பங்குச் சந்தையும் – மூடத்தனமும்!
பங்குச் சந்தையில் பணம் புரளும் விசயத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது உலகம் முழுக்க ஏற்படும் வழமையான நிலைதான். கடந்த வாரத்தில் மும்பைப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியது என்பது செய்தித் தாள்களில் வந்த செய்தி. லட்சணக்கணக்கான கோடிகளில் சொத்து வைத்திருப்பவர்களின் பங்கு மதிப்பு பேப்பரில் குறைந்துவிட்டது. அன்றாடக் கூலிக்காரரின் வாழ்வை இது பாதித்துவிடப் போவதில்லை எந்த வகையிலும்! பேரம் நடத்துபவர்கள், தரகர்கள், வர்த்தகச் சூதாடிகள் வேண்டுமானால் இழப்பைச் சந்திக்கலாம்.
ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு படிப்படியாக பங்குச் சந்தைப் புள்ளி உயர்ந்து கொண்டே போனபோது மகிழ்ச்சிக் கடலில் மிதந்தவர்கள் இப்போது மட்டும் துக்க சாகரத்தில் மிதப்பதுபற்றிக் கவலைப்படலாமா? ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், சில மாதங்களுக்கு முன்பு, ஒருவர் கேள்வி கேட்டபோது தமிழர் தலைவர் கூறினார்: இது கோடீசுவரர்களின் பிரச்சினையே தவிர, நமக்குச் சம்பந்தம் இல்லாதது எனக் கூறிப் பதில் அளிப்பதைத் தவிர்த்துவிட்டார்.
இப்போது மட்டும் சம்பந்தம் வந்துவிட்டதா? பொருள் அடிப்படையில் இல்லை என்றாலும், அறிவு அடிப்படையில் சம்பந்தம் வந்துவிட்டது!
பங்குச் சந்தை ஏறுமுகமாக இருந்தால் காளை (bull) என்பார்கள். இறங்குமுகமாக இருந்தால் கரடி (bear) என்பார்கள். எப்போதும் ஏறுமுகமாகவே இருக்கவேண்டும் என்பதற்காக, ஒரு காளை பொம்மையைப் பங்குச் சந்தை அலுவலகத்தில் வைத்திருக்கிறார்கள். அதுவும் கடந்த 12 ஆம் தேதிதான் வைத்தார்கள். மூன்று அடி உயரச் சிலை.
பங்குச் சந்தைக் கட்டடத்தின் வாயில் பக்கம் தன் பின்பக்கத்தைக் காட்டிய நிலையில், கட்டடத்தை விட்டு வெளியேறுவதுபோல இருக்கிறது எனக் கூறி அதை மாற்றி வைக்கவேண்டும் என்றார்களாம். இம்மாதிரி சிலை இருக்கும் திசை சரியாக இல்லாததால்தான், பங்குச் சந்தையில் பங்குகள் அடி வாங்குவதாகத் தரகர்கள் கூறுகிறார்கள். ஏற்ற இறக்கத்தால் நேரடியாகப் பலனோ, நஷ்டமோ அடையும் இவர்களுக்குத்தானே இதைப்பற்றிக் கவலை!
மூட நம்பிக்கை அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இரண்டாவது பொருளாக உள்ளது. முதல் பொருள் கரப்பான்பூச்சி. உலகின் எல்லாப் பகுதிகளிலும் இது இருக்கிறது. வாஸ்துப்படி காளைச் சிலையைக் கட்டடத்தின் தென்மேற்குப் பகுதிக்கு மாற்றவேண்டும் என்று ஒரு சிலர். இதே இடத்திலேயே வடக்குப் பக்கத்தை நோக்கியவாறு திருப்பி வைத்தால்போதும் என்று சில பேர். இந்த மூடர்களுக்குள் நம்பிக்கை ஒரே மாதிரியாக இருந்தாலும், பரிகாரம் மாறுபடுகிறது!
திறக்காத கதவுக்கு எதிரில் சிலை வைத்ததற்கே இந்தப் பாடு என்றால், வாசலில் வைத்திருந்தால் என்ன சொல்வார்கள்?
– அரசு
காளைச் சிலையால் பங்குச் சந்தை வீழ்ச்சியா?
மூட நம்பிக்கை – படிக்காத பாமர மக்கள் மத்தியில் மட்டுமா? – பட்டம் பெற்ற மனிதர்கள் மத்தியிலும்கூட ஆழ மாகப் பதிந்து இருக்கிறது என்பதற்கு ஆதாரத்தைத் தேடிக்கொண்டு ஓடவேண்டியதில்லை. இரு நாள்களாக வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு செய்தியே போதுமானது.
கடந்த வாரம் – பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்தது. அதனால் ஒரு கலவரமான மனப்பான்மை கூட பொதுவாக பொருளாதார வட்டாரத்தில் நிலவியது உண்மையாகும்.
இதற்கான காரணங்கள் பல உண்டு என்பது பொருளா தாரம் அறிந்தவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும். இத்தகைய சரிவுகள் அவ்வப்போது ஏற்படக்கூடியவைதான்; இந்தியாவில் மட்டுமல்ல – உலகின் பல்வேறு நாடுகளிலும் நடைபெறக் கூடியவைதான்.
ஆனால், இந்தியாவில் இருக்கக் கூடிய படித்தவர்கள் – தங்களிடம் பதிந்துள்ள மூட நம்பிக்கையின் காரணமாக, திடீர் என்று ஒன்றைக் கண்டுபிடித்தார்களே பார்க்கலாம்!
மும்பையில் உள்ள பங்குச் சந்தை அலுவலகத்தின் இரண்டாவது கதவை நோக்கி வெண்கலத்தால் ஆன காளைச் சிலை நிறுவப்பட்டது. இந்தச் சிலை சரியான வாஸ்து சாஸ்திரப்படி நிறுவப்படாததால்தான் பங்குச் சந்தையில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டது என்று மனப் பிராந்தியில் உளறிக் கொட்டியிருக்கின்றனர்.
காளையின் பின்புறம் – பங்குச் சந்தையை நோக்கியி ருக்கிற
தாம். பங்குச் சந்தையிலிருந்து காளை மாடு வெளி யேறுவதுபோல் உள்ளதால், அதற்கு மாறாக பங்குச் சந்தை அலுவலகத்தை நோக்கி காளையின் முகம் இருக்க வேண்டுமாம் – இப்படிக் கதைத்தவர்கள் பலர்.
இந்தக் காளையை நிறுவிய சிற்பி – இந்தப் படித்த பாமரர்களின் முகத்தை வீங்க வைக்கும் அளவுக்குச் சரியான சாட்டையடி கொடுத்துள்ளார். கோலாப்பூரைச் சேர்ந்த பகவான் ராம்பூர் என்ற சிற்பி சொன்னார்: அமெ ரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகத்தான் இந்தியப் பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது; இதற்கும் காளை மாட்டுக்கும் சம்பந்தா சம்பந்தம் இல்லை; சம்பந்தம் இருப்பதாகக் கூறுவது மூடநம்பிக்கையின் உச்சக்கட்டம் என்று பளார் என்று பதில் சொன்னார்.
காளைச் சிலை, வாஸ்து சாஸ்திரப்படி வைக்கப்பட வில்லை என்பது உண்மையானால், சில நாள்களிலேயே பங்குச் சந்தை சரிவிலிருந்து மீண்டு விட்டதே – அது எப்படி சாத்தியமானது? காளைச் சிலை அப்படியேதானே – இருந்த இடத்தில்தானே இருக்கிறது.
பிரச்சினைக்கான காரணத்தை, அறிவு கொண்டு நுட்பமாக ஆய்வதுதான், மனிதனுக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவு இருக்கிறது என்பதற்கு அடையாளமாகும்.
வாஸ்து சாஸ்திரப்படி ஒரு வீட்டைக் கட்டவேண்டும் என்றால், எந்த வீட்டிலும் கழிவறை கட்ட முடியாதே – காரணம் வாஸ்துவில் கழிவறைக்கோ, நூலக அறைக்கோ இடமில்லையே!
இதிலிருந்து ஓர் உண்மை தெரியவில்லையா? காட்டு விலங்காண்டிக் காலத்தில் யாரோ ஓர் ஆரியன் கட்டிவிட்ட கரடி என்பது விளங்கவில்லையா?
அண்டகாசுரனுக்கும், சிவபெருமானுக்கும் சண்டையாம்; சிவன் உடலிலிருந்து சிந்திய வியர்வை பூமி மீது விழுந் ததாம். உடனே பார்ப்பனப் புராணங்களில் நெளியும் ஆபா சப்படி, சிவபெருமானின் வியர்வைக்கும் – பூமாதேவிக்கும் ஒரு பிள்ளை பிறந்ததாம் – அவன்தான் வாஸ்து புருஷனாம்.
இந்தக் கதையின் யோக்கியதை எப்படி அறிவுக்கும் ஆய் வுக்கும் பொருந்தாதோ, அதேதான் இவனால் உருவாக் கப்பட்டதாகக் கூறும் வாஸ்து சாஸ்திரத்தால் அறிவின்முன் ஒரு நொடிகூட நிற்க முடியாது.
அளவுகோல்கள், மட்டக் கோல்களுக்குக்கூட வருண தர்மப்படி வேறுபாடுகள் கூறப்பட்டுள்ளன.
பார்ப்பானுக்கு வெள்ளை நிறம், சத்திரியர்களுக்கு சிவப்பு நிறம், வைசியர்களுக்கு கறுப்பு நிறம், சூத்திரர்களுக்குக் கறுப்பு அல்லது பாசி படர்ந்த காட்டு மண்ணில்தான் வீடு கட்டவேண்டுமாம்.
இதற்குமேல், இந்த வாஸ்து சாஸ்திரத்தின் யோக்கிய தைக்கு விளக்கமும் தேவையோ!
பார்ப்பானின் கைச்சரக்கு அனைத்திலும் உண்டு; அதனைத் தூக்கி எறிவதற்குத்தான் மான உணர்ச்சியும், அறிவு உணர்ச்சியும் தேவை.
மானமும், அறிவும் மனிதனுக்கு அழகு என்று தந்தை பெரியார் கூறுவதன் பொருள் இப்பொழுது புரிகிறதா?