Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for திசெம்பர், 2006

Lalkudi Jayaraman – Dinamani Kathir Music Season Special

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006

லால்குடி ஜெயராமன்: என்றும் ஒளிரும் நாதச் சுடர்!

நேர்காணல்} தொகுப்பு: எஸ்.சிவகுமார்

வயலினை அவரது வில் தொட்ட கணத்தில் நம்மை தன்மறதி ஆட்கொள்கிறது. நாதமண்டலத்தின் அமுததாரை, மனித மனம் இதுவரை அறியாத இளைப்பாறுதலை அளிக்கிறது. வாழ்வின் தொலையாத துயரங்கள், துன்பங்கள் யாவும் அடங்கிக் கிடக்கும் ஆனந்தபோதை அது. இறைமையினது இருப்பின் சாட்சியம் அவரது இசை. இந்த மேதை வாழும் நாளில், நாட்டில் நாமும் வாழ்கிறோம் என்று பெருமிதம் கொள்ள வைக்கிற இணையற்ற கலைஞன் லால்குடி ஜெயராமன். இவருக்கு அறிமுகம் எழுதுவது அசட்டுத்தனம். ஒரு மகாகலைஞனது வாழ்வின் சுவடுகளை அவர் கடந்து வந்த பாதையை அவரே சுருங்கச் சொல்லும் ஒரு நேர்காணல் இது. இனி லால்குடி….

லால்குடியில் கரண்ட் இல்லாத காலம் அது. இருள் விலகாத அதிகாலை. குளிரில் சலனமற்று உறங்கிக் கொண்டிருக்கும் எங்கள் தெரு. தெருக் கடைசியில் எங்கள் வீடு. அந்த பிரம்ம முகூர்த்தத்தில் அப்பா என்னை எழுப்பி சாதகத்துக்கு உட்கார வைப்பார். குளிருக்கு இதமான வெதுவெதுப்பான கூடத்தில் ஓர் அகல் விளக்கை ஏற்றி வைப்பார் அம்மா. அகலின் முத்துச் சுடரில், கூடம் வர்ணிக்க இயலாத தூய்மையும் அழகுமாக ஒளிரும். என் வீடு கடைசி வீடல்லவா?… வீட்டைச் சுற்றி வாழையும் வயலுமாக விரிந்த பெரும் வெளி. அந்தப் பெரு வெளியின் மோனம், வீட்டையும் தெருவையும் புலனாகாத போர்வைபோலப் போர்த்தியிருக்கும். கரிச்சானின் தனிக் கூவல் மெüனத்தைச் செதுக்கும் அதிகாலைப் பேரமைதி. இப்படி அற்புதமாகத் துவங்கும் என் அதிகாலைச் சங்கீத சாதகம். என் வாசிப்பைக் கேட்டபடியே அப்பா சற்று தள்ளி படுத்துக் கொண்டிருப்பார். வயலினின் நாதம் துல்லியமாக எழுந்து வீட்டின் சுவர்களைத் தாண்டி தெருவிலும் ஒலிக்கும். என் தெருக்காரர்களும் கேட்பார்கள். 3 மணிநேரம் தன் நினைவின்றி சங்கீத அமுதத்தில் லயித்துக் கிடப்பேன். சுமார் ஆறரை மணிக்கு என் சாதகம் ஓயும். அப்புறம்தான் காபி இத்யாதிகளெல்லாம். லால்குடியில் என் இளம் வயது இசைக் கல்வியின் ஆரம்ப நாட்கள் அவை. இப்போது நினைத்துப் பார்த்தாலே ஆனந்தமாக இருக்கிறது.

எங்கள் குடும்பமே சங்கீத பரம்பரை என்பதால் எனக்கும் சங்கீதத்தில் இப்படிப்பட்ட ஆழ்ந்த ஈடுபாடு இருந்ததில் ஆச்சரியமில்லை.

இந்த மனோலயமும் ஈடுபாடும்தான் என்னை அன்று எல்லாவகையான சங்கீதவித்வான்களை நோக்கியும் கவர்ந்திழுத்தது. நான் சற்று வளர்ந்து ஊரும் சற்று வளர்ந்த காலம் அது. ஊரிலுள்ள பார்க்கில் ஒரு ரேடியோ. அந்த ரேடியோவில்தான் அருமையான கச்சேரிகளைக் கேட்பேன். கச்சேரி நேரம் தெரிந்து அங்கே போய் தயாராக நின்று கொண்டே இருப்பேன். கச்சேரி ஆரம்பித்து வித்வான் பாடுவதை ஆழ்ந்த கவனத்தோடு லயித்துக் கேட்பேன். கச்சேரி முடிந்ததுதான் தாமதம். ஒரே ஓட்டமாக வீட்டுக்கு வருவேன்.

உடனே வயலினை எடுத்து வைத்துக் கொண்டு புதிதாகக் கேட்டவற்றை அப்படியே வாசித்துப் பார்ப்பேன். இப்படிக் கேட்டவற்றிலுள்ள நல்லவற்றையெல்லாம் தேடித் தேடி சேகரித்து அப்படியே ஒரு டேப் ரிகார்டர் போல மனத்தில் பதித்துக் கொள்வேன். அப்படி நான் கேட்ட சங்கீத மேதைகளில் பிஸ்மில்லாகானை என்னால் மறக்கமுடியாது. அவரது வாசிப்பு என்னை அத்தனை தூரம் பாதித்துள்ளது. நான் கேட்ட வித்வான்களின் நல்ல அம்சங்களை கிரகித்துக் கொண்டதும் தீவிரமான சாதகமும்தான் என்னை உயர்த்தின. என் அப்பா பாதி ராத்திரியில் திடீரென்று ஓர் ஐடியா வந்து என்னைத் தூக்கத்திலிருந்து எழுப்பி உட்கார வைத்து வாசிக்க வைத்து போதித்ததும் உண்டு.

பள்ளி சென்று படித்த படிப்பு என்பது கொஞ்சம்தான். சங்கீதம்தான் வாழ்க்கை என்று தீர்மானமாகி விட்ட பிறகு அதில் பயிற்சி எடுப்பதற்குத்தான் நேரம் இருந்தது. பள்ளியில் படிக்க வேண்டிய படிப்பையெல்லாம் வீட்டில்தான் படித்தேன். பள்ளியில் படிக்க வைக்காததற்கு இன்னொரு காரணமும் சொல்ல வேண்டும். என் தந்தை லால்குடி கோபாலய்யருக்கு நான் ஒரே பிள்ளை. மற்ற மூவரும் பெண்கள். ஆகவே அப்பாவுக்கு இயல்பாகவே என் மீது கூடுதலாகப் பாசம் இருந்தது. அப்போது நான் பள்ளிக்கூடத்துக்குப் போய் வந்து கொண்டிருந்தேன். ஒரு தடவை பள்ளிக்கூடத்துக்குப் போகும்போது வழியில் ஒரு குளத்தில் அப்பா குளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு கரையில் போய் நின்றேன். அப்பா தண்ணீரில் முழுகிவிட்டுத் தலையை வெளியே நீட்டினார். அப்போது அவர் நான் கரையில் நிற்பதைப் பார்த்துவிட்டார். பள்ளிக்கூடம் போகிற சின்னக் குழந்தை குளக்கரையில் வந்து நிற்பது பிராண ஆபத்தல்லவா என்று தோன்றிவிட்டது. குளத்துக்கிட்ட உனக்கென்னடா வேலை என்று கேட்டு எழுந்து வந்து என்னை அடித்தார். அதோடு என் பள்ளிக்கூட வாழ்க்கை முடிந்தது.

அதேசமயம் குழந்தைகளுக்கே உரிய விளையாட்டுப் பருவத்தை முற்றிலுமாக நான் இழக்கவில்லை. பெரும்பாலும் சின்ன வயசின் நினைவுகளெல்லாம் என் தாத்தா வாளாடி ராதாகிருஷ்ணையரின் ஊரான வாளாடியிலும், லால்குடியிலுமாகச் சுற்றி வருகிறது. அந்த நாட்களில் கதைகள் படிப்பதில் நிறைய ஆர்வம் உண்டு. கல்கியின் நாவல்களையெல்லாம் ஆர்வத்துடன் வாசித்திருக்கிறேன். பின்னாளில் நான் வாசித்த, எனக்கு மிகவும் பிடித்த நாவல் மோகமுள். அதன் ஆசிரியர் ஜானகிராமன் சங்கீதத்தின் ஆத்மானுபவத்தில் மூழ்கி அதை எழுதியிருக்கிறார். வெகுகாலம் கழித்து அவரைச் சந்தித்தேன். மதுரை மணி அய்யரின்கச்சேரி தில்லி ஆல் இண்டியா ரேடியோவில் நடந்த போது நான் பக்கவாத்தியம் வாசித்தேன். அந்த ரேடியோ புரோகிராமின் போது எங்களை அறிமுகம் செய்து அறிவித்தார் அங்கு உயர் அதிகாரியாக இருந்த தி.ஜா. அப்போது என்னைப் பற்றி என் வாசிப்பைப் பற்றி அறிமுகமாக மிக உயர்வாகச் சொன்னார். அப்புறம்தான் அவருடன் நேரே பேசிப் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளி என்பது எனக்குப் புலப்பட்டது.

என் இளமைப் பருவத்தை நான் கழித்த லால்குடி- வாளாடி இடையே கிட்டத்தட்ட நாலரை மைல். இரண்டிலும் என் காலத்துக்கு முன்பு திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர் தொடங்கி எத்தனையோ மகாவித்வான்கள் வந்து கச்சேரி செய்திருக்கிறார்கள். கச்சேரிகளெல்லாம் அக்கால வழக்கப்படி இரவில் நீண்ட நேரம் நடக்குமாம்.

பிற்காலத்தில் ஊரில் நானும் பல பெரிய வித்வான்களின் கச்சேரிகளைக் கேட்டேன். அந்த நாளில் பக்கத்து ஊரில் உள்ள வித்வான்களெல்லாம் வெள்ளிக்கிழமை மற்றும் கிருத்திகைகளில் எங்கள் வீட்டுக்கு வந்து பாடுவார்கள். சேலம் தேசிகன், பூவாளூர் வெங்கட்ராமன் உள்பட பலவித்வான்கள் இப்படி வந்து பாடியிருக்கிறார்கள். அப்படி அவர்கள் வந்து பாடியபோதெல்லாம் அவர்களுக்கு நான் பக்கவாத்தியம் வாசித்திருக்கிறேன்.

பின்னாளில் சென்னைக்கு வந்த பிறகும் கூட வெள்ளிக் கிழமைகளிலும், கிருத்திகைகளிலும் சந்தியாகாலத்தில் அப்பாவும் நானுமாக வாசிப்போம். அன்றைக்கு வீட்டில் பெரிய பெரிய இழைக்கோலங்கள் போடுவாள் என் மனைவி. நான் உதிரிப்பூவாக வாங்கி வைத்திருப்பேன். பூக்களை அப்பாவும் நானும் தொடுப்போம். தொடுத்த மாலைகளை ஸ்வாமி படங்களுக்குப் போட்டு விளக்கேற்றி வைப்பாள் என் மனைவி. பிறகு அப்பாவும் நானும் வயலினுடன் உட்காருவோம். குக்கர் விசிலடிக்கிற சப்தம், குழந்தை அழுகிற சப்தமெல்லாம் இல்லாமல் வீட்டில் ஆழ்ந்த அமைதி நிலவும். ஒன்பது மணி வரை அப்படியே லயித்துப்போய் வாசிப்போம். அப்புறம் தீபாராதனை. இப்படி என் சங்கீதத்தில் நாதானுபவத்தோடு தெய்வானுபவமும் கலந்தது.

என் ஊரில் நான் கேட்ட கச்சேரிகள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேனல்லவா? ஜி.என்.பாலசுப்பிரமணியத்தின் கச்சேரியை நான் முதலில் கேட்டது எங்கள் ஊர் கோவிலில்தான். ராஜமாணிக்கம் பிள்ளை வயலின், பழனி சுப்புடு மிருதங்கத்துடன் நடந்த கச்சேரி அது. அந்தக் கச்சேரியில்தான் முதல்முதலில் மைக்கையே நான் பார்த்தேன்.

அந்த நாளில் திருச்சி நூற்றுக்கால் மண்டபத்தில் பெரிய பெரிய வித்வான்களின் கச்சேரிகளெல்லாம் நடக்கும். கச்சேரி நடப்பதற்கு முதல் நாளே ரயில் ஏறிப் போய்விடுவேன். ரயில் சார்ஜ் எட்டணா என்று நினைவு. ஜி.என்.பி. பாட்டு என்றால் கூட்டமான கூட்டம் இருக்கும். முன்னாடியே போய் முன்னால் உட்கார்ந்துகொண்டுவிடுவேன். எப்ப வருவார் என்று பார்த்துக் கொண்டே இருப்பேன். கச்சேரி கேட்ட கையோடு லால்குடிக்குப் போவேன். ஊர் போனதும் முதல்நாள் கச்சேரியில் கேட்டதையெல்லாம் அப்படியே ரெகார்ட் பண்ணியது போல வாசிப்பேன்.

இப்படியெல்லாம் என் வாசிப்பை அபிவிருத்தி செய்து கொண்டேன். பெரியவித்வான்களைக் கேட்பதும் வாசிப்பதுமாக இருந்தாலும் இந்த வித்வான்களுக்கு நான் பிற்காலத்தில் பக்க வாத்தியம் வாசிப்பேன் என்று அன்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஒரு தடவை ஆந்திரத்துக்கு பாலக்காடு மணிஐயருடன் ஒரு கச்சேரிக்குப் போய்க் கொண்டிருந்த போது அவரிடமே இதைச் சொன்னேன். உங்களுடன் கூட சமமாக உட்கார்ந்து வாசிப்பேன் என்று நான் அந்த நாளில் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை என்று நான் சொன்னபோது மணிஐயர் சந்தோஷமாகச் சிரித்தார்.

பிஸ்மில்லா கான்

அன்று சங்கீத உலகில் சீனியராக விளங்கிய அரியக்குடி ராமானுஜய்யங்காருக்கு முதல் முதலில் வாசித்தது தேவகோட்டையில் நடந்த ஒரு கச்சேரியில். அது 1946 ஆம் வருஷம். தேவகோட்டையில் நடந்த பல்லடம் சஞ்சீவராவுக்கு பக்கவாத்தியம் வாசிக்க நான் போயிருந்தேன். அந்த நிகழ்ச்சியில் நடக்க இருந்த மற்றொரு கச்சேரியில் ஐயங்கார்வாளுக்கு பக்க வாத்தியம் வாசிக்க இருந்தவர் பாப்பா வெங்கட்ராமையர். திடீரென்று அவரிடமிருந்து “உடம்பு சரியாக இல்லை…மன்னிக்கவும்’ என்று தந்தி வந்துவிட்டது. கடைசியில் பாப்பாவின் இடத்தில் நான் உட்கார்ந்து ஐயங்கார்வாளுக்கு வாசித்து அவரது பாராட்டையும் பெற்றேன்.

ஜி.என்.சாருக்கு முன்பு அவரது பிரதான சீடராக விளங்கிய டி.ஆர். பாலு எனக்கு அறிமுகமானார். நான் அவருக்கு வாசித்திருக்கிறேன். என் வாசிப்பைக் கேட்டுவிட்டு அவர் “”ரொம்ப நன்றாக வாசிக்கிறீர்களே…. நீங்கள் அவசியம் எங்கள் அண்ணாவுக்கு வாசிக்க வேண்டும்” என்றார். அந்த நாளில் அவர்களெல்லாம் தங்கள் குருவை அண்ணா என்றுதான் சொல்வார்கள். இது தெரியாமல் “”ஓ….உங்க அண்ணா கூட பாடுவாரா?” என்று வியப்பாக நான் கேட்டபோது பாலு சிரித்தார். “”என்ன சார் என் குருநாதர் ஜி.என்.பி.யைச் சொல்கிறேன்… புரியலையா” என்றார். அப்புறம்தான் அது எனக்குப் புரிந்தது.

பின்னாளில் ஜி.என்.சாருடன் அறிமுகம் ஏற்பட்டதும் அவருக்கு முதல் கச்சேரி வாசித்ததும் சுவாரஸ்யமான விஷயம். அது 1949 என்று நினைக்கிறேன். மியூசிக் அகாதெமியில் ஒரு மத்தியானக் கச்சேரி. கே.வி.நாராயணசாமிக்கு நான் வயலின். அன்று கச்சேரி வந்திருந்தார் ஜி.என்.பி. நான் அவரைக் கவனிக்கவில்லை. யாரிந்தப் பையன் ரொம்ப நன்றாக வாசிக்கிறானே….என்று அவர் கவனித்திருக்கிறார். கச்சேரி முடிந்ததும் என் முதுகை யாரோ தட்டினார்கள். திரும்பிப் பார்க்கிறேன். சுந்தர ரூபன் ஜி.என்.பி. ஆஜானுபாகுவாக சென்ட் மணக்க அருகில் நிற்கிறார். பேஷ்,பேஷ்…ரொம்ப நன்றாக வாசித்தாய்…என்று தட்டிக் கொடுத்தார். நான் பேச்சற்று நின்று கொண்டிருக்கிறேன். நீ எனக்கு வாசிக்கிறாயா…..உனக்கு பத்தாம் தேதி செüகரியப்படுமா? என்று கேட்கிறார்.

“”இவருக்கு வாசிக்கவா என்னைக் கூப்பிடுகிறார்” என்ற வியப்பில் வாயடைத்து நிற்கிறேன். ஏதோ எனக்கு வரிசையாகக் கச்சேரி இருப்பது போல “செüகரியப்படுமா’ என்கிறாரே… எனக்கு கச்சேரியே இல்லையே…என்று நினைக்கிறேன். அப்போது அவர் என்னிடம் ஒரு பத்து ரூபாய் நோட்டைத் தந்து “”தப்பாய் நினைக்காதே. இப்போது என்னிடம் பத்து ரூபாய்தான் இருக்கு. இப்போ இதை கச்சேரிக்கு அட்வான்ஸôக வெச்சுக்கோ”என்றார். அந்த மேதை எவ்வளவு பெரிய மனிதர் பாருங்கள். பிற்காலத்தில் மல்லேஸ்வரம் சபாவின் சீதாராமனுக்கு அவர் எழுதிய கடிதத்தில் எழுதிய வரிகள் எனக்கு இன்னும் நினைவிருக்கின்றன. “வென் ஜெயராமன் ஈஸ் தேர்….ஒய் கோ ஃபார் அனதர் அகாம்பனிஸ்ட்….வி ஆர் இன்செபரபிள்’ என்று எழுதினார். என்னால் மறக்கமுடியாதது இது. அவர் கூட வாசிக்கும் போது பரிபூரண சுதந்திரம் கொடுப்பார். அவருடன் வாசித்த ஒரு கச்சேரியில் எனக்கு பெரிய கிளாப்ஸ் கிடைத்தபோது “”தி ப்ளஷர் ஈஸ் மைன்” என்று சொன்ன மா மனிதர் அவர்.

ஜி.என்.பியுடனான என் முதல் சந்திப்பு நடந்த சம்பவத்தை எனக்கு மீண்டும் நினைவு படுத்தும் நிகழ்ச்சி ஒன்று சில ஆண்டுகள் முன்பு நடந்தது. நான் திருவண்ணாமலை ரமணாசிரமத்துக்குப் போயிருந்தேன். அங்கு சாப்பிடும் போது ஒருவர் வந்து என்னிடம் பேசினார். அந்தநாளில் ஜி.என்.பி. எனக்குப் பத்து ரூபாய் கொடுத்த நிகழ்ச்சியை நினைவு படுத்தினார். உங்களிடம் ஜி.என்.பி. பத்து ரூபாய் கொடுத்த போது நான் அங்கு இருந்தேன். அன்று சென்னையில் பாதாம் அல்வாவுக்குப் பிரபலமாக விளங்கிய கோயம்புத்தூர் கிருஷ்ணையர் கடையில் அல்வா வாங்க என்னிடம் ஜி.என்.பி பணம் தந்தார். அல்வா வாங்கியது போக மிச்சம் பத்து ரூபாய் இருந்தது. அதை நான் அவரிடம் கொடுத்தேன். அந்த ரூபாயைத்தான் உங்களுக்கு அவர் அட்வான்ஸôகத் தந்தார் என்று அவர் நினைவு படுத்தினார். எத்தனையோ வருஷம் கழித்து அன்றைய சம்பவத்துக்கு சாட்சியமாக இருந்தவர் என் முன் நிற்கிறார்? ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.

அந்தக் காலத்தில் வித்வான்களெல்லாம் காபி, ரவா தோசை, அல்வா எல்லாம் சாப்பிட என்று தங்களுக்குப் பிடித்தமான ஒரு ஹோட்டலைத் தேடிப் போய்ச் சாப்பிடுவார்கள். அன்று அவர்களது சாப்பாட்டு ரசனை மட்டும்மல்ல….வாழ்க்கை ரசனை, நட்பு, ஆத்மார்த்தம் எல்லாமே வித்தியாசமானது. இன்றைய நிலைக்கு நேர் மாறானது. இன்று உலகமே வெறும் பிஸினெஸ் மயமாகப் போய்விட்டதே.

ஜி.என்.பி.க்கு வாசிப்பதற்குமுன் நான் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மதுரை மணி, ஆலத்தூர் பிரதர்ஸ் எல்லாருக்கும் வாசித்திருந்தேன். ரொம்ப சின்ன வயதிலேயே சேலம் தேசிகனோடு பம்பாய்க்குக் கச்சேரிக்காகச் சென்றேன். என்னைப் பார்த்துவிட்டு கச்சேரி ஏற்பாடு செய்தவர்கள் பயந்து போய் தேசிகனிடம் பேசினார்கள். இவ்வளவு சின்னப் பையனை அழைச்சிண்டு வந்திருக்கிறீர்களே….இவன் என்ன வாசிப்பான்? இங்கே இருக்கிற ஜனங்களெல்லாம் பொல்லாதவர்கள்….வேண்டாம் சார் விஷப் பரீட்சை! என்றார்கள். தேசிகன் சிரித்துக் கொண்டே சாயங்காலம் கச்சேரிக்கு அப்புறம் சொல்லுங்கள்….என்று சொல்லிவிட்டார். அதுபோலவே கச்சேரி முடிந்ததும் கச்சேரி ஏற்பாடு செய்தவர்கள் வந்து நான் சொன்னது தப்பு என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்.

சின்னவனாக இருந்த காலத்தில் நான் ரொம்ப நாள் வரைக்கும் குடுமி, கடுக்கன், உருத்ராட்சமுடன்தான் இருந்தேன். ஜி.என்.பி.சார்தான் என் ரோம சாம்ராஜ்ய வீழ்ச்சிக்குக் காரணமானவர். அவர்தான் குடுமியை எடுத்துக் கிராப் வைத்துக் கொண்டால் எவ்வளவு செüகரியம் என விளக்கி என் கல்யாணத்துக்கு முன்பாகவே குடுமியை எடுக்க வைத்தவர்.

குடுமி போன பிறகும் காதில் போட்டிருந்த வைரக் கடுக்கன் இருந்தது. அதை 1963 ம் வருஷம் ஒரு ரயில்வே கம்பார்ட்மென்ட் பாத்ரூமில் தொலைத்தேன். அத்தோடு கடுக்கனும் போயிற்று.

ஜி.என்.பி.க்கு முன்னாலேயே ஆலத்தூர் பிரதர்ஸýக்கு வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். பொதுவாக பல்லவி வாசிக்கும் போது வயலினுக்கு சான்ஸ் கொடுப்பதில்லை. ஆனால் அன்று நான் ஆலத்தூர் கச்சேரியில் அவர்கள் பல்லவி பாடி திரிகாலம் பண்ணிவிட்டவுடன் நான் வில்லைப் போட்டேன். ஆலத்தூர் சுப்பைய்யர் உடனே என்னைப் பார்த்து சிரித்து, “”அட…இது கூட உனக்குத் தெரியுமா” என்பது போல பேஷ்…பேஷ்…என்றார்.

பின்னால் ஆலத்தூர் சுப்பையருக்கு “சங்கீத கலாநிதி’ கொடுத்த வருஷம். அந்தக் கச்சேரியில் புதுப்பல்லவி பாட பாப்பா வெங்கட்ராமையர் வீட்டில் ரிகர்சல் நடந்தது. ஆனால் பல்லவி ரிகர்சலுக்கு என்னைக் கூப்பிடவில்லை. அங்கு வந்திருந்த மணி ஐயர், “” என்ன ஜெயராமனுக்குச் சொல்லலியா” என்று கேட்டார். உடனே சுப்பையர், “”அதெல்லாம் வேண்டாம். ஜெயராமன் தன்னால வாசிப்பான்.” என்றாராம். மறுநாள் கச்சேரியில் அவர் பாடிய சங்கீர்ணஜாதியில், அவர் பாடிய பல்லவியை நான் நிர்வாகம் செய்தது கண்டு ரொம்ப சந்தோஷப்பட்டார். வேர்த்து உடம்போடு ஒட்டிக் கொண்ட சட்டையோடு என்னைத் தழுவி சிங்கக் குட்டி என்று பாராட்டியது நினைவுக்கு வருகிறது.

அந்த நாளில் ஆலத்தூர் பிரதர்úஸôடு பல கச்சேரிகளில் வாசித்தேன். ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ காரணமாக என்னை அவர்கள் பக்க வாத்தியத்துக்குப் போட்டுக் கொள்ளாமல் இருந்தார்கள். அந்த நாளில் என் கூடப் பிறக்காத சகோதரன் போல இருந்தவர் பழனி சுப்பிரமணிய பிள்ளை. அவருக்கு இது தெரிந்தபோது நேராக ஆலத்தூரிடம் பேசினார். “”ஏன்யா….இந்தப் பிள்ளை மாதிரி யாருய்யா உங்களுக்கு வாசிச்சிருக்காங்க. பல்லவி முதக் கொண்டு நிர்வாகம் பண்ணுதே. பாட்டுக்கு போஷணையா வாசிக்குதே….இந்தத் தம்பியை விட்டுட்டீங்கன்னா உங்க கச்சேரி கெட்டுப் போகுமேய்யா….” என்றார். பழனி அண்ணாவுக்கு என் மீது அத்தனை அன்பு. அவர் சொன்ன பிறகு மறுபடியும் ஆலத்தூருடன் வாசிக்க ஆரம்பித்தேன்.

மற்றொரு மறக்கமுடியாத வித்வான் மதுரை சோமு. அவருக்கும் நிறைய வாசித்திருக்கிறேன். சோமு பாட ஆரம்பித்துவிட்டால் நேரம் காலம் பார்க்கமாட்டார். 3 மணி நேரம் ஆனதும் அவருக்கு புதிய தெம்பு பிறந்துவிடும். அப்புறம் விடியற்காலையில்தான் முடிப்பார். நான் கூட அவரிடம் வேடிக்கையாக உங்கள் கச்சேரிக்கு ஒரு செட் பக்கவாத்தியம் போதாது. ரெண்டு செட் வெச்சாத்தான் கட்டுப்படியாகும் என்பேன்.

என் முதல் சோலோ கச்சேரி நடந்தது ஜார்ஜ் டவுனில் நடந்த ஓர் ஐயப்ப சபை நிகழ்ச்சியில். அதன் பிறகு எத்தனையோ ரசிகர்கள் எனக்கு. லதாமங்கேஷ்கர், எம்.ஜி.ஆர். ஆகியோர் இவர்களில் மறக்க முடியாதவர்கள். நானோ சினிமா பார்க்காதவன். ஒரு தடவை நடிகர் பாலையா அவர் வீட்டுக் கல்யாணத்துக்கு மதுரை மணி கச்சேரியை ஏற்பாடு செய்துவிட்டு பக்கவாத்தியத்துக்கு என்னை ஏற்பாடு செய்ய வீட்டுக்கு வந்தார். வீட்டு முன்பு பாலையா…பாலையா என்றபடி கூட்டம். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பாலையாவாவது லையாவாவது….கூட்டம் போடாதீர்கள் போங்கள் என்றேன். அப்புறம்தான் பாலையா சினிமா நடிகர்; அவரைப் பார்க்கவே இத்தனைக் கூட்டம் என்ற விஷயம் புரிந்தது. பாலையா என் பரம ரசிகர். நல்ல சங்கீத ஞானம் உள்ளவர். எம்.ஜி.ஆரும் அப்படித்தான். நல்ல ஞானஸ்தர். எனக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றில் அவர் எழுதியிருந்தது இன்னும் நினைவிருக்கிறது. “”உங்களது பல்லாயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்” என்று எழுதியிருந்தார். அந்த அடக்கம், பண்பு என்னால் மறக்கமுடியாதது. அந்த நாளின் பெரிய வயலின் வித்வானாகிய திருவாலங்காடு சுந்தரேசய்யருக்கு என் வாசிப்பில் ரொம்ப ஆசை. முன்னால் உட்கார்ந்து கேட்பார். நான் சின்னப் பையனல்லவா…செல்லமாக அவர் என் காதுகளை முறுக்குவது இன்றும் நினைவுக்கு வருகிறது.

சங்கீதம் எனக்கு அருமையான ரசிகர்களையும் நண்பர்களையும் பெற்றுத் தந்தது. ஒரு தடவை என் மைத்துனருடன் கல்கத்தாவில் உள்ள ஒரு தியேட்டரில் சத்யஜித்ராயின் புகழ்பெற்ற காஞ்சன்ஜங்கா படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் படத்தின் கலை நுட்பத்தில் சொக்கிப்போய் என் மைத்துனரிடம் “”சத்யஜித்ராய் எப்படிப்பட்ட மேதை பார்த்தாயா?” என்று வியந்து சொன்னேன். பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.

“”நீங்கள் மட்டுமென்ன சாதாரணமா…நீங்களும் மேதை இல்லையா?”

கல்கத்தா தியேட்டரின் இருட்டில் ஒரு தமிழ்க் குரல். அதுவும் என்னை மேதை என்று அழைக்கும் குரல். ஆச்சரியத்துடன் யார் என்று திரும்பிப் பார்த்தேன். பின்னால் இருந்தவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அவர்தான் பிரபல வாய்பாட்டு விதூஷி அனந்தலட்சுமியின் கணவர் சடகோபன் என்று தெரிந்தது. எனக்கு ஒரு புதிய நண்பர் கிடைத்தார்.

இத்தனை ரசிகர்களை, பாராட்டுகளை, புகழைப் பெற்றதற்கு அனைத்துக்கும் வித்து எது என்று நினைத்துப் பார்க்கிறேன். லால்குடியின் அதிகாலை வேளையும், அகல் விளக்கு ஒளிரும் கூடமும் என் அருகே படுத்திருந்தவாறு என் வாசிப்பை ஆழ்ந்து கவனிக்கும் அப்பாவும்தான் நினைவுக்கு வருகிறார்கள். அப்பா ஏற்றி வைத்தது வெறும் அகல் சுடரல்ல….என் இதயத்தில் என்றும் ஒளிரும் நாதச் சுடர்.

நேர்காணல்} தொகுப்பு: எஸ்.சிவகுமார்

Posted in Tamil | 3 Comments »

D Sankaran – Malaikottai Govindhasaamy Pillai : Dinamani Kathir Music Season Special

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006

அமரர் டி. சங்கரன்: மலைக்கோட்டை கோவிந்தசாமிப்பிள்ளை

வீணை தனம்மாளின் சங்கீத குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் முத்திரை பதித்தனர். டி.என்.ராஜரத்தினம் பிள்ளையால் சங்கரண்ணன் என்று அழைக்கப்பட்ட டி.சங்கரன், தனம்மாளின் பேரன் மட்டுமல்லர்; “சங்கீத சரித்திரம்’ என்னும் தனத்தைப் பாதுகாத்தவர். 90 வயதுக்கும் மேலிருந்து நிறைவுவாழ்வு வாழ்ந்த அவர் 50 வருஷங்கள் முன் தினமணி சுடரில் எழுதிய இசை வரலாற்றுக் கட்டுரைகள் அந்தத் துறையில் ஒரு மைல் கல் என்றால் மிகையில்லை. உதாரணத்திற்கு ஒரு கட்டுரையை இங்கு அளித்துள்ளேன். இடவசதி கருதி கட்டுரையின் சில பகுதிகள் வெட்டப்பட்டுள்ளன.

கோவிந்தசாமிப் பிள்ளை நன்னிலம் தாலுகாவிலுள்ள அச்சுதமங்கலத்தில் 1879 இல் பிறந்தார். இவருடைய நெருங்கிய உறவினர் பரத நாட்டிய புகழ் நாகப்பட்டினம் நீலாம்பாள்.

இவரைத் திருச்சி கோவிந்தசாமிப்பிள்ளை, மலைக்கோட்டை கோவிந்தசாமிப்பிள்ளை என்றெல்லாம் அழைப்பதுண்டு. சங்கீத வித்வான்களுக்குள் இவருக்கு ராஜயோகம். நடை, உடை, பாவனைகள் கெüரவமான நோக்கம் உள்ளவர். சங்கீத கோஷ்டிகளில் அண்ணா என்றாலும் பிள்ளை என்று சொன்னாலும் இவரையே குறிக்கும். பிரபு என்றே இவரைப் பலர் மதித்து வந்தார்கள். சங்கீதம், வாழ்க்கை முதலிய சகல அம்சங்களிலும் உச்ச ஸ்தானத்தை அடைந்தபடியால் லயச் சிரேஷ்டரான கொன்னக்கோல் பக்கிரியாப் பிள்ளை இவரைப் பிரபு என்று மட்டுமே குறிப்பிடுவார்.

பிள்ளைக்கு ஆஜானுபாகுவான தோற்றம். புன்சிரிப்புத் தவழும் முகம். வார்த்தைகள் குறைவு. அவருடைய சங்கீதத்தை எதிர்ப்பார்ப்பது போல் அவருடைய வார்த்தைகளையும் ரசிகர்களும் பிரபுக்களும் வரவேற்பார்கள். பரம ரசிகர். நல்ல சாப்பாடு. வாசனை திரவியங்கள், பொருத்தமான மோதிரங்கள், கையில் அழகான தடி, பட்டு உடை இவற்றில் இஷ்டமுள்ளவர். கோட்டும், பட்டு மேல் வேஷ்டியும் காலில் விலை உயர்ந்த ஸிலிப்பரும் அணிந்து பிரயாணம் செய்வார். எப்போதும் இரண்டாவது அல்லது முதல் வகுப்பில் தான் ரயிலில் பிரயாணம் செய்வார். கோவிந்தசாமிப் பிள்ளைக்கு குரு பீடம் வகித்தவர்கள் புகழ் பெற்ற வித்வான்கள். பிடில் வித்வான் சீயாழி நாராயணஸ்வாமிப் பிள்ளையிடம், நாயகி ராக ஆலாபனையும் “”நீ பஜன கான” கீர்த்தனமும் கேட்டவர்கள் ஒரு வார்த்தையில் “”பன்னீர்’ என்று வர்ணிப்பார்கள். மற்றொரு குரு உமையாள்புரம் பஞ்சாபகேசய்யர். தியாகராஜ ஸ்வாமியின் சிஷ்ய பரம்பரையில் வந்தவர். கிருஷ்ண பாகவதரும் சுந்தர பாகவதரும் தியாகராஜ ஸ்வாமியின் நேர் சிஷ்யர்கள். அவர்களுடைய நெருங்கிய பந்து பஞ்சாபகேசய்யர். எட்டயபுரம் வித்வான்களான கோதண்டபாணி பாகவதரும் அவர் சகோதரர் ராமச்சந்திர பாகவதரும் கோவிந்தஸ்வாமிப் பிள்ளை மட்டுமின்றி மதுரை புஷ்பவனம் ஐயர், காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளை இவர்களையும் தயார் செய்த பெருமையுள்ளவர்கள். மத்தியமகால வின்யாசத்தில் ராமச்சந்திர பாகவதர் கீர்த்தி பெற்றவர்.

தலையெடுத்த பின்னரும் தான் ஒரு மாணவன் என்ற நினைவு கொண்டவர் பிள்ளை. கஞ்சிரா வித்வான் மான்பூண்டியாப் பிள்ளை. திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர், வீணை தனம்மாள் ஆகியவர்களைப் பரம குருவாகப் பூஜிப்பவர். இந்த அம்சத்திலும் தனம்மாளிடம், “பேஷ்’ வாங்கியவர். கோவிந்தசாமிப் பிள்ளை முன் வீணை வாசிப்பதைக் தனம்மாள் தனிப்பெருமையாக நினைத்திருந்தார்கள். “”கெüளை ராகம் நானா வாசிப்பது? அம்மா அல்லவா வாசிக்க வேண்டும்.” என்று தன் சிஷ்யனுக்கு உபதேசம் செய்வார்.

இவ்வளவு பெரிய வித்வான்களிடம் சங்கீதம் கற்றுக்கொண்டதும் ஒரு பெரிய நன்மைக்கே. எல்லாவித சங்கீதங்களையும் கேட்டு எவ்வளவு கொஞ்சமானாலும் அதன் பலனை அடையும் தீவிரம் அதிகமாயிற்று. எஸ்.ஜீ.கிட்டப்பாவின் சாரீர சம்பத்துக்கும் தன் மனத்தைக் கொள்ளை கொடுத்தார். ரூ.500 செலவழித்துப் பெடல் ஆர்மோனியம் கிட்டப்பாவின் உபயோகத்துக்காக வாங்கித் தன் வீட்டில் வைத்திருந்தார். நந்தனார் சரித்திர நாடகத்தில் “”மீசை நரைத்துப் போச்சே கிழவா”வை கிட்டப்பாவிடம் கேட்டு மெய்மறந்துபோய் உள்ளங்கையளவில் தங்கப்பதக்கத்தை கிட்டப்பாவுக்குப் பரிசளித்தார். அந்த நாடகத்துக்கு தன் நண்பர்கள், காஞ்சீபுரம் நாயனாப் பிள்ளை, கொன்னக்கோல் பக்கிரியாப் பிள்ளை, மருங்காபுரி கோபாலகிருஷ்ணையர் சகிதம் ஆஜராயிருப்பார்.

வி.பி.ஜானகி, கோல்டன் கம்பெனி சாரதாம்பாள், ஸ்ரீனிவாசப்பிள்ளை, வேலுநாயர், சின்ன மகாதேவையர், ஆரிய கான சகோதரர்கள் நாடகங்களையும் தவறாமல் பார்ப்பார். பாலிவாலா கம்பெனி, பார்சீ நாடகங்களில் அதிக மோகம். நல்ல சாரீரமுள்ள பிச்சைக்காரி பாடிக்கொண்டு போனால் முக்கியமான ஹிந்துஸ்தானி சங்கீதம் -அந்தச் சங்கீதத்தையும் சலியாமல் கேட்பார். எள்ளளவாகிலும் தமக்கு லாபம் கிடைக்கும் என்று நிச்சயம் உள்ளவர். கோஹர் ஜான் திருச்சி வந்தபோது, கோவிந்தசாமி பிள்ளையின் விருந்தினராகவே இருந்தார். ரஹமத்கான் ஹாபீஸ்கான், பியாரா ஹாஹேப், அப்துல்கரீம்கான் ஆகியோர் சங்கீதத்தையும் கேட்டுப் பயனடைந்தார் என்பதில் சந்தேகமில்லை. பிள்ளை தஞ்சாவூரில் வெகு நாள் தங்கியிருந்தார். ஆகையால், லாவணிப் போட்டிகளுக்கான பாட்டுக்களையும் அதற்கு பக்கவாத்தியமான டேப் வாத்தியத்தின் லயக்கட்டையும் கேட்டு சந்தோஷிப்பார்.

பொழுதுபோக்காக மட்டுமே அல்லாது மற்ற வாத்தியங்களையும் வாசித்துக் கச்சேரி செய்யும் திறமையுண்டு. வெகு நாள் வரை புல்லாங்குழல் கச்சேரி செய்து கொண்டிருந்தார். அநேகமாக மருங்காபுரி கோபாலகிருஷ்ணய்யர் பக்கவாத்தியமாக பிடில் இருக்கும். மருங்காபுரியும் பின்னாட்களில் பாப்பாவும் (பாப்பா வெங்கட்ராமையர்) ஜோடி சேர்ந்து வயலின் வாசித்தனர்.

மிருதங்கத்தில் பிள்ளைக்கு நல்ல திறமை. சென்னை சங்கீத சமாஜத்தில் சுப்பையரின் ஜலதரங்கக் கச்சேரிக்கு ஏற்பாடாகியிருந்தது. கோவிந்தசாமிப் பிள்ளை பிடில். தாஸ் ஸ்வாமி மிருதங்கம். மேடையில் மிருதங்கத்தை வைத்துவிட்டுப் போன தாஸ் ஸ்வாமி கச்சேரிக்குத் திரும்பவேயில்லை. சங்கீத சமாஜத்தின் காரியதரிசி முனுசாமி நாயுடு, பிள்ளையின் நெருங்கிய சிநேகிதர். கோவிந்தசாமிப் பிள்ளையை மிருதங்கம் வாசிக்கக் கோரினார். கச்சேரி கேட்கவந்த கோபாலகிருஷ்ணய்யர் பிடிலுடன் கச்சேரி பிரமாதம். வயலினில் தான் வாசிக்கும் சுகபாவத்தை மிருதங்கத்தில் பொழிந்துவிட்டார் பிள்ளை.

மற்றொரு காரணத்தாலும் சங்கீத சமாஜம் புனிதமாயிற்று. கோபாலகிருஷ்ணய்யர் சகிதம் கோவிந்தசாமி பிள்ளையின் மிருதங்க கச்சேரி ஆரம்பமாகி அரைமணி நேரம் இருக்கும். திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர் கச்சேரி கேட்பதற்காக வந்தார். கீரவாணியில் “கலிகியுண்டே கதா’ வாசித்துச் சுரம் வாசித்துக் கொண்டிருந்த சமயம். கொஞ்சம் மத்யம் காலம் வாசிக்குபடி கிருஷ்ணையர் சொன்னார். மத்தியம காலம் என்பது தானம் வாசிப்பதைக் குறிக்கும். தானம் வாசிப்பதில் பிள்ளைக்குத் தனிப் பெருமையுண்டு. தனக்குப் பின் வாரிசு கோவிந்தசாமிப் பிள்ளைதான் என்று கிருஷ்ணையரின் ஆசீர்வாதம் கிடைத்த நாள் கோவிந்தசாமிப் பிள்ளையின் வாழ்க்கையில் மறக்க முடியாத திருநாள்.

கோவிந்தசாமிப் பிள்ளை போடும் “தானம் வில்’ (ஸ்பிரிங் பெü) என்று த்வாரம் வெங்கடசாமி நாயுடு பாராட்டுவதுண்டு. இந்த அம்சத்தை மெச்சி காஞ்சீபுரம் நாயனாப் பிள்ளை தன் அனுபவத்தைக் கெüரவ மனப்பான்மையுடன் சொல்லிக் கொள்வார். மலைக்கோட்டையில் நாயனாப் பிள்ளை கோவிந்தசாமிப் பிள்ளை பக்கவாத்தியத்துடன் கச்சேரி செய்து கொண்டிருந்தார். ஒரு ரசிகர் தானம் பாடும்படி நாயனாப் பிள்ளையைக் கேட்டுக் கொண்டார். தன் சாரீரத்துக்குத் தானம் பொருந்தாது என்று சொல்லிவிட்டார். ஆனால் கோவிந்தசாமிப் பிளளை நாயனாப் பிள்ளையத் தூண்டி கொஞ்சமாகிலும் தானம் பாடும்படி வற்புறுத்தினார்.

“”அவ்வளவுதான்… நமக்கு நாக்குல ஈரம் இல்லாம அடிச்சுட்டாரையா அந்த மனுஷன். நாம் இருக்குமிடம் தெரியாதபடி வெளுத்து வாங்கிவிட்டார். பல்லவி பாடி அனுலோமம் பிரதிலோமம் செஞ்சு ஸ்வரம் பாடிக் கூட நம்ம பிரக்ஞை இல்லாம செஞ்சுட்டாரு. மனுஷன்தானே ஐயா நானும். ரோஷம் கொஞ்சமாவது எனக்கு இருக்காதா? என்று பெருந்தன்மையான வார்த்தைகளைச் சொல்லிப் பெருமைப்படுவார்.

“போவிங் டெக்னிக் (வில்வித்தை) கோவிந்தசாமிப் பிள்ளைக்குத் தனி அனுக்ரஹம். சாதக பலம் ஒரு பக்கம். ஞானபலம் பெரும்பலம். வில்வித்தையின் நுணுக்கங்களை மேனாட்டு முறைப்படி தெரிந்து கொள்ளும் வசதியும் இருந்தது. ராயபுரத்தில் வசித்து வந்த நகை வியாபாரி தங்கப் பிரகாச முதலியார் கோவிந்தசாமிப் பிள்ளைக்கு மட்டுமேயல்லாமல் சென்ற தலைமுறை வித்வான்களுக்கெல்லாம் ஆப்தர். (இப்போது மயிலாப்பூரில் நகை வியாபாரம் செய்யும் சுகானந்தத்தின் தகப்பனார் தங்கப் பிரகாச முதலியார்) நல்ல ரசிகர்.

அவர் உதவியால் கோவிந்தசாமிப் பிள்ளைக்கு இருவித அனுகூலங்கள் ஏற்பட்டன். நாதம் உள்ளதும் விலை உயர்ந்ததுமான வயலின் பிள்ளைக்குக் கிடைத்தது. மேனாட்டு முறையில் வயலின் வாத்திய சூட்சுமங்கள் தெரிந்த ஜான் துரை சாமியின் உறவும் பிள்ளைக்கு பிராப்தமாயிற்று. பிள்ளையின் புத்தி கூர்மைக்கு இவை நல்ல ஆதரவு கொடுத்தன. ஆகவே பிள்ளையின் வாத்தியத்தைக் கேட்டவர்களும் வயலின் வித்தையின் கஷ்ட நஷ்டங்களைத் தெரிந்த வித்வான்களும் பிள்ளையின் வில் வித்தையில் மயங்கிப் போவதில் ஆச்சரியமில்லை. வலது கை விரல்களின் நுனியில் வில்லின் நுனியைப் பிடித்துக் கொண்டு குலுக்கிக் குலுக்கி முழு வில் போட்டுத் தானம் வாசிப்பதில் மயங்கியவர் த்வாரம் வெங்கடசாமி நாயுடு. சுத்தமாகவும் ராக பாவத்துடனும் மூன்று காலம் வாசிப்பதே பிரமாதம். பிரமிக்கும் படியான நாலாங்காலமும் வில்லில் பேசும். வில் திரும்பும் சப்தம் தெரியவே செய்யாது. பல நாள்கள் கோவிந்தசாமிப் பிள்ளையுடன் ஜோடிப் பிடில் வாசித்த கோபாலகிருஷ்ணையரின் அனுபவம் இது.

பிள்ளை தமது 22வது வயதிலிலேயே முன்னுக்கு வந்துவிட்டார். முதல் முதலாக திருச்சி இரட்டை மஹால் தெருவில் வக்கீல் நீலகண்டய்யர் வீட்டில் கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவதர் கச்சேரியில் வாசித்தார். அது முதல் நீலகண்டய்யரின் ஆதரவும் புகழும் பிள்ளைக்கு வளர்ந்தது. பக்க வாத்தியம் வாசிப்பதிலும் அதே நாட்களில் திருக்கோடிக்காவல் கிருஷ்ணையரைப் போலவே கீர்த்தியடைந்துவிட்டார். மதராஸ் கிருஷ்ணகான சபையில் சரப சாஸ்திரிகளுடன் பக்க வாத்தியம் வாசித்தபோது ஒரே பாடாந்திரம் போல் தொடர்ந்து கோவிந்தசாமிப் பிள்ளை வாசித்ததில் சாஸ்திரிகள் மெய் மறந்தார். முதலாளியாக உள்ள வித்வான் ராகமோ ஸ்வரமோ வெகுநேரம் விஸ்தாரம் செய்தவுடன் பிள்ளை வாசித்தால் முதலில் கிளிப்பிள்ளை மாதிரி அந்த நகலை வாசித்து விடுவார்.

