கிளிநோச்சிக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற டிரக்குகளுக்கு அனுமதி மறுப்பு
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திற்கு இன்று செவ்வாய் கிழமை உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்ற முறை நாளாக இருந்தபோதிலும், பொருட்களை ஏற்றிக்கொண்டு வவுனியாவிலிருந்து புறப்பட்டுச் சென்ற 20 ட்ரக் வண்டிகளுக்கு ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாகச் செல்வதற்கு படையினர் அனுமதி வழங்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த ட்ரக் வண்டிகளை ஓமந்தையூடாகச் செல்ல அனுமதிப்பதற்கு உயர்மட்டப் படைத்தரப்பினரிடமிருந்து தங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என படையினர் தெரிவித்ததையடுத்து பல மணித்தியாலங்கள் காவல் இருந்துவிட்டு, இந்த ட்ரக் வண்டிகள் ஓமந்தையிலிருந்து வவுனியா திரும்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த வாரம் இரண்டு தினங்கள் கிளிநொச்சி மாவட்டத்துக்கான பொருட்களைக் கொண்டு செல்வதற்கென ஏற்பாடுகள் இருந்த போதிலும் அந்த மாவட்டத்திற்கான பொருட்களை ஏற்றிச் சென்ற ட்ரக் வண்டிகளுக்கு ஓமந்தை சோதனைச்சாவடியில் படையினரால் அனுமதி வழங்கப்படவில்லை.
எனினும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பொருட்களை ஏற்றிச் சென்ற ட்ரக் வண்டிகளுக்குக் கடந்த வாரம் உரிய பிரயாண அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான அத்தியாவசிய பொருட்கள், உணவுப்பொருட்கள் என்பன தொடர்ந்து ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக விநியோகிக்கப்பட்டு வருவதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.
கடந்த 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதியில் இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் 73 ட்ரக் வண்டிகளில் அரிசி, பருப்பு, கருவாடு உள்ளிட்ட உணவு மற்றும் கட்டிடப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தலைமையகம் இன்று தெரிவித்திருக்கின்றது.
ஆயினும் 11 ஆம் திகதிக்குப் பின்னரான உணவு விநியோக நிலைமைகள் குறித்து இராணுவ தலைமையகம் எதனையும் தெரிவிக்கவில்லை.
ஆரசாங்கத்தின் அறிவித்தலையடுத்து, வன்னிப்பிரதேசத்தில் இருந்து ஐநா அமைப்புக்களும், சர்வதேச தொண்டு நிறுவனங்களும் கடந்த வாரம் வெளியேறியதைத் தொடர்ந்து வன்னிப்பிரதேசத்திற்கான குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்திற்கான அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தில் இழுபறி நிலைமை ஏற்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தொண்டு நிறுவனங்களின் வெளியேற்றம் மட்டுமல்லாமல், ஓமந்தைக்கு வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ9 வீதியை அண்டிய பிரதேசங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற கடும் சண்டை நிலைமைகளும் இந்த இழுபறி நிலைமைக்கு ஒரு காரணம் எனவும் கூறப்படுகின்றது.
இலங்கையின் வடக்கே கடும் மோதல்
 |
|
இலங்கை விமானப்படையினர் இன்றும் தாக்குதல் நடத்தியுள்ளனர் |
இலங்கையின் வடக்கே வன்னிக்களமுனைகளில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கு உதவியாக கிளிநொச்சி மாவட்டம் வன்னேரிக்குளத்திலும், அக்கராயன்குளம் விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது விமானப்படையினர் இன்று செவ்வாய்கிழமை மதியம் 12.45 மணியளவில் அடுத்தடுத்து மூன்றுதடவைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தி விடுதலைப் புலிகளுக்கு சேதங்களை விளைவித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
இதற்கிடையில், இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே வன்னிப்போர்முனைகளில் நேற்று இடம்பெற்ற சண்டைகளில் 28 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.
கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன்குளம், வன்னிவிளாங்குளம், வன்னேரிக்குளம், பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களையடுத்து, படையினர் நடத்திய தேடுதலின்போது விடுதலைப் புலிகளின் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவம் கூறியிருக்கின்றது.
வெலிஓயா ஆண்டான்குளம் பகுதியில் அமைந்திருந்த ‘’பாசறை’’ என்ற கடற்புலிகளின் தளம் ஒன்றைப் படையினர் தம்வசமாக்கியிருப்பதாக இராணுவ தலைமையகம் தனது இணையதள செய்தியில் தெரிவித்திருக்கின்றது.
மல்லாவி மற்றும் அக்கராயன்குளம் பகுதிகளில் கடந்த சிலதினங்களில் இடம்பெற்ற சண்டைகளில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 13 சடலங்கள் விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்படுவதற்காக இன்று வவுனியாவில் வைத்து சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இராணுவம் அறிவித்திருக்கின்றது.
இதேவேளை முச்சக்கர வண்டியில் வந்த பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்களினால் இரண்டு பெண்கள் நேற்றிரவு கொல்லப்பட்டிருப்பதாகவும் இராணுவம் கூறியிருக்கின்றது. இவர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள் என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.
இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் குறித்த கருத்தரங்கு
 |
|
உள் நாட்டில் இடம்பெயர்ந்தோர் தொடர்பான கருத்தரங்கம் |
இலங்கையில் உள்நாட்டில் மோதல்களினால் நீண்டகாலமாக இடம்பெயர்ந்துள்ள சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான அகதிகளிற்கு நிரந்தர தீர்வொன்றினைக் காணும் நோக்கில் மனித உரிமைகள், மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்களுடன் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயமும் இணைந்து ஏற்பாடுசெய்துள்ள மூன்று-நாள் கலந்துரையாடல் இன்று கொழும்பில் ஆரம்பமாகியது.
அகதிகளுகான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் விசேட பிரதிநிதி பேராசிரியல் வால்டர் கலின் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளும், உதவி வழங்கும் நாடுகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
அங்கு உரையாற்றிய பேராசிரியர் வால்டர் கலின் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறைசூழ்நிலைக்கும் மத்தியிலும், குறிப்பாக வடக்கில் ஏற்பட்டுள்ள இடர்களிற்கு மத்தியிலும் இவ்வாறானதொரு கலந்துரையாடலினை நடாத்துவது வரவேற்கத்தக்கது என்றும், வன்முறைகளிற்கும், இடப்பெயர்வுகளிற்கும் முகம்கொடுத்துள்ள மக்களின் துன்பங்களையும், தேவைகளையும் மறந்துவிடமுடியாது என்றும் தெரிவித்தார்.
அத்துடன் இந்த மக்களின் பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வொன்றினைக்காண்பதற்கு தகுந்த திட்டமிடலொன்றினை முன்னகர்த்துவது என்பது ஒரு சவால் என்றும் அந்தச் சவாலிற்கு இப்போதே முகம்கொடுப்பது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.
ஆயுதக் களைவுக்கான அவசியம் குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதர் வலியுறுத்தல்
இலங்கையின் கிழக்கு மாகாண முதலமைச்சர், அங்குள்ள ஆயுதக் குழுக்களிடம் ஆயுதக்களைவை செய்ய உறுதி வழங்கியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் ஓ பிளேக் மட்டக்களப்பில் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடியில் அமெரிக்க உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ஒரு தொழிற்பயிற்சி நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே இந்தத் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
கிழக்கிலே ஸ்திரத்தன்மை, பெருளாதார மேம்பாடு மற்றும் வளர்ச்சியை முன்னெடுக்கும் இலக்கில் ஒரு முக்கிய பகுதியாக, இங்குள்ள மக்களுக்கு கல்வியறிவையும் தொழிற்பயிற்சியையும் வழங்குவது அமையும் என்று அவர் தெரிவித்தார்.
இவ்வாறான ஒரு எண்ணத்தையும் உத்தியையும் முன்னெடுப்பதற்கு தனியார் முதலீடுகளை ஈர்ப்பதும் முக்கியமானதாகும் என்றும், இதன் மூலம் அங்கிருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் அவர் கூறினார்.
தனியார் முதலீடுகள் அங்கு வருவதற்கு அந்தப் பகுதியில் பாதுகாப்பு நடைமுறைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது முக்கியமானது என்று வலியுறித்திய அமெரிக்கத் தூதர், அது விடயத்தில் தமக்கு கிழக்கு மாகாண முதல்வர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.
இலங்கை அரசும், கிழக்கு மாகாண அரசும் முதலமைச்சரும் பாதுகாப்பு உத்திரவாதங்களுக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும், அதுமாத்திரமல்லாமல் ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான வகையில் நடைபெறும் கொலைகள் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவர அவர்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ராபர்ட் ஓ பிளேக் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவரது இந்தக் கருத்து குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
வட இலங்கையில் தொடர்ந்தும் கடுமையான உயிர்ச்சேதம்
|
இலங்கை இராணுவ தாங்கி ஒன்று |
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன்குளம் கிழக்கு, மேற்கு களமுனைகளிலும், கொக்காவில் பிரதேசத்தின் தென்பகுதியிலும், மாங்குளத்திற்கு மேற்கிலும் விடுதலைப் புலிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கடும் சண்டைகளில் குறைந்தது 36 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதுடன், அவர்களது 7 சடலங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
இந்த மோதல்களில் 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளளதாக இராணுவத் தலைமையகம் கூறியிருக்கின்றது. மேலும் 24 படையினர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த உயிரிழப்புகள் சேதங்கள் குறித்து உடனடியாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் வெளியாகாத போதிலும், கிளிநொச்சிக்குத் தெற்கே, வன்னிக் களமுனைகளில் இராணுவத்தினரை எதிர்த்து விடுதலைப் புலிகள் நேற்று பல இடங்களில் முறியடிப்பு தாக்குதல்களை நடத்தியதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். வன்னிவிளாங்குளம் பகுதியில் இராணுவத்தினருக்குப் பலத்த உயிர்ச்சேதம் ஏற்படுத்தியதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையில் நாட்டில் அமைதி ஏற்பட வேண்டும் என்றும், வன்னிப்பிரதேசத்தில் போர்ச்சூழலில் சிக்கித்தவிக்கும் மக்களின் துயர் நீங்குவதற்கு அமைதி ஏற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி மன்னார் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை அமைதிப் பேரணியும் சர்வமதப் பிராரத்தனையும் நடத்தப்பட்டிருக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் நீதிக்கும் சமாதானத்திற்குமான ஆணையகத்தின் ஏற்பாட்டில் மானிப்பாய் அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற இந்த சர்வமதப் பிராரத்தனையில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள்.
வட இலங்கை மீனவர்களின் தொழில் பாதிப்பு குறித்து யாழ் பேராசிரியர்
 |
|
யாழ் மீனவர்கள் |
யுத்த சூழ்நிலை காரணமாக இலங்கையின் வட பகுதியில் மீன்பிடித் தொழில் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது என்று கூறுகிறார் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றுபவரும் கடல்வளம் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருப்பவமான பேராசிரியர் சிலுவைதாசன்.
இலங்கையின் மொத்த உற்பத்தியில் 36 சதவீதத்தைப் பெற்றிருந்த வடபகுதி தற்போது வெறும் பத்து சதவீதத்தையே பெற்றுள்ளது, மீன்பிடித் தொழிலில் முதலிடத்தில் இருந்து, தற்போது கடை நிலைக்கு இலங்கையின் வடக்கு மாகாணம் கீழிறங்கியுள்ளது என்றும் அவர் விபரித்தார்.
அரசாங்கம் விதித்துள்ள பலவித கட்டுப்பாடுகளால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டிருப்பது ஒரு புறமிருக்க, தமிழக மீனவர்கள் தமது எல்லைக்குள் நுழைந்த்து, தொடர்ந்து மீன்பிடிப்பது வட இலங்கை மீனவர்கள் தொழில் செய்வதில் பெரிய பிரச்சினைகளை உண்டுபண்ணியுள்ளது என்று அவர் விளக்குகிறார்.
இந்நிலை தீர இருசாராரும் பேசி தீர்ககவேண்டும், தங்கள் பகுதியில் மீனவளம் வறண்டுபோயிருப்பதால் எல்லைதாண்டி தமிழக மீனவர்கள் வருவது புரிந்துகொள்ளக் கூடியதுதான் என்றாலும், இலங்கைப் பகுதியிலும் அம்மாதிரி ஆகிவிடக்கூடாது, அதே நேரம் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்குள்ளாவதும் வருத்தத்திற்குரியதே, இப்பிரச்சினை தீர இரு சாராரும் பேசித் தீர்க்கவேண்டும் என வற்புறுத்துகிறார் பேராசிரியர் சிலுவைதாசன்.
கொழும்பில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை பதிவு செய்யும் பணி ஆரம்பம்
இலங்கையிலே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாவட்டங்களிலிருந்து தலைநகர் கொழும்பிற்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் இடம்பெயர்ந்திருப்பவர்களை பதிவு செய்யும் நடவடிக்கையினை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
வடக்கிலிருந்து மக்கள் இடம்பெயர்வதைப் பயன்படுத்திக்கொண்டு விடுதலைப் புலிகள் கொழும்பிலும் அதனைச் சுற்றிய இடங்களிலும் குண்டுகளை வைத்துவருகிறார்கள் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உரிய காரணம் என்று குறிப்பிட்டு அப்படிப்பட்ட காரணம் இல்லாமல் கொழும்பில் தங்கியிருப்பவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதேவேளை இலங்கை பாதுகாப்பு படையினரால் தாங்கள் துன்புறுத்தப்படுவதாகவும், யதேச்சதிகாரமாக தடுத்துவைக்கப்படுவதாகவும், அடிக்கடி பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் தமிழ் மக்கள் முறையிடுகின்றனர்.
இவ்வகையாக கொழும்புக்கு வந்துள்ளவர்கள் காவல் நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது சட்ட விரோதமானது என்றும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள ஒழுங்குகளுக்கு எதிரானது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் மூத்த உபதலைவரான யோகராஜன் தமிழோசையிடம் தெரிவித்தார். இதே நேரத்தில் இந்த பதிவுகளை தாங்கள் எதிர்க்கவில்லை என்றாலும் இது முறையற்ற செயல் என்று கருத்து வெளியிட்டுள்ளார் இலங்கை அரசின் பிரதியமைச்சரான ராதாகிருஷ்ணன். இவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை இன்றைய நிக்ழ்ச்சியில் கேட்கலாம்.
இலங்கையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்
 |
|
வைத்தியத்தில் அரச மருத்துவரொருவர் |
இலங்கையில் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட சட்ட விரோத போலி வைத்தியர்கள் இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இவ்வைத்தியர்களினாலே அநேகமான கருக்கலைப்பு நிலையங்கள் நடத்தப்படுவதாகவும் கூறுகின்றது.
உலகில் போலி மருத்துவர்கள் அதிகமாகவுள்ள நாடாக இலங்கை காணபப்டுவது துரதிர்ஷ்டவசமானது என கவலை வெளியிட்டுள்ள
அச்சங்கத்தின் செயலாளரான டாக்டர் உபுல் குணசேகரா, போலி மருத்துவம், மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து பொலிஸ், சுகாதார அமைச்சு உட்பட உரிய தரப்புகளுடன் பல பேச்சுக்கள் நடத்திய போதிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாக இல்லை என்றும் குறிப்பிடுகின்றார்.
நாளொன்றிற்கு 750 முதல் 1000 வரைய கருக்கலைப்புகள் இடம் பெறுவதாகவும் சுட்டிக்காட்டிய அவர் அரசாங்க மருத்துவ சபைகளில் பதிவு செய்யப்படாதவர்களே இவர்கள் என்றும் தெரிவிக்கின்றார்.
கருக்கலைப்பகளை பொறுத்த வரை சட்ட விரோத மருத்துவர்களாலேயே பெரும்பாலானவை நடத்தப்படுவதாக பெண்கள் அமைப்புகளும் குற்றம் சுமத்துகின்றன.
சட்ட விரோத மருத்துவர்கள் இருந்தாலும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்து போல் இந்த எண்ணிக்கையில் இல்லை என கூறும் சுகாதார சேவைகள் பிரதி அமைச்சர் சுரேஸ் வடிவேல் இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இல்லை என்றும் குறிப்பிடுகின்றார்
இலங்கையின் வடக்கில் தொடரும் வன்முறை
 |
|
திருகோணேஸ்வரர் ஆலயம் |
இலங்கையின் திருகோணமலையின் திருகோணஸ்வரர் ஆலயத்தின் பிரதம குருவான சிவகுரு ராஜ குருக்கள், ஞாயிறு மாலை வித்தியாலயம் வீதியில் அடையாளம் தெரியாத ஆட்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, இலங்கையின் வடக்கே வன்னிக்களமுனைப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது அடுத்தடுத்து நான்கு தடவைகள் ஞாயிற்றுக்கிழமையன்று விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் நாச்சிக்குடா மற்றும் அக்கராயன்குளம் பகுதிகளில் விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள் விடுதலைப் புலிகள் ஒன்றுகூடும் இடம் ஒன்றின் மீதும், அவர்களது தளம் ஒன்றின் மீதும் குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கொக்காவில் பகுதிகளில் தற்போது படையினர் தமது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
எனினும் இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் வன்னியில் உறவுகளை தொடர்புகொள்வதிலுள்ள பிரச்சினைகள்
வெளிநாட்டில் வாழும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள், விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழும் தமது உறவுகளை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பகுதிகளில் கடுமையான மோதல்கள் நடந்துவரும் வேளையில், அங்கே செயல்பட்டு வந்த தொலை பேசி இணைப்புகள் பல வாரங்களாக முற்றாக துண்டிக்கப்பட்டுவிட்டன.
இதனால், இங்கே ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான புலம் பெயர் இலங்கைத் தமிழர்களில் பலர் தமது உறவினர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் கவலையடைந்துள்ளனர்.
வன்னிப்பகுதியில் உள்ள சில குறிப்பிட்ட அரசுத் துறை அலுவலகங்களின் தொலை பேசி இணைப்புக்களைத் தவிற பிற இணைப்புகள் அனைத்தும் தற்போது செயலிழந்துள்ளதாகவே தெரிகிறது.
உள்ளூர் தொடர்புகளும் அங்கே துண்டிக்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் செயற்கைக்கோள் தொலைபேசி இணைப்பு மட்டும்தான் வன்னி மக்களுக்கும் வெளியுலகுக்கும் இடையேயான ஒரே தொடர்பாய் தற்போது இருப்பதாகத் கருதப்படுறது.
ஐக்கிய இராஜ்ஜியத்தில் வாழும் சில இலங்கைத் தமிழர்கள் தமது உறவுகளைத் தொடர்புகொள்வதிலுள்ள சிக்கல்கள் மற்றும் அதனால் தாம் அடைந்துள்ள இன்னல்களை தமிழோசையில் விளக்குவதை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
வட இலங்கையில் மோதல்கள் நீடிக்கின்றன
இலங்கையின் வடக்கே வன்னிக் களமுனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வியாழனன்று இடம்பெற்ற மோதல்களில் 24 விடுதலைப் புலிகளும், 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவத் தலைமையகம் கூறியிருக்கின்றது.
எனினும் இந்த மோதல்கள் உயிரிழப்புக்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஆனால் விசுவமடு பகுதியில் வியாழன் பிற்பகல் விமானப்படையினர் நடத்திய வான்வழி குண்டுத் தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் இரண்டு பெண்கள் காயமடைந்திருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இலங்கையில் கரையொதுங்கிய சடலங்கள் ‘இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய அகதிகளுடையது’
 |
|
தனுஷ்கோடியைக் காட்டும் செயற்கைக்கோள் படம் |
இலங்கையின் வடக்கே நெடுந்தீவு மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் கடந்த சில தினங்களில் கரையொதுங்கிய 7 சடலங்களும் இந்தியாவில் இருந்து படகு மூலமாக தாயகம் திரும்பிய இலங்கை அகதிகளுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்குத் திரும்பிய இலங்கை அகதிகள் பயணம் செய்த படகொன்று நடுக்கடலில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 10 பேரில் மூவர் தவிர ஏனையோர் கடலில் மூழ்கிவிட்டதாகத் தகவல்கள் தெரிவித்திருந்தன.
உயிர் தப்பிய மூவரும் கடலில் நீந்தி தமிழகக் கரையோரத்தை வந்தடைந்ததாக தமிழகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்தச் சம்பவத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் சடலங்களே இவ்வாறு யாழ்ப்பாணம் நெடுந்தீவு மற்றும் நயினாதீவுகளில் கரையொதுங்கியதாகக் கூறப்படுகின்றது.
கிளிநொச்சிக்கான உணவுப் பொருட்கள் அனுப்பப்படவில்லை
வன்னிப்பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான உணவு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாகவும், கிளிநொச்சி மாவட்டத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படவில்லை என்றும் அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் அறிவித்தலுக்கமைய ஐநா அமைப்புக்களும் சர்வதேச தொண்டு நிறுவனங்களும் வன்னிப்பகுதியில் இருந்து வெளியேறியதன் பின்னர் அந்தப் பகுதிக்கு உலக உணவுத் திட்டத்தின் மூலம் அனுப்பப்படுகின்ற ட்ரக் வண்டிகள் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லவில்லை என்றும் அதற்கான அனுமதி படை அதிகாரிகளினால் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை உறுதி செய்துள்ள கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், இதைவிட அரசாங்கத்தினால் கிளிநொச்சிக்கு ஒன்றுவிட்ட ஒருநாள் ஓமந்தை ஊடாக 20 லொறிகளில் பொருட்களை ஏற்றிச் செல்லும் ட்ரக் வண்டிகளுக்கும் இந்த வாரத்தில் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்த மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
புளியங்குளத்தில் கிளெமோர் தாக்குதல்: 3 பொதுமக்கள் பலி
 |
|
தாக்குதலில் காயமடைந்த சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் |
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய புளியங்குளம் பகுதியில் இன்று காலை பேருந்து வண்டியொன்றின் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 3 சிவிலியன்கள் கொல்லப்பட்டதாகவும் மேலும் மூவர் படுகாயமடைந்ததாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தத் தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரே மேற்கொண்டதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள். எனினும் அதனை இராணுவ தலைமையகம் நிராகரித்துள்ளதுடன், விடுதலைப் புலிகளின் பிரசார நடவடிக்கைக்காகவே அவர்கள் சார்ந்த ஊடகங்கள் இதனை செய்தியாக வெளியிட்டிருக்கின்றன என தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்தில் நாச்சிக்குடா பகுதியில் வலைப்பாடு கடற்பரப்பில் இரணைதீவுக்கு அருகில் இன்று காலை விடுதலைப் புலிகளுக்கும் கடற்படையினருக்கும் இடையில் 4 மணித்தியாலங்கள் கடும் சண்டைகள் நடைபெற்றதாகவும், இந்தச் சண்டைகளில் 3 பெரிய படகுகள் உட்பட விடுதலைப் புலிகளின் 10 படகுகளைப் படையினர் அழித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
இன்று பிற்பகல் 4 மணிவரையில் தொடர்ந்த இந்த மோதல்களில் 20 தொடக்கம் 30 வரையிலான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.
எனினும் இந்தத் தாக்குதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வரவில்லை.
கடற்சமரோடு, வன்னிக்களமுனைகளிலும் இராணுவத்தினரும், விடுதலைப் புலிகளும் தொடர்ந்து சண்டையிட்டு வரும் அதேவேளை, அரச விமானப்படையினரும் வான்வழி தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவதாக பாதுகாப்பு அமைச்சும் இராணுவமும் தெரிவித்திருக்கின்றன.
வன்னியில் விசுவமடுவுக்கு அருகே பிரமந்தன்குளம் என்னுமிடத்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படும் தளத்தில் விடுதலைப் புலிகள் பொருத்தியிருந்த விமான எதிர்ப்பு பொறிமுறையொன்றை (சிஸ்டம் ஒன்றை) விமானப்படையினர் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் குண்டுவீசி தாக்கி அழித்துள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.
கிளிநொச்சி மாவட்டம் வன்னேரிக்குளம் போர்முனைப் பகுதியில் இன்று வியாழக்கிழமை மதியம் விமானப்படைக்குச் சொந்தமான தாக்குதல் விமானங்களும், எம்.ஐ 24 ரக ஹெலிக்கப்டர்களும் அடுத்தடுத்து நடத்திய விமானக்குண்டுத் தாக்குதல்களில் விடுதலைப் புலிகளின் மேலும் ஒரு மோட்டார் பீரங்கித் தளம் அழிக்கப்பட்டுள்ளதாகவும், வன்னேரிக்குளம் முன்னரங்க பகுதியில் விடுதலைப் புலிகள் ஒன்றுகூடும் இடம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும் இதுகுறித்து விடுதலைப் புலிகள் உடனடியாக கருத்து எதனையும் வெளியிடவில்லை.
நாச்சிக்குடா பகுதியில் உள்ள கரம்பைக்குளம் குளக்கட்டு பகுதியிலும், அக்கராயன்குளம் பிரதேசத்திலும் விடுதலைப் புலிகளுடன் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கடும் மோதல்களில் கொல்லப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்தச் சண்டைகளில் 40 விடுதலைப் புலிகள் இறந்துள்ளதாகவும் இராணுவ தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டிருக்கின்றது.
இந்த மோதல்களில் காயமடைந்த படையினரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்திருப்பதாகவும் இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.
ஒன்றரை கிலோ மீற்றர் நீளமுடைய கரம்பைக்குளம் குளக்கட்டுப் பகுதியை விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியுள்ள இராணுவம் இன்று அந்தப் பகுதியில் மேலும் ஒன்றரை கிலோ மீற்றர் நீளமுடைய பகுதியை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றியிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.
இதற்கிடையில் வவுனியா வன்னிவிளாங்குளம், புதூர், மன்னகுளம், பகுதிகளில் படையினருக்கு எதிராக செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 இலிருந்து புதன்கிழமை காலை 6 மணிவரையில் தாக்குதல்கள் நடந்ததாகவும், இதில் 13 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.
வன்னேரிக்குளத்தில் படையினர் இன்று வியாழக்கிழமை மேற்கொண்ட முன்னேற்ற நடவடிக்கைக்கு எதிரான தமது தாக்குதலில் 25 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், இரண்டு இராணுவத்தின் சடலங்களும் ஆயுத தளபாடங்களும் தங்களால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
கொழும்பு வரும் வட மாகாணத்தவர்களை பதிய உத்தரவு
 |
|
கொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலமாக இருக்கின்றன |
இலங்கையின் வடக்கிலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் கொழும்பு உள்ளிட்ட மேல்மாகாணத்திற்கு வந்திருப்பவர்கள் அனைவரும், செப்டம்பர் 21 ஆம் திகதி காவல்நிலையங்களில் பதிய வேண்டும் என்று இலங்கை காவல்துறை இன்று அறிவித்திருக்கிறது.
இது குறித்து இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரியான ரஞ்சித குணசேகர தமிழோசையிடம் கூறுகையில், ஒவ்வொரு பொலிஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டின் கீழும் உள்ள பகுதிகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களுக்காகவே இந்த பதிவுகள் நடப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஏனைய பகுதிகளில் இருந்து வருபவர்கள் நீண்ட காலம் அங்கு தங்குவதில்லை என்பதால், அவர்களை பிரத்தியேகமாக பதியவில்லை என்றும், இருப்பினும், அப்படியானவர்களை அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் சொந்தக்காரர்கள் பதித்து வழங்குவார்கள் என்றும் அவர் கூறினார்.
தம்மை பதிந்துகொள்ள வருபவர்கள், பிறப்புச் சான்றிதழ் போன்ற ஏதாவது ஒரு ஆவணத்தையாவது தம்மோடு கொண்டு வரவேண்டும் என்றும் அவர் கூறினார்.
வட இலங்கையில் தொடர்ந்து மோதல்கள் இடம்பெறுகின்றன: இழப்புகள் குறித்து மாறுபட்ட கருத்துக்கள்
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இலங்கை விமானப்படையினர் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது தொடர்ச்சியாக விமானக்குண்டுத் தாக்குதல்களை நடத்தி அவர்களுக்கு சேதங்களை ஏற்படுத்தி வருவதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்திருக்கின்றனர்.
இன்று காலை முதல் மாலை வரையில் 5 இடங்களில் விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும், இதில் விடுதலைப் புலிகளின் இரண்டு எறிகணை பீரங்கி நிலைகள் அழிக்கப்பட்டு சேதங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.
கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடும் தளம் ஒன்றின் மீதும், உடையார்கட்டுக்குளம் பகுதியில் இருந்த விடுதலைப் புலிகளின் ஆயுதக்கிடங்கு ஒன்றின் மீதும் விமானப்படையினர் இன்று காலை 6.30 மணியளவில் அடுத்தடுத்து வான்வழி தாக்குதல்களை நடத்தி விடுதலைப் புலிகளுக்கு சேதங்களை ஏற்படுத்தியிருப்பதாகவும் இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.
எனினும் வட்டக்கச்சி பகுதியில் இடம்பெயர்ந்து சென்ற மக்கள் குடியிருப்புக்கள் மீதே விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதில் 3 சிவிலியன்கள் காயமடைந்ததாகவும், 8 வீடுகள் சேதமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.
வடபகுதியில் இடம்பெறும் மோதல்களில் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து இருதரப்பிலிருந்து மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
கிளிநொச்சியிலிருந்து பெருமளவில் மக்கள் இடம் பெயர்வு
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி நகரப்பகுதியில் இராணுவத்தினரின் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதனாலும், அந்த நகரை அண்டிய பகுதிகளில் விமானத் தாக்குதல்கள், இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிரமடைந்துள்ள நேரடிச் சண்டைகள் காரணமாக கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து மக்கள் பெருமளவில் இடம்பெயரத் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு மூன்று தினங்களாக இடம்பெற்று வருகின்ற இந்த இடப்பெயர்வு காரணமாக கிளிநொச்சி நகரை உள்ளடக்கிய கரைச்சி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள 14 கிராம சேவையாளர் பகுதிகளில் இருந்து 6500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
 |
|
ஒரு வண்டியில் பல பொருட்கள் |
ஐநா அமைப்புக்கள் வன்னிப்பிரதேசத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும் என அரசாங்கம் விடுத்திருந்த அறிவித்தலையடுத்து, அந்தப் பிரதேசத்திலிருந்து ஐநா அமைப்புக்கள் நேற்று முழுமையாக வெளியேறியுள்ளன.
இந்த நிலையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரண பணிகளும், தற்போது இடம்பெயர்ந்து சென்று கெர்ணடிருக்கும் மக்களுக்கான உடனடி நிவாரண பணிகளை மேற்கொள்வதிலும் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் கூறுகின்றார்.
இது குறித்த மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இலங்கை விமானப் படை தாக்குதலில் 4 பொதுமக்கள் பலி
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டம் முறிகண்டி பகுதியில் இன்று இலங்கை விமானப்படையின் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் குறைந்தது 4 பேர் காயமடைந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
மறுப்பு
ஆனால், விடுதலைப்புகளின் இலக்குகள் மீது இன்று நான்கு தடவைகள் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுகின்ற இலங்கை பாதுகாப்பு அமைச்சு கிளிநொச்சியில் இரணைமடுவுக்கு மேற்குப் பகுதியில் விடுதலைப்புலிகள் கூடும் இடங்களில் இரு தடவைகள் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மற்றும் உடையார் கட்டுக்குளம் பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது.
குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் விபரங்கள் குறித்து தமிழோசையிடம் பேசிய, கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி, நான்கு பேர் இறந்துள்ளதாகவும், நான்கு பேர் மிகவும் மோசமாக காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பிள்ளையார்கட்டு நோக்கி தாம் சென்ற வேளையிலேயே விமானப்படையின் விமானம் தம்மை தாக்கியதாக கூறுகிறார் காயம்பட்ட ஒருவர்.
அதேவேளை மோதல்கள் நடப்பதால், காயமடைந்தவர்களில், கவலைக்கிடமாக இருப்பவர்களை மேலதிக சிகிச்சைக்கு அனுப்புவதிலும் சிரமம் இருப்பதாகக் கூறுகிறார் டாக்டர் சத்திய மூர்த்தி.
கிளிநொச்சி மருத்துவமனையை சூழவுள்ள பகுதிகளிலும் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
வன்னியில் இருந்து ஐ நா மனிதநேயப் பணியாளர்கள் விலகல்
 |
|
வன்னிப் பகுதியில் சுமார் 2 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் |
வன்னிப் பகுதியிலிருந்து ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான உதவிப் பணியாளார்கள் முற்றிலுமாக விலகி விட்டார்கள் என்று ஐ நாவின் இலங்கை அலுவலகப் பேச்சாளர் கார்டன் வைஸ் பி பி சி தமிழோசையிடம் தெரிவித்தார்.
தமது சர்வதேச பணியாளர்களும், இலங்கையின் மற்றப் பகுதியைச் சேர்ந்த பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும், ஆனால் வன்னிப் பகுதியைச் சேர்ந்த சில உள்ளூர் பணியாளர்கள் அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
செவ்வாய் கிழமை மட்டும் தமது 20 பணியாளர்கள் வன்னிப் பகுதியில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வந்துவிட்டதாக கார்டன்வைஸ் கூறினார்.
வன்னிப் பகுதியிலிருந்து தமது வாகனங்கள் அனைத்தும் முழுமையாக வெளியே வந்து விட்டதாகவும், உபகரணங்கள் பல வவூனியாவுக்கு கொண்டு வரப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பணிகளை செய்ய காரிடாஸ் முடிவு
கத்தோலிக்க நிறுவனமான கேரிடாஸ், வன்னிப் பகுதியில் தொடர்ந்து தம்முடைய மனித நேயப் பணிகளை மேற்கொள்ளும் என்று கேரிடாசின் இயக்குனர் அருட் தந்தை டேமியன் பெர்னாண்டோ, பி பி சியின் சிங்கள சேவையான சந்தேஷியாவுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.
காரிடாஸ் ஒரு அரசு சாரா நிறுவனமல்ல என்றும் அது கிறிஸ்தவ தேவாலயத்தின் மனித நேயப் பணிகளை செய்யும் ஒரு அமைப்பு என்றும் விளக்கமளித்த காரிடாஸ் இயக்குனர் தங்களது அமைப்பில் வன்னிப் பகுதியில் வெளிநாட்டவர்கள் யாரும் பணியாற்றவில்லை என்றார்.
கொழும்பில் பஸ் குண்டுவெடிப்பில் 4 பேருக்கு காயம்
 |
|
குண்டு தாக்குதல் நடைபெற்ற பேருந்து |
இலங்கையின் தலைநகர் கொழும்பில் பேருந்து ஒன்றில் குண்டு ஒன்று வெடித்துள்ளது.
அந்த குண்டு வெடிப்பதற்கு சற்று முன்னதாகவே அந்த பேருந்து பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு அகற்றப்பட்டுவிட்டதால், எவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை.
அந்த பேருந்தில் சந்தேகத்துக்கிடமான பொதி ஒன்று இருப்பது அவதானிக்கபட்டதை அடுத்தே, அதில் இருந்த பயணிகள் இறக்கபட்டு, அது பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
நாட்டின் வடக்குப் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை அரசாங்கப் படையினர் அதிகப்படுத்தியுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வவூனியா தாக்குதலில் இந்தியர்களுக்கு காயம்படவில்லை- இலங்கை இராணுவப் பேச்சாளர்!
 |
|
ராடார் தளம் மீது நடந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் காயமடைந்ததை இந்தியாவும் இலங்கையும் உறுதி செய்துள்ளன |
இலங்கையிலிருக்கும் இந்திய தூதரகம், வவுனியா தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் காயமடைந்தார்கள் என்று உறுதி செய்துள்ள நிலையிலும் கூட இந்தியர்கள் யாரும் அத்தாக்குதலில் காயமடையவில்லை என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார மீண்டும் கூறியுள்ளார்.
அந்த தாக்குதல் நடைபெற்ற தினத்தில், இந்தியர்கள் யாரும் வவுனியா முகாமில் பணிக்கு அமர்த்தப்படவில்லை என்று அவர் தெரிவி்த்திருந்தார். ஆனால் தாக்குதலில் இரண்டு இந்திய தொழில்நுட்பவியலாளர்கள் காயமடைந்ததை இரு நாட்டு அரசுகளும் உறுதி செய்துள்ளன.
தாக்குதல் குறித்து தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட பிரிகேடியர் நாணயகாரா, தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இந்தியர்கள் யாரும் இல்லை என்றும் இந்தியர்கள் காயமடைந்ததாக உங்களுக்கு இந்திய தூதரகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்தால் நீங்கள் அவர்களிடமே அது குறித்து மேலதிக விவரங்களை கேட்டுக்கொள்ளுங்கள் என்றும் கூறினார்.
இந்திய தூதரக அதிகாரி மட்டுமல்லாமல், இலங்கை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா அவர்களும் இரண்டு இந்தியர்கள் காயமடைந்ததை உறுதி செய்திருக்கிறாரே என்று அவரிடம் தமிழோசை கேட்டபோது, “நீங்கள் தயவு செய்து அந்த அமைச்சரையே தொடர்புகொண்டு இதை பற்றி கேளுங்கள். எனக்கு தெரியாத விடயம் குறித்து நான் எதுவும் கூறமுடியாது. என்னை பொறுத்தவரை அந்த முகாமில் இந்தியர்கள் யாரும் இல்லை” என்று பிரிகேடியர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் அழியும் வரை இராணுவ நடவடிக்கைகள் தொடரும் – இலங்கை ஜனாதிபதி
 |
|
ஜனாதிபதி சமாதானப் புறாவல்ல என்று விமர்சகர்கள் கூறுகின்றனர் |
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கெதிராக அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கைகள் அவர்களை முற்றாக அழித்தொழிக்கும்வரை தொடரும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திங்கட்கிழமை கொழும்பில் தெரிவித்திருக்கிறார்.
திங்கட்கிழமை மாலை இலங்கை வெளிநாட்டுப் பத்திரிகையாளர் சங்கத்துடன் நடாத்திய கலந்துரையாடலின்போது இது குறித்துக் கருத்துவெளியிட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அதிகாரிகளும், முப்படைத்தளபதிகளும் தற்போது புலிகளுக்கு எதிராக வடக்கில் இடம்பெற்றுவரும் இராணுவ நடவடிக்கைகளின் போக்குக்குறித்து மிகவும் திருப்தியாக இருப்பதாகவும், புலிகளை முற்றாக ஒழித்துக்கட்டுவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், இது ஒரு சாத்தியப்படும் காரியம் என்றும் தெரிவித்தார்.
வன்னி மாவட்டத்திலிருந்து சர்வதேச தொண்டுநிறுவனப் பணியாளர்களின் வெளியேற்றம் குறித்துக் கருத்துவெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சர்வதேச பணியாளர்களின் சுயபாதுகாப்பிற்காகவே அரசு அவர்களை வன்னியிலிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டதாகவும், இது ஒரு தற்காலிக நடவடிக்கை என்றும், அந்தப்பிரதேசங்கள் படையினால் விடுவிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் மீளவும் அங்கு சென்று பணியாற்ற அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.
‘ஐ.நா. பணியாளர்கள் வெளியேறுவதற்கு வழியேற்படுத்தித்தர விடுதலைப் புலிகள் சம்மதம்’
இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் ஐநா அமைப்புகள் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அரசு பிறப்பித்த உத்தரவை அடுத்து, அப்பகுதியில் இயங்கிக்கொண்டிருக்கும் ஐ.நா. மன்ற அமைப்பின் பணியாளர்கள் ஏற்கெனெவே அங்கிருந்து வெளியேறத் துவங்கிவிட்டனர். மீதமுள்ள ஐநா அமைப்பின் பணியாளர்கள் அனைவரும் நாளை செவ்வாய்க்கிழமை அங்கிருந்து வெளியேறப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக இவர்கள் அங்கிருந்து வெளியேறக் கூடாது என்று கோரி, கிளிநொச்சியிலிருக்கும் பொது மக்கள் போராட்டங்கள் நடத்தி தடை ஏற்படுத்தி வந்தனர்.
இதை தொடர்ந்து, ஐ.நா. மன்ற அதிகாரிகள் இது குறித்து விடுதலைப்புலிகள் அமைப்பிடம் பேசியதை தொடர்ந்து, மீதமுள்ள ஐ.நா. அமைப்பின் பணியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான வழியை ஏற்படுத்தித் தருவதாக விடுதலைப்புலிகள் தங்களிடம் உறுதி அளித்திருப்பதாக இலங்கையில் இருக்கும் ஐ.நா. மன்றத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான கோர்டன் வெய்ஸ் அவர்கள் பிபிசியிடம் தெரிவித்தார்.
இது குறித்து அவரது விரிவான செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.
வட இலங்கை மோதல்கள்: முரண்பட்ட தகவல்கள்
 |
|
இலங்கை சிப்பாய் |
கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன்குளம் பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற உக்கிர சண்டையில் எதிர்த்தரப்பினருக்குப் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாகக்கூறி இருதரப்பினரும் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அக்கராயனுக்குத் தெற்கே திருமுறிகண்டி வீதியில் இந்த மோதல்கள் இடம்பெற்றதாகவும், இராணுவத்தின் முன்னேற்ற நடவடிக்கையை எதிர்த்து தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகள் மீது படையினர் நடத்திய எறிகணை தாக்குதலில் விடுதலைப் புலிகளுக்குப் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
இரு தரப்பினருக்கும் இடையில் பல மணித்தியாலங்கள் கடும் துப்பாக்கிச் சண்டைகள் இடம்பெற்றதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கி்ன்றது.
ஆனால் விடுதலைப் புலிகளோ, தமது கடுமையான எதிர்த்தாக்குதலில் இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றனர். இந்தச் சண்டையில் இராணுவத்தினருக்குப் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகள் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்களையும், ஆயுதத் தளபாடங்களையும் தாங்கள் கைப்பற்றியிருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இந்த மோதல்கள் காரணமாக கிளிநொச்சிக்கும் வவுனியாவுக்கும் இடையிலான பொதுப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவக்கப்படுகின்றது.
இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பங்கள் பல பாதுகாப்பு தேடி வடக்கு நோக்கி இடம்பெயர்ந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதனிடையே. கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் மாதுறுஓயா காட்டுப்பகுதியில் திங்கள் மாலை விடுதலைப் புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் சிவில் பாதுகாப்புப் படை சிப்பாய் ஒருவரும் சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்கள் என மகாஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வன்னியிலிருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – ஐ.நா
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து ஐ.நா. உதவிப் பணியாளர்கள் விலகுவது தற்காலிகமாகத் தடைபட்டுள்ளது என்றாலும் அரசு ஆணைக்கமைய அப்பகுதியலிருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை என்று கார்டன் வைஸ் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்தார். எனினும் தாங்கள் வவுனியா பகுதியில் இருந்து மனிதாபிமான பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் வன்னியிலிருந்து வெளியேறும் போது வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து அதி முக்கியமான பொருட்களையும் தாங்கள் வெளியேற்ற போவதாகவும், முக்கியமற்ற பொருட்கள் மற்றும் ஒரு சில பணியாளர்கள் அங்கே இருப்பார்கள் என்றும் ஐ,நா அதிகாரியான கார்டன் வைஸ் தெரிவித்தார்.
கிளிநொச்சிப் பகுதிக்கு அருகே மோதல்கள் வலுத்துள்ள நிலையில், அங்கிருக்கும் உதவிப் பணியாளார்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதங்கள் வழங்க முடியாது எனக் கூறி அங்கிருந்து உதவிப்பணியாளர்களை விலகச் சொல்லி இலங்கை அரசு அறிவித்திருந்தது.
அதைத் தொடாந்து சில நாட்களுக்கு முன்னதாக ஐ.நா. அப்பகுதியலிருந்து வெளியேறத் தொடங்கியிருந்தது.
இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்
 |
|
இலங்கை இராணுவத்தினர் |
இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் வன்னி போர் முனைகளில் சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் மாத்திரம் 27 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் இராணுவச் சிப்பாய் ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.
வவுனியா மாவட்டத்தின் நாவற்குளம் மற்றும் வவுனியா நகருக்கு கிழக்கே உள்ள மாமடு ஆகிய இடங்களில் சனிக்கிழமை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சண்டைகளில் 8 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மாமடு பகுதியில் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரது சடலத்தை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகவும் இராணுவத் தலைமையகம் கூறியிருக்கின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன்குளம் வன்னேரிக்குளம் நாச்சிக்குடா பகுதிகளிலும் வெலிஓயா ஆண்டான்குளம் போர்முனையிலும் இடம்பெற்ற மோதல்களில் 19 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதுடன் இராணுவச் சிப்பாய் ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.
இதற்கிடையில் வன்னிக்கள முனைகளில் சில தினங்களுக்கு படையினரால் கைப்பற்றப்பட்டிருந்த 2 விடுதலைப் புலிகளின் சடலங்கள் சனியன்று சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் கையளிக்கப்பட்டதாக இராணுவம் தனது இணையத்தள செய்தியில் குறிப்பிட்டிருக்கின்றது. எனினும் இந்த மோதல் சம்பவங்கள் குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மட்டக்களப்பில் சட்ட விரோத மீன்பிடித்தலால் மீன் இனங்கள் அழிவு
 |
|
மீன் பிடித்தலை நம்பி ஏராளமான குடும்பங்கள் |
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு வாவியில் சட்ட விரோதமான முறையில் மீன் பிடித்தல் அதிகரித்துள்ளதால் சில மீனினங்கள் அழிந்து வருவதாக மாவட்ட மீன்பிடி விரிவாக்கல் தினைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
வாவியில் இனம் காணப்பட்டுள்ள 112 வகையான மீனினங்களில் 28 வகையான மீனினங்கள் அழிந்து வருவதாக மாவட்ட மீன்படித்துறை உதவிப் பணிப்பாளர் எஸ்.டி.ஜோர்ஜ் கூறுகின்றார்.
இம் மாவட்டத்திலுள்ள 24 ஆயிரம் மீனவ குடும்பங்களில், 50 சத வீதமான குடும்பங்கள் வாவி மீன்பிடித்தொழிலை தமது வாழ்வாதகரமாக நம்பியுள்ளதாகவும், வாவி மீனவர்களில் 20 முதல் 25 சத வீதமானவர்களே தடை செய்யப்பட்ட வலைகளைப் பாவித்து சட்ட விரோத மீன் பிடித்தலில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், கடந்த கால சூழ்நிலை காரணமாக ஏற்கனவே இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்த போதிலும், தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் சட்ட நடவடிக்கை மூலம் இதனை தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த சட்ட விரோத மீன் பிடித்தல் காரணமாக இம் மாவட்டத்தில் சமூக பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்று கூறிய மாவட்ட மீன் பிடி அபிவிருத்தி சபைத்தலைவரான சிதம்பரப்பிள்ளை பியதாச, கடந்த காலங்களில் இதனை தடுக்க முற்பட்ட போதெல்லாம் ஆயுத அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதாகவும் கூறுகின்றார்.
இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்கு வரக்கூடிய மக்களுக்கான உதவிகள் குறித்து ஆய்வு
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வரக்கூடிய மக்களுக்கான உதவிகளை செய்வது குறித்த முக்கிய அதிகாரிகள் மட்டக் கூட்டம் ஒன்று இன்று வவுனியாவில் நடந்துள்ளது.
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தீவிரமான இராணுவ நடவடிக்கைகள் காரணமாக அங்கு ஏற்பட்டுள்ள போர்ப் பதற்ற நிலைமையையடுத்து, பாரிய எண்ணிக்கையில் மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதியான வவுனியா பிரதேசத்திற்குள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு வரக்கூடிய இடம்பெயர்ந்த மக்களை 6 இடைத்தங்கல் முகாம்களில் முதலில் தங்கவைத்து அவர்களின் விபரங்கள் பதியப்பட்டு, பாதுகாப்பு நடைமுறைகள் முடிவடைந்த பின்னர், அவர்களுக்கென வேறு 3 இடங்களில் அமைக்கப்படவுள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைப்பதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்வது குறித்து, இன்று வவுனியா செயலகத்தில் சிவில், பொலிஸ், இராணுவ அதிகாரிகள் மற்றூம் ஐநா அமைப்புக்கள் உட்பட்ட சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உள்ளுர் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூடி ஆராய்ந்துள்ளார்கள்.
கிளிநொச்சி நிலைமைகள்
 |
|
வெளியேறும் அரசசார்பற்ற நிறுவனங்கள் |
கிளிநொச்சியில் இருந்து உதவிநிறுவனப் பணியாளர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளதால், அங்கு இடம்பெயர்ந்தவர்களுக்காக அவர்கள் மேற்கொண்டுவந்த பணிகள் தடைப்பட்டுள்ளதுடன், தமக்கு அவை ஒரு சுமையாக மாறியுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் என். வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இராணுவததிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே வன்னிப்பிரதேசத்தில் உக்கிரமடைந்துள்ள மோதல் நிலைமைகளினால் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் இடம்பெயர்ந்து பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்துவரும் நிலையில், அரசாங்கத்தின் அறிவித்தலுக்கு அமைய அந்தப் பிரதேசத்தில் இருந்து ஐ நா மன்றம் சார்ந்த நிறுவனங்களும், ஏனைய சர்வதேச மற்றும் உள்ளுர் தொண்டு நிறுவனங்களும் வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள்.
இதனால் குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் 22 பாடசாலைகளில் தங்கியிருந்த மக்களுக்கான மாற்று வாழ்விட வசதிகளை ஏற்படுத்துவதற்காக தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்டு வந்த வேலைத்திட்டங்கள் முடிவடையாத நிலையில் கைவிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.
இதனால் 17 பாடசாலைகளில் மாத்திரமே இடம்பெயர்ந்த மக்கள் வெளியேறியதையடுத்து, அங்கு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
5 பாடசாலைகளில் இன்னும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவில்லை என அவர் கூறுகின்றார். அத்துடன் மாற்று வாழ்விட வசதிகளைப் பெற்றவர்களும் தமக்குரிய அடிப்படை வசதிகளை முழுமையாகப் பெற முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இலங்கையின் வன்னியில் இருந்து ஐ.நா மன்றத்தினரை வெளியேற வேண்டாம் என கோரி மக்கள் முற்றுகை
 |
|
முற்றுகையிட்ட மக்கள் |
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய வன்னிப்பகுதியில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டிருந்த ஐநா மன்றத்தின் உதவி அமைப்பினரை அங்கிருந்து வெளியேற வேண்டாம் எனக்கோரி அங்குள்ள மக்கள் அந்த அலுவலகங்களைச் சூழ்ந்திருந்து தடுத்திருப்பதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து தகவல் வெளியிட்ட ஐநா மன்றத்தின் சார்பில் இலங்கையில் பேசவல்ல அதிகாரியாகிய கோடன் வெய்ஸ் அவர்கள், ஐநாவின் அகதிகளுக்கான தூதரகம், உலக உணவுத் திட்டம் ஆகியவற்றின் அலுவலகங்களைச் சூழ்ந்து சுமார் 300 பேர் வரையிலான பொதுமக்கள் அந்த பணியாளர்களை அங்கிருந்து வெளியேற முடியாதாவாறு அமைதியான முறையில் தடுத்திருக்கின்றார்கள்.
தங்களது கரிசனைகளையும் கவலைகளையும் உள்ளடக்கிய கோரிக்கைகளை அவர்கள் எழுத்து மூலமாக அங்குள்ள தலைமைப் பணியாளரிடம் வழங்கி அவற்றை ஐநா மன்றத்தின் செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டிருக்கின்றார்கள்.
நாங்கள் அங்கிருந்து வெளியேறவே முயற்சிக்கின்றோம். எமது கணிப்பின்படி அங்கு நிலைமைகள் மோசமடைந்திருக்கின்றன. அரசாங்கம் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என தெரிவித்து அங்கிருந்து எங்களை வெளியேறிவிடுமாறு கோரியிருக்கின்றது. அங்குள்ள எமது பணியாளர்கள் அவர்களை வெளியேறாதவாறு தடுத்துள்ள பொதுமக்களிடம் தம்மை வெளியேறுவதற்கு அனுமதிக்குமாறு கேட்டிருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.