Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Motor’ Category

Don’t rush to cut policy rates: Monetary, fiscal recipe for overheating India

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 22, 2007

வங்கிகளில் அரசு தலையீடு?

எஸ். கோபாலகிருஷ்ணன்

வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மோட்டார் வாகனத் தொழில் சார்ந்த மூத்த நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், வங்கிக் கடன்களுக்கான வட்டிவீதத்தைக் குறைக்க வேண்டும் என்று யோசனை கூறினார். இது வெறும் யோசனை அல்ல, அரசின் ஆணை என்றே பலர் கருதினர்.

அதற்கேற்ப, ஓரிரு தினங்களில், சில வங்கிகளின் உயர்நிலை நிர்வாகிகள் வட்டி குறைக்கப்பட வேண்டியதுதான் என்று வழிமொழிந்தனர். அக்டோபர் 10, பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன், மோட்டார் வாகனக் கடன், டிரக் கடன் ஆகியவற்றுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்தது. இதர வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வட்டியைக் குறைத்தன.

வங்கிகள் தங்கள் கடனுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், இந்த நிகழ்வு, வேறு சில கருத்துகளுக்கும் இடம் அளித்துவிட்டது. பொதுமக்களிடமிருந்து டெபாசிட் திரட்டுவதும், திரட்டிய பணத்தை வாடிக்கையாளர்களுக்குக் கடனாக வழங்குவதும் வங்கிகளின் தலையாய தொழில். அதேபோல், பொதுமக்களின் டெபாசிட் தொகைக்கு எவ்வளவு வட்டி கொடுப்பது மற்றும் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு எவ்வளவு வட்டி வசூலிப்பது என்பதை நிர்ணயிப்பதும் வங்கிகளின் பணியே.

இந்த நியதி, அரசு உள்பட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால், பொருளாதார சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டபின்னர், மத்திய அரசு இந்த நியதியைப் பெரும்பாலும் கடைப்பிடிக்கவும் செய்தது.

விவசாயக் கடன், சிறுதொழில் கடன், மாணவர்களுக்குக் கல்விக் கடன் உள்ளிட்ட முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் கடன்கள் தொடர்பான விதிமுறைகள் தவிர பிறகடன்களுக்கான வட்டிவீதத்தை வங்கிகளே வணிகரீதியில் நிர்ணயிக்கின்றன.

வைப்புத்தொகைகளுக்கான வட்டிவீதத்தையும் ஒவ்வொரு வங்கியும் அவ்வப்போது தனது தேவைகளுக்குத் தகுந்தபடி கூட்டியோ குறைத்தோ வழங்குகிறது. எல்லா வங்கிகளுக்கும் ஒரே சீரான வட்டிவீதத்தை நிர்ணயிக்கும் வழக்கத்தை ரிசர்வ் வங்கி கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விதிவிலக்காக, சேமிப்பு கணக்குக்கான வட்டிவீதம் மட்டுமே அனைத்து வங்கிகளுக்கும் ஒரே சீராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் வட்டிவீதத்தைக் குறைக்கும்படி யோசனை கூறியதும், அதை வங்கிகள் விரைந்து செயல்படுத்தியதும், ஒரு பொது விவாதத்திற்கு இடமளித்திருப்பதில் வியப்பேதும் இல்லை.

பொதுத்துறை வங்கிகளின் பெரும்பான்மைப் பங்குதாரர் மத்திய அரசுதான். முன்னதாக பாரத ஸ்டேட் வங்கியின் பெரும்பான்மைப் பங்குகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்தன. ஆனால், அண்மையில் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளை மத்திய அரசு வாங்கிக் கொண்டது.

நாட்டின் 80 சதவிகித வங்கிப் பணிகளை பொதுத்துறை வங்கிகள்தான் மேற்கொள்கின்றன. புதிய தலைமுறை தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி போன்றவை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தபோதிலும், நாட்டின் ஒட்டமொத்த வங்கிச்சேவையில் தனியார்துறை வங்கிகளின் பங்கு குறைவாகவே உள்ளது.

இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளின் கடன்களுக்கான வட்டிவீதம் உயர்ந்ததால் மோட்டார் வாகன உற்பத்தியும் விற்பனையும் சரிந்துள்ளன. புதிய வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனை நம்பியிருந்தவர்கள் மனம் தளர்ந்து போனார்கள். காரணம், வட்டிவீதம் அதிகரித்ததால் மோட்டார் வாகனங்கள் மற்றும் வீடுகளின் அடக்கவிலைகளும் அதிகரித்துவிட்டன. இது பொருளாதார மந்தநிலைக்கு வழி வகுக்கக்கூடும் என்ற கவலை மேலீட்டால் மத்திய நிதி அமைச்சர் தமது யோசனையை வெளியிட்டிருக்கக்கூடும். ஆகவே, இதை அரசியல் தலையீடாகக் கருதக்கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.

இது ஒருபுறமிருக்க, பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கும், இயக்குநர் குழுக்களுக்கும் சமுதாயக் கடமை உண்டு. வணிக ரீதியில் வெறும் லாபநோக்கோடு மட்டுமல்லாமல், பொருளாதார மந்தநிலை ஏற்படும் நிலைமை தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பு பொதுத்துறை வங்கிகளுக்கு இருக்கிறது.

அண்மையில் நிகழ்ந்த கடன்களுக்கான வட்டி உயர்வுக்கு காரணம், வங்கிகள் அல்ல; ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கையே என்பது புலனாகும்.

ரிசர்வ் வங்கியின் தலையாய கடமைகளில் ஒன்று, நிதி மற்றும் கடன் கொள்கையை முடிவு செய்து 6 மாதங்களுக்கு ஒரு முறை அறிவிப்பதாகும். இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, விலைவாசியையும் பணவீக்க வீதத்தையும் கட்டுப்படுத்துவது. இரண்டாவது, தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடனைத் தங்குதடையின்றி கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது.

முன்னதாக, அசுர வேகத்தில் உயர்ந்து கொண்டிருந்த பணவீக்கவீதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

வங்கிகளின் உபரிப் பணத்தை உறிஞ்சுவதற்காக, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பை மேலும் அரை சதவிகிதம் அதிகரித்தது. அதற்கு முன்பு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டிவீதத்தையும் (ரெப்போ ரேட்) உயர்த்தியது.

இந்த நடவடிக்கைகளால் பணவீக்கவீதம் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில், வங்கிகளின் கடனுக்கான வட்டிவீதம் உயர்வதற்கும் அது வழிவகுத்துவிட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கிகளில் வைப்புத்தொகை அதிகரித்ததைவிட, வங்கிக்கடன் தொகையே அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 30 சதவீதம் அளவுக்கு வங்கிக்கடன் அதிகரித்து வந்துள்ளது. வட்டி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

இந்நிலையில், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற சமிக்ஞை ரிசர்வ் வங்கியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டுமே அல்லாமல், அரசுத் தரப்பிலிருந்து அல்ல என்பது தெளிவு.

இதற்கிடையே, டெபாசிட்களுக்கான வட்டியும் குறையத் தொடங்கியுள்ளது என்பது கவலை தரும் விஷயம். தங்களது வாழ்நாள் சேமிப்பிலிருந்து கிடைக்கக்கூடிய வட்டியை மட்டுமே நம்பி வாழ்க்கைநடத்தும், பணி ஓய்வுபெற்றவர்களுக்கும், நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் யார்?

நடுத்தர மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும்விதத்தில் அவர்களுடைய வைப்புத்தொகைக்கான வட்டிவீதத்தைக் குறைக்காமல் பார்த்துக்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

இந்த உயிர்நாடிப் பிரச்னையை வெறும் வணிகரீதியில் அணுகாமல், மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய இழப்பை ஒரு சுமையாக ரிசர்வ் வங்கி கருதலாகாது. ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் உதவுவதை ஒரு சமுதாயக் கடமையாகக் கருத வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

Posted in Agriculture, Assets, Auto, Automotive, Banking, Banks, BOB, Bonds, BSE, Cars, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chit Funds, Chitfunds, Chithambaram, Commerce, Cooperative, Credit, CRR, Deflation, Deposits, Dollar, Economy, Enforcement, Exchange, Farmers, FD, Finance, Financing, fiscal, Govt, HDFC, ICICI, Index, Indices, Inflation, Insurance, Interest, investments, IOB, KVB, Land, liquidity, Loans, markets, Micro-financing, Microloans, Minister, Monetary, Motor, NIFTY, NSE, Overnight, Overnite, Parts, Policy, Property, Rates, RBI, reserves, ROI, Rupee, Rupees, Rupya, SBI, Schemes, Shares, Spare, Stocks, Student, Treasury | Leave a Comment »

Compact Fluorescent lamp (cfl) & Incandescent Bulb – Global Warming

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 29, 2007

குறு ஒளிர் விளக்குகள் } நல்ல தீர்வா?

என். ரமேஷ்

தொழிற்சாலைகள், போக்குவரத்து உள்ளிட்ட பொருளாதாரம் சார்ந்த அனைத்துப் பிரிவுகளிலும் பயன்படுத்தப்படும் நிலக்கரி, பெட்ரோலியம் உள்ளிட்ட எரிபொருள்களால் உருவாகும் கரியமில வாயு காரணமாக புவி வெப்பம் அதிகரித்து வருகிறது; இதனால் கடல் நீர்மட்டம் உயர்வு, புயல் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள், வறட்சி, உணவு உற்பத்தி குறைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதை உலக சமுதாயம் உணரத் தொடங்கியுள்ளது.

புவி வெப்பத்தால் ஏற்படக் கூடிய பேரழிவிலிருந்து தப்பிக்க, வளர்ச்சியடைந்த நாடுகள் வெளியிடும் கரியமில வாயு அளவைக் குறைக்க வகை செய்யும் கியோட்டோ ஒப்பந்தம் உள்ளிட்ட வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இப் பிரச்னையின் தீர்வுக்கு, உலகில் உள்ள ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை நேரடியாக வழங்க வீடுகள், வணிக நிறுவனங்களில் உள்ள டங்ஸ்டன் இழை கொண்ட “குண்டு பல்பு’களை குறு ஒளிர் விளக்குகளாக (compact fluorescent lamp-cfl) மாற்ற வேண்டும் எனப் பெரும் இயக்கமே நடைபெற்று வருகிறது.

பிரேசில், வெனிசுலா போன்ற நாடுகள் “குண்டு பல்பு’களை சிஎஃப்எல்-ஆக மாற்றும் இயக்கத்தைத் தொடங்கிவிட்டன. ஆஸ்திரேலியா 2010-க்குள்ளும், கனடா 2012-க்குள் முழுமையாக சிஎஃப்எல்-லுக்கு மாற முடிவு செய்துள்ளன.

இந்தியாவில் கிரீன் பீஸ் போன்ற தன்னார்வ அமைப்புகளும், தில்லி மாநில அரசு – அங்கு செயல்படும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களும் இந்த இயக்கத்தில் முனைப்புடன் செயல்படுகின்றன.

சென்னை போன்ற பெருநகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள பெரும்பாலான மேல்தட்டு, நடுத்தரக் குடும்பங்கள் தற்போது சிஎஃப்எல்-லுக்கு மாறி வருகின்றன. சிஎஃப்எல் எனப்படும் இந்த குறு ஒளிர் விளக்குகள், குண்டு பல்புகளைவிட ஏறத்தாழ ஐந்து மடங்கு குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. 100 வாட் குண்டு பல்பு வழங்கும் ஒளியை 20 வாட் சிஎஃப்எல் விளக்கு வழங்குகிறது. இதன்மூலம் ஐந்தில் ஒரு பங்கு மின்சாரச் செலவையும், அதற்குரிய கட்டணத்தையும் குறைக்க முடியும்.

மேலும், ஒரு குண்டு பல்பு செயலிழக்கும் வரை, சராசரியாக 1,000 மணி நேரம் எரியும் என்றால், சிஎஃப்எல் விளக்குகள் அதைவிடப் பலமடங்கு நேரம் எரியக் கூடியவை. இதனால் ஆண்டுக்கு ஒரு சிஎஃப்எல் பயன்பாடு மூலம், அதற்குக் கொடுக்கும் கூடுதல் விலை உள்ளிட்ட அனைத்துச் செலவும் போக, ரூ. 300-க்கும் அதிகமாகச் சேமிக்க முடியும்.

நுகர்வோருக்கு நேரடியாகக் கிடைக்கும் இந்த லாபம் தவிர்த்து, மின் உற்பத்திக்கு பயன்படுத்தும் நிலக்கரி, தண்ணீர் போன்றவற்றின் பயன்பாட்டு அளவும் குறைகிறது. 1,000 மணி நேரம் ஒரு குண்டு பல்பு மின்சாரம் வழங்க 71 கிலோ நிலக்கரி தேவையென்றால், சிஎஃப்எல்லுக்கு 14.2 கிலோ மட்டும் போதுமானது. இதேபோன்று, குண்டு பல்புக்கு 535 லிட்டர், சிஎஃப்எல்லுக்கு 107 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு குண்டு பல்பு 1,000 மணி நேரம் எரிவதற்கான மின் சக்தி உற்பத்தியில் 99.7 கிலோ கரியமில வாயு வெளியிடப்படும். ஆனால், சிஎஃப்எல் எரிவதால் 19.94 கிலோ மட்டும் வெளியிடப்படும். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் சல்பர்-டை-ஆக்சைடு, நுண் துகள்கள், எரி சாம்பல் போன்றவையும் சிஎஃப்எல் பயன்பாட்டால் குறையும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் பலர் கூறுகின்றனர்.