அதையடுத்துத் தன் சொந்தக் கற்பனையை வாசிப்பது வழக்கம். ராகம், ஸ்வரம், வின்யாசம் நடந்த பின் சில சமயம் ரசிகர்களின் கரகோஷமும் ஆரவாரமும் மட்டுமீறியிருக்கும். அதனிடையேதான் பிள்ளை வாசிக்க வேண்டி வரும். கமான் போட்டவுடனே அமைதியை நிலை நிறுத்திக்கொண்டு தன் கற்பனையைத் தொடங்கினால் விச்ராந்தி நிலைத்துவிடும்.

பிள்ளை சிறந்த தியாகராஜ பக்தர். பிள்ளையில் குரு பஞ்சாபகேச அய்யர், தியாகராஜ சுவாமிகளின் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்த சுந்தர பாகவதர், கிருஷ்ணபாகவதரின் பந்து. இவர்களது ஆசியால் திருவையாற்றில் தியாகராஜ ஸ்வாமியின் ஆராதனை உற்சவம் தன் சொந்த செலவில் வருடம் தோறும் தன் ஆயுள் முழுவதும் நடத்தி வந்தார். தன் வருவாயில் சரிபாதியை இத்திருப்பணிக்கு ஒதுக்கி வைத்திருந்தார். உற்சவ ஐந்து நாட்களில் பால் மட்டுமே ஆகாரம். இளம் வித்வான்களை முன்னுக்குக் கொண்டுவரும் அரங்கேற்ற பீடமாகியிருந்தது உற்சவ மண்டபம். அப்போது எல்லா வித்வான்களுடனும் சேர்ந்து பக்க வாத்தியம் வாசிப்பார். பிள்ளையின் ஆதரவைப் பாராட்டும் வித்வான்களில் முதலிடம் பெற்றவர் செம்பை வைத்தியநாத பாகவதர்.

கோவிந்தசாமிப் பிள்ளை வித்வான் என்ற மதிப்புடன் பிரபுவாக விளங்கினார். பெருந்தன்மைக்கு இருப்பிடமானவர். தன் வித்தைக்கும் தனக்கும் கெüரவத்தைக் குறைத்துக்கொள்ளமாட்டார். காக்கிநாடாவில் இருந்த கொம்மி ரெட்டி சூர்யநாராயண மூர்த்தி நாயுடு பெரிய பிரபு. பிள்ளையிடமிருந்த மதிப்பின் காரணமாகவே காக்கிநாடாவில் சரஸ்வதி கானசபையை ஸ்தாபித்து வருஷா வருஷம் நவராத்திரியின் போது காக்கிநாடாவிலும் ஆந்திர ஸமஸ்தானங்களிலும் பிள்ளையின் கச்சேரியை ஏற்பாடு செய்வதுண்டு. மற்ற பிரபுக்களும் பிஷாண்டார் கோவில் ஆவுடையப் பிள்ளை, மருங்காபுரி ஜமீன்தார், கிருஷ்ண விஜய பூச்சிய நாயக்கர் சேத்தூர் ஜமீந்தார் சேவுக பாண்டியத் தேவர் ஆகியோர் நெருங்கிய சிநேகிதர்கள். ஆவுடையப்பிள்ளை கோவிந்தசாமி பிள்ளையிடம் வயலின் சொல்லிக்கொண்டார். மிகவும் ஆப்தராதலால் பிள்ளையும் கிருஷ்ணய்யரும் ஒரு முறையாகியாலும் ஒரே மேடையில் உட்கார்ந்து பிடில் வாசிக்க வேண்டுமென்று அபிப்ராயப்பட்டார். பிள்ளையா சம்மதிப்பார்?

சேத்தூர் ஜமீன்தார் கோவிந்தசாமிப் பிள்ளையத் தேவதானத்தில் தான் வருஷம் தோறும் நடத்தும் உற்சவத்துக்கு வரவழைத்து அவருக்கு கஞ்சிரா வாசித்து கெüரவப்படுத்துவார். ஐம்பது வயதுக்குமேல் பிள்ளை அசெüக்கியம் அடைந்தார். வெகு நாள் கச்சேரி செய்யவில்லை. பல பிரபுக்கள் ஒத்தாசை செய்ய முன்வந்தார்கள். தனக்கு முடையுண்டான போது பிரபுக்களைத் தொந்தரவு செய்ய தனக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று விநயமாகச் சொல்லி பணத்தைத் திருப்பிவிட்டார். கடைசி நாள் வரை பிறர் உதவியைச் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. பிள்ளை 1931-ம் வருஷம் மார்ச் மாதம் 15ம் தேதி காலமானார். தன் ஈமக்கிரியைகளுக்கு ஓரளவு பணத்தை முன்னதாகவே ஒதுக்கி வைத்த பிரபு கோவிந்சாமிப் பிள்ளை.

தொகுப்பு: சிவன்

Posted in Tamil | Leave a Comment »

Sembai Vaithyanatha Bagavathar, Mani – Dinamani Kathir Music Season Special

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006

எஸ்.பி. மணி: வில்லிவாக்கத்தில் விதை! கல்கத்தாவில் கனி!

நேர்காணல் தொகுப்பு-புலிக்கால் தேசிகன்

இசையுலகில் மோர்சிங் வித்வானாக அறியப்பட்டவர் மணி. 77 வயதான மணி, யுனைடட் இந்தியா இன்ஷூரன்ஸில் உதவி ஜெனரல் மேனேஜராக இருந்து ஓய்வு பெற்றவர். இசை இவரது ஒரு முகம்தான். இசையோடு விளையாட்டு, நிர்வாகம், ஆன்மிகம் எனப் பல்துறைகளில் வாழ்வனுபவம் பெற்றவர். இதுதான் மணியை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது.

மோர்சிங் வாசிப்பில் பெற்ற தேர்ச்சியால் செம்பை முதல் சோமு வரை மிகப் பெரிய வித்வான்களுக்கு வாசித்த கலைஞர் இவர். இசையுலகை மேடை மீது அமர்ந்தும் மேடையிலிருந்து விலகியும் பார்த்து பல விஷயங்களை அறிந்து கொண்டவர். அறிந்து கொண்டவற்றை அழகுறச் சொல்லும் கலையை இவரிடம் கற்க வேண்டும். இசைக் கலைஞர் தொடங்கி திரைக்கலைஞர் வரைக்கும் விரியும் இவரது நட்பு வட்டமே இவரது பரந்த அனுபவத்துக்கு சாட்சி. இனி இந்த அனுபவக்கடலிலிருந்து அவர் தரும் சில துளிகள்.

நான் பிறந்தது தஞ்சை மாவட்டம் சேண்டாக் கோட்டை. அது பட்டுக்கோட்டை அருகே உள்ளது. வளர்ந்ததெல்லாம் சென்னையில். அப்பா சாம்பசிவய்யர் ஒரு பன்முக வித்தகர். அவர் தொழில் ரீதியாக வெள்ளைக்காரக் கம்பெனியான ராலீஸ் இந்தியாவில் பெரிய உத்யோகத்தில் இருந்தார். முந்தைய காலங்களில் துபாஷ் என்று அந்தப் பதவிக்குப் பெயர். பின்னர் சீஃப் ப்ரோக்கர் என்றனர்.

அப்பாவின் பல்வேறு திறமைகளில் மிக முக்கியமானது சங்கீதம். அந்த நாளில் சென்னை பவழக்காரத் தெருவில்தான் எங்கள் குடும்பம் வசித்துவந்தது. அப்போது அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போகவே வில்லிவாக்கத்துக்கு வந்தோம். அன்றெல்லாம் உடம்பு பாதிக்கப்பட்டு சற்று ஆரோக்கியமான வாசஸ்தலம் தேவைப்படுவோருக்கு டாக்டர்கள் வில்லிவாக்கத்தில் போய் வசிக்க பரிந்துரைத்தார்கள். வில்லிவாக்கத்தில் தாழங் கிணறு என்று ஒரு கிணறு இருந்தது. அதன் தண்ணீருக்கு மருத்துவக் குணம் உண்டு என்றும் அந்தத் தண்ணீரைத் தொடர்ந்து குடித்தால் உடல் வியாதிகள் தீரும் என்றும் அன்றைய சென்னை டாக்டர்கள் கூறுவார்கள். என் அப்பாவுக்கும் இப்படித்தான் டாக்டர்கள் பரிந்துரைத்தார்கள். எங்கள் குடும்பம் வில்லிவாக்கத்துக்கு வந்தது. நாங்கள் நம்பர் ஒண்ணு, தாழங்கிணற்றுத் தெருவில் வசித்து வந்தோம். தாழங்கிணறு பெரியதாக இருக்கும். கிணற்றுக்கு அடுத்து பெரிய ஏரி இருந்தது. ஆம். இருந்தது என்று சொல்ல வேண்டும். இப்போது அந்த ஏரி இருந்த இடத்தில் சிட்கோ நகர் இருக்கிறது.

வில்லிவாக்கத்தில் மிகக் குறைவான தெருக்களும் வீடுகளும் இருந்தன. இன்றைக்கு இப்படிச் சாக்கடையாக இருக்கும் வில்லிவாக்கம் அன்று ஆரோக்கியமான கிராமமாக இருந்தது. அன்று சென்னை நகரில் வசித்தவர்கள் வேலையில் ஓய்வு பெற்றதும் தங்கி வாழும் ஊராக வில்லிவாக்கம் இருந்தது என்றால் இப்போது நம்பமுடியுமா? வில்லிவாக்கத்தில் நான் சிங்காரம்பிள்ளை பள்ளிக்கூடத்தில் படித்து வந்தேன். என் அப்பாவைத் தேடி ஏராளமான சங்கீத வித்வான்கள் வீட்டுக்கு வருவார்கள். வீடு நிறைய ஏராளமான கிராம்போன் ரெகார்டுகள் இருக்கும். எல்லாம் கர்நாடக சங்கீதம்தான். நாகஸ்வரங்கள். பெரிய வித்வான்கள் பாடியவை. எப்பொழுதும் சங்கீதம் ஒலித்துக் கொண்டே இருக்கும் வீடு என்னுடையது. குறிப்பாக கிட்டப்பாவின் பாட்டுகள். கிட்டப்பா பாட்டை நேராகவே நாடகத்தில் கேட்டிருக்கிறேன். அப்போது எனக்கு 12 வயதுதான் இருக்கும். திருச்சியில் நடந்த நாடகம் அது. பிற்காலத்தில் கிட்டப்பாபோல ஓரளவு பாடினார் என்றால் டி.ஆர்.மகாலிங்கத்தைச் சொல்ல வேண்டும். எங்கள் வீட்டில் கிட்டப்பா உள்பட கலைஞர்களின் கிராம்போன் ரெகார்டுகளைக் கேட்பதற்கும் என் அப்பாவோடு சங்கீதம் பற்றிப் பேசவும் விவாதிக்கவும் பெரிய பெரிய வித்வான்கள் வருவர்.

அப்படி எங்கள் வீட்டுக்கு அன்று வந்த வித்வான்களில் மகாவித்வானாக விளங்கிய ஜலதரங்கம் ரமணையச் செட்டியாரும் ஒருவர். அவர் இவ்வளவு பெரிய கலைஞர் என்று யாராவது சொன்னால்தான் தெரியும். குள்ளமாக இருப்பார். முட்டுக்கு மேல் வரும் காவி நிற வேஷ்டி. தோளில் ஒரு துண்டு. அவர் கோலத்தைப் பார்த்தால் ஏதோ பரம ஏழை தெருவில் போவது போல இருக்கும். சங்கீதத்தில் அவர் பெரிய அதாரிடி. அவரும் அப்பாவும் சங்கீதத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். அவரைப் போலவே அப்பாவைத் தேடி வரும் வித்வான் ஆரணி தாமோதராசார்லு. சாதாரண தாமோதராசார்லு அல்ல… கோடையிடி தாமோதராசார்லு. தன் பெயரின் முன் கோடையிடி என்று அவரே சேர்க்கச் சொல்வார். அவர் சாதாரணமானவர் அல்ல… காஞ்சீபுரம் நாயனாப் பிள்ளையின் சிஷ்யர்.

அப்புறம் நரசிம்மாச்சாரியார் என்று ஒரு வித்வான். அவர் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர். அவரும் மிகப் பெரிய வித்வான். ஆனால் கச்சேரி பண்ணமாட்டார். அவர் பெரிய சங்கீத ஆசார்யார். அந்த நாளின் மிகப் பெரிய வீணை வித்வான்கள் காரைக்குடி சகோதரர்கள். அவர்கள் ஞாயிறுதோறும் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். இப்படிப்பட்ட முக்கியமான வித்வான்களெல்லாம் குழுமிவிட்டால் ஒரே கலகலப்புத்தான். பாட்டும் பேச்சுமாக எங்கள் வீட்டுத் திண்ணை அமர்க்களப்படும். சங்கீத சாஸ்திர நுட்பங்களெல்லாம் அப்போது அலசப்படும். பாடிக் காட்டுவார்கள். பாடுவதில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டித் திருத்துவார்கள் இப்படியாக வீட்டுத் திண்ணையிலேயே லெக்சர் டெமான்ஸ்ரேஷன்கள் நடக்கும். ஞாயிற்றுக் கிழமையாகிவிட்டால் இந்த ஸ்பெஷல் செஷன் நிச்சயம் திண்ணையில் கூடும். அப்போது அவர்கள் விருப்பப்படி கிராம்போன் தட்டுக்களைப் போடுவதும் இயக்குவதும் என் பொறுப்பு. அந்த நாளில் முதலில் கிராம்போன் பிளேட் கொடுக்க பல வித்வான்கள் பயந்தார்கள். பிளேட்டில் குரலைப் பதிவு செய்தால் ஆயுள் குறைச்சல் என்று அப்போது அவர்களுக்கு ஒரு நம்பிக்கை. இந்த நம்பிக்கையை உடைத்து தைரியமாகச் சில வித்வான்கள் பிளேட் கொடுத்தனர். அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் அதில் ஒருவர். அப்போதெல்லாம் கொலம்பியா டுவின் ப்ளேட் என்று ஒரு ரெகார்ட் வரும். எங்கள் வீட்டிலிருந்த பிளேட்டுகளில் எம்.எஸ்.பாடிய “எவரி மாட’, “எனக்குள் இருபதம்’ ஆகியவையும் இருந்தது இன்றும் நினைவிலிருக்கிறது.

அப்பாவின் சங்கீத ஆர்வம் வெறும் பேச்சோடு போகவில்லை. அப்பா அருமையாக ப்ளூட் வாசிப்பார். அத்தோடு நாகஸ்வரமும் கற்றுக் கொண்டார். ஆபீஸ் உத்யோகஸ்தர் ஒருவர் அதுவும் வெள்ளைக்காரக் கம்பெனியில் வேலை செய்பவர் நாகஸ்வரம் கற்பதென்பது ஆச்சரியம்தானே. அப்பாவுக்கு நாகஸ்வரம் கற்றுக் கொடுத்தவர் யார் தெரியுமா? திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளை.

அவர் வந்ததும் அப்பாவும் அவருமாக நாகஸ்வரத்தை எடுத்துக் கொண்டு எங்கள் வீட்டில் ஓர் அறைக்குப் போய்க் கதவைச் சாத்திக் கொண்டு அதன்பிறகு வாசிக்க ஆரம்பிப்பார்கள். சின்ன வீட்டில் ரெண்டு பேர் சேர்ந்து வாசித்தால் சப்தம் தாங்கமுடியாதல்லவா? அதனால் இந்தக் கதவடைப்பு.

நாகஸ்வரத்தில் அப்பாவுக்கு அபரிமிதமான ஓர் ஆசை. அன்று ஸ்டார் வித்வானாக விளங்கிய திருவிடைமருதூர் வீருசாமிப் பிள்ளை அப்பாவுக்கு ரொம்ப நெருக்கம். அவரிடமும் கொஞ்சநாள் அப்பா நாகஸ்வரம் கற்றார். பிற்காலத்தில் என் கல்யாணம் குளித்தலை அருகே மணத்தட்டை என்ற கிராமத்தில் நடந்தபோது வீருசாமிப் பிள்ளை வந்து வாசித்தார். அன்று இரவு அவர் வாசித்த வாசிப்பு ரொம்ப ஜோர். என்னைப் பொறுத்தவரை இந்தத் தஞ்சாவூர் ஜில்லாவே சங்கீதத்துக்காக ஈஸ்வரனால் சிருஷ்டிக்கப்பட்டது என்பது என் கருத்து. இங்கிருந்து கேரளத்துக்குப் போனவர்களால் அந்தப் பகுதி சங்கீதம் அபிவிருத்தி ஆனதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். தஞ்சை ஜில்லாவில் அந்த நாளில் வருஷம் முழுக்க ஏதாவது சங்கீத விழாக்கள் நடந்த வண்ணம் இருக்கும்.

சங்கீத விழாக்கள் நடத்துகிற தஞ்சை மரபை அப்பா கைவிடவேயில்லை. 1945-46களில் என் அப்பா வில்லிவாக்கத்தில் வருஷம்தோறும் பத்து தினங்கள் ஸ்ரீராமநவமி உத்ஸவம் நடத்துவார். அதில் அன்றைய பெரிய வித்வான்களெல்லாம் வந்து பாடுவதும் வாத்தியம் வாசிப்பதும் நடக்கும். வீணை மேதை பாலசந்தர் மெய்டன் வீணைக் கச்சேரி செய்தது இந்த உத்ஸவத்தில்தான். அவர் மிகப் பெரிய மேதை. அவருக்கு வாசிக்கத் தெரியாத வாத்தியமே இல்லை எனலாம். குறிப்பாக தந்தி வாத்தியங்கள் எல்லாம் வாசிப்பார். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகுதான் வீணையை அவர் வாசிப்புக்கு நிரந்தரமாகத் தேர்ந்தெடுத்தார். அப்படி அவர் வீணையைத் தேர்வு செய்ததில் அப்பாவின் பங்கும் உண்டு. அப்பா அந்தநாளில் அவரை வீணையைத் தேர்வு செய்ய சொல்லி வலியுறுத்தியிருந்தார்.



செம்பை வைத்யநாத பாகவதர்

பாலசந்தரின் குடும்பமே பெரிய கலைக் குடும்பம். அவர் அண்ணன் எஸ்.ராஜம் மிகச் சிறந்த வாய்ப்பாட்டு வித்வான். சங்கீத ஆசார்யார். அத்தோடு மிகச் சிறந்த ஓவியரும் கூட. இப்படியே அவர் வீட்டைச் சேர்ந்தவர்களெல்லாம் சங்கீதத்தில் நிபுணத்துவமும் ஞானமும் பெற்றவர்கள். பாலசந்தரின் அப்பா சுந்தரமையர் அந்த நாளில் சீதா கல்யாணம் என்று ஒரு படம் எடுத்தார். அந்தப் படத்தில் குடும்பத்தைச் சேர்ந்தவர்களெல்லாம் ஆளுக்கொரு வேடத்தில் நடித்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி முழுக்க முழுக்க கலைக்குடும்பம் அது. பாலசந்தர், அப்பாவுக்கு மிகவும் வேண்டியவர். அவர் வில்லிவாக்கத்தில் வீணைக் கச்சேரி வாசித்த போது 24,25 வயசு இருக்கும் என்று நினைக்கிறேன்.

அன்று வில்லிவாக்கத்தில் சஞ்சீவராவ் என்று ஒரு கன்னடக்காரர் இருந்தார். அவர் கார்ப்பரேஷன் ஓவர்சியர். பெரிய சங்கீத ரசிகர். அவர் வீட்டிற்கு ஒரு தடவை வீணை தனம்மாள் வந்து வாசித்தார். நான் அப்போது சின்னப் பையன்தான். இருந்தாலும் அந்தக் கச்சேரிக்குப் போய்க் கேட்டேன். மிகக் குறைவான பேர்களே அமர்ந்து கேட்டார்கள். குளுமையான நாதமும் மிக லாவகமாகப் பிரளும் கைகளுமாக சுகமான வீணாகானம் என்று மட்டும் நினைவிருக்கிறது. டெக்னிகலாகக் கேட்டு ராகங்களில் லயித்து அனுபவிக்கும் அளவுக்கு ஞானமில்லாத வயது எனக்கு.

இது தவிர எங்கள் வீட்டில் அடிக்கடி பஜனை நடக்கும். இதனால் என் அப்பாவுக்கு பஜனை சாம்பசிவய்யர் என்றே பெயர். எங்கள் வீட்டில் ஒரு அவுட் ஹவுஸ் இதுபோன்ற பஜனைகளுக்காகவே பயன்பட்டது. சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். அந்த நாளில் எங்கள் வீட்டில் நடந்த ஒரு பஜனைக்கு மதுரை மணி வந்து பாடியிருக்கிறார். அவர் போலவே பல வித்வான்களுக்கும் எங்கள் வீட்டுப் பஜனைக்கு ஆஜராகி அற்புதமாகப் பாடுவார்கள். அந்த நாளில் புதுசாகப் பாட்டு கற்கிறவர்கள், மிருதங்கம் கற்கிறவர்களுக்கெல்லாம் பஜனைதான் பயிற்சிக் கூடம்.

இத்தனையும் நான் சொன்னது எதற்காக என்றால் என் வாழ்வின் ஆரம்பப் பருவம் முழுக்க முழுக்க சங்கீதச் சூழ்நிலையில் கழிந்தது என்பதைச் சொல்லத்தான்.

முழுக்க சங்கீதச் சூழ்நிலையில் வளர்ந்தாலும் நான் சங்கீதத்தில் ஈடுபடவில்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு காலம் வரவேண்டுமல்லவா? அதுபோல என் சங்கீத ஆர்வம் வெடித்துக் கிளம்பி முளைத்து வளர சிறிது காலம் ஆயிற்று. எனக்கு அப்போது கல்கத்தாவில் வேலை கிடைத்தது. நானும் போய் வேலையில் சேர்ந்தேன். தமிழ் பேச்சும், சாப்பாடும், பழக்கமும் இல்லாத ஊரில் தனிமையில் இருந்தபோது ஊர் நினைவெல்லாம் வந்து என் சங்கீத ஆர்வம் பீரிட்டு எழ ஆரம்பித்தது. கல்கத்தாவில் நான் தங்கியிருந்தது ராஜா பசந்த்ராய் ரோடில், ஒரு ரூமில் தங்கியிருந்தேன். அப்போது கல்கத்தாவில் இருந்த தென்னிந்திய ஸ்கூல் ஒன்றில் ஞாயிறுதோறும் கச்சேரி நடக்கும்.

அத்தோடு நான் இருந்த ரூமுக்கு அருகே ஒரு கட்டடம். என் ரூம் ஜன்னலிலிருந்து பார்த்தால் அந்தக் கட்டட ஜன்னல் தெரியும். ஜன்னல் வழியாக ஒரு ரூமில் சிலர் மிருதங்கம், தபேலா, கடம் எல்லாம் வாசிப்பார்கள். அதை நான் வேடிக்கை பார்ப்பேன். அவர்கள் என்னைப் பார்த்துப் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்கள். “”சார்…..நீங்களும் எங்களோடு சேர்ந்து கொள்ளுங்களேன்” என்பார்கள். அதோடு, “”சார்…..எங்க செட்டில் இந்த மோர்சிங்காரர் ஏகத்துக்கு கிராக்கிப் பண்ணுகிறார். பேசாம நீங்க எங்க செட்டில் மோர்சிங் வாசிக்க வாங்க. இவர் கொட்டத்தை அடக்கணும்” என்றார்கள். நான் சிரித்தேன். பின்னர் ஊருக்கு என் அண்ணாவுக்கு எழுதி ஒரு மோர்சிங் வாங்கி அனுப்பும்படி சொன்னேன். அண்ணா மூர்மார்க்கெட்டில் நாலணா கொடுத்து ஒரு நல்ல மோர்சிங்கை வாங்கி அனுப்பினார். நானும் தனியாக உட்கார்ந்து நானாகவே பிராக்டீஸ் பண்ண ஆரம்பித்தேன்.

கொஞ்சம் கொஞ்சமாக வாத்தியம் எனக்குப் படிந்து வர ஆரம்பித்தது. பிறகு கொஞ்ச காலத்துக்குப் பிறகு வாத்தியம் நான் சொன்னதைக் கேட்க ஆரம்பித்தவுடன் முழு மோர்சிங் வித்வானாக மாறிவிட்டேன். கல்கத்தாவில் நான் கேட்ட முக்கியமான கச்சேரிகளில் ஒன்று எம்.டி.ராமநாதனுடைய கச்சேரி. 1960-ல் கல்கத்தாவில் அவரது கச்சேரியை முதலில் நான் கேட்டேன். கூட்டமே இல்லை. 5000 பேர் உட்காருகிற ஹாலில் 50 பேர் கூட இல்லை. அவர்களில் நானும் ஒருவன். ஆனால் கச்சேரியைக் கேட்டதும் அவர் ரசிகனாகி விட்டேன். பின்னர் சென்னைக்கு 1962-ல் வந்த பிறகு மியூசிக் அகாதெமியில் அவர் கச்சேரியைக் கேட்டேன். இப்படிக் கேட்டுக் கேட்டு அவர் ரசிகனாகவும் பிறகு அவர் நண்பனாகவும் ஆனேன். ஆரம்பத்திலிருந்து மங்களம் வரையில் விளம்பகாலத்தில் பரம செüக்கியமாக விஸ்ராந்தியாகப் பாடுவார். அவர் வீட்டில் செய்கிற காரியங்களும் அப்படித்தான். அரக்கப் பறக்கச் செய்யாமல் நிதானமாகவே எல்லாக் காரியங்களையும் செய்வார்.

1962-ஆம் வருஷம் சென்னையில் செட்டில் ஆகிவிட்ட நான் மயிலாப்பூர் சவுத் மாடத் தெருவில் பண்ட் ஆபீஸýக்கு எதிரே குடியிருந்தேன். மயிலாப்பூர் என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு கல்சுரல் சென்டர் என்றே சொல்வேன். கபாலி கோயில் அதன் மையமாக விளங்கியது. அன்று அங்கு நடக்கிற பெரிய உத்ஸவம் முடிந்து விடாயாற்றி நடக்கிற பத்து நாளைக்கு அற்புதமாக கச்சேரிகள் நடக்கும். அருமையான நாகசுரக் கச்சேரிகளெல்லாம் நடந்துள்ளன. என் ஆவலுக்குத் தீனி போட்டவண்ணம் இருக்கும் நல்ல சங்கீத சூழல்.

லஸ் சாஸ்திரி ஹாலில் சோமு கச்சேரி நடந்தது. 6 மணிக்கு ஆரம்பித்த கச்சேரி 9-க்கு முடியவேண்டும். ஊஹூம். 11 மணி ஆகியும் முடியவில்லை. என்ன வேணும் கேளுங்க…பாடறேன் என்கிறார் சோமு. அவர் ஒரு சங்கீத ரிசர்வாயர். கஜானாவிலிருந்து அள்ளி அள்ளித்தருவார். நேரம் ஆக ஆக கூட்டம் கலைவதுதானே இயற்கை. ஆனால் சோமு கச்சேரியில் கூட்டம் அதிகமாகுமே தவிர கலையாது.

இப்படிப்பட்ட கச்சேரிகளையெல்லாம் கேட்கிற வாய்ப்பு இங்குதான் கிடைக்கும். அத்தோடு மார்கழி மாத பஜனைகள். அந்த இருள் பிரியாத அதிகாலையில் பாடிக் கொண்டு வரும் பஜனை கோஷ்டிகள் நடுவே பாபநாசம் சிவன் தனித்துத் தெரிவார். அவர் கூட அவர் குடும்பத்தாரும் பாடிக் கொண்டு வருவார்கள். அவர் பேரன் அசோக்ரமணி சின்னப் பையனாக பஜனை கோஷ்டியில் பாடி வருவது நினைவிருக்கிறது. சஞ்சய் சுப்பிரமணியம் போன்ற இன்றைய வித்வான்களெல்லாம் அன்று சிவன் பஜனைக்கு வந்து பாடி அவரிடம் ஆசி பெற்றவர்கள்தான். எம்.சந்திரசேகர் இந்தப் பஜனையில் கலந்து கொள்வார். அவரது நண்பனாக இருந்த நான் என் காரில் போய் அவரை அதிகாலை பஜனைக்கு அழைத்து வருவேன். பஜனையில் கலந்து கொண்டுமுடிந்ததும் நானும் அவருமாக கச்சேரி ரோடு ராயர் கபேக்குப் போய் இட்லி-காபி சாப்பிடாமல் இருந்ததில்லை. இன்றைக்கும் சந்திரசேகர் அந்தச் சுகமான நாட்களை நினைவுகூர்ந்து சொல்வார்.

இப்படி என் மயிலை வாழ்க்கை சங்கீத மணத்துடன் சுவாரஸ்யமாகத் தொடங்கியது. இந்தச் சூழ்நிலையே என்னை மோர்சிங் வித்வானாகவும் மாற்றியது.

அப்போதுதான் மிருதங்க மேதையும் என் குருநாதருமான வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணனுடன் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. அவர் பொன்னம்பல வாத்தியார் தெருவில் ஒரு ரூமில் இருந்தார். நான், அவர், பி.எஸ்.நாராயணசாமி, துரைசாமி பாகவதர் எல்லாம் ஒரு ஜமாவாகச் சேர்ந்தோம். நாம அடிக்கடி சந்திக்கணும் என்றார் டி.வி.ஜி. நீ என்னுடன் கச்சேரியில் உட்காரவேண்டும் என்றார். லய விவகாரங்களில் எனக்கு முறையான பயிற்சி இல்லையே என்று தயங்கினேன். அவர், “”முதலில் நீ என்னுடன் பாலோ பண்ணி வாசி. பிறகு உனக்கு நான் சொல்லித் தருகிறேன்” என்றார். அவர் எனக்கு கற்பித்த முறை வழக்கமான மரபு வழிப்பட்ட முறையல்ல. உல்டாவாக புது பேட்டனில் அவர் லய விவகாரங்களைச் சொல்லி வைத்தார்.

அதன் விளைவு அவர் போன்ற ஒரு மேதாவியோடு பெரிய பெரிய கச்சேரிகளில் உடன் வாசிக்கிற பாக்கியம் பெற்றேன்.

முதலில் மிருணாளினி சாராபாய் வீட்டுக் கல்யாணக் கச்சேரிக்கு என்னைத் தன்னோடு அழைத்துப் போனார் டி.வி.ஜி. பிறகு ஊரிலிருந்து வந்ததும் இங்கு மந்தைவெளியில் உள்ள கல்யாண்நகர் அசோசியேஷனில் செம்பை வைத்தியநாத பாகவதருக்கு வாசிக்கிற பெரிய பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அப்போது என்னைக் கூட்டத்துக்கு அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். “”மோர்சிங் வாசிக்கிறானே… இவன் பெரிய ஆபீஸராக்கும்..” என்று அவருக்கே உரித்தான மலையாளத் தமிழ் மணக்க அவர் என்னை அறிமுகம் செய்தார். எப்படிப்பட்ட பாக்கியம் பாருங்கள்.

அப்புறம் பல கச்சேரிகள் வாசித்தேன். எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், டி.என்.கிருஷ்ணன் ஆகியோர் கச்சேரிக்கெல்லாம் வாசித்தேன். மகாராஜபுரம் சந்தானத்துக்கு என் குருநாதர் டி.வி.ஜி.யோடு ஆந்திரம் முழுக்க டூர் அடிக்கிற வாய்ப்புக் கிடைத்தது.

சங்கீதத்தைக் கேட்டும் கச்சேரியில் பங்கு கொண்டும் பரிபூரண நிறைவோடு இப்போது உள்ளேன். கேட்கிற சங்கீதத்தை விட கேட்காத சங்கீதம் ரொம்ப ஒசத்தி என்பார்கள். சங்கீதத்தைப் பற்றிய நினைவுகளே கேட்காத சங்கீதம் போல எனக்குச் சந்தோஷத்தைத் தருகின்றன.

நேர்காணல் தொகுப்பு-புலிக்கால் தேசிகன்

Posted in Tamil | Leave a Comment »

Thiyagaraja Bhagavathar, Maangudi Chidhambara Bhagawathar, Brindha, TK Jayaraman, Sundha – Dinamani Kathir Music Season Special

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006

ஏ.ஆர். சுந்தரம்: மேடையிலே வீசாத மெல்லிய பூங்காற்று!

நேர்காணல்} தொகுப்பு: வழிப்போக்கன்


“”ரேடியோ ஸ்டேஷனில் பாடும்போது ரெகார்டிங்கை அறிவிக்க ரெட் லைட் போடுவார்கள். அதைப் பார்த்த உடனே நமக்கு பாட்டெல்லாம் மறந்து போனதுபோல் பயம் வந்து விடும்” என்பார் வீணை தனம்மாள் குடும்பத்தின் ஜெயம்மா. இத்தனைக்கும் என் ராசி லிப்ரா. லிப்ரா ராசிக்காரர்கள் நன்றாகப் பேசுவார்கள் என்று பெயர்.

ஆனால் உங்கள் டேப் ரிகார்டரைப் பார்த்தால் பேச்சுவரவில்லை என்றார் சுந்தா. காதோலை பளிச்சென்று மின்னலாய் வெட்ட, கேலியும் கிண்டலுமாக அவர் தலையை அசைத்தபோது லிப்ரா ராசிக்காரர்கள் நன்றாகப் பேசுவார்கள் என்பது உண்மைதான் என்று எனக்கும் தோன்றியது. ஆனால் சுந்தா வெறும் பேச்சாளி மட்டுமல்ல…மிகச் சிறந்த சங்கீத வித்வாம்சினி. இன்றும் அழுத்தமான கமகங்களுடன் அவர் பதங்களையும் ஜாவளிகளையும் பாடிக்காட்டும்போது அந்தக் குரலில், கடந்து சென்ற காலத்தை மீறிப் பொங்குகிறது இளமை.

83 வயது சுந்தா என்ற ஏ.ஆர். சுந்தரம்மாளை உங்களுக்கு இன்னும் அறிமுகப்படுத்தவில்லையே…? அந்த நாள் சென்னையின் முக்கிய பிரமுகரும் புகழ் பெற்ற ரசிக ரஞ்சனி சபாவின் நிறுவனரும் சங்கீதப் புரவலருமான ஏ.கே.ராமச்சந்திரனின் மகள். பெண்ணாகப் பிறந்தவர்கள் கூடத்தைத் தாண்டி வராத காலம். ஆகவே பாட்டு கற்றுக் கொண்டாரே தவிர மேடைக்கு வரவில்லை. ஆனால் நல்ல சங்கீத மணியாக அவர் உருவானார். பிருந்தா – முக்தா சகோதரிகளின் பாரம்பரியத்தில் அதாவது தனம்மாள் குடும்ப சங்கீதத்தின் பிரதிநிதியாக இன்று நம்மிடையே வாழும் மிகச் சிலரில் ஒருவர் சுந்தா. அன்றைய வாழ்க்கை, தான் கண்ட சங்கீத உலகம், அனுபவங்களை இங்கு அவர் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

அன்றைய மயிலாப்பூர் ரொம்ப அழகாக இருக்கும். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இங்குதான். இன்றைக்குத்தானே மயிலாப்பூரில் கூட்டம் நெரிகிறது. டிராம் ஓடிய காலம் அது. மாடவீதிகள் அமைதியாக இருக்கும். கபாலி கோவில் குளம் நீர் ததும்ப அழகு நிரம்பியிருக்கும். ஒரு சின்ன வயசு நினைவு. ஒரு மழை நாளில் குளத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறேன். பக்கத்தில் அம்மா. நான் அவரிடம் “”அம்மா….மழை பெய்கிறதே… இடி விழுமா அம்மா?” என்றேன். என் வாய் மூடவில்லை. சட்டென வெட்டிய மின்னல் குளத்தில் அக்னிச் சரம் போல இறங்குவதைப் பார்த்து பிரமித்தேன். “”என்னடி வாய் உனக்கு… நீ கேட்டு முடித்த அடுத்த கணத்தில் இடி விழுகிறதே…” என்று அம்மா கலவரமும் வேடிக்கையுமாக ஆச்சரியப்பட்டார். என் படிப்பெல்லாம் சர்ச்பார்க் கான்வென்டில். கிளாசில் எட்டு பேர்தான் இருப்போம். இன்று மாதிரி அன்று பெண்கள் படிக்க வரமாட்டார்கள். காலம் அவர்களை வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்தது. அந்த வகையில் எனக்குப் படிக்கத் தடையில்லை என்றாலும் கான்வென்ட் படிப்புக்கு மேலே என்னைத் தொடரவிடவில்லை.

என் அப்பா ஏ.கே. ராமச்சந்திரய்யர் அந்த நாள் சென்னையின் முக்கிய பிரமுகர். சங்கீதத்தில் பரம ரசிகர். குறிப்பாக நாகஸ்வர சங்கீதத்தில் அவருக்கு அப்படியொரு ஆசை. அந்த நாளில் கபாலி கோவில் பிரம்மோத்ஸவத்திற்குப் பல பிரபல நாகஸ்வர மேதைகள் வந்து வாசிக்க அவரே காரணம். விடாயாற்றி உத்ஸவக் கச்சேரிகளுக்கு பணச்செலவு அவருடையது. ஒரு தடவை விடாயாற்றியில் ஒரு நாள் கச்சேரிக்கு அன்றைய திரை நட்சத்திரம் தியாகராஜ பாகவதரையே பாட வைத்தார். அப்பா… கூட்டமான கூட்டம். ஏழூர் கூட்டம். சுவரெல்லாம் மாடியெல்லாம் தலைகள் மயம்.

டி.கே.ஜெயராமன்


அப்பாவுக்கு நாகஸ்வரத்தில் அசாத்திய ஈடுபாடு. நாகஸ்வர சங்கீதத்தை வளர்க்க வேண்டும் என்ற கனவில்தான் ரசிக ரஞ்சனி சபாவையே அவர் ஆரம்பித்தார். அவரது சங்கீத ஆர்வம்தான் என்னைப் பாட அனுமதித்தது. நான் ஓகோ என்று பாடவேண்டும் என்று கனவு கண்டார். அதே சமயம் நான் பொதுமேடையில் பாடுவதில் அவருக்குச் சம்மதமில்லை. பார்க்க லட்சணமாக இருக்கிற பெண்கள் நூறு பேர் பார்க்கும்படி மேடையில் உட்கார்ந்து தொடையில் தாளம்போட்டுக் கொண்டு பாடக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். ஆகவே நான் கற்ற சங்கீதம் எங்கள் வீட்டுக் கூடத்தைத் தாண்டி வெளியே போகவில்லை. ஒரு விதிவிலக்கு ரேடியோவில் பாடினேன். ரேடியோவில்தான் முகம் பார்க்க முடியாதே. ஆரம்பத்தில் நானும் என் அக்காவுமாகப் பாடி வந்தோம். நான் நன்றாகப் பாடுவதில் அப்பாவுக்குப் பரம சந்தோஷம். முதல் முதலில் 1938 ஆம் வருஷம் அக்டோபர் 2-ஆம் தேதி ரேடியோவில் பாடினேன். அதுவும் பக்க வாத்தியம் இல்லாமல். பின்னாளில் தனம்மா குடும்பத்தின் ஜெயம்மாவுடன் சேர்ந்து குறவஞ்சி புரோகிராம் ஒன்று கொடுத்தோம்.

அந்த இளம் வயதில் அன்றைய முக்கிய வித்வான்களையெல்லாம் குறும்பாக இமிடேட் பண்ணிப் பாடுவேன். ஆனால் கடைசி வரை மேடை மட்டும் ஏறவில்லை. மேடையில் பொது ஜனங்கள் முன்பு பாடவில்லையே என்றாலும் அன்றைய மிகப் பெரிய சங்கீத வித்வான்களின் முன்பெல்லாம் பாடிக் காட்டும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. அவர்களும் என் பாட்டைக் கேட்டுப் பாராட்டியிருக்கிறார்கள். இப்படி வாய்ப்புக் கிடைக்கக் காரணம் அந்த நாளில் எங்கள் வீட்டுக்கு வராத சங்கீத வித்வான்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்பாதான் முக்கிய சங்கீதப் புரவலர் ஆயிற்றே. அப்படி முக்கியமான வித்வான்கள் வரும்போதெல்லாம் அப்பா என்னை அவர்கள் முன் பாடவைப்பார்.

பிருந்தா


கதாகாலட்சேபக் கலையின் பிதாமகரான மாங்குடி சிதம்பர பாகவதரிடம் பாடிக் காண்பித்திருக்கிறேன். அவர் கதை சொல்லுகிற அழகை நீங்கள் நேரில் பார்க்க வேண்டும். பிரம்மாண்டமான உருவம். நல்ல கருப்பு. மேடையில் முன்னும் பின்னுமாக நகர்ந்தும் நடந்தும் அவர் கதை சொல்கிற பாணி இருக்கிறதே…. அது நெஞ்சை விட்டு நீங்காதது. எங்கள் வீட்டில் அவர் “மோகனராமா’ கிருதியைப் பாடச் சொல்லிக் கேட்க நான் பாடிக் காட்டியிருக்கிறேன். கீர்த்தனாசார்யாரான மைசூர் வாசுதேவாசாரியார் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார். அவரது அருமையான “ரா ரா ராஜீவ லோசன’ கிருதியை அவர் முன்பாகவே பாடுகிற பாக்யம் எனக்குக் கிடைத்திருக்கிறது. அதைக் கேட்டு அவர் ரொம்ப சந்தோஷப்பட்டுப் பாராட்டியது இன்னும் என் நெஞ்சில் பசுமையாக இருக்கிறது. இதற்கெல்லாம் முன்பு ரொம்ப சின்ன வயசில் நானும் அக்காவும் மகாகவி ரவீந்திரநாத் தாகூர் முன்பு பாடியிருக்கிறோம் தெரியுமா? ஆனால் அது எங்கள் வீட்டில் அல்ல. தாகூர் அப்போது சென்னை வந்து மயிலாப்பூர் கச்சேரி ரோடில் உள்ள “ரங்க விலாஸ்’ என்ற பெரிய பங்களாவில் தங்கியிருந்தார். அப்பா என்னையும் அக்காவையும் அழைத்துச் சென்றார். தாகூர் முன்னால் அப்பா எங்களை “வந்தேமாதரம் பாட்டுப் பாடச்சொன்னார். தாடி மார்பில் தவழ அமர்ந்திருந்த தாகூர் அதைக் கேட்டார். அவர் ரியாக்ஷன் எப்படியிருந்தது என்றெல்லாம் இப்போது நினைவில்லை. காரணம் நாங்கள் அப்போது ரொம்ப சிறிய பெண்கள்.

மாங்குடி சிதம்பர பாகவதர்

நான் பாடிக் காண்பித்த பெரிய சங்கீத மேதைகளில் கே.பி.சுந்தராம்பாளும் ஒருவர். தன் குரலால் எல்லாரையும் கிறங்க அடித்த அவர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது அப்பா சொன்னபடி நான் பாடிக் காட்டினேன். என் குரலைக் கேட்டு சந்தோஷமடைந்த அவர் என் அம்மாவிடம் வெளிப்படையாக சொன்ன பாராட்டு வார்த்தைகள் இன்னும் நினைவிருக்கிறது. “”அம்மா….இந்தக் குழந்தே ரொம்ப நல்லாப் பாடுறாளே….கல்யாணம் பண்ணினா இவ்வளவு நல்ல பாட்டும் போயிடுமே. அப்புறம் பாடவே முடியாதே….அவளுக்கு பாட்டை நன்றாகச் சொல்லி வையுங்கள். கல்யாணமே வேண்டாம்” என்றார் கே.பி.எஸ். உடனே என் அம்மா, “”இது நடக்கிற காரியமா அம்மா….” என்று கேட்டார். நான் பாடிக்காட்டிய லிஸ்டில் டி.எல்.வெங்கட்ராமையர், நாகஸ்வர மேதைகளான திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை, திருவீழிமிழலை சகோதரர்கள் ஆகியோர் உள்ளிட்ட பலர் அடங்குவர்.

நான் சங்கீதத்தைப் பல குருமார்களின் முகமாய்க் கற்றுக் கொண்டவள் என்றாலும் என் முக்கிய பிரதான குரு பிருந்தாம்மாதான்.

நான் அந்த நாளில் சிறப்பாகப் பாடக் காரணமாக இருந்தவர் எனது குருவான பிருந்தாம்மா. புகழ் பெற்ற இசை மேதை தனம்மாள் குடும்பத்திலிருந்து வந்த பெரிய கலைஞர் அவர். அவர் வீட்டுக்கு வந்து பாட்டுக் கற்றுக் கொடுத்தாரென்றால் அது எங்கள் வீட்டுக்கு மட்டும்தான். ரொம்ப கெüரவமானவர். அப்படிப்பட்டவர் என் தந்தை மீதிருந்த மரியாதை காரணமாக எனக்கு வீட்டுக்கே வந்து 3,4 வருஷம் சொல்லிக் கொடுத்தார். சங்கீத மேதை என்றால் பிருந்தாம்மாவைத்தான் சொல்லவேண்டும். ராகங்களை அவர் அப்படியே ஜூஸ் பிழிந்ததுபோல ரசமயமாக நெüக சரித்திரத்தை அவர் பாடியதைக் கேட்டு என் தாயார் பிரமித்துப் போய் பாராட்டியிருக்கிறார். சங்கீத மேதையான நாயனாப் பிள்ளையிடம் சிட்சை பெற்றவர் இல்லையா?

புதன் கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் என் வீட்டுக்கு வருவார். ஒரு மணி நேரம் சிட்சை நடக்கும். அவர் சொல்லித் தருவதை ஒரு வரிகூட எழுதக் கூடாது. அப்படியே காதில் வாங்கிக் கொள்ளவேண்டும். கமக மயமான அதை நோட்டில் எழுதுவதும் சாத்தியமில்லை என்பதுடன் சங்கீதம் செவி வழியாக மனத்தில் கல் எழுத்துப் போல பதியவேண்டும் என்று விரும்பினார் அவர். அது நிஜம் தான். இன்றும் அந்தப் பாடங்கள் எனக்கு மறக்கவில்லையே. (பாடிக்காட்டுகிறார்.)

அது மட்டுமல்ல. அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த டி.சங்கரன் ரேடியோ ஸ்டேஷனில் இருந்தார். அவரிடம் நான் எத்தனையோ தேவாரம், திருப்புகழெல்லாம் கற்றேன். பின்னாளில் ஒருதடவை மகாபெரியவர் சமஸ்கிருத கல்லூரிக்கு வந்தபோது அவர் முன்னிலையில் சுந்தரரின் “அழுக்கு மெய் கொடு உன் திருவடி அடைந்தேன்’ பதிகத்தைப் பாடுகிற பாக்கியம் கிடைத்தது.

தியாகராஜ பாகவதர்

தனம்மாள் வாசிப்பதை நான் நேரில் கேட்டிருக்கிறேன். வெள்ளிக்கிழமைகளில் அவர் வாசிப்பார். அவர் வாசிப்பைக் கேட்டதோடு சரி…மற்றபடி அவரோடு பேசுகிற பாக்கியம் கிடைக்கவில்லை. பேச்சு பழக்கம் எல்லாம் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஜெயம்மா, பாலசரஸ்வதி, சங்கரன், பிருந்தா, முக்தா இவர்களோடுதான். பிருந்தா, முக்தாவுக்கு அபிராமசுந்தரி என்று ஒரு சகோதரி இருந்தார். ரொம்ப அழகாக இருப்பார். நன்றாக வயலின் வாசிப்பார். இளம் வயதிலேயே காலமாகிவிட்டார். தனம்மாள் குடும்பத்தின் சங்கீத பாணியை அறிந்தவர்கள் என்று பார்த்தால் பிருந்தாவின் மகள் வேகவாகினி, நான் என்று விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களது அற்புதமான சங்கீத பாணியைக் கரைத்து எனக்குப் புகட்டினார் பிருந்தாம்மா. இன்று அந்தப் பாணி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. அதைக் காப்பாற்ற வேண்டியது மிக அவசியம். பதங்களையும் ஜாவளிகளையும் அவர்களைப் போலப் பாட ஒருத்தராலும் இயலாது. இன்று நம்மிடையே வாழ்கிற மிகப் பெரிய சங்கீத வித்வாம்சினி டி.கே.பட்டம்மாள் “”பதப்பட்டவர்கள்தான் பதம்பாட முடியும்” என்பார். அது உண்மைதான். சங்கீதப் பயிற்சியால் பக்குவப்பட்டவரே பிருந்தாம்மாவின் பாணியில் பாடமுடியும். அவர்கள் பாணி கமக மயமானது. ஓட்டமாய் ஓடாமல் நிதானமாக விளம்பகாலத்தில் அந்தப் பாணியில் பாடுவது சற்று சிரமம்தான்.

இப்படி விளம்பகாலத்தில் பாடும்பாணி பிடிக்காத யாரோ ஒருவர் அப்பாவிடம் வந்து உன் பெண்ணுக்குக் குரலில் பிர்க்காவே பேசுவதில்லை என்று புகார் சொன்னார்கள். அப்பா உடனே இதை ஒரு சவால் மாதிரி எடுத்துக் கொண்டு பிர்க்காக்கள் வாண வேடிக்கை மாதிரி நடக்கும் ஒரு பாணியில் எனக்குப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டார். அன்று கொடிகட்டிப் பறந்த இசை மேதை ஜி.என்.பாலசுப்பிரமணியத்திடம் இது பற்றிப் பேசினார். அவர் தன்னுடைய சீடரான டி.ஆர்.பாலுவை எனக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்க அனுப்பி வைத்தார்.

ஒன்றை இங்கு சொல்ல வேண்டும் அந்தக் காலத்தில் ஜி.என்.பி.யின் ஜிலுஜிலுவென்ற அற்புதமான சாரீரத்தில் எங்களுக்கெல்லாம் மோகம். டி.ஆர்.பாலுவிடம் ஜி.என்.பி. பாணியில் இசை பயின்றேன். நான் நன்றாகப் பாடுவதைக் கேள்விப்பட்டு என் வீட்டிற்கே வந்து என்னைப் பாடச் சொல்லிக்கேட்டு பாராட்டிவிட்டுச் சென்றார் அந்த மேதை. அது எனக்குப் பெரிய கெüரவம்.

ஜி.என்.பி. அந்த நாளில் எங்கள் வீட்டிலேயே பாடியிருக்கிறார். என் அக்காவின் கல்யாணத்தில் அவர் பாடியது இன்னும் நினைவிருக்கிறது. என் அக்கா கணவரின் நெருங்கிய நண்பர் அவர்.

அந்தக் காலத்தில் பத்து பன்னிரெண்டு வயசாகிவிட்டாலே….எப்ப கல்யாணம் என்று பறப்பார்கள். என்னை விட்டுவிடுவார்களா? எனக்குக் கல்யாணம் ஆயிற்று. கல்யாணத்தில் திருவீழிமிழலை சகோதரர்கள் அவர்களது புதல்வர்கள் ஆக நான்கு பேருமாக ஊர்வலத்தில் அற்புதமாக வாசித்தார்கள். அன்று தவில் யார் தெரியுமா? மகாவித்வான் நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை. எங்கள் வீட்டுக்கல்யாணங்கள் அனைத்திலும் மகாவித்வான்கள் பாடியிருக்கிறார்கள். அக்கா கல்யாணத்துக்கு மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் பாட்டு, பால சரஸ்வதி நாட்டியம் என்று அமர்க்களப்பட்டது. எனக்கு வந்த கணவர் தங்கம். என் பாட்டு விஷயத்தில் அவர் குறுக்கிட்டதே இல்லை. என்னை என் ரசனைகளை மதிப்பவராக அவர் இருந்தார். அந்த விஷயத்தில் நான் மிக பாக்கியசாலிதான். என் கணவர் கண் டாக்டராக இருந்தார். கச்சேரி ரோட்டில்தான் கிளினிக் வைத்து பிராக்டீஸ் செய்துவந்தார். புகழ் பெற்ற மருத்துவர் சி.வி.கிருஷ்ணசாமிக்கு அவர் ஆசிரியர். அந்த நாளில் எம்.ஜி.ஆருக்கு அவர் காட்டராக்ட் ஆபரேஷன் செய்தார். தன்னிடம் யார் வந்து மருத்துவம் செய்து கொள்கிறார்கள் என்ற விவரத்தையெல்லாம் என்னிடம் கூடச் சொல்லமாட்டார். இரவு பன்னிரெண்டு மணிக்குப் பிறகு எம்.ஜி.ஆர். என் கணவரின் கிளினிக்கிற்கு வந்து டெஸ்ட் பண்ணிக்கொள்வார். ராமாவரம் வீட்டில் வைத்துத்தான் அவருக்கு என் கணவரும் அவர் நண்பரும் சேர்ந்து காட்டராக்ட் ஆபரேஷன் செய்தனர்.

எனக்குச் சங்கீதத்தில் பல குருக்கள் என்று சொன்னேனில்லையா? அன்று தமிழிசை இயக்கம் சிறப்பாக வளர்ந்த நிலையில் அன்று தமிழ்ப் பாட்டுக்களில் ஈடுபாடு கொண்டு என் அப்பா எனக்கு மருத்துவக்குடி ராஜகோபாலய்யர் மூலம் சிவனது கீர்த்தனைகளைக் கற்க வைத்தார். சங்கீதத்தில் உள்ள ஆர்வத்தால் பல குருமார்களிடம் பல்வேறு பாணிகளை நான் பயின்றேன். ஆயினும் என்னிடம் ஒரு குணம் என்னவென்றால் நான் யார் பாணியில் கற்றாலும் மற்ற பாணிகளின் கலப்பின்றி அவரவர் பாணியில் பாடுவதில் தேர்ச்சி பெற்றிருந்தேன். நான் கடைசியாகப் பயின்றது மறைந்த இசை மேதை டி.கே.ஜெயராமனிடத்தில்.

இத்தனை வயதில் என் ஆசை ஒன்றுதான். தனம்மாள் குடும்பப் பாணி, பிருந்தாம்மாவின் சங்கீத பந்ததிகள் அழியாமல் இருக்கும் படி பதம், ஜாவளிகளைக் கற்பதில் இந்த இளந்தலைமுறை ஆர்வம் காட்டவேண்டும் என்பதுதான்.

நேர்காணல்} தொகுப்பு: வழிப்போக்கன்

Posted in Tamil | Leave a Comment »

Dhandapani Desikar, Ariyakkudi, TS Rajarathnam Pillai, AKC Natarajan – Dinamani Kathir Music Season Special

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006

ஏ.கே.சி. நடராஜன்: அவர் தந்த ஆசி!
நேர்காணல்}தொகுப்பு: தாடி வாத்தியார்

காவிரிக்கரையில் பயணப்படும்போது தென்னைகளை கவனித்திருப்பீர்கள்! அந்த ஆற்றின் துல்லியமான நீரையும் வண்டலின் மண்சாரத்தையும் மாந்தி மாந்தி உயர்ந்து நிற்கும் தென்னைகள். அவற்றின் அபரிமித வளர்ச்சியும் வடிவும் காவிரியின் மண் சாரத்துக்கு ஒரு சாட்சி. காவிரிக்கரை சார்ந்த மரங்களில் மட்டுமல்ல இச்செழுமை! அது, இந்த நதியோரம் இந்த மண்ணில் வாழ்கிற மனிதர்களின்

கலையிலும் கலாசாரத்திலும் தேங்கிக் கிடக்கிறது. குறிப்பாக காவிரிக் கரையின் சங்கீத கலையிலும் கலைஞர்களிடமும்.

அதன் மேன்மைக்கு நம்மிடையே ஜீவிய சாட்சியமாய் விளங்கும் மிகப் பெரிய கலைஞர் ஏ.கே.சி என ரசிகர்களால் சுருக்கமாக அன்புடன் அழைக்கப்படும் ஏ.கே.சி.நடராஜன். நம் கர்நாடக இசையின் பெருமையை உலகெங்கும் பரப்பிய அரிய கலைஞர்களில் ஒருவர். ஆனால் இந்திய அளவில் பெரிய கலைஞர்களுக்கு அளிக்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷன்கள் இவரை அலங்கரிக்காதது துரதிருஷ்டமே. இவ்வாண்டு இம் மலருக்காக தன் இசை வாழ்வை, அனுபவங்களை வாசகர்கள் முன் வைக்கிறார் ஏ.கே.சி.

அப்பா அந்த நாளின் வித்வான் சின்னி கிருஷ்ண நாயுடு. அந்தக் காலத்தில் நாகசுரம் வாசிச்சு அப்புறம் கிளாரிநெட்டும் வாசிச்சார். நான் ஆலத்தூர் வெங்கடேசய்யரிடம் முதலில் பாட்டுக் கற்றேன். ஆலத்தூர் பிரதர்ஸில் ஆலத்தூர் சுப்பையரின் அப்பா வெங்கடேசய்யர். அவர் மிகப் பெரிய வித்வான். ரொம்ப சுத்தமான பாடாந்தரம். திருச்சி நூற்றுக்கால் மண்டபத்தில் தியாகப்ரம்ம உத்ஸவம் வெங்கடேச ஐயர்வாள் ஆரம்பித்ததுதான். அது அந்த நாளில் ஓஹோ என்று நடக்கும்.

அவரிடம் அந்த நாளில் தொடர்ந்து கற்றுக் கொண்டதோடு ரேடியோவிலும் பாடியிருக்கிறேன். பிறகு நாகசுரம் கத்துக்க ஆரம்பிச்சேன். புகழ் பெற்ற மேதை மலைக்கோட்டை பஞ்சாமி தவில்காரரின் அண்ணன் இலுப்பூர் நடேசப்பிள்ளையிடம் எனக்கு சிட்சை. அவரிடம் கற்றதோடு அவரோடு சேர்ந்து வாசிக்கவும் ஆரம்பித்தேன். நாகசுரத்தையே தொடர்ந்து வாசிக்க எனக்கு ஒரு தயக்கமும் பயமும் வந்துட்டது. இத்தனைக்கும் அவரோடு சேர்ந்து பல நிகழ்ச்சிகளுக்கு வாசித்துக் கொண்டிருந்தேன். கோவில் சேவை உண்டு. அதிலும் ஈடுபட்டிருந்தேன். நான் வாசிக்க ஆரம்பித்த நாள்களில் பெரிய பெரிய ஜாம்பவான்கள்…அதாவது ராஜரத்னம் பிள்ளை, செம்பொனார் கோயில் பிரதர்ஸ், திருவீழிமிழலை பிரதர்ஸ், வீருசாமிப்பிள்ளை இப்பிடி… பெரிய பெரிய மேதைகள் அன்று வாசித்துக் கொண்டிருந்த காலம். இவர்களையெல்லாம் பார்த்து எனக்கு பெரிய பிரமிப்பு. அவங்க சிங்கம் மாதிரி வந்து எறங்கறாங்க. அவங்க வர்ற சைஸýம்…. நிக்கிற சைஸýம் வாசிக்கிற சைஸýம் பார்த்து பயம் வந்திட்டது. இத்தனை பெரிய கலைஞர்கள் நடுவில் நாம வாசித்துப் பிழைக்க முடியுமா? என்று பயந்தேன். அப்படியே வாசிக்க வந்தாலும் ஏதாவது வளைகாப்பு, சீமந்தம்ன்னு வாசிச்சிப் பிழைக்க வேண்டியிருக்கும்.

மேல் லெவல்ல பெரிய கலைஞனா நம்மால வரமுடியாதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன். அதனால இதை நிறுத்திட்டு வேற ஏதாவது வாத்தியம் வாசிச்சுத்தான் பெரிசா வரணும்னு நினைச்சேன். அதுக்கு ஏதாவது யோசனை பண்ணுவோம்னு நினைச்சப்ப கிளாரிநெட்தான் ஞாபகம் வந்திச்சு. அந்தக் காலங்களில நாகசுரத்துக்கு அடுத்தாப்புல கிளாரிநெட்தான். அதுக்குக் காரணம் என்னன்னா அது பரத நாட்டியத்துக்காகவே வந்த வாத்தியம். தஞ்சாவூரில் மகாராஜா காலத்திலிருந்து பரத நாட்டியத்துக்கு இது இருக்கு. இது இல்லாத பரத நாட்டியமே அன்னிக்குக் கிடையாது. அது இல்லாம தேவாரத்துக்குக் கிளாரிநெட் அவசியம் இருக்கும். அந்த மாதிரி இதுக்கு ஒரு மரியாதை. எல்லாத் தேவார கோஷ்டியிலும் பரதநாட்டிய கோஷ்டியிலும் கிளாரிநெட் இருக்கும்.

டி.எஸ்.ராஜரத்தினம் பிள்ளை

பரதநாட்டியத்தில் கமலா, அப்புறம் லலிதா, பத்மினி, சாய் சுப்புலட்சுமி காலம் வரை கிளாரிநெட் இருந்திருக்கு. இவங்க காலங்களுக்குப் பிறகுதான் மீதி வாத்தியமெல்லாம் பரதத்துக்கு வருது. அது தவிர ஆல் இந்தியா ரேடியோவில் நிலைய வாத்திய கோஷ்டியில் கிளாரிநெட் நிச்சயம் இருக்கும். அது தவிர நாகசுரத்துக்கு அடுத்தாற்போல கல்யாணம், சுவாமி ஊர்வலங்களில் கிளாரிநெட்டுக்கு இடம் உண்டு. அதனால கிளாரிநெட்டை வாசித்து பெரிய இடத்தைப் பிடிக்கலாமே என்று ஒரு குறுக்கு யோசனை செய்தேன். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் எனக்கு வாய்ப்பாட்டுப் பயிற்சியும் அத்தோடு நாகசுரப் பயிற்சியும் இருந்தது. இந்த இரண்டு அம்சங்களும் தந்த உறுதியான பலத்தில் கிளாரிநெட்டைக் கற்று அசுர சாதகம் செய்தேன். அதன் விளைவாக அந்த வாத்தியத்தில் நாகசுரம் போல நினைத்தைப் பேச வைக்கிற வித்தையை இறைவன் தந்தான். வாய்ப்பாட்டு அம்சங்களையும், நாகசுர வாசிப்பின் அம்சங்களையும் நாம் அறியாதவனாக இருந்திருந்தால் பத்தோடு பதினொன்றாக நானும் கிளாரிநெட் வாசித்துக் கொண்டு இருந்திருப்பேன்.

நான் 1948-ஆம் ஆண்டிலேயே ஆல் இண்டியா ரேடியோ புரோகிராமில் வாசித்துவிட்டேன். அத்தோடு 49-இல் கள்ளிக்கோட்டை ஆல் இண்டியா வானொலி நிலையத்தின் வாத்தியக் கலைஞராகப் பதவி பெற்றேன். 1950-51-இல் தில்லி ரேடியோவுக்கு ஸ்டாஃப் ஆர்ட்டிஸ்டாகக் கூப்பிட்டார்கள். அங்கு நேஷனல் ஆர்கெஸ்ட்ராவின் வயலின் வித்வான் டி.கே.ஜெயராமனின் தலைமையில் இயங்கியபோது வட இந்திய கலைஞரும் சிதார்மேதையுமான ரவிசங்கர் நான் வாசிப்பதைக் கவனித்து தனது வாத்திய கோஷ்டிக்கு என்னைத் தரும்படி ஜெயராமனிடம் கேட்டார். ஜெயராமனும் ஒப்புக் கொள்ளவே ரவிசங்கரின் வாத்யகோஷ்டியில் சேர்ந்தேன். சிறந்த இசை மேதையான அவர் என் கையை ஒடித்து விட்டார். அப்படிக் கடுமையாக உழைத்ததன் பலன் நான் பெரிய வித்வான்கள் நடுவில் தன்னம்பிக்கையோடு நிற்க முடிந்தது. இந்தச் சமயத்தில் ஊரில் என் சகோதரி காலமானார். நான் பதறிப்போய் லீவு கேட்டேன். லீவு தரமாட்டேன் என்றார்கள். உடனே ராஜிநாமா கொடுத்துவிட்டு ஊருக்கு வந்து சேர்ந்தேன். ஊர் வந்த பிறகு எனக்கு நல்லநேரம்.

கொஞ்சம் கொஞ்சமாக பெரிய நாகசுரக்காரர்களோடு எனக்கும் சமமாக வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அவர்களும் என்னை அன்போடு அரவணைத்துக் கொண்டார்கள். இவன் என்னவோ புதுமையா செய்யிறானே…அப்பிடின்னு அவங்களுக்குப் பிடிச்சுப் போச்சு. அதே சமயம் எதிர்ப்புகளும் இல்லாமல் இல்லை. அவங்க ஏதோ என்னைப்போட்டி மாறி நினைச்சிட்டாங்க. சில எதிர்ப்புகள். சில அழைப்புகள் என்று ரெண்டு மாதிரியும் இருந்தது.

முதல் முதலில் சென்னை எழும்பூர் ஜகன்நாத பக்தஜன சபாவில் என் கச்சேரி. அப்போது அந்தச் சபையின் தலைவர் அரியக்குடி ராமானுஜய்யங்கார். அங்குதான் நான் முதல் கச்சேரி வாசிச்சேன். தொடர்ந்து என் வாசிப்பு பிரபலமாயிற்று. தொழில்ரீதியாக எனக்கு ரொம்ப நல்ல வளர்ச்சி. பெரிய வித்வான்களே என் வாத்தியத்தை ஒத்துக் கொண்ட சமயம் அது.

அரியக்குடி

அந்த நாட்களில் மியூசிக் அகாதெமியில் மத்தியானக் கச்சேரிகள் பாடுபவர்களைத் தேர்வு செய்ய அந்தந்தக் குருகுலங்களுக்குத் தபால் எழுதுவார்கள். அதாவது ஜி.என்.பி., மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் போன்ற பெரியவித்வான்களுக்கு அவர்கள் தபால் போட்டு உங்கள் சிஷ்யர்களுக்குள் நன்றாகப் பாடக் கூடியவர்கள் இருந்தால் அகாதெமி மத்தியானக் கச்சேரியில் பாட அனுப்புங்கள் என்று கேட்பார்கள். அதன்படி குருமார்களும் அனுப்பி வைப்பார்கள். இப்படி ஒரு லெட்டர் என் குருநாதர் ஆலத்தூர் வெங்கடேசய்யர்வாளுக்கு வந்தது. நான் எப்போதும் போல அவரிடம் பாட்டுக் கற்கப் போயிருந்தேன். என்னைப் பார்த்ததும் அவர் “”ஏண்டா…. நீ அகாதெமிக்குப் போறியாடா? என்று கேட்டார். எனக்குக் கிடைக்கணுமேங்க….என்று சொல்லி ஒத்துக்கிட்டேன். ஆனா மத்தியானக் கச்சேரிக்குப் பதிலாக முக்கியத்துவம் வாய்ந்த ராத்திரி கச்சேரியை செய்யும் படி ஆனது. அது எப்படி என்று விளக்கமாகச் சொல்லுகிறேன்.

அது 1955 ஆம் வருஷம். அந்த வருஷம் தான் திருவீழிமிழலை சுப்பிரமணியப் பிள்ளைக்கு சங்கீத கலாநிதி கொடுத்தார்கள். அந்த வருஷம் டிசம்பர் 25-ஆம் தேதியன்று அகாதெமியில் டி.என்.ராஜரத்தினம் பிள்ளைக்கு கச்சேரி. அடுத்த நாளே அவருக்கு தமிழிசை சங்கத்தில் புரோகிராம். ஆனால் நாகசுர சக்ரவர்த்தியான அவர் டிசம்பர் 12-ஆம் தேதி அமரர் ஆகிவிட்டார். 25-ம் தேதி அவர் செய்ய வேண்டிய கச்சேரியை நான்செய்யும் படி அகாதெமியில் கேட்டுக் கொண்டனர். அமரரான அவர் என் மீது வைத்திருந்த பேரன்பை நான் அறிவேன். அவரது ஆசீர்வாதம் காரணமாகவே அவர் கச்சேரியை வாசிக்க எனக்கு அழைப்பு வந்தது என்று உறுதியாக நம்புகிறேன். அதே போல அவரது அன்புக்குப் பாத்திரமான காருகுறிச்சி அருணாசலம் தமிழிசை சங்கத்தில் அவர் வாசிக்க வேண்டிய நாளன்று வாசித்தார். எப்படி நடந்துள்ளது பாருங்கள். மத்தியானக் கச்சேரிக்கு அகாதெமியில் பாட வேண்டிய நான் பிரதான நேரமான இரவுக் கச்சேரியில் நேரடியாக வாசிக்கிற தகுதியை அடைந்தேன். டி.என்.ஆரின் அனுக்கிரகத்தைத் தவிர வேறு எந்த காரணத்தையும் சொல்லத் தெரியவில்லை.

25-ம் தேதி இரவு ராத்திரி 9 மணிக்குத் தொடங்கிய என் கச்சேரி இரவு ஒன்றேமுக்கால் வரைக்கும் லைவ் புரோகிராமாக ரிலே ஆயிற்று. அன்று கச்சேரி முடிந்து என்.எஸ்.கிருஷ்ணன் வீட்டில்தான் தங்கியிருந்தேன். தமிழிசை சங்கத்தில் அருணாசலம் வாசித்த கச்சேரியும் ரொம்ப நன்றாக அமைந்துவிட்டது. அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸில் ராஜரத்னம் பிள்ளை இறந்து போய்விட்டாரே என்று வருத்தப்பட வேண்டியதில்லை. அவர் மிகச் சிறந்த இரண்டு சிஷ்யர்களை விட்டுச் சென்றிருக்கிறார் என்று எழுதி ராஜரத்தினம் பிள்ளையை ஆலமரமாகவும் எங்களை விழுதுகளாகவும் வருணித்துக் கார்ட்டூனும் வரைந்திருந்தார்கள்.

ராஜரத்தினம் பிள்ளையோடு எனக்கு இருந்த பழக்கங்களைச் சொல்லுகிறேன். எத்தனையோ முறை அவர் வாசிப்பைப் பக்கத்தில் இருந்து அனுபவித்திருக்கிறேன். மாரியம்மன்கோயில் தெப்ப உத்ஸவத்தில் அவர் தெப்பத்தில் உட்கார்ந்து வாசிக்கிறார். தெப்பத்தில் நான்.அருணாசலம் எல்லாம் உட்கார்ந்து போனோம். அந்த போட்டோ கூட பின்னர் வெளியாயிற்று. அவரோடு நடந்த முக்கியமான சம்பவத்தை உங்களுக்குச் சொல்கிறேன். 1953 ஆம் வருஷம் கல்லிடைக்குறிச்சியில் தொழிலதிபர் சங்கரலிங்கையர் வீட்டில் கல்யாணம்.

தண்டபாணி தேசிகர்

லேனா செட்டியார், என்.எஸ்.கே. இந்தியன் பாங்க் கோபாலய்யர் ஆகியோரெல்லாம் முன்னால் இருந்து கல்யாணத்தை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். கல்யாணத்தில் ஊர்வலத்துக்கு வந்து வாசிக்கும்படி எனக்கு அழைப்பு வர நானும் கல்லிடைக்குறிச்சி போய்ச் சேர்ந்தேன். நேராகப் போய் பிள்ளைவாளைப் பார்த்து வணங்கினேன். “”ஏண்டா நாங்க இங்க 5 நாளைக்கு வாசிக்கிறோம்….நீ என்ன அதிகப்படி மேளமாடா….”என்றார் குறும்புச் சிரிப்புடன். உடனே அங்கிருந்த பெரிய அண்ணி….பாவம் அவன் உங்களைப் பாக்க வந்திருக்கான். (பெரிய அண்ணி என்றது பிள்ளைவாளின் முதல் மனைவியார்) அவனைப் போய் கிண்டல் பண்றீங்களே…என்று எனக்குப் பரிந்து பேசினார். இப்படி வேடிக்கையாக பேச்சு நடந்தது. தொழிலதிபர் சங்கரலிங்கையர் என்னைக் கூப்பிட்டார்.

பிள்ளைவாளுடன் நான் உடன் இருந்து செய்ய வேண்டிய ஒரு புதிய பொறுப்பைக் கொடுத்தார். அந்த கல்யாணத்தில் பிள்ளைவாள் வாசிக்க என்றே 5 இடங்களில் மேடை அமைத்திருந்தனர். ஒரு மேடையில் வாசித்து முடித்ததும் அவரை ஒரு இடத்திலிருந்து மறு இடத்துக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு என்னுடையது. மேடை அமைந்திருந்த நான்காவது இடம் கல்லிடைக்குறிச்சி அக்ரகாரம். அங்கு வாசித்த அவர் அடுத்த இடத்துக்குக் கிளம்ப நான் ஏற்பாடு செய்தபோது இங்கே உக்காந்து நீ வாசிடா என்றார். நான் பதறிப் போய் ஐயா….உங்க முன்னாடி நான் வாசிக்கிறதா என்று அலறினேன். நான் சொன்னபடி வாசிடா என்று கட்டளை போட்டு விட்டு எதிர்திண்ணையில் போய் உட்கார்ந்து கொண்டார் சக்ரவர்த்தி உத்தரவு போட்டுவிட்டால் மீற முடியுமா. வாசித்தேன். அவர் திண்ணையில் வெற்றிலை போட்ட படியே நான் வாசிப்பதைக் கேட்டார். அத்தனை ஜனங்களுக்கும் ஆச்சரியம். அட….ராஜரத்தினம் பிள்ளையே இவன் கச்சேரியை உக்காந்து கேட்கிறாரே…என்று அவர்கள் வியந்தனர். இப்படி ஒரு நிமிஷத்தில் மக்கள் நடுவே என் மதிப்பை உயர்த்திய மேதை அவர்.

நாகப்பட்டினத்துல நீலாயதாட்சி கோயில்ல 1953-ல் எனக்கு அவருதானே கிளாரிநெட் எவரெஸ்ட் பட்டம் கொடுத்தாரு. அதை மறக்கமுடியுமா? அங்க அவர் மேளம் இருந்தது. அவர் ரொம்ப நாள் கழிச்சு நாகப்பட்டினம் வந்து வாசிக்கிறாரு. அதுக்கு பத்து வருஷம் முன்னாடி ஒரு சம்பவம் நடந்தது.

அதாவது நாகப்பட்டினத்தில ஒரு செட்டியார் வீட்டுக் கல்யாணம். சாயங்காலம் எம்.எஸ்.அம்மா கச்சேரி. ராத்திரி ஊர்வலத்துக்கு இவர் வாசிக்கிறதா இருந்தது. அம்மா கச்சேரி முடிந்ததும் ஊர்வலத்துக்கு வாசிக்க இவரைக் கூப்பிட்டாங்க. மேடையில கொஞ்ச நேரம் வாசிச்சிட்டுத்தான் ஊர்வலத்துல வாசிப்பேன்னு சொன்னாரு. அவங்க ஒத்துக்கல. பேச்சு வளர்ந்து இவர் திட்டிப்பிட்டாரு. அவங்க அடிச்சிப்பிட்டாங்க. அவ்வளவுதான் அதிலிருந்து ஒரு பெரிய நாகசுர வித்வானும் நாகப்பட்டினத்துல வாசிக்கிறதில்லைன்னு புறக்கணிச்சிட்டாங்க. இப்படியே 10 வருசம் போச்சு. நாகப்பட்டினத்தில இருந்த பெரியவங்கள்ளாம் சேர்ந்து இப்பிடியே போனா எப்பிடி ஆவுறது? எத்தனை நாளைக்கு இவங்க வாசிப்பு இல்லாம இருக்கிறதுன்னு சொல்லி அவரைப் பார்க்க வந்தாங்க.

“”ராஜரத்தினம்….ஏதோ நடந்தது நடந்து போச்சு. நீ அதையெல்லாம் இனிமேலும் மனசில வச்சிக்கிட்டு ஊர்ல நல்ல நாயனம் இல்லாம செஞ்சிராதே. அந்தப் பாவம் உனக்கு வேணாம். அவசியம் ஊருக்கு வந்து வாசிக்கணும்”னு வயசில் ரொம்ப பெரியவங்களெல்லாம் கேட்டாங்க. உடனே இவர் சரின்னு சொல்லி பத்து நாள் அங்க வந்து தங்கிட்டாரு. பத்து வருசத்துக்கப்புறம் அங்க போயி வாசிக்கிறாரு. அவரு வாசிக்கிறார்னவுடனே குழிக்கரை பிச்சையப்பா, திருவெண்காட்டார், வீருசாமிப் பிள்ளை உள்பட பெரிய வித்வான்களெல்லாமும் வந்து பத்து நாளும் வாசிச்சாங்க. கடைசி நாளைக்கு நான் வாசிச்சேன். தெற்கு முக்கில நான் வாசிச்சபோது உக்காந்து கேட்டுக்கிட்டிருந்தாரு. வாசிச்சு முடிச்சதும் என்னைக் கிட்ட வாடான்னு கூப்பிட்டாரு. உடனே போனேன். “”டேய்….நல்லா வாசிக்கிறேடா… எனக்கு இந்த ஊர்லதான் நாகசுர எவரெஸ்டுனு பட்டம் கொடுத்தாங்க. நான் உனக்கு அதே எவரெஸ்ட் பட்டம் தர்றேன்டா”ன்னு சொல்லி அந்தப் பட்டத்தை அவர் தந்தார். பெரிய பாக்கியம். அதுதான் இப்ப என்னோட ஒட்டிக்கிட்டிருக்கு. அப்படி எங்கிட்ட அவருக்கு ஒரு ஒட்டுதல். அந்த அன்புதான் அவரு புரோகிராம் பின்னால எனக்குக் கிடைச்சுது. அருணாசலத்துக்கும் எனக்கும்தான் அந்த அன்பு கிடைச்சது.

இதற்குப் பிறகுதான் முதலில் சொன்னேனே….அவர் வாசிப்பதாக இருந்த மியூசிக் அகாதெமி கச்சேரிக்கு வாசித்தேன். அப்புறம் எத்தனையோ சபாக்கள்,விழாக்கள், ஊர்கள் என்று ஏராளமாக வாசித்தேன். அத்தோடு திருவாவடுதுறை ஆதீன வித்வானாக ராஜரத்னம் பிள்ளைக்கான பூஜை மேளத்தை வாசிக்கிற பாக்கியம் எனக்குக் கிடைத்ததைச் சொல்லவேண்டும். குழிக்கரை பிச்சையப்பாவும் நானும் இப்படி சுமார் 20 வருஷம் சேர்ந்து வாசித்தோம். அந்த நாளில் குழிக்கரை பிச்சையப்பாவுக்கு கச்சேரிகள் கிடைக்காத நிலை. காரணம் அவர் உறுதியான தி.மு.க.அனுதாபியாக இருந்ததுதான். அந்த நாளில் தி.மு.க. வளர்ந்து வரும் நிலையில் இருந்தது. அப்போது பல சோதனைகளை அது சந்தித்தது. தி.மு.க.என்றால் நெல்லை போன்ற பகுதிகளில் உள்ள கோயில்கள் உள்பட எந்த இடத்திலும் கச்சேரிகள் தரமாட்டார்கள். காரணம் தி.மு.க.காரர்கள் எல்லாரும் நாத்திகர்கள். அவர்களுக்குக் கச்சேரியெல்லாம் தரக்கூடாது என்று நினைத்தார்கள். அப்படி ஒரு காலம் இருந்தது. அதனால் உறுதியான தி.மு.க அனுதாபியாக இருந்த பிச்சையப்பா கஷ்டப்படவேண்டியதாயிற்று. மிகப் பெரிய கலைஞரான அவர் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போது ஆதினத்தில் நானே பிச்சையப்பாவுக்கு ஆதரவாகப் பேசி நான் போய் அவரை ஆதீனத்தில் வாசிக்க வைத்தேன். பிச்சையப்பா மிகவும் சந்தோஷப்பட்டார்.

பிச்சையப்பாவைப் பார்த்து அவர் செய்கிற நுட்பங்களையெல்லாம் கற்று அப்படியே பிரிண்ட் எடுத்தாற்போல வாசித்துக் கொண்டிருந்தவன் நான். அவரது பாணியே அலாதியானது. அதில் உள்ள ஒரு நுட்பம் நம் கைக்கு வர மாதக் கணக்கில் உழைக்க வேண்டும். அவ்வளவு கடினமான வழி அது. அவருக்கு நன்றிக் கடன்பட்டது போல இந்த உதவியை அவருக்கு நான் செய்தேன்.

குழிக்கரையார் வாசிப்பெல்லாம் எப்படியிருக்கும் தெரியுமா? அவர் மட்டுமல்ல….அன்றும் அதற்கு முந்தைய தலைமுறைகளிலும் வாசித்த நாகசுர மேதைகள் அத்தனை பேருக்கும் இன்றைய சங்கீத உலகம் கடமைப்பட்டுள்ளது. காரணம் அவர்கள்தான் ராகசங்கீதத்தை வளர்த்தவர்கள். செம்மங்குடி மாதிரி பெரிய பெரிய வித்வான்களெல்லாம் நாகசுரமே ராகசங்கீதத்தின் அடிப்படை என்று சொல்வதன் காரணம் இதுதான். அன்று இருந்த நம் கோயில் மரபுகள், நம் சங்கீதத்துக்கான குறிப்பாக ராக சங்கீதத்துக்கான அடிப்படையாக நின்றவை. கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால்தான் ராக சங்கீதம் உருவான பின்னணியைப் புரிந்து கொள்ள இயலும்.

அந்த நாளில் கோயில்களில் ஸ்வாமி புறப்பாடு ஆயிற்று என்றால் வீதிகளிலெல்லாம் வலம் வந்து அந்த ஊர்வலம் திரும்பி கோவிலுக்குள் வர விடிந்துவிடும். அதோடு மட்டுமல்ல, கோயிலுக்குள் தட்டுச் சுத்துகிறது என்கிற சம்பிரதாயம் உண்டு. அதாவது சுவாமி பிராகாரத்தில் 3 சுற்று வரவேண்டும். அதற்கே 3 மணி நேரம் ஆகும். இப்படி ராத்திரி ஆரம்பித்த வாசிப்பு சுமார் 10 மணிநேரத்துக்கும் மேலே போகும். அப்படியானால் கீர்த்தனைகளாக வாசிக்க முடியுமா. ஒரு கீர்த்தனத்தை எடுத்தால் ஐந்து பத்து நிமிஷத்தில் முடிந்து போகுமே. ஆகவே நாகசுர வித்வான்கள் ராகங்களையே எடுத்துக் கொண்டு விஸ்தாரமாக ஆலாபனை செய்வார்கள். அது ஒரு பெரிய அற்புதம். ராகத்தின் வடிவத்தில் தேங்கிக் கிடக்கிற அத்தனை அழகையும் அவரவர் கற்பனைக்கேற்ப வெளியே கொண்டு வருவார்கள். அதில்தான் வாசிக்கிறவன் எவ்வளவு பெரிய கலைஞன் என்பது தெரிந்துவிடும்.

இப்படி ஒவ்வொரு ராகத்தையும் விரிவாக்கி வாசிக்க வாசிக்க அதன் நாத எல்லைகளெல்லாம் புதிய புதிய முகங்களெல்லாம் தெரியவருகிறது. இப்படித்தான் பெரிய கலைஞர்களின் கற்பனையால் ராகங்கள் விருத்தி அடைகின்றன. வாசிக்க வாசிக்க ராகங்களே தங்கள் அழகைக் காண்பிக்கத் துவங்குகின்றன. இப்படித்தான் ராகசங்கீதம் என்பது விருத்தி அடைந்தது. அதற்கு நாகசுர கலைஞர்களே காரணமாயிருந்தனர்.

நான் கிளாரிநெட்டில் நாகசுரத்தின் அத்தனை குழைவையும், அழகையும் தொடமுடிந்ததால்தான் பெரிய கலைஞர்களும் என்னை அரவணைத்துக் கொண்டனர். அன்று இதற்கு ரொம்ப மவுசு ஏற்பட்டது.

அன்று என் வாசிப்புக்கு ஏராளமான ரசிகர்கள். அப்படி ஒரு ரசிகராக இருந்தார் சுசீந்திரம் கோயில் கமிஷனர் ராமசாமிஐயர். அவர் என்னை கேரளத்திலுள்ள கோட்டயம் கோயிலில் கச்சேரிக்கு வாசிக்க அழைத்துப் போனார். அங்கு போனால் அங்குள்ள கோவில்காரர்களும் ஊர்க்காரர்களும் கோவிலில் என்னை வாசிக்கக் கூடாதென்று சொல்லிவிட்டார்கள். காரணம், நான் வாசிக்கும் கிளாரிநெட் கிறிஸ்தவ வாத்தியம் என்றார்கள். ஐயர் அவர்களிடம் “”ஏம்பா…வாத்தியத்தில் கிறிஸ்தவ வாத்தியமாயிருந்தா என்ன….அவன் வாசிப்பு எப்படி இருக்குன்னு கொஞ்ச நேரம் உக்காந்து கேளு. அதுக்கப்புறம் உனக்கு பிடிக்கலைன்னு சொன்னா உடனே அவனை இங்கிருந்து அழைச்சிட்டுப் போயிடுறேன்” என்றார். முரண்டு பிடித்தார்கள். அப்புறம் அவர் சொல்லுக்கு மரியாதை கொடுத்து அரை மனத்தோடு கொஞ்ச நேரம் வாசிக்கச் சொன்னார்கள். வாசிச்சேன். அரை மணி நேரம் ஆச்சு. ஒரு மணி நேரம் ஆச்சு. 3 மணி நேரமும் ஆச்சு. நான் வாசிச்சு நிறுத்திய போது…..மலையாளத்தில் அவர்கள் பாகவதர் வாசிக்கட்டும்….வாசிக்கட்டும்…என்று ஊக்குவித்தார்கள். அது மட்டுமல்ல….ஒவ்வொரு வருஷமும் எனக்கு அழைப்பு அனுப்பினார்கள்.

இப்படி ஒரு நிலையை அடைய ரொம்பப் பாடுபட்டேன் என்பதையும் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். அந்த நாளில் பிச்சையப்பா, திருப்பாம்புரம் சுவாமிநாதபிள்ளை. திருப்பாம்புரம் சிவசுப்பிரமணியப் பிள்ளை, டி.எம்.தியாகராஜன், செம்மங்குடி, தண்டபாணி தேசிகர் ஆகியோரிடமெல்லாம் சென்று புது உருப்படிகளைத் தெரிந்து கொள்வார். அவருக்குப் பின்னாடியே நானும் போய் பாடம்பண்ணி வாசிப்பேன். அவர் ஆச்சரியப்பட்டு….”எங்கடா போயிட்டுவந்தே’…என்பார். நீங்க போன இடத்துக்குத்தான் போனேன் என்று நான் சொல்வேன். ரெண்டு பேரும் சிரிப்போம்.

அதுவும் தேசிகர்கிட்ட நிறைய உருப்படி பாடம் பண்ணியிருக்கேன். எம்.எஸ்.அம்மாவின் பாட்டு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அப்படி ஒரு துளி சேதாரம் இல்லாத பாடாந்திரத்தைக் கேட்பது அரிது. அவங்க வீட்டுக்குப் போய் உருப்படி பாடம் பண்ணியது உண்டு. எங்க வந்தீங்க தம்பின்னு விசாரிச்சு கேட்டதைச் சொல்லிக் குடுத்திருக்காங்க. இப்படியெல்லாம் உழைச்சதால சாதாரண ஜனங்களில் தொடங்கி எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் வரையில் பலர் என் வாசிப்பை நேசித்தனர். கிட்டத்தட்ட பத்து வருஷம் எம்.ஜி.ஆர். தன் இல்லத்தில் நடத்தி வந்த பொங்கல் விழாவில் வாசித்திருக்கிறேன். ஊருக்கே தன் பிளைமெüத்தை அனுப்பி என்னை வரவழைப்பார். கச்சேரி முடிந்ததும் நடராஜன்….உங்களுக்கு என்ன வேண்டும் என்பார். ஒண்ணும் வேண்டாம்ணே….உங்க தயவு இருந்தால் போதும் என்பேன். அப்படியே கடைசி வரை அவரிடம் தேவைகள் எதையும் சாதித்துக் கொள்ளாமல் இருந்து விட்டேன். எது கிடைச்சாலும் கிடைக்கலைன்னாலும் ரசிகர்கள் மனசில் இன்னிக்கும் எனக்கு தனி இடம் இருக்கிறதை நினைச்சா இதெல்லாம் பெரிசாத் தெரியறதில்லை.

நேர்காணல்}தொகுப்பு: தாடி வாத்தியார்

Posted in Tamil | 1 Comment »

KV Ramakrishnan’s encounters with Carnatic Vidwans – Dinamani Kathir Music Season Special

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006

கே.வி. ராமகிருஷ்ணன்: ஆஹா…அந்த நாட்கள்!
நேர்காணல்}தொகுப்பு: தாடி வாத்தியார்

வீட்டுக்குள் நுழையும் போதே செஸôனும், ரெம்ப்ரேண்டும், வான்கோவும் வரவேற்கின்றனர். புத்தக அலமாரிகளில் நேரு முதல் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் வரை. இசைக் களஞ்சியத்தில் ஒலிப்பேழைகளாக அரியக்குடி, செம்பை முதல் ஜி.என்.பி, எம்.எல்.வி வரை. இவை அனைத்தையும் பராமரிக்கிற மகா ரசிகர் கே.வி.ராமகிருஷ்ணனுக்கு வயது 93. மிகச் சிறந்த பத்திரிகையாளர். அந்த

நாளில் ராய்டர் செய்தி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்தவர். பெரும் அரசியல் மாற்றங்களைக் கண்டு எழுதியவர். 3 விம்பிள்டன்களைக் கண்டு எழுதிய விளையாட்டு விற்பன்னர்.

மிகச் சிறந்த இசை ரசிகர். மிகச் சிறந்த கலை விமர்சகர். நட்டுவாங்கம் செய்யும் அளவுக்கு லயத்தில் லயித்த மனது. இதெல்லாம் ராமகிருஷ்ணனின் சதாவதானத்தில் சில துளிகள். தனது 93 வயதின் இசை அனுபவங்களை அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

நான் பிறந்தது தாராக்காடு. அப்பா கே.ஏ.வெங்கடேசய்யர், பாலக்காட்டில் லீடிங் லாயர். கொல்லங்கோட்டு மகாராஜாவுக்கெல்லாம் அப்பா லாயராக இருந்தாரென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த நாளில் ராஜாவிடமிருந்து அசிட்டிலின் லாம்ப் எல்லாம் வெச்ச “ஹாச்கிஸ் பாரீஸ்’ கார் ஒன்று அப்பாவை அழைத்துப் போகவரும். என் ஸ்கூல் படிப்பெல்லாம் பாலக்காடு நேடிவ் ஸ்கூலில். 14 வயசில் எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சேன். அப்புறம் பாலக்காடு விக்டோரியா காலேஜில் பி.ஏ. படிச்சேன். பிரின்சிபாலாக பாக்வொர்த், டக்ளஸ் ஆகியோர்கள் இருந்த காலம். எனக்கு ஆறு, ஏழு வயதிருக்கும் போதே மிருதங்கமெல்லாம் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

மிருதங்க வாசிப்பை முறையாகப் படித்தது 16 வயசில்தான் என்றாலும், அதற்கு முன்பாகவே கேள்வி ஞானத்திலேயே பஜனைகளுக்கெல்லாம் வாசிப்பேன். கச்சேரிகளெல்லாம் கேட்பேன். அப்பாவுக்கு பாட்டெல்லாம் ரொம்ப பிடிக்கும். அதனால் பாட்டுக் கேட்கப் போவதற்கெல்லாம் தடை போடமாட்டார். என் சின்ன வயசிலேயே மூன்றரை ரூபாய்க்கு ஒரு மிருதங்கம் வாங்கித் தந்தார். அது தவிர திருச்சி கரூருக்குப் பக்கத்தில் ராம்ஜி அண்ட் கோ தயாரிப்பான கஞ்சிரா ஒன்றையும் அப்பா எனக்கு வாங்கித் தந்திருந்தார்.

கேள்வி ஞானத்திலேயே பஜனைகளுக்கு வாசித்துக் கொண்டிருந்த நான் பதினாறு வயதானதும் சாத்தபுரம் சுப்பையரிடத்தில் முறையாக மிருதங்கம் கற்க ஆரம்பித்தேன். பிற்காலத்தில் நானே நட்டுவாங்கம் செய்கிற அளவுக்கு லய ஞானம் வந்தது.

இவற்றுக்கெல்லாம் மேலாகப் பாலக்காடு மணி ஐயர், செம்பை, முசிறி, ஜி.என்.பி போன்ற சங்கீத மேதாவிகளுடன் ஒட்டி உறவாடிப் பழகும் பாக்கியமும் கிடைத்தது. குறிப்பாக லயமேதை பாலக்காட்டு மணியுடனான என் நட்பு மறக்கமுடியாதது. எனக்கும் மணிஐயருக்கும் 3 வயசு வித்யாசம். மணி ஐயர் 1912-ஜூன். நான் 1915- ஜூலை. அவரைப் பத்தி நான் சொல்லக்கூடிய விஷயங்கள் இன்றைக்கு யாருக்கும் தெரிந்திருக்காது. அத்தனை தூரம் நான் அவரோடு பழகியிருக்கேன்.

முதல் முதலில் அவரை நான் பார்த்தது 1922-ஆம் வருஷம் ஒரு கல்யாணக் கச்சேரியின் போது. அப்போது அவருக்கு பத்து வயது. எனக்கு வயது 7. பாலக்காட்டில் எங்கள் சொந்தக்காரரான பெரிய டாக்டரோட தம்பிக்குக் கல்யாணம். ரொம்பப் பெரிய கல்யாணம்.

ஒரு பக்கம் ஸ்பெஷலா ஜாங்கிரி. இன்னொரு பக்கம் வெள்ளைக்காராளுக்குத் தேவையான டிரிங்ஸ் எல்லாம். அதோடு அந்தக் கல்யாணத்தில் ராமபாகவதர் கச்சேரி. அந்த நாளில் ராமபாகவதர் கச்சேரின்னா எப்பிடிக் கூட்டம் வரும் தெரியுமா? இன்னைக்கு மாதிரி இல்லை. அந்த நாளில் கல்யாணக் கச்சேரிக்குக் கூப்பிடாமலேயே ஜனங்கள் வருவா. வந்தவாள் அத்தனை பேருக்கும் சாப்பாடு உண்டு. ராமபாகவதருக்கு ஒரு சின்ன பையன் மிருதங்கம் வாசிக்கிறான் என்று சொன்னார்கள். அந்தப் பையன்தான் மணி ஐயர். அதுக்கு முன்னாடியே அவர் பெயர் பிரபலமாகிவிட்டது.
ஆனால் அவரை அந்தக் கல்யாணத்தில்தான் முதலில் பார்த்தேன். அப்பளாக்குடுமி. நீளநீளமாக் கோடு போட்ட ஒரு சட்டை. கையில் காப்பு. இதுதான் மணி ஐயரோட கோலம். அப்போ அவருக்கும் சின்ன வயசு. எனக்கும் சின்ன வயசு. அதனால் அவர் என்ன வாசிச்சார்னு பின்னாடி எங்க ரெண்டு பேருக்குமே நினைவில்லை. ஆனால் அவர் முதல் கச்சேரி அதற்கு முன்னாலேயே நடந்து விட்டது. அதுவும் ஒரு கல்யாணக் கச்சேரிதான். அதுக்கு அவருக்கு 1 ரூவா கொடுத்தார்கள். “அது ஆகி வந்த ரூபாய்’ என்பார் பின்னாளில் மணி ஐயர்.

மணி ஐயர் 1925-26 இல் செம்பைக்கு வாசித்து விட்டார். அந்த நாளில் செம்பை குரலில் அசாத்திய ஸ்பீடு பேசும். அன்று அவர் கொடுத்த ஒருமையுடன் நினது திருமலரடி ரெகார்ட் கேட்டிருக்கிறீர்களா? அன்னிக்கு செம்பை ரெகார்ட்களும் முசிறியின் விரித்த செஞ்சடை, நகுமோமு ரெகார்ட்களும் சூப்பர் சேல்ஸ். செம்பை சும்மா இல்லை. சரியா வேலை வாங்கி பக்கவாத்தியத்தின் கையை ஒடிச்சுடுவார். அப்பவே மணி ஐயர், செம்பைக்கு வாசிச்சுட்டாரென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதோடு இல்லை. 1930ல் அதாவது 18 வயசில் ஒரு கச்சேரிக்கு 100 ரூவா வாங்கினார். அப்பவே இன்கம்டாக்ஸ் கொடுத்தார். எப்படிப்பட்ட வித்வானுக்கும் ஈடு கொடுத்து வாசிப்பது மிகச் சின்ன வயசிலேயே வந்துவிட்டது. பல்லவியில் பல்லைப் பிடித்துப் பார்க்கும் வித்வான்களை அவர் அலட்சியமாகச் சமாளித்த சம்பவங்கள் உண்டு.

முதல் தடவை அவர் மகாராஜபுரத்துக்கு வாசித்தது சுவாரஸ்யமான சம்பவம். அதைச் சொல்லுகிறேன்.

திருவனந்தபுரத்தில் பிச்சுமணி ஐயங்கார் என்று ஒருவர் இருந்தார். பெரிய போலீஸ் ஆபீசர். சங்கீதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர். இசைப் புரவலர். ஒரு சங்கீத சபாவை திருவனந்தபுரத்தில் ஆரம்பித்து நடத்தினார். பிச்சுமணி ஐயங்காரின் பிள்ளை நாராயணன் என்பவர் என் நண்பர். அவர்தான் இந்தச் சம்பவத்தை என்னிடம் சொன்னார். பிச்சு மணி ஐயங்கார் வீட்டில் மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. யார் மிருதங்கம் என்று மகாராஜபுரம் கேட்டார். ஒரு குட்டி வாசிக்கிறான். அவன் பெரிய பாட்டுக்கெல்லாம் வாசித்தவன் என்றார்கள். மலையாளப் பிரதேசத்தில் சிறு பையன்களை குட்டி என்று சொல்வார்கள். மகாராஜபுரத்தைப் பற்றித்தான் தெரியுமே? அவருக்கே உரித்தான சோழதேசத்துக் கிண்டலும் கேலியும் தனி ரகமல்லவா? சின்னப் பையனாக மேடையில் மணி ஐயரைப் பார்த்ததும் மகாராஜபுரம் “” இவன்தான் குட்டியா…ஏ குட்டி….நான் பல்லவியெல்லாம் பாடுவேன் தெரியுமா உனக்கு….” என்றார். குட்டி மணி ஐயர் மிருதங்கத்தைச் சுருதி சேர்த்தபடியே பளீரென்று “”நீர் எதை வேணா பாடுமய்யா” என்றாரே பார்க்கலாம். அதோடு அவர் பல்லவியை நிர்வகித்து வாசித்ததைப் பார்த்து அசந்து போன மகாராஜபுரம் “”ஓ….இது சாதாரண குட்டி இல்லை போலிருக்கு” என்றார். மணி ஐயரின் தன்னம்பிக்கை எல்லை இல்லாதது.


பழனி சுப்புடு

அவர் வாசிப்பின் விசேஷம் என்னவென்று சொல்கிறேன். அவர் லயத்தில் ஒரு பிறவி மேதை என்பதால் மிக சிக்கலான லய விஷயங்களையெல்லாம் சர்வசாதாரணமாகப் புரிந்து கொண்டு அலட்சியமாக வாசித்துவிடுவார். இதற்கெல்லாம் உட்கார்ந்து தியரிடிகலாகப் படித்ததெல்லாம் கிடையாது. ஃபெüலர் இங்கிலீஷ் கிராமரைப் படித்து யாராவது இங்கிலீஷ் பேச முடியுமா? அவர் லயத்தின் நுட்பங்களையெல்லாம் உள்ளுணர்விலேயே மிக எளிதாக அறிந்து கொண்டார். ஒரு தடவை நான் அவருக்கு தாள சமுத்திரம் என்ற புத்தகத்தைத் தந்தேன். அப்போது அவர் என்ன சொன்னார் தெரியுமா? ராமகிருஷ்ணையர்….இந்தச் சமுத்திரத்தில் யார் முழுகுவது…என்று சொன்னார். தியரிடிகலான விஷயங்களையெல்லாம் அவர் உள்ளுணர்விலேயே உணர்ந்து வாசித்துவிடுவார்.

அதனால்தான் ஆலத்தூர் பிரதர்ஸýக்கு வாசிக்கும் போது லயச் சிக்கலான பல்லவிகளை ஆதிதாளம் வாசிப்பது போல கஷ்டமேபடாமல் அலட்சியமாக வாசித்தார். அப்புறம் அவர் பாட்டுக்கு வாசிக்கும் அழகைச் சொல்ல வேண்டும். பாட்டுக்கு வாசிப்பது என்பது தனிகலை. அதற்கு வல்லின மெல்லினம் தெரியணும். பத கர்ப்பம் தெரியணும். இதெல்லாம் அவருக்கு ரத்தத்திலேயே ஊறியிருந்தது. அதனால்தான் பெரிய பெரிய லய சிம்மங்களையெல்லாம் தன் மேதாவிலாசத்தால் பிரமிக்க வைக்க முடிந்தது.

1956 என்று நினைவு. தில்லியில் ஒரு மியூசிக் செமினார். அதை ஒட்டி ரவீந்திர பவனில் ஆலத்தூர் கச்சேரி. மணி ஐயர் மிருதங்கம். அதைக் கேட்க வந்தவர்களுள் அன்றைய ஹிந்துஸ்தானி இசை உலகின் லய வாத்திய மாஸ்டரான அகமத்கான் த்ராக்வாவும் ஒருவர். அவர் பெயர் அகமத்ஜான் என்பதுதான். த்ராக்வா என்ற பெயர் அவர் தபலாவில் த்ராக்,த்ராக் என்று வாசிப்பதால் வந்த பெயர். வாசிப்பில் நல்ல நாதம் உள்ள கலைஞர் அவர். அந்த நாளில் மிகப் பெரிய கலைஞரான பாலசந்தர்வாவுக்கு அகமத்கான்தான் வாசிப்பாரென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அன்று அவர் மணி ஐயர் வாசிப்பைப் பார்த்துவிட்டு மலைத்துப் போய் அப்படியே மேடைக்குக் கிட்டே போய் ஆகாகாரம் செய்கிறார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சங்கீத நாடக அகாதெமியின் நிர்மலா ஜோஷி என்னிடம் மேலும் ஒரு தனி ஆவர்த்தனம் வாசிக்கும்படி மணி ஐயரிடம் கேட்கச் சொன்னார். நான் போய் மணி ஐயர் காதில் சொன்னேன். மணி ஐயர் பேசவில்லை. தன் மூன்று விரலை நீட்டினார். மேலே ஒரு 300 ரூபாய் வேண்டும் என்று அர்த்தம். அது உடனே ஒப்புக் கொள்ளப்பட்டு இன்னொரு தனி ஆவர்த்தனமும் வாசித்தார் அவர்.

மணி ஐயர் காசு விஷயத்தில் சரியாக இருப்பார். தன் காசையும் விடமாட்டார். அதே சமயம் பிறத்தியார் காசுக்கும் ஆசைப்பட மாட்டார். ஒரு கச்சேரியில் கூடுதலாகக் காசு கொடுத்துவிட்டார்கள். அதை உடனடியாகத் திருப்பித் தந்துவிட்டார். அவர்கள் வற்புறுத்தியும் வாங்கமாட்டேனென்று சொல்லிவிட்டார். இந்த விஷயத்தில் திருவாலங்காடு சுந்தரேசையரும் அப்படித்தான். ஒரு தடவை கச்சேரி முடிந்ததும் அவருக்கு வைத்திருந்த கவரில் 75 ரூபாய் இருந்தது. அவர் கச்சேரி ஏற்பாடு செய்தவர்களைக் கூப்பிட்டு என் ரேட் 45 ரூபாய்தான் என்று மீதியைத் திருப்பிக் கொடுத்தார். “இன்று நீங்கள் கொடுக்கிறீர்கள் என்று வாங்கினால், இன்னொரு இடத்துக்குப் போனாலும் இதையே எதிர்பார்க்கிற புத்தி வந்துவிடும். வேண்டாம் கூடுதல் ரூபாயைத் திருப்பி எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டார் அவர். அப்படிப்பட்ட வித்வான்களும் இருந்தார்கள்.



புஷ்பவனம்

அத்தோடு மிருதங்கத்துக்கு என்று தனி கெüரவத்தை வாங்கிக் கொடுத்தது மணி ஐயர்தான். அவர் வீட்டில் சபாக்காரர்கள் வந்து தவம் கிடந்ததைப் பார்த்திருக்கிறேன். தனக்கு என்று சில கொள்கைகள் வைத்திருந்தார். அவார்டெல்லாம்….அவர் சொல்கிற மாதிரி “எவார்டெல்லாம்’ அவருக்கு லட்சியமோ பொருட்டோ அல்ல. சங்கீத நாடக அகாதெமி விருது தந்தார்களே….அதை வாங்க அவர் போகவேயில்லை.

ரொம்ப பேருக்குத் தெரியாத சம்பவம் ஒன்றைச் சொல்கிறேன். ஒரு தடவை ரேடியோ ஸ்டேஷனுக்கு வாசிக்கப் போய்விட்டு வாசிக்காமலேயே திரும்பி வந்துவிட்டார். அப்போ ரேடியோ ஸ்டேஷனில் மணி ஐயருக்கு 150 ரூபாய் தருவார்கள். அங்கு உயரதிகாரியாக இருந்த ஒரு பெண் மூணு தனி ஆவர்த்தனம் வாசிக்கணும் என்று கேட்டார். மணி ஐயர் உடனே “”அப்படியானால் ஒவ்வொரு தனிக்கும் 150 ரூபாய் தர காண்ட்ராக்ட் எழுதணும்” என்றார். “”ஐயோ….கவர்ன்மென்ட் ரூல்ஸ் அலெü பண்ணாதே….” என்றார் அந்தப் பெண்மணி. உடனே மணி ஐயர், “”என்னோட கவர்ன்மென்ட் ரூல் 150 ரூபாய்க்கு மூணு தனி வாசிக்க அலெü பண்ணாது…” என்று சொல்லி உடனே மூட்டையைக் கட்டிவிட்டார். சில விதிமுறைகளை அவர் தனக்கென வைத்திருந்தார். அதில் அவர் விட்டுத் தரவே மாட்டார்.

அவர்கூடப் பழகியதில் எத்தனையோ மறக்கமுடியாத சம்பவங்கள். அதில் அவர் தில்லியிலிருந்து பம்பாய்க்கு ப்ளேனில் போன கூத்து இருக்கிறதே….அது மறக்கமுடியாதது. வேடிக்கையான சம்பவம் அது. அது 1948. நான் தில்லியில் அப்போது நாராயணய்யர் ஹோட்டலில் ரூமில் தங்கியிருக்கிறேன். நாராயணய்யர் சங்கீத வித்வான்களிடத்து அபிமானம் உள்ளவர். செம்பைக்கு அவர் சொந்தம். கிளம்பும்போதே லேட். “”நான் புத்தம் புதிய ஷேவர்லே வாங்கியிருக்கேன். பத்து நிமிஷத்துல கொண்டு தள்ளிப்பிடுவேன்” என்றார் நாராயணன். அவர்கள் பாலம் ஏர்போர்ட்டுக்குப் போவதற்குப் பதிலாக மிலிடரி ஏர் போர்ட்டுக்குப் போய் விஷயம் தெரிந்து சரியான ஏர்போர்டுக்கு வருவதற்குள் ப்ளேன் கிளம்பி ரன்வேயில் நகர ஆரம்பித்தாகிவிட்டது. எனக்கு டாட்டாவைத் தெரியுமாக்கும் அவனைத் தெரியுமாக்கும் இவனைத் தெரியுமாக்கும் என்றார் நாராயணய்யர். ப்ளேன் கிளம்பிப் போயே போச்சு. ஐநூத்தி இருவத்தஞ்சு ரூபாய் போச்சு என்றார் மணிஐயர். அன்று நாராயணய்யர் கார் ஓட்டிய வேகத்தைப் பார்த்து நாம் தீர்ந்தோம் என்று நினைத்தேன். எப்படியோ தப்பினோம். மறுநாள் ஐயர் அண்ட் சன்ஸ் டிராவல் ஏஜென்சியைப் பிடித்து ஒரு வழியாக மணி ஐயரையும் கிருஷ்ணனையும் அந்தப் ப்ளேனில் திணித்து பம்பாய்க்கு அனுப்பிவைத்தோம்.

காசு விஷயத்தில் கறார் என்றாலும் மணி ஐயர் நட்பைப் போற்றுபவர். நூறு ரூபாய்க்கு நண்பர்களிடையே கணக்குப் பார்க்கக் கூடாது என்பார். எனக்குத் தெரிந்த வித்வான்களில் ஜி.என்.பி., எம்.எல்.வி. இருவருமே மிக தாராளமான மனசு உடையவர்கள். வித்வான்களில் இரண்டு விதமானவர்களும் இருந்தார்கள்.

பெயரைச் சொல்லவில்லை. அந்த நாளில் ரொம்ப சீனியரான ஒரு பெரிய வித்வான். அவருக்கு திருச்சியில் பரம ரசிகர் ஒருவர். அவர் பெரிய பணக்காரரும் கூட. ஒரு தடவை வித்வானைப் பார்க்க வந்தபோது சில்க் ஜிப்பாவில் வைர பொத்தான்கள் வைத்துப் போட்டுக் கொண்டு வந்தார். அவ்வளவு ப்ளூஜாகர். அதைப் பார்த்தவுடனே ஆசைப்பட்டார் வித்வான். உடனே ரசிகர் பட்டுச் சட்டையைக் கழற்றி வித்வானுக்குக் கொடுத்துவிட்டார். அப்படிப்பட்ட ரசிகர் பிற்காலத்தில் செத்துப்போனபோது துக்கம் கேட்கக் கூடப் போகவில்லை அந்த சீனியர் வித்வான். இப்படியும் மனிதர்கள் இருந்தார்கள் என்பதற்காய்ச் சொல்கிறேன் இதை.

மிருதங்கம் என்னும் போது மணி ஐயர் மாதிரியே என்னைப் பரவசப்படுத்திய இன்னொரு லய வித்வான் பழனி சுப்பிரமணியப் பிள்ளை. அவரோடும் எனக்கு நல்ல பழக்கம் உண்டு. லயத்தில் என் ஈடுபாட்டைப் பார்த்து எனக்கு ஒரு மிருதங்கமும் ரெண்டு கஞ்சிராவும் தந்தார் பழனி. மணி ஐயர் இது போல எனக்கு வெவ்வேறு சந்தர்ப்பத்தில் தந்தவை 5 மிருதங்கங்கள்.

பழனியின் மிருதங்கத்தில் தொப்பி நாதம் ஒரு புறா கூவுவது போல இருக்கும். உங்களுக்குத் தெரியுமோ? சுப்பிரமணியப் பிள்ளை ரொம்ப நன்றாகப் பாடுவார். மிகப் பெரிய தவில் வித்வானாக விளங்கிய மலைக் கோட்டை பஞ்சாமி வாய்ப்பாட்டு மிக நன்றாகப் பாடுவார். அவரிடம்தான் பழனி வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டார். திருப்புகழெல்லாம் மிக நன்றாகப் பாடுவார்.

நல்ல மிருதங்க வித்வான்களை ஊக்குவிப்பதில் அன்று செம்பைக்கு இணை செம்பையேதான். பாலக்காட்டில் ராமபாகவதர், சிவராம பாகவதருக்கெல்லாம் வாசித்துக் கொண்டிருந்த மணி ஐயரை பல கச்சேரிகளில் தன்னுடன் வாசிக்க வைத்தவர் செம்பை. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் பழனி சுப்பிரமணியப் பிள்ளையை இப்படி ஊக்கப்படுத்திய விஷயம் நினைவுக்கு வந்தது. ஒரு சமயம் 1942 என்று நினைவு. பழனிக்குத் தொழிலில் கொஞ்சம் தொய்வு வந்தது. மனத்தளவிலும் அவர் தளர்ந்து போயிருந்தார். காரணம் அன்றைய மூத்த வித்வான் ஒருத்தர் கச்சேரிக்குப் பழனியை அழைத்துவிட்டு தனி ஆவர்த்தனமே கொடுக்காமல் அவமதித்து விட்டார். இது பிள்ளைவாள் மனத்தைப் புண்ணாக்கியிருந்த சமயம் அது. அதை அறிந்த செம்பை அவரை உற்சாகப்படுத்துவதற்கென்றே தன்னோடு வாசிக்கச் செய்தார். பழனி சுப்புடுவின் மேதமையை ரசிகர்கள் உலகம் அறியும்படி செய்தார் செம்பை. ஒரு கச்சேரியில் பழனிக்கு அவர் கொடுத்த தனி ஆவர்த்தனங்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? 5 தனிகள். அவ்வளவையும் பழனி அமர்க்களமாக வாசித்துவிட்டார். மறுநாள் அவரைப் பார்க்க நான் போகிறேன். ரூமில் நன்றாக நீட்டிப் படுத்திருக்கிறார் அவர். என்னைப் பார்த்தாரோ இல்லையோ…ஐயா…ராமகிருஷ்ணன்….. நேத்து வாசிச்சது இன்னும் எழுந்துக்க முடியலைய்யா…என்றார்.

இது போலவே ராமநாதபுரம் முருகபூபதியின் வாசிப்பையும் பெரிய அளவுக்குப் பரப்ப நிறைய கச்சேரிகளில் தன்னோடு வாசிக்க வைத்தார் செம்பை.

நல்ல சங்கீத சூழல் இருந்ததால் எனக்குப் பல சங்கீதவித்வான்களின் சங்கீதத்தை சின்ன வயசிலிருந்து கேட்கிற வாய்ப்பு கிடைத்தது. மதுரைமணி, ஜி.என்.பி., மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் பாட்டிலெல்லாம் ஆத்மார்த்தமான ஈடுபாடு உண்டு. அதுவும் அந்த நாளைய சீனியர் வித்வான் ஒருத்தர் ஆரபியை தேவகாந்தாரியாகப் பாடிக் கொண்டிருப்பார். மகாராஜபுரம்தான் ஆரபியை அடிச்சுப் பாடி ஜமாய்ப்பார். அந்த சீனியர் வித்வான்…… அவர் யார் என்கிற வித்வான் பெயரெல்லாம் வேண்டாம்….அவர் ஒரு தடவை அந்த நாளைய சபாவான எழும்பூர் ஜகன்நாத பக்த சபாவில் நடந்த கச்சேரியில் எவரனி பாடும்போது அக்கவுண்ட் ஜெனரலாயிருந்த ராகவய்யர் என்பவர் வந்திருந்தார். அவருக்கெல்லாம் தேட்டையான சங்கீத ஞானம் உண்டு. சீனியர் வித்வான் பாடியதைக் கேட்டு “”நீர் ராகத்தைப் பாடாதேயும்….நீர் பாடினது கரகரப்ரியா…. தேவாமிர்தவர்ஷிணி இல்லை..”என்றார்.

எதற்குச் சொல்கிறேன் என்றால் மகாராஜபுரத்திடம் இது போன்ற விவகாரங்களையெல்லாம் பார்க்க முடியாது. “”விஸ்வநாதய்யர் பாட ஆரம்பித்தால் அவுட் வாணம் விட்டது மாதிரி அற்புதமான சங்கதிகளெல்லாம் வரும்” என்பார் டைகர் வரதாச்சாரியார். அது முற்றிலும் உண்மை.

விஸ்வநாதய்யர் போலவே மதுரை மணி. அவர் “மதுராபுரி நிலையே மணிவலையே….’என்னும் போது குரலில் பேசும் அனுஸ்வரம் நம் உடம்பைச் சிலிர்க்க வைக்கும். ரொம்ப பாவப்பூர்வமான சங்கீதம். அந்த நாளில் மாஸ்டர் சுப்பிரமணியம் என்ற பெயரில் அவர் கச்சேரி செய்ததையே நான் கேட்டிருக்கிறேன். குடுமி வைத்துக் கொண்டு பார்க்க ரொம்ப அழகாக இருப்பார். எங்கள் ஊரில் அகோரமய்யர் என்பவர் வீட்டுக் கல்யாணத்துக்கு வந்து பாடினார் மதுரை மணி. செம்பைதான் பாடுவதாக இருந்தது. 300 ரூபாய் கேட்டார் என்பதால் வேண்டாமென்று சொல்லி மதுரை மணியைப் பாடவைத்தார்கள். அந்தப் பாட்டைக் கேட்டு விட்டு பாலக்காடு லோக்கல் இங்கிலீஷ் பேப்பரில் “செüத் இண்டியன் பிராடிஜி’ என்று அவரைப் பற்றி எழுதினார்கள். அப்படி ரொம்ப நன்றாகப் பாடுவார். அப்போது 6 கட்டை சாரீரம். எந்த நாளிலும் அவர் சாரீரம் ஸ்ருதியோடு அப்படி இழையும். மதுரை புஷ்பவனத்தின் அண்ணன் பிள்ளைதானே இவர். அந்த நாளில் புஷ்பவனத்தின் “க்ஷீர சாகர சயன’ கிருதியைக் கேட்கவே கூட்டமான கூட்டம் வரும் என்பார்கள். பின்னாடி மதுரை மணிக்கு அந்த வயசில் வரும் மகரக் கட்டு வந்து கஷ்டப்பட்டு ஒரு வழியாக சாரீரத்தை காப்பாற்றிக் கொண்டார். இதனால் கச்சேரி குறைந்த போது குறைந்த சம்பாதனையில் தானும் தன் தாயாரும் வாழ்ந்ததை அவர் சொல்லியிருக்கிறார். ரொம்ப நல்ல பாட்டு அவருடையது.

அது மாதிரி ஜி.என்.பி. அவரும் பிறவி மேதை. இல்லாவிட்டால் அப்படிப் பாடமுடியாது. என்ன சாரீரம்…என்ன பாட்டு.

இப்போ என் கதைக்கு வருகிறேன். நான் பல ஹரிகதைகள் உள்பட நிகழ்ச்சிகளுக்கு வாசித்திருக்கிறேன். அவற்றில் மறக்கமுடியாதது ரெவரெண்ட் பாப்ளி செய்த கதாகாலட்சேபத்துக்கு வாசித்தது. ரெவரண்ட் பாப்ளி ஐரோப்பிய பாதிரி. தமிழ், தமிழிசை இவற்றைப் பற்றியெல்லாம் ஆழ்ந்த படிப்புள்ளவர். கிறிஸ்தவ மதப் போதகரான அவர் கிறிஸ்து கதையை நமது கதாகாலட்சேப மரபில் செய்ய முன் வந்தார். அது 1949 என்று நினைவு. நிகழ்ச்சி தில்லி ஒய்.எம்.சி.ஏ,வில் நடந்தது. நான் அங்குதான் தங்கியிருந்தேன். அவரது கதாகாலட்சேபத்துக்கு நான் மிருதங்கம். வித்வான் ரவிகிரண் இருக்கிறாரே அவரது சின்னத் தாத்தா கிருஷ்ணசாமி இந்த நிகழ்ச்சிக்கு வயலின். (அப்போது இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் எப்.ஜி.நடேசன். அவர் கிறிஸ்தவராக மதம் மாறியவர். பின்னர் மீண்டும் ஹிந்து மதத்துக்கே வந்துவிட்டார்.)

பாப்ளி பாதிரியார் அந்த நாளில் ஹிந்து மத மரபில் உள்ள உத்திகளைக் கொண்டே கிறிஸ்தவத்தைப் பரப்பும் முயற்சியில் இருந்தார். அன்று கிறிஸ்து கதையில் அவர் சொன்ன உபகதைகளெல்லாம் கூட ஹிந்து மத உபன்யாசகர்கள் கூறுவதுதான். அதையெல்லாம் கவனித்து அவர் பயன்படுத்தியது வியப்பாகவும் மறுபுறம் வேடிக்கையாகவும் இருந்தது. வேடிக்கையாக இருந்ததற்குக் காரணம் ஐரோப்பியரான அவரது தமிழ் உச்சரிப்பு. அந்த நாளில் கரகரப்பிரியாவில் பாடும் விடமுசேய ராதா மாதிரியே கிறிஸ்தவப் பாட்டு ஒன்றை அவர் பாடினார். பாழும்கிணற்றில் விழுந்த ஒருவர் கதையை ஹிந்து உபன்யாசகர்கள் சொல்வார்கள்.

