Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Chidamabram’ Category

Economic upliftment for the needy – Dinamani Editorial

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

ஏழைகளின் எதிரி யார்?

“”இந்தியா அடைந்துவரும் பொருளாதார வளர்ச்சியால் பணக்காரர்களுக்குத்தான் லாபம் என்று பேசுகிறவர்கள் ஏழைகளுக்கு எதிரிகள்” என்று மதுரையில் ஒரு கல்லூரி விழாவில் பேசுகையில் காட்டமாக விமர்சித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

சிதம்பரம் எப்போதும் வார்த்தைகளை அளந்து பேசுபவர்; மாற்றுக் கருத்துகளை முன்வைக்கும்போதுகூட தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுக்காமல், தனது கருத்தை ஆழமாகப் பதிவு செய்யும் சொல்லாற்றல் மிக்கவர். அப்படிப்பட்டவர் கோபமாகப் பேசியிருப்பதற்குக் காரணம், பேசியவர்கள் மீது உள்ள கோபம் அல்ல; நல்ல நடவடிக்கைகளை இப்படியே தொடர்ந்து விமர்சித்து, எதிர்த்துக் கொண்டிருந்தால் நாடு முன்னேற வேறு என்னதான் வழி என்ற ஆதங்கம்தான். அப்படி விமர்சிக்கும் “”இடதுசாரிகளை” பெயர் குறிப்பிடாமல்தான் அவர் விமர்சித்தார் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

இந்தியாவில் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 9% என்ற அளவை நெருங்கிக் கொண்டிருந்தாலும் நாட்டு மக்களில் கணிசமானவர்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழேதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த உண்மைகளை அறியாதவர் அல்ல சிதம்பரம். எந்தத் துறை மூலமாவது நாட்டுக்கு வருமானம் கிடைத்தால்தான் அதை வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கும், பொருளாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்த முடியும். இயற்கை வளங்கள் அனைத்தையும் அரசே தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு, பொருளாதார நடவடிக்கைகளைத் தீர்மானித்து வழிநடத்துவது கம்யூனிச நாட்டில் சாத்தியம். கலப்புப் பொருளாதார முறைமையே சிறந்தது என்று நம் முன்னோடிகள் தேர்வு செய்துவிட்டதால் அதே பாதையில் நாமும் போயாக வேண்டும்.

ஏழைகளுக்காக, சுரண்டப்படுகிறவர்களுக்காகக் குரல் கொடுப்பதில் இடதுசாரிகள் முன்னே நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், பிரச்னை தீரவும், வளமை பெருகவும் உருப்படியான நல்ல யோசனைகளை அவர்கள் கூறுவதும் இல்லை, அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் மூலம் மற்றவர்களுக்கு உணர்த்துவதும் இல்லை என்பது மறுக்கப்படாத உண்மை. கேரளத்தில் மத்திய அரசின் உர நிறுவனத்தைத் தவிர அரசுத் துறையிலோ, தனியார் துறையிலோ அமைந்துள்ள மிகப்பெரிய தொழிற்சாலை என்ன?

மேற்கு வங்கத்தை எடுத்துக் கொண்டால் நிலச் சீர்திருத்தத்தில் முன்னோடியாக விளங்குகிறது என்பதோடு சரி. மின்னுற்பத்தி, சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, பாசன வசதி ஆகிய துறைகளில் அது பின்தங்கியே இருக்கிறது.

தென் மாநிலங்களைப் போல தகவல் தொழில்நுட்பத்தில் மேற்கு வங்கம் வளரவில்லை. மகாராஷ்டிரம், கர்நாடகம், குஜராத் போல தொழில் வளர்ச்சியில் செழிக்கவில்லை. மருத்துவ வசதிகளும் தரமான மருத்துவமனைகளும் இல்லாததால்தான் வங்காளிகளும் வட-கிழக்கு மாநிலத்தவர்களும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு நூற்றுக்கணக்கில் வந்து சிகிச்சை பெற்றுத் திரும்புகின்றனர்.

“”ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிலைமை கூடவே கூடாது. அது தொழிலாளர்களின் நிரந்தர வேலையைப் பறித்து, அவர்களை கூலி அடிமைகளாக்கிவிடும், சுரண்டலுக்கு அளவே இருக்காது” என்று இடதுசாரிகள் எதிர்க்கின்றனர். அதில் உண்மை இல்லாமல் இல்லை.

  • மேற்கு வங்கத்தில் அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்கள் எண்ணிக்கை 19.42%;
  • தனியார் துறையில் அந்த எண்ணிக்கை வெறும் 13.69% தான்.
  • கேரளத்தில் அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் 7.71%,
  • தனியார் துறையில் 5.39%.
  • தமிழ்நாட்டில் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர் எண்ணிக்கை 8.58%,
  • தனியார் துறையில் 11.35%.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது, இடதுசாரிகள் தாங்கள் வலியுறுத்தும் வறட்டு சித்தாந்தங்களைத் தங்களுடைய மாநிலங்களில்கூட அமல் செய்வதில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதே.

இந் நிலையில் நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு அவர்கள் மீது கோபம் வருவது நியாயம்தானே?

Posted in Budget, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Dinamani, Economy, Editorial, Finance, GDP, Needy, Op-Ed, Poor, Prices, Rich, Wealthy | Leave a Comment »

India Cuts Taxes as Election Looms, GDP Slows to 8.4%; aids farmers with big rise in social outlay

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 29, 2008

2008-09 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்

நாடு முழுவதும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி;
கல்விக்கு ரூ.34 ஆயிரம் கோடி
பெண்கள்,குழந்தைகள் மேம்பாட்டுக்கு ரூ.72 ஆயிரம் கோடி;
பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.8 சதவிகிதமாக இருக்கும்!
மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்

புதுடில்லி, பிப். 29- மத்திய நிதிய மைச்சர் ப. சிதம்பரம் இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக் கையில் விவசாயிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்தார்.

விவரம் வருமாறு:

2008 – 09 ஆம் நிதியாண்டுக் கான பொது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பொருளாதார வளர்ச்சி விகி தம் 8.8 சதவீதமாக இருக்கும் என அறிவித்தார். மத்திய பட் ஜெட் இன்று தாக்கல் செய்யப் படும் என்று அறிவிக்கப்பட்டி ருந்த் நிலையில், மிகுந்த எதிர் பார்ப்பு மற்றும் பரபரப்புக்கி டையே பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியது.
நிதியமைச்சர் ப.சிதம்ப ரத்தை பட்ஜெட்டை தாக்கல் செய்யுமாறு சபாநாயகர் சோம் நாத் சாட்டர்ஜி கேட்டுக் கொண்ட அடுத்த வினாடியே, எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் ஒரு சில பிரச்சினைகளை எழுப்பி கூச்சலிட்டனர்.

பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.8 சதவிகிதம்
மிகுந்த சிரமத்திற்கிடையே அவர்களை அமைதிபடுத்தி சிதம்பரம் பட்ஜெட்டை தாக் கல் செய்தார். பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.8 சதவீதமாக இருக்குமென அறிவித்தார். அதேபோன்று பண வீக்கம் கட்டுக்குள் வைக்கப்படும் என் றும் அவர் கூறினார்.
மேலும் பல்வேறு அறிவிப்பு களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கு ரூ.7,200 கோடி
வரும் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.7,200 கோடி ஒதுக்கீடு செய் யப்படுகிறது.
குழந்தைகள் மேம்பாட்டுக் கான ஒதுக்கீடு 24 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி
இன்று தாக்கல் செய்யப் பட்ட மத்திய பொதுபட்ஜெட் டில் சிறிய மற்றும் மிகக் குறைந்த லாபமடையும் விவ சாயிகள் அனைவருக்கும் வேளாண் கடன்கள் முற்றிலும், ஏறக்குறைய ரூ.60,000 கோடி தள்ளுபடி செய்யப்படும் என நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார்.
இதன் மூலம் 4 கோடி விவ சாயிகள் பயனடைவார்கள்.2 ஹெக்டேர் வரை வைத்துள்ள சிறிய மற்றும் மிகக் குறைந்த லாபமடையும் விவசாயிகள் இந்தப் பயனாளிகள் பட்டிய லில் வருவார்கள். தேசிய வேளாண் காப்பீட்டு திட் டத்திற்கு 644 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
நாடு முழுவதும் மண் பரி சோதனைக் கூடங்கள் அமைக்க 500 சோதனைக் கூடங்கள் அமைக்கப்படும்.
200 மாவட்டங்களில் நட மாடும் மண் பரிசோதனைக் கூடங்கள் ஏற்படுத்தப்படும்.
சொட்டு நீர்ப்பாசன திட் டத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக் கீடு செய்யப்படும் 53 சிறு நீர்ப் பாசன திட்டங்கள் அமல் படுத்தப்படும் எனறு சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்புக்கு ஒதுக்கீடு ரூ.1,05,600 கோடியாக உயர்வு
பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு ரூ.1,05,600 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 10 சதவிகிதம் அதிகமாகும். 2007-08-ம் நிதியாண்டில் நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு ரூ.96 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது. கல்விக்கு ரூ.34,400 கோடி ஒதுக்கீடு
2008-09- ஆம் நிதியாண்டுக் கான மத்திய அரசின் பொது பட்ஜெட்டில், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளுக் கான ஒதுக்கீடு 20 சதவிகித அளவில் உயர்த்தப்படுகிறது.
கல்விக்கு ரூ.34,400 கோடி ஒதுக்கீடு
அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு 13,500 கோடி ஒதுக்கீடு.
6,000 மாதிரி உயர்நிலைப் பள்ளிகள் அமைக்கப்படும்.
6 ஆயிரம் மாவட்டங்களில் நவோதய வித்யாலயாக்கள்.
410 கிராமங்களில் வித்யா லயாக்கள்.
மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
மதிய உணவுத் திட்டம் நடு நிலைப் பள்ளிகள் வரை நீட் டிப்பு
புதிதாக 16 மத்திய பல் கலைக்கழகங்கள் அமைக்கப் படும் ஆந்திரா, பிகார் மற்றும் ராஜஸ்தானில் புதிய அய்.அய்.டி. கல்வி நிறுவனங்கள்.
அறிவுசார் சமுதாயம் அமைக்க ரூ.85 கோடி.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு மத்திய பல்கலை.
நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் வீதம் ஒரு மத் திய பல்கலைக்கழகம் அமைக் கப்படும் கல்வி மற்றும் சுகா தாரம் ஆகிய துறைகளுக்கான ஒதுக்கீடு 20 சதவிகித அளவில் உயர்த்தப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டு 16 மாநிலங்களில் மத்திய பல் கலைக் கழகங்கள் முதற்கட்ட மாக அமைக்கப்படுகிறது.

சென்னை அருகே ரூ.300 கோடி செலவில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க ஒதுக்கீடு
அனைவருக்கும் கல்வித் திட் டத்திற்கான ஒதுக்கீடு ரூ.13,500 கோடி.

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான ஒதுக்கீட்டில் 20 சதவிகிதம் உயர்வு.
பாரத் நிர்மாண் திட்டத் திற்கு ரூ.31,250 கோடி ஒதுக்கீடு.
சுகாதாரத் துறைக்கு ரூ.16,534 கோடி ஒதுக்கீடு – 15 சதவிகிதம் உயர்வு.
எய்ட்ஸ் / எச்.அய்.வி. கட்டுப் படுத்த அதிக நிதி ஒதுக்கீடு.
தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்திற்கான ஒதுக்கீட்டில் 15 சதவிகிதம் உயர்வு.
தனி நபர் வருமான வரி – விலக்குக்கான உச்சவரம்பு ரூ.1,10,000-லிருந்து ரூ.1,50,000-ஆக உயர்வு.
பெண்களுக்கு ரூ.1,80,000 ஆக நிர்ணயம்.
மூத்த குடிமக்களுக்கு ரூ.2,25,000 வரை வருமான வரி விலக்கு.
இந்த சலுகை மூலம் வரு மான வரி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் குறைந்தது ரூ.4000 சேமிப்பு.
வருமான வரி விகிதங்கள்:
ரூ.1,50,000 – ரூ.3 லட்சம் வரை 10 சதவிகிதம்.
ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரை 20 சதவிகிதம்.
ரூ.5 லட்சத்திற்கு மேல் 30 சதவிகிதம்.
மத்திய அரசு ஊழியர்களின் 6 ஆவது ஊதியக் குழு அறிக்கை மார்ச் 31-க்குள் சமர்ப்பிக்கப்படும்.
காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுப் போட்டிக ளுக்கு ரூ.624 கோடி ஒதுக்கீடு.
ஜவுளி பூங்காக்கள் அமைக்க ரூ.450 கோடி.
மின்துறை சீரமைப்புக்கு ரூ.800 கோடியில் திட்டம்.
ராஜீவ் காந்தி குடிநீர் திட் டத்திற்கு ரூ.7300 கோடி ஒதுக் கீடு.
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு ரூ.16,447 கோடி ஒதுக்கீடு.
ஒருங்கிணைந்த குழந்தை கள் மேம்பாட்டுத் திட்டத் திற்கு ரூ.6,300 கோடி ஒதுக்கீடு.
சிறுபான்மையினர் அதிக மாக வாழும் மாவட்டங் களுக்கு ரூ.540 கோடி ஒதுக்கீடு.
மகளிருக்கான தனித் திட்டங்களுக்கு ரூ.11,460 கோடி.
தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதியுதவி கழகத் திற்கு ரூ.75 கோடி.
——————————————————————————————————————————–
மேலும் ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு காப்பீடு: சிதம்பரம்

புதுதில்லி, பிப். 29: மேலும் ஒரு கோடி குடும்பங்கள் பயனடையும் வகையில் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அமைப்பு சாரா துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு படிப்படியாக சமூகப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில், சாதாரண மக்களுக்கான காப்பீட்டுத் திட்டம், தேசிய காப்பீட்டுத் திட்டம், இந்திரா தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் மேலும் ஒரு கோடி ஏழைக் குடும்பங்கள் பயனடையும். சாதாரண மக்களுக்கு காப்பீடு திட்ட செயலாக்கத்தின் 2 வது ஆண்டிற்காக ஆயுள்காப்பீட்டு நிறுவனத்திற்கு கூடுதலாக ரூ. 1000 கோடி தருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் வெள்ளிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்த போது தெரிவித்தார்.

தேசிய சுகாதார காப்பீடுத் திட்டம் வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும்.

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கு 2008-09 ம் ஆண்டில் ரூ.3343 கோடி ஒதுக்கப்படும்.

இதன் மூலம் பயனாளிகளின் எண்ணிக்கை 87 லட்சத்திலிருந்து 1 கோடியே 57 லட்சமாக உயரும்.

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவரும் கடந்த நவம்பர் 19 ம் தேதியில் இருந்து இத்திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

————————————————————————————————————————————————————————–
சிதம்பரமும் மேற்கோள்களும்

புது தில்லி, பிப். 29: மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, தமிழ் இலக்கியம் மற்றும் மூத்த அறிஞர்களின் மேற்கோள்களை சுட்டிக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். பெரும்பாலும் இவரது பட்ஜெட் உரையில் திருக்குறள் இடம்பெறும்.

வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட்டிலும் வள்ளுவரின் திருக்குறள் வரிகளுடனே தனது 2 மணி நேர உரையை நிறைவு செய்தார் சிதம்பரம்.

“கொடை அளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்

உடையான்ஆம் வேந்தர்க்கு ஒளி.”

என்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார். அத்துடன் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மேற்கோளான,””யார் அதிகம் செய்கிறானோ, அதிக தடவை முயல்கிறானோ, அவனே அதைத் திறம்பட செய்யத் தகுதியுடையவன்,” என்பதைச் சுட்டிக்காட்டினார்.

பட்ஜெட் உரையில் குறிப்பிட்ட அனைத்தையும் நிறைவேற்றியுள்ளதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டிய அவர், இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பினால், ஆம் நம்மால் நிச்சயம் முடியும் என்பதே பதிலாக இருக்கும் என்று குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த வளர்ச்சி குறித்து ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டதையும் சிதம்பரம் சுட்டிக்காட்டினார்.

1996-97-ம் ஆண்டு சிதம்பரம் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில்,

“”இயற்றலும், ஈட்டலும், காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு.”

என்ற குறளை மேற்கோள் காட்டினார்.

2004-05-ம் ஆண்டு பட்ஜெட்டில் டிக்கன்ஸன் நாவலில் வரும் ஒரு கதாபாத்திரத்துடன் தன்னை உவமைப்படுத்தி, “நல்ல காரியங்கள் நற்செயல்களால் விளையும், நற்சொற்களால் அல்ல,” என்று குறிப்பிட்டார்.

அப்போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் “மேன் ஹுன் நா’ என்றார். அது அப்போது மிகவும் பிரபலமாகும். இறுதியில்

“”அறன்இழுக்காது அல்லவை நீக்கி, மறன் இழுக்கா

மானம் உடையது அரசு.”

என்ற குறளுடன் நிறைவு செய்தார்.

2005-06-ம் ஆண்டு பட்ஜெட்டில்,

“”பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்

அணிஎன்ப நாட்டிற்கு இவ் வைந்து.”

என்ற குறளை சுட்டிக்காட்டினார். அத்துடன் பொருளாதார நிபுணர் அமார்த்தியா சென் தனது புத்தகத்தில் குறிப்பிட்ட,””மேம்பாட்டு நடவடிக்கைகளே உண்மையான சுதந்திரமாகும். இதன்மூலம்தான் மக்கள் மகிழ்ச்சியடைவர்,” என்ற வாசகங்களைச் சுட்டிக்காட்டினார்.

2007-08-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில்,

“”கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு

உரிமை உடைத்து இவ்வுலகு.”

என்ற குறளை மேற்கோள் காட்டினார் சிதம்பரம்.

அத்துடன் ஹென்றி டேவிட் தோரோவின் வாசகங்களான,””காற்றில் அரண்மனை கட்டினால், அதில் உங்கள் உழைப்பு வீணாகாது.

நீங்கள் எப்படி கட்டவேண்டும் என்று நினைத்தீர்களோ அப்படியே இருக்கும். அதற்கான அடித்தளத்தை தற்போது அமையுங்கள்,” என்று குறிப்பிட்டதைப்போல ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வலுவான பொருளாதாரத்துக்கு அடித்தளம் அமைக்கிறது, அதிலிருந்து வரும் தலைமுறையினர் கோட்டையைக் கட்டலாம் என்று குறிப்பிட்டார்.

அத்துடன் விவேகானந்தரின் பொன்மொழிகளான, “”எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம். நமது தலைவிதியை நாமே நிர்ணயிக்கிறோம்.

தற்போது காற்று வீசுகிறது; காற்றின் திசைக்கு எதிர்த் திசையில் சில கப்பலும், காற்றின் திசைக்கேற்ப சில கப்பலும் செல்லும்.

காற்றை பயன்படுத்திக் கொள்ளாததது காற்றின் குற்றமல்ல. அதைப்போல நாம் செல்ல வேண்டிய இலக்கை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்,” என்ற மேற்கோளையும் சிதம்பரம் நினைவுகூர்ந்தார்.

2007-08-ம் ஆண்டு பட்ஜெட்டில்,

“”உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேம்என் பார்க்கும் நிலை.”

என்ற திருக்குறளை சுட்டிக் காட்டினார்.

அதிவேகமான பொருளாதார வளர்ச்சி அவசியம். அதன்மூலம்தான் ஏழ்மையை ஒழிக்க முடியும் என்ற நோபல் அறிஞர் டாக்டர் யூனுஸின் மேற்கோளோடு உரையை நிறைவு செய்தார்.

————————————————————————————————————————————————————————–
சிதம்பரத்தின் சலுகைகள் நிறைந்த தேர்தல் பட்ஜெட்: ரூ. 60 ஆயிரம் கோடி விவசாயக் கடன் ரத்து

ரத்து செய்யப்பட்ட கடன் தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. இதை எந்த வகையில் சமாளிக்கலாம் என்பதை திட்டமிட்டுள்ளோம். }ப. சிதம்பரம்

புது தில்லி, பிப். 29: பல்வேறு சலுகைகள் நிறைந்த தேர்தல் பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்தார்.

அனைத்துத் தரப்பினரையும் குறிப்பாக விவசாயிகளை அதிகம் திருப்திபடுத்தும் வகையிலான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

சிதம்பரம் தாக்கல் செய்யும் ஐந்தாவது முழு பட்ஜெட் இது.

2008-09-ம் ஆண்டின் வரி வருவாய் ரூ. 6,02,935 கோடி. செலவு ரூ. 6,58,119 கோடி. வருவாய் பற்றாக்குறை ரூ. 55,184 கோடி.

2008-09-ம் ஆண்டின் திட்டச் செலவு ரூ. 2,43,386 கோடி. இது மொத்த செலவில் 32 சதவீதமாகும். திட்டம் சாரா செலவு ரூ. 5,07,498 கோடி.

ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை ரூ. 1,33,287 கோடி.

விவசாயக் கடன் ரூ. 60 ஆயிரம் கோடி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 கோடி விவசாயிகள் பயனடைவர்.

இதேபோல மாதாந்திர சம்பளதாரர்களுக்கு ஆண்டு வருமான வரி விலக்கு வரம்பு தற்போது ரூ. 1.10 லட்சத்திலிருந்து ரூ. 1.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு வருமான வரிச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி பண பரிமாற்ற வரி விதிப்பு முறை முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது.

