Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Maruthakasi – Biosketch: Movie Faces – Dinathanthi

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 29, 2007

திரைப்பட வரலாறு 738
“வாராய்… நீ வாராய்” – மந்திரிகுமாரி
“முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போல” – உத்தமபுத்திரன்
“காவியமா? நெஞ்சின் ஓவியமா?” – பாவை விளக்கு
4,000 பாடல்களுக்கு மேல் எழுதிய மருதகாசி

எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோருக்கு மிகச்சிறந்த பாடல்களை எழுதியவர், மருதகாசி. “திரைக்கவி திலகம்” என்று பட்டம் பெற்ற அவர், சினிமாவுக்காக 4 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.

திருச்சி மாட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் 13-2-1920-ல் பிறந்தவர் மருதகாசி. தந்தை அய்யம்பெருமாள் உடையார். தாயார் மிளகாயி அம்மாள்.

விவசாயம்

உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றபின், கும்பகோணம் அரசு கல்லூரியில் சேர்ந்து, “இன்டர்மீடியேட்” வரை படித்தார்.

1940-ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. மனைவி பெயர் தனக்கோடி அம்மாள்.

நாடகப் பாடல்கள்

மருதகாசி, சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலை பெற்றிருந்தார்.

கல்லூரி படிப்புக்குப்பிறகு, குடந்தையில் முகாமிட்டிருந்த “தேவி நாடக சபை”யின் நாடகங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தார். அப்போது, இன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். அதைத்தொடர்ந்து, கருணாநிதி எழுதிய “மந்திரிகுமாரி” போன்ற நாடகங்களுக்கு பாடல் எழுதினார்.

மாடர்ன் தியேட்டர்ஸ்

இந்தக் காலக்கட்டத்தில், பின்னணி பாடகராக திருச்சி லோகநாதன் கொடிகட்டிப் பறந்தார். “வானவில்” என்ற நாடகத்தின் பாடலுக்கு அவர் இசை அமைத்தபோது, மருதகாசியின் கவியாற்றலை நேரில் கண்டார். இதுபற்றி, மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்திடம் தெரிவித்தார்.

உடனே டி.ஆர்.சுந்தரம் மருதகாசியை சேலத்திற்கு வருமாறு அழைத்தார். இந்த சமயத்தில், மருதகாசியுடன் கவி. கா.மு.ஷெரீப் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரையும் அழைத்துக்கொண்டு சேலம் சென்றார், மருதகாசி.

அப்போது (1949) சேலம் மாடர்ன் தியேட்டர்சார் “மாயாவதி” என்ற படத்தைத் தயாரித்து வந்தனர். டி.ஆர்.மகாலிங்கமும், அஞ்சலிதேவியும் இணைந்து நடித்த இந்தப்படத்தை டி.ஆர்.சுந்தரம் டைரக்ட் செய்து வந்தார்.

இந்தப் படத்திற்கு தனது முதல் பாடலை மருதகாசி எழுதினார். “பெண் எனும் மாயப் பேயாம்… பொய் மாதரை என் மனம் நாடுமோ…” என்று தொடங்கும் அந்த பாடலுக்கு ஜி.ராமநாதன் இசை அமைத்தார்.

இவ்வாறாக மருதகாசியின் திரை உலகப் பயணம், மாடர்ன் தியேட்டர்ஸ் “மாயாவதி” மூலமாகத் தொடங்கியது.

பொன்முடி

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய “எதிர்பாராத முத்தம்” என்ற குறுங்காவியத்தை, “பொன்முடி” என்ற பெயரில் மாடர்ன் தியேட்டர்சார் திரைப்படமாகத் தயாரித்தனர். வசனத்தை பாரதிதாசன் எழுதினார்.

இந்தப் பாடலுக்கு ஜி.ராமநாதன் இசை அமைத்தார். எல்லாப் பாடல்களையும் மருதகாசி எழுதினார். கதாநாயகனாக நரசிம்மபாரதியும், கதாநாயகியாக மாதுரிதேவியும் நடித்தனர்.

1950 பொங்கலுக்கு வெளிவந்த “பொன்முடி” படத்தின் பாடல்கள் ஹிட் ஆயின.

மந்திரிகுமாரி

இதன் பிறகு கருணாநிதியின் கதை-வசனத்தில் மாடர்ன் தியேட்டர்சார் தயாரித்த படம் மந்திரிகுமாரி. இந்தப்படம் மாபெரும் வெற்றி

பெற்றது.இந்தப் படத்திற்கு மருதகாசி எழுதிய பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றன. குறிப்பாக “வாராய்… நீ வாராய்! போகும் இடம் வெகு தூரமில்லை!” என்ற கிளைமாக்ஸ் பாடலும், “உலவும் தென்றல் காற்றினிலே” என்ற பாடலும் மிகப்பிரமாதமாக அமைந்தன. இந்த டூயட் பாடல்களைப் பாடியவர்கள் திருச்சி லோகநாதன் – ஜிக்கி.

