Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Packaging’ Category

Rice prices & food security plan – Veera Jeeva Prabhakaran & KS Radhakrishnan

Posted by Snapjudge மேல் நவம்பர் 30, 2007

நெல்லுக்கு “நோ’?

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

நெல் குவிண்டாலுக்கு ரூ. 1,000 விலை கேட்டு ரயில் மறியல்! தஞ்சை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இதுகுறித்துப் போராடிய விவசாயிகள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

தில்லி நாடாளுமன்றத்தின் முன் நெல்லைக் குவித்துப் போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் ரயிலில் தில்லி பயணம் என்ற போராட்டச் செய்திகள் கடந்த இரண்டு நாள்களாக வந்தவண்ணம் இருக்கின்றன.

விவசாய இடுபொருள்களின் விலை ஏறிவிட்டதால், நெல்லுக்குக் கட்டுப்படியான விலை வேண்டுமென்று விவசாயிகள் போராடுகின்றனர்.

நெல் மற்றும் கோதுமைக்கு இந்த ஆண்டுக்கான கொள்முதல் விலையை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. கோதுமைக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 800 அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஊக்கத்தொகையாகக் குவிண்டாலுக்கு ரூ. 200 அளிக்கப்படும் என்றும் மத்திய வேளாண் அமைச்சகம் அறிவித்தது. இதன் மூலம் கோதுமைக்கு குவிண்டாலுக்கு ரூ. 1,000 விலையாகக் கிடைக்கும்.

ஆனால், சாதாரண ரக நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 645-ம் சூர்ப்பர்பைன் எனப்படும் உயர் ரக நெல்லுக்கு ரூ. 675-ம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊக்கத்தொகை 100 ரூபாயையும் சேர்த்து நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 745 முதல் ரூ. 775 மட்டுமே கிடைக்கும்.

இந்த அறிவிப்பு நெல் விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நெல்லுக்குக் குறைந்தபட்சம் குவிண்டாலுக்கு ரூ. 1,000 வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நடப்பு குறுவை சாகுபடி காலத்தில் குவிண்டாலுக்கு 1,000 ரூபாயும், சம்பா சாகுபடி நெல்லுக்கு 1,500 ரூபாயும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

ஆந்திரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இதுகுறித்து கடும் போராட்டங்களை நடத்தி வருகிறார். தென்மாநிலங்கள் முழுவதும் இதுகுறித்தான விவாதங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவாரும், குவிண்டாலுக்கு ரூ. 1,000 கோதுமைக்கு வழங்கியது சரிதான் என்றும், நூறு சதவீதம் கோதுமை பயன்பாட்டில் உள்ளது என்றும், 65 சதவீதம்தான் நெல் பயன்பாட்டில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

1996 – 97-ல் நெல்லுக்கும் கோதுமைக்கும் இணையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 380 நிர்ணயிக்கப்பட்டது. 1997-98-ல் குவிண்டால் ஒன்றுக்கு நெல்லுக்கு ரூ. 415, கோதுமைக்கு ரூ. 475 என்றும் வித்தியாசப்பட்டு பின் ஒவ்வோர் ஆண்டும் நெல்லைவிட, கோதுமைக்கு விலை கூடுதல் தரப்பட்டது.

இந்த விலை நிர்ணயம் செய்யும் அமைப்பு நடந்து கொள்ளும் விதம் நெல் உற்பத்தி விவசாயிகளின் முதுகில் குத்துகின்ற காரியம்தான். பலமுறை இதுகுறித்து எடுத்துச் சொல்லியும் செவிடன் காதில் சங்கு ஊதுகின்ற அவலநிலைதான். தற்போது கோதுமைக்கு ரூ. 750 + 250 (போனஸ்) = 1,000 என்றும் அரிசிக்கு 645 + 50 (போனஸ்) = 695 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த பாரபட்சமான போக்கு தென்மாநிலங்களை பாதிக்கின்றது. மாற்றாந்தாய் போக்கில் மத்திய அரசு நடந்து கொள்வதைக் கண்டித்து தமிழக அரசும், ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. தமிழக உணவுத்துறை அமைச்சர் ஒரு குவிண்டாலுக்கு சன்ன ரக அரிசி ரூ. 725-ம், சாதா ரக அரிசி ரூ. 695 என்றும் கூறி 75 ரூபாய் அரிசிக்குக் கூட்டிள்ளோம் என்ற அவருடைய அறிவிப்பு வேதனையாக இருக்கிறது.

மத்திய அரசு ஆயிரம் ரூபாய் தரவில்லை என்பதைக் குறித்த எவ்விதக் கருத்துகளும் அவர் அறிவிப்பில் இல்லை. நெல் உற்பத்தி பஞ்சாபில் அதிகமாக இருந்தாலும், பயன்பாடு தென்மாநிலங்களில்தான் அதிகம்.

நெல் சாகுபடி ஏக்கர் ஒன்றுக்குச் செலவு 1997-2007-ல் விதை நெல் ரூ. 267 – ரூ. 400. உரம் ரூ. 1,200 – ரூ. 1,700. பூச்சிக்கொல்லி மருந்து வகைகள் ரூ. 150 – ரூ. 300. பணியாள் கூலி செலவு ரூ. 4,600 – ரூ. 7,000. அறுவடை செலவு ரூ. 230 – ரூ. 950.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயச் சங்க செயலர் வே.துரைமாணிக்கம் கணக்கீட்டின்படியும், வேளாண்மைத் துறையின் பரிந்துரையின்படியும் கீழ்குறிப்பிட்டவாறு ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு ஆகும் செலவு விவரம்.

நெல்விதை கிலோ ரூ. 15 வீதம் 15 கிலோவிற்கு ரூ. 450. 8 சென்ட் நாற்றங்கால் தயார் செய்ய இரண்டு ஆண் கூலி ரூ. 240. ஒரு பெண் கூலி ரூ. 80. தொழுஉரம் ஒரு டன் ரூ. 200. அசோஸ்பைரில்லம் 7 பாக்கெட் பாஸ்யோபாக்டீரியா 7 பாக்கெட் ரூ. 84. ரசாயன உரம் டி.ஏ.பி. 30 கிலோ, யூரியா 20 கிலோ ரூ. 400. நாற்றுப்பறித்து வயலில் எடுத்து வைக்க ஆள் கூலி ரூ. 1,100. நடவு வயல் உழவு டிராக்டர் 2 சால் டிராக்டர் உழவு ரூ. 550. நடவு வயலுக்கான தொழு உரம் 3 டன் ரூ. 600.

வரப்பு மற்றும் வயல் சமன் செய்ய 3 ஆள் கூலி ரூ. 360. நெல் நுண்ணூட்டம் 5 கிலோ ரூ. 93. ரசாயன உரம் டி.ஏ.பி. 50 கி. யூரியா 75 கி. பொட்டாஷ் 50 கி. ரூ. 1,125. நடவுப் பெண்கள் 18 பேருக்கு ரூ. 80 சதவீதம் ரூ. 1,440. 2 தடவை களை எடுக்கச் செலவு ரூ. 980. பூச்சிமருந்துச் செலவு ரூ. 250. காவல் மற்றும் தண்ணீர் பாசனம் செய்ய ஆள் செலவு ரூ. 250. அறுவடை ஆள்கள் கூலி ரூ. 1,750. கதிர் அடிக்கும் இயந்திர வாடகை ரூ. 525. ஓர் ஏக்கருக்கான கடன் பெறும் தொகைக்கான வட்டி கூட்டுறவு என்றால் 7 சதவீதம் (5 மாதம்) ரூ. 245. தனியார் என்றால் ரூ. 500. காப்பீடு பிரிமியம் தொகை 2 சதவீதம் ரூ. 167. விலை மதிப்பீட்டுக்குழு பரிந்துரைப்படி பார்த்தால் நிலமதிப்பிற்கான வட்டி 7 சதவீதம் ரூ. 3,500. மொத்தம் ரூ. 14,689.

