பிளேடாகும் ரூபாய் நாணயங்கள்
ஜி.சுந்தரராஜன்
சிதம்பரம், டிச. 4: தமிழகம் முழுவதும் ரூ.1 மற்றும் ரூ.2 நாணயங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கான காரணம், இந்த நாணயங்களை உருக்கி பிளேடுகள் தயாரித்து விற்பனை செய்து சிலர் அதிக லாபம் ஈட்டி வருவதாக தற்போது அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி தயாரித்து வெளியிடும் சில்லறை நாணயங்கள் பிளேடுகள் தயாரிக்கப் பயன்படுகிறது.
ரிசர்வ் வங்கி வெளியிடும் நோட்டுகள் போன்று சில சமூக விரோதிகள் கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்டு வருகின்றனர். இந் நிலையில் சில்லறை நாணயங்களைக் கொண்டு பிளேடு தயாரித்து லாபம் ஈட்டும் தொழில் தமிழகத்தில் பல இடங்களில் நடந்து வருகிறது.
இதனால் மொத்தமாக சில்லறை நாணயங்கள் கூடுதல் விலைக்கு சேகரிக்கப்பட்டு மூட்டை, மூட்டையாக வாங்கிச் செல்லப்படுகிறது.
மத்திய ரிசர்வ் வங்கி, நாணயங்களில் வெள்ளி கலந்து வெளியிட்டது. வெள்ளிக்கு நல்ல விலை கிடைப்பதால் அதை அறிந்த கும்பல், நாணயங்களை உருக்கி வெள்ளியைப் பிரித்து ஆபரணங்கள் தயாரிக்கப் பயன்படுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரிசர்வ் வங்கி, துருப்பிடிக்காத சில்வர் (ஸ்டெயின்லஸ் ஸ்டீல்) மூலம் நாணயங்களைத் தயாரித்தது.
இந்த சில்வர் நாணயங்களை உருக்கி குறிப்பாக தமிழகத்தில் சேலம், நாமக்கல், கோவை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட நகரங்களில் கொலுசு மற்றும் வெள்ளி ஆபரணங்கள் தயாரிக்கும் சில கும்பல்கள் பிளேடு தயாரித்து தற்போது விற்பனை செய்து வருகிறது.
ரூ.1 நாணயத்திலிருந்து 8 பிளேடுகளும், ரூ.2 மற்றும் ரூ.5 நாணயங்களிலிருந்து 10 பிளேடுகளும் தயாரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த பிளேடுகளை சில்லறை விலையில் ஒரு பிளேடு ரூ.1 முதல் ரூ.1.50 வரை பெரிய மற்றும் சிறிய நகரங்களில் சலூன்களில் மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. ரூ.1 நாணயத்திலிருந்து குறைந்தது ரூ.8 லாபம் கிடைக்கிறது.
இதனால் இந்த வியாபாரிகள் ரூ.100-க்கான சில்லறை நாணயங்களை ரூ.110 கொடுத்து வாங்கிச் சேகரித்து மூட்டை மூட்டையாக கொண்டு செல்கின்றனர்.
சமீபத்தில் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே சாக்கு மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள சில்லறை நாணயங்களை போலீஸôர் பிடித்தனர்.
விசாரணையில் அந்த நாணயங்கள் திருச்சியைச் சேர்ந்த தனியார் ஜுவல்லரி மற்றும் பாத்திரக்கடை உரிமையாளர் கொண்டு சென்றார் என்று கூறப்பட்டது. அந்த உரிமையாளர் சென்னையில் உள்ள மத்திய ரிசர்வ் வங்கி கிளையில் சில்லறை நாணயங்களை வாங்கி வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
எனவே மத்திய ரிசர்வ் வங்கி, சில்லறை நாணயங்களை மொத்தமாக வழங்குவதற்குத் தடை விதிக்க வேண்டும். மேலும் நாணயங்களை உருக்கி பிளேடு தயாரிப்பதை மத்திய புலனாய்வுத் துறை மூலம் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.