Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2007
பாடாய்ப்படுத்தும் பங்குச்சந்தை!
பங்குச் சந்தை என்பது நாட்டின் தொழில், வர்த்தகத் துறைகளின் ஆரோக்கியத்தையும், மக்களுடைய வருமானம், சேமிப்பு, முதலீடு ஆகியவற்றின் வளத்தையும் ஒருசேர உணர்த்தும் உரைகல். ஆனால் சமீப காலமாக -அன்னிய நேரடி முதலீடு காரணமாக -பங்குச் சந்தையில் பங்கு பரிவர்த்தனை மதிப்பும், பங்குகளின் தனி மதிப்பும் மிக அதிகமாக உயர்ந்து வருகின்றன.
செவ்வாய்க்கிழமை 19,000 புள்ளிகளை எட்டிய குறியீட்டெண் புதன்கிழமை 20,000-ஐ எட்டிவிடும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் 1,744 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது. பங்கேற்புப் பத்திரத்தை “செபி’ என்கிற பங்குச் சந்தை கண்காணிப்பு -கட்டுப்பாட்டு அமைப்பு தடை செய்துவிடும் என்ற வதந்தி காரணமாக இப்படிக் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
வெளிநாடுகளிலிருந்துகொண்டு, தரகர்கள் மூலம் முதலீடு செய்கிறவர்கள் பயன்படுத்தும் புதுவகை அடையாள பங்குப் பத்திரமே, “பங்கேற்பு பத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. அவற்றைத் தடை செய்யும் எண்ணம் ஏதும் அரசுக்கு இல்லை என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உறுதி அளித்த பிறகே சந்தையில் விற்பனை மீண்டும் உயர்ந்தது.
கடந்த வாரம்தான் பங்குச் சந்தையில் குறியீட்டெண் வேகவேகமாக உயர்ந்து வருவது குறித்து நிதி அமைச்சர் சிதம்பரம் வியப்பும் கவலையும் ஒருங்கே தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. “சிறிய முதலீட்டாளர்கள் இந்த நேரத்தில் அசட்டுத் துணிச்சலில் அதிகப் பணத்தை முதலீடு செய்து, கையைச் சுட்டுக்கொள்ள வேண்டாம்’ என்று உரிய நேரத்தில் அவர் எச்சரித்திருந்தார்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவழியினரும், ஊக வணிகர்களும் தங்களிடம் உள்ள மிதமிஞ்சிய பணத்தை இந்தியச் சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். இதை வேண்டாம் என்று சொல்வது சரியான வணிக உத்தி இல்லை. இந்த முதலீடு இருவகைப்படும். வெளிநாடுகளில் உள்ள தனி முதலீட்டாளர்கள் நேரடியாக நமது பங்குகளை வாங்குவது ஒருவகை. வெளிநாடுகளைச் சேர்ந்த நிதி நிறுவனங்கள் நம்முடைய பங்குகளை வாங்குவது மற்றொரு வகை. இவ்விருவகையிலான நேரடி முதலீடுமே நமக்கு அவசியம்தான்.
இந்த முதலீட்டாளர்கள், லாபம் வரும் என்றால் முதலீடு செய்வார்கள். நஷ்டம் வரும் என்றால் முதலீட்டை விலக்கிக் கொள்வார்கள். இது பங்குச் சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு நல்லதல்ல. எனவே இவ்வகை முதலீட்டாளர்களின் முதலீட்டில் 10% தொகையை, ஓராண்டுக்குத் திரும்ப எடுக்க முடியாமல் கட்டாய டெபாசிட்டாகப் பெற வேண்டும் என்று அரசுக்கு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னரும், பொருளாதார வல்லுநருமான எஸ்.எஸ். தாராபூர் ஆலோசனை கூறியிருக்கிறார். இதை அமல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.
