Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Jothibasu’ Category

Is Communism & Socialism exist for namesake in India – TJS George

Posted by Snapjudge மேல் ஜனவரி 15, 2008

சோஷலிஸத்துக்குத் துரோகம் செய்யும் சோஷலிஸ்டுகள்

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

சோஷலிஸத்தை ஒழித்துக்கட்டியவர்கள் யார்? வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், சோஷலிஸத்தை சோஷலிஸ்டுகளே, அதிலும் குறிப்பாக உலகின் பல பகுதிகளில் கம்யூனிஸ்டு அரசுகளை அமைத்தவர்களே ஒழித்துக் கட்டியிருக்கின்றனர் என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டியிருக்கும்.

உலக நாடுகளில் கம்யூனிஸ ஆட்சி நடைபெற்றுவந்த அனைத்து நாடுகளும் ~ ஒன்றே ஒன்றைத் தவிர ~ தம் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு முதலாளித்துவப் பாதையைத் தழுவிக்கொண்டுவிட்டன. விதி விலக்கான அந்த நாடு இந்தியா. அதனால்தான், ஜோதி பாசுவால் தொடங்கிவைக்கப்பட்டிருப்பதை ஆரோக்கியமான விவாதம் என நாம் வரவேற்க வேண்டும்.

நாம் முதலாளித்துவ சமுதாயத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கும் பொழுது, சோஷலிஸம் சாத்தியமல்ல என்றே அவர் கூறியிருக்கிறார். கடுமையான சுரண்டல் நிலவும் சமூகமுறையான முதலாளித்துவத்தை அங்கீகரிப்பதாக அதைக் கொள்ள முடியாது.

எனினும், இந்தியாவின் மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான அவர், மார்க்ஸ் உருவாக்க எண்ணிய சோஷலிஸ சமுதாய முறைக்கு எந்த நாட்டிலும், கம்யூனிஸ ஆட்சிமுறை அமலில் இருந்த நாடுகளில்கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதை உணரத் தவறிவிட்டார்.

எடுத்துக்காட்டாக, சோவியத் ஒன்றியத்தில் மார்க்சிஸம் ஒருபொழுதும் நடைமுறைப்படுத்தப்படவேயில்லை. தொடக்கத்திலிருந்தே அங்கு லெனினிஸம்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. நடைமுறை அரசியலுக்கு ஏற்ப அக் கொள்கையைத் தகவமைப்பதாகக் கூறி, மார்க்சிஸத்துக்கு மறுவிளக்கம் அளித்து, முற்றிலும் புதியதான கொள்கைகளை அறிமுகப்படுத்தினார் லெனின். சோவியத் கம்யூனிஸத்தின் அடிப்படைக் கொள்கையானது, “மார்க்சிஸம் ~ லெனினிஸம்’ என அழைக்கப்பட்டது.

சீனாவில் அது, “மார்க்சிஸம் ~ லெனினிஸம் ~ மா சே துங் சிந்தனைகள்’ என மாறியது. அதன் உட்பொருள் தெளிவானது: சீனாவில் சோஷலிஸக் கொள்கையைப் பொருத்தவரை “மா சே துங் சிந்தனை’களே இறுதியானவை. அந்த நிலைமை மாவோவின் காலத்தோடு முடிந்துபோய்விட்டன. அதன் பிறகு, சிறந்த யதார்த்தவாதியான டெங் சியாவோபிங், “மனிதாபிமானத்துடன்கூடிய சோஷலிஸம்’ என்ற கொள்கையைக் கொண்டுவந்தார். அது ஒரு முக்கியமான கோஷமாகும்.

எந்தப் பெருந்திரளான மக்களை சோஷலிஸத்தை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமோ அவர்களையே கம்யூனிஸம் கவர்ந்திழுக்காமல் போனதற்கு, அதில் மனிதாபிமான அம்சம் குறைவுபட்டிருந்ததே காரணமாகும்.

ஸ்டாலினும் மாவோவும் தனிநபர் சர்வாதிகாரத்தைத்தான் நிறுவினார்களே தவிர, தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தையல்ல. அந்தக் கால கட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பெருமளவிலான மரணதண்டனைகள் சோஷலிஸத்தின் முகத்தையே கோரமாக்கிவிட்டன.

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது மாநாட்டில் நிகிடா குருஷ்சேவ் ஆற்றிய வரலாற்றுப் புகழ்மிக்க உரை அதை அம்பலப்படுத்தியது. அது உணர்ச்சிபூர்வமான உரை. ஆனால், அவர் ஆற்றியது அவரது வரைவு உரையைவிட சற்று மென்மையாக்கப்பட்ட வடிவமாகும்.

மாலட்டோவ் போன்ற பழைய ஸ்டாலினிசவாதிகளின் வற்புறுத்தலை அடுத்து, ஸ்டாலின் “கட்சிக்கு ஆற்றிய பெரும் சேவைகளை’ குருஷ்சேவ் அங்கீகரித்தார். ஆனால், பூர்வாங்க விவாதங்களிலும் மூல வரைவு அறிக்கையிலும், “”கட்சியை ஸ்டாலின் அழித்துவிட்டார். அவர் மார்க்சியவாதியே அல்ல. மனிதன் புனிதமானவை எனக் கருதுவனவற்றையெல்லாம் அவர் அழித்தொழித்துவிட்டார்” என்று குருஷ்சேவ் குறிப்பிட்டிருந்தார். (2007-ல் “த கார்டியன்’ இதழில் கொர்பச்சேவ் எழுதியிருந்த கட்டுரையில் இதைத் தெரிவித்துள்ளார்)

அமைதியின் மீதான விருப்பம், பாதுகாப்பு உணர்வு, உழைப்பின் மூலமாக தானும் தனது குடும்பமும் வளம் பெற முடியும் என்னும் நம்பிக்கை போன்ற, மனிதன் புனிதமாகக் கருதுவனவற்றை எந்தக் கொள்கையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்டுகள் இதைப் புறக்கணித்தனர். அதன் விளைவாக அவர்கள் அதிகாரத்திலிருந்து வீழ்ந்தார்கள் அல்லது அவர்கள் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

60 ஆண்டுகளாகியும் ஏன் வளர்ச்சி அடையவில்லை என்ற கேள்வியை இந்திய இடதுசாரிகள் தமக்குத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

உண்மையில், மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் அவர்கள் தமது செல்வாக்கை இழந்திருக்கின்றனர். மிகச் சிலரால், பெருவாரியான மக்கள் சொல்ல முடியாத அளவுக்குச் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையிலும் அவர்களால் வளர முடியவில்லை.

இடதுசாரித் தலைவர்களில் பலர் தமது தனிப்பட்ட வாழ்க்கையில் முதலாளித்துவ ரசனைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், சுரண்டலுக்கு ஆளான மக்களோ நக்சலிஸம் போன்ற இயக்கங்களை நோக்கியும், மத அடிப்படைவாதத்தை நோக்கியும் சென்றுகொண்டிருக்கின்றனர்.

இடதுசாரிகள் சோஷலிஸத்துக்குத் துரோகம் இழைத்துவிட்டனர். சமத்துவம், சமதர்மம் என்ற அடிப்படையில் ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகள் சோஷலிஸத்தை நெருங்கிச் சென்றுகொண்டிருக்கின்றன.

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 30 ஆண்டுகளாகப் பதவியில் இருந்தபோதிலும் வறுமையின், சிறுமையின் அடையாளமாக விளங்கும் கைரிக்ஷாவை இந்திய இடதுசாரிகளால் ஒழிக்க முடியவில்லை.

இடதுசாரிகளின் தோல்வியானது, அபாயகரமான ஓர் அரசியல் தோன்றுவதற்கு ~ ஜமீன்தாரி சிந்தனை கொண்ட வகுப்புவாத அரசியலுக்கு ~ வழிவகுத்துக் கொண்டிருக்கிறது. என்னே துயரம்!

Posted in Baasu, Basu, Capitalism, China, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Corporate, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, East, Economy, entrepreneurs, Finance, global, Globalization, Growth, HR, Jobs, Jothibasu, Jyothibasu, Kerala, Lazy, Lethargy, Mao, markets, Nandhigram, Nandigram, Nanthigram, Poor, Rich, Russia, SEZ, Socialism, TATA, Union, USSR, West, workers | Leave a Comment »

Nuke Deal With US Draws Domestic Opposition – Indian Communists Say US Nuclear Accord Lacks House Support

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 13, 2007

எண்ணங்கள்: 1…2…3… ஷாக் – ஞாநி – ஓ பக்கங்கள் பதில்


இடதுசாரிகளின் இரட்டைவேடம்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பதையும், இடதுசாரிகளின் தயவில்தான் இந்த அரசு ஆட்சியினைத் தொடர்கிறது என்பதையும் அடிக்கடி சுட்டிக் காட்டுவதும் இடதுசாரிக் கட்சிகள்தான். இந்தியாவும் அமெரிக்காவும் இந்த அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வது என்று முடிவெடுத்தது முதல் அதை எதிர்த்து வருவதும் அதே இடதுசாரிக் கட்சிகள்தான்.உண்மையிலேயே, இந்த ஒப்பந்தம் ஏற்படுவது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என்று இடதுசாரிகள் கருதியிருந்தால், ஆரம்ப நிலையிலேயே இந்த முயற்சியைக் கைவிடச் செய்திருக்க முடியும். தொழிலாளர் காப்பீட்டுத் திட்டப் பிரச்னையிலும், பொதுத்துறை நிறுவனங்களின் விஷயத்திலும் அரசை அடிபணிய வைக்க முடிந்த இடதுசாரிகளால் இதுபோன்ற தேசத்துக்கே ஆபத்தான விஷயத்தில் ஏன் தலையிட்டுத் தடுத்து நிறுத்த முடியவில்லை?

இந்திய மற்றும் அமெரிக்க தரப்பினர், அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தத்திற்கு ஒரு முழுவடிவமும் கொடுத்து, இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. நவம்பர் மாதம், காங்கிரஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் வாக்கெடுப்புக்கு விடப்படும். இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ அமெரிக்கக் காங்கிரசுக்கு உரிமை உண்டே தவிர, இந்த ஒப்பந்தத்தில் எந்தவித மாற்றங்களையும் இனிமேல் செய்ய முடியாது என்பதும் இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சம்.

இந்தியத் தரப்பைப் பொருத்தவரை, இதுபோன்ற ஒப்பந்தம் என்பது ஓர் அரசின் நிர்வாக உரிமை (Executive Prerogative). அரசு சம்மதித்தால், இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தின் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். ஆனால், அமெரிக்கக் காங்கிரசுக்கு இதில் மாற்றம் செய்ய எப்படி உரிமை இல்லையோ, அதேபோல, இந்திய நாடாளுமன்றமும் இந்த உடன்படிக்கையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. இதை நிராகரிக்கும் உரிமையும் கிடையாது.

இதெல்லாம், இடதுசாரிகளுக்குத் தெரியாத விஷயமல்ல. ஆரம்பம் முதலே, தாங்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதுபோலப் பேசுகிறார்களே தவிர, இந்த ஒப்பந்தம் கூடாது என்று அரசைத் தடுக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடருமானால் எங்களது ஆதரவு இந்த அரசுக்குக் கிடையாது என்று இடதுசாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தால், அரசு இந்த விஷயத்தைக் கைவிட்டிருக்கும் என்பது ஊரறிந்த ரகசியம்.

அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில், எந்தவித பயமுமின்றி மன்மோகன் சிங் அரசு செயல்பட்ட விதத்தில் இருந்து, இடதுசாரிகளின் மறைமுக ஆதரவுடன்தான் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று தோன்றுகிறது. இல்லையென்றால், “”அணுசக்தி ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது என்பது சாத்தியமில்லை” என்று தைரியமாகப் பிரதமர் மன்மோகன் சிங் கூறுவதிலிருந்தே, இந்த விஷயத்தில் இடதுசாரிகளிடம் பேசி வைத்துக் கொண்டுதான் அரசு செயல்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இன்னொரு விஷயத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மிகவும் புத்திசாலித்தனமாக இந்த ஒப்பந்தம் பற்றி இதுவரை நாடாளுமன்றத்தின் அனுமதி பெற அவசியம் இல்லாமல், நிர்வாக விஷயமாக இதைக் கையாண்டிருக்கிறது அரசு. இனிமேல், நாடாளுமன்றம் வேண்டாம் என்று நிராகரித்தால் மட்டும் போதாது. இந்த அரசு கவிழ்ந்தால் மட்டுமே அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்தாகும். இந்த நிலைமை ஏற்படும்வரை இடதுசாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்களே தவிர, ஒப்பந்தத்தைக் கைவிட நிர்பந்திக்கவில்லையே, ஏன்?

நாளைக்கே, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு என்று வந்தால் நாங்கள் வெளிநடப்பு செய்து அரசைக் காப்பாற்றுவோம் என்கிறார் ஜோதிபாசு. அதாவது, “இந்த ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது சாத்தியமில்லை’ என்று பிரதமர் கூறுவதை சொல்லாமல் சொல்கிறார் அவர்.

தேச நலனுக்கு ஆபத்து என்று தெரிகிறது. தங்களது கட்சியின் கொள்கைகளுக்கு மாறானது என்று அவர்களே கூறுகிறார்கள். இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியா அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டிய துர்பாக்கியம் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள். ஆனால், அரசுக்கு ஆதரவு மட்டும் தொடரும் என்கிறார்கள்.

ஏன் இந்த இரட்டை வேடம்?

——————————————————————————————————————————-
அமெரிக்காவிடம் இந்தியா சரணாகதியா?

என். ராமதுரை

இந்தியாவில் அமெரிக்காவும் பிற நாடுகளும் அணுமின் நிலையங்களை அமைக்க வழி செய்வது தொடர்பாக அமெரிக்கா – இந்தியா இடையே இப்போது விரிவான உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. இதுபற்றி நாட்டில் காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தியா இதன் மூலம் அமெரிக்காவிடம் அடிமைப்பட்டு விட்டது போல ஒரு சாரார் கூறுகின்றனர். ஆளும் கட்சித் தரப்பினரோ இதை வன்மையாக மறுக்கின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படியான ஒப்பந்தம் ஏற்படுவது இது முதல் தடவையல்ல. இந்தியாவில் அமெரிக்க உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்படுவதும் முதல் தடவையல்ல. சொல்லப்போனால் இப்படியான ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க உதவியுடன் 1969-ல் நிறுவப்பட்ட அணுமின் நிலையம் மும்பை அருகே தாராப்பூரில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அதேபோல கனடாவின் உதவியுடன் ராஜஸ்தானில் 1972-ல் நிறுவப்பட்ட அணுமின் நிலையமும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

அணுமின் நிலையம் தொடர்பான கட்டுதிட்டங்கள், கண்காணிப்பு ஏற்பாடுகள் இப்போது இந்தியா மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதாக நினைத்தால் அதுவும் தவறு. தாராப்பூர் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோதும், கனடிய உதவியுடன் ராஜஸ்தானில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோதும் நாம் இப்போது சொல்லப்படுகிற கட்டுதிட்டங்களை – கண்காணிப்பு ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ளத்தான் செய்தோம்.

தமிழகத்தில் கூடங்குளத்தில் ரஷிய உதவியுடன் அணுமின்சார நிலையம் நிறுவப்பட்டு வருகிறது. இது குறித்து ரஷியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதுவும் இப்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள சகலவித கட்டுதிட்டங்கள், கண்காணிப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றின் கீழ்தான் செயல்படும். கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான ஒப்பந்தங்களில் இவை அடங்கியுள்ளன. அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்த விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டு வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன. ரஷியாவுடனான ஒப்பந்த விவரங்கள்~அவசியமில்லை என்ற காரணத்தால்~ வெளியிடப்படவில்லை.

ஆகவே அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை செய்துகொண்டால் அது அமெரிக்காவிடம் சரணாகதி ஆவது போலவும் ரஷியாவுடன் அதே மாதிரியான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டால் அப்படியான சரணாகதி இல்லை போலவும் வாதிப்பதும் தவறு.

அணுசக்தி விஷயத்தில் இந்தியாவிடம் அமெரிக்கா ஒரு விதமாகவும் ரஷியா வேறு விதமாகவும் நடந்து கொள்வதாக நினைத்தால் அதுவும் தவறு. அணுசக்தியைத் தவறாக (அணுகுண்டு தயாரிப்புக்கு) பயன்படுத்தக்கூடிய எந்த ஒரு நாட்டுக்கும் அணுசக்தி எரிபொருள், அணுஉலை இயந்திரங்கள், அணுமின் நிலைய இயந்திரங்கள் முதலியவற்றை அளிக்கக்கூடாது என்று கூறும் 45 நாடுகள் அடங்கிய குழுவில் அமெரிக்காவும் ரஷியாவும் அங்கம் வகிக்கின்றன.

இந்தியாவில் அணுமின் நிலையங்களை அமைக்க ஆரம்பத்தில் உதவிய அமெரிக்காவும் கனடாவும் பின்னர் பின் வாங்கியதற்குக் காரணம் உண்டு. இந்தியா 1974ஆம் ஆண்டில் நிலத்துக்கு அடியில் அணுகுண்டை வெடித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவும் அதைச் சார்ந்த பல நாடுகளும் இந்தியாவுக்கு அணுசக்தி தொடர்பான எந்த உதவியையும் அளிக்க மாட்டோம் என்று அறிவித்தன. இந்தியா மீது பல தடைகளை அமல்படுத்தின. 1988-ல் இந்தியா நிலத்துக்கு அடியில் பல அணுகுண்டுகளை வெடித்தபோது இத் தடைகள் நீடித்தன. இந்தியா மீது 1974-க்குப் பிறகு விதிக்கப்பட்ட தடைகள் இந்தியாவுக்கு ஒருவகையில் நல்லதாகியது. இந்தியா சொந்தமாக அணு ஆராய்ச்சி உலைகளை அமைத்துக் கொண்டது. சொந்த முயற்சியில் பல அணு மின் நிலையங்களை அமைத்துக் கொண்டது. தேவையில்லை என்று கருதி அமெரிக்கா பின்பற்றாத தொழில்நுட்பத்திலும் இந்தியா சிறப்பாக முன்னேறியுள்ளது. அது தோரியத்தைப் பயன்படுத்துகிற முறையாகும்.

ஆனால் இவ்வளவு முன்னேற்றம் இருந்தும் எதற்கு நாம் சுமார் 30 ஆண்டுக்காலத்துக்குப் பிறகு அணுசக்தி விஷயத்தில் பிற நாடுகளின் உதவியை நாட வேண்டும்? முதலாவதாக இப்போது இந்தியாவுக்கு மின்சாரப் பசி உள்ளது. அணுசக்தி மூலம் தான் இதைத் தீர்க்க முடியும். இந்தியா சொந்தமாக உருவாக்கியுள்ள அணுமின் நிலையங்கள் பெரும்பாலானவற்றின் திறன் 220 மெகாவாட் அளவில் உள்ளது. அண்மையில்தான் 500 மெகாவாட் அணுமின் உலையை நிர்மாணித்துள்ளோம். 1000 மெகாவாட் திறனை எட்ட இன்னும் அதிக காலம் ஆகலாம். தவிர, “”நாட்டில் போதுமான யுரேனியம் இல்லை” என்று இந்திய அரசு பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்த யுரேனியத்தை நாம் விலை கொடுத்து வாங்கத் தயாராக இருந்தாலும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம், அணுசக்திப் பொருள் அளிப்போர் குழு பின்பற்றும் கட்டுதிட்டங்கள், சர்வதேச அணுசக்தி அமைப்பின் விதிமுறைகள் ஆகியவை குறுக்கே நிற்கின்றன.

தோரியம் முறை இருக்கிறதே என்று கேட்கலாம். இத் தொழில்நுட்பம் சிக்கலானது. சுருங்கச் சொன்னால் முதலில் யுரேனியத்தை அணு ஆலைகளில் “”அவிக்க” வேண்டும். பிறகு ஈனுலைகளில் (Breeder Reactors) யுரேனியத்தையும் புளூட்டோனியத்தையும் பயன்படுத்தி தோரியத்தை “”அவிக்க” வேண்டும். இப்படியான பல கட்டங்களுக்குப் பிறகுதான் அணுமின் நிலையங்களுக்கான யுரேனியம் – 233 என்ற அணுப் பொருள் கிடைக்கும். இதற்கெல்லாம் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.

அணுசக்தி விஷயத்தில் உலகில் பல கட்டுதிட்டங்கள் இருப்பதற்குக் காரணம் உள்ளது. அணுமின் நிலையம் இருந்தால்போதும். ஒரு நாடு அணுகுண்டு தயாரித்துவிட முடியும். உலகில் சர்வாதிகாரப் போக்கு கொண்ட நாடுகள் அணுகுண்டு தயாரித்து உலகை மிரட்டும் நிலை ஏற்படக்கூடாது என்பதே இவற்றின் நோக்கம். அணு உலையில் (அணுமின் நிலையத்திலும்) யுரேனியம் அடங்கிய நீண்ட குழல்கள் உண்டு. அணுமின் நிலையம் செயல்படும்போது “”முக்கால் வேக்காட்டில்” இந்த தண்டுகளை வெளியே எடுத்தால் ஏற்கெனவே ஓரளவு எரிந்துபோன யுரேனியத்தில் வேறு பல அணுசக்திப் பொருள்கள் இருக்கும். இவற்றில் புளூட்டோனியமும் ஒன்று. இந்த புளூட்டோனியத்தைத் தனியே பிரித்தால் அதைக் கொண்டு அணுகுண்டு செய்து விடலாம். ஆகவே எந்த ஓர் அணுமின் நிலையத்திலும் யுரேனியத் தண்டுகள் எப்போது வெளியே எடுக்கப்படுகின்றன அவை என்ன செய்யப்படுகின்றன என்பதற்கு ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். தானியங்கி கேமராக்களும் வைக்கப்படும்.

இந்தியா இப்போது எல்லா அணுமின் நிலையங்களிலும் இந்தக் கண்காணிப்பு ஏற்பாடுகளைப் பின்பற்ற உடன்பட்டுள்ளது. ஆனால் ஒன்று. இந்தியா ராணுவ காரியங்களுக்கான அணு உலைகள் என்று பட்டியலிட்டு அறிவிக்கின்ற அணு உலைகளில் இந்தக் கண்காணிப்பு இராது. ஆகவே இந்தியா அணு ஆயுதங்களைத் தொடர்ந்து தயாரிப்பதைப் பொருத்தவரையில் எந்தப் பிரச்னையும் கண்காணிப்பும் இராது. எரிந்த யுரேனியத் தண்டுகளிலிருந்து அணுப் பொருள்களைப் பிரிப்பதில் இந்தியாவின் உரிமை பறிபோய்விட்டது போல கூக்குரல் கிளப்பப்படுகிறது. இந்தியாவும் அமெரிக்காவும் பேச்சு நடத்தி இதற்கான ஆலை அமைக்கப்படும் என இப்போதைய ஒப்பந்தம் கூறுகிறது. தவிர, இந்தியாவில் உள்ள ராணுவ காரிய அணு உலைகளுக்கு இது விஷயத்தில் கட்டுப்பாடு கிடையாது.

இந்தியா விரும்பினால் மேற்கொண்டு அணுகுண்டுகளை வெடித்துச் சோதிக்க இயலாதபடி இப்போதைய ஒப்பந்தம் தடுப்பதாகக் கூறுவதும் தவறு. அணுகுண்டுகளை மேலும் செம்மையாகத் தயாரிக்க அணுகுண்டுகளை அடிக்கடி வெடித்துச் சோதிக்கும் முறையை மேலை நாடுகள் முன்பு பின்பற்றின என்பது வாஸ்தவமே. ஆனால் இப்போதெல்லாம் புதிய வகை அணுகுண்டின் திறன் எப்படி இருக்கும் என்பதை கம்ப்யூட்டர் மூலமே கண்டறியும் முறை வந்து விட்டது. ஆகவே புது வகை அணுகுண்டுகளை வெடித்துச் சோதித்தாக வேண்டிய அவசியமும் இல்லை எனலாம்.

இப்போது அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தமானது நாம் அமெரிக்காவிடமிருந்து மட்டுமன்றி பிரான்ஸ், பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளிடமிருந்து அணுமின் நிலைய அணு உலைகள், தேவையான இயந்திரங்கள் ஆகியவற்றையும் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிடமிருந்து யுரேனியத்தை வாங்குவதற்கும் உதவி புரியும்.

இப்படியாக வாங்குவது எல்லாம் அடிப்படையில் வர்த்தக பேரங்களே. இவற்றை அளிக்கப்போவது அந்தந்த நாடுகளின் தனியார் நிறுவனங்களே. அவை இந்தியாவுக்கு இவற்றை விற்றுப் பணம் பண்ணத் துடித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கு அவ்வப்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டு அரசின் மீது நிர்பந்தத்தைச் செலுத்தி~இந்தியாவுக்கு சாதகமான வகையில்~ பிரச்னையைத் தீர்க்க முயலும். ஆகவே அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

——————————————————————————————————————————-

அரசுக்கு “கெடு’ ஆரம்பம்?

நீரஜா செüத்ரி

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொண்டு அமல் செய்யக்கூடாது, அப்படியே கிடப்பில் போட வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் காங்கிரஸýக்கு விடுத்த இறுதி எச்சரிக்கையை அடுத்து, “”இரண்டின் எதிர்காலம்” என்ன என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அதில் ஒன்று, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் எதிர்காலம், மற்றொன்று, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் எதிர்காலம்.

இந்த அரசு போய்விடுமா என்பதல்ல, இப்போதுள்ள கேள்வி, இந்த அரசு எப்போது போகும் என்பதுதான் கேள்வி. நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2008 ஜனவரியிலோ அல்லது மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதத்துக்குள்ளோ நடைபெறலாம்; அது காங்கிரஸின் விருப்பத்தைப் பொறுத்தது.

இனி அரசியல் களத்தில் அரங்கேறக்கூடிய காட்சிகளைப் பின்வருமாறு ஊகிக்கலாம்.

காட்சி 1:

பிரதமர் எடுத்த முடிவுப்படி, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்க விருப்பம் இருந்தால் எங்கள் அரசை ஆதரியுங்கள், இல்லையென்றால் உங்கள் விருப்பப்படி செய்துகொள்ளுங்கள் என்று இடதுசாரிகளிடம் முகத்துக்கு நேராகக் கூறிவிடுவது. இப்போதைய நிலையில், காங்கிரஸ் கட்சியின் கெüரவத்தைக் காக்க இதுவே நல்ல வழி என்று சில காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கின்றனர்.

நாட்டு நலனில் அக்கறை கொண்டுதான் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது என்று மக்களிடம் விளக்கி, அடுத்த பொதுத் தேர்தலை இடதுசாரிகள் போன்ற தோழமைக் கட்சிகளின் துணை இல்லாமல் சந்தித்து, வெற்றிபெற்று மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சியை அமைப்பது; அப்படியே ஒப்பந்தத்தையும் தொடர முடியும் என்று அத் தலைவர்கள் கூறுகின்றனர்.

அப்படி என்றால் உடனே தேர்தலை நடத்தியாக வேண்டும். தேர்தல் அட்டவணையை தேர்தல் கமிஷன்தான் தீர்மானிக்கும் என்றாலும், அரசு கவிழ்ந்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படலாம்.

மன்மோகன் அரசு ஆட்சியை இழந்தால், இடைக்கால அரசால் ஒப்பந்தத்தை அமல் செய்வதற்கான தொடர் நடவடிக்கைகளை எடுக்க முடியாது, எனவே ஒப்பந்தமே ரத்தாகிவிடும்.

காட்சி 2:

இடதுசாரிகள் ஆதரவைத் திரும்பப் பெற்றாலும் சிறுபான்மை அரசாகவே காலம் தள்ளுவது, அப்படி இருக்கும்போதே இந்த ஒப்பந்தத்தை அமல்செய்ய தொடர் நடவடிக்கைகளை எடுப்பது என்று காங்கிரஸ் தீர்மானிப்பது. அதற்காக மாயாவதி கட்சியின் 18 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற அந்தக் கட்சியையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டு ஆளும் கூட்டணியின் வலுவை 219-லிருந்து 237 ஆக உயர்த்துவது.

ஆதரவை விலக்கிக் கொண்டாலும், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்போது பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து இடதுசாரி கட்சிகள் வாக்களிக்காது, எனவே மேலும் சில மாதங்களுக்கு அரசை இப்படியே ஓட்டலாம்.

அப்போது இடதுசாரிகளுக்கு தருமசங்கடமான நிலைமை ஏற்படும். தாங்கள் தீவிரமாக எதிர்த்த ஒப்பந்தத்தை அமல் செய்யும் அரசை நீடிக்க விடுவதா, அல்லது அதைக் கவிழ்ப்பதற்காக மதவாதிகள் என்று முத்திரை குத்திய பாரதீய ஜனதாவுடன் இணைந்து செயல்படுவதா என்பதே அது.

காட்சி 3:

ஏதாவது ஒரு சாக்கு சொல்லி, அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்தாமல் நிறுத்திவிடுவது, அரசை காப்பாற்றிக் கொண்டு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயார் ஆவது.

அப்படி என்றால் பிரதமர் பதவியில் மன்மோகன் சிங் நீடிக்க முடியாது. அவர்தான் இந்த ஒப்பந்தத்தைத் தீவிரமாக ஆதரித்துப் பேசினார், எனவே தார்மிக அடிப்படையில் அவர் விலகியே தீரவேண்டும்.

அதே சமயம் பிரதமரின் முடிவுக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி காங்கிரஸ் கட்சி விலகி இருக்க முடியாது. அவரது கருத்தைத்தான் காங்கிரஸ் காரியக் கமிட்டியும் ஆதரித்தது, சோனியா காந்தியும் ஒப்புதல் வழங்கினார்.

“”இந்த ஒப்பந்தம் இறுதியானது, இதை ஏற்க முடியாவிட்டால் ஆதரவைத் திரும்பப் பெறுங்கள்” என்று பேசி இடதுசாரிகளை பிரதமர் மன்மோகன் சிங் உசுப்பிவிட்டதை, சோனியா காந்தி விரும்பவில்லை.

அதிகாரிகளுடன் பேசுவதையும் செயல்படுவதையும் மிகவும் விரும்பும் மன்மோகன் சிங், “”இடதுசாரிகளுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்” என்று அவர்களில் யாரோ சொன்ன மந்திராலோசனையைக் கேட்டு, பெரிய வம்பில் மாட்டிக்கொண்டுவிட்டார்.

சிங்குர், நந்திகிராம் விவகாரங்களில் மக்களின் அதிருப்தியைச் சம்பாதித்திருப்பதாலும், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்குள் உள்பூசல் உச்ச கட்டத்தில் இருப்பதாலும் உடனடியாக மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடப்பதை இடதுசாரிகள், குறிப்பாக மார்க்சிஸ்டுகள் விரும்பமாட்டார்கள் என்றாலும் வேறு வழியில்லாவிட்டால், அதற்கும் அவர்கள் தயாராகிவிடுவார்கள்.

காட்சி 4:

பிரதமர் பதவியிலிருந்து மன்மோகனை மாற்றிவிட்டு, புதியவரைக் கொண்டுவருவது. சர்ச்சைக்குரிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஆறப்போடுவது. மக்களை பாதிக்கும் விஷயங்களில் முதலில் கவனம் செலுத்தி மக்களுக்குத் திருப்தி ஏற்படும் வகையில் நடவடிக்கைகளை எடுப்பது. அமெரிக்காவுடன் நெருங்கியதால் புண்பட்ட முஸ்லிம்களின் உள்ளங்களுக்கு மருந்து போடுவது.

இதையெல்லாம் செய்யக் கூடியவர், மார்க்சிஸ்டுகளையும் பாரதீய ஜனதாவையும் ஒரே சமயத்தில் சமாளிக்கத் தெரிந்தவர் – ஜார்ஜ் புஷ்ஷை சமாதானப்படுத்தக்கூடியவர் – பிரணாப் முகர்ஜிதான். வங்காளியான முகர்ஜியைப் பிரதமராக்குவதற்காகவே இடதுசாரிகள் இப்படி நாடகம் ஆடுகின்றனரோ என்றுகூட சில காங்கிரஸ் தலைவர்களுக்கு உள்ளூர சந்தேகம் இருக்கிறது.

இந்தச்சூழலைக் கையாளும் திறமை முகர்ஜியைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பது உண்மையே ஆனாலும், “”இவரைப் பிரதமராக்கினால் நாளை நம் செல்வாக்கு என்ன ஆகும்” என்ற அச்சம் சோனியா காந்திக்கு தொடர்ந்து இருந்து வருகிறது.

————————————————————————————————————————————————

விதியின் விளையாட்டு!

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேய்ந்துகொண்டிருக்கிறது என்று கூறினால், இப்போது அது சிறிது அதிகபட்சமாகத் தோன்றும். அதுவும், அமெரிக்காவுக்கு வளைந்துகொடுக்கும் மனப்போக்கில் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் மன்மோகன் சிங் அரசுக்குக் கடிவாளம் போல இடதுசாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது அவ்வாறு கூறுவது கொஞ்சம் அதிகமாகக்கூடத் தோன்றலாம். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சற்று உற்றுநோக்கினால், நமது பார்வைகள் மாறுகின்றன. சர்வதேச விவகாரமொன்றில் தேசிய நலனைக் காப்பதற்காக பிரகாஷ் காரத் போராடிக்கொண்டிருக்கிறார்; ஆனால், முக்கியமான மாநிலங்களில் ஒழுங்கீனமாக நடக்கும் தனது கட்சியைச் சேர்ந்த சொந்தத் தோழர்களையே கட்டுப்படுத்த முடியாமல் அவர் தவிப்பது தெரிகிறது. இதுதான் பிரச்சினை.

தேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பலம் பொருந்தி இருப்பதற்குக் காரணம், மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் அக் கட்சிக்கு இருக்கும் செல்வாக்கே ஆகும். மேற்கு வங்கக் கட்சியில் உள்ள பிரச்சினைகளை காரத்தால் எதிர்கொள்ள முடியும். ஏனென்றால், “காலத்துக்கு ஏற்ப கட்சியின் கொள்கைகளில் மாற்றம் தேவையா? புதிய பொருளாதாரச் சிந்தனைகளுக்கு இடம் அளிக்க வேண்டுமா?’ என்பது போன்ற தத்துவார்த்தப் பிரச்சினைகள்தான் மேற்கு வங்கத்தில் எழும் பிரச்சினை. அதோடு, புத்ததேவ் பட்டாச்சார்ஜி, ஜோதி பாசு போன்ற பெருமைக்குரிய தலைவர்கள் அங்கே இருக்கிறார்கள். அதைவிட முக்கியமாக, மேற்கு வங்க அரசுக்கும் கட்சிக்கும் இடையே செயல்பாடுகளில் ஒற்றுமை நிலவுகிறது.

ஆனால், கேரளத்தில் இதற்கு நேர்மாறான நிலை. அக் கட்சிக்குள் நடந்துகொண்டிருக்கும் உள்பூசல், பொறுத்துக்கொள்ளத் தக்க எல்லைகளைத் தாண்டிச் சென்றுவிட்டது. முதலாளித்துவ ஊழல் கூட்டத்தின் பிடியில் கட்சி சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது; அதைக் கண்டு அக் கட்சியின் தோழர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர். அங்கு ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தலையிடுவதைப்போல ஒரு நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எடுத்தது. ஆனால், இன்னும் ஒழுங்கீனம்தான் நீடித்துக்கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில், கட்சியின் மாநிலக் குழுச் செயலாளரையும் முதலமைச்சரையும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்தது கட்சி; அவர்கள் பகிரங்கமாக மோதிக்கொள்வதை அந் நடவடிக்கையால்கூட தடுத்து நிறுத்த முடியவில்லை. முதல்வரின் ஆதரவாளர்களைக் “கட்டுப்படுத்தி’ வைக்கும் மாநிலச் செயலரின் நடவடிக்கைகளுக்கு இப்போதைக்கு அரசியல் தலைமைக் குழு தடை போட்டிருக்கிறது. அந்தத் தடையால் பயன் விளையும் என்று யாரும் நினைக்கவில்லை.

கேரளத்தில் மக்களின் நம்பிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி இவ்வளவு வேகமாக இழந்துவிட்டது என்பது குறித்துத்தான் இப்போது பிரகாஷ் காரத் கவலைப்பட வேண்டும். தமது கட்சி மீது எந்த விமர்சனம் வந்தாலும் பொறுத்துக்கொள்வார்கள்; ஆனால், ஊழல் புகார்கள் கூறப்படுவதைத்தான் தொழிலாளி வர்க்கத்தாலும் இடதுசாரி அறிவுஜீவிகளாலும் தாங்கிக்கொள்ளவே முடியாது. அனைத்துப் புகார்களுமே ஒரு குறிப்பிட்ட கோஷ்டியின் மீதே கூறப்படுகின்றன. அதைச் சீர்படுத்துவதற்கு பெயரளவுக்குத்தான் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. நோய் குணமாக வேண்டுமானால் அறுவைச் சிகிச்சையே செய்ய வேண்டும் என்னும் பொழுது, அமிர்தாஞ்சன் பூசிக்கொண்டிருக்கிறது, கட்சியின் அரசியல் தலைமைக் குழு. இதைப் பார்த்து யாரும் ஏமாந்துவிட மாட்டார்கள்.

இதைத் தவிர, காரத் கவலைப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. தற்போதைய பதவிக் காலம் முடிவடைந்த பிறகு, அடுத்த தேர்தலிலும் மீண்டும் இடது முன்னணியே தேர்ந்தெடுக்கப்பட்டு, கேரளத்தில் ஒரு வரலாற்றையே உருவாக்கக்கூடிய அளவுக்கு அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டிருந்தது. சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களையெல்லாம் கைப்பற்றுவதற்கான அதிரடி நடவடிக்கையை கேரள அரசு எடுத்தபொழுது, அந்த அளவுக்கு பொதுமக்கள் அந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். தொடக்கத்தில், உயர் நீதிமன்றமே அதற்கு ஆதரவாக இருந்தது.

ஆனால், விரைவிலேயே தான் அத்தகைய நிலையை எடுத்ததற்கு வெட்கப்படுவதாக நீதிமன்றம் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. காரணம், அரசின் அந்த நடவடிக்கைகளையெல்லாம் அப்பட்டமான அதிகாரப் போட்டி சீர்குலைத்துவிட்டதுதான். அந்தச் சீர்குலைவுச் செயலில் முன்னிலையில் இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியே ஆகும். இடது முன்னணி ஆட்சிக்கு நீடித்த பெருமையைத் தேடித் தந்திருக்க வேண்டிய ஒரு நடவடிக்கையானது, அதிகாரப் போட்டியால், ஓர் அவமானகரமான அத்தியாயமாக மாறிவிட்டது. அடுத்த தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக, அடுத்துக் கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே மக்களால் தூக்கி எறியப்படத்தக்க நிலைக்கு இடது முன்னணி அரசின் மதிப்பு தாழ்ந்துவிட்டது.

கேரளத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் எம்.பி.க்களே தேர்ந்தெடுக்கப்படவில்லையென்றால் என்ன செய்வார் காரத்? பிரகாஷ் காரத் போன்ற பலமான தலைவரைக் கொண்ட வலுவான இடதுசாரிக் கட்சியொன்று தில்லியில் இருக்க வேண்டியது இன்று நாட்டின் தேவை. ஆனால், கொழுத்த மோசடிப் பேர்வழிகளைத் தலைவர்களாகக் கொண்ட பணக்கார நிறுவனமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாறிவிட்டதென்றால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்; சுய லாபத்துக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே இவ்வளவு சுலபமாக சீர்குலைவுச் செயலில் ஈடுபடுமென்றால், அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும். இறுதியில், தான் நினைத்ததை ஜார்ஜ் புஷ் சாதித்துக்கொள்ள காரத் அனுமதிப்பாராயின், அதுவே விதியின் இறுதி விளையாட்டாக ஆகிவிடும்!

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

———————————————————————————————————-

தேர்தலைச் சந்திக்க கட்சிகள் தயாரா?

நீரஜா செüத்ரி

இந்திய ~ அமெரிக்க அணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் காங்கிரஸýக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டிருப்பதை அடுத்து, “கால அவகாசம் தேடும்’ அரசியல் விளையாட்டுதான் தில்லியில் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

எந்தக் கட்சியும் இப்போது தேர்தலைச் சந்திக்கத் தயாரில்லை. எனினும், 2008, மார்ச் அல்லது ஏப்ரலில் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்குமாறு மூத்த தலைவர்களிடம் காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி இருக்கிறது. தேர்தல் பிரசார உத்திகளை வகுப்பதற்கும், கட்சி அமைப்புகளைத் தயார் செய்வதற்கும் இன்னும் சிறிது கால அவகாசம் இருந்தால் நல்லது என்றே ஒவ்வொரு கட்சியும் நினைக்கும்.

“ஹைட் சட்ட’த்தின் விளைவுகள் குறித்து ஆராய ஒரு குழுவை அமைப்பதன் மூலமும், நாடாளுமன்றத்தில் விவாதிப்பதன் மூலமும் அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்னையில், “”ஒன்று, நீங்கள் திருப்திகரமான விளக்கத்தைத் தாருங்கள்; அல்லது, நாங்கள் உங்களுக்குத் திருப்திகரமான விளக்கத்தை அளிக்கிறோம்” என்ற நிலையில் காங்கிரஸýம் இடதுசாரிக் கட்சிகளும் நிற்கின்றன. அடுத்த இரு மாதங்களிலும் தமது நிலைகளை விளக்கிப் பிரசாரம் செய்ய இரு தரப்பும் திட்டமிட்டுள்ளன.

பிரகாஷ் காரத் சென்னையிலிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்; ஏ.பி. பரதன் கோல்கத்தாவிலிருந்து பிரசாரத்தைத் தொடங்குகிறார். இரு பிரசாரப் பயணங்களும் விசாகப்பட்டினத்தில் செப்டம்பர் 8-ம் தேதி பிரமாண்ட பேரணியுடன் நிறைவடைகின்றன. இரு அணுமின் உலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மும்பைக்குச் செல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். அதன் மூலமாக, நாட்டின் அணுமின் திட்டங்களில் எந்த சமரசத்தையும் தாம் செய்துகொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்துவதே அவரது நோக்கம்.

அணுசக்தி உடன்பாட்டைச் செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டால், அதாவது சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கினால், மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எடுப்பதற்கு, அக் கட்சியின் மத்தியக் குழு அதிகாரம் அளித்திருக்கிறது. ஆனால், அக் கட்சியின் மேற்கு வங்க மாநிலக் குழு இப்போது தேர்தலைச் சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. நந்திகிராமும் சிங்குரும் அக் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டிருக்கின்றன.

ஹால்டியாவில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி தோல்வி அடைந்துவிட்டது. காங்கிரஸýடன் மம்தா பானர்ஜி உடன்பாடு செய்துகொண்டதே அதற்குக் காரணம். மக்களவைத் தேர்தல் வந்தால் அதிலும் இது தொடரும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. மம்தாவும் அதை மறுக்கவில்லை; அதோடு, அணுசக்தி உடன்பாட்டில் பிரதமரின் நிலையை ஆதரித்துள்ளார் அவர்.

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்றுவரும் உள்கட்சிப் பூசலைப் பார்க்கும் பொழுது, தற்போதைய ஆதரவை அங்கு அக் கட்சி நிலைநிறுத்திக்கொள்வது கடினம் என்றே தோன்றுகிறது. அமெரிக்காவுக்கு எதிரான நிலையை மார்க்சிஸ்ட் கட்சி எடுத்திருப்பதால் நாடு முழுவதும் முஸ்லிம்களின் ஆதரவு அதற்குக் கிடைக்கக்கூடும். ஆனால், அதை வாக்குகளாக மாற்றுவது அக் கட்சிக்குக் கடினம். ஏனென்றால், நாட்டின் பல பகுதிகளில் அக் கட்சிக்குச் செல்வாக்கு இல்லை. 10,000-த்திலிருந்து 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் அக் கட்சி தோல்வியுற்ற தொகுதிகளில் வேண்டுமானால், அக் கட்சிக்குப் பயன் கிடைக்கலாம்.

பாரதீய ஜனதாவும் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இல்லை. இடதுசாரி ~ ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி (3-வது அணி) ஆகியவற்றுக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் நடுவில் சிக்கி நசுங்கிப் போய்விடுவோம் என்று அஞ்சுகிறது பாரதீய ஜனதா கட்சி. தேர்தலுக்கு அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்னை காரணமாகிவிட்டால், இடதுசாரிகளின் மறுபிரதியாகக் குறுகிப் போய்விடுவோம் என்று பாஜகவில் உள்ள பல தலைவர்கள் கருதுகின்றனர். விலைவாசி உயர்வுப் பிரச்னையோடு, தமக்கே உரித்தான பிரச்னை ஏதாவது கிடைக்காதா என்று அவர்கள் – எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இன்றைய சூழலில் தேர்தலை எதிர்கொள்ள பாரதீய ஜனதாவுக்குத் தலைமை தாங்கக்கூடிய தகுதி படைத்த தலைவர் எல்.கே. அத்வானிதான். இயல்பாகவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் பதவி வேட்பாளராகவும் அவர்தான் இருக்க முடியும். வாஜ்பாயோ உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்; ராஜ்நாத் சிங்கின் செயல்பாடும் திருப்திகரமாக இல்லை. ஆனால், ஆர்எஸ்எஸ்-ûஸப் பொருத்தவரை விரும்பத்தகாத நபராக ஆகிவிட்டார் அத்வானி. பாரதீய ஜனதாவின் முடிவுகளில் தான் தலையிடாமல் விலகிக்கொள்வதாக ஆர்எஸ்எஸ் இப்போது கூறக்கூடும். ஆனால், பூசல்களால் கட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டது, ஏற்பட்டதுதான்.

நவம்பரில் குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் பாஜக வெற்றிபெற்றால், மக்களவைத் தேர்தலிலும் அது அக் கட்சிக்கு உதவுவதாக இருக்கும். அத்வானியின் செல்வாக்கிலும் அதன் தாக்கம் இருக்கும்.

காங்கிரûஸப் பொருத்தவரை, அணுசக்தி உடன்பாட்டிலிருந்து அது பின்வாங்க முடியாது. அதன் சாதக, பாதகங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அந்த உடன்பாட்டைச் செயல்படுத்துவதைத் தாமதப்படுத்தினால், காங்கிரஸின் அதிகாரத்தை அது பாதிக்கக்கூடும்; சர்வதேச அளவில் அதன் மதிப்பைக் குறைக்கக்கூடும்; இடதுசாரிகளின் நெருக்குதலுக்கு வளைந்து கொடுக்க வேண்டிய நிலைக்கு அதைத் தள்ளிவிட்டுவிடும்; அதோடு, தேச நலனுக்கு விரோதமான எதையோ அக் கட்சி செய்ய முனைந்தது போன்ற ஒரு கருத்தையும் ஏற்படுத்திவிடும்.

இப்போது சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பது பிரதமரது கெüரவம் மட்டுமல்ல; காங்கிரஸýம் அதன் தலைவர் சோனியா காந்தியும் அந்த உடன்பாட்டைப் பகிரங்கமாக அங்கீகரித்து இருப்பதால் அவர்களின் கெüரவத்தையும் பாதிக்கக்கூடியதாகிவிட்டது இப் பிரச்னை. சோனியாவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே. நாராயணன்தான் அமெரிக்காவுடன் அந்த உடன்பாட்டை விவாதித்து முடிவு செய்தார்.

எனவே, உடன்பாட்டுக்கு ஆதரவாகப் போராடுவதைத் தவிர காங்கிரஸýக்கு வேறு வழி இல்லை.

எனவே, 2008 ஏப்ரலில் தேர்தலை எதிர்கொள்வது என்பது அவ்வளவு மோசமான முடிவல்ல என காங்கிரஸ் நினைக்கிறது. அதோடு பாஜகவும் பலமிழந்து காணப்படுகிறது. தேர்தல் வந்தால், ஆந்திரத்திலும் அசாமிலும் காங்கிரஸýக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும்; ஆனால், மம்தாவின் துணையுடன் மேற்கு வங்கத்தில் கூடுதல் இடங்களைப் பிடிக்கக்கூடும்; கேரளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகம், தேசியவாதக் காங்கிரஸ் கூட்டுடன் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கூடுதல் இடங்களைப் பிடிக்கக்கூடும்.

இன்றைய சூழலில் மத்தியதர வர்க்கத்தின் ஆதரவையும் காங்கிரஸ் பெறக்கூடும். அதே நேரத்தில் விலைவாசி உயர்வால் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்; அதோடு, முஸ்லிம்களிடமிருந்தும் அக் கட்சி அன்னியப்பட்டு நிற்கிறது.

காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம், திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போன்றவை கடந்த தேர்தலில் பெற்றதைப் போன்ற வெற்றியை இப்போதும் பெறுமா என்று கூற முடியாது. எனவே, மம்தா, எச்.டி. தேவெ கெüடா மற்றும் பல மாநிலங்களில் உள்ள சிறிய குழுக்களின் ஆதரவு காங்கிரஸýக்கு மிக முக்கியமானதாகிவிடும்.

மக்களவை உறுப்பினர்களிடம் தேர்தலைப் பற்றிப் பேசினாலே கதிகலங்கிவிடுகிறார்கள். இடைத் தேர்தலைத் தவிர்ப்பதற்காக தேசிய அரசை அமைப்பது பற்றி ஆலோசிக்கலாம் என்றுகூட கடந்த வாரம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சிலர் கூறிக்கொண்டிருந்தனர்.

இப்போதைய நெருக்கடியின் இறுதி முடிவு எப்படி இருந்தாலும் சரி; இதுவரை சில விஞ்ஞானிகளும் கொள்கை வகுப்பாளர்களும் மட்டுமே விவாதித்துக்கொண்டிருந்த அணுவிசைப் பிரச்னை குறித்தும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்கள் விவாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் கோயில் ~ மசூதி போன்ற உணர்ச்சிகரமான விஷயங்கள் தேர்தல் பிரச்னைகளாக இருந்ததற்குப் பதிலாக, வரவிருக்கும் தேர்தல்களில் அணுசக்தியும் வெளியுறவுக் கொள்கையும் பிரச்னைகளாக இருக்கும் என்பது நிச்சயம்!

Posted in abuse, Accord, Alliance, America, Army, Artillery, Assembly, Atom, Atomic, Attack, Bombs, Brinda, China, Coalition, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Comunists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), deal, defence, Defense, Duty, EU, Europe, Force, House, Jothibasu, Karat, Left, LokSaba, LokSabha, Manmohan, Marines, MP, Navy, NCC, NSS, Nuclear, Nuke, Opposition, Pakistan, Party, Planes, Pokhran, Politics, Power, Prakash, Rajasthan, Reserve, Russia, Somnath, Sonia, Soviet, support, US, USA, USSR, Wars | 1 Comment »

Shalle we name the Vice President of India? – AB Bardhan, general-secretary CPI

Posted by Snapjudge மேல் ஜூலை 10, 2007

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இடதுசாரி வேட்பாளராவதற்கு பரதனுக்கு நல்ல வாய்ப்பு

சந்தோஷ்பக்கங்கள்: 203. பரதன் இந்த பொழப்புக்கு நல்லா வாயில வருது

புது தில்லி, ஜூலை 11: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இடதுசாரிகள் தரப்பில் யாராவது வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவர் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் ஏ.பி.பரதனாக இருக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பெரிய அணி இடதுசாரிகள்தான். குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பதை முடிவு செய்யும் விஷயத்தில் இடதுசாரி கட்சிகள் சுறுசுறுப்பு காட்டத் தொடங்கியுள்ளன.

என்றாலும் அதிகாரபூர்வமாக எதையும் அவை வெளிப்படுத்தவில்லை. ஏ.பி.பரதனை தவிர,

  • இடதுசாரி சித்தாந்தத்தில் நன்கு ஊறிய இர்பான் ஹபீப்,
  • மேற்கு வங்க சட்டப் பேரவைத் தலைவர் ஹஷீம் அப்துல் ஹலீம் ஆகியோரும் வேட்பாளராக நிறுத்தப்படக் கூடிய வாய்ப்புடையவர்கள்.

“குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் பிரதிபா பாட்டீலுக்கு நாங்கள் ஆதரவு தருவதால் அதற்கு ஈடாக குடியரசுத் துணைத் தலைவரை தேர்வு செய்வதை எங்களிடம் விட்டு விடுங்கள்’ என இடதுசாரிகள் ஏற்கெனவே தெளிவாக அறிவித்து விட்டனர்.

மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் முகம்மது சலீம் கூறியதாவது: குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக இதுவரை நாங்கள் விவாதிக்கவில்லை. ஜூலை 19-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கிறது. அதற்குப் பிறகே இந்த பிரச்னை பற்றி முழுமையாக விவாதிக்கப்படும். குடியரசுத் துணைத் தலைவர் பதவி வேட்பாளராக பரதன் நிறுத்தப்படுவாரா என்பதெல்லாம் அந்த கூட்டத்தில்தான் விவாதிக்கப்படும் என்றார்.

பார்வர்டு பிளாக் பொதுச்செயலர் தேவவிரத பிஸ்வாஸ் கூறியதாவது: பரதனை நிறுத்துவது என்பது நல்ல யோசனைதான். எனினும் பரதனுக்கு பதிலாக வேறு யாரையாவது வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுத்துமா என்பதையும் யோசனை செய்ய வேண்டியுள்ளது என்றார்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் விஷயத்தில் தற்போதைக்கு பட்டென கருத்து கூறுவதை தவிர்க்க விரும்புகிறது கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால் ஜூலை 12-ம் தேதி தொடங்கும் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் தனது நிலையை அது எடுத்துவிடும்.

இடதுசாரி சித்தாந்தத்தில் ஊறித் திளைத்த தலைவர் ஒருவரையே குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்பது ஒரு சாராரின் யோசனை. ஆனால். அரசியல் மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகளில் அத்துப்படியானவரை வேட்பாளராக நிறுத்தலாம். மாநிலங்களவையையும் தலைமை ஏற்று நடத்தவேண்டியவர் குடியரசுத் துணைத்தலைவர் என்பதால் இது அவசியம் என்பது மற்றொரு சாராரின் கருத்து.

இந்த தகுதிகளை கருத்தில் கொண்டால், பரதன் பொருத்தமானவராக உள்ளார் என்று இடதுசாரி தலைவர்கள் தெரிவித்தனர்.

—————————————————————————————————-

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மூன்றாவது அணிக்கும் ஏற்புடைய வேட்பாளர்: ஏ.பி.பரதன் தகவல்

புதுதில்லி, ஜூலை 16: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி ஆகிய இரண்டு அணிகளுக்கும் ஏற்புடைய வேட்பாளரை இடதுசாரிகள் நிறுத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் ஏ.பி.பரதன் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3 நாள் தேசியக் குழு கூட்டம் முடிவடைந்ததை ஒட்டி செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றார்.

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தன்னை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக கருத்தொற்றுமை எட்டப்பட்டாலும் போட்டியிடப் போவதில்லை என்று கூறியுள்ளார் பரதன்.

வேட்பாளராக என்னை அறிவிக்கவும் மாட்டார்கள்; இடதுசாரிகள் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு அது ஏற்புடையதாகவும் இராது என்பது எனக்குத் தெரியும்.

என்னுடைய பெயரை பரிந்துரைத்தவர்களுக்கு நன்றி. இதுபோன்ற விஷயங்களுக்காக கட்சியின் பொதுச் செயலாளரை முன்னிறுத்துவதை கட்சி அனுமதிக்காது. அடுத்த ஆண்டு மார்ச்சில் ஹைதராபாதில் கட்சி காங்கிரûஸ கூட்ட வேண்டிய உள்ளது. அதுவரை பொதுச் செயலராக ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய உள்ளன என்றார் அவர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்தை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த பரதன், வியாழக்கிழமை நடைபெற உள்ள கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக 4 இடதுசாரிக் கட்சிகளும் கூடி முடிவெடுக்க உள்ளன என்றார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தரும் ஆதரவை இடதுசாரிகள் திரும்பப் பெற்றால் மட்டும் தங்களது ஆதரவு கிடைக்கும் என மூன்றாவது அணி கூறியுள்ளது. அவர்கள் அப்படிச் சொல்லிவிட்டதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உடனான உறவுகளை முறித்துக் கொள்ள முடியாது. மேலும் அது ஜெயலலிதாவின் அறிக்கைதானே ஒழிய, மூன்றாவது அணியின் ஒட்டுமொத்தக் கருத்து அல்ல.

காங்கிரஸ் கட்சியைச் சாராத ஒருவரை நிறுத்த இடதுசாரிக் கட்சிகள் முயற்சி செய்யும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் கருத்தொற்றுமை ஏற்படுத்தவும் முயற்சி செய்வோம். ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியையும் இதற்கு ஆதரவாக மாற்ற முடிந்தால் மகிழ்ச்சி அடைவோம் என்று கூறியுள்ளார் பரதன்.

பரதனை குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்துவதில் ஆட்சேபணை இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சனிக்கிழமை கூறியிருந்தது. இந்தக் கருத்துக்கு முரண்படும் வகையில் பரதன் ஞாயிற்றுக்கிழமை பேசியுள்ளார்.

குடியரசு துணைத் தலைவராக வருபவர் அரசியல்வாதியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை; அவர் வரலாற்றாளராக, கல்வியாளராக அல்லது பொருளாதார அறிஞராகக் கூட இருக்கலாம் என மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிராகாஷ் காரத் கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.

Posted in AB Bardhan, AB Bharadhan, Abdul Haleem, ADMK, Aligarh, Anbalagan, Anbalakan, Anbazagan, Anbazhagan, Anbazhakan, Andhra, AP, Barathan, Bardan, Bardhan, Barthan, Benegal, Bengal, Bharadhan, Chatterjee, Chatterji, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI(M), DMK, Elections, Forward Bloc, Forward Block, Gandhi, Gandi, Gopal, Gopal Gandhi, Hindu, Irfan Habib, Islam, Jamia Millia, JJ, Jothibasu, KK, Left, Lok Saba, LokSaba, LokSabha, Mahatma, Manmohan, Marx, Marxists, Mohammad Salim, Mushirul Hasan, Muslim, N Ram, Naidu, Nandhigram, Nandigram, National Democratic Alliance, Nayudu, NDA, parliament, Polls, Pradhiba, Pradhibha, Prathiba, Prathibha, Pratiba, Pratibha, President, Professor, Rajeev, Rajiv, Rajiv Gandhi, Rajmogan, Rajmohan, Rajmohan Gandhi, Ram, Revolutionary Socialist Party, RSP, Shekavat, Shekavath, Shekawat, Shekawath, Shyam Benegal, Somnath, Somnath Chaterjee, Sonia, Speaker, TDP, The Hindu, United Progressive Alliance, University, UPA, UPA-Left, VC, Vice-chancellor, vice-president, VP, WB, West Bengal, WestBengal | 1 Comment »

Center-State Relations: Federal democracy’s principles – Analysis

Posted by Snapjudge மேல் மே 18, 2007

சங்கிலியின் வலிமை அதன் வளையத்தில்

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்திய – மாநில உறவுகளை அறிய தன்னிச்சையாக

  1. இந்திய முன்னாள் தலைமை நீதிபதி எம்.எம். பூஞ்சி தலைமையில்
  2. முன்னாள் உள்துறை செயலாளர்கள் திரேந்திர சிங்,
  3. வி.கே. துகல்,
  4. தேசிய நீதித்துறை அகாதெமியின் இயக்குநர் என்.ஆர். மாதவன் மேனன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழுவை நியமித்து இரண்டே ஆண்டுகளில் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

மாநிலங்களின் அனுமதி இல்லாமல் மத்திய அரசின் படைகளை நேரடியாக மாநிலங்களுக்கு அனுப்பலாமா

என்று அறியவே பூஞ்சி குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளிக்கும் இடதுசாரிகளே கருத்து தெரிவித்துள்ளனர். கடந்தகாலத்தில் இம்மாதிரி பிரச்சினைகள் வந்தபோது, ஆந்திர முதல்வர் என்.டி. ராமராவ், ஜோதிபாசு போன்றவர்கள் கண்டித்துள்ளனர். மாநில அரசுகளின் அதிகாரத்தைக் குலைக்கும் வகையில் இம்மாதிரி ஒரு குழுவை அமைத்ததே கண்டனத்துக்கு உரியதாகும்.

மத்திய – மாநில உறவுகளில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. அதையெல்லாம் சிந்திக்காமல் மத்திய படைகளைப் பிரிவு 355ன்படி மாநிலங்களுக்கு அனுப்புவது குறித்து ஏன் இந்த அக்கறை? மத்திய அரசு அவசரக் கோலத்தில் பூஞ்சி குழுவை உருவாக்கியிருப்பதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகின்றது. இதில் பிரச்சினைகள் எழாதவாறு மத்திய அரசு மேலும் சில விஷயங்கள் குறித்து இந்தக் குழு ஆராயும் என்று ஒப்புக்குச் சிலவற்றை வைத்து உள்ளது.

அவை

  • மத்திய – மாநில உறவு குறித்துப் புதிய பரிமாணத்தைக் காணுதல்,
  • உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கி, மத்திய அரசின் உதவியை மாநிலம் மூலம் இல்லாமல் நேரடியாக உள்ளாட்சிக்கு மேலும் வழங்க வழிவகைகள் காணுதல்,
  • மாநிலங்களிடையே உள்ள வணிகத்திற்கு வரி விதிப்பு முறைகள் காணுதல் போன்றவை; மாநிலங்களின் அதிகாரங்களில் கைவைக்க இப்படியொரு கமிஷன் தேவையா என்பது இன்றைய கேள்வி!

மாநில சுயாட்சி, மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் என்ற விவாதம் தொடர்ந்து நடைபெறுகின்றது. காங்கிரஸ் கட்சி மாநில சுயாட்சி பற்றி கடந்த 50 ஆண்டுகளில் தெளிவான நிலையில் இல்லாதது மட்டுமல்லாமல், மாநிலங்களினுடைய அதிகாரங்களைப் பறிக்கும் எண்ணத்திலே செயல்பட்டு வந்தது.

11.12.1947 காங்கிரஸ், அரசு அமைப்பு குறித்து இறுதி செய்தபோது, தன்னாட்சி உரிமை கொண்ட மாநிலங்கள் அமையும் எனக் கூறியது. அக்காலத்தில் மாநில காங்கிரஸ் கமிட்டிகளை அந்தந்த மாநிலங்களின் பெயரைச் சொல்லியே அழைத்தது இந்நிலையில்தான்.

நாட்டின் விடுதலைக்குப் பின் பிரதமர் நேரு, காங்கிரஸின் முந்தைய மாநில சுயாட்சி நிலைப்பாட்டிலிருந்து விலகி பலமான மத்திய அரசு எனப் படிப்படியாக நிர்வாகத்தில் கொண்டு வந்தார். அதை படேல், ஆசாத் போன்றோர் விரும்பவில்லை. நாடெங்கும் ஒரே கட்சி ஆட்சி, நேருவின் ஆளுமை போன்றவை அன்றைய சூழலில் மாநில சுயாட்சிக் கோரிக்கையின் வேகத்தைக் குறைத்துவிட்டன.

கேரளத்தில் முதல் காங்கிரஸ் அல்லாத இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அரசை ஜனநாயகத்திற்கு விரோதமாக மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசு கலைத்தது. அன்றைக்குத் தொடங்கிய வேட்டைத் தொழில் ஏறத்தாழ 105 முறை 356-ஐ பயன்படுத்தி மாநில அரசுகளைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கவிழ்ப்பது, தங்களுக்கு விருப்பமானவர்களை முதல்வர்களாக ஆக்குவது எனத் தொடர்ந்தது. உச்ச நீதிமன்றத்தில் எஸ்.ஆர். பொம்மை வழக்குக்குப் பின்புதான் இந்த விபரீதத்திற்கு ஒரு பரிகாரம் கிடைத்தது.

அரசியல் அமைப்புச் சட்டத்தை நூறு முறைக்கு மேல் திருத்தங்கள் செய்தபின்பும் கூட மாநிலங்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படவில்லை.

பொதுப்பட்டியலில் உள்ள 47 ஐயும் சேர்த்து மத்திய அரசிடம் 144 அதிகாரங்கள் உள்ளன. மாநிலங்களுக்கு உள்ளது வெறும் 66 அதிகாரங்கள் மட்டுமே, அதிலும் மத்திய அரசு தலையீடு இருக்கும்.

1968ல் கர்நாடகத்தைச் சார்ந்த காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஹனுமந்தையா தலைமையில் மத்திய அரசு அமைத்த நிர்வாகச் சீர்திருத்தக் குழுவின் துணைக்குழுவான செட்டல்வாட் குழு அறிக்கை, எஞ்சிய அதிகாரங்களை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்றும், மாநில அரசின் ஒப்புதலோடுதான் முக்கிய திருத்தங்களை அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்த வேண்டும் என்றும், தேசிய முக்கியத்துவமுள்ள பிரச்சினைகளில், மாநிலங்களை ஆலோசித்து மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

அண்ணா மறைவுக்குப் பின்பு, மத்திய – மாநில உறவுகளைப் பற்றி அறிய அமைக்கப்பட்ட நீதிபதி பி.வி. இராஜமன்னார் தலைமையிலான குழு,

  • மத்திய – மாநில பொது அதிகாரப் பட்டியலில் மாற்றங்கள் வேண்டும்,
  • மாநிலங்களுக்கிடையே கவுன்சில் அமைக்க வேண்டும்,
  • நிதிப் பகிர்வு,
  • திட்டக்கமிஷன் சுயமான அமைப்பாக இருக்க வேண்டும்,
  • ஆளுநர் பதவி ஒழிப்பு,
  • பிரிவு 356 நீக்கம் உள்ளிட்ட பல பரிந்துரைகளைச் செய்தது.

1973 அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய தேதியில் அகாலிதளத்தினர் கூடி பஞ்சாபுக்கு பிராந்திய சுயாட்சி வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.

காமராஜரின் நெருங்கிய சகா நிஜலிங்கப்பா, வீரேந்திர பாட்டீல், இராமகிருஷ்ண ஹெக்டே ஆகியோர் பங்கேற்ற மைசூர் ஸ்தாபன காங்கிரஸ் 1972ல் மாநில சுயாட்சிக்கு ஆதரவாகத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. ஆந்திர முதல்வராக இருந்த என்.டி. ராமராவ் விஜயவாடாவில் காங்கிரஸ் அல்லாத மாநில – தேசியக் கட்சிகளின் தலைவர்களைக் கொண்டு மாநில சுயாட்சி மாநாட்டை நடத்தினார். அதைப்போன்று கோல்கத்தாவில் ஜோதிபாசுவும் நடத்தினார்.

ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டுத் தலைவர் டாக்டர் பாரூக் அப்துல்லா, காங்கிரஸ் அல்லாத முதல்வர்கள், தலைவர்களை அழைத்து 1983 அக்டோபரில் 59 தலைவர்கள் – 17 அரசியல் கட்சிகள் கலந்துகொண்ட மாநாட்டை நடத்தி “ஸ்ரீநகர் பிரகடனம்’ வெளியிட்டார்.

மாநிலங்களின் உரிமை குறித்து நாளுக்கு நாள் விவாதங்களும் கோரிக்கைகளும் அதிகரிக்க இந்திரா காந்தி, மத்திய – மாநில பிரச்சினைகளைத் தீர்க்க சர்க்காரியா குழுவை 24-3-1983ல் அமைத்தார். 1987 அக்டோபரில் தன்னுடைய இரண்டு தொகுப்பு அறிக்கையை வழங்கியது இந்தக் கமிஷன்.

1990இல் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இடதுசாரிகளின் ஆதரவோடு வி.பி. சிங் தலைமையில் மாநிலக் கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி ஏற்பட்டது. வட்டாரத் தலைவர்களின் செல்வாக்கு தில்லியில் தொடங்கியது.

1996, 1998, 1999, 2004 எனத் தொடர்ந்து மாநிலங்களின் பங்களிப்பால் தில்லியில் மத்திய ஆட்சி தொடர்கிறது. இனிமேல் ஒரு கட்சி ஆட்சி என்பது மத்தியில் சாத்தியமில்லை. இது இப்படி இருக்க, மாநில சுயாட்சிக் கொள்கையைக் கொண்டவர்கள் மத்தியில் அதிகார வர்க்கத்தில் இருக்கும்பொழுது அதைப் பற்றிப் பேசக்கூடத் தயங்குகின்றனர். அதுதான் ஏனென்று புரியவில்லை.

திட்டக் கமிஷன் மற்றும் நிதிக் கமிஷனிடம் தேர்ந்து எடுக்கப்பட்ட மாநில “மாண்புமிகு’ முதலமைச்சர்கள் கருணை வேண்டி கையேந்த வேண்டிய நிலை. திட்டக்கமிஷன் அரசியல் அமைப்பு அங்கீகாரம் இல்லாமல் மத்திய கேபினட் முடிவின்படி அமைக்கப்பட்டது. அது இன்றைக்கு சூப்பர் கேபினட்டாக இருக்கின்றது. நிதிக்குழு மட்டும்தான் அரசியல் அமைப்புச் சட்ட அங்கீகாரம் பெற்றதாகும். நிதிக்குழுவும் திட்டக்குழுவும் மத்திய அரசின் கடைக்கண் பார்வையில்தான் இயங்குகின்றன. ராஜா செல்லையா குழு, காட்கில் கொள்கை ஆகியவற்றின் பரிந்துரைகளும் மத்திய அரசுக்குச் சாதகமாகப் பயன்படுத்தப்பட்டன.

மாநிலங்களில் எடுக்கப்படும் கனிம வளங்கள், தாதுக்கள், பெட்ரோலியம் போன்ற பொருள்களுக்கு மாநிலங்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுவதும் இல்லை.

ஜோதிபாசு, என்.டி. ராமராவ், பாரூக் அப்துல்லா, பிரகாஷ் சிங் பாதல், ராமகிருஷ்ண ஹெக்டே போன்றோர் போர்க்குணத்தோடு இப்பணியில் ஓரளவு அதிகாரங்களைப் பெறுவதில் வெற்றி பெற்றனர்.

பூஞ்சி குழுவினால் தேவையற்ற முறையில் அரசின் கஜானாவைக் காலியாக்க ஓய்வுபெற்றவர்களுக்குப் பணியைக் கொடுக்கும் நன்மையைத் தவிர வேறு எதுவும் நடக்கப் போவது இல்லை.

ஏற்கெனவே இதுவரை மத்திய அரசு இதுகுறித்து இரண்டு குழுக்களும்,

  • தமிழ்நாடு அரசு அமைத்த இராஜமன்னார் குழுவும்,
  • மேற்குவங்கத்து ஜோதிபாசு வழங்கிய வெள்ளை அறிக்கை,
  • ஸ்ரீநகர் மற்றும் விஜயவாடா பிரகடனங்கள்,
  • பெங்களூரில் நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் எடுத்த தீர்மானங்களைக் கொண்டே மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய சுயாட்சித் தன்மையையும், அதிகாரங்களையும் வழங்க இயலும். அப்படி வழங்குவதை விட்டுவிட்டு
  •  மாநில அரசின் கவனத்திற்கு வராமலே மத்திய அரசின் படைகளை அனுப்புவதும்,
  • மாநில அரசிடம் வரிகளை வாங்கவும் இந்தக் குழு அமைத்தது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல.

சங்கிலியின் வலிமை அதன் வளையத்தில் என்பார்கள். மத்திய அரசின் வலிமை, பலமான மாநிலங்கள்தான். இதை ஓரிரு மத்திய ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். மாநிலங்களிடமிருந்து அதிகாரங்களைப் பறிப்பதற்கும், மத்திய அரசிடம் அதிகாரங்களைக் குவிப்பதற்கும் செய்யப்படும் பல்வேறு முயற்சிகளில் ஒன்றுதான் பூஞ்சி குழுவின் தற்போதைய முயற்சி. சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதை மறந்துவிட்ட மத்திய அரசு, பூஞ்சி குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தத் துடிப்பதன் ரகசியம் புரியாமல் இல்லை!

(கட்டுரையாளர்: வழக்கறிஞர், சென்னை.)

Posted in 355, 356, abuse, Analysis, Andhra, AP, Army, Azad, Background, Bommai, Center, Centre, CM, Communists, Congress, Courts, CPI, CPI(M), Democracy, Dhirendra Singh, Dismiss, EMS, Federal, Governor, Govt, Help, History, Independence, Jothibasu, Justice, Kerala, Law, Left, Local Body, Madhavan Menon, Marxists, Military, Minister, Municipality, NDA, Nehru, NTR, Order, Panchayat, Party, Patel, PM, Poonchi, Power, President, Rajamannaar, Rajamannar, Republic, Rule, SC, SR Bommai, SRB, State, UDA, VK Dugal, WB | Leave a Comment »