இந்திய குழந்தைகளின் போஷாக்கின்மை குறித்து ஐநா கவலை
![]() |
![]() |
போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று |
இந்தியாவில் உள்ள குழந்தைகளில் பாதிப்பேர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறுகிறது.
இந்த நிலையில், அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் கடுமையான விலை உயர்வு காரணமாக, மேலும் பட்டினியைச் சந்திக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படும் சூழ்நிலை உருவாகியிருப்பதாக, ஐ.நா.வுக்கான குழந்தைகள் நிதியமான யுனிசெஃப்பின் தெற்காசிய பிராந்திய இயக்குநர் டேனியல் டூலே தெரிவித்திருக்கிறார்.
![]() |
![]() |
அரிசி விலையுயர்வினாலும் பெரும் பாதிப்பு |
இந்தப் பிரச்சினை தொடர்பாக செவ்வாய்க்கிழமை டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டேனியல் டூலே, விலைவாசி உயர்வு பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இந்தியா உள்பட இந்தப் பிராந்தியத்தில் உள்ள குழந்தைகள் பெரும் அபாயத்தைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக எச்சரித்தார்.
விலைவாசி உயர்வு காரணமாக, இந்தியாவில் மட்டும் சுமார் 18 லட்சம் குழந்தைகள், போஷாக்கின்மையால் பாதிக்கப்படும் நிலை உருவாகியிருப்பதாக யுனிசெப் கூறுகிறது. இதைத் தடுக்க வேண்டுமானால், இலவச உணவுத் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்து, ஏழைகள் பயன்பெறும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என யுனிசெப் கூறுகிறது. நீண்டகால கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டுமானால், வேளாண் துறையில் தற்போது பற்றாக்குறையாக உள்ள முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் யுனிசெப் கருத்துத் தெரிவித்திருக்கிறது.