Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Interview with Director Sasi

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 29, 2009

நல்ல திரைப்படம் எடுப்பதற்கு மெளனம் போதும்!
இயக்குநர் சசி

சொல்லாமலே’, ‘ரோஜாக்கூட்டம்’, ‘டிஷ்யூம்’, ‘பூ’ ஆகிய வெவ்வேறு களங்களைக் கொண்ட நான்கு படங் களை இயக்கியவர், இயக்குநர் சசி. எதையும் புதிதாக, இலக்கியச் சாய லோடு சொல்லவேண்டும் என்கிற துடிப்புக் கொண்டவர்; எளிமை யானவர். ‘சொல்லாமலே’ படத் துக்கு பல்வேறு முனைகளிலிருந்து விதவிதமாகத் தாக்குதல்கள் வந்தபோதும் கொஞ்சம்கூடப் பதறாமல் பொறுப்பாகத் தன் பக்கத்து நியாயத்தை எடுத்துச் சொன்னவர்.

சமீபத்தில் வெளியான இவருடைய ‘பூ’ படம் இவருடைய அடுத்த பட த்தைப் பற்றிய எதிர்பார்ப்பைக் கூட் டியிருக்கிறது. ‘பூ’ எழுத்தாளர் ச. தமிழ்செல்வனின் ‘வெயிலோடு போய்’ சிறுகதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதோ அம்ருதாவுக்காக தமிழ்த் திரை யுலகிற்கு மகுடம் சூட்டிய சசியுடன் நேர்காணல்.

பாலு சத்யா: ச. தமிழ்ச்செல்வனின் ‘வெயிலோடு போய்’ சிறுகதையை முதலில் எப்போது படிச்சீங்க?

சசி: நான் கல்லூரி முடிச்சிட்டு ஒரு அக்ரிகல்ச்சுரல் கம்பெனில வேலை செஞ்சுக்கிட்டு இருந்தேன். வேலை காரணமாக நிறைய கிராமங்களுக்குப் போக வேண்டியிருந்தது. அப்போது ஒரு பயணத்தில் படிச்ச புத்தகம்தான் கி.ரா. தொகுத்திருந்த ‘கரிசல் காட்டு சிறுகதைகள்.’ அதுல முதல் கதை ‘வெயிலோடு போய்.’ அதைப் படிச்சவுடனே எனக்குள்ள ஒரு பெரிய பாதிப்பை அது ஏற்படுத்திச்சு. என் நண்பன் ஒருத்தன்கிட்ட அந்தப் புத்தகத்தைக் குடுத்து அந்தக் கதைய படிக்கச் சொன்னேன். அவன், ‘அந்தக் கதையைப் படிச்சிட்டு நேத்து பூரா அழுதேன்’னு மறுநாள் வந்து சொன்னான். எனக்கு ஆச்சரியமாவும் சந்தோஷமாவும் இருந்தது. ஏன்னா, முதல் நாள் அந்தக் கதையைப் படிச்சுட்டு ராத்திரி பூரா நான் அழுதுக்கிட்டு இருந்தேன். எனக்கு பாதிப்பை ஏற்படுத்திய ஒரு படைப்பு, அதே பாதிப்பை இன்னொருத்தருக்கும் ஏற்படுத்தும் போது, இதை எல்லா ருக்கும் கொண்டுபோய் சேர்க்க முடியுங்கற நம்பிக்கை ஏற்பட்டுச்சு. அப்போதே எனக்கு டைரக்டராகணும் என்கிற எண்ணம் இருந்ததால், இந்தக் கதையைத்தான் முதல்ல படமாக பண் ணணும்னு நினைச்சேன். கதைல வர்ற மாரியோட மனசு, என் டைரக்டர் கனவை நோக்கி இன்னும் தூண்டிச்சு.

பாலு சத்யா: தமிழ்ச்செல்வன் வணிகப் பத்திரிகைகளுக்குத் தன் படைப்பைத் தருவதற்கே யோசிப்பவர். அவர் எப்படி இந்தக் கதையைப் படமாக்க அனுமதி கொடுத்தார்?

