இந்திய உதவிகளை வன்னிக்கு அனுப்புவது குறித்து ஆராய்ந்த கூட்டத்தில் இந்தியத் தூதுவரும் கலந்துகொண்டார்
இலங்கையின் வடக்கில் போரினால் அவதியுறும் தமிழ் மக்களுக்காக இந்தியாவினால் அனுப்பப்படும் உதவிப் பொருட்களை விநியோகிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட உயர் மட்டக் கூட்டத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்தும் கலந்துகொண்டுள்ளார்.
இலங்கையில் வடக்கே தற்போது அரசபடைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் பாரிய மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கென, இந்தியா நல்லெண்ண அடிப்படையில் 800 மெற்றிக் தொன்கள் நிவாரணப் பொருட்களை இலங்கை அரசின் அனுசரணையுடன் அனுப்புவதாக கடந்த வார முற்பகுதியில் புதுடில்லியில் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பு ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷவின் விசேட தூதுவராக டில்லி சென்றிருந்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்த பின்னர், கடந்த 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை பஸில் ராஜபக்ஷ தலைமையில் வடக்கில் மோதல்களினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு மற்றும் வழங்கல் நிலைமைகள் தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று இடம்பெற்றிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்தும் கலந்துகொண்டிருக்கிறார்.
![]() |
![]() |
இது குறித்து கருத்துவெளியிட்டுள்ள இந்திய ராஜதந்திர வட்டாரங்கள், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் கலந்து கொண்டதனை உறுதிப்படுத்தியதோடு, இந்திய நிவாரணப்பொருட்கள் அனுப்படுவது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து அங்கு கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றன.
ஆனாலும் இந்தக் கலந்துரையாடல் குறித்த மேலதிக விபரங்களை இந்திய ராஜதந்திர வட்டாரங்கள் வெளியிடவில்லை.
இந்த கூட்டம் குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலர் பாலித கோகன்ன தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இதேவேளை, உள்ளூர் ஊடகங்களிற்குத் தகவல்வெளியிட்டுள்ள அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரட்ண வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அங்கு போதியளவில் கையிருப்பில் இருப்பதாகவும், நிவாரணப்பொருட்கள் அனுப்பப்படுவதில் அவசரம் காட்டப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் உலக உணவு ஸ்தாபனத்தின் நான்காவது உணவுத்தொகுதி நாளைய தினம் வன்னிக்கு அனுப்பப்படவிருப்பதாகத் தெரியவருகிறது.
சுமார் 29 லாறிகளில் 400 மெற்றிக் தொன்களிற்கும் அதிகமான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப்படவிருப்பதாக தெரியவருகிறது.
வன்னியில் இருந்து கடல் வழியாக வெளியேறிய சிலர் வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்
![]() |
வவுனியா முகாமில் உள்ள அகதிகள் சிலர் |
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் உக்கிர சண்டைகள் காரணமாக அலம்பில் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம் ஒன்றில் தங்கியிருந்த பின்னர், அங்கிருந்து கடல் வழியாக வெளியேறி, திருகோணமலை நோக்கிச் சென்ற 5 பேர் அடங்கிய குடும்பம் ஒன்றைக் கடற்படையினர் கடந்த வாரம் பிடித்து பொலிசார் மூலமாக வவுனியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
வவுனியாவில் உள்ள சிவில் அதிகாரிகள் அவர்களைப் பொறுப்பேற்று தங்குமிடம் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கி பராமரித்து வருகின்றார்கள்.
முல்லைத்தீவு பகுதியின் பல்வேறு இடங்களி்லும் இடம்பெற்று வருகின்ற விமானத் தாக்குதல்கள் மற்றும் அந்த மாவட்டத்தி்ன் கிழக்குப் பகுதியில் இருந்து வரும் எறிகணை தாக்குதல்கள் காரணமாகவும் மற்றும் அங்கு நிலவுகின்ற கஷ்ட நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினாலும், அங்கிருந்து தாங்கள் வெளியேறி வந்ததாக அவர்கள் கூறுகின்றார்கள்.
வவுனியாவில் அவர்கள் யுத்த பயமின்றி இருந்த போதிலும், இங்குள்ள நிலைமைகளும் தமக்கு அச்சம் தருவதாகவும், நிச்சயமற்ற தன்மை கொண்டதாகவும் உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள். இதுகுறித்த மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரஙகத்தில் கேட்கலாம்.
அடுத்த நாட்டுப் பிரச்சினையில் ஓரளவுதான் தலையிட முடியும் என்கிறார் கருணாநிதி
![]() |
![]() |
தமிழக முதல்வர் கருணாநிதி |
இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு அதற்குள்ள அதிகாரங்கள் அடிப்படையில்தான் இயங்கவேண்டியிருக்கிறது என்றும், இன்னொரு நாட்டுப் பிரச்சினையில் பக்கத்து நாடு ஓரளவிற்குத்தான் தலையிடமுடியும் எனவும் தமிழக முதல்வர் கருணாநிதி கூறி இருக்கிறார்.
கடந்த மாதம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கிடப்பில் போடப்பட்டுவிட்டது, நிவாரண உதவி திரட்டுவதோடு தமிழக முன்முயற்சிகள் நின்றுவிட்டன என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குறைகூறி இருப்பதற்கு பதிலளிக்கும் வகையில், இன்று திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள பகிரங்கக் கடிதத்தில், கருணாநிதி போர் நிறுத்தம் உட்பட பல்வேறு கோரிக்களை அக்கூட்டத்தில் எழுப்பியதன் காரணமாகவே மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தன் சக்திக்கேற்றவாறு எடுத்துவருகிறது என்றும், இந்நிலையில் அதற்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக்கொண்டால் இந்த அளவாவது இலங்கையை தட்டிக்கேட்பது யார் எனவும் அவர் வினவியிருக்கிறார்.
இலங்கைத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைக் கோரும் முயற்சிகளில், அவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாததன் காரணமாக அம்மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியது, இடையில் ஏற்பட்ட சில விரும்பத்தகாத நிகழ்வுகளின் காரணமாக தமிழ்நாட்டு மக்கள் தங்கள் ஆதரவைக்காட்டுவதிலும் வேகம் குறைந்தது, அந்த நிலையில் தமிழ் நாட்டோர் அனைவரும் ஒற்றுமையுடன் இலங்கைத் தமிழர் நலனுக்காக ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் எடுத்த முயற்சிகளுக்கும் முழுமையான பலன் கிடைக்கவில்லையென்றும் முதல்வர் வருந்தியிருக்கிறார்.
தவிரவும் அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானங்கள் படி தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்தாம் பதவி விலகமுன்வந்தார்கள் என்றும், எப்படியாயினும் சரி இலங்கையில் போர் நிறுத்தப்படவேண்டும் என்பதுதான் அனைத்து தமிழர்களின் விருப்பம் என்றும், ஆனால் அதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதில்தான் வேறுபாடுகள் என்றும் கருணாநிதி மேலும் தனது கடிதத்தில் கூறியிருக்கிறார்.
இதனிடையே அ இ அ தி மு க பொதுச்செயலாளர் ஜெயலலிதா இலங்கைத்தமிழர்களுக்கு என திரட்டப்படும் நிதி மற்றும் பொருட்கள் விடுதலைப்புலிகளைச் சென்றடைந்துவிடுமோ என்ற ஐயம் தமிழ்நாட்டு மக்களுக்கு இருப்பதாகக் கூறி இருக்கிறார்.
தவிரவும் அரசு ஊழியர்கள் ஊதியத்திலிருந்து ஒரு நாள் சம்பளம் கட்டாயமாக பிடிக்கப்பட்டு இலங்கைத்தமிழர்க்கான நிதியில் சேர்க்கப்படுவதாக தகவல்கள் வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டி இருக்கிறார். ஆனால் இங்கு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் அவர் நிதி திரட்டப்படக்கூடாது என்றோ அல்லது எவ்வாறு விடுதலைப்புலிகளுக்கு அவ்வுதவி திருப்பிவிடாமல் பார்த்துக்கொள்வது என்பது பற்றியோ எதையும் கூறவில்லை என்று சுட்டிக்காட்டுகின்றனர் நோக்கர்கள்.
இலங்கை தமிழர்களுக்காக தமிழ் திரைப்பட நடிகர்கள் உண்ணாவிரதம்
![]() |
போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரைப்பட நடிகர்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.
ஏறத்தாழ அனைத்து முன்னணி நடிகர்கள், நடிகர்கள் அனைவருமே இதில் கலந்துகொண்டனர் எனலாம். உண்ணாவிரதம் நடிகர் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது.
கூட்ட முடிவில் போர் நிறுத்தம் கோரி தீர்மானம் இயற்றப்பட்டது. நிதி உதவி வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசியவர்கள் இலங்கை அரசை கடுமையாக தாக்குவதை ஓரளவு தவிர்த்தாலும் கூட மத்திய அரசு பிரச்சினையில் தலையிடவேண்டுமென்று வற்புறுத்தினர்.
![]() |
![]() |
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் போன்றோரும் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர்.
இந்தப் போராட்டத்தைப் பார்வையிட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம், மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டோரை நேரில் சந்தித்து தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.
இதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுசெயலாளர் பிரகாஷ் கராத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வேண்டும், தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு தன்னாட்சி வேண்டும், பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினாலும் விடுதலைப்புலிகளை எக்காரணங்கொண்டும் ஆதரிக்க முடியாது என்று கூறினார்.
வடமராட்சி கடற்பரப்பில் பலத்த மோதல்
![]() |
ஹோவர்கிராப்ட் கலம் ஒன்று |
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் இன்று அதிகாலை இலங்கை கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பலத்த மோதல்கள் இடம்பெற்றதாக இருதரப்பும் வெளியிடும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகளின் 5 முக்கிய உறுப்பினர்கள் உட்பட 14 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், கடற்புலிகளின் 4 தாக்குதல் படகுகள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
இதில் 5 படையினர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.
இந்த மோதலையடுத்து, காலை 8.30 மணியளவில் செம்பியன்பற்று கடற்பரப்பில் காணப்பட்ட விடுதலைப்புலிகளின் படகுகள் மீது விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் மேலும் இரண்டு படகுகள் அழிக்கப்பட்டதாகவும், 3 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
ஆயினும் இந்தச் சம்பவத்தில் கடற்படையினரின் டோரா படகு ஒன்றும், ஹோவர் கிராவ்ட் எனப்படும் மிதக்கும் தரையிறக்கக் கடற்கலம் ஒன்றும் மூழ்கடிக்கப்பட்டிருப்பதாகவும் நீரூந்து விசைப்படகு ஒன்று சேதமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், தமது தரப்பில் 7 கடற்கரும்புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை தொடக்கம் நாகர்கோவில் வரையிலான கடற்பரப்பில் கடற்டையினரின் 20 டோரா படகுகள் சகிதம் இருந்த ஹோவர் கிராப்ட் எனப்படும் கடற்கலம் அடங்கிய படகு அணியின் மீது தாங்கள் அதிரடித் தாக்குதல் நடத்தியதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த மோதல்களின்போது, கடற்படையினருக்கு உதவியாக தரையிலிருந்து எறிகணை தாக்குதல்களும், விமானத் தாக்குதல்களும் மேற்கொண்ட போதிலும், தமது 20 படகுகளைக் கொண்ட கடற் தாக்குதல் அணி கடற்படையினருக்குச் சேதத்தை விளைவித்திருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
வன்னிக் களமுனையில் ஜெயபுரம், நாச்சிக்குடா போன்ற விடுதலைப் புலிகளின் முக்கிய தளங்களை இராணுவத்தினர் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றி, கிளிநொச்சி நகரை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கும் வேளையிலேயே வடகடலில் வடமராட்சி பகுதியில் கடற்படையினர் மீதான இன்றைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இந்திய அழுத்தங்களுக்கு இலங்கை அடிபணிகிறது: ஜே.வி.பி.
![]() |
![]() |
நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் |
இந்தியாவின் அழுத்தங்களுக்கு இலங்கையின் தற்போதைய அரசாங்கம் அடிபணிந்துவருகிறது என்றும், இந்தியா தனது சுயநலனுக்காக இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் பல்வேறு வழிகளில் தலையிடுவதாகவும் ஜே.வி.பி. எனப்படும் மக்கள் சுதந்திர முன்னணி கருத்து வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழோசைக்கு கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன், இலங்கையின் வளங்களைச் சுரண்டுவதற்காக இந்தியா இப்படிப்பட்டத் தலையீடுகளைச் செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான இலங்கை அரசின் யுத்தத்தை நீட்டித்துக்கொண்டுபோகவே இந்தியத் தலையீடு வழிசெய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியா வழங்கிவரும் இராணுவ உதவிகளால் இலங்கை பயன்பெறவில்லை என்றும் அவர் கூறினார்.
அதேநேரம் இந்தியா இலங்கையிடையிலான நட்பு உன்னதமானது என்றும் அது கவனமாகப் பேணப்பட வேண்டும் என்றும் இலங்கை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஊடகச் சுதந்திரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகக் கண்காணிப்பு அமைப்புகள் விமர்சனம்
இலங்கையில் ஊடகச் சுதந்திரம் கணிசமான அளவில் மோசமடைந்துள்ளது என சர்வதேச ஊடக கண்காணிப்பு அமைப்புகள் கூறியுள்ளன.
செய்தியாளர்களைத் தண்டிக்க உலகிலேயே முதல் முறையாக தீவிரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்திய நாடு இலங்கைதான் என்றும் அந்த அமைப்புகள் கூறியுள்ளன.
இலங்கைகான பயணம் ஒன்றினை மேற்கொண்டு திரும்பியுள்ள இந்த சர்வதேச ஊடக கண்காணிப்பு அமைப்புகள் அங்கு செய்தியாளர்கள் தாக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவங்களும் நடந்துள்ளன என்று கூறுகின்றன.
இலங்கையிலுள்ள தனியார் ஒலிபரப்பு நிறுவனங்கள், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கண்டறியப்படும் பட்சத்தில் அவர்களின் ஒலிபரப்பு உரிமங்களை ரத்து செய்ய இலங்கை அரசு எடுத்து வரும் நடவடடிக்கைகளையும் இந்த அமைப்புகள் விமர்சித்துள்ளன.
மேலும் இன, மத மற்றும் கலாச்சார ரீதியாக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செயல்பட்டாலும் இந்த தனியார் ஒலிபரப்பு நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் இலங்கை அரசு கூறியுள்ளது.
ஈபிடிபியினர் உதயன் பத்திரிக்கை விநியோகத்தை தடுத்ததாக குற்றச்சாட்டு
![]() |
![]() |
கடந்த வாரம் நடைபெற்ற முழு அடைப்பால் யாழில் வழமை நிலை பாதிக்கப்பட்டது |
யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் நடந்த முழு அடைப்பின்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் பிரதிகளை யாழ்ப்பாணம் நகருக்கு வெளியே கொண்டி செல்லவிடாமல் ஈபிடிபி அமைப்பினர் தடுத்ததாக இலங்கையில் இருந்து இயங்கும் சுதந்திர ஊடக அமைப்பு குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
கடந்த வாரம் 23 ஆம் தேதி ஈபிடிபியினர் நடத்திய முழு அடைப்பின்போது,
உதயன் பத்திரிகையை யாழ்பாணம் நகருக்குள் விநியோகம் செய்யப்பட்டதாகவும் ஆனால் பிற இடங்களில் பத்திரிக்கையை கொண்டு செல்ல பத்திரிக்கை விநியோகிஸ்தர்கள் ஈபிடிபியினரால் தடுக்கப்பட்டதாக பத்திரிக்கையின் உரிமையாளர் சரவணபவன் தமிழோசையிடம் கூறினார்.
இது குறித்து காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் இதுவரை இலங்கை அரசிடம் இருந்து பாதுகாப்பு உத்திரவாதம் ஏதும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். தமக்கு மறைமுக அச்சுறுத்தல்கள் தொடர்வதாகவும் அவர் கூறினார்.
மறுப்பு
![]() |
![]() |
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா |
சரவணபவன் அவர்கள் கூறிய கருத்துக்களை ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்தேவானந்தா மறுத்துள்ளார்.
இராணுவம் அந்தப் பத்திரிக்கை மீது கோபமாக உள்ளதாக சரவணபவனிடம் தாம் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
உதயன் பத்திரிக்கையை யாழ்பாண நகருக்கு வெளியே விநியோகிக்கப்படுவதை தாமது அமைப்பினர் தடுக்கவில்லை என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
புலிகளின் வான் தாக்குதல்களை முறியடித்ததாக இலங்கை ராணுவம் அறிவிப்பு
இலங்கையின் வடக்கே மன்னாரிலும், தலைநகர் கொழும்பை அண்டிய களனிதிஸ்ஸ என்ற இடத்திலும் செவாய்க்கிழமை இரவு வான்புலிகள் நடத்திய தாக்குதலில் சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மூன்று இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
மன்னார் நகரில் உள்ள தள்ளாடி இராணுவ முகாம் மீது இரவு 10.30 மணியளவில் விடுதலைப் புலிகளின் இலகு ரக விமானங்கள் 3 குண்டுகளைப் வீசியதாகவும், அதன் பின்னர் நள்ளிரவு நேர வாக்கில் கொழும்புக்கருகில் உள்ள களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மீது விடுதலைப் புலிகளின் விமானம் குண்டுத் தாக்குதலை நடத்தியதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் விபரம் தெரிவித்திருக்கிறது.
![]() |
![]() |
புலிகளின் வான் தாக்குதல் சேதங்கள் |
இந்தத் தாக்குதல்கள் ஒரு மணித்தியால இடைவெளியில் அடுத்தடுத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மன்னார் தள்ளாடி இராணுவ முகாம் மீதும் களனிதிஸ்ஸ அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மீதும் வெற்றிகரமாகக் குண்டுத் தாக்குதல்களை நடத்திவிட்டுத் தமது விமானங்கள் பாதுகாப்பாக தமது தளத்தி்ற்குத் திரும்பியிருப்பதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர். எனினும் விடுதலைப் புலிகளின் இந்தத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகப் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
சர்வதேச நிதி நெருக்கடியால் இலங்கை தேயிலை தொழில் பாதிப்பு
உலக சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக இலங்கையின் தேயிலைத் தொழில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்புக்களைச் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றது. இதன் ஒரு அங்கமாக, கடந்த வாரம் உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கான தேவைப்பாடும், விலையும் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து பாதிப்புகளுக்கு முகம்கொடுத்திருக்கும் இலங்கைத் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை, குறிப்பாக நடுத்தர ரக தேயிலைகளை உற்பத்திசெய்யும் தோட்ட உரிமையாளர்களை உற்பத்தியின் அளவினைக் குறைக்கும்படி இலங்கை தேயிலை வாரியம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
![]() |
![]() |
பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கை தேயிலைத்தொழில் |
ஆனாலும் உயர்ந்தர தேயிலையைத் தொடர்ந்தும் உற்பத்தி செய்யும்படி அது வலியுறுத்தியிருக்கிறது.
இதுகுறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்துவெளியிட்ட இலங்கை தேயிலை வாரியத்தின் தலைவர் லலித் ஹெட்டியாராச்சி அவர்கள், இது ஒரு தற்காலிக பின்னடைவு என்றும், இந்தக் காலப்பகுதியில் தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள், முகாமையாளர்கள் தமது தோட்டங்களில் கப்பாத்து செய்தல், புதிய மரக்கன்றுகளை நாட்டுதல் போன்ற தோட்ட அபிவிருத்திப்பணிகளில் ஈடுபடலாம் என்றும் அறிவுரை கூறினார்.
இது குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
கொழும்பு மன்னார் மீது விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்
விடுதலைப் புலிகளின் வான் படையினர் செவ்வாய் இரவு மன்னார் மீதும் கொழும்பு மீதும் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
செவ்வாய்கிழமை இரவு 10.30 மணி அளவில், விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று மன்னார் மாவட்டத்தில் உள்ள இராணுவத் தலைமையகத்துக்கு அருகே குண்டு வீசித்தாக்கியுள்ளது.
விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று இரண்டு குண்டுகளை மன்னார், தள்ளாடி இராணுவத் தலமையகத்தின் அருகே வீசியதாகவும் இதில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
அதே நேரம் கொழும்பில் உள்ள இலக்கு ஒன்றின் மீதும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இரவு 11 மணி அளவில் கொழும்பில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டதாகவும், விமான எதிர்ப்பு பீரங்கிகள் வானை நோக்கி சுட்டதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருந்தும் கொழும்பு தாக்குதலால் ஏற்பட்ட சேத விபரம் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.
இலங்கை அரச படை விமான குண்டுவீச்சில் பொதுமக்கள் மூவர் பலி: விடுதலைப் புலிகள் குற்றச்சாட்டு
இலங்கையின் வடக்கே கிளிநொச்சியின் புறநகர்ப்புறமாகிய பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விமானக் குண்டுத் தாக்குதலில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்திருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் கிளிநொச்சி பிரதேசத்தில் இன்று விமானத் தாக்குதல்கள் எதுவும் நடத்தப்படவில்லை என இராணுவம் கூறியுள்ளது.
இந்தத் தாக்குதலில் 18 வீடுகள் அழிந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.
எனினும் இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இராணுவ தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் கிளிநொச்சி நகருக்கு மேற்குப் பகுதியில் உள்ள களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர், தீவிரத் தாக்குதல்களை மேற்கொண்டு புதிதாக சுமார் 3 கிலோ மீற்றர் தூரம் முன்னேறியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
இதற்கிடையில் ஐ.ஓ.எம். என்றழைக்கப்படும் ஐ.நா.வின் இடம்பெயர்ந்தோருக்கான சர்வதேச உதவி அமைப்பின் மன்னார் அலுவலகத்தில் 2 கைத்துப்பாக்கிகளும், தோட்டாப் பெட்டிகளும் அலுவலக ஊழியர்களினால் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
‘மட்டக்களப்பு செங்கலடியில் டி.எம்.வி.பி. அலுவலகம் விடுதலைப் புலிகளால் தாக்குதல்’
![]() |
![]() |
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (டி.எம்.வி.பி.) அலுவலகம் ஒன்று விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் டி.எம்.வி.பி. அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஐந்து பேர் காணாமல்போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகள், தாக்குதலுக்கு உரிமை கோரியிருப்பதோடு, தாக்குதலின் பின்பு தாங்கள் ஆயுதங்கள் எடுத்துச் சென்றுள்ளதாகவும், 6 பேர் சிறைப்பிடித்துக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
ஆனால் ஆட்கள் சிறைப்பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுவதை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளரான ஆஸாத் மௌலானா மறுத்துள்ளார்.
இருந்தபோதும் இச்சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர் ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர் என்று தேசியப் பாதுகாப்பு ஊடக மையமும் பாதுகாப்பு அமைச்சகமும் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கை மக்களுக்கு நிவாரணம் திரட்டும் பணி தமிழகத்தில் ஆரம்பம்
![]() |
![]() |
தமிழக முதல்வர் |
இலங்கைத் தமிழ் மக்களுக்கு நிவாரண நிதி, மற்றும், நிவாரணப் பொருட்களைத் திரட்டும் பணியில் தமிழக அரசு இறங்கியிருக்கிறது.
தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஏற்கெனவே மத்திய அரசு 800 டன் நிவாரணப் பொருட்களை தமிழர் பகுதிகளுக்கு அனுப்புவதாக அறிவித்திருக்கும் நிலையில், தமிழகமும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்க்கு, உணவு, உடை மற்றும் மருந்துப் பொருட்களை விரைவில் அனுப்பவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் அனுமதியின் அடிப்படையில் அனுப்பப்படவிருக்கும் நிவாரணப் பொருட்கள் பாதிக்கபட்டுள்ள மக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் ஐக்கியநாடுகள் மன்றம் போன்றவற்றின் உதவியுடன் வழங்கப்படும் எனவும் செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.
இதற்காக முதல்வர் கருணாநிதியே பத்து லட்ச ரூபாய் நன்கொடை வழங்கி இருக்கிறார். மற்ற பலரும் முன்வந்து 25 லட்ச ரூபாய்க்கும் மேல் திரட்டியிருப்பதாகவும் மற்றுமொரு செய்திக்குறிப்பு கூறுகிறது.
இதனிடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மத்திய அரசின் முன் முயற்சிகளுக்கு தன்னுடைய பாராட்டைத் தெரிவித்திருக்கிறார்.
கிளிநொச்சி நிலவரம் குறித்து அமெரிக்கன் – இலங்கை மிஷன் திருச்சபையின் தலைவர் தகவல்
![]() |
![]() |
அமெரிக்கன் – இலங்கை மிஷன் திருச்சபையின் தலைவரான அருட் கலாநிதி எஸ்.ஜெயநேசன் |
கடந்த சில தினங்களாக கிளிநொச்சியில் தங்கியிருந்து தற்போது மட்டக்களப்பு திரும்பியுள்ள அமெரிக்கன் – இலங்கை மிஷன் திருச்சபையின் தலைவரான அருட் கலாநிதி எஸ்.ஜெயநேசன், வன்னிப் பிராந்தியத்தில் ஓமந்தை முதல் பரந்தன் வரையிலான ஏ- 9 நெடுஞ்சாலை மக்கள் நடமாட்டமின்றி ஒரு சூனிய பிரதேசமாக தற்போது காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கிளிநொச்சியின் மையப் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பு அலுவலகங்கள் கூட தற்போது அங்கு இல்லை என்று அவர் கூறினார்.
யுத்த அனர்ததத்ததிற்கு உள்ளாகி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சர்வதேச செஞசிலுவைச் சங்கம்மும் ஐ.நா. நிறுவனங்களும் நிவாரண உதவிகளை வழங்குகின்றன.
இதனைத் தவிர ஓரிரு திருச்சபைகளும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருந்தாலும், அது மக்களின் தேவைக்கு போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக அரசியல் கட்சிகளின் போராட்டம் இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியத் தலையீட்டின் நல்ல துவக்கம்: டாக்டர் ராமதாஸ்
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக மத்தியில் ஆளும் கூட்டணி அரசுக்கு நெருக்கடி தரப்போவதில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது தொடர்பாக தமிழோசையில் கருத்து வெளியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், தமிழக முதல்வர் பின்வாங்குவதாக இதைக் கருத முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழகத்தில் அரசியல் கட்சிகள் எடுத்த முயற்சிகள் காரணமாக மத்திய அரசு தற்போது இலங்கைத் தமிழர்கள் குறித்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. ஆகவே இதனை ஒரு தொடக்கமாகத்தான் கொள்ளவேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்த இந்தியா முன்முயற்சிகளை எடுக்காவிட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகநேரிடும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் கடந்த 14ம் தேதி நிறைவேற்றப்ட்ட தீர்மானம் இலங்கைப் பிரச்சினையை, இந்தியாவில் மீண்டும் முதன்மைப்படுத்தியிருந்தது.
திமுக ஆதரவுடன் செயல்படும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இது ஒரு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று ஊகங்கள் நிலவின.
இந்த நிலையில், நேற்று ஞாயிறன்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகருமான பசில் ராஜபக்சவை சந்தித்து இலங்கை நிலவரம் குறித்து விவாதித்த பின்னர், இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னை வந்து தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து விளக்கமளித்திருந்தார்.
இனி இலங்கைப் பிரச்சினை தொடர்பாக மத்தியில் ஆளும் கூட்டணி அரசுக்கு நெருக்கடி தரப்போவதில்லை என்று அதன் பின்னர் தமிழக முதல்வர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பசில் ராஜபக்ஷ கருத்து
![]() |
![]() |
இந்திய வெளியுறவு அமைச்சரை ஞாயிறன்று சந்தித்திருந்த இலங்கை ஜனாதிபதியின் சகோதரர் |
இலங்கை இனப்பிரச்சினை குறித்து இந்தியாவுக்கு வந்து இந்தியத் தலைவர்களை விவாதித்து சென்ற இலங்கை நாடளுமன்ற உறுப்பினரும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச தமது இந்தியப் பயணம் குறித்து தமிழோசையில் விபரம் வழங்கினார்.
இலங்கைக்கு இந்தியா வழங்குவதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த உதவிப் பொருட்கள் எப்போது முதல் அனுப்பப்படும் என்பதற்கு குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இல்லை என்றும், தேவைகளை பொறுத்து அவை முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.
இந்தியா இலங்கைக்கு இராணுவ உதவி வழங்குவது தொடர்பில் இந்தச் சந்திப்பில் எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
தற்போதைய ராணுவதாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் முன்வைத்து வரும் கோரிக்கைகள் குறித்து இந்திய அரசு தரப்பில் தம்மிடம் எதுவும் பேசப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு நிவாரணப்பொருட்களை இந்தியா அனுப்பவுள்ளது
இலங்கையின் வடக்கே அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, 800 தொன் நிவாரணப் பொருட்களை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.
இலங்கை ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ அவர்களுக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் அதிகாரிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இரவு புதுடெல்லி வந்த பஸில் ராஜபக்ஷ அவர்கள், இன்று காலை, வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோருடன் நீண்ட ஆலோசனை நடத்தினார்.
![]() |
![]() |
பசில் ராஜபக்ஷ |
சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த பஸில் ராஜபக்ஷவிடம் பேச்சுவார்த்தை விவரங்கள் குறித்துக் கேட்டபோது, பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமைந்தது என்றார்.
இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்புத் தொடர்பாக இந்திய அரசிடம் ஏதாவது உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறதா என்று அவரிடம் கேட்டபோது,
“எல்லா உத்தரவாதங்களையும் நாங்கள் கொடுத்திருக்கிறோம். அதாவது, மனிதாபிமானத் தேவைகள் உள்பட எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என உறுதியளித்திருக்கிறோம்’’ என்றார் பஸில் ராஜபக்ஷ அவர்கள்.
பின்னர் வெளியிட்பபட்ட கூட்டறிக்கையில், இலங்கையின் வடக்கே நடைபெற்று வரு்ம் மோதல்களில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் புலம் பெயர்ந்த மக்களின் நிலை தொடர்பாக இந்தியா தனது கவலைகளை வெளியிட்டதாகவும், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி சென்றடைய வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களின் நலன் மற்றும் அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் தொடர்பாக இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக பஸில் ராஜபக்ஷ அவர்கள் இந்தியத் தரப்பிடம் விளக்கினார். இலங்கைத் தமிழர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் சட்டத்தின் 13 வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்க வேண்டும் என்றும் இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
நிலையான தீர்வு காண்பதற்கான அரசியல் நடைமுறைகளை மேற்கொள்வதில் இலங்கை ஜனாதிபதி உறுதியுடன் இருப்பதாக பஸில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் கிழக்கே ஜனநாயக நடைமுறைகளை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அந்த மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பஸில் ராஜபக்ஷ அவர்கள் விளக்கினார்.
தமிழக ஆதரவு விடுதலைப்புலிகளை காப்பாற்றிவிடக் கூடாது என்கிறார் கருணா
![]() |
![]() |
கூட்டத்தில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையானும், நாடாளுமன்ற உறுப்பினர் கருணாவும் |
தமிழகத்தில் தற்போது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக எழுந்துள்ள அலையானது விடுதலைப்புலிகளை காப்பாற்றுவதாக அமைந்துவிடக் கூடாது என்று விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து நான்கு வருடங்களுக்கு முன்னர் பிரிந்து சென்று தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார்.
தான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர் மட்டக்களப்பு நகரில் இன்று கூட்டம் ஒன்றில் முதன் முதலாக பேசிய கருணா, வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களை மீட்பதற்கான அழுத்தத்தை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
இந்த கூட்டம் குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
காத்தான்குடியில் பள்ளிவாசல் மீது தாக்குதல்
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இன்று நடத்தப்பட்ட கைக்குண்டுத்தாக்குதல் ஒன்றில் 5 பேர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றவர்களே இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
கிளிநொச்சி மருத்துவமனை மீது எறிகணைத் தாக்குதல்
அதேவேளை, கிளிநொச்சி வைத்தியசாலை மீது இன்று சனிக்கிழமை பிற்பகல் நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் அந்த வைத்தியசாலையின் சுற்று மதில் சேதமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
இந்தத் தாக்குதல் நடைபெற்றபோது வைத்தியர்கள் ஒரு கூட்டத்தில் இருந்ததாகவும், வைத்தியசாலை பணியாளர்களும், நோயாளர்களும் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகியதாகவும் அந்தச் செய்திகள் கூறுகின்றன.
ஆனாலும் அப்படியான எந்த தாக்குதலையும் இலங்கைப் படையினர் நடத்தவில்லை என்று இலங்கை தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் சார்பிலான பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
புதுடில்லியில் இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ
![]() |
![]() |
பசில் ராஜபக்ஷ |
இலங்கை ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ அவர்கள், சனியன்று புதுடில்லி வந்து சேர்ந்தார்.
இலங்கை இனப் பிரச்சினையில் இந்திய அரசு தலையிட வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசும் இதுதொடர்பான செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
பிரதமர், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டோர், இது தொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். இனப் பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், இலங்கை நிலவரம் குறித்தும், இலங்கை அரசின் நிலை குறித்தும் எடுத்துரைக்கவும், இந்தியாவின் கவலைகளைத் தீர்ப்பது தொடர்பாக விவாதிக்கவும் பஸில் ராஜபக்ஷ அவர்கள் புதுடில்லி வந்திருக்கிறார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் உள்ளிட்டோரைச் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.
மதுரை சிறையில் இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீர்
இதற்கிடையில், ராமேஸ்வரத்தில் கடந்த 19 ஆம் திகதி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகினர் நடத்திய பேரணியின்போது, பிரிவினைவாதக் கருத்துக்களைப் பேசியதாக நேற்று மாலை கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகிய இருவரும் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதையடுத்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஏற்கனவே, இதே குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட வைகோவும், மதிமுகவின் அவைத் தலைவர் கண்ணப்பனும் சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, வைகோ மற்றும் திரைப்பட இயக்குநர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை சிறுபான்மை கட்சிகளின் கூட்டுக்காக ரவூப் ஹக்கீம் முயற்சி
![]() |
![]() |
ரவூப் ஹக்கீம் |
சிறுபான்மையின கட்சிகளின் பெரும் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மேலக மக்கள் முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
சிறுபான்மையின மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயம், தேர்தல் சட்டங்களை ஒருதலைப்பட்சமாக மாற்றுவதற்கான முயற்சிகளை எதிர்த்தல் ஆகியவை உட்பட பல விடயங்களில் இந்த கூட்டணி சேர்ந்து செயற்படுவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவரது செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இலங்கை நிலவரங்கள் கவலையளிக்கின்றன என்று இந்தியா நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்
![]() |
![]() |
பிரணாப் முகர்ஜி |
இலங்கையிலுள்ள நிலவரங்கள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என்று இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
குறிப்பாக இலங்கையின் வடபகுதியில் சீர்குலைந்து வரும் மனிதாபிமான நிலமைகள் கவலையளிக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
அப்பகுதியில் நடைபெற்று வரும் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த நிலையிலுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்தும் அவ்வாறானவர்களின் நிலை குறித்தும் இந்தியா கவலையடைந்துள்ளது என்றும் பிரணாப் முகர்ஜி கருத்து வெளியிட்டுள்ளார்.
பொதுமக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்
![]() |
![]() |
உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தவர்கள் |
பொதுமக்களின் நலன்களும் பாதுகாப்பும் எப்படிப்பட்ட நிலையிலும் உறுதி செய்யப்பட வேண்டும் என நாங்கள் இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். அதுமட்டுமல்ல உணவும் இதர அத்தியாவசியப் பொருட்களும் தங்குதடையின்றி அவர்களைச் சென்றடைய வேண்டும் என்றும் கூறியுள்ளோம்.
இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் நலன்களும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்று இந்தியாவுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் விவாதிக்க இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகருமான பஸில் ராஜபக்ஷ விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தைகள் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்
![]() |
![]() |
இராணுவத் தீர்வு கூடாது |
இனப்பிரச்சினைகளுக்கு இராணுவ வழியில் தீர்வு காண முடியாது என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் பேச்சுவார்த்தைகள் மூலம் சமாதான வழியில், தமிழ் மக்கள் உட்பட அனைத்து சிறுபான்மை மக்களின் நியாயப்பூர்வமான உரிமைகளை மதித்து அதை உள்ளடக்கி எட்டப்படும் ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்துவதே தற்போதைய தேவை என்றும் கூறியுள்ளார் பிரணாப் முகர்ஜி அவர்கள்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடக்கும் போரில் இலங்கையிலுள்ள தமிழ் சமூகத்தின் உரிமைகளும் நலன்களும் சிக்குண்டு போகக் கூடாது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து ஜனநாயக வழிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க இலங்கை அரசை இந்தியா ஊக்குவிக்கிறது என்றும் தெரிவித்த பிரணாப் முகர்ஜி அவர்கள், இவை மட்டுமல்லாமல் இந்திய மீனவர்களின் நலன் தொடர்பாகவும் இலங்கை அரசுடன் பேசிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கடல் எல்லைகளை கடக்கும் இந்திய மீனவர்கள் மீது இலங்கையின் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்துவதை தவிர்க்குமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது என்றும், அதே சமயம் சர்வதேச எல்லையை இந்திய மீனவர்கள் கடக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் இன்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இரண்டு கப்பல்களை கடற்புலிகள் தாக்கியுள்ளனர்
![]() |
![]() |
கடற்புலிகள்-பழைய படம் |
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்துக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்று காங்கேசன்துறை துறைமுகத்தில் பொருட்களை இறக்குவதற்காக நின்றிருந்த இரண்டு கப்பல்கள் மீது விடுதலைப் புலிகள் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக இலங்கை அரசு கூறுகிறது.
இன்று அதிகாலை 5.10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு தற்கொலை தாக்குதல் படகுஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் டி.கெ.பி. தசநாயக்கவை மேற்கோள்காட்டி இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால் காங்கேசன்துறை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கப்பல்களில் ஒன்றை தாக்கி மூழ்கடித்துள்ளதாகவும் மற்றொன்றை சேதப்படுத்தியுள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை யாழ் குடா நாட்டுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்த பொருட்கள் மயிலிட்டி இறங்கு துறையில் இறக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
மோதல் பிரதேசங்களுக்கு செய்தியாளர்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் இது தொடர்பான செய்திகளை பக்கசார்பற்ற முறையில் பெறமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகச் சலுகைக்காக ஐரோப்பிய மனித உரிமை விசாரணையை ஏற்க தயாரில்லை: இலங்கை அரசு
![]() |
![]() |
அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் |
இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை சர்வதேச நியமங்களுக்கு அமைய இருக்கின்றன என்பதை விசாரித்து உறுதிசெய்த பின்னரே இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஏற்றுமதி தீர்வை முன்னுரிமை சலுகைகளை நீட்டித்துத் தரமுடியும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை இலங்கை அரசாங்கத்தால் ஏற்க முடியாது என்று அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் வரிச்சலுகையான 150 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெறுவதற்காக இலங்கையின் இறையாண்மையையும், மதிப்பினையும் தன்மானத்தினையும் தாரைவார்த்துக் கொடுக்க அரசு தயாராக இல்லை என்று சர்வதேச வர்த்தக ஊக்குவிப்புத்துறை அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த வரிச் சலுகையை இலங்கை இழக்க நேர்ந்தால் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து யாழ் பல்கலைக்கழக முன்னாள் பொருளியல் பேராசிரியர் பாலகிருஷ்ணன் தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
அக்கராயன்குளத்தைக் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றியதாக இலங்கை அரச படையினரும், படையினரின் முன் நகர்வை முறியடித்துள்ளதாக புலிகளும் தெரிவித்துள்ளனர்
![]() |
![]() |
இலங்கை சிப்பாய் |
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தி்ல் உள்ள அக்கராயன்குளம் கிராமப்பகுதியை விடுதலைப் புலிகளின் பலத்த எதிர்த்தாக்குதல்களுக்கு மத்தியில் படையினர் கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.
எனினும் நாச்சிக்குடா தொடக்கம் அக்கராயன்குளம் வரையிலான பகுதிகளில் ஆறு முனைகளில் முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு எதிராக உக்கிர தாக்குதல்களை நடத்தி படையினரின் முன்-நகர்வினை முடக்கியிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
போர்முனைப் பகுதிகளுக்கு செய்தியாளர்களோ அல்லது மனிதாபிமான பணியாளர்களோ செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதனால், பக்கசார்பற்ற நிலையில் போர்முனைத் தகவல்களைப் பெறமுடியாதிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் ஹர்த்தால்
![]() |
![]() |
கடத்திக் கொல்லப்பட்ட சிப்பந்திகள் பணியாற்றிய வலம்புரி ஸ்டோர்ஸ் முடிக்கிடக்கிறது |
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் இன்று அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால் காரணமாக அப்பிரதேசங்களின் வழமைநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் மட்டக்களப்பு நகரில் பொலிசாரால் விசாரனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்டப்டதாகக் கூறப்பட்ட கடைச் சிப்பந்திகள் இருவர் சடலமாக கண்டுபிடிக்கபட்ட சம்பவத்தைக் கண்டிக்கும் வகையிலும், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தும் வகையிலும் ‘கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தவர்கள் மூலம் இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஹர்த்தால் காரணமாக பாடசாலைகள் ,அரசாங்க தனியார் காரியாலயங்கள் ,வங்கிகள் மற்றும் நீதிமன்றங்கள் எதுவும் இயங்கவில்லை.வியாபார நிலையங்கள் மூடப்பட்டிருந்ததோடு போக்குவரத்து சேவைகளும் தடைப்பட்டிருந்தது.