Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

‘Rasavathy’ Book review – Na Kavitha (Thozhi.com)

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2007

 

புத்தக அறிமுகம்: பௌலோ கொய்லோவின் ரஸவாதி

– ந. கவிதா

பஞ்சதந்திரக் கதைகள், சிந்துபாத், கன்னித்தீவு என்று நமது குழந்தைமையின் கதைச் சூழலையும் கற்பனையையும் வளப்படுத்திய கதைகள், இன்று புதிய பரிமாணத்தில் தத்துவம் சார்ந்தும் அறம் சார்ந்தும் அணுகும் விதம் கதை சார்ந்த தேடலை இன்னும் அதிகப்படுத்தலாம்.

ரஸவாதியும் அத்தகைய பல பரிமாணங்களைத் தரும் கதைதான். ஸ்பெயின் நாட்டுக் கதை இது. ஆங்கிலத்தில் ‘The Alchemist’ என்று மொழிபெயர்க்கப்பட்ட இந்நாவல் நாற்பத்தி இரண்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்புடையது. உலகில் அதிகம் விற்பனை ஆன நாவல்களின் வரிசையில் நான்காம் இடத்தைப் பிடித்தது இந்தப் புத்தகம்.

1987ஆம் ஆண்டு இந்நாவல் வெளியானபோது, கவனம் பெறவில்லை. பதிப்பகத்தார் இந்தப் புத்தகத்தை வாபஸ் பெற்றுவிடலாமென்று நினைக்குமளவிற்கு இருந்த விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, 18 நாடுகளில் அதிகம் விற்பனையான நாவல்களின் வரிசையில் முதலிடத்தைப் பிடித்தது.

ஆடு மேய்க்கும் சிறுவன் சந்தியாகு இயற்கையின் மீது அதீதக் காதல் கொண்டவன். அதே அளவிலான காதல் பயணம் செய்வதிலும் உண்டு. ஆடுகள் தான் சொல்வதைக் கேட்கவும் புரிந்துகொள்ளவும் கூடியவை என்று நம்பும் இந்தச் சிறுவன், தான் வாசிக்கும் புத்தகங்களில் பிடித்த வரிகளை ஆடுகளுக்கும் வாசித்துக் காட்டுவான்.

ஒரு புதையலைப் பற்றி இரு முறை கனவு கண்ட சந்தியாகுவுக்கு அந்தக் கனவின் பலனை ஒரு நாடோடிப் பாட்டி சொல்கிறாள். அதற்குக் கைமாறாக, கிடைக்கவிருக்கும் புதையலில் தனக்கும் ஒரு பங்கைக் கேட்கிறாள்.

சந்தியாகு அதற்குச் சம்மதித்துவிட்டுத் தனது பயணத்தைத் தொடர்கிறான். வழியில் கிழட்டு ராஜா ஒருவரைச் சந்திக்கிறான். அவரும் புதையலைத் தேடிச் செல்லும் ஆர்வத்தை அவனுக்கு ஏற்படுத்தி எகிப்தியப் பிரமிடுகளை நோக்கிப் பயணப்படச் செய்கிறார். இரண்டு சகுனக் கற்களையும் சிறுவனுக்குப் பரிசளிக்கிறார். அதற்கு ஈடாக ஆறு ஆடுகளைப் பெற்றுக்கொள்கிறார். “உண்மையில் நீ ஒன்றை விரும்பினால், இந்தப் பிரபஞ்சமே உனக்கு அதைத் தரும்” என்கிறார் அந்தக் கிழட்டு ராஜா.

எகிப்தியப் பிரமிடுகளை நோக்கிய தனது பயணத்தைத் தொடர ஆட்டு மந்தைகளை விற்கிறான் சந்தியாகு. அந்தப் பணத்தையும் ஏமாந்து இழக்கிறான். ஒரு வேளை உணவிற்காக, பளிங்குக் கடைக்காரர் ஒருவரிடம் உதவியாளாய்ச் சேரும் சந்தியாகு, அவரது வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறான். ஓராண்டு பணிசெய்த பின் தன் ஆட்டு மந்தையைத் திரும்ப வாங்குமளவிற்கும் ஊருக்குத் திரும்புமளவிற்கும் அவனிடம் பணம் சேர்கிறது.

சந்தியாகுவுக்குள் பழைய தேடல் மீண்டும் உருப்பெற, பாலைவனப் பயணத்தைத் தொடங்குகிறான். வழியில் ஆங்கிலேயர் ஒருவரைச் சந்திக்கிறான். அவர் ரஸவாதம் பற்றித் தெரிந்துகொள்ள ஒரு ரஸவாதியைத் தேடிச் சென்றுகொண்டிருக்கிறார். அவரும் சந்தியாகுவும் நண்பர்களாகிறார்கள்.