சசி: இந்தக் கதையை படமா பண்ணணும்ங்கற எண்ணம் இருந்தாலும், அதுக்கான உரிமை எதையும் நான் வாங்கல. பதினஞ்சு வருஷமா என் மனசுக்குள்ளயே வச்சிருந்தேன். இதை யாரும் படமா பண்ண மாட்டாங்கங்கற நம்பிக்கைதான் காரணம். ஒரு பெண்ணோட கதையை படம் பண்ணணும்னு இங்க யாரும் அவ்வளவு சீக்கிரம் நினைக்கறதில்ல. ‘டிஷ்யூம்’ படத்துக்கு முதல்ல நான் பண்ணியிருந்த திரைக்கதை எனக்குப் பிடிக்கல. பதினேழு நாளுக்கு அப்புறம் படப்பிடிப்பை நிறுத்திட்டேன். ‘இதை வேற மாதிரி செய்யணும்’னு எனக்கே தோணிச்சு. ஒரு கட்டத்துல ‘டிஷ்யூமை’ தொடரலாமா, அல்லது வேற கதை எதையாவது புதுசா செய்யலாமான்னுகூட யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். அப்போதான் வெயிலோடு போய் கதையை பற்றி, மறுபடியும் ரொம்ப நாளைக்கப்புறம் யோசிச்சேன். கதையோட உரிமையை முதல்ல வாங்கிடணும்னு என் உதவியாளர் மூர்த்தியுடன் சென்று தமிழ்ச்செல்வனை சந்திச்சேன். விஷயத்தைச் சொன்னதும் ரொம்ப ஆச்சரியமா பாத்தார். ‘என்னங்க கண்டிப்பா வேணுமா?’ன்னு கேட்டார். ‘ஆமாங்க வேணும். என்னை இந்தக் கதை ரொம்ப பாதிச்சிடுச்சு’னு சொன்னேன். ‘சரி எடுத்துக்கோங்க’ன்னு சொல்லிட்டார். ‘சார்… இந்த உரிமை…’ன்னு கேட்டேன். ‘அதெல்லாம் ஒண்ணும் வேணாங்க. நீங்க படம் பண்ணுங்க’ன்னு ரொம்ப சாதாரணமா சொன்னார். அந்த நேரத்தில் என்னால என்ன முடிந்ததோ அந்தத் தொகையை, ‘ரொம்ப சின்னத் தொகைதான் சார். என்னோட திருப்திக்காக நீங்க வாங்கித்தான் ஆகணும்’னு சொல்லி முன் பணமாகக் குடுத்து, அந்தக் கதையை வாங்கினேன்.

பாலு சத்யா: மலையாளத்தில் எழுத்தாளர் தகழியோட மூணு சிறுகதைகளைத்தான் அடூர் கோபாலகிருஷ்ணன் ‘நாலு பொண்ணுகள்’ படமா பண்ணியிருந்தார். ஏற்கெனவே, சத்யஜித்ரேவும் சிறுகதைகளைத் தழுவி படம் பண்ணியிருக்கிறார். ‘பூ’ படத்துக்கு, இந்த மாதிரி ஏதாவது படங்கள் தூண்டுதலாக இருந்ததா?

சசி: எனக்கு ‘மதிலுகள்’ தான் பெரிய தூண்டுதல். மத்த படங்களைவிட அதுலதான் அடூர் கோபால கிருஷ்ணனோட கொஞ்சம் வேகமான முகம் இருக்கும். அதோட அதுக்குள்ள ஒரு காதல் இருக்கும். மறக்கவே முடியாத ஒரு காதல். ரெண்டு பேருமே பார்த்துக்காத ஒரு காதல் கதை. கடைசியில ஒரு குச்சி மேல மேல போய்ட்டு வர்ற அந்த காட்சியை இன்னும் என்னால மறக்க முடியல.

பாலு சத்யா: ‘மதிலுகள்’ சிறுகதை இல்ல; அது ஒரு குறுநாவல்.

சசி: ஆமாம். புதுமைப்பித்தனோட ‘சிற்றன்னை’யை தழுவி மகேந்திரன் ‘உதிரிப்பூக்கள்’ எடுத்த மாதிரி. ஆனா, இன்னொருத்தர் இப்படி பண்ணியிருக்காங்க, நாமளும் அப்படிப் பண்ணுவோம்னு இல்ல; ‘பூ’ படத்துக்கான தூண்டுதல் முழுக்க முழுக்க ‘வெயிலோட போய்’ சிறுகதை என்னை பாதிச்சதில் இருந்து வந்தது என்பதுதான் உண்மை.

பாலு சத்யா: ஒரு நாவலை சினிமாவுக்கு ஏற்ற திரைக்கதையாக பண்ற தேகஷ்டமான விஷயம். கேரளாவுலயும் மேற்கு வங்காளத்துலயும் இந்த முயற்சியில வெற்றி பெற்றிருக்காங்க. ஆனாலும், அவற்றின் மேல விமர்சனங்களும் இருக்கு. ‘பதேர் பாஞ்சாலி’, ‘அபராஜிதா’வுல கூட விபூதி பூஷன் பந்தோபாத்யாவோட நாவலை முழுசா சத்யஜித்ரே கொண்டு வரலைங்கற மாதிரியான குறைகள் எல்லாம் இருக்கு. அப்படி இருக்கறப்போ, ஒரு சிறுகதையை திரைக்கதை பண்றது சாதாரண விஷயம் இல்ல. சிறுகதைல ஒரு சம்பவம், அதற்கான பின்புலம் மட்டும்தான் இருக்கும். நீங்க எப்ப ‘வெயிலோட போய்’ சிறுகதையை திரைக்கதையா வடிவமைச்சீங்க?

சசி: என்னைப் பொறுத்தவரைக்கும் படம் பண்றதுக்கு ஒரு சிறுகதை யேகூடத் தேவையில்ல. ‘வெயிலோட போய்’ சிறுகதை அஞ்சரைப் பக்கம் இருக்கு. ஒரு தூண்டுதல் கிடைக்கறதுக்கோ, அதுல ஒரு உயிர் இருக்குன்னு தெரிஞ்சிக்கறதுக்கோ அஞ்சரைப் பக்கம் தேவையில்ல. ரெண்டு பாத்திரங்களுக்கு இடையே இருக்கற மௌனம் போதும். அந்த மௌனத்துலருந்தேகூட கதையை எடுக்கலாம். அதை உணருகிற சக்தி, ஞானம் ஒரு படைப்பாளனுக்கு வேணும்; அவ்வளவுதான். ‘வெயிலோடு போய்’ சிறுகதையில ‘மாரி’ங்கற பாத்திரத்தைப் பற்றி, அதற்கான விவரணங்கள் மட்டும்தான் இருக்கும். அப்புறம் அவளது அம்மா மற்றும் அண்ணன்காரனோட உணர்வும் இருக்கும். எனக்கு மாரியோட உணர்வுகள்தான் வேணுங்கறப்போ அதுல சினிமாவுக்கு என்ன தடை இருக்குன்னு பார்த்தேன். மாரி, மாமன் மகனைக் காதலிக்கறா. சின்ன வயசுலருந்தே காதலிச்சுட்டு வர்றா. படம்னு வர்றப்போ ஒரு எதிர்மறை பாத்திரம், முக்கியப் பாத்திரம் வேணும் இல்லையா? அதுக்கு மாரியுடைய கனவையும், தங்கராஜ் அப்பாவோட கனவையும் வச்சுக்கிட்டேன். தங்கராஜோட அப்பா ஒரு மாட்டு வண்டிக்காரர். சுயமரியாதை உள்ள ஆளா, மரியாதையை எதிர்பார்க்கிற ஆளா காண்பிக்கப்பட்டுக்கிட்டே வந்து, மரியாதை பணத்தின் மூலமாத்தான் வருதுன்னு உணர்றாரு. ‘என் பையனை எஞ்சினியரிங் படிக்க வச்சிருக்கேன். அவன் சம்பாதிக்கிற பணத்தின் மூலமா எனக்கான மரியாதை கிடைக்கும்’ன்னு நினைக்கிறார். பையன் சொல்றான்: ‘நீங்க நினைக்கிற மாதிரி நான் கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் படிக்கல. மெக்கானிக்கல் எஞ்சினியரிங்தான் படிச்சிருக்கேன். எனக்கு சம்பளம் கம்மியாத்தான் கிடைக்கும்.’ உடனே அவர் உடைஞ்சு போறார். அவரோட கனவுக்கோட்டை தகர்ந்த பிறகு, அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வருது. அவரோட முதலாளி, தன் பையன் சரியில்லைங்கறதால இவரோட மகனை மருமகனா ஆக்கிக்க விரும்பறார்; தன்னோட சொத்தை காப்பாத்திக்கறதுக்கு. அப்போ பையனுக்கும் அவருக்கும் முரண்பாடு வருது. இப்படி நான் ஒவ்வொரு கனவையும் வளத்துக்கிட்டே போறேன். மாரியோட கனவு எப்படி நேர்மையானதாகவும் உறுதியானதாகவும் இருந்ததோ, அதே மாதிரி தங்கராஜ் அப்பாவோட கனவும் நியாயமானதா இருக்கும். இந்த ரெண்டு கனவும் சந்திச்சுக்குற புள்ளிதான் தங்கராஜ். அவனுக்குப் பணக்காரப் பொண்ணும் தேவையில்ல; மாரி மாதிரி பொண்ணும் தேவையில்ல. படிச்ச, கம்ப்யூட்டர் ஆபரேட் பண்ணத் தெரிஞ்ச ஒரு சராசரிப் பொண்ணுதான் அவனுக்குத் தேவை. இந்த மூன்று புள்ளியும் எப்படி இணையுது, அதுக்கப்புறம் என்ன நடக்குதுங்கறதுதான் கதை. எனக்கு இந்த கரு கிடைச்சதுமே இது போதும், படத்துக்கான எல்லாம் கிடைச்சிடுச்சுன்னு முடிவு பண்ணிட்டேன். அதனாலதான் ஒரு படத்துக்கு மௌனம் போதும்னு சொல்றேன்.

பாலு சத்யா: தமிழ்ச்செல்வன் படத்தைப் பாத்துட்டு என்ன சொன்னார்?

சசி: நான் படம் முடிஞ்சு வெளில வரும்போது பாத்தேன்; அவர் கண்ணுல கண்ணீர் வந்துக்கிட்டு இருந்துது. ‘என்னோட சிறுகதையை கௌரவப்படுத்திட்டீங்க; என்னை கௌரவப்படுத்திட்டீங்க. இனிமே இது என்னுடைய மாரி இல்ல. நம்முடைய மாரி’ன்னு சொன்னார். பெரிய வார்த்தை சார் அது. நான் இந்தப் படத்தை பண்றப்போ, இது மக்கள்ட்ட எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறப் போகுதுன்னு கவலப்படல. எனக்கு இருந்த ஒரே குறிக்கோள், ஒரு படைப்பாளி என்னை பாதிச்சிருக்கார்; அந்தப் படைப்பாளியை நான் எந்த விதத்துலயும் அசிங்கப்படுத்திடக் கூடாது; அவரை எந்த விதத்துலயும் குறைச்சு மதிப்பிட்டிடக்கூடாது; அவ்வளவுதான். இந்தப் படம் நல்லா வரலைன்னா, அது நான் ச. தமிழ்ச்செல்வன்ங்கற படைப்பாளிக்குப் பண்ற துரோகம். அதுனால, இந்தப் படத்தால் எந்த விதத்துலயும் யாரும் அவரை குறைச்சு மதிப்பிட்டுடக்கூடாது; அவருக்கு இந்தப் படத்துல திருப்தி வரணுங்கறதுலதான் ரொம்பக் குறியா இருந்தேன். அதுல நூறு சதவிகிதம் வெற்றி அடைஞ்சுட்டேன்ங்கறதுதான் என்னோட சந்தோஷம்.

பாலு சத்யா: மோகமுள் படத்தையும் சொன்னாங்க, படிச்ச மாதிரி இல்ல படம்னு. அது மாதிரி ‘பூ’வைப் பற்றி யாராவது…?

சசி: இதுவரைக்கும் எத்தனையோ பேர் இந்தப் படத்தைப் பாராட்டி இருக்காங்க. ஆனா, ஒரே ஒருத்தர்கூட குறையா சொல்லலை. அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் படத்தைப் பாத்துட்டு சொன்னார்: ‘படத்தைப் பாத்துட்டு மறுபடியும் போய் நான் ‘வெயிலோடு போய்’சிறுகதையைப் படிச்சேன். மாரி எங்க உக்காரணும்னு நினைச்சேனோ, அந்த இடத்துலதான் அவங்க உக்காந்தாங்க. நீங்க பண்ணினது மிகச் சரியானது. எப்பிடி சார் எழுத்துக்கு நடுவுல போய் கேமராவை வச்சீங்க?’ எனக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமா நான் இதை நினைக்கிறேன்.

பாலு சத்யா: இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் ஒரு உறவு இருக்கு, இல்லியா? அதைத்தானே நீங்க படமாக்கியிருக்கீங்க?

சசி: ஆமா, கண்டிப்பா. சினிமாவை மட்டுமே பாத்து படம் பண்ற இயக்குநர்கள் நிறைய பேர் வந்திருக்காங்க. ஆனா, என்னால அப்படி முடியாது. எனக்கு, கத்துக்கறதுக்காக சினிமா பாக்கறது முக்கியம். அதே சமயம், இயல்பா இருக்கணும். இதுல ஏதாவது ஒரு விஷயம் போய், என் ஆழ்மனசுல இருக்கும். அதே மாதிரி தான் இலக்கியமும். நான் சின்ன வயசுலருந்தே படிச்ச புத்தகங்களோட தாக்கம் எனக்குள்ள இருக்கு. படிப்பு என் படைப்புக்கு ரொம்ப ரொம்ப உதவியா இருக்குது. அதனோட செழு மைக்கும் அழகுக்கும் அடிப்படையா இருக்கறது இலக்கியம்தான். படிக்கறது, பாக்கறது, கவனிக்கறது, யோசிக்கறது… இது எல்லாமே சினிமா சார்ந்த ஒரு படைப்பாளனுக்கு ரொம்ப முக்கியம்.

பாலு சத்யா: ‘சொல்லாமலே’, ‘டிஷ்யூம்’, ‘ரோஜாக்கூட்டம்’ போன்ற படங்களுக்கு நீங்க படிச்ச இலக்கியம் எப்படி உதவி இருக்கு?

சசி: என்னுடைய எந்தப் படமும் இலக்கிய பாதிப்பு இல்லாம வந்ததே கிடையாது. ஏதாவது ஒரு காட்சியில, ஏதாவது ஒரு வசனத்துல, ஏதாவது ஒரு கோணத்துல இலக்கியம் அடிநாதமா உதவியிருக்கு. இலக்கிய வாசிப்பால் சேர்ந்த அழகியல் மறைமுகமா என் படைப்புல வந்துக்கிட்டு இருக்கு. அது வெளியில சொல்லமுடியாத ஒரு விஷயம். இதையெல்லாம் படிச்சதுனால இப்படி பண்ணியிருக்கேன்னு யார்கிட்டயும் சொல்லமுடியாது. வெளிப்படையா சொல்ற மாதிரியும் சில விஷயங்கள் இருக்கு.

பாலு சத்யா: உங்களைப் பத்தி, உங்க குடும்பப் பின்னணியையும் நீங்க சினிமாவுக்கு வந்ததையும் பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

சசி: நான் பொறந்தது மேட்டூர். அங்க ஏழாம் கிளாஸ் வரைக்கும் படிச்சேன். அப்பா ஒரு பவர் லூம் வீவர். ஒரு மில்லுல வேலை பாத்துக்கிட்டு இருந்தவர், வயித்து வலி காரணமா அந்த வேலையை விட்டுட்டு, சேலத்துக்கு வந்து ஒரு மளிகைக் கடை வச்சார். எனக்கு ரெண்டு தம்பி, ரெண்டு தங்கச்சிங்க. நாங்க முதல் தலைமுறையா படிக்கற குடும்பம். ப்ளஸ்டூ வரைக்கும் சேலம் குகை ஹைஸ்கூல்ல படிச்சேன். பிறகு அஞ்சல் வழியில் டிகிரி படிச்சேன். அப்புறம் ஒரு அக்ரிகல்ச்சுரல் கம்பெனில எனக்கு வேலை கிடைத்தது. அங்க ஒரு நாலு வருஷம் போச்சு. அப்போ நான் எழுதின, என்னோட முதல் சிறுகதையை ஆனந்த விகடன்ல சிறப்புச் சிறுகதையா போட்டாங்க. அது எனக்குப் பெரிய அங்கீகாரம். ஒரு தைரியம் வந்துடுச்சு. அந்த சந்தர்ப்பத்துல ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ வந்தது. படத்தைப் பாத்துட்டு வந்து என்னோட நகத்தை கட் பண்ணினேன்; புத்தக அலமாரியை சுத்தமா அடுக்கி வச்சேன். ஒரு நல்ல சினிமா என்னை சந்தோஷப்படுத்துது; என்னை நல்லவனா வச்சிருக்குது. அதனால என்னோட இலக்கு சினிமாதான்னு முடிவு பண்ணினேன். அதுக்கப்புறம்தான் ‘வெயிலோடு போய்’ படிச்சேன். இந்த மாரியை உலகம் பூரா கொண்டு போகணும்ங்கற வெறி வந்தது. நான் இயக்குநராக முயற்சி பண்றேன்னவுடனே எங்க அப்பாவுக்கு ஒரு பயம் வந்துச்சு. அவர் கேட்டார்: ‘அடுத்த மாசம் வாடகையை யாரு குடுப்பாங்க?.’ அப்படிக் கேட்டுட்டாலும் பையனுக்கு உதவணுங்கற எண்ணம் அப்பாவுக்கு இருந்தது. ‘நான் பாத்துக்கறேன். நீ போய்ட்டு வா’ன்னு என் தம்பி சொன்னான். சென்னைக்கு வந்து, எல்லா சினிமாக்காரர்களுக்கும் இருப்பது போல் ஒரு நீண்ட போராட்டத்துக்கு பிறகு, இயக்குநர் வஸந்த்கிட்ட உதவி இயக்குநரா ஆயிட்டேன். பொதுவா டைரக்டர்ங்க எல்லாருமே இப்பிடி பண்ணணும், அப்படி எடுக்கணும்னு கனவுகளோடதான் சினிமாவுக்கு வருவாங்க. ஆனா, சினிமா உலகம் வேற மாதிரி இருக்கும். நீங்க நினைக்கிற சினிமாவுக்கும் இங்க இருக்கறதுக்கும் அவ்வளவு வித்தியாசம் இருக்கு. இந்த சினிமா உங்களை கன்னத்துல அறையும்; பொல்யூட் பண்ணும். ஆனாலும், இன்றைக்கு வரைக்கும் நான் என் அடையாளத்தை இழக்காம இருக்கறதுக்கு வஸந்த் சார் ஒரு காரணம். அவர் காரணமாகத்தான் நான் இன்னும் அழகியலோட, நல்ல படம் பண்ணணுங்கற தாக்கத்தோட இருக்கேன். அவருக்குப் பிறகு, டைரக்டர் பாக்யநாதன்கிட்ட ‘என்றும் அன்புடன்’ படத்துல பணியாற்றினேன். அதுக்கப்புறம் கதிர் சார்கிட்ட ‘உழவன்’ படத்துல வேலை பார்த்தேன். அப்போ என் தங்கச்சி கல்யாணத்துக்கு என் அப்பா பணம் கேக்கறார். உன்னுடைய பங்கா நீ ஒரு தொகையைக் குடுக்கணும். தம்பிங்களை மட்டும் செலவு செய்யச் சொல்றது நல்லா இல்லன்னு சொன்னார்.

பாலு சத்யா: தம்பி என்ன வேலை பாத்துக்கிட்டு இருந்தார்?

