Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘workers’

Sirius Star: Somali Pirates Seek Ransom for Hijacked Saudi Tanker: Efforts on to release supertanker

Posted by Snapjudge மேல் நவம்பர் 19, 2008


ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரிக்கிறது

சோமாலிய கடற்கரைக்கு அண்மையில் நங்கூரமிட்டுள்ள கடத்தப்பட்ட கப்பல்
சோமாலிய கடற்கரைக்கு அண்மையில் நங்கூரமிட்டுள்ள கடத்தப்பட்ட கப்பல்

சவுதியின் எண்ணெய்க்கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள் அதனை தற்போது சோமாலியாவின் வடபகுதிக்கு கொண்டு சென்றுள்ளதாக அமெரிக்க கடற்படை கூறுகிறது.

இந்த ஆண்டு சோமாலியாவின் கடற்பரப்பில் நடந்த கடற்கொள்ளையர்களின் தாக்குதல்கள் 92. இந்த சம்பவங்களின் விளைவாக, 36 கப்பல்கள் கடத்தப்பட்டன.

அதிகரித்துவரும் இந்தப்பிரச்சினைக்கு பதில் நடவடிக்கையாக கடந்த மாதம், நேட்டோ சோமாலியாவுக்கு உதவி வழங்கல்களை செய்துவரும் கப்பல்களைப் பாதுகாக்கவென ஒரு நடவடிக்கை அமைப்பை உருவாக்கியது.

ஆனால் இது வரை வழங்கப்பட்ட வளங்கள் இந்தப் பிரச்சினையை சமாளிக்கப் போதுமானவையாகத் தோன்றவில்லை.

இதில் சம்பந்தப்பட்ட கடற்பரப்பு மிகவும் பெரியது – சுமார் ஒரு மில்லியன் சதுர கிலோமீட்டர்களுக்கும் மேலான பரப்பு அது.

நேட்டோ, இந்த கடற்பரப்பில் நான்கு கப்பல்களை மட்டுமே வைத்துள்ளது. எந்த ஒரு நாளிலும், இந்தப் பகுதியில், 10 வெவ்வேறு சர்வதேச போர்க்கப்பல்கள் மட்டுமே இருக்கின்றன.

அமெரிக்க விமானங்கள் கூடுதலாக வான்வழி கண்காணிப்பில் ஈடுபட்டுவருவது ஓரளவுக்கு பலனளித்திருப்பது போல் தோன்றினாலும் பிரச்சினை இன்னும் தொடர்கிறது.

கடற்கொள்ளைகளை சமாளிப்பது குறிப்பாகவே கடினம், ஏனென்றால், கடற்கொள்ளையர்களின் கப்பல்களை, தாக்குதல் நடப்பதற்கு சற்று முன்னர்வரை, மற்ற கலன்களிலிருந்து பிரித்துப்பார்ப்பது ஏறக்குறைய முடியாத ஒன்று. அந்த சமயத்தில் தடுப்பது என்பது தாமதமான ஒன்றாகத்தான் இருக்கும் என்று பிபிசியிடம் அமெரிக்க கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

கடற்கொள்ளையர் படகு ஒன்று
கடற்கொள்ளையர் படகு ஒன்று

இந்தப்பகுதியில் பாரிய கடற்படைகளைக் கொண்ட பிராந்திய சக்திகள் ஏதும் இல்லாததும், சோமாலியாவின் கடற்கரைப்பகுதியில் ஒட்டுமொத்த கட்டுப்பாடற்ற குழப்பம் நிலவுவதும், இந்தப்பகுதியில் கடற்கொள்ளையை நசுக்கும் நடவடிக்கைகளை முடக்குகிறது.

கப்பல் நிறுவனங்கள் தங்களது கப்பல்களில் பாதுகாப்பு பணியாளர்களை வைத்துக்கொள்வது குறித்து பரிசீலிக்கலாம் என்று அமெரிக்க கடற்படைக்காகப் பேசவல்ல ஒரு அதிகாரி கோடிகாட்டியிருந்தாலும், இத்தகைய நடவடிக்கை தங்களது கப்பல் பணியாளர்களுக்கு உள்ள ஆபத்துக்களை அதிகரிக்கவே செய்யும், மேலும் காப்பீட்டு செலவையும் அது அதிகரிக்கும் என்று வர்த்தக கப்பல் துறை அஞ்சுகிறது.

ஆனால், சோமாலி கடற்கொள்ளையர்கள் இந்த ஆண்டு இந்த கப்பல் கடத்தல்கள் மூலமாக 5 கோடி டாலர்கள் சம்பாதிப்பார்கள். இந்த நிலையில், இந்தப் பிரச்சினை முடிந்துவிடும் என்று கருதுவது அடிப்படையில் கடினமாகவே இருக்கிறது.



கடத்தப்பட்ட எண்ணெய்க் கப்பல் சோமாலிய கடற்கரையை அடைந்துள்ளது

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச்செல்லப்பட்ட மிகப்பெரிய எண்ணெய்க் கப்பல் தற்போது சோமாலிய கடற்கரையை சென்றடைந்துள்ளது.

இந்த கடற்கொள்ளையர்களுடன் தாங்கள் தொடர்புகளை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கும் இந்த கப்பலின் சொந்தக்காரர்கள், இந்த கப்பலில் இருக்கும் 25 கப்பல் பணியாளர்கள் பத்திரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சிரியஸ் ஸ்டார் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கப்பலில், நூறு மில்லியன் டாலர்கள் பெறுமதியான கச்சா எண்ணெய் இருக்கிறது. இந்தக் கப்பலை கடத்திச்சென்றிருப்பவர்கள், இதை விடுவிப்பதற்கு மிகப்பெரும் தொகையை கப்பமாக கேட்ககூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கடத்தலை கண்டித்திருக்கும் சவுதி அதிகாரிகள். பயங்கரவாதத்தை போலவே, கடற்கொள்ளையும் மிகப்பெரிய ஆபத்து என்றும் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, இந்தப் பிராந்தியத்தில் பயணிக்கும் எல்லா கடற்கலன்களுக்கும் தங்களால் பாதுகாப்பு வழங்க முடியாது என்று அமெரிக்காவின் கடற்படை தெரிவித்துள்ளதுடன், அந்த வழியாக பயணிக்கும் அனைத்து கப்பல்களும் தங்களின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை தாங்களே செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இந்த கப்பலை கடத்திச்சென்றுள்ள கடற்கொள்ளையர்கள் இது தவிர 13 கப்பல்களை ஏற்கனவே கடத்தி வைத்திருக்கிறார்கள்.

மற்றுமொரு கப்பலும் கடத்தப்பட்டது

இதற்கிடையே, ஏடன் வளைகுடாப்பகுதியில், 25 மாலுமிகளுடன் சென்ற ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட, சரக்குக் கப்பல் ஒன்று கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச கடல்போக்குவரத்து அலுவலகம் அறிவித்துள்ளது.

ஏடன் வளைகுடாப் பகுதியில் நடந்த மற்றுமொரு சம்பவத்தில், 12 பேர் சென்ற, கிரிபாட்டியில் பதிவு செய்யப்பட்ட, ஒரு மீன்பிடி படகும் கடத்தப்பட்டதாக இந்த அலுவலகம் தெரிவிக்கிறது.


சோமாலியாவில் அமைதிக்கு தடையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை

ஆப்பிரிக்காவின் கிழக்கு பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பான ஐ சி எ டி, அமைப்பைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் எத்யோப்பியாவில் நடத்திய மாநாட்டில் சோமாலியாவில் அமைதியை மீண்டும் கொண்டுவரத் தடையாக இருப்பவர்கள் மீது குறிப்பிட்ட சில தடைகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தடை யார் மீது விதிக்கப்படும் என்று பெயர் குறிப்பிடப்படவில்லை.

புதிய அமைச்சரவை தொடர்பாக பிரதமருடன் சோமாலியாவின் இடைக்கால அதிபர் விரைவாக இணக்கப்பாடு காணவேண்டும் என்பதே இவர்களின் குறி என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் முன்னேறி வரும் இஸ்லாமிய கிளர்சிக்கார்ர்களிடம் இருந்து அரசை பாதுகாக்கும் ஆப்பிரிக்க ஒன்றியப் படைகளை மேம்படுத்துவது என்றும் வெளிநாட்டு அமைச்சர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


லாரண்ட் என்குண்டா படை பின்வாங்கலை அறிவித்துள்ளார்

காங்கோ கிளர்ச்சிப்படைகள்
காங்கோ கிளர்ச்சிப்படைகள்

காங்கோ ஜனநாயகக் குடியரசில் இருக்கும் லாரண்ட் என்குண்டா அவர்கள் தலைமையிலான கிளர்ச்சிக்குழு, கிவு பிராந்தியத்தின் கிழக்குப்பகுதியில் தமது தற்போதைய நிலைகளில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு பின்வாங்கிச் செல்லப்போவதாக அறிவித்துள்ளது.

காங்கோவுக்கான ஐநா மன்றத்தின் சிறப்பு மத்தியஸ்தராக சென்றுள்ள நைஜீரியாவின் முன்னாள் அதிபர் ஜெனரல் ஒபசாஞ்சோ அவர்களின் அழுத்தத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

தாங்கள் பின்வாங்கிச்செல்லும் பகுதிகளில் ஐநா மன்றத்தின் அமைதிப்படையினர் காவல்காக்க வேண்டும் என்று என்குண்டா கோரியுள்ளார்.

காங்கோவில் இருக்கும் ஐநா மன்ற படைகளின் மூத்த தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவர்கள் ஐநா மன்றத்தின் விதிகள் தமது படையினரின் கைகளை கட்டிப்போட்டிருப்பதால், கிளர்ச்சிப்படையினரை தமது படைகளால் தோல்வியுறச்செய்ய முடியாத நிலை இருப்பதாக தெரிவித்த பின்னணியில் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , | Leave a Comment »

24 drowned in Bihar boat mishap on river Ganga in Bihar’s Khagaria district

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2008


கங்கை நதியில் படகு கவிழ்ந்து குறைந்தது 24 பேர் பலி

கங்கை நதிக்கரையோரம்
கங்கை நதிக்கரையோரம்

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் கங்கை நதியில் சென்று கொண்டிருந்தஒரு படகு கவிழ்ந்ததில் குறைந்தது இருபத்துநான்கு பேர் மூழிகியுள்ளனர்.

நீரில் மூழ்கி இறந்தவர்களில் பெரும்பாலனவர்கள் பெண் விவசாயத் தொழிலாளர்கள்.

மூழ்கிய படகிலிருந்தவர்களில் மூன்று பேர் நீந்தி பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்தப் படகில் கூடுதலான மக்கள் இருந்த காரணத்தினாலேயே மூழ்கியது என்று உள்ளூர் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | Leave a Comment »

Italian inquiry into India murder: CEO of Greater Noida firm battered to death: Dismissed employees of the Graziano Trasmissioni turn violent; 63 under arrest

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2008

ஊழியர்களால் தலைமை அதிகாரி அடித்துக்கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இத்தாலிய நிறுவனம் விசாரணை

இந்தியாவில் இயங்கும் ஒரு இத்தாலிய நிறுவனத்தின் தலைமை அதிகாரி அதில் வேலை செய்யும் பணியாளர்களாலேயே அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் புகார் தொடர்பில், அந்த நிறுவனம் சுயமாக ஒரு விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறியுள்ளது.

கிரேஸியானோ டிரான்ஸ்மிஷியோனி இந்தியா எனும் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான லலித் சௌத்ரி அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களுடன் நடத்திய கூட்டத்தில் வன்முறை வெடித்தில் அவர் இறக்க நேரிட்டது.

கிராசியானோ நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இந்தியாவில் தாம் பணியாளர்களை நடத்திய விதத்தை நியாயப்படுத்தியுள்ளது. மேலும் சௌத்ரி அவர்களின் இழப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் கூறியுள்ளது.

தமது நிறுவனத்துக்கு எதிராக அச்சுறுத்தல் இருந்தபோதிலும் இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர் என்கிற கவலையை இத்தாலி வெளியிட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் சுமார் முன்னூறு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டதற்கான பணியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அந்த நிறுவனத்தின் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | Leave a Comment »

Protests, Bandhs, Harthal: Work stoppage & public nuisance – Habit for getting Holidays

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2008

“பொது நலனை பாதிக்கும் போராட்டம்’

வ. ஜெயபாண்டி

நாட்டில் சமீபகாலமாக நடைபெறும் போராட்ட சம்பவங்களைப் பார்க்கும்போது ஜனநாயக நாட்டில் மக்களாட்சித் தத்துவத்தில் நாம் வாழ்கிறோமா? என்ற சந்தேகம் எழுகிறது.

விலைவாசி உயர்வு, சிலை அவமதிப்பு, இடஒதுக்கீடு கோரிக்கை என எதுவானாலும் சம்பந்தப்பட்டவர்கள் “போராட்டம்’ என்ற பெயரில் சேதப்படுத்துவது பொதுச் சொத்துகளைத்தான்.

தமிழகத்தில் அரசியல் மோதலில் தொடங்கி அனைத்துப் பிரச்னைகளிலும் அதிகம் பாதிப்படைவது அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளே!

அதேபோல ராஜஸ்தான் மாநில “குஜ்ஜர்’ இன இடஒதுக்கீடு பிரச்னையில் அரசுப் பேருந்துகளையும், தண்டவாளங்களையும் கூச்சமின்றி பலர் சேதப்படுத்தியதை ஊடகங்கள் உலகறியச் செய்தன.

மறியல் போராட்டம் என்ற பெயரில் பொதுமக்களைப் பாதிக்கும் வகையில் அரசியல் கட்சியினர் நடத்தும் “பந்த்’துகளால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே!

கோரிக்கைகளை வலியுறுத்தவும், அதைப் பெறப் போராடவும் அனைவருக்கும் உரிமை உண்டு. அதே சமயம் பொது நலனைப் பாதிக்கும் வகையில் நடந்துகொள்வது எந்த வகையில் நியாயம் என்பதைச் சம்பந்தப்பட்டோர் சிந்திக்க வேண்டும்.

நாடு நமது. அதிலுள்ளவை நம்முடையவை. அதைப் பாதுகாப்பதும், நமது தேவைக்கு ஏற்ப நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதுமே உண்மையான உரிமை. இதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்?

அரசு வாகனங்களை சேதப்படுத்துகிறோம். பின்னர், பயண நெரிசலைக் கவனத்தில் கொண்டு கூடுதல் வாகனங்களை இயக்குமாறு கோரிக்கை வைக்கிறோம். ஏன் இந்த முரண்பாடு?

தனது வீட்டில் சிறு கீறல் விழுந்தாலே பதறித் துடிக்கும் ஒருவர், கூட்டத்தோடு சேர்ந்து பொதுச் சொத்துகளை உடைத்து நொறுக்குவதற்கு எப்படி மனம் வருகிறது? கண்ணை விற்று சித்திரம் வாங்கி என்ன பயன்?

மக்களது தேவைக்காகப் போராடுகிறோம் என்ற பெயரில் மறியலில் ஈடுபடும்போது அவசரத் தேவைக்காகச் செல்லும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்களே? இதற்கு யார் பொறுப்பு?

அரசியல், சாதிய இயக்கங்கள் என்ற போர்வையில் சமூகத்தைப் பாதிக்கும் வகையில் நாமே நடந்து கொள்வது எந்த வகை நாகரிகம்?

இதற்காகவா நமது முன்னோர் கண்ணீரும், செந்நீரும் சிந்தி மக்களாட்சியை ஏற்படுத்தினார்கள்?

அன்னியர் ஆட்சியே மேல் என்று கருதும் நிலையை உருவாக்குவதற்காகவா, அரையாடை அணிந்து “மகாத்மா’ அகிம்சை வழியில் போராடினார்?

நாட்டில் நடைபெறும் போராட்டத்தில் பெரும்பாலானவை அரசியல் மற்றும் அவை சார்ந்த அமைப்புகள் நடத்துபவையாகவே உள்ளன.

இதனால் அவை ஒட்டுமொத்த சமூகத் தேவைக்கான போராட்டமாக அல்லாமல் குறிப்பிட்டோர் ஆதாயம் அடையத் தக்கவையாக அமைகின்றன.

சாதி, சமயம், அரசியல் என குறுகிய வட்டத்தில் குறுக்கிக்கொண்டு செயல்படுவதையே பலரும் நவீன அரசியல் யுக்தியாக கருதும் போக்கும் அதிகரித்து வருகிறது.

அப்படிப்பட்ட அமைப்புகளுக்குத் தலைவர்களாக வருவோர், தங்கள் பின்னால் அணிவகுப்போரை உணர்வுப்பூர்வமாக தூண்டிவிட்டு பயனடைகிறார்கள். அறிவுப்பூர்வமான வழிகாட்டல் அவர்களிடம் அரிதாகவே உள்ளது.

இதற்கு யார் காரணம்? ஆடை எடுப்பதற்குக் கூட கடைகளில் அதிக நேரம் செலவிடும் நாம், அரசியல் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் சிந்திப்பதே இல்லை.

நமது ஜனநாயக உரிமையை ஐந்தாண்டுக்கு ஒருமுறை பயன்படுத்துவதில் பொறுப்புணர்வை காட்டுவதுமில்லை. “மட்டத்தில் நயம்’ என்ற நிலையிலே நமது அரசியல் தேர்வு உள்ளது.

இத்தகைய போக்கால் நாட்டு நலன் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. தனிநபர் நலன் முக்கியத்துவம் பெறுகிறது. பொது நல ஆர்வம், தியாகம் என்பதெல்லாம் பிழைக்கத் தெரியாதவர்களது பிதற்றல் என்றாகிவிட்டது.

“நாடு கெட்டுப்போய்விட்டது’ என ஆளாளுக்கு கவலைப்படுகிறோம். ஆனால் நம்மால் சமூகத்தை மேம்படுத்த என்ன செய்யமுடியும் என சிந்திக்கத் தவறுகிறோம்.

தனிமனித ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என்பதெல்லாம் சமூக மேம்பாட்டுக்கான ஏணிப்படிகள் என்பதை நிகழ்கால மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு கற்றுக்கொடுக்கத் தவறிவிட்டோம்.

ஆம். யாரும் எதைப் பற்றியும் கவலைப்பட நேரமில்லை. இன்றைய பொழுது தமக்கு நல்லபடியாக கழிந்ததா? மனம் விரும்பியது கிடைத்ததா? அதற்காக எத்தகைய பழி பாவத்தையும் செய்யலாம் என எண்ணுகிறோம்.

ஆனால் நமது தவறுக்கெல்லாம் “பலிகடா’வாகப் போவது நமது எதிர்காலச் சந்ததியினர் என்பதை மறந்துவிடக் கூடாது.

“”தினை விதைத்தவன் தினை அறுப்பான் : வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்று நமது முன்னோர் சொன்ன முதுமொழியை இப்போது நினைவில் கொள்வதே எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் செய்யும் நன்மையாக அமையும்.

Posted in Economy, Govt, India, Law, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , | Leave a Comment »