளவு பொருள் என்பதையெல்லாம் கணக்கு வைத்துக் கொள்வார்கள்.

கால்நடைத் தீவனமாக நாங்கள் விவசாயம் செய்யும் குதிரை மசாலை சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் பகுதியில் மாடு வளர்ப்பவர்களே வாங்கிக் கொள்வார்கள்.

காலையில் டெம்போவில் குதிரை மசாலை ஏற்றிக் கொண்டு கிளம்புவோம். சிட்டி பஸ் குறித்த நேரத்தில் எந்த ஸ்டாப்பில் எந்த நேரத்தில் நிற்குமோ அதைப் போல இந்த டெம்போ ஒவ்வொரு பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிற்கும். அந்தப் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்கள் அங்கு வந்து வாங்கிக் கொள்வார்கள்.

கோயம்புத்தூரில் உள்ள வாடிக்கையாளர்கள் தவிர கொடைக்கானலிலும் எங்கள் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அங்கே உள்ள ஒரு கால்நடைப் பண்ணையில் 67 மாடுகள் வைத்திருக்கிறார்கள். 10 ரேஸ் குதிரைகள் வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய கால்நடைகளுக்குத் தேவையான தீவனத்திற்காக எங்களிடம் ரெகுலராக குதிரை மசால் வாங்குகிறார்கள்.

இவ்வளவு வேலைகளையும் செய்ய வேண்டுமென்றால் ஆட்களை வேலைக்கு வைக்க வேண்டுமே?

எங்களிடம் முதலில் 40 பேர் வேலை பார்த்தார்கள். இப்போது 20 பேர் பார்க்கிறார்கள். வேலைக்கு ஆள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. இத்தனைக்கும் பெண்களே ஒரு நாளைக்கு ரூ.140 வரை சம்பளம் வாங்குகிறார்கள்.

எங்களிடம் வேலை செய்பவர்களை நாங்கள் மரியாதையாக நடத்துகிறோம். வாடா, போடா என்றெல்லாம் பேசுவது கிடையாது. அவர்கள் எல்லாரும் ரொம்பவும் விசுவாசமான ஆட்கள்.

வழக்கமாகப் பயிர் செய்யும் நெல், கரும்பு, வாழை போன்றவற்றைப் பயிர்செய்யாமல் இப்படிக் கீரைகளை விவசாயம் பண்ண வேண்டும் என்று எப்படித் தோன்றியது?

நான் விவசாயத்துக்கு முதன்முதல் வந்த போது எங்கள் ஏரியாவில் பருத்திதான் அதிகம் போடுவார்கள். நான்தான் முதன் முதலில் கனகாம்பரம் துணிந்து பயிர் செய்தேன். எதையும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். எங்கள் பகுதியில் நெல், கரும்பு போன்றவை விளைவிக்க நல்ல தண்ணீர் இல்லாததும் ஒரு காரணம்.

நமது அண்டை மாநிலமான ஆந்திரா, வடமாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்களே?

இந்தியாவில் விவசாயிகள் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகப் பேப்பரில் படிக்கிறோம். எனக்கு மாதிரி அவர்களுக்கு 10 ஏக்கர் நிலம் இருந்திருந்தால் ஒருவேளை என்னைப் போலவே அவர்களும் கடினமாக உழைத்துக் கடனை அடைத்திருப்பார்களோ, என்னவோ. எல்லாருக்கும் எனக்கு போலவே வாய்ப்புக் கிடைக்க வேண்டுமே.

இப்போது மார்க்கெட் வசதி அபாரமாக இருக்கிறது. அரசாங்கம் நிறையக் கடன் கொடுக்கலாம். கந்துவட்டியை ஒழிக்கச் சட்டம் போட்டிருந்தாலும் நாடு முழுக்க கந்துவட்டி இருக்கிறது. அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுத்தால் கந்துவட்டியை ஒழிக்கலாம். பத்துலட்சம் வாங்கின கடனுக்கு முப்பது லட்சம் வட்டி கட்டணும் என்றால் விவசாயி தற்கொலை பண்ணிக் கொள்ளாமல் என்ன செய்வான்?

Posted in Agriculture, Analysis, Banking, Banks, Case study, deaths, Economy, Faces, Farmers, Farming, Farmlands, Finance, Foodgrains, Forests, Fruits, Greens, harvest, horticulture, Incidents, Interview, Life, Loans, markets, Opportunity, Paddy, people, Persons, Prices, Real, rice, Risk, Saline, Salt, success, Suicides, Trees, Turnaround, Vegetables, Vidharaba, Vidharaba Jan Andolan Samithi, Vidharabha, Vidharba, Vidharba Jana Andolan, Vidharbha, Vidhrabha, Vitharabha, Vitharba, Vitharbha, Waste, Water, Wheat | 2 Comments »

Orient-Express snubs Tata, says Indian tag tacky: Is India Bad for Jaguar?

Posted by Snapjudge மேல் திசெம்பர் 17, 2007

வெள்ளையர்களின் நீங்காத நிறவெறி

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

அக்ரஹாரத்தில் கழுதை : டாடா, ஜகு�

எங்கும் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கை வியாபித்து நிற்கிறது என்று நாம் மார்தட்டிப் பேசிக் கொள்கிறோம்.

ஆனால், இத்தகைய காலகட்டத்திலும் “வெள்ளையர்களே அனைத்திலும் உயர்ந்தவர்கள்; வெள்ளையர் அல்லாதோர் கீழேதான்’, என்று மற்றவர்களை மட்டந்தட்டும் நிறவெறிக் கொள்கை சர்வதேச நிதி மற்றும் வர்த்தக அமைப்புகளில் தலைதூக்கி நிற்கிறது.

நிறவெறிக் கொள்கை ஊறிவிட்ட உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

உருக்குத் தொழில் உலகின் மன்னர் என்ற பெருமையாகப் பேசப்படும் வெளிநாடு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டலும் இந்த நிறவெறிக் கலாசாரத்தால் பாரபட்சமாக நடத்தப்பட்டவர்தான்.

ஐரோப்பாவில் இயங்கும் ஆர்சலர் என்ற நிறுவனத்தின் உரிமையை தனது கட்டுக்குள் கொண்டுவர அவர் முயன்றார். ஆனால் வெள்ளையர் அல்லாத ஒருவரது பணம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் நிராகரித்து விட்டார்.

ஆனால் பிற்பாடு, தான் சொன்ன வார்த்தை தவறானது என்பதை அந்த நிர்வாகியே உணர்ந்து, மாற்றிக் கொண்டார் என்பது வேறு கதை. பின்னர் அந்த நிர்வாகியின் எதிரிலேயே ஆர்சலர் நிறுவனம் ஆர்சலர்-மிட்டல் என்று மாறியதும் வேறு விஷயம்.

இன்னொரு சம்பவம் அமெரிக்காவைச் சேர்ந்த சொகுசு ஹோட்டல் நிறுவனமான ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தொடர்பானது ஆகும்.

இந்த ஹோட்டலுடன் கூட்டு வைக்க டாடா நிறுவனம் ஆசைப்பட்டது. ஆனால் நிறவெறியில் ஊறிய அதன் தலைமை நிர்வாகம், டாடாவின் ஆசையை நிராகரித்து கேலியும் கிண்டலும் செய்தது.

“சொகுசின் மொத்த உருவகமாகத் திகழும் எமது பிராண்டை உங்களது பிராண்டுடன் சேர்ப்பதால் எங்களது பிராண்டின் நற்பெயர் என்னாவது’ என்று ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி குத்தலாகப் பேசினார்.

இப்படி அவர் பேசியதற்குக் காரணம் கூட்டுவைக்கும் யோசனை வேண்டாம் என்று ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தரப்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டும் மீண்டும் அதற்காக டாடா நிறுவனம் முயற்சி மேற்கொண்டதே ஆகும். இப்படி டாடா நிறுவனம் செய்தது தம்மை அவமதிப்பு செய்வதாகக் கருதிவிட்டார் ஓரியண்ட் எக்ஸ்பிரஸின் தலைமை நிர்வாகி பால் வொயிட்.

இன்னொரு சம்பவத்தை இனி பார்ப்போம்.

போர்டு லக்சுரி மாடல் கார் உற்பத்தி நிறுவனத்தை வாங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முயற்சி செய்தது. அதை அறிந்த அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றின் தலைவர் ஒருவர் கடந்த வாரம் பொங்கி எழுந்தார். இதை அமெரிக்க மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.

இத்தகைய சம்பவங்களை குப்பைகள் என்று ஒதுக்கி, கேலிக்கூத்துகள் என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும். டாடா பிராண்ட் என்றாலே தனி மவுசுதான். இதை உலகமே நன்கு அறியும்.

எத்தனையோ இந்தியர்களை அமெரிக்க மக்கள் கனிவுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய நிதி நிறுவனம் சிட்டி குரூப். இதன் தலைவராக விக்ரம் பண்டிட்டை அமெரிக்கர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதுபோல் அமெரிக்காவின் தேசிய உணர்வுக்கு அடையாளமாக திகழும் பெப்சி நிறுவனத்தின் தலைவராக இந்திரா நூயி அமர்ந்துள்ளதையும் அந்நாட்டு மக்கள் ஏற்கத்தானே செய்தனர்.

இவர்களுக்கு முன்பாக கியூலெட்-பக்கார்ட் நிறுவனத்தின் பொது மேலாளாராக ராஜீவ் குப்தா, எடி அண்ட் டி நிறுவனத்தின் தலைவராக அரூண் நேத்ரவலி, மெக்கன்சி நிறுவனத்தின் தலைவராக ரஜத் குப்தா போன்றோர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

ஸ்டான்சார்ட் நிறுவனத்தை ராணா தல்வார் தலைமை ஏற்று நடத்துகிறார்.

மேலும் பென்டியம் சிப்பை உருவாக்கிய வினோத் டாம், ஹாட்மெயிலை நிறுவிய சபீர் பாடியா ஆகியோரும் இந்தியர்கள்தான்.

அறிவாற்றல் என்று வரும்போது வெள்ளையர் அல்லாதோரை விரும்புகிறார்கள் வெள்ளையர்கள். அப்போது, நன்மதிப்பு பற்றிப் பேசுவதில்லை. நிறவெறி என்று வரும்போது அவர்களின் மூர்க்கத்தனம் வெளிப்பட்டு விடுகிறது.

அமெரிக்கத் தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் கூட தான் யார் என்பதை காட்டிவிடுகிறார்கள். அண்மையில் கேசவன் என்ற விஞ்ஞானி விசாவுக்காக சென்னையில் உள்ள தூதரகத்துக்குச் சென்றிருந்தார். கொளுத்தும் வெயிலில் அவர் ஒரு மணி நேரம் வெளியில் காத்திருக்க நேர்ந்தது.

பின்னர், உள்ளே சென்றதும் 2 மணி நேரம் காத்திருந்தார். “உங்களிடம் ஆலோசனை நடத்த அவசியம் இல்லை. இந்த வினாத்தாள் பட்டியலை நிரப்பித்தாருங்கள்’ என்று மட்டும் அவரிடம் கூறியுள்ளனர்.

மற்றொரு விஞ்ஞானியான கோவர்தன் மேத்தாவுக்கும் கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. தனது ஆராய்ச்சியைப் பற்றி மறைத்துவிட்டதாக காரணம் தெரிவிக்கப்பட்டு அவருக்கு விசா நிராகரிக்கப்பட்டது.

இத்தகைய குளறுபடிகளுக்கு நம்மையேதான் நாம் நொந்து கொள்ளவேண்டும்.

அண்மையில் அமெரிக்காவின் செயல்பாடு பற்றி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூட வேதனையுடன் பேசினார்.

அமெரிக்காவில் கிளைகள் திறக்க இந்தியாவைச் சேர்ந்த வங்கிகள் விரும்பினால் அவை மீது அமெரிக்கா பாரபட்சம் காட்டுகிறதாம்.

இப்படிப் புகார் கூறுவதால் அவர்கள் மசிந்து விடுவார்களா என்ன? இந்தியாவில் தொழில் நடத்த வரும் அவர்களை இங்கும் அங்கும் என அலைகழித்தால் எல்லாம் சரியாகிவிடும். இது நடக்குமா?

இது குழம்பிப்போன உலகம். மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை நாமும் அவர்களுக்குச் செய்ய வேண்டும். அப்போது மரியாதை தானாகவந்து சேரும்.

கொடுக்கும் வழியிலேயே நாமும் திருப்பிக் கொடுப்போம்.

தமிழில்: ஜி. கணபதி

Posted in acquisition, Analysis, Arcelor, Auto, Automobile, Banks, Brand, Capitalization, Cars, CEO, Citi, CxO, Discrimination, Economy, England, Equity, Finance, Ford, Govt, Hotels, Image, India, Jaguar, Law, Luxury, M&A, Manufacture, Manufacturing, markets, Mergers, Mittal, MNC, NRI, Offshoring, Orient Express, Outsourcing, Private, Protection, Public, racism, Reverse, Rich, rules, Shares, Steel, Stocks, Supremacy, TATA, Tax, Wealthy, White | Leave a Comment »

Public Administration: Accountant General’s Office: IAAS – Indian Audit and Accounts Service

Posted by Snapjudge மேல் திசெம்பர் 13, 2007

தணிக்கை முறையில் தப்புக் கணக்கு!

இரா. செழியன்

இந்தியா கடைப்பிடித்துவரும் நாடாளுமன்ற முறையின் அடிப்படைக் குறிக்கோள் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய பேரவையின் கட்டுப்பாட்டிற்குட்பட்டு அரசு நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதுதான்.

குறிப்பாக, அரசு நிர்வாகத்துக்கும் அரசால் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்கும் நாடாளுமன்றம் மானியங்களை வழங்குகிறது. அந்த மானியத் தொகைகளைக் குறிப்பிட்ட திட்டங்களுக்காகச் சரியாக, சிக்கனமாக, திறமையாக, அரசு நிறைவேற்றுகிறதா என்பதை நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்குக் குழு, மதிப்பீட்டுக் குழு, பொதுத்துறை நிறுவனக் குழு போன்ற கண்காணிப்பு அமைப்புகள் மூலம் ஆராய்கின்றன.

இந்தவகையில், பொதுத்தணிக்கை அமைப்பு என்பது அரசின் வரவு, செலவுக் கணக்குகளைத் தணிக்கை செய்து, அதிலுள்ள குறைபாடுகள் அடங்கிய அறிக்கைகளை குடியரசுத் தலைவர் மூலம் நாடாளுமன்ற அவைகளின் முன் வைக்கிறது.

இந்த வகையில் தலைமைத் தணிக்கை அதிகாரியின் பணி நாடாளுமன்றத்திற்கு மிகவும் முக்கியமானது. இது குறித்து அரசியல்நிர்ணய சபையில் அம்பேத்கர் கூறியதாவது: “”இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள மிக முக்கியமான அதிகாரி, தணிக்கைக் குழுத் தலைவர் என்பதுதான் என் கருத்து. இன்னும் கவனித்தால், தலைமை நீதிபதிக்கு இருப்பதைவிட அதிகமான அளவு தணிக்கைக்குழுத் தலைவருக்கு முக்கியத்துவம் இருக்கிறது. நீதி அமைப்பு இருப்பதைப் போன்று தணிக்கை அமைப்பும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.”

தணிக்கை அமைப்பின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி நீண்ட விவாதம் அரசியல்நிர்ணய சபையில் 1949, மே மாதத்தில் வந்தது. தணிக்கைத் துறையில் திறமையும், நல்ல பயிற்சியும் உள்ளவர்களைத்தான் தணிக்கை அமைப்பின் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் வந்தபொழுது, “”பொதுவாக மாநிலத்தில் கணக்குத் தணிக்கை அதிகாரியாக ( Accountant General) உள்ளவர்களில் தலைசிறந்து விளங்குபவர்களைத்தான் மத்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரியாக நியமிப்போம்” என்று அரசமைப்புச் சட்ட ஆக்கக்குழுவின் சார்பில் டி.டி. கிருஷ்ணமாச்சாரி உறுதிமொழி தந்தார்.

ஆறாண்டு காலம் அல்லது 65 வயதுவரை இவற்றில் எவை முன்னதாக வருகிறதோ அதுவரையில் பணியாற்ற, தலைமைத் தணிக்கைக் குழுத் தலைவர் நியமிக்கப்படுகிறார். அரசியல் நிர்ணயசபையில் தரப்பட்ட உறுதிமொழியின்படி 1948 தொடங்கி 1966 வரை மூன்று கணக்குத் தணிக்கை அதிகாரிகள், வி. நரஹரி ராவ், ஏ.கே. சந்தா, ஏ.கே. ராய் போன்ற இந்திய தணிக்கைப் பிரிவின் உயர் அதிகாரிகள் தணிக்கை அமைப்புத் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

ஆனால், அதன்பிறகு கடந்த 42 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட 7 தணிக்கைத் தலைவர்களில் ஒரே ஒருவர் மட்டும்தான் இந்திய கணக்குத் தணிக்கை ( IAAS – Indian Audit and Accounts Service) பிரிவில் உயர் அதிகாரியாக இருந்தார். மற்ற 6 தடவைகளில் தணிக்கைக் குழுத் தலைவர் பதவி இந்திய ஆட்சிப் பணியாளர் ( IAS – Indian Administrative Service்) பிரிவைச் சேர்ந்தவர்களுக்குத் தரப்பட்டது. இது சரியானதல்ல.

ஓய்வுபெறும் நிலையிலுள்ள இந்திய ஆட்சிப் பணியாளருக்கு கணக்கு – தணிக்கைத் துறைகளில் எத்தகைய பயிற்சியும், திறமையும் இல்லாத நிலைமையில், இந்திய கணக்குத் தணிக்கைக் குழுவின் தலைவராக நியமிக்கப்படுவது நாடாளுமன்ற முறைக்கு மிகவும் முரண்பட்ட ஒன்றாகும்.

உலகில் ஜனநாயக நடைமுறையைப் பின்பற்றும் முக்கியமான நாடுகளில் எவற்றிலும் தணிக்கை அதிகாரியை அரசு தன் விருப்பப்படி நியமித்துவிட முடியாது.

இங்கிலாந்து நாட்டில், மக்கள்சபையின் பொதுக்கணக்குக் குழுவின் ஆலோசனைப்படிதான் தணிக்கை அமைப்பின் தலைவரை நியமிக்கும் தீர்மானத்தை பிரதமர் மக்கள்சபையின் முன் வைப்பார். எவ்வித விவாதமுமின்றி பேரவை அதை ஏற்றுக்கொள்ளும்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உள்ள பொதுக் கணக்கு – தணிக்கைக் குழுவின் தீர்மானத்தையொட்டி மத்தியத் தணிக்கைக் குழுத் தலைவர் நியமிக்கப்படுகிறார்.

ஜெர்மன் நாட்டின் நாடாளுமன்றத்தில் உள்ள உயர்நிலை தணிக்கை அமைப்பின் ஆலோசனையின் பேரில்தான் தணிக்கைக் குழுவின் தலைவர் – துணைத் தலைவர் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

அமெரிக்காவின் மேல்சபையான செனட்டின் தீர்மானத்தின் மீதுதான் தணிக்கை அமைப்புத் தலைவரை, அந்நாட்டின் அதிபர் நியமிக்க முடியும். அப்படி அதிபர் நியமித்தாலும் தணிக்கைக் குழுத் தலைவரை நீக்கும் அதிகாரம் அவருக்குக் கிடையாது. செனட் சபை நிறைவேற்றுகிற குற்றச்சாட்டுத் தீர்மானப்படிதான் அவரை நீக்க முடியும்.

ஆக, மற்ற நாடுகளில் உள்ள முறையைப் போன்று இந்தியாவிலும் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியை மத்திய அரசு தன்போக்கில் எந்த வகையிலும் நியமிப்பது கூடாது. மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றின் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளடக்கிய பாரபட்சமற்ற ஒரு குழு மூலமாகத்தான் அந்தப் பதவிக்கான தலைவர் நியமிக்கப்பட வேண்டும்.

தலைமைக் கணக்குத் தணிக்கை அமைப்பின் முக்கியத்துவம் பற்றி 1950 ஜூலை 21 ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் பின்வருமாறு கூறினார்: “”இந்தியா ஓர் ஏழைநாடு. இங்குள்ள அரசு மூலம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அளவில் செலவு செய்யப்படுகிற நிலைமையில், ஒவ்வொரு ரூபாயும் எவ்வாறு செலவாகிறது என்பதைக் கவனிக்கும் பொறுப்பு தணிக்கைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி அதிகமாகக் கூறத் தேவையில்லை.”

1954 ஆம் ஆண்டு மத்திய – மாநில அரசுகளின் மொத்த செலவு ரூ. 1,254 கோடி. தற்போதைய நிலவரப்படி, 2005 – 2006-இல் மத்திய – மாநில அரசுகளின் மொத்த செலவின் அளவு ரூ. 15,92,000 கோடி.

அப்போது இருந்ததைவிட 1,270 பங்கு அதிகமான அரசு செலவுகளைத் தற்போது தணிக்கை பார்க்க வேண்டிய பொறுப்பு பொதுத்தணிக்கை அமைப்புக்கு இருக்கிறது. ஆனால், முன்பிருந்த தணிக்கைத் துறையின் திறமையாளர்கள் தற்போது அரசால் தணிக்கைத் தலைவராக நியமிக்கப்படுவதில்லை.

அரசு நிர்வாகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வீணாக்கப்படுகிறது அல்லது ஊழலில் கரைக்கப்படுகிறது என்றால், அவை அங்குள்ள அதிகாரிகளின் நிர்வாகத்தில்தான் நடைபெறுகின்றன.

அப்படிப்பட்ட அதிகாரி ஒருவரை திடீரென்று அவருக்குப் பின்னணியான பயிற்சியும், திறமையும் இல்லாத நிலைமையில், தணிக்கைத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுவிட்டால் அவர் சம்பந்தப்பட்ட அரசின் செலவு ஒழுங்கீனங்களின் மீது அவருடைய தலைமையின்கீழ் வரும் தணிக்கைத்துறையால் எப்படி வெளிப்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியும்?

தணிக்கை முறைக்குக் கட்டுப்பட்டு அரசு நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதற்குப் பதில், அரசு நிர்வாகத்துக்குக் கட்டுப்பட்டுத் தணிக்கைத்துறை கொண்டு வரப்படுகிறது.

தற்போதைய தணிக்கைத்துறைத் தலைவர் – அவரும் இந்திய ஆட்சிப் பணி ( IAS) அதிகாரியாக இருந்து இந்தப் பதவிக்கு வந்தவர் – அவருடைய பதவிக்காலம் வருகிற 2008 ஜனவரி 6 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

தணிக்கைக்குழுத் தலைவராக ஒருவரை நியமிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் இந்தச் சமயத்திலாவது மக்களாட்சி முறையில் நம்பிக்கையுள்ள நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களும், அவற்றின் கண்காணிப்புக் குழுவினரும், பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் ஒன்றுபட்டு, பயிற்சிபெற்ற திறமையுள்ள, தணிக்கைக் கணக்குத்துறை பிரிவைச் சேர்ந்த ஒருவரை, பாரபட்சமற்ற முறையில் தேர்ந்தெடுப்பதற்கான கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டும்.

சரியானபடி அரசின் செலவு விவரங்கள் கவனிக்கப்படவில்லை என்றால் தணிக்கை முறை வெற்றி பெறாது.

சரியானபடி தணிக்கை முறை இல்லையென்றால் நாடாளுமன்றக் கண்காணிப்பு வெற்றி பெறாது. இந்த நிலைமை வளர்ந்தால் ஜனநாயக முறையில் மக்களின் பணத்துக்குப் பாதுகாப்புத் தரும் நாடாளுமன்றம் என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

உச்ச நீதிமன்றத்தைவிட முக்கியமான இடத்தை தணிக்கை அமைப்புக்கு அரசமைப்பு ஆசான் அம்பேத்கர் தந்தார். ஆனால் தமது போக்கில் தணிக்கை அமைப்பின் தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத் தொடர்ந்து மத்திய அரசு நியமித்துக்கொண்டே இருந்தால், விரைவில் சட்டப்படிப்பு அறவே இல்லாத ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு பின்வாங்காது.

அதன் பிறகு, நீதிமன்றம், நாடாளுமன்றம், தணிக்கைத்துறை ஆகியவைகளுக்கு உள்ள சுதந்திரமும், தனித்தன்மையும் நீக்கப்பட்டு, எல்லாவற்றுக்கும் ஏகபோக சர்வாதிகாரமாக மத்திய நிர்வாகத்துறை ஆகிவிடும்.

(கட்டுரையாளர்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)

—————————————————————————————————————————————————————-

பொதுத்துறையில் புதிய பார்வை!

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதுதான் பொருளாதாரச் சீர்திருத்தவாதிகளின் முதல் கோஷமாக இருந்தது. ஏதோ, நல்ல புத்தி தோன்றி, நஷ்டத்தில் இயங்கும் சில நிறுவனங்கள் தவிர மற்ற பொதுத்துறை நிறுவனங்களின்மீது மத்திய அரசு கைவைக்காததன் பலன், இப்போது பல நிறுவனங்கள் லாபகரமாக நடக்கின்றன. இதற்கு, தனியார்மயமாக்கப்படுவோம் என்கிற பயம் காரணமா அல்லது நிர்வாகம் முடுக்கி விடப்பட்டது காரணமா என்று தெரியவில்லை.

தற்போது சுமார் 250 பொதுத்துறை நிறுவனங்கள் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் இருந்து வருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவைகளில் 120 நிறுவனங்கள் மட்டும்தான் லாபகரமாக இருந்தன. சமீபத்திய ஆய்வின்படி, கணக்கெடுக்கப்பட்ட 215 நிறுவனங்களில் 157 நிறுவனங்கள் லாபகரமாக நடப்பதாகத் தெரிகிறது. 35 நிறுவனங்களின் தணிக்கை இன்னும் முடிந்தபாடில்லை.

இந்தப் புள்ளிவிவரங்கள் சற்று ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் என்பவை, தேசத்தின் சமச்சீர் வளர்ச்சியையும், நாட்டின் அடிப்படைத் தேவைகளையும் கருத்தில்கொண்டு நிறுவப்பட்டவை. பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ், இந்தியன் ஏரோநாட்டிக்ஸ், செய்ல், ஆயுதத் தொழிற்சாலை போன்றவை, இந்தியாவின் தன்னம்பிக்கையை வளர்த்தன என்பது மட்டுமல்ல, நாம் சுயசார்புடைய நாடாக வளர வழிவகுத்தன என்பதையும் மறந்துவிடக் கூடாது.

சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டிருப்பதுபோல, பண்டித ஜவாஹர்லால் நேரு இந்தியாவுக்கு அமைத்துத் தந்த கலப்புப் பொருளாதாரத்தின் பலன்தான் இப்போது இந்தியா உலகமயமாகி இருக்கும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்க வழிகோலியிருக்கிறது. அதுமட்டுமல்ல, திருச்சி, ராஞ்சி, போபால், புணே, ரூர்கேலா, நாசிக் போன்ற நகரங்களைத் தொழில் நகரங்களாக உருவாக்க முடிந்ததன் காரணம், அங்கெல்லாம் பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவப்பட்டதால்தான்.

ஒரு சில பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் தொடர்ந்தன என்பதும், லாபம் ஈட்டும் நவரத்னங்கள் என்று அழைக்கப்படும் நிறுவனங்களும்கூட, தங்களது முழுமையான உற்பத்தித் திறனை எட்டவில்லை என்பதும் உண்மை. ஆனால், அதற்குக் காரணம் நிர்வாகச் சீர்கேடும், அரசியல் தலையீடும், தொழிலாளர்கள் மத்தியில் காணப்பட்ட மெத்தனமும்தானே தவிர, அந்த நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களாக இருந்ததால் அல்ல. அதைத்தான், இந்த நிறுவனங்களின் தற்போதைய அதிகரித்த உற்பத்தித் திறனும், லாபமும் நிரூபிக்கின்றன.

இந்தப் பொதுத்துறை நிறுவனங்கள் நவீனப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும், அவைகளின் நிர்வாகத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்த நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களைப்போல, லாப நோக்குடனும், திறமையின் அடிப்படையிலும் செயல்பட வேண்டும் என்பதும், மக்கள் வரிப்பணம் இந்த நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுசெய்ய வீணடிக்கப்படக் கூடாது என்பதும் உறுதி. அதற்கு வழி இந்த நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதல்ல. தனியார் முதலீடுகளை குறிப்பிட்ட அளவு வரவேற்பதும், அரசு அதிகாரிகள் மட்டுமன்றி முதலீட்டாளர்களின் பிரதிநிதிகளும் நிர்வாகத்தில் பங்கு பெறுவதும்தான்.

முப்பது அல்லது நாற்பது சதவிகிதம் பங்குகளைத் தனிநபர்களுக்கு பங்குச்சந்தை வழியே விற்பதன் மூலம் இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பங்குதாரர்கள் கேள்வி கேட்க முடியும் என்பதும், நிர்வாகத்தில் பங்குதாரர்களின் பிரதிநிதிகள் இயக்குநர்களாகப் பங்கு பெற முடியும் என்பதும், இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமல்ல, பங்குகளை பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிப்பதால் லாபம் காட்ட வேண்டிய கட்டாயம் நிர்வாகத்துக்கு ஏற்படும். நிறுவனத்தை நவீனப்படுத்த முதலீடும் கிடைக்கும்.

சிறிய அளவில் நமது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள், பங்குச்சந்தை மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவது என்பது காலத்தின் கட்டாயம். அப்போதுதான் அவை உண்மையிலேயே மக்கள் நிறுவனமாகச் செயல்படும். அதுமட்டுமல்ல, இந்த நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படும் அபாயமும் தவிர்க்கப்படும்!

—————————————————————————————

அரசியல்வாதிகளுக்கும் நடத்தை நெறிமுறைகள்

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்


கடந்த வாரம் நமது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சம்பந்தப்பட்ட இரு சம்பவங்கள் செய்தி ஊடகங்களில் இடம்பிடித்திருந்தன. ஜம்மு ~ காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அவைக் காவலர்களுடன் கடுமையாக மோதும் காட்சியை ~ கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு அவைக் காவலர்களுக்குக் குத்து விடும் காட்சியை ~ தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பின. விளையாட்டு தொலைக்காட்சி சேனல்களில் காட்டப்படும் மல்யுத்தப் போட்டி போல இருந்தது அது.

நமது கவனத்தைக் கவர்ந்த மற்றொரு செய்தி, 35-க்கு மேற்பட்ட குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவரும் 8 மாதங்களாக, ஆம்; எட்டு மாதங்களாக தான், குண்டர் படைத் தலைவர்போல தலைமறைவாக இருந்துகொண்டிருந்தவருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டது தொடர்பானதாகும்.

அந்த ஜம்மு ~ காஷ்மீர் எம்எல்ஏவை ஒரு தொலைக்காட்சி சேனல் பேட்டி கண்டு ஒளிபரப்பியது. அவரது கேவலமான நடவடிக்கைக்காக ஒரு துளி வருத்தத்தைக்கூட அப்போது அவர் தெரிவிக்கவில்லை. மாறாக, தேவைப்பட்டால் மீண்டும் அவ்வாறே நடப்பேன் என்று திட்டவட்டமாகக் கூறினார் அந்த எம்எல்ஏ. ஒருவகையில் பார்த்தால், சட்டம் ~ ஒழுங்கைப் பராமரிக்கின்ற காவல் துறையினரைப் போன்றவர்கள்தான் சட்டப் பேரவைக் காவலர்களும். அவையின் கண்ணியத்தைக் காக்கவும் அவைக்குள் நன்னடத்தையை உறுதிசெய்யவும் அவைத் தலைவரின் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுப்பவர்கள் அவர்கள். எனவே அவைக் காவலரை ஓர் எம்எல்ஏ தாக்குவதென்பது, காவல் துறையைச் சேர்ந்த ஒரு காவலரை பொதுஜனம் ஒருவர் தாக்குவதற்குச் சமமாகும். அப்படிச் செய்திருந்தால் பொதுஜனத்துக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் அந்த எம்எல்ஏவோ எவ்விதத் தண்டனையுமின்றித் தப்பிவிடக்கூடும். எம்.பி., எம்எல்ஏக்களுக்கு ஒரு குற்றவியல் சட்டம், சாதாரண மக்களுக்கு வேறொரு குற்றவியல் சட்டமா அமலில் இருக்கிறது?

8 மாதங்களாகத் தலைமறைவாகி ஓடிக்கொண்டிருந்த அந்த எம்.பி., அலாகாபாதில் உள்ள ஃபூல்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒரு காலத்தில் பண்டித ஜவாஹர்லால் நேருவைத் தேர்ந்தெடுத்த பெருமைக்குரியது அத் தொகுதி. அதே தொகுதியின் பிரதிநிதியாக இன்று, நாட்டின் பிரச்னைகளை விவாதித்து முடிவெடுக்கக்கூடிய தேசத்தின் மிக உயர்ந்த அமைப்பான நாடாளுமன்றத்துக்கு குற்றப் பின்னணியைக் கொண்ட ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செல்கிறார் என்றால் அது காலக்கொடுமைதான்.

அரசியல்வாதிகள் மீதும் சாதாரணப் பொதுமக்கள் மீதும் பழிவாங்கும் எண்ணத்தோடு அதிகாரத்தில் இருப்பவர்களால் பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை. அரசியல் எதிரிகள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்குகள் தொடரப்படுவதும் நடக்காமல் இல்லை.

தனக்கு எதிராக 35-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், ஓர் எம்.பி. தொகுதியின் பிரதிநிதியாகவும் இருக்கக்கூடிய கெüரவத்தை ஒருவர் பெற்றிருப்பதென்றால் அவர் உண்மையிலேயே பெரிய மனிதர்தான்! ஒருவர் எம்எல்ஏயாகவோ, எம்.பி.யாகவோ ஆக விரும்பினால், அவருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதைக் காட்டக்கூடியதாகவும் இருக்கிறது இது. ‘கெüரவமான’ நடுத்தர வர்க்கத்தினர், தொழில் நிபுணர்கள் மற்றும் இதைப் போன்ற சமுதாயத்தின் இதர பிரிவினரெல்லாம் வன்முறை தலைவிரித்தாடும் அரசியல் களத்துக்குள் ஏன் வர விரும்பவில்லை என்பதையும் இது எடுத்துக் காட்டுகிறது. சமுதாயத்தின் கணிசமான பகுதியினர் பொதுவாழ்க்கையில் ஈடுபட முடியாத அளவுக்கு ஒரு மோசமான நிலைமையை அரசியலில் உருவாக்கி விட்டார்கள்.

அந்த எம்.பி., எம்எல்ஏவைப் பற்றி அதே தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான அதே நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான ஜெயந்தி நடராஜனும் பங்குகொண்டிருந்தார். அச் சம்பவங்கள் குறித்து அவரிடம் கேட்டபோது, ‘ஒருவர் குற்றவாளி என்பது நிரூபணமானால், சட்டப்படி அவர் தண்டிக்கப்பட வேண்டியவர்தான்’ என்று சாதாரணமாகக் கூறிவிட்டுச் சென்றார் அவர். சாதாரணமாகப் பார்க்கும்போது, அவர் கூறியது நியாயமானதுதான், சரியானதுதான் என்று தோன்றக்கூடும். அரசியல்வாதிகளைப் பொருத்தவரை அதன் அர்த்தம் சரிதானா என்பதைப் பார்ப்போம்.

மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் மீதான எத்தனையோ வழக்குகள் எத்தனையோ நீதிமன்றங்களில், வெவ்வேறு நிலைகளில் பல ஆண்டுகளாக, ஏன் பத்து ஆண்டுகளுக்கு மேலாகக்கூட விசாரணையில் இருந்துகொண்டு இருப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

பிகார் கால்நடைத் தீவன ஊழல் வழக்கை சுமார் 20 ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் குற்றம் சாட்டப்பட்ட மூத்த அரசியல்வாதிகள் அவ் வழக்குகளில் தண்டிக்கப்படவும் இல்லை, அதிலிருந்து விடுதலை ஆகவுமில்லை. இதைப்போல எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.

எடுத்துக்காட்டாக சுக்ராம் வழக்கை எடுத்துக்கொள்வோம். அவரது வீட்டிலிருந்து ரொக்கமாகப் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அரசிடம் அத்தனை புலன்விசாரணை அமைப்புகள் இருந்தபோதிலும் அவர் மீதான குற்றச்சாட்டுகளை வெற்றிகரமாக நிரூபிக்க முடியவில்லை. சம்பந்தப்பட்ட அரசியல்வாதியோ சட்டையைக் கழற்றி மாட்டுவதைப்போல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்சிக்குத் தாவிக்கொண்டு சந்தோஷமாகக் காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறார். மிகப் பலவீனமான புலனாய்வு அமைப்புகள், ஓட்டைகளுடன்கூடிய அரசுத் தரப்பு இயந்திரங்கள், மென்மைப் போக்கு கொண்ட (வளைந்து கொடுக்கக்கூடிய என்றுதான் குறிப்பிட நினைத்தேன்) நீதித் துறை இவற்றாலெல்லாம் அரசியல்வாதிகளுக்கு எதிரான எந்த வழக்கையும் விசாரணை நடத்தி, அதை உரிய வகையில் முடிவுக்குக் கொண்டுவர முடியாது.

ஓர் அரசு ஊழியர் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டால், உடனடியாக அவர் பணியிடைநீக்கம் செய்யப்படுவது நடைமுறை விதியாக இருந்து வருகிறது. ஒருவேளை அவர் குற்றமற்றவர் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்த காலத்தில் ~ வருமானம், பதவி உயர்வு போன்ற ~ இழந்தவையெல்லாம் இழந்ததுதான். அதாவது, மக்கள் பணியாளர்களாக, அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்ற வழக்கு விசாரணையில் இருக்கும் பொழுது அவர்கள் அரசுப் பணியை ஆற்றுவதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள் என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம். ஆனால், அரசியல்வாதிகள் விஷயத்தில் இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்காமல் இருப்பதற்கு எந்த நியாயமான காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. சொல்லப் போனால், அமைச்சர்களும் எம்எல்ஏ, எம்.பி.க்களும்கூட மக்கள் பணியாளர்கள்தான்; அரசாங்க ஊழியர்களையும்விட கூடுதலாக மக்கள் பணியாளர்கள் அவர்கள். (பலர் தம்மை மாமன்னர்களாகவும் நவாபுகளாகவும் நினைத்துக்கொள்கின்றனர் என்பது வேறு விஷயம்). எனவே, அரசு ஊழியர்கள் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படும் அதே கொள்கை, அரசியல்வாதிகள் விஷயத்திலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்; குற்ற வழக்குகளில் இருந்து விடுதலை ஆகும் வரையில் அரசுப் பதவிகளை அவர்கள் வகிப்பதற்கும், எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கான பணியை ஆற்றுவதற்கும் அவர்களை அனுமதிக்கக் கூடாது. இந்த ஒரே நடவடிக்கை மூலமாகவே சட்ட மன்றங்களும் நாடாளுமன்றமும் குறிப்பிடத் தக்க அளவுக்குத் தூய்மைப்படுத்தப்பட்டுவிடும்.

அரசுப் பதவிகளை வகிப்போர் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க தனி நீதிமன்றங்களையோ, பிரத்தியேக நீதி அமைப்புகளையோ ஏற்படுத்த வேண்டும் என்று பலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. சாதாரணக் குடிமகனாக இருந்தாலும், சமுதாயத்தில் முக்கியமானவர்களாக இருந்தாலும் சட்டம் யாரையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை; எனவே ஒரே மாதிரியான நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது என்னும் வாதம் முன்வைக்கப்படுகிறது. இது சரியானதுபோலத் தோன்றினாலும் உண்மையில் தவறானதாகும்.

முதலாவதாக, சாதாரணக் குடிமகனுக்கும் விரைந்து நீதி கிடைக்க வேண்டியது அவசியம்தான். ஏராளமான வழக்குகள் பல பத்தாண்டுகளாக நீதிமன்றங்களின் விசாரணையில் இருந்துகொண்டு இருக்கின்றன. ஏராளமான விசாரணக் கைதிகள் சிறையில் இருந்துகொண்டு இருக்கின்றனர். கடைசியில் அவர்களில் பலர் வழக்கில் விடுதலை செய்யப்படக்கூடும் அல்லது மிகக் குறைந்த அளவு தண்டனை விதிக்கப்படவும்கூடும்.

இரண்டாவதாக, நமது சமுதாயத்தில் செல்வாக்குடன் இருக்கக்கூடிய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் போன்றோர் புலனாய்வு அமைப்புகள், விசாரணை அமைப்புகள், நீதி நடைமுறைகள் போன்றவற்றின் மீது தமது செல்வாக்கைச் செலுத்தக்கூடிய நிலையில் இருப்பவர்களாவர் என்பதே உண்மை. அவர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க முடியாமல் இருப்பதற்கு எந்தவிதக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை.

எடுத்துக்காட்டாக, குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பதவியில் இருக்க அனுமதிப்பதாக வைத்துக்கொள்வோம். ஒருவேளை பல ஆண்டு விசாரணைக்குப் பிறகு இறுதியில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டால், கறைபடிந்த ஒருவரை அரசின் உயர் பதவியில் அமரவும் அதன் மூலம் சமுதாயத்தின் செல்வாக்கு செலுத்தவும் அனுமதித்தவர்களாகிவிடுவோம் நாம். இந்தக் காரணங்களால்தான் அரசியல்வாதிகள், எம்.பி., எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க விரைவு நீதிமன்றங்கள் தேவை என வலியுறுத்தப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கிய முறைகேடு, நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி முறைகேடு ஆகிய ‘முன்மாதிரியான’ செயல்களெல்லாம் தண்டிக்கப்பட வேண்டியவை அல்ல என்று இன்றைய அமைப்பு முறை முடிவு செய்துவிட்டது.

இத்தகைய அரசியல்வாதிகளை முறைப்படுத்த நமது அரசியல் அமைப்புச் சட்டச் சிற்பிகள், எந்த ஏற்பாட்டையும் செய்யாமல் போனது நமது துரதிருஷ்டம்தான். அரசியல்வாதிகளெல்லாம் தம்மைப்போல நியாயவான்களாக, சுயநலமற்றவர்களாக, சுத்தமானவர்களாக இருப்பார்கள் என்று ஜவாஹர்லால் நேரு நினைத்திருக்கலாம். அன்று அவர்கள் அந்த ஏற்பாட்டைச் செய்யாமல் போனதற்கான விலையை நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின் நாம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கென குறைந்தபட்ச நன்னடத்தை விதிகள்கூட வகுக்கப்படவில்லை. அத்துமீறல்களை நடத்திவிட்டு எவ்விதத் தண்டனையுமின்றி அவர்கள் தப்புவது வாடிக்கையாகிவிட்டது. சொல்லப் போனால், கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இந்தியாவில் ஜனநாயகப் பாரம்பரியம் என்று ஏதும் இருந்ததில்லை. நமது அரசியல்வாதிகளும் தம்மை முகலாயச் சக்கரவர்த்திகளைப்போல் நினைத்துக்கொள்கின்றனர்.

ஜனநாயக உணர்வுகளும் சிந்தனைகளும் வளர்த்தெடுக்கப்படவும் இல்லை; மாற்றங்களை உருவாக்கும் வகையில் மக்களின் கருத்துகள் நெறிப்படுத்தப்படவும் இல்லை. எனவே, அரசியல்வாதிகளுக்கென குறைந்தபட்ச நடத்தை நெறிமுறைகள் வகுக்கப்பட்டாக வேண்டியது அவசியமாகும். ஆனால் அதை யார் செய்வதென்பதே கேள்வி.

(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவைச் செயலர்.)

Posted in Accountant General, Accounts, Admin, Administration, AGO, Allegations, Arms, Audit, BHEL, Bribes, Cabinet, Capitalization, Collector, Collectorate, Commission, Committee, Corruption, Deficit, Economy, Employment, Finance, financial, Funds, Globalization, Govt, HAL, Hindustan, Hindusthan, IAL, IAS, IMF, Income, Inquiry, Jobs, Lokpal, markets, NLC, parliament, Planning, Poor, Private, PubAd, Pubic, Public Administration, Rich, SAIL, service, SEZ, Shares, Statements, Statistics, Statz, Stocks, Verification, Wages, WB, Wealth, Weapons | Leave a Comment »

Nothing macho about India’s forex reserves – Impact on growth and prices: Varadharajan

Posted by Snapjudge மேல் திசெம்பர் 7, 2007

அன்னியச் செலாவணி கையிருப்பு “நீர்க்குமிழியா’?

உ .ரா. வரதராசன்

“இந்திய நாட்டின் பொருளாதாரம் இமயமென உயர்ந்து நிற்கிறது’ என்று வளர்ச்சியின் பரிணாமங்களை வியந்து போற்றுகிற ஆட்சியாளர்களும் வல்லுநர்களும் அதற்கான சான்றாகச் சுட்டிக்காட்டுவது நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு பற்றிய புள்ளிவிவரங்களாகும்.

உலகமய, தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து அமல்படுத்தத் தொடங்கியது 1991 ஆம் ஆண்டில்தான். அந்த ஆண்டு மார்ச் இறுதியில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் அன்னியச் செலாவணிக் கையிருப்பாக இருந்த தொகை 580 கோடி அமெரிக்க டாலர் மட்டுமே. இது படிப்படியாக உயர்ந்து 2007 மார்ச் இறுதியில் 19,920 கோடி டாலராக ரிசர்வ் வங்கியில் அம்பாரமாகக் குவிந்து கிடப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.

பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்தத் தொடங்கியதற்குப் பிரதான காரணங்களாகச் சொல்லப்பட்டவற்றில் ஒன்று, நாடு சந்தித்த அன்னியச் செலாவணி நெருக்கடி. மறைந்த சந்திரசேகர் பிரதமராக இருந்த காலகட்டத்தில், அன்னியச் செலாவணி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு வேறு வழியில்லாமல், மத்திய அரசு ரிசர்வ் வங்கியிலிருந்த தங்கத்தை டன் கணக்கில் எடுத்துக்கொண்டு போய் இங்கிலாந்து (மத்திய) வங்கியில் அடமானம் வைக்க நேரிட்டது என்பது சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குத் தலைக்குனிவை ஏற்படுத்திய நிகழ்வு. அந்த நிலைமை இப்போது தலைகீழாய் மாறியிருக்கிறது என்பதையே தற்போதைய அன்னியச் செலாவணிக் கையிருப்பு விவரங்கள் உணர்த்தும் நிலவரம்.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கையில், இது மிகவும் திருப்திகரமானதொரு நிலைமை என்றே தோற்றமளிக்கலாம். இதை அளவுகோலாகக் கொண்டால், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பெரும் வெற்றியை நம் நாட்டுக்குத் தேடித் தந்துள்ளதாகவே முடிவுக்கு வரத் தோன்றும். ஆனால், இந்தக் கையிருப்பின் கணக்குகளை சற்றுக் கருத்தூன்றிப் பரிசீலித்தால், கவலையே மிஞ்சுகிறது.

1991 முதல் 2007 வரையிலான 16 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் நமக்குச் சாதகமான பலன்கள் விளைந்தனவா என்பது முதலில் பார்க்க வேண்டிய கணக்கு.

  • 1990 – 91ஆம் ஆண்டில் நமது இறக்குமதிகளின் மொத்த மதிப்பு ரூ. 50,086 கோடி;
  • ஏற்றுமதிகளின் மதிப்பு ரூ. 33,152 கோடி மட்டுமே.
  • நிகர பற்றாக்குறை ரூ. 16,934 கோடி!
  • இது டாலர் கணக்கில் 944 கோடி.
  • இதுவே, 2005-06ஆம் ஆண்டில் ரூ. 2,29,000 கோடி பற்றாக்குறையாக உயர்ந்தது;
  • டாலர் கணக்கில் இந்தப் பற்றாக்குறை 5,184 கோடியாகும்.

கடந்த பதினாறு ஆண்டுகளில் ஓர் ஆண்டில்கூட நம் நாட்டின் மொத்த ஏற்றுமதி மதிப்பு, இறக்குமதி மதிப்பைவிடக் கூடுதலாக இல்லை என்பதுதான் புள்ளிவிவரங்கள் கூறும் உண்மை.

இந்தப் பதினாறு ஆண்டுகளில் சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்ட நிகர பற்றாக்குறை – ஏற்றுமதியை விஞ்சிய இறக்குமதியால் சந்திக்க வேண்டிய சுமை – 3,410 கோடி டாலர் என்று ரிசர்வ் வங்கிக் கணக்கு கூறுகிறது. (ரூபாய் மதிப்பில் இன்றைய நிலவரப்படி இது 1,37,000 கோடி ரூபாய் பற்றாக்குறையாகும்!)

இப்படியிருக்கையில், நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு மட்டும் உயர்ந்து கொண்டே இருப்பது எப்படி என்ற கேள்வி எழுவது இயல்பே!

சர்வதேச ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தக நிலவரம் நமக்குச் சாதகமாக அமையாத பின்னணியில், நம் நாட்டின் ஆட்சியாளர்கள் அன்னியச் செலாவணி வரத்தைக் குறியாகக் கொண்டு, நிதித்துறை சீர்திருத்தங்கள் பலவற்றையும் அமலாக்கி வந்துள்ளனர்.

இதன் முதல் கட்டமாக 1991 ஆம் ஆண்டு தொடங்கி நமது நாட்டுப் பொருளாதாரத்தின் சகல துறைகளும் – பாதுகாப்புத்துறை உள்பட – அன்னிய முதலீட்டுக்காகத் திறந்துவிடப்பட்டு வந்துள்ளன. புதிதாகத் தொழில் தொடங்க நூற்றுக்கு நூறு சதவீத முதலீட்டுக்கு மட்டுமன்றி, இந்தியாவின் தொழில் நிறுவனங்களை விலைபேசி கையகப்படுத்துவதற்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டது.

இரண்டாவதாக 1993 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொழில் முதலீட்டுக்கு மட்டுமன்றி, பங்குச் சந்தை வர்த்தகத்திலும் அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் நுழைய அனுமதிக்கப்பட்டன.

இந்த இரண்டு வகையிலும், பன்னாட்டு நிதி மூலதனம் நம் நாட்டுக்கு வருவதற்கு ஊக்கம் அளிப்பதற்காக அடுக்கடுக்கான சலுகைகளும் வாரி வழங்கப்பட்டன.

இவற்றில், முதல் வகையில் நேரடித் தொழில் முதலீடுகளாக வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, இரண்டாவது வகையில், பங்குச் சந்தை வர்த்தகத்திற்காக வந்த தொகைகள் பல மடங்காகும்.

நேரடித் தொழில் முதலீட்டிலும், புதிய தொழில்களைத் தொடங்க வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, உள்நாட்டு நிறுவனங்களை கபளீகரம் செய்வதற்காக வந்த மூலதனமே மிகுதியாகும்.

இரண்டாவது வகையாக பங்குச் சந்தை வர்த்தகத்தில் (சூதாட்டத்தில்) நுழைந்துள்ள அன்னிய மூலதனத்தின் வளர்ச்சி திகைப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இதற்கு அனுமதி வழங்கப்பட்ட 1993 ஆம் ஆண்டில், அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் இந்தியாவின் பங்குச் சந்தையில் ஈடுபடுத்திய தொகை 83 கோடி அமெரிக்க டாலர்கள். இதுவே 2007 மார்ச் இறுதியில் 5200 கோடி டாலர்களாக “விசுவரூபம்’ எடுத்தது! இப்படி மூலதனக் கணக்கில் வரவாக வந்த அன்னியச் செலாவணிதான் ரிசர்வ் வங்கியில் ஏகபோகமாக குவிந்து நிற்கிறது!

இதற்கு விலையாக நமது நாடு கொடுத்தவை ஏராளம், ஏராளம்!

இந்த அன்னிய மூலதன வரவுக்கு எந்தக் கட்டுப்பாடும், நிபந்தனையும் கிடையாது. அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் கொண்டு வரும் நிதி மூலதனத்தின் உண்மையான சொந்தக்காரர்கள் யார் என்று தெரிவிக்க வேண்டியது கட்டாயமில்லை!

இந்த முதலீடுகள் கொழிக்கும் லாபத்துக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்கு உண்டு. இதற்காக மொரிஷியஸ் நாட்டோடு பாஜக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டு, அந்த நாட்டின் வழியாக வந்து போகும் அன்னிய மூலதனம் எந்த வரிவிதிப்புக்கும் உட்படாது. (இதை மறுபரிசீலனை செய்வோம் என்று குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் கூறியுள்ள இன்றைய மத்திய அரசு, கடந்த மூன்றரை ஆண்டுகளாக இதைக் கண்டுகொள்ளவே இல்லை!)

இந்த அன்னிய மூலதனம்தான் நமது நாட்டின் பங்குச் சந்தையை ஆட்டிப் படைக்கிறது. இந்தியாவின் பெரிய தொழில் நிறுவனங்களில் 30 கம்பெனிகளின் பங்குகளின் விலை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படும் “சென்செக்ஸ்’ குறியீடு ஒரு மாயாஜால விளையாட்டாக மாறியுள்ளது.

1990 ஜனவரியில் 1000 என்று இருந்த சென்செக்ஸ் புள்ளிகள் 2004 ஆம் ஆண்டு வரை 7000 புள்ளிகளுக்குக் கீழாகவே இருந்தது. 2005 ஜூன் மாதம் 7000 புள்ளியை எட்டிப்பிடித்த சென்செக்ஸ், இப்போது 20,000 புள்ளிகள் வரை நாலு கால் பாய்ச்சலில் எகிறிக் குதித்துள்ளது! இதன் ஏற்ற இறக்கங்களில் பல லட்சம் கோடி ரூபாய்கள் நாள்தோறும் ஒரு பிரிவினருக்கு லாபமாகவும், இன்னொரு பிரிவினருக்கு இழப்பாகவும் பரிமாற்றமாகின்றன.

சென்செக்ஸ் பற்றி நாட்டின் நிதியமைச்சர் ப. சிதம்பரம் “சில நேரங்களில் வியப்பாகவும், சில நேரங்களில் கவலையளிப்பதாகவும்’ இருக்கிறது என்று அண்மையில் கூறியிருந்தார். அதைத் தாண்டி இந்த “மாயா பஜார்’ விளையாட்டைக் கட்டுக்குள் கொண்டு வருவது பற்றி சிந்திக்கக்கூட அரசு மறுப்பதுதான் வேதனை!

எனவேதான், அரசுத் தரப்பில் ஆர்ப்பரிப்போடு பேசப்படுகிற அன்னியச் செலாவணிக் கையிருப்புப் பெருக்கம், பொருளாதார வளர்ச்சிக்கு அளவுகோல் அல்ல; அது சோகை பிடித்த பொருளாதார நீரோட்டத்தின் மேற்பரப்பில் தென்படும் நீர்க்குமிழி போன்றதே!

பொருளாதாரச் சீர்திருத்தங்களின் எதிர்ப்பாளர்கள் மட்டுமல்ல – ஆதரவாளர்களே ஆழ்ந்த கவலையோடு பரிசீலிக்க வேண்டிய நிலைமை இது!

(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)

Posted in ADR, Agflation, America, APR, Balance, Balance sheet, Balancesheet, Banks, Benefits, Budget, Conversion, Currency, Deficit, Deflation, Dollar, Economy, Exchange, Exports, FDR, Finance, financial, forex, Funds, GDP, Growth, Imbalance, IMF, Impact, Imports, Index, India, Indices, Inflation, Interest, investments, Loans, Loss, markets, MNC, Monetary, Numbers, PC, Policy, Prices, Profit, Rates, RBI, reserves, Return, ROI, Shares, Statistics, Statz, Stocks, Tariffs, Tax, US, USA, Varadharajan, Varadharasan, WB | Leave a Comment »

Probing the rice seizures in Tamil Nadu – AK Venkatasubramanian

Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2007

இரண்டு ரூபாய் அரிசி
மின்சார அதிர்ச்சி
அதிரடித் தகவல்கள்

கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதியன்று புதுச்சோரி மாநில உணவுக் கடத்தல் தடுப்புப் பி¡ரிவு போலீஸார், புதுச்சோரி ரயில் நிலையத்தில் வழக்கமான கண்காணிப்பை மேற்கொண்ட போது, 40 வேகன்களில் அ¡ரிசி ஏற்றப் பட்டு, ஒரு சரக்கு ரயில் புறப்படத் தயாராக நின்றுகொண்டிருந்தது. அனுப்பப்படும் சரக்கு, அ¡ரிசி என்றதும் சற்று விழித்துக்கொண்டது போலீஸ். ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் 2,400 டன் அ¡ரிசி அந்த வேகன்களில் ஏற்றப்பட்டு, ஆந்திராவில் உள்ள பிக்காவொலு என்ற இடத்துக்கு அனுப்புவதற்காகப் பதிவு செய்யப்பட்டது தொரிய வந்தது.

“யார் பதிவு செய்தது; பதிவு செய்தவர்களுக்கு அ¡ரிசி எப்படி வந்தது; முறையான அத்தாட்ச யுடன் அ¡ரிசி செல்கிறதா?” என்று கேள்விகள் தொடர்ந்தன. விசாரணையில் பெங்களூரூவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பி.ஆர்.எஸ். டிரேடர்ஸ் என்ற நிறுவனம் பதிவு செய்ததாகத் தொரிய வந்தது. ஆனால், விதி முறைகளுக்கு உட்பட்டு எடுத்துப் போகப்படும் அ¡ரிசி’ என்று சொல்லும் ஆவணங்கள், ரயில்வே துறையிடம் இல்லை.

கடத்தவிருந்த சரக்கு பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் இன்னமும் துருவியபோது அம்பலமானதுதான், இப்போது தமிழகம் மற்றும் புதுவையில் அலசப்படும் மெகா அ¡ரிசிக் கடத்தல் விவகாரம்.

தொடர்ந்து மேற்கொண்ட அதிரடி விசாரணையில், அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. கடத்தப்படவிருந்த அ¡ரிசி பொது விநியோகத்துக்கு வழங்கப்பட்ட, முன்பே நான்கு முறை புதுச்சோரி ரயில் நிலையத்திலிருந்து கடத்தப்பட்டிருக்கிறது! கடந்த செப்டம்பர் மாதம் முதல் முறையாக 39 வேகன்களில் 2,340 டன் அ¡ரிசி வங்க தேசத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. அடுத்து, அதே செப்டம்பர் மாதம் 20 வேகன்களில் 1,247 டன் அ¡ரிசி அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹாட் என்ற இடத்துக்குக் கடத்தப்பட்டிருக்கிறது.

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மொத்தம் 60 வேகன்களில் 3,765 டன் அ¡ரிசி அஸ்ஸாம் கவுகாத்திக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. எந்தக் கிடங்கிலிருந்து கொண்டு வரப்பட்டது என்று புலனாய்வு செய்ததில், புதுவையில் உள்ள மா புட்ஸ் மற்றும் ஜே.ஆர். புட்ஸ் என்ற நிறு வனங்களுக்குச் சொந்தமான கிடங்குகளில் சேகாரிக்கப்பட்டு கடத்தப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.

அந்தக் கிடங்குகளைச் சோதனை செய்ததில் 3,500 டன் அ¡ரிசி சிக்கியது.

சென்னை சேத்துப்பட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் அன்னம்மாள் காசி எக்ஸ்போர்ட்ஸ். தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் போலியான முகவாரியைக் கொடுத்து நடத்தி வந்த நிறுவனமாம் இது. ஆறுமுகம் ‘ஓஹோ’ வென்று அ¡ரிசி வியாபாரம் செய்வதாகச் சொல்லி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் 2005ஆம் வருடம், நவம்பாரில், பத்து கோடி ரூபாய் கடன் கேட்டிருக்கிறார். அவர் பெயருக்கு ஐந்து கோடி, நிறு வனத்துக்கு ஐந்து கோடி!

2006-ஆம் வருடம், மார்ச் மாதம், பத்து கோடியையும் வழங்கிவிட்டது வங்கி. ஆனால், மாதத் தவணை திருப்பிக் கட்டப்படாததால் கவலையடைந்த வங்கி, ஒரு கட்டத்தில், இந்த நிறுவனம் சேகாரித்து வைத்திருந்த அ¡ரிசியைக் கைப்பற்றி ஏலம் விட்டு விட்டது.

ஏலத்தில் அ¡ரிசியை எடுத்த பி.ஆர்.எஸ். டிரேடர்ஸ் ரயிலில் அனுப்பும்போதுதான் மாட்டிக்கொண்டது. இந்த முக்கியக் கதையில் சில கிளைப் பாத்திரங்களும் உண்டு. வங்கிக்கும் ஆறுமுகத்துக்கும் இடையே பாலமாக இருந்து செயல்பட்டது, மும்பையைச் சேர்ந்த நேஷனல் கொலட்ரல் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் என்ற நிறுவனம். அ¡ரிசிக் கடத்தல் விவகாரத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு குறித்துத் தீவிர விசாரணை நடக்கிறது. தவிர, விசாரணை வலை இறுகும்போது ரயில்வே ஊழியர்களும் சிக்குவார்கள் என்று தொரிகிறது; இதுவரை ஆறு பேர் கைதாகியிருக்கிறார்கள்.

ரயில்வே ஊழியர்கள் சரக்கைப் பதிவு செய்யும்போது, உ¡ரிய ஆவணங்களை ஏன் கேட்டுப் பெறவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஒரு பொருளை ரயிலில் அனுப்பப் பதிவு செய்யும் போது, அந்தப் பொருள் அனுப்பும் நபருடையதுதான் என்று நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் கொடுக்க வேண்டும். அதிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பும் போது, ரயில்வேயிடம் வழங்கும் மனுவில் உ¡ரிய அதிகா¡ரியின் அத்தாட்சி குறிப்பிடப்பட வேண்டும். அ¡ரிசி, கோதுமை என்றால் வட்டார வழங்கல் அதிகா¡ரி அல்லது வரு வாய்த்துறை அதிகா¡ரிகளிடம் அத்தாட்சி பெற்றிருக்க வேண்டும். ரயில்வே அதிகா¡ரிகள் துணையில்லாமல் இந்தக் கடத் தல் நடந்திருக்க முடியாது.

இப்போது மற்றொரு முக்கியக் கேள்வி எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறது. கடத்தப்பட்ட அ¡ரிசி எந்த மாநிலத்தை சேர்ந்தது? “பிரச்னையில் சிக்கிய நிறுவனம் சென்னை முகவாரியைக் கொடுத்துச் செயல்பட்டிருக்கிறது. எங்கள் மாநிலத்தில் பொது விநியோகத்துக்கு வெளி மார்க்கெட்டிலிருந்து அ¡ரிசி வாங்குகிறோம். எனவே, தமிழ்நாட்டிலிருந்து தான் இந்த அ¡ரிசி கடத்தி வரப்பட்டிருக்கக்கூடும்” என்று உறுதியாகச் சொல்கிறார்கள் புதுவை அதிகா¡ரிகள். ரேஷனில் கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்கப் படும் அ¡ரிசி, கடத்தப்பட்டு வடகிழக்கு மாநிலங்களை அடையும்போது கிலோ இருபது ரூபாயாக எகிறுகிறது. இந்தத் தகவலே மின்சார அதிர்ச்சியாக இருக்கிறது.

இந்த விவகாரமும் 2006-ஆம் வருடம் மே மாதத்துக்கு முன்பே ஆரம்பித்து விட்டது. இருந்தாலும், ‘முழு உண்மையைக் கண்டறிய சி.பி.ஐ. விசாரணை கோ¡ரியிருக்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறது தமிழக அரசு. சி.பி.ஐ. விசாரணை கோ¡ரினாலும், தமிழக அரசின் சிவில் சப்ளை போலீஸ் துறை தனியாக, தீவிரமாக விசாரணை நடத்தி சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளைக் கண்டறிந்துள்ளதாக, கோட்டை வட்டாரம் சொல்கிறது.

“2006ம் வருடம் மே மாதத்துக்குப் பிறகு தி.மு.க. ஆட்சியில் பொது விநியோகத் துறை முடுக்கிவிடப்பட்டது. உணவு அமைச்சரே மாநிலம் முழுவதும் இரவும், பகலும் சுற்றி ரேஷன் அ¡ரிசி கடத்தல்காரர்களை வேட்டையாடினார். இதுவரை 45 கடத்தல்காரர்கள் உள்ளே தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதில் ஐந்து பேர் குண்டர்கள் சட்டத்தில் இருக்கிறார்கள். நிறைய லா¡ரிகள் கைப்பற்றப் பட்டன.

கடத்தலுக்குத் துணைபோன ஊழியர்கள், அதிகா¡ரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் 40 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்தப் போலி கார்டுகள் மூலம் வாங்கப்பட்ட அ¡ரிசியே சேகாரிக்கப் பட்டுக் கடத்தப்பட்டது. ஒரு கோடியே 94 லட்சம் கார்டுதாரர்களுக்கு முறையே மாதம் 20 கிலோ அ¡ரிசி தவறாமல் வழங்கிவிடுகிறோம்.

அதேசமயம் முன்பு, அ.தி.மு.க. ஆட்சியில் உணவுக் கழகத்திடம் கொள்முதல் செய்த அ¡ரிசியின் அளவு மூன்று லட்சம் டன். நியாயமான கார்டுதாரர்களின் எண்ணிக்கை கொஞ்சம் உயர்ந்த போதும் இப்போது கொள்முதல் செய்யும் அளவு இரண்டேமுக்கால் லட்சம் டன்தான்.

இதில் இடைப்பட்ட அளவு உள்ள அ¡ரிசியே அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கடத்தப்பட் டது. இப்போது உணவுக் கழகத்திட மிருந்து அ¡ரிசி கொள்முதல் செய்த லா¡ரி, எந்த வழித்தடத்தில் செல்கிறது என்பதையும் மானிட்டர் செய்யும் வசதி இருக்கிறது. கடந்த ஆட்சியில் ஓர் அமைச்சரே தினசாரி 20 லா¡ரிகளில் ரேஷன் அ¡ரிசியைக் கடத்தியிருக்கிறார் என்பது தொரிய வந்திருக்கிறது” என்ற திடுக் தகவலுடன் முடித்தார் அந்தத் துறை சார்ந்த இந்நிலையில், அதிகா¡ரி ஒருவர்.

புதுவையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கிடங்குகள் ஒரு வருடத்துக்கு முன்புதான் எடுக்கப்பட்டதாக ஜெயலலிதா சொல்கிறார். இப்போதைய தி.மு.க. ஆட்சியில் கடத்தல் கணிசமாகக் குறைந்திருக்கிறது என்று சொல்லப்படுவது எந்த வகையில் சமாதானமாக அமைய முடியும்!

யாருமே அ¡ரிசி கடத்தல் அதிகாரித்துள்ளது என்று ஒப்புக்கொள்ளப் போவதில்லை. பொதுவிநியோகம் என்றாலே ஊழலுடன் கைகோத்துக்கொண்டு தான் நடக்கிறது. ஒன் றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் தொடர்பான விவகாரம் இது. சி.பி.ஐ. விசாரணை, ‘கடத்தல் நடந்த கால கட்டத்தை’ கண்டு பிடித்து வெளியிடும்போது, யார் யார் தலை உருளுமோ?

– ஸ்ரீநி
——————————————————————————————————–

“பொது விநியோகத் திட்டத்துக்கு வழங்கப்படும் அ¡ரிசி கடத்தப்பட்டு, வருடம் ஒன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இது ஒரு தொடர்கதையே” என்று சொல்லி நம்மை திடுக்கிட வைக்கிறார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகா¡ரி, அ.கி.வேங்கட சுப்பிரமணியம். பல ஆண்டுகள் உணவு மற்றும் பொது விநியோகத் துறைகளில் பணியாற்றி அனுபவம் பெற்றவர் இவர்.

“நமது நாட்டில் ஏறத்தாழ ஐந்து லட்சம் நியாய விலைக் கடைகள் மூலம், 20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டு ஒன்றுக்கு 20,000 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்துக்காக வழங்கப்படும் அ¡ரிசி, கோதுமை, மண் ணெண்ணெய் ஆகியவை தீய சக்திகளால் கடத்தப்படுவது பல்லாண்டுகளாக நடந்து வரும் ஒரு விஷயம்.

1998-ஆம் வருடம் நாடு முழுவதும் ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவது குறித்த ஆய்வை எடுக்குமாறு டாடா நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அந்த ஆய்வின்படி தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்துக்காக வழங்கப்படும் அ¡ரிசியில் மூன்றில் ஒரு பாகம் கடத்தப்படுகிறது என்பது தொரிய வந்தது. மாதம் ஒன்றுக்கு விநியோகிக்கப்படும் சுமார் மூன்று லட்சம் டன் அ¡ரிசியில், ஒரு லட்சம் டன் அ¡ரிசி கடத்தப்படுகிறது என்ற அடிப்படையில் பார்த்தால், கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் லாபம் அடிக்கும் பட்சத்தில், வருடம் ஒன்றுக்கு ஆயிரம் கோடி, கடத்தல்காரர்களின் பாக்கெட்டுகளுக்குப் போகிறது.

கடத்தலைக் கண்டுபிடிக்க சிவில் சப்ளை போலீஸ் இருக்கிறது. ஆனால், ஒரு கடத்தல் லா¡ரியைப் பிடித்து விட்டால் அதிலுள்ள ஆட்களைக் கைது செய்து, லா¡ரியைப் பறி முதல் செய்து வழக்குப் பதிவு செய்கிறார்களே தவிர, அந்தக் கடத்தலுக்கு மூலம் யார்? அ¡ரிசி எங்கு போகிறது என்றெல்லாம் ‘பல காரணங்களால்’ ஆய்வு செய்வதில்லை.

கடத்தலுக்கு முக்கிய காரணம் போலி ரேஷன் கார்டுகளும், அ¡ரிசி வாங்காத கார்டுகளும்தான். இதைக் கண்டுபிடிப்பது எப்படி? 1997-ஆம் ஆண்டு தமிழக அரசின் உணவுத் துறை (எ..225) ஆணை ஒன்று போட்டிருக்கிறது. அதன்படி ஒருவர், ரேஷன் கடைக்குச் சென்று கார்டுதாரர்கள் பட்டியலைக் கொண்ட ¡ரிஜிஸ்டரைப் பார்வையிட்டு, நகல் எடுக்கலாம். அதே போல் ஸ்டாக் ¡ரிஜிஸ்டரையும் சோதிக்கலாம். பேட்டை ரவுடிகள், அரசியல்வாதிகள் மிரட்டல் மற்றும் அராஜகம் காரணமாக, தனி மனிதர்கள் இந்த வேலைகளில் ஈடுபடத் துணிய மாட்டார்கள். கார்டுதாரர்களின் பட்டியலை எடுத்து ஏ¡ரியாவில், வீடு, வீடாகச் சோதனைச் செய்து, போலி கார்டுகளின் பட்டியலை உ¡ரிய அதிகா¡ரிக்குக் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் செய்யலாம். இதனால் ஊழல் ஒழிய வாய்ப்பிருக்கிறது” என்கிறார் அ.கி.வேங்கடசுப்ரமணியம்.

————————————————————————————————————————-
விலைக் கொள்கையில் நெல்லும் கோதுமையும்

ஆர்.எஸ். நாராயணன்

தேசிய விவசாய விளைபொருள் விலை நிர்ணயக் கொள்கை விவசாய உற்பத்தி வளர்ச்சிக்கு இன்றியமையாதது.

ஏனெனில் விலை என்பது கேள்வியின் ஆற்றலுக்கும் வழங்கலின் விளைவுக்கும் இடைப்பட்ட ஒரு சமரசக்குறியீடு. இது வளர்ச்சியைக் கண்காணிக்கும் குறியீடும் ஆகும். கேள்வியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த விலைக்குறைப்பை ஏற்படுத்தியும், விலையை உயர்த்தி வழங்கலையும் பெருக்க வேண்டும்.

திட்ட நிர்ணயப்படி விளைபொருள் உற்பத்தி உயரும்போது வழங்கல் அதிகமாகும். வழங்கல் கூடினால் விலை வீழ்ச்சியுறும். விலை வீழ்ச்சியுற்றால் உற்பத்தி குறையும். திட்டமிட்டபடி உற்பத்தியை உயர்த்த விலை நிர்ணயம் தேவை. எனவே, உணவு உற்பத்தியை உயர்த்தும் ஒரு மார்க்கமாகவே விலை நிர்ணயக் கொள்கை உதவி வந்துள்ளது.

இருப்பினும் கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு – குறிப்பாக நமது பொதுவிநியோகத்துக்கு வழங்கும் நெல், கோதுமை விவசாயிகளுக்கு – மத்திய அரசு வழங்கி வரும் ஊக்க விலைக்கும் மொத்தவிலைக்குறியீட்டு எண் காட்டும் விலைக்கும் உள்ள சமச்சீர்மை என்றோ தொலைந்துவிட்டது.

நெல் அல்லது அரிசியில் வெளிஅங்காடி வழங்கல் கூடுதலாகவும் கோதுமையில் வெளிஅங்காடி வழங்கல் குறைவாகவும் உள்ளது. அரிசியில் ஏற்றுமதி உள்ளது. கோதுமையில் இறக்குமதி உள்ளது. மொத்தத்தில் இந்த ஆண்டு 2007 – 08-க்கான அரசின் நெல், கோதுமை விலைகளால் இரு தரப்பு விவசாயிகளும் நொந்து போயுள்ளனர்.

வடக்கே – குறிப்பாக பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உ.பி. ஆகிய மாநிலங்களின் விவசாயிகளே அரிசி மற்றும் கோதுமைகளை மத்தியத் தொகுப்புக்கு வழங்குவதில் முன்னிலை வகிக்கின்றனர். இம்மாநில விவசாயிகளின் கோரிக்கைகளை வைத்துத்தான் மத்திய அரசின் விலைநிர்ணயம் உருப்பெருவதாகத் தோன்றுகிறது.

கடந்த 9-10-2007 அன்று நடப்புப் பருவத்திற்குரிய வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைகளை மத்திய அமைச்சரவைக்குழு அறிவித்தது.

அதன்படி, கோதுமைக்கு குவிண்டாலுக்கு ரூ. 1,000, “ஏ’ ரக நெல் ரூ. 725 என நிர்ணயம் செய்யப்பட்டது.

கடந்த பருவத்தைவிட நடப்புப் பருவத்திற்கு (2007 – 08) கோதுமைக்கு ரூ. 150 உயர்த்தப்பட அதேநேரம் நெல்லுக்கு ரூ. 30 மட்டுமே உயர்த்தப்பட்டது. இந்த வித்தியாசம் ஒருபுறம் இருக்கட்டும்.

கோதுமையுடன் நெல்லை ஒப்பிடும்போது கோதுமையை அப்படியே மாவாக (ஆட்டாவாக) மாற்றி சமைத்து விடலாம். கழிவும் அற்பமே. ஆனால் நெல்லை அரிசியாக மாற்றித்தான் சமைக்க முடியும். நெல்லில் மூன்றில் ஒரு பங்கு உமியாகவும் தவிடாகவும் மாறிவிடும். எனினும் தவிட்டுக்கு விலை உண்டு. குருணைக்கும் விலை உண்டு.

நெல்விலை என்றால் 66.6 சதவீத அரிசி விலைக்குச் சமம். 100 சதவீதம் அரிசி என்பது ரூ. 966 என்றாலும் ரூ. 34 குறைகிறது.

நெல் விலையையும் கோதுமை விலையையும் சமவிகிதத்தில் உயர்த்தாமல் விலை நிர்ணயம் செய்துள்ள விவசாய விலை மதிப்பீட்டு விலைக்குழு பாரபட்சம் காண்பிப்பது ஏன்?

மத்திய அரசின் மத்தியத் தொகுப்புக்கு குறைந்த அளவுக்கு வழங்கல் செய்யும் தமிழ்நாட்டு விவசாயிகள் இப்போது கிளர்ந்தெழுந்துள்ளனர். அதேசமயம் விலைநிர்யணமாவதற்கு முன்பே வடக்கில் பாரதிய விவசாயிகள் சங்கம் கிளர்ந்தெழுந்துவிட்டது.

பொதுவாக ஒப்பிடும்போது கோதுமை விலையில்தான் பிரச்னை அதிகம். உலகச் சந்தையில் கோதுமையின் விலை ரூ. 1,600. மத்திய அரசு (உணவுக் கார்ப்பரேஷன்) இவ்வளவு அதிகமான விலை கொடுத்து சுமார் 10 லட்சம் டன் வரை கோதுமையை இறக்குமதி செய்துள்ளது.

கோதுமையில் உள்ள பற்றாக்குறை அரிசியில் இல்லை. அரிசி ஏற்றுமதியாகிறது. கோதுமையோ இறக்குமதியாகிறது. கோதுமை உள்ளூர் வியாபாரத்திலும் உணவுக் கார்ப்பரேஷன் ஏகபோகம் செய்கிறது.

கோதுமையின் வெளிச்சந்தைக்கும் உணவுக் கார்ப்பரேஷனே வழங்கல் செய்கிறது. அரிசியில் வெளிச்சந்தை தெளிவாக உள்ளது.

ஆகவே, பாரதிய விவசாயிகள் சங்கம் கோதுமைக்கு உலகச் சந்தையில் உள்ள விலையை வழங்க வேண்டும் என்று கிளர்ச்சி செய்தும் கிடைத்த விலை ரூ. 1000 மட்டுமே.

இப்போது கோதுமை விவசாயிகள் ரூ. 1,240 தர வேண்டும் என்று நிர்பந்தம் செய்கின்றனர். கோதுமை விலையை மொத்த விலைக்குறியீட்டெண் அடிப்படையில் நிர்ணயம் செய்யாததால் கடந்த 25 ஆண்டுகளில் கோதுமை விவசாயிகளின் இழப்பு ரூ. 20,000 கோடி என்று பாரதிய விவசாயிகள் சங்கம் ஒரு புள்ளிவிவரத்தை மத்திய அரசின் அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பியுள்ளது.

பாசுமதி அரிசி தவிர்த்த இதர ரக அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுவும் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பஞ்சாபில் குருதாஸ்பூர், பெரோஸ்பூர், அமிருதசரஸ் மாவட்டங்களில் விளையும் சர்பதி, பூசா சன்னரகம் ஏற்றுமதி காரணமாக ரூ. 1,600 என விற்ற விலை இன்று ரூ. 1,200-க்கு இறங்கிவிட்டது.

ஆகவே பாசுமதி சாராத இதர அரிசி ரகங்களின் ஏற்றுமதித் தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு கூடியுள்ளது.

மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் கிரிக்கெட் போதையில் உள்ளார். விவசாயப் பிரச்னையைவிட வெங்சர்க்கார் விலகல் பிரச்னைதான் இப்போது அவருக்கு முக்கிய விஷயமாகிவிட்டது!

கடந்த பல ஆண்டுகளாக வேளாண்மை உற்பத்தி மதிப்பு சரிந்துவிட்ட சூழ்நிலையில் கொள்முதல் விலைக்கும் சாகுபடிச் செலவு மதிப்புக்கும் இடைவெளி மிகவும் குறுகிவிட்டது.

எனினும், விவசாய விலை மதிப்பீட்டுக் குழு பின்வரும் பத்து விலை நிர்ணய ஆக்கக் கூறுகளை, ஜா கமிட்டி பரிந்துரைத்தபடி பின்பற்றுவதாகவும் தெரியவில்லை. அவையாவன:

1. சாகுபடிச் செலவு மதிப்பு.

2. பயிர் முதலீடுகளின் விலை மாற்றம்.

3. பயிர் முதலீட்டுப் பொருள் விலைக்கும் உள்ள இணைவீதம்

4. அங்காடி விலைகளின் போக்கு.

5. கேள்வியும் வழங்கலும்

6. சகபயிர் விலைகள்

7. தொழில்துறை செலவு மதிப்பின் மீது ஆதரவு விலை ஏற்படுத்தும் விளைவு.

8. பொதுவான விலைவாசி ஏற்படுத்தும் விளைவு.

9. வாழ்க்கைச் செலவு மீது ஏற்படுத்தும் விளைவு.

10. அகில உலகச் சந்தை விலை.

இவற்றில் முதல் ஐந்து ஆக்கக் கூறுகளுடன் வாழ்க்கைச் செலவு – விவசாயிகளின் வாழ்க்கைச் செலவையும் – ஒட்டிப் பின்பற்றினால் வேளாண் உற்பத்தி மதிப்பு உயர வழி உள்ளது.

சரி. இதில் தமிழக அரசின் பங்கு என்ன? வேளாண்மை, உணவு எல்லாம் அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அதிகாரத்திற்குட்பட்டது என்று கூறி, திமுக அரசு உணவுக் கார்ப்பரேஷனுக்கு இணையாக தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷனைத் தோற்றுவித்து உணவுக் கார்ப்பரேஷன் வரம்பைக் கட்டுப்படுத்தியுள்ளது.

இதே மனஉணர்வை மனத்தில்கொண்டு உயிர்ப்பாதுகாப்புக்கு உறுதுணையாயுள்ள உணவு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளுக்கு உயர்ந்தபட்சமாக நெல் விலையை ரூ. 1200க்கு உயர்த்தத் தமிழ்நாடு அரசு முன்வருமா?

நெல் கொள்முதலில் ஏகபோகம் செய்வது தமிழ்நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிவில் சப்ளை கார்ப்பரேஷன் என்பதால் நெல் விலையை உயர்த்தும் ஒரு கடமை மாநில அரசுக்கு இல்லையா?

(கட்டுரையாளர்: இயற்கை வேளாண்மை பொறியியல் நிபுணர்)

Posted in abuse, ADMK, Agriculture, Ask, Bid, Biz, Black markets, Bribery, Bribes, Business, Capture, Commodites, Commodity, Consumption, Contracts, Corruption, Council, Deflation, Demand, Distribution, DMK, Economy, Exports, FAO, Farming, Food, Futures, GDP, godowns, Govt, Growth, Hijack, Illegal, Imports, Inflation, Investigation, kickbacks, Law, Loss, markets, Options, Order, organic, P&L, Paddy, PDS, PnL, Policy, Power, Prices, Production, Profit, Reliance, retail, retailers, rice, seize, Shipments, Storage, Supply, Wheat | Leave a Comment »

Indian coins converted into razor bladed – Monetary value

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2007

பிளேடாகும் ரூபாய் நாணயங்கள்

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம், டிச. 4: தமிழகம் முழுவதும் ரூ.1 மற்றும் ரூ.2 நாணயங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கான காரணம், இந்த நாணயங்களை உருக்கி பிளேடுகள் தயாரித்து விற்பனை செய்து சிலர் அதிக லாபம் ஈட்டி வருவதாக தற்போது அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி தயாரித்து வெளியிடும் சில்லறை நாணயங்கள் பிளேடுகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

ரிசர்வ் வங்கி வெளியிடும் நோட்டுகள் போன்று சில சமூக விரோதிகள் கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்டு வருகின்றனர். இந் நிலையில் சில்லறை நாணயங்களைக் கொண்டு பிளேடு தயாரித்து லாபம் ஈட்டும் தொழில் தமிழகத்தில் பல இடங்களில் நடந்து வருகிறது.

இதனால் மொத்தமாக சில்லறை நாணயங்கள் கூடுதல் விலைக்கு சேகரிக்கப்பட்டு மூட்டை, மூட்டையாக வாங்கிச் செல்லப்படுகிறது.

மத்திய ரிசர்வ் வங்கி, நாணயங்களில் வெள்ளி கலந்து வெளியிட்டது. வெள்ளிக்கு நல்ல விலை கிடைப்பதால் அதை அறிந்த கும்பல், நாணயங்களை உருக்கி வெள்ளியைப் பிரித்து ஆபரணங்கள் தயாரிக்கப் பயன்படுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரிசர்வ் வங்கி, துருப்பிடிக்காத சில்வர் (ஸ்டெயின்லஸ் ஸ்டீல்) மூலம் நாணயங்களைத் தயாரித்தது.

இந்த சில்வர் நாணயங்களை உருக்கி குறிப்பாக தமிழகத்தில் சேலம், நாமக்கல், கோவை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட நகரங்களில் கொலுசு மற்றும் வெள்ளி ஆபரணங்கள் தயாரிக்கும் சில கும்பல்கள் பிளேடு தயாரித்து தற்போது விற்பனை செய்து வருகிறது.

ரூ.1 நாணயத்திலிருந்து 8 பிளேடுகளும், ரூ.2 மற்றும் ரூ.5 நாணயங்களிலிருந்து 10 பிளேடுகளும் தயாரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த பிளேடுகளை சில்லறை விலையில் ஒரு பிளேடு ரூ.1 முதல் ரூ.1.50 வரை பெரிய மற்றும் சிறிய நகரங்களில் சலூன்களில் மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. ரூ.1 நாணயத்திலிருந்து குறைந்தது ரூ.8 லாபம் கிடைக்கிறது.

இதனால் இந்த வியாபாரிகள் ரூ.100-க்கான சில்லறை நாணயங்களை ரூ.110 கொடுத்து வாங்கிச் சேகரித்து மூட்டை மூட்டையாக கொண்டு செல்கின்றனர்.

சமீபத்தில் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே சாக்கு மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள சில்லறை நாணயங்களை போலீஸôர் பிடித்தனர்.

விசாரணையில் அந்த நாணயங்கள் திருச்சியைச் சேர்ந்த தனியார் ஜுவல்லரி மற்றும் பாத்திரக்கடை உரிமையாளர் கொண்டு சென்றார் என்று கூறப்பட்டது. அந்த உரிமையாளர் சென்னையில் உள்ள மத்திய ரிசர்வ் வங்கி கிளையில் சில்லறை நாணயங்களை வாங்கி வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

எனவே மத்திய ரிசர்வ் வங்கி, சில்லறை நாணயங்களை மொத்தமாக வழங்குவதற்குத் தடை விதிக்க வேண்டும். மேலும் நாணயங்களை உருக்கி பிளேடு தயாரிப்பதை மத்திய புலனாய்வுத் துறை மூலம் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Posted in babrers, blades, Coins, Consumer, Conversion, Criminals, Customer, Finance, markets, Metal, Metallurgy, Monetary, Money, Paisa, razor, RBI, retail, Rupee, Rupees, Rupya, Salon, Saloon, Shave, Thirupathi, Thirupathy, Tirupathi, Tirupathy, tonsure | 1 Comment »

Rice prices & food security plan – Veera Jeeva Prabhakaran & KS Radhakrishnan

Posted by Snapjudge மேல் நவம்பர் 30, 2007

நெல்லுக்கு “நோ’?

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

நெல் குவிண்டாலுக்கு ரூ. 1,000 விலை கேட்டு ரயில் மறியல்! தஞ்சை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இதுகுறித்துப் போராடிய விவசாயிகள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

தில்லி நாடாளுமன்றத்தின் முன் நெல்லைக் குவித்துப் போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் ரயிலில் தில்லி பயணம் என்ற போராட்டச் செய்திகள் கடந்த இரண்டு நாள்களாக வந்தவண்ணம் இருக்கின்றன.

விவசாய இடுபொருள்களின் விலை ஏறிவிட்டதால், நெல்லுக்குக் கட்டுப்படியான விலை வேண்டுமென்று விவசாயிகள் போராடுகின்றனர்.

நெல் மற்றும் கோதுமைக்கு இந்த ஆண்டுக்கான கொள்முதல் விலையை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. கோதுமைக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 800 அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஊக்கத்தொகையாகக் குவிண்டாலுக்கு ரூ. 200 அளிக்கப்படும் என்றும் மத்திய வேளாண் அமைச்சகம் அறிவித்தது. இதன் மூலம் கோதுமைக்கு குவிண்டாலுக்கு ரூ. 1,000 விலையாகக் கிடைக்கும்.

ஆனால், சாதாரண ரக நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 645-ம் சூர்ப்பர்பைன் எனப்படும் உயர் ரக நெல்லுக்கு ரூ. 675-ம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊக்கத்தொகை 100 ரூபாயையும் சேர்த்து நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 745 முதல் ரூ. 775 மட்டுமே கிடைக்கும்.

இந்த அறிவிப்பு நெல் விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நெல்லுக்குக் குறைந்தபட்சம் குவிண்டாலுக்கு ரூ. 1,000 வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நடப்பு குறுவை சாகுபடி காலத்தில் குவிண்டாலுக்கு 1,000 ரூபாயும், சம்பா சாகுபடி நெல்லுக்கு 1,500 ரூபாயும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

ஆந்திரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இதுகுறித்து கடும் போராட்டங்களை நடத்தி வருகிறார். தென்மாநிலங்கள் முழுவதும் இதுகுறித்தான விவாதங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவாரும், குவிண்டாலுக்கு ரூ. 1,000 கோதுமைக்கு வழங்கியது சரிதான் என்றும், நூறு சதவீதம் கோதுமை பயன்பாட்டில் உள்ளது என்றும், 65 சதவீதம்தான் நெல் பயன்பாட்டில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

1996 – 97-ல் நெல்லுக்கும் கோதுமைக்கும் இணையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 380 நிர்ணயிக்கப்பட்டது. 1997-98-ல் குவிண்டால் ஒன்றுக்கு நெல்லுக்கு ரூ. 415, கோதுமைக்கு ரூ. 475 என்றும் வித்தியாசப்பட்டு பின் ஒவ்வோர் ஆண்டும் நெல்லைவிட, கோதுமைக்கு விலை கூடுதல் தரப்பட்டது.

இந்த விலை நிர்ணயம் செய்யும் அமைப்பு நடந்து கொள்ளும் விதம் நெல் உற்பத்தி விவசாயிகளின் முதுகில் குத்துகின்ற காரியம்தான். பலமுறை இதுகுறித்து எடுத்துச் சொல்லியும் செவிடன் காதில் சங்கு ஊதுகின்ற அவலநிலைதான். தற்போது கோதுமைக்கு ரூ. 750 + 250 (போனஸ்) = 1,000 என்றும் அரிசிக்கு 645 + 50 (போனஸ்) = 695 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த பாரபட்சமான போக்கு தென்மாநிலங்களை பாதிக்கின்றது. மாற்றாந்தாய் போக்கில் மத்திய அரசு நடந்து கொள்வதைக் கண்டித்து தமிழக அரசும், ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. தமிழக உணவுத்துறை அமைச்சர் ஒரு குவிண்டாலுக்கு சன்ன ரக அரிசி ரூ. 725-ம், சாதா ரக அரிசி ரூ. 695 என்றும் கூறி 75 ரூபாய் அரிசிக்குக் கூட்டிள்ளோம் என்ற அவருடைய அறிவிப்பு வேதனையாக இருக்கிறது.

மத்திய அரசு ஆயிரம் ரூபாய் தரவில்லை என்பதைக் குறித்த எவ்விதக் கருத்துகளும் அவர் அறிவிப்பில் இல்லை. நெல் உற்பத்தி பஞ்சாபில் அதிகமாக இருந்தாலும், பயன்பாடு தென்மாநிலங்களில்தான் அதிகம்.

நெல் சாகுபடி ஏக்கர் ஒன்றுக்குச் செலவு 1997-2007-ல் விதை நெல் ரூ. 267 – ரூ. 400. உரம் ரூ. 1,200 – ரூ. 1,700. பூச்சிக்கொல்லி மருந்து வகைகள் ரூ. 150 – ரூ. 300. பணியாள் கூலி செலவு ரூ. 4,600 – ரூ. 7,000. அறுவடை செலவு ரூ. 230 – ரூ. 950.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயச் சங்க செயலர் வே.துரைமாணிக்கம் கணக்கீட்டின்படியும், வேளாண்மைத் துறையின் பரிந்துரையின்படியும் கீழ்குறிப்பிட்டவாறு ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு ஆகும் செலவு விவரம்.

நெல்விதை கிலோ ரூ. 15 வீதம் 15 கிலோவிற்கு ரூ. 450. 8 சென்ட் நாற்றங்கால் தயார் செய்ய இரண்டு ஆண் கூலி ரூ. 240. ஒரு பெண் கூலி ரூ. 80. தொழுஉரம் ஒரு டன் ரூ. 200. அசோஸ்பைரில்லம் 7 பாக்கெட் பாஸ்யோபாக்டீரியா 7 பாக்கெட் ரூ. 84. ரசாயன உரம் டி.ஏ.பி. 30 கிலோ, யூரியா 20 கிலோ ரூ. 400. நாற்றுப்பறித்து வயலில் எடுத்து வைக்க ஆள் கூலி ரூ. 1,100. நடவு வயல் உழவு டிராக்டர் 2 சால் டிராக்டர் உழவு ரூ. 550. நடவு வயலுக்கான தொழு உரம் 3 டன் ரூ. 600.

வரப்பு மற்றும் வயல் சமன் செய்ய 3 ஆள் கூலி ரூ. 360. நெல் நுண்ணூட்டம் 5 கிலோ ரூ. 93. ரசாயன உரம் டி.ஏ.பி. 50 கி. யூரியா 75 கி. பொட்டாஷ் 50 கி. ரூ. 1,125. நடவுப் பெண்கள் 18 பேருக்கு ரூ. 80 சதவீதம் ரூ. 1,440. 2 தடவை களை எடுக்கச் செலவு ரூ. 980. பூச்சிமருந்துச் செலவு ரூ. 250. காவல் மற்றும் தண்ணீர் பாசனம் செய்ய ஆள் செலவு ரூ. 250. அறுவடை ஆள்கள் கூலி ரூ. 1,750. கதிர் அடிக்கும் இயந்திர வாடகை ரூ. 525. ஓர் ஏக்கருக்கான கடன் பெறும் தொகைக்கான வட்டி கூட்டுறவு என்றால் 7 சதவீதம் (5 மாதம்) ரூ. 245. தனியார் என்றால் ரூ. 500. காப்பீடு பிரிமியம் தொகை 2 சதவீதம் ரூ. 167. விலை மதிப்பீட்டுக்குழு பரிந்துரைப்படி பார்த்தால் நிலமதிப்பிற்கான வட்டி 7 சதவீதம் ரூ. 3,500. மொத்தம் ரூ. 14,689.

இவ்வளவு செலவு கடன் வாங்கிச் செய்தாலும், விலை இல்லை. சிலசமயம் தண்ணீர் இல்லாமல், பூச்சித் தாக்குதலாலும் நெல் பயிர்கள் கருகி விடுகின்றன. பயிர் இன்சூரன்ஸ் என்பது வெறும் வெட்டிப்பேச்சாக உள்ளது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

நாட்டின் முதுகெலும்பு விவசாயம்தான். ஆனால் அதை நம்பியுள்ள 65 சதவீத விவசாயிகளின் நிலைமை மிகவும் வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. இதுவரை இந்தியாவில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடந்த 1960 களில் ஒரு மூட்டை நெல் ரூ. 50. அன்றைக்கு இது ஒரு கட்டுபடியான நல்ல விலை. அதைக் கொண்டு சிரமம் இல்லாமல் விவசாயிகள் நிம்மதியாக வாழ்ந்தனர். அன்று உழவு மாடு ஒரு ஜோடி ரூ. 800தான். ஆனால், இன்றைக்கு ஒரு ஜோடி ரூ. 20,000. அன்று டிராக்டர் ரூ. 25,000 இன்றைக்கு அதன் விலை லட்சங்களாகும். ஆலைகளில் உற்பத்தியாகும் நுகர்வோர் பொருள்கள் நாற்பது மடங்கு அதிகரித்துள்ளன. அரசு ஊழியர்களின் ஊதியம் ஆறு மடங்கு வரை கூடுதலாகி உள்ளது. ஆனால், நெல்லின் விலை திருப்தியாக கூடுதலாக்கப்படவில்லை.

நெல் உற்பத்திச் செலவு கோதுமையைவிட அதிகம். உழைப்பும் அதிகம். நெல் நன்செய் பயிர்; கோதுமை புன்செய் பயிர். நெல் உற்பத்திக்கு பஞ்சாபில் ரூ. 816-ம், மகாராஷ்டிரத்தில் ரூ. 937-ம் செலவாகிறது.

ஒரு குவிண்டால் நெல்லை அரைத்தால் 65 கிலோ அரிசி கிடைக்கும். 35 கிலோ தவிடு மாட்டுத் தீவனமாகப் பயன்படும். நான்கு லிட்டர் எண்ணெய் கிடைக்கும். எண்ணெய் கழிவுகளை மீன்களுக்கு உணவாகப் பயன்படுத்தலாம். இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் உற்பத்தி செய்யப்படும் நெல் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் அதற்கான விலையும் அதை ஊக்குவிக்கின்ற அக்கறையும் மத்திய – மாநில அரசுகளுக்கு இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.

மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு விவசாயிகளின் வேதனை குறித்த அக்கறை இல்லை. பெரிய தொழிலதிபர்களுக்கு ரூ. 1,400 கோடி வரை சலுகைகள் வழங்கி உள்ளார். கொள்ளை லாபம் ஈட்டும் இந்த முதலாளிகளுக்கு கடன் வட்டியை 45 சதவீதம் குறைத்துள்ளார்.

நாட்டின் விவசாய வளர்ச்சி வெறும் 2.3 சதவீதம். மேற்கொண்டு வளர்ச்சி இல்லை. இன்னும் வேதனை என்னவென்றால், அதிகார வர்க்கத்தில் உள்ள சிலர் விவசாயத்தை விட்டு ஒழியுங்கள் என்ற இலவச ஆலோசனை வழங்குவதுதான் கொடுமையிலும் கொடுமை.

நெல்லைப் போன்றே கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலைமையும் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு விவசாயி தான் வளர்த்த கரும்பை கட்டுபடியான விலை இல்லாததால் யார் வேண்டுமானாலும், வெட்டி எடுத்துச் செல்லலாம் என்று தண்டோரா போட்டு கூவி அழைத்தார். அப்படியாவது அந்தக் கரும்பு நிலத்தை விட்டு அகன்றால்போதும் என்ற அவலநிலை.

நெஞ்சு பொறுக்கவில்லை என்ற நிலையில் நெல் விலை கேட்டு விவசாயிகள் களத்தில் போராடுகின்றனர். நீரிழிவு நோயாளிகள், “நெல் அரிசிக்கு நோ’ என்று சொல்வதைப்போல மத்திய அரசும், “நெல்லுக்கு நோ’ என்று சொல்லிவிட்டதோ என்ற ஏக்கம்தான் நமக்கு ஏற்படுகிறது.

வள்ளுவர் சொன்னதைப்போல, “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்’ – என்ற நிலை மாறி விவசாயிகளுடைய பொருளாதார நிலைமை மட்டுமல்லாமல் அவர்களுடைய சமூக, சுயமரியாதையும் அடிபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. இதற்கு யார் காரணம்? ஆட்சியாளர்கள்தான்.

புதிய பொருளாதாரம் தாராளமயமாக்கல் என்ற நிலையில் விளைநிலங்கள் யாவும் அழிக்கப்பட்டு சிறப்புப் பொருளாதார மண்டலமாக மாற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், நிலங்களும் நீர்ப்பாசன ஏரிகளும்கூட வீடுகளாக மாறிவிட்ட நிலை. இந்நிலையில் எப்படி விவசாயம் இந்தியாவில் முதுகெலும்பாக இருக்க முடியும்?

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)
———————————————————————————————————————————————————-

சவாலாகும் உணவுப் பாதுகாப்பு!

வீர. ஜீவா பிரபாகரன்

உலகளவில், மக்கள்தொகை வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் நமது நாட்டில், உணவுப் பாதுகாப்பு என்பது மாபெரும் சவாலாக உருவெடுத்து வருகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் விவசாயத் துறையின் பங்கு பல ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது. இருப்பினும், மொத்த மக்கள்தொகையில் சுமார் 65 சதவீதம் பேர் தங்கள் வாழ்வாதாரமாக விவசாயத்தையே நம்பியுள்ளனர்.

உணவுத் துறையில் பிற நாடுகளைச் சார்ந்திராமல் இருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை. 1960-களில் உணவுப் பொருள்களுக்கு வெளிநாடுகளை நாம் எதிர்பார்த்த நிலை இருந்தது. ஆனால், முதலாவது பசுமைப் புரட்சியால் தன்னிறைவு காணப்பட்டது. பின்னர் ஏற்பட்ட சூழல்களால் நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.

குறிப்பாக, விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழில் நிறுவனங்களாகவும், புதிய நகரங்களாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. ஒரு சில இடங்களில் இத்தகைய நடவடிக்கைகளை விவசாயிகள் எதிர்த்தாலும் அரசுகள் அதை கண்டுகொள்வதில்லை. இதனால், விளைநிலப் பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

விவசாயத்துக்கு நீராதாரமாக விளங்கிய கண்மாய்கள் காணாமல் போய்விட்டன. பாசனத்துக்கான நீர்த் தேவையை பூர்த்தி செய்வதில் அரசுகளுக்குப் போதிய ஆர்வம் இல்லை.

நமது நாட்டில் போதிய நீர்வளம், நில வளம் இருந்தும் அதை முறைப்படுத்தி முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டுவருதற்கான முயற்சிகள் ஏட்டளவிலேயே உள்ளன.

வேளாண் இடுபொருள்கள் விலை அதிகரிக்கும் அளவுக்கு விளைபொருள்களுக்கு, போதிய விலை கிடைப்பதில்லை. இதனால், வேளாண் பணிக்கு போதிய கூலி வழங்க இயலுவதில்லை. எனவே, கிராம மக்கள் அதிக வருவாய் கிடைக்கும் நகர்ப்புறப் பணிகளுக்குச் செல்லும் நிலை உருவாகிவிட்டது. கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கிய இடப்பெயர்வு அதிகரித்து வருகிறது.

விவசாயிகள் விளைவித்த பழம், காய்கறி உள்ளிட்ட விளைபொருள்களைச் சேமித்து, பதப்படுத்தி, பொதிவு (பேக்கிங்) செய்து விற்பனை வாய்ப்பைப் பெருக்கும் திட்டங்கள் முழுவீச்சில் நடைபெறவில்லை.

கூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆறுதலான விஷயமாக இருந்தபோதிலும், விவசாயத்துக்கான பயிர் காப்பீட்டுத் திட்டங்கள், அதன் விதிமுறைகளால் பயனளிக்காத நிலையிலேயே உள்ளன.

நமது விவசாயப் பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகள், சாதனைகள் கீழ்நிலை விவசாயிகளைச் சென்றடைவதில் மிகுந்த இடைவெளி உள்ளது.

இத்தகைய கடுமையான சோதனைகளையும் தாண்டி நாம் உணவு உற்பத்தியில் போதிய சாதனைகள் நிகழ்த்தி வருகிறோம்.

இருப்பினும், கோதுமை உள்ளிட்ட சில விளைபொருள்கள் கூடுதல் விலை கொடுத்து வெளிநாடுகளிலிருந்து நடப்பாண்டில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

விவசாய நிபுணர்களின் கணக்கெடுப்புப்படி, நமது நாடு வரும் 2010-ம் ஆண்டில் 1.41 கோடி டன் உணவு தானியம் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். அதையடுத்து ஒவ்வோர் ஆண்டும் 2 சதவீதம் இறக்குமதி அளவு உயரும் என மதிப்பிடப்படுகிறது.

மக்கள்தொகை வளர்ச்சியையும் கருத்தில் கொண்டால் 2020-ம் ஆண்டில் நமது நாட்டின் உணவுப்பொருள்கள் தேவை 34 கோடி டன்னாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நமது நாட்டில் உணவுப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது. மனித உரிமைகளில் உணவு உரிமையே தலையாய உரிமை என்பது விவாதத்துக்கு இடமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், நமது நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் பலருக்கு ஒரு வேலை உணவு கிடைப்பதே அரிதாக உள்ளது.

இது ஒருபுறம் என்றால், அதிக வருவாய் ஈட்டுவதற்காக உணவுப் பொருள்களை வாங்கி “எத்தனால்’ தயாரிப்பில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இது வறுமை, பட்டினிச்சாவு, கிராமப் பொருளாதாரப் பாதிப்பு உள்ளிட்ட எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என சில அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்நிலையில் நாட்டின் வளம் பெருக்கும் வேளாண்மையில் போதிய கவனம் செலுத்தாவிடில், உணவு மானியச் செலவு அதிகரிக்கும். உணவுப் பாதுகாப்பு என்பது பெரும் சவாலாகிவிடும்.

—————————————————————————————————–

தேவையா மார்க்கெட் கமிட்டி செஸ்?

பி. சுபாஷ் சந்திரபோஸ்


தமிழக வணிக, விவசாயப் பெருங்குடி மக்களின் தலையாய பிரச்னையாக “மார்க்கெட் கமிட்டி செஸ்’ கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது.

முன்யோசனையோ, விவசாயிகள் மீது அக்கறையோ இல்லாத குழப்பான சட்டப்பிரிவுகள், விதிமுறைகள் மூலம் கடுமையான பிரச்னைகளை விவசாயிகளும், வணிகர்களும் தினமும் சந்திக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது இந்த “மார்க்கெட் கமிட்டி செஸ்.’

உணவு உற்பத்திக்காக அல்லும், பகலும் பாடுபட்டு உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கவும், உற்பத்தியான உணவுப்பொருள்களை சேமிக்கவும், உரிய விலை கிடைக்கும்போது விற்று பயன் பெறவும் வேளாண்மை விளைபொருள் விற்பனைச் சட்டம் முதலில் 1933-ல் இயற்றப்பட்டு, 1959, 1987, 1991-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.

இந்தச் சட்டத்தின்படி, அறிவிக்கப்பட்ட விற்பனை பகுதியில், அறிவிக்கப்பட்ட வேளாண் விளைபொருள் எதுவும் வாங்கப்பட்டாலோ அல்லது விற்பனை செய்யப்பட்டாலோ விற்பனைக் குழு (Marketing Committee) ஒரு சதவீத கட்டணம் (Fee/Cess) விதிக்கிறது.

விற்பனைக் கூடங்களை ஏற்படுத்தி அதில் செய்யப்படும் சேவைகளுக்குத்தான் இக்கட்டணம். ஆனால், தமிழகத்தில் மார்க்கெட் கமிட்டி விற்பனைக் கூடங்கள் இல்லாமல், வெளியே கடைகளில் நடக்கும் விற்பனைக்கும் இக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதுதான் வேடிக்கை.

தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களும் இந்தச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட விற்பனைப் பகுதிகளாகும். அந்தந்தப் பகுதியில் உள்ள மார்க்கெட் குழு இந்தச் சட்ட விதிகளை அமலாக்கம் செய்கிறது.

ஆனால், நடைமுறைகளுக்கு ஒவ்வாத குழப்பமான சட்டப் பிரிவுகள், விதிமுறைகள், அதிகாரிகளின் குழப்பமான விளக்கங்கள் காரணமாக மேற்கண்ட சட்ட விதிமுறைகளால் விவசாயிகள், வணிகர்கள் இரு பிரிவினருமே கடுமையான பிரச்னைகளைச் சந்திக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சேவை புரியாமல் வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம்: பிற மாநிலங்களில் 200 முதல் 300 ஏக்கர் பரப்பளவில் விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டு, அங்கு வணிகர்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, அதற்கான கட்டணம் மார்க்கெட் கமிட்டி செஸ் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

விவசாயிகள் தங்கள் சரக்கைக் கொண்டுவந்து வைப்பதற்கான கிடங்குகள், உலர வைப்பதற்கான களங்கள், தரம் பிரித்தல், தராசுகள், ஏலம் மூலம் விற்பனை, வணிகர்களுக்கு அலுவலகம், ஓய்வு அறைகள், விவசாயிகளுக்குப் பயிற்சி வகுப்புகள், குளிர்பதன கிடங்கு, சரக்கை வாங்கிய வியாபாரிகளிடம் பணத்தைப் பெற்று விவசாயிகளுக்குப் பட்டுவாடா செய்யும் வசதி ஆகிய பல்வேறு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், நமது மாநிலத்தில் அத்தகைய விற்பனைக்கூடங்கள் ஏதும் குறிப்பிடத்தக்க அளவில் அமைக்கப்படாமல் பெயரளவில் மிகச் சில மார்க்கெட் பகுதியில் கிடங்குகளும், உலர் களங்களும் அமைக்கப்பட்டு தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படாமல் செஸ் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வேளாண் விளைபொருள்கள் -மார்க்கெட் கமிட்டி செஸ் சட்டங்களில் உரிய மாற்றங்களைச் செய்ய பரிந்துரை செய்துள்ளது. அதில் மிக முக்கியமான மாற்றம், எந்த ஒரு வேளாண் விளைபொருளுக்கும் வேளாண் விற்பனைக் குழுவால் ஏற்படுத்தப்பட்ட விற்பனைக் கூடத்திற்குள் (மார்க்கெட்) நடக்கும் வணிகத்துக்கு மட்டுமே செஸ் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதாகும். ஆனால், தமிழகத்தில் வேளாண் பொருள் விற்பனை எங்கே நடந்தாலும் அதற்கு மார்க்கெட் கமிட்டி செஸ் வசூலிப்பது எதனால் என்பது புரியாத புதிர்.

தற்போது மாநில அரசு சட்டத் திருத்தத்தின் மூலம் பல விளைபொருள்களை அறிவிக்கும்போது அதை உருமாற்றம் செய்து பெறப்படும் ஆலைத் தயாரிப்பு பொருள்களையும் சேர்த்து “அறிவிக்கப்பட்ட பொருளாக’ அறிவிக்கிறது. உதாரணமாக, “உளுந்து’, “உளுந்தம் பருப்பு’ இரண்டுமே அறிவிக்கையிடப்படுகிறது.

இதுவே துவரைக்கும், துவரம் பருப்புக்கும் பொருந்தும். உளுந்தம் பருப்பும், துவரம் பருப்பும் விளைபொருள்கள் அல்ல. அவை பருப்பு ஆலையில் தயாரிக்கப்படும் உற்பத்திப் பொருளாகும். வேளாண் விளைபொருள்களின் விற்பனையை ஒழுங்குபடுத்தி விவசாயிகளுக்கு நன்மை செய்வதுதான் மார்க்கெட் கமிட்டி சட்டத்தின் நோக்கம். வேளாண் விளைபொருள்களுக்கு மட்டுமே செஸ் விதிக்கப்பட வேண்டும். அதிலிருந்து தயாரிக்கப்படும் உப பொருள்களுக்கு செஸ் விதிப்பது எந்த விதத்தில் நியாயம்?

பயறு, பருப்பு பற்றாக்குறையைத் தவிர்க்கும் பொருட்டு, மதுரையிலோ, திருச்சி, கோவையிலோ அல்லது விருதுநகரிலோ உள்ள ஒரு வணிகர் அயல்நாடுகளிலிருந்து உளுந்து, துவரையை இறக்குமதி செய்யும்போது அந்தக் கப்பல் சென்னைத் துறைமுகத்தில் வந்தடைந்து சரக்கு இறங்கினால், அங்கு செஸ் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அதே சரக்குக் கப்பல் சென்னைக்குப் பதிலாக தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகளை இறக்கினால் அங்கு செஸ் கட்டணம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் ஒரே சரக்குக்கு செஸ் கட்டண விதிப்பிலும் இரண்டு வித அளவுகோல் கையாளப்படுகிறது என்பது வேடிக்கை.

விற்பனைக்கூட நடைமுறைகளைப் பொருத்தவரை தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதி வணிகர்களையும், விவசாயிகளையும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாக்கி வருவது அனுமதிச் சீட்டு (பெர்மிட்) முறைதான். விற்பனை செய்யப்பட்ட வேளாண் பொருளை ஒரு மார்க்கெட் பகுதியிலிருந்து அடுத்த பகுதிக்கு எடுத்துச் செல்ல அரசு அலுவலரிடம் பெர்மிட் வாங்கித்தான் கொண்டு செல்ல வேண்டும்.

அரசு அலுவலக நேரம் முடிந்த பின்னரும் கூட, விடுமுறை நாள்கள் உள்பட வர்த்தக பரிமாற்றம் நடந்துகொண்டே இருக்கும். அவ்வப்போது அவசரத் தேவைக்கு தொலைபேசியில் வரும் ஆர்டர்களுக்கு ஏற்ப, இரவு, பகல் பாராமல் உடனுக்குடன் சரக்குகளை அனுப்பி வைப்பது நடைமுறை வழக்கம்.

இது போன்று ஒவ்வொரு நேரமும் முன் அனுமதிச் சீட்டுபெற வேண்டும் என்ற தற்போதைய விதிமுறை லஞ்சத்துக்கு உதவுமே தவிர, எந்த விதத்திலும் விவசாயிக்கோ, வியாபாரிக்கோ உதவாது என்பது நிச்சயம்.

விவசாயம் செய்வோரும், விவசாயத் தொழிலும் நாளும் நலிவடைந்துவரும் இந்நாளில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் ஒரு குன்றிமணி அளவு உணவு தானியங்களோ, காய்கறி, பழ வகைகளோ வீணாக அனுமதிக்கக்கூடாது. அனைத்து வகையான விளைபொருள்களுக்கும் முறைப்படி உலர வைக்க, தரம் பிரிக்க, பாதுகாக்கப்பட்ட களங்களும், கிடங்குகளும், குளிர்பதனக் கூடங்களும் மாநிலம் எங்கும் அமைக்கப்படவேண்டும்.

விவசாயிகள் அவர்கள் பாடுபட்ட உழைப்பிற்கான பலனாக, நல்ல விலை கிடைப்பதற்கு மார்க்கெட் கமிட்டி கூடங்கள் ஏற்பாடு செய்யுமானால் செஸ் கட்டணம் செலுத்த தமிழகத்தில் யாருமே தயங்கமாட்டார்கள்?

வெளிமாநிலங்களில் இந்த நடைமுறை வெற்றிகரமாக நடைபெறுகிறது. ஆனால், தமிழகத்தில் மார்க்கெட் கமிட்டி செஸ் என்கிற பெயரில் விவசாயிகளும், வியாபாரிகளும் அரசால் சுரண்டப்படுகிறார்கள் என்பதுதான் வேதனையான விஷயம்.

(கட்டுரையாளர்: கௌரவ செயலர், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம்)

Posted in Agriculture, Andhra, AP, Basmathi, Basmati, Bullion, cargo, Cess, Committee, Cultivation, Demand, Distribution, Distributors, Economy, Exporters, Exports, Farmers, Farming, Fee, Fees, Field, Finance, Food, Foodgrains, godowns, Grains, Growth, harvest, Imports, Jeeva Prabhakaran, JeevaPrabhakaran, Labor, Labour, Land, Marketing, markets, Naidu, Nayudu, Packaging, Packing, Paddy, PDS, peasants, Poor, Prabhakaran, Prices, procurement, Production, quintal, Radhakrishnan, Ration, Reddy, retail, retailers, rice, Rich, sacks, Security, SEZ, Suicides, Suppliers, Supply, Veera. Jeeva Prabhakaran, Villages, Wheat, Wholsale, workers | Leave a Comment »

Don’t rush to cut policy rates: Monetary, fiscal recipe for overheating India

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 22, 2007

வங்கிகளில் அரசு தலையீடு?

எஸ். கோபாலகிருஷ்ணன்

வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மோட்டார் வாகனத் தொழில் சார்ந்த மூத்த நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், வங்கிக் கடன்களுக்கான வட்டிவீதத்தைக் குறைக்க வேண்டும் என்று யோசனை கூறினார். இது வெறும் யோசனை அல்ல, அரசின் ஆணை என்றே பலர் கருதினர்.

அதற்கேற்ப, ஓரிரு தினங்களில், சில வங்கிகளின் உயர்நிலை நிர்வாகிகள் வட்டி குறைக்கப்பட வேண்டியதுதான் என்று வழிமொழிந்தனர். அக்டோபர் 10, பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன், மோட்டார் வாகனக் கடன், டிரக் கடன் ஆகியவற்றுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்தது. இதர வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வட்டியைக் குறைத்தன.

வங்கிகள் தங்கள் கடனுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், இந்த நிகழ்வு, வேறு சில கருத்துகளுக்கும் இடம் அளித்துவிட்டது. பொதுமக்களிடமிருந்து டெபாசிட் திரட்டுவதும், திரட்டிய பணத்தை வாடிக்கையாளர்களுக்குக் கடனாக வழங்குவதும் வங்கிகளின் தலையாய தொழில். அதேபோல், பொதுமக்களின் டெபாசிட் தொகைக்கு எவ்வளவு வட்டி கொடுப்பது மற்றும் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு எவ்வளவு வட்டி வசூலிப்பது என்பதை நிர்ணயிப்பதும் வங்கிகளின் பணியே.

இந்த நியதி, அரசு உள்பட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால், பொருளாதார சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டபின்னர், மத்திய அரசு இந்த நியதியைப் பெரும்பாலும் கடைப்பிடிக்கவும் செய்தது.

விவசாயக் கடன், சிறுதொழில் கடன், மாணவர்களுக்குக் கல்விக் கடன் உள்ளிட்ட முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் கடன்கள் தொடர்பான விதிமுறைகள் தவிர பிறகடன்களுக்கான வட்டிவீதத்தை வங்கிகளே வணிகரீதியில் நிர்ணயிக்கின்றன.

வைப்புத்தொகைகளுக்கான வட்டிவீதத்தையும் ஒவ்வொரு வங்கியும் அவ்வப்போது தனது தேவைகளுக்குத் தகுந்தபடி கூட்டியோ குறைத்தோ வழங்குகிறது. எல்லா வங்கிகளுக்கும் ஒரே சீரான வட்டிவீதத்தை நிர்ணயிக்கும் வழக்கத்தை ரிசர்வ் வங்கி கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விதிவிலக்காக, சேமிப்பு கணக்குக்கான வட்டிவீதம் மட்டுமே அனைத்து வங்கிகளுக்கும் ஒரே சீராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் வட்டிவீதத்தைக் குறைக்கும்படி யோசனை கூறியதும், அதை வங்கிகள் விரைந்து செயல்படுத்தியதும், ஒரு பொது விவாதத்திற்கு இடமளித்திருப்பதில் வியப்பேதும் இல்லை.

பொதுத்துறை வங்கிகளின் பெரும்பான்மைப் பங்குதாரர் மத்திய அரசுதான். முன்னதாக பாரத ஸ்டேட் வங்கியின் பெரும்பான்மைப் பங்குகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்தன. ஆனால், அண்மையில் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளை மத்திய அரசு வாங்கிக் கொண்டது.

நாட்டின் 80 சதவிகித வங்கிப் பணிகளை பொதுத்துறை வங்கிகள்தான் மேற்கொள்கின்றன. புதிய தலைமுறை தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி போன்றவை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தபோதிலும், நாட்டின் ஒட்டமொத்த வங்கிச்சேவையில் தனியார்துறை வங்கிகளின் பங்கு குறைவாகவே உள்ளது.

இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளின் கடன்களுக்கான வட்டிவீதம் உயர்ந்ததால் மோட்டார் வாகன உற்பத்தியும் விற்பனையும் சரிந்துள்ளன. புதிய வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனை நம்பியிருந்தவர்கள் மனம் தளர்ந்து போனார்கள். காரணம், வட்டிவீதம் அதிகரித்ததால் மோட்டார் வாகனங்கள் மற்றும் வீடுகளின் அடக்கவிலைகளும் அதிகரித்துவிட்டன. இது பொருளாதார மந்தநிலைக்கு வழி வகுக்கக்கூடும் என்ற கவலை மேலீட்டால் மத்திய நிதி அமைச்சர் தமது யோசனையை வெளியிட்டிருக்கக்கூடும். ஆகவே, இதை அரசியல் தலையீடாகக் கருதக்கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.

இது ஒருபுறமிருக்க, பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கும், இயக்குநர் குழுக்களுக்கும் சமுதாயக் கடமை உண்டு. வணிக ரீதியில் வெறும் லாபநோக்கோடு மட்டுமல்லாமல், பொருளாதார மந்தநிலை ஏற்படும் நிலைமை தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பு பொதுத்துறை வங்கிகளுக்கு இருக்கிறது.

அண்மையில் நிகழ்ந்த கடன்களுக்கான வட்டி உயர்வுக்கு காரணம், வங்கிகள் அல்ல; ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கையே என்பது புலனாகும்.

ரிசர்வ் வங்கியின் தலையாய கடமைகளில் ஒன்று, நிதி மற்றும் கடன் கொள்கையை முடிவு செய்து 6 மாதங்களுக்கு ஒரு முறை அறிவிப்பதாகும். இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, விலைவாசியையும் பணவீக்க வீதத்தையும் கட்டுப்படுத்துவது. இரண்டாவது, தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடனைத் தங்குதடையின்றி கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது.

முன்னதாக, அசுர வேகத்தில் உயர்ந்து கொண்டிருந்த பணவீக்கவீதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

வங்கிகளின் உபரிப் பணத்தை உறிஞ்சுவதற்காக, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பை மேலும் அரை சதவிகிதம் அதிகரித்தது. அதற்கு முன்பு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டிவீதத்தையும் (ரெப்போ ரேட்) உயர்த்தியது.

இந்த நடவடிக்கைகளால் பணவீக்கவீதம் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில், வங்கிகளின் கடனுக்கான வட்டிவீதம் உயர்வதற்கும் அது வழிவகுத்துவிட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கிகளில் வைப்புத்தொகை அதிகரித்ததைவிட, வங்கிக்கடன் தொகையே அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 30 சதவீதம் அளவுக்கு வங்கிக்கடன் அதிகரித்து வந்துள்ளது. வட்டி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

இந்நிலையில், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற சமிக்ஞை ரிசர்வ் வங்கியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டுமே அல்லாமல், அரசுத் தரப்பிலிருந்து அல்ல என்பது தெளிவு.

இதற்கிடையே, டெபாசிட்களுக்கான வட்டியும் குறையத் தொடங்கியுள்ளது என்பது கவலை தரும் விஷயம். தங்களது வாழ்நாள் சேமிப்பிலிருந்து கிடைக்கக்கூடிய வட்டியை மட்டுமே நம்பி வாழ்க்கைநடத்தும், பணி ஓய்வுபெற்றவர்களுக்கும், நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் யார்?

நடுத்தர மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும்விதத்தில் அவர்களுடைய வைப்புத்தொகைக்கான வட்டிவீதத்தைக் குறைக்காமல் பார்த்துக்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

இந்த உயிர்நாடிப் பிரச்னையை வெறும் வணிகரீதியில் அணுகாமல், மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய இழப்பை ஒரு சுமையாக ரிசர்வ் வங்கி கருதலாகாது. ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் உதவுவதை ஒரு சமுதாயக் கடமையாகக் கருத வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

Posted in Agriculture, Assets, Auto, Automotive, Banking, Banks, BOB, Bonds, BSE, Cars, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chit Funds, Chitfunds, Chithambaram, Commerce, Cooperative, Credit, CRR, Deflation, Deposits, Dollar, Economy, Enforcement, Exchange, Farmers, FD, Finance, Financing, fiscal, Govt, HDFC, ICICI, Index, Indices, Inflation, Insurance, Interest, investments, IOB, KVB, Land, liquidity, Loans, markets, Micro-financing, Microloans, Minister, Monetary, Motor, NIFTY, NSE, Overnight, Overnite, Parts, Policy, Property, Rates, RBI, reserves, ROI, Rupee, Rupees, Rupya, SBI, Schemes, Shares, Spare, Stocks, Student, Treasury | Leave a Comment »

India to curb foreign funds deluge – Volatile stock market & Participatory note policy

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2007

பாடாய்ப்படுத்தும் பங்குச்சந்தை!

பங்குச் சந்தை என்பது நாட்டின் தொழில், வர்த்தகத் துறைகளின் ஆரோக்கியத்தையும், மக்களுடைய வருமானம், சேமிப்பு, முதலீடு ஆகியவற்றின் வளத்தையும் ஒருசேர உணர்த்தும் உரைகல். ஆனால் சமீப காலமாக -அன்னிய நேரடி முதலீடு காரணமாக -பங்குச் சந்தையில் பங்கு பரிவர்த்தனை மதிப்பும், பங்குகளின் தனி மதிப்பும் மிக அதிகமாக உயர்ந்து வருகின்றன.

செவ்வாய்க்கிழமை 19,000 புள்ளிகளை எட்டிய குறியீட்டெண் புதன்கிழமை 20,000-ஐ எட்டிவிடும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் 1,744 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது. பங்கேற்புப் பத்திரத்தை “செபி’ என்கிற பங்குச் சந்தை கண்காணிப்பு -கட்டுப்பாட்டு அமைப்பு தடை செய்துவிடும் என்ற வதந்தி காரணமாக இப்படிக் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

வெளிநாடுகளிலிருந்துகொண்டு, தரகர்கள் மூலம் முதலீடு செய்கிறவர்கள் பயன்படுத்தும் புதுவகை அடையாள பங்குப் பத்திரமே, “பங்கேற்பு பத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. அவற்றைத் தடை செய்யும் எண்ணம் ஏதும் அரசுக்கு இல்லை என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உறுதி அளித்த பிறகே சந்தையில் விற்பனை மீண்டும் உயர்ந்தது.

கடந்த வாரம்தான் பங்குச் சந்தையில் குறியீட்டெண் வேகவேகமாக உயர்ந்து வருவது குறித்து நிதி அமைச்சர் சிதம்பரம் வியப்பும் கவலையும் ஒருங்கே தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. “சிறிய முதலீட்டாளர்கள் இந்த நேரத்தில் அசட்டுத் துணிச்சலில் அதிகப் பணத்தை முதலீடு செய்து, கையைச் சுட்டுக்கொள்ள வேண்டாம்’ என்று உரிய நேரத்தில் அவர் எச்சரித்திருந்தார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவழியினரும், ஊக வணிகர்களும் தங்களிடம் உள்ள மிதமிஞ்சிய பணத்தை இந்தியச் சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். இதை வேண்டாம் என்று சொல்வது சரியான வணிக உத்தி இல்லை. இந்த முதலீடு இருவகைப்படும். வெளிநாடுகளில் உள்ள தனி முதலீட்டாளர்கள் நேரடியாக நமது பங்குகளை வாங்குவது ஒருவகை. வெளிநாடுகளைச் சேர்ந்த நிதி நிறுவனங்கள் நம்முடைய பங்குகளை வாங்குவது மற்றொரு வகை. இவ்விருவகையிலான நேரடி முதலீடுமே நமக்கு அவசியம்தான்.

இந்த முதலீட்டாளர்கள், லாபம் வரும் என்றால் முதலீடு செய்வார்கள். நஷ்டம் வரும் என்றால் முதலீட்டை விலக்கிக் கொள்வார்கள். இது பங்குச் சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு நல்லதல்ல. எனவே இவ்வகை முதலீட்டாளர்களின் முதலீட்டில் 10% தொகையை, ஓராண்டுக்குத் திரும்ப எடுக்க முடியாமல் கட்டாய டெபாசிட்டாகப் பெற வேண்டும் என்று அரசுக்கு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னரும், பொருளாதார வல்லுநருமான எஸ்.எஸ். தாராபூர் ஆலோசனை கூறியிருக்கிறார். இதை அமல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.

போக்குவரத்து, சாலை வசதிகள், தகவல்தொடர்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சார உற்பத்தி போன்ற அடித்தளக் கட்டமைப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்கிறோம் என்று அரசு பலமுறை கூறி ஓய்ந்துவிட்டது. ஆனால் அத்தகைய முதலீட்டை ஏற்கும் நிறுவனங்களோ, பங்கு வெளியீடுகளோ, கடன் பத்திரங்களோ சந்தையில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

இப்படியொரு ஏற்பாட்டைத் தனியார் நிறுவனங்கள் செய்யாது; அரசுதான் முயற்சி எடுக்க வேண்டும். வங்கிகளில் தரப்படும் வட்டிவீதத்தைவிட கவர்ச்சிகரமான வருவாயை அளிப்பதாக அரசு உறுதி கூறினால் உள்நாட்டிலிருந்து மட்டும் அல்ல, வெளிநாடுகளிலிருந்தும் இந்தியர்கள் முதலீட்டைக் கொண்டுவந்து கொட்டுவார்கள். இனியாவது அரசு அத்தகையதொரு முயற்சியைத் தொடங்குமா?

Posted in ADR, Assets, Biz, Bonds, Brokers, BSE, Commerce, crash, DJIA, Economy, FII, Finance, fiscal, Foreign, Funds, GE, GM, Goldman Sachs, Govt, Index, Indices, Infy, Interest, International, investors, Invsetors, IPO, Loss, markets, Merryll Lunch, MF, MNC, Morgan Stanley, NRI, NSE, PE, PIO, Planning, Portfolio, Profit, Rates, ratio, Shares, Stocks, Traders, Trading, Wipro, World | Leave a Comment »

Impact of MNCs and pricing pressures by Govt. Policy – Harming the local farmer

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2007

ஊருக்கு இளைத்தவன்…

உழுபவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது என்பது நம் நாட்டுப் பழமொழி.

உலக வர்த்தக ஸ்தாபனத்தின் (டபிள்யூ.டி.ஓ.) ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இந்தியா போன்ற நாடுகள், உரிய தற்காப்பு சட்டங்களை தேசிய அளவில் இயற்றாததால், கவசம் தரித்துக்கொள்ளாத காலாட்படை வீரர்களாய், வளரும் நாடுகளின் விவசாயிகள் களத்தில் பலியாகிக் கொண்டிருக்கின்றனர்.

தோஹாவில் தொடங்கி இன்றுவரை இதன் பேச்சுவார்த்தைகளில், வல்லரசு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் தங்களுக்குச் சாதகமான விஷயங்களை மட்டுமே வற்புறுத்தி சம்மதிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

பெரிய நிறுவனங்கள் தயாரித்த விதைகளைப் போட்டால்தான் சாகுபடி நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை விவசாயிகளின் மனங்களில் எப்படியோ விதைத்து விட்டார்கள். இந்தியா போன்ற வளரும் நாடுகளில்கூட மன்சான்டோ நிறுவனத்தின் விதைகளும், மரபணுவில் மாற்றம் செய்யப்பட்ட “”பீட்டா காட்டன்” பருத்தி விதைகளும் சர்வசாதாரணமாக புழக்கத்துக்கு வந்துவிட்டன.

தில்லியை மையமாகக் கொண்ட வர்த்தகம், வளர்ச்சிக்கான மையம் (சென்டாட்) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் நமது விவசாயிகளும், நுகர்வோர்களாகிய நாமும் எப்படிச் சுரண்டப்படுகிறோம் என்று ஓரளவுக்குத் தெரியவந்துள்ளது.

உலகின் பூச்சிகொல்லி விற்பனையில் 65% சந்தையை பேயர்ஸ், சின்ஜென்டா, பிஏஎஸ்எஃப், டெü, மன்சான்டோ என்ற நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.

உலகின் விதை விற்பனையில் 72%, மன்சான்டோ, டூபான்ட், சின்ஜென்டா, குரூப் லிமாகரின் என்ற 10 நிறுவனங்கள் மூலமே நடைபெறுகின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் விற்பனையில் 91% மன்சான்டோ வசம் உள்ளது.

10 நிறுவனங்கள் மட்டும், தின்பண்டங்களுக்கான உலக சில்லறை வர்த்தகத்தில் 24% சந்தையைப் பிடித்துள்ளன. அதன் மதிப்பு -மயக்கம்போட்டு விழுந்துவிடாதீர்கள் -சுமார் ஒரு கோடியே நாற்பது லட்சம் கோடி ரூபாய்கள். அதில் வால்மார்ட், கேரிஃபோர், மெட்ரோ ஏஜி, அஹோட் ஆகியவற்றின் பங்கு 64%.

வாழைப்பழ விற்பனையில் மட்டும் சிகிடா, டோல் ஃபுட்ஸ் என்ற நிறுவனங்கள் 50% சந்தையைப் பிடித்துவைத்துள்ளன.

யூனிலீவர், புரூக்பாண்ட், காட்பரி, ஸ்வெப்பீஸ், அல்லய்ட்-லியான்ஸ் ஆகியவை தேயிலை விற்பனையில் 80 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன.

கார்கில், செனக்ஸ், ஏடிஎம், ஜெனரல் மில்ஸ் ஆகிய நிறுவனங்கள் உலகின் தானிய விற்பனையில் 60 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன. கேரிஃபோர் என்ற நிறுவனத்தின் வருவாய், சிலி நாட்டின் மொத்த தேசிய வருமானத்தைவிட அதிகம். வால்மார்ட் நிறுவனத்தின் வருமானம் பாகிஸ்தானின் தேசிய வருமானத்தைவிட 3.2 மடங்கு அதிகம்.

கார்கில் நிறுவனத்தின் வருமானம் ருமேனியா நாட்டின் தேசிய வருமானத்துக்குச் சமம்.

இந்தியாவில் தேயிலையின் சில்லறை விற்பனை விலை ஒரு கிலோ ரூ.160. ஆனால் தேயிலைச் சந்தையில் ஏலத்தில் ஒரு கிலோ ரூ.50க்குத்தான் வாங்கப்படுகிறது. மூன்று மடங்கு விலையில் விற்கப்படுகிறது.

உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் அடைத்து கடைகளில் ஒரு கிலோ ரூ. 143-க்கு விற்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உருளைக்கிழங்குக்குத் தரப்படும் கொள்முதல் விலையைப்போல இது 28 மடங்கு.

கோதுமை இறக்குமதியில் தொடங்கி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எல்லா முடிவுகளுமே விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகிறது. அதன் விளைவுதான், பல்வேறு மாநிலங்களில் காணப்படும் விவசாயிகள் தற்கொலை.

மத்திய, மாநில அரசுகளில் உள்ளவர்கள் நமது விவசாயிகளின் நலனைப் பற்றி எந்த அளவுக்கு அக்கறை செலுத்துகின்றனர் என்பதைத்தான் மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் தெரியப்படுத்துகின்றன. ஊருக்கு இளைத்தவன் உழவுத் தொழில் புரிபவர் என்கிற நிலை தொடர்வது நல்லதல்ல.

Posted in Agriculture, Banana, Biz, Brookebond, Brookebonds, Business, Cadburys, Chips, Commerce, Consumer, Copyrights, Customer, Dalit, Deflation, DNA, Doha, Economy, Exports, Farmer, Farming, Fertilizer, Food, Foodgrains, Genetic, harvest, Imports, Inflation, markets, MNC, Monsanto, Natural, Needy, organic, peasant, Poor, Potato, Prices, Pricing, Recession, rice, Rich, Seeds, Shares, Shopping, Shweppes, Sivaji, Statistics, Stats, Stocks, Subsidy, Suicide, Suicides, Talks, Tax, Tea, Trade, Trademark, Unilever, Urea, Vidharaba, Vidharabha, Vitharabha, Wal-Mart, Walmart, Wealthy, Weeds, Wheat, WTO | Leave a Comment »

The Future of Public Sector Undertaking – Govt, Private Organizations & Management

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

பொதுத்துறை நிறுவனங்களின் எதிர்காலம்

எஸ். கோபாலகிருஷ்ணன்
(முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).

உணர்வுபூர்வமாக பொதுத்துறை நிறுவனங்களை உயர்த்திப் பிடித்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இப்போது, நிறுவனங்களின் செயல்பாடு, திறன், லாப – நஷ்டக் கணக்கு ஆகிய அம்சங்களைப் பொருத்துதான், அவற்றின் பயன்பாடு மதிப்பிடப்படுகிறது.

1931-ம் ஆண்டில் – இந்திய தேசிய காங்கிரஸின் கராச்சி மாநாடு ஒரு முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றியது. “”பொதுத்துறை மூலமே, இந்தியா தொழில் வளம் பெற்றிட இயலும்” என்பதே அது.

இதற்கேற்ப, நாடு சுதந்திரம் அடைந்தபோது, தொழில் வளர்ச்சியிலும் அறிவியல், தொழில் நுட்பத்திலும் மிகவும் பின்தங்கியிருந்தது. தொழில், விவசாயம், போக்குவரத்து ஆகியவற்றுக்குத் தேவையான சாதனங்களையும், தளவாடங்களையும் தயாரிக்க நம் நாட்டில் தொழிற்சாலைகள் அப்போது இல்லை. தனியாரிடம் அத்தகைய தொழில் கூடங்களை அமைப்பதற்கான முதலீடோ, அனுபவமோ இல்லை. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, அரசுத்துறை நிறுவனங்களை உருவாக்குவதில் முனைப்பு காட்டினார்.

கனரக இயந்திரங்கள் முதல் பொதுமக்கள் பயன்படுத்தும் சாதாரண பொருள்கள்வரை, அனைத்தும் தட்டுப்பாடில்லாமல் நியாயமான விலைக்குக் கிடைக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.

1951-ல் 5 நிறுவனங்களே பொதுத்துறையில் இருந்தன. முதலீடு ரூ. 29 கோடி. 1961-ல் 48 நிறுவனங்களாகவும், 1971-ல் 100 ஆகவும் 1983-ல் 209 ஆகவும் இவை வளர்ந்தன. இப்போது கிட்டத்தட்ட 250 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மொத்த முதலீடு சுமார் ரூ. 3 லட்சம் கோடி.

இந்நிறுவனங்களின் மூலம் தொழில் வளர்ச்சியும் கணிசமான அளவு வேலைவாய்ப்புகளும் பெருகின. 1970-களில் 27 சதவிகித வேலைவாய்ப்புகளும் 1980களில் 37 சதவிகித மேலைவாய்ப்புகளும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் கிடைத்தன. தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடிகள், ஊனமுற்றோர், முன்னாள் ராணுவ வீரர்கள் போன்றோருக்கும் வேலைவாய்ப்பு அளித்து சமூக நீதி காப்பதிலும் பொதுத்துறை நிறுவனங்கள் முன்னிலை வகித்தன.

இறக்குமதிப் பொருள்களை உள்நாட்டில் உற்பத்தி செய்து அன்னியச் செலாவணியை மிச்சப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த பல ஆண்டுகளாக கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், சுமார் 250 நிறுவனங்களில் 125 நிறுவனங்கள் மட்டுமே லாபம் ஈட்டுகின்றன. மற்றவை நஷ்டத்தில் இயங்குகின்றன. இத்துறையில் அரசு செய்துள்ள மிகப்பெரிய முதலீட்டுத் தொகையிலிருந்து வெறும் 3.5 சதவிகித லாபம்தான் கிடைக்கிறது.

திறமையின்மை, மெத்தனப்போக்கு, ஊழல், ஊதாரித்தனம், தேவையற்ற தாமதம் ஆகியவை பொதுத்துறை நிறுவனங்களின் அடையாளங்களாக அமைந்துவிட்டன. பல நிறுவனங்கள் 75 சதவிகித உற்பத்தித் திறனுடன்தான் இயங்குகின்றன.

இவை போதாதென்று, அரசு அதிகாரிகளின் கெடுபிடி, அரசியல்வாதிகளின் தேவையற்ற குறுக்கீடுகள், உள்ளூர்ப் புள்ளிகளின் தலையீடு ஆகியவையும் பொதுத்துறை நிறுவனங்களின் செம்மையான செயல்பாட்டுக்குக் குந்தகமாக உள்ளன.

இவற்றையெல்லாம்மீறி மிகச்சில நிறுவனங்கள் திறம்படச் செயல்பட்டு “நவரத்தினங்களாக’ மிளிருகின்றன. ஆனால் அவை அனேகமாக ஏகபோக நிறுவனங்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

“”பவர் கிரிட் கார்ப்பொரேஷன் ஆப் இந்தியா” (டர்ஜ்ங்ழ் எழ்ண்க் இர்ழ்ல்ர்ழ்ஹற்ண்ர்ய் ர்ச் ஐய்க்ண்ஹ) என்னும் நிறுவனத்தின் 14 சதவிகித பங்குகள், சில தினங்களுக்கு முன், பொதுச் சந்தையில் விற்பனைக்காக வெளியிடப்பட்டன. இந்தப் பங்குகளை வாங்குவதற்கு, பங்குகளின் நிர்ணயிக்கப்பட்ட விலையைப் போல் 64 மடங்கு அதிகமாக தொகை வந்து குவிந்தது.

இதில் சரித்திரம் படைத்த விஷயம், இதுவரை வேறு எந்த இந்திய பங்குகளின் விற்பனைக்கும் இல்லாத அளவு வெளிநாடுகளிலிருந்து வந்து குவிந்த தொகைதான்! அதாவது 30 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் நூறு கோடி) இத்தனைக்கும் இந்த நிறுவனம் ஒரு முழு “”நவரத்தினம்” அல்ல; “”மினி நவரத்தினம்”தான்.

இந்நிறுவனத்தின் 14 சதவிகித பங்குகளின் விற்பனை மூலம் மத்திய அரசு கஜானாவுக்கு ரூ. 994.81 கோடி கிடைத்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் உள்ளார்ந்த வலுவைக் காட்டுகிறது.

பொதுத்துறை நிறுவனங்கள் திறம்படச் செயல்பட வேண்டுமெனில், சில வணிகரீதியிலான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாறிவரும் சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்திப் பொருள்களை மாற்றி அமைத்தல்; உற்பத்தி முறைகளை நவீனமயமாக்குதல்; தாமதங்களைத் தவிர்த்து பணவிரயத்தைக் குறைத்தல்; தேவைக்கு அதிகமான மூலப்பொருள்களை இருப்பில் வைத்து கோடிக்கணக்கான பணத்தை முடக்குவதைத் தவிர்த்தல்; தொழில்நுட்ப மேம்பாடுகளை அறிமுகம் செய்தல்; ஊழியர்களின் ஊதியத்தை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்துகையில், கூடவே உற்பத்தித் திறனையும் உயர்த்துவதற்கு வழிவகை காணுதல்; ஊழல் மற்றும் நிதி விரயத்தைக் களைவதற்குக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட செயல்திட்டங்களைப் போர்க்கால அடிப்படையில் கொண்டுவர வேண்டும்.

நிறுவனங்களின் தலைவர்களாக, சாதனை வேட்கை கொண்ட துடிப்பான நிர்வாகிகளையே நியமிக்க வேண்டும். அவர்கள் எம்.பி.ஏ. போன்ற மேலாண்மை படிப்பும் பயிற்சியும் கொண்டவர்களாக இருப்பது பொருத்தமாக இருக்கும்.

பல பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் பணிஓய்வு பெற்ற பின், உடனுக்குடன் புதிய தலைவர்களை நியமிக்காமல் அரசு காலம் தாழ்த்தும் நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

சிறப்பான சாதனைகளுக்கு பதவிஉயர்வு போன்ற ஊக்குவிப்பு; தோல்விக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பு ஏற்பு ( அஸ்ரீஸ்ரீர்ன்ய்ற்ஹக்ஷண்ப்ண்ற்ஹ்) என்ற நியதி, மூத்த நிர்வாகிகளுக்கும், தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களுக்கும் செயல்படுத்தப்பட வேண்டும். தற்போது தனியார் துறையில் மூத்த நிர்வாகிகளின் சம்பளங்கள் உச்சத்தில் உள்ளன. அந்த அளவுக்கு அரசுத்துறையில் கொடுக்க முடியாது எனினும், தகுதிமிக்க நிர்வாகிகளுக்கு ஊதிய உயர்வு கொடுப்பதில் சற்று தாராளம் காட்டலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அரசின் தேவையற்ற குறுக்கீடுகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். ஆரோக்கியமற்ற குறுக்கீடுகளுக்கு அண்மைக்கால உதாரணம் – பி.எஸ்.என்.எல். நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டலாம். அதற்கு முன்பு ஓ.என்.ஜி.சி.யில் நிகழ்ந்ததையும் குறிப்பிடலாம்.

என்ன செய்தாலும், சில பொதுத்துறை நிறுவனங்களைச் சீரமைக்க இயலாது. நஷ்டத்தையும் தவிர்க்க முடியாது. அவற்றால் எந்த பொதுநன்மையும் ஏற்படாது என்ற நிலையிருந்தால், அவற்றை மூடுவதில் தவறில்லை. அதேசமயம் லாபத்தில் இயங்கும் சிறப்பான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் முயற்சி கைவிடப்பட வேண்டும்.

கடந்த ஜூலை மாதம், பிரதமர் மன்மோகன் சிங், ஒரு பொது நிகழ்ச்சியில் பேசுகையில், பொதுத்துறை நிறுவனங்களுக்கு சுய அதிகாரம் வழங்கி, அவை சிறப்பாகச் செயல்பட வழி செய்ய வேண்டும் என்று யோசனை தெரிவித்தார். பிரதமரின் இந்த யோசனை பரவலாக வரவேற்கப்பட்டது. ஆனால், பிரதமர் அவ்விதம் கூறி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிய நிலையில், இந்த இலக்கில், மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையை நாடு வெகு ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

Posted in acquisition, Assets, Balance, Commerce, Compensation, Consultant, Contractors, Corporations, Corruption, Economy, employees, Employment, Fulltime, GDP, Govt, Growth, Hire, Industry, Investment, Jobs, kickbacks, Lethargy, Loss, Machinery, Management, markets, ONGC, Organizations, Permanent, Power, Private, Productivity, Profits, PSU, PSUs, Public, Reservation, rights, Science, Shares, Society, Stocks, Tamil, Tech, Technology, Undertaking | Leave a Comment »

Living with a strong rupee – Impact on Exports & Commerce

Posted by Snapjudge மேல் ஜூலை 5, 2007

ரூபாய் மதிப்பின் ஏற்றமும் விளைவுகளும்

எஸ். கோபாலகிருஷ்ணன்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த 9 ஆண்டுகளில், முன் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. ஜனவரி மாதம் ஒரு டாலர் ரூ. 44.12 ஆக இருந்த மதிப்பு, தற்போது ரூ. 40.50 என்ற அளவை எட்டியுள்ளது. கடந்த 6 மாதங்களில் ரூபாயின் மதிப்பு 9 சதவீதம் உயர்ந்துள்ளது.

ரூபாயின் மதிப்பு உயருவதால் நன்மை, தீமை இரண்டும் உண்டு. வெளிநாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதற்கு ஆகும் செலவு குறையும். ரூபாயின் மதிப்பு உயர்ந்து டாலரின் மதிப்பு சரிவதால், இறக்குமதி செய்பவர்கள் செலுத்த வேண்டிய பணம் குறைகிறது. இது நன்மை.

அதேநேரம், நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு விலை நமக்கு டாலரில் வருகிறது. டாலரின் மதிப்பு சரிந்திருப்பதால் நமக்கு இழப்பு ஏற்படுகிறது. இது நமக்குப் பாதகமானது.

கடந்த காலங்களில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்தபோது, ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையை எடுப்பது வழக்கம். அதாவது, சந்தையில் பெரிய அளவில் டாலரை வாங்குவதன் மூலம் வீழ்ச்சி அடைந்த டாலரின் மதிப்பை ரிசர்வ் வங்கி சரி செய்துவிடும். ஆனால், இந்த முறை ரிசர்வ் வங்கி அவ்விதம் செய்யவில்லை. ஏன் என்ற கேள்வி எழுகிறது.

அண்மைக் காலமாக, ரிசர்வ் வங்கியும் சரி, மத்திய அரசும் சரி, கடுமையாக உயர்ந்திருந்த பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ரூபாய் மதிப்பின் உயர்வை, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்திக்கொண்டன.

டாலர் சரிந்திருப்பதால் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதி விலை குறைந்துள்ளது. இது விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கு உதவியது.

இதனாலும் ரிசர்வ் வங்கியின் இதர நடவடிக்கைகளாலும் பணவீக்கம் தற்போது 4.03 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பணவீக்கம் மற்றும் விலைவாசியைக் கட்டுப்படுத்தும் அதேநேரம், ரூபாய் மதிப்பின் உயர்வால் விளைந்துள்ள பாதகங்களை இனியும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருக்கலாகாது. ஏற்றுமதி கடுமையாக சரிந்து வருகிறது. 2005-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி 26.3 சதவிகித அளவு வளர்ச்சி கண்டது. 2006-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி வளர்ச்சி 19.3 சதவிகிதமாகச் சரிந்தது. ரூபாய் மதிப்பு அபரிமிதமாக உயர்ந்திருக்கும் நடப்பாண்டின் முன்பாதியில் எந்த அளவுக்கு ஏற்றுமதி சரிந்துள்ளது என்னும் விவரங்கள் அடுத்த ஓரிரு மாதங்களில்தான் தெரியவரும்.

ரூபாயின் மதிப்பு உயர்ந்திருப்பதன் விளைவாக, ஏற்றுமதியாளர்கள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, ஜவுளி, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், மருந்து உற்பத்தியாளர்கள், ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதியாளர்கள் பொறியியல் தொடர்பான தொழில்கள் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 35 சதவிகிதம் அமெரிக்காவுக்குத்தான் அனுப்பப்படுகிறது. ஜவுளி ஏற்றுமதியில் கோட்டா முறை ரத்து செய்யப்பட்டது இந்தியாவுக்கு நல்லவாய்ப்பாக அமைந்தது. உற்சாகமாக, உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையில், ஏற்றுமதி ஒப்பந்தங்களைப் பெற்று, உற்பத்தியில் ஈடுபட்டனர். இந்திய ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி ஆர்டர்களைப் பெறும்போது டாலரின் மதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால், சரக்கை அனுப்ப வேண்டிய நேரத்தில் டாலரின் மதிப்பு சரிந்துவிட்டது. இதனால் பலகோடி ரூபாய் இழப்பைச் சந்திக்க வேண்டிய நிலைக்கு ஏற்றுமதியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு மட்டும் தினசரி ரூ. 3.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் தொழில் முக்கியப்பங்கு வகிக்கிறது. வேளாண் துறைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் ஜவுளித்துறையில் 3.50 கோடி பேர் பணியாற்றுகின்றனர். எனவே தற்போதைய நிலை கவலை அளிக்கக்கூடியாதக உள்ளது.

சீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்றுமதியாளர்கள் நாணயப் பரிமாற்றத்தால் பாதிக்கப்படவில்லை. அந்த நாடுகள் தங்கள் நாணயத்தின் மதிப்பை கடந்த பல ஆண்டுகளாக ஒரேநிலையில் வைத்திருக்கின்றன. இதனால் அமெரிக்கச் சந்தையில் சீனாவின் ஜவுளி விலை உயராது. ஆனால் இந்தியாவின் ஜவுளி விலை அதிகரிக்கும்.

தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ள பெரிய நிறுவனங்களைப் பொருத்தவரை, அவர்களது ஏற்றுமதிக்கான லாபம் கணிசமாகச் குறைந்துள்ளது. இதனால், பன்னாட்டுச் சந்தையில் போட்டியிடும் சக்தி அவர்களுக்கும் குறையும்.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் ஈடுபடும் தொழில்கள் கடும் பாதிப்பிலிருந்து தப்பியுள்ளன. அந்த வகையில், ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரணங்களை ஏற்றுமதி செய்வோர் நிலை சற்று ஆறுதல் அளிக்கக் கூடியது. இவர்கள் உற்பத்திக்குத் தேவையான கச்சாப் பொருள்களை வெளிநாடுளிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். கற்களை பட்டைதீட்டியும் புதிய ஆபரணங்களாகத் தயாரித்தும் ஏற்றுமதி செய்கிறார்கள். இவர்களுக்கு இறக்குமதிச் செலவு கணிசமாகக் குறைகிறது. இந்த உபரி லாபம் ஏற்றுமதி இழப்பை ஈடு செய்ய உதவுகிறது.

பொறியியல் ஏற்றுமதியைப் பொருத்தவரை, 2006-07-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 30 சதவிகிதம் அதிகரித்தது. கடந்த ஏப்ரலில் இந்த வளர்ச்சி 23.92 சதவிகிதம் சரிந்துள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ஒருபுறமிருக்க, புதிய வேலைவாய்ப்புகள் பறிபோனதுதான் பெரும் சோகம். ஜவுளி ஏற்றுமதி குறைந்ததால், 2007-08ம் ஆண்டில் 5,79,000 புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்று இந்திய ஜவுளி சம்மேளனத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதில் 2.72 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளும் மற்றும் தொடர்புடைய தொழில்களில் உருவாகக்கூடிய வேலைவாய்ப்புகளும் அடங்கும்.

விசைத்தறி நெசவாளர்களும் புதிய சூழ்நிலையில் வருவாய் இழப்பை எதிர்கொள்ள நேரும். ரூபாய் மதிப்பின் ஏற்றம் மற்றும் டாலரின் சரிவு, இந்திய ஏற்றுமதியை, தொழில் வளர்ச்சியை குறிப்பாக, வேலைவாய்ப்புகளை மோசமாகப் பாதித்துள்ளது என்பது கண்கூடு. எனவே இதற்குரிய பரிகாரம் தேடியாக வேண்டும். பணவீக்கம் ரூபாய் மதிப்பு ஆகிய இரு பிரச்னைகளையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது கம்பிமேல் நடப்பது போல்தான். எனினும் பாரத ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் இதில் தீவிரகவனம் செலுத்தும் நேரம் வந்துவிட்டது.

இது ஒருபுறமிருக்க, நீண்டகால அடிப்படையில் மின்சாரம், போக்குவரத்து, துறைமுகங்களில் நேரும் காலதாமத்தைத் தவிர்த்தல் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளின் மேம்பாடுதான் ஏற்றுமதிக்கு உதவும். ஏற்றுமதியாளர்களும் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக்கொண்டு, உற்பத்திச் செலவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். தங்கள் லாபத்துக்கு எல்லா நேரங்களிலும் அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்க முடியாது.

எனினும், தற்போது எழுந்துள்ள பிரச்னைக்கு உடனடி தீர்வாக ஏற்றுமதியாளர்களுக்கு சில சலுகைகளை வழங்குவது பொருத்தமாக இருக்கும். உதாரணமாக, Duty Drawback எனப்படும் ஏற்றுமதிக்கான சலுகைத் தொகையை அதிகரிக்கலாம். ஏற்றுமதிக்கான பொருள்களை உற்பத்தி செய்வதற்கு குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக் கடன் வழங்குதல் மற்றும் வருமான வரிச் சட்டத்தின் 80 ஏ.ஏ.இ. பிரிவின் கீழ் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரிச்சலுகை, சேவை வரித் தள்ளுபடி ஆகிய நடவடிக்கைகளின் மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)

Posted in Agriculture, Appreciation, APR, Balancesheet, Banks, Biz, Call-Centers, Call-Centre, Capital, Commerce, Commodity, Currency, Deals, Deflation, Deposits, Diesel, Dollar, Duty, Economy, Employment, Euro, Exchange, Expenses, Exports, FDI, Finance, Fluctuations, forecasts, Garment, Gas, GDP, Growth, IMF, Imports, Industry, Inflation, Inflows, InfoTech, Interest, International, investments, Jobs, Loans, markets, MNC, Money, oil, Outflows, Outsourcing, Petrol, Portfolio, pound, Pricing, Productivity, Profit, Profits, Rates, RBI, Recession, Rupee, Sales Tax, service tax, slowdown, Software, Statement, Strength, Tax, Telecom, Textiles, Trading, Transfer, US, USA, Valuation, volatility, WB, World, Yen | Leave a Comment »