ஆனால், “டாக்சிக்ஸ் லிங்’ (Toxics Link) என்ற தன்னார்வ அமைப்பு, சிஎஃப்எல்-லுக்கு மாறுவதற்கு முன் ஆழ்ந்து யோசிக்க வேண்டியுள்ளது என எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளது. இதற்குக் காரணம், சிஎஃப்எல், நாம் வழக்கமாக பயன்படுத்தும் குழல் விளக்குகள் போன்ற ஒளிர் விளக்குகளில் பயன்படுத்தப்படும் பாதரசம் மிகவும் நச்சுத் தன்மை வாய்ந்தது என்பதுதான்.

நமது சூழலில் மிகச் சிறு அளவில் இருந்தாலும் நரம்பு மண்டலம், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகிய உறுப்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் கைகால் அசைவு, நினைவாற்றல் ஆகியவற்றையும் பாதிக்கக் கூடியது பாதரசம்.

ஒரு சராசரி சிஎஃப்எல் விளக்கில் 0.5 மில்லி கிராம் பாதரசம் உள்ளது. இந்த விளக்குகள் உடைந்தால் பாதரச ஆவி வெளிப்பட்டு வீட்டில் உள்ளோருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். உடையாமல் செயலிழந்து (ப்யூஸ்) போன பின்னரும் வழக்கமாக இவை மாநகராட்சி, நகராட்சி குப்பைக் கிடங்குகளுக்கே செல்கின்றன. அங்கு இவை உடைக்கப்பட்டாலும் அந்த பாதரச ஆவி நமது சுற்றுச்சூழலில் கலந்து பாதிப்பை உருவாக்கும்.

தற்போது இந்தியாவில் எரியும் விளக்குகளில் 10 சதம் சிஎஃப்எல் விளக்குகள். ஆண்டுதோறும் சிஎஃப்எல் விளக்குகள் தயாரிப்பில் 56 டன் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. முழுவதும் சிஎஃப்எல் விளக்குக்கு மாறினால் இந்த அளவு ஆண்டுக்கு 560 டன்னாக உயரும். எனவே, பசுமைக் குடில் வாயுக்களைக் குறைப்பதற்காக மற்றொரு ஆபத்தை விலை கொடுத்து வாங்கத் தேவையில்லை என பாதரசத்தை எதிர்ப்போர் தெரிவிக்கின்றனர்.

சிஎஃப்எல்-லுக்கு மாற்றாக ஒளி உமிழும் டையோடுகளைப் ( Light Emitting Diodes-எல் ஈ டி) பயன்படுத்த முடியும் என இவர்கள் வாதிடுகின்றனர். பாதரசத்தைப் பயன்படுத்தாத இவை சிஎஃப்எல்களைவிடக் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துவதுடன் பல்லாயிரம் மணி நேரத்துக்கு மேல் எரியக் கூடியவை.

ஆனால், நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் போதும் பாதரசம் வெளியாகிறது. சிஎஃப்எல்லைப் பயன்படுத்தும் போது இந்த பாதரசம் வெளியாகும் அளவு குறைய வாய்ப்புள்ளது. ஆனால், மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மட்டும் பாதரசம் வெளியாவதைக் கட்டுப்படுத்துவது எளிதானது. கோடிக்கணக்கான வீடுகளில், குப்பை மேடுகளில் வெளியாகும் போது கட்டுப்படுத்துவது கடினம்.

எனவே, எல்ஈடி போன்ற மாற்றுகள் பரவலான பயன்பாட்டுக்கு வரும் வரை, இடைக்கால ஏற்பாடாக கனடா போன்ற நாடுகளில் சிஎஃப்எல்-களைப் பாதுகாப்பாக மறுசுழற்சி செய்யப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பாதரசத்தை மீட்டு எடுக்கலாம். செயலிழந்த சிஎஃப்எல்களைத் திரும்பப் பெறுவது, மறுசுழற்சி செய்வது போன்றவற்றுக்கு ஆகும் செலவை சிஎஃப்எல்லைப் பெருமளவு உற்பத்தி செய்யும் நிறுவனங்களை ஏற்கச் செய்யலாம்.

———————————————————————————————————–
நதியோரம் தேயும் நாகரிகம்!

இரா. சோமசுந்தரம்

வாழ்வின் எல்லா நேரங்களிலும் நாம் ஒருவகையில் அன்றாடம் காய்ச்சிகளின் மனநிலையில்தான் இருக்கின்றோம். அன்றைய தேவை நிறைவடைந்தால் சரி.

அது தேர்தல் என்றாலும், ஊழல் என்றாலும் அல்லது , கொலை, கொள்ளை, விபத்து, மரணங்கள், குண்டுவெடிப்பு – எதுவென்றாலும் சரி, அன்றைய நாளுடன் மறக்கப்படும்.

இந்தப் பட்டியலில் தண்ணீரும் ஒன்று. வீட்டு இணைப்பில் குடிநீர் வந்தது என்றால் அத்துடன் அதை மறந்துவிடுகிறோம். ஆனால் அந்த குடிநீரை வழங்கும் நதிக்கு எத்தகைய கேடுகளைச் செய்து வருகிறோம் என்பதைப் பற்றிச் சிந்திப்பதே கிடையாது.

இந்திய நதிகள் யாவும், அவை பெரியன என்றாலும் சிறியவை என்றாலும், மழைக்காலத்தில் வெள்ளமும் மற்ற நாட்களில் சாக்கடையும் ஓடும் என்ற நிலைக்கு மாறிவிட்டது. எல்லாக் கழிவுகளும் நதிகளில் கலக்கின்றன.

இது காலங்காலமாக நடந்து வருவதுதானே? இப்போது மட்டும் என்ன புதிதாகத் தீங்கு வந்துவிட்டது?

காலங்காலமாக நதியில் குளித்த மனிதர்கள் வேதிப்பொருள் கலந்த சோப்பைப் பயன்படுத்தவில்லை. அவர்களுக்கு “தோல் வெளுக்க சாம்பலுண்டு. துணி வெளுக்க மண்உண்டு’. அவர்கள் ஆற்றோரம் திறந்தவெளிகளையும், வயல்வரப்புகளையும் கழிப்பிடமாகப் பயன்படுத்தினார்கள். அப்போதெல்லாம் தொழிற்சாலைகள் இல்லை. அன்றைய சாயத் தொழில்கூட மரம், செடி, மலர், மரப்பட்டைகள் என இயற்கைப் பொருள்களைக் கொண்டு நடந்தது. யாருக்கும் பாதிப்பில்லை.

இன்றோ நிலைமை வேறு; இவை யாவும் தலைகீழாக மாறிவிட்டன.

தற்போது நதியில் கலக்கும் மாசுகளில் 80 சதவீதம் மனிதக் கழிவுகள்! ஏனையக் கழிவுகள் தொழில்துறையைச் சேர்ந்தவை.

எல்லா வீடுகளிலும் “ஃபிளஷ் அவுட்’ நவீன கழிப்பறை உள்ளது; இன்று இது தவிர்க்கமுடியாத ஒன்று.

ஒரு குடும்பத்துக்கு சுமார் 1.5 கிலோ மலஜலத்தை “”சாக்கடையில் தள்ளிவிட” குறைந்தது 300 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

இந்தத் தண்ணீரும் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டது அல்ல. பெரும்பாலும், மாநகராட்சி அல்லது நகராட்சி சுத்திகரித்து, வீட்டு இணைப்பில் வழக்கும் குடிநீர்தான்.

சில வெளிநாடுகளில் இத்தகைய ஃபிளஷ் அவுட்களில் பயன்படுத்த மறுசுழற்சி-நீர் விநியோகம் உண்டு. இந்தியாவில் அதற்கு வாய்ப்பே கிடையாது.

உள்ளாட்சி அமைப்புகள், இந்தக் கழிவுகளை ஊருக்கு வெளியே ஒன்றுதிரட்டி, அவற்றை ஓரளவு சுத்திகரித்து பின்னரே நதியில் கலக்கவேண்டும் என்பதற்கு முயற்சிகள் பல எடுக்கப்பட்டன.

அதன் விளைவுதான் நதிகள் பாதுகாப்புத் திட்டம். பல ஆயிரம் கோடி ரூபாயை, இத்திட்டத்திற்காக “ஒதுக்கினார்கள்’.

நகரத்தின் சாக்கடையைச் சுத்திகரித்து இயற்கை உரங்கள் தயாரிப்பு, கீரை காய்கறி வளர்ப்பு – என்றெல்லாம் செய்திகள் வந்தனவே தவிர, நடைமுறையில் எதுவுமே நடக்கவில்லை. சுத்திகரிக்கப்படாத வீட்டுச் சாக்கடைக் கழிவுகள் நேரடியாக நதிகளில் கலந்துகொண்டே இருக்கின்றன. இன்றளவும்!

ஒரு மனிதனின் மல, ஜலத்தில் அவனுக்குத் தேவைப்படும் அளவுக்கு உணவுப் பொருளை விளைவிக்கப் போதுமான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் அனைத்தும் உள்ளன. ஆனால் அவற்றைப் பயன்படுத்த இயற்கை சில விதிமுறைகளை வைத்திருக்கிறது. நீரில் கரைந்து நீர்த்துப்போகிறபோதுதான் சிறுநீர் ஒரு நல்ல உரமாக மாறும். வெயில் காய்ந்து கிருமிகள் அழிந்த உலர்மலம்தான் தீங்கற்ற உரமாக மாறும். ஆனால் இதற்கு மனித நாகரிகம் இடம் இல்லாமல் செய்துவிட்டது. ஆகவே மலக்கிருமிகள் நேரடியாக நதியைச் சென்றடைகின்றன.

ஓடும் நதிக்கு தன்னைத் தானே தூய்மைப்படுத்திக் கொள்ளும் சக்தி உள்ளது என்பது உண்மையே. நதியில் கலக்கும் உயிர்க்கழிவுகளின் மூலக்கூறுகளைச் சிதைத்து, உருமாற்றம் செய்ய போதுமான அளவு ஆக்சிஜன் நதிநீரில் இருக்க வேண்டும்.

ஆனால் ரசாயன கழிவுகள் நீரை மாசுபடுத்தி, அதன் இயற்கையான சக்தியை ஒடுக்கிவிடுகின்றன. இயற்கையான சுத்திகரிப்புக்கு ஆற்றுமணல் அவசியம். அதுவும் இப்போது பெருமளவில் சுரண்டப்படுகிறது.

நதிநீரைக் காப்பாற்ற ஏதாவது செய்தாக வேண்டும்; இல்லையெனில், குடிநீருக்காகப் பெரும்பணத்தைச் செலவிட நேரும்.

மனிதன் பெரிய அறிவுஜீவிதான்!

அதற்கு ஒரு சின்ன உதாரணம்:

ஒரு மாநகராட்சிப் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பறைகளை இணைத்து, அதிலிருந்து கிடைக்கும் எரிவாயுவை அந்த வளாகத்தில் உள்ள டீ கடைகள், ஹோட்டல்களில் பயன்படுத்தினால் எரிபொருள் செலவு மிகமிகக் குறையும் என்ற திட்டத்தை முன்வைத்தபோது, காது, கண், மூக்கு எல்லாவற்றையும் மூடிக்கொண்டு “அய்யய்யே..எப்படி வியாபாரம் நடக்கும்?’ என்று எதிர்த்தார்கள்.

அதே கழிப்பறைகளின் மலஜலம் அனைத்தையும் பக்கத்தில் உள்ள நதியில் கலந்து, அந்த தண்ணீரைத்தான் மீண்டும் விநியோக்கிறோம் என்று அதிகாரிகள் சொன்னபோது, “சுடுகாடு கூடத்தான் ஆத்தோரம் இருக்குது. எல்லாம் வெள்ளத்துல போறதுதானே’ என்றார்கள்.

Posted in Alternate, Atomic, Biogas, Brazil, Burn, Carbon, Cauvery, CFL, Coal, Conservation, Crap, dead, Degradable, Detergents, Diesel, Disposal, Drill, Drinking, Drought, Earthquake, Electricity, Emission, emissions, energy, Environment, ethanol, Flowers, Flush, Food, Fuel, Ganga, Ganges, Garbage, Gas, Gore, Incandescent, Integration, Interlink, Kyoto, Lamps, Laundry, LED, Lights, Lignite, Lumniscent, Mercury, Mineral, Motor, Nature, Nuclear, Ozone, Petrol, Plants, Pollution, Power, Pump, Purify, Rain, Recycle, Removal, Restrooms, River, Shit, Soaps, Toilets, Toxics, Trash, Trees, Tsunami, Tube, Tubelight, Underground, Urea, Urine, Warming, Waste, Water, Well | 1 Comment »

S Gopalakrishnan – Banking services in Rural Areas

Posted by Snapjudge மேல் ஜூலை 23, 2007

கிராமங்களில் வங்கிச் சேவை

எஸ். கோபாலகிருஷ்ணன்

பாரத ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் உஷா தோராட் அண்மையில் தெரிவித்துள்ள தகவல் ஒன்று கவனிக்கத்தக்கது. இந்தியாவில் இப்போது மொபைல் தொலைபேசி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 30 லட்சம். அதேசமயம், அனைத்து வங்கிகளிலிருந்தும் கடன் வசதி பெறுபவர்களின் எண்ணிக்கை மொபைல் தொலைபேசி வைத்திருப்பவர்களைவிட குறைவு என்பதே அது.

இதை சற்று கூர்ந்து கவனிப்போம்: நூறு கோடி மக்கள் வாழும் இந்தியாவில் வெறும் 9 கோடி பேருக்குத்தான் வங்கிக் கடன் கிடைக்கிறது. இதில் பெரும் தொழில், சிறு தொழில் மற்றும் விவசாயக்கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன், கல்விக்கடன் என எல்லா வகை வங்கிக் கடன்களும் அடங்கும்.

