பாடாய்ப்படுத்தும் பங்குச்சந்தை!
பங்குச் சந்தை என்பது நாட்டின் தொழில், வர்த்தகத் துறைகளின் ஆரோக்கியத்தையும், மக்களுடைய வருமானம், சேமிப்பு, முதலீடு ஆகியவற்றின் வளத்தையும் ஒருசேர உணர்த்தும் உரைகல். ஆனால் சமீப காலமாக -அன்னிய நேரடி முதலீடு காரணமாக -பங்குச் சந்தையில் பங்கு பரிவர்த்தனை மதிப்பும், பங்குகளின் தனி மதிப்பும் மிக அதிகமாக உயர்ந்து வருகின்றன.
செவ்வாய்க்கிழமை 19,000 புள்ளிகளை எட்டிய குறியீட்டெண் புதன்கிழமை 20,000-ஐ எட்டிவிடும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் 1,744 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது. பங்கேற்புப் பத்திரத்தை “செபி’ என்கிற பங்குச் சந்தை கண்காணிப்பு -கட்டுப்பாட்டு அமைப்பு தடை செய்துவிடும் என்ற வதந்தி காரணமாக இப்படிக் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
வெளிநாடுகளிலிருந்துகொண்டு, தரகர்கள் மூலம் முதலீடு செய்கிறவர்கள் பயன்படுத்தும் புதுவகை அடையாள பங்குப் பத்திரமே, “பங்கேற்பு பத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. அவற்றைத் தடை செய்யும் எண்ணம் ஏதும் அரசுக்கு இல்லை என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உறுதி அளித்த பிறகே சந்தையில் விற்பனை மீண்டும் உயர்ந்தது.
கடந்த வாரம்தான் பங்குச் சந்தையில் குறியீட்டெண் வேகவேகமாக உயர்ந்து வருவது குறித்து நிதி அமைச்சர் சிதம்பரம் வியப்பும் கவலையும் ஒருங்கே தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. “சிறிய முதலீட்டாளர்கள் இந்த நேரத்தில் அசட்டுத் துணிச்சலில் அதிகப் பணத்தை முதலீடு செய்து, கையைச் சுட்டுக்கொள்ள வேண்டாம்’ என்று உரிய நேரத்தில் அவர் எச்சரித்திருந்தார்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவழியினரும், ஊக வணிகர்களும் தங்களிடம் உள்ள மிதமிஞ்சிய பணத்தை இந்தியச் சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். இதை வேண்டாம் என்று சொல்வது சரியான வணிக உத்தி இல்லை. இந்த முதலீடு இருவகைப்படும். வெளிநாடுகளில் உள்ள தனி முதலீட்டாளர்கள் நேரடியாக நமது பங்குகளை வாங்குவது ஒருவகை. வெளிநாடுகளைச் சேர்ந்த நிதி நிறுவனங்கள் நம்முடைய பங்குகளை வாங்குவது மற்றொரு வகை. இவ்விருவகையிலான நேரடி முதலீடுமே நமக்கு அவசியம்தான்.
இந்த முதலீட்டாளர்கள், லாபம் வரும் என்றால் முதலீடு செய்வார்கள். நஷ்டம் வரும் என்றால் முதலீட்டை விலக்கிக் கொள்வார்கள். இது பங்குச் சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு நல்லதல்ல. எனவே இவ்வகை முதலீட்டாளர்களின் முதலீட்டில் 10% தொகையை, ஓராண்டுக்குத் திரும்ப எடுக்க முடியாமல் கட்டாய டெபாசிட்டாகப் பெற வேண்டும் என்று அரசுக்கு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னரும், பொருளாதார வல்லுநருமான எஸ்.எஸ். தாராபூர் ஆலோசனை கூறியிருக்கிறார். இதை அமல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.
போக்குவரத்து, சாலை வசதிகள், தகவல்தொடர்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சார உற்பத்தி போன்ற அடித்தளக் கட்டமைப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்கிறோம் என்று அரசு பலமுறை கூறி ஓய்ந்துவிட்டது. ஆனால் அத்தகைய முதலீட்டை ஏற்கும் நிறுவனங்களோ, பங்கு வெளியீடுகளோ, கடன் பத்திரங்களோ சந்தையில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
இப்படியொரு ஏற்பாட்டைத் தனியார் நிறுவனங்கள் செய்யாது; அரசுதான் முயற்சி எடுக்க வேண்டும். வங்கிகளில் தரப்படும் வட்டிவீதத்தைவிட கவர்ச்சிகரமான வருவாயை அளிப்பதாக அரசு உறுதி கூறினால் உள்நாட்டிலிருந்து மட்டும் அல்ல, வெளிநாடுகளிலிருந்தும் இந்தியர்கள் முதலீட்டைக் கொண்டுவந்து கொட்டுவார்கள். இனியாவது அரசு அத்தகையதொரு முயற்சியைத் தொடங்குமா?