Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Enforcement’ Category

Don’t rush to cut policy rates: Monetary, fiscal recipe for overheating India

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 22, 2007

வங்கிகளில் அரசு தலையீடு?

எஸ். கோபாலகிருஷ்ணன்

வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மோட்டார் வாகனத் தொழில் சார்ந்த மூத்த நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், வங்கிக் கடன்களுக்கான வட்டிவீதத்தைக் குறைக்க வேண்டும் என்று யோசனை கூறினார். இது வெறும் யோசனை அல்ல, அரசின் ஆணை என்றே பலர் கருதினர்.

அதற்கேற்ப, ஓரிரு தினங்களில், சில வங்கிகளின் உயர்நிலை நிர்வாகிகள் வட்டி குறைக்கப்பட வேண்டியதுதான் என்று வழிமொழிந்தனர். அக்டோபர் 10, பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன், மோட்டார் வாகனக் கடன், டிரக் கடன் ஆகியவற்றுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்தது. இதர வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வட்டியைக் குறைத்தன.

வங்கிகள் தங்கள் கடனுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், இந்த நிகழ்வு, வேறு சில கருத்துகளுக்கும் இடம் அளித்துவிட்டது. பொதுமக்களிடமிருந்து டெபாசிட் திரட்டுவதும், திரட்டிய பணத்தை வாடிக்கையாளர்களுக்குக் கடனாக வழங்குவதும் வங்கிகளின் தலையாய தொழில். அதேபோல், பொதுமக்களின் டெபாசிட் தொகைக்கு எவ்வளவு வட்டி கொடுப்பது மற்றும் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு எவ்வளவு வட்டி வசூலிப்பது என்பதை நிர்ணயிப்பதும் வங்கிகளின் பணியே.

இந்த நியதி, அரசு உள்பட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால், பொருளாதார சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டபின்னர், மத்திய அரசு இந்த நியதியைப் பெரும்பாலும் கடைப்பிடிக்கவும் செய்தது.

விவசாயக் கடன், சிறுதொழில் கடன், மாணவர்களுக்குக் கல்விக் கடன் உள்ளிட்ட முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் கடன்கள் தொடர்பான விதிமுறைகள் தவிர பிறகடன்களுக்கான வட்டிவீதத்தை வங்கிகளே வணிகரீதியில் நிர்ணயிக்கின்றன.

வைப்புத்தொகைகளுக்கான வட்டிவீதத்தையும் ஒவ்வொரு வங்கியும் அவ்வப்போது தனது தேவைகளுக்குத் தகுந்தபடி கூட்டியோ குறைத்தோ வழங்குகிறது. எல்லா வங்கிகளுக்கும் ஒரே சீரான வட்டிவீதத்தை நிர்ணயிக்கும் வழக்கத்தை ரிசர்வ் வங்கி கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விதிவிலக்காக, சேமிப்பு கணக்குக்கான வட்டிவீதம் மட்டுமே அனைத்து வங்கிகளுக்கும் ஒரே சீராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் வட்டிவீதத்தைக் குறைக்கும்படி யோசனை கூறியதும், அதை வங்கிகள் விரைந்து செயல்படுத்தியதும், ஒரு பொது விவாதத்திற்கு இடமளித்திருப்பதில் வியப்பேதும் இல்லை.

பொதுத்துறை வங்கிகளின் பெரும்பான்மைப் பங்குதாரர் மத்திய அரசுதான். முன்னதாக பாரத ஸ்டேட் வங்கியின் பெரும்பான்மைப் பங்குகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்தன. ஆனால், அண்மையில் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளை மத்திய அரசு வாங்கிக் கொண்டது.

நாட்டின் 80 சதவிகித வங்கிப் பணிகளை பொதுத்துறை வங்கிகள்தான் மேற்கொள்கின்றன. புதிய தலைமுறை தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி போன்றவை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தபோதிலும், நாட்டின் ஒட்டமொத்த வங்கிச்சேவையில் தனியார்துறை வங்கிகளின் பங்கு குறைவாகவே உள்ளது.

இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளின் கடன்களுக்கான வட்டிவீதம் உயர்ந்ததால் மோட்டார் வாகன உற்பத்தியும் விற்பனையும் சரிந்துள்ளன. புதிய வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனை நம்பியிருந்தவர்கள் மனம் தளர்ந்து போனார்கள். காரணம், வட்டிவீதம் அதிகரித்ததால் மோட்டார் வாகனங்கள் மற்றும் வீடுகளின் அடக்கவிலைகளும் அதிகரித்துவிட்டன. இது பொருளாதார மந்தநிலைக்கு வழி வகுக்கக்கூடும் என்ற கவலை மேலீட்டால் மத்திய நிதி அமைச்சர் தமது யோசனையை வெளியிட்டிருக்கக்கூடும். ஆகவே, இதை அரசியல் தலையீடாகக் கருதக்கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.

இது ஒருபுறமிருக்க, பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கும், இயக்குநர் குழுக்களுக்கும் சமுதாயக் கடமை உண்டு. வணிக ரீதியில் வெறும் லாபநோக்கோடு மட்டுமல்லாமல், பொருளாதார மந்தநிலை ஏற்படும் நிலைமை தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பு பொதுத்துறை வங்கிகளுக்கு இருக்கிறது.

அண்மையில் நிகழ்ந்த கடன்களுக்கான வட்டி உயர்வுக்கு காரணம், வங்கிகள் அல்ல; ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கையே என்பது புலனாகும்.

ரிசர்வ் வங்கியின் தலையாய கடமைகளில் ஒன்று, நிதி மற்றும் கடன் கொள்கையை முடிவு செய்து 6 மாதங்களுக்கு ஒரு முறை அறிவிப்பதாகும். இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, விலைவாசியையும் பணவீக்க வீதத்தையும் கட்டுப்படுத்துவது. இரண்டாவது, தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடனைத் தங்குதடையின்றி கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது.

முன்னதாக, அசுர வேகத்தில் உயர்ந்து கொண்டிருந்த பணவீக்கவீதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

வங்கிகளின் உபரிப் பணத்தை உறிஞ்சுவதற்காக, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பை மேலும் அரை சதவிகிதம் அதிகரித்தது. அதற்கு முன்பு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டிவீதத்தையும் (ரெப்போ ரேட்) உயர்த்தியது.

இந்த நடவடிக்கைகளால் பணவீக்கவீதம் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில், வங்கிகளின் கடனுக்கான வட்டிவீதம் உயர்வதற்கும் அது வழிவகுத்துவிட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கிகளில் வைப்புத்தொகை அதிகரித்ததைவிட, வங்கிக்கடன் தொகையே அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 30 சதவீதம் அளவுக்கு வங்கிக்கடன் அதிகரித்து வந்துள்ளது. வட்டி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

இந்நிலையில், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற சமிக்ஞை ரிசர்வ் வங்கியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டுமே அல்லாமல், அரசுத் தரப்பிலிருந்து அல்ல என்பது தெளிவு.

இதற்கிடையே, டெபாசிட்களுக்கான வட்டியும் குறையத் தொடங்கியுள்ளது என்பது கவலை தரும் விஷயம். தங்களது வாழ்நாள் சேமிப்பிலிருந்து கிடைக்கக்கூடிய வட்டியை மட்டுமே நம்பி வாழ்க்கைநடத்தும், பணி ஓய்வுபெற்றவர்களுக்கும், நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் யார்?

நடுத்தர மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும்விதத்தில் அவர்களுடைய வைப்புத்தொகைக்கான வட்டிவீதத்தைக் குறைக்காமல் பார்த்துக்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

இந்த உயிர்நாடிப் பிரச்னையை வெறும் வணிகரீதியில் அணுகாமல், மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய இழப்பை ஒரு சுமையாக ரிசர்வ் வங்கி கருதலாகாது. ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் உதவுவதை ஒரு சமுதாயக் கடமையாகக் கருத வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

Posted in Agriculture, Assets, Auto, Automotive, Banking, Banks, BOB, Bonds, BSE, Cars, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chit Funds, Chitfunds, Chithambaram, Commerce, Cooperative, Credit, CRR, Deflation, Deposits, Dollar, Economy, Enforcement, Exchange, Farmers, FD, Finance, Financing, fiscal, Govt, HDFC, ICICI, Index, Indices, Inflation, Insurance, Interest, investments, IOB, KVB, Land, liquidity, Loans, markets, Micro-financing, Microloans, Minister, Monetary, Motor, NIFTY, NSE, Overnight, Overnite, Parts, Policy, Property, Rates, RBI, reserves, ROI, Rupee, Rupees, Rupya, SBI, Schemes, Shares, Spare, Stocks, Student, Treasury | Leave a Comment »

Law on protection of waterbodies vs Govt buildings encroachment – Environment

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

நீர்நிலை ஆக்கிரமிப்பில் அரசு கட்டடங்கள்

வி. கிருஷ்ணமூர்த்தி

தமிழகம் முழுவதும் ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் அகற்றுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு வெளியாவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்னர்தான் ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வழி வகுக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சுமார் 38 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வசித்து வருவதாகத் தெரிய வருகிறது. இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் நீர்நிலைகளின் ஏதாவது ஒரு பகுதியில் மட்டும்தான் இருக்கின்றன. ஆனால், நீர்நிலைகளை ஒட்டுமொத்தமாக அழிக்கும் வகையில் பல்வேறு அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதுதான் அதிர்ச்சியூட்டும் செய்தி.

நீதிமன்ற அலுவலகங்கள், அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைகள், தாலுகா அலுவலகங்கள், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்கள், பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகளின் வணிக வளாகங்கள், வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள், சமுதாயக்கூடங்கள், நூலகங்கள், பஸ் நிலையங்கள் என அரசின் பல்வேறு துறை சார்ந்த கட்டடங்கள் நீர்நிலைகளையொட்டியே அமைந்துள்ளன.

மதுரை உலகனேரி கண்மாயில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் உள்ள அத்திகுளம், செங்குளம் கண்மாயில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட அப்போதைய தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தலைமையில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. தாம்பரத்தை அடுத்த கோவிலம்பாக்கம் ஏரி என பல்வேறு நீர்நிலைகளில் அரசு பள்ளி உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டுக்கான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

2006 ஆகஸ்டில் சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் துரைப்பாக்கத்தில் “ரெட்டைக் குளத்தை’ வணிக வளாகமாக்கும் அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “”அரசியல் சட்டத்தின் 51-ஏ (ஜி) பிரிவின்படி ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. எனவே, அவற்றில் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்காமல், ஏற்கெனவே இடம்பெற்றிருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும்” என்றனர்.

இருப்பினும், இந்த வழக்கில் தொடர்புடைய குளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

2005 ஜூன் 27-ல் ஆக்கிரமிப்பு தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, இப்ராஹிம் கலிஃபுல்லா ஆகியோர் அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர். இப்போது போலவே அப்போதும் கால வரம்பு நிர்ணயித்தனர்.

1997-ல் உச்ச நீதிமன்றம், நீர்நிலைகளை பொதுப் பயன்பாடு என்ற காரணத்துக்காக எடுப்பதும் தவறு என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது.

2005 ஜூனில் ஏரி பாதுகாப்பு தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கற்பகவிநாயகம், சி. நாகப்பன் ஆகியோர் மேற்கூறிய தீர்ப்பை தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டி நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மதிக்காத அதிகாரிகளை நீதித்துறையினரும், நீர்நிலைகளில் அரசு சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களை தங்கள் அலுவலகங்களாக ஏற்றுக்கொள்ளும் நீதித்துறையினரை அதிகாரிகளும் எப்படி பார்க்கிறார்கள் என்பதே மக்களிடம் எழுந்துள்ள கேள்வி.

நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த அரசும் குறிப்பாக, வருவாய்த்துறையினரும் ஆர்வம் காட்டுவதில்லை. தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தாததும் ஒருவகையில் நீதிமன்ற அவமதிப்பே. எனவே, இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகளின் செயலை நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து, அவமதிப்பு வழக்காக ஏன் எடுத்துக்கொள்வதில்லை?

எத்தனை தீர்ப்பு வந்தாலும், எத்தனை சட்டம் போட்டாலும் நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்ற அதிகாரிகளின் மனப்போக்கு மாற வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு உறுப்பினர்களும் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டனர். இதற்கு அதிகாரம் அளிப்பதற்காகவே தற்போது சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஏழைகள் என்பதற்காக ஏரி, குளங்களை ஆக்கிரமித்தவர்களை விட்டுவிட முடியாது. என்றாலும், அவர்களுக்கு உரிய விலையில் உறைவிட வசதிகளை அரசு அளிக்கத் தவறுவதே, பிரச்னைக்கு அடிப்படைக் காரணம். அதேவேளையில், நீர்நிலைகளைப் பொதுப் பயன்பாட்டுக்காக அரசுத் துறைகள் ஆக்கிரமிப்பதை எந்த விதத்திலும் அனுமதிக்கவும் கூடாது.

விவசாயம், நீர்ப்பாசனம் என்பதோடு நிற்காமல் நிலத்தடி நீர் வளப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சமநிலை ஆகியவையும் இந்த நீர்நிலைகளைச் சார்ந்தே இருக்கிறது. ஏரி, குளங்களை நமது முன்னோர் உருவாக்கியது ஏன் என்பதை அனைவருக்கும் குறிப்பாக, நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு. அரசு கட்டடமோ, தனியார் குடியிருப்போ எதுவாக இருந்தாலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் புதிய ஆக்கிரமிப்புகள் வராமல் தடுப்பதும்தான் தற்போதைய அவசர, அவசியத் தேவை.

————————————————————————————–

ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் மவுனம்: ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்துமா அரசு?


சென்னை: ஏரி, குளம், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற காலக்கெடு விதித்துள்ள ஐகோர்ட் உத்தரவை அரசு செயல்படுத்த வேண்டும் என்பது ஒட்டு மொத்த பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் குடிநீர் ஆதாரமாக 300 ஏரிகள் உள்ளன. இதில், சென்னை நகரில் 30 ஏரிகளும், புறநகரில் 270 ஏரிகளும் உள்ளன. ஒவ்வொரு ஏரியும் குறைந்தபட்சம் நுõறு ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவு கொண்டது.

ஏரிகள் அனைத்தும் “மராமத்து’ முறையில் அந்தந்த கிராம மக்களே துõர்வாரி, கரையை பலப்படுத்தி வந்தனர். இப்பணி பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. 30 ஆண்டுகளில் சென்னை மற்றும் புறநகர் பகுதி அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்தது. குடியிருப்புகளும் அதிகரிக்க ஆரம்பித்தன. இதன் விளைவாக விவசாய நிலங்கள் அனைத்தும் பட்டா நிலங்களாக மாற்றப்பட் டன.

ஏரியை சுற்றி குடியிருப்புகள் வளர்ந்ததால் ஒவ்வொரு ஆண்டு பருவ மழைக்கும் ஏரி நிரம்பி உபரி நீர் கலங்கலில் வெளியேறி போக்கு கால்வாய் வழியாக கடலில் கலந்தது.

ஏரிகள், நீர் இல்லாமல் தரிசு நிலம் போல காட்சியளித்தன. அரசும் சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள சில ஏரி நிலங்களின் ஒரு பகுதியை வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் என பல தரப்பட்ட துறைக்கு பிரித்து கொடுத்தது. ஏரியின் பரப்பளவு மூன்றில் ஒரு பங்காக சுருங்கியது. இதைப் பார்த்த அரசியல்வாதிகள், உள்ளூர் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக விரோத கும்பல்களுக்கு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வழி கிடைத்தது.

சென்னை புறநகரில் உள்ள பல ஏரிகளின் ஒரு பக்க கரையை உடைத்து ஆக்கிரமிக்கப்பட்டது. அந்த இடங்கள் கூறு போட்டு அப்பாவி பொதுமக்களுக்கு சொற்ப விலைக்கு விற்கப்பட்டன. ஆக்கிரமித்த இடங்களுக்கு பல துறையினர் “மாமுல்’ பெற்று சாலை வசதி, மின் இணைப்பு மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்டவை வழங்கி ஆக்கிரமிப்பு இடங்களில் குடியிருக்க அனுமதியும் அளிக்கப் பட்டது.

இதனால், சென்னை மற்றும் புறநகரில் நீர்நிலைகளுக்கு ஆதாரமாக உள்ள பல நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் ஏரிகள் காணாமல் போயின. மிகப்பெரிய ஏரிகளாக விளங்கிய வேளச்சேரி ஏரி, பள்ளிக்கரணை ஏரி, போரூர் ஏரி உள்ளிட்ட பல ஏரிகள் பல மடங்கு சுருங்கின.அதேபோல, ஒவ்வொரு ஏரிக் கும் கலங்கல் இருந்தது. அந்த கலங்கல் வழியாக வெளியேறும் உபரிநீர் கடலில் கலக்க நுõறடிக்கும் மேற்பட்ட அகலம் கொண்ட போக்கு கால்வாய் இருந்தது.

சில ஆண்டுகளாக மழை பொய்த் ததால் பெரும்பாலான வாய்க் கால்கள் இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு ஆக்கிரமித்து விட்டனர். நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு ஐகோர்ட் காலக்கெடு விடுத்துள் ளது. ஐகோர்ட்டின் உத்தரவை தமிழக அரசு மதித்து ஏரிகள், போக்கு கால் வாய் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாவண்ணம் ஏரி யை கம்பிவேலி போட்டு பாதுகாக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. இதனால், குடிநீர் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

ஆக்கிரமிப்புகள் அகற்ற கெடு:

ஏரியை காப்பாற்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுநல அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

* நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வரும் நவம்பர் மாதத்திற்குள் ஒரு திட்டம் இறுதி செய்யப்பட வேண்டும்.

* ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்க அரசு பரிசீலிக்கலாம்.

* நீர் நிலை ஆக்கிரமிப்புகளை எதிர்த்து தொடரப்படும் வழக்குகளை சிவில் கோர்ட் அனுமதிக்கக்கூடாது.

* பாதிக்கப்பட்டவர் ஐகோர்ட் டை அணுகலாம்.

* நீர் நிலைகளை ஆக்கிரமித்து நிலங்களை விற்றவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* எதிர்காலத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்தால் நோட்டீஸ் வழங்காமலே ஆக்கிரமிப்புகளை அகற்றலாம்.

* ஆக்கிரமிப்புகள் அகற்றியது குறித்து வரும் 2008ம் ஆண்டு ஜூன் 15ம் தேதிக்குள் பொதுப்பணித்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Posted in activism, Activists, Adambakkam, Agriculture, Assets, Boundary, Buildings, Civic, Drink, Drinking, encroachers, encroachment, encroachments, Enforcement, Environment, Evict, Eviction, Farmers, Govt, Ground water, groundwater, harvest, harvesting, Irrigation, KANCHEEPURAM, Lakes, Land, Law, Order, Original, Pallavaram, peasants, Peerkankaranai, penal, Private, Protection, Public, Rain, Rajakilpakkam, resettlement, rice, River, structures, Tambaram, Tanks, Temple, Ullagaram, Water, waterbodies, waterbody | Leave a Comment »

Police Force & Human Rights: Gujarat & Tamil Nadu’s Law Enforcement – Kalki Editorial

Posted by Snapjudge மேல் மே 9, 2007

குஜராத்: சாம்பலான மனித நேயம்

தமிழகக் காவல்துறை மண்டல ஐ.எ. ஒருவர், ஒரு யுக்தியைக் கையாண்டிருக்கிறார். பல்வேறு காவல் நிலையங்களுக்கு, அப்பகுதியைச் சாராத காவல் துறை ஊழியர்களை மாறுவேடத்தில் அனுப்பியிருக்கிறார். அந்த ஊழியர்கள் சில புகார்களை (புனைந்துதான்) அந் நிலையங்களில் பதிவு செய்ய முற்பட்டிருக்கிறார்கள். மூன்று நாட்களில் திரும்பி வந்த அவர்கள், தங்கள் கண்ணீர்க் கதையைத்தான் விவரிக்க வேண்டியிருந்தது! புகார் தர முயன்ற சிலருக்கு வசவு, வேறு பலருக்கு அடி உதை! கடைசியில், பரிசோதனைக்கு உட்பட்ட அத்தனை போலீஸ்காரர்களும் ஆடிப் போய், தாங்கள் இனி ஒருபோதும் அதிகார துஷ்பிரயோகம் செய்வதில்லை என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!

– இந்த விவரத்தை தமிழக டி.ஜி.பி. முகர்ஜி, தேசிய மனித உரிமைக் கழகம் நடத்திய ஒரு முக்கிய பயிற்சித் திட்டத்தின்போது பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

காக்கி உடுப்பணிந்து, கையில் லத்திக்கட்டையைத் தூக்கிவிட்டாலே ஆணவமும் முரட்டுத்தனமும் வந்துவிடுகின்றன என்பதை நாம் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறோம். இந் நிலையில், காவல் துறையினருடைய தோரணையில் மாற்றங்களைப் புகுத்தத் தமிழகக் காவல்துறை உயர் அதிகாரிகள் எடுத்துவரும் முயற்சிகளையும் பரிசோதனைகளையும் நாம் மனமார வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

இதற்கு நேர்மாறான போக்கு குஜராத்தில் காணப்படுகிறது!

ஷொராபுத்தீன் ஷேக் மற்றும் அவர் மனைவி கௌசர் பீ ஆகியோர் காவல் துறையினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். கௌசர் கொல்லப்பட்டதுடன், அவர் உடல் எரிக்கப்பட்டு, சாம்பல் வயல்வெளிகளில் தூவப்பட்டிருக்கிறது! இத்தகைய அசுரத்தனமான செயல்களைச் செய்ததோடல்லாமல், கொலை செய்யப்பட்டவர்கள் தீவிரவாதிகள் என்றும் அவர்கள் என்கவுன்டரில் இறந்து போயினர் என்றும் கதை கட்டியிருக்கிறது போலீஸ்! அதனால் கிடைத்த மீடியா கவனத்தாலும் விளம்பரத்தாலும் மக்கள் மத்தியில் “ஹீரோ’க்களாக இந்தப் போலீஸார் சித்தரிக்கப்பட்டும் இருக்கின்றனர்.

இந் நிலையில்தான், மாண்டுபோன ஷொராபுத்தீன் ஷேக்குடைய சகோதரர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். வழக்கு மீண்டும் திறக்கப்பட்டு, நம்ப முடியாத உண்மைகள் வெளிவந்திருக்கின்றன!

குஜராத் சம்பவம் வெறும் அதிகார துஷ்பிரயோகம் அல்ல; அது திட்டமிட்ட கொலை என்பது தெரிய வந்துள்ளது. சிறுபான்மை இனத்தவர் பேரில் அம் மாநிலக் காவல்துறை காட்டிவரும் ஆழ்ந்த துவேஷத்தின் வெளிப்பாடாக நடந்த இச் சம்பவம் குறித்து இப்போது சி.பி.ஐ விசாரணை கோரப்பட்டு வருகிறது.

இத்தகைய துவேஷமும், சக உயிர்களைத் துச்சமாக எண்ணும் குரூரமும், ஆட்சியாளர்களின் மௌன அங்கீகாரமின்றி வளர்வதும் வெளிப்படுவதும் சாத்தியமில்லை.

பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மத துவேஷம் காரணமாக நிகழ்ந்த பல கொடூரக் குற்றங்களைக் கண்டு நாடே நடுங்கியது.

இன்று அதே வகையான குற்றங்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் காவல்துறையினரின் பங்கேற்பு அல்லது ஆதரவுடன் விமரிசையாக நடக்கின்றன.

நரேந்திர மோடி ஆட்சி செய்யும் குஜராத் பொருளாதார ரீதியில் பாய்ந்து முன்னேறியிருக்கலாம்; ஆனால், மனித நேய அடிப்படையில் பார்த்தால் சுடுகாடாகத்தான் இருக்கிறது. மோடி அரசு, சி.பி.ஐ. விசாரணை வேண்டாம் என்று வாதாடுவது, “அப்பன் குதிருக்குள் இல்லை’ என்று சொல்வதுபோல் இருக்கிறது.

இந்த நிலை மாற வேண்டுமானால், பாரதிய ஜனதா கட்சி தனது தீவிர ஹிந்து அடிப்படைவாதத்தைக் கைவிட வேண்டும். பிற மத துவேஷத்தை வளர்க்கிற பஜ்ரங் தள், வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளிடமிருந்து விடுபட்டு, சுதந்திர அரசியல் இயக்கமாகி, சமதர்ம சமுதாயம் என்ற உயர் இலக்கை நோக்கி பயணம் செய்ய வேண்டும்.

இல்லாவிடில், அக் கட்சி மெள்ள அழிவதுடன் “”வேற்றுமையில் ஒற்றுமை” என்னும் இந்தியாவின் ஜீவ கொள்கையின் மீது ரணகாயங்களையும் ஆறாத வடுக்களையும் விட்டுச் செல்லும்.

———————————————————————————————

மனித உரிமைக் கல்வியின் அவசியம்…?

என். சுரேஷ்குமார்

இந்தியாவில் மனித உரிமைக் கல்வியை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்க மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை கடந்த ஆண்டு ஒரு குழுவை அமைத்தது.

அக்குழுவினர் தற்போது மனித உரிமை கல்விக்கான கல்லூரி, பள்ளிகளுக்கான மாதிரி பாடத் திட்டம், அந்த பாடத்தை ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை ஆகியவற்றை வெளியிட்டு, மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை தீர்மானித்திருக்கிறது.

வளர்ந்து வரும் எந்தச் சமுதாயத்திலும் மனித உரிமை மீறல் என்பது எதிர்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பிரச்னை. மனித உரிமை மதிக்கப்படும்போதுதான் எந்தவொரு சமுதாயமும் முழுமையான நாகரிகத்தை எட்டியிருக்கிறது என்று சொல்ல முடியும். இந்த வகையில் மனித இனம் இன்னும் கடக்க வேண்டிய தடைகள், செய்ய வேண்டிய மாற்றங்கள், ஏராளம், ஏராளம். மனித உரிமை மீறலைத் தடுப்பது அதன் முக்கியமான முதல் கட்டம்!

மகாராஷ்டிர மாநிலம், பண்டாரா மாவட்டத்தில் உள்ள மிகச் சிறிய கிராமம் கயர்லாஞ்சி. இந்த கிராமத்தில் பய்யாலால் போட்மாங்கே என்ற விவசாயியின் குடும்பத்தின் மீது அக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க ஜாதியினருக்கு ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியினால் பய்யாலாலின் மனைவி சுரேகா, மகள் பிரியங்காவை ஊருக்கு நடுவில் பய்யாலாலின் மகன்கள் ரோஷன் மற்றும் சுதிரைக் கொண்டு மானபங்கம் செய்ய வலியுறுத்தியதும் அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளாததால் இருவரையும் படுகொலை செய்ததோடு சுரேகாவையும், பிரியங்காவையும் கிராமத்து ஆண்களால் மானபங்கம் செய்ததோடு கொன்றும் வீசினர்.

2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இந்தப் படுகொலை மிகப்பெரிய மனித உரிமை மீறல் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நிகழ்ச்சி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? எத்தனை பேருக்கு ஞாபகமிருக்கிறது என்று கேட்டால் – ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.

இந்த அறியாமைக்குக் காரணம் என்ன என்று பார்க்கும்போது ஒன்று – மனித உரிமை மீறல் குறித்த கல்வியறிவு இல்லாதது. இரண்டாவது – இம்மாதிரியான செய்திகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்காததும், சுட்டிக்காட்டத் தவறியதுமே.

மனித உரிமை குறித்த கல்வி ஒவ்வொரு மனிதனுக்கும் மிகமிக இன்றியமையாதது. இதன்மூலம் மட்டுமே சுதந்திரம், ஜனநாயகம் காக்கப்படும்.

மனித உரிமைக் கல்வியை ஊக்குவிக்க யுனெஸ்கோ 1974-ம் ஆண்டு உலகநாடுகள் அனைத்துக்கும் பரிந்துரை செய்தது. இது தொடர்பாக, மனித உரிமைகளைப் பயிற்றுவிப்பதற்கான முதலாவது சர்வதேச மாநாடு வியன்னாவில் 1979-ம் ஆண்டு நடைபெற்றது.

அந்த மாநாட்டில் மனித உரிமைக் கல்வி குறித்தும் அதைப் பயிற்றுவிப்பது குறித்தும், மனித உரிமைக் கல்வி குறித்து தனி நபர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இரண்டாவது மாநாடு 1987-ம் ஆண்டு மால்டாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மனித உரிமைக் கல்வி மற்றும் கற்பித்தலை பொது நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் விரிவான பங்கேற்புடன் உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தப்பட்டது.

மூன்றாவது மாநாடு 1993 மார்ச் மாதம் கனடாவில் உள்ள மாண்ட்ரியல் நகரில் நடைபெற்றது. இந்த மாநாடு ஜனநாயகத்திற்கான கல்வி என்பது, மனித உரிமைகள் கல்வியின் ஒருங்கிணைந்த பகுதி என்று அறிவித்தது. மேலும், மனித உரிமைக் கல்வி, ஜனநாயகம் மற்றும் சமூக நீதியை மெய்யாக்க ஓர் அடிப்படை தேவை என்பதையும் இம்மாநாடு வலியுறுத்தியது.

மனித உரிமைகள் கல்வியின் அவசியம் 1993-ம் ஆண்டு 171 நாடுகள் பங்கேற்ற மனித உரிமைகளுக்கான உலக மாநாட்டில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த மாநாடு மனித உரிமைகள் மீதான மரியாதையையும் அது ஒரு மெய்யான ஜனநாயகத்தின் பிரிக்கமுடியாத அங்கம் என்பதையும் ஆதரித்தது. இதைத்தொடர்ந்து ஐநா சபை மனித உரிமைகள் கல்விக்கான தீர்மானத்தை 1994-ம் ஆண்டு கொண்டுவந்தது. இந்தத் திட்ட அமல் மற்றும் ஒருங்கிணைப்பு பொறுப்பை ஐநா மனித உரிமைகளுக்கான ஹைகமிஷனிடம் ஒப்படைத்தது.

மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான முழுமையான கல்வியை அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கச் செய்வது யுனெஸ்கோவின் நீண்டநாள் நோக்கமாகும். முறையான கல்வித் திட்டத்துடன், பள்ளிசாரா வயது வந்தோர் கல்வித் திட்டத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் யுனெஸ்கோ வலியுறுத்தியது.

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகப் பண்பாட்டை கட்டமைக்க கல்வியாளர்கள், ஊடகங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையாலேயே முடியும்.

மனித உரிமைகள் கல்விக்கான திட்டத்தை 1995-ம் ஆண்டுவரை 125 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in abuse, BJP, deaths, Editorial, Enforcement, Govt, Gujarat, Hindu, Hinduism, HR, Human Rights, Influence, Kalki, Law, Lockup, Modi, Murder, Order, Police, Police Station, Power, RSS, Tamil Nadu, TN | Leave a Comment »

No Smoking – Healthcare advisory & Law

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007

புகைக்கப் புகைக்க…

உலகில் ஆண்டுக்கு 50 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோய்களுக்குப் பலியாகின்றனர். புகை பிடிப்பதால் உடலில் ஏறக்குறைய அனைத்துப் பகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இந்த நிலையில் “நாட்டில் 40 சதவீத சுகாதாரப் பிரச்சினைகள் புகையிலை மூலமே ஏற்படுகின்றன. அதனால் புகையிலை தடுப்புச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தவேண்டியது அவசியமாகும்’ என்று சுகாதார அமைச்சர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதற்காக தனி ஆணையம் ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பொது இடங்களில் புகை பிடிப்பது சட்டப்படி குற்றம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் பஸ் நிறுத்தங்கள், உணவுக் கூடங்கள், திரையரங்குகள் ஆகியவற்றில் புகை பிடிப்பது சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. இவ்வாறு புகை பிடிப்பது அவர்களுக்கு மட்டுமல்ல, அருகில் இருப்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், மூச்சுத் திணறல் ஆகியன புகையிலை காரணமாக ஏற்படும் முக்கிய நோய்கள். இதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று, வடகிழக்கு மாநிலங்களில் புகையிலைப் பொருள்கள் பெருமளவு பயன்படுத்தப்படுவதால் புற்று நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

களைப்பைப் போக்கி உற்சாகம் ஏற்படுத்துவதால் புகை பிடிப்பதாகப் பலரும் கூறுகின்றனர். ஆனால் அறிவியல் ரீதியில் இது நிரூபிக்கப்படவில்லை.

புகைப் பழக்கத்துக்கு உலகில் சுமார் 130 கோடி பேர் அடிமையாகி உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதுவும் மாணவரிடையே இது பரவலாக வளர்ந்து வருவது மேலும் கவலை அளிப்பதாக உள்ளது. கல்வி நிலையங்களின் வாயில்களிலும், பஸ் நிறுத்தங்களிலும் இவை தாராளமாகக் கிடைப்பதால், கிடைக்கும் நேரத்தில் புகைப்பது அவர்களுக்கு எளிதாகி விட்டது.

இது போதாதென்று தொலைக்காட்சிகளில் புகை பிடிப்பது தொடர்பான விளம்பரங்கள் மறைமுகமாக இடம்பெறுகின்றன. அதுவும் பிரபலங்கள் மூலம் அவை விளம்பரப்படுத்தப்படுவதால் இளைஞர்களை அது எளிதில் தொற்றிக் கொள்கிறது. இத்தகைய விளம்பரங்களைத் தடுக்குமாறு செய்தி, ஒலிபரப்பு அமைச்சகத்துக்குப் பல முறை கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் கூறியுள்ளது மக்கள் ஆரோக்கியத்தில் சம்பந்தப்பட்ட துறைக்கு எவ்வளவு அக்கறை உள்ளது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. புகையிலை தொழில் நிறுவனங்கள் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் வருமானம் வருவதால் இவ்வாறு கண்டும் காணாததுபோல் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்குச் சிகிச்சை அளிக்க கோடிக்கணக்கில் செலவிடவேண்டியுள்ளது என்பதை சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இத்துடன் குட்கா போன்ற புகையிலைப் பொருள்களும் பெருமளவு புழக்கத்தில் உள்ளன. இவற்றின் உறைகள் மீது மண்டை ஓடு, எலும்புக்கூடு எச்சரிக்கையுடன் படங்களை வெளியிட்டு நுகர்வோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனால், “குடி குடியைக் கெடுக்கும், குழந்தைகளைப் பட்டினி போடும்’ என்ற வாசகங்கள் மதுக்கடைகளின் முன்னே உள்ளன. இருந்தும் மது விற்பனை மாதத்துக்கு மாதம் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. சிகரெட் பிடிப்பது உடலுக்குத் தீங்கானது என்ற வாசகம் பாக்கெட்டுகளில் கண்ணுக்குத் தெரியாத அளவில் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் அதன் காரணமாக விற்பனை குறைந்ததாகத் தெரியவில்லை. எனவே, உற்பத்தி, விற்பனை நிலையிலேயே அவற்றைக் கட்டுப்படுத்தினாலன்றி எதிர்பார்க்கும் பலனை அடைய முடியாது.

Posted in Anbumani, cancer, Cigar, Cigarette, Enforcement, Freedom, Govt, Healthcare, Law, Passive, pipe, Public, Rajini, Rajni, smoking | Leave a Comment »

Samuels accused of liaison with bookmaker – Underworld rivalry in cricket betting

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007

தாவூத் இப்ராகிம் கூட்டாளியிடம் சூதாட்டம்: சாமுவேல்ஸ் லஞ்சம் வாங்கினாரா?

நாக்பூர், பிப்.8-

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே நாக்பூரில் கடந்த மாதம் 21-ந் தேதி நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்று இருக்கலாம் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் சாமுவேல்சிடம் நாக்பூர் போட்டிக்கு முந்தைய இரவில் தாவூத் இப்ராகிம் கூட்டாளியும், சூதாட்டக்காரருமான முகேஷ் கொச்சார் டெலிபோனில் பேசியது அம்பலமாகி உள்ளது.

முகேஷ் கொச்சார்- சாமுவேல்ஸ் இடையே நடந்த டெலிபோன் உரையாடலை நாக்பூர் போலீசார் டேப் செய்து உள்ளனர். பேட்டிங் வரிசை, பந்து வீச்சு வரிசை உள்பட பல்வேறு தகவல்களை சூதாட்டக்காரரிடம் சாமுவேல்ஸ் தெரிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக நாக்பூர் போலீஸ் உதவி கமிஷனர் அமிதேஷ்குமார் கூறியதாவது:-

அணியில் இடம் பெறும் வீரர்கள், யார் யார் பந்து வீசுவார்கள் உள்பட பல விவரங்களை சாமுவேல்ஸ் சூதாட்டக்காரர் முகேஷ் கொச்சரிடம் பேசியதை டேப் செய்துள்ளோம். இது மேட்ச் பிக்சிங் (வெற்றி-தோல்வி நிர்ணயம்) அல்ல. அணியின் நம்பிக்கைக்குரிய சில விஷயங்கள் பரிமாறப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சூதாட்டக்காரரிடம் சாமுவேல்ஸ் பணம் வாங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. துணை போலீஸ் கமிஷனர் கூறும் போது இருவருக்கும் இடையே பணம் ஒப்பந்தம் நடந்ததா என்ற விவரம் இல்லை என்றார்.

சாமுவேல்ஸ் சூதாட்டக்காரருடன் தொடர்பு வைத்திருப்பது தொடர்பான அறிக்கை தங்களுக்கு வந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.), சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஆகியவை இன்று தெரிவித்தன.

இது தொடர்பாக சாமுவேல் சிடம் கேட்டபோது முகேஷ் கொச்சாரை எனக்கு தெரியும். ஆனால் அவர் சூதாட்டக்காரர் என்பது தெரியாது என்றார்.

இந்த தகவல் அறிந்ததும் சாமுவேல்ஸ் தாயார் லூனன் அதிர்ச்சி அடைந்துள்ளார். தன்னால் இதை நம்பமுடியவில்லை என்று கூறியுள்ளார்.

இதே போல இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சந்தீப்பட்டீல், சாந்து போர்டே ஆகியோரும் அதிர்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.

சூதாட்டக்காரரிடம் தொடர்பு கொண்டதன் மூலம் சாமுவேல்ஸ் ஐ.சி.சி. நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார். விரைவில் அவரிடம் ஐ.சி.சி. விசாரணை நடத்தும். இதற் காக அவருக்கு சில போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்படலாம்.

நாக்பூர் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 3 விக் கெட்டுக்கு 338 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுக்கு 324 ரன் எடுத்தது. இதனால் 14 ரன்னில் வெஸ்ட் இண்டீஸ் தோற்றது.

இந்த ஆட்டத்தில் சாமுவேல்ஸ் 10 ஓவர் வீசி 53 ரன் விட்டுக்கொடுத்தார். விக்கெட் கைப்பற்றவில்லை. பேட்டிங் கில் 60 பந்துகளில் 40 ரன் எடுத்தார்.

கிரிக்கெட் சூதாட்டத்துக்கு ஆதாரம் கிடைக்கவில்லை: விசாரணையை கைவிட முடிவு

மும்பை, பிப்.11-

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே நாக்பூரில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ் இந்திய கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர் முகேஷ் கோச்சாருடன் டெலிபோனில் ரகசியமாக பேசியதால் சூதாட் டம் நடந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இதுபற்றி நாக்பூர் போலீசில் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் இருவரும் பேசிய டெலிபோன் உரையாடலில் சூதாட்டம் நடந்ததற்கான எந்த தகவலும் இல்லை. விளையாட்டை பற்றியும், வீரர்களை பற்றியும் விவாதித்த வார்த்தைகள் தான் இடம் பெற்று உள்ளன. இதை வைத்து சூதாட்டம் நடந்ததாக தீர்மானிக்க முடியவில்லை.

பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி னார்கள். ஆனாலும் எந்தவித ஆதாரமும் சிக்கவில்லை. யாரும் இது சம்பந்தமாக புகாரும் கொடுக்கவில்லை. எனவே மேற்கொண்டு விசார ணையை தொடராமல் இந்த பிரச்சினையை கைவிட போலீசார் முடிவு செய்துள்ள னர்.

இந்த பிரச்சினை குறித்து ஏற்கனவே கிரிக்கெட் சங்கத் திடம் தெரிவித்து விட்டனர். எனவே அவர்களும் விசார ணையை தொடங்கி உள்ளனர். இதனால் போலீசார் விசா ரணை தேவை இல்லை என் றும் கருதுகிறார்கள்.

உலக கோப்பை போட்டி தொடங்க போகிற நேரத்தில் பிரச்சினையை கிளப்பினால் அது வேறு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலும், மராட்டிய போலீசார் மவுனம் காக்க முடிவு செய்துள்ளனர்.

கிரிக்கெட் சூதாட்டம்: ராபின்சிங்- சாமுவேல்ஸ் ரகசிய தொடர்பா?

சென்னை, பிப். 9-

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த 3 தொடரில் முதல் போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்று இப்போது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்ட ஏஜெண்டாக செயல் பட்டவர் சுரேஷ் கோச்சார். இவர் போட்டி நடப்பதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமு வேல்ஸ்சிடம் பலமுறை டெலிபோனில் பேசி உள்ளார்.

அப்போது மைதானங்கள் நிலைமை எந்தெந்த வீரர்கள் எந்த வரிசைப்படி இறங்குவார்கள். வெஸ்ட் இண்டீஸ் என்ன திட்டங்களை வைத்துள்ளது போன்ற விவரங்களை எல்லாம் கூறி இருக்கிறார். இதையடுத்து கிரிக்கெட் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சாமுவேல்ஸ் – முகேஷ் கோச்சார் இருவருக்கும் இடையே இடம் பெற்ற உரையாடலில் பல தடவை ராபின்சிங் என்ற பெயர் உச்சரிக்கப்பட்டுள்ளது. இது அவர்கள் குறிப்பிட்ட ராபின்சிங் யார்ப என்று தெரியவில்லை. ஆனால் தமிழக கிரிக்கெட் வீரர் ராபின்சிங்காக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இது பற்றி ராபின்சிங்கிடம் கேட்டபோது எனக்கும் சாமுவேல்ஸ்சுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சூதாட்டத்தில் எனக்கு பங்கும் இல்லை என்று கூறினார்.

கிïபா நாட்டில் புதிதாக கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பயிற்சியாளராக ராபின்சிங் நியமிக்கப்பட்டு இருந்தார். இதற்காக கிïபா சென்றிருந்த அவர் நேற்று தான் சென்னை திரும்பி இருக்கிறார்.

ஆனால் ராபின்சிங்குக்கும் சாமுவேல்ஸ்க்கும் ரகசிய தொடர்பு இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ராபின்சிங் சென்னையில் வசித்தாலும் அவர் வெஸ்ட் இண்டீசில் தான் பிறந்தார். இந்தியாவில் இருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்ற ஏராளமான குடும்பங்கள் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் வசிக்கின்றன.

அதில் ராபின்சிங் குடும்ப மும் ஒன்று. இடையில் அவர்கள் குடும்பம் சென்னை வந்து விட்டது. இப்போதும் ராபின்சிங்கின் உறவினர்கள், நண்பர்கள் அங்கு வசிக்கின்றனர்.

இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கும் ராபின்சிங்குக்கும் தொடர்பு இருக்கலாம். இதில் சாமு வேலுடன் அவர் ரகசிய தொடர்பு வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மராட்டிய போலீசார் சூதாட்டம் நடந்ததாப என்று தீவிர விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். அவர்கள் ராபின்சிங்கிடமும் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது உண்மை வெளிச் சத்துக்கு வரும்.

சூதாட்ட தரகரை சந்திக்க 4 நாட்கள் ஓட்டலில் காத்திருந்த சாமுவேல்ஸ்: போலீசார் தகவல்

நாக்பூர், பிப். 10-

நாக்பூரில் கடந்த மாதம் 21-ந்தேதி நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் சாமுவேல்ஸ் சூதாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாவூத் இப்ராகிம் கூட்டாளியும், சூதாட்ட தரகருமான முகேஷ் கோச்சர் போனில் தொடர்பு கொண்டு சாமுவேல்சிடம் பேசியதை போலீசார் டேப் செய்துள்ளனர்.

இதில் அவர் அணியின் நிலவரம் குறித்த பல்வேறு தகவல்களை பரிமாறி இருக்கிறார். சாமுவேல்ஸ் தங்கி இருந்த பிரைட் ஓட்டலில் 206 நம்பர் அறையில் தனது மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு 3 முறை பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.

சூதாட்டத்தில் ஈடுபட்ட சாமுவேல்ஸ் லஞ்சமாக பணம் வாங்கினாரா? என்ற ஆதாரம் எதுவும் சிக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நாக்பூர் போலீஸ் கமிஷனர் யாதவ் கூறும்போது, பண பரிவர்த்தனை நடந்ததா என்பது பற்றி விசாரிக்க நாங்கள் அமலாக்க பிரிவினருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் பண பரிவர்த்தனை நடந்து இருக்க வாய்ப்பு இல்லை என்று கூற முடியாது என்றார்.

இதற்கிடையே சாமுவேல்ஸ் பற்றி புதிய தகவல்களை போலீசார் வெளியிட்டு உள்ளனர். வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் அனைவரும் புறப்பட்ட நேரத்தில் அவர் செல்லவில்லை. சில நாட்கள் இந்தியாவில் தங்கி இருந்த பிறகே சென்று உள்ளார்.

மும்பையில் உள்ள ஹியத் ரிஜன்சி ஓட்டலில் சூதாட்ட தரகர் முகேஷ் கோச்சரை சந்திக்க 4 நாட்கள் காத்திருந்தார்.

ஆனால் அவரை சந்திக்க சூதாட்ட தரகர் வரவில்லை. சாமுவேல்ஸ் தான் போனில் பேசியதை போலீசார் டேப் செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக அவரை சந்திப்பதை முகேஷ் கோச்சர் தவிர்த்தார் என்று நாக்பூர் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு பிரிவு வருகிற 12-ந் தேதி நாக்பூர் வருகிறது. சாமுவேல்ஸ் தங்கி இருந்த ஓட்டலில் உள்ள ஊழியர்களிடம் விசாரணை செய்வார்கள்.

சாமுவேல்ஸ் பெட்டிங்கில் ஈடுபட்டாரா அல்லது மேட்ச் பிக்சிங்கில் (வெற்றி- தோல்வி நிர்ணயம்) ஈடுபட்டாரா என்பது தெரியவில்லை. இதுவரை அவருக்கு சாதகமாக இருந்த வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தற்போது விசாரணை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இது தொடர் பாக அந்த வாரியத்தின் செய்தி தொடர்பாளர் மோரிடெயல் கூறியதாவது:-

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வரைமுறைக்கு உட்பட்டு விசாரணை நடைபெறும். வீரர்கள் சங்கத்தில் அவர் உறுப்பினராக உள்ளார். இதனால் விசாரணை உள்மட்டத்தில்தான் இருக்கும். கிரிக்கெட் வாரிய கமிட்டிதான் இந்த விசாரணையை மேற்கொள்ளும் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு சாமுவேல்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கிரிக்கெட் சூதாட்டத்தில் கெய்லேவுக்கும் தொடர்பு: நேரில் விசாரிக்க ஐ.சி.சி.குழு வருகிறது

நாக்பூர் பிப். 9-

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதை அடுத்து சர்வதேச கிரிக்கெட் சங்கம் உஷார் அடைந்துள்ளது.

இது தொடர்பாக நாக்பூர் போலீசார் இந்திய கிரிக்கெட் சங்கத்துக்கு அனுப்பிய புகாரை அவர்கள் சரவதேச கிரிக்கெட் சங்கத்துக்கு அனுப்பினார்கள். எனவே இது தொடர்பான விசாரணையை சர்வதேச கிரிக்கெட் சங்கம் உடனடியாக தொடங்கி உள்ளது.

இது தொடர்பாக ஆலோ சனை நடத்த அவசர கூட்டம் இன்று துபாயில் நடக்கிறது. அதில் எந்த முறையில் விசாரணை நடத்தலாம் என்று முடிவு எடுக்க உள்ளனர்.

இந்தியா வந்து நேரில் விசாரிப்பதற்காக ஒரு குழு வையும் அமைக்க உள்ளனர். சூதாட்டம் நடத்திருப்பது தெரிந்தால் வீரர்களுக்கு உடனடியாக தடை விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

சூதாட்டத்தில் சாமுவேலுடன் தமிழக வீரர் ராபின் சிங்குக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இப்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்லே மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்திய சுற்றுப் பயணம் முடிந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அனைவரும் கடந்த 1-ந்தேதி நாடு திரும்பி விட்டார்கள். ஆனால் சாமுவேல்ஸ் 4-ந்தேதி வரை மும்பையிலேயே இருந்தார். அவருடன் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்லேவும் சாமு வேலுடன் மும்பையிலேயே தங்கி இருந்தார். எனவே அவருக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இருவரும் சூதாட்டக்காரர்கள் கொடுத்த விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

எனவே சாமுவேல்ஸ், கெய்லே இருவரும் மும்பையில் தங்கியிருந்த போது என்னென்ன நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர் என்பது பற்றி விரிவாக விசாரிக்க உள்ளனர். அதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் செல்லும் நேரடியாக வீரர்களிடம் விசாரிக்க திட்டமிட்டு உள்ளது.

கிரிக்கெட் சூதாட்டம் நடப்பது எப்படி?

கிரிக்கெட் என்ற மந்திரச் சொல்லுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கட்டுப்பட்டு, அதே சிந்தனையில் மயங்கி கிடக்கிறார்கள். இந்த விளையாட்டில் கோடிக்கணக்கில் பணம் புரளுகிறது.

மற்ற நாடுகளை விட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலானோர் கிரிக் கெட் பைத்தியமாகவே இருக்கி றார்கள். எனவே மற்ற விளை யாட்டுகளை விட கிரிக்கெட் போட்டிகளுக்கு பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது.

இதை பயன்படுத்திக் கொண்டு கிரிக்கெட் புரோக்கர்கள், கிரிக்கெட் வீரர்களின் ஒவ்வொரு அசைவுக்கும் மறைமுகமாக `பெட்டிங்’ வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.

இரண்டு அணிகளின் வெற்றி தோல்வியை முன்ன தாகவே முடிவு செய்வது `மேட்ச் பிக்சிங்’. இது நடை பெறுவது அபூர்வம். மிகப் பெரிய சூதாட்டக்காரர்கள் இரு அணி கேப்டன்களுடன் தொடர்பு கொண்டு பேசி முடிவு செய்தால் தான் இது சாத்தியமாகும். இந்த பிரச்சினையில் சிக்கியதால்தான் இந்திய அணி யின் முன்னாள் கேப்டன் அசாருதீன், தென்னாப் பிரிக்க அணி முன்னாள் கேப்டன் ஆன்சி குரோனே ஆகியோருக்கு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இந்திய அணியில் விளையாடிய அஜய் ஜடேஜா, மனோஜ் பிரபாகர் ஆகியோரும் அணியில் இருந்து நீக்கப்பட்டு பல்வேறு சிரமங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, தற்போது `மேட்ச் பிக்சிங்’ நடக்க வாய்ப்பில்லை.

ஆனால் `பெட்டிங்’ ஒவ்வொரு முக்கிய போட்டிக்கும் நடந்து வருகிறது. போட்டியின் அந்தரங்கம் சூதாட்டம் ஆக்கப்பட்டு அதற்காக பணம் கட்டப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு கூடுதல் பணம் கொடுக்கப்படுகிறது. இதிலும் கோடிக்கணக்கான பணம் புரளுகிறது. இதற்காக முக்கிய நகரங்கள் அனைத்திலும் `பெட்டிங் சென்டர்’கள் மறை முகமாக செயல்பட்டு வரு கின்றன. `கம்ப்ïட்டர்’ மூலம் இந்த சூதாட்டம் நடக்கிறது.

ஒரு கிரிக்கெட் அணியில் யார் யார் விளையாடுவார்கள் என்ற விவரம் கொண்ட 11 பேர் அணி போட்டி தொடங்குவதற்கு முன்புதான் அறிவிக்கப்படும். இது குறித்தும் `பெட்’ கட்டப்படுகிறது.

இது போல `டாஸ்’ ஜெயித்தால் எந்த அணி `பேட்டிங்’ செய்யும், எந்த அணி பந்து வீசும்ப யார் யார் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள்? யார் யார் அதிக `ரன்’ எடுப்பார்கள்? யார் அதிக விக்கெட் எடுப்பார்? என்பது போன்ற விவரங்களை சரியாக சொன்னால் பல மடங்கு பணம் கிடைக்கும். இந்த `பெட்டிங்’ சூதாட்டத்தில் மிகப்பெரிய பணக்காரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

சூதாட்டத்தில் பங்கேற்பவர்கள் சரியாக கணித்து சொல்லாவிட்டால் சூதாட்டம் நடத்துவோருக்கு கோடிக்கணக்கில் லாபம் கிடைக்கும். சூதாட்ட ஏஜண்டுகளும் லட்சக் கணக்கில் சம்பாதிக்க முடியும்.

எனவே `பெட்டிங்’ சூதாட்டம் நடத்துபவர்களும், அவர்களுடைய ஏஜெண்டுகளும் கிரிக்கெட் வீரர்களுடன் தொடர்பு கொண்டு அணியின் விïகம், களம் இறங்கும் வீரர்களின் வரிசை போன்றவற்றை தெரிந்து கொள்வார்கள்.

வீரர்களிடம் பேசி, தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளும்படி கூறுவார்கள். இதற்கு உடன்படும் வீரர்களுக்கு பெரும் தொகை சன்மானமாக கொடுக்கப்படும். எனவே, ஒருசில கிரிக்கெட் வீரர்கள் சூதாட்ட ஏஜெண்டுகளுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் மறைமுகமாக வைத்திருக்கும் தொடர்பு, அவர்களையும் அறியாமல் வெளியே கசிந்துவிடுகிறது. போன் மூலம் பேசுவது, முக்கிய இடங்களில் ஏஜெண்டுகளை சந்திப்பது போன்றவை ரகசிய ஏஜெண்டுகளுடன் வைத்தி ருக்கும் தொடர்பை வெளிச்சம்போட்டு காட்டி விடுகின்றன.

மேற்கிந்திய அணி வீரர் சாமுவேல்ஸ் நாக்பூரில் நடந்த போட்டியின் போது பிரபல கிரிக்கெட் சூதாட்டக்காரன் தாவூத் இப்ராகிம் கூட்டாளி முகேஷ் கொச்சார் என்ற சூதாட்ட புரோக்கரிடம் 4 முறை பேசி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சு, சாமுவேல்ஸ் எப்போது பந்து வீசுவார் என்பது பற்றியும் கூறி இருக்கிறார். நள்ளிரவிலும் ஏஜெண்டிடம் பேசியுள்ளார். இதன் மூலம் சாமுவேல்ஸ்க்கு பெருந்தொகை கிடைத் திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின்சிங்கும் சாமுவேல்ஸ் சுடன் டெலிபோனில் பேசியுள்ளார். இவருடைய பங்கு என்ன என்பதும் புதிராக உள்ளது. விசாரணை முடிவில் உண்மை தெரியவரும்.

சாமுவேல்ஸ்- ஏஜெண்டு டெலிபோன் உரையாடல்

வெஸ்ட்இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ்- முகேஷ் கோச்சார் இருவரும் டெலிபோனில் என்ன பேசினார்கள் என்பதில் சிலவரிகள் வெளியே கசிந்துள்ளன.

அதன் விவரம் வருமாறு:-

சாமுவேல்ஸ்:- பிட்ச்சை பார்த்து விட்டுதான் காலையில் பேட் செய்வதா? என்று முடிவு செய்வார்கள்.

முகேஷ்:- மாலையில் என்றால் நீங்கள் கடைசியில்தான் இறங்குவீர்களா?

சாமுவேல்ஸ்:- கடைசிக்கு கொஞ்சம் முந்தி இறங்குவேன்.

முகேஷ்:- யார் பேட் செய்வார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

சாமுவேல்ஸ்:- தெரியும்.

முகேஷ்:- யார்- யார்?

சாமுவேல்ஸ்:- டேவன் அவரைதான் நாளை ஆட அனுப்புவார்கள்.

முகேஷ்:- புது பேட்ஸ்மேனா? அல்லது பந்து வீச்சாளரா?

சாமுவேல்ஸ்:- இல்லை. அவர் ஆல் ரவுண்டர்.

முகேஷ்:- அவர் சிறப்பாக ஆடுவாரா?

சாமுவேல்ஸ்:- ஆமாம், அதற்காகத்தான் இறக்குகிறோம்.

முகேஷ்:- ஓகோ எனக்கு எல்லாம் புரிகிறது. கிறிஸ் பார்மில் இருக்கிறார்.

ராபின்சிங் பற்றி நாங்கள் பேச வில்லை: சூதாட்ட ஏஜெண்டு மறுப்பு

மும்பை, பிப். 9-

சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள ஏஜண்டு முகேஷ் கோச்சார் வெஸ்ட்இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ்யிடம் பேசியதை ஒத்துக் கொண்டுள்ளார். சாமுவேல்ஸ் எனது நீண்ட கால நண்பர் என்ற முறையில் அவரிடம் பேசினேன் என்று கூறியுள்ளார்.

இருவரும் ராபின்சிங் பற்றி பேசியதாகவும் தெரிய வந்துள்ளது. எனவே ராபின் சிங்குக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

ஆனால் முகேஷ் கோச்சார், “நாங்கள் இருவரும் ராபின்சிங் பெயரை உச்சரிக்கவில்லை” என்று கூறினார்.

நாக்பூர் போலீசார் இது குறித்து விரிவான விசாரணையை தொடங்கி உள்ளனர். இதுபற்றி போலீஸ் கமிஷனர் எஸ்.பி.எஸ். யாதவ் கூறும்போது, “இதுவரை நடந்த விசாரணையில் மேட்ச்பிக் சிங் நடந்ததை கண்டுபிடிக்கவில்லை. இந்த உரையாடல் மூலமாக சூதாட்டம் நடந்தததா? என்றும் தெரியவில்லை” என்றார்.

வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் லாராவிடம் இதுபற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

நான் இப்போது லண்டனில் இருக்கிறேன். எனவே முழு விவரமும் என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இதுபற்றி கேள்விபட்டதும் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் சங்கத்திடம் பேச முயன்றேன். முடியவில்லை. சாமுவேலிடமும் பேச முயற்சித்தேன். தொடர்பு கிடைக்கவில்லை. சாமுவேஸ்யிடம் பேசி முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.

சாமுவேலை பொறுத்தவரை எனக்கும் மற்ற வீரர்களுக்கும் மிகவும் உதவியாக இருந்தார். உலக கோப்பை போட்டிக்கு அவர் எங்களுக்கு தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாட்டில் இருந்து இந்திய சூதாட்ட காரர்களை இயக்கிய தாவூத் இப்ராகிம்

மும்பை, பிப். 9-

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே முதல் ஒரு நாள் போட்டியின் போது கிரிக்கெட் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. போட்டி நடப்பதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ்சும், கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர் முகேஷ் கோச்சார் ஆகியோரும் டெலிபோனில் ரகசியமாக பேசி உள்ளனர். எனவே சூதாட்டம் நடந்திருக்கலாம் என கருதி விசாரணை நடந்து வருகிறது.

புரோக்கர் முகேஷ் கோக்சாருக்கும் மும்பை குண்டு வெடிப்பு தாதாவான தாவூத் இப்ராகிமுக்கும், நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. அவன்தான் முகேஷ் கோச்சாரை இயக்கி உள்ளார்.

தாவூத் இப்ராகிம் வெளிநாட்டில் இருந்தாலும் அங்கிருந்தே இந்திய சூதாட்ட புரோக்கர்களை இயக்கி உள்ளான்.

கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே 2005-ம் ஆண்டு ஷோபன் மேத்தா என்பவரை கைது செய்தனர். அவர் தாவூத் இப்ராகிம் கிரிக்கெட் சூதாட்டகாரர்களை எப்படி இயக்குகிறான் என்ற விவரங்களை விரிவாக கூறி இருந்தான்.

வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாÖமுவேல்ஸ்சுக்கும், முகேஷ் கோச்சாருக்கும் தொடர்பு இருந்த விவரத்தையும் அப்போதே ஷோபன் மேத்தா மும்பை போலீசில் கூறி இருந்தார்.

தாவூத் இப்ராகிம்- ஷோபன் மேத்தா இருவரும் முன்பு சூதாட்ட தொழிலில் எதிரெதிர் திசையில் இருந்தனர். 1999 சார்ஜா கோப்பை போட்டி நடந்தபோது ஷோபன் மேத்தா சூழ்ச்சியால் தாவூத் இப்ராகிம் ரூ.17 கோடியை சூதாட்டத்தில் இழந்தான்.

எனவே தாவூத் இப்ராகிம் ஷோபன் மேத்தா இந்தியாவில் உள்ள சூதாட்ட புரோக்கர்கள் அனைவரையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான். இவர்களை அனைவரையும் நிர்வாகிப்பதற்காக ஷரத் ஷெட்டி என்பவனை நியமித்தான்.

முகேஷ் கோச்சாரும் தாவூத்தின் கீழ் இயங்கும் புரோக்கர்களில் ஒருவர் ஆனார். கிரிக்கெட் சூதாட்டத்தின் போது ஒவ்வொரு `பெட்’டுக்கும் தகுந்த மாதிரி புள்ளிகளை நிர்ணயம் செய்வது உண்டு. அதை தாவூத் இப்ராகிம்தான் வெளிநாட்டில் இருந்து நிர்ணயம் செய்வான். அதன் பின்னர் இணைய தளம் மூலம் சூதாட்ட பரிமாற்றங்கள் நடைபெறும்.

Posted in Abu Salem, Antiguay, Azhar, Azharuddin, Bahamas, Barbados, BCCI, betting, bookie, bookmaker, Chennai, Coach, Connections, Corruption, Cricket, Cuba, Dawood Ibrahim, Don, Enforcement, Gaekwad, Gamble, gang, Gavaskar, Hansie Cronje, ICC, India, Jadeja, Kapil Dev, kickbacks, Law, Madras, Manager, Manoj Prabhakar, Marlon Samuel, Match fixing, Mukesh Kocchar, Mumbai, Nagpur, ODI, One day, One Day International, Operations, Order, phone, Police, revenge, rivalry, Robin Singh, Samuels, Shobhan Mehta, Test Match, Trinidad & Tobago, Underworld, Wadekar, West Indies | Leave a Comment »