இந்தக் காலக்கட்டத்தில், மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும், இசை இலாகாவில் மருதகாசியும் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

பாகவதர் அழைப்பு

மந்திரிகுமாரியில் மருதகாசி எழுதிய பாடல்கள் எம்.கே.தியாகராஜ பாகவதரை வெகுவாகக் கவர்ந்தன. சுரதாவின் கதை-வசனத்திலும், எப்.நாகூர் டைரக்ஷனிலும் உருவாகி வந்த தனது “அமரகவி” படத்துக்கு பாடல் எழுத மருதகாசியை அழைத்தார்.

அதன்படியே, சில பாடல்களை மருதகாசி எழுதினார்.

தூக்குத்தூக்கி

அருணா பிலிம்ஸ் பட நிறுவனம் “ராஜாம்பாள்” என்ற துப்பறியும் கதையை படமாக்கியது. இந்தப் படத்தில்தான் ஆர்.எஸ்.மனோகர் கதாநாயகனாக அறிமுகமானார்.

இந்தப் படத்துக்கு மருதகாசி எழுதிய பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

அதைத்தொடர்ந்து அருணா பிலிம்ஸ் அடுத்து தயாரித்த “தூக்குத்தூக்கி” படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பை மருதகாசி பெற்றார்.

இந்தப் படத்தில் சிவாஜிகணேசன், லலிதா, பத்மினி, ராகினி, டி.எஸ்.பாலையா என்று பெரிய நட்சத்திர கூட்டமே இருந்தது. ஆர்.எம்.கிருஷ்ணசாமி டைரக்ட் செய்த இந்த படத்துக்கு, ஜி.ராமநாதன் இசை அமைத்தார்.

இந்தப் படத்தில், சிவாஜிகணேசனுக்கு யாரைப் பின்னணியில் பாட வைப்பது என்ற கேள்வி எழுந்தது. “மந்திரிகுமாரி”யில், “அன்னமிட்ட வீட்டிலே, கன்னக்கோல் சாத்தவே…” என்று தொடங்கும் பாடலை, வெகு சிறப்பாக டி.எம்.சவுந்தரராஜன் பாடியிருந்தார். அவரைப் பாடச் சொல்லலாம் என்று மருதகாசியும், டைரக்டர் ஆர்.எம்.கிருஷ்ணசாமியும் கூறினார்கள். ஆனால், சிதம்பரம் ஜெயராமனைப் போடும்படி, சிவாஜி கூறினார்.

முடிவில் “3 பாடல்களை சவுந்தரராஜனை வைத்து பதிவு செய்வோம். சிவாஜிக்கு பிடிக்கிறதா என்று பார்த்து இறுதி முடிவு எடுப்போம்” என்று மருதகாசியும், கிருஷ்ணசாமியும் தீர்மானித்தார்கள்.

அதன்படியே, மூன்று பாடல்களை பதிவு செய்து சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார்கள். டி.எம்.சவுந்தரராஜனின் குரல் சிவாஜிக்குப் பிடித்து விட்டது. அன்று முதல், சிவாஜிக்கு தொடர்ந்து டி.எம்.சவுந்தரராஜன் பாடலானார்.

26-8-1954-ல் வெளியான “தூக்குத்தூக்கி”, மகத்தான வெற்றிப்படமாக அமைந்து, வசூல் மழை கொட்டியது. எங்கு திரும்பினாலும், அந்தப் படத்தின் பாடல்கள் எதிரொலித்தன. மருதகாசிக்கு பல்வேறு படக்கம்பெனிகளில் இருந்து அழைப்பு வந்தது.

மெட்டுக்குப் பாட்டு எழுதுவதில் மருதகாசி வல்லவர். எனவே, இசை அமைப்பாளர்களுக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது.

அந்தக் காலக்கட்டத்தில் ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.தட்சிணாமூர்த்தி, விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆகிய அனைத்து இசை அமைப்பாளர்களின் படங்களுக்கும் மருதகாசி பாடல் எழுதினார்.

————————————————————————————————-

திரைப்பட வரலாறு 739
மாடர்ன் தியேட்டர்ஸ் – மருதகாசி மோதல்
உண்மையை கண்டுபிடித்தார் டி.ஆர்.சுந்தரம்
“அலிபாபா” படத்துக்கு எல்லா பாடல்களையும் எழுதச் சொன்னார்

மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்தார், மருதகாசி. சிலருடைய சூழ்ச்சியினால், மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துடன் மருதகாசிக்கு மோதல் ஏற்பட்டது. பிறகு உண்மையை அறிந்த மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம், எம்.ஜி.ஆர். நடித்த “அலிபாபாவும் 40 திருடர்களும்” படத்துக்கு எல்லாப் பாடல்களையும் எழுத வாய்ப்பளித்தார்.

எம்.ஜி.ஆருக்கு எழுதிய பாடல்

கவிஞர் மருதகாசியும், சாண்டோ சின்னப்பதேவரும் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் பணியாற்றியபோதே நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். பிறகு தேவர் சென்னைக்கு வந்து, `தேவர் பிலிம்ஸ்’ படக்கம்பெனியைத் தொடங்கினார். எம்.ஜி.ஆரை வைத்து “தாய்க்குப்பின் தாரம்” என்ற படத்தைத் தயாரிக்கத் தீர்மானித்தார்.

மருதகாசியை அழைத்து, “எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி, புரட்சிகரமான கருத்துக்களுடன் ஒரு பாடலை எழுதுங்கள்” என்று

கேட்டுக்கொண்டார்.அதன்படி மருதகாசி எழுதிய பாடல்தான், “மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே” என்ற பாடல்.

“நீல வண்ண கண்ணா வாடா”

1955-ல் சிவாஜிகணேசனும், பத்மினியும் நடித்த “மங்கையர் திலகம்” படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது. இதில், சிவாஜிக்கு அண்ணியாக, குணச்சித்திர வேடத்தில் பத்மினி நடித்தார்.

இப்படத்தில் மருதகாசி எழுதிய “நீலவண்ண கண்ணா வாடா! நீ ஒரு முத்தம் தாடா!” என்ற பாடலை, பத்மினிக்காக பாலசரஸ்வதி பாடினார். கருத்தாழம் மிக்க இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் தட்சிணாமூர்த்தி.

இதே படத்தில், சிவாஜி பாடுவது போல் அமைந்த “நீ வரவில்லை எனில் ஆதரவேது?” என்ற பாடலையும் மருதகாசி எழுதினார். உருக்கமான இந்தப்பாடலை தெலுங்குப்பாடகர் சத்யம் பாடினார்.

எஸ்.எஸ்.ராஜேந்திரன் – விஜயகுமாரி நடிக்க, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த “பெற்ற மகனை விற்ற அன்னை” படம் சரியாக ஓடவில்லை. ஆனால், இப்படத்தில், மருதகாசி எழுதிய “தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும், கண்கள் உறங்கிடுமா?” என்ற பாடல் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.

உத்தமபுத்திரன்

ஸ்ரீதரின் திரைக்கதை – வசனத்தில் வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்த “உத்தமபுத்திரன்” படத்தில், சிவாஜியும், பத்மினியும் படகில் செல்லும்போது பாடுவதுபோல அமைந்த “முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே” என்ற பாடலை, ஜி.ராமநாதன் இசை அமைப்பில் மருதகாசி எழுதினார். ரசிகர்களின் உள்ளத்தை அள்ளியது இப்பாடல்.

இதே காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆர். நடித்த “மன்னாதி மன்னன்” படத்தில் எம்.ஜி.ஆர். பாட அதற்கேற்ப பத்மினி நடனம் ஆடும் ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த பாடலுக்கான மெட்டை விஸ்வநாதன் – ராமமூர்த்தி அமைத்து விட்டனர். ஆனால் அந்த மெட்டுக்கு பல்வேறு கவிஞர்கள் எழுதிய பாடல்கள், எம்.ஜி.ஆருக்கு திருப்தி அளிக்கவில்லை.

பிறகு, விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் அழைப்பின் பேரில், “ஆடாத மனமும் உண்டோ?” என்ற பாடலை, மருதகாசி எழுதினார். அது எம்.ஜி.ஆருக்கு பிடித்துவிட, பாடல் பதிவு செய்யப்பட்டு, காட்சியும் படமாக்கப்பட்டது.

மணப்பாறை மாடுகட்டி…

ஏ.பி.நாகராஜனும், வி.கே.ராமசாமியும் சேர்ந்து “லட்சுமி பிக்சர்ஸ்” என்ற படக்கம்பெனியை தொடங்கி, “மக்களைப் பெற்ற மகராசி” படத்தைத் தயாரித்தனர். இதில் சிவாஜிகணேசனும், பானுமதியும் இணைந்து நடித்தனர்.

இந்தப்படத்தில் இடம் பெற்ற பெரும்பாலான பாடல்களை மருதகாசி எழுதினார். குறிப்பாக, “மணப்பாறை மாடுகட்டி, மாயவரம் ஏரு பூட்டி” என்ற பாட்டு, மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது. கே.வி.மகாதேவன் இசை அமைப்பில், டி.எம்.சவுந்தரராஜன் பாடிய பாடல் இது.

சம்பூர்ண ராமாயணம்

சிவாஜிகணேசன் பரதனாகவும், என்.டி.ராமராவ் ராமராகவும், பத்மினி சீதையாகவும், டி.கே.பகவதி ராவணனாகவும் நடித்த படம் “சம்பூர்ண ராமாயணம்.” கே.சோமு டைரக்ஷனில் எம்.ஏ.வேணு தயாரித்தார்.

இந்தப் படத்துக்கான எல்லாப் பாடல்களையும், கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் எழுதியவர் மருதகாசி. அனைத்துப் பாடல்களும் நன்றாய் அமைந்தன.

குறிப்பாக சிதம்பரம் ஜெயராமன், டி.கே.பகவதிக்காக பாடிய “இன்று போய் நாளை வாராய்…” என்ற பாடலும், ஒவ்வொரு ராகத்தையும் எடுத்துக்காட்டும் விதத்தில் அமைந்த “சங்கீத சவுபாக்கியமே” என்ற பாடலும் பெரும் புகழ் பெற்றவை.

இதேபோல், என்.டி.ராமராவ் – அஞ்சலிதேவி நடித்த “லவகுசா” படத்திற்கும் எல்லாப் பாடல்களையும் மருதகாசி எழுதினார். அதில், லவனும், குசனும் பாடுவதுபோல் அமைந்த “ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே – உங்கள் செவி குளிர பாடிடுவோம் கேளுங்கள் இதையே” என்ற பாடலை, இப்போதும்கூட தொலைக்காட்சிகளில் காணமுடிகிறது.

மாடர்ன் தியேட்டர்சில் உரசல்

மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம், மருதகாசி மீது அதிக அன்பு கொண்டிருந்தார். அதனால் அவர் தயாரிக்கும் படங்களுக்கெல்லாம் மருதகாசி பாடல் எழுதுவது வழக்கம்.

ஒருமுறை டி.ஆர்.சுந்தரம் வெளிநாடு சென்றிருந்தபோது, மருதகாசியிடம் பொறாமை கொண்டிருந்த ஸ்டூடியோ நிர்வாகி ஒருவர், வேறொரு கவிஞருக்கு அதிக தொகையும், மருதகாசிக்கு குறைந்த தொகையும் கொடுத்தார். இதனால் மனம் நொந்த மருதகாசி, “இனி மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு பாடல் எழுதுவதில்லை” என்ற முடிவுடன் சென்னைக்குத் திரும்பினார்.

வெளிநாடு சென்றிருந்த டி.ஆர்.சுந்தரம் திரும்பி வந்ததும், எம்.ஜி.ஆரையும், பானுமதியையும் வைத்து “அலிபாபாவும் 40 திருடர்களும்” படத்தை வண்ணத்தில் தயாரிக்க முடிவு செய்தார். “அலிபாபா” படம் ஏற்கனவே இந்தியில் வெளிவந்திருந்தது. புதிதாக ஒரு பாடலை இசை அமைப்பது என்றும், 9 பாடல்களுக்கு இந்தி அலிபாபா படத்தின் மெட்டுகளையே பயன்படுத்திக் கொள்வது என்றும் சுந்தரம் தீர்மானித்தார்.

பாடல்களை எழுத மருதகாசியை ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார். ஆனால் நிர்வாகியோ, “மருதகாசி முன்போல் இங்கு வருவதில்லை. சென்னை கம்பெனிகளுக்கு பாட்டு எழுதுவதில் பிசியாக இருக்கிறார்!” என்று கூறிவிட்டார்.

உடனே சுந்தரம், “அப்படியானால் உடுமலை நாராயணகவிக்கு போன் செய்து, பாடல்களை எழுத உடனே இங்கே வரச்சொல்லுங்கள்” என்று உத்தரவிட்டார்.

சுந்தரம் வரச்சொன்னார் என்று அறிந்ததுமே, அவருடன் உடுமலை நாராயணகவி டெலிபோனில் தொடர்பு கொண்டார். மருதகாசியிடம் சகோதர அன்பு கொண்டவர் உடுமலை நாராயணகவி. மருதகாசிக்கும், நிர்வாகிக்கும் ஏற்பட்ட தகராறை சுந்தரத்திடம் அவர் கூறினார். “சரி. அவரையும் அழைத்துக்கொண்டு வாருங்கள்” என்றார், சுந்தரம்.

பாடல் எழுதினார்

டி.ஆர்.சுந்தரத்தை உடுமலை நாராயணகவியும், மருதகாசியும் சந்தித்தனர்.

“அலிபாபாவில் வரும் பாடல்களுக்கு, இந்தி அலிபாபா மெட்டுகளையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்” என்று கூறிய சுந்தரம், சில இந்தி இசைத்தட்டுகளை கவிராயரிடம் கொடுத்தார்.

உடனே கவிராயர், “மெட்டுக்கு பாட்டு அமைப்பது எனக்கு சரிப்படாது. புதிதாக பாட்டு எழுதுவதானால் எழுதுகிறேன். மெட்டுக்கு பாட்டு என்றால், அது மருதகாசிக்கு கைவந்த கலை” என்றார்.

இதனால், “மாசில்லா உண்மைக் காதலே”, “அழகான பொண்ணுதான்… அதற்கேற்ற கண்ணுதான்…” உள்பட 9 பாடல்களையும் மருதகாசியே எழுதினார்.

மாடர்ன் தியேட்டர்சுடன் மருதகாசிக்கு ஏற்பட்ட பிரச்சினை தீர்ந்தது.

பாசவலை

மாடர்ன் தியேட்டர் “பாசவலை” படத்தை தயாரித்தபோது, பாடல் எழுத மருதகாசிக்கு அவசர அழைப்பு அனுப்பினார்கள். அப்போது சென்னையில் இரவு – பகலாக பாடல்களை எழுதிக்கொண்டிருந்தார்.

உடனே அவர் டி.ஆர்.சுந்தரத்துக்கு போன் செய்து, “உடனடியாக தம்பி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை அனுப்பி வைக்கிறேன். அவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனால் அறிமுகப்படுத்தப்பட்டவர். மிக நன்றாக பாட்டு எழுதக்கூடியவர். நான் நாலைந்து நாட்களுக்குப்பின் வந்து கலந்து கொள்கிறேன்” என்று சொன்னார்.

அதன்படி, பல பாட்டுகளை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார். “குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ள நரிக்கு சொந்தம். குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்கு சொந்தம்” என்ற பாடல் மூலம், கல்யாணசுந்தரம் பெரும் புகழ் பெற்றார்.

“அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை – அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை” என்ற மருதகாசியின் பாடலும் `ஹிட்’ ஆயிற்று.

உடுமலை நாராயணகவியை தன் அண்ணன் போலவும், கல்யாணசுந்தரத்தை தம்பி போலவும் கருதி பாசம் செலுத்தியவர் மருதகாசி.

டைரக்டர் பீம்சிங் இயக்கத்தில் தயாரான “பதிபக்தி” படத்துக்கு “ரெண்டும் கெட்டான் உலகம் – இதில் நித்தமும் எத்தனை கலகம்” என்ற பாட்டை எழுதினார். இந்த பாடல் பீம்சிங்குக்கு பிடிக்கவில்லை. “இன்னும் சிறந்த பல்லவி வேண்டும்” என்றார். மருதகாசி சிறிது யோசித்துவிட்டு, “அண்ணே! நீங்கள் எதிர்பார்ப்பது போல எழுதக்கூடியவர் தம்பி கல்யாணசுந்தரம். அவரை வைத்து எழுதிக்கொள்ளுங்கள்” என்று கூறி, ஒதுங்கிக்கொண்டார்.

————————————————————————————————-

திரைப்பட வரலாறு 741
எம்.ஜி.ஆர்., சின்னப்ப தேவர் மூலம்
திரை உலகில் மருதகாசி மறுபிரவேசம்

சொந்தப்படம் தோல்வி அடைந்ததால் நிலை குலைந்து போன மருதகாசி, சிறிது இடைவெளிக்குப்பின், எம்.ஜி.ஆர்., சாண்டோ சின்னப்ப தேவர் ஆகியோர் மூலமாக திரை உலகில் மறுபிரவேசம் செய்தார்.

இதுகுறித்து மருதகாசியின் தம்பி பேராசிரியர் அ.முத்தையன் கூறியதாவது:-

“1950-ம் ஆண்டில் என் அண்ணன் “மந்திரிகுமாரி”க்கு பாட்டு எழுதியதில் இருந்தே, எம்.ஜி.ஆருடன் நட்பு கொண்டிருந்தார்.

அந்தக் காலக்கட்டங்களில் எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்கு, பெரும்பான்மையான பாடல்களை என் சகோதரர் மருதகாசிதான் எழுதி வந்தார். சர்வாதிகாரி, அலிபாபாவும் 40 திருடர்களும், பாக்தாத் திருடன், தாய்க்குப்பின் தாரம், தாய் மகளுக்குக் கட்டிய தாலி, மாடப்புறா, நினைத்ததை முடிப்பவன், மன்னாதி மன்னன், மகாதேவி, விவசாயி போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

எம்.ஜி.ஆர். உதவி

கவிஞர் சொந்தப்படம் எடுத்து அது தோல்வியில் முடிந்ததால், சம்பாதித்ததை எல்லாம் இழந்தார். கடன் தொல்லையால், வெளியார் படங்களுக்கு பாடல் எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

கவிஞர் கடன் தொல்லையால் அவதிப்படுவதையும், தொழிலை படிப்படியாக இழப்பதையும் அவினாசி மணி மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., என் சகோதரரை அழைத்துப்பேசி, தொல்லைகளில் இருந்து அவரை மீட்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் பட அதிபர் ஜி.என்.வேலுமணி, சின்னப்ப தேவரின் தம்பி திருமுகம் ஆகியோர் செய்த உதவிகளும் மறக்க முடியாதவை.

1963-ல் இருந்து 1967 வரை என் அண்ணன் சென்னை வீட்டை காலி செய்து விட்டு எங்கள் ஊருக்கே வந்துவிட்டார்கள்.

1967-ல் எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு, குணம் அடைந்தவுடன், பலரும் அவரை நடிக்க அழைத்தனர். ஆனால், தேவர் படத்தில் நடிப்பதற்குத்தான் எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டார். “பாடல்களை மருதகாசியை வைத்தே எழுதுங்கள்” என்று தேவரிடம் சொல்லிவிட்டார்.

மறுபிறவி

அதைத்தொடர்ந்து, மருதகாசிக்கு தேவர் கடிதம் எழுதினார். “நான் அடுத்து எடுக்கப்போகும் படத்தின் பெயர் “மறுபிறவி.” எம்.ஜி.ஆர். எடுத்திருப்பதும் மறுபிறவி. பட உலகைத் துறந்துவிட்ட உங்களுக்கும் மறுபிறவி. அதாவது 4 ஆண்டுகளுக்குப்பின் மறுபிரவேசம் செய்கிறீர்கள். உடனே புறப்பட்டு சென்னைக்கு வாருங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி கவிஞர் உடனே புறப்பட்டுச் சென்று, சென்னையில் எம்.ஜி.ஆரையும், தேவரையும் சந்தித்தார். எம்.ஜி.ஆரின் ஆதரவோடு, என் அண்ணன் மருதகாசியின் திரையுலக மறுபிரவேசம் நிகழ்ந்தது.

“மறுபிறவி” படம், ஒரு பாடலோடு நிறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக, “தேர்த்திருவிழா” படத்தை தேவர் தயாரித்தார். அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் அண்ணன் மருதகாசியே எழுதினார்.

தேவருக்கு பெரும் பொருளை அள்ளித் தந்தது, அந்தப்படம். பாதிப்படத்தின் படப்பிடிப்பு எங்கள் கிராமப் பகுதியில் அமைந்த கொள்ளிடம் கரையில்தான் நடந்தது. எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்தார்.

எம்.ஜி.ஆர். என் அண்ணனுக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் உதவியிருக்கிறார். ஒவ்வொரு மகன் திருமணத்திற்கும் உதவியிருக்கிறார்.”

இவ்வாறு பேராசிரியர் முத்தையன் கூறினார்.

நண்பர்கள்

மருதகாசிக்கு கவிஞர் கா.மு.ஷெரீப் நெருங்கிய நண்பர். ஆரம்பத்தில் மருதகாசியும், கா.மு.ஷெரீப்பும் இணைந்து, பல பாடல்களை எழுதினார்கள். பிறகு தனித்தனியாக எழுதினார்கள்.

தமிழரசு கழகத்தின் முக்கிய பிரமுகராகவும், பேச்சாளராகவும் கா.மு.ஷெரீப் விளங்கினார். கட்சிப்பணி காரணமாக, அவர் அதிக பாடல்களை எழுதவில்லை. பாடல்கள் எண்ணிக்கை குறைவு என்றாலும், கருத்தாழம் மிக்க பாடல்கள்.

புலவர் ஏ.கே.வேலனும், மருதகாசியும் சம காலத்தவர்கள். இருவரும் தேவி நாடக சபையில் ஒன்றாக பணியாற்றினார்கள்.

ஏ.கே.வேலன் வசன கர்த்தாவாக உயர்ந்து, அருணாசலம் ஸ்டூடியோவை உருவாக்கி “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். அதற்கு, “தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்” என்ற பாடலை மருதகாசி எழுதினார்.

அதன் பிறகு, ஏ.கே.வேலன் தயாரித்த பல்வேறு படங்களுக்கும் ஏராளமான பாடல்களை மருதகாசி எழுதினார். “பொன்னித்திருநாள்” என்ற படத்துக்கு எல்லாப் பாடல்களையும் எழுதினார்.

உடுமலை நாராயணகவி

உடுமலை நாராயணகவியை தன் குருவாக நினைத்தவர், மருதகாசி. “என்னுடைய 2 ஆயிரம் பாடல்கள், கவிராயரின் 2 பாடல்களுக்கு ஈடாகாது” என்று மனந்திறந்து பாராட்டுவார்.

அத்தகைய உடுமலை நாராயணகவி, மருதகாசி மீது அளவற்ற பாசமும், அன்பும் வைத்திருந்தார். அவருக்கு வந்த வாய்ப்புகள் பலவற்றை அவர் ஏற்க மறுத்த சந்தர்ப்பங்களில், “இதற்கு பொருத்தமானவர் மருதகாசிதான். அவரை எழுதச் சொல்லுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

குறிப்பாக, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பிரமாண்டமாகத் தயாரித்த “தசாவதாரம்” படத்துக்கு பாடல் எழுத முதலில் அழைக்கப்பட்டவர் உடுமலை நாராயணகவிதான். அவர், “மருதகாசிதான் இதற்கு நன்றாக எழுதக்கூடியவர். அவரைக் கூப்பிடுங்கள்” என்று கூறிவிட்டார்.

இதன் காரணமாக “தசாவதாரம்” படத்துக்கு எல்லாப் பாடல்களையும் மருதகாசி எழுதினார்.

(மருதகாசி பாடல்கள் அரசுடைமை – நாளை)

மறக்க முடியாத பாடல்கள்

4 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி, முத்திரை பதித்தவர், மருதகாசி.

ரசிகர்களின் நினைவில் நீங்காத இடம் பெற்ற பாடல்கள் ஏராளம். அவற்றில் சில பாடல்கள்:-

“சத்தியமே லட்சியமாய் கொள்ளடா…

தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா…”

(“நீலமலை திருடன்”)

“ஆளை ஆளைப் பார்க்கிறார்

ஆளை ஆளைப் பார்க்கிறார்

ஆட்டத்தைப் பார்த்திடாமல்

ஆளை ஆளைப் பார்க்கிறார்”

(“ரத்தக்கண்ணீர்”)

“சமரசம் உலாவும் இடமே – நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே!”

(“ரம்பையின் காதல்”)

“சிரிப்பு… இதன் சிறப்பை

சீர்தூக்கிப் பார்ப்பதே

நம் பொறுப்பு”

(“ராஜா ராணி”யில்

என்.எஸ்.கிருஷ்ணன் பாடியது)

“கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த

மின்னொளியே ஏன் மவுனம்?”

(“தூக்குத்தூக்கி”)

`ஆனாக்க அந்த மடம்…

ஆகாட்டி சந்தமடம்…”

(“ஆயிரம் ரூபாய்”)

“கோடி கோடி இன்பம் பெறவே

தேடி வந்த செல்வம் – கொஞ்சும்

சலங்கை கலீர் கலீர் என ஆடவந்த

தெய்வம்!”

(படம்: “ஆட வந்த தெய்வம்”)

“ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே

இல்லே!

என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே

இல்லே!”

(“பிள்ளைக்கனியமுது”)

“விவசாயி… விவசாயி!

கடவுள் என்னும் முதலாளி”

(விவசாயி)

“வருவேன் நான் உனது

மாளிகையின் வாசலுக்கே!

ஏனோ அவசரமே எனை

அழைக்கும் வானுலகே!”

(மல்லிகா)

“மாமா… மாமா… மாமா…

ஏம்மா… ஏம்மா… ஏம்மா…

சிட்டுப் போல பெண்ணிருந்தா

வட்டமிட்டு சுத்தி சுத்தி

கிட்ட கிட்ட ஓடி வந்து தொடலாமா?”

(“குமுதம்”)

——————————————————————————————————————————————–

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(742)
மருதகாசியின் பாடல்கள் அரசுடைமை
வாரிசுகளுக்கு ரூ.5 லட்சம் வழங்கினார், கருணாநிதி


கவிஞர் மருதகாசியின் திரை இசைப் பாடல்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞர்களின் வாரிசுகளுக்கு ரூ.5 லட்சத்தை முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

சொந்தப்படம் எடுத்ததால் சொத்துக்களை இழந்த மருதகாசி, எம்.ஜி.ஆரால் திரை உலகுக்கு மறுபிரவேசம் செய்தார். தன்னம்பிக்கையுடன், குடும்பத்தாருடன் மீண்டும் சென்னையில் குடியேறினார்.

தேவர் படங்களுக்கு பாட்டு எழுதினார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்த “தசாவதாரம்”, “காஞ்சி காமாட்சி”, “நாயக்கரின் மகள்” ஆகிய படங்களுக்கு பாடல்கள் எழுதினார்.

மறுபிரவேசத்தில், டப்பிங் படங்கள் உள்பட சுமார் 100 படங்களுக்கு பாடல் எழுதினார்.

ரஜினிகாந்த்

இளைய தலைமுறையினர் படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். அதில் முக்கியமானது, தேவர் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த “தாய் மீது சத்தியம்.”

இதில் இடம் பெற்ற “நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு” என்ற பாடல் மருதகாசி எழுதியதாகும்.

பொதுவாக, பட உலகில் ஒரு முறை தோற்றவர்கள் மீண்டும் தலை தூக்குவது மிகவும் கடினம். மருதகாசி அயராது உழைத்து, இழந்தவற்றை மீண்டும் பெற்றார். பழைய புகழோடு, 1989-ம் ஆண்டு, நவம்பர் 29-ந்தேதி காலமானார்.

அப்போது அவருக்கு வயது 69.

குடும்பம்

மருதகாசிக்கு 6 மகன்கள். 3 மகள்கள்.

மூத்த மகன் இளங்கோவன் விவசாயத்தை கவனிக்கிறார். இரண்டாவது மகன் ராமதாஸ் “பி.ஏ” பட்டதாரி. குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மூன்றாவது மகன் பொன்முடி, ஓவியர்.

4-வது மகன் மதிவாணன் “மெட்ரோ வாட்டர்” நிறுவனத்திலும், அடுத்தவர் கிருஷ்ணமூர்த்தி இந்துஸ்தான் டெலிபிரிண்டர் நிறுவனத்திலும் வேலை பார்க்கிறார்கள்.

6-வது மகன் மருதபரணி, தந்தையின் திரை உலக வாரிசாக விளங்குகிறார். பிற மொழிப் படங்களை தமிழில் மொழி மாற்றம் (“டப்பிங்”) செய்து வருகிறார். இவர் மனைவி உமா பரணி திரைப்படங்களுக்கு, பின்னணியில் குரல் கொடுக்கிறார்.

அரசுடமை

மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும், புத்தகங்களையும், கடந்த மே மாதம் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞரின் வாரிசுகள் 9 பேருக்கும், ரூ.5 லட்சத்தை, முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

ஏ.கே.வேலன்

மருதகாசியுடன் நெருங்கிப் பழகியவரான பட அதிபர் ஏ.கே.வேலன் கூறியதாவது:-

“வியாபார நோக்கமின்றி, கலை நோக்குடன் சினிமாவுக்கு பாடல்களை எழுதியவர் மருதகாசி. கற்பனை வளம் மிகுந்தவர்.

அவர் எழுத்திலே தமிழ் மரபு இருக்கும்; தமிழின் தரம் இருக்கும்; புதிய பார்வையும் இருக்கும்.

என்னுடைய “தை பிறந்தால் வழி பிறக்கும்” படத்துக்கு அவர் எழுதிய “தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்” என்ற பாடல், ஒவ்வொரு பொங்கல் நாள் அன்றும், தொலைக்காட்சியிலும், வானொலியிலும் ஒலிக்கிறது.”

இவ்வாறு ஏ.கே.வேலன் கூறினார்.

வைரமுத்து

கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது:-

“கவிஞர் மருதகாசி என்ற பெயர், கால் நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்த் திரைப்படத் துறையில் கோலோச்சிய பெயர்.

இன்றைய புதிய விளைச்சல்களுக்கு எல்லாம், முன்னோடியாய் இருந்த நாடறிந்த நாற்றங்கால்.

அவருடைய பாடல்கள், காற்றையும், காலத்தையும் வென்று, இன்றும் அன்றலர்ந்த மலர்களைப் போல நின்று நிலவுகின்றன.

கவிஞர் மருதகாசி அவர்கள், திரை உலகில் ஒரு சகாப்தம் படைத்தவர்.

கால் சட்டை போட்ட பருவம் முதல் இன்று வரை இவரது திரை இசைப் பாடல்களில் எனக்கொரு சுக மயக்கம் உண்டு. மருதகாசியின் பெயர், காற்றைப் போல காலம் எல்லாம் நிலைத்து நிற்கும்.”

இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.

கவிஞர் மருதகாசி பற்றிய தொடர் இத்துடன் நிறைவடைந்தது.

10 பதில்கள் -க்கு “Maruthakasi – Biosketch: Movie Faces – Dinathanthi”

  1. தகவலுக்கு மிக்க நன்றி.

  2. […] மருதகாசி எழுதி […]

  3. kathiresan said

    யாருக்காக கிடைத்தது சுதந்திரம்

    இந்திய அரசியலமைப்பு சட்டப்படி இந்தியாவில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் சேர்த்தே வாக்குரிமை அளிக்கப்பட்டது. இந்திய அரசால் முன்பு இயற்றப்பட்ட பல சட்டங்கள் ஒரு சம நிலையை உருவாக்கவே பயன்பட்டன. தொழில் தகராறு சட்டம் மற்றும் பல தொழிலாளர் நலச் சட்டங்கள் தொழிலாலர்களுக்கு உரிய உரிமையை வழங்கும் அதே சமயம் முதலீடு செய்யும் தொழில் அதிபர்களையும் பாதிக்கா வண்ணம் இருக்க வழி வகை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அனைத்தும் இருந்தும் அதனை செயல்படுத்தும் அரசு நிர்வாகம் பாரபட்சமாக செயல்படுவது ஏன்? என்று பலரும் யோசிப்பதில்லை .

  4. Harikrishnan.S said

    SIR PLEASE GIVE ME MARUTHAKASI SONGS
    FOR MY RESEARCH PURPOSE
    I RESEARCH MARUTHAKASI SONGS
    NOW IAM STUDY M.PHIL

    • Jay S said

      Hello : I am Jay (nickname) from Thane Distt in Maharashtra. Retired, 75+ ( cannot read or write Tamil still) but doing research non-stop since 1968 or so in the study of Indian Cine / Non-Cine Music in feature films (1931-65) of Hindustani / Tamil / Marathi / Urdu all at the same time. Many, many have been digitized from 78 rpms in pristine condition bought at premium from Shylocks -and uploaded to GCloud in webm format. Good quality video clips are also included.

      sjhhhtm@gmail.com (primary email)

      30.09.2016

  5. senthil said

    I heard jagam pugalum punya kadhai padal on Sri Rama was written by him.. anybody pl comfirm? its too great..senthil.

  6. Nandagopal said

    I do not know how to thank this author for this treasure of information about one of the greatest lyricists of this century.. I always love his immortal songs.

  7. diraviam said

    Miga arumayaana thoguppu.Nandri.

  8. EKS Gopalkrishnan said

    Nobody can write so simple and easy to understand the common man’s feelings in lyrics (Farmers’) by A. Maruthakasi. Immortal Poet Century ever produced. I enjoyed the writings with inner meanings (any layman can understand). I think he should have been given Kavi Perrarsu Pattam.
    EKS Gopalakrishnan

  9. எஸ். சந்திரசேகரன் said

    கருத்தாழம் மிக்க பாடல்கள் கூட கவி நடையில் இருக்கும், கவிஞரின் உணர்வுகளும் அதன் இடையில் இருக்கும்…. சிந்தனையை தூண்டுகின்ற விதமாக…, அதை சிந்திக்க வைப்பதில் இதமாக.., பாடல்களை அசை போடுவதற்கும் பதமாக…, பைந்தமிழில் வடித்திடுவார் நல் கீதமாக.. அவர்தான் கவிஞர் மருதகாசி. அவர் புகழ் என்றென்றும் நீடித்து நிற்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: