Kalki Therthal Editorial: India Parliament Elections 2009
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 15, 2009
அச்சுறுத்தும் இரட்டை அபாயம்! – கல்கி தலையங்கம்
நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கட்சிகளுள் ஒன்றுகூட, நம் நாடு தற்போது எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னை களைக் குறித்துப் பேசவில்லை. முதல் பிரச்னை பொருளாதார வளர்ச்சியில் அபாயகரமான பின்னடைவு. இரண்டாவது பிரச்னை, அண்டை நாடான பாகிஸ்தானில் வளர்ந்து வரும் தலிபான் ஆதிக்கம்.
உலகம் முழுவதுமே பொருளாதார நலிவைச் சந்தித்து வருவதால் அது குறித்துப் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என நம் அரசியல் கட்சிகள் முடிவு செய்துவிட்டன போலும்! அதனால்தான் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பற்றியோ வேலை வாய்ப்பு பெருக்கத்துக்கான திட்டங்கள் குறித்தோ பேசுவதற்குப் பதிலாக, மேலும் பல இலவசங்கள், மானியங்கள், சலுகைகள் பற்றி அறிக்கைகள் வருகின்றன.
கடந்த பிப்ரவாி மாதத்தில் மட்டுமே ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 22 சதவிகிதம் குறைந்துள்ளன. ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் அடைந்து வரும் நஷ்டத்தால் இதுவரை பத்து மில்லியன் நபர்கள் வேலை இழந்துள்ளனர். இவ்வெண்ணிக்கை மேலும் துாிதமாக அதிகாிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் ஐந்து சதவிகிதமாகக் குறையும் என்றும், அன்னியச் செலாவணி கையிருப்பு அதல பாதாளத்துக்குச் செல்லும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
இவை யாவுமே, சராசாி இந்தியனின் வாழ்க்கை, சொல்ல முடியாத அளவுக்குக் கடினமாகப் போகிறது என்பதற்கான அறிகுறிகள். ஆனால் இவை பற்றியெல்லாம் ஆலோசிக்க நமது அரசியல்வாதிகளுக்கு ஏது நேரம்? அவர்கள் தங்களுடைய சகிப்புத்தன்மையற்ற பேச்சிலும் நடத்தையிலும் தலிபானுடன் போட்டி போடத் தயாராகிவிட்டார்கள்!
தலிபான், பாகிஸ்தானில் காலூன்றியிருப்பதால் நாம் எதிர்கொள்ளப் போகும் அபாயம் என்னவென்று நம் அரசியல்வாதிகள் சிந்திக்காவிட்டாலும் நாம் விழிப்புற்று எச்சாிக்கை கொள்ள வேண்டும். பாகிஸ்தானில் தலிபான் கை ஓங்கினாலும் இந்தியாவுக்கு ஆபத்து (ஏற்கெனவே பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்ப் பகுதியில் அவர்கள் ஊடுருவி விட்டார்கள்); அந்நாட்டில் தலிபான் ஒடுக்கப்பட்டாலும் நமக்கு ஆபத்து – அங்கிருந்து விரட்டப்படுவோர் அண்டை நாடான இந்தியாவுக்குத்தான் வேகமாக வந்து சேர்வர்.
சகிப்புத்தன்மைக்கே இடங்கொடாத, அடிப்படைவாதமும் பிற்போக்குச் சிந்தனையும் வன்முறையும் காட்டுமிராண்டிச் சட்டங்களும் கொண்ட தலிபான், இந்த நாட்டின் அழகான மதச்சார்பின்மை கவசத்தை நொடியில் தகர்த்துவிடும். இங்கு தழைக்கும் பலமத கலாசாரத்தை நாசமாக்கிவிடும்.
ஒரு பக்கம் பொருளாதாரச் சீர்குலைவு அச்சுறுத்தல்; இன்னொரு பக்கம் இந்தத் தலிபான் அபாயம். இதை உணர்வதற்கு, பாிெய தீர்கதாிசனமெல்லாம் தேவையில்லை; சராசாி கவனமும் எச்சாிக்கை உணர்வும் போதும். ஆனால், நம் அரசியல்வாதிகளிடம் அதைக்கூட இனி எதிர்பார்க்க முடியாது போலிருக்கிறது.
ஒரே தீர்வுதான் உள்ளது: இந்தியாவெங்கிலும் உள்ள மூத்த சான்றோர்கள் ஒன்றுகூடி, நாட்டு நலனில் அக்கறை உள்ள ஐம்பது தனி நபர்களை, அரசியல் ஆதாய நோக்கு இன்றி தேர்தலில் நிறுத்தி, அவர்கள் மூலம் நாட்டுக்கான நல்ல திட்டங்களை எடுத்துரைக்கலாம். அந்த நேர்மையாளர் களுள் 25 பேர் வென்றால்கூட அது இந்திய அரசியலில் திருப்புமுனையாக அமையும். ஊழலில் ஊறிப்போன சுயநல அரசியல்வாதிகளுக்கு ஓர் எச்சாிக்கையாகவும் விளங்கும்.
மறுமொழியொன்றை இடுங்கள்