இவ்வளவு செலவு கடன் வாங்கிச் செய்தாலும், விலை இல்லை. சிலசமயம் தண்ணீர் இல்லாமல், பூச்சித் தாக்குதலாலும் நெல் பயிர்கள் கருகி விடுகின்றன. பயிர் இன்சூரன்ஸ் என்பது வெறும் வெட்டிப்பேச்சாக உள்ளது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

நாட்டின் முதுகெலும்பு விவசாயம்தான். ஆனால் அதை நம்பியுள்ள 65 சதவீத விவசாயிகளின் நிலைமை மிகவும் வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. இதுவரை இந்தியாவில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடந்த 1960 களில் ஒரு மூட்டை நெல் ரூ. 50. அன்றைக்கு இது ஒரு கட்டுபடியான நல்ல விலை. அதைக் கொண்டு சிரமம் இல்லாமல் விவசாயிகள் நிம்மதியாக வாழ்ந்தனர். அன்று உழவு மாடு ஒரு ஜோடி ரூ. 800தான். ஆனால், இன்றைக்கு ஒரு ஜோடி ரூ. 20,000. அன்று டிராக்டர் ரூ. 25,000 இன்றைக்கு அதன் விலை லட்சங்களாகும். ஆலைகளில் உற்பத்தியாகும் நுகர்வோர் பொருள்கள் நாற்பது மடங்கு அதிகரித்துள்ளன. அரசு ஊழியர்களின் ஊதியம் ஆறு மடங்கு வரை கூடுதலாகி உள்ளது. ஆனால், நெல்லின் விலை திருப்தியாக கூடுதலாக்கப்படவில்லை.

நெல் உற்பத்திச் செலவு கோதுமையைவிட அதிகம். உழைப்பும் அதிகம். நெல் நன்செய் பயிர்; கோதுமை புன்செய் பயிர். நெல் உற்பத்திக்கு பஞ்சாபில் ரூ. 816-ம், மகாராஷ்டிரத்தில் ரூ. 937-ம் செலவாகிறது.

ஒரு குவிண்டால் நெல்லை அரைத்தால் 65 கிலோ அரிசி கிடைக்கும். 35 கிலோ தவிடு மாட்டுத் தீவனமாகப் பயன்படும். நான்கு லிட்டர் எண்ணெய் கிடைக்கும். எண்ணெய் கழிவுகளை மீன்களுக்கு உணவாகப் பயன்படுத்தலாம். இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் உற்பத்தி செய்யப்படும் நெல் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் அதற்கான விலையும் அதை ஊக்குவிக்கின்ற அக்கறையும் மத்திய – மாநில அரசுகளுக்கு இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.

மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு விவசாயிகளின் வேதனை குறித்த அக்கறை இல்லை. பெரிய தொழிலதிபர்களுக்கு ரூ. 1,400 கோடி வரை சலுகைகள் வழங்கி உள்ளார். கொள்ளை லாபம் ஈட்டும் இந்த முதலாளிகளுக்கு கடன் வட்டியை 45 சதவீதம் குறைத்துள்ளார்.

நாட்டின் விவசாய வளர்ச்சி வெறும் 2.3 சதவீதம். மேற்கொண்டு வளர்ச்சி இல்லை. இன்னும் வேதனை என்னவென்றால், அதிகார வர்க்கத்தில் உள்ள சிலர் விவசாயத்தை விட்டு ஒழியுங்கள் என்ற இலவச ஆலோசனை வழங்குவதுதான் கொடுமையிலும் கொடுமை.

நெல்லைப் போன்றே கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலைமையும் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு விவசாயி தான் வளர்த்த கரும்பை கட்டுபடியான விலை இல்லாததால் யார் வேண்டுமானாலும், வெட்டி எடுத்துச் செல்லலாம் என்று தண்டோரா போட்டு கூவி அழைத்தார். அப்படியாவது அந்தக் கரும்பு நிலத்தை விட்டு அகன்றால்போதும் என்ற அவலநிலை.

நெஞ்சு பொறுக்கவில்லை என்ற நிலையில் நெல் விலை கேட்டு விவசாயிகள் களத்தில் போராடுகின்றனர். நீரிழிவு நோயாளிகள், “நெல் அரிசிக்கு நோ’ என்று சொல்வதைப்போல மத்திய அரசும், “நெல்லுக்கு நோ’ என்று சொல்லிவிட்டதோ என்ற ஏக்கம்தான் நமக்கு ஏற்படுகிறது.

வள்ளுவர் சொன்னதைப்போல, “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்’ – என்ற நிலை மாறி விவசாயிகளுடைய பொருளாதார நிலைமை மட்டுமல்லாமல் அவர்களுடைய சமூக, சுயமரியாதையும் அடிபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. இதற்கு யார் காரணம்? ஆட்சியாளர்கள்தான்.