மேலும், 2006ஆம் ஆண்டில் வங்கிகளின் கடன் வசதி பெற்றவர்களில் 93 சதவிகிதத்தினர் தலா ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கும் குறைவான தொகையே கடனாகப் பெற்றுள்ளனர். இது மொத்த வங்கிக் கடன் தொகையில் 18 சதவிகிதமே.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிக் கடன் வசதி ரத்தநாளம் போன்றது என்பார்கள். அந்த வகையில் பெரும் நகரங்கள், சிற்றூர்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களுக்கு பரவலாக இந்தக் கடனுதவி கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில். ஒட்டுமொத்த வங்கிக் கடன் தொகையில் 56 சதவிகிதம் தொகையை மும்பை, தில்லி, சென்னை, கோல்கத்தா, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய 6 மாநகரங்கள் பெற்று விடுகின்றன. மேலும் கவலையளிக்கும் அம்சம் என்னவெனில், கடந்த 5 ஆண்டுகளில் கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வங்கிகள் வழங்கிய கடனுதவி 10.4 சதவிகிதத்திலிருந்து 8.3 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துவிட்டது என்பதுதான்.

இந்தச் சரிவுக்கு என்ன காரணம் என்றால், கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 2001 டிசம்பரில் 32,496 வங்கிக் கிளைகள் செயல்பட்டன. ஆனால், 2006 டிசம்பரில் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 30,586 ஆக குறைந்துவிட்டன. அதாவது, கடந்த 5 ஆண்டுகளில் 1910 கிளைகள் மூடப்பட்டுள்ளன. பாரத ரிசர்வ் வங்கி 3 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடும் தகவல் அறிக்கை (டிசம்பர் 2006)யில் இந்த விவரங்கள் உள்ளன.

ஒருபக்கம், தேசிய வங்கிகள், பழைய தனியார் வங்கிகள், புதிய தலைமுறை தனியார் வங்கிகள் ஒன்றோடொன்று போட்டிபோட்டுக் கொண்டு பெரும் நகரங்களிலும், வணிக மையங்களிலும் புதிய கிளைகளை அமைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், தேசிய வங்கிகள் வெளிநாடுகளில் அன்றாடம் புதிய கிளைகளை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. இதுவரை தவிர்த்து வந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் கூட இந்திய வங்கிகள் கிளைகளைத் தொடங்குகின்றன. ஆனால், உள்நாட்டில் கிராமக்கிளைகளை இழுத்து மூடுகின்றன. ஓரிரு பெரிய வங்கிகளில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்ததில் கிடைத்த தகவல் இதுதான்: “”லாபம் ஈட்டாத சிறிய கிளைகளை அருகில் உள்ள பெரிய கிளைகளோடு இணைத்து விட்டோம். நாங்கள் ஒன்றும் கிளைகளை மூடவிடவில்லை.” என்றனர். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று ஆராயத் தேவையில்லை. வங்கிகளின் லாபநோக்கம்தான் முக்கியக் காரணம்.

1969-ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதை அடுத்து, கிராமங்களில் கிளைகளைத் தொடங்குவதற்கு முழுமூச்சுடன் களம் இறங்கின. அஞ்சல் அலுவலகம், காவல் நிலையம் இல்லாத கிராமங்களில்கூட வங்கிக்கிளைகள் தொடங்கப்பட்டன. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அந்த நிலை நீடித்தது. அதன் பின்னரே இதில் சுணக்கம் ஏற்பட்டது மட்டுமல்ல; வணிகரீதியில் லாபம் தராத கிளைகள் மூடப்பட்டன.

கிராமங்களில் வாழும் மக்களிடையே சேமிப்புப் பழக்கத்தை உருவாக்குதல், அவர்களிடம் வைப்புத்தொகைகளைத் திரட்டுதல் மற்றும் அவர்களுக்குப் பயிர்க்கடன், கால்நடைக் கடன் போன்ற விவசாயக் கடன் உதவி வழங்குதல், அளவுக்கு அதிகமான வட்டி வசூலிக்கும் தனியார் வட்டிக் கடைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றுதல் ஆகியவையே அந்த காலகட்டத்தில் அரசின் நோக்கமாக இருந்தது.

1991-ல் அறிமுகமான பொருளாதாரச் சீர்திருத்தத்திற்குப்பின்னர், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் வணிக ரீதியில் செயல்பட்டு லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஒரு வங்கியின் செயல்திறனுக்கு அடையாளம் அது ஈட்டும் லாபமே என்று கருதப்பட்டது. இப்புதிய சூழலில், கிராமக்கிளைகள் ஒரு சுமையாகக் கருதப்பட்டன.

நல்லவேளையாக, காலம் தாழ்ந்தேனும், மீண்டும் அரசின் எண்ண ஓட்டம் மாறத் தொடங்கியுள்ளது. பாரதப் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் உயர்மட்டக் குழுவின் தலைவரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான சி. ரங்கராஜன் அண்மையில் வெளியிட்டுள்ள யோசனை நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. கிராமங்களில் மீண்டும் வங்கிக்கிளைகளை பெரிய அளவில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் அவர்.

வங்கிகள் தங்கள் கிளைகளைக் கிராமங்களில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில், கிராமங்களில் புதிய கிளைகளை அமைக்கும் வங்கிகளுக்கே பெரிய நகரங்களில் கிளைகளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற யோசனையைத் தெரிவித்துள்ளார் ரங்கராஜன். பார்க்கப்போனால், இப்படி ஒரு திட்டம் கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டது. ஆனால், காலப்போக்கில் ரிசர்வ் வங்கியும் அடுத்தடுத்து பொறுப்பேற்ற அரசுகளும் கிராமக்கிளைகளை அமைப்பதில் முனைப்பு காட்டத் தவறிவிட்டன என்பதே உண்மை.

தற்போது, பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது குறித்து பெருமிதம் அடைகிறோம். ஆனால், வேளாண்துறை, தொழில்துறை மற்றும் சேவைத்துறை ஆகிய மூன்று துறைகளிலும் பரவலாக, ஒரே சீராக வளர்ச்சி ஏற்படவில்லை. மாறாக, ஒருபக்கம், தொழில் உற்பத்தித் துறையும், இன்னொருபக்கம், தகவல்தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி, ஹோட்டல் தொழில், சுற்றுலாத் தொழில் உள்ளிட்ட சேவைத் தொழில்கள் அண்மைக்காலமாக அபரிமித வளர்ச்சி கண்டுள்ளன. இதன் பயனாகவே 9 சதவிகித வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. இதில் வேளாண் துறையின் பங்கு குறைவே. எனவேதான், கிராமப்புறங்களில் வளர்ச்சியின் பலன் தென்படவில்லை. வறுமை ஒழிப்பு கைகூடவில்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை.

இதை உணர்ந்துதான், மத்திய அரசு வேளாண் துறையில் ரூ. 25,000 கோடி வேளாண் துறையில் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளது. கிராமப்புற வளர்ச்சிக்கு அரசின் புதிய முதலீடுகள் அவசியம் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதுமட்டும் போதாது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில், சரியான அளவில் விவசாயக் கடன் தங்குதடையின்றி கிடைக்கச் செய்வதும் அவசியம். அதேபோல், கிராம மக்களிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை உருவாக்குதல், அவர்களது வைப்புத்தொகைகளைத் திரட்டி நியாயமான வட்டி வழங்குதல் போன்ற பணிகளைச் செம்மையாக மேற்கொள்வதற்கு, கிராமங்களில் வங்கிகள் இயங்க வேண்டும்.

கிராமக் கிளைகளில் பணிபுரிய, ஊழியர்களைத் தேர்வு செய்வதிலும் கவனம் தேவை. நகர வாழ்க்கை முறைகளில் ஊறிப்போன ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி கிராமங்களுக்கு அனுப்பினால், உரிய பலன் கிடைக்காது என்பதைக் கடந்தகால அனுபவம் உணர்த்தியுள்ளது. கிராமச்சூழலில் பணிபுரிய, விருப்ப அடிப்படையில் ஊழியர்களைத் தேர்வு செய்தால், அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வளர்ச்சியின் பலன் கிராமங்களில் வாழும் மக்களுக்கும் விரைவில் வந்து சேரும் என்பதற்கான அறிகுறியாக புதிய வங்கிக் கிளைகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)

——————————————————————————————————————————
சீரழியும் சிறுதொழில்கள்

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற நிலையில் சிறு தொழில்கள், குடிசைத் தொழில்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மக்கள் ஈடுபடுகின்ற தொழில்கள் யாவும் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.

கைதயாரிப்பு தீப்பெட்டித் தொழிலில்

  • சிவகாசி,
  • ராஜபாளையம்,
  • கோவில்பட்டி,
  • எட்டயபுரம்,
  • கழுகுமலை,
  • சங்கரன்கோவில்,
  • வாசுதேவநல்லூர்,
  • குடியாத்தம்,
  • செய்யாறு

போன்ற பகுதிகளில் லட்சக்கணக்கான ஏழை மக்கள் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். முதலில், சிவகாசி அய்ய நாடார் குடும்பத்தினர் கோல்கத்தா சென்று தொழில்நுட்பத்தை அறிந்து வந்து சிவகாசியில் முதன்முதலாக தீப்பெட்டித் தொழிலைத் தொடங்கினர். இத்தொழிலில் சி, டி என்ற இரண்டு பிரிவுகள் உண்டு.
வானம் பார்த்த பூமியில் பல குடும்பங்களுக்கு இத்தொழில் விளக்கேற்றியது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த இரண்டு பிரிவுகளும் நலிந்து வருகின்றன. தமிழகம் வந்து தீப்பெட்டியைக் கொள்முதல் செய்த வட மாநில வியாபாரிகள் உத்தரப் பிரதேசத்திலும், பிகாரிலும் தற்பொழுது தொழிலைத் தொடங்கிவிட்டனர். இதனால் இங்கு உற்பத்தி அளவு குறைந்துவிட்டது.

இந்தியாவுக்கு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தேவைப்படுகின்றன. விம்கோ தீப்பெட்டி நிறுவனம் 13 சதவிகிதம் மற்ற இயந்திரத் தீப்பெட்டி ஆலைகள் 18 சதவிகிதம், மீதமுள்ள 69 சதவிகிதம் கைதயாரிப்புப் பிரிவுகளாக இருந்தன. ஆனால், தற்பொழுது, விம்கோ, ஐ.டி.சி போன்ற நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சில தனியாரும் இயந்திரம் மூலமாகத் தேவையான தீப்பெட்டிகளை உற்பத்தி செய்து விடுகின்றனர்.

ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டிகள் இயந்திரங்களிலேயே செய்யப்படுகின்றன. கடந்த காலங்களில் இரண்டு லட்சம் பண்டல்கள் உற்பத்தி செய்ய இரண்டு லட்சத்து 45 ஆயிரம் தொழிலாளர்கள் தேவை. இதனால் அதிகமான அளவில் வேலைவாய்ப்பு கிடைத்தது. தற்பொழுது இயந்திரமயம் காரணமாக தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. தீப்பெட்டி ஆலை அதிபர்கள் தங்களுக்கு லாபம் என்று கருதி இயந்திரங்களின் மூலம் உற்பத்தியைத் தொடங்கிவிட்டனர்.

இதுமட்டுமல்லாமல், தீப்பெட்டிக்கான மூலப்பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துவிட்டன. கைதயாரிப்பு தீப்பெட்டி உற்பத்திச் செலவு அதிகரிப்பதனால் தீப்பெட்டி விலையும் அதிகரிக்கிறது. ஐ.டி.சி. போன்ற பெரிய நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படுவதில்லை. குறைந்த விலைக்கே தீப்பெட்டிகளை வழங்கக்கூடிய நிலையில் உள்ளன.

விலை அதிகரிப்பால் குடிசைத்தொழில் தீப்பெட்டி பண்டல்கள் விற்பனை ஆகாமல் கிடங்குகளில் முடங்கியுள்ளன. குளோரேட் என்ற மூலப்பொருள் பற்றாக்குறையால் சிறு உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டதால், ஏழை மக்கள் வேலைவாய்ப்புகளை இழக்கின்றனர். பன்னெடுங்காலமாக தெற்கேயுள்ள கரிசல் பூமியில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்த அட்சயப் பாத்திரமாக விளங்கிய தொழில் தற்போது படிப்படியாகச் சிதைந்துள்ளது.

இத்தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தீப்பெட்டிக்குத் தேவையான மூலப்பொருள்களை மானிய விலையில் வழங்க வேண்டும். ஏற்றுமதிக்கு ஊக்கத்தொகையும் வங்கிக் கடன்களும் கிடைக்க வேண்டும். கூட்டுறவு சங்க தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அரசே உதவ வேண்டும். ஐ.டி.சி. போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்ற தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்ய மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அனுமதி பெறாமல் இயங்கும் இயந்திரத் தீப்பெட்டி தொழிற்சாலைகளை அனுமதிக்கக்கூடாது.

நெடுங்காலமாக இன்னொரு சிறுதொழில் – சாத்தூரில் நடந்து வந்த பேனா நிப்பு தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்தியா மட்டுமல்லாமல் மேலை நாடுகளுக்கும் நிப்புகள் இங்கிருந்து அனுப்பப்பட்டன. அலுமினியக் கழிவுகளிலிருந்து செய்யப்படும் இந்த நிப்பு குடிசைத் தொழிலாக நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளித்தது. பால்பாயிண்ட் பேனா வந்ததிலிருந்து இந்தத் தொழில் நசித்துவிட்டது. அதை நம்பியிருந்த குடும்பங்கள் இன்றைக்கு வறுமையில் வாடுகின்றன.

சிவகாசி வட்டாரத்தில் பட்டாசு, காலண்டர் மற்றும் அச்சகத் தொழில்களில் பணியாற்றிய பலர், இயந்திரங்கள் வந்ததால் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். முக்கூடலில் பீடித்தொழிலும் நசித்து வருகின்றது.

தூத்துக்குடி, திருச்செந்தூர், வேம்பார் போன்ற பகுதிகளில் உப்பளத் தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் செய்யும் உப்பளத் தொழில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடந்தது. தற்போது பல்வேறு காரணங்களால் ஏற்றுமதி நின்றுவிட்டது. மழைக்காலத்தில் இத் தொழிலுக்கு பாதுகாப்பின்மை, ரயிலில் அனுப்பத் தடை, மின் கட்டண உயர்வு, நிலத்தடி நீர் குறைவு ஆகிய காரணங்களால் இத் தொழில் நசிந்துள்ளது.

  • திண்டுக்கல் பூட்டு,
  • சுருட்டுத் தொழில்,
  • கும்பகோணம் பாத்திரத்தொழில்,
  • நெசவுத் தொழில் மற்றும்
  • உடன்குடி பகுதியில் பனைத்தொழில் –
  • சில்லுகருப்பட்டி,
  • பவானி ஜமுக்காளம்,
  • மதுரை சுங்கடி,
  • கூறைப்புடவை போன்றவற்றோடு
  • மீன்பிடித் தொழில்,
  • கருவாடு தொழில் என
  • நடுத்தர,
  • கீழ்த்தட்டு மக்கள் ஈடுபட்ட தொழில்கள் அனைத்தும் கேள்விக்குறியாகிவிட்டன.

மதிமுக பொதுச் செயலர் வைகோவும் தீப்பெட்டி தொழில் பிரச்னையை மத்திய அரசின் கவனத்துக்குப் பலமுறை கொண்டு சென்றுள்ளார். ஆனால் தீர்வு இல்லை. புதிய பொருளாதாரத் திட்டங்களால் இத்தொழில்கள் சீரழிந்தாலும், இந்த மண்ணின் அன்றாட அடையாளங்களாக

  • நெல்லை அல்வா,
  • கடம்பூர் போளி,
  • உடன்குடி சில்லுக்கருப்பட்டி,
  • குற்றாலம் முறுக்கு,
  • திருவில்லிபுத்தூர் பால்கோவா,
  • கல்லிடைக்குறிச்சி அப்பளம்,
  • தூத்துக்குடி மக்ரோன்,
  • கோவில்பட்டி கடலை மிட்டாய்,
  • சாத்தூர் சேவு,
  • திண்டுக்கல் மலைப்பழம்,
  • குடந்தை வெற்றிலை சீவல்

போன்ற தின்பண்டங்கள் இன்றைக்கும் மீதமுள்ள எச்சங்களாகும்.
இத் தொழில்களை நம்பிய மக்கள் வேலைவாய்ப்பை இழந்து திருப்பூர் பனியன் ஆலையில் வேலை கிடைக்கும் என்று அங்கு செல்லத் தொடங்கினர். அங்கும் வேலை இன்றி, பலர் துயருறுகின்றனர்.

ஒரு சில ஆதிக்க சக்திகள்தான் இயந்திரமயமாக்கலில் பயனடைகின்றன. 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து விரட்டப்பட்ட மேற்கத்திய சக்திகளுக்கு மீண்டும் இங்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கிறோம்.

வ.உ.சி.யின் கப்பல் நிறுவனத்திற்கு ஆங்கிலேயர்கள் பல தொல்லைகள் கொடுத்து பங்குதாரர்களை எல்லாம் பங்குகளை வாபஸ் பெறச் செய்தனர். 1896-ல் பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயர், எட்டையபுரம் மன்னர் கொடுத்த கிராமத்தில் பருத்தி அரைவை ஆலையை நிறுவினார். அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டியது. அதைப்பொறுக்காத பிரிட்டிஷார், அந்த ஆலையை மூடக்கூடிய வகையில் எட்டையபுரம் அரசின் பங்குகளைத் திரும்பப் பெறச் செய்தது மட்டுமல்லாமல், ஆலை நிலத்தையும் திரும்பப் பெற்று ஆலையை மூடச் செய்தனர்.

உலகமயமாக்கலால் ஏற்கெனவே லத்தீன் அமெரிக்க நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அம்மாதிரியான கொடுமைகள் நமக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம், தற்போது ஏற்பட்டுள்ளது.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

————————————————————————————————–

கிராம மக்களுக்கு கடன் வசதி

எஸ். கோபாலகிருஷ்ணன்

கந்து வட்டிக் கொடுமை பற்றி பேசாத மனிதர்கள் இல்லை; எழுதாத ஏடுகள் இல்லை. எனினும் அவசரத் தேவை என்றால், கிராமவாசிகளுக்கு வேறு என்னதான் வழி?

இந்த அவலத்தை ஒழித்துவிடுவோம் என்று 38 ஆண்டுகளுக்கு முன் புறப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இதனைச் செய்யவில்லை.

தேசிய வங்கிகள், ஆர்.ஆர்.பி. எனப்படும் கிராமிய வங்கிகள் என எந்த ஓர் அமைப்பும் பிரச்னையின் விளிம்பைக்கூடத் தொடவில்லை. மத்திய அரசு அவ்வப்போது செயல்படுத்திய திட்டங்கள், அமைத்த நிபுணர் குழுக்கள் ஆகியவையும் பயனளிக்கவில்லை.

அதீத வட்டி வசூலிக்கும் வட்டிக் கடைகள் அல்லது லேவாதேவிப் பேர்வழிகளின் கோரப் பிடியிலிருந்து எளிய மக்களைக் காப்பாற்ற இயலவில்லை.

தற்போது தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார் அமைப்புகள் முறையாகப் பதிவு செய்து கொள்ளப்பட வேண்டும் என்றும், வேறு சில விதிமுறைகளை உள்ளடக்கியும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்களின் தன்மையும், கூர்மையும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனினும் அவற்றின் நோக்கம் அதீதவட்டி வசூலிப்பதை தடுப்பதும், கந்து வட்டியாளர்களைக் கட்டுப்படுத்துவதுதான். பஞ்சாப், ஹரியாணா போன்ற சில மாநிலங்களில் இதுபோன்ற சட்டங்கள் இன்னும் இயற்றப்படவில்லை.

சட்டம் இயற்றப்பட்ட மாநிலங்களிலும் சட்டத்தின் நோக்கம் எந்த அளவு ஈடேறி உள்ளது என்பது கேள்விக்குறியே. வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார் கடைகளோ, அமைப்புகளோ விதிமுறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் வட்டிவிகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா என்றால் இல்லை. அவ்வளவு ஏன்? கந்து வட்டி தொடர்பாகக் கொடுக்கப்படும் புகார்கள் உரியமுறையில் பரிசீலிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட கடனாளிகளுக்கு நிவாரணம் கிடைக்கிறதா என்பதும் சந்தேகமே.

2002-ம் ஆண்டு அகில இந்திய கடன் மற்றும் முதலீடு தொடர்பான ஆய்வு அறிக்கையில் காணப்படும் தகவல்கள் இங்கு நினைவுகூரத் தக்கவை.

கிராமப்புற மக்கள் 1991-ம் ஆண்டில், தனியாரிடம் வட்டிக்கு கடன் வாங்கிய தொகை அப்பகுதியின் மொத்த கடன் தொகையில் 17.5 சதவீதமாகத்தான் இருந்தது. 2001-ல், 29.6 சதவிகிதமாக உயர்ந்தது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட எந்த நடவடிக்கையும், கிராமவாசிகள் தனியார் வட்டிக்கடைகளைத் தேடிப் போவதைக் குறைக்கவில்லை. மாறாக, இந்தத் தேவை அதிகரித்துள்ளது.

இந் நிலையில் மீண்டும் ஒரு புதிய முயற்சியாக, பாரத ரிசர்வ் வங்கி இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில், கடந்த ஆண்டு ஒரு தொழிலியல் குழுவை அமைத்தது. ரிசர்வ் வங்கியின் பிரதான சட்ட ஆலோசகரின் தலைமையில் அமைக்கப்பட்ட இக் குழுவில் இதர அங்கத்தினர்களாக அதே வங்கியின் அனுபவமிக்க அதிகாரிகள் இருந்தனர். இக்குழு தனது பரிந்துரைகளை அண்மையில் அளித்தது. அவற்றின் சாரம் வருமாறு:

கிராமப்புறங்களில் வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள், பதிவு செய்து கொண்டால் மட்டும் போதாது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அதனைப் புதுப்பித்துக் கொள்ளவும் வேண்டும். தவிர, சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்பவர்கள், உரிய பரிசீலனைக்குப்பின், “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்களாக” ( Accredited Loan Providers) வங்கிகளால் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் கிராமவாசிகளுக்கு கடன்வழங்குவதற்குத் தேவையான தொகையை வங்கியே நியாயமான வட்டியில் கடனாகக் கொடுக்கும். இதற்காக, ஒவ்வொரு “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரும்” ஒரு வங்கியுடன் இணைக்கப்படுவார்.

கிராமவாசிக்கு கடன் கொடுக்கும்போது, கொடுப்பவர் தனது சொந்தப் பொறுப்பில்தான் கடன் வழங்குவார். வங்கி அதற்கு பொறுப்பல்ல. அங்கிகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர் வங்கியிலிருந்து வாங்கிய கடனை, வங்கிக்கு திரும்பச் செலுத்த வேண்டியது அவரது பொறுப்பு.

கிராம வாசிகளுக்கு கடன் வழங்கும்போது அதிகபட்ச வட்டிவிகிதத்தை மாநில அரசு நிர்ணயித்து அறிவிக்கும். இந்த வட்டி விகிதம் குறித்த கால இடைவெளியில், மறு ஆய்வு செய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட கடன் விகிதத்துக்கு அதிகமாக வட்டி வசூல் செய்தால் தண்டனை விதிக்கப்படும்; அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். வங்கியும் இதைத் தொடர்ந்து கண்காணிக்கும்.

ஏற்கெனவே வட்டிக்கடை வைத்திருப்பவர்கள் விவசாயப் பண்டங்களில் வாணிபம் செய்பவர்கள் விவசாய கமிஷன் ஏஜென்டுகள், வாகன விற்பனையாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போன்ற – கிராமவாசிகளுக்கு நன்கு பரிச்சயமானவர்கள், “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்களாக” நியமிக்கத் தகுதி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். இவர்களையும், இப்பொறுப்புக்கு தகுதி உடைய பிறரையும் வங்கி உரியமுறையில் பரிசீலித்து, “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்”களாக நியமனம் செய்யும்.

வங்கியும் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரும், தத்தம் கடமைகள், உரிமைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். அவசியம் நேரும்போது அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு விதிமுறை அனுமதிக்கும் புகார்கள் மற்றும் குறைதீர்ப்பு நடைமுறை எளிமையாக இருக்கும்.

அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவருக்கு தரப்படும் வங்கிக் கடன், வங்கிகளைப் பொருத்தவரை, முன்னுரிமை ( Priority Sector) கடனாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அரசின் விதிமுறைகளின்படி, வங்கிக் கடனில் 40 சதவிகிதத் தொகையை விவசாயம், சிறுதொழில் உள்ளிட்ட முன்னுரிமைப் பிரிவினருக்குக் கடனாக வழங்க வேண்டும். அந்த வகையில், வங்கிகள் தங்கள் கடமையை எளிதாக நிறைவேற்ற ஒரு வழி கிடைத்துள்ளது எனலாம்.

இத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மாநிலங்கள் புதிய சட்டம் இயற்றவேண்டும். அதற்கான வரைவு மசோதா ஒன்றை ரிசர்வ் வங்கியின் குழு ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ளது.

குழுவின் பரிந்துரையை ரிசர்வ் வங்கியும் மத்திய, மாநில அரசுகளும் விரைந்து ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். முதன்முறையாக, நடைமுறைக்கு உகந்ததாக, எளிதானதாக மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் லாபம் தரும் வகையில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடன் வாங்குபவர் வங்கிக்குச் சென்று அலைக்கழிக்கப்படாமல், தனக்குப் பரிச்சயமான ஒரு நபரிடமிருந்து கடன் பெறலாம். காலதாமதத்துக்கு வழியில்லை. வட்டி விகிதமும் நியாயமானதாக இருக்கும்.

கடன் வழங்குபவருக்கு சொந்த முதலீடு தேவையில்லை. கடன் வழங்குவதற்கு, வங்கியிடமிருந்து தேவையான பணத்தைக் கடனாகப் பெறலாம். கடன் வாங்குபவர், வழங்குபவருக்குப் பரிச்சயமான கிராமவாசி; நேரடித் தொடர்புடையவர். எனவே கடனை வசூல் செய்வதில் சிரமம் இருக்காது; வாராக் கடனாக மாறாது.

வங்கியைப் பொருத்தவரை, எண்ணற்ற கிராமவாசிகளைத் தொடர்பு கொள்வதற்குப் பதில், தங்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபருக்கு கடன் வழங்கி, கடனைத் திரும்ப பெறுவதில் பிரச்னை இருக்காது. அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவருக்கு கொடுக்கப்படும் கடன்தொகை, முன்னுரிமைக் கடன் என்று கருதப்படும். கிராமவாசிகளுக்கு நேரிடையாக கடன் வழங்குகையில், உள்ளூர் அரசியல் புள்ளிகளின் தலையீடு இருக்கக்கூடும். புதிய திட்டத்தில் இது அறவே தவிர்க்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கு இத்திட்டம் நன்மைபயக்கவல்லது.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து எதிர்பார்த்தப்படி, கிராமவாசிகளுக்கும் வங்கிகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையும், நட்புறவும் மலரவில்லை என்பதே உண்மை. புதிய திட்டத்தின் மூலம் இவ்விரு தரப்புக்கும் இடையே ஒரு பாலமாக “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்கள்” திகழ்வார்கள் என்று எதிர்ப்பார்கலாம்.

தொழில்நுட்ப மேம்பாட்டின் பலனாக, படித்த, வசதிபடைத்த நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்குச் சேவைகள் வழங்கி, லாபம் ஈட்டினால் மட்டும் போதாது; ஏழை, எளிய மக்களையும் அரவணைத்துச் செல்லும் வகையில் வங்கிகள் செயல்படவேண்டும் என்பதே இன்றைய எதிர்பார்ப்பு. இதற்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)

Posted in Al, Aluminium, APR, Assets, Auto, Balance, Ballpoint, Banking, Banks, Biz, branch, Business, Calendar, Cellphone, Cheyyaar, Cheyyaaru, Cheyyar, Citi, City, Commerce, Compensation, Crackers, Diary, Dindugul, Dindukal, Dindukkal, Economics, Education, Educational, Employment, Ettayapuram, Exim, Expenses, Export, Exporters, Factory, Finance, Fireworks, Garments, GDP, Globalization, Growth, Gudiatham, Gudiyatham, Home, Housing, ICICI, Imports, Income, Industry, Installment, Instalment, Interest, ITC, Jobs, Kalugumalai, Kalukumalai, Kazhugumalai, Kazhukumalai, Kazugumalai, Koilpatti, Kovilpatti, Kudiatham, Kudiyatham, Loans, match, Matchbox, Matches, Metro, Mobile, Monetary, Motor, Nibs, Opportunity, Pen, Private, Profit, Purchase, Purchasing, Rajapalayam, Rates, RBI, Refill, Revenues, Reynolds, Rural, Sangarankoil, Sangarankovil, Sangarankoyil, Sankarankoil, Sankarankovil, Sankarankoyil, SBI, Sivakasi, Small Biz, Small scale, SSI, Tamil, Textiles, Thiruchendhur, Thiruchendoor, Thiruchendur, Thoothukudi, Thuthukudi, Tuticorin, VaiGo, VaiKo, Vasudevanalloor, Vasudevanallur, Villages, Wimco, Work, Writing | Leave a Comment »

Advertisements – Noise & Light Pollutions

Posted by Snapjudge மேல் ஜூலை 16, 2007

ஒலி, ஒளி, விளம்பரத் தொல்லை

க.ப. அறவாணன்

அயல் நாட்டிலிருந்து நம் நாட்டுக்கு வருவோருக்கும், அயல்நாடு சென்று திரும்புவோருக்கும் அதிர்ச்சியாகவும் அதிசயமாகவும் முதலில் கண்ணில்படுவதும், காதில் விழுவதும் நம் ஊர் வாகனங்கள் எழுப்பும் பேரிரைச்சல். நம் நாட்டில் சுமார் 5 கோடியே 89 லட்சம் வாகனங்கள் நாளும் சாலையில் ஓடுகின்றன. இவற்றுள் சுமார் 4 கோடியே 15 லட்சம் இருசக்கர வாகனங்களும் 76 லட்சம் கார்களும் 7 லட்சம் பஸ்களும் 30 லட்சம் லாரிகளும் இன்னபிற 61 லட்சம் வாகனங்களும் 33 லட்சம் கிலோமீட்டர் நீளமுள்ள நம் சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

நம் வண்டி ஓட்டுநர்கள் வண்டியை எடுத்தவுடன் தம் கையால் பற்றுவது ஒலிப்பான்களைத்தான், சிலர் வைத்த கையை எடுப்பதே இல்லை. சாலைகளில் செல்வோர் அனைவருக்கும் காது கிழிந்துவிடும் அளவிற்கு ஹாரன்களை விடாமல் ஒலித்துக் கொண்டிருப்பார்கள். ஒலி அளவு உலகச் சுகாதார சபை வரையறுத்துள்ள 45 டெசிபலாக க்க்ஷ இருத்தல் வேண்டும் என்ற அளவை நம் நகரங்கள் பலமடங்கு கடந்துவிட்டன. மோட்டார் வாகனங்களைக் கண்டுபிடித்து வடிவமைத்த நாடுகளில் லட்சக்கணக்கில் வாகனங்கள் ஓடினாலும், அவர்கள் ஹாரன்களை ஒலிப்பதே இல்லை. ஒலிப்பது அநாகரிகம் என்பது அவர்கள் கருத்து. வண்டியின் முன்புறமும், பின்புறமும் அமைந்துள்ள வலது, இடது புறச் சிக்னல் விளக்குகளைப் போட்டுவிட்டுத் திரும்புவதையும் முந்திச் செல்வதையும் முறைப்படச் செய்கின்றனர்.

வாகனங்கள் வழி ஒலிமாசை உண்டாக்குவதில் இந்தியா தலைமை இடம் வகிக்கிறது. மனிதர்களின் காதுகளைச் செவிபடச் செய்வதுடன் சாலைகளின் இருமருங்கிலும் உள்ள பறவைகளையும், விலங்குகளையும் தம் இருப்பிடத்தைவிட்டு வாகன இரைச்சல் விரட்டி விடுகிறது. செடிகொடிகள் இயல்பாகத் தழைப்பதைத் தடுக்கிறது. நகர்வன, ஊர்வன, பறப்பன, நடப்பன ஆகிய உயிரினங்களின் இதயத்தை ஒலிமாசு தொடர்ந்து பாதிக்கிறது. குறிப்பாக வாகனங்கள் வெளிப்படுத்தும் கார்பன் – மோனாக்ûஸடு வாழ்நாளைக் குறைத்து நாளடைவில் உயிரையே பறிக்கவல்லது.

ஒலியைப் பெருக்குவதில் வாகனங்களுடன் போட்டி போடுகின்றவை நம் அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுகள். அவர்கள் நடுவீதி மேடைகளின்மேல் முன் உரக்கக் கத்துவதை ஒலிப்பெருக்கிகள் நாலாபுறமும் உச்சஸ்தாயிலில் எடுத்துச் செல்லுகின்றன. நம்மூர்க் கோயில் திருவிழா, பூப்பு, திருமணம், வளைகாப்பு முதலான அனைத்துச் சடங்குகளிலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளைக் கட்டி, பாடல்களைப் போட்டு, பெருத்த தொல்லையை ஏற்படுத்துகிறார்கள். உறக்கம் போகிறது; அமைதியும் போகிறது. காவல்துறையின் அனுமதி என்பது பெயருக்குத்தான்.

நம் ஜனநாயகத் தேர்தல் முறையின் அண்மைப் பிரசவம் ஆட்டோக்களில் ஒலிபெருக்கிகளைக் கட்டித் தெருவெல்லாம் அலற விடுவது, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் இந்த முறையில்தான் ஜனநாயகத்தைக் காப்பாற்றின; காப்பாற்றுகின்றன. மக்கள் இந்தச் சப்தத்தைக் கேட்டா வோட்டு போடுகிறார்கள்? அவ்வளவு அறிவு குறைந்தவர்களா அவர்கள்? ஒருக்காலும் அல்லர்.

மிகச் சப்தமாகப் பேசுவதும், மேடையில் ஒலிபெருக்கிக்கு முன் முழங்குவதும், அதை மேலும் ஒலிபெருக்கி வைத்து நாலாபுறமும் அமைதியை அழிப்பதும், தேர்வுக்குப் படிக்கின்ற குழந்தைகளைப் பற்றியோ, நோயாளிகளைப் பற்றியோ, முதியவர் பற்றியோ எந்தவித அக்கறையும் இல்லாமல் ஒலிபெருக்கிகளை அலறவிடுவதும், சுதந்திர நாட்டில் நம் உரிமைகள் ஆகிவிட்டன.

அயல்நாட்டு ஐந்தாண்டு பணியின்போது ஆப்பிரிக்கக் கண்டத்து செனகால் நாட்டில் நானும், என் குடும்பத்தினரும் ஒரு வீட்டில் தங்கியிருந்தோம். நான், என் மனைவி, ஏழே வயதான என் மகன். புதிதாக வாங்கி வீட்டில் வைத்திருந்த வானொலியையும், தொலைக்காட்சியையும் நம் ஊரைப்போல மிக உரத்து வைப்பது மகனுடைய வழக்கம். இரண்டுநாள் பார்த்தபிறகு எங்கள் வீட்டுக்குப் பின்வீட்டில் இருந்த ஓர் ஆப்பிரிக்கப் பெண்மணி எங்கள் வீட்டிற்கு வந்தார். வாயில் மணியை அடித்துவிட்டு (என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்) என்று ஃபிரெஞ்ச் மொழியில் சொல்லி, வாயிலில் நின்றவர், “”உங்கள் வீட்டில் வானொலியும், தொலைக்காட்சியும் மிக உச்சஸ்தாயில் அலறுகின்றன. அவற்றை ஒலிகுறைத்து வீட்டில் உள்ளவர் மட்டுமே கேட்கும்படியாக வைத்து ரசிக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு விடைபெற்றுவிட்டார்.

ஆப்பிரிக்க, தென்அமெரிக்கக் கண்டங்களில் உள்ள வளரும், வளரா நாடுகளில் கூடத் தேர்தலின் போது இத்தனைக் கூச்சல் இல்லை. தெரு முழக்கம் இல்லை, தெருக்கூட்டம் இல்லை. ஐரோப்பிய, அமெரிக்க ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஜனநாயக நாடுகளில் ஆர்ப்பாட்டம் எதுவுமின்றித் தேர்தல்கள் நடக்கின்றன. நம் நாட்டில் மட்டும் இந்த அளவு சப்தம் ஏன்? ஆர்ப்பாட்டம் ஏன்? இது மட்டுமா? தீபாவளிக்கு மட்டும் வெடிக்க வேண்டிய பட்டாசுகளை அரசியல்வாதிகளின் பிறந்தநாள்களின்போதும், தேர்தல் வெற்றிகளின்போதும், வெடித்துச் சப்தம் எழுப்புகிறார்கள். இச் சப்தம் மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருமா எரிச்சலை ஊட்டுமா என்பது பற்றிச் சிந்திப்பதே இல்லை.

மிகுந்த சப்தத்தைக் கேட்பதிலும், பொறுத்துப் போவதிலும் ஆர்வமும் இயல்பும் இருத்தலைப் போலக் கண் கூசும் வெளிச்சத்திலும் நமக்கு இயல்புக்கு மீறிய மோகம் இருக்கிறது. சாலைகளிலும் சந்திப்புகளிலும் அரசியல் கூட்டங்களிலும் கண்ணைக் கூசச் செய்யும் விளக்குகளைப் பொருத்துவது நம் பழக்கம். கோயில் திருவிழாக்களிலும் அப்படியே. மின்சாரப் பற்றாக்குறை உள்ள நாட்டில் வெற்று ஆர்ப்பாட்டங்களுக்காக, மின்சக்தியை வீணாக்குவது என்ன நியாயம், என்ன சமூக நீதி?

நம் நகர்ப்புறச் சுவர்களுக்கு உயிர் மட்டும் இருக்குமானால் தலையில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழும். அவ்வளவு சுவரொட்டிகள். சுவரொட்டிகளுக்கு மேல் சுவரொட்டிகள். அதுமட்டும்தானா? ஒரு கட்சிப்பிரமுகர் வருகிறார் என்றால் அவர் உருவம் பொறித்த பல கட்அவுட்களும் பல அடி உயரத்தில் வழிநெடுக நிறுத்தப்படுகின்றன. சாலைகளின் இருமருங்கும் தோண்டிக் குழிபறித்து வளைவுகள் அமைக்கப் பெறுகின்றன. இவற்றால் சமூக ஆரோக்கியத்தைக் குலைக்கும், தனிமனித வழிபாடு ஒருவேளை வரலாம். ஆனால் அவ்வழிபாடும் வளருகிற வேகத்தில் மறந்துவிடும். இவற்றால் ஈர்க்கப்பட்டு மக்கள் வோட்டுப் போட்டு விடுவார்களா என்ன? தமக்கோ தொகுதிக்கோ என்னென்ன செய்தார் என்று சீர்தூக்கிப் பார்க்கும் பகுத்தறிவு நம் மக்களிடம் இல்லையா என்ன? விளம்பரம் செய்யத் தொலைக்காட்சிகள் வந்துவிட்டன. வானொலிகள் வந்துவிட்டன. இவற்றைப் பொதுமக்கள் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள். இவற்றை மட்டுமே பயன்படுத்திப் பிரசாரங்களை அரசியல்கட்சிகள் அமைத்துக் கொள்ள வேண்டும். பாதிக்குப்பாதி படிக்காத மக்கள் உடைய நாட்டில் ஆடம்பர வாசகங்களை உடைய சுவரொட்டிகளை ஒட்டுவதால் காசும், காலமும் சுவர்களும்தான் வீணாகின்றன.

காதைப் பிளக்கும் சப்தமும், கண்ணைப் பறிக்கும் வெளிச்சமும், கருத்தைக் குழப்பும் விளம்பரமும், நாம் இன்னும் உரிய பக்குவத்தை அடையவில்லை என்றே காட்டுகின்றன. இவற்றை முற்றுமாக வெறுக்கும் படித்த இளைஞர்கள், பெரியவர்கள், நடுத்தரமக்கள் அறுபது சதவீதத்துக்கு மேலாக இருக்கிறார்கள். மிதமிஞ்சிய சப்தமும், வெளிச்சமும், விளம்பரமும் உரியவர்களைக் கணிசமான மக்களிடமிருந்து அந்நியப்படுத்துகின்றன; அந்நியப்படுத்தும் என்பதே உண்மை!

(கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.)

Posted in Ad, Ads, Advertisement, Banner, Cinema, Disturbance, Elections, Electronic, Environment, Hoardings, Impact, Light, Motor, Nature, Noise, Party, Politics, Polls, Pollution, Sound, Vehicles, Vision | Leave a Comment »

North vs South India – Regional development: Growth Indices & Indicators

Posted by Snapjudge மேல் ஜூலை 6, 2007

பலே தென்னிந்தியா!

“”வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்றது அந்தக் காலம். “”வடக்கு வாடுகிறது, தெற்கு ஓடுகிறது” என்பதே இந்தக் காலம்.

இந்தியத் தொழிலகங்களின் இணையம் (சி.ஐ.ஐ.) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் காணப்படும் பொருளாதார, சமூக அளவீடுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்கள் கல்வி, வருமானம், நபர்வாரி மின்சாரப் பயன்பாடு ஆகியவற்றில் தேசிய சராசரியைவிட அதிகமாக இருப்பது புலனாகிறது. அத்துடன் வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்பவர்களின் எண்ணிக்கையும் இந்த மாநிலங்களில், வட இந்திய மாநிலங்களைவிடக் குறைவாக இருக்கிறது.

கல்வி, சுகாதாரம், தொழில், விவசாயம் ஆகியவற்றில் பாரம்பரியமாகவே தென் மாநிலங்கள் உயர்ந்த இடத்தில் இருந்து வருகின்றன. அதிலும் அரசு நிர்வாகம் என்பது தென் மாநிலங்களில் வட இந்திய மாநிலங்களைவிடச் சிறப்பாகவே இருக்கின்றன.

தகவல் தொழில்நுட்பத் தொழில்களில் அடுத்த தலைமுறைத் தொழில்களை ஊக்குவிக்கவும், சென்னை தவிர மதுரை, கோவை, திருச்சி, நெல்லை போன்ற இரண்டாவது நிலை நகரங்களுக்கு அவற்றைக் கொண்டு செல்லவும் தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

வேளாண் தொழிலிலும் வேளாண்மை சார்ந்த தொழில்களிலும் முதலீட்டை ஊக்குவிக்க ஆந்திரம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கர்நாடகமும் கேரளமும் தங்கள் மாநிலங்களில் ஏற்கெனவே உள்ள தொழில்களை வலுப்படுத்துவதுடன் சுகாதாரம் சார்ந்த சுற்றுலாவை வலுப்படுத்த நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. புதுச்சேரியும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், சிறு தொழில்களை வளப்படுத்தவும் முதலீடுகளுக்கு ஊக்குவிப்பை அளிக்கிறது.

மோட்டார்வாகனத் தொழிற்சாலைகள், கணினிசார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், உணவுப் பதப்படுத்தல்-தின்பண்ட தயாரிப்பு ஆலைகள், மருந்து-மாத்திரை தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றைத் தங்கள் மாநிலங்களுக்கு ஈர்த்துவிட வேண்டும் என்ற ஆரோக்கியமான போட்டி தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகியவற்றிடையே தீவிரம் அடைந்திருக்கிறது.

இதையொட்டியே விமான நிலைய விரிவாக்கம், துறைமுக மேம்பாடு, மேம்பாலங்கள், நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகள், புதிய மின்னுற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றைத் தங்கள் மாநிலங்களுக்கென்று பெற இவை போட்டிபோடுகின்றன.

மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம், பஞ்சாப்-ஹரியாணா-புதுதில்லி ஆகிய பாரம்பரியமான வளர்ச்சிப் பிரதேசங்களும் தொழில் முதலீட்டுக்கான பந்தயத்தில் பின்தங்க விரும்பாமல் அந்நிய நேரடி முதலீட்டையும் உள்நாட்டு முதலீடுகளையும் சலுகைகளையும், வரிவிலக்குகளையும் அளித்து ஈர்த்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியத் தொழிலகங்களின் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) அதன் தென்னிந்தியக் கிளை மூலம், தென்னிந்தியாவிலேயே இதுவரை தொழில் வளர்ச்சியில் அதிகம் வளர்ச்சி காணாத பகுதிகளுக்கு முக்கியத்துவம் தர தனித்திட்டம் வகுத்து வருகிறது.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள், வடக்கு கேரளம், ஆந்திரத்தின் அனந்தப்பூர்-சித்தூர்-கடப்பை மண்டலம், கர்நாடகத்தின் வடக்குப் பகுதி ஆகியவற்றுக்கு ஏற்ற தொழில்பிரிவுகளையும் முதலீட்டு வசதிகளையும் அடையாளம் காணும் பணியைத் தென் மண்டல இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு தொடங்கியிருக்கிறது. இதற்கு மாநில அரசுகள் மட்டும் அல்லாமல், சம்பந்தப்பட்ட பகுதியின் தொழில்-வர்த்தக சபைகளும், தன்னார்வக் குழுக்களும் உதவிக்கரம் நீட்டினால் தொழில்வளம் என்பது சமச்சீராகப் பரவி வளத்தை ஏற்படுத்தும்.

எப்போதும் இல்லாத வகையில் தென் மாநிலங்களுக்கு அரசியல் ரீதியாகவும் இப்போது அதிக முக்கியத்துவம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டால் வரலாறு நம்மை வாழ்த்தும்.

Posted in Agriculture, Auto, Commerce, Compensation, Consumer, Customer, Development, Economy, Econpmy, Education, Employment, family, Finance, GDP, Globalization, Govt, Growth, Income, Index, Indicators, Industry, Infrtastructure, Jobs, Malls, Motor, North, Power, Ranks, Region, Roads, South, States, Statistics, Statz, Tour, Tourism, Tourist, Transport, Zones | Leave a Comment »

APJ Abdul Kalam – Power Grids & Oil Imports: Dependence on Foreign Resources

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

கலாம் சொன்னது கவனிக்கத்தக்கது!

குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெறும் தருணத்தில், நமது மின்சாரத் தேவை குறித்தும், பெட்ரோல்- டீசல் இறக்குமதி குறித்தும் உரிய வகையில் எச்சரித்திருக்கிறார் அப்துல் கலாம். நம் நாட்டின் செல்வ வளத்தையே வற்ற வைக்கக்கூடிய அளவுக்குச் சென்று கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் நுகர்வைக் குறைப்பதும், மாற்று எரிசக்தியைக் கண்டறிந்து பயன்படுத்துவதும் மிகமிக அவசியம் மட்டும் அல்ல, அவசரமும் கூட என்று உணர்த்தியிருக்கிறார்.

பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதிக்காக மட்டும் நாம் இப்போது ஆண்டுதோறும் 2 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாயைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறோம். நம் நாட்டின் மொத்த பெட்ரோலியத் தேவையில் 75 சதவீத அளவுக்கு இறக்குமதி செய்கிறோம்.

25 சதவீத அளவுக்கு மட்டுமே உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டு சமாளிக்கிறோம். நியாயமாகப் பார்த்தால், இந்தக் கவலை மத்திய திட்டக் கமிஷனுக்குத்தான் முதலில் ஏற்பட்டிருக்க வேண்டும். “”கார்கள், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற இரு சக்கர வாகனங்களும் அவ்வளவு அத்தியாவசியமானவை அல்ல; அவை நுகர்வுப் பொருள்கள்தான். அவற்றின் உற்பத்திக்கும் விற்பனைக்கும் இந்த அளவுக்கு அனுமதி தரக்கூடாது; அவற்றை ஓட்டுவதற்குத் தேவைப்படும் பெட்ரோல் நம் நாட்டில் கிடைக்கும் பொருள் அல்ல” என்று திட்டக்கமிஷன்தான் மத்திய அரசுக்கு எடுத்துரைத்திருக்க வேண்டும்.

இந்தியாவில் குறைந்த சம்பளத்துக்கு ஊழியர்களும் தொழிலாளர்களும் கிடைக்கிறார்கள் என்பதால் பன்னாட்டு மோட்டார் கார் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை நிறுவி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. நம் நாட்டவருக்கு வேலை கிடைக்கிறது, நமக்கு விளம்பரம் கிடைக்கிறது என்ற மகிழ்ச்சியில் மத்திய, மாநில அரசுகள் இந்த ஆலைகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கின்றன.

இவை ஒருபுறம் உண்மைதான் என்றாலும், பெருவாரியான மத்தியதரக் குடும்பங்களை இந்த மோட்டார் வாகன மோகம் கடனாளியாக்கி இருக்கிறது என்பதும், தேவையில்லாமல் நமது பெட்ரோலியத் தேவையை அதிகரித்திருக்கிறது என்பதும் கவனிக்கப்படாத விஷயம். நம் நாட்டின் ஏழ்மையைப் போக்கவோ, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவோ இவை எந்த விதத்திலும் உதவியாக இருக்கப்போவதில்லை என்பதுதான் உண்மை.

அரசு தரும் உபசாரங்கள் போதாது என்று வங்கித் துறையும் கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் வாங்க குறைந்த வட்டியில் உடனடியாகக் கடன் தருகிறது. வீடு கட்டத் தந்த கடனுக்குக்கூட வட்டி வீதத்தை உயர்த்திவிட்டனர். வாகனங்களுக்கான கடனுக்கு வட்டியை ஏற்றத் தயங்குகின்றனர்.

இதே போன்ற போட்டி மனோபாவம் விவசாயத்துக்குக் கடன் தருவதில் இருக்கிறதா என்றால் இல்லை. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் எண்ணிக்கை பல மடங்காக (தேவையில்லாமல்தான்) உயர்ந்து வருகிறது. அதிலும் தமிழ்நாடுதான் மிகவும் முன்னணியில் இருக்கிறது.

“”99 ரூபாய் கொடுத்து ஸ்கூட்டரை எடுத்துச் செல்லுங்கள்” என்கிறது ஒரு விளம்பரம். தமிழ்நாட்டில் 31.3.2006 கணக்கெடுப்பின்படி மொத்தம் 82 லட்சத்து 21 ஆயிரத்து 730 வாகனங்கள் உள்ளன. அவற்றில் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், மொபெட்டுகள் போன்ற இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 6 லட்சத்து 75 ஆயிரத்து 328. அதாவது மொத்த வாகனங்களில் இவை 82.10 சதவீதம்.

பஸ் போன்ற பொது பயன்பாட்டுக்கான வாகனங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்து 102. இது மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 2.98 சதவீதம் மட்டுமே.

தமிழக அரசு பஸ் போக்குவரத்தில் “”ஏக-போக” முதலாளியாக இருக்கிறது. குறைந்த கட்டணத்தில் சிறப்பான சேவையை அளிப்பதா அல்லது நஷ்டம் வராமல் பார்த்துக்கொள்வதா என்பதில் மிகப்பெரிய சந்தேகம் அதற்கு ஏற்பட்டிருக்கிறது. போதிய எண்ணிக்கையில் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தாமல் மக்களை வாட்டுவதாலேயே இன்று பட்டிதொட்டியெங்கும் சைக்கிளைப் போலவே “”டூ-வீலர்கள்” பெருகியுள்ளன.

கலாம் சுட்டிக்காட்டிய மற்றொரு விஷயம் மாற்று எரிசக்தியைப் பயன்படுத்துவது பற்றியது. மின்சார உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்றிருந்தாலும் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதை எல்லா வீடுகளிலும் இயக்கமாகவே ஏற்று நடத்த அரசு புதிய திட்டத்தை வகுக்க வேண்டும்.

“”சிறுதுளி பெருவெள்ளம்” என்பதைப்போல எல்லா வீடுகளிலும் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் சாதனங்களை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்தால் கணிசமான அளவுக்கு மின்சாரத்தைச் சேமிக்க முடியும். மழை நீர் சேமிப்பில் முன்மாதிரியாக இருந்ததைப்போல இதிலும் தமிழகம் நாட்டுக்கே வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

Posted in Agriculture, Alternate, Analysis, APJ, Auto, Banks, Biz, Bus, Business, Consumer, Customer, Diesel, Economy, Electricity, energy, Expensive, Exports, Finance, Financing, Gas, Imports, Info, Kalam, Loans, Motor, oil, Petrol, Power, Prices, Resources, Rich, Scooters, solutions, Statz | Leave a Comment »

Mahindra and Mahindra plans to shift its manufacturing plant from AP to TN

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007

ஆந்திரத்தில் தொடங்கவிருந்த மோட்டார் ஆலையை தமிழ்நாட்டுக்கு மாற்றுகிறது மஹீந்திரா நிறுவனம்

சங்கா ரெட்டி, ஏப். 27: ஆந்திரத்தின் மேடக் மாவட்டத்தில் சஹீராபாதில் அமைக்கவிருந்த மோட்டார் வாகன தயாரிப்பு ஆலையை, தமிழ்நாட்டின் ஸ்ரீ பெரும்புதூருக்கு மாற்ற மஹீந்திரா மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனம் தீர்மானித்திருக்கிறது.

இந்த ஆலையை ஆந்திரத்திலேயே தொடங்குமாறு ஆலை நிர்வாகத்திடம் மன்றாடி கேட்டுக் கொள்வது என்ற முடிவை ஆந்திர தொழில்துறை அமைச்சகம் எடுத்திருக்கிறது.

2004-ல் ஆந்திரத்தில் காங்கிரஸ் அரசு ஏற்பட்டவுடன், மஹீந்திரா ஆலை நிறுவனம் கனரக, நடுத்தர ரக எடையுள்ள மோட்டார் வாகனங்களைத் தயாரிக்க விருப்பம் தெரிவித்தது. அதற்காக சில அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று ஆந்திர அரசிடம் கேட்டுக்கொண்டது.

ஆந்திர அரசும் அதனுடன் பேசி, அது கேட்ட எல்லா வசதிகளையும் செய்து தருவதாக வாக்களித்தது. ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் முக்கிய வசதிகளை அதனால் செய்து தர முடியாமல் இருப்பதால் ஸ்ரீ பெரும்புதூருக்கு அருகிலேயே ஆலையைத் தொடங்க முடிவு செய்திருக்கிறது.

கேட்ட வசதிகள் என்ன?

1. ஒரு நாளைக்கு 40 லட்சம் லிட்டர் வீதம் 5 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக இலவசமாக தண்ணீர்,

2. விற்பனை வரிச் சலுகைகள்,

3. ஒரு யூனிட் 2 ரூபாய் என்ற விலையில் தரமான, தடையற்ற மின்சார சப்ளை,

4. 4 வழிச்சாலை,

5. சஹீராபாதுக்கும் ஹைதராபாதுக்கும் இடையில் உயர் வேக புறநகர் மின்சார ரயில் வசதி,

6. இப்போது அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துதல்,

7. தொழிலாளர்கள், அதிகாரிகளின் குழந்தைகள் படிக்க தரமான பள்ளிக்கூடங்களை நிறுவுதல் ஆகியவை அந் நிறுவனம் முன்வைத்த கோரிக்கைகளாகும்.

ஆந்திர அரசுடன் கையெழுத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம்கூட தயாராகிவிட்டது. ஆனால் ஆந்திர அரசு ஒப்புக்கொண்டபடி வசதிகளைச் செய்துதருவதில் தாமதமும் அதனால் சிக்கலும் ஏற்பட்டது. கோதாவரியிலிருந்து தண்ணீர் பெற்றுத்தருவதாக அரசு கூறியிருந்தது. அதற்கு வாய்ப்பு சுருங்கிவிட்டதால் பிரச்சினை தோன்றியது. எனவே மஹீந்திரா நிறுவனத்தின் கூட்டு நிறுவனம் நெருக்குதலைத் தந்து, இந்த உடன்பாடு வேண்டாம் என்று கூறிவிட்டது. எனவே தமிழ்நாட்டில் ஆலையை நிறுவும் முடிவு எடுக்கப்பட்டது.

Posted in Andhra, AP, Auto, Exports, Factory, Hyderabad, Incentives, Industry, infrastructure, Jeep, M&M, Mahindra, Mahindra and Mahindra, Manufacturing, Medak, Motor, Sriperumpudhoor, Sriperumpudhur, Sriperumpudoor, Sriperumpudur, State, TN, Zaheerabad | Leave a Comment »

Wal-mart entry into Retail business in India – Impact & Globalization

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2007

வாடப் போகும் வாழ்க்கை ஆதாரம்

மா.பா. குருசாமி

நமது நாட்டில் உலகமயமாக்கலின் விளைவாக மிகப்பெரிய நிறுவனங்கள் தொழில், வாணிபத்தில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு மாற்றங்களைச் செய்து கொண்டிருக்கின்றன.

உற்பத்தியிலும், விற்பனையிலும் சிறிய அளவில் நடைபெறும் தொழில்களை ஓரங்கட்டிவிட்டு, கோடிக்கால பூதங்களாக பெரிய நிறுவனங்கள் கோலோச்சப் போகின்றன. இவற்றால் ஒவ்வொரு துறையிலும் வாழ்க்கை ஆதாரத்தை இழந்து லட்சக்கணக்கான மக்கள் தவிக்கப் போகின்றனர். இதற்கோர் எடுத்துக்காட்டு சில்லறை வாணிபம்.

வேளாண்மையில் இன்றும் கோடிக்கணக்கான மக்கள் சின்னஞ்சிறு அளவில் இரண்டு ஏக்கர், மூன்று ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்கின்றனர். இவர்கள் சாகுபடி செய்யும் உணவு தானியங்களும், காய்கறிகளும், தொழிலுக்கு வேண்டிய மூலப் பொருள்களும் நாடு முழுவதும் இருக்கின்ற நுகர்வோருக்கும் தொழிற்சாலைகளுக்கும் செல்கின்றன.

இதேபோல பெரிய, சிறிய தொழிற்கூடங்களில் உற்பத்தியாகின்ற எண்ணற்ற ஏராளமான பொருள்கள் கோடிக்கணக்கான நுகர்வோர்களுக்குச் செல்கின்றன. இவை எப்படிப் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன என்பதை எண்ணிப் பார்த்தால் வியப்பாக இருக்கும். இவை மொத்த வியாபாரிகளிடம் கைமாறி, இடைப்பட்ட வணிகர்களிடம் சென்று, இறுதியில் சில்லறை வியாபாரிகள் கைகளுக்கு வருகின்றன. அவர்களிடமிருந்து நுகர்வோருக்குப் போகின்றன.

சில்லறை வியாபாரிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முதல் வகையினர் லட்சக்கணக்கில் முதலீடு செய்து பெரிய கடைகளாக அமைத்து, எல்லா வகைப் பொருள்களும் ஓரிடத்தில் கிடைக்கின்ற வகையில் இருப்பு வைத்து விற்பனை செய்பவர்கள். பெரும்பாலும் இப்படிப்பட்ட கடைகள் நகரங்களில் இருக்கும். இவர்களிடம் நுகர்வோர் மட்டுமன்றி சிறிய வியாபாரிகளும் பொருள்களை வாங்குவார்கள்.

இரண்டாம் வகையினர் ஆயிரக்கணக்கில் முதலீடு செய்து சிறுகடைகளாக, பெட்டிக்கடைகளாக அமைத்துக் கொண்டு வாணிபம் செய்பவர்கள்.

மூன்றாம் பிரிவினர் நூற்றுக்கணக்கில் முதலீடு செய்து கூடைகளில், பெட்டிகளில், தள்ளுவண்டிகளில் பொருள்களை வைத்து தெருத்தெருவாக பொருள்களை விற்றுப் பிழைப்பவர்கள்.

மொத்தத்தில் நாடு முழுவதும் கணக்கெடுத்தால் பல லட்சம் பேர் சில்லறை வாணிபத்தில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பதை அறியலாம். இவர்களுக்கு வாணிபம் வாழ்க்கை முறை. விற்றால் சாப்பாடு; இல்லையேல் பட்டினி.

அளவும் விளைவும்: நமது நாட்டில் சில்லறை வாணிபத்தின் அளவு எவ்வளவு இருக்கும்? கருத்தியல் அடிப்படையில் நுகர்பொருள் உற்பத்திக்குச் சமமாக சில்லறை விற்பனை இருக்குமென்று கூறலாம்.

நமது நாட்டில் மிகுதியாக மக்கள் தொகை இருப்பதால் உலகில் நமது நாடு பெரிய சந்தையாகக் கருதப் பெறுகின்றது. இதனால்தான் வளர்ச்சி பெற்ற நாடுகளும், மிகுதியாக ஏதாவது ஒன்று அல்லது சில பொருள்களை உற்பத்தி செய்யும் நாடுகளும் அவர்களது எச்சப் பொருள்களை நமது நாட்டில் வந்து கொட்டத் தயாராக இருக்கின்றன.

நமது மக்களிடம் வளர்ந்து வருகின்ற நுகர்வுக் கலாசாரம் கையில் பணமிருந்தால், கடன் கொடுக்க ஆளிருந்தால் எதனையும் வாங்கலாம் என்ற மனப்பான்மையை வளர்த்திருக்கிறது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு “செல்போன்’.

இந்த அங்காடி முறை வளர்ச்சியையும், சில்லறை வாணிபத்தில் வெளியில் தெரியாமல் இலைமறை காயாக இருக்கும் வளத்தையும் வாய்ப்பையும் புரிந்து கொண்டதால் மிகப் பெரிய நிறுவனங்கள் சில்லறை வாணிபத்தில் முதலீடு செய்ய வரிந்து கட்டிக் கொண்டு முன்வருகின்றன.

வரப்போகும் ஆபத்து: நமது நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பெரு நகரங்களில் பேரங்காடிகளை அமைத்து வருகின்றனர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் சில்லறை வாணிபம் பேரங்காடிகள் மூலம் நடைபெறுகிறது. ஓர் அங்காடிக்குள் நுழைந்தால் வேண்டிய எல்லாப் பொருள்களையும் அங்கு வாங்கலாம். அங்குள்ள மக்களுக்கு அது ஏற்ற முறையாக இருக்கிறது. நமது நகர மக்களுக்கு பேரங்காடிப் பழக்கம் வந்து கொண்டிருக்கிறது.

தென் மாநிலங்களில் ஸ்பென்சர்ஸ் டெய்லி, நீல்கிரிஸ், சுபிக்ஷா, திரிநேத்ரா ஆகிய பெரிய நிறுவனங்கள் நகரங்களில் பேரங்காடிகளை அமைத்து ஓரளவு வெற்றிகரமாகச் சில்லறை வாணிபத்தில் ஈடுபட்டு வருகின்றன. வடக்கு, மத்திய மாநிலங்களில் பண்டாலூன் ரீடெய்ல் என்ற நிறுவனம் 60 உணவுப் பொருள் பேரங்காடிகளை அமைத்திருக்கிறது.

இவற்றையெல்லாம் பார்த்த ரிலையன்ஸ் நிறுவனம் நாம் கற்பனை செய்ய முடியாத அளவில் மிகப் பெரிய திட்டத்தோடு சில்லறை வாணிபத்தில் நுழைந்திருக்கிறது. 2006 நவம்பர் மத்தியில் ஹைதராபாதில் ஒரே நாளில் அதிரடியாக 11 “ரிலையன்ஸ் பிரஷ் அவுட்லெட்ஸ்’ என்னும் மிகப்பெரும் விற்பனை நிலையங்களை அமைத்ததன் மூலம் நாட்டையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

ரிலையன்சின் திட்டம் மிகப் பெரியது. 2010 – 11இல் இந்தியாவில் சில்லறை வாணிபத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாயோடு முதலிடத்தில் இருக்க வேண்டுமென்பது நோக்கம். அதன் தொடக்கம் 22 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு.

ரிலையன்சோடு போட்டி போட்டுக் கொண்டு இன்னும் சில பெரிய நிறுவனங்கள் சில்லறை வாணிபத்தில் பங்கு பெற பெரும் முதலீட்டோடு அங்காடி ஆடுகளத்தில் நுழையப் போகின்றன.

ஆதித்யா பிர்லா குழுமம் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப் போகிறதாம். பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கோப்பர்ஸ் என்ற நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சில்லறை வாணிபத்தில் பெரிய நிறுவனங்கள் 412 பில்லியன் டாலர் முதலீடு செய்யுமென்று மதிப்பிடுகிறது.

இந்த பெரும் பூதங்களான நிறுவனங்கள் ஆயிரங் கோடிகள் என்ற கணக்கில் முதலீடு செய்கின்றபோது சிறிய, பெரிய நகரங்களில் எல்லாம் இவற்றின் கிளை அங்காடிகள் இருக்கும். குறைந்த விலையில் விற்பனை செய்வதாகக் கூறுவார்கள். பொருள்களை மொத்தமாகக் கொள்முதல் செய்வதால் அவர்களால் குறைந்த விலைக்கு வாங்க முடியும். சிறிய உற்பத்தியாளர்கள், விவசாயிகள் அவர்களிடம் விற்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவார்கள். வாங்கும் விலையை அவர்கள்தான் நிர்ணயிப்பார்கள். அவர்களோடு சாதாரண வியாபாரிகளால் போட்டி போட முடியாது.

மேலும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை விலையில் 10 அல்லது 15 சதவீதம் தள்ளுபடி தருவார்கள். இது போதாதா நமது மக்களைக் கவர்வதற்கு? நடுத்தர, மேல்மட்ட மக்கள் இத்தகைய முறையால் பல நன்மைகள் கிடைப்பதாக நம்புவார்கள். இதனால் சங்கிலித் தொடராக இருக்கும் பேரங்காடிகள் கொடி கட்டிப் பறக்கும்; சில்லறை வணிகர்கள் செல்லாக் காசுகளாவார்கள்.

இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் நகரங்களோடு நின்றுவிடாது. இவர்கள் முகவர்கள் மூலமாகவோ புதிய விற்பனை முறைகளின் மூலமாகவோ கிராமங்களிலும் ஊடுருவுவார்கள். கைக்கு எட்டிய தூரம்வரை இவர்களது சில்லறை வாணிபம் பரந்து விரியும்.

பொருளாதாரத்தின் ஏகபோக நடவடிக்கைகள் செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்களாக்கும்; ஏழைகளை மேலும் ஏழைகளாக்கும். சிந்திக்கக்கூடிய நடுத்தர மக்கள் கிடைக்கும் சில்லறை நலன்களுக்காக நாட்டு நலனை அடகு வைக்க நினைக்கக் கூடாது.

குவிதல் முறைக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும். காட்டு வெள்ளப் போக்காக வரும் பெரும் முதலீட்டால் சில்லறை வணிகர்களை அழியாமல் காப்பது அரசின் கடமை. வருகிற ஆபத்தை சில்லறை வணிகர்களும் சிறு உற்பத்தியாளர்களும் உணர வேண்டும்; அறிய வேண்டும்; இணைய வேண்டும்; போராட வேண்டும்.

நமது நாட்டில் கடைநிலை மக்களைக் காக்காமல், கவனிக்காமல் வளத்தையும் வளர்ச்சியையும் காண இயலாது.

(கட்டுரையாளர்: இயக்குநர், குமரப்பா ஆராய்ச்சி நிறுவனம், தாயன்பகம், திண்டுக்கல்).

==================================================
ஒரு விவசாயியின் எதிர்காலம்?

ச. குப்பன்

எனக்குத் தெரிந்த நண்பர் ஒரு சிறு விவசாயி.

அவருக்கு ஏரிப் பாசனத்தில் நிலமிருந்தது. ஏரிக்கு நீர் வரும் வழிகளில் கல்குவாரிக்காக பள்ளம் தோண்டி கற்களை வெட்டியெடுத்ததால் ஏரியானது முழுவதுமாக நிரம்பி பல ஆண்டுகளாகிவிட்டன. அதனால் விவசாயம் செய்வதற்குச் சிரமமான நிலையில் இருந்தபோது நிலவள வங்கியொன்று புதிய குழாய் கிணறு அமைப்பதற்கு அவருக்கு கடன் கொடுத்தது. டீசல் விற்கும் விலையில் நீர் இறைக்க டீசல் எஞ்சினைப் பயன்படுத்தி விவசாயம் செய்தால் கையும்காலும்கூட மிஞ்சாது என்பதால் குழாய் கிணற்றிலிருந்து நீர் இறைக்க மின் மோட்டார் அமைத்தால் நல்லது என எண்ணினார்.

மின்வாரியமானது தொழில்துறைகளுக்கெல்லாம் கேட்டவுடன் மின் இணைப்பு கொடுத்துவிடும். ஆனால் ஒரு விவசாயி விண்ணப்பிக்கும்போது மட்டும் வரிசை முன்னுரிமைப்படி தோராயமாக பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் மின் இணைப்பு கொடுப்பதற்கு உத்தரவிடுவார்கள். இதற்கு மாற்று வழியாக மின்வாரியத்தில் ரூ. 25 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தினால் உடனடியாக இணைப்பு கிடைக்கும் என்பதால் மின்மோட்டார், இதர உபகரணங்கள் மற்றும் மின்வாரிய வைப்புத்தொகையையும் சேர்த்து நிலவள வங்கியில் நீண்டகாலக் கடனாகப் பெற்று குழாய் கிணறு தோண்டி மின் மோட்டாரும் அமைத்தார்.

அந்த ஆண்டு சிறிதளவு கூடுதலாக மழை பொழிந்தால் நன்செய் பயிர் செய்யலாமே என நெற்பயிரை நட்டு பராமரித்து வந்தார். இதற்கான நடைமுறை மூலதனமாக கைமாற்று வாங்கி சரி செய்தார். நெல் அறுவடையாகி களத்து மேட்டிற்கு வரும்போது கைமாற்றாக வாங்கிய கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்தும்படி நெருக்கியதால் விளைந்து வந்த நெல்லை வேறுவழியின்றி மிகக் குறைந்த விலைக்கு விற்று கடனைத் தீர்த்தார்.

சரி நிலவள வங்கி மற்றும் இதுபோன்ற கடன் தொல்லையைத் தீர்ப்பதற்கு பணப்பயிரான கரும்பைப் பயிரிட விரும்பினார். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே கரும்புப் பயிரைப் பதிவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது.

எனவே தனியார் சர்க்கரை ஆலைகள் நல்ல விலை கொடுக்கின்றனரே என்று பதிவில்லாமல் பயிரிடலாமே என மனைவியின் காதில் மூக்கில் இருந்த நகைகளை அடமானம் வைத்துப் பயிரிட்டார். அந்த ஆண்டு கரும்பு விளைச்சல் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருந்ததாலும் சர்க்கரை ஆலையில் பதிவு செய்யாது கரும்பைப் பயிரிட்டதாலும் “அடிமாட்டு விலைக்கு’ விற்றார்.

கரும்பும் பழி வாங்கிவிட்டது என கலங்கி கரும்பின் வேர்கட்டையை பறித்துப்போட்டுவிட்டு, நிலத்தை உழுது, எள்ளைத்தான் விதைத்துப் பார்ப்போமே என முடிவெடுத்தார்.

அறுவடையின்போது இதுவும் (எள்ளும்) சரியான விலையில் விற்பனை ஆகாததால் வேறு கூடுதல் பணியாக ஆடு வளர்க்கலாம் என்று நிலவள வங்கியிலிருந்து மேலும் கடன் பெற்று ஆடுகள் வாங்கி வளர்த்தார். அந்த ஆடு முழுவதும் நோய் வந்து இறந்து போனதால் இழப்பை ஈடுகட்டுவதற்காக காப்பீட்டு நிறுவனத்தை அணுகியபோது பிரிமீயத் தொகை வாங்குவதற்கு மட்டும் குழைய குழையத் தேடி வந்தவர்கள் இழப்பீடு கேட்கும்போது மட்டும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வரியில் இதற்கான விதி சேர்க்கப்படவில்லை என்றும் அதனால் இந்த இழப்பீடு தொகை கிடைக்காது எனவும் கூறி கைவிரித்து விட்டனர். சரி வேறு என்னதான் செய்வது என எண்ணி மீண்டும் தன்னுடைய நிலத்தில் கத்தரி பயிரிட்டார். திருஷ்டிபடும்படி கத்தரி செடி ஆள் உயரம் வளர்ந்து நல்ல காய் காய்த்தது. இவருடைய துரதிர்ஷ்டம் அந்த ஆண்டில் விளைச்சல் அதிகமாக இருந்ததால் காய் பறித்த கூலி, ஏற்றிச் சென்ற பேருந்துக் கட்டணம் மற்றும் இறக்குக் கூலியைக் கூட கத்தரிக்காயின் விற்பனை வருவாயில் சரிக்கட்ட முடியவில்லை.

இந்த நிலையில் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதற்காக இவருடைய நிலத்திற்கு அருகில் சென்ற ஓடையில் பெரிய குழாய்க் கிணறு ஒன்றை அமைத்து நீரை உறிஞ்சியதால் இவருடைய சிறிய குழாய்க் கிணற்றில் நீர் வற்றிவிட்டது. அரசு நிர்வாகத்துடன் போட்டி போட்டுக் கொண்டு அந்த அளவுக்கு ஆழமாக குழாய்க் கிணறு அமைக்க வசதி இல்லாததாலும் நிலவள வங்கிக் கடனை உடனே திரும்பச் செலுத்தவேண்டிய நிர்பந்தத்தினாலும் என்ன செய்வது என்று தத்தளித்தார்.

இச்சமயத்தில் நிலவள வங்கியில் கடன் பெற்று நிலுவையாக உள்ளவர்களின் கடனுக்கான வட்டியில் பாதியையும் மற்றும் அசல் தொகை முழுவதையும் செலுத்தினால் எஞ்சிய பாதி வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. உடனடியாக 25 சதவீதம் செலுத்த வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சுற்றத்தாரிடம் கைமாற்றுக் கடன் வாங்கி கால்பங்கு தொகையை அவர் செலுத்தினார்.

குழாய்க் கிணற்றில் நீர்வற்றிவிட்டதால் தொடர்ந்து நிலத்தில் பயிரிட முடியவில்லை; என்ன செய்வது என நிலத்தை விற்று நிலவள வங்கி மற்றும் இதர கடன்களையாவது தீர்த்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என எண்ணினார். இதுதான் சமயம் என அவருடைய நிலத்தை மிகக் குறைந்த விலைக்குக் கேட்டனர். கடனை மட்டும் சரி செய்கிற அளவுக்காவது தொகை வந்தால் போதும் என்று நிலத்தை விற்று கடன் அனைத்தையும் தீர்த்துவிட்டார்.

இந்த நடவடிக்கை முடிந்த சமயத்தில் புதியதாகப் பொறுப்பேற்ற அரசு நிலவள வங்கியில் நிலுவையில் உள்ள கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது என அறிவித்தது. அது மட்டுமன்றி, அவருடைய ஊரின் அருகாமையிலுள்ள தரிசு நிலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப் போவதாகவும் அறிவித்தது. அதனால் அவர் விற்ற நிலத்தை அவரிடம் அடி மாட்டு விலைக்கு வாங்கியவர் “யானை விலை குதிரை விலையாக’ மிக அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் கண்டார். ஆனால் இவரோ இப்போது ஒரு நிலமற்ற ஏழை கூலி விவசாயத் தொழிலாளியாகப் பிழைப்பைத் தேடி நகரத்தை நோக்கிச் சென்றார். இவருடைய இந்த நிலைமையை யாரிடம் சென்று முறையிடுவது?

இத்தகைய விவசாயிகளைக் காப்பதற்கு என்னதான் செய்ய வேண்டும்? ஒவ்வொரு கிராமத்திலும் அறுவடை சமயத்தில் விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களை நல்ல விலை கிடைக்கும்போது விற்பதற்கு ஏதுவாக சிறிது காலம் பாதுகாப்பாக விளைபொருள்களை வைத்திருப்பதற்கான குளிர்பதன கிடங்கை அமைக்க வேண்டும். அதுவரையில் நடைமுறைச் செலவை ஈடுகட்டுவதற்காகக் குறைந்த வட்டியில் இந்த விளைபொருள்களை அடமானம் வைத்துக் கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதன்மூலம் இவரைப் போன்ற விவசாயிகளுக்கு விளைவித்த பயிர்களிலிருந்து முழு வருமானமும் கிடைக்கும். அவர்களின் வாழ்வும் ஏற்றும் பெறும்.

வங்கிகள் நடைமுறை மூலதனம் வழங்கும்போது பயிர்கள் மூலம் சரியான வருமானம் கிடைக்காதபோது அடுத்த பயிருக்கான கடனை முந்தைய கடனை அடைத்தால்தான் மறுபடியும் கடன் கொடுக்க முடியும் என மறுக்கக் கூடாது. அதற்குப் பதிலாக மேலும் சிறிது கடனைக் கொடுத்து நொடிந்த விவசாயிகளை கைதூக்க உதவ வேண்டும்.

விவசாயிகளின் பயிர்கள், கால்நடைகள் போன்றவற்றுக்கு இழப்பு ஏற்படும்போது காப்பீட்டு நிறுவனங்கள் சரியான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகள் விளைவித்த பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்க தகுந்த ஏற்பாடு செய்தால் மட்டுமே அவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்த முடியும். அதை மட்டும் செய்தாலே போதும். விவசாயிகள் தற்கொலை பெருமளவில் தடுக்கப்பட்டுவிடும்.

(கட்டுரையாளர்: தலைமைக் கணக்கர், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மூங்கில்துறைப்பட்டு).
==================================================

Posted in Agriculture, Analysis, Backgrounder, Bankruptcy, Banks, Bharti, Birla, Biz, Brinjal, Business, Cane, Capitalism, Collars, Commerce, Consumer, Customer, Diesel, EB, Eggplant, Electricity, Engine, Expenses, Farmer, Finance, Food, Fresh, Fruits, Futures, Globalization, harvest, harvesting, Impact, Income, India, Industry, Inflation, Investment, Irrigation, Lake, Loan, Manufacturing, markets, Motor, Operations, Options, Plants, Power, Premium, Prices, Rain, Recession, Reliance, retail, sales, Small Business, Small scale, SSI, Sugar, Sugarcane, Tap, Trading, Vegetables, Venture, Wal-Mart, Walmart, Water | 1 Comment »

Chennai’s 20 artery roads to get CCTV installed – CM Karunanidhi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

சென்னையின் 20 முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமிரா: முதல்வர் அறிவிப்பு

சென்னை, பிப். 3: சென்னை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோரைக் கண்டுபிடிக்க 20 முக்கிய இடங்களில் கண்காணிப்புக் கேமிரா வைக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கின்றனரா என்பதைக் கண்டுபிடிக்கவும், விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் இந்த கண்காணிப்பு கேமிரா மூலமான கண்காணிப்பு உதவும்.

ரூ. 2.1 கோடி செலவில் 20 கண்காணிப்புக் கேமிராக்கள் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. இவை நிறுவப்படும் இடங்கள்:

  1. போர் நினைவுச் சின்னம்,
  2. தலைமைச் செயலக வெளிப்புற வாயில்,
  3. கத்திப்பாரா சந்திப்பு,
  4. வள்ளுவர் கோட்டம் சந்திப்பு,
  5. அண்ணா சிலை சந்திப்பு,
  6. வீல்ஸ் இந்தியா கம்பெனி சந்திப்பு,
  7. பெரியார் சிலை சந்திப்பு,
  8. வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலைய சந்திப்பு,
  9. மத்திய கைலாஷ் சந்திப்பு,
  10. ஹால்டா சந்திப்பு,
  11. ஆளுநர் மாளிகை முதன்மை வாயில் சந்திப்பு,
  12. எஸ்.ஆர்.பி. டூல்ஸ் நிறுவன சந்திப்பு,
  13. எஸ்ஐஇடி கல்லூரி -செனடாப் சாலை சந்திப்பு,
  14. 100 அடி சாலை -வட பழனி சாலை சந்திப்பு,
  15. போரூர் சந்திப்பு,
  16. அசோக் பில்லர் சந்திப்பு,
  17. அண்ணாநகர் ரவுண்டானா சந்திப்பு,
  18. எஸ்என் செட்டி சாலை -சுங்கச் சாவடி சந்திப்பு,
  19. விமான நிலைய சாலை சந்திப்பு,
  20. கிரீன்வேஸ் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் இவை நிறுவப்படும். இந்த சாலை சந்திப்புகளில் உள் சுற்று இணைப்பு தொலைக்காட்சிப் பெட்டிகள் (சிசிடிவி) நிறுவப்பட்டு போக்குவரத்து கண்காணிக்கப்படும் என்று அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Auto, Automobile, Big Brother, CCTV, Chennai, Closed circuit TV, CM, Karunanidhi, Law, Madras, Motor, Order, Police, RMV, Road, Roads, Streets, Surveillance, Tamil Nadu, Terrorism, TN, TV | 1 Comment »