சிறிய ரகக் கார், மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்டவற்றுக்கான உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீர் சுத்திகரிப்பு கருவிகள், காலை உணவு, காகிதம், காகித அட்டை உள்ளிட்டவற்றுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் ஃபில்டர் அல்லாத சிகரெட் விலை உயரும்.

உற்பத்தித் துறைக்கு உத்வேகம் அளிப்பதற்காக சென்வாட் வரி 16 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வரிச் சலுகை அளிக்கப்பட்டதால் மறைமுக வரி ரூ. 5,900 கோடி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வங்கி பண பரிமாற்ற வரி கைவிடப்பட்டதை ஈடுகட்டும் வகையில் பொருள்கள் பரிமாற்றக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய விற்பனை வரி 3 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ராணுவத்துக்கான ஒதுக்கீடு ரூ. 1.05 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் காமன்வெல்த் போட்டி 2010-ம் ஆண்டு நடைபெற உள்ளதால் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவை கட்டுவதற்கு ரூ. 624 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுவிநியோக உணவுப் பொருளுக்கான மானியத் தொகை ரூ. 32,667 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கனவு திட்டமான தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ. 16 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதான திட்டமான “பாரத் நிர்மாண்’ திட்டத்துக்கு ரூ. 31,280 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பப் புரட்சியை கிராமப்பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்காக மாநில தகவல் மையம் ஏற்படுத்தப்படும். இத்தகைய மையத்துக்காக ரூ. 275 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய மையங்களை ஒருங்கிணைக்க ரூ. 450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதியோர் நலனுக்காக ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொழில் பயிற்சி மையங்கள் 300-ஐ மேம்படுத்த ரூ. 750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடன் சுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுப்பதற்காகவும், வேளாண் துறைக்கு உத்வேகம் அளிப்பதற்காகவும் ரூ. 60 ஆயிரம் கோடி சலுகை அளிக்கப்பட்டதை பல கட்சிகள் வரவேற்றுள்ள போதிலும், இது தேர்தலை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

விவசாயக் கடன் தள்ளுபடிக்கான ஒதுக்கீடு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, இதுகுறித்து சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு,””இந்தத் தொகை வங்கிகளுக்கு திரும்ப அளிக்கப்படலாம் அல்லது அளிக்காமலும் போகலாம். இதனால் வங்கிகளுக்கு ஏற்படும் நிதிச் சுமை மூன்று ஆண்டுகளில் அவற்றுக்கு திரும்ப அளிக்கப்படும்,” என்றார்.

ரத்து செய்யப்பட்ட கடன் தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. இதை எந்த வகையில் சமாளிக்கலாம் என்பதை திட்டமிட்டுள்ளோம். அந்த நுணுக்கங்களைக் கடைப்பிடித்து அதை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்பதை நம்புங்கள் என்றார் சிதம்பரம்.

“”இது தேர்தலை மையமாகக் கொண்ட பட்ஜெட் அல்ல. இந்தியாவில் ஆண்டுதோறும் தேர்தல் நடைபெறுகிறது. இதனாலேயே ஆண்டுதோறும் தேர்தலை மையமாகக் கொண்ட பட்ஜெட்,” என்று கூறுவது வழக்கமாக உள்ளது என்றார் சிதம்பரம்.

சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு 300 கோடி

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சென்னை அருகே செயல்படுத்தப்படும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார்-பொதுத்துறை இணைந்து செயல்படுத்தும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டமொன்றுக்கு தமிழக அரசு தற்போது அனுமதி கேட்டுள்ளது. இத்திட்டம் பரிசீலனை செய்யப்படும் என்றார் அவர்.

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இதன் மூலம் ரூ.1000 மாத ஊதியமாக பெற்று வந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும். ரூ.500 பெற்று வந்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு ரூ.750 வழங்கப்படும்.

இதன் மூலம் 18 லட்சம் அங்கன்வாடி ஊழியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6-வது ஊதிய கமிஷன் மார்ச் 31-ல் அறிக்கை

ஆறாவது ஊதிய கமிஷன் மார்ச் 31-ம் தேதி தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கிறது.

நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெள்ளிக்கிழமை பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஊதிய கமிஷன் அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் என்று தெரிவித்தார்.

சாதா சிகரெட்களுக்கு கடும் வரி உயர்வு

மத்திய பட்ஜெட்டில் சாதாரண சிகரெட்களுக்கான உற்பத்தி வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் இவ் வகை சிகரெட்களின் விலையும் கடுமையாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது.

அதேநேரத்தில் பில்டர் சிகரெட்களுக்கான வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நீளம் குறைந்த (60 எம்.எம்) சாதாரண சிகரெட்டுகளுக்கு உற்பத்தி வரி தற்போது 1000-க்கு ரூ. 168 விதிக்கப்படுகிறது. இது ரூ.819 -ஆக உயர்த்தப்படுகிறது.

————————————————————————————————————————————————————————–

வரிச் சலுகைகள் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவும்: சிதம்பரம்

புதுதில்லி, பிப். 29: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள் தொழில்துறை வளர்ச்சிக்கு தூண்டுதலாக அமையும் என்று நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

வரிச் சலுகைகளால் மக்களுக்கு பணம் மிச்சமாகும். கையில் பணம் மிச்சமாகும் போது அதைக் கொண்டு புதிய பொருள்கள் வாங்குவார்கள். இது தொழில்துறை வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும் என்றார் அவர்.

வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டதால் மக்களின் கைகளில் பணப் புழக்கம் அதிகரிக்கும். இதனால் நுகர்வு அதிகரிக்கும். இது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

நுகர்வு அதிகரிக்கும் போது தேவை அதிகரிக்கும். குறிப்பாக கார், இரண்டு சக்கர வாகனங்கள் போன்றவற்றின் தேவை அதிகரிக்கும். இது உற்பத்தி பெருக வழிவகுக்கும் என்றார் அவர்.

நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி வீதம் சராசரியாக 8.8 சதவீதமாக இருக்கும்.

இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி வீதம் 9.1 சதவீதத்திலிருந்து 8.4 சதவீதமாக குறைந்துவிட்டது. இந்த சரிவுக்கு தொழில்துறை உற்பத்தியில் ஏற்பட்ட தேக்கமே காரணம்.

உற்பத்தி வரி 16 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாகக் குறைக்கப்பட்டது, சில பொருள்களுக்கு சுங்க வரிக் குறைப்பு போன்ற மறைமுக வரிக் குறைப்புகளால் அரசுக்கு ரூ. 5900 வருமான இழப்பு ஏற்படும்.

இந்த பட்ஜெட்டில் தொழில்துறை புறக்கணிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டபோது, அவர்களுக்கு என்ன தேவை இருக்கிறது. அவர்கள் மீது எந்த சுமையையும் சுமத்தவில்லையே என்றார் சிதம்பரம்.

அதற்குப் பதிலாக வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் கார்ப்பரேட் துறை பயன் அடையும் என்றார் சிதம்பரம்.

————————————————————————————————————————————————————————–
4 கோடி விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் பட்ஜெட்

புது தில்லி, பிப். 29: நான்கு கோடி விவசாயிகளின் 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்வதாக நிதி அமைச்சர் ப. சிதம்பரம் 2008-09-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்தார்.

அரசு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் 2007 மார்ச் 31 வரை அளித்த கடன்கள் அனைத்தும் ரத்தாகிறது. இவை 3 கோடி சிறு, குறு விவசாயிகள் வாங்கியது. வசூலிக்கப்பட முடியாமல் நிலுவையில் இருந்த 50,000 கோடி ரூபாய் இந்த வகையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சிறு விவசாயிகள் என்போர் 1 ஹெக்டேர் முதல் 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருப்பவர்கள். குறு விவசாயிகள் என்போர் அதிகபட்சம் ஒரு ஹெக்டேர் மட்டுமே நிலம் வைத்திருப்போர்.

வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடனை பாக்கி வைத்திருக்கும் இதர விவசாயிகள், தாங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையில் 75 சதவீதத்தை அதாவது முக்கால் பங்கைச் செலுத்திவிட்டால், அரசு 25 சதவீதத்தை அதாவது கால் பங்கைத் தள்ளுபடி செய்துவிடும். அப்படி தள்ளுபடியாகக் கூடிய தொகை மட்டும் பத்தாயிரம் கோடி ரூபாய். இதனால் ஒரு கோடி விவசாயிகள் கடன் நிவாரணம் பெறலாம். அதாவது 30 ஆயிரம் கோடி ரூபாய் கடனை இவர்கள் திருப்பிச் செலுத்தினால் 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் ரத்தாகிவிடும்.

இந்தக் கடன் தள்ளுபடி நடவடிக்கைகள் 2008 ஜூன் 30-க்குள் முடிக்கப்பட வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்துக் கொண்டுள்ளது.

2,80,000 கோடி: சாகுபடிக்கு புதிதாகக் கடன் தேவைப்படும் விவசாயிகள் உடனடியாக வங்கிகளை அணுகலாம். ரூ.2,80,000 கோடி கடன் தொகை தயாராக இருக்கிறது. குறுகிய கால விவசாயக் கடன்களுக்கான வட்டி 7 சதவீதமாகவே தொடரும். விவசாயத்துக்கான வட்டி குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டும் அரசு 2008-09-ம் நிதி ஆண்டுக்கு ரூ.1,600 கோடியை ஒதுக்கியிருக்கிறது.

பாசனத்துக்கு: பாசன வசதிகளை அளிக்க 2008-09-ம் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இது 11,000 கோடியாகத்தான் இருந்தது.

விரைவுபடுத்தப்பட்ட பாசன பயன்பாட்டுத் திட்டத்தின் கீழ் 24 பெரிய -நடுத்தர திட்டங்களும் 753 சிறு பாசன திட்டங்களும் இந்த நிதியாண்டில் நிறைவேற்றப்படும். இதனால் 5 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்குப் பாசன வசதி கூடுதலாகக் கிடைக்கும்.

4 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு சொட்டுநீர், இறைவைப் பாசனம் மூலம் தண்ணீர் வழங்க ரூ.500 கோடி ஒதுக்கப்படுகிறது.

புதிய கார்ப்பரேஷன்: பெரிய, நடுத்தர பாசன திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்க புதிய பாசன-நீர்வள நிதி கார்ப்பரேஷன் உருவாக்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசு ஆரம்ப மூலதனமாக ரூ.100 கோடி வழங்கப்படவுள்ளது.

தோட்டக்கலை பயிர்: தோட்டக்கலைப் பயிர் சாகுபடியின் கீழ் மேலும் 2,76,000 ஹெக்டேர் நிலங்கள் வந்திருப்பதால் ஊக்குவிப்பு அடைந்துள்ள அரசு தேசிய தோட்டக்கலை இயக்கத்துக்கு ரூ.1,100 கோடி வழங்குகிறது. தென்னை, முந்திரி, மிளகு ஆகியவற்றில் சாகுபடியை ஊக்குவிக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.

2009 மார்ச்சுக்குள் நாட்டின் 250 மாவட்டங்களில் மண் பரிசோதனைக்கான நடமாடும் ஆய்வுக்கூடங்களை நிறுவ ரூ.75 கோடி மத்திய வேளாண் துறைக்கு ஒதுக்கப்படும்.

இதுமட்டும் அல்லாமல் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் அரசுத்துறையிலும் தனியார் துறையிலுமாக 500 மண் பரிசோதனை ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு ஆய்வகத்துக்கும் அரசு ரூ.30 லட்சம் நிதி உதவி அளிக்கும் என்றார் சிதம்பரம்.

————————————————————————————————————————————————————————–
சிறுபான்மையினர் நலனுக்கு நிதிஒதுக்கீடு இருமடங்கு உயர்வு

புதுதில்லி, பிப். 29: மத்திய பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலனுக்கான நிதிஒதுக்கீடு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிறுபான்மையினரின் முன்னேற்றத்துக்காக பல்நோக்கு வளர்ச்சித் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெள்ளிக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சிறுபான்மையினர் நல அமைச்சகத்துக்கு 2007-08 ஆம் ஆண்டு ரூ.500 கோடி மட்டுமே நிதிஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 2008-09 ஆம் ஆண்டில் இந்த நிதி ஒதுக்கீடு இருமடங்காக அதிகரிக்கப்பட்டு ரூ.1000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 90 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு வசிக்கும் சிறுபான்மையின மக்களின் முன்னேற்றத்துக்காக ரூ.3780 கோடியில் பல்நோக்கு வளர்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக இந்த நிதியாண்டில் முதல்கட்டமாக ரூ.540 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இதுதவிர மதரஸôக்களை நவீனப்படுத்த ரூ.45 கோடியும் சிறுபான்மையின பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ரூ.80 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வசிக்கும் மாவட்டங்களில் அரசு வங்கிகளின் 288 கிளைகள் நடப்பு ஆண்டில் கூடுதலாக திறக்கப்படும்.

மத்திய பாதுகாப்புப் படையில் சிறுபான்மை இனத்தவர்கள் கூடுதலாக பணியில் அமர்த்தப்படுவார்கள்.

————————————————————————————————————————————————————————–
ஈரோட்டில் விசைத்தறி மேம்பாட்டுக் கழகம்

புதுதில்லி, பிப். 29: ஈரோட்டில் விசைத்தறி மேம்பாட்டுக்காக மிகப்பெரிய குழுமம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விவரம்:

ஜவுளித்துறையில் உள்கட்டமைப்பையும், உற்பத்தியையும் மேம்படுத்துவதற்காக 6 மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகப்பெரிய குழுமங்களாக உருவாக்கப்படவுள்ளன.

விசைத்தறிக்காக ஈரோடு மற்றும் பிவண்டியும், கைத்தறிக்காக வாராணசி மற்றும் சிப்சாகரும், கைவினைக் கலைகளுக்காக நர்சாபூர் மற்றும் மொராதாபாத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குழுமத்திற்கும் ரூ. 70 கோடி தேவைப்படுகிறது. 2008-09 ம் துவக்க நிதியாண்டில் ரூ.100 கோடியுடன் இத்திட்டதிற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளன.

————————————————————————————————————————————————————————–
ஏழைகளுக்கான வீட்டுவசதி திட்டத்துக்கு மானியம் அதிகரிப்பு

புது தில்லி, பிப். 29: பாரத் நிர்மாண் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படும் இந்திரா வீட்டுவசதி திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் மானியத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:

சமவெளி பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கான மானியம் வீடு ஒன்றுக்கு ரூ.25,000-லிருந்து ரூ.35 ஆயிரமாக ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படும்.

மலை மற்றும் சிக்கலான பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கு இத்தொகை ரூ.27,500-லிருந்து ரூ.38.500 ஆக அதிகரிக்கப்படுகிறது.

தேசிய வேளான் காப்பீட்டுத் திட்டம்: தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.644 கோடி ஒதுக்கப்படும். இத்திட்டம் தற்போதைய நிலையிலேயே கரீப் மற்றும் ராஃபி பருவங்களிலும் தொடரும். ஐந்து மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் சோதனை ரீதியாக செயல்படுத்தப்படவுள்ள தட்ப வெப்ப அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கப்படும்.

தேயிலைச் செடிகளை மறுநடவு செய்யவும், புத்துருயிரூட்டவும் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட தேயிலை நிதியத்துக்கு ரூ.40 கோடி அளிக்கப்படும். இதே போன்று ஏலக்காய்க்கு ரூ.10.68 கோடியும், ரப்பர் பயிருக்கு ரூ.19.41 கோடியும், காபி பயிருக்கு ரூ.18 கோடியும் நிதியுதவி அளிக்கப்படும்.

ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியம்:: ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின் தொகுப்பு நிதியை ரூ.14,000 கோடியாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்தின் கீழ் கிராமப்புற சாலைகளுக்கான தனிப்பிரிவு ரூ.4,000 கோடி தொகுப்பு நிதியுடன் அமைக்கப்படவுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டம்: தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ.10,867 கோடியிலிருந்து ரூ.12,966 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம்: தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த சேவைகளின் வளர்ச்சிக்கான ஒதுக்கீடு ரூ.1,500 கோடியிலிருந்து 1,680 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பொது சேவை மையங்களுக்கு ரூ.75 கோடியும், சவான் திட்டத்துக்கு ரூ.450 கோடியும், மாநில தகவல் மையங்களுக்கு ரூ.275 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான முதலீடுகளுக்கும் அரசு ஊக்கம்: நடப்பு நிதியாண்டில் இறுதியில் சேமிப்பு விகிதம் 35.6 சதவீதமாகவும், முதலீட்டு விகிதம் 36.3 சதவீதமாகவும் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதே போக்கு அந்நிய முதலீட்டிலும் பிரதிபலிக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் அந்நிய நேரடி முதலீடு 12.7 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் அந்நிய நிறுவன முதலீடு 18 பில்லியன் டாலராகவும் இருந்தது.

அனைத்து விதமான முதலீட்டையும் உள்நாடு, வெளிநாடு தனியார் மற்றும் பொதுத்துறையை ஊக்கப்படுத்துவதே அரசின் கொள்கையாகும்.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு பங்குகள் வாயிலாக ரூ.16,436 கோடியும், கடன்கள் வாயிலாக ரூ.3,003 கோடியும் மத்திய அரசு அளிக்கவுள்ளது. இதுவரை 44 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் அதிக நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை மேம்படுத்துவதே அரசின் திட்டம் என்றார் அவர்.

————————————————————————————————————————————————————————–
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ரூ. 22,948 கோடி

புதுதில்லி, பிப். 29: மத்திய பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவருக்கு மொத்தம் ரூ. 22,948 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உதவித் திட்டங்கள் மற்றும் நலத் திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். இதை மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்தார்.

இதில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின விமான ஓட்டிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம், உயிரி தொழில்நுட்பத் துறை மூலம் இப் பிரிவினருக்கான உயிரி தொழில்நுட்பத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கீடு ரூ. 3965 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 3,450 கோடி.

இதுதவிர தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான மொத்த நிதிஒதுக்கீடு ரூ. 22,948 கோடி. இதில் ஊனமுற்றோருக்கான நிவாரண திட்டங்கள், இந்த இனத்தைச் சேர்ந்தவர்களுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களும் அடங்கும்.

————————————————————————————————————————————————————————–
மருத்துவக் காப்பீட்டுக்கு வரிச் சலுகை

புது தில்லி, பிப். 29: பெற்றோரின் மருத்துவ சுகாதாரக் காப்பீட்டுக்கு செலுத்தப்படும் தொகைக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி வழக்கமான வரி சலுகையுடன் கூடுதலாக ரூ.15 ஆயிரத்துக்கு வரிச் சலுகை அளிக்கப்படும். பெற்றோர் மூத்த குடிமக்களாக இருக்கும்பட்சத்தில் ரூ.20 ஆயிரத்துக்கு வரிச்சலுகை அளிக்கப்படும். இது ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

நீதிமன்றங்கள் கணினிமயம்: நீதிமன்றங்களுக்கு அடிப்படைக் கட்டுமான வசதிகள் மற்றும் கணினிமயமாக்குவதற்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறை நிர்வாகத்துக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்குக்கு மேலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பட்ஜெட்டில் ரூ.108.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2008-09 பட்ஜெட்டில் இது 253.12 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வழங்கப்படுவதை விரைவுபடுத்துவதற்காக மாவட்ட மற்றும் கீழ்நீதிமன்றங்களை கணினிமயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காகவே இந்த ஆண்டு ரூ.115 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு நீதிமன்றங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி இந்த பட்ஜெட்டில் ரூ.2 கோடியிலிருந்து ரூ.13 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அருணாசலப் பிரதேசத்துக்கு ரூ.500 கோடி சிறப்பு நிதி: அருணாசலப் பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக சிறப்பு நிதியாக ரூ.500 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநிலத்தில் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய-பாக். எல்லை பணி: இந்தியா -பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.124 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் இரு மடங்காகும்.

இந்திய -வங்கதேச எல்லையில் முள்வேலி உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளுக்காக ரூ.484.23 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.76.74 கோடி குறைவாகும்.

————————————————————————————————————————————————————————–
ராணுவ ஒதுக்கீடு ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது


புதுதில்லி, பிப். 29: பொது பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒரு லட்சத்து 5600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 96 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் 92 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது.

அதிநவீன ஹெலிகாப்டர்கள் மற்றும் 155 மி.மி. பீரங்கிகள் வாங்கும் பேரம் கடைசி நேரத்தில் ரத்தானதால் ரூ.3500 கோடி செலவழிக்கப்படவில்லை.

முதன்முறையாக பாதுகாப்பு பட்ஜெட் ரூ.1 லட்சம் கோடியை தாண்டினாலும், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளோடு ஒப்பிடும்போது இந்த நிதி குறைவு என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ராணுவத்துக்கு இரண்டு சதவீதத்துக்கும் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 5 சதவீதமும், சீனாவில் 7 சதவீதமும் நிதி ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

————————————————————————————————————————————————————————–
கிராமப்புற சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு


புது தில்லி, பிப். 29: தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்திற்கான ஒதுக்கீட்டை ரூ.12,050 கோடியாக உயர்த்துவதற்கு அரசு உத்தேசித்துள்ளது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம்தான் கிராமப்புற மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதற்கான முக்கிய திட்டம்.

சமுதாயமே நடத்தும் பரவலாக்கப்பட்ட சுகாதார கட்டமைப்பை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம். இதற்காக 4,62,000 பணியாளர்களுக்கு பயிற்சி தரப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

1,77,924 கிராம சுகாதார மற்றும் கழிப்பிட குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. 323 மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்திற்கு ரூ.993 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இளம்பிள்ளைவாத நோய் ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.1042 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
————————————————————————————————————————————————————————–

கிராமங்களில் கட்டப்படும் மருத்துவமனைகளுக்கு 5 ஆண்டுகள் வரிவிலக்கு

புதுதில்லி, பிப். 29: கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் புதிதாக கட்டப்படும் மருத்துவமனைகளுக்கு பொது பட்ஜெட்டில் ஐந்து ஆண்டுகள் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்றும், குறிப்பிட்ட சில நகரங்கள் மட்டும் இந்த சலுகையைப் பெற முடியாது என்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இதன்படி 2008 ஏப்ரல் 1 முதல் 2013 மார்ச் 31 வரை வரிவிலக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்ட சுற்றுலாத் தலங்களில், 3 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்கள் கட்டுபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வருமான வரிச் சலுகை அளிக்கப்படும் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

————————————————————————————————————————————————————————–

கல்வித் துறைக்கு ரூ.34,400 கோடி

புது தில்லி, பிப். 29: பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ரூ.34,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். கல்வித்துறைக்கு கடந்த ஆண்டு ஒதுக்கீட்டை விட 20 சதவீதம் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கல்வித்துறைக்கு ரூ.28, 674 கோடி ஒதுக்கப்பட்டது. நடப்பாண்டில் ரூ.34,400 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதில் சர்வசிக்ஷா அபியான் திட்டத்திற்கு ரூ.13,100 கோடியும், மதிய உணவு திட்டத்திற்கு ரூ.8,000 கோடியும், இடைநிலைக் கல்விக்கு ரூ.4,554 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

2008-09-ம் ஆண்டின் மாதிரி பள்ளி திட்டத்தின் கீழ் 6,000 உயர்தர மாதிரிபள்ளிகள் துவக்கப்படவுள்ளன. இந்த திட்டத்திற்காக ரூ.650 கோடி பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

————————————————————————————————————————————————————————–
வடகிழக்கு பகுதிக்கு சிறப்பு கவனம்

புதுதில்லி, பிப். 29: மத்திய பட்ஜெட்டில் வடகிழக்கு பகுதிக்கு தொடர்ந்து சிறப்பு கவனமும், அதிக நிதி ஒதுக்கீடும் அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்திற்கு ரூ.1445 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பிராந்தியத்திற்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு 2007-08 ல் ரூ.14,365 கோடியாக இருந்தது. 2008-09 ல் ரூ.16,447 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு எல்லைப்புற பகுதிகள் சில பிரத்யேக சிக்கல்களை எதிர்கொள்கின்றன. இவற்றை வழக்கமான திட்டங்களின் கீழ் சரி செய்ய இயலாது.

எனவே சிறப்பு ஏற்பாடுகள் மூலம் பூர்த்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

————————————————————————————————————————————————————————–
பட்ஜெட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் திட்டங்கள்: பச்சோரி வரவேற்பு

புதுதில்லி, பிப். 29: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத தொழில்நுட்பம், எண்ணங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நிலையான அமைப்பை ஏற்படுத்த பட்ஜெட்டில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதை ஆர்.கே.பச்சோரி வரவேற்றுள்ளார்.

நோபல் பரிசு பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஐ.நா.வின் தட்பவெப்ப மாறுதல் குழுவின் தலைவருமான ஆர்.கே.பச்சோரி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதைத் தெரிவித்துள்ளார்.

அரசின் முக்கியமான கொள்கைகளில் தட்பவெப்ப மாறுதல் தொடர்பான திட்டங்கள் இடம்பெறும் என்பது நிதியமைச்சர் சிதம்பரத்தின் பட்ஜெட் முலம் விளங்குகிறது. இது திருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

————————————————————————————————————————————————————————–

தகவல் ஒலிபரப்புக்கு ரூ. 300 கோடி கூடுதல் நிதி

புதுதில்லி, பிப். 29: தகவல் ஒலிபரப்புத்துறைக்கு 2008 – 09 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரசார பாரதிக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு 95.7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டுக்கு ரூ. 326.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ. 160 கோடி அதிகம்.

சர்வதேச ஒலிபரப்பு மையத்தைத் தொடங்குவதற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் சிதம்பரம் கூறினார். 2010-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை பிரசார் பாரதி பெற்றுள்ளது.

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்கு 79 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2008 – 09 ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 8 கோடி.

கேளிக்கை மற்றும் ஊடகம், சினிமா துறைகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

————————————————————————————————————————————————————————–

விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன திட்டத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி

புதுதில்லி, பிப். 29: விரைவுபடுத்தப்பட்ட நீர்பாசன திட்டத்திற்கான 2008-09 ம் ஆண்டிற்கான மதிப்பீட்டுச் செலவாக ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் சிதம்பரம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அவர், விரிவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 24 பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசன திட்டங்களும், 753 சிறிய நீர்ப்பாசன திட்டங்களும் இந்த நிதியாண்டியில் நிறைவேற்றப்படுகிறது.

மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒதுக்கீடு ரூ.348 கோடியாகும். மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் குறு நீர்ப்பாசன திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 4 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு பயன்பெறும் என்றார்.

————————————————————————————————————————————————————————–

பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்க முயற்சி

புது தில்லி, பிப். 29: பட்ஜெட் தயாரிப்பின்போது 3 வகையான பற்றாக்குறைகளை குறைப்பது அல்லது கட்டுக்குள் வைப்பதில்தான் நிதியமைச்சரின் திறமை இருக்கிறது. இப்படி பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைப்பதை அனைவருமே கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே “”நிதி பொறுப்பு, பட்ஜெட் நிர்வாகச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது.

பட்ஜெட் பற்றாக்குறை, வருவாய் இனத்தில் பற்றாக்குறை, அரசுக்கு வர வேண்டிய நிதி, அரசு செய்ய வேண்டிய செலவு ஆகியவற்றுக்கு இடையிலான பற்றாக்குறை என்று இவை 3 வகைப்படும்.

பொது வரவு செலவில் பற்றாக்குறை என்பது, அரசு தனக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்று கூறுவதற்கும், தனக்கு எவ்வளவு செலவாகும் என்று கூறுவதற்கும் இடையே உள்ள இடைவெளி ஆகும்.

வருவாய் இனத்தில் பற்றாக்குறை என்பது நேர்முக, மறைமுக வரிகள் மூலம் அரசு எதிர்பார்க்கும் தொகைக்கும் உண்மையில் கையில் கிடைக்கும் (இலக்கைவிடக் குறைவாக உள்ள) தொகைக்கும் இடையிலான பற்றாக்குறையாகும்.

மற்றொரு பற்றாக்குறை அரசுக்கு உண்மையிலேயே கிடைக்கும் வருவாய்க்கும், அதுசெய்யும் செலவுகளுக்கும் இடையிலான பற்றாக்குறை எவ்வளவு என்று பட்ஜெட்டிலேயே தெரிவிக்கப்படுவதாகும்.

பொது வரவு-செலவில் பற்றாக்குறை என்பது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி, சேவை மதிப்பில் 3 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பதுதான் “நிதி பொறுப்பு, பட்ஜெட் நிர்வாகச் சட்டம்’ விதிக்கும் முக்கிய நிபந்தனையாகும்.

நிதியமைச்சர் ப. சிதம்பரம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட்டில் அரசின் பட்ஜெட்படியிலான பற்றாக்குறை ரூ.1,33,287 கோடியாக இருக்கிறது. இது மொத்த உற்பத்தி மதிப்பில் 2.5 சதவீதம்தான்.

2007-08 ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டுடன் ஒப்பிட்டால் இதன் அளவு 3.1% ஆக இருக்கிறது. இதை நிதியமைச்சர் சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்தபோது சுட்டிக்காட்டினார்.

இந்த பட்ஜெட்டில் சிதம்பரம் அறிவித்துள்ள சலுகைகள், வரிச் சீரமைப்பு காரணமாக அரசுக்கு வரும் வருவாய் சற்று குறையும் வாய்ப்பு தெரிகிறது. எனவே அரசுக்கு வருவாய் கணக்கில் பற்றாக்குறை ஏற்படும் என்று தெரிகிறது.

வறுமை ஒழிப்புக்கும், கடன் நிவாரணத்துக்கும், சமூகத்தின் அடித்தள கட்டமைப்பை மேம்படுத்தும் துறைகளுக்கும் இந்த பட்ஜெட்டில் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இப்போது அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய்க்கும் கிடைத்துக் கொண்டிருக்கும் வருவாய்க்கும் இடையிலான பற்றாக்குறை 1.5% ஆக இருக்கிறது. அடுத்த பட்ஜெட்டில் இது 1% ஆக குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மத்திய அரசுக்கு வருவாய் இனங்கள் மூலம் ரூ.6,02,935 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் செலவு ரூ.6,58,119 கோடியாக இருக்கும்.

வருவாய் கணக்கில் இப்போது நிலவும் பற்றாக்குறையை முழுதாகப் போக்க மேலும் ஓராண்டு பிடிக்கலாம் என்று நிதியமைச்சர் சிதம்பரம் சுட்டிக்காட்டினார்.

————————————————————————————————————————————————————————–
ரூ.1.50 லட்சம் வரை வருமான வரி இல்லை

புதுதில்லி, பிப். 29: மாத ஊதியம் பெறுவோருக்கான வருமான வரி விலக்கு ரூ.1.10 லட்சம் ரூபாயில் இருந்து ரூ.1.50 லட்சமாக அதிகரிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மக்களவையில் அறிவித்தார்.

வருமானத்துக்கு ஏற்ப விதிக்கப்படும் வரி விகிதத்தில் சில மாறுதல்களையும் அவர் செய்துள்ளார்.

இதன்படி ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் சுமார் 4000 ரூபாய் வரை பலன் கிடைக்கும். ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம் உள்ளவர்கள் தற்போதுள்ள வரி விகிதத்தின்படி ரூ.2,49,000 வருமான வரி செலுத்துகின்றனர். இனிமேல் புதிய வரி விகிதப்படி அவர்களது வருமானவரி 2,05,000 ரூபாயாகக் குறையும். அதாவது அவர்களுக்கு அதிகபட்சம் ரூ.44,000 வரி குறையும்.

பெண்களுக்குச் சலுகை

ஆண்டுக்கு ரூ.1.45 லட்சம் வரை வருமானம் உள்ள பெண்கள் வருமான வரி செலுத்துவதில் இருந்து இதுவரை விலக்கு அளிக்கப்பட்டது. இனிமேல் (2008-2009) ரூ.1.80 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள பெண்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம் உள்ள பெண்கள் செலுத்த வேண்டிய வருமானவரி 2,45,500 ரூபாயில் இருந்து 2,02,000 ரூபாயாகக் குறையும்.

மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு தற்போதுள்ள ரூ.1.95 லட்சத்திலிருந்து ரூ.2.25 லட்சமாக உயர்த்தப்படும். ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம் உள்ள மூத்த குடிமக்கள் செலுத்த வேண்டிய வருமான வரி 2,36,000 ரூபாயில் இருந்து 1,97,500 ரூபாயாகக் குறையும்.

புதிய வரி விகிதம் கணக்கிடப்படும் முறை

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு அவர்களது வருமானத்தில் ரூ.1.50 லட்சம் வரை வருமான வரி கணக்கிடப்படமாட்டாது.

ரூ.1.50 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 15,000 ரூபாயும், ரூ. 3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 40,000 ரூபாயும், ரூ. 5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரியும் கணக்கிடப்படும்.

பழைய வரி விகிதப்படி இந்த வரியானது ரூ.4000, ரூ.35,000, ரூ.60,000, ரூ.1.50 லட்சம் என்று கணக்கிடப்பட்டது. அதே நேரத்தில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் சர்சார்ஜ் 10 சதவீதம் வசூலிக்கப்படுவது தொடரும்.

பெற்றோருக்காக மருத்துவ இன்சூரன்ஸ் தொகை செலுத்துவோருக்கு வருமான வரியில் இருந்து ரூ.15,000 குறைக்கப்படும். வருமான வரிச் சட்டத்தின் 80 சி பிரிவின்கீழ் தற்போதுள்ள சேமிப்பு உச்சவரம்பான ஒரு லட்சம் ரூபாய் தவிர இந்த 15,000 ரூபாய் வரிக்குறைப்பு இருக்கும்.

————————————————————————————————————————————————————————–
தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட போலீஸôருக்கு சிறப்பு பயிற்சி மையங்கள்

புதுதில்லி, பிப். 29: தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட போலீஸôருக்கு சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ரூ. 12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி மாநில அரசுகள் இந்த சிறப்புப் பயிற்சி மையங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த மையங்களில் போலீஸôருக்கு நவீன பயிற்சி அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் தமது பட்ஜெட் உரையில் கூறினார்.

இது தவிர சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க நேபாளம் மற்றும் பூடான் எல்லைகளில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். இதற்கு ரூ. 35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நக்ஸலைட்டுகள் உள்ளிட்ட தீவிரவாதிகளை ஒடுக்க பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும். பாதுகாப்புப் படையினரின் திறமையை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காக ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிரிமினல் குற்றங்கள் மற்றும் கிரிமினல்களை துப்புத் துலக்கும் நெட்வொர்க் முறைக்கு ரூ. 210 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர காவல் நிலையங்களை நவீனப்படுத்தவும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

————————————————————————————————————————————————————————–
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ரூ. 22,948 கோடி

புதுதில்லி, பிப். 29: மத்திய பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவருக்கு மொத்தம் ரூ. 22,948 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உதவித் திட்டங்கள் மற்றும் நலத் திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். இதை மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்தார்.

இதில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின விமான ஓட்டிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம், உயிரி தொழில்நுட்பத் துறை மூலம் இப் பிரிவினருக்கான உயிரி தொழில்நுட்பத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கீடு ரூ. 3965 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 3,450 கோடி.

இதுதவிர தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான மொத்த நிதிஒதுக்கீடு ரூ. 22,948 கோடி. இதில் ஊனமுற்றோருக்கான நிவாரண திட்டங்கள், இந்த இனத்தைச் சேர்ந்தவர்களுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களும் அடங்கும்.

————————————————————————————————————————————————————————–

மோடி மஸ்தான் பட்ஜெட்…

“அடேங்கப்பா…’ என்று வாயைப் பிளக்கும்படியான சலுகைகள் – 60,000 கோடி ரூபாய் விவசாயக் கடன் ரத்து; வருமானவரி விலக்குக்கான வரம்பு அதிகரிப்பு; மருந்துகள் மீதான கலால் வரி பாதிக்குப் பாதி குறைப்பு; தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், அமைப்புசாரா தொழிலாளர்கள், பெண்கள், முதியோர் என்று அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் நோக்கத்துடன், 55 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார் நமது நிதியமைச்சர்.

“இது ஒரு விவசாயிகள் பட்ஜெட்’ – என்று பிரமிக்க வைக்கும் இந்த நிதிநிலை அறிக்கையின் தாக்கம் எப்படி இருக்குமோ தெரியாது. ஆனால், நோக்கம் என்னவோ நிச்சயமாகத் தேர்தல்தான் என்று அடித்துச் சொல்லும் அளவுக்கு அப்பட்டமாகத் தெரிகிறது. அது பலமா அல்லது பலவீனமா என்பது இப்போது தெரியாது.

இந்த 60,000 கோடி ரூபாய் கடன் ரத்து, நமது விவசாயிகளின் பிரச்னைகளை எல்லாம் தீர்த்து, விவசாயிகள் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மீண்டுமொரு விவசாயப் புரட்சிக்கு வழிகோலும் என்று யாராவது நினைத்தால், மிஞ்சுவது என்னவோ ஏமாற்றமாகத்தான் இருக்கும். அதற்குக் காரணம், இந்தக் கடன் நிவாரணம், பெரும் நிலச்சுவான்தார்களுக்குத்தான் ஆறுதலாக அமையப் போகிறதே தவிர சிறு விவசாயிகளுக்கு அல்ல என்பதுதான் உண்மை.

பொருளாதாரப் புள்ளிவிவர அறிக்கையின்படி, இந்தியாவிலுள்ள மொத்த விவசாயிகளில் 48.6 சதவிகிதம் பேர் கடனில் தத்தளிக்கிறார்கள். அவர்களில் 61 சதவிகிதம் பேர் இரண்டு ஏக்கருக்கும் குறைவாக விவசாயம் செய்பவர்கள். அதுமட்டுமல்ல, விவசாயிகளின் மொத்தக் கடனில் 57.7 சதவிகிதம்தான் வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் போன்றவைகளிலிருந்து பெறப்பட்டவை.

மீதி 42.3 சதவிகிதம் தனியாரிடமும், வியாபாரிகளிடமும், நிலத்தை ஒத்திக்கு வைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் பெற்ற கடன்கள். இதுபோன்று தனியாரிடம் விவசாயிகள் பெற்ற கடன் தொகை 2003 புள்ளிவிவரப்படி சுமார் 4,800 கோடி. இப்போது வட்டி, குட்டி போட்டு எத்தனை ஆயிரம் கோடிகள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

இரண்டு ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருக்கும் ஏழைகளில் மிகக் குறைந்த சதவிகிதத்தினர்தான் வங்கிகளில் கடன் வாங்கியவர்கள். பெரும்பகுதி கிராமப்புற விவசாயிகளும் தனியாரிடம் கடன்பட்டவர்களாக இருப்பதால்தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அவர்களுக்கு இந்த 60,000 கோடி ரூபாய் நிவாரணம் எந்த வகையில் உதவப் போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

அப்படியே அத்தனை கடன்களும் ரத்து செய்யப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் அடுத்த போக விளைச்சலுக்குத் தயாராவார்களா என்றால் அதுவும் இல்லை. அதற்குப் பணம் வேண்டுமே? மீண்டும் கடன் வாங்க வங்கிகளுக்குப் போகப் போகிறார்களா, இல்லை தனியாரிடம் போகப் போகிறார்களா? இனி அடுத்த கடன் தள்ளுபடியை எதிர்பார்த்துக் காலத்தை ஓட்டப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இதேபோலத்தான், இந்த நிதிநிலை அறிக்கையில் வாரி இறைக்கப்பட்ட சலுகைகள் பலவும், குறுகிய கண்ணோட்டத்துடன் செய்யப்பட்டதாகத் தெரிகிறதே தவிர, தொலைநோக்குப் பார்வையுடனும், பிரச்னைகளுக்கு முழுத் தீர்வாக அமையும் விதத்திலும் இருக்கிறதா என்றால் இல்லை. போதாக்குறைக்கு, விலைவாசியை அதிகரிக்கும் விதத்தில் 55,184 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை வேறு.

இந்த நிதிநிலை அறிக்கையைப் பலரும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பட்ஜெட் என்று வர்ணிக்கிறார்கள். தெரிந்து சொல்கிறார்களோ, தெரியாமல் சொல்கிறார்களோ, உண்மையைச் சொல்கிறார்கள். தேர்தலுக்குக் காங்கிரஸ் செலவழிக்க வேண்டிய பணத்தை அரசு கஜானா மூலம் செலவழித்துத் தனது வாக்கு வங்கியை விஸ்தரிக்க முற்பட்டிருக்கும்போது, அதை காங்கிரஸின் தேர்தல் பட்ஜெட் என்று சொல்வதில் தவறே இல்லை.

மோடி மஸ்தான் பாணியில் ஒரு கண்கட்டு வித்தையை, நிதிநிலை அறிக்கை என்கிற பெயரில் அரங்கேற்றி இருக்கிறார் நிதியமைச்சர்

ப. சிதம்பரம். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், ஆஹா ஓஹோ… ஆழ்ந்து சிந்தித்தால், ஊஹும்… ஊஹும்…

Posted in Budget, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Economy, Elections, Farmers, Finance, India, Polls | 1 Comment »

Don’t rush to cut policy rates: Monetary, fiscal recipe for overheating India

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 22, 2007

வங்கிகளில் அரசு தலையீடு?

எஸ். கோபாலகிருஷ்ணன்

வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மோட்டார் வாகனத் தொழில் சார்ந்த மூத்த நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், வங்கிக் கடன்களுக்கான வட்டிவீதத்தைக் குறைக்க வேண்டும் என்று யோசனை கூறினார். இது வெறும் யோசனை அல்ல, அரசின் ஆணை என்றே பலர் கருதினர்.

அதற்கேற்ப, ஓரிரு தினங்களில், சில வங்கிகளின் உயர்நிலை நிர்வாகிகள் வட்டி குறைக்கப்பட வேண்டியதுதான் என்று வழிமொழிந்தனர். அக்டோபர் 10, பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன், மோட்டார் வாகனக் கடன், டிரக் கடன் ஆகியவற்றுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்தது. இதர வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வட்டியைக் குறைத்தன.

வங்கிகள் தங்கள் கடனுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், இந்த நிகழ்வு, வேறு சில கருத்துகளுக்கும் இடம் அளித்துவிட்டது. பொதுமக்களிடமிருந்து டெபாசிட் திரட்டுவதும், திரட்டிய பணத்தை வாடிக்கையாளர்களுக்குக் கடனாக வழங்குவதும் வங்கிகளின் தலையாய தொழில். அதேபோல், பொதுமக்களின் டெபாசிட் தொகைக்கு எவ்வளவு வட்டி கொடுப்பது மற்றும் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு எவ்வளவு வட்டி வசூலிப்பது என்பதை நிர்ணயிப்பதும் வங்கிகளின் பணியே.

இந்த நியதி, அரசு உள்பட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால், பொருளாதார சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டபின்னர், மத்திய அரசு இந்த நியதியைப் பெரும்பாலும் கடைப்பிடிக்கவும் செய்தது.

விவசாயக் கடன், சிறுதொழில் கடன், மாணவர்களுக்குக் கல்விக் கடன் உள்ளிட்ட முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் கடன்கள் தொடர்பான விதிமுறைகள் தவிர பிறகடன்களுக்கான வட்டிவீதத்தை வங்கிகளே வணிகரீதியில் நிர்ணயிக்கின்றன.

வைப்புத்தொகைகளுக்கான வட்டிவீதத்தையும் ஒவ்வொரு வங்கியும் அவ்வப்போது தனது தேவைகளுக்குத் தகுந்தபடி கூட்டியோ குறைத்தோ வழங்குகிறது. எல்லா வங்கிகளுக்கும் ஒரே சீரான வட்டிவீதத்தை நிர்ணயிக்கும் வழக்கத்தை ரிசர்வ் வங்கி கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விதிவிலக்காக, சேமிப்பு கணக்குக்கான வட்டிவீதம் மட்டுமே அனைத்து வங்கிகளுக்கும் ஒரே சீராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் வட்டிவீதத்தைக் குறைக்கும்படி யோசனை கூறியதும், அதை வங்கிகள் விரைந்து செயல்படுத்தியதும், ஒரு பொது விவாதத்திற்கு இடமளித்திருப்பதில் வியப்பேதும் இல்லை.

பொதுத்துறை வங்கிகளின் பெரும்பான்மைப் பங்குதாரர் மத்திய அரசுதான். முன்னதாக பாரத ஸ்டேட் வங்கியின் பெரும்பான்மைப் பங்குகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்தன. ஆனால், அண்மையில் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளை மத்திய அரசு வாங்கிக் கொண்டது.

நாட்டின் 80 சதவிகித வங்கிப் பணிகளை பொதுத்துறை வங்கிகள்தான் மேற்கொள்கின்றன. புதிய தலைமுறை தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி போன்றவை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தபோதிலும், நாட்டின் ஒட்டமொத்த வங்கிச்சேவையில் தனியார்துறை வங்கிகளின் பங்கு குறைவாகவே உள்ளது.

இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளின் கடன்களுக்கான வட்டிவீதம் உயர்ந்ததால் மோட்டார் வாகன உற்பத்தியும் விற்பனையும் சரிந்துள்ளன. புதிய வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனை நம்பியிருந்தவர்கள் மனம் தளர்ந்து போனார்கள். காரணம், வட்டிவீதம் அதிகரித்ததால் மோட்டார் வாகனங்கள் மற்றும் வீடுகளின் அடக்கவிலைகளும் அதிகரித்துவிட்டன. இது பொருளாதார மந்தநிலைக்கு வழி வகுக்கக்கூடும் என்ற கவலை மேலீட்டால் மத்திய நிதி அமைச்சர் தமது யோசனையை வெளியிட்டிருக்கக்கூடும். ஆகவே, இதை அரசியல் தலையீடாகக் கருதக்கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.

இது ஒருபுறமிருக்க, பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கும், இயக்குநர் குழுக்களுக்கும் சமுதாயக் கடமை உண்டு. வணிக ரீதியில் வெறும் லாபநோக்கோடு மட்டுமல்லாமல், பொருளாதார மந்தநிலை ஏற்படும் நிலைமை தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பு பொதுத்துறை வங்கிகளுக்கு இருக்கிறது.

அண்மையில் நிகழ்ந்த கடன்களுக்கான வட்டி உயர்வுக்கு காரணம், வங்கிகள் அல்ல; ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கையே என்பது புலனாகும்.

ரிசர்வ் வங்கியின் தலையாய கடமைகளில் ஒன்று, நிதி மற்றும் கடன் கொள்கையை முடிவு செய்து 6 மாதங்களுக்கு ஒரு முறை அறிவிப்பதாகும். இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, விலைவாசியையும் பணவீக்க வீதத்தையும் கட்டுப்படுத்துவது. இரண்டாவது, தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடனைத் தங்குதடையின்றி கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது.

முன்னதாக, அசுர வேகத்தில் உயர்ந்து கொண்டிருந்த பணவீக்கவீதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

வங்கிகளின் உபரிப் பணத்தை உறிஞ்சுவதற்காக, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பை மேலும் அரை சதவிகிதம் அதிகரித்தது. அதற்கு முன்பு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டிவீதத்தையும் (ரெப்போ ரேட்) உயர்த்தியது.

இந்த நடவடிக்கைகளால் பணவீக்கவீதம் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில், வங்கிகளின் கடனுக்கான வட்டிவீதம் உயர்வதற்கும் அது வழிவகுத்துவிட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கிகளில் வைப்புத்தொகை அதிகரித்ததைவிட, வங்கிக்கடன் தொகையே அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 30 சதவீதம் அளவுக்கு வங்கிக்கடன் அதிகரித்து வந்துள்ளது. வட்டி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

இந்நிலையில், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற சமிக்ஞை ரிசர்வ் வங்கியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டுமே அல்லாமல், அரசுத் தரப்பிலிருந்து அல்ல என்பது தெளிவு.

இதற்கிடையே, டெபாசிட்களுக்கான வட்டியும் குறையத் தொடங்கியுள்ளது என்பது கவலை தரும் விஷயம். தங்களது வாழ்நாள் சேமிப்பிலிருந்து கிடைக்கக்கூடிய வட்டியை மட்டுமே நம்பி வாழ்க்கைநடத்தும், பணி ஓய்வுபெற்றவர்களுக்கும், நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் யார்?

நடுத்தர மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும்விதத்தில் அவர்களுடைய வைப்புத்தொகைக்கான வட்டிவீதத்தைக் குறைக்காமல் பார்த்துக்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

இந்த உயிர்நாடிப் பிரச்னையை வெறும் வணிகரீதியில் அணுகாமல், மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய இழப்பை ஒரு சுமையாக ரிசர்வ் வங்கி கருதலாகாது. ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் உதவுவதை ஒரு சமுதாயக் கடமையாகக் கருத வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

Posted in Agriculture, Assets, Auto, Automotive, Banking, Banks, BOB, Bonds, BSE, Cars, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chit Funds, Chitfunds, Chithambaram, Commerce, Cooperative, Credit, CRR, Deflation, Deposits, Dollar, Economy, Enforcement, Exchange, Farmers, FD, Finance, Financing, fiscal, Govt, HDFC, ICICI, Index, Indices, Inflation, Insurance, Interest, investments, IOB, KVB, Land, liquidity, Loans, markets, Micro-financing, Microloans, Minister, Monetary, Motor, NIFTY, NSE, Overnight, Overnite, Parts, Policy, Property, Rates, RBI, reserves, ROI, Rupee, Rupees, Rupya, SBI, Schemes, Shares, Spare, Stocks, Student, Treasury | Leave a Comment »

Kattumannarkoil District Court – Facilities & Infrastructure issues

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 17, 2007

நீதிமன்றத்துக்கு விமோசனம் எப்போது?

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம், அக்.17: சிதம்பரத்தை அடுத்த காட்டுமன்னார்கோயில் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் ரூ.11,500 வாடகையில் பெரியகுளம் வடக்குத் தெருவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் 7 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இந்த கட்டடத்தில் போதுமான வசதி இல்லாததால் பொதுமக்களும், வழக்கறிஞர்களும் அவதியுற்று வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் வழக்கறிஞர் சங்கம் இயங்கி வந்த கட்டடம் இடிந்து விழுந்தது. பின்னர் அக்கட்டடம் கட்டப்பட்டது. 3 கழிவறைகளில் இரு கழிவறைகள் இடிந்து விழுந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. நீதிமன்ற வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த இடம் கிடையாது.

பொதுமக்கள் வெயில், மழை ஆகியவற்றுக்கு ஒதுங்கக்கூட இடம் கிடையாது. நீதிமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என காட்டுமன்னார்கோயில் வழக்கறிஞர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு கோரிக்கை விடுத்னர். அதையடுத்து புதிய இடம் வாங்கி கட்டடம் கட்ட உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதற்காக காட்டுமன்னார்கோயில் உடையார்குடி ரம்சான் தைக்கால் என்னுமிடம் தேர்வு செய்யப்பட்டது.

மேற்கண்ட இடம் சிதம்பரம் – திருச்சி நெடுஞ்சாலையில் உள்ளது. சுமார் 100 சென்ட் வரை எவ்வித உபயோகமும் இன்றி உள்ளது. இந்த இடம் ரம்சான் தைக்கால் பள்ளிவாசலுக்கு சொந்தமானது. இந்த பள்ளிவாசல் சொத்து அனைத்தும் தமிழ்நாடு வக்ஃப் வாரிய கட்டுப்பாட்டிலும், மேற்பார்வையிலும் உள்ளது. இந்த சொத்தை வக்ஃப் வாரியத்திடம் இருந்து விலைக்கு வாங்கி புதிய நீதிமன்ற கட்டடம் கட்ட அனுமதி வழங்கி கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதிக்கு கடந்த 23-06-2006 அன்று சென்னை உயர் நீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது.

ஏழை பாமர மக்கள் வசிக்கும் பகுதியான காட்டுமன்னார்கோயிலில் பெண்கள் அதிக அளவில் தங்கள் பிரச்னைகளுக்கு மனுக்கள் கொடுத்து நிலுவையில் இருந்து வருகிறது. பெண் வழக்கறிஞர்கள் இருந்தும் மகளிருக்கான சமரச மையம் இந்த நீதிமன்றத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காட்டுமன்னார்கோயில் நகர எல்லைக்குட்பட்ட பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் அரசால் கட்டப்பட்ட திருமண மண்டபம் எந்த உபயோகமும் இல்லாமல் மூடப்பட்டு கிடக்கிறது. அனைத்து வசதிகளும் உள்ள இந்த இடத்துக்கு நீதிமன்றத்தை மாற்றலாம். இல்லையென்றால் தற்போது தாலுகா அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு மாற்றம் செய்யப்படவுள்ளது.

எனவே பழைய தாலுகா அலுவலக கட்டடத்தில் நீதிமன்றத்தை மாற்றலாம் என வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே 1977 வரை அங்கு நீதிமன்றம் இயங்கி வந்தது. அந்த நீதிமன்றம் பின்னர் பரங்கிப்பேட்டைக்கு மாற்றப்பட்டது.

எனவே காட்டுமன்னார்கோயில் நீதிமன்றக் கட்டடம் கட்ட மாவட்ட ஆட்சியர் இடத்தை விரைவில் தேர்வு செய்து அளித்தால் நீதிமன்றத்துக்கு விமோசனம் கிடைக்கும் என்கின்றனர் வழக்கறிஞர்கள்.

Posted in Attorney, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Court, facilities, infrastructure, Judges, Jury, Justice, Kaattumannaarkoil, Kaattumannaarkovil, Kaattumannarkoil, Kaattumannarkovil, Kattumannaarkoil, Kattumannarkoil, Kattumannarkovil, Law, Lawyer, Order, Panchayat, Panchayath, Panjayat, Panjayath, Parangipettai, Parangippettai, Parankipettai, Parankippettai, Thiruchi, Thiruchirapalli, Thiruchirappalli, Thiruchy, Trichy | 1 Comment »

Controlling Inflation & Avoiding Recession – RBI & Stagflation

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

ரிசர்வ் வங்கியின் கை வைத்தியம்!

ரிசர்வ் வங்கிக்கு உள்ள பல கடமைகளில் தலையாய கடமை, பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதுதான் என்பது அதன் சமீபகால நடவடிக்கைகளைக் கவனிக்கும்போது எளிதில் புலனாகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5%-க்கும் மேல் இருக்கிறது, பணவீக்க விகிதம் 5%-க்கும் குறைவாக இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சமீபகாலத்தில் அதிகரித்து சராசரியாக 40 ரூபாயாக இருக்கிறது. வங்கிகளிடம் டெபாசிட் பணம் அபரிமிதமாக இருக்கிறது. இத்தனை இருந்தும் மக்களிடம் நிம்மதியோ, வாங்கும் சக்தியோ குறிப்பிடும்படி இல்லை.

“”மக்கள்” என்று இங்கே நாம் குறிப்பிடுவது பெரும்பாலானவர்களான நடுத்தர, ஏழை மக்களைத்தான். நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் சக்திக்கே சவால் விடுவதைப் போல தங்கத்தின் விலையும், நிலத்தின் விலையும் (வீட்டுமனை) உயர்ந்துகொண்டே வருகின்றன. இந்நிலையில் அவர்களுடைய சேமிப்பைப் பாதுகாக்கவும், அதற்கு சுமாரான வருமானத்தையும் தருவது வங்கிகள் தரும் வட்டிவீதம்தான். ஆனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அந்த வட்டிவீதத்துக்குத்தான் ரிசர்வ் வங்கி குறிவைக்கிறது என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம்.

உலக அரங்கில், இந்தியப் பொருளாதாரத்தின் வலிமைக்கான காரணங்களாக உள்ள அம்சங்களை ஆராய்ந்த வல்லுநர்கள், வருவாயில் ஒரு பகுதியைப் பிற்காலத்துக்காகச் சேமித்துவைக்க வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவின் ஏழைகளிடம்கூட இருப்பதையும், அதைச் செயல்படுத்துவதையும் சுட்டிக்காட்டி, பாராட்டியுள்ளனர். ரிசர்வ் வங்கி இந்த சேமிப்புப் பழக்கத்தை மேலும் ஊக்குவிக்க முயல வேண்டுமே தவிர, மக்களை விரக்தியின் விளிம்புக்கு விரட்டக் கூடாது.

நஷ்டம் வரக்கூடாது என்று மத்திய அரசே முனைப்புக் காட்டி வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியைக் குறைப்பதும், வங்கிகளில் போடப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டியைக் குறைப்பதும் நல்லதல்ல. அந்த நடவடிக்கைகளை நடுத்தர, ஏழை மக்களின் சேமிப்பு மீதான “”மறைமுக வரி” என்றே கூற வேண்டும்.

வங்கிகளிடம் மிதமிஞ்சி சேர்ந்துவிட்ட டெபாசிட்டுகளால் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உபரிப் பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. அதை உறிஞ்சுவதற்காக, வங்கிகளின் ரொக்கக் கையிருப்பை மேலும் 0.5% அதிகரித்து, 7% ஆக்கியிருக்கிறது. இப்படி ரொக்கக் கையிருப்பு விகிதத்தை உயர்த்திய பிறகும்கூட அதிகபட்சம் 16 ஆயிரம் கோடி ரூபாயைத்தான் புழக்கத்திலிருந்து உறிஞ்ச முடியும். வங்கிகளிடம் உள்ள மொத்த டெபாசிட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.4,90,000 கோடியாகும்.

வீடுகட்ட கடன் வாங்கியவர்களும், இனி வாங்க நினைப்பவர்களும் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் மனம் தளர்ந்து போய்விட்டார்கள். வீட்டுக் கடனுக்கான வட்டி வீதத்தைக் குறைத்து, வீடமைப்புத் திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்வேகத்தைத் தரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அது பொய்த்துவிட்டது. இனி வீட்டுக் கடனுக்கான வட்டி உயர்ந்தாலும் வியப்பதற்கு ஏதும் இல்லை.

விலைவாசியைக் கட்டுப்படுத்த, பண அச்சடிப்பைக் கட்டுப்படுத்துவது ஒரு வழி என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது. விலைவாசியைக் குறைக்க வேண்டும் என்றால் உற்பத்தியைப் பெருக்குவதும், பொது விநியோக முறையை வலுப்படுத்துவதும்தான் உற்ற வழிகள்.

இடைத்தரகர்கள், ஊகபேர வியாபாரிகள், கள்ளச்சந்தைக்காரர்கள், முன்பேர வர்த்தகர்கள் ஆகியோரை ஒடுக்காவிட்டாலும், எச்சரிக்கும் விதத்திலாவது ஓரிரு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தால் சற்று ஆறுதலாக இருக்கும்.

சிக்கனத்துக்கும் சேமிப்புக்கும் பெயர்பெற்ற இந்தியர்களைக் கடன் சுமையில் ஆழ்த்தவே பன்னாட்டு வங்கிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் 24 மணி நேரமும் தீவிரமாக உழைக்கின்றன. நம் மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும் விதத்தில் ரிசர்வ் வங்கியாவது செயல்படலாம் இல்லையா? இதனால் சில நூறு கோடி ரூபாய்கள் வருமானம் குறைந்தாலும்கூட அதைப் பெரிய இழப்பாக மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கருதலாமா?

————————————————————————————————–
கவலைப்பட யாருமே இல்லையா?

Dinamani op-ed (August 7 2007)

வீட்டுக் கடன்களுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை என்று அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம். பணவீக்க விகிதம் குறைந்தால் மட்டுமே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும் என்றும் கூறியிருக்கிறார்.

இருக்க இடம் என்பது, உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் இயற்கையான லட்சியம். ஆனால், சொந்த வீடு என்கிற இந்த கனவு நனவானதுடன் நிற்காமல், ஒரு நிரந்தர நரகமாகவும் ஆகிவிட்டால் எப்படி இருக்கும்? வீட்டுக் கடன் வாங்கிக் கனவு நனவானவர்களின் நிலைமை அதுதான்.

ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர், அத்தனை வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வீட்டுக் கடன் வழங்க முன்வந்தன. நகர்ப்புறங்களில் திரும்பிய இடத்திலெல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் காளான்கள்போல முளைத்தன.

வாடிக்கையாளர்களிடம் இரண்டு வகையான வீட்டுக் கடன் வசதி முன்வைக்கப்பட்டது. முதலாவது வகை வீட்டுக் கடனில் வட்டி விகிதம் அதிகம். ஆனால், கடன் அடைந்து முடியும்வரை இந்த வட்டி விகிதம் மாறாது என்பதால் திருப்பி அடைக்க வேண்டிய மாதாந்திரத் தவணைத் தொகையும் மாறாது. ஆனால், இரண்டாவது வகை வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம், அவ்வப்போது வங்கியின் வட்டிவிகித ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்றபடி மாறும் தன்மையது. இதற்கான வட்டி குறைவு என்பதால், பலரும் இந்த முறையிலான வீட்டுக் கடனையே விரும்பி ஏற்றனர்.

அப்போதிருந்த நிலையில், வங்கிகளின் வட்டி விகிதம் குறைந்து வந்த நேரம். அதனால், மேலும் வட்டி குறையும்போது அதன் பயன் கிடைக்குமே என்கிற நம்பிக்கையில் இந்த முறை வட்டிக் கடனைத் தேர்ந்தெடுத்தவர்களே அதிகம். ஆனால், இப்போது இந்த இரண்டாவது வகை வீட்டுக் கடன் முறையைத் தேர்ந்தெடுத்து வீடு வாங்கியவர்கள் நிலைமை மிகவும் பரிதாபகரமாகிவிட்டது.

வட்டி விகிதம் குறைவதற்குப் பதிலாக, வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி விட்டிருக்கின்றன. அதனால், வீட்டுக் கடன் வாங்கியவர்கள் உடனடியாக தங்களது கடனில் ஒரு பகுதியைத் திருப்பிக் கட்டினால் ஒழிய, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவே முடியாது. இந்தத் தவணைகள் வட்டிக்குத்தான் சரியாக இருக்குமே தவிர அசல் குறையாது. அதாவது, வாழ்நாள் முழுவதும் வட்டி மட்டும் கட்டிக் கொண்டிருக்கலாம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்து வருகிறது. 6.5 சதவிகிதத்திலிருந்து இப்போது 11 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. ஆரம்பத்தில், அதிகரித்த வட்டி விகிதத்தை ஈடுகட்ட வங்கிகள் தவணைகளை அதிகப்படுத்தின. இன்றைய நிலையில், தவணைகள் 25 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்பட்டாலும் கடன் அடைந்து தீராது என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது.

மாறும் வட்டி விகித முறையில், ஒரு லட்ச ரூபாய்க்கான 20 ஆண்டு வீட்டுக் கடனுக்கு 7.25% வட்டியானால் மாதாந்திரத் தவணை ரூ. 790. இப்போதைய 11.25% வட்டிப்படி கணக்கிட்டால், மாதாந்திரத் தவணைத்தொகை ரூ. 900. ஆரம்ப ஆண்டுகளில், சுமார் ஐந்து ஆண்டு வரை, ஒருவர் அடைக்கும் ரூ. 790 தவணைத்தொகையில் அசலுக்குப் போகும் பணம் வெறும் ரூ. 79 மட்டுமே. அதனால், இப்போது வட்டி விகிதம் அதிகரித்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடன் வாங்கிய பலருடைய அசல் தொகையில் பெரிய அளவு பணம் திருப்பி அடைக்கப்படாத நிலைமை.

வீட்டுக் கடன் வாங்கிய லட்சக்கணக்கான மத்தியதர வகுப்பினர் மனநிம்மதி இழந்து, தூக்கம்கெட்டுத் தவிக்கும் நிலைமை. வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள் அழுபவர்கள் பலர். இதற்கெல்லாம் காரணம், சராசரி மனிதனின் உணர்வுகளையும் கஷ்டங்களையும் புரிந்துகொள்ளாத மத்திய நிதியமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் வங்கித் துறையும்தான்.

இந்த நிலைமையைப் பற்றிக் கவலைப்பட யாருமே இல்லையா?

Posted in Ahluwalia, APR, Balance, bank, Banking, Biz, Budget, Business, Center, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Commerce, Common, Consumer, Control, Currency, Customer, Deposits, Dinamani, Dollar, Economy, Exchanges, Expenses, Exports, Finance, fiscal, GDP, Governor, Govt, Growth, Homes, Houses, Imports, Industry, Inflation, Insurance, Interest, Land, Loans, Loss, Manmohan, Monetary, Money, Op-Ed, PPP, Profit, Property, Rates, RBI, Real Estate, Recession, Revenues, Rupee, Spot, Stagflation, USD | Leave a Comment »

Seven wonders of Tamil Nadu – Must see tourist spots & places by Kumudham

Posted by Snapjudge மேல் ஜூலை 27, 2007

01.08.07 கவர் ஸ்டோரி

குற்றாலம்

பேரருவி, சிற்றருவி, செண்பகா தேவி அருவி, தேனருவி, பழத்தோட்ட அருவி உட்பட சுமார் ஒன்பது அருவிகள் ஒரே இடத்தில் 170 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்தோடி விழுகின்றன.அதுவும் நோய் தீர்க்கும் மூலிகை களோடு. நயாகரா உட்பட உயரமான பல அருவிகள் இருந்தாலும் அவற்றில் எல்லாம் மக்கள் குளிக்க முடியாது. 170 மீட்டர் உயரமாக இருந்தும் மக்கள் குளிக்கக்கூடிய அருவி என்பது இதன் மற்றொரு சிறப்பு.

மலைக்கோட்டை

நீங்கள் திருச்சி செல்வதாக இருந்தால், அதை அடைவதற்கு பல கிலோமீட்டர் முன்பே உங்கள் முன் கம்பீரமாய் நின்று வரவேற்கும் திருச்சி மலைக்கோட்டை. உச்சிப்பிள்ளையார் கோயில் அமைந்துள்ள இந்த மலை 273 அடி உயரமும் 344 படிகளும் கொண்டது.

மேட்டூர் அணை

தஞ்சை வயல்களுக்கு நீரளித்து விளையவைக்கும் அமுதசுரபி. 1934_ல் கட்டப்பட்ட மேட்டூர் அணையின் நீளம் மட்டும் 1700 மீட்டர். உயரம் 120 அடிகள். 32 மெகாவாட் மின்சாரத்தை வழங்குவதுடன், 1,130 சதுர கிலோமீட்டர் நிலத்தையும் விளைய வைக்கிறது.

சிதம்பரம் நடராஜர் கோவில்

ஆடல் அரசருக்கு சிதம்பரத்தில் அமைக்கப்பட்ட கம்பீர வீடு. 5_ம் நூற்றாண்டில் இந்தக் கோயிலின் சிற்றம்பலத்தைக் கட்டியது பல்லவ மன்னன் இரண்யவர்மன். அதன் பின் பல மன்னர்களாலும் மாறி மாறி மெருகூட்டப்பட்ட இந்த ஆலயம் தீட்சிதர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

மகாபலிபுரம் சிற்பங்கள்

ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட மகேந்திர வர்ம பல்லவனும், நரசிம்மவர்ம பல்லவனும் தங்கள் சாம்ராஜ்யத்தின் ஒட்டுமொத்த செழிப்பையும் ஒரே இடத்தில் காட்ட தேர்ந்தெடுத்த இடம்தான் மகாபலிபுரம். பஞ்ச பாண்டவர் குகை, கடற்கரைக் கோயில், பாறை முழுதும் சிற்பங்கள் என்று ஒட்டுமொத்த கலை யழகும் கொண்டுள்ள இது சுற்றுலா வரை படத்தில் ‘செவன் பகோடாஸ்’ என்று புகழ்பெற்றுள்ளது.

செட்டிநாட்டு வீடுகள்

சாதாரண வீடுகளைக் கூட கலைக்கோயிலாக மாற்றமுடியும் என்பதற்கு தமிழகம் கொடுத்துள்ள உதாரணம், செட்டிநாட்டு வீடுகள். மர வேலைகளுக்கு பர்மா தேக்குகள், தரைக்கு உள்ளூரிலேயே வடிவமைக்கப்பட்ட ஆத்தங்குடி கற்கள், சுவர் களில் அந்தக் காலத்திலேயே இறக்குமதி செய்யப்பட்ட இத்தாலியக் கற்கள் என்று வாங்கி, முட்டை கலந்த ‘செட்டிநாடு பிளாஸ்டரை’க் கலந்து குழைத்துக் கட்டியிருக்கிறார்கள்.

கானாடுகாத்தானில் உள்ள செட்டிநாட்டு அரண்மனை, காரைக் குடியில் உள்ள ஆயிரம் ஜன்னல் வீடு என்று ஒவ்வொன்றும் நகரத்தாரின் கலைரசனையை எடுத்துச் சொல்கிறது. இங்குள்ள ஒவ்வொரு வீட்டையும் பார்க்க ஒருநாள் போதாது. உலகிலேயே செட்டிநாட்டில் மட்டும்தான் இத்தனை அழகான மாளிகைகள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன.

கைலாசநாதர் கோயில்

பல்லவர்களின் மற்றொரு பிரமாண்ட படைப்பு. கோயிலின் வாசலில் கம்பீரமாக மண்டியிட்டிருக்கும் நந்தியை வைத்தே கோயிலின் பிரமாண்டத்தை அறிந்துகொள்ளலாம். இந்தக் கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தையும் அஜந்தா சிற்பங்களுக்கு இணையாகக் கூறுகிறார்கள் வல்லுனர்கள்.

திருவள்ளுவர் சிலை

தமிழகத்தின் கலைவளங்களில் லேட்டஸ்டாகச் சேர்ந்திருக்கும் விஷயம். முக்கடலும் சந்திக்கும் குமரிக்கடலில் வள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு அதிகாரத்துக்கு ஒரு அடி என்று 133 அடிகளில் இங்கே வள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சைப் பெரியகோவில்

பெயரைப் போல நிஜமாகவே பெரிய கோயில் தான். கோயில் மட்டுமல்ல, இங்குள்ள சிவலிங்கம், பிரமாண்ட நந்தி (இதன் எடை மட்டும் 17 டன்), கோபுரம் (70 மீட்டர்) என்று எல்லா விஷயங்களும் பெரியது.

வேலு£ர் கோட்டை

கிருஷ்ண தேவராயரின் தளபதிகள் பொம்மியும் திம்மண்ண ரெட்டியும் எழுப்பிய கோட்டை இது. 16_ம் நூற்றா ண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, பல போர்களைச் சந்தித்தது. திப்பு சுல்தான் வீழ்ந்த பிறகு, அவரது வாரிசுகள் சிறை வைக்கப்பட்டது இங்குதான்.

தமிழக அதிசயங்களில் குறிப்பிட்டு சொல்லத்தக்க இடங்களை இங்கே குறிப்பிட்டுள்ளோம். இதிலிருந்து ஏழு இடங்களை வரிசைப்படுத்தி எங்களுக்கு அனுப்புங்கள். இந்தப் பட்டியலில் இடம்பெறாத வேறு ஏதாவது இடங்கள் இருந்தால், அவற்றையும் சரியான காரணங்களுடன் விளக்கி எங்களுக்கு அனுப்புங்கள். கலைநயம், புராதனம், இயற்கை அழகு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழக அதிசயங்களை சரியாக வரிசைப்படுத்தி அனுப்பும் 7 வாசகர்களுக்கு தலா ரூபாய் ஆயிரம் பரிசளிக்கப்படும். உங்கள் அதிசயப் பட்டியலை அஞ்சல் அட்டையில் அனுப்ப வேண்டிய முகவரி:

தமிழக அதிசயங்கள்
பி.எம்.சுதிர்,

Posted in Boating, Chennai, Chettinad, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Classic, Courtralam, Coutrallam, Culture, Dams, Districts, Falls, Forest, Forts, Guide, Heritage, hidamabram, Hidden, Hills, Horseback, Horsebackriding, Irrigation, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Kanchivaram, Kanjeepuram, Kanjeevaram, Kanjipuram, Kanjivaram, Kanniakumari, Kanniyakumari, Kanyakumari, Kings, Kumudam, Kumudham, Kuthaalam, Kuthalam, Kutralam, Mahabalipuram, Mamallapuram, Mettoor, Mettur, Mountains, Projects, Rulers, Sidamabram, Sidhamabram, Specials, Tamil, Tamil Nadu, Tanjore, Thanchavoor, Thanchavur, Thanjavoor, Thanjavur, Thiruchendhoor, Thiruchendhur, Thiruchendoor, Thiruchendur, Thiruchi, Thiruchirapalli, Thiruchirappalli, Thiruchy, Tips, TN, Tour, Tourist, Travel, Trichirappalli, Trichoor, Trichur, Trichy, Vellur, Velore, Visit, Water, Waterfalls, wonders | 2 Comments »

Cheating the state – Income Tax, Black Money, Business folks

Posted by Snapjudge மேல் ஜூலை 26, 2007

வாட்டுது வருமான வரி!

“”வருமானமே போதவில்லை, அதற்கு வரி வேறா?” என்ற அங்கலாய்ப்பு மத்தியதர வர்க்கத்திடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் கேட்டவண்ணம் இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்களோ இதையெல்லாம் காதில் வாங்காமல் கருமமே கண்ணாக இருந்து வரி வசூலிப்பைத் தீவிரப்படுத்துகின்றனர்.

மாதச் சம்பளக்காரர்கள், அரசு ஊழியர்களானாலும் தனியார் நிறுவன ஊழியர்களானாலும் அவர்களுடைய அலுவலகத்தாராலேயே பிடிக்கப்பட்டு வரி செலுத்தப்பட்டுவிடுகிறது. அதன் பிறகு அதில் சலுகைக்குரிய இனம் ஏதும் இருந்தால் அதை வருமான வரி செலுத்தியவரே கணக்கு கொடுத்து திரும்பப்பெற வேண்டும். இந்த வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவார்கள் என்று ஆண்டுதோறும் நிதியமைச்சரின் பட்ஜெட்டை ஆவலோடு எதிர்பார்த்து, கடைசியில் இலவுகாத்த கிளியாக ஏமாந்து வேறு போவார்கள் மாதச் சம்பளக்காரர்கள். இவர்கள் மீது நிதியமைச்சருக்குக் கரிசனம் வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வருமான வரி வசூல் அதிகமாகிக் கொண்டே வருகிறது, கிட்டத்தட்ட 3 மடங்காகிவிட்டது என்று தலைமை வருமானவரி ஆணையர் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.

அதாவது ஐந்தாண்டுகளுக்கு முன்னால் ரூ.5,336 கோடியாக இருந்த வருமான வரி வசூல் கடந்த ஆண்டு ரூ.17,400 கோடியாக உயர்ந்துவிட்டது. தமிழ் நாட்டில் மட்டும் கடந்த ஆண்டு 3.13 லட்சம் மாதச் சம்பளதாரர்கள் வருமான வரி செலுத்துகிறவர்களாக இருந்து “ரிடர்ன்’ எனப்படும் வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள்.

உள்நாட்டிலேயே

  • வியாபாரிகள்,
  • தரகர்கள்,
  • சொந்தமாகத் தொழில் செய்யும் டாக்டர்கள்,
  • என்ஜினீயர்கள்,
  • வக்கீல்கள்,
  • ஆடிட்டர்கள்,
  • விமானம், கப்பல் ஆகியவற்றுக்கான டிராவல் ஏஜெண்டுகள்,
  • லாரி உரிமையாளர்கள்,
  • சொந்தத் தொழில் செய்பவர்கள்,
  • வியாபாரிகள்,
  • சேவைத்துறையில் இருப்பவர்கள்

என்று பலதரப்பட்டவர்களும் வரி செலுத்துகின்றனர். ஆனால் அவர்களுடைய வருவாய்க்கும், செலுத்தும் வரிக்கும் பெரும் இடைவெளி இருப்பது நமக்கே தெரிகிறது, ஆனால் என்ன காரணத்தாலோ அரசும் அதிகாரிகளும் அவர்களையெல்லாம் விட்டுவிடுகிறார்கள்.
இந் நிலையில் சமீபத்தில் கூடிய வருமானவரித்துறை தலைமை ஆணையர்களின் மாநாட்டில் வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்கவும், வரி ஏய்ப்பாளர்களை அடையாளம் காணவும் புதிய உத்திகளை வகுத்திருப்பதாகத் தெரிகிறது. இவை மனப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டால் வரி வருவாய் பலமடங்கு பெருகும், அரசின் செலவுகளுக்கு அதிக நிதியும் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

“”ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு அல்லது அடுக்குமனை வாங்குகிறவர்களின் ஆண்டு வருமானம் ரூ.20 லட்சத்துக்கு மேல் இருந்தால், அவர்களுடைய வருமான வரி கணக்கைத் தீவிரமாக ஆராய வேண்டும், வீட்டை ரூ.30 லட்சத்துக்கு மேல் விற்பவர்கள் கணக்கில் காட்டும் மூலதன ஆதாயத் தொகையைச் சரிபார்க்க வேண்டும், சொத்துகளை விற்ற வகையில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் நஷ்டம் என்று கணக்கு காட்டினாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று ஆணையர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

பங்குச்சந்தைத் தரகர்கள், பலசரக்குத் தரகர்கள் ஆகியோரையும் கண்காணிக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பங்குச் சந்தையில் 12 மாதங்களுக்குள் மூலதன ஆதாயம் ரூ.25 லட்சம் பெற்றதாக கணக்கு காட்டுகிறவர்களின் வருமான வரி “ரிடர்ன்கள்’ இனி தீவிரமாக ஆராயப்படும்.

விவசாய வருமானத்துக்கு வரி போடுவதில்லை என்ற முடிவை அரசு எடுத்திருந்தாலும், சிலருடைய விவசாயக் கழனிகளிலும், தோட்டங்களிலும் மட்டும் -மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் -“”அமோக மகசூல்” ஆகி, அற்புதமாகப் பணம் கொழிக்கும் “”அபூர்வ பசுமைப் புரட்சி” எப்படி சாத்தியம் என்றும் ஆராய முடிவு செய்திருக்கிறார்கள்.

வருமானத்தைக் கணக்கிடுவது மட்டும் அல்ல, அது முறையாக ஈட்டப்படுகிறதா என்பதையும் வருமானவரித்துறை அறிய வேண்டும். இல்லையென்றால் உரிய துறைகளுக்குத் தெரிவித்து தடுக்க வேண்டும். அப்போதுதான் அதன் கடமை முழுமை பெறும்.

———————————————————————————————————

தமிழகத்தில் வருமான வரி மூலம் வருமானம் அதிகரிப்பு: மாநிலப் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஓர் அடையாளம்

சென்னை, ஜூலை 27- கடந்த ஏழு ஆண்டுகளாகப் படிப்-படியாக, வருமான வரி மூலம் மத்திய அரசு பெறும் வருவாய் அதிகரிக்கிறது என்றும், இது தமிழ் நாட்டின் ஒட்டு மொத்-தப் பொருளாதார முன்-னேற்றத்தைக் குறிக்கிறது என்றும், சென்னை வருமான வரித் தலைமை ஆணையர் சி.ஆர். ரவிச்சந்திரன் ஜுன் 25+இல் கூறினார்.

2000+2001+இல் இருந்து அதிகரித்து வரும் வரிமான வரி வசூல், கடந்த ஆண்டு மட்டும் 37 விழுக்காடு அதிகரித்-திருக்கிறது.

தமிழ்நாட்டில்

  • 2000+2001+இல் வசூலிக்கப்-பட்ட வருமான வரி ரூ.4,519 கோடி,
  • 2004+05+இல் ரூ.8,344 கோடி,
  • 2005+06+இல் ரூ.10,861 கோடி,
  • 2006+07+இல் ரூ.14,891 கோடி.

இந்த நிதியாண்டான 2007+08+இல் ரூ.17,402 கோடி வசூல் ஆகும் என மதிப்பிடப்-பட்டிருக்கிறது.

செய்தித் தொழில் நுட்பம், மற்றும் பிற தொழில் துறை-களில் முன்னேற்றமும், வரி வசூல் முறைச் சீர்படுத்தமும் வரி வசூல் அதிகரிப்பிற்குக் காரணங்கள் ஆகும்.

———————————————————————————————————

 

Posted in Biz, Bonds, Bribery, Bribes, Budget, Bureaucracy, Business, Cheats, Chidamabram, Chidambaram, Chidhambaram, Commerce, Compensation, Corruption, Economy, Employment, Finance, Govt, Homes, Houses, Incentives, Income, Income Tax, Industry, IT, Jobs, Money, NCC, NSS, PC, Personal, Private, Rajini, Rajni, Sankar, Savings, Shankar, Shivaji, Sivaji, Small scale, SSI, Tariffs, Tax, Work, Worker | Leave a Comment »

Thirumavalavan – Dalits entry into Salem Kanthampatty Temple

Posted by Snapjudge மேல் ஜூலை 18, 2007

சேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில்
ஆகஸ்டு 6-ந் தேதி ஆலயப் பிரவேச போராட்டம்
திருமாவளவன் அறிவிப்பு

சென்னை, ஜுலை.18-

சேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி தடைகளை தாண்டி உள்ளே நுழையும் ஆலயப் பிரவேச போராட்டம் செய்ய போவதாக திருமாவளவன் கூறினார்.

ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் கிராமப்புற கோவில்கள் உள்பட அனைத்து கோவில்களிலும் தாழ்த்தப்பட்டோர் நுழைவதற்கும், வழிபாடு செய்வதற்கும் உரிமை வழங்கி தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுசெயலாளர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான கோவில்கள் இந்து அற நிலையத்துறைக்கு சொந்தமானவை. ஆனால் அந்த கோவில்களில் கூட தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய முடியாத நிலை உள்ளது.

சாமிக்கும் ஜாதி

காந்தியடிகள் காலத்தில் அனைத்து சாதியினரும் கோவிலில் நுழைந்து வழிபடுவதற்கு கோவில்களை திறந்து விட சொன்னது வரலாறு. அப்போது, தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எ.எஸ்.வைத்தியநாத அய்யர் தலைமையில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலயப்பிரவேசம் செய்தனர்.

ஆனால் 60, 70 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் கூட, கிராமப்புறங்களில் உள்ள அம்மன், சிவன், அய்யனார், முருகன் கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே நுழைய முடியவில்லை. சாதீய வன்கொடுமை இன்னும் தலைவிரித்தாடுகிறது.

சேலம் மாநகரத்தில், கந்தம்பட்டியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலை 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை தன் வசம் எடுத்துக் கொண்டது. ஆனால் அந்த கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே நுழைந்து வழிபாடு செய்ய அனுமதி இல்லை. இந்து மதத்தில் மட்டும்தான் சாமிக்கும் ஜாதி சாயம் பூசுகின்ற கொடுமை நடக்கிறது.

புதிய சட்டம்

சேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி என்னுடைய தலைமையில் தடைகளை தாண்டி கோவிலுக்குள் நுழைய இருக்கிறோம். ஆயிரக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் இந்த ஆலய பிரவேச போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். ஆனால் அந்த நிலைமை ஏற்படாதவாறு அதற்கு முன்னதாக, அனைத்து சாதியினரும் அனைத்து கோவில்களிலும் நுழைந்து வழிபடுவதற்காக புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.

சிதம்பரம் கோவில்

கோவில்களுக்கு சொந்தமான 12 லட்சம் ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி, நிலமற்ற விவசாயிக்கு 2 ஏக்கர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வழங்கவேண்டும்.

சிதம்பரம் நடராஜர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் தமிழில் வழிபாடு செய்ய முடிவதில்லை. தேவாரம் போன்ற திருமறைகள் பாடுவது தடுக்கப்படுகிறது. அனைத்து கோவில்களிலும் தமிழில் வழிபடும் கட்டாயத்தை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகள், பெண்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Posted in Caste, CE, Chidamabram, Chidambaram, Chidhambaram, Community, Dalit, Dalits, Dhroupathy, Drowpathy, FC, Fight, God, Hindu, Hinduism, Kandhambatty, Kandhampatty, Kanthambatty, Kanthampatty, Liberation, Metro, Oppression, Panchaali, Panjali, Poor, Ravikkumar, Ravikumar, Religion, Rural, Salem, SC, Sidhambaram, ST, Temple, Thiruma, Thirumavalavan, Thol, Throupathy, Viduthalai, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Viduthalai Siruthaikal, Village, Vituthalai Chiruthaigal, Vituthalai Chiruthaikal, Vituthalai Siruthaigal, Vituthalai Siruthaikal | Leave a Comment »

Finance ministry against Govt nominees in Punjab & Sind Bank: Board in open war

Posted by Snapjudge மேல் ஜூலை 1, 2007

வங்கிகளும் அரசியல் தலையீடும்!

அரசியல் தலையீடு அதிகரித்து விட்டது என்கிற மனக்குறை இல்லாத அதிகாரி யாரும் இருக்க முடியாது. பல பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியில் இருப்பவர்களின் தலையீடுதான் என்று ஆதங்கப்படாத அதிகாரிகளே இருக்க முடியாது.

“எல்லாவற்றையும் முழுமையாக அதிகாரிகளிடமே விட்டுவிட முடியாது. அவர்களுக்கு அடித்தள மக்களின் பிரச்னைகள் எதுவும் தெரியாது’ என்று இந்தக் குற்றச்சாட்டுக்கு அரசியல்வாதிகள் தரப்பிலிருந்து பதில் வரும். இரு தரப்புக் கூற்றிலுமே ஓரளவு உண்மை இல்லாமல் இல்லை. அதே சமயம், அரசியல் தலையீடு என்பது கடந்த முப்பது ஆண்டுகளாக பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

பொதுத்துறை நிறுவனங்களில், அதிலும் குறிப்பாக, பொதுத்துறை வங்கிகளில் ஆளும்கட்சி அனுதாபிகளை இயக்குநர்களாக நியமிப்பது என்பது வழக்கமாகி விட்டது. இந்த இயக்குநர்களின் சிபாரிசில் பலருக்கும் கடனுதவி வழங்கப்படுவதும், அதில் பெரும்பாலானவை வாராக் கடன்களாக தள்ளுபடி செய்யப்படுவதும் எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் வாடிக்கையான விஷயம். அரசியல் தலையீடு தளர்த்தப்படாவிட்டால் இதுபோன்ற வாராக் கடன்களைத் தடுக்க முடியாது என்று நிதியமைச்சகத்திடம் முறையிடாத தேசியமமாக்கப்பட்ட வங்கிகளின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்களே கிடையாது.

முதன்முறையாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் இந்தப் பிரச்னையை பொதுமக்கள் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருப்பது வியப்பை அளிக்கிறது. பஞ்சாப்- சிந்த் வங்கியின் தலைவர்- மேலாண் இயக்குநர் தான் இந்தப் பிரச்னையை பொது சர்ச்சைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

மாறுபட்ட பொருளாதார சூழ்நிலையில், வங்கிகளின் பங்களிப்பு அதிகரித்து வருவதுபோல, வங்கிகளின் செயல்பாடுகளும் புதிய சூழ்நிலைக்கு ஏற்றபடி மாற வேண்டிய சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கிகளின் செயல்பாடு பற்றி நன்கு தெரிந்த வல்லுநர்கள் இயக்குநர்களாக இருப்பதுதான் வங்கிகள் முன்னேற்றத்திற்குத் தேவையே தவிர, எல்லா விஷயத்திலும் அநாவசியமாகத் தலையிடும் அரசியல்வாதிகள் அல்ல. மக்களின் சேமிப்புகளுக்குப் பாதுகாவலர்களாக இருப்பவை வங்கிகள். ஆகவே, வங்கியை நிர்வகிக்க வேண்டியவர்கள் வல்லுநர்களே தவிர அரசியல்வாதிகள் அல்ல. இதுதான் பஞ்சாப்- சிந்த் வங்கியின் தலைவர் கூறியிருக்கும் கருத்தின் சாராம்சம்.

அவரது கூற்றில் நூற்றுக்கு நூறு உண்மை இருப்பதை மறுப்பதற்கில்லை. மேலும் அவர் கூறியிருப்பதைப்போல வாராக் கடன்களை வசூலிக்க வங்கிகளின் இயக்குநர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பதும் உண்மை. ஆனால், இந்த விஷயத்தில் வங்கி அதிகாரிகள் அனைவரும் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்களா என்கிற கேள்வியும் எழுகிறது. அரசியல்வாதிகள் இல்லாத நிலையில், வல்லுநர்கள் மட்டுமே பொதுத்துறை வங்கிகளை நிர்வகிப்பது என்பது, கேள்வி முறையற்ற அதிகார துஷ்பிரயோகத்துக்கு வழி வகுக்காது என்பது என்ன நிச்சயம்?

ஊழல், அதிகார துஷ்பிரயோகம், வேண்டியவர்களுக்கு தகுதி இல்லாவிட்டாலும் உதவுவது போன்றவை அரசியல்வாதிகள் மட்டுமன்றி அதிகாரிகளிடமும் காணப்படும் குறைபாடு என்பதை மறந்துவிடக்கூடாது. பொதுவாழ்க்கையில் அப்பழுக்கற்ற நபர்களை இதுபோன்ற பதவிகளில் அமர்த்துவதுதான் அதிகாரிகள் தவறிழைக்காமல் இருக்க உதவும். கட்சி விசுவாசத்துக்குத் தரும் வெகுமதியாக இந்தப் பதவிகள் மாறியிருப்பதுதான் குறையே தவிர அந்தப் பதவியே வேண்டாம் என்பது சரியல்ல.

நிதியமைச்சகத்தின் முன்அனுமதி இல்லாமல் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் தலைவர் ஒருவர் இந்த விஷயத்தை பத்திரிகைகளிடம் பகிரங்கப்படுத்தி இருக்க முடியாது. வங்கி நிர்வாகத்தில் வல்லுநர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், பொதுமக்களின் பிரதிநிதிகளும் இயக்குநர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் நியாயம். அனால், அந்தப் பிரதிநிதிகள் அப்பழுக்கற்ற பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களாக இருக்க வேண்டுமே தவிர ஆளும்கட்சியின் விசுவாசிகளாக மட்டுமே இருந்தால் அது ஏற்புடையதல்ல.

ஒரு தேவையான சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார் பஞ்சாப் சிந்த் வங்கித் தலைவர். தேசிய விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய முக்கியமான விஷயம் இது என்பதில் சந்தேகமில்லை.

Posted in abuse, Assets, Balance, Banking, Bankruptcy, Banks, Benaami, Benami, Board, Bribery, Bribes, Cabinet, Campaign, CEO, CFO, chairman, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, CMD, Commerce, Congress, COO, Corruption, Director, Finance, Financing, Gopalakrishnan, Govt, Influence, kickbacks, Loans, Management, Manmogan, Manmohan, MD, Members, Moopanaar, Moopanar, Mooppanaar, Mooppanar, Nominee, Op-Ed, Options, panel, Penami, Power, Prathiba, Prathibha, Proxy, PSB, Punjab, Punjab & Sind Bank, reconstitution, regulations, SBI, Sind, Sindh, State Bank, Statements, Trading, Trustees, VP | Leave a Comment »

State of Tamil Nadu Congress Party – Internal Politics

Posted by Snapjudge மேல் ஜூன் 15, 2007

காங்கிரஸில் மேலும் ஒரு புதிய கோஷ்டி

சென்னை, ஜூன் 16: ஏற்கெனவே பல்வேறு கோஷ்டிகள் நிறைந்து காணப்படும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மேலும் ஒரு புதிய அணி உதயம் ஆகிறது.

மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்தின் தலைமையில் இந்த அணியை உருவாக்கும் தீவிர முயற்சியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வெள்ளிக்கிழமை இறங்கினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில்

  • மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தலைமையிலான பழைய த.மா.கா. அணி,
  • கட்சியின் மாநிலத் தலைவர் எம். கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்கள் அணி,
  • மத்திய அமைச்சர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அணி,
  • முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆர். பிரபு,
  • கே.வீ. தங்கபாலு,
  • ஜெயந்தி நடராஜன் போன்றவர்களின் தலைமையிலான அணிகள் என்று பல அணிகள் இயங்கி வருகின்றன.

வேற்றுமையில் ஒற்றுமை: மாநிலங்களவைத் தேர்தல், மதுரை மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் ஆகியவற்றுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியைக் கட்சியின் அகில இந்திய மேலிடம் சமீபத்தில் மேற்கொண்டது.

அப்போது இந்தக் கோஷ்டிப் பூசல் பூதாகாரமாக விசுவரூபம் எடுத்தது. வாசனின் ஆதரவாளர்களை வேட்பாளர்களாக மேலிடம் தேர்வு செய்துவிடக் கூடாது என்கிற நோக்கத்தில் இதர அணிகள் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ. போளூர் வரதனின் தலைமையில் ஒன்றுபட்டன. ரகசிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தின. வாசன் அணிக்கு எதிராக மேலிடத்தில் புகார்களைத் தெரிவித்தன.

ஆனால், இறுதியில் வாசனின் “கை’யே ஓங்கியது. மாநிலங்களவைத் தேர்தலிலும், மதுரை மேற்கு இடைத் தேர்தலிலும் வாசனின் தீவிர ஆதரவாளர்களுக்கே மேலிடம் வாய்ப்பு அளித்தது.

கட்சிக் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டும், மேலிடத்தின் அறிவுரையை ஏற்றும், வாசன் அணிக்கு எதிரான அணிகளைச் சேர்ந்தவர்கள் தற்போது மதுரை மேற்குத் தொகுதியில் முகாமிட்டு, பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

காமராஜர் இல்லம் அருகே…: இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் காமராஜரின் இல்லத்துக்கு அருகே உள்ள ஓட்டலில் கார்த்தி சிதம்பரத்தின் தலைமையில் புதிய அணியின் மதிய விருந்து -ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  • மூத்த நிர்வாகி தமிழருவி மணியன்,
  • மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி.ராஜேந்திரன்,
  • சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் கே.எஸ்.அழகிரி,
  • வி.ராஜசேகரன்,
  • சட்டப் பேரவை உறுப்பினர்கள் திருவாடானை கே.ஆர்.ராமசாமி,
  • காரைக்குடி சுந்தரம்,
  • முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஆ. கோபண்ணா,
  • கிருஷ்ணசாமி வாண்டையார்,
  • சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே ஆர். தியாகராஜன் உள்ளிட்ட 20 முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Posted in Analysis, Backgrounders, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Divisions, Elangovan, Elankovan, Elections, Faction, Fights, Ilangovan, Ilankovan, Internal, Jayanthi, Jayanthy, Jeyanthi, Jeyanthy, Kaarthi, Kamaraj, kamarajar, Kamraj, Kamrajar, Karthi, Krishnasaamy, Krishnasami, Krishnasamy, Krishnaswamy, Leaders, Madurai, Manmohan, Members, MLAs, MPs, Party, PC, Petty, PMK, Politics, Polls, Sonia, Thangabaalu, Thangabalu, Thankabalu, TMC | Leave a Comment »

The rise and fall of Dayanidhi Maran – Biosketch

Posted by Snapjudge மேல் மே 14, 2007

பதவி ஏற்ற 3 ஆண்டுகளில் பதவி இழப்பு

சென்னை, மே 14: மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் 3 ஆண்டுகளில் தனது பதவியை இழக்கிறார்.

முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு, 2004-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் தயாநிதி மாறன். 2004 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை சன் டி.வி. நிர்வாகத்தின் அங்கமான சுமங்கலி கேபிள் விஷன் இயக்குநர்களில் ஒருவராக இருந்தார் தயாநிதி மாறன்.

அரசியலுக்கு முதன்முதலில் அடியெடுத்து வைத்த அவருக்கு, அமோக வெற்றியை மத்திய சென்னை வாக்காளர்கள் அள்ளித் தந்தனர்.

தொடர்ந்து, மத்தியில் அமைந்த கூட்டணி அமைச்சரவையில், மிக முக்கிய பொறுப்பான தகவல் தொழில்நுட்பத் துறை இவருக்கு வழங்கப்பட்டது. முதல்வர் கருணாநிதியின் ஆசியுடன் மிகக் குறுகிய காலத்தில் இவர் அரசியலில் மிகுந்த செல்வாக்கு பெற்றவராக வளர்ந்தார்.

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மட்டுமின்றி ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியிடமும் மிகுந்த செல்வாக்குப் பெற்றவரானார்.

ஒரு கருத்துக்கணிப்பின் விளைவாகத் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட கட்சிக் குழப்பத்தில் நாலாவது நாளில் பதவி பறிக்கப்படுகிறார் தயாநிதி மாறன்.
———————————————————————————————————-

கிட்டத்தட்ட மூன்றாண்டு காலம் மத்திய அமைச்சராக பணியாற்றியுள்ளேன்.

கடந்த 26 மாதங்களில் என் துறை மூலம் நம் நாட்டுக்கு 2 லட்சத்து 66 கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது. இதில் பெரும் பகுதி நமது தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் என் தலைவரும், பிரதமரும், சோனியா காந்தியும் அளித்த வாய்ப்புதான்.
———————————————————————————————————-
தயாநிதி மாறன் பதவி யாருக்கு கிடைக்கும்?:

அழகிரிக்கோ அவரது ஆதரவாளருக்கோ கிடைக்கலாம் ::

பா. ஜெகதீசன்

சென்னை, மே 14மத்திய அமைச்சர் பதவியை தயாநிதி மாறன் ராஜிநாமா செய்துவிட்டார்.

இந் நிலையில், இதுவரை அவர் வகித்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பதவி யாருக்குக் கிடைக்கும் என்பது தொடர்பாக பல்வேறு யூகங்கள் உலா வரத் தொடங்கி உள்ளன.

தயாநிதிக்கு பதிலாக அவர் வகித்த பதவிக்கு திமுகவின் மத்திய அமைச்சர்களான டி.ஆர். பாலு, அ. ராசா ஆகியோரில் ஒருவருக்கு கூடுதல் பொறுப்பு தரப்படலாம் என அக்கட்சியின் ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.

மன்னிப்பு கிடைக்குமா:

Mallikaதயாநிதி மாறனின் தாய் மல்லிகா மாறன் தற்போது வெளிநாட்டில் உள்ளார். அவர் சென்னைக்கு திரும்பியதும் அவரும், தயாநிதி மாறனும், சன் டிவி நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறனும் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து நடைபெற்ற சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்கும் வாய்ப்பும் உள்ளது.

அப்படி நடைபெறும்போது இப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு ஏற்படக் கூடும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும்போது தயாநிதி மாறன் மீண்டும் மத்திய அமைச்சராக தொடர்ந்து நீடிக்கும் சாத்தியம் உள்ளது.

இதற்கு ஒரு முன்னுதாரணமாக, திமுகவில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை நினைவு கூருகின்றனர்.

கடந்த 2001-ல் சட்டப் பேரவைத் தேர்தலின்போது திமுகவுக்கு எதிராக அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் செயல்பட்டனர்.

இதனால், தேர்தலில் தென் மாவட்டங்களில் திமுக தோல்வியைத் தழுவியது.

அப்போது கட்சியில் அழகிரிக்கு எதிரான நிலை எடுக்கப்பட்டு அவர் ஒதுக்கி வைக்கப்பட்டார். கட்சிக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்றுகூட திமுக தலைமை கூறியது. ஆனால், சிலமாதங்கள் சென்றபின் நிலைமை மாறியது.

2002 பிப்ரவரியில் ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட்டார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வைகை சேகரை ஆதரித்து அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் தீவிர பிரசாரம் செய்தனர்.

இன்னும் சொல்லப்போனால் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து அழகிரி பிரசாரம் செய்தார். அத்தேர்தலில் தனது மனைவியுடன் வீடு வீடாகச் சென்று அழகிரி வாக்கு சேகரித்தார்.

இதைத் தொடர்ந்து திமுகவில் தனக்கு இருந்த செல்வாக்கை அழகிரி வலுப்படுத்திக் கொண்டார் என்பதை திமுகவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

அழகிரிக்கு சாதகம்:

இதற்கிடையே அழகிரியோ அல்லது அவர் சுட்டிக்காட்டும் அவரது ஆதரவாளர் ஒருவரையோ தயாநிதி மாறன் வகித்த பதவியில் நியமிக்க வாய்ப்பு உள்ளது. அப்படி மத்திய அமைச்சராக நியமிக்கப்படுபவர் வரும் ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

நாடார் சமுதாயத்துக்குப் பிரதிநிதித்தும் கிடைக்குமா?

மத்திய அமைச்சரவையில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த எவரும் இடம்பெறவில்லை. இந்தக் குறையைப் போக்கும் வகையிலும், சமீபத்தில் காமராஜரின் பெயரை முன்னிறுத்தி நடிகர் சரத்குமார் மேற்கொண்டுள்ள பிரசாரத்துக்கு ஈடுகொடுக்கும் விதத்திலும் திமுக செயல்பட வாய்ப்பு உள்ளது.

தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள

  • தினகரன் பத்திரிகையின் முன்னாள் உரிமையாளர் குமரன்,
  • வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோரில் ஒருவருக்கு தயாநிதி மாறன் வகித்த பதவி கிடைக்கக் கூடும்.

குமரன், சண்முகசுந்தரம் ஆகிய இருவரின் பதவிக்காலமும் வரும் ஜூலையுடன் முடிகிறது. இருந்தாலும் மத்திய அமைச்சராக, இருவரில் எவர் நியமிக்கப்படுகிறாரோ அவருக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் சாத்தியமும் உள்ளது.
———————————————————————————————————-
அப்பாவைப் போல இல்லையே பிள்ளை!

சென்னை, மே 14: திமுக தலைவர் கருணாநிதிக்கு உற்ற நண்பனாகவும், அவர் இடும் கட்டளைகளை ஏற்றுச் செயல்படுத்தும் தொண்டராகவும், சிக்கலான கட்டங்களில் ஆலோசனை கூறும் மதியூகியாகவும், அரசியல்ரீதியான சந்திப்புகளுக்கு முக்கியத் தலைவர்களை அணுகக்கூடிய நம்பத்தகுந்த தூதராகவும் செயல்பட்டவர் முரசொலி மாறன்.

கருணாநிதியின் சகோதரி மகன் என்ற உறவு இருந்தாலும் பிற தலைவர்களைப் போலவே அவரிடம் பழகி, அவருடைய முழு நம்பிக்கையையும் பெற்றிருந்தார். தில்லியில் திமுகவின் செல்வாக்குள்ள பிரதிநிதியாகத் திகழ்ந்த போதிலும் அதில் தனக்கென்று தனிப்பட்ட செல்வாக்கு தேடாமல் அனைத்தையும் கட்சிக்கென்றே பயன்படுத்தினார் முரசொலி மாறன். அவருடைய மறைவு திமுக தலைவருக்கு தாங்கமுடியாத பேரிழப்புதான்.

இந் நிலையில்தான், வயதில் இளைஞராக, அரசியல் அனுபவம் ஏதும் இல்லாதவராக, பார்ப்பதற்கு விளையாட்டுப் பிள்ளையாக இருந்த தயாநிதியை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்க கருணாநிதி முடிவு செய்தார். அதில் வெற்றி கண்டாலும், முரசொலி மாறனைப் போல அல்ல தயாநிதி மாறன் என்பதை விரைவிலேயே உணர்ந்துகொண்டார்.

தனக்கென்று அதிகார மையத்தை ஏற்படுத்த முரசொலி மாறன் விரும்பியதில்லை, ஆனால் தயாநிதியோ அப்படியல்ல. தயாநிதியின் அண்ணன் கலாநிதி மாறனின் தினகரன் பத்திரிகையில் வெளியான கருத்துக்கணிப்புகள், அவருடைய பதவி ஆசையைக் காட்டுவதாகவே கருதப்பட்டன. கழகக் குடும்பத்தின் மூத்த தலைவர் வாழும் காலத்திலேயே இப்படி என்றால் எதிர்காலத்தில் எப்படி நடப்பார் என்ற கேள்வி பிறக்கிறது. எனவே அவரைத் தண்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக தில்லியில் நிறைவேற்ற வேண்டிய வேலைகளுக்கு தயாநிதியை, கருணாநிதி மிகவும் நம்பியிருந்தார். இப்போது அவருக்குப் பதிலாக, அதே போல நம்பிக்கைக்குரிய ஒருவர் தேவை. முன்னர் டி.ஆர்.பாலு இந்த வேலைகளைச் செய்துவந்தார். ஆனால் கருணாநிதி “”முழு நம்பிக்கை” வைக்கும் அளவுக்கு ஒருவர் தேவைப்படுகிறார். அந்த இடத்தை நிரப்பக்கூடியவர் அவருடைய மகள் கனிமொழி. பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட அவருக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார் கருணாநிதி. மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு ஜூன் அல்லது ஜூலை தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. திமுக வேட்பாளர்களில் ஒருவராக கனிமொழி இருந்தால் வியப்பதற்கு ஏதும் இல்லை.
———————————————————————————————–
கட்சிக்கும், ஆட்சிக்கும் பகையை வளர்த்ததால் தான் இந்த கதி: தயாநிதி நீக்கத்தின் பின்னணி நமது சிறப்பு நிருபர்

அனைத்து தரப்பையும் பகைத்துக் கொண்டது, கட்சியில் ஆதிக்கம் செலுத்த நினைத்தது, டில்லி செல்வாக்கை தவறாக பயன்படுத்தியது போன்றவையே தயாநிதி நீக்கப்பட்டதற்கு காரணமாக அமைந்துள்ளன.

கடந்த 2004 லோக்சபா தேர்தலின் போது அரசியலுக்கு கொண்டு வரப்பட்ட தயாநிதி, முதல் முறையாக எம்.பி.,யானதும் மத்தியில் தகவல் தொழில்நுட்பத் துறையை இவருக்காக தி.மு.க., தலைவர் கேட்டுப் பெற்றார். மத்திய அமைச்சராக்கியதோடு மட்டுமன்றி, பிரதமர், சோனியா மற்றும் தேசிய தலைவர்களுடன் தி.மு.க., சார்பில் பேசுவதற்கும் தகவல்களை பரிமாறுவதற்கும் தயாநிதியை பயன்படுத்தினார். இதனால் டில்லி வட்டாரத்தில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு தயாநிதிக்கு கிடைத்தது. ஆனால், ஆரம்பம் முதல் இவரது செயல்பாடு பல்வேறு பிரிவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

குறிப்பாக,

  • சட்டசபைத் தேர்தல் சமயத்தில் தயாநிதியின் செயல்பாட்டை விமர்சித்தே தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் பிரசாரம் அமைந்தது.
  • பெரும் தொழிலதிபரான ரத்தன் டாடாவை மிரட்டிய விவகாரம்,
  • தமிழகத்தில் உள்ள மீடியாக்களை பகைத்துக் கொண்டது போன்றவை அ.தி.மு.க.,
  • கூட்டணி 69 இடங்களை பெறுவதற்கு காரணமாக அமைந்தன.

தி.மு.க., ஆட்சி அமைந்த பின் கட்சிக்குள்ளேயே இவர் மீது அதிருப்தி அதிகரிக்க துவங்கியது. குறிப்பாக, முதல்வரின் வாரிசாக கருதப்படும் ஸ்டாலினுக்கும், தயாநிதிக்கும் இடையே பல சந்தர்ப்பங்களில் மறைமுக மோதல் நடந்தது. ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர்களுக்கு எதிராக அவர்களது பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டது, ஸ்டாலினின் செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்தது போன்றவை கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முறையிட்ட போதெல்லாம் முதல்வர் சமரசப்படுத்தி வந்துள்ளார்.

கடைசியாக, கடந்த மார்ச் முதல் தேதியன்று ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடிய போது தி.மு.க.,வின் அனைத்து நிர்வாகிகளும் வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்த போதிலும், கலாநிதியோ, தயாநிதியோ அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில் மதுரையில் இருந்து தனக்கு வாழ்த்துச் சொல்ல வந்த அழகிரியுடன் இதுபற்றி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இது தவிர கீழ்மட்ட கட்சித் தொண்டர்களுடன் தயாநிதி பழகாமல் இருந்ததுடன், மூத்த தலைவர்களை கண்டுகொள்ளாமல் அரசியல் நடத்தியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தி.மு.க., சார்பாக மத்தியில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களிடையே தயாநிதி ஆதிக்கம் செலுத்தி வந்ததாகவும் புகார்கள் வந்தன

. டி.ஆர்.பாலு, ராஜா, பழனிமாணிக்கம் போன்றவர்களை பல சந்தர்ப்பங்களில் ஓரங்கட்டும் விதமாக செயல்பட்டதால், இவர் மீது அவர்கள் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், தயாநிதியை கட்சியில் முன்னிலைப்படுத்தி முதல்வர் கருணாநிதிக்கு பின்னர் கட்சியை கைப்பற்ற முயற்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தன.

மாவட்ட செயலர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் “கேபிள் டிவி’ நடத்தும் உரிமை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். தயாநிதிக்கு செல்வாக்கு இருப்பதாக காட்டுவதற்காகவே கருத்து கணிப்பு ஒன்றையும் நடத்தியதாக தி.மு.க., நிர்வாகிகள் கூறுகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் தயாநிதியே முதலிடத்தில் உள்ளதாக வெளியிடப்பட்டது. இந்த கருத்துக் கணிப்பு தி.மு.க., கூட்டணியிலேயே சலசலப்பை ஏற்படுத்தியது.

காங்கிரசை சேர்ந்த மத்திய அமைச்சர்களை களங்கப்படுத்தியதாக அக்கட்சியினர் கருதினர். அன்புமணியை வேண்டுமென்றே மட்டம் தட்டியிருப்பதாக ராமதாஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

————————————————————————————————-

தி.மு.க.,வில் தயாநிதி ஆதரவாளர்களுக்கு கல்தா!: அனுகூலம் பெற்ற அதிகாரிகள் சிக்குகின்றனர்

தயாநிதிக்கு குறுகிய காலத்தில் கட்சியில் தரப்பட்ட முக்கியத்துவம் காரணமாக கட்சியின் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட பலரும் தயாநிதியின் ஆதரவாளர்களாக மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருப்பினும், தென் மாவட்டங்களில் அழகிரியின் செல்வாக்கை மீறி, தயாநிதிக்கு, அங்கு, ஆதரவாளர்கள் கிடைக்கவில்லை. அதே போல, மூத்த அமைச்சர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களிலும் தயாநிதி ஆதரவாளர்கள் உருவாகவில்லை.

இதை மீறி

  • கோவை,
  • நீலகிரி,
  • திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மூவர், தங்களை தயாநிதியின் ஆதரவாளராக முன்னிறுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டி செயல்பட்டனர். சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் தி.மு.க.,விற்கு ஏற்பட்ட பெரும் சரிவால் கட்சித் தலைமை பொங்கலுõர் பழனிச்சாமி மேல் கடும் கோபத்தில் இருந்தது. அமைச்சர் பதவி தராமல் அவரை புறக்கணித்தது. தலைமையின் கோபத்தை உணர்ந்த ஸ்டாலின், இவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க விரும்பவில்லை.

இந்நிலையில், தயாநிதியின் மூலமாக கட்சித் தலைமையை திருப்திபடுத்தி, உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை காரணம் காட்டி அவருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டது. தனக்கு அமைச்சர் பதவி கிடைக்க தயாநிதி தான் காரணம் என்பதால், முழுமையாக அவரது ஆதரவாளர் போல் பழனிச்சாமி செயல்பட்டார். மாதத்திற்கு இரு முறை தயாநிதி கோவைக்கு வந்ததால், இந்த உறவு மேலும் பலப்பட்டது. கோவையில் அமையவுள்ள டைடல் பார்க்கை சுற்றியுள்ள நிலங்களை வளைப்பதில் பொங்கலுõர் பழனிச்சாமி பெரிதும் உதவியுள்ளார்.

பழனியின் மகன் பைந்தமிழ் பாரியை கோவை மேயராக்க, ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான வீரகோபாலை மாநகராட்சித் தேர்தலில் தோற்கடிக்க, “உள்ளடி வேலை’களைச் செய்தார். இதை தெரிந்து கொண்ட கட்சித் தலைமை, தயாநிதி வற்புறுத்தியும், மேயர் பதவியை பாரிக்கு வழங்க ஒப்புக் கொள்ளவில்லை.

மண்டலத் தலைவராக பொறுப்பேற்ற பாரி, தனது அறையில் தயாநிதியின் போட்டோவை மாட்டியதோடு, இதர கவுன்சிலர்களின் அறைகளிலும் தயாநிதி படம் மாட்ட வேண்டும் என்று வற்புறுத்தி, மாட்டி வைத்து, நன்றி விசுவாசம் காட்டினார்.

பொங்கலுõர் பழனிச்சாமி பல்வேறு தொழில்களை நடத்தி வரும் தொழிலதிபர் என்பதால், “தொழில் ரீதியாக’ தயாநிதியோடு நெருக்கம் காட்டினார். சமீபத்தில் கோவையில் நடந்த மேம்பால திறப்பு விழாவில், டி.ஆர்.பாலுவை புறக்கணித்து, தயாநிதியைக் கொண்டு விழா நடத்தினார் பழனிச்சாமி.

நகரின் பல இடங்களில் தயாநிதியின் கட் அவுட்டுகள், ஆயிரக்கணக்கான வரவேற்புத் தட்டிகள் என ஆடம்பரமாக இந்த விழாவை நடத்தினார். மற்ற தி.மு.க., பிரமுகர்கள் தயாநிதியை நெருங்க விடாமல், தாங்களே ஒட்டுமொத்த ஆதரவாளர் என காட்டிய பெங்கலுõர் பழனிச்சாமி, இப்போது கட்சித் தலைமையின், “ப்ளாக் லிஸ்ட்’டில் இடம் பெற்றுள்ளார்.

அடுத்ததாய், “ப்ளாக் லிஸ்ட்’டில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கதர் துறை அமைச்சர் இளித்துறை ராமச்சந்திரன் இடம் பிடித்துள்ளார். இவரும் தயாநிதி ஆதரவாளராக தன்னை முன்னிறுத்துவதில் ஆர்வம் காட்டியவர். கோத்தகிரியில் இருக்கும் தயாநிதியின் மாமனாருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகனின் குடும்பத்தினர் செய்து வந்தனர். இதைவிட ஒரு படி மேலாக, ஊட்டியில் தயாநிதி முகாமிடும்போதெல்லாம், கூடவே இருந்து குணசேகரன் என்பவர் உதவிகளை செய்து கொடுத்து வருகிறார்.

இந்த குணசேகரன் அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகனின் சகோதரர். தயாநிதி மேலான அமைச்சரின் பாசம் இப்படி நீடித்து வருகிறது.

அடுத்ததாய், தயாநிதி ஆதரவாளராக, வனத்துறை அமைச்சர் செல்வராஜ் இருந்துள்ளார். மறைந்த மாறனின் தீவிர ஆதரவாளராக இருந்த இவர், ம.தி.மு.க.,விற்கு போய்விட்டு வந்த நிலையில், தி.மு.க., அமைச்சரவையில் இடம் பிடிக்க தயாநிதி தான் காரணம். இதனால், செல்வராஜ் பெயரும் தயாநிதி ஆதரவாளர் பட்டியலில் உள்ளது.

இது தவிர, சட்டசபைத் தேர்தல் நேரத்தில் தி.மு.க., சார்பில் நிதி சப்ளை செய்தவர் என்ற முறையில் தயாநிதிக்கு பல எம்.எல்.ஏ.,க்களின் அறிமுகம் உண்டு. அது தொடர்பான கணக்க வழக்கு விவகாரங்களையும் தயாநிதியே கவனித்ததால், அவர்களின் தொடர்பும் இருப்பதாக கட்சித் தலைமை கருதுகிறது. குறிப்பிட்ட சில எம்.எல்.ஏ.,க்களின் மீதும் கட்சித் தலைமையின் பார்வை பதிந்துள்ளது.

அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளைக் காட்டிலும் தயாநிதியின் விசுவாசிகளாக இருந்த அரசு உயரதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் பட்டியலும் தி.மு.க., தலைமை தயாரித்து வருகிறது. இந்த பட்டியலை தயாரிக்கும் நோக்கோடு, உளவுத் துறையில் முதல்வருக்கு நெருக்கமான அதிகாரி ஜாபர்சேட் சமீபத்தில் பொறுப்பேற்றுள்ளார்.

மத்திய அமைச்சராக தயாநிதி பணியாற்றியபோது, டில்லி தொடர்பு மூலம் தமிழகத்தில் பணியாற்றும் பல வடமாநில அதிகாரிகள், தங்களுக்கு விருப்பமான பதவிகளைப் பெற்றுள்ளனர். இவ்வாறு பதவி பெற்றவர்களை தயாநிதியின் ஆதரவாளர்களாக அரசு கருதுவதால், எப்போது வேண்டுமானாலும் டிரான்ஸ்பர் செய்யப்படலாம் என்ற கலக்கத்தில் இவர்கள் உள்ளனர்.

கட்சியின் கீழ்நிலை பொறுப்புகளில் உள்ள தயாநிதி விசுவாசிகள், காவல்துறை, அரசுத் துறையில் உள்ள கீழ் நிலை அதிகாரிகள் வரை முழுமையான பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. “டிவி’ நிர்வாகத்துடன் நெருக்கமாக இருந்த அதிகாரிகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தயாநிதி விசுவாசிகளை கட்டம் கட்டும் பணியை கட்சித் தலைமை தீவிரமாக மேற்கொள்ளுமானால், 50க்கும் மேற்பட்ட, “அதிரடி டிரான்ஸ்பர்’கள் நடக்க வாய்ப்புள்ளது.

————————————————————————————————————

பதவி பறிப்பு – BBC

 

பத்திரிகை எரிப்பில் ஈடுபட்ட மதுரை மேயர்
மதுரையில் மேயர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பத்திரிகை தாக்குதலும் பதவி பறிப்பும்

தமிழகத்தில் மதுரையிலுள்ள தினகரன் அலுவலகம் மீது தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் மகன் அழகிரியின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படுபவர்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் பலியாயினர்.

இந்தத் தாக்குதலுக்கு பிறகு எழுந்த சர்ச்சையை அடுத்து மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறனின் பதவி பறிக்கப்பட்டதும் நேயர்கள் அறிந்ததே

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக தமிழோசை ஒலிபரப்பிய பேட்டிகள், செய்திக் குறிப்புகள் ஆகியவற்றை இந்தத் தொகுப்பில் நேயர்கள் கேட்கலாம்.

தினகரன் நாளிதழ் தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்பது குறித்து கருத்துக் கணிப்பை வெளியிட்டது. இதில் ஸ்டாலினுக்கு பெரும் ஆதரவும், அழகிரிக்கு மிகக் குறைந்த அளவே ஆதரவு இருப்பதாகவும் கூறியிருந்தது.

எரிக்கப்பட்ட தினகரன் அலுவலகத்தின் ஒரு பகுதி
எரியூட்டப்பட்ட தினகரன் அலுவலகம்

இதையடுத்து மதுரையிலுள்ள தினகரன் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடைபெற்றது. இதில் மூவர் பலியாயினர்.

நடைபெற்ற தாக்குதல் குறித்து தினகரன் பத்திரிகையின் மதுரைப் பதிப்பின் ஆசிரியர் முத்துப் பாண்டியனின் பேட்டி.

முத்துப்பாண்டியன் பேட்டி

ஆனால் இந்தத் தாக்குதலில் தமக்கு சம்பந்தம் இல்லை எனக் கூறுகிறார் மதுரை மேயர் தேன்மொழி. தங்களது எதிர்ப்பை காட்ட பத்திரிகையை எரித்ததாக மட்டுமே அவர் கூறுகிறார்.

தேன் மொழி பேட்டி

இது தினகரன் பத்திரிகை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பதனை விட பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எனக் கூறுகிறார் தினகரன் பத்திரிகையின் தலைமை நிர்வாகி ரமேஷ்.

 

ரமேஷ் பேட்டி

காவல் துறை தனது கடமையைச் செய்யும் எனவும், விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கிறார் தமிழக காவல்துறை தலைவர். இது தொடர்பாக கைதுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

காவல்துறை தலைவர் பேட்டி

கோபத்தின் வெளிப்பாடும் பத்திரை எரிப்பும்
கோபத்தின் வெளிப்பாடும் பத்திரிகை எரிப்பும்

இது கருத்துச் சுதந்திரம் குறித்த பிரச்சினை அல்ல, தமிழகத்தை ஆளும் திமுகவின் தலைவரான கருணாநிதியின் குடும்பத்திற்குள் நடைபெற்ற அதிகாரப் போட்டியினால் எழுந்த பிரச்சினை என்றும் கூறுகிறார் அரசியல் ஆய்வாளர் ஞானி

ஞானி பேட்டி

இந்தச் சமபங்களுக்கு பிறகு நடைபெற்ற திமுகவின் நிர்வாகக் குழு கூட்டத்தில், தயாநிதி மாறனை மத்திய அமைச்சரவையிலிருந்து விலக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தீர்மானித்தது. இது குறித்து எமது செய்தியாளர் கோபாலனின் செய்திக் குறிப்பு

கோபாலன் செய்திக் குறிப்பு

உறவும் பிரிவும்
உறவும் பிரிவும்

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தம்மை நீக்க கட்சி எடுத்த முடிவை அடுத்து தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். தான் எப்போதுமே திமுக விசுவாசிதான் என்றும் கருணாநிதியே தனது தலைவர் எனவும் அவர் கூறியுள்ளார். ஆனாலும் கட்சி விரோத நடவடிக்கைகள் எதிலும் தாம் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தயநிதி மாறன் பேட்டி

———————————————————————————————————-

07.06.07  கவர் ஸ்டோரி
குமுதம் ரிப்போர்ட்டர்
தயாநிதியின் புதிய அவதாரம்
கலாநிதியின் அதிரடி வியூகம்

அசுரவேகத்தில் கலைஞர்
உஷார்படுத்திய ஜோதிடம்

1997_ல் ஐ.கே. குஜ்ரால் பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்தார் முரசொலிமாறன். அப்போது லண்டன் சென்று, இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேருடன் வர்த்தக உறவுகள் பற்றி மாறன் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது.

தனது பயணத்திற்கு முன்பாக குஜ்ராலைச் சந்தித்து ஆலோசனை பெறப் போனார், மாறன். ‘நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். நீங்கள் சொல்வதுதான் நம் பாலிஸி’ என்று சொல்லி, அவரை வழியனுப்பி வைத்தார் குஜ்ரால். ஒரு பிரதமருக்குரிய அந்தஸ்துடன் அந்தச் சந்திப்பை நிகழ்த்தப் போனார் மாறன்.

இங்கிலாந்து பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான எண்:10, டவுனிங் தெரு மாளிகைக்குள் நுழையும் முன்பாக, தன்னம்பிக்கைக்காக ‘ஆத்தா! தாத்தா!’ (கலைஞரின் பெற்றோர் அஞ்சுகம் மற்றும் முத்துவேலர்) என்று முனகிக் கொண்டேதான் உள்ளே போனார் மாறன். முக்கியத்துவம் வாய்ந்த அந்தச் சந்திப்பை வெற்றிகரமாக முடித்து விட்டு, லண்டனில் இருந்தே கலைஞருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

”இங்கிலாந்து பிரதமரைச் சந்திக்கும் முன்பாக, உங்கள் வாழ்த்துக்கள் கிடைக்கும் என்று நினைத்தேன். கிடைக்கவில்லை. இதற்காக நான் அழுதேன். (இருவருக்கும் கொஞ்சம் ஊடல் இருந்த நேரம் அது…!) நேற்று உங்கள் கடிதம் கிடைத்தது. அதைப் பார்த்ததும் அழுதேன். இது ஆனந்தக் கண்ணீர். என்னுடைய இந்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. என்னாலேயே இதை நம்ப முடியவில்லை. நான் உங்கள் தயாரிப்பல்லவா!

என் சிந்தை_அணு ஒவ்வொன்றிலும் குடியிருந்து என் இதயத் துடிப்புகளாக இருந்து என்னை ஆட்டுவிக்கும் உங்கள் காலடிகளில் அனைத்தையும் சமர்ப்பிக்கிறேன்! நீங்களும் நானும்தான் இப்படி கண்ணீர்ப் பெருக்கோடு உணர்ச்சிகளைப் பரிமாறிக்கொள்ள முடியும். ஏனெனில், இது ரத்த பாசம்!” என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார் மாறன்.

கலைஞர் இன்றளவும் போற்றிப் பாதுகாக்கும் ஒருசில கடிதங்களில் இதுவும் ஒன்று.

இது நடந்து மிகச் சரியாக பத்தாண்டுகள் கடந்து விட்டன. அதே கலைஞர்… அதே ரத்த உறவுகள். ஆனால், காட்சியும் களமும் மாறிவிட்டன. ஊடல்களைத் தாண்டி உறுதியுடன் நீடித்த மாறனுடனான உறவுபோல அவரது வாரிசுகளுடன் அப்படி இருக்க முடியவில்லை கலைஞரால்! அப்பாவின் ரத்தம்தான் என்றாலும், அவர் போலவே ஓர் உறவை கலைஞருடன் தொடர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள் மாறனின் வாரிசுகளான கலாநிதியும், தயாநிதியும்! தனி சாம்ராஜ்யமாக வளர்ந்துவிட்ட மாறனின் வாரிசுகள், தங்களின் தொழில் கட்டமைப்பைக் காப்பாற்றுவது… எதிர்காலத் திட்டங்களைப் பற்றி யோசிக்க வேண்டியிருப்பது என அவர்களுக்குள்ள நிர்ப்பந்தங்களும் இதற்குக் காரணம்.

இந்தப் பின்னணிதான் கலைஞர் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் சமீப காலமாக ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்குக் கொண்டு வராமல் விரிசலை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. இளமையும் துடிப்பும் நிறைந்த மாறனின் வாரிசுகளுக்கு எதிராக, இந்த வயதிலும் கலைஞர் காய் நகர்த்தும் விதமும் வேகமும் அசாத்தியமானவை. பரபரப்புக்கும் ஆச்சர்யங்களுக்கும் பஞ்சமில்லாதவை…!

இரண்டு குடும்பங்களுக்கும் இடையேயான மனஸ்தாபங்கள் மறைய, மே_28 அன்று நடைபெற்ற மாறனின் மகள் அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சி அமையும் என்று எதிர்பார்த்தார்கள், இருதரப்புக்கும் வேண்டப்பட்ட சிலர். ஆனால், இந்நிகழ்ச்சியை கலைஞரும், ஸ்டாலினும் புறக்கணித்தார்கள். இருந்தபோதும், ஸ்டாலினின் மகன், மகள் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். சமாதான முயற்சிகளுக்கு இவர்களின் வருகை ஒரு சிறு துளியளவுக்கு நம்பிக்கை தந்தது என்பதை நினைத்து சந்தோஷப்பட்டார்கள் சில நலம் விரும்பிகள்.

இதெல்லாம், கலைஞர் தனது டெல்லி விசிட்டை முடித்துக் கொண்டு மே_29 அன்று இரவு சென்னை திரும்பும் வரையில்தான்! அன்றிரவு கோபாலபுரத்தில் இருந்த கலைஞரைச் சந்திக்க ஸ்டாலினின் மகன், மகள் உள்ளிட்ட சிலர் போயிருக்கிறார்கள். இவர்கள் வந்திருக்கும் விஷயத்தைக் கேள்விப்பட்ட கலைஞர், ‘அவர்களை அங்கேயே போகச் சொல்லுங்க. இங்கு அவர்களுக்கு என்ன வேலை?’ என்று கோபமாகக் கேட்டிருக்கிறார்.

வளைகாப்பு நிகழ்ச்சிக்குத் தாங்கள் போனதுதான் தாத்தாவின் கோபத்திற்குக் காரணம் என்பதைப் புரிந்துகொண்ட ஸ்டாலின் வாரிசுகள், ‘நாங்கள் போனதற்கான காரணம் சமாதானத்திற்காக அல்ல… விரும்பி அழைத்ததை மறுக்க முடியவில்லை. தவிர, இது ஒரு சுபநிகழ்ச்சி…’ என்றெல்லாம் சொல்லிச் சமாதானப்படுத்திய பிறகே அமைதியாகியிருக்கிறார் கலைஞர்.

” ‘என்னை மீறி யாரும் சமாதான முயற்சிகளில் இறங்கக் கூடாது. அத்தகைய முயற்சிகளை நான் விரும்பவுமில்லை’ என்பதை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு இதன் மூலம் உணர்த்தினார் கலைஞர்” என்கிறார் அந்தச் சமயத்தில் அங்கிருந்த ஒரு பிரமுகர்.

கொஞ்சம் ஆறப்போட்டால் வேகம் குறைந்துவிடும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு, கலைஞரின் இந்த வேகம் ஆச்சர்யத்தைத் தரத் தவறவில்லை. மாறாக, எதிர்ப்பு வேகமும் அதிகரித்ததில் அவர்களுக்கு அதிர்ச்சிதான். இதற்குப் பின்னணியாக, கடந்த பத்து நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள் சிலர்.

2005 நவம்பரில் சன் டி.வி.யில் தனது பெயரில் இருந்த 20 சதவிகிதப் பங்குகளை மாறன் சகோதரர்களுக்கே விற்றார், கலைஞரின் மனைவி தயாளு அம்மாள். சன் டி.வி.யின் மொத்த மதிப்பு சுமார் ஆயிரம் கோடி என்று மதிப்பிடப்பட்டு, அதனடிப்படையில் தயாளு அம்மாவின் 20 சதவிகிதப் பங்குகளுக்கான பணம் (சுமார் 200 கோடி) தரப்பட்டது என்றொரு தகவல் உண்டு. பண விவரங்களை வெளியிடாவிட்டாலும், இந்தப் பரிவர்த்தனை விஷயத்தை அப்போதே பத்திரிகையாளர்களிடம் சொன்னார் கலைஞர்.

இது நடந்து இரண்டாண்டுகள் ஆகவுள்ள நிலையில்தான், இப்போது மீண்டும் அந்த விஷயம் கிளறப்பட்டிருக்கிறது. ‘நமது பங்குகளுக்கு ஒரு விலையை நிர்ணயம் செய்து, அதைத் தந்து நம்மை விலக்கி விட்ட பிறகு, சன் டி.வி.யின் மதிப்பு சுமார் ஆறாயிரம் கோடி என்று நிர்ணயித்து பங்குகளை வெளியிட்டார்கள். இந்த விஷயத்தில் நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம்’ என்று கலைஞரின் ரத்த உறவுகள் சிலர் கலைஞரிடம் குமுறியிருக்கிறார்கள்.

”இதில் ஓரளவு நியாயமிருப்பதாக உணர்ந்த கலைஞர், சமீபத்தில் மகாபலிபுரத்திற்கு ஓய்வுக்காகச் சென்றபோது, சன் குழுமத்தின் ஆடிட்டரை வரவழைத்து சில விவரங்களைக் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பிறகே கலைஞரின் கோபம் இன்னும் அதிகமானது” என்கிறார் இந்த சம்பாஷணைகளின் பின்னணிகளை அறிந்த ஒருவர்.

‘பங்குப் பரிவர்த்தனையில் எந்தத் தவறும் நடக்கவில்லை. நியாயப்படியே எல்லாம் நடந்தது’ என்று சன் குழுமத்தினர் தங்கள் தரப்பை மீண்டும் வலியுறுத்திய போதும், தங்கள் ஆடிட்டரையே அழைத்து விசாரிக்கிறார்கள் என்பதை அறிந்து, அறிவாலயத்தில் உள்ள சன் டி.வி. அலுவலகத்தில் இருந்த சில கணக்கு வழக்கு விவரங்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி, பிரபல பத்திரிகை அலுவலகம் ஒன்றில் கொண்டு போய் வைத்தார்கள்.

இந்த விஷயத்தைப் பிறகு பார்க்கலாம் என்று நினைத்தோ என்னவோ… புதிதாக தாங்கள் தொடங்கவுள்ள கலைஞர் டி.வி.க்கான ஏற்பாடுகளை முடுக்கி விடும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் கலைஞர். சன் டி.வி. தொடங்கப்பட்ட காலத்தில் ஒரு பங்குதாரராக கலாநிதியுடன் இணைந்து பணியாற்றி, பின்பு பிரிந்துவிட்ட சரத் ரெட்டிதான், கலைஞர் டி.வி. நிர்வாகத்திற்காக கலைஞர் தேர்வு செய்திருக்கும் நபர். இவரைத் தேர்வு செய்த போதே கலைஞரின் வேகமும், கோபமும் எந்தளவுக்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்கள் தி.மு.க. முன்னோடிகள். இதே வேகத்தில் கலைஞர் டி.வி.க்கும் சரத்திற்கும் தனித்தனியே அறிவாலயத்தின் கீழ்த்தளத்தில் அறைகளும் ஒதுக்கப்பட்டன.

இவ்வளவு அரசியல் பணிகளுக்கிடையிலும் தினசரி ஓரிரு மணி நேரங்களாவது சரத்துடன் ஆலோசனை நடத்துகிறார். இதுதவிர, புதிய டி.வி.யில் பொழுதுபோக்கு அம்சங்களும் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக பாலசந்தர், ராதிகா உள்ளிட்ட சின்னத்திரை ஜாம்பவான்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார் கலைஞர்.

இது ஒருபுறம் இருக்க, தங்களின் புதிய சேனலை ஒளிபரப்ப, மாறன் சகோதரர்களின் ஆதிக்கத்தில் உள்ள சுமங்கலி கேபிள்ஸை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்பதால், தனியாக ஒரு கேபிள் நெட்வொர்க்கைத் தொடங்கவும் யோசனை செய்திருக்கிறார்கள். ஆற்காட்டாரின் தம்பி தேவராஜ் இதற்கான ஏற்பாடுகளில் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.

சமாதான முயற்சிகளைத் தடுப்பது மட்டுமல்ல… அதைச் செய்ய முனைவோர் மீதும் கலைஞர் கோபம் காட்டுகிறார் என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள் தயாநிதியும் கலாநிதியும். இளமையும், மூளையும் கைகொடுக்க… அவர்களும் சில காய் நகர்த்தல்களைச் செய்யத் தயாராகிறார்கள்.

இதில் முதல் ஸ்டெப் எடுத்து வைத்திருப்பவர் தயாநிதிமாறன். இதற்காக ‘தினகரன் நாளிதழின் நிர்வாகி’ என்ற அடையாளத்தோடு புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் தயாநிதி! மே_28 அன்று தனது தங்கையின் வளைகாப்பு முடிந்த உடனேயே, அன்று காலை தினகரன் நாளிதழ் அலுவலகத்திற்கு வந்தார். ‘இனி நான்தான் நிர்வாகத்தைக் கவனிக்கப் போகிறேன். நாம் இனி தினசரி சந்திக்கலாம்’ என்று ஆசிரியர் குழுவினரிடம் அவர் சொன்னபோது, அங்கிருந்தவர்களால் ஆச்சர்யத்தை மறைக்க முடியவில்லை.

சர்ச்சைக்குரிய தினகரன் நாளிதழ் கருத்துக்கணிப்பு வெளியான சமயத்தில், ‘எனக்கும் தினகரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று சொன்ன தயாநிதிமாறன், இன்று இப்படி வெளிப்படையாக வந்து நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளப் போவதாகச் சொன்னது சிலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

”எந்த வகையிலும் தலைவருடன் (கலைஞர்) மோதல் போக்கு வேண்டாம். நாம் மூன்று மாதங்களுக்கு (ஆகஸ்ட் வரை) அமைதியாக, நமது வேலைகளைக் கவனிப்போம். கொஞ்சம் பொறுமையாக இருந்து செயலாற்றத் தவறிவிட்டோம். மதுரை வன்முறைச் சம்பவம் நடந்த நாளில் நாம் அமைதியாக இருந்திருந்தாலே அல்லது இவ்வளவு வேகமாக அழகிரி மீது விமர்சனம் செய்யாமல் இருந்திருந்தாலே மற்ற பத்திரிகைகள் தாங்களாகவே அழகிரியின் செயலை விமர்சித்திருப்பார்கள். ஆனால், நாம் முழுவேகம் காட்டவும் மற்றவர்கள் அமைதியாகி விட்டார்கள். நாம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம். இங்கேதான் தவறு நடந்து விட்டது. பரவாயில்லை. நம்பிக்கையோடு பணியாற்றுங்கள். மூன்று மாதம்தான். எல்லாம் சரியாகிவிடும்!” என்று நம்பிக்கையளிக்கும் வகையில், தனது கருத்துக்களை அப்போது சொல்லியிருக்கிறார் தயாநிதி.

அன்றிலிருந்து தினசரி தினகரன் அலுவலகத்திற்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது சில செய்திகள் எப்படி வரவேண்டும் என்று ஆலோசனை சொல்லவும் தவறுவதில்லை. இந்தப் பணிகளுக்கிடையே தாத்தாவை எப்படியும் சமாதானப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் தயாநிதிக்குத் தீவிரமாக இருக்கிறது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இது ஒருபுறம் இருக்க… பலரது பார்வையும் இப்போது திரும்பியிருப்பது கலாநிதி மாறனை நோக்கித்தான். அதற்குக் காரணம் இருக்கிறது. தயாநிதி வெளி உலகிற்கு அறிமுகம் ஆனதே அரசியலை வைத்துத்தான். அந்த அரசியல் அங்கீகாரம், தனது தந்தை விட்டுச் சென்ற மத்திய சென்னை எம்.பி. பதவியில் ஆரம்பித்து, தி.மு.க. தலைவரான தனது தாத்தாவின் அரவணைப்பால் கிடைத்ததுதான் தயாநிதிக்கு.

கலாநிதி மாறன் இதற்கு நேர்மாறானவர். தனது சொந்த வாழ்க்கையாகட்டும், தனது தொழிலாகட்டும், அதில் அரசியலையும், அரசியல்வாதிகளையும் கொஞ்சம் தள்ளிவைத்தே பழக்கப்பட்டவர் அவர்.

”நான் கூச்ச சுபாவம் உள்ளவனும் அல்ல. நெருங்கிப் பழகுபவனும் அல்ல. நான் சாதாரண ஒரு நபர். அவ்வளவுதான். எனது தேவைகளுக்காக எனது குடும்பப் பின்னணிகளைச் சொல்லி அவற்றைப் பூர்த்தி செய்து கொள்வது எனக்கு உடன்பாடான விஷயமல்ல. நம்புங்கள்… நான் அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்தபோது, எனது பணத்தேவைக்காக ஒரு ரெஸ்டாரெண்டில் வேலை பார்த்தேனே தவிர, என் குடும்பத்தை எதிர்பார்க்கவில்லை” என்று அடிக்கடி சொல்வார் கலாநிதி மாறன்.

இப்போது அரசியல் சூறாவளி தன்னையும் தன் குடும்பத்தினரையும் மையமாக வைத்துச் சுழலும்போதும் அதே மனநிலையில்தான் இருக்கிறார் கலாநிதி. ‘தனது டி.வி. சாம்ராஜ்யத்திற்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தனது மூளையை மட்டுமே பயன்படுத்தி சிலவற்றைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார் கலாநிதி’ என்கிறார்கள் சன் நெட்வொர்க் வட்டாரத்தில்.

கலைஞர் டி.வி.க்காக தனியாக கேபிள் நெட்வொர்க் ஆரம்பிக்கப் போகிறார்கள் என்பது மட்டுமல்ல… ஏற்கெனவே உள்ள சுமங்கலி கேபிள் நெட்வொர்க்கின் கேபிள்களை ஆங்காங்கே சிலர் வெட்டிவிடுவதாகவும் கலாநிதிக்குத் தகவல்கள் வருகின்றன. ‘கேபிள் டி.வி. சர்வீஸை’ அரசே எடுத்து நடத்தலாம் என்று லயோலா கல்லூரியின் கருத்துக் கணிப்பில் பெரும்பாலான மக்கள் சொல்லியிருந்ததை எடுத்துக்காட்டி கலைஞர் வெளியிட்ட கருத்துக்களும், கேபிள் டி.வி. விரைவில் அரசுடைமை ஆகவும் வாய்ப்பிருக்கிறது என்ற செய்தியும் கலாநிதியை நிறையவே யோசிக்க வைத்திருக்கிறது.

இனியும் தனது டி.வி. ஒளிபரப்புக்கு கேபிளை நம்பிப் பயனில்லை என்ற யதார்த்தத்தை உணர்ந்துள்ள கலாநிதி, இன்னும் மூன்று மாதங்களுக்குள் சன் நெட்வொர்க்கின் சார்பில் செயற்கைக் கோள் மூலம் (சிறிய ஆண்டெனா உதவியுடன்) வீடுகளுக்கே நேரடியாக டி.வி. நிகழ்ச்சிகளைக் கொண்டு சேர்க்கும் DTH  சேவையைத் தொடங்க முடிவெடுத்து, அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறாராம்! இதை நிறைவேற்றிவிட்டாலே சன் டி.வி.யின் பயணத்தை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் நம்புகிறாராம் கலாநிதி.

‘தனது இந்த நடவடிக்கைகளைத் தெரிந்து கொண்டு, சன் டி.வி.க்கு DTH  சேவைக்கான உரிமத்தை வழங்கக் கூடாது என்று டெல்லியில் இப்போது சிலர் காய் நகர்த்துவதையும் உணர்ந்துள்ள கலாநிதி, அதை எதிர்கொண்டு சமாளித்து, வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் தனது நோக்கத்தை நிறைவேற்றவும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்!’ என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

இப்படி… மூன்று மாதங்கள் அமைதியாக இருங்கள் என்று தினகரன் ஊழியர்களுக்கு தயாநிதி ஆலோசனை சொல்கிறார்… கலாநிதி, மூன்று மாதத்திற்குள் DTH  சர்வீஸைத் தொடங்கி, எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார்…. கலைஞர் குடும்பத்திலும் ஆகஸ்ட் மாதத்திற்குள்ளாக கனிமொழிக்கு ஏதாவது செய்யுங்கள்… ஸ்டாலினை ஆட்சி பீடத்தில் அமர்த்துங்கள்… என்றும் கலைஞருக்கு நெருக்கடி தந்திருக்கிறார்கள். அதனால்தான் இவ்வளவு விரைவாக கனிமொழி எம்.பி.யாக்கப்பட்டிருக்கிறார். ஸ்டாலினும் மிக விரைவில் பதவி உயர்வு அடைவார் என்றும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

”ஏன் எல்லோரும் ஆகஸ்டையே குறிவைக்கிறார்கள்…?” என்ற கேள்வியோடு கலைஞர் குடும்பத்திற்கும் மாறன் குடும்பத்திற்கும் நெருக்கமானவர்களை வலம் வந்தால், ‘எல்லாம் ஜோதிடம்தான் காரணம்!’ என்ற பதில் வந்து நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.

கலைஞர்_மாறன் இருவர் குடும்பத்திலும் உள்ள பெண்கள் கோயில், குளம் என்று போவதை வழக்கமாகக் கொண்டுள்ளவர்கள் என்பது தவிர, ஜோதிடத்திலும் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள் என்பதும் உள்வட்டாரத்தில் அனைவரும் அறிந்ததே.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்த இரண்டு தரப்பும் தங்களுக்கு நெருக்கமான ஜோதிடர்களை ஆலோசித்ததில் ஒரே மாதிரியாக அவர்கள் சொன்ன தகவல், ‘வரும் ஆகஸ்ட் 5_ம் தேதியன்று நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி, ஆட்சியாளர்களுக்கு நல்லதல்ல. அதனால் ஆட்சி அதிகாரம் கைமாறும். எதிரும் புதிருமானவர்கள் ஒன்றுசேரும் வகையில் விநோதமான அரசியல் மாற்றங்களும் நிகழும்!’ என்பதுதான்!

”ஜோதிட ரீதியாக மட்டுமல்ல, யதார்த்தமும் அதை நோக்கித்தான் போகிறது என்பதால்தான் ஆகஸ்டுக்குள் சிலவற்றைச் செய்யச் சொல்லி கலைஞர் குடும்பத்தினர் வற்புறுத்த…. ‘ஆகஸ்ட் வரை பொறுத்திருங்கள். அதன்பிறகு நமது திட்டங்களைச் செயல்படுத்தலாம்’ என்று மாறன் சகோதரர்களும் அணை போடுகிறார்கள்” என்கிறார்கள் பிரச்னையின் இந்தப் பரிணாமத்தை உணர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிலர்!

இப்படி, பகுத்தறிவைத் தாண்டி ஜோதிடம் தனது பங்களிப்பைச் செய்ய…. அரசியல் அனுபவம் கொண்ட கலைஞரும், இளமை ரத்தம் துள்ளும் மாறன் சகோதரர்களும் தங்கள் எண்ணங்களுக்குச் செயல்வடிவம் தர முனைந்திருக்கும் இந்த இரண்டாவது காண்டத்தின் முடிவை அறிந்துகொள்ள இரு குடும்பங்களின் உறுப்பினர்கள் மட்டுமல்ல; அதிர்ச்சி கலந்த, உணர்ச்சிகள் நிறைந்த மனநிலையோடு கழக உடன்பிறப்புகளும் காத்திருக்கிறார்கள்! ஸீ

சில மாதங்களுக்கு முன்பு, போயஸ் கார்டனுக்குள் காரில் தனது நண்பரோடு போய்க் கொண்டிருந்தார் தயாநிதி மாறன். அங்கே ஜெயலலிதாவின் வீட்டிற்குப் பாதுகாப்பாக இருக்கும் போலீஸார், ஷிப்ட் மாறும் நேரத்தில் கும்பலாக ஒரு வேனில் இருந்து இறங்குவதைப் பார்த்தார் தயாநிதி. அதன்பிறகு ‘முன்னாள் முதல்வருக்கு எதற்கு இவ்வளவு பாதுகாப்பு?’ என்று கேள்விகள் எழ, அடுத்த சில நாட்களிலேயே ஜெ.வின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. இதையடுத்து, எழுந்த விமர்சனங்களை அரசியல்ரீதியாக கலைஞர் சமாளித்தார் என்பது வேறு விஷயம்.

இப்போது காட்சிகள் மாறிவிட்டன. மத்திய அமைச்சராக இருந்தபோது இருந்த பாதுகாப்புடனேயே இப்போதும் வலம் வருகிறார் தயாநிதி. ‘பதவி போன பின்பும் எதற்கு இவ்வளவு பாதுகாப்பு?’ என்று கோபாலபுரத்திலிருந்து குரல் கேட்கிறதாம் இப்போது! அதனால், எந்த நேரத்திலும் தயாநிதியின் பாதுகாப்பு வாபஸாகும் என்கிறார்கள் கோபாலபுரத்தின் குரலை அருகில் இருந்து கேட்டவர்கள்.

– எஸ்.பி. லட்சுமணன்

—————————————————————————————-

Posted in Alagiri, Alakiri, Analysis, Anbumani, Andipatti, Arcot, Astrology, Azhagiri, Azhakiri, Backgrounder, Balachander, Balu, Belief, Biosketch, CB-CID, CBI, Chidamabram, CID, Coimbatore, Congress, Dayaalu Ammal, Dayalu Ammaal, Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, Devaraj, Devraj, Dhinakaran, Dinagaran, Dinakaran, DMK, Faces, Gujral, History, IAS, IPS, Jaffer sait, Jaffer seth, Kalainjar TV, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kavithalaya, Kovai, Kumaran, Lok Saba, LokSaba, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Mallika, Manmohan, Maran, MP, Mu Ka, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Murasoli, Nagma, Nilagiri, Nilgiris, officers, P Chidamabram, Pa Chidamabram, Palanichami, Palanisami, Palanisamy, Pazanisamy, Pazhanisami, Pazhanisamy, PC, people, PMK, Police, Pongaloor, Pongalur, Radaan, radan, Radhika, Ramadas, Ramadoss, RAW, Sarath, Sarath Reddy, Sarathkumar, SCV, Selvaraj, Shanmugasundaram, Shanmukasundaram, Shanmukasundharam, Shanumugasundaram, Shanumughasundaram, Sharath, Sharath Reddy, Sharathkumar, Simran, Sonia, Sumangali, Sumangali Cable, Sumangali Cable Vision, Sumankali, Sun, Temple, Thevaraj, Thinakaran, Thiruchi, Thiruchirappalli, Thiruchy, TR Balu, Transfer, Trichirappalli, Trichy, TV, Veeragopal, Veerasami, Veerasamy | 4 Comments »