புதிய பொருளாதாரம் தாராளமயமாக்கல் என்ற நிலையில் விளைநிலங்கள் யாவும் அழிக்கப்பட்டு சிறப்புப் பொருளாதார மண்டலமாக மாற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், நிலங்களும் நீர்ப்பாசன ஏரிகளும்கூட வீடுகளாக மாறிவிட்ட நிலை. இந்நிலையில் எப்படி விவசாயம் இந்தியாவில் முதுகெலும்பாக இருக்க முடியும்?

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)
———————————————————————————————————————————————————-

சவாலாகும் உணவுப் பாதுகாப்பு!

வீர. ஜீவா பிரபாகரன்

உலகளவில், மக்கள்தொகை வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் நமது நாட்டில், உணவுப் பாதுகாப்பு என்பது மாபெரும் சவாலாக உருவெடுத்து வருகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் விவசாயத் துறையின் பங்கு பல ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது. இருப்பினும், மொத்த மக்கள்தொகையில் சுமார் 65 சதவீதம் பேர் தங்கள் வாழ்வாதாரமாக விவசாயத்தையே நம்பியுள்ளனர்.

உணவுத் துறையில் பிற நாடுகளைச் சார்ந்திராமல் இருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை. 1960-களில் உணவுப் பொருள்களுக்கு வெளிநாடுகளை நாம் எதிர்பார்த்த நிலை இருந்தது. ஆனால், முதலாவது பசுமைப் புரட்சியால் தன்னிறைவு காணப்பட்டது. பின்னர் ஏற்பட்ட சூழல்களால் நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.

குறிப்பாக, விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழில் நிறுவனங்களாகவும், புதிய நகரங்களாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. ஒரு சில இடங்களில் இத்தகைய நடவடிக்கைகளை விவசாயிகள் எதிர்த்தாலும் அரசுகள் அதை கண்டுகொள்வதில்லை. இதனால், விளைநிலப் பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

விவசாயத்துக்கு நீராதாரமாக விளங்கிய கண்மாய்கள் காணாமல் போய்விட்டன. பாசனத்துக்கான நீர்த் தேவையை பூர்த்தி செய்வதில் அரசுகளுக்குப் போதிய ஆர்வம் இல்லை.

நமது நாட்டில் போதிய நீர்வளம், நில வளம் இருந்தும் அதை முறைப்படுத்தி முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டுவருதற்கான முயற்சிகள் ஏட்டளவிலேயே உள்ளன.

வேளாண் இடுபொருள்கள் விலை அதிகரிக்கும் அளவுக்கு விளைபொருள்களுக்கு, போதிய விலை கிடைப்பதில்லை. இதனால், வேளாண் பணிக்கு போதிய கூலி வழங்க இயலுவதில்லை. எனவே, கிராம மக்கள் அதிக வருவாய் கிடைக்கும் நகர்ப்புறப் பணிகளுக்குச் செல்லும் நிலை உருவாகிவிட்டது. கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கிய இடப்பெயர்வு அதிகரித்து வருகிறது.

விவசாயிகள் விளைவித்த பழம், காய்கறி உள்ளிட்ட விளைபொருள்களைச் சேமித்து, பதப்படுத்தி, பொதிவு (பேக்கிங்) செய்து விற்பனை வாய்ப்பைப் பெருக்கும் திட்டங்கள் முழுவீச்சில் நடைபெறவில்லை.

கூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆறுதலான விஷயமாக இருந்தபோதிலும், விவசாயத்துக்கான பயிர் காப்பீட்டுத் திட்டங்கள், அதன் விதிமுறைகளால் பயனளிக்காத நிலையிலேயே உள்ளன.

நமது விவசாயப் பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகள், சாதனைகள் கீழ்நிலை விவசாயிகளைச் சென்றடைவதில் மிகுந்த இடைவெளி உள்ளது.

இத்தகைய கடுமையான சோதனைகளையும் தாண்டி நாம் உணவு உற்பத்தியில் போதிய சாதனைகள் நிகழ்த்தி வருகிறோம்.

இருப்பினும், கோதுமை உள்ளிட்ட சில விளைபொருள்கள் கூடுதல் விலை கொடுத்து வெளிநாடுகளிலிருந்து நடப்பாண்டில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

விவசாய நிபுணர்களின் கணக்கெடுப்புப்படி, நமது நாடு வரும் 2010-ம் ஆண்டில் 1.41 கோடி டன் உணவு தானியம் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். அதையடுத்து ஒவ்வோர் ஆண்டும் 2 சதவீதம் இறக்குமதி அளவு உயரும் என மதிப்பிடப்படுகிறது.

மக்கள்தொகை வளர்ச்சியையும் கருத்தில் கொண்டால் 2020-ம் ஆண்டில் நமது நாட்டின் உணவுப்பொருள்கள் தேவை 34 கோடி டன்னாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நமது நாட்டில் உணவுப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது. மனித உரிமைகளில் உணவு உரிமையே தலையாய உரிமை என்பது விவாதத்துக்கு இடமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், நமது நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் பலருக்கு ஒரு வேலை உணவு கிடைப்பதே அரிதாக உள்ளது.

இது ஒருபுறம் என்றால், அதிக வருவாய் ஈட்டுவதற்காக உணவுப் பொருள்களை வாங்கி “எத்தனால்’ தயாரிப்பில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இது வறுமை, பட்டினிச்சாவு, கிராமப் பொருளாதாரப் பாதிப்பு உள்ளிட்ட எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என சில அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்நிலையில் நாட்டின் வளம் பெருக்கும் வேளாண்மையில் போதிய கவனம் செலுத்தாவிடில், உணவு மானியச் செலவு அதிகரிக்கும். உணவுப் பாதுகாப்பு என்பது பெரும் சவாலாகிவிடும்.

—————————————————————————————————–

தேவையா மார்க்கெட் கமிட்டி செஸ்?

பி. சுபாஷ் சந்திரபோஸ்


தமிழக வணிக, விவசாயப் பெருங்குடி மக்களின் தலையாய பிரச்னையாக “மார்க்கெட் கமிட்டி செஸ்’ கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது.

முன்யோசனையோ, விவசாயிகள் மீது அக்கறையோ இல்லாத குழப்பான சட்டப்பிரிவுகள், விதிமுறைகள் மூலம் கடுமையான பிரச்னைகளை விவசாயிகளும், வணிகர்களும் தினமும் சந்திக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது இந்த “மார்க்கெட் கமிட்டி செஸ்.’

உணவு உற்பத்திக்காக அல்லும், பகலும் பாடுபட்டு உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கவும், உற்பத்தியான உணவுப்பொருள்களை சேமிக்கவும், உரிய விலை கிடைக்கும்போது விற்று பயன் பெறவும் வேளாண்மை விளைபொருள் விற்பனைச் சட்டம் முதலில் 1933-ல் இயற்றப்பட்டு, 1959, 1987, 1991-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.

இந்தச் சட்டத்தின்படி, அறிவிக்கப்பட்ட விற்பனை பகுதியில், அறிவிக்கப்பட்ட வேளாண் விளைபொருள் எதுவும் வாங்கப்பட்டாலோ அல்லது விற்பனை செய்யப்பட்டாலோ விற்பனைக் குழு (Marketing Committee) ஒரு சதவீத கட்டணம் (Fee/Cess) விதிக்கிறது.

விற்பனைக் கூடங்களை ஏற்படுத்தி அதில் செய்யப்படும் சேவைகளுக்குத்தான் இக்கட்டணம். ஆனால், தமிழகத்தில் மார்க்கெட் கமிட்டி விற்பனைக் கூடங்கள் இல்லாமல், வெளியே கடைகளில் நடக்கும் விற்பனைக்கும் இக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதுதான் வேடிக்கை.

தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களும் இந்தச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட விற்பனைப் பகுதிகளாகும். அந்தந்தப் பகுதியில் உள்ள மார்க்கெட் குழு இந்தச் சட்ட விதிகளை அமலாக்கம் செய்கிறது.

ஆனால், நடைமுறைகளுக்கு ஒவ்வாத குழப்பமான சட்டப் பிரிவுகள், விதிமுறைகள், அதிகாரிகளின் குழப்பமான விளக்கங்கள் காரணமாக மேற்கண்ட சட்ட விதிமுறைகளால் விவசாயிகள், வணிகர்கள் இரு பிரிவினருமே கடுமையான பிரச்னைகளைச் சந்திக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சேவை புரியாமல் வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம்: பிற மாநிலங்களில் 200 முதல் 300 ஏக்கர் பரப்பளவில் விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டு, அங்கு வணிகர்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, அதற்கான கட்டணம் மார்க்கெட் கமிட்டி செஸ் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

விவசாயிகள் தங்கள் சரக்கைக் கொண்டுவந்து வைப்பதற்கான கிடங்குகள், உலர வைப்பதற்கான களங்கள், தரம் பிரித்தல், தராசுகள், ஏலம் மூலம் விற்பனை, வணிகர்களுக்கு அலுவலகம், ஓய்வு அறைகள், விவசாயிகளுக்குப் பயிற்சி வகுப்புகள், குளிர்பதன கிடங்கு, சரக்கை வாங்கிய வியாபாரிகளிடம் பணத்தைப் பெற்று விவசாயிகளுக்குப் பட்டுவாடா செய்யும் வசதி ஆகிய பல்வேறு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், நமது மாநிலத்தில் அத்தகைய விற்பனைக்கூடங்கள் ஏதும் குறிப்பிடத்தக்க அளவில் அமைக்கப்படாமல் பெயரளவில் மிகச் சில மார்க்கெட் பகுதியில் கிடங்குகளும், உலர் களங்களும் அமைக்கப்பட்டு தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படாமல் செஸ் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வேளாண் விளைபொருள்கள் -மார்க்கெட் கமிட்டி செஸ் சட்டங்களில் உரிய மாற்றங்களைச் செய்ய பரிந்துரை செய்துள்ளது. அதில் மிக முக்கியமான மாற்றம், எந்த ஒரு வேளாண் விளைபொருளுக்கும் வேளாண் விற்பனைக் குழுவால் ஏற்படுத்தப்பட்ட விற்பனைக் கூடத்திற்குள் (மார்க்கெட்) நடக்கும் வணிகத்துக்கு மட்டுமே செஸ் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதாகும். ஆனால், தமிழகத்தில் வேளாண் பொருள் விற்பனை எங்கே நடந்தாலும் அதற்கு மார்க்கெட் கமிட்டி செஸ் வசூலிப்பது எதனால் என்பது புரியாத புதிர்.

தற்போது மாநில அரசு சட்டத் திருத்தத்தின் மூலம் பல விளைபொருள்களை அறிவிக்கும்போது அதை உருமாற்றம் செய்து பெறப்படும் ஆலைத் தயாரிப்பு பொருள்களையும் சேர்த்து “அறிவிக்கப்பட்ட பொருளாக’ அறிவிக்கிறது. உதாரணமாக, “உளுந்து’, “உளுந்தம் பருப்பு’ இரண்டுமே அறிவிக்கையிடப்படுகிறது.

இதுவே துவரைக்கும், துவரம் பருப்புக்கும் பொருந்தும். உளுந்தம் பருப்பும், துவரம் பருப்பும் விளைபொருள்கள் அல்ல. அவை பருப்பு ஆலையில் தயாரிக்கப்படும் உற்பத்திப் பொருளாகும். வேளாண் விளைபொருள்களின் விற்பனையை ஒழுங்குபடுத்தி விவசாயிகளுக்கு நன்மை செய்வதுதான் மார்க்கெட் கமிட்டி சட்டத்தின் நோக்கம். வேளாண் விளைபொருள்களுக்கு மட்டுமே செஸ் விதிக்கப்பட வேண்டும். அதிலிருந்து தயாரிக்கப்படும் உப பொருள்களுக்கு செஸ் விதிப்பது எந்த விதத்தில் நியாயம்?

பயறு, பருப்பு பற்றாக்குறையைத் தவிர்க்கும் பொருட்டு, மதுரையிலோ, திருச்சி, கோவையிலோ அல்லது விருதுநகரிலோ உள்ள ஒரு வணிகர் அயல்நாடுகளிலிருந்து உளுந்து, துவரையை இறக்குமதி செய்யும்போது அந்தக் கப்பல் சென்னைத் துறைமுகத்தில் வந்தடைந்து சரக்கு இறங்கினால், அங்கு செஸ் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அதே சரக்குக் கப்பல் சென்னைக்குப் பதிலாக தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகளை இறக்கினால் அங்கு செஸ் கட்டணம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் ஒரே சரக்குக்கு செஸ் கட்டண விதிப்பிலும் இரண்டு வித அளவுகோல் கையாளப்படுகிறது என்பது வேடிக்கை.

விற்பனைக்கூட நடைமுறைகளைப் பொருத்தவரை தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதி வணிகர்களையும், விவசாயிகளையும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாக்கி வருவது அனுமதிச் சீட்டு (பெர்மிட்) முறைதான். விற்பனை செய்யப்பட்ட வேளாண் பொருளை ஒரு மார்க்கெட் பகுதியிலிருந்து அடுத்த பகுதிக்கு எடுத்துச் செல்ல அரசு அலுவலரிடம் பெர்மிட் வாங்கித்தான் கொண்டு செல்ல வேண்டும்.

அரசு அலுவலக நேரம் முடிந்த பின்னரும் கூட, விடுமுறை நாள்கள் உள்பட வர்த்தக பரிமாற்றம் நடந்துகொண்டே இருக்கும். அவ்வப்போது அவசரத் தேவைக்கு தொலைபேசியில் வரும் ஆர்டர்களுக்கு ஏற்ப, இரவு, பகல் பாராமல் உடனுக்குடன் சரக்குகளை அனுப்பி வைப்பது நடைமுறை வழக்கம்.

இது போன்று ஒவ்வொரு நேரமும் முன் அனுமதிச் சீட்டுபெற வேண்டும் என்ற தற்போதைய விதிமுறை லஞ்சத்துக்கு உதவுமே தவிர, எந்த விதத்திலும் விவசாயிக்கோ, வியாபாரிக்கோ உதவாது என்பது நிச்சயம்.

விவசாயம் செய்வோரும், விவசாயத் தொழிலும் நாளும் நலிவடைந்துவரும் இந்நாளில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் ஒரு குன்றிமணி அளவு உணவு தானியங்களோ, காய்கறி, பழ வகைகளோ வீணாக அனுமதிக்கக்கூடாது. அனைத்து வகையான விளைபொருள்களுக்கும் முறைப்படி உலர வைக்க, தரம் பிரிக்க, பாதுகாக்கப்பட்ட களங்களும், கிடங்குகளும், குளிர்பதனக் கூடங்களும் மாநிலம் எங்கும் அமைக்கப்படவேண்டும்.

விவசாயிகள் அவர்கள் பாடுபட்ட உழைப்பிற்கான பலனாக, நல்ல விலை கிடைப்பதற்கு மார்க்கெட் கமிட்டி கூடங்கள் ஏற்பாடு செய்யுமானால் செஸ் கட்டணம் செலுத்த தமிழகத்தில் யாருமே தயங்கமாட்டார்கள்?

வெளிமாநிலங்களில் இந்த நடைமுறை வெற்றிகரமாக நடைபெறுகிறது. ஆனால், தமிழகத்தில் மார்க்கெட் கமிட்டி செஸ் என்கிற பெயரில் விவசாயிகளும், வியாபாரிகளும் அரசால் சுரண்டப்படுகிறார்கள் என்பதுதான் வேதனையான விஷயம்.

(கட்டுரையாளர்: கௌரவ செயலர், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம்)

Posted in Agriculture, Andhra, AP, Basmathi, Basmati, Bullion, cargo, Cess, Committee, Cultivation, Demand, Distribution, Distributors, Economy, Exporters, Exports, Farmers, Farming, Fee, Fees, Field, Finance, Food, Foodgrains, godowns, Grains, Growth, harvest, Imports, Jeeva Prabhakaran, JeevaPrabhakaran, Labor, Labour, Land, Marketing, markets, Naidu, Nayudu, Packaging, Packing, Paddy, PDS, peasants, Poor, Prabhakaran, Prices, procurement, Production, quintal, Radhakrishnan, Ration, Reddy, retail, retailers, rice, Rich, sacks, Security, SEZ, Suicides, Suppliers, Supply, Veera. Jeeva Prabhakaran, Villages, Wheat, Wholsale, workers | Leave a Comment »