போக்குவரத்து, சாலை வசதிகள், தகவல்தொடர்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சார உற்பத்தி போன்ற அடித்தளக் கட்டமைப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்கிறோம் என்று அரசு பலமுறை கூறி ஓய்ந்துவிட்டது. ஆனால் அத்தகைய முதலீட்டை ஏற்கும் நிறுவனங்களோ, பங்கு வெளியீடுகளோ, கடன் பத்திரங்களோ சந்தையில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
இப்படியொரு ஏற்பாட்டைத் தனியார் நிறுவனங்கள் செய்யாது; அரசுதான் முயற்சி எடுக்க வேண்டும். வங்கிகளில் தரப்படும் வட்டிவீதத்தைவிட கவர்ச்சிகரமான வருவாயை அளிப்பதாக அரசு உறுதி கூறினால் உள்நாட்டிலிருந்து மட்டும் அல்ல, வெளிநாடுகளிலிருந்தும் இந்தியர்கள் முதலீட்டைக் கொண்டுவந்து கொட்டுவார்கள். இனியாவது அரசு அத்தகையதொரு முயற்சியைத் தொடங்குமா?
Posted in ADR, Assets, Biz, Bonds, Brokers, BSE, Commerce, crash, DJIA, Economy, FII, Finance, fiscal, Foreign, Funds, GE, GM, Goldman Sachs, Govt, Index, Indices, Infy, Interest, International, investors, Invsetors, IPO, Loss, markets, Merryll Lunch, MF, MNC, Morgan Stanley, NRI, NSE, PE, PIO, Planning, Portfolio, Profit, Rates, ratio, Shares, Stocks, Traders, Trading, Wipro, World | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 5, 2007
ரூபாய் மதிப்பின் ஏற்றமும் விளைவுகளும்
எஸ். கோபாலகிருஷ்ணன்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த 9 ஆண்டுகளில், முன் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. ஜனவரி மாதம் ஒரு டாலர் ரூ. 44.12 ஆக இருந்த மதிப்பு, தற்போது ரூ. 40.50 என்ற அளவை எட்டியுள்ளது. கடந்த 6 மாதங்களில் ரூபாயின் மதிப்பு 9 சதவீதம் உயர்ந்துள்ளது.
ரூபாயின் மதிப்பு உயருவதால் நன்மை, தீமை இரண்டும் உண்டு. வெளிநாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதற்கு ஆகும் செலவு குறையும். ரூபாயின் மதிப்பு உயர்ந்து டாலரின் மதிப்பு சரிவதால், இறக்குமதி செய்பவர்கள் செலுத்த வேண்டிய பணம் குறைகிறது. இது நன்மை.
அதேநேரம், நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு விலை நமக்கு டாலரில் வருகிறது. டாலரின் மதிப்பு சரிந்திருப்பதால் நமக்கு இழப்பு ஏற்படுகிறது. இது நமக்குப் பாதகமானது.
கடந்த காலங்களில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்தபோது, ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையை எடுப்பது வழக்கம். அதாவது, சந்தையில் பெரிய அளவில் டாலரை வாங்குவதன் மூலம் வீழ்ச்சி அடைந்த டாலரின் மதிப்பை ரிசர்வ் வங்கி சரி செய்துவிடும். ஆனால், இந்த முறை ரிசர்வ் வங்கி அவ்விதம் செய்யவில்லை. ஏன் என்ற கேள்வி எழுகிறது.
அண்மைக் காலமாக, ரிசர்வ் வங்கியும் சரி, மத்திய அரசும் சரி, கடுமையாக உயர்ந்திருந்த பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ரூபாய் மதிப்பின் உயர்வை, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்திக்கொண்டன.
டாலர் சரிந்திருப்பதால் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதி விலை குறைந்துள்ளது. இது விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கு உதவியது.
இதனாலும் ரிசர்வ் வங்கியின் இதர நடவடிக்கைகளாலும் பணவீக்கம் தற்போது 4.03 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பணவீக்கம் மற்றும் விலைவாசியைக் கட்டுப்படுத்தும் அதேநேரம், ரூபாய் மதிப்பின் உயர்வால் விளைந்துள்ள பாதகங்களை இனியும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருக்கலாகாது. ஏற்றுமதி கடுமையாக சரிந்து வருகிறது. 2005-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி 26.3 சதவிகித அளவு வளர்ச்சி கண்டது. 2006-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி வளர்ச்சி 19.3 சதவிகிதமாகச் சரிந்தது. ரூபாய் மதிப்பு அபரிமிதமாக உயர்ந்திருக்கும் நடப்பாண்டின் முன்பாதியில் எந்த அளவுக்கு ஏற்றுமதி சரிந்துள்ளது என்னும் விவரங்கள் அடுத்த ஓரிரு மாதங்களில்தான் தெரியவரும்.
ரூபாயின் மதிப்பு உயர்ந்திருப்பதன் விளைவாக, ஏற்றுமதியாளர்கள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, ஜவுளி, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், மருந்து உற்பத்தியாளர்கள், ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதியாளர்கள் பொறியியல் தொடர்பான தொழில்கள் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 35 சதவிகிதம் அமெரிக்காவுக்குத்தான் அனுப்பப்படுகிறது. ஜவுளி ஏற்றுமதியில் கோட்டா முறை ரத்து செய்யப்பட்டது இந்தியாவுக்கு நல்லவாய்ப்பாக அமைந்தது. உற்சாகமாக, உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையில், ஏற்றுமதி ஒப்பந்தங்களைப் பெற்று, உற்பத்தியில் ஈடுபட்டனர். இந்திய ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி ஆர்டர்களைப் பெறும்போது டாலரின் மதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால், சரக்கை அனுப்ப வேண்டிய நேரத்தில் டாலரின் மதிப்பு சரிந்துவிட்டது. இதனால் பலகோடி ரூபாய் இழப்பைச் சந்திக்க வேண்டிய நிலைக்கு ஏற்றுமதியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு மட்டும் தினசரி ரூ. 3.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் தொழில் முக்கியப்பங்கு வகிக்கிறது. வேளாண் துறைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் ஜவுளித்துறையில் 3.50 கோடி பேர் பணியாற்றுகின்றனர். எனவே தற்போதைய நிலை கவலை அளிக்கக்கூடியாதக உள்ளது.
சீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்றுமதியாளர்கள் நாணயப் பரிமாற்றத்தால் பாதிக்கப்படவில்லை. அந்த நாடுகள் தங்கள் நாணயத்தின் மதிப்பை கடந்த பல ஆண்டுகளாக ஒரேநிலையில் வைத்திருக்கின்றன. இதனால் அமெரிக்கச் சந்தையில் சீனாவின் ஜவுளி விலை உயராது. ஆனால் இந்தியாவின் ஜவுளி விலை அதிகரிக்கும்.
தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ள பெரிய நிறுவனங்களைப் பொருத்தவரை, அவர்களது ஏற்றுமதிக்கான லாபம் கணிசமாகச் குறைந்துள்ளது. இதனால், பன்னாட்டுச் சந்தையில் போட்டியிடும் சக்தி அவர்களுக்கும் குறையும்.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் ஈடுபடும் தொழில்கள் கடும் பாதிப்பிலிருந்து தப்பியுள்ளன. அந்த வகையில், ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரணங்களை ஏற்றுமதி செய்வோர் நிலை சற்று ஆறுதல் அளிக்கக் கூடியது. இவர்கள் உற்பத்திக்குத் தேவையான கச்சாப் பொருள்களை வெளிநாடுளிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். கற்களை பட்டைதீட்டியும் புதிய ஆபரணங்களாகத் தயாரித்தும் ஏற்றுமதி செய்கிறார்கள். இவர்களுக்கு இறக்குமதிச் செலவு கணிசமாகக் குறைகிறது. இந்த உபரி லாபம் ஏற்றுமதி இழப்பை ஈடு செய்ய உதவுகிறது.
