எம்.ஆர். ராதா ஒருவர்தான், மக்களை தன் பின்னாலே அழைத்துச் சென்றவர்
மற்ற நடிகர்கள் எல்லாம் மக்கள் பின்னாலே சென்றவர்கள்
எம்.ஆர். ராதா நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் உரை
பிரளயன் அவர்கள் மிக அழகாக எதையுமே சிந்தித்து செயல்படக் கூடியவர்கள்.
அதற்கு முன்னாலே ஜாதியைப்பற்றி அவர்கள் நடத்திய நாடகம் மிக ஆழமான கருத்துகளைத் தொட்ட ஒன்றாகும். அவரைப்பற்றி பல ஆண்டுகளுக்கு முன்னாலே பார்த்து எங்களுடைய ஏடுகளிலே கூட எழுதியிருக்கின்றேன்.
அரைமணி நேரத்தில் நல்ல நாடகம்
அதைக்கூட பெரியார் திடலிலே அழைத்து செய்யவேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அந்த வகையிலே பார்க்கும்பொழுது ஒரு 30 மணித்துளி களிலே குடும்பச் சூழல்கள் என்ன என்பதை அவர்கள் நாடக வாயிலாகக் காட்டினார்கள்.
அந்த நாடகத்தில் நடித்தத் தோழியரிடம் நான் ஒரே ஒரு கருத்தைச் சொன்னேன். நாங்கள் அமர்ந்து பார்த்துக் கொண்டேயிருக்கின்ற பொழுது ஒரு எண்ணம்தான் என்னு டைய மனதிலே ஓடிற்று.
பெரியாருடைய சிந்தனைகளுக்கு அப்படியே உருவம் கொடுத்ததைப் போல இருந்தது – உங்களுடைய சம உரிமை மாற்றம் என்பது.
இருவருக்கும் சம உரிமை
சமஉரிமை என்று சொல்லுகின்ற நேரத்திலே கூட இப்பொழுது எப்படித் தவறாகப் பயன்படுத்தப் படுகிறது என்பதையும் நீங்கள் இரண்டு காட்சிகளாகக் காட்டினீர்கள்.
உரிமை என்பது அடிமையாக இருக்கக் கூடாது என்பது இரு பாலாருக்கும் உரியது. அந்த அடிமைத் தனம் ஒரு சாராருக்குத்தான் உரியது என்று நினைப்பதோ அல்லது உரிமை என்ற பெயராலே எல்லையற்ற நிலைக்கு கட்டுப்பாடு இல்லாமல் செல்வது அதன்மூலமாக மற்றவர்கள் வெறுப்பது என்பது போன்ற ஒரு நிலையோ இல்லை.
பெரியாரின் பெண்ணுரிமை கருத்து
இருவரும் ஒத்துப் போதல். இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தல் என்ற அடிப்படையிலேதான் தந்தை பெரியார் அவர்கள் சிந்திந்து கருத்துக்களை சொன்னார்கள். எப்படி நடிகவேள் ராதா அவர்கள் பல நேரங்களிலே நாடகத்தின் மூலமாகச் சொன்ன கருத்துகள் புரட்சிகரமான சிந்தனைகளாக இருந்தாலும் அந்த புரட்சிகரமான சிந்தனைகளுக்கு ஒரு மூலம் எங்கிருந்து அவருக்குக் கிடைத்தது, கரு எங்கிருந்து பெற்றார்கள் என்று சொல்லும்பொழுது அது ஆழமான – தந்தை பெரியார் அவர்களுடைய பெண்ணுரிமை தத்துவ கருத்துகள்.
படிக்காதவர்தான் கலைவாணர்
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களுடைய நகைச்சுவைகள் எல்லாம் அறிவார்ந்த நகைச் சுவைகள் – சமுதாய மாற்றத்தை மய்யப்படுத்துகின்ற நகைச்சுவையாக இருந்தது.
அதிகம் படிக்காத கலைவாணர் அவர்கள் எப்படி ஆழமான சமூக விஞ்ஞானி போல இருந்து நகைச்சுவைச் கருத்துகளை அவருடைய குழுவின் மூலமாகப் பரப்பினார், திரைப்படங்கள் மூலமாகவும் பரப்பினார். உங்களுக்கு ஆசிரியர் யார்? என்று கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களிடத்திலே கேட்டபொழுது, அவர் ஒரு ஆசிரியரைக் காண்பித்தார்.
பச்சை அட்டைக் குடிஅரசு என் ஆசிரியர்
யார் அந்த ஆசிரியர் என்று சொல்லும்பொழுது ஒரு பச்சை அட்டை குடிஅரசை எடுத்துக்காட்டி அந்தக் காலத்திலே தந்தை பெரியார் அவர்கள் நடத்திய அந்தப் புரட்சிக்கரமான ஏட்டைக் காட்டி இவர்தான் எனக்கு ஆசிரியர். இதை நாங்கள் வாராவாரம் படித்துவிட்டுத்தான், இதிலே இருக்கின்ற கருத்துகளை எங்களுக்குத் தகுந்தாற்போல மாற்றிக் கொண்டு பிரச்சாரம் செய்கிறோம். மற்றவர்களைத் திருத்துவதற்காக, சமுதாய மாற்றத்திற்காக செய்து கொண்டு வருகின்றோம் என்று சொன்னார்கள்.
சுயசிந்தனையாளர் எம்.ஆர். ராதா
அதுபோல ராதா அவர்களைப் பொறுத்தவரையிலே, கற்றலினும் கேட்டலே நன்று என்று சொல்லக்கூடிய அளவிலே ஆழமாக ஒரு கருத்தைக் கேட்பார். உடனே அதை எப்படி உருவகப்படுத்தி செய்யவேண்டும் என்று நினைக்கக் கூடிய அளவிற்கு, ரொம்ப சுய சிந்தனையாளராக தன்னை ஆக்கிக் கொள்வார்.
தந்தை பெரியார் அவர்கள் – எப்படி ஒப்பற்ற ஒரு சுய சிந்தனையாளரோ, அந்த ஒப்பற்ற சிந்தனையாளருக்கு, ஒரு நல்ல சுயமாக சிந்திக்கக் கூடிய ஒரு நல்ல ஆற்றல் வாய்ந்த கலைஞராக நடிகவேள் ராதா அவர்கள் கிடைத்தார்கள்.
ராதா அவர்களப்பற்றி எனக்கு முன்னாலே பேசிய கவிஞர் நந்தலாலா அவர்களும், எழுத்தாளர் பாமரன் அவர்களும் மிக அருமையான கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள்.
நடிகவேள் ராதா அவர்களைப்பற்றி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கலாம். அவ்வளவு ஆழமான சிந்தனையுள்ளவர்.
சினிமா துறையை கடுமையாகச் சாடக்கூடியவர்
சினிமாத்துறையை மிகக் கடுமையாகச் சாடக்கூடிய தந்தை பெரியார், பெரியார் திடலில் நடிகவேள் ராதா அவர்களுடைய பெயராலே ஒரு மன்றத்தையே அமைத்தார். அந்த மன்றத்தை தந்தை பெரியார் அவர்களே திறந்தார்கள்.
அவர் எப்படி அங்கீகரித்தார் என்பதை அந்த மன்ற அடிக்கல் நாட்டு விழாவின் பொழுதும் சரி, ராதா மன்றத்தைத் திறந்த போதும் தெளிவாக தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்.
ராதா வர மறுத்தார்
ராதா அவர்களுடைய பெயராலே மன்றத்தை பெரியார் அமைத்தார். நடிகவேள் ராதா மறுத்தார். . எனது பெயரால் மன்றம் வேண்டாம் என்றெல்லாம் சொன்னார். ராதா மன்றம் திறப்பு விழா நிகழ்ச்சிக்குக் கூட வர மறுத்தார். பெரியார் திடலில் ராதா மன்றத் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.
ராதா ஏன் வரவில்லை என்று அய்யா அவர்கள் கேட்டு, பிறகு கடுமையாகச் சொல்லி, ஏன் ராதா இங்கு வர கூச்சப்படுகிறார்? அவரை வரச் சொல்லுங்கள் என்று சொன்னார். நிகழ்ச்சி பாதி நடந்துகொண்டிருக்கிறது. நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களுடைய வீடு அப்பொழுது தேனாம்பேட்டையில் இருந்தது.
`நடிகர்களுக்குப் புத்தி வரவேண்டும்!`
என்னுடைய வண்டியை அனுப்பி அவரை அழைத்துவரச் செய்து மேடையில் உட்கார வைத்தோம்.
அவரும் தனக்கு இதற்குத் தகுதி உண்டா? என்று கேட்டு தன்னடக்கத்தோடு, கூச்சப்பட்டு மேடையில் அமர்ந்திருந்தார்கள். அந்த நேரத்திலே தந்தை பெரியார் சொன்னார் – நடிகவேள் ராதா அவர்களுக்காக நான் எதையும் செய்யவில்லை. நான் யாரையும் அவ்வளவு சுலபமாக பாராட்டி விடுபவன் அல்ல.
நான் ராதா அவர்களுடைய பெயராலே மன்றத்தைத் திறக்கிறேன் என்று சொன்னால், இது நடிகவேள் ராதா அவர்களுக்காக அமைக்கவில்லை. நடிகர்களுக்குப் புத்தி வரவேண்டும் என்பதற்காக நான் இதைச் செய்திருக்கிறேன். இப்படி செய்வதன் மூலமாக – ஒரு கொள்கையோடு இருந்தால், அவர்களைப் பாராட்டுவதற்கு நாட்டிலே ஆள் இருக்கிறார்கள் என்பதற்காக இதைச் செய்திருக்கிறேன்.
மற்ற நடிகர்கள் மக்களுக்கு ஏற்றாற்போல
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களை ஏன் பாராட்டுகிறேன்? நடிகவேள் ராதா அவர்களை ஏன் பாராட்டுகிறேன் என்றால் மற்றவர்கள் எல்லாம் ரசிகர்கள், பார்வையாளர்கள். பார்ப்பவர்கள் எதை விரும்புகிறார்களோ அதை சொல்லி கைதட்டல் வாங்கிக் கொண்டு அவர்கள் பின்னாலே போகக் கூடியவர்களாகத்தான் நாடகக் கலைஞராக இருந்தவர்கள், நடிகர்கள் எல்லாம்.
ராதா மட்டும்தான் மக்களை தன் பின்னாலே அழைத்தவர்
ஆனால், ராதா ஒருவர்தான் மக்கள் பின்னாலே போகாமல்,. மக்களைத் தன் பின்னாலே அழைத்துக் கொண்டு வந்து ஒரு புரட்சிக்கரமான சிந்தனை உள்ள நடிகர் என்ற அந்தச் சிறப்புக்காகத்தான், ராதா பெயர், காலத்தை வென்று என்றைக்கும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இங்கே அவருக்கு மன்றம் வைக்கிறோம் என்று சொன்னார்கள்.
சிலபேர் சலசலப்பு காட்டிய நேரத்திலேகூட அவர்கள் அதைப் பொருட்படுத்தாமலே, சிறப்பாக அய்யா அவர்கள் அதை செய்தார்கள்.
பெரியார் அங்கீகாரம்
எதற்காக இதைச் சொல்லுகிறோம் என்றால், இதைவிடப் பெரிய அங்கீகாரம் வேறு என்ன இருக்க முடியும்? தந்தை பெரியார் அவர்களே அவரை அங்கீகரித்தார். எம்.ஆர். ராதா அவர்களுக்கு ஒரு நிரந்தரமான நினைவையே அவர்கள் செய்திருக்கின்றார்கள். இன்றைக்கு அந்த மன்றம் புதுப்பிக் கப்பட்டு, என்றைக்கும் அந்தப் பெயர், காலம் காலமாக நிலைத்திருக்கக் கூடிய அளவிற்கு ஒரு அருமையான மன்றமாக, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது என்று சொன்னால் அவர் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டினுடைய அங்கீகாரம்.
விருதுகளுக்கு மேலானது
அதுவும் பெரியாரிடம் கிடைத்த அங்கீகாரம் என்பது விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது, மேலானது. அதற்கு என்ன காரணம்? ராதா அவர்கள் ஆங்கில வார்த்தையை சரளமாகப் பேசுவார். ரொம்பப்பேருக்குத் தெரியாது, அவர் ஆங்கிலம் கூட படிக்கத் தெரியாதவர் என்று. அவர் எம்.ஆர். ராதா என்று கையெழுத்துப் போடக் கற்றுக்கொண்டதே சிறைச்சாலைக்குப் போன பிற்பாடு, எம்.ஆர். ராதா என்று கையெழுத்துப் போடக் கற்றுக்கொண்டார்.
சிறைச்சாலையிலே புத்தகங்களைக் கொண்டுவரச் சொல்லி ஆங்கிலத்தைப் படித்தார். ஆரம்பக் கட்டத்தில் ஆங்கிலத்தை எப்படிப் படிப்பார்களோ அது மாதிரி எல்லாம் ஆர்வத்தின் காரணமாக ஆங்கிலத்தை அவர்கள் படித்தார்கள்.
பொது அறிவு அதிகமுள்ளவர்
ஆனால், பொது அறிவு அதிகமுள்ளவர். நம்முடைய நாட்டிலே படிப்பிற்கும், பொது அறிவிற்கும் சம்பந்தம் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்ட யாரையாவது உதாரணம் காட்ட வேண்டுமானால், எப்படித் தலைவர்களிலே தந்தை பெரியார் அவர்களைக் காட்டுகின்றார்களோ, அதுபோல நடிகர்களில் நடிகவேள்ராதா அவர்களைத்தான் காட்டவேண்டும்.
அந்த அளவிற்கு அவர்கள் தெளிவானவர். அவர் ஒரு நல்ல சுயமரியாதைக்காரர். நல்ல துணிச்சல்காரர். அவருக்குத் தெளிவான அறிவு இருந்தது என்பது மட்டும் முக்கியமல்ல. நல்ல பொது அறிவோடு இருக்கிறார்கள். நல்ல சுயமரியாதைக்காரராக அவர்கள் இருந்தார்கள். சமுதாயப் புரட்சியாளராக வாழ்ந்தார்கள்.
கலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்
கலையை ஒரு கருவியாக அவர்கள் பயன்படுத்தினார்கள். கலை ஒரு கருவியாகப் பயன்பட வேண்டுமே தவிர கலை ஒரு வியைட்டாகப் பயன்படக் கூடாது என்று கருதியவர். ஒரு திரைப்படத்தை ஒருவர் 3 மணிநேரம் பார்த்தால் பயனுள்ளதாக இருக்கவேண்டும்.
இங்கு பிரளயன் அவர்கள் நடத்திய அரைமணி நேர வீதி நாடகத்தைப் பார்த்தோம். உடனே அதிலிருந்து பாடத்தோடு வெளியே போகிறோம். அற்புதமான செய்தியை மனதிற்குள் வாங்கிக் கொள்கிறோம்.
கலைத்துறையில் எதிர்நீச்சல்
நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களுடைய நாடகத்தைப் பார்த்து மாறாவதர்களே கிடையாது. அஸ்திவாரத்தை ஆட்டி விடுவார். எதிர் நீச்சல் அடித்து கலைத்துறையிலே வாழ்ந்தவர்.
எப்படித் தந்தை பெரியார் அவர்கள் எதிர்நீச்சல் அடித்த வரோ, அதேபோல பெரியாருடைய கொள்கைகளை நாடகத் தில் நடித்து எதிர்நீச்சல் அடித்தவர். அதுமட்டுமல்ல, எல்லா வற்றிலும் அவர் வரலாறு படைத்தவர்.
நவாப் டி.எஸ். ராஜமாணிக்கம் நாடகம்
அவருக்கு எதிர் துறையிலே யார் நாடகம் நடத்திக் கொண் டிருந்தார்கள் என்று சொன்னால் நவாப் டி.எஸ். ராஜமாணிக்கம். அவருடைய பெருமை எல்லாம் என்னவென்றால் ஏகப்பட்ட காட்சி ஜோடனைகள், சீன்கள் எல்லாம் மிகப் பெரிய அளவுக்கு இருக்கும். உடனே மக்கள் அதைப் பார்த்து பிரமிக்க வேண்டும். அசர வேண்டும் என்று கருதி அவர் புராண நாடகங்களைத்தான் போடுவார். அவர் மறந்தும் சமூக நாடகங்கள் போட மாட்டேன் என்று புராண நாடகமாகப் போட்டுக் கொண்டிருந்தவர். நடிகவேள் ராதா அவர்கள் நேர் மாறான கொள்கை உடையவர்.
சமூக நாடகம்தான் போடுவார்
நான் எதுவும் புராண நாடகம் போடமாட்டேன். சமூக நாடகம்தான் போடுவேன் என்று செயல்படுபவர் நடிகவேள் ராதா. இதுவரையில் நாடகத்தில் புரட்சி, நாடகத்தில் புரட்சி என்று சொல்லுகிறார்கள். வசனத்தில் மட்டும் அல்ல, நாடக அமைப்பிலும் புரட்சி செய்தவர் நடிகவேள் ராதா அவர்கள்.
இங்கே எப்படி, ஒரே ஒரு திரையைக் கட்டி ஒரு அரை மணிநேர நாடகத்தை மிகச் சிறப்பாக நடத்திக் காட்ட முடியும் என்ற ஒரு நிலையை இன்றைக்கு வீதி நாடகத்தில் பார்க் கின்றோம்.
எதிர்ப்புகள் – மறக்கமுடியாத ஒன்று
ராதா நாடகத்தில் இரண்டே இரண்டு திரை இருக்கும் அவ்வளவுதான். முதலில் ஒரு பச்சைக் கலர் படுதாவை எடுத்து விடுவார். அந்த ஸ்கிரினிலேயே காடு, அரண்மனை எல்லாம் இருக்கும். தனித்தனி சீன்கள் எல்லாம் அவருக்குத் தேவையில்லை.
விழுப்புரத்தில் பெரிய கலவரம்
ராதா அவர்கள் எதிர்ப்புகளை சந்தித்த விதம் இருக்கிறதே அது மறக்கமுடியாத ஒன்றாகும். எழுத்தாளர் பாமரன் அவர்கள் பேசும்பொழுது சொன்ன மாதிரி அன்றைய எதிர்க்கட்சி காங்கிரஸ்தான் அதுவும் விழுப்புரத்திலே பெரிய கலவரம் எல்லாம் நடந்தது. எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கு அவர் நடத்துகின்ற நாடகத்திற்கு காங்கிரஸ்காரர்கள் தடை வாங்குவார்கள். அந்தத் தடை நீக்குவதற்கு அவர் உயர்நீதி மன்றம் போவார். அங்கே அவர் வழக்கறிஞரை வைத்திருப்பார். உடனே அந்தத் தடையை நீக்கி உத்தரவை வாங்கிக் கொண்டு வந்து ராதா அவர்கள் நாடகம் நடத்துவார்.
எம்.கே. நம்பியார்தான் வழக்கறிஞர்
காவல்துறை நடிகவேள் ராதா நாடகத்திற்குத் தடை போடும். இந்த ஊரில் தூக்குமேடை நாடகம் நடத்தத் தடை – அனுமதியில்லை என்று தடை போடுவார்கள்.
இன்றைக்கு டில்லி உச்சநீதிமன்றத்திலே பிரபலமாக இருக்கக் கூடிய வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் அவர்களுடைய தந்தையார் எம்.கே. நம்பியார் என்பவர். சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரேயுள்ள சாலை ஓரத்தில் உள்ள வீட்டில் தான் குடியிருந்தார். அவர்தான் அந்த காலத்திலேயே பிரபலமான வழக்கறிஞர். ராதா அவர்கள் நம்பியாரிடத்திலே சொல்லுவார். அவர் இவருக்கு நிரந்தர வழக்கறிஞர் மாதிரியானவர். உடனே நாடகத்திற்குப் போடப்பட்ட தடையை நீக்கி ஒரு உத்தரவை வாங்கிக் கொண்டு வந்து விடுவார்.
தூக்கு மேடைக்குத் தடையா? மலாயா கணபதி
அதுவரைக்கும் நாடகம் நடத்தாமல் இருக்கமாட்டார். தூக்குமேடை நாடகத்திற்கு இன்றைக்கு அனுமதி இல்லை என்று சொன்னவுடனே அன்று மாலையே மலாயா கணபதி என்ற நாடகம் நடைபெறும் என்று அறிவிப்பார்.
அந்த நாடகத்தைப் பார்த்தால் தூக்குமேடை நாடகம் என்னவோ அதேதான் இருக்கும் ஆரம்பத்தில். சரி மலாயா கணபதி நாடகத்திற்குத் தடை என்று சொன்னால் இன்னொரு பெயரைச் சொல்லுவார்.
தந்தை பெரியார் தலைமையில் நாடகம்
ஒரு ஊரில் தந்தை பெரியார் அவர்களுடைய தலைமையிலே நாடகத்தைப் போட்டிருக்கிறார் ராதா அவர்கள். ராதா அவர்களுடைய சமயோசித சிந்தனை என்பது பட்டென்று வரும்.
அய்யா அவர்கள் முன் வரிசையில் அமர்ந்து நாடகம் பார்த்துக் கொண்டிருக்கின்றார். உங்களுக்குத் தெரியும். ஒரு நான்கைந்து சீன்கள் முடிந்தவுடனே பாராட்டிப் பேசுவார்கள். அல்லது நாடக இடைவேளையின் பொழுது பாராட்டிப் பேசுவார்கள்.
ஏ ராதா!
பாதி நாடகம் முடிந்தவுடனே இடைவேளை நேரத்தில், இப்பொழுது தந்தை பெரியார் அவர்கள் பேசுவார் என்று ராதா அவர்கள் அறிவித்தார். நாடகம் பார்க்க வந்த காங்கிரஸ்காரர்கள் இரண்டுபேர்கள் திடீரென்று எழுந்திருந்து ஏ ராதா! ரொம்ப ஒருமையிலே – உன் நாடகத்தைப் பார்ப்பதற்குத்தான் நாங்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்திருக்கின்றோம். இங்கே யாருடைய பேச்சையும் கேட்பதற்காக நாங்கள் வரவில்லை. நாடகத்தை தொடர்ந்து நடத்து என்று சொன்னார்கள்.
ஒரே பரபரப்பு
உடனே ஒரே பரபரப்பு. ராதா வருகிறார். ஒலிபெருக்கியை வாங்குகிறார். என்ன சொல்றீங்க என்று கேட்கிறார். நேருக்கு நேர் பேசுவார் – துணிச்சலாக என்ன சொல்றீங்க என்று கேட்டார். இல்லை. உங்களுடைய நாடகத்தைப் பார்ப்பதற்குத்தான் டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்திருக்கின்றோம். இங்கே இவருடைய பேச்சை கேட்பதற்காக நாங்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டு வரவில்லை என்று சொன்னார்கள்.
நாடகம் முடிந்து போய்விட்டது
அப்படியா? நாடகம் முடிந்துபோய்விட்டது (சிரிப்பு – கைதட்டல்). போகிறவர்கள் போகலாம். இருக்கிறவர்கள் என்றால் அவருடைய பேச்சுக்களை கேட்கலாம். அவ்வளவுதான் என்று எம்.ஆர். ராதா அவர்கள் சொன்னார். டிக்கெட் வாங்கி னீர்கள் அல்லவா? நாடகத்தைப் பார்த்து முடித்து விட்டீர்கள். நாடகம் முடிந்து போய்விட்டது. நீங்கள் போகலாம் என்று ராதா சொன்னார். அப்புறம் மக்கள் என்ன செய்வார்கள்? எல்லோரும் உட்கார்ந்தார்கள். அய்யா அவர்கள் பேசிய பின்பு அதற்கு பிறகு நாடகம் தொடர்ந்து நடந்தது.
சமயோசித புத்தி
இது மாதிரி சமயோசிதமான அவருடைய துணிச்சல் இருக்கிறது பாருங்கள். அது பாராட்டுக்குரியது. அவருடைய நாடகங்களில் சில நேரங்களில் கடுமையான வசனத்தைக் கூட சொல்லுவார். ஒருமுறை நடிகவேள் ராதா அவர்களுடைய நாடகத்திற்கு ஏ.எஸ்.பி. அய்யர் தலைமை தாங்கியிருக்கின்றார். அவர் அய்.சி.எஸ். உயர் நீதிமன்ற நீதிபதி. ராதா அவர்களுடைய நாடகங்களை நேரடியாக வந்து பல நேரங்களில் பாராட்டியவர்.
ராதா நாடகத்திற்கு ஏ.எஸ்.பி. அய்யர் தலைமை
ஏ.எஸ்.பி. அய்யர் நாடகத்திற்கு தலைமை தாங்கியிருக்கின் றார். இரத்தக் கண்ணீர் நாடகத்தில் ராதா அவர்கள் நிறைய நேரம் உட்கார்ந்து வசனம் பேசக்கூடிய வாய்ப்பு வரும். அப்படி பேசக் கூடிய நேரத்திலே கேள்வி கேட்டு பதில் சொல்லக்கூடிய நிலை வரும். ஒரு பேப்பரை கையில் வைத்துக் கொண்டு அன்றாட நிகழ்ச்சி கேள்விகளுக்குப் பதில் சொல்லுவார். தன்னுடைய கருத்துகளை சொல்லுவதற்கு வசதியாக வைத்துவிடுவார்.
ஒருவர் கேள்வி கேட்பார். ராதா பதில் சொல்லுவார். திரைப் படத்தைபற்றி ராதா சொல்லுவார். யாருடா? இவர்கள் என்று வேலைக்காரரைப் பார்த்து ராதா கேட்பார். புது டைரக்டர்கள் எல்லாம் இப்பொழுது படம் எடுப்பதற்காக வந்திருக்கிறார்கள் என்று வேலைக்காரர் சொல்லுவார். உடனே ராதா சொல்லுவார் நானும் ஒரு காலத்தில் படம் எடுத்தவன்தான்டா, நானும் ரொம்ப சிறப்பாக இருந்தவன்தான் என்று சொல்லுவார். நானும் நடிக்கிறவன்தான்டா, இப்பொழுதும் நடிக்கிறவன்தான்டா, நானும் படம் எடுப்பேன் என்று ராதா சொல்லுவார். அந்த வேலைக்காரர் சொல்லுவார். நீங்கள் நடித்தால் எவன் பார்ப்பான் என்று கேட்பார். அதற்கு ராதா அவர்கள் பளிச்சென்று பதில் சொன்னார்.
பார்ப்பான் – பார்ப்பான்
எவன் பார்ப்பான்? என்று வேலைக்காரர் கேட்பார். பார்ப்பான் பார்ப்பான் என்று நடிகவேள் ராதா பதில் சொன்னார் (பலத்த கைதட்டல் – சிரிப்பு) . பார்ப்பான் பார்ப்பான் என்று சொன்னார். ஏ.எஸ்.பி. அய்யர் அந்த மேடையில் இருக்கின்றார். இது மாதிரி சமயோசிதமாக பதில் சொல்லக்கூடியவர் நடிகவேள் ராதா. (சிரிப்பு கைதட்டல்) ஜனவரி 31-ஆம் தேதி தி.மு.க. கலைக்கப் படுகிறது. எங்களையெல்லாம் கமிசனர் அலுவலகத்தில் கைது செய்து ஒவ்வொருவராகக் கொண்டு வருகின்றார்கள்.
நடிகவேள் ராதா அவர்களையும் நள்ளிரவைத் தாண்டி இரண்டு மணியளவில் கைது பண்ணிக் கொண்டு வந்தார்கள். இங்கே பேசிய பாமரன் அவர்கள்கூட அதை எடுத்துச் சொன்னார்.
யார் இந்த அய்.ஜி.?
எல்லோரையும் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்ல அழைத்து வந்தார்கள் கமிசனர் அலுவலகத்திற்கு. போலீஸ் கமிசனர் அலுவலகத்தில் இருக்கின்ற படங்களை எல்லாம் பார்த் துக் கொண்டு வந்தார். இது யார்? என்று கேட்டுக் கொண்டே வந்தார். இவர் அந்த அய்.ஜி., இந்த அய்.ஜி. என்று சொன்னார்.
ஆமாம் தாடி வைத்திருக்கிறாரே இவர் எப்பொழுது அய்.ஜி ஆனார் என்று கேட்டார். திருவள்ளுவர் படம் மாட்டப்பட் டிருக்கின்றது. அதைத்தான் ராதா அவர்கள் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். பிறகு எங்களையெல்லாம் சிறைச்சாலைக்கு அழைத்துப் போனார்கள். அங்கு அவரிடம் பேசிக் கொண்டி ருப்போம். பழைய சம்பவங்களை எல்லாம் சொல்லுவார்.
மிசா கைதிகளுக்கு
எங்களைப் பார்க்க நேர்காணல் என்ற முறையில் குடும்ப உறுப்பினர்கள் வருவார்கள். சிறையில் இருந்த சில பேரிடம் சிறைச்சாலை மூத்த அதிகாரிகள் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் உங்களை விடுதலை செய்வது பற்றி யோசிப்போம் மிசாவில் கைதியாக வந்த நீங்கள் திரும்பவும் எப்பொழுது வெளியே போவீர்கள் என்று சொல்ல முடியாது. எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் உங்களை வைத்திருக்கலாம். இப்படியே உங்களுடைய வாழ்க்கை முடிந்து போனாலும் முடிந்து போய்விடும். ஆயுள் கைதிகள் கூட எப்பொழுது வெளியே போகப் போகிறார் என்ற ஒரு கால
நிர்ணயம் உண்டு.
மிசாவில் அப்படி எல்லாம் கிடையாது. நாளைக்கே வெளியே விட்டாலும் விடுவார்கள். அல்லது எத்தனையோ ஆண்டுகள் கழித்து 40 ஆண்டுகள் கழித்து நீங்கள் போகக் கூடிய நிலை இருந் தாலும் இருக்கும். இதில் காலவரையறை எல்லாம் கிடையாது. சட்டப்படி அதற்கு இடம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
ராதாவை அவருடைய துணைவியார் சந்தித்தார்
ஒன்றிரண்டு பேர் இப்படி மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத் துப் போனவர்களும் உண்டு. ஏனென்றால் சிறைக்குள் பலகீன மாகக் கூடிய ஒரு சூழல் இருக்கும். அப்படியிருக்கும்பொழுது நேர்காணல் வருகிறது. வாரத்திற்கு ஒருமுறை குடும்பத்தினர் வந்து சந்திப்பார்கள். ராதா அவர்களை அவருடைய துணைவியார் வந்து சந்தித்தார்.
ராதா அவர்களுக்கு ஒரு நாற்காலி போட்டு உட்கார வைத்திருப்பார்கள். பக்கத்தில் ஒரு ஸ்டூல் போட்டு அவருடைய வீட்டாரை உட்கார வைத்திருந்தார்கள். இவர்களுக்குப் பக்கத்தில் ஒரு ஜெயில் அதிகாரி இருப்பார். இவர்கள் பேசுவதை குறிப்பெடுப்பதற்கு அங்கே சுருக்கெழுத்தாளர் ஒருவர் இருப்பார். அங்கே ஒன்றும் ரகசியமாக பேச முடியாது.
இவர்கள் இல்லாமல் மூன்றாவது ஒருவர் திரைக்கு பின்னாலே வந்து உட்கார்ந்திருப்பார். இதுதான் மிசாவில் நேர்காணலில் இருந்த முறை. அப்படி இருந்துகொண்டிருக்கின்ற பொழுது ராதா அவர்களுக்கு நேர்காணலின் அழைப்பு வந்தது. ராதா அவர்களும் வந்து உட்கார்ந்தார். ராதா அவர்களுடைய துணைவியார் தனலெட்சுமி அவர்கள் வந்தார்கள். அவர்கள் அருகில் அதிகாரிகள் இருந்தார்கள்.
வெகுளியாக கேள்விகேட்டார்
அவர்கள் அப்பாவி – வெகுளியாக இருக்கக் கூடியவர்கள். ஏங்க எப்பொழுது வருவீர்கள் என்று கேட்டார். நான் என்ன பண்றது? விட்டால் வரப்போகிறேன். நானாகவா வந்து இங்கு உட்கார்ந்திருக்கிறேன் என்றார். எப்பொழுது விடுகிறானோ அப்பொழுது வருவேன் என்று சொன்னார். உடனே ராதா அவர்களின் துணைவியார் சொன்னார். நான் வெளியில் நின்று கொண்டிருந்தபொழுது சொன்னார் கள். வெள்ளை பேப்பர் கொடுக்கிறார்களாம். அதை வாங்கி நீங்கள் அவர்கள் சொல்லுகிறபடி இனிமேல் அப்படி செய்ய மாட்டேன் என்று எழுதிக் கொடுத்து வந்து விடலாமே என்று கேட்டாராம். எங்களுக்கு அந்தப் பக்கம் இண்டர்வியூ. ராதா கேட்டார் என்னான்னு எழுதி கொடுக்கச் சொல்லுகிறாய் என்று.
அதிகாரிக்குச் சிரிப்பு தாங்கமுடியவில்லை
அதிகாரிகள் இவர் சொல்லுவதை எழுதிக் கொண்டே இருக்கின்றார்கள். இனிமேல் அந்த மாதிரி செய்யமாட்டேன் என்று எழுதி கொடுத்துவிட்டு வாருங்கள் என்று அந்த அம்மையார் வெகுளித்தனமாக சொன்னார்.
இதோபார் நான் என்ன பண்ணினேன் – இங்கு என்னை அழைத்துக் கொண்டு வருவதற்கு முன்பு – தூங்கி கொண்டிருந் தேன் (சிரிப்பு – கைதட்டல்). இனிமேல் நான் தூங்கமாட்டேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வரச் சொல்லுகிறாயா என்று கேட்டவுடன் எழுதிக் கொண்டிருந்த சி.அய்.டி. இன்ஸ்பெக்டர் பேனாவை கீழே வைத்து விட்டு அவரும் சிரிக்கிறார். சிறை அதிகாரிகளும் சிரிக்கின்றார்கள்.
கூச்ச, நாச்சம்
அதாவது இயல்பாக கொஞ்சம்கூட கூச்சநாச்சம் இல்லாமல் யோசனையே இல்லாமல் இயல்பாக பேசினார் ராதா. எதற்கு சிறைக்கு வந்தோம் என்பது எங்களுக்குத் தெரியாது. எதற்கு அழைத்து வந்தார்கள் என்பது அவர்களுக்கும் தெரியாது. கூட்டிவரச் சொன்னார்கள். இவர்கள் கூட்டி வந்து விட்டார்கள் என்று அவ்வளவு நகைச்சுவையாக ராதா அவர்கள் பதில் சொன்னார்.
இந்தியாவிலேயே ஒரு நடிகரைக் கண்டு அரசாங்கம் பயந்தது நடிகவேள் ராதாவுக்காகவே!
சென்னை சங்கமம் விழாவில் தமிழர் தலைவர் பேச்சு
சென்னை, ஜன. 26- இந்தியாவிலே நடிகருக்காகவே ஒரு சட்டத்தை இயற்றியது. ஒரு நடிகரைக் கண்டு அரசாங்கம் பயந்தது ராதாவுக்காகத்தான் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறினார்.
சென்னை சங்கமம் சார்பில் 14-1-2008 அன்று சென்னை – அண்ணாசாலையில் உள்ள ஃபிலிம்சேம்பரில் நடைபெற்ற நடிகவேள் எம்.ஆர். ராதா நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
இவ்வளவு நிலைகளிலும் எதிர் நீச்சல் அடித்து கலைத் துறையிலே சுயமரியாதைக்காரராக வாழ்ந்து, கொஞ்சம்கூட விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்த ராதா அவர்களிடம் சிறந்த மனிதநேயம் இருந்தது.
நடிகவேள் ராதா மனித நேயக்காரர்
நடிகவேள் ராதா அவர்களிடத்திலே இருந்த மனிதநேயம் வேறு யாருக்கும் வராது. அவர் முரட்டுச் சுபாவம் உள்ளவ ராகவும், எதிர் நீச்சல் அடிப்பவராகவும், ரொம்பப் பிடிவாதக் கொள்கைக்காரராகவும் இருந்ததெல்லாம் ஒரு அம்சம்.
ஆனால் அவர் யார் யாருக்கு உதவி செய்திருக்கிறார் என்பதை விளம்பரமே படுத்திக் கொள்ளாத ஒரு மாமேதையாக, ஒரு வள்ளலாக ராதா அவர்கள் திகழ்ந்தார்கள் (கைதட்டல்). ராதா அவர்களிடம் உதவியைப் பெற்றவர்கள் பல துறையிலே இருக்கிறார்கள்.
கலைஞர்களாக இருக்கக் கூடியவர்களில் இருந்து, நடிகர் களாக இருக்கக் கூடியவர்களில் இருந்து, மற்ற பொதுமக்கள் பொது ஸ்தாபனத்திலே இருந்து எல்லோருமே அவரிடம் உதவியைப் பெற்றிருக்கின்றார்கள்.
எனது கல்விக்கு உதவி செய்திருக்கின்றார்
என்னுடைய வாழ்க்கையிலே கூட, அவருடைய உதவி என்பது ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு என்றைக்கும் நன்றியோடு நான் நினைக்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது. நான் கல்லூரி வாழ்க்கையைத் தொடங்கவேண்டும் என்பதற் காக என்னுடைய நண்பர்கள் முயற்சி செய்த பொழுது, கடலூ ருக்கே வந்து நாடகம் போட்டு அதன்மூலமாக எனக்கு உதவியை செய்தார்கள் (கைதட்டல்). எல்லோருக்கும் அத்தகைய உதவியை செய்வார்.
என்னுடைய மணவிழாவை தந்தை பெரியார் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களும் 50 ஆண்டுகளுக்கு முன்னாலே திருச்சியிலே நடத்தினார்கள்.
அய்யா அவர்கள், அந்த நிகழ்ச்சியிலே பேசும்பொழுது சொன்னார். கவிஞர் நந்தலாலா அவர்கள் சொன்னமாதிரி, ராதா அவர்களுக்கு ஒரு தனித்த சிந்தனை இருக்கும்.
பொது அறிவிலே தனி முத்திரை
பொது அறிவு, பட்டறிவு அவருடைய முத்திரை அதிலே இருக்கும். என்னுடைய மணவிழாவிலே பேசும்பொழுது அய்யா அவர்கள் சொன்னார்கள்: வீரமணிக்கும் அவருடைய வாழ் விணையர் மோகனா அவர்களுக்கும் திருமணத்தை எல்லாம் நடத்தியிருக்கின்றோம். இங்கே தோழர்கள் ஏராளமாக வந்தி ருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ஒரு மாநாடு மாதிரி நடைபெறுகிறது.
அய்யா பேசிய குறிப்புகள் இன்னமும் இருக்கின்றன. ஒலி நாடாவில் இருக்கிறது. நான் எப்பொழுதுமே சிக்கனக் காரன். ரொம்ப சுருக்கமாக, சிக்கனமாக நடக்கவேண்டும் என்று நினைக்கின்றவன்.
50 ஆண்டுகளுக்கு முன் என் மணவிழா
ஆனால், இங்கு ஏராளமான தோழர்கள் வந்துவிட்டார்கள். நிறையபேர் வந்துவிட்டர்கள். 50 ஆண்டுகளுக்கு முன்னாலே சொல்லுகின்றார். நிறையபேர் வந்துவிட்டார்கள். அதனால் நான் ரொம்பத் தாராளமாகவே நடத்திவிட்டேன். நான் நினைத்ததற்கு மேலே இது பெரிதாக நடந்துவிட்டது என்று சொன்னார். வாழ்த்துரையில் ஒவ்வொருவராகப் பேசும்பொழுது நடிகவேள் ராதா அடுத்து பேசினார். இதுமாதிரி அய்யா அவர்கள் சொன்னார். இந்தத் திருமணத்தை ரொம்பத் தாராளமாக நடத்திவிட்டேன் என்று சொன்னார்.
நான்கூட யோசனை பண்ணினேன். என்ன இவ்வளவு தாராள மாக அய்யா அவர்கள் நடத்திவிட்டாரா? அல்லது பெரிய விருந்து போட்டு விட்டாரா? அல்லது தாராளமாக செலவு செய்து விட்டாரா? என்று பார்த்தேன். அதெல்லாம் ஒன்றுமில்லை.
அய்யா அவர்கள் தாராளம் என்று சொன்னது
ஆனால், அய்யா அவர்கள் தாராளம் என்று சொன்னது என்ன? என்று நினைத்துப் பார்த்தேன். அவர் தாராளம் என்று சொன்னதை ஏதோ ரூபாயைப் பற்றி அல்ல. இதற்கு முன்னாலே சுயமரியாதைத் திருமணம் என்று சொன்னால். அந்தத் திரு மணத்திற்குப் பெரியார் தலைமை தாங்கி நடத்துகிறார்கள் என்றால் பெண்ணைக் கொண்டுபோய் ஒளித்து வைத்து விடுவார்கள்.
அதே மாதிரி மாப்பிள்ளை இன்னொரு பக்கம் காணாமல் போவார். கடைசி நேரத்தில்தான் இரண்டு பேரையும் கொண்டு வந்து மேடையிலே நிறுத்தி திருமணம் நடத்தி வைப்பார்கள். இல்லையென்றால் பெண் காணாமல் போய்விடும். ஆள்கள் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள்.
திருமணத்திலே கலவரம் வரும். அது எல்லாம் இல்லாமல் இன்றைக்கு இவ்வளவு பேரை அழைத்து இந்த மணவிழாவை நடத்தி வைத்திருப்பது இந்த கொள்கை வெற்றி பெற்றிருக்கிறது பாருங்கள். அதைத்தான் அவர் தாராளம் என்று சொல்லியி ருக்கின்றார்.
பெண், மாப்பிள்ளையை ரொம்பபேர் வந்து பாராட்டியி ருக்கிறீர்கள். மாநாடு போல பாராட்டியிருக்கிறீர்கள். அதைத் தான் அய்யா அவர்கள் தாராளம் என்று சொல்லியிருக்கின்றார் என்று 50 ஆண்டுகளுக்கு முன்னாலே ராதா அவர்கள் பேசும்பொழுது சொன்னார்கள்.
தனித்த சிந்தனைவாதி
இதை எதற்காகச் சொல்லுகிறேன் என்று சொன்னால் அவருடைய சிந்தனை என்பது தனித்த சிந்தனை. அதோடு ஆழமான சிந்தனை உள்ளவர். மனித நேயத்தோடு கூடிய சிந்தனை. எல்லோருக்கும் உதவி செய்வார். அதைப் பெரிதாக விளம் பரப்படுத்தமாட்டார்.
சிங்கப்பூரில் ராதா சொன்னார்
ராதா அவர்கள் மலேசியாவில் பேசியிருக்கின்றார். சிங்கப் பூரில் பேசியிருக்கின்றார். சிங்கப்பூரில் ராதா அவர்கள் பேசும்பொழுது சொன்னார்.
நீங்கள் நிறையபேர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறீர்கள். நல்ல நடிகர்களின் கருத்து என்ன என்று கேளுங்கள். கைதட்டுங்கள். பாராட்டுங்கள். அதோடு எழுந்திருந்து போங்கள். அதற்கு மேலே எங்களிடம் ஏதோ தனித்தன்மையான தன்மை இருக்கிறது என்று நினைத்து நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.
நாங்களும் சாதாரண மனிதர்கள்
நாங்களும் சாதாரண மனிதர்கள்தான். நடிர்களும் சாதா ரணமான மனிதர்கள்தான் என்ற சிந்தனையோடு சென்றால் சரி. அதற்கு மாறாக நினைக்கும் பொழுது தான், கோளாறு வருகிறது. இவ்வளவு பச்சையாக நடிகர்களைப் பற்றி அல்லது நடிகர் களுடைய துறையைப்பற்றி சொன்னார்.
ஒரு எதார்த்தவாதியாக இருந்தார். அவர்கள் உண்மையைப் பேசக் கூடியவர்களாக இருந்தார்.
நாடகத்தில் அவர் கண்ட எதிர்ப்பு
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ராதா அவர்களுடைய நூற்றாண்டு விழாவைப் பல இடங்களில் இன்றைக்கு சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.
திரைப்படங்களிலே அவருடைய உரையாடல் அனைவ ருக்கும் தெரிந்தது. ஆனால் அவர் நாடகத் துறையில் கொள் கையைப் பரப்பிய துணிச்சல் அவர் எதிர்ப்புகளை சமாளித்த விதம் சாதாரணமானதல்ல.
யாராவது அவரை அவருடைய நாடகத்தை எதிர்த்து கூச்சல் போட்டால், அவர் எந்த வேசம் போட்டாலும் நேரடியாகப் பதில் சொல்லுவார்.
யாருடா அவன் – திரவுபதிக்கு பிறந்தவன்?
யாருடா அவன், திரவுபதிக்குப் பிறந்த பயல்? என்று கேள்வி கேட்பார் (பலத்த கைதட்டல் – சிரிப்பு). ராதா அகராதி என்கிற ஒரு தனி அகராதி போடலாம். இதுவரையிலே தமிழ் நாட்டிலே ஒரு நடிகருக்காக ஒரு தனிச் சட்டம் வந்ததே நடிகவேள் ராதா அவர்களுக்காகத்தான் வந்தது – நாடகத் தடை சட்டம் (கைதட்டல்). ராதா அவர்கள் ராமாயணம் நாடகம் போட்டார்.
இராமாயணத்தில் உள்ளபடி
அந்த நாடகம் ஆரம்பிக்கும் பொழுதே இந்த நாடகம் வால்மீகி ராமாயணத்தில் இன்னின்ன ஆதாரங்களை வைத்து எழுதப்பட்ட பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்ட ஒரு நிகழ்வுகள் ஆகும். எனவே இந்த நிகழ்வுகளைத்தான் இப்படிச் செய்கிறோம். ராமனை இப்படிக் காட்டுகிறோம் என்று சொன்னால், இது எங்களுடைய கற்பனை இல்லை என்றெல் லாம், தெளிவான அறிவிப்பைக் கொடுத்து, யாராவது மனம் புண்படுகிறது என்று நினைத்தால், என் நாடகத்தைப் பார்க்க வராதே. ஆகவே இது ஆதாரப்பூர்வமான செய்திகளே தவிர இது கற்பனை அல்ல. ஆதாரங்களை உள்ளபடியே காட்டுகின்றோம் என்று சொன்னார்.
நடிகருக்காகவே ஒரு சட்டம்
அப்பொழுதுதான் தமிழக சட்ட அமைச்சர் சி. சுப்பிரமணியம் அவர்கள் நாடக தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இந்தியாவிலேயே ஒரு நடிகருக்காக ஒரு சட்டம் கொண்டு வந்ததே- நடிகவேளைக் கண்டு ஒரு அரசு பயந்ததே நடிகவேள் ராதா அவர்களைக் கண்டுதான் (பலத்த கைதட்டல்).
தந்தை பெரியார் அவர்களைக் கண்டு மற்றவர்கள் எப்படி அஞ்சினார்களோ அதுபோல பயந்தார்கள். எனவே நடிகவேள் நடிப்பால் உயர்ந்தவர். பண்பால் உயர்ந்தவர். மனித நேயத்தால் சிறந்தவர்.
பெரியாருக்கு அடங்கியவர்
எதிர்ப்பு என்று சொன்னால் அதற்கு இன்னும் ஒரு படி அதிகமாகச் செல்லக் கூடியவர். இவ்வளவு சிறப்பானவர். யாருக்குமே அடங்காதவர். அவர் தந்தை பெரியார் அவர் களுடைய கட்டுப்பாட்டிற்குள்ளே மிகவும் அடங்கியவர்கள். அய்யா அவர்கள் என்ன சொல்லுகின்றார்களோ, அதற்கு உடனே கட்டுப்படுவார்.
திராவிடர் கழக உறுப்பினராக அவர் இல்லை
ஒருவர் ராதா அவர்களிடம் கேள்வி கேட்டார். நீங்கள் இவ்வளவு பெரிய பெரியார் பக்தனாக இருக்கின்றீர்களே நீங்கள் ஏன் திராவிடர் கழகத்தில் உறுப்பினராகவில்லை? என்று கேட்டார். நீங்கள் கருப்புச் சட்டை போடுகிறீர்கள். ஊர்வலத்தில் குதிரைமீது அமர்ந்து வருகின்றீர்கள். பெரியார் கொள்கையைத் தான் பிரச்சாரம் செய்கின்றீர்கள்.
ஆனால், திராவிடர் கழகத்தில் ஏன் உறுப்பினராக ஆக வில்லை? என்று கேள்வி கேட்டவுடனே, அதற்கு ராதா அவர்கள் பட்டென்று பதில் சொன்னார்.
கட்டுப்பாடுள்ள இயக்கம்
அவர் ரொம்ப நாணயமாகப் பதில் சொன்னார். நான் பெரியார் பக்தன். பெரியார் தொண்டன். பெரியார் கொள்கையை விரும்புகிறவன். பிரச்சாரம் செய்கின்றவன். திராவிடர் கழகத்தில் நானெல்லாம் உறுப்பினராக இருக்க முடியாது.. திராவிடர் கழகத்தில் சில கட்டுப்பாடுகள், சில நியதிகள் எல்லாம் உண்டு. சில கடும் பத்தியங்கள் எல்லாம் உண்டு. அவைகளை கடைப் பிடித்தால்தான் உறுப்பினராக இருக்கமுடியும்.
நான் அந்த மாதிரி இயக்கத்தில் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. அதற்காகத்தான் பெரியார் பற்றாளனாக இருக்கின்றேன் என்று உண்மையை அப்பட்டமாகச் சொன்ன மிகப் பெரிய ஒரு இலட்சியவாதி.
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராதா வாழ்கிறார்
எனவே இலட்சியங்கள் அவருடைய சொத்துக்கள். அவருடைய ஆற்றல் என்பது வரலாற்றை உருவாக்கக் கூடியது. வரலாற்றில் இடம் பெறுவதல்ல. வரலாற்றையே உருவாக்கக் கூடியது.
அந்த வகையிலே இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராதா வாழ்கிறார். காலத்தை வென்ற புரட்சியாளர் என்ற பெருமையோடு வாழ்ந்தார் என்று சொல்லி அவருக்கு நூற்றாண்டு விழா எடுத்த சென்னை சங்கமத்தையும் தமிழ் மய்யத்தையும், தமிழ் இயல் இசை நாடக மன்றத் துறையையும் அனைவரையும் பாராட்டி அமைகிறேன்.