வெள்ளையர்களின் நீங்காத நிறவெறி
டி.ஜே.எஸ். ஜார்ஜ்
அக்ரஹாரத்தில் கழுதை : டாடா, ஜகு�
எங்கும் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கை வியாபித்து நிற்கிறது என்று நாம் மார்தட்டிப் பேசிக் கொள்கிறோம்.
ஆனால், இத்தகைய காலகட்டத்திலும் “வெள்ளையர்களே அனைத்திலும் உயர்ந்தவர்கள்; வெள்ளையர் அல்லாதோர் கீழேதான்’, என்று மற்றவர்களை மட்டந்தட்டும் நிறவெறிக் கொள்கை சர்வதேச நிதி மற்றும் வர்த்தக அமைப்புகளில் தலைதூக்கி நிற்கிறது.
நிறவெறிக் கொள்கை ஊறிவிட்ட உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம்.
உருக்குத் தொழில் உலகின் மன்னர் என்ற பெருமையாகப் பேசப்படும் வெளிநாடு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டலும் இந்த நிறவெறிக் கலாசாரத்தால் பாரபட்சமாக நடத்தப்பட்டவர்தான்.
ஐரோப்பாவில் இயங்கும் ஆர்சலர் என்ற நிறுவனத்தின் உரிமையை தனது கட்டுக்குள் கொண்டுவர அவர் முயன்றார். ஆனால் வெள்ளையர் அல்லாத ஒருவரது பணம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் நிராகரித்து விட்டார்.
ஆனால் பிற்பாடு, தான் சொன்ன வார்த்தை தவறானது என்பதை அந்த நிர்வாகியே உணர்ந்து, மாற்றிக் கொண்டார் என்பது வேறு கதை. பின்னர் அந்த நிர்வாகியின் எதிரிலேயே ஆர்சலர் நிறுவனம் ஆர்சலர்-மிட்டல் என்று மாறியதும் வேறு விஷயம்.
இன்னொரு சம்பவம் அமெரிக்காவைச் சேர்ந்த சொகுசு ஹோட்டல் நிறுவனமான ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தொடர்பானது ஆகும்.
இந்த ஹோட்டலுடன் கூட்டு வைக்க டாடா நிறுவனம் ஆசைப்பட்டது. ஆனால் நிறவெறியில் ஊறிய அதன் தலைமை நிர்வாகம், டாடாவின் ஆசையை நிராகரித்து கேலியும் கிண்டலும் செய்தது.
“சொகுசின் மொத்த உருவகமாகத் திகழும் எமது பிராண்டை உங்களது பிராண்டுடன் சேர்ப்பதால் எங்களது பிராண்டின் நற்பெயர் என்னாவது’ என்று ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி குத்தலாகப் பேசினார்.
இப்படி அவர் பேசியதற்குக் காரணம் கூட்டுவைக்கும் யோசனை வேண்டாம் என்று ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தரப்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டும் மீண்டும் அதற்காக டாடா நிறுவனம் முயற்சி மேற்கொண்டதே ஆகும். இப்படி டாடா நிறுவனம் செய்தது தம்மை அவமதிப்பு செய்வதாகக் கருதிவிட்டார் ஓரியண்ட் எக்ஸ்பிரஸின் தலைமை நிர்வாகி பால் வொயிட்.
இன்னொரு சம்பவத்தை இனி பார்ப்போம்.
போர்டு லக்சுரி மாடல் கார் உற்பத்தி நிறுவனத்தை வாங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முயற்சி செய்தது. அதை அறிந்த அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றின் தலைவர் ஒருவர் கடந்த வாரம் பொங்கி எழுந்தார். இதை அமெரிக்க மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.
இத்தகைய சம்பவங்களை குப்பைகள் என்று ஒதுக்கி, கேலிக்கூத்துகள் என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும். டாடா பிராண்ட் என்றாலே தனி மவுசுதான். இதை உலகமே நன்கு அறியும்.
எத்தனையோ இந்தியர்களை அமெரிக்க மக்கள் கனிவுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய நிதி நிறுவனம் சிட்டி குரூப். இதன் தலைவராக விக்ரம் பண்டிட்டை அமெரிக்கர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதுபோல் அமெரிக்காவின் தேசிய உணர்வுக்கு அடையாளமாக திகழும் பெப்சி நிறுவனத்தின் தலைவராக இந்திரா நூயி அமர்ந்துள்ளதையும் அந்நாட்டு மக்கள் ஏற்கத்தானே செய்தனர்.
இவர்களுக்கு முன்பாக கியூலெட்-பக்கார்ட் நிறுவனத்தின் பொது மேலாளாராக ராஜீவ் குப்தா, எடி அண்ட் டி நிறுவனத்தின் தலைவராக அரூண் நேத்ரவலி, மெக்கன்சி நிறுவனத்தின் தலைவராக ரஜத் குப்தா போன்றோர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
ஸ்டான்சார்ட் நிறுவனத்தை ராணா தல்வார் தலைமை ஏற்று நடத்துகிறார்.
மேலும் பென்டியம் சிப்பை உருவாக்கிய வினோத் டாம், ஹாட்மெயிலை நிறுவிய சபீர் பாடியா ஆகியோரும் இந்தியர்கள்தான்.
அறிவாற்றல் என்று வரும்போது வெள்ளையர் அல்லாதோரை விரும்புகிறார்கள் வெள்ளையர்கள். அப்போது, நன்மதிப்பு பற்றிப் பேசுவதில்லை. நிறவெறி என்று வரும்போது அவர்களின் மூர்க்கத்தனம் வெளிப்பட்டு விடுகிறது.
அமெரிக்கத் தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் கூட தான் யார் என்பதை காட்டிவிடுகிறார்கள். அண்மையில் கேசவன் என்ற விஞ்ஞானி விசாவுக்காக சென்னையில் உள்ள தூதரகத்துக்குச் சென்றிருந்தார். கொளுத்தும் வெயிலில் அவர் ஒரு மணி நேரம் வெளியில் காத்திருக்க நேர்ந்தது.
பின்னர், உள்ளே சென்றதும் 2 மணி நேரம் காத்திருந்தார். “உங்களிடம் ஆலோசனை நடத்த அவசியம் இல்லை. இந்த வினாத்தாள் பட்டியலை நிரப்பித்தாருங்கள்’ என்று மட்டும் அவரிடம் கூறியுள்ளனர்.
மற்றொரு விஞ்ஞானியான கோவர்தன் மேத்தாவுக்கும் கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. தனது ஆராய்ச்சியைப் பற்றி மறைத்துவிட்டதாக காரணம் தெரிவிக்கப்பட்டு அவருக்கு விசா நிராகரிக்கப்பட்டது.
இத்தகைய குளறுபடிகளுக்கு நம்மையேதான் நாம் நொந்து கொள்ளவேண்டும்.
அண்மையில் அமெரிக்காவின் செயல்பாடு பற்றி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூட வேதனையுடன் பேசினார்.
அமெரிக்காவில் கிளைகள் திறக்க இந்தியாவைச் சேர்ந்த வங்கிகள் விரும்பினால் அவை மீது அமெரிக்கா பாரபட்சம் காட்டுகிறதாம்.
இப்படிப் புகார் கூறுவதால் அவர்கள் மசிந்து விடுவார்களா என்ன? இந்தியாவில் தொழில் நடத்த வரும் அவர்களை இங்கும் அங்கும் என அலைகழித்தால் எல்லாம் சரியாகிவிடும். இது நடக்குமா?
இது குழம்பிப்போன உலகம். மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை நாமும் அவர்களுக்குச் செய்ய வேண்டும். அப்போது மரியாதை தானாகவந்து சேரும்.
கொடுக்கும் வழியிலேயே நாமும் திருப்பிக் கொடுப்போம்.
தமிழில்: ஜி. கணபதி