பொறியியல் ஏற்றுமதியைப் பொருத்தவரை, 2006-07-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 30 சதவிகிதம் அதிகரித்தது. கடந்த ஏப்ரலில் இந்த வளர்ச்சி 23.92 சதவிகிதம் சரிந்துள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ஒருபுறமிருக்க, புதிய வேலைவாய்ப்புகள் பறிபோனதுதான் பெரும் சோகம். ஜவுளி ஏற்றுமதி குறைந்ததால், 2007-08ம் ஆண்டில் 5,79,000 புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்று இந்திய ஜவுளி சம்மேளனத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதில் 2.72 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளும் மற்றும் தொடர்புடைய தொழில்களில் உருவாகக்கூடிய வேலைவாய்ப்புகளும் அடங்கும்.
விசைத்தறி நெசவாளர்களும் புதிய சூழ்நிலையில் வருவாய் இழப்பை எதிர்கொள்ள நேரும். ரூபாய் மதிப்பின் ஏற்றம் மற்றும் டாலரின் சரிவு, இந்திய ஏற்றுமதியை, தொழில் வளர்ச்சியை குறிப்பாக, வேலைவாய்ப்புகளை மோசமாகப் பாதித்துள்ளது என்பது கண்கூடு. எனவே இதற்குரிய பரிகாரம் தேடியாக வேண்டும். பணவீக்கம் ரூபாய் மதிப்பு ஆகிய இரு பிரச்னைகளையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது கம்பிமேல் நடப்பது போல்தான். எனினும் பாரத ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் இதில் தீவிரகவனம் செலுத்தும் நேரம் வந்துவிட்டது.
இது ஒருபுறமிருக்க, நீண்டகால அடிப்படையில் மின்சாரம், போக்குவரத்து, துறைமுகங்களில் நேரும் காலதாமத்தைத் தவிர்த்தல் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளின் மேம்பாடுதான் ஏற்றுமதிக்கு உதவும். ஏற்றுமதியாளர்களும் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக்கொண்டு, உற்பத்திச் செலவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். தங்கள் லாபத்துக்கு எல்லா நேரங்களிலும் அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்க முடியாது.
எனினும், தற்போது எழுந்துள்ள பிரச்னைக்கு உடனடி தீர்வாக ஏற்றுமதியாளர்களுக்கு சில சலுகைகளை வழங்குவது பொருத்தமாக இருக்கும். உதாரணமாக, Duty Drawback எனப்படும் ஏற்றுமதிக்கான சலுகைத் தொகையை அதிகரிக்கலாம். ஏற்றுமதிக்கான பொருள்களை உற்பத்தி செய்வதற்கு குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக் கடன் வழங்குதல் மற்றும் வருமான வரிச் சட்டத்தின் 80 ஏ.ஏ.இ. பிரிவின் கீழ் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரிச்சலுகை, சேவை வரித் தள்ளுபடி ஆகிய நடவடிக்கைகளின் மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)
Posted in Agriculture, Appreciation, APR, Balancesheet, Banks, Biz, Call-Centers, Call-Centre, Capital, Commerce, Commodity, Currency, Deals, Deflation, Deposits, Diesel, Dollar, Duty, Economy, Employment, Euro, Exchange, Expenses, Exports, FDI, Finance, Fluctuations, forecasts, Garment, Gas, GDP, Growth, IMF, Imports, Industry, Inflation, Inflows, InfoTech, Interest, International, investments, Jobs, Loans, markets, MNC, Money, oil, Outflows, Outsourcing, Petrol, Portfolio, pound, Pricing, Productivity, Profit, Profits, Rates, RBI, Recession, Rupee, Sales Tax, service tax, slowdown, Software, Statement, Strength, Tax, Telecom, Textiles, Trading, Transfer, US, USA, Valuation, volatility, WB, World, Yen | Leave a Comment »