“தோட்டாக்கள்’ எழுதும் தீர்ப்புகள்!
உ . நிர்மலா ராணி
தில்லி வியாபாரிகளான பிரதீப் கோயல் மற்றும் ஜகஜித் சிங் இருவரையும் பட்டப்பகலில் நடுரோட்டில் ஜனநெரிசல் மிகுந்த கன்னாட் பிளேஸ் பகுதியில் 1997-ல் மோதல் என்ற பெயரில் சுட்டுக் கொன்றதற்காக ஓர் உதவி கமிஷனர் உள்ளிட்ட 10 காவல்துறையினருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
“என்கவுன்டர்’ அதாவது “மோதல் சாவுகள்’ என்ற பெயரில் எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் பறித்துவிட்டு தப்பித்துக்கொள்ளலாம் என்ற நிலை பரவலாக நிலவிவரும் நேரத்தில், இந்தத் தீர்ப்பு ஒரு திருப்புமுனை. இதுபோன்ற சம்பவங்களில் சாதாரணமாக நிர்வாகரீதியான விசாரணைகள் நடைபெறும். சில வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நஷ்டஈடு மட்டுமே வழங்கப்படும். தவிர தவறு செய்த காவல்துறையினர்மீது சட்டப்படி கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, வழக்கு நடத்தப்பட்டு நீதி கிடைத்திருப்பது இந்த வழக்கில்தான்.
அதுவுமே சி.பி.ஐ. 74 சாட்சிகளை விசாரித்து 7 நீதிபதிகள் ஒருவர் பின் ஒருவராக வழக்கை நடத்தி, அரசுத் தரப்பு வழக்குரைஞர்களை பலமுறை மாற்றி, இறந்தவரின் குடும்பத்தினரும் மற்ற பல அமைப்பினரும் இடைவிடாமல் போராடி 10 ஆண்டுகள் 6 மாதங்கள் கழித்து இந்த நீதி கிடைத்துள்ளது.
அதுமட்டுமல்ல, குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் குற்றத்தை, சட்டத்திற்குள்பட்ட மோதல் சாவாகச் சித்திரிக்க கையாண்ட முயற்சிகளும் நீதிமன்றத்தால் கவலையோடு பரிசீலிக்கப்பட்டுள்ளது.
தாதா யாசினும் அவரது கூட்டாளியும் என, தவறாக நினைத்து அவர்களைச் சரமாரியாகச் சுட்டுவிட்ட போலீஸôர், காருக்குள்ளிருந்தவர்கள் முதலில் சுட்டதால்தான் தற்காப்புக்காக தாங்கள் சுடவேண்டி வந்ததாக விளக்கமளித்தனர். அதற்கு ஆதாரமாக பல காலமாகப் பயன்பாடு இல்லாத துப்பாக்கியை காருக்குள்ளிருந்து கைப்பற்றியதாகக் கதைகட்டியதுமல்லாமல் அந்தத் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்ட தோட்டாக்கள்தான் இவை என்று அரசு துப்பாக்கிக் குண்டு நிபுணரான ரூப் சிங்கையும் பொய்சாட்சியமளிக்க வைத்திருக்கிறார்கள். இவர் ஏற்கெனவே ஜெசிகாலால் கொலை வழக்கில் பொய் சாட்சியமளித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறந்துபோனது யாசினாக இருந்திருந்தாலும்கூட “”சட்டத்திற்குப்புறம்பான சாவுகளை” நடத்தும் “காக்கிச்சட்டைகள்’ குற்றவாளிகளே என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
“மோதல் சாவுகள்’ சட்டத்தால் அனுமதிக்கப்பட்டதா என்றால், இரண்டு காரணங்களுக்காக காவல்துறையினர் இதை நிகழ்த்தலாம். ஒன்று, தற்காப்புக்காக இரண்டாவது, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 46-வது பிரிவின்படி மரணதண்டனையோ ஆயுள் தண்டனையோ பெறக்கூடிய குற்றம்புரிந்த ஒரு நபரைக் கைதுசெய்ய முயற்சிக்கும்போது தேவைப்பட்டால் மரணத்தை விளைவித்தால்கூட குற்றமில்லை என்பதால்.
ஆனால் இந்த அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து நடத்தப்படும் போலி மோதல் சாவுகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. 1960களில் நக்சலைட்டுக்களை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் மேற்குவங்கத்திலும் பின்னர் ஆந்திரம், தமிழ்நாடு, கேரளத்தில் அரங்கேறிய இந்த “”சட்டத்திற்குப் புறம்பான சாவுகள்” அவசர நிலை காலகட்டத்தில் அரசியல் விருப்புவெறுப்புகளின் அடிப்படையில் ஒரு கொள்கையாகவே பின்பற்றப்பட்டது.
பின்னர் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில் வடமாநிலங்களிலும், ரௌடிகள் ராஜ்யத்தை அழிப்பது என்ற பெயரில் தென் மாநிலங்களிலும் தொடர்ந்து கொண்டிருந்தது. கடந்த 2 ஆண்டுகளாகத்தான், பதவி உயர்வு பெற காவல்துறை அதிகாரிகள் அப்பாவி மக்களைக்கூட “”மோதல் சாவுகள்” என்ற பெயரில் பலிகொடுத்திருப்பது காஷ்மீர், குஜராத் போன்ற மாநிலங்களில் நடந்த சம்பவங்கள் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
ஆள்நடமாட்டமில்லாத பகுதியில், இரவு நேரம் ரோந்து சென்று கொண்டிருக்கும் போலீஸôர் முன் திடீரென்று தோன்றும் குற்றவாளிகள் நாட்டுத் துப்பாக்கியால் சுடுவார்கள் அல்லது நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும் கைதி காவலர்களின் துப்பாக்கியைத் திறமையாகக் கைப்பற்றி அவர்களைத் தாக்க முயற்சி செய்வர்; தற்காப்புக்காகவும் அவர்களைக் கைது செய்ய முயலும்போதும் போலீஸôரின் குண்டுக்கு அவர்கள் பலியாவார்கள். ஆனால் அவர்கள் நடத்திய தாக்குதலால் போலீஸôருக்கு கை, கால் போன்ற இடங்களில் மட்டுமே அடிபட்டதாகக் கூறப்படும்.
தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் நடந்த 9 மோதல் சாவுகள் தொடர்பாக சித்திரவதைக்கெதிரான பிரசாரத்தை மேற்கொண்டிருக்கும் மதுரையைச் சேர்ந்த “மக்கள் கண்காணிப்பகம்’ களஆய்வு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த வெள்ளை ரவி, குணா மோதல் சாவுகளில்கூட சம்பவம் நடந்த இடம் போலீஸôர் கூறுவதுபோல் மறைந்து கொள்வதற்கு ஏற்ற இடமாக இல்லை என்றும், நாட்டுத் துப்பாக்கியாலும், பெட்ரோல் குண்டுகளாலும் போலீஸôர் தாக்கப்பட்டிருந்தால் 5 காவலர்களுக்கும் ஒரே மாதிரி இடது வலது, கைகளில், முழங்கைக்கு கீழ் எப்படி காயம்பட்டிருக்க முடியும் என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடசாமியை வெள்ளை ரவி கடத்த திட்டமிட்டிருந்தபோது இந்த மோதல் சாவு நிகழ்ந்ததாக போலீஸôர் அளித்த தகவலை, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வே மறுத்திருப்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
போலி மோதல் சாவுகளை நியாயப்படுத்தும் சிலர் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் குற்றம் நிரூபணமாகாமல் விடுவிக்கப்படுவதை காரணம் காட்டுகிறார்கள்.
அவ்வாறு குற்றவாளிகள் விடுதலையாவதற்கு காவல்துறையின் மோசமான புலன் விசாரணைதான் பிரதான காரணம் என்பதை உச்ச நீதிமன்றம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. வழக்கு நடக்கும்போது போதுமான கவனம் செலுத்துவதில்லை. சாட்சிகளின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதில்லை. அரசியல் ரீதியில் நியமிக்கப்படும் அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள், நீதிமன்ற காலதாமதம் போன்ற காரணங்கள் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெள்ளை ரவி விஷயத்தில் கூட 1999ல் அவர் மீது பதிவாகியிருந்த 24 வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க அரசு உத்தரவிட்டது. ஆனால் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது என்னவோ 2003ல்தான். அதற்குள் 22 வழக்குகளில் விசாரணை முடிந்து அவர் குற்றவாளியல்ல என்று நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. தனி நீதிமன்றம் விசாரித்த மற்ற 2 வழக்குகளிலும் அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் தான் அவர் கொல்லப்பட்டார்.
மோதல் சாவுகள் குறித்து நேர்மையாக, விரைவாக விசாரணை செய்ய அதிகாரம் கொண்ட அமைப்பு நமது நாட்டில் இல்லை. மோதல் சாவுகள் நடக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், மத்திய, மாநில அரசுக்குக் கடிதம் எழுதியும் பல மாநிலங்கள் அதைப் பின்பற்றுவதில்லை என்று ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.
இதுபோன்ற ஆணையங்களும் நீதிமன்றங்களும்கூட மோதல் சாவுகளைத் தடுக்க முடியவில்லை. மணல் மேடு சங்கர் வழக்கில் அவர் தன்னை போலீஸôர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப் போவதாக நீதிபதியிடம் முறையிட்டுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினரான அவரது தாய் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறார். உச்ச நீதிமன்றத்திலும் இந்த விஷயம் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் கண்காணிப்பகம் உள்ளிட்ட 24 மனித உரிமை அமைப்புகள் தமிழ்நாடு காவல்துறை தலைவரிடம் மனு அளித்துள்ளது.
இதன் பிறகுதான் மணல்மேடு சங்கர் நீதிமன்றத்திலிருந்து அழைத்துச் செல்லப்படும்போது சினிமா பாணியில் வாகனம் விபத்துக்குள்ளாகி, அந்தக் குழப்பத்தில் அவர் தப்பிக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டதாகச் செய்தி வெளியானது.
உண்மையிலேயே ரௌடிகள் மட்டுமே சுட்டுக் கொல்லப்படுகிறார்களா? ரௌடிகள் யார் என்று முடிவு செய்வது யார்? அந்தப் பட்டியலைத் தயார் செய்யும் காவல்துறையும், அரசு எந்திரமும், பாரபட்சம், லஞ்சம், பதவி, விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவையா? ஒருவர் ரௌடியாக இருந்தாலும், உயிர் வாழும் உரிமை அவருக்கு உண்டு என்று நமது அரசியல் சட்டம் கூறுவதை மதிக்க வேண்டும்.
சட்டத்திற்குட்பட்டு நீதிமன்றம் விதிக்கும் மரணதண்டனை என்ற தீர்ப்பே சரியா, தவறா என்று விவாதித்துக் கொண்டிருக்கும்போது, எந்த விசாரணையுமின்றி, சட்டத்திற்குப் புறம்பாக தோட்டாக்கள் எழுதும் தீர்ப்பான போலி மோதல் சாவுகளை அனுமதிக்க முடியுமா? சிந்திப்போம்!
(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)
————————————————————————————————————————————————
கூலிப்படையின் குருகுலங்களாய்…
சு. பிரகாசம்
தமிழகத்தில் கூலிப்படையினரை ஒடுக்குவதற்காக உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டம் தமிழக முதல்வரால் நடத்தப்பட்டது. அதன் எதிரொலியாக மாநிலம் முழுவதும் ரவுடிகள் கணக்கெடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்ட ரவுடிகளை சிறைக்குள் கட்டுப்படுத்த வழிவகை செய்யப்பட வேண்டும். இல்லாவிடில் அவர்களிடையே தேவையற்ற ஒருங்கிணைப்பிற்கும் தீய சிந்தனைகளுக்குமே வழி வகுக்கும்.
ரவுடிகளை மட்டுமல்ல! தற்போதைய சிறை நிர்வாக ஊழல்களும், சூழல்களும் சிறைப்பட்ட எவரையும் தீய வழிகளுக்கே அழைத்துச் செல்கின்றன.
எனவே, மனித உரிமைகளின் மாதிரிக் கூடங்களாக சிறைகள் சீரமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதன் மூலம்தான் ஒட்டுமொத்த குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்துவதில் அரசு வெற்றிகாண முடியும்.
சிறை சீரமைப்பு என்பது ரவுடிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் சாதகமான செயல்திட்டங்களை அறிவிப்பது அல்ல! சிறைக்குள் அவர்களது சொகுசு வாழ்க்கைக்கும், தீய சிந்தனைகளுக்கும், தீய நட்புக்கும், சிறைத் துறையினரின் ஊழல்களுக்கும் பாதகமான நடவடிக்கை என்பதே சரியான நிலைப்பாடு ஆகும்.
சிறைப்பட்டவர்களில் ரவுடிகளும் தீவிரவாதிகளும் மோசடிக்காரர்களும் சுமார் 20 சதவிகிதத்திற்கும் உள்பட்டவர்களே! எஞ்சியவர்கள் விசாரணைக் கைதிகளாகவும், சந்தர்ப்ப சூழ்நிலை குற்றவாளிகளாகவும் உள்ளவர்கள். இவர்கள் மிகுந்த ஏழ்மை நிலையில் ஒட்டுமொத்த வாழ்வையும் சூன்யமாகக் கருதுபவர்கள்.
சிறை வாயிலில் தாயிடம் குழந்தை கேட்டதாம்! ஏம்மா அப்பாவைப் பார்க்க பணம் தரணுமா! என…
சிறைக்குள் இவ்வளவு சங்கடங்கள் இருக்கும் எனத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் மனைவியின் கள்ள உறவைச் சகித்திருப்பேன் என்றாராம் ஓர் தண்டனைக் கைதி!
அய்யா! உணவை வாயில் வைக்க முடியலிங்க! என்ற கைதியிடம், கடிதம் போட்டா உங்களைக் கூப்பிட்டோம்! என்றாராம் சிறை அதிகாரி!
வீடு தேடி வந்த சிறைத் துறையினரை டேய்! இவங்க போலீஸ் இல்லைடா! நம்ம குருகுலத்து தெய்வங்கள்! என்றாராம் கூலிப்படைத் தலைவன்! சக கூட்டாளிகளிடம்.
இவையெல்லாம் சிறை நிர்வாகங்கள் குறித்த பாதகமான செய்திகள்தான்.
சிறைத் துறையினரின் அராஜகங்களும், ஊழல்களும் சிறை சுவர்களுக்கு வெளியே முழுமையாகத் தெரிவதில்லை. புலனாய்வுப் பத்திரிகைச் செய்திகளை நீதிமன்றங்கள் ஆதாரங்களாகக் கொள்வதில்லை. சிறைக்குள் என்ன நடக்கிறது என்பதை எவரும் அறிய இயலாது. சிறை அதிகாரிகள் சொல்வதைத்தான் அரசும் நம்ப வேண்டியிருக்கிறது.
கைதிகளுக்கு உணவு வழங்குவதில் நாள் ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் கமிஷன்! ஆளும் அரசியல் கட்சிகளின் (மாநாடு) நிதிச் செலவுகளை ஈடு செய்வதில் சிறைத்துறை முதலிடத்தில் உள்ளது.
அரசு வழங்கும் உணவு அளவீட்டில் 5-ல் ஒருபகுதி கூட கைதிகளைச் சென்றடைவதில்லை என்பதுதான் வேதனை. சுதந்திரம் அடைந்த ஆரம்ப கால கட்டங்களில் சிறைகள் சிறைகளாயிருந்தன. அன்று தண்டனை முடிந்து விடுதலையான கைதிகள் பலர் சமூகத்தில் மதிக்கக்கூடியவர்களாக மாறினர்.
அன்று மொழிப் போராட்டங்கள் மூலம் சிறை சென்ற அரசியல் கட்சியினர்தான் இன்று ஆளும் கட்சியினராகச் செயல்படுவதைக் காண்கிறோம்.
தமிழகத்தில் தனிநபர் விரோத அரசியல் தொடங்கிய பின்னரே ரவுடிகளை நோக்கி அரசியல் பதவிகள் தேடி வந்தன. அத்தகையவர்கள் லஞ்ச வழிவகைகள் மூலம் சிறைவாசத்தை சொகுசாக ஆக்கி கொண்டனர்.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாரபட்சமின்றி அரசியல்வாதிகளிடமே பெரும் தொகையை லஞ்சமாகப் பெற்ற துணிவு சிறை நிர்வாகத்தில் முழுமையாக ஊழல் வியாபிக்க வழிவகுத்துவிட்டது. அதன் விளைவாகவே இன்று கூலிப்படையினரின் குருகுலங்களாய் சிறைகள் மாறிவிட்டன.
சிறையில் நடக்கும் சம்பவங்களை வெளிக்கொணர மனித உரிமை அமைப்பாளர்களையும் பத்திரிகையாளர்களையும் சிறைக்குள் சென்று வர அனுமதிக்க வேண்டும். மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட நீதிபதிகளின் ஆய்வைக் கட்டாயப்படுத்த வேண்டும்.
மத்திய சிறைகளின் காவல்நிலையங்களில் உளவுப் பிரிவு அலுவலகங்களை அமைக்க வேண்டும். சிறைக்குள் இருக்கும் கைதிகளை மட்டுமின்றி சிறைத்துறையினரையும் காவல்துறையினரின் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். சிறைக்குள் எந்தப்பகுதியையும் எவரையும் காவல்துறையினர் திடீர் சோதனையிட அனுமதிக்க வேண்டும்.
கைதிகளுக்கு உணவு தயாரிப்பதில் (சிறைத்துறைக்குத் தொடர்பில்லாத வகையில்) உணவக (ஹோட்டல்) உரிமையாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வேண்டும்.
சிறைக்குள் தேங்கிக் கிடக்கும் மனித ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.
சிறை நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியருக்கு கூடுதல் பொறுப்பை வழங்க வேண்டும். அத்துடன் தண்டனைக் கைதிகளின் சிறை மாற்றங்களுக்கு அவரது அனுமதியைக் கட்டாயமாக்க வேண்டும்.
கைதிகளின் சொந்த ஊர் பகுதி காவல்நிலையங்கள் வாயிலாக விடியோ கான்பரன்சிங் மூலம் உறவினர்கள் பேசுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
சிறைத்துறையில் காவலர் முதல் டி.ஐ.ஜி. வரை சீருடை விஷயத்தில் காவல்துறையினர் போன்று தோற்றமளிக்கின்றனர். இருவேறு அரசுத் துறைகளுக்கு எளிதில் வேறுபாடு காண முடியாத அளவுக்கு ஒரே மாதிரியான சீருடை தோற்றம் துஷ்பிரயோகங்களுக்குத்தான் வழிவகுக்கும். இது தவறான நடைமுறையாகும்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது இரக்கத்தையும், இறுக்கத்தையும் சம அளவில் வெளிப்படுத்தும் வகையில் சிறைத்துறையினருக்கு தனி சீருடையை அறிமுகப்படுத்த வேண்டும்.
கைதிகளிடம் சட்டவிரோதமான பொருள்கள் இருப்பின் அவற்றைக் கண்டறிய நவீன அறிவியல் சாதனங்களை அனைத்து சிறைகளிலும் அமைக்க வேண்டும்.
விசாரணைக் கைதிகளின் நிலை தண்டனைக் கைதிகளின் நிலையைவிட கடுமையானதாக இருந்து வருகிறது. சந்தேகத்தின் பேரில் விசாரணைக் கைதிகளாக எவரும் சிறை செல்ல நேரிடலாம். அவ்வாறு சிறைப்பட்டவர், சட்டத்தை நிலைநாட்டுவதற்கு ஒத்துழைப்பு தருவதற்காகவே சிறையில் இருப்பதாகக் கருதப்பட வேண்டும். அவ்வகையில் விசாரணை சிறைவாசிகளுக்கு, அதுவும் முதன்முதலாக சிறைவாசம் அனுபவிப்பவர்களுக்கு என சிறப்பு விதிகள் வகுக்கப்பட வேண்டும்.
சிறைக்குள் எது நடந்தாலும் அதற்கு சாட்சி ஆவணங்கள் இல்லை. சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக சிறைக்குள் சென்றால்… அங்கே நடந்தது நடந்ததுதான். யாரும் ஏன் என்று கேள்வி எழுப்ப வழியில்லை.
சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் கழிந்தும் சிறை விதிமுறைகள் சரிவர சீரமைக்கப்படவில்லை. சிறைகள் என்றாலே ஒருவித அச்ச உணர்வு நிலவுகிறது என்பதே உண்மை நிலையாகும்.
சிறைக்கூடங்கள் அனைத்தும் அச்சம் அளிக்கக்கூடியதாகவும் பழிவாங்கும் ரகசியக் கூடங்களாகவும் இருக்க வேண்டியது ஆங்கிலேய அரசின் அடக்கு முறை ஆட்சிக்கு அவசியமாயிருந்தது.
ஆனால் மக்களாட்சியில் சிறைக்குள் என்ன நடக்கிறது என மக்களுக்குத் தெரிய வேண்டும். ஊடகங்கள், மனித உரிமை அமைப்புகள் என பல வழிகள் மூலம் சிறை விஷயங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும்.
இல்லையேல் தனிநபர் ஆகட்டும்! அரசியல்வாதிகளாகட்டும்! ஆளும் அரசுக்கு எதிரானவர்களா! எத்தகைய மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருப்பினும் பிடித்து போடு சிறையில்… என்ற நிலையே ஏற்படும். மக்களாட்சியிலும் சர்வாதிகாரிகள் தோன்றத்தான் செய்வார்கள்.
எனவே கடந்தகால அனுபவங்களைக் கருத்தில்கொண்டு சிறை சீரமைப்பின் அவசியத்தை இன்றைய அரசுகள் கருத்தில்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான ஜனநாயக அரசியலுக்கு சிறை சீர்திருத்தம் மிக அவசியம் என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
(கட்டுரையாளர்: மனித உரிமை ஆர்வலர் மற்றும் முன்னாள் சிறைத்துறை காவலர்)