பாலைவனப் பயணத்தில் சந்தியாகு, பாத்திமாவைச் சந்திக்கிறான். காற்று தன்னிடம் கொண்டுவந்து சேர்த்த பெண்ணின் வாசம் அவளுடையதுதான் என உணர்கிறான் அவன். அவளிடம் காதல் கொள்கிறான். சந்தியாகு பாலைவனச் சோலையில் வாழும் பழங்குடி மக்கள் தலைவனுக்குப் போர் பற்றிய சகுனத்தைச் சொன்னதால் நன்மை விளைகிறது. தலைவன் பரிசும் பதவியும் கொடுத்துக் கௌரவிக்க, அங்கேயே பாத்திமாவுடன் வாழ்ந்துவிடத் தீர்மானிக்கிறான். அந்தச் சமயத்தில் அவன் ரஸவாதியைச் சந்திக்கிறான். ரஸவாதி, “உனது இலட்சியம் எகிப்துப் பிரமிடுகளில் இருக்கிறது” என்று இலக்கை நோக்கி அவனைச் செலுத்துகிறார்.

“உன் இதயம் சொல்வதைக் கவனி. அதற்கு எல்லாம் தெரியும். உன் இதயம் எங்கேயிருக்கிறதோ அங்கே உனக்கான புதையலும் இருக்கிறது” என்று ரஸவாதி சொல்ல, சந்தியாகு பிரமிடை அடைகிறான். சந்தியாகு தேடி வந்த புதையல் தொடக்கத்தில் அவன் இருந்த பாழடைந்த தேவாலாயத்தில் இருந்தது. அப்பொழுது அவன் கையில் மண்வெட்டி இருந்தது என்று நாவல் முடிவடைகிறது.

அவனது லட்சியப் புதையல் எகிப்துப் பிரமிடுகளில் இருந்ததா இல்லையா என்பதைவிட, அதற்கென அவன் தீர்மானித்த பயணம், அந்தப் பயணம் அவனுக்குத் தந்த அனுபவப் பாடங்கள், பிரபஞ்சம் கற்றுத் தந்த ஆன்மாவின் மொழி, இவையெல்லாம் இக்கதையில் முக்கியமானவை. சகுனங்களின் மீதுள்ள நம்பிக்கை, விதியின் தீர்மானம், இவற்றை மையச்சரடாகக் கொண்டு அமைந்த இந்த நாவல், தத்துவம் சார்ந்த பல பரிமாணங்களை வாசக மனத்திற்குத் தருகிறது.

உண்மையில் ஒன்றை விரும்பும்போது பிரபஞ்சமே அதைத் தரும் என்ற ரஸவாதியின் வார்த்தைகளை, நாம் அதற்காக எடுத்துக்கொள்ளும் முயற்சியில், இடைவிடாத் தேடலில் கிடைக்கும் வெற்றியாகப் புரிந்துகொள்ளத் தோன்றுகிறது. இயற்கையைப் புரிந்துகொண்டால் உலகின் மொழியை, பிரபஞ்சத்தின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள முடியும் என்ற வரிகளைத் தத்துவம் சார்ந்தவையாக மட்டுமின்றி யதார்த்தம் சார்ந்தும் அறிவியல் சார்ந்தும்
பொருள்கொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறது.

வாழ்வின் பாதையில் மிகச் சரியாகப் பயணப்பட வேண்டுமென்றால், இதயம் சொல்வதைக் கவனமாகக் கேள் என்ற இந்நாவலின் கருத்து, சகுனங்களின் மீது நம்பிக்கையற்றவர்கள், சகுணங்களைத் தமது உள்ளுணர்வுகளாகப் புரிந்துகொள்வதற்கான தளத்தைத் திறந்துவைக்கிறது.

மிக அழகிய மொழி நடையில் அமைந்த ரஸவாதி, இயற்கையை அழகியலோடும் தத்துவத்தோடும் இணைத்துக் காட்டுகிறது. தமிழில் மொழிபெயர்த்த பொன். சின்னத்தம்பி முருகேசனின் பணி சிறப்பானது.

கனவுகளையும் அவை தரும் பயணங்களையும் எப்பொழுதும் வாழ்விற்கு வளம் சேர்க்கும் கூறுகள் என்னும் ரஸவாதி, கனவாக இருந்தாலும் அதற்கான தேடலையும் நம்பிக்கை இழையோடும் சந்தியாகுவின் அன்பைச் சேர்த்துச் சொல்லியிருக்கிறது. விதியின் வழி தீர்மானிக்கப்பட்டுவிட்ட வாழ்க்கைப் பயணத்தில், மனித அற்புதங்களை விட இயற்கையின் அற்புதத்தையும் எதிர்காலம் ஒளித்துவைத்திருக்கும் ஆச்சரியங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது ரஸவாதி.

ரஸவாதி
– பௌலோ கொய்லோ
ஆங்கிலம் வழித் தமிழில்:
பொன். சின்னத்தம்பி முருகேசன்
விலை: ரூ. 80.
வெளியீடு: காலச்சுவடு, நாகர்கோவில்.

3 பதில்கள் -க்கு “‘Rasavathy’ Book review – Na Kavitha (Thozhi.com)”

  1. Arun Ganesan said

    Hi Kavitha ,
    I am looking for Rasavthi book tamil edition , i couldnt find it anywhere . I read this book in english but i want to read this in tamil to get better understanding . I searched in almost all book stores in coimbatore . Do you know where i can get this book ? Or Can you send me a digital copy or xerox copy of this book ? Thank you very much .

  2. கௌதம் said

    நான் இந்த ரஸவாதி புத்தகத்தை வெகு நாட்களாக தேடி கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு தெரிந்தால் எங்கு கிடைக்கும் பகிருங்கள். நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: