Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Farming’ Category

Employment Opportunities & Education Facilities – Job Guarantee Schemes & Export Processing Zones

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2008

பகல் கனவாகும் வேலை வாய்ப்பு

ப.செ. சங்கரநாராயணன்

ஆண்டுக்கு 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறப்படும் இந்தியாவில், வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மாநிலங்களவையில் அண்மையில் எம்.பி.க்களின் கூச்சல், குழப்பத்துக்கிடையே (மக்களவைத் தலைவருக்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது) தாக்கல் செய்யப்பட்ட தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனத்தின் 61-வது அறிக்கையில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், 55 கோடிப் பேர் 30 வயதுக்கு உள்பட்டவர்கள். அதில், வேலையில்லாதோர் எண்ணிக்கை கோடிக்கணக்கில் அதிகரித்துவரும் தகவல் கவலையளிப்பதாக உள்ளது.

1999-2000-ம் ஆண்டில் வேலையில்லாதோர் சதவிகிதம் 7.3 ஆக இருந்தது. 2004-2005-ல் 8.35 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக, (வளர்ச்சி விகிதத்தை விடக் குறைவு) மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், உழைக்கும் வயதுப் பிரிவினர் எண்ணிக்கை அதிகரித்து வருவதுதான் இதற்குக் காரணம் என்கிறார். (உழைக்காமல் திரிகிறவர்களைச் சேர்க்கவில்லை)

இதற்காக அமைப்புசாரா தொழில்துறையில், புதிய வேலை வாய்ப்புகளைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தொழிற்பயிற்சி மையங்களை மேம்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிராமங்களில் விவசாயத்தை விட்டு நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களை நாடுவோர் எண்ணிக்கை, நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதன் தொடர்விளைவாக, உணவு உற்பத்தி குறைந்து, 2015-ல் உள்நாட்டு தேவைக்கு பெருமளவிலான உணவுப் பொருள்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா தள்ளப்படும் என, மூத்த விவசாய விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார்.

மத்திய அரசு அறிவித்துள்ள ஆயிரக்கணக்கான கோடி கடன் தள்ளுபடி மட்டும், விவசாயிகளை ஒருபோதும், அவர்கள் சந்தித்து வரும் உண்மையான அவலங்களில் இருந்து மீட்டெடுக்காது.

தில்லி இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.என். ராஜசேகரன் பிள்ளை, நாட்டில் 836 மில்லியன் மக்கள் தினமும் ரூ. 20 வருவாயுடன், சுகாதாரமற்ற சூழலில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 546 மில்லியன் பேர் வேலையின்றித் தவிக்கின்றனர்.

33 சதவிகிதம் பேர் எழுத்தறிவு இல்லாதவர்கள். 12 சதவிகிதம் பேர் மட்டுமே, பள்ளிக் கல்வி முடித்தவர்களாக உள்ளனர்.

இந்தியாவில் ஏறத்தாழ 400 பல்கலைக்கழகங்கள் இருந்தும் (போலிப் பல்கலைக்கழகங்கள் தனி), 10 சதவிகிதம் பேர் மட்டும் கல்லூரிக் கல்வி பயிலும் நிலை வேதனையளிப்பதாக உள்ளது என்கிறார் ராஜசேகரன் பிள்ளை.

உயர்கல்வியை 11 சதவிகிதம் பேர் பெற்றுள்ளனர். அதில் 4.3 சதவிகிதம் பேர் பெண்கள்.

இதில் ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில்வோரில் 90 சதவிகிதம் பேர் பன்னாட்டு நிறுவனங்களில் சேர்ந்து வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.

இந்நிலையில், 2007-ம் ஆண்டில் நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுப் பணிக்குச் செல்வோர் 28 சதவிகிதமாகவும், உயர்கல்வி கற்கச் செல்வோர் 33 சதவிகிதமாகவும் குறைந்துவிட்டனர். தாராளமயமாக்கல் கொள்கைகளால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைப்பது, இன்னும் அறிக்கை அளவிலேயே உள்ளது.

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 34,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவிகிதத்துக்கும் குறைவே. (ராணுவத் துறைக்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல்).

இந்தியாவின் 2.5 லட்சம் உள்ளாட்சிகளில் அடிப்படைக் கல்வியை மேம்படுத்தாமல் பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதாலோ, தனியார் பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்தாமல் எண்ணிக்கையை உயர்த்துவதாலோ எவ்விதப் பலனும் ஏற்படப் போவதில்லை.

குறிப்பாகத் தமிழகத்தில் பாலிடெக்னிக்குகளை விட பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதற்குக் காரணம் முற்றிலும் வணிகமயமாகி விட்ட உயர் கல்விதான்.

சாப்ட்வேர் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கில் கிடைக்கும் ஊதியமும், அத்துறையில் எப்பாடுபட்டாவது தங்கள் குழந்தைகளை நுழைக்க விரும்பும் பெற்றோர்களின் ஆசையும் ஒரு காரணம். அனைத்துத் துறைகளிலும் தகவல் தொழில்நுட்பம் தொடங்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் இத்துறையில் வேலைவாய்ப்பு குறையும் நிலையும் உள்ளது.

இந்நிலையில், அதிகமாக வெளிவரும் அரைகுறை பொறியாளர்களால், வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது.

பொறியியல் கல்வி முடித்து வெளிவருவோரில் 22 சதவிகிதம் பேர் மட்டுமே, வேலைக்கான தகுதியுடன் உள்ளதாக, கல்வியாளர் மு. அனந்தகிருஷ்ணன் தெரிவிக்கிறார்.

மத்திய அரசு அடிப்படைக் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கி, பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் மாணவர்களின் முழுமையான திறன்களை மேம்படுத்தும் பாடத் திட்டங்களையும் அமைத்தால்தான், உயர்கல்வியின் நோக்கம் நிறைவேறும் என்பதை மறுப்பதற்கில்லை. அத்துடன் மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்பிற்கான பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களையும் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.

அதுவரை தினம் ஒரு பன்னாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, அதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என, அரசு பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும், கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது பகல் கனவுதான்.

Posted in Agriculture, City, Contract, Contractors, Education, Employment, EPZ, Export, Farmers, Farming, IIM, IIT, Industry, Jobs, Loans, Metro, MNC, Opportunities, SEZ, Suicides, Union, Villages, Work | Leave a Comment »

Stock Markets & Growth Index – Budget Analysis: Developed Country Indicators

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2008

பங்குச் சந்தையும் பசித்த வயிறுகளும்

உ . ரா. வரதராசன்

இன்று ஆட்சியிலிருப்போரின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருவதும் ஊடகங்களின் வணிகச் செய்திப் பகுதியை ஆக்கிரமித்து நிற்பதும் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண்ணின் ஏற்ற இறக்க சதிராட்டம்தான்.

கடந்த 2007ம் ஆண்டில் இந்த சென்செக்ஸ் புள்ளிகள் 45 சதவீத உயர்வையும் தாண்டியது. மும்பை பங்குச் சந்தையில் அன்றாடம் வாங்கி விற்கப்படும் 30 பெரும் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பை மட்டுமே வைத்து இந்த சென்செக்ஸ் குறியீட்டுப் புள்ளிகள் கணக்கிடப்படுகின்றன. 21,000 புள்ளிகளைத் தொட்டு சாதனையை நிகழ்த்திய இந்த சென்செக்ஸ் இப்போது 14,000 புள்ளிகளாகச் சரிந்தும், பின்னர் ஏறுவதுமாக இருக்கிறது.

இன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற 2004-ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையிலான நான்காண்டுகளில் மும்பை மற்றும் தில்லி பங்குச் சந்தைகளில் நடைபெற்ற வர்த்தகத்தின் அளவு 286 சதவீதம் (சுமார் 3 மடங்கு) உயர்ந்துள்ளதாக சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்களின் ஊஞ்சலாட்டத்தை உற்றுக் கவனிப்பதிலேயே நாட்டின் நிதியமைச்சர் குறியாக இருக்கிறார்.

இப்போது வெளிநாட்டு மூலதனம் வரவு அதிகரிப்பதானாலும், சர்வதேச அளவில் டாலர் மதிப்பு சரிந்ததானாலும், இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே உயர்ந்து வருவது, நிதியமைச்சருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைச் சமாளிப்பதற்காகக்கூட அன்னிய நிதி மூலதனத்தின் மீது எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்க மத்திய அரசு முனையவில்லை. மாறாக இந்திய நாட்டுக் கம்பெனிகள் அயல்நாடுகளில் வாங்கும் கடன் தொகைகளை இந்தியாவுக்குக் கொண்டு வரக்கூடாது. வெளிநாட்டிலேயே மூலதனச் செலவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது நம் நாட்டவர்களே வெளிநாட்டில் கடன் வாங்கி அன்னியச் செலாவணியை நாட்டுக்குள் கொண்டு வருவது தடுக்கப்பட்டுள்ளது. அதே கடன் தொகைகள் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மூலம் பங்குச் சந்தைக்கு வந்து போவது என்பது இப்போதும் நடந்து வருகிறது.

நம் நாட்டின் நிதியமைச்சரின் பார்வை பங்குச் சந்தை வர்த்தகத்திலேயே பதிந்து கிடப்பது, நிதியமைச்சகம் கவலையோடு பரிசீலிக்க வேண்டிய எண்ணற்ற பிரச்னைகள் குறித்துப் பாராமுகம் காட்டுவதில் முடிந்திருக்கிறது.

இந்த ஆண்டின் பட்ஜெட்டில்தான் (அரசியல் காரணங்களுக்காகவேனும்) விவசாயக் கடன் ரத்து போன்ற சில அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. எனினும், பங்குச் சந்தையில் சரிவு ஏற்படுகையில் கம்ப்யூட்டரில் முகம் பதித்திருக்கும் தரகர்களின் முகத்தில் தெரியும் கவலைக்குறிகள் நிதியமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு, ஒவ்வொரு நாளும், பசித்த வயிறுகளோடு இரவில் படுக்க நேரிடும் கோடானகோடி சாமானிய இந்தியர்களின் துயரந்தோய்ந்த முகங்கள் ஈர்க்கவில்லை என்பது வருந்தத்தக்கது.

வளரும் நாடுகளில் பசித்த வயிறுகளின் சவால் பற்றிய ஓர் ஆய்வறிக்கை, உலகப் பட்டினிக் குறியீட்டெண் 2007 என்ற பெயரில் வெளியாகியுள்ளது. 2000 – 2005ம் ஆண்டுகளில் 118 வளரும் நாடுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தப் பட்டினிக் குறியீட்டு எண் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகம் 21ம் நூற்றாண்டில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்முயற்சியில் 189 நாடுகளின் ஆட்சியாளர்கள் கூடி விவாதித்து அடுத்த இரண்டாயிரமாவது ஆண்டின் வளர்ச்சி இலக்குகளை வரையறுத்து வெளியிட்டனர். 1990-ல் தொடங்கி 2015-க்குள் எட்டப்பட வேண்டிய இந்த இலக்குகள், கடுமையான வறுமையையும் பட்டினியையும் ஒழிப்பது, அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகள், குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைப்பது, தாய்மைக் காலத்தில் பெண்கள் ஆரோக்கியம், எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களை எதிர்கொள்வது போன்றவற்றை உள்ளடக்கி அமைந்தன. இந்த இலக்குகளைப் பாதியளவாவது 2003-ம் ஆண்டுக்குள் எட்டிவிட முயற்சிகள் மேற்கொள்ளப்படவும் முடிவெடுக்கப்பட்டது. இதை மையமாக வைத்து மூன்று முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்த உலகப் பட்டினிக் குறியீட்டு எண் தயாரிக்கப்பட்டுள்ளது.

1. ஒரு நாட்டின் மொத்த மக்கள்தொகையில் ஊட்டச்சத்து குறைவான மக்கள் எண்ணிக்கையின் விகிதம் (உட்கொள்ளும் உணவின் அளவு உடலின் தேவைக்குக் குறைவாக உள்ள மக்கள்தொகைகளின் எண்ணிக்கை).

2. ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை (வளர்ச்சி குறைந்த, சோகை பிடித்த குழந்தைகளின் சதவிகிதம்).

3. பிறந்த ஐந்தாண்டுகளுக்குள் இறந்துவிடும் குழந்தைகளின் (ஆரோக்கியமற்ற சூழல், போதுமான உணவு இல்லாமை காரணமாக நேரிடும் குழந்தைச் சாவுகளின்) எண்ணிக்கை.

இந்த மூன்று அளவுகோல்களை வைத்துக் கணக்கிட்டு 118 நாடுகளில் நிலவும் நிலைமைகளை இந்தப் பட்டினிக் குறியீட்டெண் படம்பிடித்துள்ளது. இதில் குறைவான புள்ளிகள் முன்னேற்றமான நிலையையும் கூடுதலான புள்ளிகள் மோசமான நிலையையும், சுட்டிக்காட்டுவதாக அமையும். 10 புள்ளிகளுக்கும் அதிகமாக உள்ள நாடுகளின் நிலைமை மோசமானது என்றும் 20 புள்ளிகளுக்கும் அதிகமாக உள்ள நாடுகளின் நிலைமை கவலைக்குரியது என்றும் 30-க்கும் அதிகமான புள்ளிகளைப் பெறும் நாடுகள் கடும் கவலைக்குரியது என்றும் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்தக் குறியீட்டு எண்ணில் இந்தியா பெற்றுள்ள புள்ளிகள் 25.03.

118 நாடுகளின் பட்டியலில் இந்தியா 94வது கவலைக்குரிய கட்டத்தில் இடம் பெற்றுள்ளது. கடும் கவலைக்குரிய நாடுகளின் எண்ணிக்கை வெறும் 12 மட்டுமே. நமது அண்டை நாடுகள் சிலவற்றின் இடங்கள் நம்மைவிட மேலான நிலையில் இலங்கை – 69, பாகிஸ்தான் – 88, நேபாளம் – 90 என்றுள்ளன. பங்களாதேஷ் மட்டுமே நமக்குப் பின்னால் 103வது இடத்தில் உள்ளது. 0.87 என்ற மிகக் குறைவான புள்ளியோடு லிபியா என்ற சின்னஞ்சிறிய நாடு முதலிடம் பெற்றுள்ளது.

இந்தியா பட்டினிக் குறியீட்டில் இவ்வளவு தாழ்வான நிலையில் இருப்பதற்குக் காரணத்தைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. இந்தியக் கிராமங்களைக் கவ்விப் பிடித்துள்ள துயரம்; பொருளாதார வளர்ச்சி விகிதம் பற்றிய ஆரவாரத்திற்கிடையிலேயும், விவசாயத்துறை மிகவும் பின்தங்கியுள்ள பரிதாப நிலை; சாதிய ஒடுக்குமுறை மற்றும் சிறுபான்மையருக்கு எதிரான பாரபட்சங்கள் காரணமாகக் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் கணிசமான மக்கள் பகுதி புறக்கணிப்புக்கு ஆளாகியுள்ள அவலம்; குடும்பத்தில் ஆண்மக்கள் உண்டதுபோக மிச்சமிருப்பதைப் பங்கிட்டுக் கொள்ளும் பெண்களின் உடல்நலம் குன்றல்; அத்தகைய பெண்களுக்குப் பேறுகாலத்தில்கூட ஊட்டச்சத்து குறைவாக அமைவதால் பிள்ளைப்பேற்றின்போதே குழந்தை இறப்பதும், பிறக்கும் குழந்தைகள் சவலையாக இருப்பதுமான சோகம்; எல்லாவற்றுக்கும் மேலாகப் பொது விநியோக (ரேஷன்) முறை, கல்வி, சுகாதாரம் இவற்றுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகள் அற்பமாகவே அமைந்துள்ளவை. எல்லாம் சேர்ந்துதான், இந்திய மக்களில் பெரும் பகுதியினரைப் பசித்த வயிற்றோடும், நோய்களுக்கு எளிதில் இலக்காகும் சோகைபிடித்த உடல் நிலையோடும் நிறுத்தி வைத்துள்ளன.

பங்குச் சந்தையில் சூதாடுபவர்களில் பெரும்பாலோர் கொழுத்த பணமுதலைகளும், வெளிநாட்டு மூலதனச் சொந்தக்காரர்களும்தான். ஆட்சியாளர்கள் அவர்கள் மீது மட்டுமே பதிந்துள்ள தங்கள் பார்வையைச் சற்றே முகம் திருப்பி, பசித்த வயிறுகளுக்கு மட்டுமே “சொந்தம்’ கொண்டாடும் நம் நாட்டின் பாவப்பட்ட ஜென்மங்களைக் கண் திறந்து பார்ப்பார்களா?

Posted in Agriculture, BSE, Budget, Capital, Currency, Dow, Economy, Employment, EPS, Exchanges, Farmers, Farming, Finance, Hunger, Index, Jobs, Malnutrition, markets, Money, Needy, Poor, Rich, Sensex, Shares, Stocks, Wealthy | Leave a Comment »

Tamil Nadu Public Works Department (PWD) – Villages’ infrastructure facilities & Support systems for TN river basin resources

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

பொதுப்பணித்துறைக்கு மூடுவிழாவா?

நீதி. செங்கோட்டையன்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் டல்ஹெüசி பிரபுவால் 1849-ம் ஆண்டு இந்தியாவில் பொதுப்பணித்துறை துவக்கப்பட்டது. ஆரம்பத்தில் ரயில், பேருந்து, சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கோடு துவக்கப்பட்ட இத்துறை, நாளடைவில் வேளாண் தொழிலின் உயிரோட்டமான நீர்நிலைகளைச் சீரமைக்கும் தலையாய பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது.

அந்தவகையில் மத்திய பொதுப்பணித்துறையும், அந்தந்த மாநிலங்களுக்குத் தனித்தனியாக மாநிலப் பொதுப்பணித்துறையும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்தைப் பொருத்தவரை ரெகுலர் பிரிவு, தாற்காலிகப் பிரிவு (திருச்சி, வேலூர் ஆகிய இரு வட்ட அலுவலகங்களின் கீழ் பல கோட்ட அலுவலகங்கள்) என இரு பிரிவுகளாகப் பொதுப்பணித்துறை செயல்படுகிறது.

இதில் ரெகுலர் பிரிவு ஆற்றுப்பாசனம் உள்ள பகுதிகளின் நீர்நிலைகளைச் சீரமைத்து வேளாண் தொழிலுக்கு வேண்டிய நீர்வளத்தைப் பெருக்கிக் கொடுக்கும் பணியைச் செய்து வருகிறது.

தாற்காலிகப் பிரிவானது, ஆற்றுப்பாசனம் அல்லாத பகுதிகளில் நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியைச் செய்து வருகிறது.

முக்கியமாக ஏரிப்பாசனத்தில் தமிழகம் முன்னிலையில் திகழ இந்த தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவின் பங்கு அளப்பரியது.

இதுபோன்ற முக்கியப் பணியை ஆற்றிவரும் தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவுக்கு தமிழக அரசு மூடுவிழா நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனால் ஏரிப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள், தங்கள் தலையில் இடி விழுந்தது போல் உணர்கின்றனர்.

தென் மாவட்டங்களின் பெரும்பகுதி வானம் பார்த்த பூமியாகத் திகழ்கிறது. இதனால் அப்பகுதி மக்கள், பிழைப்புத் தேடி நகர்ப்புறத்துக்கும், வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவு மூடப்பட்டால், ஏரிகள் மற்றும் குளங்களைத் தூர்வாரும் பணியில் மேலும் பின்னடைவு ஏற்படும் என்ற கவலை விவசாயிகள் மத்தியில் மேலோங்கியுள்ளது. அத்துடன், ஏரி, குளங்கள் தூர்வாரும் பணி தடைபட்டுப் போனாலும் போகலாம் என்ற அச்ச உணர்வும் பெரும்பாலான விவசாயிகளின் மனத்தைக் கவ்விக் கொண்டுள்ளது.

பொதுப்பணித்துறை ரெகுலர் பிரிவு வேளாண் கட்டமைப்பு தொடர்பான பணிகளை எப்போதுமே குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து முடிப்பதில்லை.

இதனால் தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவுக்கு மூடுவிழா என்ற செய்தி விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதைத் தவிர்த்து, ரெகுலர் பொதுப்பணித்துறை பிரிவில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகள் சுய ஆதாயத்தில்தான் அதிக அக்கறை கொண்டவர்களாக உள்ளனர். அதாவது, தங்களுக்கு கணிசமான கமிஷனை அள்ளிக் கொடுக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மட்டுமே அதிகாரிகள் தனிப்பட்ட சுறுசுறுப்பும் உற்சாகமும் கொண்டுள்ளனர் என்பதையே விவசாயிகள் துணிவாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.

அந்தவரிசையில், தற்போது தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவுக்கு மூடுவிழா நடத்தும் நிலைக்கு தள்ளியது கூட, இந்த ரெகுலர் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கமிஷன் ஆசைதான் என்றும், அவசியம் ஏற்பட்டால் இதை எந்த இடத்திலும் தாங்கள் சொல்லத் தயார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அதாவது ஒருகாலத்தில் ஆற்றுப்பாசனப் பகுதியில் உள்ள நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியை மட்டுமே செய்து வந்த பொதுப்பணித்துறையின் ரெகுலர் பிரிவு, அண்மைக்காலமாக ஆற்றுப்பாசனம் அல்லாத பகுதியிலும் நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியைச் செய்து வருகிறது. ரெகுலர் பிரிவின் இந்த முனைப்புக்கு கமிஷன் தான் காரணம் என்பது தவிர எவ்வித நல்ல நோக்கமும் இல்லை.

மாநிலத்தில் மொத்தம் 39,000 ஏரிகள் உள்ளன. ஏரிப்பாசனத்தின் கீழ் 22 சதவீத நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்நிலையில் 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்கான ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்ட வேண்டுமானால் விவசாயத்தின் உயிரோட்டமான நீராதாரத்தைப் பெருக்குவதில் அரசு அதிக அக்கறை செலுத்துவது அவசியம்.

குறிப்பாக விவசாயத்தின் ஜீவாதாரங்களான ஆறு, ஏரி, குளம், கிணறு போன்றவற்றைச் சீர்படுத்தி அவற்றை எப்போதும் நல்ல நிலையில் வைத்துக் கொள்வது பொதுப்பணித்துறையின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். ஆனால் தமிழகப் பொதுப்பணித்துறையின் செயல்பாடோ திருப்திகரமாக இல்லை.

இதேபோன்று மெத்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தால் தென்மாவட்டங்களில் விவசாயம் நலிவடைந்து, இன்னொரு “விதர்பாவாக’ உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

இதற்கிடையில், “நதிகளை இணைப்போம்’ என்று அடிக்கடி கூறி வரும் மாநிலப் பொதுப்பணித்துறை அமைச்சர், நிதி இல்லாததால்தான் பொதுப்பணித்துறையின் தாற்காலிகப் பிரிவுக்கு மூடுவிழா நடத்தப்பட உள்ளதாக உலா வரும் செய்திகளுக்கு என்ன பதில் கூறப்போகிறார் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு!

Posted in Agriculture, basin, Dams, Duraimurugan, facilities, Farmers, Farming, Flyovers, GIS, Govt, Hydrology, infrastructure, Irrigation, Lakes, Management, Mgmt, Planning, Plng, Projects, Public, PWD, Resources, Rivers, service, Suicides, support, Thiruchi, Thiruchirapalli, Thiruchirappalli, Thiruchy, Trichy, Vellore, Vidarba, Vidharbha, Vitharbha, Water | Leave a Comment »

Orissa tribals up in arms against government: What is behind Hindu-Christian violence?

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2008

ஒரிசாவில் பரிதவிக்கும் ஆதிவாசிகள்

டி.புருஷோத்தமன்

நமது நாடு 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை நோக்கி பீடுநடை போடுகிறது; அன்னியச் செலாவணி இருப்பு திருப்திகரமாக இருந்து வருகிறது.

ஆனால் அடிப்படை வசதியோ, அடுத்தவேளைக்கு உணவோ இன்றி அவதிப்படும் கோடிக்கணக்கான ஆதிவாசி மக்கள் நமது நாட்டில் இருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்த்தோமா என்று கேள்வி எழுப்பினால், இல்லை என்றுதான் பதில் அளிக்கவேண்டியுள்ளது.

நமது நாட்டில் பொருளாதார வளர்ச்சியிலும் கல்வி முன்னேற்றத்திலும் பின்தங்கியுள்ள மாநிலங்களில் ஒரிசாவும் ஒன்று. தலைநகர் புவனேசுவரத்தில் அரசு போக்குவரத்து அறவே இல்லாத அவலம். சாலைகள்தோறும் ஆட்டோக்கள்தான். அரசு பஸ் போக்குவரத்துக் கழகம் திவாலாகிவிட்டதாக கொசுறு செய்தி.

இப்படிப்பட்ட ஒரிசா மாநிலத்தில் மக்களின் வாழ்க்கைத்தரம் எவ்வாறு இருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தால் கண்ணீரும் கவலையும்தான் மிஞ்சும்.

ஒரிசாவில் வனப்பகுதிகளும் மலைகளும் அதிகம். இதனால் மாநிலத்தின் மக்கள் தொகையில் 32 சதவீதம் பேர் மலைவாழ் மக்கள். ஆண்டாண்டுக் காலமாக எவ்வித முன்னேற்றமும் இன்றி அவர்கள் வறுமையில் வாடுகின்றனர். கனிம வளங்கள் ஏராளமாக இருந்தும் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களின் பயன்கள் அவர்களைச் சென்றடைவதில்லை. போதாக்குறைக்கு மலைவாழ் மக்களிடையே பிளவு வேறு.

ஒரிசா மாநிலத்தின் தெற்குப் பகுதியில் கந்தமால் பகுதி அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 6 லட்சம். இதில் சுமார் 75 சதவீதம் பேர் “குயி’ மொழி பேசுகின்ற “கோந்த்’ என்ற பழங்குடி (எஸ்.டி.) இனத்தவர்களாவர். அடுத்து “பானா’ என்கின்ற தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) மக்கள். “குயி’ மொழி பேசும் இவர்கள் 20 சதவீதம் பேர் ஆவர்.

கோந்த் சமூகத்தினர் மிகவும் வறிய நிலையில் இருந்து வருகின்றனர். எந்த அரசு பதவிக்கு வந்தாலும் இவர்களைக் கண்டுகொள்வதே இல்லை. கல்வியறிவும் இல்லாத காரணத்தால் அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

கோந்த் சமூகத்தினரின் அறியாமை, ஏழ்மை, படிப்பறிவின்மை போன்ற பலவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் மீது பானா சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருவதுதான் வேதனை அளிக்கும் விஷயமாகும்.

பானா சமூகத்தினர் பலர் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்டுவிட்டனர். மிஷினரிகளின் உதவியால் கல்வி, வேலைவாய்ப்புகளைப் பெற்று பொருளாதார ரீதியில் வலுவாகிவிட்டனர். மதம் மாறிய பிறகும் எஸ்.சி.க்கான சலுகைகளைப் பெறுவதற்காக போலி சாதிச் சான்றுகளைப் பெறுகின்றனர். இதன்மூலம் அரசின் சலுகைகளையும் அரசு வேலைகளையும் பெற்றுவிடுகின்றனர்.

கோந்த் பழங்குடியினர் எண்ணிக்கையில் அதிக அளவு இருந்தும் கூட பொருளாதார ரீதியில் வலுவாக இல்லாத காரணத்தால் பானா சமூகத்தினரை விட பன்மடங்கு பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகின்றனர். பானா சமூகத்தினரின் சுரண்டலால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கோந்த் சமூகத்தினர்தான் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

மாவட்ட மக்கள்தொகையில் பெரும்பான்மையினராக இருந்தும்கூட கோந்த் சமூகத்தினர் எவரும் இதுவரை சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதனால் அரசியல் செல்வாக்கு அறவே இல்லாதவர்களாகிவிட்டனர்.

அதேசமயம் பானா சமூகத்தினர் அரசியல் செல்வாக்குடன் திகழ்கின்றனர். தங்களுக்குத் தேவையான சலுகைகளை அரசிடமிருந்து பெற்றுவருகின்றனர்.

கோந்த் சமூகத்தினரை அடக்கி ஆள்வதே குறிக்கோள் என்ற ரீதியில் புல்பானி சட்டமன்ற உறுப்பினரும் ஒரிசா அமைச்சரவையில் உருக்கு மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்தவருமான பத்மனாப பேஹ்ரா செயல்பட்டு வந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி கோந்த் பழங்குடி இனத்தவர்கள் மீது பானா சமூகத்தைச் சேர்ந்தவர்களும் நக்சலைட்டுகளும் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர். இதில் கோந்த் இனத்தைச் சேர்ந்த காகேஸ்வர் மாலிக் என்பவர் கொலை செய்யப்பட்டார். பிரம்மணிகால் என்ற கிராமத்தையே வன்முறைக் கும்பல் தீக்கிரையாக்கியது.

நிலைமை கட்டுக்கடங்காமல் போவதைக் கண்ட ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதிரடி நடவடிக்கையாக அமைச்சர் பதவியிலிருந்து பத்மனாப பேஹ்ராவை நீக்கினார்.

எனினும் கோந்த் இனத்தவருக்கும் பானா இனத்தவருக்கும் இடையிலான மோதல் நீருபூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது. அது எப்போது மீண்டும் வெடிக்கும் எனத் தெரியவில்லை.

வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த மானும் சிங்கமும் சேர்ந்து ஒரு துறையில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் பரவாயில்லை என கூறிவிடலாம். ஆனால் ஒரே இனத்தைச் சேர்ந்த மானும் மானுமே சேர்ந்திருக்கவில்லை என்பதைக் கேட்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது.

நகர மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தில் சிறு துளியையாவது ஆதிவாசிகளின் முன்னேற்றத்திலும் அரசியல் தலைவர்கள் காட்ட வேண்டும். அரசு அதிகாரிகளும் ஆதிவாசிகளின் நலனில் அக்கறை காட்டி அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை சரிவர நிறைவேற்ற உதவ வேண்டும். அப்போதுதான் நமது நாட்டின் பூர்வகுடிகளான ஆதிவாசிகளின் வாழ்வில் ஒளிபிறக்கும்.

Posted in Aadhivaasi, Aadhivasi, Aathivaasi, Aathivasi, Adhivasi, Adivasi, Agriculture, Assets, Athivasi, Balangir, Bamunigan, Biju, BJP, Business, Caste, Census, Christian, Christianity, Church, Community, Culture, Dalit Christians, Dalits, Economy, Education, Elections, Fake, Farmers, Farming, Farms, Gadapur, Gods, Government, Govt, Help, Heritage, Hills, Hindu, Hinduism, Hindutva, Judges, Justice, Kandhamal, Land, Law, Minerals, Missionary, Native, Naveen, Navin, Naxalites, Naxals, Needy, NGO, non-tribals, Order, Orissa, Police, Polls, Poor, Population, Poverty, Property, Religion, Reservations, Rich, RSS, SC, scheduled tribes, Schools, ST, Students, Teachers, Temples, Tradition, Tribals, Tribe, Violence, voters, Wealthy | Leave a Comment »

TN Govt will accord priority to housing, water scheme: The Governor of Tamil Nadu

Posted by Snapjudge மேல் ஜனவரி 23, 2008

தைமுதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம்

40 சமத்துவபுரங்களிலும் தந்தை பெரியார் சிலை!

கல்வி, வேலை வாய்ப்பு, சமூகநீதி, தொழில்வளம், வேளாண்மை,
மகளிர் நலம், மருத்துவம்… … அடுக்கடுக்கான திட்டங்கள்

ஆளுநர் உரையில் மின்னும் ஒளிமுத்துகள்!


சென்னை, ஜன. 23- தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம், 240 சமத்துவ புரங்களிலும் தந்தை பெரியார் சிலை உள்ளிட்ட அரிய அறி விப்புகள் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளன.
தமிழக ஆளுநர் மேதகு சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் இன்று காலை 10 மணியளவில், தமிழ்நாடு சட்டமன்றப் பேர வையில் ஆற்றிய உரை வரு மாறு: (ஆளுநரின் ஆங்கில உரையைத் தொடர்ந்து சட்ட மன்றப் பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் அவர்கள் அவ் வுரையைத் தமிழில் படித்தார்). அமைதி தவழும் மாநிலம்
நமது நாட்டின் பிற மாநி லங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாடு அமைதி தவழும் மாநிலமாக விளங்கி வருகிறது.

மாநிலத்தில் தீவிரவாத நட வடிக்கைகள் எவையும் நடை பெறாவண்ணம் இந்த அரசு தொடர்ந்து விழிப்புடன் கண் காணித்து வருகிறது. அண்டை மாநிலங்களிலிருந்து நமது மாநிலத்திற்குள் தீவிரவாதம் ஊடுருவதற்கான முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. மேலும், குற்றச் செயல்களில் ஈடுபடும் கூலிப்படையினருக்கு எதிராக இந்த அரசு கடும் நட வடிக்கைகளை எடுத்துள்ளது. ஏற்றத்தாழ்வற்ற சமுதாய வளர்ச்சி காண்பதும், வறு மையை ஒழிப்பதுமே சாதிப் பூசல்களுக்கும், தீவிரவாதத் திற்கும் நிரந்தரத் தீர்வுகளாகும் என்று இந்த அரசு உறுதியாக நம்புகிறது.

மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கலாம்

நதிநீர்ப் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வான தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தை மத் திய அரசு செயல்படுத்தவேண் டுமென்றும், அதன் முதற்கட் டமாக, தீபகற்ப நதிகளை இணைக்கும் திட்டத்தை உட னடியாகச் செயல்படுத்தவேண் டுமென்றும் இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் கூட, மாநிலங்களிடையே ஒரு மித்த கருத்து எதுவும் எட் டப்படாத நிலையே உள்ளது. எனவேதான், மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக் கும் திட்டத்தையாவது செயல் படுத்திட, மத்திய அரசு பதி னொன்றாவது அய்ந்தாண்டுத் திட்ட காலத்தில் நிதியுதவி வழங்கவேண்டுமென்று தமிழக அரசு கோரியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை யில், மேலும் தாமதமின்றி இந்தத் திட்டத்தைச் செயல் படுத்துவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளை இந்த அரசு விரைந்து மேற்கொள்ளும். மேலும், பருவ காலங்களில் தமிழக நதிகளின் உபரி நீர் கடலில் கலந்து வீணாவதைத் தடுத்து, வறட்சியான பகுதிகள் வளம் பெறும் வகையில் நிலத் தடியில் சேமித்துப் பயன் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய, இந்த அரசு ஒரு வல்லுநர் குழுவை அமைக்கும். நமது மாநிலத்தின் நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதி களில், ஆறுகள், சிற்றாறுகள் மற்றும் ஓடைகளில் வீணாகும் நீரைத் தடுப்பணைகள் மூல மாகச் சேமித்து, ஆண்டு முழு வதும் வேளாண்மை மற்றும் குடிநீர் வசதிக்குப் பயன்படுத்து வதற்கான பெருந்திட்டம் ஒன்று வரும் நிதியாண்டிலி ருந்து செயல்படுத்தப்படும்.

சேதுக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படவேண்டும்

தமிழக மக்களின் நீண்ட காலக் கனவாக விளங்குவதும் – 1860 ஆம் ஆண்டுமுதல் ஆங்கிலேயர் ஆட்சியிலேயே ஆய்வு நடத்திடத் தொடங்கப் பெற்று, பொறியியல் மேதை களால் ஏற்றுக்கொள்ளப் பட்டு, சாத்தியக் கூறுகள் கண் டறியப்பட்டு, சான்றோர்கள் ஆன்றோர்களால் வரவேற்கப் பட்டதுமான – உலகத் தொடர் புகள், வணிகத் தொடர்புகள் விரிவாக்கப்பட்டு நம் நாடு மேலும் வளமும், வலிவும் பெறுவதற்குப் பயன்படக் கூடி யதுமான சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றிடத் தொடங்கி, தற்போது அரசியல் ஆதாயத்திற்காக ஒரு சிலர் முன்னுக்குப் பின் முரணாக எழுப்புகிற வாதங்களுக்கு செவிசாய்த்து திட்டத்தின் செயலாக்கத்தை நிறுத்தி விடா மல் தமிழக மக்களின் எதிர் காலத்தை, ஏற்றமும் வளமும் மிக்க காலமாக மாற்றிடுவதி லிருந்து பின்வாங்காமல் – அந்த அரிய ஆக்கப்பூர்வமான திட் டத்தை நிறைவேற்றிட வேண் டுமென்று மத்திய அரசினை இந்த அரசு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

240 சமத்துவபுரங்களிலும் பெரியார் சிலை

தந்தை பெரியார் சிலை ஒன் றினை 95 அடி உயரத்தில் அமைக்கவேண்டும் என்ற திராவிடர் கழகத் தலைவர் திரு. கி.வீரமணி அவர்களின் வேண் டுகோளினை முதலமைச்சர் அவர்கள் ஏற்றுள்ள நிலையில், ஓரிடத்தில் சிலை அமைப் பதைக் காட்டிலும், பெரியார் பெயரால் மேலும் 95 சமத்துவ புரங்களை அமைத்து; அனைத்து சமூகத்தினரும் சகோதர பாசத் துடன் ஒருமித்து வாழ்கின்ற அந்த ஒவ்வொரு சமத்துவபுரக் குடியிருப்பு முகப்பிலும் தந்தை பெரியார் அவர்களின் சிலையை அமைப்பதால், அவருடைய தலையாய கொள்கையான சமுதாயச் சமத்துவக் கொள்கை பரவுவதற்கு வழி ஏற்படும் என்பதற்காக அந்தப் பணியை இந்த அரசு தொடங்க முடிவு செய்துளள்து. ஏற்கெனவே இவ்வரசு அமைத்துள்ள 145 சமத்துவபுரங்களுடன் சேர்த்து, இப்பணி முடிவுற்ற பின் பெரியார் சிலையுடன் கூடிய 240 சமத்துவபுரங்கள் தமிழ கத்தில் அமையும்.

தைத்திங்களே தமிழ்ப் புத்தாண்டு

பெரும் புலவரும், தனித் தமிழ் இயக்கத்தைத் தோற்று வித்தவருமான மறைமலை அடிகளார் தலைமையில், அய்ந் நூறுக்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள், 1921 ஆம் ஆண்டு சென்னை – பச்சையப்பன் கல்லூரியில் ஒன்று கூடி, தமிழர்களுக்கென்று ஒரு தனி ஆண்டு தேவை என்று கருதி, அய்யன் திருவள்ளுவர் பெய ரில் தொடர் ஆண்டு ஒன் றினைப் பின்பற்றுவதென்றும், அதையே தமிழ் ஆண்டு என்று கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் முடிவு எடுத் தார்கள். அந்தக் கருத்தினை, முப்பத்தியேழு ஆண்டுகளுக்கு முன்பே மாண்புமிகு முதல மைச்சர் கலைஞர் அவர்கள் ஏற்றுக் கொண்டு, 1971 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அர சிதழிலும் நடைமுறைப்படுத் திட ஆணை பிறப்பித்தார். திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக் கம் என்பது, ஒட்டு மொத்த மாக எல்லாத் தமிழ் அறிஞர் களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால், தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக் கம் என அறிவித்து நடை முறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழ்நாட்டு மக்கள்; இனி – தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகிழ்ச் சியுடன் கொண்டாடும் வகை யில், வாழை, மா, பலா என முக்கனித் தருக்களை நாட்டி; வண்ண வண்ணக் கோலங்க ளிட்டு; வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புது எழில் காட்டிட; புத்தாடை புனைந்து தமிழ் மானம், தன் மானம் போற்றிப் பாடியும் ஆடியும்; சமத்துவ உணர்வு பரப்பியும்; தமிழ்ப் புத்தாண்டு இதுவெனத் துள்ளும் மகிழ்ச் சியால் அன்பை அள்ளிப் பொழிவர்.

திட்ட ஒதுக்கீடு இரு மடங்கு

கடந்த பத்தாவது அய்ந் தாண்டுத் திட்ட காலத்தின் திட்ட ஒதுக்கீடான ரூபாய் 40,000 கோடியை இரு மடங் குக்கும் மேலாக உயர்த்தி, ரூபாய் 85,344 கோடி அளவில், வரும் பதினொன்றாவது அய்ந் தாண்டுத் திட்டக் காலத்தில் திட்டப் பணிகளை மேற் கொள்ள ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. இத்திட்டக் காலத்தில், வேளாண்மைத் துறைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டுவதோடு, சமூகநீதியை உறுதி செய்யும் வகையில் வளர்ச்சித் திட்டங்கள் செயல் படுத்தப்படும்.

மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் தமிழும்!

இந்த அரசின் இடைவிடாத முயற்சியின் காரணமாக மய்ய அரசு தமிழைச் செம்மொழி யாக அறிவித்துப் பெருமைப் படுத்தியது மட்டுமன்றி, மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தையும் சென்னையில் அமைத்து வருகிறது. தமிழ் நாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாட மாக்குவதற்கான சட்டம் இயற் றப்பட்டு, அனைவரும் தமிழ் பயில இவ்வரசு வழிவகுத்துள் ளது. தமிழ் மொழியை மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்கச் செய்யவும், சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளில் தமிழையும் வழக்கு மொழி யாக்கவும், இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும்.

விவசாயிகளின் நலன்

வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்கள் மூலமாக, விவசாயிகளின் வரு வாயைப் பெருக்க இவ்வரசு முனைப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வேளாண் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் கால்நடை மற்றும் மீனளம் வாயிலாகக் கூடுதல் வருவாயை ஈட்டுதல் ஆகியவை மூலமாகவே இது சாத்திய மாகும். உலக வங்கியின் உத வியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் நீர்வள நிலவளத் திட் டத்தின்கீழ், பொதுப்பணித் துறை, வேளாண் துறை, கால் நடைத் துறை, மீனளத் துறை போன்ற பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து திட்டப் பணிகள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயக் கூட் டுறவுக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள தன் வாயிலாக, தமிழக விவசாயிகள் மீண்டும் கடன் பெற வழிவகுக்கப்பட் டுள்ளது. தற்போது அதிகரித் துள்ள உற்பத்திச் செலவு களுக்கு ஏற்ப, விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்கும் வகை யில், மத்திய அரசு அறிவித்த 100 ரூபாய் ஊக்கத் தொகையோடு சேர்த்து, மாநில அரசின் கூடு தல் ஊக்கத் தொகையாக 50 ரூபாய் வழங்கி, இந்த அரசு சன்ன ரக நெல்லுக்கான கொள் முதல் விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 825 ஆக உயர்த்தியுள்ளது.

மூன்று லட்சம் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள்

தரிசு நிலங்களைப் பண் படுத்தி, அவற்றை நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங் களுக்கு இலவசமாக அளிக்கும் திட்டத்தின்கீழ் இதுவரை ஒரு இலட்சத்து 38 ஆயிரம் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 61 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இந்த அரசு இலவச மாக வழங்கியுள்ளது. மேலும், குடியிருக்க இடமற்ற ஏழை எளியவர்களுக்கு 3 லட்சம் இலவச வீட்டு மனைப் பட் டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப் புறம்போக்கு நிலங் களில் பத்து ஆண்டுகளாக வீடுகள் கட்டிக் குடியிருப் போருக்குப் பட்டா வழங் கப்படும் என்பதைத் தளர்த்தி, வருமான வரம்பையும் விலக்கி, அய்ந்தாண்டுகளுக்கு மேலாகக் குடியிருக்கும் அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா கிடைத் திட இந்த அரசு வழிவகுத் துள்ளது.

மின் உற்பத்தி

மத்திய மின் உற்பத்தி நிலை யங்களிலிருந்து பெறப்படும் மின் சக்தியின் அளவு குறைந் ததால், நமது மாநிலத்தில் மின் விநியோகத்தில் அண்மையில் சில இடர்ப்பாடுகள் ஏற்பட் டன. பழுப்பு நிலக்கரித் தட் டுப்பாடு காரணமாக, நெய் வேலி மின் உற்பத்தி நிலையம் ஒப்புக்கொண்ட அளவிற்கு மின் சக்தியை அளிக்க இயல வில்லை. இதேபோன்று, கல் பாக்கம் மற்றும் கைகா அணு மின் உற்பத்தி நிலையங்களும் எரிபொருள் பற்றாக்குறையால் அவற்றின் உற்பத்தித் திறனுக் கேற்ப மின் உற்பத்தி செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, மத்திய மின் உற்பத்தி நிலை யங்களின் மின் உற்பத்தியை அதிகப்படுத்துமாறு சம்பந்தப் பட்ட துறைகளை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத் துக் கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளில் ரூபாய் 925 கோடி மதிப்பீட் டில் 185 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப் படும்.

இவை 18 மாதங்களுக் குள் இயங்கத் தொடங்கும். இதுதவிர, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் உற்பத்தித் திறனை அதிகரிக்க இந்த அரசு பல நடவடிக்கைகளை எடுத் துள்ளது. வட சென்னை, மேட் டூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் கூடுதல் மின் உற்பத்தி நிலையங்களை நிறு வுவதற்கான ஆயத்தப் பணி களை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டு வரு கிறது. மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, மய்ய அரசு தமிழ்நாட்டிற்கு மத்தியத் தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரத்தை ஒதுக்கீடு செய்து வழங்கி வருகிறது.

கல்வியில் கணினிமயம்

தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கடந்த தி.மு. கழக ஆட்சிக் காலத்தின்போதுதான், 1999-2000 ஆம் ஆண்டில் கணினிப் பாடம் அறிமுகப்படுத்தப்பட் டது. கடந்த ஒன்றரை ஆண்டு களில் மாநிலத்தில் உள்ள 1,880 அரசு மேல்நிலைப் பள்ளி களுக்கும், 1,525 அரசு உயர் நிலைப் பள்ளிகளுக்கும் கணி னிகள் வழங்கப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில், எஞ்சி யுள்ள 100 அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 606 உயர் நிலைப் பள்ளிகளுக்கும் கணினிகள் வழங்கப்படும். மேலும், பதினொன்றாவது அய்ந்தாண்டுத் திட்டக் காலத்திற்குள், மாநிலத்தில் உள்ள 6,650 அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நடுநிலைப் பள்ளிகளுக்கும் கணினிகள் அளிக்கப்பட இந்த அரசு ஆவன செய்யும். இதுமட்டுமன்றி, தமிழ்வழிக் கல்வியில் பயின்று 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் முதல் 1,000 மாணவ மாண வியருக்கு ஊக்கப் பரிசாக கணினிகள் அளிப்பதற்கான திட்டம் ஒன்றையும் இந்த அரசு செயல்படுத்தும்.

திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம்

கோயம்புத்தூரில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறு வனம் ஒன்றையும் (அய்.அய். எம்.), மதுரையில் இந்திய தொழில்நுட்பவியல் நிறுவனம் (அய்.அய்.டி.), திருச்சியில் அறி வியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (அய்.அய்.எஸ். இ.ஆர்.) ஒன்றையும் அமைக் குமாறு, மத்திய அரசை, தமிழக அரசு கோரியுள்ளது. தமிழ் நாட்டில் தற்போது ஒரு மத்தியப் பல்கலைக் கழகம் கூட இல்லாத குறையை நீக்க, மாநிலத்தில் மத்திய பல்கலைக் கழகம் ஒன்றை அமைக்கு மாறும் மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களை, முதல மைச்சர் அவர்கள் இதுகுறித்து சந்தித்துப் பேசியுள்ளார்கள். முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோள் குறித்து நம் பிக்கையூட்டும் வகையில் மத்திய அமைச்சர் அவர்கள் உறுதியளித்துள்ளார்கள். இந்த மத்தியப் பல்கலைக் கழகம் திருவாரூர் மாவட்டத்தில் அமைக்கப்படும்.

மருத்துவத் துறை

அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சாமானிய மக்கள் மருத்துவ சிகிச்சை பெற இய லும். இதை மனதில் கொண்டு, அரசு மருத்துவமனைகளில் தேவையான பணியாளர்களும், அனைத்து வசதிகளும் கிடைக் கச் செய்ய இந்த அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், அரசு மருத்துவமனைகளில் காலியாக இருந்த பணியிடங் களில் 2,167 மருத்துவர்கள் மற்றும் 2,341 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதோடு, 468 புதிய மருத்துவப் பணி யிடங்களும், 1,059 புதிய செவி லியர் பணியிடங்களும் தோற் றுவிக்கப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன. கிராமப்புறத்தில் உள்ள மகளிருக்கு 24 மணி நேரமும் மகப்பேறு சிகிச்சைக் கான வசதி கிடைக்கும் வகை யில், 1,000 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஒவ்வொன்றிலும் மூன்று செவிலியர்கள் பணிய மர்த்தப்பட்டுள்ளனர். இதுமட்டுமன்றி, ரூபாய் 597 கோடி ரூபாய் மதிப்பீட்டி லான உலக வங்கி உதவியுடன் கூடிய தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டத்தின்கீழ், மாநிலத்தில் உள்ள அனைத்து வட்ட மற்றும் மாவட்ட மருத் துவமனைகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துவ தற்கான பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.

இவ் வாறு நமது மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதற்குச் சான்றாக, தனியார் மருத்துவ மனைகளில் நடைபெறும் பிள்ளைப் பேறுகளின் எண் ணிக்கை குறைந்து, அரசு மருத் துவமனைகளில் பிள்ளைப் பேறுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. வருமுன் காப் போம் திட்டத்தின்கீழ் இது வரை நடத்தப்பட்டுள்ள 4,872 முகாம்களில் 51 இலட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இந்த அரசு பொறுப்பேற்ற பின், மோட்டரோலா, டெல் கம்ப்யூட்டர்ஸ், சாம்சங், ரெனோ-நிஸ்ஸான் போன்ற பல பெரும் தொழில் நிறுவனங் களுடன் ரூபாய் 15,083 கோடி மதிப்பீட்டிலான 12 புரிந் துணர்வு ஒப்பந்தங்கள் கையெ ழுத்திடப்பட்டு, அவற்றில் நான்கு தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்கியுள் ளன. இதனால் 1,37,140 பேர் களுக்கு நேரடி மற்றும் மறை முக வேலை வாய்ப்புக் கிடைக்கும்.

தொழிற்கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி

ரூபாய், 4,000 கோடி மதிப்பீட்டில் ஹூண்டாய் கார் தொழிற்சாலை ஆண் டொன்றுக்கு 6 லட்சத்து 30 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு விரிவாக் கப்பட்டு வருகிறது. மேலும் ரூபாய், 1800 கோடி மதிப்பீட் டில் போர்டு கார் தொழிற் சாலை ஆண்டொன்றுக்கு கூடுதலாக இரண்டு இலட்சம் கார்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு விரிவாக்கம் செய் யப்படவுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே அமைந்துள்ள இவ்விரு தொழிற்சாலைகளும், தங்களது பெரும் விரிவாக்கத் தையும் நமது மாநிலத்திலேயே மேற்கொள்வதானது, இந்த அரசின் தொழிற்கொள்கைக் குக் கிடைத்த நற்சான்றித ழாகும்.

கப்பல் கட்டும் தளங்கள்

கடந்த வரவு – செலவு திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட் டது போன்று, சென்னையை அடுத்துள்ள எண்ணூரில் ரூபாய் 3,068 கோடி முதலீட் டில் லார்சன் அண்டு ட்யூப்ரோ நிறுவனம் கப்பல் கட்டும் தளம் ஒன்றினை அமைக்கும். இதன் மூலமாக சுமார் பத்தாயிரம் பேர் வேலை வாய்ப்புப் பெறு வார்கள். கடலூர் மாவட்டத் தில், இன்னொரு கப்பல் கட்டும் தளம் அமைப்பதற் கான ஆயத்தப் பணிகள் நடை பெற்று வருகின்றன.

24,58,411 வண்ணத் தொலைக்கட்சிப் பெட்டிகள் இலவசம்

தி.மு.க., தேர்தல் அறிக்கை யில் அறிவிக்கப்பட்டவாறே, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாதோர் அனைவருக்கும் அவற்றை வழங்கும் திட்டம் இவ்வரசால் செயல்படுத்தப்பட்டு, இது வரை 24,58,411 பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மூன்றா வது கட்டமாக, 34 இலட்சத்து 25 ஆயிரம் வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகளைக் கொள்முதல் செய்வதற்கான ஆணைகள் அளிக்கப்பட்டுள் ளன. சர்வதேச ஒப்பந்தப் புள்ளி வாயிலாக சட்டமன்ற கட்சி களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் ஒப்புதல் பெற்று, ஒளிவு மறைவற்ற முறையில் கொள்முதல் செய்யப்பட்டு, எவ்விதப் பாகுபாடுமின்றி மாநி லத்தின் அனைத்துப் பகுதிகளி லும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட குழுக்கள் மூலமாக, ஏழை எளிய குடும்பங்களுக்கு இவை வழங்கப்பட்டு வருவது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத் தப்பட்டு, இந்தியாவிலேயே வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் அனைத்து வீடு களிலும் உள்ள ஒரே மாநிலம் தமிழகம்தான் என்ற சாத னையை விரைவில் எட்டு வோம்.

மெட்ரோ ரயில் திட்டம்

சென்னை – மாநகர்ப் பகுதி தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகின்றது. இப் பகுதியின் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு உடனடி யான மற்றும் நிலையான தீர்வுகள் தேவைப்படுகின்றன. இந்த முக்கியப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, ரூபாய் 9,757 கோடி செலவில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த இந்த அரசு முனைந்துள்ளது. இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை டில்லி மெட்ரோ இரயில் கழகத்தால் தயாரிக்கப்பட்டு, ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கி யின் நிதியுதவி பெறுவதற்காக மத்திய அரசிற்கு அனுப்பப் பட்டுள்ளது. இத்திட்டத்திற் கான ஆரம்பக் கட்டப் பணி கள் நடைபெற்று வருகின்றன.

ஒரு லட்சம் புதிய வீடுகள்

குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்கள் மற்றும் நடுத்தர வகுப்பினர் ஆகியோருக்கு, நகர்ப்புறப் பகுதிகளில் வீட்டு வசதி அளிப்பதற்கு இந்த அரசு முன்னுரிமை அளிக்கும். பல்வேறு நகர்ப்புற மேம் பாட்டுத் திட்டங்களின்கீழ், மாநிலத்தில் உள்ள நகரங்களில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டப்படவுள்ளன. மாநகராட்சிப் பகுதிகளில் வாழும் மக்களின் வீட்டு வசதித் தேவையைக் கருத்தில் கொண்டு, பொதுத் துறை – தனியார் துறை கூட்டு முயற் சியின் வாயிலாக மாநகராட்சி களுக்கு அருகில் உள்ள பகுதி களில் வீட்டு வசதித் திட் டங்கள் செயல்படுத்தப்படும். இதுமட்டுமன்றி, வீட்டு வசதித் திட்டங்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியை குறைந்த வருவாயு டைய மக்களுக்காக ஒதுக்க வேண்டும் என்ற நிபந்தனை யின்படி, திட்டங்களைச் செயல்படுத்தும் கட்டட அமைப்பாளர்களுக்கு, அதிக தரைப் பரப்புக் குறியீட்டள விற்கு இந்த அரசு அனுமதி யளிக்கும்.

தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்

மத்திய அரசின் மிகப் பெரும் சாதனைத் திட்டமான தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், தமிழகத்தில் தற்போது 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டிலுள்ள அனைத்து மாநி லங்களிலும் இத்திட்டத்தின் செயல்பாட்டை சமூக ஆய்வு வாயிலாக ஆய்ந்து வரும் குழு வினர், தமிழகத்தில் இத்திட் டம் மிகச் சிறப்பாகச் செயல் படுத்தப்படுவதாகவும், இத் திட்டத்தின்கீழ் பணிபுரிவோ ருக்கு நாளொன்றுக்கு எண்பது ரூபாய் ஊதியமாக வழங்கப் பட்டு வருவதாகவும், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் இத்திட் டத்தின்கீழ் பெண்களே 82 சதவிகிதம் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளதாகவும் குறிப் பிட்டு பாராட்டியுள்ளனர். இத்திட்டத்தை, மத்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தியுள்ளதையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வரும் நிதியாண்டு முதல் இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப் படும்.

நாங்குநேரியில் சிறப்புப் பொருளாதாரப் பகுதி

தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சியே- அப்பகுதியில் சமுதாயப் பூசல் கள் எழாமல் இருக்க உதவும் அடிப்படையில், இம்மாவட் டங்களின் தொழில் வளர்ச்சிக் கான பல முயற்சிகளை இந்த அரசு தொடர்ந்து மேற் கொண்டு வருகிறது. நாங்கு நேரியில் சிறப்புப் பொருளா தாரப் பகுதி அமைப்பதற்கு குறுக்கிட்ட தடைகள் நீக்கப் பட்டுள்ள நிலையில், 2,500 ஏக்கர் பரப்பளவில் பல் தொழில் சிறப்புப் பொருளா தார மண்டலம் ஒன்று விரை வில் அமைக்கப்படும்.

இதைப் போன்றே, கங்கை கொண்டா னில் தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண் டலம் ஒன்றை ஏற்படுத்தவும், மதுரையைச் சுற்றியுள்ள பகுதி களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்கவும் எல்காட் நிறுவனம் நட வடிக்கை எடுத்து வருகிறது. அண்மையில், கங்கைகொண் டான் மற்றும் மதுரையில் தகவல் தொழில்நுட்ப நிறு வனங்களுக்கு நிலம் ஒதுக்கப் பட்டுள்ளது. இம்மாவட்டங் களில் உள்ள படித்த வேலை யற்ற இளைஞர்கள் பெரு மளவில் வேலை வாய்ப்புப் பெறவும், இப்பகுதிகள் பொரு ளாதார வளர்ச்சி அடையவும் இந்த நடவடிக்கைகள் பெரி தும் உதவும் என நம்புகிறேன்.

மகளிர் நலன்

நமது சமுதாயத்தில் பெண் கள் தமது முழு உரிமைகளைப் பெறவும், உரிய பங்கினை ஆற்றவும் இந்த அரசு எப் பொழுதுமே உறுதுணையாக இருந்துள்ளது. பெண்களுக்கு சமச் சொத்துரிமையையும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு வேலை வாய்ப்பு களில் இட ஒதுக்கீட்டையும் வழங்கி பெண்ணுரிமை காத் தது இந்த அரசுதான் என்பதை அனைவரும் அறிவர். இந்த வகையில், சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு உரிய பிரதி நிதித்துவம் அளிக்கப்பட வழி வகுக்கும் சட்டத்தை, திருமதி சோனியா காந்தி அவர்களின் சீரிய வழிகாட்டுதலுடன், மாண்புமிகு பிரதமர் மன் மோகன்சிங் அவர்கள் தலை மையில் நடைபெறும் அய்க் கிய முற்போக்குக் கூட்டணி அரசு விரைவில் நிறைவேற் றிடும் என நம்புகிறோம்.

சுய உதவிக் குழுத் திட்டம்

1989 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் இந்த அரசால் தொடங்கப் பெற்ற சுய உதவிக் குழுத் திட்டம், இன்று நமது மாநிலத்தில் உள்ள மகளிருக்கு சமூகப் பொருளாதாரச் சுதந் திரம் அளிக்கும் மாபெரும் மக்கள் இயக்கமாக உரு வெடுத்துள்ளது. இதுவரை கிராமப் பகுதிகளில் மட்டுமே அளிக்கப்பட்டு வந்த சுழல் நிதி உதவியை, முதன்முறையாக மாநிலத்தின் நகரப் பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழுக்களுக் கும் இந்த அரசு வழங்கத் தொடங்கியுள்ளது. தற்போது மாநிலத்தில் சுமார் 58 இலட் சம் உறுப்பினர்களைக் கொண்ட மூன்று இலட்சத்து அறுபதாயிரம் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வரு கின்றன. இக்குழுக்கள் ரூபாய் 1,639 கோடி சேமித்துள்ள தோடு மட்டுமன்றி, ரூபாய் 2,566 கோடி வங்கிகளிடமி ருந்து கடனுதவி பெற்றுள்ளன.

இந்த இளைஞர்களுக்கான பல்வேறு பயிற்சித் திட்டங் களை இந்த அரசு செயல் படுத்தி வருகிறது. மேலும், பொது அறிவு, கணினி அறிவு, ஆங்கிலத்தில் நன்றாகப் பேசும் திறன் மற்றும் நேர்முகத் தேர்வு களில் பங்கேற்கும் திறன் ஆகிய வற்றை இளைஞர்கள் பெற இந்த அரசு ஆவன செய்யும். பயிற்சி பெற்ற கனரக வாகன ஓட்டுநர்கள் அதிக அளவில் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு, அரசுப் போக்கு வரத்துக் கழகங்கள் பெருமள வில் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிப்பதற்கான திட் டம் ஒன்று இந்த அரசு செயல்படுத்தும்.

மாதாந்திர ஓய்வு உதவி

தி.மு.க. தேர்தல் அறிக்கை யில் அளிக்கப்பட்ட வாக்குறு தியை நிறைவேற்றும் வகையில், 2006-07 ஆம் ஆண்டில் முதி யோர், ஆதரவற்றோர் மற்றும் விதவைகள் ஆகியோருக்கு அளிக்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத் தொகையை ரூ 200 லிருந்து ரூ 400 ஆக இந்த அரசு உயர்த்தியது. தற்போது வறு மைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து முதியோருக்கும் ஓய்வூதியம் அளிக்கும் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. மறைந்த பாரதப் பிரதமர் திரு மதி இந்திரா காந்தி அம்மை யாரின் பிறந்த நாளான 19-11-2007 அன்று இந்தத் திட்டம் நமது மாநிலத்தில் முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள் ளது. இத்திட்டத்தின் வாயி லாக, ஆண் வாரிசுகளின் ஆத ரவுள்ளவர்கள், இல்லாதவர்கள் என்ற பாகுபாடின்றி, 65 வயதுக்கு மேற்பட்ட வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள சுமார் 10 இலட்சம் முதியோர்கள் பயன் அடைவார்கள்.

ஊனமுற்றோருக்கு வழங் கப்படும் உதவித் தொகையை ரூ 200 -லிருந்து ரூ 400- ஆகவும், கடும் ஊனமுற்றோருக்கு வழங் கப்படும் உதவித்தொகையை ரூ 200-லிருந்து ரூபாய் 500-ஆகவும் இந்த அரசு கடந்த ஆண்டு உயர்த்தியுள்ளது. தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள் ளக்கூட இயலாத மன வளர்ச்சி குன்றியோருக்கு, முன் எப் போதும் இல்லாத வகையில், வருமான வரம்பு மற்றும் எண்ணிக்கை வரையறை யின்றி, மாதாந்திர உதவித் தொகையாக 500 ரூபாய் வழங்க இந்த அரசு ஆணை யிட்டது. இதன் அடிப்படை யில், இதுவரை 30,000 பேருக்கு இத்தொகை வழங்கப்பட் டுள்ளதோடு, இவர்களுக்கு சிறப்புக் கல்வி மற்றும் தொழிற் பயிற்சி வசதிகளும் கிடைத்திட இந்த அரசு ஆவன செய்துள் ளது.

ஒரு வகையில் ஊனமுற் றோர் என்றே கருதப்பட்டு, சமுதாயத்தின் ஓரத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அரவாணி களின் நலனில் எப்பொழுதுமே இந்த அரசு அக்கறை கொண் டுள்ளது. சமூக அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச் சினைகளை இவர்கள் எதிர் கொள்வதைக் கருத்தில் கொண்டு, குடும்ப அட்டை களை வழங்குதல், அரசு மருத்துவமனைகளில் இலவச அறுவை சிகிச்சை அளித்தல் போன்ற பல்வேறு திட்டங் களை இந்த அரசு செயல் படுத்தி வருகிறது. இவர்களின் மீது இந்த அரசு கொண்டுள்ள பரிவின் காரணமாக இவர் களுக்கென புதிய நல வாரியம் ஒன்று அமைக்கப்படும்.

நமது மாநிலத்தில், ஏன் நமது நாட்டிலேயே, எங்கும் முன்னர் எப்போதும் வழங்கப் படாத அளவில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த தாய்க் குலத்திற்கு திருமணம் மற்றும் மகப்பேறு உதவிகளை இந்த அரசு வழங்கி வருகிறது. இந்த உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும்போது, அதில் குறுக்கே புகுந்து ஆதாயம் தேடும் நோக்கத்தோடு, சில இடைத் தரகர்களும் அலுவ லர்களும் தவறான செயல்களில் ஈடுபட இந்த அரசு ஒரு போதும் அனுமதிக்காது. இத் தகைய கயவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

அமைப்பு சாராத் தொழிலாளர்கள்

அமைப்பு சாராத் தொழிலா ளர்களின் நலனுக்கு இந்த அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வந்துள்ளது. 1996-2001 ஆண்டு காலத்தில், இந்த அரசு தான் அமைப்பு சாராத் தொழி லாளர் நல வாரியங்களை அமைத்து நலத்திட்ட உதவி களை வழங்கியது. இடையில் கலைக்கப்பட்ட இந்த வாரி யங்களை இந்த அரசு மீண்டும் அமைத்துள்ளது. இந்த வாரி யங்களின் மூலமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில், 2,20,043 அமைப்பு சாராத் தொழிலாளர்கள் சுமார் ரூபாய் 56 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத் திட்ட உதவி களைப் பெற்றுள்ளனர்.

சென்னை சங்கமம் கலை விழா

நாட்டுப்புறக் கலைஞர் களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்காக தனி நல வாரியம் ஒன்றை இந்த அரசு அமைத்துள்ளது. நமது தொன்மையான கலைகளை வாழவைக்கும் அரும்பணியாக, நாட்டுப் புறக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் ஆர்வத்திற்கு ஆதரவு நல்கிடும் வகையிலும், சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, தமிழ் மையம் – சென்னை சங்கமம் கலை விழா, மாநகர் முழுவதும் வெற்றிகரமாகவும், மக்களின் பேராதரவுடனும் நடைபெற் றதை யொட்டி; வரும் ஆண்டு களிலும் படிப்படியாக தமிழ கம் முழுவதும் இவ்விழாவை நடத்துவதற்கு இந்த அரசு ஒத்துழைப்பு வழங்கும்.

தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிவோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் வேகமாக உயர்ந்துள்ளது. இவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் களைய, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் மாநில அளவிலான உயர்நிலை ஆலோசனைக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்.

இலங்கைத் தமிழர்கள் சந்தித்து வரும் இன்னல்கள் தொடர்வதைக் கருத்தில் கொண்டு, பல ஆண்டுகளாக நிலவிவரும் இந்தப் பிரச்சி னைக்கு விரைவில் சுமுகமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்த அரசு, மைய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

நெசவாளர்களின் நலன் காக்கும் வகையில், அவர் களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தியும், இலவச மின்சாரம் அளித்தும் பல்வேறு நலத் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. ரூபாய் 256 கோடி செலவில், மாநிலத் தில் உள்ள 3 கோடியே 28 இலட்சம் ஏழை எளிய மக் களுக்கு இலவச வேட்டி, சேலைகள் அளிக்கும் திட்டம், நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுத்தப் படும்.

என்றும் மீனவர் நலனுக்கு உயர் முன்னுரிமை அளித்து, அவர்களுக்கென தனி நல வாரியம் அமைத்துள்ளதோடு, கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது காணாமல் போகும் மீனவர்களுடைய குடும்பங் களுக்கு உதவுவதற்கான திட் டம் ஒன்றையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. கடலில் மீன் பிடிக்கச் செல் லும்போது அவர்களுக்கு ஏற் பட்டு வரும் இன்னல்களைக் களையத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு தொடர்ந்து எடுக் கும்.

துப்புரவுப் பணியாளர்களின் நலம்

துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் மனிதக் கழிவை எடுத் துச் செல்லும் தொழிலில் ஈடு பட்டு இருந்தோரின் சமூகப் பொருளாதார முன்னேற் றத்திற்கு இந்த அரசு உறு துணையாக இருக்கும். இந்த நோக்குடனேயே, இவர்களின் நலனுக்காக தனி நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இவர் களுக்கு மறுவாழ்வுஅளிக்க வும், மாற்றுத் தொழில்களை மேற்கொள்ள உதவவும் தேவை யான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

அருந்ததியர் வகுப்பினர் சமூகப் பொருளாதார நிலை யில் அடித்தளத்தில் இருப்ப தால், அவர்தம் முன்னேற்றத் திற்குச் சிறப்புச் சலுகைகள் அளிப்பது அவசியம் எனக் கருதி, தற்போது ஆதிதிராவி டருக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டில் இவர்க ளுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்குவது பற்றி, அனைத்துக் கட்சிகளையும் கலந்தாலோ சித்து முடிவு செய்ய இந்த அரசு கருதியுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர் சமூகப் பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைவதற்கு, இப்பிரிவுகளைச் சேர்ந்தோர் அனைத்துத் துறைகளிலும் உயர் வேலை வாய்ப்புகளைப் பெறுவது அவசியம் என்பதை இந்த அரசு நன்கு உணர்ந்துள் ளது. இதனையொட்டி, தற் போது மாநிலத்தில் பெருமள வில் உருவாகிவரும் வேலை வாய்ப்புகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியின இளை ஞர்கள் பெறும் வகையில், 2007-08 ஆம் ஆண்டிற்கான சிறப்பு மாநில உதவி ரூபாய் 25 கோடி தொகையையும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப் பதற்கே இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

கல்வி அறிவிலும், சமுதாய முன்னேற்றத்திலும் சிறுபான் மையினர் பின்தங்கியுள்ள நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீடு கிடைத்திட இந்த அரசு வழி வகுத்துள்ளது. மேலும், அவர்களது முன்னேற் றத்தில் தனி கவனம் செலுத்து வதற்காக இந்த அரசு ஒரு தனி இயக்குநரகத்தையும் அமைத் துள்ளது.

தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு

இந்த அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் அனைத் தும் எப்போதும் சமூக நீதி என்ற குறிக்கோளை மையப் படுத்தியே செயல்படுத்தப் பட்டு வந்துள்ளன. நீதிக்கட்சி யின் வழி வந்த திராவிட முன் னேற்றக் கழக அரசு, சமூக நீதியை நிலை நாட்டுவதில் இந்த நாட்டிற்கே முன்னோடி யாகத் திகழ்ந்து வந்துள்ளதை அனைவரும் அறிவர். இந்த வகையில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் தனி யார் துறை வேலை வாய்ப்பு களிலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப் படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.

இந்த அரசின் கொள்கை கள், செயல்பாடுகள், சாதனை கள் மற்றும் எதிர்காலத் திட் டங்கள் ஆகியவற்றை உங்கள் முன் விரிவாக எடுத்துரைத்து உள்ளேன். இன்று தமிழகம் கண்டுவரும் ஒப்பற்ற வளர்ச்சி யின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்ற டையச் செய்யவும், நலிவுற் றோர் நலம் பேணவும், ஜன நாயக ஒளி பரவிடவும், மத நல்லிணக்கம் வலுப்பெறவும், சமூகநீதியை நிலை நாட்டவும் மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தலை மையிலயான இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. இவை யாவும் செவ்வனே நிறைவேற, நீங்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பை நல்குவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் என் உரையை நிறைவு செய்கிறேன்.

– இவ்வாறு ஆளுநர் உரை யாற்றினார்

Posted in Agriculture, Barnala, Budget, DMK, Economy, Electricity, EVR, Farming, Finance, Governor, Govt, Housing, Industry, MK, Periyar, Planning, Power, priority, Schemes, SEZ, TN, Viduthalai, Water | Leave a Comment »

Farmer suicides – Turning risk into an opportunity: Case study of a Agriculture Success Story

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

முகங்கள்: பத்து லட்சம் கடன்… முப்பது லட்சம் வட்டி!

ந.ஜீவா

“கடன் பெற்றார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பது கம்பராமாயண வரிகள். ஆனால் கடன் பெற்றவர்கள் கலங்கினால் அது தற்கொலையில்தான் முடியும். நாடெங்கும் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. அதற்கு முக்கியக் காரணம், கடன்… வட்டி… விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமை அல்லது தண்ணீர்ப் பஞ்சம், பூச்சிகளினால் விவசாயம் பாதிக்கப்படல் இன்னும் பல.

ஆனால் கோவை ஏ.ஜி.புதூரைச் சேர்ந்த சுப்பையன் என்கிற விவசாயி கலங்கவில்லை. வட்டியும் கடனுமான நாற்பது லட்சம் ரூபாயைத் தனது கலங்காத மன உறுதியாலும் தெளிவாகத் திட்டமிடும் திறனாலும் கடுமையான உழைப்பாலும் திருப்பி அடைத்து வெற்றிகரமாக கடன் தொல்லையில் இருந்து மீண்டிருக்கிறார். அவரிடம் பேசினோம்…

நாற்பது லட்சம் ரூபாய் கடன் எப்படி ஆனது?

நான் நான்கு வருடத்துக்கு முன் கோவையில் இருந்து மைசூர் அருகே உள்ள குண்டன்பேட்டைக்குப் போய் 35 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பண்ணினேன். அதற்காக எங்கள் பகுதியில் உள்ளவர்களிடம் நான்கு வட்டிக்கும் மூன்று வட்டிக்குமாகப் பத்து லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். நானும் இன்னும் நான்கு பேரும் சேர்ந்து மைசூர்-குண்டன்பேட்டைக்குப் போனோம். அங்கே போய் வெங்காயம், கனகாம்பரம், கரும்பு, மஞ்சள் எல்லாம் பயிர் செய்தோம். ஆனால் நாங்கள் விவசாயம் பண்ணின நேரம் உற்பத்தி பண்ணின பொருள்களெல்லாம் விலை குறைந்துபோனது. பத்துலட்சம் வாங்கின கடன் இரண்டு வருடத்துக்குள்ளே வட்டியெல்லாம் சேர்த்து நாற்பது லட்சம் ரூபாய் ஆகிவிட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் ஊருக்குத் திரும்பி வந்துவிட்டேன்.

திரும்பி வந்து என்ன செய்தீர்கள்?

இங்கே எனக்குப் பத்து ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விவசாயம் செய்ய முடியவில்லை. நிலத்தடி நீர் விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாத அளவுக்குக் கெட்டுப் போயிருந்தது. நொய்யல் ஆற்று நீரில் கோயம்புத்தூர் நகர்க் கழிவு எல்லாம் கலந்ததால் அது ஓடுகிற எங்கள் பகுதியில் நிலத்தடி நீரும் உப்பாகப் போய்விட்டது. செடி வளர்க்க இந்தத் தண்ணீர் ஆரோக்கியம் இல்லை.

இந்தக் கெட்டுப் போன தண்ணீரை வைத்துக் கொண்டு எப்படி விவசாயம் பண்ணுவது? என்ன விவசாயம் பண்ணுவது? கடனையெல்லாம் எப்படி அடைப்பது? யோசனை பண்ணிப் பார்த்தேன்.

எங்கள் பகுதிக்குத் தோட்டக்கலைத்துறை, விரிவாக்கத்துறை அதிகாரிகள் எல்லாரும் வருவார்கள். வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் சி.ராமசாமி அடிக்கடி வருவார். அவர்களிடம் கேட்டதில் எங்கள் பகுதியில் நெல், கரும்பு போன்றதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது என்று தெரிய வந்தது. வேறு எந்த வேளாண்மை பண்ண வேண்டும் என்று யோசித்து கீரை விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். இந்தத் தண்ணீருக்குக் கீரை நன்றாக வரும். குதிரை மசால் நன்றாக வரும். தென்னை நன்றாக வரும்.

அரைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, சிறுகீரை என விவசாயம் செய்தேன். இதில் 30 சதம் செலவு ஆகும். 70 சதம் லாபம் வரும்.

குதிரை மசால் என்பது கால்நடைகளுக்கானத் தீனி. இது தவிர கறிவேப்பிலை இரண்டரை ஏக்கரில் விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். எனது 10 ஏக்கர் நிலம் தவிர மேலும் 20 ஏக்கர் நிலத்தைக் குத்தகை எடுத்தேன். 12.5 எச்பி மோட்டார் போட்டு கிணற்றில் தண்ணீர் எடுத்து விவசாயம் பண்ணினேன். கிணற்று தண்ணீர் நாளொன்றுக்கு 3 ஏக்கர் நிலத்திற்குப் பாயும்.

எங்கள் விவசாயத்தில் அதிக அளவு ரசாயன உரங்கள் போடுவதில்லை. மண்புழு உரம், மாட்டுச்சாணம் போடுவோம். கோயம்புத்தூரில் ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் பகுதியில் நிறைய மாடுகள் வளர்க்கிறார்கள். அதனால் மாட்டுச் சாணிக்கென்று நாங்கள் அலைய வேண்டியதில்லை.

விவசாயம் செய்து விளைவித்த பொருள்களை எங்கே விற்பனை செய்கிறீர்கள்?

கீரை ஒரு நாளைக்கு 5000 கட்டிலிருந்து 10000 கட்டு வரை விற்பனையாகும். ஒரு நாளைக்கு சுமார் பத்தாயிரம் ரூபாய்க்கு கீரை விற்பனையாகும். கறிவேப்பிலை ரூ.1500 க்கு விற்பனையாகும். கடைகளுக்கு வாடிக்கையாக கறிவேப்பிலையைக் கொடுத்துவிடுவோம். கிலோ ரூ.10 இலிருந்து ரூ.15 வரை போகும். குதிரைமசால் 400 கிராம் கட்டு சுமார் 3000 கட்டுவரை விற்பனையாகும்.

காலையிலே எங்கள் காட்டுக்குள்ளிருந்து இந்தப் பொருள்களை ஏற்றிக் கொண்டு வண்டிகள் வெளியே போகும். எத்தனை வண்டி எவ்வளவு பொருள் என்பதையெல்லாம் கணக்கு வைத்துக் கொள்வார்கள்.

கால்நடைத் தீவனமாக நாங்கள் விவசாயம் செய்யும் குதிரை மசாலை சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் பகுதியில் மாடு வளர்ப்பவர்களே வாங்கிக் கொள்வார்கள்.

காலையில் டெம்போவில் குதிரை மசாலை ஏற்றிக் கொண்டு கிளம்புவோம். சிட்டி பஸ் குறித்த நேரத்தில் எந்த ஸ்டாப்பில் எந்த நேரத்தில் நிற்குமோ அதைப் போல இந்த டெம்போ ஒவ்வொரு பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிற்கும். அந்தப் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்கள் அங்கு வந்து வாங்கிக் கொள்வார்கள்.

கோயம்புத்தூரில் உள்ள வாடிக்கையாளர்கள் தவிர கொடைக்கானலிலும் எங்கள் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அங்கே உள்ள ஒரு கால்நடைப் பண்ணையில் 67 மாடுகள் வைத்திருக்கிறார்கள். 10 ரேஸ் குதிரைகள் வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய கால்நடைகளுக்குத் தேவையான தீவனத்திற்காக எங்களிடம் ரெகுலராக குதிரை மசால் வாங்குகிறார்கள்.

இவ்வளவு வேலைகளையும் செய்ய வேண்டுமென்றால் ஆட்களை வேலைக்கு வைக்க வேண்டுமே?

எங்களிடம் முதலில் 40 பேர் வேலை பார்த்தார்கள். இப்போது 20 பேர் பார்க்கிறார்கள். வேலைக்கு ஆள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. இத்தனைக்கும் பெண்களே ஒரு நாளைக்கு ரூ.140 வரை சம்பளம் வாங்குகிறார்கள்.

எங்களிடம் வேலை செய்பவர்களை நாங்கள் மரியாதையாக நடத்துகிறோம். வாடா, போடா என்றெல்லாம் பேசுவது கிடையாது. அவர்கள் எல்லாரும் ரொம்பவும் விசுவாசமான ஆட்கள்.

வழக்கமாகப் பயிர் செய்யும் நெல், கரும்பு, வாழை போன்றவற்றைப் பயிர்செய்யாமல் இப்படிக் கீரைகளை விவசாயம் பண்ண வேண்டும் என்று எப்படித் தோன்றியது?

நான் விவசாயத்துக்கு முதன்முதல் வந்த போது எங்கள் ஏரியாவில் பருத்திதான் அதிகம் போடுவார்கள். நான்தான் முதன் முதலில் கனகாம்பரம் துணிந்து பயிர் செய்தேன். எதையும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். எங்கள் பகுதியில் நெல், கரும்பு போன்றவை விளைவிக்க நல்ல தண்ணீர் இல்லாததும் ஒரு காரணம்.

நமது அண்டை மாநிலமான ஆந்திரா, வடமாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்களே?

இந்தியாவில் விவசாயிகள் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகப் பேப்பரில் படிக்கிறோம். எனக்கு மாதிரி அவர்களுக்கு 10 ஏக்கர் நிலம் இருந்திருந்தால் ஒருவேளை என்னைப் போலவே அவர்களும் கடினமாக உழைத்துக் கடனை அடைத்திருப்பார்களோ, என்னவோ. எல்லாருக்கும் எனக்கு போலவே வாய்ப்புக் கிடைக்க வேண்டுமே.

இப்போது மார்க்கெட் வசதி அபாரமாக இருக்கிறது. அரசாங்கம் நிறையக் கடன் கொடுக்கலாம். கந்துவட்டியை ஒழிக்கச் சட்டம் போட்டிருந்தாலும் நாடு முழுக்க கந்துவட்டி இருக்கிறது. அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுத்தால் கந்துவட்டியை ஒழிக்கலாம். பத்துலட்சம் வாங்கின கடனுக்கு முப்பது லட்சம் வட்டி கட்டணும் என்றால் விவசாயி தற்கொலை பண்ணிக் கொள்ளாமல் என்ன செய்வான்?

Posted in Agriculture, Analysis, Banking, Banks, Case study, deaths, Economy, Faces, Farmers, Farming, Farmlands, Finance, Foodgrains, Forests, Fruits, Greens, harvest, horticulture, Incidents, Interview, Life, Loans, markets, Opportunity, Paddy, people, Persons, Prices, Real, rice, Risk, Saline, Salt, success, Suicides, Trees, Turnaround, Vegetables, Vidharaba, Vidharaba Jan Andolan Samithi, Vidharabha, Vidharba, Vidharba Jana Andolan, Vidharbha, Vidhrabha, Vitharabha, Vitharba, Vitharbha, Waste, Water, Wheat | 2 Comments »

Water supply & distribution in Tamil Nadu – Inter-state relations, Dam Construction, Rivers

Posted by Snapjudge மேல் திசெம்பர் 10, 2007

மூன்று பக்கமும் துரோகம்; ஒரு பக்கம் கடல்!

கே. மனோகரன்

தமிழகம்போல இன்று தண்ணீருக்காகத் தவித்து நிற்கும் மாநிலம் இந்தியாவில் வேறொன்று இருக்க முடியாது.

கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களும் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகின்றன. நமக்குப் பரந்து விரிந்து கிடக்கும் ஒரே நீர்ஆதாரம் கடல்தான். தாகத்துக்கு கடல்நீரைக் காய்ச்சிக் குடிக்கலாம். ஆனால் விவசாயம் செய்ய முடியுமா?

தண்ணீருக்காக கர்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களுடன் மல்லு கட்டுவதற்கே ஆண்டுகளை இழந்ததுடன், இருக்கும் ஏரி குளங்களையும் நாம் பாழாக்கி இழந்து வருகிறோம்.

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கியது பூண்டி நீர்த்தேக்கம். குசஸ்தலை ஆற்றிலிருந்துதான் இந்த நீர்த்தேக்கத்துக்குத் தண்ணீர் வரவேண்டும். இந்த ஆறு பள்ளிப்பட்டில் இருந்து ஆந்திர மாநில எல்லையில் 12 கி.மீ. தூரத்தில் தொடங்குகிறது.

அங்குள்ள அம்மபள்ளி என்ற இடத்தில் 1975-ம் ஆண்டு தொடங்கி 1982-ம் ஆண்டு வரை இருமலைகளையும் இணைத்து அணை கட்டும் பணி நடந்தது. ஆனால் இப்படி ஓர் அணை கட்டப்படுவதுகூட தெரியாமல் தமிழக அரசு அமைதியாக இருந்தது. அதன் பிறகு குசஸ்தலை ஆறு தமிழகத்துக்குத் தண்ணீர் தரவில்லை. தலைவலி தந்தது. வறண்டுபோனது பூண்டி நீர்த்தேக்கம்.

குசஸ்தலை ஆறு தடைபட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயம் குறித்து தமிழக அரசு கவலைப்படவில்லை. சென்னை நகரின் குடிநீர் தேவையைப் பற்றித்தான் கவலைப்பட்டது. ஆந்திர அரசுடன் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் செய்துகொண்டது. இதில் பல கோடிகளை தமிழக அரசிடம் பங்குத்தொகையாகப் பெற்ற ஆந்திர அரசு, அந்த நிதியில் சித்தூர், கடப்பா போன்ற வறட்சியான மாவட்டங்களில் ஏற்கெனவே உள்ள ஏரிகளைப் புனரமைத்தும், மிகப்பெரிய ஏரியான பிச்சாட்டூர் ஏரியை சீரமைத்தும், புதிய நீர்த்தேக்கங்களையும் கட்டி கால்வாய்கள் மூலம் இணைத்து தன்னை வளப்படுத்திக் கொண்டது.

சென்னைக்கு தண்ணீர் தருவதாகச் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் “ஜீரோ பாய்ண்ட்’ எனப்பட்ட கண்டலேறு வரை தண்ணீர் வந்ததே தவிர சென்னைக்கு வரவில்லை. இதனால் தவிர்க்க முடியாமல் புதிய வீராணம் திட்டத்தை தமிழகம் செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேபோல் பாலாற்றுக்கு முதல் பாதிப்பை ஏற்படுத்தியது கோலார் மாவட்டத்தில் உள்ள பேத்தமங்கலா நீர்த்தேக்கம். கர்நாடகம் படிப்படியாக அதன் கொள்ளளவையும் அதிகரித்துக் கொண்டே சென்றதால் பாலாற்றின் நீர்வரத்து குறைந்து போனது.

கர்நாடகத்துக்கும், தமிழக எல்லைக்கும் இடையில் பாலாற்றுக்கு வரும் உபநதிகளான மல்லிநாயக்கனஹள்ளி ஆறு, பெட்மடு ஆறு ஆகியவற்றின் குறுக்கே தலா 4 ஏரிகளை ஆந்திர அரசு கட்டிவிட்டது. இதேபோல் தமிழக எல்லையின் 3 கி.மீ. தூரத்தில் 2000-ம் ஆண்டில் பாலாற்றின் உப நதியான மண்ணாற்றின் குறுக்கே பெரியபள்ளம் என்ற இடத்தில் ரூ. 65 லட்சத்திலும், அதே நேரத்தில் எல்லையின் சில நூறு அடிகள் தூரத்தில் பிரம்மதேவர் கொல்லை என்ற லட்சுமிபுரத்தில் ரூ. 1.20 கோடியில் இருமலைகளை இணைத்து ஆந்திர அரசு அணைகளை கட்டியது.

இவற்றுக்கு எவ்வித எதிர்ப்பும் தமிழக அரசு தெரிவிக்காமல் இருந்ததன் விளைவுதான் தற்போது குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே பெரிய அளவிலான அணை கட்டுவதற்கு ஆந்திர அரசுக்கு தைரியத்தைக் கொடுத்துள்ளது.

ஆனால் தமிழக அரசு புதிய அணைத் திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என்று விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலங்களில் காவிரி வடிகாலில் கிடைக்கும் கூடுதல் நீர் சராசரியாக 30 டி.எம்.சி. கடலில் வீணாகக் கலக்கிறது. இந்த தண்ணீரில் மட்டுமே 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யலாம்.

ஆளியாறு மூலம் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரையே கொடுக்காத கேரளம், முல்லைப் பெரியாறு அணையில் முரண்டு பண்ணிக்கொண்டு வருகிறது. சிறுவாணி அணைக்கு வரும் நீரின் அளவு குறையும் வகையில், அதன் துணைநதிகளை தனியார் குடிநீர் ஆலைகளுக்கு தாரை வார்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது கேரளம்.

காவிரியை தமிழகத்தின் வாய்க்கால் போலக் கருதி, மிகைநீரை மட்டுமே வழங்குகிற திட்டத்தை கர்நாடகம் எப்போதோ தொடங்கி நடத்திக்கொண்டிருக்கிறது.

தமிழகத்துக்கான நீர் ஆதாரங்கள் அனைத்தையும் இந்த மூன்று மாநிலங்களும் மறித்துக் கொண்டு வருகின்றன.

இழந்த தண்ணீரைப் பெற முடியாவிட்டாலும், கிடைக்கும் நீரையாவது உருப்படியாகப் பயன்படுத்தவும், பாதுகாக்கவும் அரசு முன்வர வேண்டும். இல்லையேல், தமிழர்களின் கண்ணீரால் கடல் நீர் மேலும் கரிக்கும்.

————————————————————————————————————————–
பாலாற்றில் விளையாடும் அரசியல்!

ஆர். ராமலிங்கம்
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு விரைவில் அணை கட்டத் தொடங்கும் என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உறுதிபட கூறியுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், குப்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சந்திரபாபு நாயுடுவின் செல்வாக்கைக் குறைக்கும் முயற்சிகளில் ஒன்றாக பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது.

அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றிய விவரம் கண்ணுக்கெட்டியதூரம் வரை தெரியவில்லை. தமிழக முதல்வரும் இவ்விஷயத்தில் நம்பிக்கையூட்டும் தகவலை இதுவரை தெரிவிக்கவில்லை.

இதை எதிர்க்கட்சிகள் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, பாலாறு விவகாரத்தில் ஆளும் திமுக அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது என்ற ரீதியில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சியைத் தவிர பிற தோழமைக் கட்சிகளும் இதற்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றன.

கர்நாடக மாநிலம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு அந்த மாநிலத்தில் 40 கி.மீ. தூரமும் ஆந்திரத்தில் 31 கி.மீ. தூரமும், தமிழகத்தில் 222 கி.மீ. தூரமும் பயணிக்கிறது.

கடந்த பத்தாண்டுகளாக, அவ்வப்போது பெய்யும் கனமழைதான் தமிழக பகுதியில் உள்ள பாலாற்றுப் படுகையை ஈரப்படுத்தி வருகிறது. 30 ஆண்டுகளில் 6 முறை மட்டுமே பாலாற்றில் நீர்வரத்து இருந்துள்ளது.

பாலாற்றின் குறுக்கே கர்நாடக அரசு பேத்தமங்கலத்தில் அணை கட்டியுள்ளது. அந்த மாநிலம் வெளியேற்றும் உபரி நீரை 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டி ஆந்திர அரசு நீர்நிலைகளை நிரப்பி வருகிறது.

மழைக் காலங்களில் அதிர்ஷ்டவசமாக ஆந்திர எல்லையில் இருந்து ஒருசில தினங்கள் வரும் நீருக்கும் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. கணேசபுரம் என்ற இடத்தில் ஆந்திர அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதனால் பாலாறு பொய்த்துவிடுமே என தமிழகத்தின் வடமாவட்ட மக்களின் அச்சப்படுகின்றனர்.

தற்போது மணல் சுரண்டல், நீர்வளம் பறிபோதல், தோல் தொழிற்சாலைகளும் உள்ளாட்சி அமைப்புகளும் கழிவுநீரை வெளியேற்றுவதால் படுகை மாசுபடுதல் போன்ற மும்முனைத் தாக்குதலில் தமிழக பாலாற்றுப் பகுதி சிக்கியுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியில் 1892-ல் தமிழகத்தில் பாயும் 12 ஆறுகளுக்கு நதிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன. அவற்றில் பாலாறும் இடம் பெற்றுள்ளது.

அன்றைய மைசூர் மற்றும் மதராஸ் அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த ஒப்பந்தங்கள் 1952 வரை அமலில் இருந்தது. அன்றைக்கு சித்தூர் மாவட்டம், சென்னை மாகாணத்தில் இடம்பெற்றிருந்தது.

மொழிவாரி மாநிலங்கள் உருவானபோது சித்தூர் மாவட்டம் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் பாலாற்று நீர்வளத்தில் ஆந்திர மாநிலத்துக்கும் பங்களிக்கும் நிலை ஏற்பட்டது.

இருப்பினும் 1892 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பாரம்பரிய உரிமை அடிப்படையில்தான் இன்றைக்கு தமிழகம் பாலாற்று பிரச்னையை அணுக வேண்டியுள்ளது.

இரு மாநில எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாலாற்று பிரச்னை பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

இதில் பங்கம் ஏற்படாமல் இருப்பதற்கு, காவிரி நீர் பங்கீட்டை போன்று பாலாற்று நீரில் தனக்குள்ள பங்கீட்டு உரிமையை தமிழகம் நிலைநாட்டுவது ஒன்றே தீர்வாக அமையும்.

நதிநீர் பங்கீடு உரிமையை நிலைநாட்டுவதன் மூலம் பாலாற்று நீர்வரத்தில் 60 சதவீதத்தை தமிழகம் பெற வாய்ப்பு உள்ளது என்கின்றனர் விவசாயிகள்.

தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட, மத்திய அரசு 1956-ல் கொண்டு வந்த நதிநீர் வாரியச் சட்டத்தை பயன்படுத்த முடியும். தமிழக அரசு மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி இச்சட்டத்துக்கு உயிரூட்டலாம்.

மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்னை எழுந்தால் இச்சட்டத்தின்படி மத்திய அரசு ஒரு வாரியத்தை ஏற்படுத்த முடியும்.

அதன் மூலம் மாநிலங்களுக்கிடையே உள்ள நீர் பங்கீடு தொடர்பான பிரச்னைகளுக்கு தக்க அறிவுரையை வழங்க முடியும். புதிதாக நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ஒன்றையும் மாநிலங்களுக்கிடையே ஏற்படுத்த முடியும்.

தமிழக அரசியல் கட்சிகளிடையே மக்களின் பொதுப் பிரச்னைகளில் கூட ஒற்றுமையின்மை நிலவுவது உலகறிந்த உண்மை. இது அண்டை மாநிலங்களுக்கு பலமாக அமைந்துள்ளது.

பாலாறு விஷயத்தில் திமுக அரசும், எதிர்கட்சிகளும் ஒன்றையொன்று குறைகூறி அரசியலாக்குவதைத் தவிர்த்து ஒருங்கிணைந்த செயல்பாட்டில் இறங்கினால் மட்டுமே நதிநீர் பங்கீட்டில் அண்டை மாநிலங்களின் அடாவடித்தனத்தைத் தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

நதிநீர் பிரச்னைகளில் தமிழகம் இக்கட்டான சூழலை நோக்கி நகர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி உறுதியான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

இதன் மூலம் பாலாற்று பிரச்னையில் மத்திய அரசும், நீதிமன்றமும் தலையிடுவதற்கான நெருக்கடியை தமிழகத்தால் ஏற்படுத்த முடியும்.

ஆர்ப்பாட்ட அரசியலைக் காட்டிலும், ஆரோக்கிய அரசியலே ஆபத்தைத் தடுக்க முடியும். தமிழக அரசியல் தலைவர்கள் சிந்திப்பார்களா?

—————————————————————————————————————–
மக்கள் திரள் போராட்டம்-காலத்தின் கட்டாயம்

பழ. நெடுமாறன்


தமிழ்நாட்டில் ஏரி, குளம், ஆறுகளுக்குப் பஞ்சம் இல்லை. காடுகள் அடர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் உண்டு. தென்மேற்குப் பருவ மழை, வட கிழக்குப் பருவ மழை ஆகிய இரு பருவ மழைகள் ஒருபோதும் பொய்த்ததில்லை. முப்புறம் கடலும் உள்நாட்டில் ஏராளமான கனிம வளங்களும் உள்ளன. உழைப்பதற்குச் சலிக்காத மக்களும் உண்டு. அறிவாற்றலுக்குப் பஞ்சமில்லை. இத்தனை வளங்களும் நிறைந்திருந்த தமிழ்நாடு இன்றைக்கு என்னவாகியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் வேதனையும் விரக்தியுமே மிஞ்சுகின்றன.

நீரில்லா ஆறுகள்

தமிழ்நாடு எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி மீள முடியாதபடி தவிக்கிறது. காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளை மதிப்பதற்கு கர்நாடகமும் கேரளமும் பிடிவாதமாக மறுக்கின்றன. பாலாற்றில் தமிழகத்திற்கு வரும் தண்ணீரைத் தடுக்கும் வகையில் ஆந்திரம் தனது எல்லைக்குள் அணை கட்ட முற்பட்டுள்ளது.

இந்த மூன்று ஆறுகளின் மூலம் தமிழ்நாட்டில் இருபது மாவட்டங்கள் பயன் அடைந்து வந்தன. ஆனால் இப்போது இந்த மாவட்டங்கள் பாசனத்திற்குரிய நீரை இழந்து வறண்ட பகுதிகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் மூன்றில் இரண்டு பங்கு மாவட்டங்கள் வறண்ட பகுதிகளாக மாறினால் உணவுக்காக பிற மாநிலங்களிடம் தமிழகம் கையேந்தி நிற்கக்கூடிய நிலைமை உருவாகிவிடும்.

விவசாயத்திற்கும் குடிப்பதற்கும் போதுமான நீரில்லாமல் நாம் தவிக்கும்போது, ஆறுகளிலும் நிலத்தடியிலும் எஞ்சியுள்ள சிறிதளவு நீரையும் உறிஞ்சி எடுத்து விற்பனைப் பொருளாக “கோகோ கோலா’, “பெப்சி’ போன்ற அன்னிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் அவலமும் நடைபெறுகிறது.

நகர்ப்புற மக்கள் அன்றாடப் பயன்பாட்டிற்கே குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயச் சூழலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

மணல் கொள்ளை

அண்டை மாநிலங்களின் வஞ்சனையால் வறண்டுவிட்ட இந்த ஆறுகளிலிருந்து மணல் மிக எளிதாகக் கொள்ளை அடிக்கப்படுகிறது. எந்த மாநிலங்கள் நமக்குத் தண்ணீர் தர மறுக்கின்றனவோ அதே கேரள மாநிலத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் லாரிலாரியாகத் தமிழக ஆற்று மணல் கொண்டு செல்லப்படுகிறது. மணல் கொள்ளை அடிப்பதற்கு வசதியாக இந்த ஆறுகளில் நீரோட்டம் இல்லாமல் அண்டை மாநிலங்கள் செய்து விட்டனவோ என்றுகூட சந்தேகம் எழுகிறது. இந்த ஆறுகள் வறண்டு போவதைப் பற்றிக் கொஞ்சமும் கவலை இல்லாமல் தமிழக அரசு இருப்பதற்கு இந்த மணல் கொள்ளையில் ஈடுபட்டிருப்பவர்கள் சென்ற ஆட்சியிலும் சரி, இந்த ஆட்சியிலும் சரி ஆளும் கட்சியினரே என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தமிழகத்தின் மற்ற ஆறுகளிலும் ஓடைகளிலும் மணல் அடியோடு சுரண்டப்படுகிறது. இந்த நிலைமை தொடருமானால் எதிர்காலத்தில் தமிழக ஆறுகளின் இரு பக்கமும் உள்ள கிணறுகளும் நீரூற்றுகளும் வறண்டு போய் மக்கள் குடிநீருக்காக அவதிப்படும் நிலை உருவாகிவிடும். மேலும் இந்த ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள், பாலங்கள் ஆகியவை மணல் கொள்ளையின் விளைவாக பலவீனம் அடைந்து இடியும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. அண்மையில் சென்னைக்கு அருகே காரனோடை பாலம் இடிந்து விழுந்ததற்கு மணல் கொள்ளையே காரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறையும் ஏரிகள்

ஆறுகளின் கதி இதுதான் என்றால் தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி சுருங்கி வருகின்றன. பல ஏரிகள் உண்மையிலேயே காணாமல் போய்விட்டன. தமிழ்நாட்டில் சிறியதும் பெரியதுமான 39 ஆயிரம் ஏரிகள் உள்ளன. தமிழக நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதிக்கு இந்த ஏரிகள் பாசன வசதி அளித்து வந்தன. இவற்றின் மூலம் பத்து லட்சம் ஹெக்டேர்கள் பயன் பெற்றன.

1980-ஆம் ஆண்டில் இந்த ஏரிகளின் பாசன வசதிகளை நவீனமயப்படுத்துவதன் மூலம் மேலும் 54 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பயன் பெறும் என மதிப்பிடப்பட்டது. இத்திட்டத்திற்கு சுமார் ரூ. 200 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டபோது அந்தத் தொகையை ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பு தருவதாக ஒப்புக்கொண்டு இதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. 27 ஆண்டுகள் கழிந்த பிறகும் இந்த வேலைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இது ஏன் என்பதை ஆராய்ந்தால் திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்.

தமிழ்நாட்டில் 100 ஏக்கருக்கு மேல் பரப்பளவுள்ள ஏரிகளைப் பொதுப்பணித்துறையும் அதற்குக் குறைவாக உள்ள ஏரிகளை ஊராட்சி ஒன்றியங்களும் நிர்வகித்து வருகின்றன. இவை தவிர அணை நீரைப் பெற்று பாசனம் செய்யும் 100 ஏக்கருக்கும் குறைவான சில ஏரிகளையும் பொதுப்பணித்துறை நிர்வகிக்கிறது. பொதுப்பணித்துறையின் கீழ் 12 ஆயிரம் ஏரிகளும் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 27 ஆயிரம் ஏரிகளும் உள்ளன.

கடந்த நாற்பதாண்டுகளில் இந்த ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. ஏரிகளில் மட்டுமல்ல; ஏரிகளுக்கு மழை நீரைக் கொண்டு வரும் பகுதிகளும் ஏரியிலிருந்து நீரை நிலங்களுக்குக் கொண்டு செல்லும் கால்வாய்களும்கூட ஆக்கிரமிப்பிலிருந்து தப்பவில்லை. இதன் காரணமாக பல ஏரிகள் முற்றிலுமாக காணாமல் போய்விட்டன. தனி நபர்கள் ஆக்கிரமித்த ஏரிகளை விட அரசுத் தரப்பில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகள் இன்னும் அதிகமாகும். நீதிமன்ற அலுவலகங்கள், அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைகள், தாலுகா அலுவலகங்கள், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் வளாகங்கள், வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள், சமுதாயக் கூடங்கள், நூலகங்கள், பேருந்து நிலையங்கள் என அரசின் பல்வேறு துறை சார்ந்த கட்டடங்கள் ஏரிகளுக்குள்ளாகவே கட்டப்பட்டுள்ளன.

ஏரிகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. ஆனால் அந்த உயர் நீதிமன்றத்தின் கட்டடமே உலகநேரி கண்மாயில் கட்டப்பட்டுள்ளது என்பது வேதனையான உண்மை.

ஊராட்சி ஒன்றியங்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்த 27 ஆயிரம் கண்மாய்களில் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றின் எல்லைகள் சுருங்கி அழிந்து வரும் அபாயம் உள்ளது. ஏரிகளிலும் கண்மாய்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றிச் சீரமைக்கவும் அதன் நீர் வழி எல்லைகளை வகுக்கவும் அண்மையில் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆனால் இந்தச் சட்டம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளது. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை ஆக்கிரமித்திருப்பவர்களை வெளியேற்றும் அதிகாரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கோ அல்லது ஊராட்சித் தலைவர்களுக்கோ இல்லை.

ஆக்கிரமிப்புகள் திடீரென்று ஓரிரு நாள்களில் நடைபெற்றுவிடவில்லை. ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் கையூட்டுப் பெற்றுக் கொண்டோ அல்லது அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு அஞ்சியோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு கடமை தவறிய இந்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து உயர் நீதிமன்ற ஆணையில் எதுவும் கூறப்படவில்லை என்பது திடுக்கிட வைக்கும் உண்மையாகும்.

காடுகள் அழிப்பு

1967-ஆம் ஆண்டுக்கு முன், தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் காடுகள் 23 விழுக்காடாக இருந்தது. இப்போது தமிழகக் காடுகளின் பரப்பளவு என்பது 17 விழுக்காடாகும். 6 விழுக்காட்டிற்கு மேற்பட்ட காடுகள் வெட்டப்பட்டுவிட்டன. காடுகளில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்படுகின்றன. இவற்றைக் கண்காணிக்க வேண்டிய வனத்துறை அதிகாரிகளின் ஊழலால் இது நடைபெறுகிறது. அரசியல்வாதிகளின் ஒப்புதல் இல்லாமல் இது நடைபெறாது. இதன் விளைவாக பருவ மழை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது. மலையின் அடர்ந்த காட்டில் உற்பத்தியாகும் ஆறுகள் வற்றத் தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் கடற்கரை 1000 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்ளது. பல இடங்களில் கரையோரமாக அலையாற்றுக் காடுகள் இருந்தன. தென் மாவட்டங்களில் கடற்கரை நெடுகிலும் தேரிகள் என அழைக்கப்படும் மணற்குன்றுகள் இயற்கையாக அமைந்திருந்தன. ஆனால் இந்தக் காடுகளையும் மரம் வெட்டுபவர்கள் விட்டு வைக்கவில்லை. மணற்குன்றுகளையும் சிதைத்து விட்டார்கள். இதன் விளைவாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சுனாமி அலைகள் வீசியபோது அவற்றைத் தடுக்கும் அலையாற்றுக் காடுகளும் தேரிகளும் இல்லாததன் விளைவாக பேரழிவு ஏற்பட்டது.

மோதல் சாவுகள்

காவல்துறை மக்களை வேட்டையாடும் துறையாக மாறிவிட்டது. ஆளும் கட்சியினரின் ஏவல்படையாக காவல்துறை மாற்றப்பட்டு நீண்ட நாள்களாகிவிட்டது. ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள் மறுக்கப்படுகின்றன. ஊடகங்களுக்கு எதிரான பல்வேறு வகையான அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன.

சொல்லாமலேயே மற்றொரு பெரும் கொடுமை தமிழகத்தில் தங்குதடையின்றி அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியிலும் தி.மு.க. ஆட்சியிலும் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் மோதல் சாவுகள் என்ற பெயரில் காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் சமூக விரோதிகள் எனக் குற்றம்சாட்டி இந்தக் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்க காவல்துறை முயல்கிறது. அது உண்மை என்று வைத்துக்கொண்டால் கூட, குற்றம் சாட்டப்பட்டவர்களை முறையாக நீதிமன்றத்தில் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தண்டனை வழங்கும் அதிகாரத்தையும் நீதிமன்றங்களிடமிருந்து காவல்துறை, தானே பறித்துக் கொண்டது. இந்தக் குற்றவாளிகளை உருவாக்கி வளர்த்துவிட்டதில் அரசியல் கட்சிகளுக்குப் பெரும் பொறுப்பு உண்டு. அதில் சமபங்கு காவல் துறைக்கும் உண்டு.

தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம், கந்து வட்டி, கட்டைப் பஞ்சாயத்து ஆகியவற்றின் மூலம் ஏழை எளிய மக்களும் நடுத்தர மக்களும் ஆட்டிப் படைக்கப்படுகிறார்கள் – சுரண்டப்படுகிறார்கள். அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம், சமூகவிரோதிகள் ஆகிய முத்தரப்பு கூட்டு உருவாகி மேற்குறிப்பிடப்பட்ட மூன்று அக்கிரமங்களையும் தங்குதடையின்றி நடத்துகிறது.

மீறப்படும் சட்டமன்ற மரபுகள்

சட்டமன்றத்தில் இந்த அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வருபவர்கள் பேச முடியாதபடி தடுக்கப்படுகின்றனர். வெவ்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லி அரசுக்கு எதிராக யாரும் எதுவும் கூறிவிடாதபடி தடுக்க முயற்சி வெளிப்படையாகவே நடத்தப்படுகிறது.

ஆளும் கட்சிதான் இவ்வாறு சட்டமன்ற மரபுகளைத் துச்சமாகக் கருதி மதிக்காமல் போனால் முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அவ்வாறே நடந்து கொள்கிறது. எதிர்க்கட்சித் தலைவியான ஜெயலலிதா சட்டமன்றத்திற்கு பெரும்பாலும் வருவதே கிடையாது. வெளியே இருந்து கொண்டு ஆளும் கட்சியை விமர்சனம் செய்து அறிக்கை வெளியிடுவதோடு தன் ஜனநாயகக் கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறார். அவர் முதலமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு. கருணாநிதியும் சட்டமன்றக் கூட்டத்தை அறவே புறக்கணித்தார். முதலமைச்சராக இருந்தால்தான் சட்டமன்றத்திற்கு வருவது. இல்லையேல் வருவது தங்கள் கௌரவத்திற்கு இழுக்கு என்று இருவருமே கருதுகிறார்கள். சட்டமன்ற ஜனநாயகத்தை உண்மையிலேயே இவர்கள் மதிப்பவர்களாக இருந்தால் சட்டமன்ற கூட்டங்களில் தவறாது கலந்துகொள்ள வேண்டும். முடியவில்லை என்றால் தங்கள் பதவியை விட்டு விலகி வெளியேற வேண்டும்.

மக்கள் போராட்டம்

சட்டமன்ற மரபுகள் துச்சமாக மதிக்கப்பட்டு மக்கள் பிரச்னைகள் பற்றி அங்கே பேச முடியாத நிலைமையில் வெளியில் மக்கள் போராட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. மத்திய – மாநில அரசுகளின் ஜனநாயக விரோதப் போக்குகளையும் ஒடுக்குமுறைகளையும் சர்வாதிகார சட்டங்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் முன் எப்போதும் இல்லாதவகையில் இப்போது எழுந்துள்ளது.

பதவிகளைக் காப்பாற்றுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தேர்தலுக்குத் தேர்தல் கொள்கையற்ற கூட்டணிகளை அமைத்துக்கொள்ளும் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

தமிழக அரசியல் சீர்கேடுகளை எதிர்த்தும் மக்கள் விரோதப் போக்குகளைக் கண்டித்தும் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் மக்கள் திரண்டு எழுந்து போராட முன்வர வேண்டும். அந்தந்த ஊரில் இந்த அநீதிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து போராடினால், எத்தகைய அடக்குமுறையாலும் அப்போராட்டத்தை ஒடுக்க முடியாது.

1965ஆம் ஆண்டில் இந்தி திணிப்புக்கு எதிராகத் தமிழக மாணவர்கள் ஒன்றுபட்டு நடத்திய போராட்டம் வரலாறு காணாத மக்கள் திரள் போராட்டமாக நடைபெற்றது. இந்தியை எதிர்த்த திராவிடக் கட்சிகள்கூட அந்தப் போராட்டத்தோடு தங்களை இணைத்துக் கொள்ள முன்வராமல் பதுங்கின. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ் அறிஞர்களான கி.ஆ.பெ. விசுவநாதம், பேராசிரியர் சி. இலக்குவனார், பெருஞ்சித்திரனார் போன்றவர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்களே நடத்திய இந்தப் போராட்டம் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. 1970களின் பிற்பகுதியில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக நாராயணசாமி நாயுடுவின் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு அனைத்து விவசாயிகளின் ஆதரவும் கிடைத்தது. கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் விவசாயிகள் ஒன்றுபட்டுப் போராடினார்கள். 1975ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிராகவும் ஜனநாயகத்தைக் காக்கவும் ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கம் தொடங்கியபோது மக்கள் பேராதரவு அளித்தனர். பெரும் தியாகசீலரும் தன்னலமற்றவருமான அவரை மக்கள் நம்பினார்கள். மக்கள் திரள் போராட்டங்களை நடத்தி இந்திராவின் சர்வாதிகார ஆட்சியை அகற்றி மீண்டும் ஜனநாயக ஆட்சியை அவர் நிலைநாட்டினார்.

மேற்கண்ட போராட்டங்களில் மக்கள் தாமாகவே முன்வந்து கொதிப்புணர்வுடன் போராடினார்கள். இந்த மக்கள் திரள் போராட்டங்களின் விளைவாகத்தான் ஆட்சியாளர்கள் அடிபணிய நேரிட்டது என்பதை நாம் மறக்கக் கூடாது. நாடு பூராவிலும் உள்ள மக்கள் ஒன்றுபட்டு திரண்டு எழுந்து போராடுவதென்பது அத்தனை எளிதானதல்ல. மக்கள் தங்கள் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் லஞ்ச ஊழல், கள்ளச் சாராயம், மணல் கொள்ளை, ஏரிகள் ஆக்கிரமிப்பு, காடுகள் அழிப்பு, காவல் துறையின் காட்டாட்சி மற்றும் சமூகக் கேடுகளை எதிர்த்து அந்தந்தப் பகுதிகளில் மக்கள் திரள் போராட்டங்களை நடத்த வேண்டும். இந்தப் போராட்டங்கள் ஒரு கட்டத்தில் நாடு தழுவிய பெரும் போராட்டமாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

மக்களுக்கு விழிப்புணர்வையும் ஊட்டி அவர்களைத் திரட்டி இத்தகைய வேண்டாத சக்திகளை எதிர்த்துப் போராட முயற்சி எடுக்க வேண்டிய கடமை தன்னலமற்ற மக்கள் தொண்டர்களுக்கு உண்டு.

ஜனநாயகச் சிதைவு, தமிழ்நாட்டின் உரிமைகளை இழந்து நிற்றல் போன்றவற்றிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டுமானால் தமிழக மக்களைத் திரட்டி மக்கள் திரள் போராட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை. மக்கள் திரள் போராட்டம் நமது கடமை மட்டுமல்ல. வரலாற்றுக் கட்டாயமும் ஆகும்.

இந்த வேலையை நாம் செய்யாமல் நமது சந்ததியினர் செய்யட்டும் என்று விட்டுவிடுவோமானால் எதிர்காலத் தலைமுறை நம்மை ஒருபோதும் மன்னிக்காது.

Posted in Agreements, Agriculture, Alliance, Andhra, AP, Bengaluru, Bethamangala, Blind, Border, Cauvery, Center, Chennai, Construction, Dam, Distribution, DMK, Drink, Drinking, Drinking Water, Farming, Farmlands, Flood, Flow, Govt, Inter-state, Interstate, Intrastate, Karnataka, Kaveri, Kerala, Krishna, Kuchasthalai, Kusasthalai, Lakes, Limits, Madras, Management, Mullai, Mullai Periyar, Mullai Periyaru, Mysore, Nature, Nedumaaran, Nedumaran, Paalar, Paalaru, Palar, Palaru, peasants, Periyar, Periyaru, Pethamangala, Pichathoor, Pichathur, Pichatoor, Pichatur, Politics, Poondi, reservoir, River, Rivers, Sea, Shortage, State, Storage, Supply, Tamil Nadu, TamilNadu, TMC, TN, Waste, Water | Leave a Comment »

Probing the rice seizures in Tamil Nadu – AK Venkatasubramanian

Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2007

இரண்டு ரூபாய் அரிசி
மின்சார அதிர்ச்சி
அதிரடித் தகவல்கள்

கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதியன்று புதுச்சோரி மாநில உணவுக் கடத்தல் தடுப்புப் பி¡ரிவு போலீஸார், புதுச்சோரி ரயில் நிலையத்தில் வழக்கமான கண்காணிப்பை மேற்கொண்ட போது, 40 வேகன்களில் அ¡ரிசி ஏற்றப் பட்டு, ஒரு சரக்கு ரயில் புறப்படத் தயாராக நின்றுகொண்டிருந்தது. அனுப்பப்படும் சரக்கு, அ¡ரிசி என்றதும் சற்று விழித்துக்கொண்டது போலீஸ். ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் 2,400 டன் அ¡ரிசி அந்த வேகன்களில் ஏற்றப்பட்டு, ஆந்திராவில் உள்ள பிக்காவொலு என்ற இடத்துக்கு அனுப்புவதற்காகப் பதிவு செய்யப்பட்டது தொரிய வந்தது.

“யார் பதிவு செய்தது; பதிவு செய்தவர்களுக்கு அ¡ரிசி எப்படி வந்தது; முறையான அத்தாட்ச யுடன் அ¡ரிசி செல்கிறதா?” என்று கேள்விகள் தொடர்ந்தன. விசாரணையில் பெங்களூரூவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பி.ஆர்.எஸ். டிரேடர்ஸ் என்ற நிறுவனம் பதிவு செய்ததாகத் தொரிய வந்தது. ஆனால், விதி முறைகளுக்கு உட்பட்டு எடுத்துப் போகப்படும் அ¡ரிசி’ என்று சொல்லும் ஆவணங்கள், ரயில்வே துறையிடம் இல்லை.

கடத்தவிருந்த சரக்கு பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் இன்னமும் துருவியபோது அம்பலமானதுதான், இப்போது தமிழகம் மற்றும் புதுவையில் அலசப்படும் மெகா அ¡ரிசிக் கடத்தல் விவகாரம்.

தொடர்ந்து மேற்கொண்ட அதிரடி விசாரணையில், அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. கடத்தப்படவிருந்த அ¡ரிசி பொது விநியோகத்துக்கு வழங்கப்பட்ட, முன்பே நான்கு முறை புதுச்சோரி ரயில் நிலையத்திலிருந்து கடத்தப்பட்டிருக்கிறது! கடந்த செப்டம்பர் மாதம் முதல் முறையாக 39 வேகன்களில் 2,340 டன் அ¡ரிசி வங்க தேசத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. அடுத்து, அதே செப்டம்பர் மாதம் 20 வேகன்களில் 1,247 டன் அ¡ரிசி அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹாட் என்ற இடத்துக்குக் கடத்தப்பட்டிருக்கிறது.

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மொத்தம் 60 வேகன்களில் 3,765 டன் அ¡ரிசி அஸ்ஸாம் கவுகாத்திக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. எந்தக் கிடங்கிலிருந்து கொண்டு வரப்பட்டது என்று புலனாய்வு செய்ததில், புதுவையில் உள்ள மா புட்ஸ் மற்றும் ஜே.ஆர். புட்ஸ் என்ற நிறு வனங்களுக்குச் சொந்தமான கிடங்குகளில் சேகாரிக்கப்பட்டு கடத்தப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.

அந்தக் கிடங்குகளைச் சோதனை செய்ததில் 3,500 டன் அ¡ரிசி சிக்கியது.

சென்னை சேத்துப்பட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் அன்னம்மாள் காசி எக்ஸ்போர்ட்ஸ். தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் போலியான முகவாரியைக் கொடுத்து நடத்தி வந்த நிறுவனமாம் இது. ஆறுமுகம் ‘ஓஹோ’ வென்று அ¡ரிசி வியாபாரம் செய்வதாகச் சொல்லி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் 2005ஆம் வருடம், நவம்பாரில், பத்து கோடி ரூபாய் கடன் கேட்டிருக்கிறார். அவர் பெயருக்கு ஐந்து கோடி, நிறு வனத்துக்கு ஐந்து கோடி!

2006-ஆம் வருடம், மார்ச் மாதம், பத்து கோடியையும் வழங்கிவிட்டது வங்கி. ஆனால், மாதத் தவணை திருப்பிக் கட்டப்படாததால் கவலையடைந்த வங்கி, ஒரு கட்டத்தில், இந்த நிறுவனம் சேகாரித்து வைத்திருந்த அ¡ரிசியைக் கைப்பற்றி ஏலம் விட்டு விட்டது.

ஏலத்தில் அ¡ரிசியை எடுத்த பி.ஆர்.எஸ். டிரேடர்ஸ் ரயிலில் அனுப்பும்போதுதான் மாட்டிக்கொண்டது. இந்த முக்கியக் கதையில் சில கிளைப் பாத்திரங்களும் உண்டு. வங்கிக்கும் ஆறுமுகத்துக்கும் இடையே பாலமாக இருந்து செயல்பட்டது, மும்பையைச் சேர்ந்த நேஷனல் கொலட்ரல் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் என்ற நிறுவனம். அ¡ரிசிக் கடத்தல் விவகாரத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு குறித்துத் தீவிர விசாரணை நடக்கிறது. தவிர, விசாரணை வலை இறுகும்போது ரயில்வே ஊழியர்களும் சிக்குவார்கள் என்று தொரிகிறது; இதுவரை ஆறு பேர் கைதாகியிருக்கிறார்கள்.

ரயில்வே ஊழியர்கள் சரக்கைப் பதிவு செய்யும்போது, உ¡ரிய ஆவணங்களை ஏன் கேட்டுப் பெறவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஒரு பொருளை ரயிலில் அனுப்பப் பதிவு செய்யும் போது, அந்தப் பொருள் அனுப்பும் நபருடையதுதான் என்று நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் கொடுக்க வேண்டும். அதிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பும் போது, ரயில்வேயிடம் வழங்கும் மனுவில் உ¡ரிய அதிகா¡ரியின் அத்தாட்சி குறிப்பிடப்பட வேண்டும். அ¡ரிசி, கோதுமை என்றால் வட்டார வழங்கல் அதிகா¡ரி அல்லது வரு வாய்த்துறை அதிகா¡ரிகளிடம் அத்தாட்சி பெற்றிருக்க வேண்டும். ரயில்வே அதிகா¡ரிகள் துணையில்லாமல் இந்தக் கடத் தல் நடந்திருக்க முடியாது.

இப்போது மற்றொரு முக்கியக் கேள்வி எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறது. கடத்தப்பட்ட அ¡ரிசி எந்த மாநிலத்தை சேர்ந்தது? “பிரச்னையில் சிக்கிய நிறுவனம் சென்னை முகவாரியைக் கொடுத்துச் செயல்பட்டிருக்கிறது. எங்கள் மாநிலத்தில் பொது விநியோகத்துக்கு வெளி மார்க்கெட்டிலிருந்து அ¡ரிசி வாங்குகிறோம். எனவே, தமிழ்நாட்டிலிருந்து தான் இந்த அ¡ரிசி கடத்தி வரப்பட்டிருக்கக்கூடும்” என்று உறுதியாகச் சொல்கிறார்கள் புதுவை அதிகா¡ரிகள். ரேஷனில் கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்கப் படும் அ¡ரிசி, கடத்தப்பட்டு வடகிழக்கு மாநிலங்களை அடையும்போது கிலோ இருபது ரூபாயாக எகிறுகிறது. இந்தத் தகவலே மின்சார அதிர்ச்சியாக இருக்கிறது.

இந்த விவகாரமும் 2006-ஆம் வருடம் மே மாதத்துக்கு முன்பே ஆரம்பித்து விட்டது. இருந்தாலும், ‘முழு உண்மையைக் கண்டறிய சி.பி.ஐ. விசாரணை கோ¡ரியிருக்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறது தமிழக அரசு. சி.பி.ஐ. விசாரணை கோ¡ரினாலும், தமிழக அரசின் சிவில் சப்ளை போலீஸ் துறை தனியாக, தீவிரமாக விசாரணை நடத்தி சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளைக் கண்டறிந்துள்ளதாக, கோட்டை வட்டாரம் சொல்கிறது.

“2006ம் வருடம் மே மாதத்துக்குப் பிறகு தி.மு.க. ஆட்சியில் பொது விநியோகத் துறை முடுக்கிவிடப்பட்டது. உணவு அமைச்சரே மாநிலம் முழுவதும் இரவும், பகலும் சுற்றி ரேஷன் அ¡ரிசி கடத்தல்காரர்களை வேட்டையாடினார். இதுவரை 45 கடத்தல்காரர்கள் உள்ளே தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதில் ஐந்து பேர் குண்டர்கள் சட்டத்தில் இருக்கிறார்கள். நிறைய லா¡ரிகள் கைப்பற்றப் பட்டன.

கடத்தலுக்குத் துணைபோன ஊழியர்கள், அதிகா¡ரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் 40 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்தப் போலி கார்டுகள் மூலம் வாங்கப்பட்ட அ¡ரிசியே சேகாரிக்கப் பட்டுக் கடத்தப்பட்டது. ஒரு கோடியே 94 லட்சம் கார்டுதாரர்களுக்கு முறையே மாதம் 20 கிலோ அ¡ரிசி தவறாமல் வழங்கிவிடுகிறோம்.

அதேசமயம் முன்பு, அ.தி.மு.க. ஆட்சியில் உணவுக் கழகத்திடம் கொள்முதல் செய்த அ¡ரிசியின் அளவு மூன்று லட்சம் டன். நியாயமான கார்டுதாரர்களின் எண்ணிக்கை கொஞ்சம் உயர்ந்த போதும் இப்போது கொள்முதல் செய்யும் அளவு இரண்டேமுக்கால் லட்சம் டன்தான்.

இதில் இடைப்பட்ட அளவு உள்ள அ¡ரிசியே அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கடத்தப்பட் டது. இப்போது உணவுக் கழகத்திட மிருந்து அ¡ரிசி கொள்முதல் செய்த லா¡ரி, எந்த வழித்தடத்தில் செல்கிறது என்பதையும் மானிட்டர் செய்யும் வசதி இருக்கிறது. கடந்த ஆட்சியில் ஓர் அமைச்சரே தினசாரி 20 லா¡ரிகளில் ரேஷன் அ¡ரிசியைக் கடத்தியிருக்கிறார் என்பது தொரிய வந்திருக்கிறது” என்ற திடுக் தகவலுடன் முடித்தார் அந்தத் துறை சார்ந்த இந்நிலையில், அதிகா¡ரி ஒருவர்.

புதுவையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கிடங்குகள் ஒரு வருடத்துக்கு முன்புதான் எடுக்கப்பட்டதாக ஜெயலலிதா சொல்கிறார். இப்போதைய தி.மு.க. ஆட்சியில் கடத்தல் கணிசமாகக் குறைந்திருக்கிறது என்று சொல்லப்படுவது எந்த வகையில் சமாதானமாக அமைய முடியும்!

யாருமே அ¡ரிசி கடத்தல் அதிகாரித்துள்ளது என்று ஒப்புக்கொள்ளப் போவதில்லை. பொதுவிநியோகம் என்றாலே ஊழலுடன் கைகோத்துக்கொண்டு தான் நடக்கிறது. ஒன் றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் தொடர்பான விவகாரம் இது. சி.பி.ஐ. விசாரணை, ‘கடத்தல் நடந்த கால கட்டத்தை’ கண்டு பிடித்து வெளியிடும்போது, யார் யார் தலை உருளுமோ?

– ஸ்ரீநி
——————————————————————————————————–

“பொது விநியோகத் திட்டத்துக்கு வழங்கப்படும் அ¡ரிசி கடத்தப்பட்டு, வருடம் ஒன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இது ஒரு தொடர்கதையே” என்று சொல்லி நம்மை திடுக்கிட வைக்கிறார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகா¡ரி, அ.கி.வேங்கட சுப்பிரமணியம். பல ஆண்டுகள் உணவு மற்றும் பொது விநியோகத் துறைகளில் பணியாற்றி அனுபவம் பெற்றவர் இவர்.

“நமது நாட்டில் ஏறத்தாழ ஐந்து லட்சம் நியாய விலைக் கடைகள் மூலம், 20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டு ஒன்றுக்கு 20,000 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்துக்காக வழங்கப்படும் அ¡ரிசி, கோதுமை, மண் ணெண்ணெய் ஆகியவை தீய சக்திகளால் கடத்தப்படுவது பல்லாண்டுகளாக நடந்து வரும் ஒரு விஷயம்.

1998-ஆம் வருடம் நாடு முழுவதும் ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவது குறித்த ஆய்வை எடுக்குமாறு டாடா நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அந்த ஆய்வின்படி தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்துக்காக வழங்கப்படும் அ¡ரிசியில் மூன்றில் ஒரு பாகம் கடத்தப்படுகிறது என்பது தொரிய வந்தது. மாதம் ஒன்றுக்கு விநியோகிக்கப்படும் சுமார் மூன்று லட்சம் டன் அ¡ரிசியில், ஒரு லட்சம் டன் அ¡ரிசி கடத்தப்படுகிறது என்ற அடிப்படையில் பார்த்தால், கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் லாபம் அடிக்கும் பட்சத்தில், வருடம் ஒன்றுக்கு ஆயிரம் கோடி, கடத்தல்காரர்களின் பாக்கெட்டுகளுக்குப் போகிறது.

கடத்தலைக் கண்டுபிடிக்க சிவில் சப்ளை போலீஸ் இருக்கிறது. ஆனால், ஒரு கடத்தல் லா¡ரியைப் பிடித்து விட்டால் அதிலுள்ள ஆட்களைக் கைது செய்து, லா¡ரியைப் பறி முதல் செய்து வழக்குப் பதிவு செய்கிறார்களே தவிர, அந்தக் கடத்தலுக்கு மூலம் யார்? அ¡ரிசி எங்கு போகிறது என்றெல்லாம் ‘பல காரணங்களால்’ ஆய்வு செய்வதில்லை.

கடத்தலுக்கு முக்கிய காரணம் போலி ரேஷன் கார்டுகளும், அ¡ரிசி வாங்காத கார்டுகளும்தான். இதைக் கண்டுபிடிப்பது எப்படி? 1997-ஆம் ஆண்டு தமிழக அரசின் உணவுத் துறை (எ..225) ஆணை ஒன்று போட்டிருக்கிறது. அதன்படி ஒருவர், ரேஷன் கடைக்குச் சென்று கார்டுதாரர்கள் பட்டியலைக் கொண்ட ¡ரிஜிஸ்டரைப் பார்வையிட்டு, நகல் எடுக்கலாம். அதே போல் ஸ்டாக் ¡ரிஜிஸ்டரையும் சோதிக்கலாம். பேட்டை ரவுடிகள், அரசியல்வாதிகள் மிரட்டல் மற்றும் அராஜகம் காரணமாக, தனி மனிதர்கள் இந்த வேலைகளில் ஈடுபடத் துணிய மாட்டார்கள். கார்டுதாரர்களின் பட்டியலை எடுத்து ஏ¡ரியாவில், வீடு, வீடாகச் சோதனைச் செய்து, போலி கார்டுகளின் பட்டியலை உ¡ரிய அதிகா¡ரிக்குக் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் செய்யலாம். இதனால் ஊழல் ஒழிய வாய்ப்பிருக்கிறது” என்கிறார் அ.கி.வேங்கடசுப்ரமணியம்.

————————————————————————————————————————-
விலைக் கொள்கையில் நெல்லும் கோதுமையும்

ஆர்.எஸ். நாராயணன்

தேசிய விவசாய விளைபொருள் விலை நிர்ணயக் கொள்கை விவசாய உற்பத்தி வளர்ச்சிக்கு இன்றியமையாதது.

ஏனெனில் விலை என்பது கேள்வியின் ஆற்றலுக்கும் வழங்கலின் விளைவுக்கும் இடைப்பட்ட ஒரு சமரசக்குறியீடு. இது வளர்ச்சியைக் கண்காணிக்கும் குறியீடும் ஆகும். கேள்வியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த விலைக்குறைப்பை ஏற்படுத்தியும், விலையை உயர்த்தி வழங்கலையும் பெருக்க வேண்டும்.

திட்ட நிர்ணயப்படி விளைபொருள் உற்பத்தி உயரும்போது வழங்கல் அதிகமாகும். வழங்கல் கூடினால் விலை வீழ்ச்சியுறும். விலை வீழ்ச்சியுற்றால் உற்பத்தி குறையும். திட்டமிட்டபடி உற்பத்தியை உயர்த்த விலை நிர்ணயம் தேவை. எனவே, உணவு உற்பத்தியை உயர்த்தும் ஒரு மார்க்கமாகவே விலை நிர்ணயக் கொள்கை உதவி வந்துள்ளது.

இருப்பினும் கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு – குறிப்பாக நமது பொதுவிநியோகத்துக்கு வழங்கும் நெல், கோதுமை விவசாயிகளுக்கு – மத்திய அரசு வழங்கி வரும் ஊக்க விலைக்கும் மொத்தவிலைக்குறியீட்டு எண் காட்டும் விலைக்கும் உள்ள சமச்சீர்மை என்றோ தொலைந்துவிட்டது.

நெல் அல்லது அரிசியில் வெளிஅங்காடி வழங்கல் கூடுதலாகவும் கோதுமையில் வெளிஅங்காடி வழங்கல் குறைவாகவும் உள்ளது. அரிசியில் ஏற்றுமதி உள்ளது. கோதுமையில் இறக்குமதி உள்ளது. மொத்தத்தில் இந்த ஆண்டு 2007 – 08-க்கான அரசின் நெல், கோதுமை விலைகளால் இரு தரப்பு விவசாயிகளும் நொந்து போயுள்ளனர்.

வடக்கே – குறிப்பாக பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உ.பி. ஆகிய மாநிலங்களின் விவசாயிகளே அரிசி மற்றும் கோதுமைகளை மத்தியத் தொகுப்புக்கு வழங்குவதில் முன்னிலை வகிக்கின்றனர். இம்மாநில விவசாயிகளின் கோரிக்கைகளை வைத்துத்தான் மத்திய அரசின் விலைநிர்ணயம் உருப்பெருவதாகத் தோன்றுகிறது.

கடந்த 9-10-2007 அன்று நடப்புப் பருவத்திற்குரிய வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைகளை மத்திய அமைச்சரவைக்குழு அறிவித்தது.

அதன்படி, கோதுமைக்கு குவிண்டாலுக்கு ரூ. 1,000, “ஏ’ ரக நெல் ரூ. 725 என நிர்ணயம் செய்யப்பட்டது.

கடந்த பருவத்தைவிட நடப்புப் பருவத்திற்கு (2007 – 08) கோதுமைக்கு ரூ. 150 உயர்த்தப்பட அதேநேரம் நெல்லுக்கு ரூ. 30 மட்டுமே உயர்த்தப்பட்டது. இந்த வித்தியாசம் ஒருபுறம் இருக்கட்டும்.

கோதுமையுடன் நெல்லை ஒப்பிடும்போது கோதுமையை அப்படியே மாவாக (ஆட்டாவாக) மாற்றி சமைத்து விடலாம். கழிவும் அற்பமே. ஆனால் நெல்லை அரிசியாக மாற்றித்தான் சமைக்க முடியும். நெல்லில் மூன்றில் ஒரு பங்கு உமியாகவும் தவிடாகவும் மாறிவிடும். எனினும் தவிட்டுக்கு விலை உண்டு. குருணைக்கும் விலை உண்டு.

நெல்விலை என்றால் 66.6 சதவீத அரிசி விலைக்குச் சமம். 100 சதவீதம் அரிசி என்பது ரூ. 966 என்றாலும் ரூ. 34 குறைகிறது.

நெல் விலையையும் கோதுமை விலையையும் சமவிகிதத்தில் உயர்த்தாமல் விலை நிர்ணயம் செய்துள்ள விவசாய விலை மதிப்பீட்டு விலைக்குழு பாரபட்சம் காண்பிப்பது ஏன்?

மத்திய அரசின் மத்தியத் தொகுப்புக்கு குறைந்த அளவுக்கு வழங்கல் செய்யும் தமிழ்நாட்டு விவசாயிகள் இப்போது கிளர்ந்தெழுந்துள்ளனர். அதேசமயம் விலைநிர்யணமாவதற்கு முன்பே வடக்கில் பாரதிய விவசாயிகள் சங்கம் கிளர்ந்தெழுந்துவிட்டது.

பொதுவாக ஒப்பிடும்போது கோதுமை விலையில்தான் பிரச்னை அதிகம். உலகச் சந்தையில் கோதுமையின் விலை ரூ. 1,600. மத்திய அரசு (உணவுக் கார்ப்பரேஷன்) இவ்வளவு அதிகமான விலை கொடுத்து சுமார் 10 லட்சம் டன் வரை கோதுமையை இறக்குமதி செய்துள்ளது.

கோதுமையில் உள்ள பற்றாக்குறை அரிசியில் இல்லை. அரிசி ஏற்றுமதியாகிறது. கோதுமையோ இறக்குமதியாகிறது. கோதுமை உள்ளூர் வியாபாரத்திலும் உணவுக் கார்ப்பரேஷன் ஏகபோகம் செய்கிறது.

கோதுமையின் வெளிச்சந்தைக்கும் உணவுக் கார்ப்பரேஷனே வழங்கல் செய்கிறது. அரிசியில் வெளிச்சந்தை தெளிவாக உள்ளது.

ஆகவே, பாரதிய விவசாயிகள் சங்கம் கோதுமைக்கு உலகச் சந்தையில் உள்ள விலையை வழங்க வேண்டும் என்று கிளர்ச்சி செய்தும் கிடைத்த விலை ரூ. 1000 மட்டுமே.

இப்போது கோதுமை விவசாயிகள் ரூ. 1,240 தர வேண்டும் என்று நிர்பந்தம் செய்கின்றனர். கோதுமை விலையை மொத்த விலைக்குறியீட்டெண் அடிப்படையில் நிர்ணயம் செய்யாததால் கடந்த 25 ஆண்டுகளில் கோதுமை விவசாயிகளின் இழப்பு ரூ. 20,000 கோடி என்று பாரதிய விவசாயிகள் சங்கம் ஒரு புள்ளிவிவரத்தை மத்திய அரசின் அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பியுள்ளது.

பாசுமதி அரிசி தவிர்த்த இதர ரக அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுவும் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பஞ்சாபில் குருதாஸ்பூர், பெரோஸ்பூர், அமிருதசரஸ் மாவட்டங்களில் விளையும் சர்பதி, பூசா சன்னரகம் ஏற்றுமதி காரணமாக ரூ. 1,600 என விற்ற விலை இன்று ரூ. 1,200-க்கு இறங்கிவிட்டது.

ஆகவே பாசுமதி சாராத இதர அரிசி ரகங்களின் ஏற்றுமதித் தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு கூடியுள்ளது.

மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் கிரிக்கெட் போதையில் உள்ளார். விவசாயப் பிரச்னையைவிட வெங்சர்க்கார் விலகல் பிரச்னைதான் இப்போது அவருக்கு முக்கிய விஷயமாகிவிட்டது!

கடந்த பல ஆண்டுகளாக வேளாண்மை உற்பத்தி மதிப்பு சரிந்துவிட்ட சூழ்நிலையில் கொள்முதல் விலைக்கும் சாகுபடிச் செலவு மதிப்புக்கும் இடைவெளி மிகவும் குறுகிவிட்டது.

எனினும், விவசாய விலை மதிப்பீட்டுக் குழு பின்வரும் பத்து விலை நிர்ணய ஆக்கக் கூறுகளை, ஜா கமிட்டி பரிந்துரைத்தபடி பின்பற்றுவதாகவும் தெரியவில்லை. அவையாவன:

1. சாகுபடிச் செலவு மதிப்பு.

2. பயிர் முதலீடுகளின் விலை மாற்றம்.

3. பயிர் முதலீட்டுப் பொருள் விலைக்கும் உள்ள இணைவீதம்

4. அங்காடி விலைகளின் போக்கு.

5. கேள்வியும் வழங்கலும்

6. சகபயிர் விலைகள்

7. தொழில்துறை செலவு மதிப்பின் மீது ஆதரவு விலை ஏற்படுத்தும் விளைவு.

8. பொதுவான விலைவாசி ஏற்படுத்தும் விளைவு.

9. வாழ்க்கைச் செலவு மீது ஏற்படுத்தும் விளைவு.

10. அகில உலகச் சந்தை விலை.

இவற்றில் முதல் ஐந்து ஆக்கக் கூறுகளுடன் வாழ்க்கைச் செலவு – விவசாயிகளின் வாழ்க்கைச் செலவையும் – ஒட்டிப் பின்பற்றினால் வேளாண் உற்பத்தி மதிப்பு உயர வழி உள்ளது.

சரி. இதில் தமிழக அரசின் பங்கு என்ன? வேளாண்மை, உணவு எல்லாம் அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அதிகாரத்திற்குட்பட்டது என்று கூறி, திமுக அரசு உணவுக் கார்ப்பரேஷனுக்கு இணையாக தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷனைத் தோற்றுவித்து உணவுக் கார்ப்பரேஷன் வரம்பைக் கட்டுப்படுத்தியுள்ளது.

இதே மனஉணர்வை மனத்தில்கொண்டு உயிர்ப்பாதுகாப்புக்கு உறுதுணையாயுள்ள உணவு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளுக்கு உயர்ந்தபட்சமாக நெல் விலையை ரூ. 1200க்கு உயர்த்தத் தமிழ்நாடு அரசு முன்வருமா?

நெல் கொள்முதலில் ஏகபோகம் செய்வது தமிழ்நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிவில் சப்ளை கார்ப்பரேஷன் என்பதால் நெல் விலையை உயர்த்தும் ஒரு கடமை மாநில அரசுக்கு இல்லையா?

(கட்டுரையாளர்: இயற்கை வேளாண்மை பொறியியல் நிபுணர்)

Posted in abuse, ADMK, Agriculture, Ask, Bid, Biz, Black markets, Bribery, Bribes, Business, Capture, Commodites, Commodity, Consumption, Contracts, Corruption, Council, Deflation, Demand, Distribution, DMK, Economy, Exports, FAO, Farming, Food, Futures, GDP, godowns, Govt, Growth, Hijack, Illegal, Imports, Inflation, Investigation, kickbacks, Law, Loss, markets, Options, Order, organic, P&L, Paddy, PDS, PnL, Policy, Power, Prices, Production, Profit, Reliance, retail, retailers, rice, seize, Shipments, Storage, Supply, Wheat | Leave a Comment »

Sandalwood smuggler Veerappan’s Area: Encroachments in Sathiyamangalam – Losing ones native lands to power, money & politics

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2007

வீரப்பன் காட்டை குறிவைக்கும் அரசியல்வாதிகள்!

பீ.ஜெபலீன் ஜான் ஆர்.சிவக்குமார் டி.சாம்ராஜ்

ஈரோடு, கோவை மாவட்டத்தில் பிரதானக் கட்சிகளில் முக்கிய பொறுப்பை வகித்த, வகிக்கும் அரசியல்வாதிகள், மற்றும் சத்தி தொகுதியில் இதுவரை இருந்த எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோருக்கு சத்தி வனப் பகுதியில் பண்ணைத் தோட்டங்கள் உள்ளன.

ஈரோடு, டிச.4: சந்தன கடத்தல் வீரப்பனுக்கு புகலிடமாக இருந்த சத்தியமங்கலம் வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அரசியல்வாதிகள் வளைத்துப்போட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு போட்டியாக அரசு அதிகாரிகள் மற்றும் முக்கியத் தொழிலதிபர்களும் நிலத்தை வாங்கி வருவதால் பழங்குடியினரின் பாரம்பரிய விளைநிலங்கள் முற்றிலும் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தி வனப்பகுதியில் தாளவாடி, கடம்பூர், ஆசனூர், பர்கூர் உள்ளிட்ட இடங்களில் ஒருகாலத்தில் வீரப்பன் கால்படாத இடமே இல்லை என்று சொல்லும் நிலை இருந்தது.

அப்போது இப் பகுதியில் பழங்குடியினர் தவிர பிற மக்கள் நடமாட்டம் அறவே இருந்ததில்லை.

வீரப்பன் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு சில மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறியது. மன இறுக்கத்தைப் போக்கும் இயற்கைச் சூழல், உடலை சிலிர்ப்பூட்டி மகிழ்ச்சி தரும் மிதமான குளிர் போன்ற சிறப்பு அம்சங்களால் இப் பகுதி அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய தொழிலதிபர்களின் கண்பார்வையில் பட்டது.

தங்களது அரசியல் செல்வாக்கு, ஆள்பலம், பண பலம் ஆகியவற்றைப் பயன்படுத்திய இவர்கள், பண்ணைத் தோட்டம், விருந்தினர் இல்லம், ஓய்வு இல்லம் உள்ளிட்டவற்றை மலைப் பகுதியில் உருவாக்கினர்.

இந்நிலை இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஈரோடு, கோவை மாவட்டத்தில் பிரதானக் கட்சிகளில் முக்கிய பொறுப்பை வகித்த, வகிக்கும் அரசியல்வாதிகள், மற்றும் சத்தி தொகுதியில் இதுவரை இருந்த எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோருக்கு சத்தி வனப் பகுதியில் பண்ணைத் தோட்டங்கள் உள்ளன. ஒருபுறம் அரசியல்வாதிகள் என்றால் மற்றொருபுறம் முக்கியத் தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகளால் பழங்குடியினர் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.

வீரப்பன் காட்டுப் பகுதியில் ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் பகுதி தொழிலதிபர்களின் ஓய்வு இல்லங்கள், பண்ணைத் தோட்டங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆசனூரில் பல ஏக்கர் வாங்கியுள்ளார். தொலைதூரத்தில் இருக்கும் தொழிலதிபர்களைக்கூட கவர்ந்து இழுக்கும் இடமாக வீரப்பன் காடு மாறிவிட்டது.

சுமார் 30 ஏக்கர், 50 ஏக்கர் என வாங்கியுள்ள தொழிலதிபர்கள், வார விடுமுறை நாள்களில் இங்கே தங்கியிருந்து இரவு நேரங்களில் தங்களது நிலத்துக்குள்ளேயே மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதை பொழுதுபோக்காக வைத்துள்ளனர் என்பது பழங்குடியினரின் பிரதான குற்றச்சாட்டு.

ஈரோடு மாவட்டத்தில் ஏற்கெனவே பணியாற்றிய ஆட்சியருக்கு, ஆசனூரில் பல ஏக்கர் நிலம் உள்ளது என்கின்றனர் பழங்குடியினருக்காக போராடிவரும் தன்னார்வ அமைப்பினர்.

அதுபோல பவானிசாகர் அருகே நரிக் குறவருக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலத்தை முன்னறிவிப்பு இன்றி ஆக்கிரமித்ததாக பிரதான எதிர்க்கட்சி அரசியல்வாதி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழ்நாடு பழங்குடியினர் சங்க மாவட்ட அமைப்பாளர் எஸ்.மோகன்குமார் கூறியது:

ஈரோடு மாவட்ட பழங்குடியினருக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை குடும்பத்தில் ஏதாவது ஒரு வாரிசுதாரர்களிடம் மட்டும் கையெழுத்துப் பெற்றுவிட்டு மற்றவர்களின் கையெழுத்தை போலியாக போட்டு ஆக்கிரமிக்கும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் பலத்துக்கு சமமாக பழங்குடியினரால் ஈடுகொடுக்க முடியவில்லை.

பழங்குடியினரின் நிலங்களுக்கு பட்டா இல்லாததும், அவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததும் நிலத்தை அபகரிப்பவர்களுக்கு சாதகமாக மாறிவிடுகிறது. இதைத் தடுக்க தனிச்சட்டம் தேவை என்றார் மோகன்குமார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் த.உதயச்சந்திரன் கூறியது:

பழங்குடியினர் இடங்களை வேறு நபர்கள் வாங்குவதைத் தடுக்க போதிய சட்டங்கள் இல்லை. இருப்பினும் நிலத்தை அபகரிப்பது, சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவது போன்ற சம்பவங்களைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

வீரப்பன் காட்டில் களைகட்டும் ரியல் எஸ்டேட் தொழில்

பீ.ஜெபலீன் ஜான் ஆர்.சிவக்குமார் டி.சாம்ராஜ்

ஈரோடு, டிச.5: சந்தன வீரப்பன் காட்டில் ரியல் எஸ்டேட் தொழில் களை கட்டியுள்ளது.

5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 ஆயிரமாக இருந்த ஒரு ஏக்கர் நிலம் இப்போது ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனையாகிறது.

“”உதகை, முதுமலை போல வெகுவிரைவில் இதுவும் சுற்றுலாத்தலமாக விளங்கும். விரைவில் பலமடங்கு விலை உயரும்” -இது ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வைத்துள்ள விளம்பரத் தட்டிகளில் இடம்பெற்றுள்ள வாசகங்கள்.

வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கும் இதுபோன்ற பல்வேறு கவர்ச்சிகர வாசகங்கள் அடங்கிய தட்டிகள் மைசூர் பிரதான சாலைகளில் காணப்படுகின்றன.

தங்கும் விடுதி, ரிசார்ட் போன்றவற்றில் இரு நாள்கள், ஒரு வாரம் என தங்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு, மிதமான குளிர் பிரதேசமான இப் பகுதி மிகவும் பிடித்ததாக மாறி வருகிறது.

சொந்தமாகத் தங்கும் விடுதி கட்டிக்கொண்டால் என்ன? என்ற ஆசை எழும் சுற்றுலாப் பயணிகளை எளிதில் கவர்ந்து விடுகின்றனர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர். தங்கும் விடுதிகள் கட்டுவதற்கு ஏதுவாக 15 சென்ட், 20 சென்ட் எனத் தரம் பிரித்து நிலங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

தாளவாடி, கடம்பூர் பகுதியில் கிட்டத்தட்ட 70 சதவீதம் இடம் பழங்குடியினர் வசமிருந்து கைமாறிவிட்டது என்கின்றனர் பழங்குடியினர் நல போராட்ட அமைப்பினர். இப்போது ஆசனூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது.

இப் பகுதியில் ஒரு சென்ட் இடம் ரூ.18 ஆயிரம் (பிரதான சாலையில் இருந்து 2 கி.மீ. உள்பகுதியில்) முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. கோவை, திருப்பூர் ரியல் எஸ்டேட் நிறுவனங்களே இங்கு பெரும்பாலும் நில விற்பனையில் ஈடுபட்டுள்ளன.

மலைப் பகுதியில் இருக்கும் மக்களிடம் ஆசை வார்த்தை காட்டி மலிவு விலையில் இடத்தை வாங்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், சுற்றுலாப் பயணிகளிடம் விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது.

மலைப்பகுதி மக்களிடம் இருக்கும் நிலங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கைமாற்ற இப் பகுதிகளில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் துணைபோகின்றனர் என்பது பழங்குடியினர் நலப் போராட்ட அமைப்பினரின் பிரதான குற்றச்சாட்டு.

தமிழ்நாடு பழங்குடியின மக்கள் சங்க மாநிலத் தலைவரும், நீதிபதி சதாசிவம் கமிஷன் அறிக்கை வெளிவரக் காரணமாக இருந்தவருமான வி.பி.குணசேகரன் கூறியது:

விற்பனைக்காகக் காத்திருக்கும் மனைகள்.

தாளவாடி, கடம்பூர் பகுதியில் கிட்டத்தட்ட 70 சதவீதம் இடம் பழங்குடியினர் வசமிருந்து கைமாறிவிட்டது என்கின்றனர் பழங்குடியினர் நல போராட்ட அமைப்பினர். இப்போது ஆசனூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது.

மலைப்பகுதி மக்களின் நிலத்தை, சமவெளி மக்கள் ஆக்கிரமிப்பதால் பழங்குடியினரின் உரிமை, வேலைவாய்ப்பு பறிபோகிறது. தாளவாடி, கடம்பூர், ஆசனூர் பகுதியில்தான் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடைபெற்று வந்தது. இப்போது பர்கூர் மலைப் பகுதியையும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் குறிவைத்துவிட்டனர்.

பிகார், மத்தியப்பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் பழங்குடியின நிலங்களை பிறர் ஆக்கிரமிப்பதைத் தடுக்க தனிச்சட்டம் உள்ளது. இதுபோன்ற சட்டம் தமிழகத்திலும் தேவை. 1996-ல் அப்போதைய வனத்துறை அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர் செய்த பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார் குணசேகரன்.

இது குறித்து மாநில வனத்துறை வாரிய உறுப்பினரும், மாவட்ட கெüரவ வனஉயிரின காப்பாளருமான ப.கந்தசாமி கூறியது:

தென்னிந்தியாவிலேயே அதிகமாக சத்தியமங்கல வனத்தில்தான் யானைகள், புலிகள், காட்டுமாடுகள், கடமான், புள்ளிமான், கரடி உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள், பல்வேறு ரக பறவைகள் காணப்படுகின்றன. சத்தி வன அழிவுக்குக் காரணமே ரிசார்ட்கள் மற்றும் தங்கும் விடுதிகள்தான். மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் வனவிலங்கள் எண்ணிக்கை குறையத் துவங்கிவிட்டது. வனப் பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்றுவது தவறான நடவடிக்கை. வனப்பரப்பு குறைவது மனித இன அழிவுக்கு துவக்கமாக மாறிவிடும் என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் இதற்குத் தீர்வாக இருக்கும் என்றார் கந்தசாமி.

சமவெளிப் பகுதிகளை வளைத்துப்போட்டு நிலத்துக்கு செயற்கை விலையேற்றத்தை ஏற்படுத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் அடுத்த இலக்கு, மலைப் பகுதியாக மாறியுள்ளது. பழங்குடியினர் மட்டுமன்றி வன உயிரினத்தையும் காப்பாற்ற இதுபோன்ற செயல்களை தடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

Posted in abuse, Acres, ADMK, Agriculture, AIADMK, Assets, Bargoor, Bargur, barkoor, Don, encroachments, Environment, Erode, Estate, Farming, Farmlands, Forest, Govt, Guesthouses, Jaya, Jeya, JJ, Land, MLA, MP, Natives, Plants, PMK, Politics, Power, Real Estate, Representatives, Resorts, Sandal, Sandalwood, Sathiamangalam, Sathiyamangalam, Sathyamangalam, Sathyamankalam, SC, Sightseeing, smuggler, ST, Tourists, Tours, Travel, Travelers, Trees, Tribals, Village, Villager, villagers, Villages, Woods | Leave a Comment »

Electricity Distribution and Power Generation in Tamil Nadu – Energy Crisis and its Impacts

Posted by Snapjudge மேல் திசெம்பர் 4, 2007

கண்ணாமூச்சி ஆடும் மின்சாரம்

எஸ். ஜெய்சங்கர்

உலகமயமாக்கல் கொள்கைக்குப் பிறகு, வெளிநாடுகளுக்கு நமது சந்தையைத் திறந்துவிட்டாகிவிட்டது. வெளிநாட்டு முதலீடுகள் ஏராளமாகக் குவிகின்றன. தொழில்நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பொருளாதார ரீதியில் நமது நாடு 9 சதவீத முன்னேற்றத்தை எட்டியுள்ளது என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களுடன் நம் நாட்டு வணிகர்கள் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதில், அனைத்து வசதிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்ட இந்திய நிறுவனங்கள் மட்டுமே உற்பத்திச் செலவைக் குறைத்து, உலகச் சந்தையில் காலூன்ற முடிகிறது.

சிறு, குறு நிறுவனங்களின் இன்றைய நிலையோ பரிதாபமாக உள்ளது. தொழிலை மிகுந்த லாபகரமாக நடத்தவும் முடியாமல், அதை விட்டு விலகவும் முடியாமல், புலி வாலைப் பிடித்த கதையாகிவிட்டது. இதில் தொழிலை நசுக்க, முன்னறிவிப்பற்ற மின்தடை எனும் இம்சை வேறு இவர்களை வாட்டத் தொடங்கிவிட்டது.

மின்சாரத்தைப் பயன்படுத்தி உற்பத்தியை மேற்கொள்ளும் இந்த சிறு, குறு தொழிற்சாலைகள், தினசரி பல முறை ஏற்படும் மின்வெட்டால் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டுள்ளன.

வேலையே நடக்காதபோது, தங்களது தொழிலாளர்களுக்கு ஊதியத்தை வழங்க முடியாமல் தாற்காலிக விடுமுறைகளும் அறிவித்துள்ளன. மிகப்பெரிய தொழில் துறை நிறுவனங்களாக இருந்தாலும், ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி, உற்பத்திச் செலவை அதிகரிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வருகின்றன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறு, நடுத்தர தொழிற்சாலைகளின் தொகுப்புகள் கொண்ட தொழிற்பேட்டை பகுதிகள், நகர்ப்பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மின்தடையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இவை அமைந்திருப்பது கிராமப் பகுதிகளிலா? நகரப் பகுதிகளிலா? என்பது நிச்சயம் அரசுக்குத் தெரியாமல் இருக்காது.

தமிழகத்தின் மின்தேவை தினசரி 8,500 மெகாவாட். இதுபோக, வெளிமாநிலத்துக்கு 500 மெகாவாட் மின்சாரத்தை விற்பனை செய்து வந்துள்ளது தமிழகம். ஆனால், இன்றைய நிலையில் மின் உற்பத்தி குறைந்து போனதால், வெளி மாநிலத்துக்கு விற்பனை செய்யப்பட்ட மின்சாரம் நிறுத்தப்பட்டு, தமிழகத்துக்கு 7,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தினசரி வழங்கப்படுகிறது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. தினசரி 1,500 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துபோய்விட்டது. காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததே இதற்கு முக்கிய காரணம் என விளக்கம் அளிக்கிறது தமிழக அரசு.

உண்மையில், தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம், தனியார் காற்றாலைகள், தனியார் தொழிற்சாலைகளில் இருந்து 10,500 மெகாவாட் மின்சாரத்தை தினசரி உற்பத்தி செய்ய முடியும். ஆனால், 7,500 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தியாகிறது. எங்கு தவறு நடக்கிறது என்பது அரசுக்குத் தெரியும்.

இதனால், மாநகராட்சிப் பகுதிகளான சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மின்தடை ஏற்படுகிறது.

கிராமப்புறங்களில் மின் தடை ஏற்பட்டால், சிறிது நேரம் வீட்டுக்கு வெளியே காற்றாட இருக்க முடியும். தீப்பெட்டிகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியது போன்ற குடியிருப்புகளில் வசிக்கும் நகர்ப்புற மக்கள், மின்தடையால் தங்களுக்கு ஏற்படும் “புழுக்கத்தை’ தீர்க்க எங்கு செல்வது? ஆனால், நகரில் மின்தடையே இல்லை என்கிறார் மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி.

மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் செயல்படும் துணை மின் நிலையங்களில், தினசரி எத்தனை முறை, எவ்வளவு நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது என்ற விவரங்கள் நிச்சயம் அரசுக்குத் தெரிந்திருந்தும், “தமிழக நகரப் பகுதிகளில் மின்தடை இல்லை, கிராமப்பகுதிகளில் மட்டுமே மின்தடை’ எனும் பதிலைக் கூறியிருக்கிறது அரசு.

அரசின் கூற்றுப்படியே கிராமப் பகுதிகளில் மட்டும் மின்தடை என்றாலும், அங்கும் பாதிப்புகள் அதிகம் உள்ளன. இலவச மின்சாரம், மானிய விலையில் மின் மோட்டார் தந்த அரசு, அதை இயக்கத் தேவையான மின்சாரத்தைச் சரியாகத் தருவதில்லை. ஆற்றுப் பாசனம் அற்ற பகுதிகளில் கிணற்றுப் பாசனம் ஒன்றே வழி. இந்த விளை நிலங்களில் மோட்டார்களை இயக்க முடியாமல், விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

கிராமப் பகுதிகளை ஒட்டிய ஆற்றுப் படுகைகளில் இருந்து, பெரிய மின் மோட்டார்கள் மூலம் நகருக்குக் கொண்டு வரப்படவேண்டிய குடிநீர் விநியோகமும் தடைப்படுகிறது.

தொடர்ந்து 24 மணி நேரமும் மோட்டார் இயங்கினாலே, நகர்ப்புற குடிநீர்த் தேவையைத் தீர்க்க முடியாத நிலையில், இந்த மின் துண்டிப்பால் 13 நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டிய அவலநிலை. இது அரசுக்குப் பொதுமக்களிடையே அவப்பெயரைத் தேடித் தருகிறது.

இந்நிலை ஓரிரு நாள்களில் சரியாகும் எனத் தொடர்ந்து இரு மாதங்களுக்கும் மேலாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் தமிழக மக்கள்.

சென்னை, மேட்டூர், குந்தா, தூத்துக்குடி, உடன்குடி ஆகிய இடங்களில் புதிய மின்னுற்பத்தி நிலையங்களை அமைத்து, அதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் மூலம் தமிழகத்தின் எதிர்காலப் பற்றாக்குறையைத் தீர்க்கலாம்.

மக்கள் படும் துயரங்களைச் சுட்டிக்காட்டும்போது, அதை ஏற்றுத் தீர்வு காணும் மனோதிடம் அரசுக்கு தேவை. முன்னறிவிப்பற்ற மின்தடை பிரச்னைக்கு தற்போதைய தேவை உடனடித் தீர்வு மட்டுமே. அரசின் மறுப்பறிக்கையும் விளக்கமும் அல்ல.

————————————————————————————————————
மின்வெட்டா, மின்னல் வெட்டா?

தொழில்துறையிலும் விவசாயத்திலும் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் தொடர்ந்து விளங்குவதற்குக் காரணமே மின்சாரத்துறை என்றால் அது மிகையாகாது. அந்தத் துறைக்கு அமைச்சராக இருக்கும் ஆர்க்காடு என். வீராசாமி பழுத்த அரசியல்வாதி, நிர்வாகத்தின் நெளிவு சுளிவுகள் தெரிந்தவர்; எல்லாவற்றுக்கும் மேலாக முதலமைச்சரின் நிழல் போன்றவர், முதல்வரின் மனம் அறிந்து செயல்படுபவர்.

இத்தனை பீடிகைகள் போடுவதற்குக் காரணமே, சமீப மாதங்களாக எல்லா மாவட்டங்களிலும் விவசாயிகள் முதல் தொழிலதிபர்கள் வரை வேதனையோடு பேசிவரும் அறிவிக்கப்படாத மின்சார வெட்டைக் குறைக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லையே என்ற கவலைதான்.

தமிழ்நாட்டின் மொத்த மின்னுற்பத்தித் திறன் 10,098 மெகாவாட். மின்தேவையின் உச்சபட்ச அளவு 8,800 மெகாவாட். ஆனால் இப்போது உற்பத்தி ஆவதோ 7,500 மெகாவாட்தான். எனவே அன்றாடம் சுமார் 2 மணி முதல் 8 மணி நேரம்வரை மின்சாரத் தடை ஏற்படுகிறது. சராசரியாக 4 மணி நேரத்துக்கு மின்சாரம் தடைபடுகிறது.

காற்றாலைகளிலிருந்து கிடைத்துவந்த மின்சாரம் குறைந்துவிட்டதால் 1,500 மெகா வாட் அளவுக்கு மின்சாரவரத்து குறைந்துவிட்டதாகவும், மத்திய தொகுப்பிலிருந்து இப்போது 1,000 மெகாவாட் கிடைக்காததாலும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக மாநில அரசு தெரிவிக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் மின்சாரத் தேவை 4,000 மெகாவாட் அதிகரித்த நிலையில், மின்னுற்பத்தியோ 531 மெகாவாட் அளவுக்கு மட்டுமே அதிகரித்திருப்பதாக அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவிக்கிறார்.

புதிய தொழில்பிரிவுகளால் ஆண்டுக்கு 600 முதல் 700 மெகாவாட் வரை மின்சாரத் தேவை அதிகரித்து வருகிறது என்று இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

மின்சார பற்றாக்குறையால் ஜவுளி ஆலைகளால் முழுத் திறனில் இயங்க முடியாமல் போனதாகவும் இதனால் மட்டும் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள காற்றாலைகளில் கிடைக்கும் மின்சாரத்தைத் தொகுப்பாகப் பெற, மாநில மின்சார வாரியம் நல்ல கட்டமைப்பு வசதிகளைச் செய்துகொண்டால் 3,686 மெகாவாட் மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்று அத்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

அறிவிக்கப்படாத மின்சார வெட்டால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது கோயமுத்தூர் மாவட்டமும் பின்னலாடைத் தொழில் கேந்திரமான திருப்பூரும்தான். கோயமுத்தூர் மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்சார இணைப்புகள் உள்ளன. இவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை உயர் அழுத்த மின் இணைப்புகளாகும். கோவை மாவட்டத்தில் மட்டும் மின்நுகர்வு அளவு 1,200 மெகாவாட் ஆகும். இது மாநிலத்தின் மின் உற்பத்தியில் 13.5%.

இப்போதைய பிரச்னை மின்சார வெட்டு மட்டும் அல்ல, மின்வெட்டு எப்போது ஏற்படும் என்பது நிச்சயமாகத் தெரியாததும் ஆகும். இதனால் ஆலைகளில் உற்பத்தியைத் திட்டமிட முடிவதில்லை.

ஒரு நாளைக்கு 7,000 கிலோ நூல் இழை உற்பத்தி செய்த ஒரு ஜவுளி ஆலையில் இப்போது 600 கிலோ முதல் 1,000 கிலோ வரைதான் அதிகபட்சம் உற்பத்தி செய்ய முடிகிறது. 500-க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகளில் 40% அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு நூற்பாலை சங்கத் தலைவர் ஏ.பி. அப்பாகுட்டி வேதனையோடு தெரிவிக்கிறார்.

மின்வெட்டு காரணமாக டீசல் பம்புகள், ஜெனரேட்டர்கள் விற்பனை 100% அதிகரித்திருப்பது இந்த பிரச்னையின் பரிணாமத்தை இன்னொரு கோணத்தில் உணர்த்துகிறது.

அமைச்சரின் அறிக்கைகளும் புள்ளிவிவரங்களும் அந்தநேரச் சமாதானத்துக்கு வேண்டுமானால் பயன்படலாமே தவிர, பிரச்னையை தீர்க்க உதவாது. நடுநிலைமையுடன் ஆலோசனை கூறக்கூடிய நிபுணரை நியமித்து, உரிய பரிந்துரையைப் பெற்று, அதை மின்னல் வேகத்தில் செயல்படுத்துவது ஒன்றே தமிழக அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

—————————————————————————————————————————————————

தமிழகத்தை வாட்டும் மின்வெட்டு!

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

பொன்விழா கொண்டாடிய தமிழ்நாடு மின்சார வாரியம், ஒரு காலத்தில் தேவைக்கு அதிகமாக மின்உற்பத்தி செய்து பிற மாநிலங்களுக்கு விற்று லாபம் ஈட்டியது. இன்றைக்குத் தமிழகம் தனக்குத் தேவையான மின்சாரம் கிடைக்காமல் அல்லல்பட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மின் வெட்டாலேயே மக்களுக்கு ஷாக் அடிக்கிறது. விவசாயிகள் மட்டுமல்ல, ஆலைத் தொழிலாளிகள், தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் எனச் சகலரும் பாதிக்கப்படுகின்ற நிலை. விவசாயிகள் எந்த நேரம் மின்சாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு தங்களுடைய பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச தூக்கமும் உணவும் இல்லாமல் பம்ப்செட் அருகே காத்துக் கிடக்கின்ற நிலைமை. இரவு நேரங்களில் மின்சாரம் வந்தாலும் பாம்புகளுக்கும், நட்டுவாக்களிகளுக்கும் பயப்படாமல் கடும் இருட்டிலும் பாடுபடுகின்ற நிலையில் இன்றைக்கு விவசாயிகள் இருக்கின்றனர். வியர்வை சிந்தி வியர்வையை அறுவடை செய்யும் விவசாயிக்குப் பலமுனைத் தாக்குதல்கள். விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு விலை இல்லை. உரத்தட்டுப்பாடு. இதற்குமேல் மின்வெட்டு. தலைநகர் சென்னையில் மின்சாரம் கிடைத்தாலும் மற்ற பகுதிகளில் பெரும்பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இதற்கு மேல் அரசுப் பரிவாரங்கள் பகலில் ஆலையை இயக்காமல் இரவில் ஆலைப் பணிகள் நடக்கட்டும், வாரத்திற்கு ஒரு நாள் ஆலையின் இயந்திரச் சக்தியை நிறுத்திவிடுங்கள் என்று கூறும் ஆலோசனைகள். இதெல்லாம் ஆலைகளில் பணியாற்றிவரும் தொழிலாளிகளுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் பெரும் கேடு ஏற்படுத்தும்.

தமிழகத்தில் 10,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 55 சதவீதம் தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தும், 28 சதவீதம் மத்திய அரசு உற்பத்தி நிலையங்களில் இருந்தும், 11 சதவீதம் தனியார் மூலமும், 3.5 சதவீதம் வெளிமாநிலங்களில் இருந்தும் கிடைக்கிறது. காற்றாலையின் மூலம் 3,000 மெகா வாட் தற்பொழுது கிடைக்கிறது.

இப்படி இருக்க, மின்வெட்டு, மின் தட்டுப்பாடு ஏன் என்று தெரியவில்லை. அதற்குக் காரணம் தமிழக அரசின் மெத்தனப் போக்கே ஆகும். பல ஆண்டுகளாக மின் உற்பத்தி மற்றும் விநியோகம் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் சரிசெய்யப்படவில்லை. பழுதுபட்ட இயந்திரங்களைத் திரும்பத் திரும்ப ஓட்டுவது, இயந்திரங்கள் பராமரிப்பில் சரியான கட்டுப்பாடு இல்லாதது, இந்தப் பணியில் நிரப்பப்பட வேண்டிய பொறியாளர்கள், பணியாளர்கள் நிரப்பப்படாமல் இருப்பது, இதற்குமேல் பல்துறை பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்துக்குப் படையெடுத்ததனால் மின்சாரத் தேவை அதிகரித்து வருகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தகவல், தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களுக்குத் தடையின்றி மின்சாரம் வழங்க பல ஒப்பந்தங்கள் தொடர்ந்து கையொப்பமிடப்படுகின்றன. அதற்கேற்ப உரிய திட்டங்கள் இல்லை. 120 தொழிற்பூங்காக்களுக்கு மட்டுமே 700 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட குளறுபடிகளால்தான் இந்தத் தட்டுப்பாடு.

சில ஆண்டுகளுக்கு முன்னால் 0.4 சதவீத மின் உற்பத்தி தனியாரிடம் இருந்தது. தற்பொழுது தனியார் உற்பத்தி 28.18 சதவீதமாக உயர்ந்து விட்டதால் இதற்கான கட்டணங்களும் பன்மடங்கு உயர்ந்துவிட்டன. ஆண்டுக்கு ஒருமுறை மின்சாரத்தை வாங்க 12,016 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்து தமிழக அரசு கொடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளது. விவசாயம் மட்டும் இல்லாமல் நெசவுத் தொழிலும், விசைத்தறிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டம் போன்ற பகுதிகளில் சாதாரண நெசவாளிகள் தத்தளிக்கின்றனர். திருப்பூர் பின்னல் ஆடைதொழில்கூட ஓரளவுதான் ஜெனரேட்டர்களைக் கொண்டு இயங்க முடிகிறது. விசைத்தறி நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் மின்தடையால் உற்பத்தி பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கொங்கு மண்டலத்திலுள்ள ஆலைகள், நூற்பாலைகளில் எட்டு மணிநேரம் மின்வெட்டு உள்ளது என்று செய்திகள் வருகின்றன. திருப்பூரில் மட்டும் மின்வெட்டால் ஆயிரக்கணக்கானோர் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். மின்சாரப் பாதிப்பால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. தாமிரபரணியில் இருந்து விருதுநகர் மாவட்டத்திற்கு வழங்கப்படுகின்ற மானூர் கூட்டுக் குடிநீர்த் திட்டமும் செயல்படாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல் இழந்து உள்ளன.

1991-இல் மின்துறையில் தனியார் மற்றும் அன்னிய மூலதனம் 25 சதவீதத்தை எட்டியது. அதில் ஐந்து மாநிலங்கள் குறிப்பிடும் அளவுக்கு ஆர்வத்தைச் செலுத்தின. மகாராஷ்டிரம் முதலிடமும் தமிழகமும் கர்நாடகமும் அதற்கு அடுத்த இடங்களையும் பிடித்தன. தமிழ்நாட்டில் மட்டும் இதற்காக முடக்கப்பட்ட மூலதனத்தின் பங்கு 8 சதவீதம்.

1995இல் ஒரிசா மாநிலத்திலும் 1998இல் ஆந்திர மாநிலத்திலும் மின்சாரக் கட்டுப்பாடு குழுமங்கள் அமைக்கப்பட்டன. இவை மின் விநியோகத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்து அவற்றைத் தனியாருக்கு விற்கின்ற திட்டங்கள் தொடங்கப்பட்டன. இது தொடர்பான தனியார் அன்னிய மூலதனம் போன்றவற்றில் மின்துறை எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஒழுங்குபடுத்தும் சட்டத்தை 2006 மார்ச் மாதம் மத்திய அரசின் மின் அமைச்சகம் கொண்டு வந்தது. தமிழகம் இன்று சுமார் 17 கோடி குறைந்த அழுத்த மின் பயனீட்டாளர்களையும், சுமார் 6,000 உயர் அழுத்த மின் பயனீட்டாளர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 45 லட்சத்து 22 ஆயிரம் பேர் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தமிழ்நாடு மின் வாரியத்தின் மொத்தத்தில் 58 சதவிகிதத்தை வழங்குபவர்களாக இருக்கிறார்கள். மகாராஷ்டிரத்தை அடுத்து மின்வாரியத்தில் பணியாற்றுகிறவர்கள் இங்குதான் அதிகம். 94 ஆயிரம் பேர் மின்வாரியத்தில் பணியாற்றுகிறார்கள்.

2003 – 2004 மின் கட்டுப்பாடுக் கழகத் தகவலின்படி யூனிட் விற்பனை கீழ்க்கண்டவாறு உள்ளது.

புனல் மின்சாரம் யூனிட் ஒன்றின் விலை ரூ. 0.59, தமிழ்நாடு மின்வாரியத்தின் அனல்மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.09, மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் இருந்து அவசரத்திற்கு வாங்கிய மின்சாரம் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.17, மத்திய அரசின் அனல் மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.22, பி.பி.என். பவர் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.56, தனியார் காற்றாலை யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.70, அணுமின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.71, கரும்புச் சக்கை யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.87, தமிழ்நாடு மின்வாரியத்தின் எரிவாயு மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 3.09, தனியார் அனல்மின் நிலையம் யூனிட் ஒன்றின் விலை ரூ. 3.99, தனியார் எரிவாயு மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 4.65

2003 – 2004இல் வசூல் கட்டணம் ரூ. 10,545 கோடி. மானியமும் ஏனைய வருமானங்களும் மொத்தத்தில் ரூ. 477 கோடி. அந்த ஆண்டின் இழப்புத் தொகை ரூ. 2,743 கோடி. இதனால் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரைகள் எழுந்தன. அந்த ஆண்டின் இழப்பை ரூ. 663 கோடியாகக் குறைக்க வேண்டும் என்பதற்காக மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் மின்வாரியம் மின்சாரம் வாங்குவதற்கு 49 சதவீதமும், எரிபொருளுக்கு 24 சதவீதமும், வட்டிக்கு 7 சதவீதமும், பராமரிப்புக்கு 12 சதவீதமும் ஏனைய மற்ற செலவுகள் 8 சதவீதமுமாக மின்வாரியத்தில் செலவுக் கணக்கு இருந்தது.

தனியார்மயத்தில் 2007 வரை ஐந்து தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்பட்டு இன்றைக்கு பல தனியார்கள் மின் உற்பத்தித் துறையில் தங்கள் கால்களைப் பதிக்க அரசிடம் அணுகி உள்ளனர். 2003 – 2004 கணக்கின்படி ஒரு யூனிட்டுக்கு தனியாரிடம் இருந்து பெற்ற மின்சாரத்தின் விலை, தமிழ்நாடு மின் வாரியத்துக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களில் தயாரித்த மின்சாரத்தின் விலையைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்காக இருந்தது. இப்படித் தேவையில்லாமல் அதிகப்படியான செலவுகளை அரசு தனது தவறான அணுகுமுறையால் செய்ய வேண்டியுள்ளது. 1999-வது ஆண்டின்படி 2,564 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய தனியாருக்கு அனுமதி கொடுக்கலாம் என்ற நிலை வந்தால் தமிழக மின்வாரியம் கடனாளியாகி, திவாலாகி கதவைச் சாத்த வேண்டிய நிலைக்குத்தான் தள்ளப்படும் என்ற பரிந்துரையும் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோதும் அரசு மெத்தனமாக இருந்துள்ளது. 2001-ஆம் ஆண்டில் தனியார் மின்நிலையங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 2.25-க்கு மேல் தரமுடியாது என்று அரசு அறிவித்ததற்கு தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் கடுமையாகப் போராடின.

இவ்வாறு பல எச்சரிக்கைகள், அறிக்கைகள் மூலம் தனியார் மயமாக்கப்படுவது சரியில்லை என்று தமிழக அரசுக்குத் தெரிவிக்கப்பட்டும் பாராமுகமாக இருப்பது கண்டனத்துக்குரியது. இதுகுறித்து நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு மின்சாரக் கட்டுப்பாடுக் கழகத்தை எதிர்த்து இரண்டு வழக்குகள் தொடுத்தார். தனியார் நிறுவனங்களான பன்னாட்டு நிறுவனத்துக்கு நிதியமைச்சரின் துணைவியார் நளினி சிதம்பரம் வாதாடினார். இறுதியில் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மின்சார விலையைக் குறைக்க வேண்டும் என்பதே தீர்ப்பாக அமைந்தது.

தனியார் புகுந்ததால் பல சிக்கல்கள் ஏற்பட்டன. நெய்வேலியை ‘ஞ’ யூனிட் நடத்தி வரும் எஸ்.டி.சி.எம்.எஸ்., சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஏசியா பிரௌன் பொவேரி, அமெரிக்காவின் சி.எம்.எஸ். போன்ற பன்னாட்டு மின் உற்பத்தி நிறுவனங்கள் கொள்ளை லாபத்துக்கு விற்கத் திட்டமிட்டாலும் முடியாமல் 2007-இல் ஒரு சில நிறுவனங்களை அபுதாபி நேஷனல் எனர்ஜி என்ற அமைப்புக்கு விற்றுவிட்டன. மகாராஷ்டிரத்தில் என்ரான் போன்று கொள்ளை அடிக்க முடியவில்லை என்ற விரக்தியில் ஒரு சில நிறுவனங்கள் விட்டுவிட்டு ஓடிவிட்டன. இப்படிப் பல நிறுவனங்கள் கால் வைத்ததும், மின்துறையில் நமக்கு ஏற்பட்ட பாதகங்களாக அமைந்துவிட்டன.

உத்தேசிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டதுதான் இந்தப் பற்றாக்குறைக்கு ஒரு காரணம்.

அத்திட்டங்கள்:

1. தூத்துக்குடியின் தமிழ்நாடு மின்சார வாரியமும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து 1,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க திட்டங்கள் இருந்தபொழுதும் அதை நிறைவேற்றக்கூடிய வகையில் விரைவான செயல்பாடுகள் இல்லை.

2. ஜெயங்கொண்டான் தமிழ்நாடு மின்வாரியம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இணைந்து 500 மெகா வாட் மின்உற்பத்தி செய்யக்கூடிய திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.

3. குந்தாவில் 500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யக்கூடிய அளவில் திட்டங்கள் இருந்தபொழுதும் தமிழ்நாடு மின்சார வாரியம் அதைக் கவனிக்காமல் இருக்கிறது.

4. நெல்லை மாவட்டம் உடன்குடியில் 1,500 மெகா வாட் உற்பத்தி செய்யும் நிலையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு சுணக்கம் காட்டுகிறது.

5. வடசென்னை மின்உற்பத்தி நிலையத்தில் இருந்து மேலும் 600 மெகா வாட் உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் இருந்தும் அதற்கான செயல்பாடுகள் இல்லை.

6. இதேபோன்று மேட்டூரிலும் 500 மெகா வாட் மின் உற்பத்தி அதிகரிக்கக்கூடிய சூழல் இருந்தும் தமிழ்நாடு அரசு பாராமுகமாக இருக்கிறது.

7. கோயம்பேடில் அன்றாடம் கிடைக்கின்ற காய்கறிக் கழிவில் இருந்து மரபுசாரா எரிசக்தி மூலம் 550 மெகா வாட் கிடைக்கக்கூடிய அளவுக்கு மின்உற்பத்தி செய்யலாம் என்ற திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை.

8. தமிழகத்தில் உள்ள காற்றாலைகளுக்குத் தேவையான காற்று வீசவில்லை என்ற காரணத்தால் உரிய உற்பத்தி இல்லை என்று தமிழக அரசு குறிப்பிட்டாலும், இத்துறை தனியார் வசம் இருப்பதால் அதற்குத் தேவையான வசதிகளையும் கட்டுப்பாடுகளையும் அரசு செய்யாததால் காற்றாலைகள் மின்உற்பத்தி பின்தங்கியுள்ளன.

9. சூரியவெப்பம், கடல் நீர், நிலக்கடலைத் தோல் போன்றவற்றில் இருந்து மின் உற்பத்திக்கான சாத்தியக்கூறுகளை அறிய வேண்டும்.

காற்றாலைகள் மூலம் 3626 மெகாவாட், சர்க்கரை ஆலைக் கழிவுகள் மூலம் 213 மெகாவாட், தாவரங்கள் மூலம் (பயோமாஸ்) 99 மெகாவாட், குப்பைகள் மூலம் 4.25 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்று திட்டமிடப்பட்டது.

மரக்காணத்தில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நீர்மின் குழுமம் மூலம் காவிரி புனல்மின் திட்டம், ஓகேனக்கல் புனல்மின் திட்டம் அமைக்கவும் இதன்மூலம் 390 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. காவிரிப் பிரச்னையைப் போல் இதிலும் கர்நாடகம் மூக்கை நுழைக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யூரில் அமைக்க இருந்த மின் உற்பத்தித் திட்டத்தைத் தமிழக அரசு கைவிட்டுவிட்டது.

பல அணைகள் நிரம்பி இருந்தபொழுதும் மின்உற்பத்தி எப்படி முடங்கியது என்று தெரியவில்லை. அதைச் சரிசெய்ய அரசு கவனம் செலுத்தவில்லை.

தொலைநோக்குப் பார்வை இல்லாமல் மின்துறை சீரழிவை நோக்கிச் செல்கிறது.

Posted in Agriculture, Arcot, Commerce, Consumption, Distribution, DMK, Economy, Electricity, energy, Exports, Farmers, Farming, Finance, Fuels, Generation, Generators, Govt, Impact, Impacts, Industry, Inefficiency, Inverters, Kalainjar, Karunanidhi, Megawatts, MK, Motors, MW, NLC, Power, Power cut, Power Cuts, Powercut, Powercuts, Production, SEZ, Stalin, Sufficiency, Veerasamy, Water | 1 Comment »

Rice prices & food security plan – Veera Jeeva Prabhakaran & KS Radhakrishnan

Posted by Snapjudge மேல் நவம்பர் 30, 2007

நெல்லுக்கு “நோ’?

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

நெல் குவிண்டாலுக்கு ரூ. 1,000 விலை கேட்டு ரயில் மறியல்! தஞ்சை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இதுகுறித்துப் போராடிய விவசாயிகள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

தில்லி நாடாளுமன்றத்தின் முன் நெல்லைக் குவித்துப் போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் ரயிலில் தில்லி பயணம் என்ற போராட்டச் செய்திகள் கடந்த இரண்டு நாள்களாக வந்தவண்ணம் இருக்கின்றன.

விவசாய இடுபொருள்களின் விலை ஏறிவிட்டதால், நெல்லுக்குக் கட்டுப்படியான விலை வேண்டுமென்று விவசாயிகள் போராடுகின்றனர்.

நெல் மற்றும் கோதுமைக்கு இந்த ஆண்டுக்கான கொள்முதல் விலையை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. கோதுமைக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 800 அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஊக்கத்தொகையாகக் குவிண்டாலுக்கு ரூ. 200 அளிக்கப்படும் என்றும் மத்திய வேளாண் அமைச்சகம் அறிவித்தது. இதன் மூலம் கோதுமைக்கு குவிண்டாலுக்கு ரூ. 1,000 விலையாகக் கிடைக்கும்.

ஆனால், சாதாரண ரக நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 645-ம் சூர்ப்பர்பைன் எனப்படும் உயர் ரக நெல்லுக்கு ரூ. 675-ம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊக்கத்தொகை 100 ரூபாயையும் சேர்த்து நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 745 முதல் ரூ. 775 மட்டுமே கிடைக்கும்.

இந்த அறிவிப்பு நெல் விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நெல்லுக்குக் குறைந்தபட்சம் குவிண்டாலுக்கு ரூ. 1,000 வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நடப்பு குறுவை சாகுபடி காலத்தில் குவிண்டாலுக்கு 1,000 ரூபாயும், சம்பா சாகுபடி நெல்லுக்கு 1,500 ரூபாயும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

ஆந்திரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இதுகுறித்து கடும் போராட்டங்களை நடத்தி வருகிறார். தென்மாநிலங்கள் முழுவதும் இதுகுறித்தான விவாதங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவாரும், குவிண்டாலுக்கு ரூ. 1,000 கோதுமைக்கு வழங்கியது சரிதான் என்றும், நூறு சதவீதம் கோதுமை பயன்பாட்டில் உள்ளது என்றும், 65 சதவீதம்தான் நெல் பயன்பாட்டில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

1996 – 97-ல் நெல்லுக்கும் கோதுமைக்கும் இணையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 380 நிர்ணயிக்கப்பட்டது. 1997-98-ல் குவிண்டால் ஒன்றுக்கு நெல்லுக்கு ரூ. 415, கோதுமைக்கு ரூ. 475 என்றும் வித்தியாசப்பட்டு பின் ஒவ்வோர் ஆண்டும் நெல்லைவிட, கோதுமைக்கு விலை கூடுதல் தரப்பட்டது.

இந்த விலை நிர்ணயம் செய்யும் அமைப்பு நடந்து கொள்ளும் விதம் நெல் உற்பத்தி விவசாயிகளின் முதுகில் குத்துகின்ற காரியம்தான். பலமுறை இதுகுறித்து எடுத்துச் சொல்லியும் செவிடன் காதில் சங்கு ஊதுகின்ற அவலநிலைதான். தற்போது கோதுமைக்கு ரூ. 750 + 250 (போனஸ்) = 1,000 என்றும் அரிசிக்கு 645 + 50 (போனஸ்) = 695 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த பாரபட்சமான போக்கு தென்மாநிலங்களை பாதிக்கின்றது. மாற்றாந்தாய் போக்கில் மத்திய அரசு நடந்து கொள்வதைக் கண்டித்து தமிழக அரசும், ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. தமிழக உணவுத்துறை அமைச்சர் ஒரு குவிண்டாலுக்கு சன்ன ரக அரிசி ரூ. 725-ம், சாதா ரக அரிசி ரூ. 695 என்றும் கூறி 75 ரூபாய் அரிசிக்குக் கூட்டிள்ளோம் என்ற அவருடைய அறிவிப்பு வேதனையாக இருக்கிறது.

மத்திய அரசு ஆயிரம் ரூபாய் தரவில்லை என்பதைக் குறித்த எவ்விதக் கருத்துகளும் அவர் அறிவிப்பில் இல்லை. நெல் உற்பத்தி பஞ்சாபில் அதிகமாக இருந்தாலும், பயன்பாடு தென்மாநிலங்களில்தான் அதிகம்.

நெல் சாகுபடி ஏக்கர் ஒன்றுக்குச் செலவு 1997-2007-ல் விதை நெல் ரூ. 267 – ரூ. 400. உரம் ரூ. 1,200 – ரூ. 1,700. பூச்சிக்கொல்லி மருந்து வகைகள் ரூ. 150 – ரூ. 300. பணியாள் கூலி செலவு ரூ. 4,600 – ரூ. 7,000. அறுவடை செலவு ரூ. 230 – ரூ. 950.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயச் சங்க செயலர் வே.துரைமாணிக்கம் கணக்கீட்டின்படியும், வேளாண்மைத் துறையின் பரிந்துரையின்படியும் கீழ்குறிப்பிட்டவாறு ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு ஆகும் செலவு விவரம்.

நெல்விதை கிலோ ரூ. 15 வீதம் 15 கிலோவிற்கு ரூ. 450. 8 சென்ட் நாற்றங்கால் தயார் செய்ய இரண்டு ஆண் கூலி ரூ. 240. ஒரு பெண் கூலி ரூ. 80. தொழுஉரம் ஒரு டன் ரூ. 200. அசோஸ்பைரில்லம் 7 பாக்கெட் பாஸ்யோபாக்டீரியா 7 பாக்கெட் ரூ. 84. ரசாயன உரம் டி.ஏ.பி. 30 கிலோ, யூரியா 20 கிலோ ரூ. 400. நாற்றுப்பறித்து வயலில் எடுத்து வைக்க ஆள் கூலி ரூ. 1,100. நடவு வயல் உழவு டிராக்டர் 2 சால் டிராக்டர் உழவு ரூ. 550. நடவு வயலுக்கான தொழு உரம் 3 டன் ரூ. 600.

வரப்பு மற்றும் வயல் சமன் செய்ய 3 ஆள் கூலி ரூ. 360. நெல் நுண்ணூட்டம் 5 கிலோ ரூ. 93. ரசாயன உரம் டி.ஏ.பி. 50 கி. யூரியா 75 கி. பொட்டாஷ் 50 கி. ரூ. 1,125. நடவுப் பெண்கள் 18 பேருக்கு ரூ. 80 சதவீதம் ரூ. 1,440. 2 தடவை களை எடுக்கச் செலவு ரூ. 980. பூச்சிமருந்துச் செலவு ரூ. 250. காவல் மற்றும் தண்ணீர் பாசனம் செய்ய ஆள் செலவு ரூ. 250. அறுவடை ஆள்கள் கூலி ரூ. 1,750. கதிர் அடிக்கும் இயந்திர வாடகை ரூ. 525. ஓர் ஏக்கருக்கான கடன் பெறும் தொகைக்கான வட்டி கூட்டுறவு என்றால் 7 சதவீதம் (5 மாதம்) ரூ. 245. தனியார் என்றால் ரூ. 500. காப்பீடு பிரிமியம் தொகை 2 சதவீதம் ரூ. 167. விலை மதிப்பீட்டுக்குழு பரிந்துரைப்படி பார்த்தால் நிலமதிப்பிற்கான வட்டி 7 சதவீதம் ரூ. 3,500. மொத்தம் ரூ. 14,689.

இவ்வளவு செலவு கடன் வாங்கிச் செய்தாலும், விலை இல்லை. சிலசமயம் தண்ணீர் இல்லாமல், பூச்சித் தாக்குதலாலும் நெல் பயிர்கள் கருகி விடுகின்றன. பயிர் இன்சூரன்ஸ் என்பது வெறும் வெட்டிப்பேச்சாக உள்ளது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

நாட்டின் முதுகெலும்பு விவசாயம்தான். ஆனால் அதை நம்பியுள்ள 65 சதவீத விவசாயிகளின் நிலைமை மிகவும் வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. இதுவரை இந்தியாவில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடந்த 1960 களில் ஒரு மூட்டை நெல் ரூ. 50. அன்றைக்கு இது ஒரு கட்டுபடியான நல்ல விலை. அதைக் கொண்டு சிரமம் இல்லாமல் விவசாயிகள் நிம்மதியாக வாழ்ந்தனர். அன்று உழவு மாடு ஒரு ஜோடி ரூ. 800தான். ஆனால், இன்றைக்கு ஒரு ஜோடி ரூ. 20,000. அன்று டிராக்டர் ரூ. 25,000 இன்றைக்கு அதன் விலை லட்சங்களாகும். ஆலைகளில் உற்பத்தியாகும் நுகர்வோர் பொருள்கள் நாற்பது மடங்கு அதிகரித்துள்ளன. அரசு ஊழியர்களின் ஊதியம் ஆறு மடங்கு வரை கூடுதலாகி உள்ளது. ஆனால், நெல்லின் விலை திருப்தியாக கூடுதலாக்கப்படவில்லை.

நெல் உற்பத்திச் செலவு கோதுமையைவிட அதிகம். உழைப்பும் அதிகம். நெல் நன்செய் பயிர்; கோதுமை புன்செய் பயிர். நெல் உற்பத்திக்கு பஞ்சாபில் ரூ. 816-ம், மகாராஷ்டிரத்தில் ரூ. 937-ம் செலவாகிறது.

ஒரு குவிண்டால் நெல்லை அரைத்தால் 65 கிலோ அரிசி கிடைக்கும். 35 கிலோ தவிடு மாட்டுத் தீவனமாகப் பயன்படும். நான்கு லிட்டர் எண்ணெய் கிடைக்கும். எண்ணெய் கழிவுகளை மீன்களுக்கு உணவாகப் பயன்படுத்தலாம். இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் உற்பத்தி செய்யப்படும் நெல் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் அதற்கான விலையும் அதை ஊக்குவிக்கின்ற அக்கறையும் மத்திய – மாநில அரசுகளுக்கு இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.

மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு விவசாயிகளின் வேதனை குறித்த அக்கறை இல்லை. பெரிய தொழிலதிபர்களுக்கு ரூ. 1,400 கோடி வரை சலுகைகள் வழங்கி உள்ளார். கொள்ளை லாபம் ஈட்டும் இந்த முதலாளிகளுக்கு கடன் வட்டியை 45 சதவீதம் குறைத்துள்ளார்.

நாட்டின் விவசாய வளர்ச்சி வெறும் 2.3 சதவீதம். மேற்கொண்டு வளர்ச்சி இல்லை. இன்னும் வேதனை என்னவென்றால், அதிகார வர்க்கத்தில் உள்ள சிலர் விவசாயத்தை விட்டு ஒழியுங்கள் என்ற இலவச ஆலோசனை வழங்குவதுதான் கொடுமையிலும் கொடுமை.

நெல்லைப் போன்றே கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலைமையும் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு விவசாயி தான் வளர்த்த கரும்பை கட்டுபடியான விலை இல்லாததால் யார் வேண்டுமானாலும், வெட்டி எடுத்துச் செல்லலாம் என்று தண்டோரா போட்டு கூவி அழைத்தார். அப்படியாவது அந்தக் கரும்பு நிலத்தை விட்டு அகன்றால்போதும் என்ற அவலநிலை.

நெஞ்சு பொறுக்கவில்லை என்ற நிலையில் நெல் விலை கேட்டு விவசாயிகள் களத்தில் போராடுகின்றனர். நீரிழிவு நோயாளிகள், “நெல் அரிசிக்கு நோ’ என்று சொல்வதைப்போல மத்திய அரசும், “நெல்லுக்கு நோ’ என்று சொல்லிவிட்டதோ என்ற ஏக்கம்தான் நமக்கு ஏற்படுகிறது.

வள்ளுவர் சொன்னதைப்போல, “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்’ – என்ற நிலை மாறி விவசாயிகளுடைய பொருளாதார நிலைமை மட்டுமல்லாமல் அவர்களுடைய சமூக, சுயமரியாதையும் அடிபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. இதற்கு யார் காரணம்? ஆட்சியாளர்கள்தான்.

புதிய பொருளாதாரம் தாராளமயமாக்கல் என்ற நிலையில் விளைநிலங்கள் யாவும் அழிக்கப்பட்டு சிறப்புப் பொருளாதார மண்டலமாக மாற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், நிலங்களும் நீர்ப்பாசன ஏரிகளும்கூட வீடுகளாக மாறிவிட்ட நிலை. இந்நிலையில் எப்படி விவசாயம் இந்தியாவில் முதுகெலும்பாக இருக்க முடியும்?

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)
———————————————————————————————————————————————————-

சவாலாகும் உணவுப் பாதுகாப்பு!

வீர. ஜீவா பிரபாகரன்

உலகளவில், மக்கள்தொகை வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் நமது நாட்டில், உணவுப் பாதுகாப்பு என்பது மாபெரும் சவாலாக உருவெடுத்து வருகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் விவசாயத் துறையின் பங்கு பல ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது. இருப்பினும், மொத்த மக்கள்தொகையில் சுமார் 65 சதவீதம் பேர் தங்கள் வாழ்வாதாரமாக விவசாயத்தையே நம்பியுள்ளனர்.

உணவுத் துறையில் பிற நாடுகளைச் சார்ந்திராமல் இருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை. 1960-களில் உணவுப் பொருள்களுக்கு வெளிநாடுகளை நாம் எதிர்பார்த்த நிலை இருந்தது. ஆனால், முதலாவது பசுமைப் புரட்சியால் தன்னிறைவு காணப்பட்டது. பின்னர் ஏற்பட்ட சூழல்களால் நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.

குறிப்பாக, விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழில் நிறுவனங்களாகவும், புதிய நகரங்களாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. ஒரு சில இடங்களில் இத்தகைய நடவடிக்கைகளை விவசாயிகள் எதிர்த்தாலும் அரசுகள் அதை கண்டுகொள்வதில்லை. இதனால், விளைநிலப் பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

விவசாயத்துக்கு நீராதாரமாக விளங்கிய கண்மாய்கள் காணாமல் போய்விட்டன. பாசனத்துக்கான நீர்த் தேவையை பூர்த்தி செய்வதில் அரசுகளுக்குப் போதிய ஆர்வம் இல்லை.

நமது நாட்டில் போதிய நீர்வளம், நில வளம் இருந்தும் அதை முறைப்படுத்தி முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டுவருதற்கான முயற்சிகள் ஏட்டளவிலேயே உள்ளன.

வேளாண் இடுபொருள்கள் விலை அதிகரிக்கும் அளவுக்கு விளைபொருள்களுக்கு, போதிய விலை கிடைப்பதில்லை. இதனால், வேளாண் பணிக்கு போதிய கூலி வழங்க இயலுவதில்லை. எனவே, கிராம மக்கள் அதிக வருவாய் கிடைக்கும் நகர்ப்புறப் பணிகளுக்குச் செல்லும் நிலை உருவாகிவிட்டது. கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கிய இடப்பெயர்வு அதிகரித்து வருகிறது.

விவசாயிகள் விளைவித்த பழம், காய்கறி உள்ளிட்ட விளைபொருள்களைச் சேமித்து, பதப்படுத்தி, பொதிவு (பேக்கிங்) செய்து விற்பனை வாய்ப்பைப் பெருக்கும் திட்டங்கள் முழுவீச்சில் நடைபெறவில்லை.

கூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆறுதலான விஷயமாக இருந்தபோதிலும், விவசாயத்துக்கான பயிர் காப்பீட்டுத் திட்டங்கள், அதன் விதிமுறைகளால் பயனளிக்காத நிலையிலேயே உள்ளன.

நமது விவசாயப் பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகள், சாதனைகள் கீழ்நிலை விவசாயிகளைச் சென்றடைவதில் மிகுந்த இடைவெளி உள்ளது.

இத்தகைய கடுமையான சோதனைகளையும் தாண்டி நாம் உணவு உற்பத்தியில் போதிய சாதனைகள் நிகழ்த்தி வருகிறோம்.

இருப்பினும், கோதுமை உள்ளிட்ட சில விளைபொருள்கள் கூடுதல் விலை கொடுத்து வெளிநாடுகளிலிருந்து நடப்பாண்டில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

விவசாய நிபுணர்களின் கணக்கெடுப்புப்படி, நமது நாடு வரும் 2010-ம் ஆண்டில் 1.41 கோடி டன் உணவு தானியம் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். அதையடுத்து ஒவ்வோர் ஆண்டும் 2 சதவீதம் இறக்குமதி அளவு உயரும் என மதிப்பிடப்படுகிறது.

மக்கள்தொகை வளர்ச்சியையும் கருத்தில் கொண்டால் 2020-ம் ஆண்டில் நமது நாட்டின் உணவுப்பொருள்கள் தேவை 34 கோடி டன்னாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நமது நாட்டில் உணவுப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது. மனித உரிமைகளில் உணவு உரிமையே தலையாய உரிமை என்பது விவாதத்துக்கு இடமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், நமது நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் பலருக்கு ஒரு வேலை உணவு கிடைப்பதே அரிதாக உள்ளது.

இது ஒருபுறம் என்றால், அதிக வருவாய் ஈட்டுவதற்காக உணவுப் பொருள்களை வாங்கி “எத்தனால்’ தயாரிப்பில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இது வறுமை, பட்டினிச்சாவு, கிராமப் பொருளாதாரப் பாதிப்பு உள்ளிட்ட எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என சில அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்நிலையில் நாட்டின் வளம் பெருக்கும் வேளாண்மையில் போதிய கவனம் செலுத்தாவிடில், உணவு மானியச் செலவு அதிகரிக்கும். உணவுப் பாதுகாப்பு என்பது பெரும் சவாலாகிவிடும்.

—————————————————————————————————–

தேவையா மார்க்கெட் கமிட்டி செஸ்?

பி. சுபாஷ் சந்திரபோஸ்


தமிழக வணிக, விவசாயப் பெருங்குடி மக்களின் தலையாய பிரச்னையாக “மார்க்கெட் கமிட்டி செஸ்’ கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது.

முன்யோசனையோ, விவசாயிகள் மீது அக்கறையோ இல்லாத குழப்பான சட்டப்பிரிவுகள், விதிமுறைகள் மூலம் கடுமையான பிரச்னைகளை விவசாயிகளும், வணிகர்களும் தினமும் சந்திக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது இந்த “மார்க்கெட் கமிட்டி செஸ்.’

உணவு உற்பத்திக்காக அல்லும், பகலும் பாடுபட்டு உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கவும், உற்பத்தியான உணவுப்பொருள்களை சேமிக்கவும், உரிய விலை கிடைக்கும்போது விற்று பயன் பெறவும் வேளாண்மை விளைபொருள் விற்பனைச் சட்டம் முதலில் 1933-ல் இயற்றப்பட்டு, 1959, 1987, 1991-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.

இந்தச் சட்டத்தின்படி, அறிவிக்கப்பட்ட விற்பனை பகுதியில், அறிவிக்கப்பட்ட வேளாண் விளைபொருள் எதுவும் வாங்கப்பட்டாலோ அல்லது விற்பனை செய்யப்பட்டாலோ விற்பனைக் குழு (Marketing Committee) ஒரு சதவீத கட்டணம் (Fee/Cess) விதிக்கிறது.

விற்பனைக் கூடங்களை ஏற்படுத்தி அதில் செய்யப்படும் சேவைகளுக்குத்தான் இக்கட்டணம். ஆனால், தமிழகத்தில் மார்க்கெட் கமிட்டி விற்பனைக் கூடங்கள் இல்லாமல், வெளியே கடைகளில் நடக்கும் விற்பனைக்கும் இக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதுதான் வேடிக்கை.

தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களும் இந்தச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட விற்பனைப் பகுதிகளாகும். அந்தந்தப் பகுதியில் உள்ள மார்க்கெட் குழு இந்தச் சட்ட விதிகளை அமலாக்கம் செய்கிறது.

ஆனால், நடைமுறைகளுக்கு ஒவ்வாத குழப்பமான சட்டப் பிரிவுகள், விதிமுறைகள், அதிகாரிகளின் குழப்பமான விளக்கங்கள் காரணமாக மேற்கண்ட சட்ட விதிமுறைகளால் விவசாயிகள், வணிகர்கள் இரு பிரிவினருமே கடுமையான பிரச்னைகளைச் சந்திக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சேவை புரியாமல் வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம்: பிற மாநிலங்களில் 200 முதல் 300 ஏக்கர் பரப்பளவில் விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டு, அங்கு வணிகர்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, அதற்கான கட்டணம் மார்க்கெட் கமிட்டி செஸ் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

விவசாயிகள் தங்கள் சரக்கைக் கொண்டுவந்து வைப்பதற்கான கிடங்குகள், உலர வைப்பதற்கான களங்கள், தரம் பிரித்தல், தராசுகள், ஏலம் மூலம் விற்பனை, வணிகர்களுக்கு அலுவலகம், ஓய்வு அறைகள், விவசாயிகளுக்குப் பயிற்சி வகுப்புகள், குளிர்பதன கிடங்கு, சரக்கை வாங்கிய வியாபாரிகளிடம் பணத்தைப் பெற்று விவசாயிகளுக்குப் பட்டுவாடா செய்யும் வசதி ஆகிய பல்வேறு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், நமது மாநிலத்தில் அத்தகைய விற்பனைக்கூடங்கள் ஏதும் குறிப்பிடத்தக்க அளவில் அமைக்கப்படாமல் பெயரளவில் மிகச் சில மார்க்கெட் பகுதியில் கிடங்குகளும், உலர் களங்களும் அமைக்கப்பட்டு தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படாமல் செஸ் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வேளாண் விளைபொருள்கள் -மார்க்கெட் கமிட்டி செஸ் சட்டங்களில் உரிய மாற்றங்களைச் செய்ய பரிந்துரை செய்துள்ளது. அதில் மிக முக்கியமான மாற்றம், எந்த ஒரு வேளாண் விளைபொருளுக்கும் வேளாண் விற்பனைக் குழுவால் ஏற்படுத்தப்பட்ட விற்பனைக் கூடத்திற்குள் (மார்க்கெட்) நடக்கும் வணிகத்துக்கு மட்டுமே செஸ் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதாகும். ஆனால், தமிழகத்தில் வேளாண் பொருள் விற்பனை எங்கே நடந்தாலும் அதற்கு மார்க்கெட் கமிட்டி செஸ் வசூலிப்பது எதனால் என்பது புரியாத புதிர்.

தற்போது மாநில அரசு சட்டத் திருத்தத்தின் மூலம் பல விளைபொருள்களை அறிவிக்கும்போது அதை உருமாற்றம் செய்து பெறப்படும் ஆலைத் தயாரிப்பு பொருள்களையும் சேர்த்து “அறிவிக்கப்பட்ட பொருளாக’ அறிவிக்கிறது. உதாரணமாக, “உளுந்து’, “உளுந்தம் பருப்பு’ இரண்டுமே அறிவிக்கையிடப்படுகிறது.

இதுவே துவரைக்கும், துவரம் பருப்புக்கும் பொருந்தும். உளுந்தம் பருப்பும், துவரம் பருப்பும் விளைபொருள்கள் அல்ல. அவை பருப்பு ஆலையில் தயாரிக்கப்படும் உற்பத்திப் பொருளாகும். வேளாண் விளைபொருள்களின் விற்பனையை ஒழுங்குபடுத்தி விவசாயிகளுக்கு நன்மை செய்வதுதான் மார்க்கெட் கமிட்டி சட்டத்தின் நோக்கம். வேளாண் விளைபொருள்களுக்கு மட்டுமே செஸ் விதிக்கப்பட வேண்டும். அதிலிருந்து தயாரிக்கப்படும் உப பொருள்களுக்கு செஸ் விதிப்பது எந்த விதத்தில் நியாயம்?

பயறு, பருப்பு பற்றாக்குறையைத் தவிர்க்கும் பொருட்டு, மதுரையிலோ, திருச்சி, கோவையிலோ அல்லது விருதுநகரிலோ உள்ள ஒரு வணிகர் அயல்நாடுகளிலிருந்து உளுந்து, துவரையை இறக்குமதி செய்யும்போது அந்தக் கப்பல் சென்னைத் துறைமுகத்தில் வந்தடைந்து சரக்கு இறங்கினால், அங்கு செஸ் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அதே சரக்குக் கப்பல் சென்னைக்குப் பதிலாக தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகளை இறக்கினால் அங்கு செஸ் கட்டணம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் ஒரே சரக்குக்கு செஸ் கட்டண விதிப்பிலும் இரண்டு வித அளவுகோல் கையாளப்படுகிறது என்பது வேடிக்கை.

விற்பனைக்கூட நடைமுறைகளைப் பொருத்தவரை தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதி வணிகர்களையும், விவசாயிகளையும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாக்கி வருவது அனுமதிச் சீட்டு (பெர்மிட்) முறைதான். விற்பனை செய்யப்பட்ட வேளாண் பொருளை ஒரு மார்க்கெட் பகுதியிலிருந்து அடுத்த பகுதிக்கு எடுத்துச் செல்ல அரசு அலுவலரிடம் பெர்மிட் வாங்கித்தான் கொண்டு செல்ல வேண்டும்.

அரசு அலுவலக நேரம் முடிந்த பின்னரும் கூட, விடுமுறை நாள்கள் உள்பட வர்த்தக பரிமாற்றம் நடந்துகொண்டே இருக்கும். அவ்வப்போது அவசரத் தேவைக்கு தொலைபேசியில் வரும் ஆர்டர்களுக்கு ஏற்ப, இரவு, பகல் பாராமல் உடனுக்குடன் சரக்குகளை அனுப்பி வைப்பது நடைமுறை வழக்கம்.

இது போன்று ஒவ்வொரு நேரமும் முன் அனுமதிச் சீட்டுபெற வேண்டும் என்ற தற்போதைய விதிமுறை லஞ்சத்துக்கு உதவுமே தவிர, எந்த விதத்திலும் விவசாயிக்கோ, வியாபாரிக்கோ உதவாது என்பது நிச்சயம்.

விவசாயம் செய்வோரும், விவசாயத் தொழிலும் நாளும் நலிவடைந்துவரும் இந்நாளில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் ஒரு குன்றிமணி அளவு உணவு தானியங்களோ, காய்கறி, பழ வகைகளோ வீணாக அனுமதிக்கக்கூடாது. அனைத்து வகையான விளைபொருள்களுக்கும் முறைப்படி உலர வைக்க, தரம் பிரிக்க, பாதுகாக்கப்பட்ட களங்களும், கிடங்குகளும், குளிர்பதனக் கூடங்களும் மாநிலம் எங்கும் அமைக்கப்படவேண்டும்.

விவசாயிகள் அவர்கள் பாடுபட்ட உழைப்பிற்கான பலனாக, நல்ல விலை கிடைப்பதற்கு மார்க்கெட் கமிட்டி கூடங்கள் ஏற்பாடு செய்யுமானால் செஸ் கட்டணம் செலுத்த தமிழகத்தில் யாருமே தயங்கமாட்டார்கள்?

வெளிமாநிலங்களில் இந்த நடைமுறை வெற்றிகரமாக நடைபெறுகிறது. ஆனால், தமிழகத்தில் மார்க்கெட் கமிட்டி செஸ் என்கிற பெயரில் விவசாயிகளும், வியாபாரிகளும் அரசால் சுரண்டப்படுகிறார்கள் என்பதுதான் வேதனையான விஷயம்.

(கட்டுரையாளர்: கௌரவ செயலர், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம்)

Posted in Agriculture, Andhra, AP, Basmathi, Basmati, Bullion, cargo, Cess, Committee, Cultivation, Demand, Distribution, Distributors, Economy, Exporters, Exports, Farmers, Farming, Fee, Fees, Field, Finance, Food, Foodgrains, godowns, Grains, Growth, harvest, Imports, Jeeva Prabhakaran, JeevaPrabhakaran, Labor, Labour, Land, Marketing, markets, Naidu, Nayudu, Packaging, Packing, Paddy, PDS, peasants, Poor, Prabhakaran, Prices, procurement, Production, quintal, Radhakrishnan, Ration, Reddy, retail, retailers, rice, Rich, sacks, Security, SEZ, Suicides, Suppliers, Supply, Veera. Jeeva Prabhakaran, Villages, Wheat, Wholsale, workers | Leave a Comment »

The dangers lurking behing ethanol & other alternate fuels – Environment & Deforestation Impact

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2007

தாவர எண்ணெயின் விபரீதம்

ந. ராமசுப்ரமணியன்

உலக அரங்கில் கச்சா எண்ணெய்க்கு மாற்று சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தாவர எண்ணெயே எனப் பேசப்பட்டு வருகிறது.

தாவர எண்ணெயால் ஏற்படும் விபரீதங்களை அறியாததே இதற்குக் காரணம்.

வான்வெளியில் கரிமல வாயு உள்ளது. அதை உள்வாங்கி வளரும் தாவரங்கள் மூலம் “எத்தனால்’ மற்றும் “பயோ டீசல்’ போன்ற எரிபொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த எரிபொருள்கள் மூலம் கார்பன் அளவு அதிகரிக்காது. மாறாக, நிலத்திலிருந்து எடுக்கப்படும் நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் உபயோகத்தால் கார்பன் வெளியீடு பல மடங்கு உயர்கிறது என விஞ்ஞான ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஆகவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அதிகரித்து வரும் எரிபொருள் எண்ணெய் தேவை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு கச்சா எண்ணெய்க்கு மாற்று தாவர எண்ணெயே என உலக அளவில் பேசப்பட்டு, அதன் உபயோகமும் அதிகரித்து வருகிறது.

நிலத்தடியில் பல கோடி ஆண்டுகளாகப் புதைந்து கிடந்த தாவர வகைகளே கச்சா எண்ணெயாக மாறுகிறது.

ஆனால் தாவர எண்ணெய், தற்போது விளையும் தாவரங்கள், சூரியகாந்தி, பனை, சோயாபீன்ஸ், கரும்பு, தென்னை, சோளம், கோதுமை, அரிசி மற்றும் நவதானியங்கள் ஆகியவற்றைக் கொண்டு உடனடியாகத் தயாரிக்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி பெற்ற பிரேசில் நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு முதுகெலும்பு கரும்பு பயிரிடுவதும், சர்க்கரை உற்பத்தியுமாகும். கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை பெட்ரோலுடன் 65 சதவீதம் இணைத்து, அந்நாட்டு வாகனங்கள் ஓட்டப்பட்டு வந்தன.

கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் ஆண்டு உற்பத்தி 1790 கோடி லிட்டர் அளவு உள்ளது. பிரேசில் நாட்டில் 83 சதவீதத்திற்கும் மேற்பட்ட கார்கள் எத்தனாலுடன் சேர்க்கப்பட்ட பெட்ரோல் மூலமாக இயங்குகின்றன. மேலும் நாட்டின் மொத்த எரிஎண்ணெய் உபயோகத்தில் எத்தனால் பங்கு 55 சதவீதம் என உள்ளது.

1925-ம் ஆண்டு ஹென்ரி போர்ட் தனது “போர்ட்’ காரை அறிமுகப்படுத்தும்போதே எதில் ஆல்கஹால் எனும் தாவர எண்ணெயை உபயோகித்தார்.

தாவர எண்ணெயே எதிர்கால எரிபொருளாகப் போகிறது எனவும் கணித்தார்.

அதிக அளவில் அமெரிக்காவும் எதனால் தயாரிக்கும் நாடு. ஆனால் பிரேசிலைப்போல அல்லாமல் கோதுமை, அரிசி, ஓட்ஸ், சோளம், சோயா போன்ற பல தானியங்களிலிருந்து அமெரிக்கா தாவர எண்ணெயை உற்பத்தி செய்கிறது.

அமெரிக்க அயோவா மாநிலத்தில் எத்தனால் தயாரிப்பிற்காக 28 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இயங்குகின்றன.

டெக்ஸôஸ் மற்றும் இதர மாநிலங்களிலும் இத்தகைய ஆலைகள் அதிக அளவு இயங்க ஆரம்பித்துவிட்டன.

தற்போது தயாராகும் எத்தனால் காற்றிலுள்ள நீரை உட்கொள்வதால் கார் எந்திரங்கள் விரைவில் துருப்பிடித்துவிடும் என்று கூறப்படுகிறது.

தாவர எண்ணெய் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பு தரும் “பசுமை எண்ணெய்’ என ஒருபுறம் புகழப்படுகிறது.

கார்பன்டை ஆக்ûஸடை இழுத்து, வளரும் தாவரம், அதிலிருந்து எண்ணெய் தயாரிக்கும்போது, கார்பன்டை ஆக்ûஸடை வெளியிட்டு விடுகிறது. இது எப்படிப் பசுமை எண்ணெய் ஆகும் என்ற கேள்வி எழுகிறது.

டச்சு ஆலோசக நிறுவனமான டெல்ப்ட் ஹைட்ராலிக்ஸ், “ஒரு டன் பனைத் தாவர எண்ணெய் தயாரிக்கும்போது 33 டன் கார்பன் வெளியீடு ஏற்படுகிறது. இது பெட்ரோலியப் பொருள்கள் வெளியீட்டை விட பத்து மடங்கு அதிகம்.

இது எப்படி பசுமை எண்ணெய் ஆகும்?’ என்று வினா எழுப்பியுள்ளது.

ஐ.நா. ஆய்வு அறிக்கை ஒன்றில் தாவர எண்ணெய், பெட்ரோலியத்தை விட உலகிற்குக் கேடு அதிகம் விளைவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் “எத்தனால்’ தொழிலால் பல்வேறு பாதகங்கள் ஏற்பட்டுள்ளன. பசுமைப் புல்வெளிகள் மற்றும் காடுகள் அழிக்கப்பட்டு கரும்புத் தோட்டங்களாக மாற்றப்படுகின்றன.

காடுகள் வெட்டப்படுவதால் கார்பன் வெளியீடு அதிகமாகிவிட்டது. இதனால் பல்வேறு உயிரினங்கள், தாவரங்கள் அழிதல், மண் சக்தியிழத்தல் ஆகிய கேடுகள் நடைபெறுகின்றன.

இப்படி தயாரிக்கப்படும் தாவர எண்ணெயை வாங்குதல் தகாது என பல ஐரோப்பிய நாடுகள் முடிவெடுத்துள்ளன.

பிரேசிலில் கரும்பு பயிரிடுவதற்காக மிக அரிய மரங்களையும், சோயா பயிரிடுவதற்காக அமேசான் மழைக் காடுகளையும் அழிக்கத் தொடங்கியுள்ளது பாதகமான செயலாகும்.

மெக்சிக்கோவில் சோளம் போன்ற தானியங்களை தாவர எண்ணெய்க்குப் பெரிதும் பயன்படுத்துவதால், மற்ற உணவுப் பொருள்கள் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது.

இதனால் உணவுக்காகப் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன.

உலகத் தாவர எண்ணெய் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தாவர எண்ணெய் திட்டத்தைக் கைவிடும்படி சீனா, இந்தியா போன்ற நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளன.

சொகுசு கார்களில் செல்வந்தர்கள் பவனி வருவதற்காக உலக மக்களின் சோற்றில் மண்ணைப்போடும் பயங்கரத்திட்டம் தாவர எண்ணெய்த்திட்டம் என்ற எதிர்ப்பு மேலோங்கி வருகிறது.

ஆக கச்சா எண்ணெய்க்கு மாற்று தாவர எண்ணெய் இல்லை என்பது தெளிவாகிறது.

—————————————————————————————————————————————–

பருவநிலை மாற்றம்: தேவை அவசரத் தீர்வு

என். ரமேஷ்

மனித சமுதாயத்தின் நடவடிக்கைகளால் ஏற்பட்டு வரும் புவி வெப்ப அதிகரிப்பால், இதுவரை காணாத அளவுக்கு பருவநிலை மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன.

இதை அறிவியல் உலகம் ஏற்கெனவே உறுதி செய்து விட்டது.

அண்மையில் வெளியிடப்பட்ட, பருவநிலை மாறுபாடுகள் குறித்த பன்னாட்டு அரசுகள் கூட்டமைப்பின் (ஐபிசிசி) நான்காவது மதிப்பீட்டின் தொகுப்பு அறிக்கை இதை உறுதி செய்துள்ளது.

நடப்பாண்டில், வங்கதேசத்தில் ஏறத்தாழ 10 ஆயிரம் பேரை பலி கொண்ட சூறாவளி, பிகாரில் 1.4 கோடி மக்களை வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றிய வெள்ளப் பெருக்கு, இத்தாலியில் எப்போதுமில்லாத வகையில் 300 பேருக்கு சிக்குன் குன்யா நோய்த் தொற்று எனப் பல்வேறு அறிகுறிகள் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டுகின்றன.

மின் உற்பத்தி, போக்குவரத்து போன்றவற்றுக்காக நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற படிவ எரிபொருள்களை எரிப்பதே வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடு உள்ளிட்ட பசுமைக் குடில் வாயுக்களின் அளவு அதிகரிக்கக் காரணம்.

2005 ஆம் ஆண்டு இந்த வாயுவின் அளவு 10 லட்சத்தில் 379 என்ற அளவில் இருந்தது. இது கடந்த 6.5 லட்சம் ஆண்டுகளில் நிலவியதில் உயர்ந்தபட்ச அளவாகும். (தொழில் புரட்சி ஏற்பட்ட 18ஆம் நூற்றாண்டில் – 280).

புவியின் தற்போதைய சராசரி வெப்பநிலை 14.5 டிகிரி சென்டிகிரேட். உலகம் தற்போதைய வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்தால் புவியின் சராசரி வெப்பநிலை 6.4 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு அதிகரிக்கும். கடல் மட்டம் 3.7 மீட்டர் வரை அதிகரிக்கக் கூடும்.

புவி வெப்பம் 2 டிகிரி அளவு அதிகரித்தாலே பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகள் முற்றிலும் மூழ்கிவிடும்; கடற்பகுதியால் சூழ்ந்துள்ள வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும். இந்நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும்.

இத்தகைய புவி வெப்ப அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்படப்போவது உலகின் 60 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள (ஏறத்தாழ 400 கோடி) ஆசியக் கண்டம்தான்.

கடல் நீரால் சூழ்தல், நன்னீர்ப் பற்றாக்குறை, மகசூல் குறைவால் உணவுப் பஞ்சம், நோய் பரப்பும் கொசுக்கள் அதிகரிப்பு எனப் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

இந்தச் சூழ்நிலையில்தான் பசுமைக் குடில் வாயுக்களைக் குறைத்தல், ஏற்கெனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் – நிகழ உள்ள பருவநிலை மாற்றத் தாக்கங்களுக்கு தகவமைத்தல் போன்ற அம்சங்களை விவாதிக்க இந்தோனேசியாவின் பாலி நகரில் டிசம்பர் 3 முதல் 14 வரை ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றத்துக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்ட 195 நாடுகளின் 13-வது மாநாடு நடைபெற உள்ளது.

36 வளர்ச்சியடைந்த நாடுகள் 1990 ஆம் ஆண்டு வெளியிட்ட கரியமில வாயு அளவில் சராசரி 5.2 சதவீதத்தை, 2008-12 ஆம் ஆண்டுகளுக்குள் குறைக்க வகைசெய்யும் கியோட்டோ ஒப்பந்தம் 1997-ல் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்த காலத்துக்குப் பிந்தைய புதிய ஒப்பந்தத்தை உருவாக்க பூர்வாங்கப் பணிகளை இந்த மாநாடு மேற்கொள்ள உள்ளது.

தொழில்புரட்சிக்கு முன்பு நிலவியதைவிட 2 டிகிரி சென்டிகிரேட் வரை மட்டுமே புவி வெப்பம் அதிகரிக்கும் நிலையை உருவாக்க, உலகம் முழுவதும் 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கார்பன்டை ஆக்சைடு அளவில் 50 சதவீதத்தை மட்டுமே 2050 ஆம் ஆண்டில் வெளியிட வேண்டும்.

இதற்கு, வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களது வெளியீட்டில் 80 சதவீதத்தைக் குறைக்க வேண்டும்; இந்தியா போன்ற வளரும் நாடுகள் 20 சதவீதத்தைக் குறைக்க வேண்டும் எனப் பரிந்துரைகள் முன் வைக்கப்படுகின்றன.

(20 சதவீதம் குறைக்க முடியாது; தனிநபர் சராசரி கணக்கில் கொள்ள வேண்டும் என திட்டக்குழுவின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்).

இந்த அளவுக்கு குறைத்தால் “வளர்ச்சி’ தடைபடும் என்ற வாதங்களுக்குப் பதில், இப்போது குறைக்காவிடில் வரும் காலங்களில் பருவநிலை மாறுபாட்டால் விளையும் பேரழிவுகளால் “வளர்ச்சியே’ கேள்விக்குறியாகும் என்பதுதான்.

இந்த இலக்குகளை எட்ட உலக ஒட்டுமொத்த உற்பத்தியில் 1.6 சதவீதத்தைக் குறைத்தால் மட்டும் போதுமானது என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அறிக்கை.

அதுமட்டுமன்றி, மாற்று எரிசக்தி, போக்குவரத்து தொழில்நுட்ப உருவாக்கத்தால் வேலைவாய்ப்பு நிலையைச் சரிக்கட்டிவிட வாய்ப்புள்ளது.

மேலும், வளரும் நாடுகளுக்கு கரியமில வாயுவை வெளியிடாத “தூய்மையான’ தொழில்நுட்பங்களை வளரும் நாடுகள் வழங்குவதற்கு அமைப்பை உருவாக்குவது; ஏற்கெனவே, அளவுக்கதிகமாக வெளியிடப்பட்ட வாயுக்களால் ஏற்பட உள்ள தாக்கங்களைச் சமாளிக்க குறைந்தபட்சம் ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி டாலர் நிதியுதவி அளிக்க ஏற்பாடு செய்வது; வெளியிடப்படும் 20 சதவீத கரியமில வாயுவுக்கு வனங்களின் அழிவு ஒரு காரணம் என்பதால் காடுகளை அழிப்பதைத் தடுப்பதற்கான அமைப்பை உருவாக்குவது ஆகியவை தொடர்பான அம்சங்களையும் பாலி மாநாடு விவாதிக்க உள்ளது.

கியோட்டோ ஒப்பந்த நடைமுறைகள் 2012 – ல் முடிவுக்கு வந்துவிடும் என்ற நிலையில், இடைவெளியின்றி புது ஒப்பந்தம் அமலுக்கு வர வேண்டும்.

இத்தகைய ஒப்பந்தம் 2009 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டால்தான், அதற்கு உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றங்கள் 2012 – க்குள் ஒப்புதல் அளித்து நடைமுறைப்படுத்த முடியும்.

கியோட்டா ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத அமெரிக்கா, கட்டாய இலக்குகளை ஒப்புக்கொள்ள மறுக்கும் இந்தியா போன்ற நாடுகளும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளன.

மாநாட்டின் இறுதிப் நிகழ்ச்சியில் 130 – க்கும் மேற்பட்ட நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

பருவநிலை மாற்றம் காரணமான பாதக விளைவுகள் தொடங்கிவிட்ட நிலையில், பேரழிவுகளிலிருந்து பூவுலகைக் காக்க உள்ள கால அவகாசம் மிகக் குறைவே.

எனவே, பாலி மாநாட்டின் முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக அமைய வேண்டும்.

—————————————————————————————————————————————–

பசுமை இந்தியா சாத்தியமா?

அன்ஷு பரத்வாஜ்

பிலிப்பின்ஸ் நாட்டின் பாலித் தீவில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் விவாதிக்கப்பட்ட புவி வெப்ப மாற்றங்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி, நச்சு இல்லாத புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம் இந்தியா எதிர்பார்க்கும் பொருளாதார முன்னேற்றத்தை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

நாட்டின் மின் சக்தி தேவை 4,000 பில்லியன் கிலோவாட் என்று திட்டக் கமிஷன் மதிப்பிட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டில் 20,000 பில்லியன் கிலோவாட் மின் சக்தி தேவைப்படும் என்றும் மதிப்பீடு செய்துள்ளது,

இந்த அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யப்போகிறோம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய சவாலாகும்.

இந்த மின் உற்பத்தியின் தேவையில் ஒரு பகுதி கரியமில வாயு இல்லாத தொழில்நுட்பங்களின் மூலம் கிடைக்கும்.

நிலக்கரி உள்ளிட்ட மூலப்பொருள்களின் மூலம் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 97 சதவிகிதம் கிடைக்கிறது.

கரியமில வாயு இல்லாத பல மின் உற்பத்தி தொழில்நுட்பங்கள் இதுவரை பெரிய அளவில் உருவாக்கப்படவில்லை. மரபு எரிசக்தித் துறையில் இருந்து மரபுசாரா எரிசக்தித் துறையில் உற்பத்தியை அதிகரிப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

எதிர்காலத் தேவையில், 15 சதவிகித உற்பத்தியை கரியமிலம் இல்லாத தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்குவதை ஒரு வழிமுறையாகக் கொள்ளலாம். இதற்கு என்னென்ன வாய்ப்புகள்தான் உள்ளன?

காற்றாலை மின் உற்பத்தி நல்லதொரு நம்பகமான தொழில்நுட்பம். இந்தியாவில் தற்போது காற்றாலை மூலம் 7,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவில் காற்றாலைகள் மூலம் 45,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் காற்றின் வேகம் குறைவுதான். இதன் காரணமாக காற்றாலை விசிறிகள் முழு வேகத்தில் இயங்க முடியவில்லை.

காற்றாலைகள் மூலம் 45,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்தாலும், இது தேவையில் ஒரு சதவிகிதத்தை மட்டுமே பூர்த்தி செய்யும். இதனால், காற்றாலை மின் உற்பத்தி அதிக முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது.

அடுத்துள்ளது தாவரங்களைக் கொண்டு மின் உற்பத்தி. எண்ணெய் சத்து உள்ள தாவரங்கள் மூலம் பயோடீசலை உற்பத்தி செய்ய முடியும்.

சர்க்கரை ஆலைகளில் மொலாசிஸில் இருந்து எத்தனால் தயாரிக்க முடியும். கரும்புச்சக்கை, உமி போன்றவற்றில் இருந்து மின்சாரத்தைத் தயாரிக்க முடியும்.

மின் உற்பத்திக்கு தாவரங்களையும் பயன்படுத்தலாம். இந்தியாவில் விளைச்சலுக்கு தகுதியான 30 மில்லியன் ஹெக்டேர் நிலம் தரிசாகக் கிடக்கிறது. இதில் 20 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் எண்ணெய் சத்துள்ள தாவரங்களை சாகுபடி செய்ய பயன்படுத்தினால் 25 மில்லியன் டன் தாவர எண்ணெய் உற்பத்தியாகும். இதன் மூலம் 300 பில்லியன் கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும்.

எத்தனால் மூலம் 100 பில்லியன் கிலோவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், இந்தியாவின் மின் உற்பத்தித் தேவையில் 2 சதவிகிதத்தையே பூர்த்தி செய்ய முடியும்.

இந்தியாவில் புனல் மின் நிலையங்கள் மூலம் 84,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யமுடியும். ஆனால், தற்போது 34,000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. புனல் மின் உற்பத்தி மூலம் குறிப்பிட்ட இலக்கை எட்டினாலும், அதுவும் மொத்த தேவையில் 2 சதவிகிதமாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் அபரிமிதமாகக் கிடைப்பது நிலக்கரி. அனல் மின் நிலையங்கள் மூலம் 51 சதவிகித மின் உற்பத்தி செய்யப்படுகிறது. எதிர்காலத்தில், இந்தியாவின் மின் உற்பத்தியில் நிலக்கரியே முக்கிய பங்கு வகிக்கப் போகிறது.

இருந்தாலும், நிலக்கரி மூலம் ஒரு கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்போது. ஒரு கிலோ கரியமில வாயுவும் வெளியேற்றப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொண்டேயாக வேண்டும். இதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். இதற்கான தொழில்நுட்பம் பல மடங்கு செலவை இழுத்துவிடும்.

அணு மின் நிலையங்கள் மூலம் தற்போது 4,120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மொத்த உற்பத்தியில் 3 சதவிகிதத்துக்கும் குறைவுதான்.

உள்நாட்டில் மிகக் குறைந்த அளவே யுரேனியம் கிடைக்கிறது. இதனால் புளுடோனியம், தோரியம் தொழில்நுட்பங்களைக் கொண்டு மின் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா திட்டமிடலாம்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் இலகுரக நீர் மின் உற்பத்தி சாதனங்களை இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது. இதைப் பயன்படுத்தி 24,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும்.

இந்தியாவின் பெரும்பகுதியில் சூரிய சக்தி நன்றாக கிடைக்கிறது. 20 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் சூரிய சக்தி மூலம் 24,000 பில்லியன் கிலோவாட் மின் உற்பத்தி கிடைக்கும். இது நச்சுத்தன்மை கொண்ட கரியமில வாயுவை வெளியிடாது.

சூரிய சக்தி அனல் மின் நிலையங்கள் மற்றொரு வாய்ப்பாகவே அமைகிறது. காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் 20 கி.மீ. சுற்றளவு கொண்ட நிலத்தில் சூரிய சக்தி மூலம் 2,000 மெகாவாட் மின்சாரம் உறபத்தி செய்யமுடியும். இது எட்டு அனல் மின் நிலையங்களின் உற்பத்திக்குச் சமமாகும்.

கரியமில வாயுவை வெளிப்படுத்தாத மின் உற்பத்திக்கு முயற்சிக்க வேண்டும் என்றால், நம்மிடம் உள்ள எல்லா மூலப் பொருள்களையும் நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழில்: டி.எஸ். ஸ்ரீநிவாசன்

Posted in Agriculture, Alternate, Amazon, America, Analysis, Auto, Automotive, Brazil, Cane, Carbon, Cars, CO, CO2, Commerce, Consumption, Corn, Deforestation, Dhals, Diesel, Earth, Eco, Economy, emissions, energy, Environment, ethanol, Farming, Food, Foodgrains, Ford, Forests, Fuel, Gas, Grains, Green, Impact, Industry, Iowa, Land, LNG, Natural, Nature, Oats, oil, Palm, Petrol, Plants, Pollution, Prices, Pulses, Rainforest, Research, rice, Sector, Solar, Sources, Soya, Sugar, Sugarcane, Sunflower, Trees, US, USA, Vegetables, Vehicles, Wheat, Wind | Leave a Comment »

Kalainjar Mu Karunanidhi – DMK Rule and achievements: Party Conference in Nellai

Posted by Snapjudge மேல் நவம்பர் 23, 2007

அவர்கள்: கருணாநிதி காட்டம்

Friday, 23 November , 2007, 12:49

உலகின் வரலாற்று நாயகர்களைப் பற்றி – தியாக சீலர்களைப் பற்றி – தீரர்கள், வீரர்கள் பற்றி எழுதினால்; இப்போதுதானே இதெல்லாம் இளைஞர்களைக் கவர்ந்திழுக்க எழுதுகிறார் – என்று தங்களுக்கே உரிய நாராச நடையில் பொய், புளுகு, புரட்டுகளை அறிக்கைகளாக்கி என் எழுத்துக்கு உள்நோக்கம் கற்பித்து வெளியிட்டு மகிழ்கிறார்கள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இளைஞர் எழுச்சி குறித்தும் – இளைஞர்கள் புரிந்துள்ள இமாலய சாதனைகள் பற்றியும் – இன்றுடன் நான் எழுதிய பதினைந்து கடிதங்களை, வரலாற்றுக் கருவூலமெனப் போற்றிப் பாராட்டி, புகழ்ந்துரைத்து, உன் போன்றோர் பொழிந்துள்ள வாழ்த்துகளை முத்தமிட்டுப் பையில் திணித்துக்கொள்வதில் பெருமையுறுகிறேன். அதற்குள் சில ஆத்திரக்காரர்களுக்கு; அவசரக்காரர்களுக்கு ஏற்கெனவே அவர்தம் நெஞ்சில் நிரம்பியுள்ள அசூயை, கொதிப்பேறிப் பொங்கி வழிந்து; அத்துடன் நஞ்சும் கலந்து ஏதேதோ “திருவாய்ச் சிந்து” பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் என்ன; நேற்றைய நாளில் அரசு தலைமைச் செயலகத்தில் பதினெட்டுப் பச்சிளம் குழந்தைகளின் இருதய சிகிச்சைக்காக அரசு சார்பில் சிகிச்சை கட்டணத்தில் பெரும்பகுதியை அதாவது 90 சதவிகித அளவிற்கு அரசே செலுத்துவதற்கு ஒப்புதல் அளித்து, நல் மனம் படைத்த மருத்துவமனை உரிமையாளர்கள் ஒவ்வொருவருடனும் ஒப்பந்தம் செய்து; அந்தக் குழந்தைகளுக்கு அதற்கான பதிவு அட்டைகள் வழங்கினேனே; அதைப் பற்றி நினைத்தார்களா?

நேற்றைய தினமே, 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும், பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் கே.எம். செரியரின் பிரான்டியர் லைப்லைன் நிறுவனமும் இணைந்து மருத்துவ கிராமம் ஒன்றினைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதே, அதைப் பற்றி இந்த அசூயையாளர்கள் அறிவார்களா?

அது மாத்திரமல்ல, தமிழக அரசின் சார்பில் இந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கான தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, அந்தத் திட்டங்கள் எல்லாம் நடைமுறையில் இருந்து வருகின்ற நேரத்தில், நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் மிகப்பெரிய தொழில் நிறுவனமான “போர்டு” தொழிற்சாலையின் ஆசியா பசிபிக் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கான செயல் துணைத் தலைவர் ஜான் பார்க்கர் என்னைச் சந்தித்தபோது, மேலும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்திலே திட்டம் தொடங்கிட இருப்பதாகவும் அறிவித்துச் சென்றிருக்கிறார். அன்றாடம் அறிக்கை விட்டுக்கொண்டிருப்போர் அறியமாட்டார்களா இதனை?

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து; வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாக வழங்க முடிவு செய்து, அதற்காக வெளிப்படையான ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகள் கோரி, சட்டமன்றக் கட்சித் தலைவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு எனது தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முன்னிலையில் ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டு, 25 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு; 18.11.2007 வரை 23 லட்சத்து, 79 ஆயிரத்து, 721 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அளிக்கப்பட்டு, அவற்றில் 21 லட்சத்து 32 ஆயிரத்து 956 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளனவே.

மேலும் 750 கோடி ரூபாய்ச் செலவில் 34 லட்சத்து 25 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்து வழங்குவதற்காக முடிவு செய்யப்பட்டு, வருகிற 27ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பங்கேற்று, அவைகளை வழங்கப் போவதாக அறிவித்துள்ளோமே, அதைப் பற்றிப் பாராட்டுரை பகரப் போகிறார்களா?

இது போலவே, ஏழை – எளிய தாய்மார்களுக்கு இலவசமாக எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகள் வழங்கிடுவோம் என்று அறிவித்து, 16.11.2007 வரை 3 லட்சத்து ஓர் ஆயிரத்து 560 எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகள் வழங்கப்பட்டு, தொடர்ந்து 27.11.2007 முதல் மேலும் எட்டு லட்சம் எரிவாயு அடுப்புகள் வழங்கப்படவுள்ளனவே; இதனைப் பற்றி எரிச்சல்காரர்கள் புகழப் போகிறார்களா?

ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 508 நிலமற்ற ஏழை விவசாயி – விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 688 ஏக்கர் நிலம் இலவசமாக அரசின் சார்பில் அளிக்கப்பட்டுள்ளதே, இது குறித்து பாராட்டு வழங்கப் போகிறார்களா?

2 வயது முதல் 15 வயது வரை உள்ள 71 லட்சம் குழந்தைகள், மாணவர்களுக்குச் சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டைகள் வழங்கப்படுகிறதே, அதைப் பற்றி கருத்து தெரிவிக்கப் போகிறார்களா?.

1 கோடியே 78 லட்சத்து 240 குடும்பங்களுக்கு கிலோ அரிசி 2 ரூபாய் வீதம் மாதம் ஒன்றுக்கு 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறதே, எரிச்சல்காரர்கள் அதுபற்றி என்ன சொல்லப் போகிறார்கள்?

22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு சுமார் 7000 கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறோமே, இன்றைக்கு ஆர்ப்பாட்டம் செய்வோர் அதற்காக வரவேற்பு தெரிவித்ததுண்டா?

10.11.2007 வரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 287 வீட்டு மனைப் பட்டாக்கள் இலவசமாக வழங்கப்பட்டிருப்பதோடு, கடந்த 14ஆம் தேதியன்று அதுபற்றி ஆய்வு நடைபெற்று, இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கிட எந்தவிதமான வருமான உச்ச வரம்பும் கிடையாதென்று அறிவித்திருக்கிறோமே, எது எதற்கோ வக்கணை பேசுவோர் அதைப் பற்றிப் பாராட்டு கூறியிருக்க வேண்டாமா?.

1 இலட்சத்து 60 ஆயிரத்து 531 விவசாயக் குடும்பங்களுக்கு விவசாயி – விவசாயத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு நல உதவித் திட்டத்தின்கீழ் 69 கோடியே 29 லட்சத்து 11 ஆயிரத்து 719 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதே, அதைப் பற்றி ஒரு வார்த்தை உண்டா?

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 73 ஆயிரத்து 665 ஏழைப் பெண்களின் திருமணங்களுக்காக 110 கோடியே 49 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்காக – 4 லட்சத்து 72 ஆயிரத்து 20 கர்ப்பிணி பெண்களுக்காக 206 கோடியே 14 லட்சத்து 33 ஆயிரம் ரூபாயும் நிதி உதவியாக வழங்கப்பட்டுள்ளதே, கேலி பேசுவோர் இதைப் பற்றி எல்லாம் கனவிலாவது நினைத்தது உண்டா? மக்களின் தேவைகளுக்காக நிறைவேற்றப்படும் திட்டங்கள் பற்றி அவர்களுக்கென்ன கவலை? இப்போது அவர்களது கவலையெல்லாம் திருநெல்வேலியில் விரைவில் நடைபெறவிருக்கும் மாநில இளைஞர் அணி மாநாட்டைப் பற்றித்தான்! அதற்காகத்தான் அந்த நண்பர்கள் பேசுகிறார்கள். கண்டனம் – கேலியென முழங்குகிறார்கள்.

உலகின் வரலாற்று நாயகர்களைப் பற்றி – தியாக சீலர்களைப் பற்றி – தீரர்கள், வீரர்கள் பற்றி எழுதினால்; இப்போதுதானே இதெல்லாம் இளைஞர்களைக் கவர்ந்திழுக்க எழுதுகிறார் – என்று தங்களுக்கே உரிய நாராச நடையில் பொய், புளுகு, புரட்டுகளை அறிக்கைகளாக்கி என் எழுத்துக்கு உள்நோக்கம் கற்பித்து வெளியிட்டு மகிழ்கிறார்கள்.

இளைஞர்கள், இன உணர்வு பெற வேண்டுமென்றும் – இயக்கத்தின் இலட்சியங்களை உணர்ந்து இடையறாப் பணி ஆற்ற வேண்டும் என்றும் – என் உள்ளத்தில் என் இளம் பிராயத்திலேயே (1937-1938) 13 வயதிருக்கும் போதே “செல்வ சந்திரா” எனும் புதினம் எழுதி; அதன் முன்னுரையிலேயே இவ்வாறு குறிப்பிடும் அளவுக்கு லட்சிய தாகம் இருந்துள்ளது. மேலே வெளியிடப்பட்டுள்ள என் கையெழுத்து ஆதாரம் “கலைஞரின் கவிதை மழை” என்ற பெரிய நூலில் வெளியிடப்பட்டுள்ளதை எப்போது வேண்டுமானாலும் எரிச்சல்கார நண்பர்கள் பார்த்துத் தெளிவு பெறலாம்.

அதைத் தொடர்ந்து 1942இல் அண்ணாவின் “திராவிட நாடு” இதழில், “இளமைப் பலி” என்ற எனது கட்டுரையும் வெளிவந்துள்ளது. அதன் பிறகு 1945இல் நான் எழுதிய “கிழவன் கனவு” என்ற குறுங்கதைப் புத்தகம் வெளிவந்ததில் – “எங்கு பார்க்கினும் விடுதலை விருத்தம்! எங்கும் சமதர்ம சங்க நாதம்! தமிழொளியை அரசியலில் இணைத்து திராவிடர் உரிமையோடு உடைமையோடு உண்மையோடு உள்ள எழுச்சியோடு உவகை உந்த வாழ்ந்திடும் வரலாறு! ஒரு தமிழன் தன்மானமின்றி அய்யரைச் சாமி என்றழைத்ததற்காக ஆறு மாதக் கடுங்காவல்! சாது எனக் கூறி, சூது செய்த ஒருவன் சாகும் வரையில் சிறைப்பட்டான்!.

பட்டமும், பதவியும் நமது திட்டமென ஒரு பத்திரிகாசிரியன் எழுதியதற்காக மக்கள் மன்றத்திலே அவன் மண்டூகம் எனப்பட்டான். ஏழையைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் மிகுதியாக ஏற்பட்டதாம் ஆநிரைகோ என்ற தமிழனுக்கு! சாதி, மதம், கடவுள்கள் என்ற கற்பனைப் பூச்சாண்டிகள் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் உலவின என்று உரநெஞ்சன் என்ற சரித்திர ஆசிரியர் ஒரு நூலில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தி எதிர்ப்பு! சிறைச்சாலை! தாளமுத்து நடராஜன் களப்பலி! தமிழைக் காக்கச் சிறை சென்ற பெண்மணிகளின் புறநானூறு! மானங்காக்க மாணவர் செய்த கிளர்ச்சி! ஓமான் கடல் மறைத்த சர்.ஏ. டி.பன்னீர்செல்வம்! – இதனை அந்தக் கிழவன் கனவாகக் கண்டான்” என்று குறிப்பிட்டிருப்பதை கருத்துக் குருடர் தவிர மற்றவர்கள் கண்டு மகிழ முடியும். அது என்ன; இப்போது எழுதியதா? 84 வயதில்? இல்லை; 1945இல் என் 21ஆவது வயதில் எழுதியது! நூலின் பெயர் “கிழவன் கனவு” – அப்போது விலை ரூ.1.25 – அதை அப்போது எழுதிய இந்த இளைஞனுக்கு வயது; 21 தான்! பொல்லாங்கு பேசுவோர் இதைப் புரிந்துகொள்வது நல்லது!

1942ஆம் ஆண்டு; 18 வயதிலேயே அண்ணாவின் “திராவிட நாடு” வார இதழில் “இளமைப் பலி” என்ற கட்டுரை எழுதியவன் நான். எனவே இலட்சியத்துக்காக இளமையைப் பலி கொடுக்கவும்; இதோ தயார்! என எழுந்த இளைஞர் கூட்டத்தில் ஒருவன்தான்; இன்று முதிர்ந்த வயதில் மாநில இளைஞர் அணி மாநாட்டுக்காக – வரலாற்று நாயகர்கள் பற்றி 15 கட்டுரைகள் தீட்டி; அவர்களின் நாட்டுப் பற்று – சமுதாயப் பற்று – போன்ற கொள்கை கோட்பாடுகளை, இலட்சிய வேட்கைகளை நினைவூட்டி – புதியதோர் இளைஞர் எழுச்சி பூத்துக் குலுங்கிட எழுதுகோல் எடுத்து இளைஞனே விழி; எழு! நல் – எண்ணங்களை எங்கணும் நடு! எனத் தீட்டிடுக! தீரர்களுக்கான அழைப்பு என்று வீர இளைஞர்காள்; உமை வேண்டுகிறேன்.

மாநாட்டுத் தலைவரும் மாநில இளைஞர் அணிச் செயலாளருமான தம்பி மு.க.ஸ்டாலின் காற்றினும் கடிய வேகத்தில் மாநாட்டுக்கான ஆக்கப் பணிகள் அருமையாக அமைந்திட – அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் சுற்றுப் பயணம் செய்கிறார். அவருடன் இளைஞர் அணியின் எழுச்சிப் படையும் அணிவகுத்திடக் கண்டு அக மகிழ்கிறேன்.

மாநாட்டுக்கான முதல் விளம்பர அழைப்பே; முத்துக் கோத்தது போல் நம்மை முறுவலித்திட வைக்கிறது! மேலும் அடுத்தடுத்த சிறப்புகளை டிசம்பர் 15, 16 ஆகிய நாட்களில் நெல்லையில் காண்போம்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Posted in Achievements, Agriculture, Commodity, Conference, DMK, Elections, Farmers, Farming, Freebie, infrastructure, investments, Justifications, Kalainjar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Laments, Loans, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Manifesto, Marriages, Mu Ka, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Stalin, Nellai, News, Party, peasants, Politics, Polls, Poor, Prices, Reports, rice, Rule, Sops, Statements, Thirunelveli, TIDCO, Tirunelveli, TV, Villages, Votes, Weddings, Welfare | Leave a Comment »

Agricultural Loans – Rich vs Poor farmers: Banking

Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2007

கைப்புண்ணுக்குக் கண்ணாடி!

sainath_farmer_suicides_agriculture.jpgவங்கிகள் மூலம் விவசாயத்திற்கு வழங்கப்படும் கடன்தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக, மத்திய அரசின் அறிக்கையொன்று கூறுகிறது. இந்த அறிக்கை, விவசாய முன்னேற்றத்திற்கும், விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும் எந்த அளவுக்குத் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், அரசின் விவசாயத் துறையும் முனைப்புடன் செயல்படுகின்றன என்பதை புள்ளிவிவரங்களுடன் விளக்க முற்பட்டிருக்கிறது.

ஒருபுறம், விவசாய உற்பத்தியில் பின்னடைவு, வளர்ச்சியில் தளர்ச்சி, விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி என்று செய்திகள் வந்துகொண்டிருக்கும் வேளையில், விவசாயத்துறைக்கு அளிக்கப்படும் நிதியுதவி, எதிர்பார்த்த இலக்கைவிட அதிகம் என்கிற செய்தி வியப்பை ஏற்படுத்துகிறது.

2006-2007 நிதியாண்டுக்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ. 1,75,000 கோடியைத் தாண்டி, மொத்த கடன்தொகை அளிப்பு மட்டும் ரூ. 2,03,269 கோடி கொடுக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், விவசாயக்கடன் நிவாரணத் திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு அதிக அளவு கடன் வழங்குவது என்றும், தனியார் deaths_suicides_india_farming_peasants.jpgகடன் சுமை மற்றும் விவசாய மூலதனமின்மையை அகற்றுவது என்றும் அரசு தீர்மானித்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில், நலிந்துவரும் விவசாயத்துறையை மீண்டும் புத்துயிர் பெற வைப்பது என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.

நடப்பாண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில், குறைந்தது 50 லட்சம் விவசாயிகளிடையே முறைப்படுத்தப்பட்ட வங்கிச்சேவையை அறிமுகப்படுத்துவது என்றும், ரூ. 2,25,000 கோடியை விவசாயக் கடனுக்காக ஒதுக்குவது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடன்தொகை வங்கிகள் மூலம் அளிக்கப்பட்டது என்றும், அதிக அளவில் விவசாயிகள் தனியாரிடம் கடன் வாங்கி விவசாயம் செய்வதைத் தவிர்த்து வங்கிகள் மூலம் தங்களது நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்டுகிறார்கள் என்றும், அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கான புள்ளிவிவரங்களும் தரப்படுகின்றன.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துவிட்டார்களா, விவசாயம் லாபகரமாக நடக்கிறதா, விவசாய உற்பத்தி அதிகரித்துவிட்டிருக்கிறதா என்று கேட்டால், அதைப்பற்றி இந்த அறிக்கையோ, புள்ளிவிவரங்களோ எதுவுமே பேசுவதில்லை. கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கைகளை வைத்துப்பார்த்தால், இத்தனை கோடி ரூபாய்கள் – ஒன்றா, more_deaths_dead.jpgஇரண்டா, பல லட்சம் கோடி ரூபாய்கள்-விவசாயத்துறைக்கும், விவசாயிகளுக்கும் தரப்பட்டும், கிராமங்களில் அதன் தாக்கம் காணப்படவில்லை என்பதுதான் உண்மை.

இன்னும் சொல்லப்போனால், இத்தனை லட்சம் கோடி ரூபாய்கள் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கிராமப்புறங்களிலுள்ள விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டதாகச் சொன்னாலும், விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன. கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறங்களுக்கு மக்களின் இடம்பெயர்தல் தொடர்கிறது. இதற்கு என்ன அர்த்தம்? ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அதிகம் படிக்காத அரைகுறைப் பாமரனுக்கு இதற்கான காரணம் தெரியும்.

இந்தியாவில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான விவசாயிகள் இரண்டு அல்லது மூன்று ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிட்டுதான் தங்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த விவசாயிகளில் பத்து சதவிகிதத்தினர்கூட வங்கிச்சேவையைப் பற்றித் தெரியாதவர்களாகவே இருந்து வருகிறார்கள். அப்படியே தெரிந்திருந்தாலும், தனியாரிடம் வாங்கிய கடனுக்குக் கட்டுப்பட்டு, அவர்களது பிடியிலிருந்து தப்பமுடியாமல் தவிப்பவர்களாக இருப்பவர்கள். வங்கிகளிலிருந்து இவ்வளவு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி அனுபவிப்பவர்கள் பெரிய நிலச்சுவான்தார்களே தவிர இதுபோன்ற ஏழை விவசாயிகள் அல்லர்.

எங்கே போயிற்று இத்தனை லட்சம் கோடி ரூபாய்களும் என்று ஆராய்ச்சி செய்வது கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேடும் வேலை. ஆட்சியாளர்களின் ஆராய்ச்சி தொடரும்வரை, ஏழை விவசாயிகளின் தற்கொலைகளும் தொடரும்.

—————————————————————————————————————————————————

விவசாயத்தில் ரசாயனங்கள் ஆதிக்கம்

இரா. மகாதேவன்

இயற்கை வேளாண் முறைகளை பெரும்பான்மையான விவசாயிகள் தவிர்த்து வருவதால் விவசாயத்தில் ரசாயனங்களின் ஆதிக்கம் தொடர்கிறது.

நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஏராளமான வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகும் உழவர்கள் வாங்கிய கூட்டுறவு வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டிய நிலையே நீடித்து வருகிறது.

விவசாயத்தையும், உழவர்களையும் முன்னேற்றுவதற்காக ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, மின்சாரம் போன்றவற்றுக்கு மானியம் அளித்தும் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தபாடில்லை.

நாடு முழுவதும் பரவலாக விவசாயிகளின் பட்டினிச் சாவுகள் தெரிந்தும், தெரியாமலும் நடந்துகொண்டே இருக்கின்றன.

இந்நிலைக்கு காரணங்கள் ஆராயப்பட்டு வந்தாலும், விவசாயம் உழவர்களுக்கு லாபகரமானதாக இல்லை என்பதும், நவீன விவசாய முறைகள் அவர்களை உயர்வுக்கு இட்டுச் செல்லவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மையாக விளங்கி வருகிறது.

இந்நிலையின்தான் விவசாயத்தை லாபகரமானதாகவும், கேடு இல்லாததாகவும் மாற்ற இயற்கை வேளாண் ஆர்வலர்கள் அதீத முயற்சி எடுத்து வருகின்றனர்.

விவசாயம் மனித வாழ்விற்கு அடிப்படையான உணவு உற்பத்தி மையம் என்ற நிலை மாறி, தற்போது சந்தைப் பொருளான பிறகு அதன் தன்மை என்ன என்பதையும், உணவு தானியங்களே மனித நோய்களின் தோற்றுவாய் என்ற நிலை எவ்வாறு உருவானது என்பதற்கும் இயற்கை வேளாண் ஆர்வலர்கள் பல காரணங்களைக் கூறுகின்றனர்.

இயற்கை உழவிற்கு முக்கிய அடிப்படையான கால்நடைகள் வளர்ப்பு பெருமளவில் குறைந்து, அவை இறைச்சிக்காக உற்பத்தி செய்யப்பட்டு, அழிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக ரசாயன உர உபயோகமும், பூச்சிக்கொல்லியின் பயன்பாடும் பல மடங்காக உயர்ந்துள்ளன.

உதாரணமாக, 1960-61 ஆம் ஆண்டு காலகட்டத்தில், வயல்களில் 5000 டன் ரசாயன உரம் இடப்பட்டது. இது 1998-99-ல் 13 லட்சம் டன்னாக (சுமார் 260 மடங்கு) உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய நிலையில் பயன்பாடு மேலும் உயர்ந்துகொண்டே உள்ளது.

ஆனால், ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளின் விலை உயர்ந்த அளவிற்கு விளைச்சலோ அல்லது விளைபொருள்களின் விலையோ உயரவில்லை என்பது நிதர்சனம்.

இயற்கை விவசாயத்திற்கான ஆய்வுகளுக்கும், இடுபொருள்களுக்கும் அரசின் முழுமையான உதவி தேவை என்கின்றனர் இயற்கை வேளாண் ஆர்வலர்கள்.

இயந்திரங்களும், ரசாயனங்களும் மக்களின் வேலைவாய்ப்பை பறித்துக் கொண்டதால் போதிய உணவு அல்லது சத்தான உணவு இல்லாமல் கோடிக்கணக்கான மக்கள் நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அயல் நாட்டு நிறுவனங்கள் மரபணு மாற்ற விதைகளைத் திணித்ததன் விளைவாக நம் நாட்டின் பாரம்பரிய விதைகள் வழக்கொழிந்து போய்விட்டன.

நவீன விவசாயத்தைக் கைவிட்டு, நிலைத்து நீடித்திருக்கவல்ல ஓர் உழவாண்மையை நாம் கையிலெடுக்க வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

கடுமையான, உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட அதேசமயம் நமது நாட்டில் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் பூச்சிமருந்துகளால் இன்று நாம் உண்ணும் ஒவ்வொரு உணவுப் பொருளும் எஞ்சிய நஞ்சின் மிச்சங்களால் நிறைந்திருக்கின்றன.

இந்த நஞ்சுகள் விதவிதமான புற்றுநோய்களையும், சிறுநீரகக் கோளாறுகளையும், பிறவி நோய்களையும், மூளை வளர்ச்சியற்ற குழந்தைகளையும் நடமாடச் செய்கின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.

இயற்கை வேளாண் ஆர்வலர்களின் கூற்றுப்படி, மூதாதையர்கள் கண்டறிந்த இயற்கை வேளாண் முறை மனிதர்கள், கால்நடைகள், பயிர்கள் ஆகிய 3 துறைகளிலும் மருந்தாகவும், வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுகிறது.

நோயில்லாத உலகை உருவாக்கவும், விவசாய முதலீடு லாபம் சார்ந்த தொழிலாக மாறவும் உழவர்கள் இயற்கை வேளாண் முறைகளுக்கு முழுமையாக மாற வேண்டும் என்பது இயற்கை வேளாண் ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

இதை உழவர்கள் முழுமையாக உணர்ந்து அந்நிலைக்கு மாற நீண்ட காலம் பிடிக்கலாம். அவர்களை இயற்கை வேளாண்மைக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

இயற்கை வேளாண் முறைகளைக் கடைப்பிடிக்கும் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு நில வரியை தள்ளுபடி செய்வது, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், ஊக்கிகளை விற்பனை செய்வதற்குப் பதிலாக மண்புழு உரம், இயற்கை பூச்சிவிரட்டிகள், ஊக்கிகளை விற்பனை செய்தல்.

சுயஉதவிக் குழுக்களுக்குப் பயிற்சியளித்து மக்கும் உரங்கள், மண்புழு உரங்கள் உள்ளிட்ட இயற்கை வேளாண் முறைகளுக்கான இடுபொருள்களை தயாரிக்க கடன் வழங்குதல்.

அவ்வாறான பொருள்களை வணிக நோக்கில் உற்பத்தி செய்து விற்க முனைவோருக்கு விற்பனை வரி உள்ளிட்டவற்றில் சலுகைகளை வழங்குதல்.

வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் கல்வியின்போது, கிராமங்களில் உதவித்தொகையுடன் சேவையாற்ற வேண்டும் என்ற முறையைக் கொண்டுவந்து, அவர்கள் மூலம் இயற்கை வேளாண் நுட்பங்களை உழவர்களிடம் கொண்டுசெல்லுதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரசு நேரடியாகவும், மறைமுகமாகவும் இயற்கை வேளாண் முறைகளை ஊக்குவித்து வந்த போதிலும், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், மரபணு மாற்ற விதைகளை அனுமதித்தல் உள்ளிட்டவற்றிலும் தீவிரம் காட்டுவதன் காரணம் தெரியவில்லை.

ரசாயனங்களால் கிடைக்கும் உடனடி பலன்களைப் போல், இயற்கை வேளாண் முறைகளில் கிடைப்பதில்லை என்ற சிலரின் தவறான பிரசாரமும் உழவர்களை இதன்பால் செல்ல யோசிக்க வைத்திருக்கிறது.

இவற்றையெல்லாம் கடந்து நோயில்லாத உலகை உருவாக்கவும், விவசாயம் லாபகரமானதாக மாறவும் அவற்றுக்கான மானியங்களை சுமந்து செல்வதிலிருந்து அரசு விடுபடவும் இயற்கை வேளாண் முறைகளே உதவும் என்ற ஆர்வலர்களின் கூற்றை அரசு கூர்ந்து கவனித்து ஆவன செய்ய வேண்டும்.

—————————————————————————————————————————————————-

தேவை புதியதொரு பார்வை!

எம். ரமேஷ்

ஏழை மக்களுக்கான மானிய உதவிகள் உரியவர்களைச் சென்றடையவில்லை. எனவே இதைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளது, ஏழைகள் வயிற்றில் நிச்சயம் புளியைக் கரைத்திருக்கும்.

இந்த ஆண்டு மானிய ஒதுக்கீடு ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் என நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ள நிலையில் பிரதமரின் இந்தப் பேச்சு, ஏழைகளுக்குப் பேரிடியாய் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

“”பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் அமல்படுத்தப்பட்ட மானியத் திட்டங்கள் உரிய பலனை அளிக்கவில்லை. மானியத் திட்டங்கள் தோல்வியடைந்துள்ளதை நமது முந்தைய அனுபவங்கள் உணர்த்துகின்றன. எனவே நாம் அத்தகைய மானியத் திட்டங்கள் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று பிரதமர் கூறியுள்ளதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள ஏழை எளிய மக்களுக்கானத் திட்டங்களில் மானியம் அளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் அத்தகைய மானியத் திட்டங்களால் எந்தப் பலனும் இல்லையென பிரதமர் கூறுவது அவர் மனத்தில் மற்றொரு திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளார் என்பதையே உணர்த்துகிறது.

அரசின் மிக மோசமான பொருளாதாரக் கொள்கைகளால்தான் மானியத் திட்டங்கள் தோல்வியடைந்தன என்பதை மறைக்க பிரதமர் முயல்கிறார். இதைக் கருத்தில் கொண்டே, மானியத் திட்டங்கள் பலன் தராததற்கு நிர்வாக முறைகளே காரணம் எனத் தவறாகப் பிரசாரம் செய்வதாகக் பொருளாதார நிபுணர்கள் கூறும் வாதத்தில் பொருள் இல்லாமல் இல்லை.

பிரதமர் மற்றும் நிதியமைச்சரின் இத்தகைய பிரசாரத்துக்கு, மானியத் திட்டங்களை மேலும் திறம்படச் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கம் காரணம் அல்ல. மாறாக ஏழைகள் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதியை மாற்றி பெரும் பணக்கார நிறுவனங்களுக்குச் சலுகைகள் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செயல்படுகின்றனரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோலியப் பொருள்களுக்கு அளிக்கும் மானியம் முழுவதையும் எக்ûஸஸ் வரி, “வாட்’ வரி என்று பல்வேறு வரிகளின் பெயர்களில் மத்திய அரசு திரும்ப வசூலித்துக் கொள்கிறது என்பதையும் பிரதமர் சுட்டிக் காட்டியுள்ளார். அந்த வகையில் ரூ. 1 லட்சம் கோடியில் அரசுக்கு வரியாகத் திரும்பக் கிடைக்கும் தொகை எவ்வளவு என்பதைத் தெரிவிக்க வேண்டிய கடமையும் பிரதமருக்கு உள்ளது.

நேரடி மானியம், மறைமுக மானியம், வர்த்தக மானியம், கொள்முதல் மானியம், நுகர்வு மானியம் என பல வகையில் மத்திய அரசு மானியம் அளிக்கிறது.

மானியத்துக்காக அரசு செலவிடும் தொகையில் 38 சதவீதம் உணவு, உரம் மற்றும் பெட்ரோலியப் பொருள்களுக்கே ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

உணவுக்கான மானியம் என்பது ரேஷனில் வழங்கப்படும் அரிசிக்கு அளிக்கப்படுவது, விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும்போது அளிப்பது ஆகியனவாகும்.

இது தவிர வேளாண்துறையை ஊக்குவிக்க உர மானியம் அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் பெட்ரோலியப் பொருள் நுகர்வு அதிகமாக உள்ளது. ஆனால் பெட்ரோலியப் பொருள்களைப் பொருத்தமட்டில் பெருமளவு இறக்குமதியைச் சார்ந்தே இருக்க வேண்டிய சூழ்நிலை நமக்கு. இதனால் மானியத்தில் 50 சதவீதத்துக்கு மேல் பெட்ரோலியப் பொருள்களுக்கு வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தாராளமயமாக்கல் அறிமுகம் ஆவதற்கு முன்னர் அதாவது 1990-91-ம் ஆண்டில் உணவுக்கான மானியம் ரூ. 2,450 கோடி மட்டுமே. தற்போது அது ரூ. 30 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது.

உரத்துக்கான மானியம் ரூ. 4,389 கோடியிலிருந்து படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ. 15 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டு ஏற்றுமதியாளர்களுக்கு மட்டும் சலுகையாக ரூ. 1,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

60 ஆண்டுகளான சுதந்திர இந்தியா சுபிட்சமாக இருக்கிறதா? இல்லை, நிச்சயமாக இல்லை. சுபிட்சமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இல்லை.

60 ஆண்டுக்கான மக்களாட்சிக்குப் பிறகும் ஏனிந்த நிலைமை?

1947-ல் இந்திய மக்களின் வாழ்க்கைத் தரம் எப்படியிருந்தது? 2007-ல் எப்படியிருக்கிறது? 60 ஆண்டுக்கால இடைவெளியில் பொருளாதார ரீதியாக மக்களின் வாழ்க்கைத் தரம் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது? நாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிய பங்கு போய்ச் சேர்ந்திருக்கிறதா? இல்லையெனில் அதற்குக் காரணம் என்ன? அது சேராததற்கு என்ன காரணம்? இடையில் என்ன நடந்தது என்கிற ரீதியில் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

பிரதமர் குறிப்பிடும் கலப்புப் பொருளாதாரம் பலன் தரவில்லை எனில் அது கலப்படப் பொருளாதாரம்தானே? ஏழைகளுக்கு அளிக்கும் மானியங்களைக் குறைத்து பெரும் நிறுவனங்களுக்குச் சலுகை அளிக்கும் “முதலாளித்துவ பொருளாதாரத்தை’ எப்படி ஏற்க முடியும்.

இந்த அரசுக்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால் லத்தீன் அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா முதலான நாடுகளைப் போல சுயசார்பான பொருளாதார வளர்ச்சிக்கு முயல வேண்டும். இதை ஆட்சியாளர்கள் உணர வேண்டிய தருணமிது.

மானியத்தைக் குறைக்க வேண்டும் என உலக வங்கி நிர்பந்திப்பதால், அரசுக்கு இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை, நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் வேளாண் துறைக்கு இன்னமும் மானியம் அளிக்கப்படுகிறது. ஆனால் அங்கு ஊக்கத் தொகை என்ற பெயரில் அது தொடர்கிறது.

நிர்பந்தம் தொடர்ந்தால், வெளிநாடுகளில் உள்ளதைப் போல ஊக்கத் தொகை என்ற பெயரில் மானிய உதவிகள் தொடர வேண்டும்.

அடித்தட்டு மக்களுக்கான மானிய உதவிகளையும், அவர்களின் மேம்பாட்டுக்கான ஊக்கத் தொகை என்ற பெயரில் தொடர்வதை யாரும் தடுக்க முடியாது.

உலக மக்கள் தொகையில் வறுமையில் வாடுவோரில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் உள்ளனர். இவர்களின் வறுமையை அகற்றாமல் தாராள பொருளாதாரமயம் என்ற போர்வையில் தொழிலதிபர்களுக்குச் சலுகை வழங்க முற்பட்டுவிட்டு, மானியத்தின் பலன் உரியவர்களைச் சென்றடையவில்லை என்று கூறும் பிரதமர், அரசின் உதவிகள் உரியவர்களைச் சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

——————————————————————————————————————
விவசாயக் கடன் யாருக்கு?

எஸ். கோபாலகிருஷ்ணன்

விவசாயிகளுக்கு வழங்கப்படும் வங்கிக் கடனுதவி, கடந்த மூன்று ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு கூறுகிறது. துல்லியமாகச் சொல்லவேண்டுமெனில், 2006 – 2007 நிதியாண்டில், நிர்ணயிக்கப்பட்ட விவசாயக் கடன் இலக்கு ரூ. 1,75,000 கோடி. ஆனால் அந்த ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடனுதவி ரூ. 2,03,269 கோடி என அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புதிய விவசாயக் கடன் நிவாரணத் திட்டம் ஒன்றை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அதிக அளவு வங்கிக்கடன் வழங்கப்படும் என்றும், அடுத்த மூன்று ஆண்டுகளில் வங்கிக்கடன் தொகையை இரண்டு மடங்காக உயர்த்துவதே இலக்கு என்றும் மத்திய அரசு தெரிவித்தது. இந்தத் திட்டத்தின் மூலம் நலிந்து வரும் விவசாயிகளுக்குப் புத்துயிர் ஊட்டுவதுதான் அரசின் நோக்கம் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில், விவசாயத்துறைக்கு வழங்கப்பட்ட வங்கிக்கடன் தொகை அரசு நிர்ணயித்திருந்த இலக்கையும் தாண்டிவிட்டது என்பது என்னவோ உண்மை. ஆனால், நலிந்து வரும் விவசாயத் துறை மீண்டும் புத்துயிர் பெற்றுவிட்டதா என்பதே கேள்வி. இந்தத் திட்டத்தின் பயனாக, விவசாயிகள் தனியார் கடன் தொல்லையிலிருந்து மீட்சி அடைந்து விட்டார்களா? விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளதா? கிராமப்புறங்களில் இருந்து வேலைதேடி நகர்ப்புறங்களுக்கு மக்கள் இடம்பெயர்தல் குறைந்துள்ளதா? “”இல்லை” என்பதே இந்தக் கேள்விகளுக்கான பதில். மாறாக, நாட்டின் சில பகுதிகளில், கடந்த காலங்களில் நிகழ்ந்த, விவசாயிகளின் தற்கொலைகள் இன்னமும் தொடர்கின்றன என்பதுதான் சோகம். பல லட்சம் கோடி ரூபாய்கள் விவசாயத்துறைக்கு வங்கிக் கடனாக வழங்கப்பட்ட பின்னரும், மேலே குறிப்பிட்ட எந்த ஒரு பயனும் கிடைக்காமல் போனதற்கு என்னதான் காரணம்?

இந்தியாவில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு இரண்டு அல்லது மூன்று ஏக்கர் விவசாய நிலமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததுதான். இவர்களில் பெரும்பாலானவர்கள் வங்கிகளில் நுழைந்ததுகூட இல்லை. இவர்கள் காலம் காலமாக அதிக வட்டிக்கு தனியாரிடமிருந்து கடன் வாங்கி நாள்களைக் கழித்துக்கொண்டு இருப்பவர்கள். அதுமட்டுமல்லாமல், வட்டிக்கடைக்காரர்களின் உடும்புப் பிடியிலிருந்து தப்புவது எப்படி என்று தெரியாமல் தவிக்கிறவர்கள்.

சமீபத்தில் வெளியாகியுள்ள பாரத ரிசர்வ் வங்கியின் மாதாந்திர செய்தி அறிக்கையில் காணப்படும் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இப்பிரச்னையின் மற்றோர் அம்சம் பளிச்சிடுகிறது.

1991-92ஆம் ஆண்டில், அதாவது பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அறிமுகமாவதற்கு முந்தைய ஆண்டில், ஒட்டுமொத்த வங்கிக்கடன் தொகையில் 15 சதவிகிதம் விவசாயத்துறைக்குக் கடனாகக் கிடைத்தது. ஆனால் 1999 – 2000 ஆம் ஆண்டில், வங்கிக் கடன்தொகையில், வெறும் 10 சதவிகிதம் மட்டுமே விவசாயத்துறைக்குக் கடனாகக் கிடைத்தது. பொருளாதாரச் சீர்திருத்தம் தொடங்கிய முதல் எட்டு ஆண்டுகளில் விவசாயக் கடன் அளவு 5 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தது. பெரிய தொழில்துறைக்கு வங்கிக்கடன் அதிகரித்தபோது, விவசாயக் கடன் சுருங்கியது. இந்த காலகட்டத்தில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறு விவசாயிகளின் புகலிடமாக இருந்தது தனியார் வட்டிக் கடைகளே.

2004 ஆம் ஆண்டில் விவசாயக் கடன் நிவாரணத் திட்டம் செயல்படுத்தப்பட்டதன் விளைவாக 2005 – 2006 ஆம் ஆண்டில் வங்கிக்கடனில் 11 சதவிகிதம் அளவுக்கு விவசாயக் கடன் அதிகரித்தது. அடுத்த ஆண்டுகளில் இது மேலும் உயர்ந்தது.

ஆக, விவசாயக் கடன் நிவாரணத் திட்டத்தின் கீழ், வங்கிக் கடனாக பல லட்சம் கோடி ரூபாய் வழங்கிய பின்னரும், அது சிறு விவசாயிகளது பிரச்னையின் விளிம்பைக் கூட தொட முடியவில்லை எனில், அந்தப் பணம் எங்கே போனது?

விவசாயக் கடன் திட்டத்தால் பயன் அடைந்திருப்பவர்கள், அதிக அளவில் நிலம் வைத்துள்ள பெரிய நிலச்சுவான்தார்களே அல்லாமல் ஏழை விவசாயிகள் அல்ல என்பது வெளிப்படை.

இந்நிலையில், உண்மையிலேயே சிறு விவசாயிகளை கைதூக்கிவிட வேண்டுமானால், கடன் திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதாது. நீண்டகாலமாக, தனியாரிடமிருந்து கடன் பெற்று, வட்டியைக்கூட செலுத்த முடியாமல், லேவா தேவிக்காரர்களின் பிடியில் சிக்கி இருக்கும் விவசாயிகளை முதலில் அவர்களிடமிருந்து விடுவிக்க வேண்டும்.

இந்த முயற்சியை சுயமாக மேற்கொள்ளும் நிலையில் விவசாயிகள் இல்லை. எனவே, இதற்கென சிறு விவசாயிகளிடையே ஒரு விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். வங்கிக்கடன் வாயிலாக, தனியார் கடனிலிருந்து விடுபட்டு, தங்கள் வாழ்க்கையை புதிய பாதையில் அமைத்துக்கொள்வதற்கான ஊக்கத்தையும், அதைச் செய்வது சாத்தியமே என்ற நம்பிக்கையையும் அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.

ஆக, வெறும் கடன் வழங்குவதோடு நின்றுவிடாமல், தேசிய வங்கிகள் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்கான சூழலையும், இதர உதவிகளையும், மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் வங்கிகளுக்கு வழங்க வேண்டும்.

சிறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்தொகை பயிர்க்கடனாக மட்டும் இல்லாமல் தனியார் கடனை அடைப்பதற்கும் போதுமானதாக இருத்தல் வேண்டும்.

விவசாயம் லாபகரமானதாக அமைவதற்கு ஏதுவாக, இடுபொருள்கள், சந்தை சார்ந்த தகவல்கள், சந்தைப்படுத்துதலில் உள்ள நெளிவு, சுளிவுகள் மற்றும் விலை நிலவரங்கள் ஆகிய விவசாயம் பற்றிய அனைத்து அம்சங்களிலும் அவர்களுக்குப் பயிற்சி அளித்து, விவசாயிகளின் மனநிலையிலும், செயல்முறைகளிலும் ஒரு புதிய உத்வேகத்தை வங்கிகள் உருவாக்க வேண்டும்.

இதைக் கருத்தில்கொண்டு, வெறும் கடன் வழங்கும் இயந்திரங்களாகச் செயல்படாமல் கிராமங்களிலும், குறிப்பாக விவசாயத்திலும், ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கும் உந்துசக்தியாக வங்கிகள் திகழ வேண்டும். இது எளிய காரியம் அல்ல.

கடந்த காலங்களில் சிறப்பாகச் செயல்பட்டு, நாளடைவில் நீர்த்துப் போய்விட்ட “விரிவாக்க சேவையை’ (உஷ்ற்ங்ய்ள்ண்ர்ய் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்) வங்கிகளில் விவசாயக் கடன் அதிகாரிகள் மற்றும் கள அலுவலர்கள், புதிய சூழலுக்கு ஏற்ப அளிக்க முன்வர வேண்டும்.

எப்படி அரசு மானியங்களின் பலன் உரியவர்களைச் சென்றடையாமல், வசதி படைத்தவர்களுக்குப் போய்ச் சேரும் நிலை திருத்தி அமைக்கப்பட வேண்டுமோ, அதுபோல், விவசாயக் கடன் சிறு விவசாயிகளுக்குப் போய்ச் சேராமல் பெரும் நிலச்சுவான்தாரர்களுக்கு மட்டுமே போய்ச் சேரும் நிலை உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டும்.

பல லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்ட பின்னரும், விவசாயிகளின் ஏழ்மை நீடிப்பதும், தற்கொலைகள் தொடருவதும் பொறுத்துக் கொள்ளக்கூடியது அல்ல.

எனவே, வழங்கப்படும் விவசாயக் கடன் தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டால் மட்டும் போதாது. அது சரியான நபர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கையில் இருள் நீங்கி, ஒளி பிறக்கும்படி செய்ய வேண்டும்.

பாரத ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் துணையுடன், தேசிய வங்கிகள் இதை ஒரு சவாலாக ஏற்று, கிராமப்புற மேம்பாட்டுப் பணியை, அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

——————————————————————————————————————

Posted in Agriculture, Artificial, Assets, Banking, Banks, BT, chemicals, Commerce, dead, Death, Economy, Farmers, Farming, Farmlands, Fertilizers, genes, Heritage, Inorganic, Labor, Land, Loans, Modern, Monsanto, Natural, organic, peasants, Suicide, Tariffs, Tax, Urea, Vidarba, Vidarbha, Vidharaba, Vidharaba Jan Andolan Samithi, Vidharabha, Vidharba, Vidharba Jana Andolan, Vidharbha, Vidhrabha, Villages, Vitharabha, Vitharba, Vitharbha | Leave a Comment »

Tamil Nadu unveils new industrial policy – Focuses on infrastructure, manufacturing &aims to double exports at $30 bn by 2011

Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2007

புதிய தொழில்கொள்கை வெளியீடு – 4 ஆண்டுகளில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்: கருணாநிதி

சென்னை, நவ. 5: நான்கு ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கும் வகையில் தமிழகத்தில் தொழிற்சாலைகளை அமைக்க வகை செய்யும் புதிய தொழில்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

புதிய தொழில்கொள்கையை முதல்வர் கருணாநிதி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை வெளியிட்டார்.

உற்பத்தித் துறையில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கவும், தமிழகத்தில் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை சர்வதேச சந்தையில் தரத்திலும் விலையிலும் போட்டியிடக் கூடிய அளவுக்கு மேம்படுத்தவும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் தொழில்துறையில் வளர்ச்சியடைய இப்புதிய தொழில்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளின் ஆலோசனைக்குப் பிறகு இப்புதிய கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டிற்குள் 20 லட்சம் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும், உற்பத்தித் துறையின் பங்களிப்பை 21 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாக உயர்த்துவதை இலக்காகக் கொண்டு தொழில்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்களைக் கவரும் வகையில், முதன்மை முதலீட்டு மையமாக தமிழகத்தை உருவாக்குவதும், உலகளாவிய பொருள் வழங்கீட்டுத் தொடர்களுடன், உள்நாட்டு தொழில் பகுதிகளை ஒருங்கிணைக்க உதவுவதும் இதன் நோக்கமாகும்.

திறன் மிக்க தொழிலகக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதும், மனித வளத்தையும் அறிவாற்றல் முதலீட்டையும் உலக தரத்திற்கு மேம்படுத்துவதும் நோக்கமாகும்.

இந்த இலக்கை எட்டும் நோக்கில் சென்னைக்கு அப்பாலும் தொழிற்சாலைகள் உருவாவதற்கு ஏதுவாக பின்தங்கிய பகுதிகளில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்.

தொழில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதும், தனியார்துறை முதலீடுகளை ஈர்ப்பதற்காக பொதுத்துறை மற்றும் தனியார் துறையின் கூட்டு முயற்சிகளை ஏற்படுத்துவதும், உள்கட்டமைப்புத் திட்டங்களை ஊக்குவிப்பதும் பிரதான நோக்கமாகும்.

தொழிலக சிறப்புப் பகுதிகள் :

  • சிப்காட் நிறுவனம்,
  • தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் அல்லது
  • தனியார் மேம்பாட்டாளர்கள் அமைக்கும் தொழில் பூங்காக்களை சமமாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக

  • சென்னை – மணலி – எண்ணூர் மற்றும்
  • செங்கல்பட்டு – ஸ்ரீபெரும்புதூர் – ராணிப்பேட்டை பகுதிகள் தொழிலகச் சிறப்புப் பகுதிகளாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • அடுத்த கட்டமாக மதுரை,
  • தூத்துக்குடி மற்றும்
  • கோவை – சேலம் பகுதிகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வளர்ந்த நாடுகளில் உள்ள அறிவியல் பூங்காக்களைப் போன்று நுண்ணிய உயர்தொழில்நுட்பப் பூங்காக்களை சிப்காட் மூலம் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

உயிரி அறிவியல் புதுமைத் திட்ட நிதி ஒன்றை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தினால் (டிட்கோ) மூலம் செயல்படுத்தவும் வழிவகுக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளில் பயிற்சி பெற்ற பணியாளர்களின் தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மனித ஆற்றல் மற்றும் தொழில் திறன் மேம்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொழில்பயிற்சி தர மேம்பாட்டுத் திட்டம் ஒன்று தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழிற்சாலைகள், தொழிற் பயிற்சி கல்வி நிறுவனங்கள் இடையே தொடர்புகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிஐஐசி) நிர்வகிக்கும் ஒரு மூல நிதியின் மூலம் தமிழ்நாடு தொழில்நுட்ப மற்றும் எரிசக்தி பயன்பாட்டுத் திறன்களை உயர்த்தும் முயற்சிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத் திட்டத்துக்கு கூடுதல் சலுகைகள் அளிக்கப்படும்.

வேலை வாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிப்பதோடு கூடுதல் உதவிகள் அளிக்கப்படும்.

உடல் ஊனமுற்ற அதேசமயம் சிறப்பாகபணியாற்றும் திறன் பெற்றவர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல

  • வேளாண் தொழில்கள்,
  • வேளாண் இயந்திரங்கள்,
  • நுண்ணிய பாசனத்திற்கான வேளாண் சாதனங்கள் ஆகிய தொழிற்சாலைகளுக்கு சலுகை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • மின்னணு வன்பொருள்,
  • ஜவுளி,
  • தோல்,
  • மோட்டார் வாகனம் போன்ற தொழில்களில் ஏற்றுமதி மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் இதில் அடங்கும்.

புதிய தொழிற்சாலைகளை மூன்று வகையாகப் பிரித்து அவற்றுக்கு தரச் சான்றை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விரைந்து அளிப்பதும் புதிய தொழில் கொள்கையின் பிரதான நோக்கம் என்றார் கருணாநிதி.

புதிய தொழில் கொள்கையின் பிரதிகளை தொழிலதிபர்களிடம் முதல்வர் அளித்தார்.

—————————————————————————————————————————————–

தமிழக புதிய தொழில் கொள்கையில் சலுகை மழை! * விவசாய தொழிலுக்கு அதிக முன்னுரிமை

சென்னை :வரும் 2011ம் ஆண்டுக்குள் 20 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில்களுக்கு அனைத்து சலுகைகள் வழங்கவும் முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையில் திட்டமிடப்பட்டுள்ளது.

நலிவடைந்து வரும் விவசாய தொழிலுக்கு புத்துயிர் கொடுக்க விவசாயத்துக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளை கண்டறிவதற்குரிய வழிமுறைகளை நிர்ணயிக்க தொழில் துறைச் செயலர் தலைமையில் உயர்நிலைக் குழுவும், முதல்வர் கருணாநிதியை தலைவராகவும், தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகளை உறுப்பினர்களாகவும் கொண்ட சிறப்புத் தொழில் முனைப்புக் குழுவும் அமைக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள பல்வேறு தொழிற் கூட்டமைப்புகள் மற்றும் வர்த்தக சபை ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தி, புதிய வரைவு தொழில் கொள்கை உருவாக்கப்பட்டது. அமைச்சரவைக் குழு விவாதித்து இறுதி செய்த, ஷபுதிய தொழில் கொள்கையை’ முதல்வர் கருணாநிதி தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார்.

இந்த தொழில் கொள்கை, 2011ம் ஆண்டுக்குள் 20 லட்சம் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் தயாரிப்புத் துறையின் தற்போதைய பங்களிப்பான 21 சதவீதத்தை 27 சதவீதமாக உயர்த்துதல், முதலீட்டாளர்களை கவரும் மையாக தமிழகத்தை உருவாக்குதல், திறமையான தொழிலகக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், மனிதவளத்தையும் அறிவாற்றல் முதலீட்டையும் உலக தரத்துக்கு மேம்படுத்துதல் ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டுள்ளது.விவசாயம் மற்றும் விவசாய விளை பொருட்கள் பதப்படுத்தும் தொழில்களுக்கு புதிய தொழில் கொள்கையில் அளிக்கப்பட்டுள்ள பல சலுகைகள் வருமாறு:

வேளாண் விளை பொருள் பதப்படுத்தும் தொழிலுக்கு தேவைப்படும் சட்ட அனுமதிகளை ஒற்றைச் சாளர முறையில் பெற்றுத் தந்து அவற்றுக்கு ஊக்கத் தொகை வழங்கும் அமைப்பாக வேளாண்மை விற்பனை மற்றும் வணிக இயக்ககம் செயல்படும்.

ஏற்றுமதியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும், அவர்களுக்கு உதவிகள் செய்யவும், ஒரு ஏற்றுமதி அபிவிருத்திப் பிரிவு அமைக்கப்படும்.

  • வேளாண்மை விளை பொருள் பதப்படுத்தும் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த ஊக்க உதவிகள் அளிக்கப்படும்.
  • இறைச்சி மற்றும் கடல் சார்ந்த உணவு (ராமநாதபுரம்),
  • கோழியினப் பொருட்கள் (நாமக்கல்),
  • மஞ்சள் (ஈரோடு),
  • ஜவ்வரிசி (சேலம்),
  • வாழைப்பழம் (திருச்சி),
  • மாம்பழம் (கிருஷ்ணகிரி),
  • முந்திரி (பண்ருட்டி),
  • பனைப் பொருட்கள்,
  • மருத்துவ மூலிகைச் செடிகள் மற்றும்
  • கடல் சார்ந்த உணவு (தூத்துக்குடி),
  • பால் பொருட்கள்,
  • திராட்சை (தேனி) போன்றவற்றில் தொழில் பூங்காக்களிலும், சிறப்பு பொருளாதார மண்டலங்களிலும் பதப்படுத்தும் தொழில் அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in 2011, Agriculture, Auto, Automotive, Budget, Bus, Cars, Challenged, Commerce, Disabled, DMK, Economy, Electrical, Electronics, Employment, Environment, Equipments, Exports, Fabrics, Farming, Garments, Incentives, industrial, Industry, infrastructure, Jobs, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Leather, Manufacturing, Nature, Policy, Pollution, Protection, SEZ, SIPCOT, Tamil Nadu, TamilNadu, Tariffs, Tax, Textiles, TIDCO, TN, Training, Transport, Work, workers | 1 Comment »