சசி: அவர் ஒரு எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்டர். அப்போ கட்டாயமா நான் ஏதாவது ஒரு படத்துல கமிட் பண்ணியே ஆகணுங்கற சூழல். நான் பாக்கறதுக்கு ரொம்பச் சின்னப் பையன் மாதிரி இருப்பேன். அதனால, யார் கதை கேட்டாலும் என்னதான் கதை சொன்னாலும் இவன் படம் பண்ணமாட்டான்னுதான் நினைப் பாங்க. அதனாலயே கண்ணாடி போட ஆரம்பிச்சேன். அப்போ சௌத்ரி சார் தான் இளைஞர்களுக்கு படம் பண்ற வாய்ப்பைக் குடுத்துக்கிட்டு இருந்தார். ‘லவ் டுடே’ பாலசேகரன் என்னை சௌ த்ரி சார்கிட்ட கூட்டிட்டுப் போனார். கதையை சொல்லி முடிச்சதும், நீங்க படம் பண்ணுங்கன்னு சொல்லிட்டார். இதுதான் சினிமாவுக்கு வந்த கதை.

பாலு சத்யா: ‘சொல்லாமலே’ படத் தைப் பத்தி, காதலுக்காக நாக்கை எல்லாம் வெட்டிக்கணுமான்னு ஒரு கருத்து இருக்கே?

சசி: ஒருவரை உண்மையா நேசிச்சோம்னா, அவரை ஏமாத்த முடியாது; அது உண்மையாத்தான் இருக்க வைக்குதுங்கறதைதான் நான் இந்தப் படத்துல சொல்லியிருக்கேன். சரி, காதலை விட்டுடுவோம். ஒரு ஆசிரியர், அவர்கிட்ட ஒரு பையன் வந்து சேர்றான். ஏதோ ஒரு காரணத்துக்காக, அவர்கிட்ட அவன் ஊமை ன்னு நடிச்சிக்கிட்டு இருக்கான். கடைசியில அவரோட உண்மையான அன்பு புரிஞ்சு போய், அப்போ தன் நாக்கை கட் பண்ணிக்கிட்டான்னு வச்சுக்கோங்களேன். அப்போ இதுல எந்தவிதமான தப்பும் தெரிஞ்சிருக்காது. காதல்னு சொன்னவுடனேதான் உங்களுக்குத் தவறாப்படுது. குரு பக்திக்கும் காதலுக்கும் எந்த வித்தியா சமும் கிடையாது. ரெண்டுமே ஒரே மாதிரியான உறவு முறைதான்.

பாலு சத்யா: திரைக்கதை முழுவதையும் நீங்களே எழுதிடுவீங்களா?

சசி: ஆமாம். இதுக்கு முன்னாடி நான் எடுத்த மூணு படங்களுக்கும் கதை, திரைக்கதை, வசனம் எல்லாமே நான்தான் எழுதினேன். சில இடங்கள்ல கதை லாக் ஆகி நிக்கும். அப்போ, உதவியாளர்களுடன் விவாதிப்பேன். ஒரு கதாபாத்திரம் தவறான கோணத்துல போய்க்கிட்டு இருக்கோன்னு பாக்கறதுக்காக டிஸ்கஸன் வச்சுக்குவேன்.

பாலு சத்யா: பூ படத்தைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

சசி: இது மக்களுக்கான சினிமா. மாரியோட மனசை நிறையா பேர்கிட்ட கொண்டுபோய் சேக்கணுங்கறதுக்காகவே நிறைய விஷயங்கள்ல சமரசம் பண்ணிக்கிட்டு தான் எடுத்திருக்கேன். பாலச்சந்தரின் ‘கல்கி’ படத்துக்கு அப்புறம் ரொம்ப நாள் கழிச்சு வர்ற, பெண்ணைப் பத்தின படம் இது. திருமணமான ஒரு பெண், தன்னுடைய பழைய காதலை அசைபோடுற மாதிரி இதுவரைக்கும் வந்ததே இல்லைன்னுதான் நினைக்கறேன். மாரி எந்த கலாசார குறைவும் இல்லாத, அப்பழுக்கில்லாத பெண். அந்தப் பெண்ணோட மனசு எல்லாருக்கும் போய்ச்சேரும் அப்படிங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு. மக்கள்கிட்ட வரவேற்பு இருக்குன்னுதான் நினைக்கறேன்.

ஒரு பதில் -க்கு “Interview with Director Sasi”

  1. Krishnan said

    Good Interview…..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: