பங்குச் சந்தையும் பசித்த வயிறுகளும்
உ . ரா. வரதராசன்
இன்று ஆட்சியிலிருப்போரின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருவதும் ஊடகங்களின் வணிகச் செய்திப் பகுதியை ஆக்கிரமித்து நிற்பதும் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண்ணின் ஏற்ற இறக்க சதிராட்டம்தான்.
கடந்த 2007ம் ஆண்டில் இந்த சென்செக்ஸ் புள்ளிகள் 45 சதவீத உயர்வையும் தாண்டியது. மும்பை பங்குச் சந்தையில் அன்றாடம் வாங்கி விற்கப்படும் 30 பெரும் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பை மட்டுமே வைத்து இந்த சென்செக்ஸ் குறியீட்டுப் புள்ளிகள் கணக்கிடப்படுகின்றன. 21,000 புள்ளிகளைத் தொட்டு சாதனையை நிகழ்த்திய இந்த சென்செக்ஸ் இப்போது 14,000 புள்ளிகளாகச் சரிந்தும், பின்னர் ஏறுவதுமாக இருக்கிறது.
இன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற 2004-ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையிலான நான்காண்டுகளில் மும்பை மற்றும் தில்லி பங்குச் சந்தைகளில் நடைபெற்ற வர்த்தகத்தின் அளவு 286 சதவீதம் (சுமார் 3 மடங்கு) உயர்ந்துள்ளதாக சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்களின் ஊஞ்சலாட்டத்தை உற்றுக் கவனிப்பதிலேயே நாட்டின் நிதியமைச்சர் குறியாக இருக்கிறார்.
இப்போது வெளிநாட்டு மூலதனம் வரவு அதிகரிப்பதானாலும், சர்வதேச அளவில் டாலர் மதிப்பு சரிந்ததானாலும், இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே உயர்ந்து வருவது, நிதியமைச்சருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைச் சமாளிப்பதற்காகக்கூட அன்னிய நிதி மூலதனத்தின் மீது எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்க மத்திய அரசு முனையவில்லை. மாறாக இந்திய நாட்டுக் கம்பெனிகள் அயல்நாடுகளில் வாங்கும் கடன் தொகைகளை இந்தியாவுக்குக் கொண்டு வரக்கூடாது. வெளிநாட்டிலேயே மூலதனச் செலவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது நம் நாட்டவர்களே வெளிநாட்டில் கடன் வாங்கி அன்னியச் செலாவணியை நாட்டுக்குள் கொண்டு வருவது தடுக்கப்பட்டுள்ளது. அதே கடன் தொகைகள் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மூலம் பங்குச் சந்தைக்கு வந்து போவது என்பது இப்போதும் நடந்து வருகிறது.
நம் நாட்டின் நிதியமைச்சரின் பார்வை பங்குச் சந்தை வர்த்தகத்திலேயே பதிந்து கிடப்பது, நிதியமைச்சகம் கவலையோடு பரிசீலிக்க வேண்டிய எண்ணற்ற பிரச்னைகள் குறித்துப் பாராமுகம் காட்டுவதில் முடிந்திருக்கிறது.
இந்த ஆண்டின் பட்ஜெட்டில்தான் (அரசியல் காரணங்களுக்காகவேனும்) விவசாயக் கடன் ரத்து போன்ற சில அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. எனினும், பங்குச் சந்தையில் சரிவு ஏற்படுகையில் கம்ப்யூட்டரில் முகம் பதித்திருக்கும் தரகர்களின் முகத்தில் தெரியும் கவலைக்குறிகள் நிதியமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு, ஒவ்வொரு நாளும், பசித்த வயிறுகளோடு இரவில் படுக்க நேரிடும் கோடானகோடி சாமானிய இந்தியர்களின் துயரந்தோய்ந்த முகங்கள் ஈர்க்கவில்லை என்பது வருந்தத்தக்கது.
வளரும் நாடுகளில் பசித்த வயிறுகளின் சவால் பற்றிய ஓர் ஆய்வறிக்கை, உலகப் பட்டினிக் குறியீட்டெண் 2007 என்ற பெயரில் வெளியாகியுள்ளது. 2000 – 2005ம் ஆண்டுகளில் 118 வளரும் நாடுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தப் பட்டினிக் குறியீட்டு எண் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகம் 21ம் நூற்றாண்டில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்முயற்சியில் 189 நாடுகளின் ஆட்சியாளர்கள் கூடி விவாதித்து அடுத்த இரண்டாயிரமாவது ஆண்டின் வளர்ச்சி இலக்குகளை வரையறுத்து வெளியிட்டனர். 1990-ல் தொடங்கி 2015-க்குள் எட்டப்பட வேண்டிய இந்த இலக்குகள், கடுமையான வறுமையையும் பட்டினியையும் ஒழிப்பது, அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகள், குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைப்பது, தாய்மைக் காலத்தில் பெண்கள் ஆரோக்கியம், எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களை எதிர்கொள்வது போன்றவற்றை உள்ளடக்கி அமைந்தன. இந்த இலக்குகளைப் பாதியளவாவது 2003-ம் ஆண்டுக்குள் எட்டிவிட முயற்சிகள் மேற்கொள்ளப்படவும் முடிவெடுக்கப்பட்டது. இதை மையமாக வைத்து மூன்று முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்த உலகப் பட்டினிக் குறியீட்டு எண் தயாரிக்கப்பட்டுள்ளது.
1. ஒரு நாட்டின் மொத்த மக்கள்தொகையில் ஊட்டச்சத்து குறைவான மக்கள் எண்ணிக்கையின் விகிதம் (உட்கொள்ளும் உணவின் அளவு உடலின் தேவைக்குக் குறைவாக உள்ள மக்கள்தொகைகளின் எண்ணிக்கை).
2. ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை (வளர்ச்சி குறைந்த, சோகை பிடித்த குழந்தைகளின் சதவிகிதம்).
3. பிறந்த ஐந்தாண்டுகளுக்குள் இறந்துவிடும் குழந்தைகளின் (ஆரோக்கியமற்ற சூழல், போதுமான உணவு இல்லாமை காரணமாக நேரிடும் குழந்தைச் சாவுகளின்) எண்ணிக்கை.
இந்த மூன்று அளவுகோல்களை வைத்துக் கணக்கிட்டு 118 நாடுகளில் நிலவும் நிலைமைகளை இந்தப் பட்டினிக் குறியீட்டெண் படம்பிடித்துள்ளது. இதில் குறைவான புள்ளிகள் முன்னேற்றமான நிலையையும் கூடுதலான புள்ளிகள் மோசமான நிலையையும், சுட்டிக்காட்டுவதாக அமையும். 10 புள்ளிகளுக்கும் அதிகமாக உள்ள நாடுகளின் நிலைமை மோசமானது என்றும் 20 புள்ளிகளுக்கும் அதிகமாக உள்ள நாடுகளின் நிலைமை கவலைக்குரியது என்றும் 30-க்கும் அதிகமான புள்ளிகளைப் பெறும் நாடுகள் கடும் கவலைக்குரியது என்றும் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்தக் குறியீட்டு எண்ணில் இந்தியா பெற்றுள்ள புள்ளிகள் 25.03.
118 நாடுகளின் பட்டியலில் இந்தியா 94வது கவலைக்குரிய கட்டத்தில் இடம் பெற்றுள்ளது. கடும் கவலைக்குரிய நாடுகளின் எண்ணிக்கை வெறும் 12 மட்டுமே. நமது அண்டை நாடுகள் சிலவற்றின் இடங்கள் நம்மைவிட மேலான நிலையில் இலங்கை – 69, பாகிஸ்தான் – 88, நேபாளம் – 90 என்றுள்ளன. பங்களாதேஷ் மட்டுமே நமக்குப் பின்னால் 103வது இடத்தில் உள்ளது. 0.87 என்ற மிகக் குறைவான புள்ளியோடு லிபியா என்ற சின்னஞ்சிறிய நாடு முதலிடம் பெற்றுள்ளது.
இந்தியா பட்டினிக் குறியீட்டில் இவ்வளவு தாழ்வான நிலையில் இருப்பதற்குக் காரணத்தைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. இந்தியக் கிராமங்களைக் கவ்விப் பிடித்துள்ள துயரம்; பொருளாதார வளர்ச்சி விகிதம் பற்றிய ஆரவாரத்திற்கிடையிலேயும், விவசாயத்துறை மிகவும் பின்தங்கியுள்ள பரிதாப நிலை; சாதிய ஒடுக்குமுறை மற்றும் சிறுபான்மையருக்கு எதிரான பாரபட்சங்கள் காரணமாகக் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் கணிசமான மக்கள் பகுதி புறக்கணிப்புக்கு ஆளாகியுள்ள அவலம்; குடும்பத்தில் ஆண்மக்கள் உண்டதுபோக மிச்சமிருப்பதைப் பங்கிட்டுக் கொள்ளும் பெண்களின் உடல்நலம் குன்றல்; அத்தகைய பெண்களுக்குப் பேறுகாலத்தில்கூட ஊட்டச்சத்து குறைவாக அமைவதால் பிள்ளைப்பேற்றின்போதே குழந்தை இறப்பதும், பிறக்கும் குழந்தைகள் சவலையாக இருப்பதுமான சோகம்; எல்லாவற்றுக்கும் மேலாகப் பொது விநியோக (ரேஷன்) முறை, கல்வி, சுகாதாரம் இவற்றுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகள் அற்பமாகவே அமைந்துள்ளவை. எல்லாம் சேர்ந்துதான், இந்திய மக்களில் பெரும் பகுதியினரைப் பசித்த வயிற்றோடும், நோய்களுக்கு எளிதில் இலக்காகும் சோகைபிடித்த உடல் நிலையோடும் நிறுத்தி வைத்துள்ளன.
பங்குச் சந்தையில் சூதாடுபவர்களில் பெரும்பாலோர் கொழுத்த பணமுதலைகளும், வெளிநாட்டு மூலதனச் சொந்தக்காரர்களும்தான். ஆட்சியாளர்கள் அவர்கள் மீது மட்டுமே பதிந்துள்ள தங்கள் பார்வையைச் சற்றே முகம் திருப்பி, பசித்த வயிறுகளுக்கு மட்டுமே “சொந்தம்’ கொண்டாடும் நம் நாட்டின் பாவப்பட்ட ஜென்மங்களைக் கண் திறந்து பார்ப்பார்களா?