Archive for ஒக்ரோபர், 2006
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2006
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மகன் பிறந்தநாள் விழாவுக்கு ரூ.50 லட்சம் செலவழித்த மந்திரி
ராஞ்சி, அக். 31-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரியாக இருப்பவர் இனோஸ்இக்கா. இவரது மகன் சந்தேஷ். இவன் கோரகானில் உள்ள ஜிடி கோயங்கா பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இவனுக்கு கடந்த வெள்ளிக்கிழமை பிறந்தநாள். இதையொட்டி மந்திரி இனோஸ் ஜார்க்கண்ட் மாநிலம் கண்டிராத வகையில் கோலாகல பிறந்த நாள் விழா நடத்தினார்.
மந்திரி இனோசின் சொந்த மாவட்டமான சிம்தேகாவில் இந்த விழா நடந்தது. இதற்காக அந்த மாவட்டத்தை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு 50 ஆடுகள் வெட்டப்பட்டு விசேஷ விருந்து கொடுக்கப்பட்டது.
அசைவத்தை விரும்பாத வர்களுக்கு என தனியே சைவ உணவுகள் தயாரித்து வழங்கப்பட்டன. இனிப்புகள், ஐஸ்கிரீம்கள் விதம்விதமாக வழங்கப்பட்டன. இந்த பிரமாண்ட பிறந்தநாள் விழாவை பார்த்து சிம் தேகா மாவட்ட ஏழை மக்கள் ஆச்சரியத்தில் பிரமதித்துப்போனார்கள்.
மகன் பிறந்த நாளுக்காக மந்திரி இனோஸ் ரூ.50 லட்சத்துக்கு மேல் செல வழித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதை எதிர்க் கட்சிக்காரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
சிம்தேகா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. நியால் கூறுகையில், “இந்த விழாவால் பெருமைப்பட என்ன இருக்கிறது. இப்படி பணத்தை வீணடித்ததற்காக மந்திரி வெட்கப்பட வேண்டும். மகன் பிறந்தநாளுக்கு செலவழித்த பணத்தை வைத்து சிம்தேகா மாவட்ட மக்களுக்கு ஒரு ஆயில் மில் தொடங்கி கொடுத்து இருக்கலாம்” என்றார்.
ஆனால் மந்திரி இனோஸ் இதை கண்டு கொள்ளவில்லை. “என் வளர்ச்சியைக்கண்டு பொறாமைப்படுபவர்கள் இப்படி சொல்கிறார்கள்” என்றார். மந்திரி இனோசின் தந்தை இன்னமும் வறுமையில்தான் வாழ்ந்து வருகிறார். அரசு கட்டி கொடுத்த சாதாரண வீட்டில்தான் அவர் வசித்து வருகிறார்.
Posted in Anosh Ekka, Birthday, Chhattisgarh, Children, Extravaganza, Guest Control Act, Jaipal Singh, Jharkhand, Jharkhand Party, Kamdara, Kartik Oraon, Kolebira, Lalu Prasad, Orissa, Party, Ram Dayal Munda, RJD, Simdega, Son, tribal leaders | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2006
வங்கதேசத்தில் தேர்தல்
சில சமயங்களில் சிறிய நாடுகள் மற்ற பல பெரிய நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருப்பது உண்டு. வங்கதேசம் ஒருவகையில் இவ்விதம் வழிகாட்டுகிறது. அதாவது அந்நாட்டில் ஆட்சியில் உள்ள அரசின் பதவிக்காலம் முடிந்தவுடன் அந்த அரசு ராஜிநாமா செய்து விடுகிறது. உடனே தாற்காலிக அடிப்படையில் நடுநிலை அரசு அமைக்கப்படுகிறது. அந்த நடுநிலை அரசின் கீழ்தான் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. பதவியில் உள்ள அரசு மறுபடி ஆட்சியைப் பிடிக்கத் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துவிட்டதாகப் புகார் எழும் வாய்ப்பு இதன் மூலம் தவிர்க்கப்படுகிறது.
வங்கதேசத்தில் வருகிற ஜனவரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் இதுவரை பேகம் காலிதா ஜியா தலைமையில் இருந்த அரசு வங்கதேச அரசியல் சட்டப்படி பதவி விலகிவிட்டது. புதிதாக நடுநிலை அரசு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் யார் தலைமையில் நடுநிலை அரசு அமைய வேண்டும் என்பதில் ஆளுங்கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது தொடர்பாக, கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டு, கட்சி ஊழியர்களிடையே மோதல்கள் மூண்டன. இதில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர். இறுதியில் வங்கதேச அதிபர் தலைமையில் நடுநிலை அரசு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா தலைமையிலான எதிர்க்கட்சிக்கு இந்த ஏற்பாடு பிடிக்கவில்லைதான். இதுவரை ஆண்டு வந்த வங்கதேச தேசியக் கட்சி இந்த ஏற்பாட்டை வரவேற்றுள்ளது. வங்கதேசத்தில் “நடுநிலை’ அரசின்கீழ் தேர்தல் நடப்பதென்பது இது நான்காவது தடவை.
வங்கதேசத்தில் நாடாளுமன்றத்தில் உள்ள மொத்த இடங்கள் 300. அவையில் பெண்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு தனி ஏற்பாடு பின்பற்றப்படுகிறது. அதாவது தேர்தல் முடிந்த பின்னர் 45 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர். தேர்தலில் வென்ற கட்சிகள் தங்களது கட்சி பலத்துக்கு ஏற்ப பெண் உறுப்பினர்களை நியமிக்கின்றனர். பெண் பிரதமர்களே மாறி மாறி ஆண்டு வருகின்ற நாட்டில் இதுகூடச் செய்யப்படவில்லை என்றால் எப்படி?
வருகிற தேர்தலில் பேகம் ஜியா தலைமையிலான வங்கதேச தேசியக் கட்சிக்கும் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கும்தான் பிரதான போட்டி. முன்னாள் அதிபர் எர்சாத் தலைமையிலான ஜாதியக் கட்சிக்கு மக்களிடையே அவ்வளவாக ஆதரவு கிடையாது. 1991 தேர்தலிலும் 2001 தேர்தலிலும் பேகம் ஜியா கட்சி வென்றது. 1996 தேர்தலில் ஷேக் ஹசீனா கட்சி வென்றது.
வங்கதேசத்தில் முன்னர் ஜெனரல் ஜியா தலைமையிலும் பின்னர் ஜெனரல் எர்சாத் தலைமையிலும் ராணுவ ஆட்சி நடந்தது. ஆனாலும் கடந்த 15 ஆண்டுகளாக அந்நாட்டில் ஜனநாயக சக்திகள் நன்கு வேரூன்றி உள்ளதாகச் சொல்லலாம். கடந்த மூன்று தேர்தல்கள் இதற்குச் சான்று. வங்கதேசத்தில் மக்கள்தொகை 14 கோடி. நிலப்பரப்புடன் ஒப்பிட்டால் மக்கள்தொகை அதிகமே.
ஒருசமயம் இது மிக ஏழ்மையான நாடு என்று கருதப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக மெச்சத்தக்க வகையில் பொருளாதார வளர்ச்சி காணப்படுகிறது. அந்நாட்டில் மிக அதிக அளவுக்கு எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயுவை இந்தியாவுக்கு விற்க வங்கதேசம் முற்பட்டால் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிறைய பணம் கிடைக்கும். ஆனால் குறுகிய நோக்குக் கொண்ட இந்திய எதிர்ப்பு சக்திகளின் நிர்பந்தம் காரணமாக இதுவரை ஆண்டு வந்த பேகம் ஜியா அரசு இதற்கு உடன்படவில்லை. தேர்தலுக்குப் பிறகு ஏற்படும் அரசு இது விஷயத்தில் கொள்கையை மாற்றிக் கொண்டால் இரு நாடுகளும் நல்ல பயன் பெற முடியும்.
Posted in Awami League, Bangladesh, Bangladesh Nationalist Party, Bipartisan, BNP, election commission, Elections, Iajuddin Ahmed, impartial, Khaleda Zia, MA Aziz, Political Science, Polls, President, Sheikh Hasina, Tamil | 2 Comments »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2006
எய்ட்ஸ், போலியோ விழிப்புணர்வு பிரசாரத்துக்கு பிச்சைக்காரர்களை பயன்படுத்த பிகார் அரசின் நலத்துறை திட்டம்
பாட்னா, அக். 31: எய்ட்ஸ், போலியோ விழிப்புணர்வு பிரசாரத்தில் நன்றாகப் பாடவும், நடனமாடவும் தெரிந்த பிச்சைக்காரர்களைப் பயன்படுத்த பிகார் அரசு திட்டமிட்டுள்ளது.
“பச்சன்‘ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதுமையான திட்டம் பிகார் மாநில நலத்துறைச் செயலர் விஜய் பிரகாஷின் சிந்தனையில் உருவானது. இதுகுறித்து விஜய் பிரகாஷ், திங்கள்கிழமை கூறியது:
இதன் மூலம் பிகாரில் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை உள்ள பிச்சைக்காரர்களின் வாழ்வு ஒளிமயமாகும். அதோடு அவர்கள் வாயிலாக எய்ட்ஸ், போலியோ தடுப்புத் திட்டப் பிரசாரமும் மாநிலத்தின் மூலை முடுக்குகளுக்குச் சென்றடையும். இத்திட்டத்துக்காக நன்றாகப் பாடவும், ஆடவும் தெரிந்த பிச்சைக்காரர்களைத் தெரிந்தெடுக்கும் பணி தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பிச்சைக்காரர்களுக்கு அவர்களுக்குள் புதைந்துள்ள திறமைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு அதில் கூடுதல் பயிற்சி அளிக்கப்படும். பிரசாரத்தில் ஈடுபடுத்தப்படும் அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் சில பிச்சைக்காரர்கள்
- வீடுகளுக்கு நாளேடுகளைப் போடும் பணி,
- பால் விநியோகம் ஆகிய பணிகளிலும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஊனமுற்றோருக்கு சைக்கிள் அல்லது 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட உள்ளது.
Posted in AIDS, beggars, Bihar, Campaign, Disabled, NGO, Pahchaan, Polio, Vijay Prakash, Welfare Department Secretary | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2006
இலவச கல்வி இணையதளம்: தில்லியில் கலாம் தொடங்கி வைத்தார்
புதுதில்லி, அக். 31: மாணவர்களின் கல்வித் தேவைகள் அனைத்தையும் ஓரே குடையின் கீழ் வழங்கும், ஒருங்கிணைந்த இலவச இணைய தளத்தை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திங்கள்கிழமை தொடக்கிவைத்தார்.
மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் முயற்சியில் உருவாகியுள்ள இந்த இணைய தளத்துக்கு “சாட்சாத்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தில்லியில் நடந்த இந்த விழாவில் கலாம் பேசியது:
நம் நாட்டில் இத்தகைய இணைய தளம் உருவாக்கப்படுவது இதுவே முதல்முறை. இம்முயற்சி வெற்றிபெற வேண்டுமானால், மக்களுக்கு இன்டர்நெர் இணைப்பு இலவசமாகக் கிடைக்கவேண்டும்.
நாட்டில் கல்வி கற்பிக்கப்படும் முறையை மாற்றி அமைப்பதற்காக தொடக்க முயற்சி இது. இந்த இணைய தளத்தின் உள்ளடக்கத்தை பல்கலைக் கழக மானியக் குழு, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழகம், அகில இந்திய தொழில் நுட்பக் கழகம் போன்ற கல்வி அமைப்புகள் உருவாக்கியுள்ளன.
21-ம் நூற்றாண்டின் அறிவு சார் தேவைகளைப் பூர்த்தி செய்ய, நன்கு படித்த இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் நாட்டுக்குத் தேவைப்படுகின்றனர். அவர்கள் கல்வி பெற உதவுவதோடு, சர்வதேச அளவில் போட்டியிட உதவும் தொழில் திறனையும் அவர்களுக்கு ஏற்படுத்தித் தருவது குறித்தும் சாட்சாத் சிந்திக்க வேண்டும் என்றார் அவர்.
Posted in AICTE, APJ Abdul Kalam, CBSE, digital library, digital repository, e-books, Education, HRD, Human Resources, IGNOU, IISc, IIT, NCERT, portal, Sakshat, UGC | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2006
உலக அளவில் 10 ஆண்டுகளில் வேலையின்மைப் பிரச்சினை 15% அதிகரிப்பு
புது தில்லி, அக். 31: கடந்த 10 ஆண்டுகளில், உலக அளவில், 15-லிருந்து 24 வயது வரையான இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. தெற்கு ஆசியப் பகுதியில் இது 10 சதவீதம் அதிகரித்துள்ளது என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலக அளவிலும் பிராந்திய அளவிலும் நிலவும் வேலையின்மைப் பிரச்சினை குறித்த அறிக்கையை சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள்:
1995-லிருந்து 2005-வது ஆண்டுக்குள், வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை 7 கோடியே 40 லட்சத்திலிருந்து 8 கோடியே 50 லட்சமாக அதிகரித்துவிட்டது. உலகம் முழுவதும் 30 கோடி இளைஞர்கள் நாள் ஒன்றுக்கு 2 டாலர்கள்கூட (ரூ.90) ஊதியம் கிடைக்காத வேலைகளைச் செய்துகொண்டு இருக்கின்றனர். இது வறுமைக்கோடு என்ற வரம்புக்குக் கீழான நிலையாகும். உலகம் முழுவதும் உள்ள மொத்த இளைஞர்களின் எண்ணிக்கையில் இது 25 சதவீதமாகும். இன்றைய இளைஞர்களின் உற்பத்தித் திறன் முழுவதையும் பயன்படுத்த வேண்டுமானால், புதிதாக 40 கோடி கெüரவமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
வளர்ந்த பணக்கார நாடுகளைவிட ஏழை நாடுகளின் மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அங்கு இளைஞர்களிடையிலான வேலையின்மைப் பிரச்சினையும் தீவிரமாக உள்ளது.
இளம் வயதிலேயே தொழில்நுட்பத் திறனற்ற வேலையில் சேரும் இளைஞர்களுக்கு எதிர்காலத்திலும் சரியான வேலைவாய்ப்புகள் கிடைக்காமலே போய்விடுகின்றன. எனவே, இளம் வயதிலேயே தொழில் திறமையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உலக அளவில் 1995-லிருந்து 2005 வரை, இளைஞர்களின் தொகை 13.2 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் 3.8 சதவீதம்தான் அதிகரித்துள்ளன. இளைஞர்கள், வயதானவர்கள் உள்பட உலகம் முழுவதும் உள்ள வேலையில்லாதோர் தொகையில், வேலையில்லா இளைஞர்களின் விகிதம் 44% ஆகும்.
Posted in Benefits, India, International Labour Organisation, Jobless, social security, South Asia, Unemployed, unemployment, United nations, Youth | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2006
85 கோடி மக்கள் உணவின்றித் தவிக்கிறார்கள்
 |
 |
போதிய உணவின்றி 85 கோடிப் பேர் |
உலகத்தில் போஷாக்கு மற்றும் போதிய உணவு இல்லாமல் தவித்துவரும் மக்களின் எண்ணிக்கையினை 2015 ஆம் ஆண்டியில் பாதியாக குறைப்பது என்று உலக தலைவர்கள் தீர்மானித்து பத்து ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இன்னமும் 85 கோடி மக்கள் போதிய உணவு இல்லாமல் தவித்து வருவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
இது, ஆரம்பத்தில் இருந்த, அதே எண்ணிக்கையாகும்.
இதில் வருத்தம் கொடுக்க கூடிய உண்மை என்னவென்றால், 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக உணவு மாநாட்டிற்கு பின்னர், போதிய உணவு இல்லாமல் தவிப்போரின் எண்ணிக்கையினை குறைப்பதில் கிட்டதட்ட எவ்விதமான முன்னேற்றத்தினையும் எட்டவில்லை என்பது தான் என்று குறிப்பிடுகிறார் ஐ.நா வின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஜேக்வஸ் டியோப்.
எனினும் வளர்ந்து வரும் நாடுகளான சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் இந்தோனேசியாவில் அதிகரித்துவரும் மக்கள் தொகையினால், ஒட்டுமொத்தமாக போதிய உணவு இன்றி தவித்து வரும் மக்களின் எண்ணிக்கையின் வீதம் குறைந்துள்ளது.
Posted in 854 million, Brazil, China, Deprived, developing world, Famine, FAO, Food and Agriculture Organization, Hunger, India, Indonesia, Millennium Development Goals, Poor, Shortage, Tamil, Underprivileged, World Food Summit | 2 Comments »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2006
நடிகர் சிரஞ்சீவிக்கு டாக்டர் பட்டம்: ஆந்திர பல்கலைகழகம் வழங்குகிறது
தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் சிரஞ்சீவி. 25 வருடங்களுக்கு மேலாக திலையுலகில் இருக்கும் இவர் தெலுங்கு பட உலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார். ரஜினியின் நெருங்கிய நண்பரான இவர் ராணுவவீரன், மாப்பிள்ளை உள்ளிட்ட சில தமிழ்படங்களிலும் நடித்திருக்கிறார்.
சிரஞ்சீவியின் கலை உலக சேவையைப் பாராட்டி ஆந்திர பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க இருக்கிறது. வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ள அப்பல்கலைக்கழகத்தின் பட்ட மளிப்பு விழாவில் டாக்டர் பட்டத்தை சிரஞ்சீவி பெற்றுக் கொள்வார்.
இதே பட்டமளிப்பு விழாவில் ஆந்திர மாநில முன்னாள் கவர்னர் ரங்க ராஜனுக்கும் கவுரவ டாக்டர் பட்டத்தை ஆந்திர பல்கலைக்கழகம்ë வழங்கு கிறது.
மேற்கண்ட தகவலை அப்பல் கலைகழகத்தின் துணை வேந்தர் வேணுகோபாலரெட்டி நிருபர்களிடம் தெரிவித்தார்.
Posted in Actor, Andhra University, Chiranjeevi, Doctorate, Film, Governor, Honorary, Movies, Raanuva Veeran, Rengarajan, Siranjivi, Superstar, Tamil, Telugu, Tollywood, Venugopala Reddy, Vice-chancellor | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2006
காங்கிரஸில் காத்திருக்கும் இளந்தலைவர்கள்
நீரஜா சௌத்ரி
தமிழில்: லியோ ரொட்ரிகோ
காங்கிரஸ் கட்சியில் உள்ள இளம் தலைவர்கள் பதவிகளைப் பெறுவதற்கு முன், இன்னும் கொஞ்சம் அதிகமாக உழைக்க வேண்டும்; இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும்; இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெள்ளத் தெளிவாகக் கூறிவிட்டார் அக் கட்சித் தலைவர் சோனியா காந்தி.
ஆனால் 2004-ல் மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த இளைஞர் படையைச் சரியான முறையில் கட்சி பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதைப் பலரும் ஒப்புக்கொள்கின்றனர். காங்கிரஸ் கட்சியில் பொறுப்புகளை ஏற்க புதிய தலைமுறை தயாராகிவிட்டதாகக் கூறப்பட்டபோதிலும், எதிர்பார்த்தபடி கட்சி அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
- ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட்,
- முரளி தேவ்ராவின் மகன் மிலிந்த் தேவ்ரா,
- ஜிதேந்திர பிரசாத்தின் மகன் ஜிதின் பிரசாத்,
- ஜிண்டாலின் மகன் நவீன் ஜிண்டால்,
- ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித்,
- ஹரியாணா முதல்வர் பி.எஸ். ஹுடாவின் மகன் ரந்தீப் ஹுடா,
- ஜோதிர் ஆதித்ய சிந்தியா… என பலரும் மூத்த தலைவர்களின் வாரிசுகளாகவே இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் தகுதியும் திறமையும் உடையவர்களாகவே கருதப்படுகின்றனர்.
மூத்த தலைவர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, இளம் தலைமுறையின் கையில் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும் என்று வாதிடப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை விரிவாக்கத்தின்போது இளைய தலைமுறையினருக்கு இடம் அளிக்கப்படவில்லை என்று பத்திரிகைகள் விமர்சித்தபோது, ஜோதிர் ஆதித்ய சிந்தியா போன்றவர்களைக் கருத்தில் கொண்டே அவை குறிப்பிடப்பட்டன.
இப்போதைய மத்திய அமைச்சரவையின் சராசரி வயது 64 ஆக இருக்கக்கூடும். ஆனால் நாட்டு மக்கள்தொகையில் 60 சதவீதம் பேர் 35 வயதுக்கு உள்பட்டவர்களாக இருக்கும்போது, அதை அரசு பிரதிபலிக்க வேண்டாமா என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. அனுபவசாலிகளோடு இளம் தலைமுறையினரையும் கொண்டதாக அமைச்சரவை இருக்க வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இளைஞர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறினால், “பிரச்சினைகளைக் கையாள்வதற்கான பக்குவம்’ அவர்களுக்கு இருக்காது என்று எதிர்ப்புக் குரல்கள் எழக்கூடும். கட்சியில் அனுபவம் மிக்க தலைவர்கள் பலர் இருக்கும்போது அவர்களது அனுபவத்தை ஏன் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது?
முதல் முறையாக எம்.பி. ஆகியிருப்பவர்களுக்கோ, 30 வயதுகளில் இருப்போருக்கோ அமைச்சர் பதவி கொடுக்காததைப் பெரும் தவறு என்று கூற முடியாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிக்கு வந்த பொழுதே, ராகுல் காந்திக்கு அமைச்சர் பதவி கொடுக்க முன்வந்தார் மன்மோகன் சிங். ஆனால், துதிபாடிகளைக் கொண்ட ஒரு கட்சியில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்காதது சரியான நடவடிக்கைதான். அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்திருந்தால், அது அரசு நிர்வாகத்தில் போட்டி அதிகார மையத்தை உருவாக்குவதில் போய் முடிந்திருக்கும்.
இளம் எம்.பி.க்கள் பகிரங்கமாக என்ன பேசினாலும், உள்ளூர அவர்களுக்கு வருத்தம்தான். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை விரிவாக்கம் குறித்து சில கேள்விகளை அவர்கள் எழுப்புகின்றனர். மிகுந்த தயக்கம் காட்டிய பிரணப் முகர்ஜியை பாதுகாப்புத் துறையிலிருந்து வெளியுறவுத் துறைக்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன? காங்கிரஸ் வசமிருந்த கேரளம் கைநழுவிப் போய்விட்டது; அதற்குப் “பரிசா’க ஏ.கே. அந்தோனிக்கு அமைச்சர் பதவியா என்று அவர்கள் கேட்கின்றனர். ராணுவத்துக்குப் பலநூறு கோடி மதிப்புக்குத் தளவாடங்கள் வாங்கவிருக்கும் நிலையில், கை சுத்தமானவர் என்பதால் பாதுகாப்புத் துறை அந்தோனியிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது என்று கூறினால், 40-க்கு மேற்பட்ட அமைச்சர்கள் குழுவுக்குத் தலைமை வகித்துவருபவரான பிரணப் முகர்ஜிக்கு இழுக்கு ஏற்படுத்துவதாகும் அது.
வட இந்திய மாநிலங்களில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் வரவிருக்கும் நேரத்தில் தென் மாநிலங்களைச் சேர்ந்த மூவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டிருப்பதில் அர்த்தம் ஏதும் இல்லை.
2004-லேயே அந்த இளம் எம்.பி.க்களை உத்தரப் பிரதேசத்தில் களம் இறக்கி, கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு, தமது திறமையை நிரூபிக்குமாறு அவர்களைப் பணித்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் அது காங்கிரஸýக்கு பலன் அளிப்பதாக இருந்திருக்கும். 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, இப்போதுகூட அவர்களைக் களத்தில் இறக்கலாம்.
அமைச்சரவையில் அவர்களுக்கு இடம் அளிக்காவிட்டாலும்கூட, கட்சிப் பணிகளுக்கு அவர்களைப் பயன்படுத்தி இருக்கலாம். ஹிந்தி பேசும் மாநிலங்களில் கட்சியைப் பலப்படுத்தவில்லையெனில், அடுத்து வரும் தேர்தலில் முக்கிய இடத்தை காங்கிரஸ் பிடிக்க முடியாது என்பது திண்ணம்.
தமிழில்: லியோ ரொட்ரிகோ
Posted in Cabinet, Cong(I), Congress(I), Jithin Prasad, Jyothir Aathithya Scindia, Leo Rodrigo, Manmohan Snigh, Milind Deora, Ministers, Naveen Jindal, Neeraja Chowdhury, Randheep Huda, Sachin Pilot, Sandeep Dixit, Sonia Gandhi, Youth Congress | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2006
கூட்டணி கட்சிகளுக்கு திமுக துரோகம் செய்யவில்லை: கருணாநிதி
சென்னை, அக். 30: பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக துரோகம் செய்யவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவால் தோற்கடிக்கப்பட்ட இடங்கள் என்று ஒரு பட்டியல் பாமக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 29 மாவட்ட ஊராட்சித் தலைவர்களுக்கான இடங்களில் பாமகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சித் தலைவருக்கான தேர்தலில் பாமக வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டார் என்று தெரிவித்திருக்கிறார்கள். பாமக வேட்பாளர்களைத் தோற்கடிப்பது தான் திமுகவின் நோக்கம் என்றால் காஞ்சிபுரம் தவிர்த்த கடலூர், தருமபுரி, விழுப்புரம், சேலம் ஆகிய 4 இடங்களிலும் அதாவது ஐந்தில் 4 மாவட்ட ஊராட்சித் தலைவர்களாக பாமகவினர் தான் திமுக கூட்டணி ஆதரவுடன் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
காஞ்சிபுரத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக 14, அதிமுக 8, காங்கிரஸ் 5 இடங்களிலும் பாமக ஓரிடத்திலும் வெற்றி பெற்றிருந்தது. திமுக 14 இடங்களில் வெற்றிபெற்றிருந்த போதிலும் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தையின்போது காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி பாமகவுக்கு வேண்டும் என்று வலியுறுத்தியதன் பேரில் அவர்களுக்கே அந்த இடம் ஒதுக்கப்பட்டது. அங்கே போட்டி திமுக வேட்பாளர் ஒருவர் நின்று வெற்றி பெற்றிருக்கிறார். அவர் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கவிருக்கிறது.
ஒவ்வொரு கட்சியிலும் இருப்பதைப் போல் திமுகவில் உள்ள ஒரு சிலர் தவறு செய்திருக்கலாம். அப்படி செயல்பட்டவர்கள் மீது தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த நேரத்திலேயே பாமக அறிக்கை வெளியிடுவதற்கு முன்பாகவே திமுக எம்.எல்.ஏ.க்கள் அப்பாவு, உதயம் சண்முகம், கே.பி. ராமசாமி ஆகியோர் மீதும் மற்றும் ஒன்றியச் செயலர்கள், வெற்றிபெற்ற போட்டி வேட்பாளர்கள் உள்பட 20 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து அவர்களை நீக்க முடிவெடுத்து அனைத்து பத்திரிகையிலும் அச் செய்தி வெளிவந்திருக்கிறது.
காஞ்சிபுரம் நகராட்சித் தலைவராக திமுக சார்பில் போட்டியிட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஆறுமுகம் தோற்கடிக்கப்பட்டுள்ளார். அவரது தோல்விக்கு பாமகவும் தான் காரணம் என்று கூறப்பட்டாலும்கூட நான் ஏட்டிக்குப் போட்டியாக அவ்வாறு குற்றஞ்சாட்ட விரும்பவில்லை.
திண்டிவனம் நகராட்சியில் உறுப்பினர் பதவிக்கு பாமகவைச் சேர்ந்த ஒருவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் திமுகவைச் சேர்ந்த பூபாலன் சுயேச்சையாகப் போட்டியிட்டார் என்பதற்காக கட்சியிலிருந்து அவரை நீக்க முயற்சி எடுத்துக் கொண்ட நிலையில் அவரை பாமக தங்கள் கட்சியில் உறுப்பினராக ஆக்கி கொண்டது. திண்டிவனம் நகராட்சித் தலைவர் பதவி பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், திமுகவிலிருந்து நீக்கப்பட இருந்த பாமகவை தோற்கடித்த பூபாலனை பாமகவில் சேர்த்துக் கொண்டு அவரைத் தான் தற்போது பாமக வேட்பாளராக நிறுத்தி அவருக்கே திமுக உறுப்பினர்கள் எல்லாம் வாக்களித்து வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள். இந் நிலையில் முதலில் விடுதலைச் சிறுத்தைகளுக்காக ஒதுக்கப்பட்ட திண்டிவனம் நகராட்சி அவர்களுக்குத் தர இயலாமல் போய்விட்டது.
எனவே கூட்டணியின் வெற்றிக்காகவும் அவர்களின் நியாயத்துக்காகவும் திமுக எந்தக் காலத்திலும் தவறு செய்யாது. ஒரு மிகப் பெரிய தேர்தலில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஓரிருவர் தவறு செய்வதை இரு தரப்பினரும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர உடனடியாக அறிக்கை வாயிலாக திமுக எங்களை தோற்கடித்துவிட்டது என்பதைப் போல செய்தி வெளியிட்டு இரு கட்சி தோழர்களிடத்திலும் வெறுப்பை ஏற்படுத்த முயல்வது நல்லதல்ல. இந்த அறிக்கைகூட ஒரு விளக்கமாகத் தரப்படுகிறதே தவிர கூட்டணிக் கட்சியினர் யாரையும் விமர்சிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு வெளியிடப்படும் ஒன்றல்ல.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
Posted in Alliance, Civic Polls, DMK, Kanchipuram, local body elections, M Karunanidhi, Partners, Party, PMK, Tamil Nadu, Thindivanam | 2 Comments »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2006
வேத சூத்ரப்படி மின்சார உற்பத்தி; “நாசா’ சொந்தம் கொண்டாடுகிறது
பெங்களூர், அக். 30: “நாசா’ ஆய்வு மையம் நமது பாரம்பரிய ஆய்வுகளைக் கடத்தி உரிமை கொண்டாடுகிறது என்று அக்ரகாமி இயற்கை மின் உற்பத்தி முறை அமைப்பின் தலைவர் சதிஷ் சந்திரா தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 20 வருடங்களாக மின் உற்பத்தி சம்பந்தமான ஆய்வுகளைச் செய்துவருகிறேன்.
நமது வேதங்களில் உள்ள சூத்திரங்களை ஆய்வு செய்து, அதில் குறிப்பிட்டுள்ள முறைகளில் சோதனை செய்து, வானவெளியில் இருந்து பெறப்படும் சக்தியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்று 4 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தேன்.
இதனை விஞ்ஞானிகளிடமும் செய்து காட்டினேன். இதுகுறித்த தகவலை குடியரசுத் தலைவருக்கும் தெரிவித்தேன். அவர் இஸ்ரோவின் அப்போதைய தலைவர் கஸ்தூரிரங்கனுக்கு தெரிவிக்கும்படி என்னை அனுப்பினார்.
நானும் பலருக்கு அனுப்பியும் என் கண்டுபிடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது அமெரிக்காவின் நாசா பிரதிநிதி இதே திட்டத்தைச் சிறிதும் மாற்றம் இல்லாமல் மும்பையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கல்பனா சாவ்லா விபத்தில் இறந்தபோது அந்த விபத்துக்கான காரணம் என்ன என்று நான் நாசாவிற்குக் கடிதம் எழுதினேன். அதில் என் கண்டுபிடிப்பு குறித்தும், விபத்துக்கான காரணம் அதில் தொடர்புள்ளதாகவும் எழுதியிருந்தேன்.
ஆனால் இன்று அவர்கள் தாங்கள் கண்டுபிடித்ததாக அறிவிக்கிறார்கள். இது நமது பாரம்பரிய சொத்து. நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதைக் கண்டுபிடித்து தெரிவித்துள்ளனர். இந்த இயற்கை மின் உற்பத்தி குறித்து வேதத்தில் 12 சுலோகத்தில் 650 அட்சரங்களில் தகவல்கள் உள்ளன.
டெக்ஸôஸ் பல்கலைக் கழகத்திலிருந்து வந்த துணைவேந்தர் என்னுடைய தொழில்நுட்பத்தைப் பார்த்து “இன்னும் உங்கள் அரசு இதை அங்கீகரிக்கவில்லையா, எங்கள் நாட்டுக்கு வந்துவிடுங்கள்’ என்று கூறினார்.
ஆனால் என் மூத்தோரின் கண்டுபிடிப்புகள் இந்த நாட்டுக்கே பயன்படவேண்டும்; எனவே என்னுடைய ஆய்வை எந்த பலாபலனும் இல்லாமல் அரசுக்குக் கொடுத்துவிடுகிறேன்.
1,028 தொழில் நுட்பங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளேன். அனைத்தும் வேதங்களில் உள்ள சூத்திரங்களின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டவை.
இவற்றை அமெரிக்கா தனது சொந்த கண்டுபிடிப்புகள் என்று நமது சூத்திரங்களை கடத்துகிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தெரிவித்தார்.
Posted in Conspiracy Theory, Electricity, Mooligai Petrol, NASA, Natural sources, Ramar Pillai, Research, Sathish Chandra, Veda, Vedha | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2006
வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் அந்நாட்டின் அதிபர்
வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக அந்நாட்டு அதிபர் இஜாவூதின் அஹமது பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
வங்கதேசத்தின் பிரதான அரசியல் கட்சிகள், வேட்பாளர் ஒருவரை ஏற்க மறுத்தத்தினை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் சர்ச்சையினை நீக்கும் முயற்சியாக அதிபர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
வங்கதேசத்தின் தேர்தல் சட்டங்களின்படி, ஜனவரி மாதம் நடைபெறும் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதற்கு, கட்சி சார்பில்லாத ஒருவர் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை ஏற்க வேண்டும்.
முன்னதாக அரசாங்கம் தெரிவித்த வேட்பாளரை எதிர்கட்சிகள் ஏற்காத காரணத்தினால், வேறு ஒரு வேட்பாளரை நிறுத்த நான்கு பிரதான கட்சிகளுக்கும், அதிபர் இன்று வரை கால அவகாசத்தினை கொடுத்திருந்தார்.
இந்நிலையில் வங்கதேச அதிபர் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்று இருப்பதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ள பிரதான எதிர்க்கட்சியான அவாமி லீக், தொடர்ந்து போராட்டம் நடத்த போவதாக கூறியுள்ளது.
அரசியல் சர்ச்சையினால் வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி பதினெட்டுப் பேர் பலியாகியுள்ளனர்.
Posted in Bangladesh, caretaker, Chief Justice K.M. Hasan, Crisis, Government, Iajuddin Ahmed, President, Sheikh Hasina, South Asia, Zia | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 27, 2006
போலீஸ் விசாரணைக்கு பயந்து அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகி சாவு
சென்னை, அக். 28: சென்னை ஓட்டேரியில் வழக்கு தொடர்பாக காவல் நிலையத்தில் ஆஜராக அழைக்கப்பட்டதை அறிந்த அதிமுக நிர்வாகி மாரடைப்பால் இறந்தார்.
சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேலு. இவர், 39-வது டிவிஷன் அதிமுக வட்டப் பிரதிநிதியாக இருந்தார். உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது, மாநகர பஸ் மீது கல்வீசி தாக்கியதாக வடிவேலு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகும்படி அவரது குடும்பத்தாரிடம் போலீஸôர் தெரிவித்திருந்தனர். இதுதெரியவந்த வடிவேலுவுக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது.
சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேலு, அங்கு இறந்தார்.
Posted in ADMK, AIADMK, Civic Polls, FIR, functionary, heart attack, Inquiry, Jayalalitha, local body elections, Otteri, Ottery, Police, Tamil Nadu | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 27, 2006
வன்னியர் போராட்டம்: குடும்ப ஓய்வூதியம் ரூ. 2000 ஆக உயர்வு
சென்னை, அக். 28:இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த வன்னியர் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியத் தொகை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
1987-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என 1998-ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி அறிவித்தார். அத்துடன் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் ரூ. 1,500 ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்த குடும்ப நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என பாமக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று மாத ஓய்வூதியம் ரூ. 2,000 வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கான உத்தரவை வெள்ளிக்கிழமை முதலமைச்சர் பிறப்பித்தார்.
உயர்த்தப்பட்ட ஓய்வூதிய விகிதத்தின்படி குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு நவம்பர் மாதம் முதல் வழங்கப்படும்.
Posted in 1987, Caste, Education, Employment, Karunanidhi, MBC, Most Backward Classes, Pattali Makkal Katchi, pension, PMK, Ramadoss, Reservation, Tamil Nadu, Vanniyar Sangam, Vanniyars | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 27, 2006
மராட் கலவரம் குறித்த விசாரணை தாமதம்: சட்டத்துறையிடம் விளக்கம் கோரவுள்ளது கேரள அரசு
திருவனந்தபுரம், அக். 28: கேரளத்தில் 2002-ம் ஆண்டில் மராட் கடற்கரையில் நடந்த முதல் கலவரம் குறித்த விசாரணை தாமதமாகத் தொடங்கியது ஏன்? என்று மாநில சட்டத்துறையிடம் விளக்கம் கோரவுள்ளது, முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் தலைமையிலான இடதுசாரி கேரள அரசு.
மராட் கலவரம் குறித்த ஜோசப் பி. தாமஸ் விசாரணைக் கமிஷன் அறிக்கை தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடந்த சிறப்பு விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசியபோது இதைத் தெரிவித்தார் மாநில போலீஸ் துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன்.
2002 மராட் கலவரத்தின்போது போலீஸôர் சரியான நடவடிக்கை எடுக்காததால்தான் ஓராண்டுக்குப் பிறகு அங்கு மீண்டும் கலவரம் வெடித்தது என்று விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் தமது பதிலுரையில் அமைச்சர் கூறினார். மராட் கலவரத்தின்போது ஆட்சியில் இருந்த அப்போதைய முதல்வர் ஏ.கே. அந்தோனி அரசு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாதது மர்மமாக உள்ளது என்ற கமிஷனின் கருத்தை குறைகூறிப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உம்மன் சாண்டி, சிபிஐ விசாரணைக்கு பாஜக தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் எதிர்ப்புத் தெரிவித்தன என்பதைச் சுட்டிக் காட்டினார்.
மராட் பகுதியில் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கலவரம் மூள்வதற்கான வாய்ப்பு உள்ளதாக அரசுக்கு எச்சரிக்கை அறிக்கை அனுப்ப புலனாய்வுத் துறை தவறி விட்டது என்றும் உம்மன் சாண்டி கூறினார்.
2002 மராட் கலவரத்துக்குக் காரணமான குற்றவாளிகளிடம் துரிதமாக விசாரணை நடத்தத் தவறியதே, அங்கு மீண்டும் கலவரத்தில் ஈடுபடும் அளவுக்குக் குற்றவாளிகளுக்குத் தைரியத்தைக் கொடுத்தது. கலவரம் மீண்டும் மூண்டதற்கு ஏ.கே. அந்தோனி அரசு சரியான நடவடிக்கை எடுக்காததே முக்கியக் காரணம் என்று அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ள யோசனைகளை கேரள அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், மராட் கலவரத்தில் ஆர்எஸ்எஸ்ஸின் பங்கை விசாரணைக் கமிஷன் கண்டுகொள்ளவே இல்லை.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் அதன் மூலம் கலவரம் ஏற்பட்டதற்கான சதித்திட்டம் முழுமையாக வெளியாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
விசாரணை அறிக்கை குறித்து சிறப்பு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரி நோட்டீஸ் கொடுத்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரியதன் முகமது, 2003 மராட் கலவரத்தின்போது ஏ.கே. அந்தோனி அரசு எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டிப் பேசினார்.
Posted in A K Antony, AK Anthony, Aryadan Mohammed, BJP, CBI, Congress(I), CPI, Fundamentalist, Hilal Mohammed, Hindu Aiykya Vedi, Inquiry, intelligence report, Judicial Commission, Justice Joseph P Thomas Commission, Kerala, Kodiyeri Balakrishnan, LDF, Left, Marad, massacre, Muslim League, Oommen Chandy, Politics, Religion, RSS, UDF, Violence, VS Achuthanandan | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 27, 2006
தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியருக்கும் வேலைநிறுத்த உரிமை உண்டு: ஜோதி பாசு
கோல்கத்தா, அக். 28: தொழிலாளர்களிடம் இருந்து வேலைநிறுத்த உரிமையைப் பறிக்கக் கூடாது; தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் வேலைநிறுத்த உரிமை உண்டு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான ஜோதி பாசு கூறினார்.
தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமை தொடர்பாக கட்சிக்குள் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை. தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமையை நாம் பறிக்க முடியாது; அதே நேரத்தில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அடிக்கடி வேலைநிறுத்தம் ஏற்பட்டு, உற்பத்தி பாதிக்கப்பட்டுவிடாமல் தடுக்க, அத் துறையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கலாமா என்பது குறித்து ஆராயலாம் என்றும் அவர் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம், கோல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடந்தது. அதில் பங்கேற்ற ஜோதி பாசு, பின்னர் நிருபர்களிடம் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தார்.
ஆனால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை வலுக்கட்டாயமாக, பலத்தைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்தக் கூடாது என்று கூறியுள்ளார் மேற்கு வங்க மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா. மேற்கு வங்கத்தில் புதிதாக பல தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கும் புத்ததேவ், வேலைநிறுத்தத்தால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுவிடாமல் தடுப்பதிலும் அக்கறை காட்டிவருகிறார்.
அண்மையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தியது. அப்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொண்டார் புத்ததேவ்.
மத்திய அரசின் மக்கள்~விரோத பொருளாதாரக் கொள்கைகளையும் தனியார்மயமாக்கல் மற்றும் அரசு நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கும் விற்கும் கொள்கையையும் எதிர்த்து டிசம்பர் 14-ம் தேதி பொது வேலைநிறுத்தம் செய்ய சிஐடியூ தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இப் பின்னணியில், வேலைநிறுத்த உரிமை குறித்து ஜோதி பாசு தெரிவித்துள்ள கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
Posted in Buddhadeb Bhattacharya, Calcutta, CITU, CPI (M), employees, I&B, Industry, Information & Broadcasting, InfoTech, Jothi Basu, Jothy Basu, Kolkata, Mamtha bannerjee, Marxist, Strike, Technology, Telecom, Trinamool, Union, WB, West Bengal, workers | Leave a Comment »