Archive for ஏப்ரல், 2007
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 30, 2007
தமிழக போலீஸ் சட்டம் -“பரம ரகசியம்’
ஏ. தங்கவேல்
புதுதில்லி, மே 1: இந்தியாவில், தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டம் பிரபலமடைந்துவரும் இந்தக் காலகட்டத்தில், தமிழக அரசு உருவாக்கி வருவதாகக் கூறப்படும் போலீஸ் சட்டம், மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது!
தமிழக அரசு அதிகாரிகளைக் கேட்டால் இப்படித்தான் சொல்கிறார்கள்.
தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் மனித உரிமை அமைப்பின் மாநாட்டில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டபோது, மாநாட்டின் பிரதிநிதிகள் ஆச்சரியமடைந்தனர்.
ஓய்வு பெற்ற இரு காவல் துறை தலைவர்கள் பிரகாஷ் சிங் மற்றும் என்.கே. சிங் கடந்த 1996-ல் தாக்கல் செய்த பொதுநல மனுவின் அடிப்படையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உச்சநீதிமன்றம் ஓர் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, போலீஸ் அதிகாரிகளின் திறமையான செயல்பாட்டுக்காக மாநில பாதுகாப்பு கமிஷனை உருவாக்குதல், தகுதி அடிப்படையில் மாநில காவல் துறை தலைவர் உள்பட முக்கிய காவல் துறை அதிகாரிகளை குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு பதவியில் நியமித்தல் உள்ளிட்ட ஏழு உத்தரவுகளை நீதிமன்றம் வெளியிட்டது.
அந்த உத்தரவுகளை நிறைவேற்ற இந்த ஆண்டு மார்ச் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. தமிழகம், ஆந்திரம் உள்பட பத்து மாநிலங்கள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பட்டியலில் உள்ளன.
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், போலீஸ் சீர்திருத்தம் தொடர்பான உத்தரவுகள், மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாகக் கருத்துத் தெரிவித்துள்ளது. மேலும், புதிய போலீஸ் சட்டத்தை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந் நிலையில், தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் மனித உரிமை மாநாட்டில் போலீஸ் சீர்திருத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காவல் துறைத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழக காவல் துறையிலிருந்து யாரும் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.
தமிழகத்திலிருந்து, கோவை மனித உரிமை அமைப்பின் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான வி.பி. சாரதி கலந்துகொண்டார். தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ள புதிய போலீஸ் சட்டம் தொடர்பான தகவல்களைப் பெற, சென்னை தலைமைச் செயலகத்துக்குச் சென்றபோது தனக்கு நேர்ந்த அனுபவங்களை அவர் விவரித்தார்.
“”தமிழக அரசின் புதிய போலீஸ் சட்ட வரைவு நகலைப் பெறுவதற்காக மார்ச் 16-ம் தேதி சட்ட அமைச்சரை (துரைமுருகன்) அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். இந்தத் துறைக்குப் பொறுப்பேற்று ஒரு மாதம்தான் ஆகிறது என்று கூறிய அவர், மூத்த உதவியாளரை அழைத்து, எனது கோரிக்கை பற்றி கவனிக்குமாறு கூறினார்.
அந்த உதவியாளரோ, இது உள்துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட விஷயம் என்றார். “சட்ட வரைவு உங்கள் துறை தொடர்பானதுதானே’ என்று சுட்டிக்காட்டிய போது, “இந்த விஷயம் முதல்வரின் நேரடிப் பார்வையில் உள்ளது’ என்று சொல்லி கையை விரித்துவிட்டார்.
அடுத்து, சட்ட அமைச்சகத்தின் உதவிச் செயலரைச் சந்தித்தேன். போலீஸ் வரைவுச் சட்டம் “மிகவும் ரகசியமானது’ என்று கூறி, தகவல் தர மறுத்துவிட்டார். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கேட்பதாகச் சொன்னபோது “முயற்சி செய்து பாருங்கள்’ என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்.
அவர்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் சொன்னபடி அவர்கள் புதிய போலீஸ் சட்டத்தைத் தயார் செய்திருக்கிறார்களா என்பதே சந்தேகமாக உள்ளது” என்றார் சாரதி.
இந்தப் பிரச்சினையில், தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாகவும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு இயக்கம் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் சாரதி தெரிவித்தார்.
Posted in Analysis, Andhra, Andhra Pradesh, AP, Correctional, HR, Human Rights, Information, Law, Op-Ed, Order, Parthasarathi, Parthasarathy, Police, RTI, solutions, TN, VP Sarathi, VP Sarathy | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 30, 2007
விழுப்புரத்தில் இன்று மிஸ் கூவாகம் போட்டி
விழுப்புரம், மே 1: அரவானிகளில் ஒருவரை மிஸ் கூவாகம் 2007 ஆக தேர்ந்தெடுக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பிரஜேந்திர நவநீத் செவ்வாய்க்கிழமை (மே 1) தொடங்கி வைக்கிறார்.
மாவட்ட எஸ்.பி. பெரியய்யா, இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை இணை ஆணையர் இரா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மிஸ் கூவாகமாக தேர்ந்தெடுக்கப்படும் அரவானிக்கு பத்திரிகையாளர் கவிதா கணேஷ் பரிசு வழங்குகிறார்.
அரவானிகளுக்கான பல்வேறு போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் என்று அரவானிகள் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
================================================
அரவானி ராணியாக கோவை பத்மினி தேர்வு
விழுப்புரம், மே 1: விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அரவானி ராணியைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் கோவை பத்மினி, அரவானி ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விழுப்புரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கூவாகம் விழாவில் மிஸ் கூவாகமாக அரவானி ஒருவரைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். இந்த ஆண்டு இந்நிகழ்ச்சியை தாய் திட்டமும், ஏ.ஆர்.எம். தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்தின.
கோவை பத்மினி அரவானி ராணியாகவும், இப்போட்டியில் இரண்டாவது மற்றும் மூன்றாவதாக ஈரோட்டைச் சேர்ந்த கார்த்திக் பிரியா, சுபிக்ஷா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு ரோட்டரி மற்றும் அரிமா சங்கத்தினரும், விழுப்புரம் நகராட்சித் தலைவர் இரா. ஜனகராஜும் பரிசு வழங்கினர்.
அரவானிகள் ஊர்வலம்
அரவானிகளுக்காக பல்வேறு சலுகைகளை அண்மையில் அறிவித்த தமிழக அரசுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்து அரவானிகள் ஊர்வலம் நடத்தினர்.
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே தாய் திட்டத்தின் தலைவர் லட்சுமிபாய் துவக்கி வைத்த ஊர்வலத்தில் அரவானிகள் வண்ண உடையணிந்து கைகளில் பலூன்களுடன் கலந்து கொண்டனர். பல்வேறு இசைக் கருவிகளை இசைத்தபடி வந்த அரவானிகளின் திறமைகளை பொதுமக்கள் பாராட்டினர். இதற்கான ஏற்பாடுகளை ஏ.ஆர்.எம். தொண்டு நிறுவனத் தலைவர் எ.பக்தவத்சலம் செய்திருந்தார்.
——————————————————————————
அரவானிகளை கண்ணியத்துடன் நடத்துங்கள்: அமைச்சர் ப. சிதம்பரம்
சென்னையில் அரவானிகளுக்கான புதிய இன்சூரன்ஸ் திட்டத்தை தொடங்கி வைத்து முதல் பாலிசியை சனிக்கிழமை வழங்குகிறார் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம். உடன் வி.எச்.எஸ். கௌரவச் செயலர் என்.எஸ். முரளி.
சென்னை, ஜூலை 29: அரவானிகள் நாட்டின் குழந்தைகள். அவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உருக்கத்துடன் கூறினார்.
அரவானிகள்-நலிவடைந்த பெண்களுக்கான ஆரோக்கிய காப்பீட்டு திட்டம், தாய் விழுதுகள் கூட்டமைப்பின் தொடக்க விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
திட்டங்களை தொடங்கி வைத்து, மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பேசியது:
சமுதாயத்தில் உள்ள உண்மைகளை எடுத்துச் சொல்வதில் யாருக்கும் தயக்கம் இருக்கக் கூடாது. வறுமை, சுற்றுச்சூழல் உட்பட பல்வேறு காரணங்களால் அரவானிகளாக உருமாறுகின்றனர்.
உடலின் இயல்புகள், மனத்தின் வேட்கைகள், விருப்பு வெறுப்புகள் இவற்றை முன்பே கணித்து வரையறுக்க முடியாது. படைப்பின் ஆழ்மனத்தில் உள்ளதையும் கண்டுபிடித்து விடமுடியாது.
நாட்டின் குழந்தைகள்: அரவாணிகள் இந்த நாட்டின் குழந்தைகள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அரவானிகளை மதிப்புமிக்க குடிமக்களாக கண்ணியத்துடன் நடத்த வேண்டும்.
சமுதாயத்தின் மாறுபட்ட கண்ணோட்டம் காரணமாக, அவர்கள் தவறாகப் பார்க்கப்படுகின்றனர். அவர்கள் தங்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையை போக்கி, தலைநிமிர்ந்து நடப்பதை லட்சியமாகக் கொள்ள வேண்டும்.
இந்தியப் பிரஜைகளில் அரவானிகளும் அடங்குவர் என்பதை நிலைநிறுத்த வழிவகை செய்ய வேண்டும். அரவானிகள் சமுதாயத்தில் இருந்து ஒதுங்கி வாழ்ந்து விடக்கூடாது. சமுதாயம் ஒதுக்கினாலும் அரவானிகள் ஒதுங்கி விடக் கூடாது என்றார் ப.சிதம்பரம்.
தமிழக சுகாதாரத் துறை செயலாளர்: வி.கே.சுப்புராஜ்: எச்.ஐ.வி – எய்ட்ஸ் நோய்த் தடுப்புக்காக, ரூ. 100 கோடி மதிப்பிலான திட்டங்கள் தமிழகத்தில் கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டன.
2001-ம் ஆண்டு கணக்கின் படி, 1.13 சதவீத மக்களுக்கு எச்.ஐ.வி. நோய்த் தொற்று இருப்பது தெரிய வந்தது. இன்றைக்கு இதன் அளவு அரை சதவீதமாகக் குறைந்துள்ளது.
நோயைக் கண்டறிய 280 சோதனை மையங்கள் செயல்பட்டு வந்தன. கடந்த ஆண்டில் மட்டும் 500 சோதனை மையங்கள் தொடங்கப்பட்டன. தமிழகத்தில் 260 இடங்களில் நோயைக் கண்டறியும் சோதனை மையங்கள் உள்ளன.
ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து அளிக்கும் சிகிச்சை மையங்கள் 19 உள்ளன. குழந்தைகள் உட்பட 21,000 பேருக்கு மேல் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாம்பரத்தில் செயல்பட்டு வரும் மையத்தில் மட்டும் ஆண்டுக்கு 5,000 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எய்ட்ஸ் – எச்.ஐ.வி. நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு 18 லட்சம் மாணவர்களுக்கும், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும், 55 லட்சம் சுய உதவிக்குழுக்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
அரவானிகள் மற்றும் நலிவடைந்த பெண்களுக்கான காப்பீட்டு திட்டத்தில், ஆண்டுதோறும் ரூ. 281 ப்ரீமியம் தொகை செலுத்த வேண்டும்.
சேலத்தில் இத்திட்டம் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. திட்டத்தின் மூலம் கிடைக்கும் தொகை, குஜராத்தைச் சேர்ந்த “விமோ சேவா’ அமைப்பிடம் அளிக்கப்படும்.
அந்த அமைப்பு ஐசிஐசிஐ – லம்பார்டு வங்கி மூலமாக காப்பீட்டை அளிக்கும்.
Posted in Ali, Aravaani, Aravani, Beauty, Contest, Contests, Koovagam, Koovakam, Miss, Transgender | 2 Comments »
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 30, 2007
இதற்காகவா தேர்ந்தெடுத்தோம்?
பி. சக்திவேல்
உலகின் மிகப் பெரிய மக்களாட்சியின் சிறப்பான அமைப்பு நமது இந்திய நாடாளுமன்றம்.
தேசிய மற்றும் சர்வதேசப் பிரச்சினைகளை விவாதிப்பதற்கும், முடிவுகளை எடுப்பதற்கும், தேசத்திற்குத் தேவைப்படுகிற சட்டங்களை இயற்றுவதற்கும், பொதுமக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் நாடாளுமன்றம்.
சமீபகாலமாக நமது நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரது நடவடிக்கைகள் அவர்களது மதிப்பையும் கண்ணியத்தையும் இழக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
நாடாளுமன்றத்தின் மதிப்பைக் காப்பாற்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நடத்தை விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவர்கள் எவ்வாறு கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக பல தலைவர்கள் வாழ்ந்து காட்டியுள்ளனர். “சிறந்த நாடாளுமன்றவாதி’ விருதுகள் ஆண்டுதோறும் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட மாண்புமிக்க நாடாளுமன்றம் ஒரு சில உறுப்பினர்களின் தரம் தாழ்ந்த நடவடிக்கைகளால் அதன் பெருமையை படிப்படியாக இழந்து வருகிறது.
சிலமாதங்களுக்கு முன்புதான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் கேள்வி கேட்பதற்காக லஞ்சம் வாங்கியதற்காக அவைத்தலைவரால் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். உச்ச நீதிமன்றம் இதை ஆமோதித்து தீர்ப்பை வெளியிட்டது.
இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த மூன்று மாதங்களில் மற்றொரு நிகழ்வாக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது மனைவி பாஸ்போர்ட்டில் வேறு ஒரு பெண்ணை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது, காவல்துறையால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஏற்கெனவே இதேபோல முறைகேடுகளைச் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவரது வீட்டிலிருந்து 12 பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது ஏற்கெனவே வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியது மற்றும் இரு இடங்களில் வாக்களித்தது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பெண்களை வெளிநாடுகளுக்கு கடத்தும் தரம்கெட்ட செயலில் இவரைப்போல இன்னும் சில உறுப்பினர்களுக்குத் தொடர்பு உள்ளது என்கிற தகவல் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதற்காகவா இவர்களை நாம் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்தோம்?
இவ்வாறு ஆள்கடத்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளது மிகவும் கொடிய குற்றம். இதுதொடர்பாக தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மக்களவைத் தலைவர் எச்சரிக்கை விடுத்திருப்பது வரவேற்கத்தக்கதே.
இவ்வாறு குற்றப்பின்னணி உள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிகளில் மட்டும் அல்லாமல் அனைத்துக் கட்சிகளிலும் இருப்பது வேதனையான விஷயமாகும். அரசியல் கட்சிகளும் இதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாதது கண்டனத்திற்குரியது. சமீபத்தில் நடந்த உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் 10 சதவீத வேட்பாளர்கள் குற்றப்பின்னணி உள்ளவர்கள் போட்டியிட்டனர். தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் குற்றப்பின்னணி உள்ளவர்களைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து முழுமையாகத் தடுக்க முடியவில்லை.
அரசியல்வாதிகளுக்கும் கிரிமினல்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வுசெய்து பரிந்துரை அளிக்க வோரா குழு 1993-ம் ஆண்டு நியமிக்கப்பட்டது. “அரசியல்வாதிகளுக்கும் கிரிமினல்களுக்கும் மிக நெருக்கமான உறவு வளர்ந்து வருகிறது’ என அக்குழு தனது ஆய்வறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது.
சிறிய குற்றத்தில் இருந்து பெரிய குற்றங்கள் வரை அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு இருப்பது நீண்டகாலமாகவே இருந்துவந்தபோதிலும் அதைக் களைவதற்கான உறுதியான நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
சிறு குற்றங்கள், பெட்ரோல் விற்பனை நிலைய உரிமம் வழங்குவதில் முறைகேடுகள், பதவியை சொந்த லாபத்துக்காக தவறாகப் பயன்படுத்துதல், லஞ்சம், கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் மட்டுமே இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டதாக நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் தற்போதுதான் பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு பெண்களை கடத்திச் செல்லும் செயலில் ஒரு சில உறுப்பினர்கள் ஈடுபட்ட விஷயம் அம்பலமாகியுள்ளது.
தனிநபர் விமர்சனம், மக்களுக்கு முக்கியத்துவம் இல்லாத பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து நாடாளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கைகளை முடக்குவது, தேவையில்லாமல் அடிக்கடி வெளிநடப்பு செய்தல், குற்றப்பின்னணி உள்ளவர்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் சிலர் அமைச்சர்களாவது போன்ற நிகழ்வுகளால் நாடாளுமன்றத்தின் உயரிய நோக்கங்கள் பாழாகி வருகின்றன.
மக்கள் பிரச்சினைகள் புறந்தள்ளப்பட்டு அவற்றுக்குத் தீர்வு காணப்பட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. நாட்டு மக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கியதைக் காட்டிலும் மேற்கூறிய பிரச்சினைகளுக்காக முடங்கியதுதான் அதிகம்.
பல்வேறு சலுகைகள் மற்றும் ஊதியத்திற்காக மக்களவை உறுப்பினர்களுக்கு செலவிடப்படும் தொகை ரூ. 800 கோடிக்கும் மேல் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மக்கள் வரிப்பணத்திலிருந்து தானே கோடிக்கணக்கில் இதை நாம் செலவிடுகிறோம்?
14-வது மக்களவைத் தேர்தல் நடத்த அரசு செலவிட்ட தொகை சுமார் ரூ.1,500 கோடி. மேலும், ஆண்டுதோறும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்த சுமார் ரூ.250 கோடி செலவிடப்படுகிறது. இதுவும் மக்களின் வரிப் பணம் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசத்தின் முக்கியமான பிரச்சினைகளையோ அல்லது ஏழை, எளிய மக்களைப் பாதிக்கக்கூடிய விஷயங்களையோ விவாதிப்பது குறைந்துவிட்டது. எந்த உயர்ந்த நோக்கத்திற்காக நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை அடைய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அரசியல் கட்சித் தலைவர்களும் எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். நல்ல உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பளிக்க வேண்டும். மக்களும் மேலை நாடுகளில் உள்ளதுபோல் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் உறுப்பினர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
நாடாளுமன்றம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வரும் நிலை மாற வேண்டும். சிறிய குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் கூட தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தவறிழைத்தால் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும். அத்துடன் மீண்டும் அவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க நிரந்தரத் தடை விதிக்க வேண்டும். கட்சி வித்தியாசம் இன்றி ஒழுக்கமான, நேர்மையான, நன்னெறியுடைய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க பொதுமக்கள் உறுதிபூண வேண்டும். சரிவர செயல்படாத உறுப்பினர்களைப் புறக்கணிக்க வேண்டும்.
அதேசமயம் “மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற உயரிய கொள்கை உடையவர்களேயே உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களாட்சி மகத்துவம் பெறும்; நாடாளுமன்றத்தின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும்!
(கட்டுரையாளர்: இணைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்).
Posted in BJP, BSP, Communist, Congress, Corruption, Criminal, Elect, Election, Government, Govt, Janatha, kickbacks, Law, MLA, MP, MPs, Order, parliament, Politics, Polls, SJP, SP, Vote, voter | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 30, 2007
ஊரும் தெரியாது; உறவும் புரியாது!
வசீகரன்
நம் ஒவ்வொருவர்க்குள் ஓர் அதிகாரி ஒளிந்து கொண்டிருக்கிறார்.
நாடு முழுக்க வீடுகள் இருக்கின்றன. அவரவர் வசதி, வளமைக்குத் தக்கவகையில் வீடுகள் சிறிதாகவோ, பெரிதாகவோ, ஆடம்பரமாகவோ இருக்கின்றன. வீட்டைப் பராமரிப்பது மிகப்பெரிய பணிதான். எனவே இச்சுமையைக் குறைக்க பணியாள் ஒருவரோ, ஒன்றுக்கு மேற்பட்டவரோ தேவைப்படுவர். இந்த எடுபிடி வேலைக்கு ஆள் கிடைப்பது மிகவும் சிரமம். கிடைத்தாலும் நம் விருப்பப்படி நடப்பாரா என்பது தெரியாது. எதிர்த்துப் பேசலாம். அதிக சம்பளம் கேட்கலாம்!
இந்தத் தொல்லையெல்லாம் இல்லாதவாறு ஆள் வேண்டுமே? யார் கிடைப்பார்கள்.
அப்படிக் கிடைப்பவர் வறுமையில் உழல வேண்டும். வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில் இருக்க வேண்டும். ஊதியத்தை மிகக் குறைவாகக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டும். அண்டை அசலில் ஆதரவாளர்கள் யாரும் இருக்கக் கூடாது. அப்போதுதான் சொன்ன பேச்சைக் கேட்பார்கள்.
அவர்கள் யார்? குழந்தைகள்!
வறுமையின் காரணமாக துரத்தப்பட்டவர்கள். விளையாடும் பருவம் அது. ஆனால் விளையாட முடியாது. ஓடியாடும் வயது அது. ஆனால் கால்கள் கட்டப்பட்டிருக்கும். சிரித்து மகிழ அவர்களுக்குச் சுதந்திரம் கிடையாது.
கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இழுத்து வரப்பட்டிருப்பார்கள். ஏன் மாநிலம் மாறி கூட கடத்தப்பட்டிருப்பார்கள்.
ஊரை ஒழுங்காகத் தெரியாது. உறவு யாரென்றும் புரியாது. பல குழந்தைகளுக்கு மொழிகூட விளங்காது.
பங்களாக்கள், நடுத்தர இல்லங்கள் என்று அமர்த்தப்பட்டு பணியில் பம்பரமாகச் சுழன்று கொண்டிருப்பார்கள். வியர்வையும் கண்ணீருமாய் ஈரமாக இருப்பார்கள். ஆனால் வயிறு உலர்ந்து போய் இருக்கும்.
அந்த வீட்டின் எஜமானாக நாம் இருக்கிறோம். வேலை செய்ய சேர்ந்திருப்பவள் ஒரு சிறுமி. அந்தச் சிறுமியிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம்?
அதே வயதுடைய சிறுமி நம் அடுத்த வீட்டுத் தொழிலதிபரின் குழந்தையாகவோ, நம் உறவினர் ஒருவரின் வாரிசாகவோ இருந்துவிட்டால் நம் கொஞ்சலே மிக அழகாக இருக்கும்.
வேலை செய்ய வந்த சிறுமியிடமோ நம் கேள்விகள் நேரெதிராக இருக்கும்.
“”என்ன திருதிருவென்று முழிக்கிறாய். ஒழுங்காக வேலையைப் பார்!” விரட்டுவோம்.
“”சுறுசுறுப்பே இல்லையே . சரியான சோம்பேறி” என மண்டையில் குட்டுவோம்.
போனால் போகிறதென்று அளவுச்சாப்பாடு போடுவோம். இதோடு அல்ல. இன்னும் இருக்கிறது அந்தக் குழந்தைக்குக் கொடுமை.
வீடு என்றால் நாம் ஒருவர் மட்டும்தானா? சிறுசும் பெருசுமாக உருப்படிகள் ஐந்துக்குமேல் தேறாதா? அத்தனை பேர்களுமே அந்த வேலைக்கார சிறுமிக்கு பம்பரக் கயிறுகள்தான்.
ஒருவர் மாற்றி ஒருவர் வேலை சொல்லி ஆட்டுவிப்பர். ஒரே நேரத்திலேயே கூட பலரின் கட்டளைகளை ஏற்றுச் செய்வதறியாது திகைத்து நிற்பாள் அச்சிறுமி. கைக்குழந்தை உள்ள வீடு என்றால் குழந்தை தூங்கும் நேரம் போக மீதி நேரம் தூக்கிச் சுமந்து கொண்டிருக்க வேண்டும். பள்ளிக்கூடத்திலிருந்து குழந்தைகளை அழைத்து வர வேண்டும்.
அவர்கள் விளையாடுவதற்குத் தேவையான வேலைகளைச் செய்து கொடுத்துவிட்டு, விளையாட்டை வேடிக்கை பார்க்காமல் வேலை செய்ய வேண்டும். வீட்டின் உறுப்பினர்கள் கேளிக்கை தேடி வெளியில் சென்றால் வீட்டுக்கு காவலாய் இருக்க வேண்டும்.
அதே வயதுடைய நம் குழந்தை பெரிய பள்ளியில் படிக்கிறது. விதவிதமாய் ஆடை அணிகிறது. பூப்பந்து விளையாடுகிறது. திரைப்படம், கடற்கரை, கேளிக்கைத்தலங்கள் என்று அழைத்துச் செல்கிறோம். சிரித்து மகிழ்கிறது. சிறுவேலைகூட ஏவ மாட்டோம்.
இத்தனை இன்பங்களையும் தொலைத்துவிட்டு அக்குழந்தை நம் உருட்டல், மிரட்டல்களுக்கு அடிபணிந்து மிரளுகிறது. அத்தனைக்கும் ஒரு பாராட்டாவது வழங்குகிறோமா? அப்படியே பாராட்டிவிட்டாலும் கூட அது மேலும் வேலை செய்ய வைக்கும் உத்தியாகவே இருக்கும்.
ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். அங்கும் கூட அதிகாரி தாண்டவமாடும் நிலை உண்டு.
குழந்தைகளை ஏழ்மை வாட்டுகிறது. நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பசி அரக்கனின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர். ஒருவேளை சோற்றுக்காக அவர்களை வதைக்க நாம் துணியலாமா? நாம் நல்லவர்கள்தான். இது தீமை என்பதை உணராமல் செய்து விடுகிறோம். வேண்டாம் அந்த காட்டு நிர்வாகம்! பிஞ்சுக் குழந்தைகளிடமா நம் மேலாண்மையைக் காட்டுவது!
மற்ற குழந்தைகளைப்போல் அவர்கள் கற்க, விளையாட, நடக்க, சிரிக்க, உண்ண, உறங்க உரிமை உள்ளது.
உண்மையைப் புரிந்து கொண்டவர்களாயின் இனி நாம் குழந்தைகளை வேலைக்கு வைக்க மாட்டோம். ஒருவேளை வாய்ப்புக் கிடைத்தால் அக் குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தையையாவது நம் குழந்தையைப் போலவே கருதி மேற்கண்ட உரிமைகளை அக்குழந்தையும் அனுபவிக்க வழிவகை செய்யும் பொறுப்பை ஏற்கலாமல்லவா!
(இன்று சர்வதேச குழந்தைத் தொழிலாளர் தினம்).
Posted in abuse, Child, Children, Concern, Day, Employment, Exploit, Exploitation, Home, Household, International, Kid, Labor, Labour, Poor, Rich, Society, Worker | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007
நெட்டில் சுட்டதடா…: கொடியைக் கிழித்த குமரன்!
ராமன் ராஜா
தொழிலதிபர் நாராயண மூர்த்தியை அடுத்த ஜனாதிபதி பதவிக்கு ஏற்றவர் என்று நேற்றுத்தான் பன்னீர் தெளித்தார்கள்; இன்று அவரையே தேசத் துரோகி என்று வெந்நீர் தெளிக்கிறார்கள். தங்கள் நிறுவன விழாவில் தேசிய கீதத்தை இசைப்பது பற்றி அவர் உச்சரித்த ஒரே ஒரு வார்த்தைதான் எல்லாவற்றையும் தலைகீழாகக் கவிழ்த்துவிட்டது. நெட் முழுவதும் மூர்த்திக்கு ஆதரவாகவும் எதிர்த்தும் மிளகாய் பஜ்ஜி விவாதங்கள் நடக்கின்றன. “”மகாகவி தாகூர் இயற்றிய தேசிய கீதத்தின் மாண்பு என்ன, மகிமைதான் என்ன? அதைக் காதில் கேட்டவுடனே ஒவ்வொரு குடிமகனுக்கும் முடியெல்லாம் சிலிர்க்க வேண்டாமா, சிலிர்க்காத மண்டைகளை மொட்டை அடித்துக் கலர்ப் புள்ளி குத்தவேண்டும்” என்கிற ரீதியில் ஓயாமல் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். நாணாவை நாடு கடத்த வேண்டும் என்றுகூட ஒரு கோரிக்கை எழுந்திருக்கிறது. இதில் கன்னட -அகன்னட சர்ச்சை வேறு. (பாலிடிக்ஸ் விளையாடிவிட்டதோ என்று சந்தேகமாக இருக்கிறதே!) மற்றொரு பக்கம், ஜமைக்காவிற்குப் போன சச்சின் டெண்டுல்கர் மீது ஒரு குற்றச்சாட்டு. மூவண்ணக்கொடியின் நிறத்தில் செய்யப்பட்டிருந்த கேக் ஒன்றைக் கத்தியால் வெட்டினார் என்று வழக்கு போடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கிரிக்கெட்டில் சப்பை அடி வாங்கியிருக்கிறார்கள்; போதாததற்கு இது வேறு.
தேசியச் சின்னங்கள் -அவற்றின் அவமதிப்பு -அதற்காகக் கடும் தண்டனை என்பது மோசிகீரனார் காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது. ஏழைப் புலவர் பாவம், வெயிலில் நடந்து வந்த களைப்பில் முரசு வைக்கிற கட்டிலில் படுத்து தூங்கிவிட்டார். வீர முரசுக்கு இப்படி ஓர் அவமதிப்பா என்று கோபித்த மன்னன், உடை வாளை உருவியே விட்டான். நல்ல வேளையாகத் தூங்கினவர் தமிழ்ப் புலவராக இருந்து, மன்னனும் கொஞ்சம் எழுதப் படிக்கத் தெரிந்தவனாக இருந்ததால் கீரனார் கீறப்படாமல் தப்பினார்.
வருடம்: 1862. அமெரிக்காவில் உள் நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த நேரம். நியூ ஆர்லீன்ஸ் மாநிலம், தனி நாடு போர்க்கொடி தூக்கியிருந்தது. கலகத்தை அடக்குவதற்கு மத்திய அரசு தன்னுடைய ஆள் படை அம்பு எல்லாவற்றையும் அனுப்பியது. ராணுவம் வந்ததும் முதல் வேலையாக முனிசிபாலிட்டி, நாணய சாலை போன்ற அரசாங்கக் கட்டடங்களைக் கைப்பற்றி அவற்றின் உச்சியில் அமெரிக்க தேசியக் கொடியை ஏற்றினார்கள். இதைக் கண்டு பொறுக்காத மக்கள் தெருவில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதில் வில்லியம் மம்ஃபோர்ட் என்பவர் உணர்ச்சி வேகத்தில் கட்டடத்தின் மீது ஏறி அமெரிக்கக் கொடியைக் கீழே இறக்கினார். நிமிஷ நேரத்தில் கொடி கூட்டத்தின் கையில் சிக்கிச் சுக்கு நூறாகிவிட்டது. குச்சிதான் பாக்கி! கொடியின் மாண்பைக் குலைத்த குற்றத்துக்காக ராணுவ கோர்ட் ஒரு சட்டு புட்டு விசாரணை நடத்தி, மம்ஃபோர்டை அதே இடத்தில் தூக்கில் போட்டது. ஆனால் பிறகு மக்கள் மம்ஃபோர்ட்டை விடுதலைப் போராட்டத்தின் சின்னம், கொடியைக் கிழித்தெறிந்த குமரன் என்று தியாகிப் பட்டம் கட்டி மலர்வளையம் வைத்தார்கள்.
அறுபதுகளில், வியட்நாமின் உள் நாட்டுச் சண்டையில் வீம்புக்காகத் தலையிட்டு குண்டு மழை பெய்து கொண்டிருந்த அநியாயத்தை எதிர்த்து அமெரிக்காவிலேயே பலர் போராட்டம் நடத்தினார்கள். அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பற்பல தேசியக் கொடிகள் எரிக்கப்பட்டன. அத்தனை பேரும் ஜெயிலுக்குப் போனார்கள். அமெரிக்காவின் பெரும்பாலான மாநிலங்களில் கொடியைச் சேதமாக்கினால் சிறைத் தண்டனை கொடுக்கச் சட்டம் உண்டு.
அப்படியே ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்து 1984-க்கு வருவோம். ஜனாதிபதி ரீகனின் கொள்கைகளை எதிர்த்து டல்லாஸ் நகரில் ஓர் அரசியல் பேரணி. வழக்கமான வீர உரைகள், வசவு உரைகள் எல்லாம் முடிந்ததும் மங்களம் பாடும் விதத்தில் ஓர் அமெரிக்கக் கொடியைக் கொளுத்தினார் ஜோயி ஜான்சன் என்பவர். கையும் கொடியுமாக அவரைப் பிடித்துக் கொண்டு போய் கேஸ் போட்டார்கள். கீழ்க் கோர்ட்டில் ஜான்ஸனுக்கு ஒரு வருடம் சிறை, இரண்டாயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. பிறகு ஜான்சன் வழக்கு ஹை கோர்ட்டுக்கு வந்ததும் ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது: தேசியக் கொடியை எரிப்பதும் குடி மக்களின் கருத்து சுதந்திரத்தில் ஒரு பகுதிதான் என்று கூறி அங்கே ஜான்சனை விடுதலை செய்துவிட்டார்கள்!
இதைக் கேட்டு தேச பக்தர்கள் வெகுண்டெழுந்து சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனார்கள். சுப்ரீம் கோர்ட்டும், இப்படியெல்லாம் அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது என்பது மக்களுடைய பேச்சுரிமையின் ஒரு பகுதிதான் என்று சொல்லிவிட்டது. அமெரிக்க அரசியல் சட்டத்தின் முதலாவது சட்டத் திருத்தம் (ஊண்ழ்ள்ற் ஹம்ங்ய்க்ம்ங்ய்ற்) இதைத்தான் வலியுறுத்துகிறது: இந்தச் சட்ட விதியின் கம்பீரமான எளிமையைக் கவனியுங்கள்: “”பொது மக்களின் பேச்சுரிமையைக் குறைக்கும் எந்தச் சட்டத்தையும் அமெரிக்க நாடாளுமன்றம் இயற்றாது.” அவ்வளவுதான்!
அரசியல்வாதிகளின் -அதாவது அமெரிக்க அரசியல்வாதிகளின் -வழக்கம் என்னவென்றால், சுப்ரீம் கோர்ட் ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்தால் அதை கான்சல் செய்யும் விதமாக அரசியல் சட்டத்தையே மாற்ற முற்படுவது. அன்று முதல் இன்று வரை அவ்வப்போது கொடி எரிப்புத் தடுப்பு சட்டம் கொண்டு வர அவர்களும் முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியல் நிறைந்த கீழ் சபையில் சட்டம் பாஸôகிவிடுகிறது. அறிவு ஜீவிகள் நிரம்பிய செனட் மேல் சபை ஒத்துக் கொள்ளாததால் இந்த முயற்சியில் காற்று இறங்கிவிடுகிறது. பழமைவாதிகள், புதுமை விரும்பிகள், மிகவும் புதுமைவாதிகள் என்று பல பேர் இதில் தலையிட்டுக் குட்டையைக் குழப்பி மீன்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். நவீன மேற்கத்திய நாகரிகத்தில் தனி மனித சுதந்திரம்தான் கடவுளாக மதிக்கப்படுகிறது. “”ஒரு துணிக் கொடியை விடப் புனிதமானது தனி ஒருவனின் சுதந்திரம். அமெரிக்கக் கொடியே அந்தச் சுதந்திரத்தின் அடையாளச் சின்னம்தான். கொடியை அவமதித்தார் என்ற காரணத்துக்காக ஒரு குடிமகனைச் சிறையில் போட்டால், அந்தக் கொடியே அவமானத்தில் கண்ணீர் வடிக்கும்” என்கிறார்கள் புதுமைவாதிகள். “”அமைதியான முறையில் நடத்தப்படும் பேச்சு, எதிர்ப்பு, எரிப்பு எல்லாம் பிரஷர் குக்கரில் இருக்கும் பாதுகாப்பு வால்வு மாதிரி. அதை அடைத்துவிட்டால் தீவிரவாதம்தான் வெடிக்கும். தேசபக்தி உள்பட எதையும், யார் மீதும் திணிக்காமல் இருப்பதுதான் உண்மையான சுதந்திரம்”என்பது அவர்கள் வாதம்.
1990-ல் சில மாநிலங்களில் வேறு ஒரு விவகாரமான சட்டம் கொண்டு வந்தார்கள்: பப்ளிக்கில் நாலு பேர் சேர்ந்து ஒருவனுக்கு தர்ம அடி போட்டால், சாதாரணமாக அது கிரிமினல் குற்றம். ஆனால் அடிக்கப்பட்டவன் தேசியக் கொடியைக் கொளுத்தியதற்காக மக்கள் உணர்ச்சி வேகத்தில் அவனை அடித்துவிட்டால், வெறும் ஐந்து டாலர் அபராதத்துடன் விட்டுவிடலாம் என்பது இந்தச் சட்டம். “கொடியை எரிக்கிறானா, அடி சாத்து!’ என்று குறிப்பிடப்படும் இந்தச் சட்டத்தை எதிர்த்தும் பலர் கொடியை எரித்தார்கள். அவர்கள் அடி வாங்கினார்களா இல்லையா என்று தகவல் இல்லை.
ஆஸ்திரேலியாவில் சில மாணவர் இயக்கங்கள், கொடியை எரிக்க நினைப்பவர்களுக்கு வசதியாக அட்டை டப்பாவில் டான்டெக்ஸ் பனியன் ஜட்டி விற்பது மாதிரி ஒரு பாக்கெட் தயாரித்திருக்கிறார்கள். ஒரு தேசியக் கொடி, கற்பூர வில்லை, வத்திப் பெட்டி எல்லாம் கொண்ட திடீர் கொடி எரிப்பு கிட்! இந்த மாதிரியெல்லாம் தேசத் துரோகத்தை ரெடிமேடாக டப்பாவில் அடைத்து விற்கக் கூடாது என்று போலீஸ் வந்து பிடுங்கிப் போனார்கள். உடனே ஆஸ்திரேலிய அறிவு ஜீவிகளும் கலைஞர்களும் கூட்டாகச் சேர்ந்து “”இது என்ன காட்டுமிராண்டித்தனமான சென்சார்?” என்று சர்க்காரைக் கண்டித்தார்கள்: “”நான், என் ஊர், என் தாய் நாடு என்பதெல்லாம் ஒரு விதத்தில் ஜாதி மதச் சண்டை மாதிரிதான். குறுகின கண்ணோட்டத்தில் வரும் வியாதிகள். நாட்டுப்பற்று என்பது கொஞ்சம் பெரிய ரேஞ்சில் நடக்கிற ஜாதி வெறி; அவ்வளவுதான். உலகமே ஒரு நாடு, எல்லாரும் ஓர் இனம் என்ற பரந்த பார்வை வர வேண்டுமென்றால் முதலில் நம் அசட்டு தேச பக்தியைத் துடைத்து எறிய வேண்டும்…” என்ன இது, சிந்திக்க வைத்து விட்டார்களே!
இராக்கில் தினம் தினம் யாராவது ஒரு கோஷ்டி அமெரிக்கக் கொடியைக் கொளுத்தி ஆர்ப்பாட்டம் செய்வது அன்றாடச் காட்சி. ஆனால் அரசியலில் தீவிர எதிர்க் கட்சியினர் கூட இராக்கின் தேசியக் கொடியை அவமதிக்கத் துணிய மாட்டார்கள். காரணம், கொடியில் அல்லாவின் புனிதப் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதுதான். (தன் கைப்பட இந்த வாசகங்களைச் சேர்த்துக் கொடியின் டிசைனை மாற்றியவர் சதாம் ஹுசேன்.) இதே மாதிரி காரணத்தால், சவூதி அரேபியாவிலும் கொடியைக் கிழித்தால் கையே இருக்காது!
இப்போது லேட்டஸ்ட்டாகக் கொடி அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பவர் வேறு யாருமல்ல, ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்தான்! ஆஸ்திரியாவுக்குப் போயிருந்த போது அங்கே ஆட்டோகிராப் கேட்டவர்களுக்கெல்லாம், அவர்கள் கையில் வைத்திருந்த சின்னஞ் சிறிய அமெரிக்கக் கொடியின் மீது ஜோராகக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார். கொடியின் மீது கிறுக்குவதும் சட்டப்படி குற்றம்தான். இதற்கு ஒரு மாதம் வரை சிறைத் தண்டனை கொடுக்க வழி இருக்கிறது. ஆனால் புஷ்ஷுக்கு எப்போதுமே அவ்வளவாக விவரம் பற்றாது என்பதால், இதுவும் அவருடைய தினசரி சொதப்பல்களில் ஒன்று என்று எல்லாரும் மன்னித்துவிட்டார்கள்.
Posted in Anthem, Bush, Dinamani, Flag, Infosys, Islam, Kathir, Narayana Murthy, Narayanamoorthy, Narayanamurthy, National, President, Raman Raja, Symbols, USA | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007
புகைக்கப் புகைக்க…
உலகில் ஆண்டுக்கு 50 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோய்களுக்குப் பலியாகின்றனர். புகை பிடிப்பதால் உடலில் ஏறக்குறைய அனைத்துப் பகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இந்த நிலையில் “நாட்டில் 40 சதவீத சுகாதாரப் பிரச்சினைகள் புகையிலை மூலமே ஏற்படுகின்றன. அதனால் புகையிலை தடுப்புச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தவேண்டியது அவசியமாகும்’ என்று சுகாதார அமைச்சர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதற்காக தனி ஆணையம் ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பொது இடங்களில் புகை பிடிப்பது சட்டப்படி குற்றம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் பஸ் நிறுத்தங்கள், உணவுக் கூடங்கள், திரையரங்குகள் ஆகியவற்றில் புகை பிடிப்பது சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. இவ்வாறு புகை பிடிப்பது அவர்களுக்கு மட்டுமல்ல, அருகில் இருப்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், மூச்சுத் திணறல் ஆகியன புகையிலை காரணமாக ஏற்படும் முக்கிய நோய்கள். இதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று, வடகிழக்கு மாநிலங்களில் புகையிலைப் பொருள்கள் பெருமளவு பயன்படுத்தப்படுவதால் புற்று நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
களைப்பைப் போக்கி உற்சாகம் ஏற்படுத்துவதால் புகை பிடிப்பதாகப் பலரும் கூறுகின்றனர். ஆனால் அறிவியல் ரீதியில் இது நிரூபிக்கப்படவில்லை.
புகைப் பழக்கத்துக்கு உலகில் சுமார் 130 கோடி பேர் அடிமையாகி உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதுவும் மாணவரிடையே இது பரவலாக வளர்ந்து வருவது மேலும் கவலை அளிப்பதாக உள்ளது. கல்வி நிலையங்களின் வாயில்களிலும், பஸ் நிறுத்தங்களிலும் இவை தாராளமாகக் கிடைப்பதால், கிடைக்கும் நேரத்தில் புகைப்பது அவர்களுக்கு எளிதாகி விட்டது.
இது போதாதென்று தொலைக்காட்சிகளில் புகை பிடிப்பது தொடர்பான விளம்பரங்கள் மறைமுகமாக இடம்பெறுகின்றன. அதுவும் பிரபலங்கள் மூலம் அவை விளம்பரப்படுத்தப்படுவதால் இளைஞர்களை அது எளிதில் தொற்றிக் கொள்கிறது. இத்தகைய விளம்பரங்களைத் தடுக்குமாறு செய்தி, ஒலிபரப்பு அமைச்சகத்துக்குப் பல முறை கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் கூறியுள்ளது மக்கள் ஆரோக்கியத்தில் சம்பந்தப்பட்ட துறைக்கு எவ்வளவு அக்கறை உள்ளது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. புகையிலை தொழில் நிறுவனங்கள் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் வருமானம் வருவதால் இவ்வாறு கண்டும் காணாததுபோல் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்குச் சிகிச்சை அளிக்க கோடிக்கணக்கில் செலவிடவேண்டியுள்ளது என்பதை சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இத்துடன் குட்கா போன்ற புகையிலைப் பொருள்களும் பெருமளவு புழக்கத்தில் உள்ளன. இவற்றின் உறைகள் மீது மண்டை ஓடு, எலும்புக்கூடு எச்சரிக்கையுடன் படங்களை வெளியிட்டு நுகர்வோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால், “குடி குடியைக் கெடுக்கும், குழந்தைகளைப் பட்டினி போடும்’ என்ற வாசகங்கள் மதுக்கடைகளின் முன்னே உள்ளன. இருந்தும் மது விற்பனை மாதத்துக்கு மாதம் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. சிகரெட் பிடிப்பது உடலுக்குத் தீங்கானது என்ற வாசகம் பாக்கெட்டுகளில் கண்ணுக்குத் தெரியாத அளவில் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் அதன் காரணமாக விற்பனை குறைந்ததாகத் தெரியவில்லை. எனவே, உற்பத்தி, விற்பனை நிலையிலேயே அவற்றைக் கட்டுப்படுத்தினாலன்றி எதிர்பார்க்கும் பலனை அடைய முடியாது.
Posted in Anbumani, cancer, Cigar, Cigarette, Enforcement, Freedom, Govt, Healthcare, Law, Passive, pipe, Public, Rajini, Rajni, smoking | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007
அறிவுத்திறனுக்கு எது அடிப்படை?
ஜி.எஸ். பூர்ண சந்திரக்குமார்
எப்போது பார்த்தாலும் ஏதாவது ஏடாகூடமாகச் செய்யும் ஆசாமிகளைப் பார்த்து, “”உனக்கு மூளையில மசாலா ஏதாவது இருக்கா, இல்லையா?” என்று நாம் கிண்டலாகக் கேட்பது வழக்கம். சுமார் 1.5 கிலோகிராம் எடையுள்ள நம் மூளையில் மசாலா இருக்கிறதோ, இல்லையோ, நிறைய சாம்பல் இருக்க வேண்டும் என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.
சாம்பல் என்றதும் பயப்பட வேண்டாம். மூளையிலுள்ள சாம்பல்நிறத் திட்டுகளைதான். நமது மூளையில் உள்ள நரம்பு செல்கள் அனைத்தும் நூடுல்ஸ் மாதிரி கொத்து கொத்தாகக் காணப்படும். அவற்றின் எண்ணிக்கை ஏறக்குறைய 100 பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி அளவு. அதன் துணைத் திசுக்களையும் சேர்த்தால் எண்ணிக்கை ஒரு லட்சம் கோடியையும் தொட்டுவிடும். இவைகளே சாம்பல்நிறத் திட்டுகள் என்றழைக்கப்படுகின்றன.
நினைவுகளை ஒருமுகப்படுத்தி மூளையில் நன்கு பதிய வைக்கவும், அந்நினைவுகளைப் பயன்படுத்தி வேலையை ஒழுங்காகச் செய்யவும் மேற்சொன்ன சாம்பல் நிறப்பகுதிகள் மூளையில் நிறைய வேண்டும். அப்படிப்பட்ட சாம்பல்நிறப் பகுதிகளை அதிகம் பெற்றிருப்பவர்கள்தான் கிராண்ட் மாஸ்டர்களாக எல்லா இடங்களிலும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். எப்படி?
பொதுவாக ஐம்புலன்களின் மூலமாக ஒவ்வொரு வினாடியும் கோடிக்கணக்கான தகவல்கள் நரம்புத்தூண்டல் வடிவில் நமது மூளையை அடைந்து பதிவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் புதுப்புதுத் தகவல்களைக் கிரகித்துக் கொள்ளும்போதும் மூளையானது அதற்கேற்றாற்போல் புதுப்புது நரம்புச் சந்திகளை உருவாக்கி, அந்நரம்புச் சந்திகள் மூலமாக தாம் பெற்ற தகவல்களை அனுபவங்களாகப் பதிவு செய்து கொள்கிறது. அவ்வனுபவங்களைக் கொண்டுதான் ஒவ்வொரு மனிதனும் வெற்றிகரமான மனிதனாக உலகில் பவனி வருகிறான்.
பிரிட்டிஷ் மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நம்முடைய மூளையை ஸ்கேன் செய்து மேலும் பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர். அவர்கள் ஒரு குறிப்பிட்ட வார்த்தைகளைச் சொன்னபோது மூளையில் அம்மொழிக்கான நரம்புப் பகுதிக்குள் மட்டும் ரத்த ஓட்டம் பாய்ந்து அப்பகுதி வெளிச்சமானதைக் கண்டார்கள். புதிய செய்திகள், செயல்கள் முதலியவற்றை விரைவில் நினைவு வைத்துக் கொண்டு தேவைப்படும் போது விரைவில் பிரதிபலிக்கவும் கூடியதான சிறப்பு நியூரான்கள் நமது மூளையில் இருப்பதே இதற்குக் காரணம் என்று கண்டறிந்துள்ளனர். சரி. மூளையில் நினைவு எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது?
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல அறிவியல் அறிஞர்கள் மூளையின் இயல்பு பற்றியும், பட்டறிவும் படிப்பறிவும் மூளையில் எவ்வாறு நினைவாகப் பதிவு செய்யப்படுகிறது என்பது பற்றியும் பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.
யூரி ஒவ்சினிகோவ் எனும் அறிவியல் அறிஞர் 1965-ம் ஆண்டு ஒரு விளக்கத்தை வெளியிட்டார். பெப்டைடுகள் தான் நினைவிற்கு அடிப்படையாக விளங்குகின்றன என்பதே இவருடைய கருத்து. இந்த பெப்டைடுகள் அமினோ அமிலங்களால் ஆனவை. சுமார் 20 அமினோ அமிலங்கள் பல்வேறு விதங்களில் இணைந்து பல்வேறு வகைப் புரதங்களை உண்டாக்குகின்றன. இவற்றின் 15 அமினோ அமிலங்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வோம். இந்த 15 அமினோ அமிலங்களும் பல்வேறு விகிதங்களில் இணைந்து உருவாகும் புரதங்கள் எத்தனை மனிதர்களின் நினைவாற்றலுக்கு போதுமானதாய் இருக்கும் தெரியுமா? சுமார் 10 ஆயிரம் மனிதர்கள்.
அதாவது நம் வாழ்நாளில் நாம் இன்னும் எத்தனை கோடி புதிய தகவல்களைப் பெற்றுக் கொண்டாலும் அவற்றை மூளையில் பதிவு செய்வதற்குத் தேவையான புரதங்கள் தீர்ந்து போகாது. அத்தகைய சிறப்பு வாய்ந்த பெப்டைடுகளை சில ரசாயன மாற்றங்களால் மூளையில் சிதையாமல் பார்த்துக் கொண்டால் போதும், நம் வாழ்நாளில் நினைவுப்பஞ்சமே இராது.
மேற்சொன்ன பெப்டைடுகளைப் பற்றி ஆய்வு செய்வதற்காக விஞ்ஞானிகள் மேற்கொண்ட சில ஆய்வு முறைகளைப் பார்த்தால் “”இப்படியும் இருக்குமா” என்று நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்லும். ஒரு பரிசோதனையில் ஒரு குறிப்பிட்ட அனுபவமுடைய ஒரு பிராணியின் மூளைச்சாற்றை எடுத்து அதை அந்த அனுபவம் துளியுமில்லாத வேறொரு பிராணியின் மூளையில் செலுத்திப் பார்த்தனர். விளைவு என்ன தெரியுமா? மூளைச்சாறு செலுத்தப்பட்ட பிராணியானது, அம்மூளைச்சாறுக்குச் சொந்தமான முந்தைய பிராணியின் அனுபவம் முழுமையும் பெற்று அதைப்போலவே செயல்பட ஆரம்பித்துவிட்டது.
இப்போது நமக்கு ஒன்று தெளிவாகிவிட்டது. மூளையில் நினைவாகப் பதிவாகும் தகவல்கள் அனைத்தும் பெப்டைடுகளாகவே பதிவாகின்றன என்பதே அது. இந்தத் தகவல்களை ஒத்துப்பார்ப்பதில்தான் விலங்குகளுக்கும் நமக்கும், நமக்கும் கிராண்ட் மாஸ்டர்கள் போன்ற அறிவுஜீவிகளுக்கும் வித்தியாசம் ஏற்படக் காரணமாய் அமைந்து விடுகிறது. அறிவுஜீவிகளின் அறிவிற்குக் காரணம் இந்த பெப்டைடுகளை நிரம்பப் பெற்றிருக்கும் அவர்களின் மூளையிலுள்ள சாம்பல்நிறப் பகுதியானது அதிக அடர்த்தியைப் பெற்றிருப்பதே.
ஆக, அறிவுத்திறன் என்பது தனிப்பட்ட ஓர் இனத்திற்கோ, ஒரு குழுவிற்கோ சொந்தமில்லை என்பது உறுதியாகிவிட்டது. சரிவிகித உணவும், முறையான பயிற்சியும், வள்ளுவர் கூறும் அசைவிலா ஊக்கமும் இருந்தால் வாழ்வில் வெற்றிக்குத் தடையேதுமில்லை.
(கட்டுரையாளர்: சித்த மருத்துவர், எஸ்.கே. சித்த மருத்துவமனை, கோபி).
Posted in Analysis, Ayurveda, Ayurvedha, Brain, Doctor, EQ, Experience, Intellectual, Intelligence, Intelligent, Medicine, Research, Science, Siddha, Social | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007
சௌதியில் பயங்கரவாதச் சந்தேக நபர்கள் கைது
பயங்கரவாதச் சந்தேக நபர்கள் 170க்கும் அதிகமானோரைத் தாம் கைது செய்துள்ளதாக சௌதி அரேபியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் சிலர் தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்கான விமான ஓட்டிகளாக பயிற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சில வெளிநாட்டவர்கள் உள்ளடங்கலான, இந்தச் சந்தேக நபர்கள், சௌதியின் பெற்றோலிய கிடங்குகள், முக்கியஸ்தர்கள் மற்றும் நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கின்ற இராணுவத் தளங்களைத் தாக்க திட்டமிட்டிருந்தார்கள் என்று சௌதி அரேபிய உள்துறை அமைச்சு கூறியுள்ளது.
இந்த தீவிரவாதிகள் விமான ஒட்டிக்கான பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் அமைச்சு கூறியுள்ளது.
ஆயுதங்களும் பல மில்லியன் டொலர்கள் பணமும் கைப்பற்றப்பட்டதாகவும் அது கூறியுள்ளது.
தீவிரவாதிகளின் தாக்குதல்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாகக் குறைந்திருக்கின்ற போதிலும், கடந்த பல வருடங்களாக சௌதி அரேபியா அல் கைதாவுடன் மோதலில் ஈடுபட்டு வருகிறது.
முக்கிய அல் கைதா சந்தேக நபரைக் கைது செய்ததாக அமெரிக்கப் படைகள் அறிவிப்பு
 |
 |
இராக்கில் அமெரிக்கப் படையினர் |
இரானில் இருந்து தனது சொந்த நாடான இராக்குக்குத் திரும்பிவர முயற்சித்த, முக்கிய அல் கைதா செயற்பாட்டாளர் ஒருவரைத் தாம் பிடித்துள்ளதாக அமெரிக்க இராணுவ நிர்வாகம் கூறுகிறது.
அப்ட் அல் ஹதி அல் இராக்கி என்னும் அந்த நபரைத் தாம், குவாண்டனாமா தடுப்பு முகாமுக்கு மாற்றியுள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.
அவர் பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம் ஆப்கானில் உள்ள அமெரிக்கப் படையினர் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், பாகிஸ்தானின் அதிபர் முஷாரப்பின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் முயற்சிக்காக திட்டமிட்டார் என்றும் பெண்டகன் அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகத்தின் சார்பில் பேசவல்ல் ஒருவர் தெரிவித்தார்.
இவர் குறித்த தகவல்களுக்காக அமெரிக்கா ஒரு மில்லியன் டொலர்கள் சன்மானமும் அறிவித்திருந்தது.
இராக்கில் அல்கயீதா அமைப்பின் தொடர்புகளை துண்டிக்க அமெரிக்க இராணுவம் நடவடிக்கை
 |
 |
இராக்கில் தேடுதல் வேட்டைகள் |
இராக்கில் அல்கயீதா அமைப்பின் தொடர்புகளை துண்டிக்க தாம் மிகப்பெரும் நடவடிக்கை ஒன்றினை ஆரம்பித்திருப்பதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ள்து.
தலைநகரின் வடக்கேயும், மேற்கேயும் நேற்று இரவு நடத்தப்பட்ட திடீர் வேட்டைகளில் வன்மைவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்ட 72 பேர் தடுத்து வைக்கப்பட்டார்கள்.
இன்னொரு வேட்டையில் நைட்ரிக் அமிலம் கொண்ட பெரிய பீப்பாய்கள் இருபதும் குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டன.
இராக்கில் உள்ள அல் கைதா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்ததுள்ளது என்று இராக் உள்துறை அமைச்சு கூறுகிறது
இராக்கில் உள்ள அல்கைதா அமைப்பின் தலைவரான, அபு அயூப் அல்-மஸ்ரி அவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக, தமக்குத் தகவல்கள் கிடைத்திருப்பதாக இராக்கிய உள்துறை அமைச்சு கூறுகிறது.
இது பற்றி பிபிசியிடம் பேசிய பேச்சாளர் ஒருவர், அமைச்சின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆதாரம் ஒன்று களத்தில் இருந்து இதனை உறுதி செய்கின்ற போதிலும், அமைச்சின் அதிகாரிகள் எவரும் சடலத்தையோ அல்லது ஏனைய ஆதாரங்களுக்கான பொருட்களையோ பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
பாக்தாதிற்கு வடக்கே தீவிரவாதிகளுக்கு இடையிலான மோதல் ஒன்றில் அபு அயூப் அல் மஸ்ரி அவர்கள் கொல்லப்பட்டனர் என் அமைச்சுக்குக் கூறப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தம்மால் உறுதி செய்ய முடியவில்லை என்றும், சடலம் எதுவும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.
அபு முஸாப் அல்- சர்காவி அவர்கள் கடந்த வருடம் கொல்லப்பட்டதை அடுத்து, அல் கைதாவின் தலைவராக வந்த அபு அயூப் அல்-மஸ்ரி அவர்கள் பற்றிய தகவல்களுக்கு அமெரிக்கா 50 லட்சம் டொலர்கள் சன்மானம் அறிவித்திருந்தது.
Posted in Al Arabiya, Al Qaida, Al Quaeda, Al quaida, al-Qaeda, Al-Queda, grenades, Gulf, Iran, Iraq, Militants, Saudi, Saudi Arabia, Terrorism, terrorist, Weapons | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007
எஸ்டோனிய ஞாபகார்த்த சின்னம் அகற்றப்பட்டால் கடுமையான நடவடிக்கை என்கிறது ரஷ்யா
 |
 |
ரஷ்ய இன ஆர்ப்பாட்டக்காரர்கள் |
எஸ்டோனியாவின் தலைநகர் டலினில் உள்ள செஞ்சேனையின் இரண்டாம் உலகப்போர் நினைவுச் சின்னத்தை அங்கிருந்த நகர்த்த அந்த நாட்டு அரசாங்கம் எடுத்த முடிவுக்கான பதிலாக, கடுமையான நடவடிக்கைகளை ரஷ்யா எடுக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜை லாவ்றோ கூறியுள்ளார்.
அந்தச் சிலை அங்கிருந்து நகர்த்தப்படுவதைத் தடுப்பதற்கான முயற்சியாக, பெரும்பாலும் ரஷ்ய இனத்தைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், பொலிஸாருடன் மோதியதில், ஒருவர் கொல்லப்பட்டதுடன், 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
பால்டிக் நாடான எஸ்டோனியாவுடனான இராஜதந்திர உறவுகளை ரஷ்யா முறித்துக்கொள்ள வேண்டும் என்று ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேலவை, அதிபர் பூட்டினைக் கேட்டுள்ளது.
ரஷ்யா தனது பிரதிபலிப்பை நியாயமாக வெளிப்படுத்த வேண்டும் என்றும், உணர்ச்சிவசப்பட்டு வெளிப்படுத்தக் கூடாது என்றும் எஸ்டோனிய வெளியுறவு அமைச்சர் உர்மாஸ் பாயிட் கூறியுள்ளார்.
Posted in Estonia, Memorial, Nazi, Nazism, Protest, Russia, Soldier, Soviet, Statue, Talinn, USSR, Violence, War, war memorial | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007
கோதாவரி ஆற்றுக்கு குறுக்கே மகாராஷ்டிரம் பாப்லி அணை கட்ட உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
புதுதில்லி, ஏப். 27: கோதாவரி ஆற்றுக்கு குறுக்கே பாப்லி அணை கட்டும் திட்டத்தை மகாராஷ்டிர அரசு தொடரலாம் என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த அணை கட்டுமானத் திட்டத்துக்கு ஆந்திர மாநிலம் எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத் தக்கது.
கோதாவரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் வறட்சியால் வாடும் தெலங்கானா பகுதியில் குறைந்தது 5 கிராமங்களாவது பாதிக்கப்படும் என்று கூறி, கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என ஆந்திர மாநிலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், டி.கே.ஜெயின் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், அணை கட்டும் பணியை மகாராஷ்டிரம் தொடரலாம் என இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால் அடுத்த உத்தரவு வரும் வரை அணையின் மதகை திறக்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆந்திர மாநில அரசு தவிர, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல எம்.பி.கள் மகாராஷ்டிர அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
————————————————————————————–
சுற்றுச் சூழல் சீர்கேட்டால் நீர்மட்டம் பாதியாக குறைந்த நர்மதா நதி
ஓம்காரேஷ்வர், (ம.பி) ஜூன் 8: சுற்றுச் சூழல் சீர்கேட்டினாலும், காடுகளின் பரப்பளவு குறைந்து வருவதினாலும் நர்மதா நதியின் நீர்மட்டம் 50 சதவீதம் குறைந்துள்ளது.
“”நர்மதா நதியின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என மத்திய நிலத்தடி நீர் அமைப்பு எச்சரித்துள்ளதாக மத்தியப் பிரதேச பாஜக துணைத் தலைவர் அனில் தாவே நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
மலைகள் மற்றும் காடுகளினால் ஆண்டு தோறும் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வந்தது. ஆனால், தற்போது காடுகளின் பரப்பளவு குறைந்து வருவதால் மழையளவு மட்டுமின்றி நதியின் நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது.
1213கி.மீட்டர் நீளம் கொண்ட இந்த நதியில் 41 உபநதிகள் கலந்தாலும் வளர்ந்து வரும் சுற்றுச் சூழல் சீர்கேடானது, உயிரினங்கள் வாழ தகுதியில்லாத இடமாக மாற்றி விடக்கூடும்.
புண்ணிய நதியாக நர்மதா நதியை மக்கள் போற்றி வருகின்றனர். ஆனால், தினமும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்களின் அன்றாட தேவைகளான குளியல், துவைத்தல் போன்ற பணிகளுக்கு இந்த நதியைப் பயன்படுத்துகின்றனர்.
நதியை அசுத்தமாக்காமலும், அதே சமயம் சுற்றுச் சூழல் சீர்கேடு அடையாமலும் நீரைப் பயன்படுத்தும்படி மக்களை கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Posted in Andhra, Andhra Pradesh, AP, Conflict, Court, Dam, Districts, Drought, Environment, Famine, Floods, Forests, Garbage, Godavari, Godavari Water Disputes Tribunal, GWDT, Irrigation, Issue, maharashtra, Mountains, Narmada, Narmadha, Pollution, Rain, River, SC, Scarcity, Sriram Sagar, Supreme Court, Telengana, Telungana, Tribunal, Waste, Water | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007
ஆந்திரத்தில் தொடங்கவிருந்த மோட்டார் ஆலையை தமிழ்நாட்டுக்கு மாற்றுகிறது மஹீந்திரா நிறுவனம்
சங்கா ரெட்டி, ஏப். 27: ஆந்திரத்தின் மேடக் மாவட்டத்தில் சஹீராபாதில் அமைக்கவிருந்த மோட்டார் வாகன தயாரிப்பு ஆலையை, தமிழ்நாட்டின் ஸ்ரீ பெரும்புதூருக்கு மாற்ற மஹீந்திரா மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனம் தீர்மானித்திருக்கிறது.
இந்த ஆலையை ஆந்திரத்திலேயே தொடங்குமாறு ஆலை நிர்வாகத்திடம் மன்றாடி கேட்டுக் கொள்வது என்ற முடிவை ஆந்திர தொழில்துறை அமைச்சகம் எடுத்திருக்கிறது.
2004-ல் ஆந்திரத்தில் காங்கிரஸ் அரசு ஏற்பட்டவுடன், மஹீந்திரா ஆலை நிறுவனம் கனரக, நடுத்தர ரக எடையுள்ள மோட்டார் வாகனங்களைத் தயாரிக்க விருப்பம் தெரிவித்தது. அதற்காக சில அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று ஆந்திர அரசிடம் கேட்டுக்கொண்டது.
ஆந்திர அரசும் அதனுடன் பேசி, அது கேட்ட எல்லா வசதிகளையும் செய்து தருவதாக வாக்களித்தது. ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் முக்கிய வசதிகளை அதனால் செய்து தர முடியாமல் இருப்பதால் ஸ்ரீ பெரும்புதூருக்கு அருகிலேயே ஆலையைத் தொடங்க முடிவு செய்திருக்கிறது.
கேட்ட வசதிகள் என்ன?
1. ஒரு நாளைக்கு 40 லட்சம் லிட்டர் வீதம் 5 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக இலவசமாக தண்ணீர்,
2. விற்பனை வரிச் சலுகைகள்,
3. ஒரு யூனிட் 2 ரூபாய் என்ற விலையில் தரமான, தடையற்ற மின்சார சப்ளை,
4. 4 வழிச்சாலை,
5. சஹீராபாதுக்கும் ஹைதராபாதுக்கும் இடையில் உயர் வேக புறநகர் மின்சார ரயில் வசதி,
6. இப்போது அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துதல்,
7. தொழிலாளர்கள், அதிகாரிகளின் குழந்தைகள் படிக்க தரமான பள்ளிக்கூடங்களை நிறுவுதல் ஆகியவை அந் நிறுவனம் முன்வைத்த கோரிக்கைகளாகும்.
ஆந்திர அரசுடன் கையெழுத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம்கூட தயாராகிவிட்டது. ஆனால் ஆந்திர அரசு ஒப்புக்கொண்டபடி வசதிகளைச் செய்துதருவதில் தாமதமும் அதனால் சிக்கலும் ஏற்பட்டது. கோதாவரியிலிருந்து தண்ணீர் பெற்றுத்தருவதாக அரசு கூறியிருந்தது. அதற்கு வாய்ப்பு சுருங்கிவிட்டதால் பிரச்சினை தோன்றியது. எனவே மஹீந்திரா நிறுவனத்தின் கூட்டு நிறுவனம் நெருக்குதலைத் தந்து, இந்த உடன்பாடு வேண்டாம் என்று கூறிவிட்டது. எனவே தமிழ்நாட்டில் ஆலையை நிறுவும் முடிவு எடுக்கப்பட்டது.
Posted in Andhra, AP, Auto, Exports, Factory, Hyderabad, Incentives, Industry, infrastructure, Jeep, M&M, Mahindra, Mahindra and Mahindra, Manufacturing, Medak, Motor, Sriperumpudhoor, Sriperumpudhur, Sriperumpudoor, Sriperumpudur, State, TN, Zaheerabad | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 26, 2007
உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற புதிய கோள் கண்டுபிடிப்பு
வானியல் அறிஞர்களால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புவியைப் போன்றபுதிய கோள் (இடது). இது சூரிய குடும்பத்துக்கு அருகில் அமைந்துள்ள கிளீஸ்-581 என்ற விண்மீனைச் சுற்றி வருகிறது. இதில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த விளக்கப் படத்தை ஐரோப்பிய தெற்கு வானியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
நியூயார்க், ஏப். 26: உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உடையது எனக் கருதப்படும் புதிய கோள் ஒன்றை வானியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால் இந்தக் கோள் சூரிய குடும்பத்தைச் சேர்ந்தது அல்ல. வேறொரு விண்மீன் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
புவியை போன்ற இந்த கோளில் தற்போது ஏதேனும் உயிரினங்கள் வசித்து வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
புவியைப் போல 5 மடங்கு நிறைகொண்ட இந்த புதிய கோள், சூரிய குடும்பத்தில் இருந்து 20 ஒளி ஆண்டுகள் தொலைவில் (ஒளி 20 ஆண்டுகளில் பயணம் செய்யக் கூடிய தொலைவில்) அமைந்துள்ளது. “துலாம்’ என்ற விண்மீன் கூட்டத்தில் அமைந்துள்ள “கிளீஸ் 581′ விண்மீனை சுற்றி வருகிறது.
சூரிய குடும்பத்துக்கு அருகாமையில் உள்ள இந்த கிளீஸ் 581 விண்மீன், “சிவப்புக் குள்ளன்’ என்ற வகையைச் சேர்ந்ததாகும். மங்கலான சிவப்பு நிற விண்மீன் இது.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா வானியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஸ்டிபான் உட்ரி குழுவினர் இந்தக் கோளைக் கண்டுபிடித்துள்ளனர். கிளீஸ் விண்மீன் மீது இந்தக் கோள் ஏற்படுத்தும் ஈர்ப்பு விளைவுகளை வைத்து அதைக் கண்டுபிடித்துள்ளனர்.
நெருக்கமான கோள்: கிளீஸ் விண்மீனுக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ளது இப் புதிய கோள். அதாவது, இரண்டுக்கும் இடையில் உள்ள தூரம், சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் உள்ள தூரத்தில் 14-ல் ஒரு பங்குதான்.
கிளீஸ் “”சிவப்புக் குள்ளன்” வகையைச் சேர்ந்த விண்மீன் என்பதால் சூரியனைவிட குறைவான ஒளியையும், வெப்பத்தையுமே வெளியிடுகிறது. எனவே புதிய கோள் நெருக்கமாக அமைந்திருந்தாலும் கூட வாழத் தகுதியுள்ளதாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர்.
கோளின் வெப்பநிலை: வேற்றுக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த புவிக்கோளின் வெப்ப நிலை 0 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம். எனவே அங்கு நீர்ம வடிவில் நீரும், உயிரினங்களும் இருக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால், கோளின் வெப்பநிலை பற்றிய இந்தக் கணிப்புகள் துல்லியமானவை அல்ல என்கிறார் உட்ரியின் கூட்டாளியும், வானியல் அறிஞருமான மைக்கேல் மேயர்.
கூடுதல் விவரங்கள் இல்லாமல் நீர் உள்ளதா இல்லையா என்பது பற்றி அவ்வளவு விரைவாக முடிவுக்கு வரமுடியாது என புதிய கோளைக் கண்டுபிடித்த டாக்டர் உட்ரி குழுவினரும் கூறியுள்ளனர்.
வியாழன் கோளைவிட அதிக நிறைகொண்ட வளிமண்டலம் அமைந்திருந்தால், கோளின் பரப்பு மிக அதிக வெப்பநிலை கொண்டதாக இருக்கும். அந்த நிலையில் நீர்ம வடிவில் நீர் இருக்க முடியாது என்கிறார் மசாசூசெட் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தைச் சேர்ந்த கோள் அறிஞர் சாரா சீகர்.
இரு நூற்றில் ஒன்று: இந்த பேரண்டத்தில் புவியைப் போலவே உயிரினங்கள் வசிக்கும், அல்லது உயிரினங்கள் வசிப்பதற்கு ஏற்ற கோளை பல ஆண்டுகளாக அறிவியலாளர்கள் தேடி வருகின்றனர். இப்புதிய கோள் அதுவாகக் கூட இருக்கலாம் என்கிறார் மசாசூசெட்ஸில் உள்ள ஹார்வர்டு-ஸ்மித்சோனியன் மையத்தைச் சேர்ந்த வானியல் அறிஞர் டேவிட் சார்போன்.
புதிய கோள், புவியைப் போலவே நிலத் தரை கொண்ட திண்மக்கோள் எனில் நீர்ம நிலையில் உள்ள நீரும், உயிரினங்களும் இருக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்தக் கோள் வாயு உருண்டையாக இருந்தால் உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாக இருக்கும். ஆனால் இதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.
இதைப் பற்றி மேற்கொண்டு முடிவுக்கு வர, கோளைச் சுற்றிலும் வளிமண்டலம் அமைந்துள்ளதா என்பது போன்ற தகவல்கள் தேவை. அதுவரை வேறு எந்த முடிவுக்கும் வருவது கடினமே என்கிறார் டேவிட் சார்போன்.
சூரிய குடும்பத்துக்கு வெளியில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள சுமார் 200 கோள்களில் மிகச்சிறியது இப்புதிய கோள். ஆனால் புவிக்கு நெருக்கமான நிறை (ஙஹள்ள்) கொண்ட கோள் இது என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
மூன்றாவது கண்டுபிடிப்பு: இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கீளீஸ் 581-ஐ சுற்றி வரும் 2 புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை புவியைப் போல 8 மற்றும் 11 மடங்கு நிறை கொண்டவை. இவற்றைத் தொடர்ந்து மூன்றாவதாக, புவிக்கு நெருக்கமான நிறை கொண்ட இப்புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதிய கோளைக் கண்டுபிடித்துள்ள உட்ரி குழுவினர், வானியல் தொடர்பான “ஜர்னல் அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ட்ரோபிசிக்ஸ்’ பத்திரிகையில் தங்கள் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்துள்ளனர்.
Posted in 581c, Astronomy, Discovery, dwarf, Earth, Gliese, Greenhouse, Human, Life, Liquid, Moon, Planet, Science, Solar, Star, Water | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 26, 2007
பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
புதுதில்லி, ஏப். 26: பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்டம் (இன்று) வியாழக்கிழமை தொடங்குகிறது.
இந்தக் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, விவசாயிகள் தற்கொலை, சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட விஷயங்களை எதிர்க்கட்சிகளும், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரி கட்சிகளும் எழுப்ப உள்ளன.
உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் நாடாளுமன்றம் கூடுவதால் இந்தக் கூட்டத்தொடரில் காரசாரமான விவாதங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது. உள்நாட்டு பாதுகாப்பு, காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களையும் எதிர்க்கட்சிகள் எழுப்பக்கூடும்.
முதல் நாள் கூட்டத்தில் ஆள்கடத்தல் வழக்கில் பாஜக எம்.பி. கடாரா கைதான விவகாரம் மக்களவையில் முக்கியமாக இடம்பெறும்.
கடாரா விவகாரம் மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திலும் பேசப்பட்டது. பாஜக எம்.பி. மீதான நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என்று சட்டர்ஜி தெரிவித்துள்ளார். ஆள்கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள தங்கள் கட்சி எம்.பி.யான பாபுபாய் கடாரா மட்டும் அல்லாமல் பிறகட்சிகளில் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள உறுப்பினர்கள் பற்றியும் விசாரிக்க நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரை பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
2007-08-ம் ஆண்டுக்கான நிதிமசோதாவுக்கு ஒப்புதல் பெறும் விவகாரமும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் என்று தெரிகிறது. இந்த மசோதாவை முன்கூட்டியே அதாவது மே மாதம் 3-ம் தேதியே தாக்கல் செய்து ஒப்புதல் பெற அரசு திட்டமிட்டுள்ளது.
நிதியமைச்சர் ப.சிதம்பரம் மே 6-ம் தேதி வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளார். நிதிமசோதா மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில் அவர் வெளிநாடு செல்வதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த விஷயமும் அவையில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும். உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் விவகாரமும் முக்கிய விவாதமாக அவையில் இடம்பெறும். இது விஷயத்தில் நீதித்துறையின் பங்கு பற்றி பல்வேறு கட்சிகளும் கேள்விகளை எழுப்பியுள்ளன.
உள்நாட்டு பாதுகாப்பு, பயங்கரவாதிகளை ஒடுக்கும் விஷயத்தில் உறுதியான கொள்கை இல்லாதது, போஃபர்ஸ் ஊழலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இத்தாலிய தொழிலதிபர் ஒட்டாவியோ குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு கொண்டுவருவது, ரூ.2 நாணயத்தில் சிலுவைச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் ஆகியவற்றையும் பாஜக எழுப்பும் எனத் தெரிகிறது.
Posted in 27, Babubhai Katara, BJP, Communist, Congress, Election, Issues, Katara, Lok Sabha, LokSaba, MP, OBC, parliament, Party, Politics, Reservation, SJP, SP, UP | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 26, 2007
3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை கைது செய்யவைத்த சோரபுதீன் குடும்பத்தார் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி
போலி துப்பாக்கிச் சண்டையில் சோரபுதீன் ஷேக் என்பவரை சுட்டுக் கொன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஆமதாபாத் நீதிமன்றத்துக்கு புதன்கிழமை அழைத்துவரப்பட்ட காவல்துறை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.ஜி. வன்சாரா (டி ஷர்ட், கண்ணாடி அணிந்தவர்).
இந்தூர், ஏப். 26: குஜராத் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.ஜி. வன்சாரா, காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆர்.கே. பாண்டியன், எம்.என். தினேஷ்குமார் (ராஜஸ்தான்) என்ற 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கைது செய்யப்பட்டதை, சோரபுதீன் ஷேக் குடும்பத்தார் தங்களுடைய சொந்த கிராமத்தில் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் ஜிர்னியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சோரபுதீன் ஷேக். ஜிர்னியா கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக சோரபுதீனின் அம்மா ஜெபுன்னிசா பீவி பதவி வகிக்கிறார்.
1995-ம் ஆண்டு சோரபுதீன் பெயர் முதல்முறையாக பத்திரிகைகளில் வந்தது. அந்த கிராமத்து கிணறு ஒன்றிலிருந்து 2 டஜனுக்கும் மேற்பட்ட ஏ.கே.-56 ரக தானியங்கி துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. அவரை சிபிஐ போலீஸôர் சந்தேகத்தின்பேரில் கைது செய்து அழைத்துச் சென்றனர். பிறகு அவரை நிரபராதி என்று விட்டுவிட்டனர்.
பிறகு அவரை 2005 நவம்பர் 26-ம் தேதி குஜராத் மாநில பயங்கரவாத எதிர்ப்புப்படை போலீஸôரும் ராஜஸ்தான் மாநில சிறப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி எம்.என். தினேஷ் குமாரும் ஆமாதாபாத் நகருக்கு வெளியே சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றனர்.
அவருக்கும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அத்வானி மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் தலைவர்களைக் கொலை செய்ய அவர் சதித்திட்டம் தீட்டி, அதை நிறைவேற்ற குஜராத்துக்கு வந்தார் என்றும் கூறப்பட்டது.
பிறகு சோரபுதீனின் சகோதரர் ருபாபுதீன் இச் சம்பவத்தை விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றம், குஜராத் போலீஸôருக்கு ஆணையிட்டு இதைத் தீவிரமாக விசாரிக்கும்படி கூறியது. பிறகு உண்மை அம்பலமானது. 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் வேண்டுமென்றே சதி செய்து அவரைக் கொன்றிருப்பதாக, விசாரித்த அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். அதன் பேரில் 3 பேரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மே 1 வரை போலீஸ் காவல்: கைதான 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளும் ஆமதாபாத் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விசாரிக்க 14 நாள்கள் வேண்டும் என்று அரசு தரப்பில் கோரப்பட்டது. நீதிபதி மே முதல் தேதி வரை மட்டும் அவகாசம் தந்தார்.
3 அதிகாரிகளும் நீதிமன்றத்தில் அமைதியாக நின்று கொண்டிருந்தனர். நிருபர்கள் ஏதேதோ கேள்விகள் கேட்டும் அவர்கள் யாரும் பதில் அளிக்கவில்லை. கைதான வன்சாரா, முதல்வர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.
Posted in Abdul Latif, abuse, anti-terrorist, Courts, Encounter, Fake, Govt, Gujarat, IAS, IPS, Jhirnya, Judge, Jury, Justice, Lashkar-e-Toiba, Law, LeT, Madhya Pradesh, Modi, MP, Narendra Modi, officers, Order, Police, Sohrabuddin, Terrorism, terrorist, Ujjain | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 26, 2007
நிதி நிறுவனங்களும் கடன் வழங்கும் முறையும்
ப. முத்தையன்
அரசு மற்றும் தனியார் வங்கிகள் தனி நபருக்கோ அல்லது கூட்டாகவோ, சில விதிமுறைகளுக்கு உட்பட்டு கடன் வழங்குகின்றன.
வாகனக் கடன், வீட்டுக் கடன், தனி நபர் கடன் என்று இவற்றை அவை வகைப்படுத்தி வழங்குகின்றன.
பொதுவாக மனுதாரரின் மாத வருவாய் அல்லது மூன்று ஆண்டுகளில் ஈட்டிய வரவு-செலவுக் கணக்கு, அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு, ஜாமீன்தாரர்களின் வருமான விவரம், வயது, பணிக்காலம் இவற்றைப் பொருத்து கடன்கள் வழங்கப்படுகின்றன.
ஈட்டுக் கடன் பத்திரமும் பதிவு செய்யப்படுகிறது. மனுதாரர் மற்றும் கூட்டு மனுதாரர் என்று வகைப்படுத்தி ஒருவரது அல்லது இருவரது சொத்து மதிப்பும், வருமானமும் சான்றிதழ்களுடன் பெறப்பட்டு கடன் வழங்கப்படுகிறது. பொதுவாக கணவன் மனைவி அல்லது மனைவி கணவன் இருவரும் மனுதாரர், கூட்டு மனுதாரர் என்று அதாவது ஆங்கிலத்தில் “அப்ளிகண்ட்’, “கோ அப்ளிகண்ட்’ என்று வகைப்படுத்தப்படுகின்றனர்.
கடன் வழங்கும்போது மாறா வட்டி, மாறும் வட்டி என்று இரு வகைகளில் பிரிக்கப்பட்டு வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. கடன் வழங்கும் மனுக்களில் பல நிபந்தனைகள் அச்சடிக்கப்பட்டு கையெழுத்தும் பெறப்படுகின்றன. என்ன நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரியாமலேயே பலரும் கையொப்பம் இட்டு கடன் கிடைத்தால் போதுமென்று “தலையை’ அடகு வைத்து விடுகின்றனர். நமக்குத் தெரியாமலேயே நாம் வங்கிகளின் கைகளில் அகப்பட்டுக் கொள்கிறோம்.
கடன் வழங்கும்போது ஐந்து ஆண்டு, பத்து ஆண்டு, பதினைந்து ஆண்டு, இருபது ஆண்டு என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு வட்டி விகிதம் உறுதி செய்யப்படுகிறது. தவறும்பட்சத்தில் தவறும் வட்டிவிகிதம் எவ்வளவு என்றும் “சர்சார்ஜ்’ எவ்வளவு என்றும் நிர்ணயிக்கப்படுகிறது.
கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத போது சொத்தைக் கையகப்படுத்தி ஏலம் மூலம் விற்பனை செய்து கடன் தொகையை வட்டி, அபராதவட்டி, சேவை வரியுடன் பிடித்தம் செய்து கொள்ளவும் சட்டத்தில் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.
“கடன் பட்டார்நெஞ்சம் கலங்கினார்’ என்பதுபோல் ஆபத்தில் மாட்டும்போது தான் யார் நாணயம் தவறியவர், தவறுபவர் என்பது நமக்குப் புரிகிறது. புரிகிறபோது தலைக்கு மேல் வெள்ளம் போயிருக்கும்.
மாறா வட்டி, மாறும் வட்டி என்று நிர்ணயம் செய்து கடன் வழங்கினாலும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும்போது இதர வங்கிகளும் வட்டி விகிதத்தை ஓசைப் படாமல் உயர்த்தி விடுகின்றன. மாறா வட்டி என்றால் அவர்கள் “மொழியில்’ வட்டி மாறும் என்பதுதான். ஆனால் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்கும்போது மாறா வட்டி என்பது அவர்கள் “மொழியில்’ வட்டி மாறாது என்பதுதான். குறைக்கும்போது மாறாது; ஆனால் உயர்த்தும்போது மாறும். எனவே மாறா வட்டி என்பது ஒரு சிறு கண் துடைப்பே.
பொதுவாக காலக்கெடுவை நிர்ணயம் செய்து கடன் வழங்கும் போது வாடிக்கையாளர்கள் மிகவும் தந்திரமாக ஏமாற்றப்படுகின்றனர். உதாரணத்திற்கு மாதத் தவணை ரூபாய் ஐந்தாயிரம் என்றும் 24 மொத்த தவணை என்று கொண்டால் ஒருவர் மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் செலுத்த வேண்டும். காசோலை கொடுக்கும்பட்சத்தில் கவனமாக இருக்க வேண்டும். மாதத் தவணை தவறும்போது ஒரு குறிப்பிட்ட தேதிக்கு மேல் அபராத வட்டி விதிக்கப்படுகிறது. ஆனால் ஏதோ ஒரு வழியில் நமக்கு உபரியாகப் பணம் வந்தால் நம் கடனை பாதியிலேயே முழுமையாக அடைத்து விடத் தோன்றும். அப்போது வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் நடக்கும் கூத்து கேலிக்கூத்தே!
முன்கூட்டியே கடனை அடைத்தாலும் வங்கிக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் மிகுதியாகத் தொகையை நாம் செலுத்த வேண்டும். உதாரணத்திற்கு 24 மாதத் தவணையை 12 மாதங்களிலேயே முடித்துக் கணக்கை முடிக்க நினைத்தாலும் மீதமுள்ள 12 மாதத் தவணைத் தொகை அதாவது ரூ. 12 ல 5 ஆயிரம் – ரூ. 60 ஆயிரத்துக்கு 2 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை வங்கிகளுக்கு உபரியாகச் செலுத்த வேண்டும். அப்போதுதான் கணக்கை வங்கிகள் முடிக்கும். காரணம் கேட்டால் ரிசர்வ் வங்கியைக் கைகாட்டுகிறார்கள். என்ன விதியோ என்ன முன்னுதாரணமோ தெரியவில்லை.
தவணை தவறிக் கடனை அடைத்தாலும் அபராதம். தவணைக்கு முன்னரே கடனை அடைத்தாலும் அபராதம். நாணயம் தவறிய நாணயதாரர்கள் யார்? நாமா அல்லது வங்கியா?
மூலப் பத்திரங்களையும் மற்ற ஆவணங்களையும் கடன் பெறும் போது மனுதாரர்கள் வங்கிகளில் செலுத்த வேண்டும். கடன் மனுக்களில் மனுதாரர்களும் ஜாமீன்தாரர்களும் அதாவது அப்ளிகண்டும், கோ – அப்ளிகண்ட்களும் கையெழுத்திட வேண்டும். கடனைத் திருப்பிச் செலுத்தியவுடன் சிலசமயம் வங்கிகள் ஓசைப்படாமல் மூலதாரப் பத்திரங்களை ஜாமீன்தாரர்களிடம் கொடுத்து விடுவர். கேட்டால் நெருங்கிய உறவுதானே, மேலும் நீங்கள் கொடுக்க வேண்டாம் என்று கூறவில்லையே என்று நொண்டி சாக்கு.
பணம் செலுத்துவதற்கு மட்டும் மனுதாரர்கள், பத்திரம் வாங்குவதற்கு ஜாமீன்தாரர்கள். கடன் வாங்கும்போது உள்ள உறவு, இடைப்பட்ட காலத்தில் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கலாம் அல்லவா? அதனால் மூலதாரப் பத்திரங்களை மனுதாரர்களிடம் ஒப்படைப்பதே நியாயமும் நேர்மையும்கூட.
பல திருமணங்களில் மகளின் நலன் கருதி பெற்றோர் ஒரு சொத்தை மகள், மருமகன் பெயரில் பத்திரம் பதிவு செய்ய நேரிடுகிறது. ஏதோ ஒரு காரணத்தால் மகளும் மருமகனும் பிரிய நேரிட்டால் மகளின் சொத்து பறிபோய்விடும்.
அதேபோல் தவணை செலுத்த முடியாதபோது சொத்தைக் கையகப்படுத்தி ஏலம் மூலம் தொகையை வசூல் செய்யும்போது பல மனுதாரர்கள் அவதிக்குள்ளாக்கப்படுகின்றனர்.
மேலும் பரிசீலனைக் கட்டணம் என்று ஒரு சுமை. கடன்கோரும் விண்ணப்பத்தைப் படிப்பதற்கு ஒரு கட்டணமா? அதை இலவச சேவையாகச் செய்தால் என்ன? பரிசீலனைக் கட்டணம் ஒழிக்கப்பட வேண்டும். மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் வட்டியே போதுமானது. மாறா வட்டி என்றால் மாறாமலேயே இருக்க வேண்டும். மாறும் வட்டி என்றால் ஏற்றம், இறக்கத்திற்கு ஒரே அளவுகோல் இருக்க வேண்டும். வட்டி குறைக்கப்படும்போது இறக்கம் இருக்க வேண்டும்.
முன்கூட்டியே கடனே முழுமையாக அடைத்துக் கணக்கை முடிக்கும்போது உபரியாக எந்தத் தொகையும் வசூலிக்கக் கூடாது.
கடன் முழுமையாக தீரும்போது மூலப் பத்திரங்களையும் ஆதரவு ஆவணங்களையும் மனுதாரரிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்; அல்லது அவர்கள் அங்கீகாரம் பெற்றவர்களிடமே ஒப்படைக்க வேண்டும்.
ஏதோ சில காரணங்களுக்காக தவணை கடந்து சொத்தை கையகப்படுத்தி ஏலம் விடப்படும் போது மனிதாபிமான அடிப்படையில் மனுதாரர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
எக்காலத்திலும் அபராத வட்டி சுமையாக இருக்கக் கூடாது. அதேபோல் சேவை வரி முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். சேவைக்காகத் தான் வட்டி பெறப்படும்போது எதற்கு சேவைக்கு வரி?
கடன் பத்திரங்களின் நிபந்தனைகள் அனைத்தும் தெளிவாகப் புரியும்படி தாய்மொழியில் அச்சடிக்கப்பட வேண்டும். இதன்மூலம் அவற்றைப் படித்து தெளிவடைய வாய்ப்பு உண்டு. மேற்கூறிய நிபந்தனைகளை வங்கிகள் மீறும்போது அவற்றின் மீது சட்டப்படி வழக்கை எடுக்க நமக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். எப்படி வங்கிக்கு சட்ட அதிகாரம் உள்ளதோ அதேபோல் நமக்கும் வழங்கினால்தான் நேர்மையும் உதிமையும் காப்பாற்றப்படும். எளிமையான நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் துணை புரியும்.
எனவே கனவு இல்லம் நனவாகும்போது இனிக்க வேண்டுமே அல்லாது கசக்கக்கூடாது. மக்கள் பணமே மக்களுக்காகப் பயன்படும்போது முறைகேடுகள் நடக்கலாமா? கூடாது!
(கட்டுரையாளர்: வழக்கறிஞர், உயர் நீதிமன்றம், சென்னை).
Posted in Accounts, APR, Assets, Banking, Checking, Commerce, Expenses, Finance, Income, Interest, Interest Rates, Loans, Money, Rates, Retirement, Savings | Leave a Comment »