Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Vegetables’ Category

1.5 mn Commercial (lorry) vehicles keep off roads in Karnataka – Truckers strike enters second day

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

3-வது நாளாக லாரி ஸ்டிரைக்: பல கோடி வர்த்தகம் பாதிப்பு

நாமக்கல், பிப். 23: தமிழகம் மற்றும் கேரளத்தில் 3-வது நாளாக நடைபெறும் லாரிகள் வேலைநிறுத்தத்தால் பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

வேலை நிறுத்தம் 3-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடிக்கிறது. இதனால், வட மாநிலங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் தீப்பெட்டி, ஜவுளி, மஞ்சள், இரும்பு, உதிரிப் பாகங்கள், தொழிற்சாலை பொருள்கள் என அனைத்தும் மூன்று நாள்களாக வட மாநிலங்களுக்கு செல்லாமல் அப்படியே தேங்கி உள்ளன வட மாநிலங்களில் இருந்து வரும் கோழித் தீவன மூலப் பொருள்கள், எலக்ட்ரானிக் பொருள்கள், மார்பிள்ஸ், பர்னிச்சர்கள், காய்கறிகள், பழங்கள் வரத்தும் தடைபட்டுள்ளது. போராட்டம் காரணமாக பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நீடித்தால் கோழித் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை மேலும் உயரும் அபாயமுள்ளது.

கர்நாடகத்தில் தமிழக லாரிகளை தடையின்றி இயக்கலாம்: போக்குவரத்துத் துறை விளக்கம்

சென்னை, பிப். 23: கர்நாடக மாநிலத்தில் தடையின்றி தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தமிழக லாரி உரிமையாளர்களுக்கு, போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை திரும்பப் பெற வலியுறுத்தி, கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

தமிழக லாரிகளை தடையின்றி கர்நாடக மாநிலத்தில் இயக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, இணைப் போக்குவரத்து ஆணையர் டி.நாராயணமூர்த்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தைச் சேர்ந்த வாகனங்களை கர்நாடகத்தில் இயக்கும் போது, வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவு வரும் ஜூன் மாதம் வரை வற்புறுத்தப்பட மாட்டாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

எனவே, தமிழக லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் எந்தவித தடையுமின்றி கர்நாடக மாநிலம் வழியாக தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலி
தமிழ்நாட்டில் பலகோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்

சென்னை, பிப்.24-

கர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுவதால், தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி உள்ளன.

லாரிகள் வேலைநிறுத்தம்

கர்நாடகத்தில் ஓடும் லாரிகளுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மாநிலத்தில் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு லாரிகள் ஓடவில்லை.

இந்த போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து இருப்பதால், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகம் மற்றும் கர்நாடகத்தின் வழியாக செல்லும் அனைத்து லாரிகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. ஏற்கனவே கர்நாடகத்துக்கு புறப்பட்டு சென்ற லாரிகள் எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.

பல கோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்

மேலும் கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து கர்நாடகத்துக்கு செல்ல வேண்டிய லாரிகள் புறப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அங்குள்ள பார்சல் அலுவலகங்களில் பார்சல்கள் குவிந்து உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி கிடக்கின்றன.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் தீப்பெட்டி, தேங்காய், ஜவுளி, ஜவ்வரிசி, மஞ்சள் போன்ற பொருட்கள் தடைப்பட்டுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு தமிழகம் முழுவதும் ஏறத்தாழ ரூ.100 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்து வருகின்றன. லாரி உரிமையாளர்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வீதம் இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செங்கோடன் கூறினார்.

கோயம்பேடு மார்க்கெட்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் அதிக அளவில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தான் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக தக்காளி, கோஸ், கேரட், பீன்ஸ் போன்ற முக்கியமான காய்கறிகள் அங்கிருந்துதான் வருகின்றன. லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காய்கறி வரத்து பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வராஜிடம் கேட்டபோது, “தினமும் 50 லாரிகளில் தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும். நேற்றைய தினம் வழக்கமாக வரும் அனைத்து காய்கறிகளும் வந்து விட்டன. இன்றைய தினம் தான் வழக்கமாக வரும் லாரிகளில் காய்கறிகள் வருமா என்று எதிர்பார்த்திருக்கிறோம்” என்றார்.

விலை உயர வாய்ப்பு

சென்னை கோயம்பேடு எம்.எம்.சி. உரிமம் பெற்ற வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சவுந்திரராஜன் கூறும்போது, “தக்காளி தவிர 60 லாரிகளில் மற்ற காய்கறிகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருகின்றன. நேற்றைய தினம் வழக்கமாக வரவேண்டிய காய்கறிகள் வந்தன. இன்றைய தினம் குறைந்த அளவில்தான் காய்கறிகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி குறைந்த அளவு காய்கறிகள் வருகின்ற பட்சத்தில் காய்கறிகளின் விலையும் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நாச்சிமுத்து கூறியதாவது:-

வழக்கமாக ஈரோட்டில் இருந்து ஜவுளி, மஞ்சள், எண்ணை போன்ற பொருட்கள் கர்நாடகம் மற்றும் மராட்டியம், அரியானா, டெல்லி உள்பட பல வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். கர்நாடகத்தில் பொருட்கள் ஏற்றி இறக்கும் சுமார் 200 லாரிகள் மற்றும் கர்நாடகம் வழியாக செல்லும் லாரிகள் உள்பட சுமார் 1,500 லாரிகள் ஓடவில்லை. இதனால் ஈரோட்டில் பல கோடி போய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கே.எஸ்.கலியபெருமாள் கூறுகையில், கோவை மாவட்டத்திலிருந்து கர்நாடகத்திற்கு லாரிகள் செல்லாததால் தினமும் ரூ. 25 கோடிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

சேலம்

சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:-

லாரிகளுக்கு வேககட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவு தமிழக லாரி உரிமையாளர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் போகக்கூடாது என்றால், காய்-கறிகள் மற்றும் பழங்கள் போன்ற அழுகும் பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் லாரியில் கொண்டு செல்லமுடியாமல் பாதிப்பு ஏற்படும். கர்நாடக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கால், சேலம் மாவட்டத்தில் இருந்து கர்நாடகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சரக்குகள் ஒரே நாளில் ரூ.10 கோடி மதிப்பில் தேக்கம் அடைந்து உள்ளன.

இவ்வாறு சென்னகேசவன் தெரிவித்தார்.

வேலைநிறுத்தம் தொடரும்

இதற்கிடையே கர்நாடக லாரி உரிமையாளர் மற்றும் ஏஜெண்டுகள் சங்க நிர்வாகிகள் சங்க தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா தலைமையில் கவர்னரின் ஆலோசகர் தாரகன் மற்றும் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் தங்கராஜ் ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது கவர்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தையின் போது அரசு தரப்பில் எந்த ஒரு உறுதி மொழியும் கொடுக்கப்படாததால் வேலை நிறுத்தம் தொடரும் என்று ஜி.ஆர்.சண்முகப்பா கூறினார்.

கர்நாடகத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.100 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனியார் பஸ், வாடகை கார், சுற்றுலா வேன் உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Posted in Accidents, Biz, commercial, Dangerous, dead, Death, drivers, DUI, DWI, Economy, Employment, Erode, Exports, Finance, Food, Freight, Goods, Impact, Jobs, Karnataka, Law, Limits, Lorry, Loss, Operators, Order, Parcel, Perishable, Profit, Salem, Services, Speed, Strike, Transport, Transporters, Truckers, Trucks, Vegetables | Leave a Comment »

Farmer suicides – Turning risk into an opportunity: Case study of a Agriculture Success Story

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

முகங்கள்: பத்து லட்சம் கடன்… முப்பது லட்சம் வட்டி!

ந.ஜீவா

“கடன் பெற்றார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பது கம்பராமாயண வரிகள். ஆனால் கடன் பெற்றவர்கள் கலங்கினால் அது தற்கொலையில்தான் முடியும். நாடெங்கும் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. அதற்கு முக்கியக் காரணம், கடன்… வட்டி… விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமை அல்லது தண்ணீர்ப் பஞ்சம், பூச்சிகளினால் விவசாயம் பாதிக்கப்படல் இன்னும் பல.

ஆனால் கோவை ஏ.ஜி.புதூரைச் சேர்ந்த சுப்பையன் என்கிற விவசாயி கலங்கவில்லை. வட்டியும் கடனுமான நாற்பது லட்சம் ரூபாயைத் தனது கலங்காத மன உறுதியாலும் தெளிவாகத் திட்டமிடும் திறனாலும் கடுமையான உழைப்பாலும் திருப்பி அடைத்து வெற்றிகரமாக கடன் தொல்லையில் இருந்து மீண்டிருக்கிறார். அவரிடம் பேசினோம்…

நாற்பது லட்சம் ரூபாய் கடன் எப்படி ஆனது?

நான் நான்கு வருடத்துக்கு முன் கோவையில் இருந்து மைசூர் அருகே உள்ள குண்டன்பேட்டைக்குப் போய் 35 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பண்ணினேன். அதற்காக எங்கள் பகுதியில் உள்ளவர்களிடம் நான்கு வட்டிக்கும் மூன்று வட்டிக்குமாகப் பத்து லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். நானும் இன்னும் நான்கு பேரும் சேர்ந்து மைசூர்-குண்டன்பேட்டைக்குப் போனோம். அங்கே போய் வெங்காயம், கனகாம்பரம், கரும்பு, மஞ்சள் எல்லாம் பயிர் செய்தோம். ஆனால் நாங்கள் விவசாயம் பண்ணின நேரம் உற்பத்தி பண்ணின பொருள்களெல்லாம் விலை குறைந்துபோனது. பத்துலட்சம் வாங்கின கடன் இரண்டு வருடத்துக்குள்ளே வட்டியெல்லாம் சேர்த்து நாற்பது லட்சம் ரூபாய் ஆகிவிட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் ஊருக்குத் திரும்பி வந்துவிட்டேன்.

திரும்பி வந்து என்ன செய்தீர்கள்?

இங்கே எனக்குப் பத்து ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விவசாயம் செய்ய முடியவில்லை. நிலத்தடி நீர் விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாத அளவுக்குக் கெட்டுப் போயிருந்தது. நொய்யல் ஆற்று நீரில் கோயம்புத்தூர் நகர்க் கழிவு எல்லாம் கலந்ததால் அது ஓடுகிற எங்கள் பகுதியில் நிலத்தடி நீரும் உப்பாகப் போய்விட்டது. செடி வளர்க்க இந்தத் தண்ணீர் ஆரோக்கியம் இல்லை.

இந்தக் கெட்டுப் போன தண்ணீரை வைத்துக் கொண்டு எப்படி விவசாயம் பண்ணுவது? என்ன விவசாயம் பண்ணுவது? கடனையெல்லாம் எப்படி அடைப்பது? யோசனை பண்ணிப் பார்த்தேன்.

எங்கள் பகுதிக்குத் தோட்டக்கலைத்துறை, விரிவாக்கத்துறை அதிகாரிகள் எல்லாரும் வருவார்கள். வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் சி.ராமசாமி அடிக்கடி வருவார். அவர்களிடம் கேட்டதில் எங்கள் பகுதியில் நெல், கரும்பு போன்றதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது என்று தெரிய வந்தது. வேறு எந்த வேளாண்மை பண்ண வேண்டும் என்று யோசித்து கீரை விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். இந்தத் தண்ணீருக்குக் கீரை நன்றாக வரும். குதிரை மசால் நன்றாக வரும். தென்னை நன்றாக வரும்.

அரைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, சிறுகீரை என விவசாயம் செய்தேன். இதில் 30 சதம் செலவு ஆகும். 70 சதம் லாபம் வரும்.

குதிரை மசால் என்பது கால்நடைகளுக்கானத் தீனி. இது தவிர கறிவேப்பிலை இரண்டரை ஏக்கரில் விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். எனது 10 ஏக்கர் நிலம் தவிர மேலும் 20 ஏக்கர் நிலத்தைக் குத்தகை எடுத்தேன். 12.5 எச்பி மோட்டார் போட்டு கிணற்றில் தண்ணீர் எடுத்து விவசாயம் பண்ணினேன். கிணற்று தண்ணீர் நாளொன்றுக்கு 3 ஏக்கர் நிலத்திற்குப் பாயும்.

எங்கள் விவசாயத்தில் அதிக அளவு ரசாயன உரங்கள் போடுவதில்லை. மண்புழு உரம், மாட்டுச்சாணம் போடுவோம். கோயம்புத்தூரில் ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் பகுதியில் நிறைய மாடுகள் வளர்க்கிறார்கள். அதனால் மாட்டுச் சாணிக்கென்று நாங்கள் அலைய வேண்டியதில்லை.

விவசாயம் செய்து விளைவித்த பொருள்களை எங்கே விற்பனை செய்கிறீர்கள்?

கீரை ஒரு நாளைக்கு 5000 கட்டிலிருந்து 10000 கட்டு வரை விற்பனையாகும். ஒரு நாளைக்கு சுமார் பத்தாயிரம் ரூபாய்க்கு கீரை விற்பனையாகும். கறிவேப்பிலை ரூ.1500 க்கு விற்பனையாகும். கடைகளுக்கு வாடிக்கையாக கறிவேப்பிலையைக் கொடுத்துவிடுவோம். கிலோ ரூ.10 இலிருந்து ரூ.15 வரை போகும். குதிரைமசால் 400 கிராம் கட்டு சுமார் 3000 கட்டுவரை விற்பனையாகும்.

காலையிலே எங்கள் காட்டுக்குள்ளிருந்து இந்தப் பொருள்களை ஏற்றிக் கொண்டு வண்டிகள் வெளியே போகும். எத்தனை வண்டி எவ்வளவு பொருள் என்பதையெல்லாம் கணக்கு வைத்துக் கொள்வார்கள்.

கால்நடைத் தீவனமாக நாங்கள் விவசாயம் செய்யும் குதிரை மசாலை சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் பகுதியில் மாடு வளர்ப்பவர்களே வாங்கிக் கொள்வார்கள்.

காலையில் டெம்போவில் குதிரை மசாலை ஏற்றிக் கொண்டு கிளம்புவோம். சிட்டி பஸ் குறித்த நேரத்தில் எந்த ஸ்டாப்பில் எந்த நேரத்தில் நிற்குமோ அதைப் போல இந்த டெம்போ ஒவ்வொரு பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிற்கும். அந்தப் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்கள் அங்கு வந்து வாங்கிக் கொள்வார்கள்.

கோயம்புத்தூரில் உள்ள வாடிக்கையாளர்கள் தவிர கொடைக்கானலிலும் எங்கள் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அங்கே உள்ள ஒரு கால்நடைப் பண்ணையில் 67 மாடுகள் வைத்திருக்கிறார்கள். 10 ரேஸ் குதிரைகள் வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய கால்நடைகளுக்குத் தேவையான தீவனத்திற்காக எங்களிடம் ரெகுலராக குதிரை மசால் வாங்குகிறார்கள்.

இவ்வளவு வேலைகளையும் செய்ய வேண்டுமென்றால் ஆட்களை வேலைக்கு வைக்க வேண்டுமே?

எங்களிடம் முதலில் 40 பேர் வேலை பார்த்தார்கள். இப்போது 20 பேர் பார்க்கிறார்கள். வேலைக்கு ஆள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. இத்தனைக்கும் பெண்களே ஒரு நாளைக்கு ரூ.140 வரை சம்பளம் வாங்குகிறார்கள்.

எங்களிடம் வேலை செய்பவர்களை நாங்கள் மரியாதையாக நடத்துகிறோம். வாடா, போடா என்றெல்லாம் பேசுவது கிடையாது. அவர்கள் எல்லாரும் ரொம்பவும் விசுவாசமான ஆட்கள்.

வழக்கமாகப் பயிர் செய்யும் நெல், கரும்பு, வாழை போன்றவற்றைப் பயிர்செய்யாமல் இப்படிக் கீரைகளை விவசாயம் பண்ண வேண்டும் என்று எப்படித் தோன்றியது?

நான் விவசாயத்துக்கு முதன்முதல் வந்த போது எங்கள் ஏரியாவில் பருத்திதான் அதிகம் போடுவார்கள். நான்தான் முதன் முதலில் கனகாம்பரம் துணிந்து பயிர் செய்தேன். எதையும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். எங்கள் பகுதியில் நெல், கரும்பு போன்றவை விளைவிக்க நல்ல தண்ணீர் இல்லாததும் ஒரு காரணம்.

நமது அண்டை மாநிலமான ஆந்திரா, வடமாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்களே?

இந்தியாவில் விவசாயிகள் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகப் பேப்பரில் படிக்கிறோம். எனக்கு மாதிரி அவர்களுக்கு 10 ஏக்கர் நிலம் இருந்திருந்தால் ஒருவேளை என்னைப் போலவே அவர்களும் கடினமாக உழைத்துக் கடனை அடைத்திருப்பார்களோ, என்னவோ. எல்லாருக்கும் எனக்கு போலவே வாய்ப்புக் கிடைக்க வேண்டுமே.

இப்போது மார்க்கெட் வசதி அபாரமாக இருக்கிறது. அரசாங்கம் நிறையக் கடன் கொடுக்கலாம். கந்துவட்டியை ஒழிக்கச் சட்டம் போட்டிருந்தாலும் நாடு முழுக்க கந்துவட்டி இருக்கிறது. அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுத்தால் கந்துவட்டியை ஒழிக்கலாம். பத்துலட்சம் வாங்கின கடனுக்கு முப்பது லட்சம் வட்டி கட்டணும் என்றால் விவசாயி தற்கொலை பண்ணிக் கொள்ளாமல் என்ன செய்வான்?

Posted in Agriculture, Analysis, Banking, Banks, Case study, deaths, Economy, Faces, Farmers, Farming, Farmlands, Finance, Foodgrains, Forests, Fruits, Greens, harvest, horticulture, Incidents, Interview, Life, Loans, markets, Opportunity, Paddy, people, Persons, Prices, Real, rice, Risk, Saline, Salt, success, Suicides, Trees, Turnaround, Vegetables, Vidharaba, Vidharaba Jan Andolan Samithi, Vidharabha, Vidharba, Vidharba Jana Andolan, Vidharbha, Vidhrabha, Vitharabha, Vitharba, Vitharbha, Waste, Water, Wheat | 2 Comments »

The dangers lurking behing ethanol & other alternate fuels – Environment & Deforestation Impact

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2007

தாவர எண்ணெயின் விபரீதம்

ந. ராமசுப்ரமணியன்

உலக அரங்கில் கச்சா எண்ணெய்க்கு மாற்று சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தாவர எண்ணெயே எனப் பேசப்பட்டு வருகிறது.

தாவர எண்ணெயால் ஏற்படும் விபரீதங்களை அறியாததே இதற்குக் காரணம்.

வான்வெளியில் கரிமல வாயு உள்ளது. அதை உள்வாங்கி வளரும் தாவரங்கள் மூலம் “எத்தனால்’ மற்றும் “பயோ டீசல்’ போன்ற எரிபொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த எரிபொருள்கள் மூலம் கார்பன் அளவு அதிகரிக்காது. மாறாக, நிலத்திலிருந்து எடுக்கப்படும் நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் உபயோகத்தால் கார்பன் வெளியீடு பல மடங்கு உயர்கிறது என விஞ்ஞான ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஆகவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அதிகரித்து வரும் எரிபொருள் எண்ணெய் தேவை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு கச்சா எண்ணெய்க்கு மாற்று தாவர எண்ணெயே என உலக அளவில் பேசப்பட்டு, அதன் உபயோகமும் அதிகரித்து வருகிறது.

நிலத்தடியில் பல கோடி ஆண்டுகளாகப் புதைந்து கிடந்த தாவர வகைகளே கச்சா எண்ணெயாக மாறுகிறது.

ஆனால் தாவர எண்ணெய், தற்போது விளையும் தாவரங்கள், சூரியகாந்தி, பனை, சோயாபீன்ஸ், கரும்பு, தென்னை, சோளம், கோதுமை, அரிசி மற்றும் நவதானியங்கள் ஆகியவற்றைக் கொண்டு உடனடியாகத் தயாரிக்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி பெற்ற பிரேசில் நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு முதுகெலும்பு கரும்பு பயிரிடுவதும், சர்க்கரை உற்பத்தியுமாகும். கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை பெட்ரோலுடன் 65 சதவீதம் இணைத்து, அந்நாட்டு வாகனங்கள் ஓட்டப்பட்டு வந்தன.

கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் ஆண்டு உற்பத்தி 1790 கோடி லிட்டர் அளவு உள்ளது. பிரேசில் நாட்டில் 83 சதவீதத்திற்கும் மேற்பட்ட கார்கள் எத்தனாலுடன் சேர்க்கப்பட்ட பெட்ரோல் மூலமாக இயங்குகின்றன. மேலும் நாட்டின் மொத்த எரிஎண்ணெய் உபயோகத்தில் எத்தனால் பங்கு 55 சதவீதம் என உள்ளது.

1925-ம் ஆண்டு ஹென்ரி போர்ட் தனது “போர்ட்’ காரை அறிமுகப்படுத்தும்போதே எதில் ஆல்கஹால் எனும் தாவர எண்ணெயை உபயோகித்தார்.

தாவர எண்ணெயே எதிர்கால எரிபொருளாகப் போகிறது எனவும் கணித்தார்.

அதிக அளவில் அமெரிக்காவும் எதனால் தயாரிக்கும் நாடு. ஆனால் பிரேசிலைப்போல அல்லாமல் கோதுமை, அரிசி, ஓட்ஸ், சோளம், சோயா போன்ற பல தானியங்களிலிருந்து அமெரிக்கா தாவர எண்ணெயை உற்பத்தி செய்கிறது.

அமெரிக்க அயோவா மாநிலத்தில் எத்தனால் தயாரிப்பிற்காக 28 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இயங்குகின்றன.

டெக்ஸôஸ் மற்றும் இதர மாநிலங்களிலும் இத்தகைய ஆலைகள் அதிக அளவு இயங்க ஆரம்பித்துவிட்டன.

தற்போது தயாராகும் எத்தனால் காற்றிலுள்ள நீரை உட்கொள்வதால் கார் எந்திரங்கள் விரைவில் துருப்பிடித்துவிடும் என்று கூறப்படுகிறது.

தாவர எண்ணெய் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பு தரும் “பசுமை எண்ணெய்’ என ஒருபுறம் புகழப்படுகிறது.

கார்பன்டை ஆக்ûஸடை இழுத்து, வளரும் தாவரம், அதிலிருந்து எண்ணெய் தயாரிக்கும்போது, கார்பன்டை ஆக்ûஸடை வெளியிட்டு விடுகிறது. இது எப்படிப் பசுமை எண்ணெய் ஆகும் என்ற கேள்வி எழுகிறது.

டச்சு ஆலோசக நிறுவனமான டெல்ப்ட் ஹைட்ராலிக்ஸ், “ஒரு டன் பனைத் தாவர எண்ணெய் தயாரிக்கும்போது 33 டன் கார்பன் வெளியீடு ஏற்படுகிறது. இது பெட்ரோலியப் பொருள்கள் வெளியீட்டை விட பத்து மடங்கு அதிகம்.

இது எப்படி பசுமை எண்ணெய் ஆகும்?’ என்று வினா எழுப்பியுள்ளது.

ஐ.நா. ஆய்வு அறிக்கை ஒன்றில் தாவர எண்ணெய், பெட்ரோலியத்தை விட உலகிற்குக் கேடு அதிகம் விளைவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் “எத்தனால்’ தொழிலால் பல்வேறு பாதகங்கள் ஏற்பட்டுள்ளன. பசுமைப் புல்வெளிகள் மற்றும் காடுகள் அழிக்கப்பட்டு கரும்புத் தோட்டங்களாக மாற்றப்படுகின்றன.

காடுகள் வெட்டப்படுவதால் கார்பன் வெளியீடு அதிகமாகிவிட்டது. இதனால் பல்வேறு உயிரினங்கள், தாவரங்கள் அழிதல், மண் சக்தியிழத்தல் ஆகிய கேடுகள் நடைபெறுகின்றன.

இப்படி தயாரிக்கப்படும் தாவர எண்ணெயை வாங்குதல் தகாது என பல ஐரோப்பிய நாடுகள் முடிவெடுத்துள்ளன.

பிரேசிலில் கரும்பு பயிரிடுவதற்காக மிக அரிய மரங்களையும், சோயா பயிரிடுவதற்காக அமேசான் மழைக் காடுகளையும் அழிக்கத் தொடங்கியுள்ளது பாதகமான செயலாகும்.

மெக்சிக்கோவில் சோளம் போன்ற தானியங்களை தாவர எண்ணெய்க்குப் பெரிதும் பயன்படுத்துவதால், மற்ற உணவுப் பொருள்கள் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது.

இதனால் உணவுக்காகப் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன.

உலகத் தாவர எண்ணெய் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தாவர எண்ணெய் திட்டத்தைக் கைவிடும்படி சீனா, இந்தியா போன்ற நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளன.

சொகுசு கார்களில் செல்வந்தர்கள் பவனி வருவதற்காக உலக மக்களின் சோற்றில் மண்ணைப்போடும் பயங்கரத்திட்டம் தாவர எண்ணெய்த்திட்டம் என்ற எதிர்ப்பு மேலோங்கி வருகிறது.

ஆக கச்சா எண்ணெய்க்கு மாற்று தாவர எண்ணெய் இல்லை என்பது தெளிவாகிறது.

—————————————————————————————————————————————–

பருவநிலை மாற்றம்: தேவை அவசரத் தீர்வு

என். ரமேஷ்

மனித சமுதாயத்தின் நடவடிக்கைகளால் ஏற்பட்டு வரும் புவி வெப்ப அதிகரிப்பால், இதுவரை காணாத அளவுக்கு பருவநிலை மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன.

இதை அறிவியல் உலகம் ஏற்கெனவே உறுதி செய்து விட்டது.

அண்மையில் வெளியிடப்பட்ட, பருவநிலை மாறுபாடுகள் குறித்த பன்னாட்டு அரசுகள் கூட்டமைப்பின் (ஐபிசிசி) நான்காவது மதிப்பீட்டின் தொகுப்பு அறிக்கை இதை உறுதி செய்துள்ளது.

நடப்பாண்டில், வங்கதேசத்தில் ஏறத்தாழ 10 ஆயிரம் பேரை பலி கொண்ட சூறாவளி, பிகாரில் 1.4 கோடி மக்களை வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றிய வெள்ளப் பெருக்கு, இத்தாலியில் எப்போதுமில்லாத வகையில் 300 பேருக்கு சிக்குன் குன்யா நோய்த் தொற்று எனப் பல்வேறு அறிகுறிகள் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டுகின்றன.

மின் உற்பத்தி, போக்குவரத்து போன்றவற்றுக்காக நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற படிவ எரிபொருள்களை எரிப்பதே வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடு உள்ளிட்ட பசுமைக் குடில் வாயுக்களின் அளவு அதிகரிக்கக் காரணம்.

2005 ஆம் ஆண்டு இந்த வாயுவின் அளவு 10 லட்சத்தில் 379 என்ற அளவில் இருந்தது. இது கடந்த 6.5 லட்சம் ஆண்டுகளில் நிலவியதில் உயர்ந்தபட்ச அளவாகும். (தொழில் புரட்சி ஏற்பட்ட 18ஆம் நூற்றாண்டில் – 280).

புவியின் தற்போதைய சராசரி வெப்பநிலை 14.5 டிகிரி சென்டிகிரேட். உலகம் தற்போதைய வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்தால் புவியின் சராசரி வெப்பநிலை 6.4 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு அதிகரிக்கும். கடல் மட்டம் 3.7 மீட்டர் வரை அதிகரிக்கக் கூடும்.

புவி வெப்பம் 2 டிகிரி அளவு அதிகரித்தாலே பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகள் முற்றிலும் மூழ்கிவிடும்; கடற்பகுதியால் சூழ்ந்துள்ள வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும். இந்நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும்.

இத்தகைய புவி வெப்ப அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்படப்போவது உலகின் 60 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள (ஏறத்தாழ 400 கோடி) ஆசியக் கண்டம்தான்.

கடல் நீரால் சூழ்தல், நன்னீர்ப் பற்றாக்குறை, மகசூல் குறைவால் உணவுப் பஞ்சம், நோய் பரப்பும் கொசுக்கள் அதிகரிப்பு எனப் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

இந்தச் சூழ்நிலையில்தான் பசுமைக் குடில் வாயுக்களைக் குறைத்தல், ஏற்கெனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் – நிகழ உள்ள பருவநிலை மாற்றத் தாக்கங்களுக்கு தகவமைத்தல் போன்ற அம்சங்களை விவாதிக்க இந்தோனேசியாவின் பாலி நகரில் டிசம்பர் 3 முதல் 14 வரை ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றத்துக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்ட 195 நாடுகளின் 13-வது மாநாடு நடைபெற உள்ளது.

36 வளர்ச்சியடைந்த நாடுகள் 1990 ஆம் ஆண்டு வெளியிட்ட கரியமில வாயு அளவில் சராசரி 5.2 சதவீதத்தை, 2008-12 ஆம் ஆண்டுகளுக்குள் குறைக்க வகைசெய்யும் கியோட்டோ ஒப்பந்தம் 1997-ல் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்த காலத்துக்குப் பிந்தைய புதிய ஒப்பந்தத்தை உருவாக்க பூர்வாங்கப் பணிகளை இந்த மாநாடு மேற்கொள்ள உள்ளது.

தொழில்புரட்சிக்கு முன்பு நிலவியதைவிட 2 டிகிரி சென்டிகிரேட் வரை மட்டுமே புவி வெப்பம் அதிகரிக்கும் நிலையை உருவாக்க, உலகம் முழுவதும் 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கார்பன்டை ஆக்சைடு அளவில் 50 சதவீதத்தை மட்டுமே 2050 ஆம் ஆண்டில் வெளியிட வேண்டும்.

இதற்கு, வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களது வெளியீட்டில் 80 சதவீதத்தைக் குறைக்க வேண்டும்; இந்தியா போன்ற வளரும் நாடுகள் 20 சதவீதத்தைக் குறைக்க வேண்டும் எனப் பரிந்துரைகள் முன் வைக்கப்படுகின்றன.

(20 சதவீதம் குறைக்க முடியாது; தனிநபர் சராசரி கணக்கில் கொள்ள வேண்டும் என திட்டக்குழுவின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்).

இந்த அளவுக்கு குறைத்தால் “வளர்ச்சி’ தடைபடும் என்ற வாதங்களுக்குப் பதில், இப்போது குறைக்காவிடில் வரும் காலங்களில் பருவநிலை மாறுபாட்டால் விளையும் பேரழிவுகளால் “வளர்ச்சியே’ கேள்விக்குறியாகும் என்பதுதான்.

இந்த இலக்குகளை எட்ட உலக ஒட்டுமொத்த உற்பத்தியில் 1.6 சதவீதத்தைக் குறைத்தால் மட்டும் போதுமானது என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அறிக்கை.

அதுமட்டுமன்றி, மாற்று எரிசக்தி, போக்குவரத்து தொழில்நுட்ப உருவாக்கத்தால் வேலைவாய்ப்பு நிலையைச் சரிக்கட்டிவிட வாய்ப்புள்ளது.

மேலும், வளரும் நாடுகளுக்கு கரியமில வாயுவை வெளியிடாத “தூய்மையான’ தொழில்நுட்பங்களை வளரும் நாடுகள் வழங்குவதற்கு அமைப்பை உருவாக்குவது; ஏற்கெனவே, அளவுக்கதிகமாக வெளியிடப்பட்ட வாயுக்களால் ஏற்பட உள்ள தாக்கங்களைச் சமாளிக்க குறைந்தபட்சம் ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி டாலர் நிதியுதவி அளிக்க ஏற்பாடு செய்வது; வெளியிடப்படும் 20 சதவீத கரியமில வாயுவுக்கு வனங்களின் அழிவு ஒரு காரணம் என்பதால் காடுகளை அழிப்பதைத் தடுப்பதற்கான அமைப்பை உருவாக்குவது ஆகியவை தொடர்பான அம்சங்களையும் பாலி மாநாடு விவாதிக்க உள்ளது.

கியோட்டோ ஒப்பந்த நடைமுறைகள் 2012 – ல் முடிவுக்கு வந்துவிடும் என்ற நிலையில், இடைவெளியின்றி புது ஒப்பந்தம் அமலுக்கு வர வேண்டும்.

இத்தகைய ஒப்பந்தம் 2009 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டால்தான், அதற்கு உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றங்கள் 2012 – க்குள் ஒப்புதல் அளித்து நடைமுறைப்படுத்த முடியும்.

கியோட்டா ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத அமெரிக்கா, கட்டாய இலக்குகளை ஒப்புக்கொள்ள மறுக்கும் இந்தியா போன்ற நாடுகளும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளன.

மாநாட்டின் இறுதிப் நிகழ்ச்சியில் 130 – க்கும் மேற்பட்ட நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

பருவநிலை மாற்றம் காரணமான பாதக விளைவுகள் தொடங்கிவிட்ட நிலையில், பேரழிவுகளிலிருந்து பூவுலகைக் காக்க உள்ள கால அவகாசம் மிகக் குறைவே.

எனவே, பாலி மாநாட்டின் முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக அமைய வேண்டும்.

—————————————————————————————————————————————–

பசுமை இந்தியா சாத்தியமா?

அன்ஷு பரத்வாஜ்

பிலிப்பின்ஸ் நாட்டின் பாலித் தீவில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் விவாதிக்கப்பட்ட புவி வெப்ப மாற்றங்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி, நச்சு இல்லாத புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம் இந்தியா எதிர்பார்க்கும் பொருளாதார முன்னேற்றத்தை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

நாட்டின் மின் சக்தி தேவை 4,000 பில்லியன் கிலோவாட் என்று திட்டக் கமிஷன் மதிப்பிட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டில் 20,000 பில்லியன் கிலோவாட் மின் சக்தி தேவைப்படும் என்றும் மதிப்பீடு செய்துள்ளது,

இந்த அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யப்போகிறோம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய சவாலாகும்.

இந்த மின் உற்பத்தியின் தேவையில் ஒரு பகுதி கரியமில வாயு இல்லாத தொழில்நுட்பங்களின் மூலம் கிடைக்கும்.

நிலக்கரி உள்ளிட்ட மூலப்பொருள்களின் மூலம் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 97 சதவிகிதம் கிடைக்கிறது.

கரியமில வாயு இல்லாத பல மின் உற்பத்தி தொழில்நுட்பங்கள் இதுவரை பெரிய அளவில் உருவாக்கப்படவில்லை. மரபு எரிசக்தித் துறையில் இருந்து மரபுசாரா எரிசக்தித் துறையில் உற்பத்தியை அதிகரிப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

எதிர்காலத் தேவையில், 15 சதவிகித உற்பத்தியை கரியமிலம் இல்லாத தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்குவதை ஒரு வழிமுறையாகக் கொள்ளலாம். இதற்கு என்னென்ன வாய்ப்புகள்தான் உள்ளன?

காற்றாலை மின் உற்பத்தி நல்லதொரு நம்பகமான தொழில்நுட்பம். இந்தியாவில் தற்போது காற்றாலை மூலம் 7,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவில் காற்றாலைகள் மூலம் 45,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் காற்றின் வேகம் குறைவுதான். இதன் காரணமாக காற்றாலை விசிறிகள் முழு வேகத்தில் இயங்க முடியவில்லை.

காற்றாலைகள் மூலம் 45,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்தாலும், இது தேவையில் ஒரு சதவிகிதத்தை மட்டுமே பூர்த்தி செய்யும். இதனால், காற்றாலை மின் உற்பத்தி அதிக முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது.

அடுத்துள்ளது தாவரங்களைக் கொண்டு மின் உற்பத்தி. எண்ணெய் சத்து உள்ள தாவரங்கள் மூலம் பயோடீசலை உற்பத்தி செய்ய முடியும்.

சர்க்கரை ஆலைகளில் மொலாசிஸில் இருந்து எத்தனால் தயாரிக்க முடியும். கரும்புச்சக்கை, உமி போன்றவற்றில் இருந்து மின்சாரத்தைத் தயாரிக்க முடியும்.

மின் உற்பத்திக்கு தாவரங்களையும் பயன்படுத்தலாம். இந்தியாவில் விளைச்சலுக்கு தகுதியான 30 மில்லியன் ஹெக்டேர் நிலம் தரிசாகக் கிடக்கிறது. இதில் 20 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் எண்ணெய் சத்துள்ள தாவரங்களை சாகுபடி செய்ய பயன்படுத்தினால் 25 மில்லியன் டன் தாவர எண்ணெய் உற்பத்தியாகும். இதன் மூலம் 300 பில்லியன் கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும்.

எத்தனால் மூலம் 100 பில்லியன் கிலோவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், இந்தியாவின் மின் உற்பத்தித் தேவையில் 2 சதவிகிதத்தையே பூர்த்தி செய்ய முடியும்.

இந்தியாவில் புனல் மின் நிலையங்கள் மூலம் 84,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யமுடியும். ஆனால், தற்போது 34,000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. புனல் மின் உற்பத்தி மூலம் குறிப்பிட்ட இலக்கை எட்டினாலும், அதுவும் மொத்த தேவையில் 2 சதவிகிதமாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் அபரிமிதமாகக் கிடைப்பது நிலக்கரி. அனல் மின் நிலையங்கள் மூலம் 51 சதவிகித மின் உற்பத்தி செய்யப்படுகிறது. எதிர்காலத்தில், இந்தியாவின் மின் உற்பத்தியில் நிலக்கரியே முக்கிய பங்கு வகிக்கப் போகிறது.

இருந்தாலும், நிலக்கரி மூலம் ஒரு கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்போது. ஒரு கிலோ கரியமில வாயுவும் வெளியேற்றப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொண்டேயாக வேண்டும். இதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். இதற்கான தொழில்நுட்பம் பல மடங்கு செலவை இழுத்துவிடும்.

அணு மின் நிலையங்கள் மூலம் தற்போது 4,120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மொத்த உற்பத்தியில் 3 சதவிகிதத்துக்கும் குறைவுதான்.

உள்நாட்டில் மிகக் குறைந்த அளவே யுரேனியம் கிடைக்கிறது. இதனால் புளுடோனியம், தோரியம் தொழில்நுட்பங்களைக் கொண்டு மின் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா திட்டமிடலாம்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் இலகுரக நீர் மின் உற்பத்தி சாதனங்களை இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது. இதைப் பயன்படுத்தி 24,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும்.

இந்தியாவின் பெரும்பகுதியில் சூரிய சக்தி நன்றாக கிடைக்கிறது. 20 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் சூரிய சக்தி மூலம் 24,000 பில்லியன் கிலோவாட் மின் உற்பத்தி கிடைக்கும். இது நச்சுத்தன்மை கொண்ட கரியமில வாயுவை வெளியிடாது.

சூரிய சக்தி அனல் மின் நிலையங்கள் மற்றொரு வாய்ப்பாகவே அமைகிறது. காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் 20 கி.மீ. சுற்றளவு கொண்ட நிலத்தில் சூரிய சக்தி மூலம் 2,000 மெகாவாட் மின்சாரம் உறபத்தி செய்யமுடியும். இது எட்டு அனல் மின் நிலையங்களின் உற்பத்திக்குச் சமமாகும்.

கரியமில வாயுவை வெளிப்படுத்தாத மின் உற்பத்திக்கு முயற்சிக்க வேண்டும் என்றால், நம்மிடம் உள்ள எல்லா மூலப் பொருள்களையும் நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழில்: டி.எஸ். ஸ்ரீநிவாசன்

Posted in Agriculture, Alternate, Amazon, America, Analysis, Auto, Automotive, Brazil, Cane, Carbon, Cars, CO, CO2, Commerce, Consumption, Corn, Deforestation, Dhals, Diesel, Earth, Eco, Economy, emissions, energy, Environment, ethanol, Farming, Food, Foodgrains, Ford, Forests, Fuel, Gas, Grains, Green, Impact, Industry, Iowa, Land, LNG, Natural, Nature, Oats, oil, Palm, Petrol, Plants, Pollution, Prices, Pulses, Rainforest, Research, rice, Sector, Solar, Sources, Soya, Sugar, Sugarcane, Sunflower, Trees, US, USA, Vegetables, Vehicles, Wheat, Wind | Leave a Comment »

Mooligai Corner – Herbs & Naturotherapy: Parangikkai

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2007

மூலிகை மூலை: பறங்கி விதையால் பறக்கும் நோய்கள்!

அகன்ற தடிமனான இலைகளைக் கொண்டது. பற்றுக் கம்பிகளையும் மஞ்சள் நிறப் பூக்களையும் உருண்டையான பெரிய சதைப் பற்றுள்ள மஞ்சள் நிறக் கனிகளையும் உடைய படர் கொடி இனமாகும். விதையும், காயின் தோலுமே மருத்துவப் பயனுடையது. காய், பழம் உடல் நலத்துக்கு நல்லது அல்ல. விதை காமம் பெருக்கவும், உடல் வெப்பு நீக்கவும் பயன்படும். தமிழகம் எங்கும் பயிரிடப்படுகின்றன.

வேறு பெயர்கள்: சர்க்கரைப் பறங்கி, பூசணை, பூசணி, சர்க்கரைப் பூசணை, சர்க்கரைப் பறங்கி, பூழிய பலம்.

வகைகள்: கோடைப் பூசணை (குழிப் பறங்கி)

மருத்துவக் குணங்கள்: பறங்கி விதையை 30 கிராம் எடுத்து அதேயளவு சர்க்கரைச் சேர்த்து இரவில் உண்டு காலையில் விளக்கெண்ணெய் சிறிது குடிக்கப் பேதியாகி தட்டைப் புழு, மலப் புழுக்கள் வெளியேறும்.

பறங்கி விதையைத் தோல் நீக்கி உலர்த்திப் பொடி செய்து 2 சிட்டிகையளவு எடுத்து அத்துடன் சீரகப் பொடி 1/4 சிட்டிகை கலந்து சிறிது வெல்லத்துடன் சாப்பிட்டு வர இரத்த வாந்தி, இரத்தப் பித்தம் குணமாகும்.

பறங்கி விதை 30கிராம், வெள்ளரி விதை 15 கிராம், பூனைக் காலி விதை 10 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடித்துவரச் சிறுநீர்க் கோளாறுகள் குணமாகும்.

பறங்கிப் பட்டையை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்துவர சொற்ப வாய்வு, சூளை கரப்பான், குட்டம், கிராந்தி குணமாகும்.

பறங்கி உட்சதையை விதை நீக்கி வேகவைத்து பிசைந்து புண்களின் மீது வைத்துக்கட்ட, துர்நாற்றம் நீங்கிச் சதை வளர்ச்சி உண்டாகும்.

பறங்கியின் உற்சதையை விதை நீக்கி வெயிலில் நன்றாகக் காய வைத்து இடித்து லேகியமாக்கிக் கொடுக்க இரத்த வாந்தி, கோழையை அகற்றும்.

பறங்கியின் பழுத்த காயின் காம்பை எடுத்து நன்றாக உலர்த்தி நீரில் அரைத்துக் கொடுக்க நஞ்சுகள் நீங்கும்.

பறங்கியின் சதையை உலர்த்திச் சீரகம் சேர்த்து இடித்து சிறிது கற்கண்டுடன் சேர்த்து உண்ண வேனிற்காலத்தில் வெப்பத்தால் உண்டாகும் அழற்சி தணியும்.

பறங்கியின் விதை 10 கிராம் எடுத்து வறுத்து சர்க்கரை கலந்து இரவு படுக்கைக்குப் போகும் முன் தின்று மறுதினம் காலையில் ஆமணக்கெண்ணெய் சாப்பிட்டு வெந்நீர் அருந்திவர தட்டைப் புழு செத்துவிடும்.

பறங்கி விதையை 15 கிராம் அளவு எடுத்து 300 மில்லி நீரில் போட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வெள்ளை நீங்கும். சிறுநீரைப் பெருக்கும்.

Posted in Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Fruits, Herbal, Herbs, Medicinal, Mooligai, Moolikai, Natural, Naturotherapy, Parangi, Parangikkai, Paranki, Poosani, Poosanikkai, Pumpkin, Pusani, Squash, Sweet Pumpkin, Vegetables | Leave a Comment »

Wal-mart entry into Retail business in India – Impact & Globalization

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2007

வாடப் போகும் வாழ்க்கை ஆதாரம்

மா.பா. குருசாமி

நமது நாட்டில் உலகமயமாக்கலின் விளைவாக மிகப்பெரிய நிறுவனங்கள் தொழில், வாணிபத்தில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு மாற்றங்களைச் செய்து கொண்டிருக்கின்றன.

உற்பத்தியிலும், விற்பனையிலும் சிறிய அளவில் நடைபெறும் தொழில்களை ஓரங்கட்டிவிட்டு, கோடிக்கால பூதங்களாக பெரிய நிறுவனங்கள் கோலோச்சப் போகின்றன. இவற்றால் ஒவ்வொரு துறையிலும் வாழ்க்கை ஆதாரத்தை இழந்து லட்சக்கணக்கான மக்கள் தவிக்கப் போகின்றனர். இதற்கோர் எடுத்துக்காட்டு சில்லறை வாணிபம்.

வேளாண்மையில் இன்றும் கோடிக்கணக்கான மக்கள் சின்னஞ்சிறு அளவில் இரண்டு ஏக்கர், மூன்று ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்கின்றனர். இவர்கள் சாகுபடி செய்யும் உணவு தானியங்களும், காய்கறிகளும், தொழிலுக்கு வேண்டிய மூலப் பொருள்களும் நாடு முழுவதும் இருக்கின்ற நுகர்வோருக்கும் தொழிற்சாலைகளுக்கும் செல்கின்றன.

இதேபோல பெரிய, சிறிய தொழிற்கூடங்களில் உற்பத்தியாகின்ற எண்ணற்ற ஏராளமான பொருள்கள் கோடிக்கணக்கான நுகர்வோர்களுக்குச் செல்கின்றன. இவை எப்படிப் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன என்பதை எண்ணிப் பார்த்தால் வியப்பாக இருக்கும். இவை மொத்த வியாபாரிகளிடம் கைமாறி, இடைப்பட்ட வணிகர்களிடம் சென்று, இறுதியில் சில்லறை வியாபாரிகள் கைகளுக்கு வருகின்றன. அவர்களிடமிருந்து நுகர்வோருக்குப் போகின்றன.

சில்லறை வியாபாரிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முதல் வகையினர் லட்சக்கணக்கில் முதலீடு செய்து பெரிய கடைகளாக அமைத்து, எல்லா வகைப் பொருள்களும் ஓரிடத்தில் கிடைக்கின்ற வகையில் இருப்பு வைத்து விற்பனை செய்பவர்கள். பெரும்பாலும் இப்படிப்பட்ட கடைகள் நகரங்களில் இருக்கும். இவர்களிடம் நுகர்வோர் மட்டுமன்றி சிறிய வியாபாரிகளும் பொருள்களை வாங்குவார்கள்.

இரண்டாம் வகையினர் ஆயிரக்கணக்கில் முதலீடு செய்து சிறுகடைகளாக, பெட்டிக்கடைகளாக அமைத்துக் கொண்டு வாணிபம் செய்பவர்கள்.

மூன்றாம் பிரிவினர் நூற்றுக்கணக்கில் முதலீடு செய்து கூடைகளில், பெட்டிகளில், தள்ளுவண்டிகளில் பொருள்களை வைத்து தெருத்தெருவாக பொருள்களை விற்றுப் பிழைப்பவர்கள்.

மொத்தத்தில் நாடு முழுவதும் கணக்கெடுத்தால் பல லட்சம் பேர் சில்லறை வாணிபத்தில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பதை அறியலாம். இவர்களுக்கு வாணிபம் வாழ்க்கை முறை. விற்றால் சாப்பாடு; இல்லையேல் பட்டினி.

அளவும் விளைவும்: நமது நாட்டில் சில்லறை வாணிபத்தின் அளவு எவ்வளவு இருக்கும்? கருத்தியல் அடிப்படையில் நுகர்பொருள் உற்பத்திக்குச் சமமாக சில்லறை விற்பனை இருக்குமென்று கூறலாம்.

நமது நாட்டில் மிகுதியாக மக்கள் தொகை இருப்பதால் உலகில் நமது நாடு பெரிய சந்தையாகக் கருதப் பெறுகின்றது. இதனால்தான் வளர்ச்சி பெற்ற நாடுகளும், மிகுதியாக ஏதாவது ஒன்று அல்லது சில பொருள்களை உற்பத்தி செய்யும் நாடுகளும் அவர்களது எச்சப் பொருள்களை நமது நாட்டில் வந்து கொட்டத் தயாராக இருக்கின்றன.

நமது மக்களிடம் வளர்ந்து வருகின்ற நுகர்வுக் கலாசாரம் கையில் பணமிருந்தால், கடன் கொடுக்க ஆளிருந்தால் எதனையும் வாங்கலாம் என்ற மனப்பான்மையை வளர்த்திருக்கிறது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு “செல்போன்’.

இந்த அங்காடி முறை வளர்ச்சியையும், சில்லறை வாணிபத்தில் வெளியில் தெரியாமல் இலைமறை காயாக இருக்கும் வளத்தையும் வாய்ப்பையும் புரிந்து கொண்டதால் மிகப் பெரிய நிறுவனங்கள் சில்லறை வாணிபத்தில் முதலீடு செய்ய வரிந்து கட்டிக் கொண்டு முன்வருகின்றன.

வரப்போகும் ஆபத்து: நமது நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பெரு நகரங்களில் பேரங்காடிகளை அமைத்து வருகின்றனர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் சில்லறை வாணிபம் பேரங்காடிகள் மூலம் நடைபெறுகிறது. ஓர் அங்காடிக்குள் நுழைந்தால் வேண்டிய எல்லாப் பொருள்களையும் அங்கு வாங்கலாம். அங்குள்ள மக்களுக்கு அது ஏற்ற முறையாக இருக்கிறது. நமது நகர மக்களுக்கு பேரங்காடிப் பழக்கம் வந்து கொண்டிருக்கிறது.

தென் மாநிலங்களில் ஸ்பென்சர்ஸ் டெய்லி, நீல்கிரிஸ், சுபிக்ஷா, திரிநேத்ரா ஆகிய பெரிய நிறுவனங்கள் நகரங்களில் பேரங்காடிகளை அமைத்து ஓரளவு வெற்றிகரமாகச் சில்லறை வாணிபத்தில் ஈடுபட்டு வருகின்றன. வடக்கு, மத்திய மாநிலங்களில் பண்டாலூன் ரீடெய்ல் என்ற நிறுவனம் 60 உணவுப் பொருள் பேரங்காடிகளை அமைத்திருக்கிறது.

இவற்றையெல்லாம் பார்த்த ரிலையன்ஸ் நிறுவனம் நாம் கற்பனை செய்ய முடியாத அளவில் மிகப் பெரிய திட்டத்தோடு சில்லறை வாணிபத்தில் நுழைந்திருக்கிறது. 2006 நவம்பர் மத்தியில் ஹைதராபாதில் ஒரே நாளில் அதிரடியாக 11 “ரிலையன்ஸ் பிரஷ் அவுட்லெட்ஸ்’ என்னும் மிகப்பெரும் விற்பனை நிலையங்களை அமைத்ததன் மூலம் நாட்டையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

ரிலையன்சின் திட்டம் மிகப் பெரியது. 2010 – 11இல் இந்தியாவில் சில்லறை வாணிபத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாயோடு முதலிடத்தில் இருக்க வேண்டுமென்பது நோக்கம். அதன் தொடக்கம் 22 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு.

ரிலையன்சோடு போட்டி போட்டுக் கொண்டு இன்னும் சில பெரிய நிறுவனங்கள் சில்லறை வாணிபத்தில் பங்கு பெற பெரும் முதலீட்டோடு அங்காடி ஆடுகளத்தில் நுழையப் போகின்றன.

ஆதித்யா பிர்லா குழுமம் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப் போகிறதாம். பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கோப்பர்ஸ் என்ற நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சில்லறை வாணிபத்தில் பெரிய நிறுவனங்கள் 412 பில்லியன் டாலர் முதலீடு செய்யுமென்று மதிப்பிடுகிறது.

இந்த பெரும் பூதங்களான நிறுவனங்கள் ஆயிரங் கோடிகள் என்ற கணக்கில் முதலீடு செய்கின்றபோது சிறிய, பெரிய நகரங்களில் எல்லாம் இவற்றின் கிளை அங்காடிகள் இருக்கும். குறைந்த விலையில் விற்பனை செய்வதாகக் கூறுவார்கள். பொருள்களை மொத்தமாகக் கொள்முதல் செய்வதால் அவர்களால் குறைந்த விலைக்கு வாங்க முடியும். சிறிய உற்பத்தியாளர்கள், விவசாயிகள் அவர்களிடம் விற்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவார்கள். வாங்கும் விலையை அவர்கள்தான் நிர்ணயிப்பார்கள். அவர்களோடு சாதாரண வியாபாரிகளால் போட்டி போட முடியாது.

மேலும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை விலையில் 10 அல்லது 15 சதவீதம் தள்ளுபடி தருவார்கள். இது போதாதா நமது மக்களைக் கவர்வதற்கு? நடுத்தர, மேல்மட்ட மக்கள் இத்தகைய முறையால் பல நன்மைகள் கிடைப்பதாக நம்புவார்கள். இதனால் சங்கிலித் தொடராக இருக்கும் பேரங்காடிகள் கொடி கட்டிப் பறக்கும்; சில்லறை வணிகர்கள் செல்லாக் காசுகளாவார்கள்.

இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் நகரங்களோடு நின்றுவிடாது. இவர்கள் முகவர்கள் மூலமாகவோ புதிய விற்பனை முறைகளின் மூலமாகவோ கிராமங்களிலும் ஊடுருவுவார்கள். கைக்கு எட்டிய தூரம்வரை இவர்களது சில்லறை வாணிபம் பரந்து விரியும்.

பொருளாதாரத்தின் ஏகபோக நடவடிக்கைகள் செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்களாக்கும்; ஏழைகளை மேலும் ஏழைகளாக்கும். சிந்திக்கக்கூடிய நடுத்தர மக்கள் கிடைக்கும் சில்லறை நலன்களுக்காக நாட்டு நலனை அடகு வைக்க நினைக்கக் கூடாது.

குவிதல் முறைக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும். காட்டு வெள்ளப் போக்காக வரும் பெரும் முதலீட்டால் சில்லறை வணிகர்களை அழியாமல் காப்பது அரசின் கடமை. வருகிற ஆபத்தை சில்லறை வணிகர்களும் சிறு உற்பத்தியாளர்களும் உணர வேண்டும்; அறிய வேண்டும்; இணைய வேண்டும்; போராட வேண்டும்.

நமது நாட்டில் கடைநிலை மக்களைக் காக்காமல், கவனிக்காமல் வளத்தையும் வளர்ச்சியையும் காண இயலாது.

(கட்டுரையாளர்: இயக்குநர், குமரப்பா ஆராய்ச்சி நிறுவனம், தாயன்பகம், திண்டுக்கல்).

==================================================
ஒரு விவசாயியின் எதிர்காலம்?

ச. குப்பன்

எனக்குத் தெரிந்த நண்பர் ஒரு சிறு விவசாயி.

அவருக்கு ஏரிப் பாசனத்தில் நிலமிருந்தது. ஏரிக்கு நீர் வரும் வழிகளில் கல்குவாரிக்காக பள்ளம் தோண்டி கற்களை வெட்டியெடுத்ததால் ஏரியானது முழுவதுமாக நிரம்பி பல ஆண்டுகளாகிவிட்டன. அதனால் விவசாயம் செய்வதற்குச் சிரமமான நிலையில் இருந்தபோது நிலவள வங்கியொன்று புதிய குழாய் கிணறு அமைப்பதற்கு அவருக்கு கடன் கொடுத்தது. டீசல் விற்கும் விலையில் நீர் இறைக்க டீசல் எஞ்சினைப் பயன்படுத்தி விவசாயம் செய்தால் கையும்காலும்கூட மிஞ்சாது என்பதால் குழாய் கிணற்றிலிருந்து நீர் இறைக்க மின் மோட்டார் அமைத்தால் நல்லது என எண்ணினார்.

மின்வாரியமானது தொழில்துறைகளுக்கெல்லாம் கேட்டவுடன் மின் இணைப்பு கொடுத்துவிடும். ஆனால் ஒரு விவசாயி விண்ணப்பிக்கும்போது மட்டும் வரிசை முன்னுரிமைப்படி தோராயமாக பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் மின் இணைப்பு கொடுப்பதற்கு உத்தரவிடுவார்கள். இதற்கு மாற்று வழியாக மின்வாரியத்தில் ரூ. 25 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தினால் உடனடியாக இணைப்பு கிடைக்கும் என்பதால் மின்மோட்டார், இதர உபகரணங்கள் மற்றும் மின்வாரிய வைப்புத்தொகையையும் சேர்த்து நிலவள வங்கியில் நீண்டகாலக் கடனாகப் பெற்று குழாய் கிணறு தோண்டி மின் மோட்டாரும் அமைத்தார்.

அந்த ஆண்டு சிறிதளவு கூடுதலாக மழை பொழிந்தால் நன்செய் பயிர் செய்யலாமே என நெற்பயிரை நட்டு பராமரித்து வந்தார். இதற்கான நடைமுறை மூலதனமாக கைமாற்று வாங்கி சரி செய்தார். நெல் அறுவடையாகி களத்து மேட்டிற்கு வரும்போது கைமாற்றாக வாங்கிய கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்தும்படி நெருக்கியதால் விளைந்து வந்த நெல்லை வேறுவழியின்றி மிகக் குறைந்த விலைக்கு விற்று கடனைத் தீர்த்தார்.

சரி நிலவள வங்கி மற்றும் இதுபோன்ற கடன் தொல்லையைத் தீர்ப்பதற்கு பணப்பயிரான கரும்பைப் பயிரிட விரும்பினார். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே கரும்புப் பயிரைப் பதிவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது.

எனவே தனியார் சர்க்கரை ஆலைகள் நல்ல விலை கொடுக்கின்றனரே என்று பதிவில்லாமல் பயிரிடலாமே என மனைவியின் காதில் மூக்கில் இருந்த நகைகளை அடமானம் வைத்துப் பயிரிட்டார். அந்த ஆண்டு கரும்பு விளைச்சல் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருந்ததாலும் சர்க்கரை ஆலையில் பதிவு செய்யாது கரும்பைப் பயிரிட்டதாலும் “அடிமாட்டு விலைக்கு’ விற்றார்.

கரும்பும் பழி வாங்கிவிட்டது என கலங்கி கரும்பின் வேர்கட்டையை பறித்துப்போட்டுவிட்டு, நிலத்தை உழுது, எள்ளைத்தான் விதைத்துப் பார்ப்போமே என முடிவெடுத்தார்.

அறுவடையின்போது இதுவும் (எள்ளும்) சரியான விலையில் விற்பனை ஆகாததால் வேறு கூடுதல் பணியாக ஆடு வளர்க்கலாம் என்று நிலவள வங்கியிலிருந்து மேலும் கடன் பெற்று ஆடுகள் வாங்கி வளர்த்தார். அந்த ஆடு முழுவதும் நோய் வந்து இறந்து போனதால் இழப்பை ஈடுகட்டுவதற்காக காப்பீட்டு நிறுவனத்தை அணுகியபோது பிரிமீயத் தொகை வாங்குவதற்கு மட்டும் குழைய குழையத் தேடி வந்தவர்கள் இழப்பீடு கேட்கும்போது மட்டும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வரியில் இதற்கான விதி சேர்க்கப்படவில்லை என்றும் அதனால் இந்த இழப்பீடு தொகை கிடைக்காது எனவும் கூறி கைவிரித்து விட்டனர். சரி வேறு என்னதான் செய்வது என எண்ணி மீண்டும் தன்னுடைய நிலத்தில் கத்தரி பயிரிட்டார். திருஷ்டிபடும்படி கத்தரி செடி ஆள் உயரம் வளர்ந்து நல்ல காய் காய்த்தது. இவருடைய துரதிர்ஷ்டம் அந்த ஆண்டில் விளைச்சல் அதிகமாக இருந்ததால் காய் பறித்த கூலி, ஏற்றிச் சென்ற பேருந்துக் கட்டணம் மற்றும் இறக்குக் கூலியைக் கூட கத்தரிக்காயின் விற்பனை வருவாயில் சரிக்கட்ட முடியவில்லை.

இந்த நிலையில் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதற்காக இவருடைய நிலத்திற்கு அருகில் சென்ற ஓடையில் பெரிய குழாய்க் கிணறு ஒன்றை அமைத்து நீரை உறிஞ்சியதால் இவருடைய சிறிய குழாய்க் கிணற்றில் நீர் வற்றிவிட்டது. அரசு நிர்வாகத்துடன் போட்டி போட்டுக் கொண்டு அந்த அளவுக்கு ஆழமாக குழாய்க் கிணறு அமைக்க வசதி இல்லாததாலும் நிலவள வங்கிக் கடனை உடனே திரும்பச் செலுத்தவேண்டிய நிர்பந்தத்தினாலும் என்ன செய்வது என்று தத்தளித்தார்.

இச்சமயத்தில் நிலவள வங்கியில் கடன் பெற்று நிலுவையாக உள்ளவர்களின் கடனுக்கான வட்டியில் பாதியையும் மற்றும் அசல் தொகை முழுவதையும் செலுத்தினால் எஞ்சிய பாதி வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. உடனடியாக 25 சதவீதம் செலுத்த வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சுற்றத்தாரிடம் கைமாற்றுக் கடன் வாங்கி கால்பங்கு தொகையை அவர் செலுத்தினார்.

குழாய்க் கிணற்றில் நீர்வற்றிவிட்டதால் தொடர்ந்து நிலத்தில் பயிரிட முடியவில்லை; என்ன செய்வது என நிலத்தை விற்று நிலவள வங்கி மற்றும் இதர கடன்களையாவது தீர்த்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என எண்ணினார். இதுதான் சமயம் என அவருடைய நிலத்தை மிகக் குறைந்த விலைக்குக் கேட்டனர். கடனை மட்டும் சரி செய்கிற அளவுக்காவது தொகை வந்தால் போதும் என்று நிலத்தை விற்று கடன் அனைத்தையும் தீர்த்துவிட்டார்.

இந்த நடவடிக்கை முடிந்த சமயத்தில் புதியதாகப் பொறுப்பேற்ற அரசு நிலவள வங்கியில் நிலுவையில் உள்ள கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது என அறிவித்தது. அது மட்டுமன்றி, அவருடைய ஊரின் அருகாமையிலுள்ள தரிசு நிலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப் போவதாகவும் அறிவித்தது. அதனால் அவர் விற்ற நிலத்தை அவரிடம் அடி மாட்டு விலைக்கு வாங்கியவர் “யானை விலை குதிரை விலையாக’ மிக அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் கண்டார். ஆனால் இவரோ இப்போது ஒரு நிலமற்ற ஏழை கூலி விவசாயத் தொழிலாளியாகப் பிழைப்பைத் தேடி நகரத்தை நோக்கிச் சென்றார். இவருடைய இந்த நிலைமையை யாரிடம் சென்று முறையிடுவது?

இத்தகைய விவசாயிகளைக் காப்பதற்கு என்னதான் செய்ய வேண்டும்? ஒவ்வொரு கிராமத்திலும் அறுவடை சமயத்தில் விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களை நல்ல விலை கிடைக்கும்போது விற்பதற்கு ஏதுவாக சிறிது காலம் பாதுகாப்பாக விளைபொருள்களை வைத்திருப்பதற்கான குளிர்பதன கிடங்கை அமைக்க வேண்டும். அதுவரையில் நடைமுறைச் செலவை ஈடுகட்டுவதற்காகக் குறைந்த வட்டியில் இந்த விளைபொருள்களை அடமானம் வைத்துக் கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதன்மூலம் இவரைப் போன்ற விவசாயிகளுக்கு விளைவித்த பயிர்களிலிருந்து முழு வருமானமும் கிடைக்கும். அவர்களின் வாழ்வும் ஏற்றும் பெறும்.

வங்கிகள் நடைமுறை மூலதனம் வழங்கும்போது பயிர்கள் மூலம் சரியான வருமானம் கிடைக்காதபோது அடுத்த பயிருக்கான கடனை முந்தைய கடனை அடைத்தால்தான் மறுபடியும் கடன் கொடுக்க முடியும் என மறுக்கக் கூடாது. அதற்குப் பதிலாக மேலும் சிறிது கடனைக் கொடுத்து நொடிந்த விவசாயிகளை கைதூக்க உதவ வேண்டும்.

விவசாயிகளின் பயிர்கள், கால்நடைகள் போன்றவற்றுக்கு இழப்பு ஏற்படும்போது காப்பீட்டு நிறுவனங்கள் சரியான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகள் விளைவித்த பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்க தகுந்த ஏற்பாடு செய்தால் மட்டுமே அவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்த முடியும். அதை மட்டும் செய்தாலே போதும். விவசாயிகள் தற்கொலை பெருமளவில் தடுக்கப்பட்டுவிடும்.

(கட்டுரையாளர்: தலைமைக் கணக்கர், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மூங்கில்துறைப்பட்டு).
==================================================

Posted in Agriculture, Analysis, Backgrounder, Bankruptcy, Banks, Bharti, Birla, Biz, Brinjal, Business, Cane, Capitalism, Collars, Commerce, Consumer, Customer, Diesel, EB, Eggplant, Electricity, Engine, Expenses, Farmer, Finance, Food, Fresh, Fruits, Futures, Globalization, harvest, harvesting, Impact, Income, India, Industry, Inflation, Investment, Irrigation, Lake, Loan, Manufacturing, markets, Motor, Operations, Options, Plants, Power, Premium, Prices, Rain, Recession, Reliance, retail, sales, Small Business, Small scale, SSI, Sugar, Sugarcane, Tap, Trading, Vegetables, Venture, Wal-Mart, Walmart, Water | 1 Comment »

Reliance Fresh – Impact, Job growth, Details, Statistics, Benefits & Information

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 25, 2007

தமிழக சில்லறை வர்த்தகத்தில் ரூ.2,500 கோடி முதலீடு: ரிலையன்ஸ் திட்டம்

பா. ஜெகதீசன்

சென்னை, பிப். 25: தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் ரூ.2,500 கோடி அளவுக்கு முதலீடு செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தங்களது சில்லறை வர்த்தகத்தின் மூலம் 40 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மேலும் ஆயிரக் கணக்கானவர்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு அளிக்க அந்நிறுவனம் உத்தேசித்துள்ளது.

விவசாயிகள், சிறு வியாபாரிகள், நுகர்வோர் ஆகியோர் பலன் பெறும் வகையில் தங்களது சில்லறை வர்த்தகம் நடைபெறும் என அந்நிறுவன வட்டாரங்கள் உறுதி கூறின.

தற்போது சென்னையில் 12 இடங்களில் “ரிலையன்ஸ் ஃப்ரெஷ்’ என்கிற பெயரில் காய்கறிகள் -பழங்கள் -அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் சில்லறை விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

எந்தெந்த இடங்களில்…:

  1. அண்ணா நகரில்
  2. 2 இடங்களிலும்,
  3. முகப்பேர்,
  4. புரசைவாக்கம்,
  5. அசோக் நகர்,
  6. தியாகராய நகர்,
  7. திருவான்மியூர்,
  8. அடையாறு
  9. நந்தனம் சேமியர்ஸ் சாலை,
  10. தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை,
  11. வளசரவாக்கம்,
  12. சூளைமேடு ஆகிய பகுதிகளில் தலா ஓர் இடத்திலுமாக இந்த 12 நிலையங்கள் அமைந்துள்ளன.

இந்நிலையங்களால் சிறு வியாபாரிகள் எவ்வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என ரிலையன்ஸ் நிறுவன வட்டாரங்கள் கூறின.

விவசாயிகளுக்கு உதவி: விவசாயிகள் வாழும் பகுதிகளிலேயே ரிலையன்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. இதனால் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களைக் கொள்முதல் மையங்களுக்குக் கொண்டு செல்ல ஆகும் வண்டிச் செலவு, விளைபொருள்களைச் சுத்தப்படுத்தி, பதப்படுத்த ஆகும் செலவு போன்றவை தவிர்க்கப்படும்.

விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20 சதவீத லாபம் கிடைக்கும் வகையில் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது என ரிலையன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இடைத்தரகர்களின் மூலம் விற்கும்போது பல இடங்களில் பணம் உடனடியாக விவசாயிகளுக்குக் கிடைக்காத நிலை இருந்து வந்தது.

விவசாயிகள் எந்தெந்த காலகட்டங்களில் எத்தகைய காய்கறிகளைப் பயிரிடலாம்? எத்தகைய விதைகள், இதர இடுபொருள்களைப் பயன்படுத்தினால் அதிக விளைச்சல் கிடைக்கும்? மக்கள் அதிகமாக விரும்பும் காய்கறிகள் எவை என்பன போன்ற விவரங்களை விவசாயிகளுக்கு ரிலையன்ஸ் ஃரெஷ் அவ்வப்போது தெரிவித்து, அவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுகிறது.

நுகர்வோருக்கு நியாய விலை: விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதால், அதிக லாபம் வைத்து விற்க வேண்டிய அவசியம் இல்லை. நியாயமான விலைக்கு விற்க எங்களால் முடிகிறது என அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னையில் உள்ள 12 ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடைகளில் 761 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களைத் தவிர, கொள்முதல் உள்ளிட்ட பணிகளில் 411 பேர் வேலை செய்கின்றனர். புழலில் உள்ள விநியோக மையத்தில் 447 பேரும், 10 இடங்களில் உள்ள சேகரிப்பு மையங்களில் 65 பேரும் பணியாற்றுகின்றனர்.

யாருக்கும் போட்டி இல்லை

சென்னை, பிப். 25: ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடைகள் யாருக்கும் போட்டி இல்லை என ரிலையன்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

சென்னையில் சுமார் 70 லட்சம் பேர் வசிக்கின்றனர். கடந்த 15 நாள்களில் சராசரியாக நாள்தோறும் 13 ஆயிரம் பேர் தான் எங்களின் 12 கடைகளிலும் பொருள்களை வாங்கி உள்ளனர். இதில் இருந்தே எங்கள் கடைகள் யாருக்கும் போட்டி இல்லை. எவருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாகும் என்றனர் அவர்கள்.

ரிலையன்ஸ் ஃப்ரெஷ் விற்பனை நிலையங்களைப் போலவே ஏற்கெனவே பல்வேறு நிறுவனங்கள் ஆங்காங்கே விற்பனையகங்களை நடத்துகின்றன. அந்நிறுவனங்களைப் போலவே, நாங்களும் யாருடைய தொழிலையும் பாதிக்கவில்லை என அவர்கள் கூறினர்.

================================================================
சலுகை விலையில் பொருள்களை கொள்முதல் செய்ய ரிலையன்ஸ்-நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் ரகசிய உடன்பாடு

சென்னை, மார்ச் 29: நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் ரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:

ரிலையன்ஸ் நிறுவனம் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட 40 சதவீதம் சலுகை விலையில், குறைவான விலைக்கு பொருள்களை கொள்முதல் செய்கிறது. இதற்காக, சில நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுடன் ரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் ரிலையன்ஸ் நிறுவன தயாரிப்புகள் அனைத்தையும் புறக்கணிப்போம்.

ரிலையன்ஸ் நிறுவனம் சென்னையில் 14 சில்லறை காய்கறிக் கடைகளைத் திறந்து உள்ளது. மேலும், ஏதாவது கடையைத் திறந்தால் அப்பகுதி வியாபாரிகளைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்.

மே 5-ல் வணிகர் மாநாடு: மே மாதம் 5-ம் தேதி வணிகர் தின மாநாட்டை சேலத்தில் நடத்துகிறோம்.

ஆன்-லைன் வர்த்தகம், மதிப்புக் கூட்டு வரி ஆகியவை விலைவாசி உயர்வுக்குக் காரணம். எனவே, அவற்றை தடை செய்ய வேண்டும். சில்லறை வணிகத்தில் பெரிய நிறுவனங்கள் ஈடுபடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு தழுவிய போராட்டங்களை செப்டம்பர் இறுதியில் மேற்கொள்வோம் என்றார் வெள்ளையன்.

Posted in Backgrounder, Benefits, Biz, Business, Buyer, Chennai, Commerce, Competition, Consumer, Details, Economy, Employment, Finance, Fresh, Fruits, Growth, Healthy, Impact, Information, Jobs, Madras, Market, Opportunity, Reliance, Reliance Fresh, Seller, Statistics, Vegetables, Vendors | Leave a Comment »

What to Eat, How to eat & When to eat – A Primer on Indian Cooking, Foods, Vegetables

Posted by Snapjudge மேல் ஜனவரி 27, 2007

ஆரோக்கியம்: என்ன சாப்பிடுவது? எப்படிச் சாப்பிடுவது?
ந. ஜீவா

தாரிணி கிருஷ்ணன்

பூசணிக்காய், தயிர் எல்லாம் குளிர்ச்சின்னு சொல்றாங்களே? கீரை சாப்பிடும் போது தயிர் சேர்த்துக்கக் கூடாதுங்கிறாங்களே? வாழைப் பழத்தைச் சாப்பாட்டுக்கு முன்னால சாப்பிடணுமா? சாப்பாட்டுக்குப் பின்னால சாப்பிடணுமா? சாப்பிட்டவுடன் காபி, டீ சாப்பிடலாமா? இல்லை ஜில்லுன்னு ஒரு கூல்டிரிங்க்ûஸ உள்ளே இறக்கலாமா? சமைத்த உணவை ஃபிரிட்ஜ்ல வச்சு சூடு பண்ணிச் சாப்பிடலாமா? இப்படி நிறையக் கேள்விகளோடு சத்துணவியல் நிபுணர், ஆலோசகர் தாரிணி கிருஷ்ணனை அணுகினோம். ஒரு புன்சிரிப்புடன் நமது கேள்விகளுக்கு அவர் சொன்ன பதில்களிலிருந்து..,

நம்மில் பலபேர் பூசணிக்காய் குளிர்ச்சி, தயிர் குளிர்ச்சின்னு சொல்லிக்கிட்டு மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் சேர்த்துக் கொள்ளுறதில்லை. சிலர் வேறு சில பொருள்களைச் சூடுன்னு சொல்லி ஒதுக்கிடுவாங்க. உண்மையில் சாப்பிடுற பொருளில குளிர்ச்சி, சூடுன்னு எதுவுமில்லை. நூற்றுக்கு ரெண்டுபேருக்கு பூசணிக்காய் சாப்பிட்டபின் சளி பிடிச்சிக்கிட்டதுன்னு வச்சுக்கங்க, அவுங்க பூசணிக்காயாலதான் சளின்னு நம்பிடுவாங்க. உண்மையில் பூசணிக்காய் அவுங்களுக்கு அலர்ஜியாயிருந்து அதனால சளிபிடித்தாலும் எல்லாருக்கும் அது அலர்ஜியாக இருக்கணும்ங்கிற அவசியமில்லை.

கீரை சாப்பிட்டா தயிர் சாப்பிடக் கூடாதுன்னு சொல்லுவாங்க. அதனால் அவங்க நினைக்கிற மாதிரி பெரிய கெடுதல் வந்துடாது. அதேசமயம் கீரையில் ஆக்ஸலேட், ஃபைட்டேன்னு சத்துக்கள் இருக்கு. தயிரில் சுண்ணாம்புச் சத்து இருக்கு. கீரையும் தயிரும் சாப்பிட்டா சுண்ணாம்புச் சத்து உடலில் சேராது. அதுபோல சாம்பார் சாதம் சாப்பிட்டு பேரீச்சம்பழம் சாப்பிடக்கூடாது. ஏன்னா இரும்புச் சத்தைக் கிரகிக்கிற தன்மை இல்லாமல் போயிடும்.

நிறையப் பேர் வாழைப் பழத்தை மலச்சிக்கலுக்குத் தர்றதுன்னு நினைக்கிறாங்க. பேதியாகிற குழந்தைகளுக்கு நல்லா கனிந்த வாழைப்பழம் ஒன்று கொடுத்தால் பேதியாவது நின்றுவிடும். வாழைப்பழத்தில் கரையக் கூடிய நார்ச்சத்து இருக்கு. அது மலச்சிக்கல் வராமல் தடுக்கும். வாழைப்பழத்தைச் சாப்பாட்டுக்கு முன்னாலேயோ, பின்னாலேயோ எப்ப வேணுமின்னாலும் சாப்பிடலாம். வாழைப்பழம் சாப்பிட்டா சளிப் பிடிக்கும்ங்கிறதுக்கு விஞ்ஞானப்பூர்வமான அடிப்படை கிடையாது. மலச்சிக்கலைப் போக்குறதுக்கு பப்பாளி, கொய்யாப்பழம் ரொம்ப நல்லது. கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி இருக்கு. அதிலுள்ள கொட்டை மலச்சிக்கலைப் போக்கும்.

சிலர் வளர்கிற குழந்தைகளுக்கு எதை வேணாலும் கொடுக்கலாம்; ஒண்ணும் செய்யாதுன்னு சொல்வாங்க. அவங்க சொல்றதில உண்மையிருந்தாலும் அதுக்காக நிறையச் சாக்லேட் வாங்கித் தரக்கூடாது. சரியாகச் சாப்பிடுற பழக்கத்தை அவங்க கத்துக் கொள்கிற வயசு இது. நிறைய சாக்லேட், நிறைய ஐஸ் க்ரீம், சிப்ஸ், பிட்ஸôன்னு உள்ளே திணிச்சிக்கிட்டிருந்தா குழந்தைகள் குண்டாகிவிடுவார்கள். 12 வயசில இருந்து 15 வயசுவரை உள்ள குழந்தைகள் உடல்பருமனால் அதிகம் பாதிக்கப்படுறாங்க. சாக்லேட்ல கொழுப்பு, மாவு, சோடியம் அதிகம். இதை அதிகம் சாப்பிடுறவங்களுக்கு 20 – 25 வயசிலே ரத்தக் கொதிப்பு போன்ற வியாதிகள் வர வாய்ப்பிருக்கு. இந்தக் காலத்துல குழந்தைகளுக்கு உடற்பயிற்சி கிடையாது. வீடுகள்ல ஃபிளாட் சிஸ்டம் வந்துட்டதால குழந்தைகள் விளையாட இடமில்லை. நிறைய ஸ்கூல்களில் விளையாட கிரவுன்டே கிடையாது. நாளைக்கு டெஸ்ட் இருந்தா இன்னைக்கு பி.டி. கிளாûஸ ஸ்கூல்லயே கட் பண்ணிடுறாங்க. டிவி பார்க்குறது, கம்ப்யூட்டர் கேம் விளையாடுறதுதான் குழந்தைங்க விளையாட்டு. அதனாலதான் சிறு குழந்தைகளுக்கும் கூட சர்க்கரை வியாதி வருது.

சாப்பிட்டவுடன் கூல்டிரிங்க்ஸ் சாப்பிடுற பழக்கம் சிலருக்கு உள்ளது. பாட்டிலில் அடைச்சு விற்கும் எந்த ட்ரிங்க்ஸýம் உடலுக்கு நல்லதல்ல. ஜூஸ்ல சர்க்கரை, கெமிக்கல்ஸ் போட்டுக் கொடுப்பாங்க. இதிலே நார்ச்சத்து கிடையாது. பழத்தைப் பிழிஞ்சு ஃபிரஷ்ஷா ஜூஸ் சாப்பிடுறது நல்லது. கூல்டிரிங்க்ஸýக்குப் பதிலா இளநீர் குடிக்கலாம்.

சிலர் டிபன் சாப்பிட்டவுடன் டீ, காபி சாப்பிடுவார்கள். காபியைவிட டீ நல்லது; டீ சாப்பிட்டா ரத்தக் குழாய்கள்ல கொழுப்புப் படியாதுன்னு சொல்வாங்க. ஆனா அது நாம் சாப்பிடுற டீக்கு அல்ல. வெளிநாடுகள்ல டீன்னு சொன்னா அது பால், சர்க்கரை இல்லாத டீ. கொதிக்கும் நீரில் இலை டீயைப் போட்டு சிறிது நேரம் கழித்து வடிகட்டிச் சாப்பிடுவாங்க. டீத்தூளை வேக வைக்கக் கூடாது. அப்படி வேகவைத்தா டீயிலுள்ள டேனன்ஸ்(பஹய்ய்ண்ய்ள்) என்ற உடலுக்கு நல்லது செய்யும் சத்து அழிந்துவிடும். பால், சர்க்கரை சேர்த்து நல்லா கொதிக்கவச்சு சாப்பிடுற டீயால உடம்புக்குக் கெடுதி. சாப்பிட்டவுடன் டீ சாப்பிட்டா அது வயிற்றில் உள்ள அமிலத்தை அதிகப்படுத்தும்.

ஃபிரிட்ஜில் மாவை வைத்துப் பின்னர் எடுத்து இட்லி, தோசை செய்றதாலே பெரிய பாதிப்பில்லை. ஏன்னா அது புளிக்கிற ஐட்டம். மிச்ச உணவுப் பொருள்களை அதில் வச்சு திரும்பத் திரும்ப ஹீட் பண்ணினா ஒண்ணு, அதில உள்ள சத்து அழிஞ்சு போயிடும். இன்னொண்ணு, அதில் கிருமிகள் உருவாயிடும். இப்பல்லாம் கடைகள்ல பாக்கெட்ல அடைச்ச மாவு விக்கிறாங்க. அந்த மாவுல என்ன கலக்கிறாங்கன்னே யாருக்கும் தெரியாது. அதில நிறைய சோடா உப்புப் போடுறாங்க.

சிலர் அசைவ உணவோடு சைவ உணவைச் சேர்த்துச் சாப்பிட்டாக் கெடுதிம்பாங்க. அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. மட்டன் சமைக்கும் போது அதோடு உருளைக் கிழங்கு போடுறாங்க. வெங்காயம் இல்லாம அசைவ உணவு சமைக்க முடியுமா? பிரியாணிக்கு கத்திரிக்காயில் செய்யப்பட்ட கூட்டுமாதிரி ஒண்ணு செய்வாங்க. அதனால அசைவ உணவும் சைவ உணவும் ஒத்துப் போகாதுங்கிறது உண்மையல்ல. குறிப்பாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அசைவம் சாப்பிட்ட அன்னைக்கு கண்டிப்பா ஒரு கூட்டோ, பொரியலோ சேர்த்துக் கொள்ளணும். அசைவ உணவைக் கூட நிறைய எண்ணெய்யில்லாம சமைக்கணும்.

தேங்காய் சாப்பிட்டா ரத்தத்தில் கொழுப்புச் சத்துச் சேரும்னு சொல்வாங்க. அது உண்மைதான். ஆனா தேங்காயில் நார்ச்சத்து அதிகம். உடலுக்கு நல்லது செய்யும் கொழுப்பும் தேங்காயில் உள்ளது. என்றாலும் அதிகம் தேங்காய் சாப்பிட்டால் கெடுதிதான். கேரள மக்கள் அதிகம் தேங்காய் சேர்த்துக் கொண்டாலும் அவுங்களுக்கு அதிகம் பாதிப்பு வராம இருக்கிறதுக்குக் காரணம், அவுங்க தேங்காயோடு மீனையும் அதிகம் சேர்த்துக்கிறதுதான். அதனால பாதகம் வருவது இல்லை. மேலும் உடலுழைப்பும் அவுங்களுக்கு அதிகம்.

உலகம் பூராவும் பெண்களுக்கு இருக்கிற பிரச்சினை ரத்தசோகை. ரத்தத்தில் இரும்புச் சத்துக் குறைந்து போறதுதான் ரத்தசோகை ஏற்படக் காரணம். இந்த ரத்த சோகையில் இரண்டாவது ஸ்டேஜ் என்று ஒன்று உள்ளது. இது கர்ப்பிணிகளுக்கு வந்துவிட்டால் பிறக்கிற குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும். இரும்புச் சத்து அதிகரிப்பதற்கு பெண்கள் பச்சைக் கீரை, காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கேழ்வரகு, தர்ப்பூசணி சாப்பிடலாம். பீட்ரூட்டில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதாகப் பலர் நம்பிக்கிட்டிருக்காங்க. ஆனா அதில் உண்மையில்லை. பேரீச்சம்பழத்தைக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை நீங்கும்.

சர்க்கரை வியாதி வந்த பின்னால் அவஸ்தைப்படுவதைவிட வராமல் தடுப்பது நல்லது. நிறையக் காய்கறிகள் சேர்த்துக் கொள்ளணும். உதாரணமா 4 பேர் உள்ள ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளைக்கு அதிகம் போனா கால் கிலோ காய் சமைக்கிறாங்க. இது போதாது. குறைந்தது 1 கிலோ காய்கறியாவது சேர்த்துக் கொள்ளணும். அதற்கடுத்து தினம்தோறும் 45 நிமிடங்கள் வாக்கிங் போறது நல்லது. ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கிட்டா சர்க்கரை வியாதியின் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். முதல்ல எல்லாம் சர்க்கரை வியாதியைப் பணக்காரர் வியாதிம்பாங்க. இப்ப ஏழை, பணக்காரன்னு வித்தியாசம் பார்க்காம, வயசானவங்க, குழந்தைங்கன்னு வித்தியாசம் இல்லாம சர்க்கரை வியாதி வருது. இதுக்குக் காரணம் டென்ஷன். டென்ஷன் இல்லாதவர் யாருமில்லை. குழந்தைகளுக்கும் கூட டென்ஷன் இருக்கு. டென்ஷன் இல்லாமத் தவிர்க்க மூச்சுப் பயிற்சி, தியானம், ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்த மெல்லிசான இசையைத் தினம்தோறும் பத்துநிமிடம் கண்ணை மூடிக் கொண்டு கேட்பது என்று முயற்சி பண்ணலாம்.

சர்க்கரைவியாதியைப் போலவே வரும் இன்னொரு வியாதி தைராய்டு ப்ராப்ளம். இது வர்றதுக்கு முக்கியக் காரணம் டென்ஷன். அதிலும் தைராய்டு சுரப்பி சரிவரச் சுரக்காம இருந்தா ஹைப்போ தைராய்டு ப்ராப்ளம் வரும். இதுதான் இங்க அதிகம். இவங்க முக்கியமா முட்டைக் கோஸ், காலிஃப்ளவர் சேர்த்துக் கொள்ளக் கூடாது. மன இறுக்கம் இல்லாம வாழப் பழகிக்கணும்.

சிலர் இயற்கை உணவு சாப்பிடணும் என்பாங்க. இதில கவனிக்க வேண்டியது என்னன்னா, இயற்கை உணவே இப்போது நெறையக் கெமிக்கல்ஸ்னால கெட்டுப் போயிருக்கு. சமைத்த உணவோடு இயற்கை உணவையும் சேர்த்துச் சாப்பிடலாம்.

Posted in Cooking, Eat, Foods, Healthcare, Kadhir, Vegetables | Leave a Comment »

Railways to serve ‘Veggie Salad’ to passengers

Posted by Snapjudge மேல் நவம்பர் 8, 2006

ரயில் நிலையங்களில் “காய்கறி சாலட்’: லாலுவின் புதிய அறிமுகம்

புதுதில்லி, நவ. 8: ரயில்நிலையங்களில் மண் குடுவையில் தேநீர், மோர் ஆகியவை அறிமுகப்படுத்திய மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், இப்போது “காய்கறி சாலட்’ என்ற சுவையான தின்பண்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இதற்கு “லிட்டி சோகா‘ என்று பெயராம்.

ரயில் பயணிகளிடம் “லிட்டி சோகாவுக்கு’ காய்கறிகள் நிறைந்த சாலட் உணவுப் பண்டத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதை அடுத்து ரயில் நிலையங்களில் இதற்கென ஸ்டால் அமைக்க லாலு உத்தரவிட்டுள்ளதாக தலைமை வர்த்தக மேலாளர் கே.கே.ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.

இந்தியன் ரயில்வே பயணிகள் வசதிக்காக ரயில் நிலையங்களில் உணவு வகைகளை தயாரித்து விற்று வருகிறது. இது தவிர ரயில்களிலும் உணவுப் பண்டங்கள் விற்கப்படுகின்றன. இட்லி, தோசை போன்ற தென்னிந்திய உணவும் இதில் அடங்கும்.

பாட்னா ரயில் நிலையத்தில் முதன் முறையாக காய்கறி சாலட் விற்பனை செய்யும் ஸ்டால் தொடங்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் முக்கிய ரயில்நிலையங்களில் இதேபோன்ற ஸ்டால்கள் நிறுவப்பட உள்ளன என்றார் ஸ்ரீவாஸ்தவா.

Posted in Chief Commercial Manager, Dhanbad, Dosa, Fruits, Gaya, Hajipur, healthy snacks, Idli, Indian Railway, KK Srivastava, Kulhad, Laloo, Lalu prasad Yadav, Litti Chokha, Mattha, Mughal Sarai, Muzaffarpur, Patna, Railways, Samastipur, snack, Train, Vegetables, Veggie Salad | Leave a Comment »