கிணற்றில் விழுந்து ஓர் ஆலம் விழுதைப் பற்றித் தொங்குவான். விழுதை எலி கடிக்க அது நைந்து போக ஆரம்பிக்கும். கீழே கிணற்றில் ஒரு நாகம் அவனைக் கொத்தத் தயாராக இருக்கும் . கிணற்றுக்கு மேலே ஒரு மதயானை இருக்கும். இதன் நடுவில் மரத்திலிருக்கும் தேனடையிலிருந்து சொட்டிய தேன் அவன் வாயில் விழும். மனிதன் அந்தச் சுகத்தை அனுபவிப்பான். உலக சுகம் இப்படிப்பட்டதுதான் என்பதை விளக்கும் கதை இது. அதையே பாப்ளியும் சொன்னார் “மேலே மட்யானே…..கீளே நாக்பாம்பு…..’ என்று ஐரோப்பியத் தமிழில் சொன்னபோது எனக்கும் கிருஷ்ணசாமிக்கும் சிரிப்பு தாங்கவில்லை.

இன்று வயது எனக்கு 93. இன்னும் கச்சேரிகளுக்குப் போய்க் கொண்டு நிறைவான வாழ்க்கை வாழ்கிறேன். மணி ஐயரைப் பற்றி முழுமையான பயாக்ரபி ஒன்றை எழுத வேண்டும் என்பது என் ஆசை. காலம் ரொம்ப குறுகிவிட்டது. இப்போதெல்லாம் மறதி அதிகமாகி வருகிறது. சீக்கிரம் எழுதவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அப்புறம் ஈஸ்வரக் கிருபை.

நேர்காணல்}தொகுப்பு: தாடி வாத்தியார்

Posted in Tamil | 1 Comment »

Sabha Awards, Recongnitions & Prizes to Carnatic Sangeetha Performers : Dinamani Kathir Music Season Special

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006

விருது பெறும் கலைஞர்கள்

தொகுப்பு: ரவிக்குமார்

இவ்வாண்டு இசை விழாவினை ஒட்டி பல்வேறு சபைகள் வழங்கும் விருதுகளை வென்ற இசை மற்றும் நாட்டியக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இங்கே தொகுத்தளிக்கப்படுகின்றன.

சங்கீத கலாநிதி

கர்நாடக இசை உலகில் மிகவும் கெüரவமிக்க விருதான சென்னை சங்கீத வித்வத் சபையின் சங்கீத கலாநிதி விருது இந்தாண்டு டி.என். சேஷகோபாலனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மகாவித்வானாக விளங்கிய ராமநாதபுரம் சங்கரசிவத்தின் சீடரான இவர் ஏராளமான விருதுகளைப் பெற்றவர். உலகெங்கும் தனக்கே உரித்தான ரசிகர்களை ஏராளமாகப் பெற்றவர்.

இசைப் பேரறிஞர்

பாம்பே சிஸ்டர்ஸ்

தமிழிசைச் சங்கம் வழங்கும் உயரிய விருதான இசைப் பேரறிஞர் விருதை இந்த வருடம் பெறுபவர்கள் பாம்பே சகோதரிகள்(சரோஜா, லலிதா). பாம்பே சகோதரிகளின் சிட்சை ஆரம்பத்தில் அவர்களின் மூத்த சகோதரியான திருமதி சேதுமகாதேவனிடமிருந்தே தொடங்கியது. பின்னாளில் செல்லமணி பாகவதரிடம் மெருகேறியது. அதன்பின் சென்னை, இசைக் கல்லூரியில் சேர்ந்து தங்களின் திறமையை மேலும் வளர்த்துக் கொண்டனர். அந்தக் காலக் கட்டத்தில் இசைக்கல்லூரியின் முதல்வராக இருந்தவர் இசை மேதை முசிறி சுப்பிரமணிய ஐயர். பலமான சங்கீத அடித்தளத்துடன் இந்தியா முழுவதும், உலகின் பல நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றனர் இந்தச் சகோதரிகள். அரசு சார்பாக நடக்கும் முக்கிய விழாக்களில் நிகழ்ச்சி நடத்தும் பெருமை பெற்றவர்கள். தமிழக அரசின் கலைமாமணி, இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது போன்ற மதிப்பு மிக்க விருதுகளை பாம்பே சகோதரிகள் பெற்றிருக்கின்றனர். இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தங்கள் பெற்றோர்களின் (முக்தாம்பாள்-சிதம்பரம் ஐயர்) பெயர்களை இணைத்து “முக்தாம்பரம் அறக்கட்டளை’யைத் தொடங்கி அதன் மூலம் வளரும் தலைமுறையினருக்கு வழிகாட்டுகின்றனர்.

நிருத்திய சூடாமணி

அனந்தா சங்கர் ஜெயந்த்

anandhaஸ்ரீ கிருஷ்ணகான சபையின் பெருமைக்குரிய நிருத்திய சூடாமணி விருதை இந்தாண்டு பெறுபவர் டாக்டர் அனந்தா சங்கர் ஜெயந்த். கலாஷேத்ராவின் வார்ப்பு இவர். பரதத்தோடு, வீணை வாசிப்பதிலும், நடனக்கோப்புகளை அமைப்பதிலும் வல்லவர். மரபு வழி நடனத்தோடு, நவீன வழி நாட்டியங்களையும் உள்நாட்டு மேடைகளிலும், வெளிநாட்டு மேடைகளிலும் நிகழ்த்தியிருப்பவர். பசுமர்த்தி ராமலிங்க சாஸ்திரியை குருவாகக் கொண்டு குச்சிபுடி நடனத்திலும் தேர்ச்சி பெற்றிருப்பவர். ஸ்ரீ கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும், புத்தம் சரணம் கச்சாமி, பஞ்சதந்திர கதைகளை அடிப்படையாகக் கொண்டு இவர் நிகழ்த்தியிருக்கும் நாட்டிய நிகழ்ச்சிகள், இவரின் நடனக்கோப்பு திறமைக்கு சான்றளிப்பவை. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும், புது தில்லி, ஸ்ரீ சண்முகானந்த சங்கீத சபையின் நாட்டிய இளவரசி விருதையும் வென்றிருப்பவர். சிறந்த நாட்டிய மணியாக மட்டுமில்லாமல், “சங்கரானந்தா கலாúக்ஷத்ரா’ என்னும் நடனப் பள்ளியை ஹைதராபாத்திலும், செகந்திராபாத்திலும் 1979-ம் ஆண்டிலிருந்தே நிறுவி சிறந்த நாட்டிய மணிகளையும் உருவாக்கி வருபவர்.

சங்கீத கலா சாரதி

பாரம்பரியப் பெருமையும், பழமையும் வாய்ந்த சென்னை, ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா வழங்கும் இவ்வாண்டுக்கான சங்கீத கலாசாரதி விருதைப் பெறுபவர் சஞ்சய் சுப்பிரமணியம். உள்நாட்டு மேடைகளிலும், வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தி ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் இளம் கலைஞர்.

நாதப் பிரம்மம்

மூர்த்தி

நாரத கான சபையின் இவ்வாண்டுக்கான நாதப் பிரம்மம் விருது மூத்த மிருதங்க வித்வானான டி.கே. மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. தனது எட்டு வயதில் தொடங்கி எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக ராஜவாத்தியமான மிருதங்கம் வாசிப்பில் மிகப் பெரும் கலைஞராக திகழ்பவர் இவர். மிருதங்கத்தைத் தவிர கடம், கஞ்சிரா போன்ற தாள வாத்தியங்கள் வாசிப்பதிலும், கொன்னக்கோலிலும் வல்லவர். மிருதங்க மேதை தஞ்சாவூர் வைத்யநாத ஐயரிடம் சிட்சை பெற்றவர் இவர். இன்றைக்கு 82 வயதாகும் லய மேதை டி.கே. மூர்த்தி, 40 வருடங்கள் இசை மேதை எம்.எஸ். சுப்புலஷ்மியின் நிகழ்ச்சிகளுக்கு மிருதங்கம் வாசித்திருக்கிறார். மேலும், மதுரை சோமு, லால்குடி ஜெயராமன், மாண்டலின் யு. ஸ்ரீனிவாசன், டி.கே. ஜெயராமன், டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா, டி.என். சேஷகோபாலன், குன்னக்குடி வைத்யநாதன் போன்ற பல கலைஞர்களுக்கும் மிருதங்கம் வாசித்துள்ளார்.

மிருதங்க சக்கரவர்த்தி டி.கே. மூர்த்தி, திருவனந்தபுரம் அரண்மனையில் ஆஸ்தான வித்வானாக இருந்தவர். உள்நாட்டு மேடைகளிலும், வெளிநாட்டு மேடைகளிலும் லய மழை பொழிந்திருக்கும் டி.கே. மூர்த்திக்கு அரிசோனா நாட்டின் உலகப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியிருக்கின்றது. மத்திய அரசின் சங்கீத நாடக அகடமி விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, சென்னை, சங்கீத வித்வத் சபையின் சங்கீத கலா நிதி விருது உட்பட பல உயரிய விருதுகளைப் பெற்றவர் டி.கே. மூர்த்தி.

நாரத கான சபையின் மூத்த இசைக் கலைஞருக்கான விருதை அனந்தலஷ்மி சடகோபன் பெற்றார். அனேக மேடைகளில் பாடி, ஏராளமான ரசிகர்களைப் பெற்ற திறமை வாய்ந்த பாடகர் அனந்தலஷ்மி சடகோபன்.

இசைப் பேரொளி

மல்லாடி சகோதரர்கள்

கார்த்திக் பைன் ஆர்ட்ஸின் இவ்வாண்டுக்கான இசைப் பேரொளி விருது, மல்லாடி சகோதரர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழிசை வேந்தர் விருதைப் பெறுபவர் இசை மேதை டி.கே.பட்டம்மாள். இச்சபையின் நடன மாமணி விருதைப் பெற்றிருப்பவர் பார்கவி கோபாலன். கே.ஜே. சரசாவிடம் நாட்டியம் பயின்ற இவர் தனது ஒன்பதாவது வயதிலேயே, சென்னை, பாரதிய வித்யா பவனில் நாட்டிய அரங்கேற்றத்தை நிகழ்த்தியிருப்பவர். இந்தியாவில் அனேக சபாக்களில் தனது நிகழ்ச்சியை நிகழ்த்தியிருக்கும் இவர், தொலைக்காட்சி நிலையத்தின் முதல் தரச் சான்றிதழ் பெற்ற கலைஞர். நாட்டிய கலா சிரோமணி, யுவகலா பாரதி, நாட்டியத் தாரகை, நாட்டிய பைரவி உள்பட பல விருதுகளை வென்றுள்ள இளம் கலைஞர் இவர்.

கார்த்திக் பைன் ஆர்ட்ஸின் இசைச் சுடர் விருதைப் பெற்றிருக்கிறார் கே. காயத்ரி. கலைமாமணி சுகுணா புருஷோத்தமனிடம் இசைப் பயிற்சி எடுத்துக்கொண்டவர். சிறந்த இசைத் துறை மாணவிகளுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் உதவித் தொகையைப் பெற்றிருப்பவர். வானொலி நிலையத்தின் முதல் தரத் தகுதி பெற்ற கலைஞர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தற்போது இசைத்துறையில் எம்.ஃபில்., படித்துக்கொண்டிருக்கிறார்.

நாட்டியச் சுடர் விருதைப் பெற்றிருப்பவர் அஸ்வினி விஸ்வநாதன். ஜெயந்தி சுப்பிரமணியத்திடம் பரதநாட்டியத்தையும், கோபிகா வர்மாவிடம் மோகினியாட்டத்தையும் பயின்றிருப்பவர். உள்நாட்டு மேடைகளிலும், வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கும் இளம் கலைஞர்.

சங்கீத கலா சிரோமணி

டி.வி.எஸ். என்று இசை ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் டி.வி. சங்கரநாராயணன், இவ்வாண்டுக்கான நுங்கம்பாக்கம் கல்சுரல் அகாதெமியின் சங்கீத கலா சிரோமணி விருதைப் பெறுகிறார். தஞ்சாவூர் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தவர் டி.வி. சங்கரநாராயணன். அவரை முதல் குருவாக இருந்து வழிநடத்தியவர் அவரது அன்னை கோமதி வேம்பு ஐயர். இவரின் சகோதரர்தான் மதுரை மணி ஐயர். சங்கீத கலாநிதி இசைப் பேரறிஞர் மதுரை மணி ஐயர் டி.வி. சங்கரநாராயணனுக்கு தாய்மாமன். அன்னை வழங்கிய பலமான அடித்தளத்துடனும், மதுரை மணி ஐயர் வழங்கிய நுணுக்கங்களுடனும் டி.வி.எஸ். உள்நாட்டு மேடைகளிலும், வெளிநாட்டு மேடைகளிலும் எழுப்பியிருக்கும் ராக மாளிகைகளுக்கு அளவே இல்லை. மத்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி விருது, பத்ம பூஷன், சங்கீத கலாநிதி போன்ற நாட்டின் உயரிய விருதுகள் பலவற்றையும் வென்றிருப்பவர் டி.வி.எஸ்.

இச்சபையின் நிருத்திய கலா சிரோமணி விருதை வென்றிருப்பவர், குச்சிபுடி ஆர்ட்ஸ் அகாதெமியைத் தோற்றுவித்த மூத்த குச்சிபுடி நடனக் கலைஞர் வேம்பட்டி சின்னசத்யம்.

நாடகக் கலா சிரோமணி விருதைப் பெறுபவர் மூத்த நாடகக் கலைஞர் ஏ.ஆர். சீனிவாசன்.

நிருத்ய கலா நிபுணா

மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸின் இவ்வாண்டுக்கான நிருத்ய கலா நிபுணா விருதைப் பெறுபவர் சித்ரா விஸ்வேஸ்வரன். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏராளமான நாட்டிய நிகழ்ச்சிகளை அளித்திருக்கும் சித்ரா விஸ்வேஸ்வரன், சிறந்த நடனமணி மட்டுமல்ல, இந்தத் துறையில் நாளைய நம்பிக்கை நட்சத்திரங்களை உருவாக்கி வரும் சிறந்த நடன ஆசிரியரும் ஆவார்.

சங்கீத கலா சிகாமணி

இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸின் இந்தாண்டுக்கான சங்கீத கலா சிகாமணி விருதைப் பெறுபவர்கள், பாம்பே சகோதரிகள். சபையின் நாட்டிய கலா சிகாமணி விருதைப் பெறுபவர் மூத்த பரதநாட்டியக் கலைஞர் ரேவதி ராமச்சந்திரன்.

வாணி கலா சுதாகர

தியாகப்ரம்ம கான சபை வழங்கும் இவ்வாண்டுக்கான வாணி கலா சுதாகர விருதைப் பெறுபவர் டாக்டர் கே.ஜே. யேசுதாஸ். இசை மேதை செம்பை வைத்யநாத பாகவதரின் சீடரான யேசுதாஸ், கொரவ டாக்டர் பட்டம், கலைமாமணி உட்பட பெருமைக்குரிய சபைகளின் அனேக விருதுகளை வென்றவர். உள்நாட்டிலும், பல வெளிநாடுகளிலும் கான மழை பொழிந்து வருபவர்.

மூத்த இசைக் கலைஞர், வயலின் மேதை எம். சந்திரசேகரன், மிருதங்க வித்வான் குருவாயூர் துரை, பரதநாட்டியக் கலைஞர் சைலஜா ராம்ஜி, நாடகக் கலைஞர் கே.எஸ். நாகராஜன் ஆகியோரும் சபையின் இந்தாண்டுக்கான வாணி கலா சுதாகர விருதைப் பெறுகின்றனர்.

விஸ்வ கலா பாரதி

காயத்ரி

பாரத் கலாசாரின் ஞான கலா பாரதி விருது டாக்டர் வைஜயந்திமாலா பாலி மற்றும் பாம்பே சகோதரிகளுக்கு வழங்கப்பட்டது. (சங்கீத கலா சிகாமணி விருதையும், இசைப் பேரறிஞர் விருதையும் பாம்பே சகோதரிகள் இவ்வாண்டு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.)

விஸ்வ கலா பாரதி விருதை மூத்த பரதநாட்டியக் கலைஞர் சுதாராணி ரகுபதி மற்றும் வி.பி. தனஞ்செயன்-சாந்தா தம்பதிகள் பெற்றனர்.

சபையின் இந்தாண்டுக்கான ஆச்சார்ய கலா பாரதி விருதைப் பெற்றவர் மூத்த நாட்டியக் கலைஞர் கே.ஜே. சரசா. நாட்டிய கலாதர் விருதை செüகார் ஜானகி மற்றும் பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோர் பெற்றனர். கலா சேவா பாரதி விருதை ராம்ஜி மற்றும் ரோஜா கண்ணன் ஆகியோர் பெற்றனர். நாடகக் கலாதர் விருதை “வியட்நாம் வீடு’ சுந்தரம் மற்றும் டைப்பிஸ்ட் கோபு ஆகியோர் பெற்றனர்.

யுவகலா பாரதி விருது பெற்ற கலைஞர்கள்

வாய்ப்பாட்டு

எம். பாலமுரளி கிருஷ்ணா

சின்மயா சகோதரிகள்(உமா, ராதிகா)

நடனம்

லாவண்யா அனந்த்

ஆர். வினித்

நித்யா ஜெகன்னாதன்

அன்வேஷா தாஸ்

திவ்ய சேனா

வாத்தியக் கலைஞர்கள்

ஜி. ரமேஷ்(நாகசுரம்)

நாகமணி ராஜு(மாண்டலின்)

செர்த்தளை சிவக்குமார்(வயலின்)

கே.வி. கோபாலகிருஷ்ணன்(மிருதங்கம்)

பெங்களூர் என். அம்ரீத்(கஞ்சிரா)

நாடகக் கலைஞர்: நாகலஷ்மி

தொகுப்பு: ரவிக்குமார்

Posted in Tamil | 1 Comment »

‘Cauvery’ Ramaiya – Ramanujam : Dinamani Kathir Music Season Special

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006

ஆவணம்: அம்மாஞ்சியின் அபிப்பிராயங்கள்

“காவேரி’ – 1940 களில் கும்பகோணத்திலிருந்து வெளிவந்த பத்திரிகை. சூடும் சுவையுமான கட்டுரைகளுக்கு, குறிப்பாக இசைக் கட்டுரைகளுக்குப் புகழ் பெற்றது இது. இப்பத்திரிகையில் அன்று “அம்மாஞ்சியின் அபிப்பிராயங்கள்’ என்ற பொதுத் தலைப்பின் கீழ் இசை, நடனம் தொடர்பான விமர்சனங்கள் அடிக்கடி வந்தன. ராமையா என்ற பெயரில் “காவேரி’யின் ஆசிரியர் ராமானுஜம் எழுதிய கட்டுரைகள் அவை. அவற்றில் ஒன்றை மாதிரிக்கு இங்கே தருகிறோம்.

மற்றொரு நண்பர் பம்பாயிலிருந்து ஆங்கிலத்தில் ஒரு பெரிய கடிதம் எழுதி இருக்கிறார். அதில் முக்கிய கருத்து என்னவென்றால், கர்னாடக சங்கீத வித்வான்கள் பம்பாய்க்குச் சென்று ஏராளமாகப் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏனோதானோவென்று பாடிவிட்டுப் போய்விடுகிறார்களென்றும், டிக்கட்டு கட்டணங்கள் சாமான்ய ஜனங்களுடைய சக்திக்கு அதிகமாய் இருப்பதாகவும், அதையும் கொடுத்து கச்சேரிக்குப் போகும் ரசிகர்களுக்கு ஒரு விதத்திலும் மனசு திருப்தி இல்லாமல் போவதாகவும், ஒவ்வொரு கச்சேரியிலும் அனாவசியமான ஸ்துதிப் பேச்சு ஏற்பட்டு இருப்பதாகவும், இத்தகைய ஒழுக்கங்களால் அந்தப் பட்டணத்தில் நடைபெறும் கச்சேரிகள் சங்கீதக் கொம்மாளங்களாக முடிகின்றனவேயல்லாது கச்சேரிகளாகக் காணப்படவில்லை என்பதே.

நமது பம்பாய் நண்பர் எழுதியதைக் குறித்து அம்மாஞ்சியும் நானும் வருந்துகிறோம். அவருக்கு ஆறுதல் கூறுவதில் நாங்கள் சொல்லுவது ஒரே விஷயம். அதாவது கர்னாடக சங்கீதம் வெகு செழிப்பாக வளரும் சென்னைப் பட்டணத்திலேயே இந்த மாதிரி அசந்தர்ப்பங்கள் குடிகொண்டிருக்கின்றன என்றால், பம்பாயைப் பற்றி அங்கலாய்த்தல் எதற்கு? சென்னையில் சங்கீத அபிமானி ஒருவன் மாதம் ஒன்றில் நான்கு கச்சேரிகள் கேட்க விரும்பினால் அதிகபட்சம் நாற்பது ரூபாய் தனக்கு மட்டும் செலவழிக்க வேண்டும். குடும்ப சகிதமாகச் சென்றால் இந்தத் தொகையைப் பெருக்கிக்கொள்ள வேண்டும். நான்கு மணி நேரம் கச்சேரியில் உட்கார்ந்துவிட்டு வந்தால் வீட்டுக்குள் வந்த பிறகு முழங்கால்கள் இரண்டுக்கும் பத்து அரைத்துப் போட வேண்டும். ஏனென்றால் முன் வரிசை நாற்காலிகளில் முழங்கால்கள் உராய்ந்து, சதை வீங்கியோ அல்லது தோல் வழுவுண்டோ போய் இருக்கும். அடுத்த நாள் உடம்பெங்கும் ரத்தக் கட்டிகள் உண்டாகும். இடுப்புச் சுளுக்குத் தீருவதற்கு ஒரு வாரமாகும். கச்சேரியில் கேட்ட அசட்டுப் பேச்சு காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். இன்னும் வேறு வினை வேண்டுமா?

இதையெல்லாம் உத்தேசித்துதான் நிஜ சங்கீத அபிமானிகள் சபைகளில் நடக்கும் கச்சேரிகளைக் கேட்காமலும், காசைக் கொடுத்துத் தேளைக் கொட்டவிடாமலும், விஷப் பரீட்சை செய்யாமலும், அனாவசியமாகப் பணத்தைச் செலவழிக்காமல், பணத்தையும் அபிமானத்தையும் சேமித்து வைத்து வித்வான்களை வரவழைத்து, பத்துப் பேராகக் கூடி ஏகாந்தமாகவும், ஆத்மார்த்தமாகவும் சங்கீதத்தை அனுபவித்துத் திருப்தி அடைய வேண்டும் என்று அம்மாஞ்சி சொல்லுகிறான். தற்கால விபரீத ஒழுக்கங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளுவதற்கு இந்த மார்க்கம் ஒன்றே காணப்படுகிறது.

சென்ற மாதம் மயிலைச் சங்கீத சபையின் ஆதீனத்தில் ஹீராபாய் பரோடேகர் என்பவர் ஒரு கச்சேரி செய்தார். ரோஷனாராபேகம், பாய் கேசரிபாய் இவ்விருவருடைய சங்கீதத்தையும் கேட்ட பிறகு, ஹீராபாயினுடைய கச்சேரியையும் கேட்டு விடலாமே என்று கருதி அம்மாஞ்சியும் நானும் முண்டியடித்துக் கொண்டு மூலையில் உட்கார்ந்தோம். ஆனால், அன்றைய தினம் எங்களுக்கு ஒன்றும் ரசிக்கவில்லை. கச்சேரியின் துவக்கமே சுமார் ஒரு மணி நேரம் காலதாமதம் ஆயிற்று. ஸ்ரீமதி ஹீராபாய்க்குச் சாரீரம் வெகு இடக்குச் செய்துவிட்டது. ரோஷனாரா பேகம், சேகர்பாய் இவர்களுடைய சங்கீதத்திற்கும், ஹீராபாயினுடைய சங்கீதத்திற்கும் வெகு தூரம் போல் காணப்பட்டது. அன்று ஒரு திருநாளாய் இருக்கும் என்று நாங்கள் எண்ணிச் சென்றோம். ஆனால் வெறு நாளாகவே ஆயிற்று.

ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நாஷனல் பைன் ஆர்ட்ஸ் ஸர்க்கிள் என்ற கூட்டத்தாரின் ஆதீனத்தில் நடைபெற்ற பரதநாட்டியக் கச்சேரிக்கு அம்மாஞ்சி என்னை அழைத்துக் கொண்டு போனான். அதே தினத்தில் மற்றோர் இடத்தில் இரண்டு சிறுமிகள் செய்த பரதநாட்டியக் கச்சேரிக்கு நான் போகலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், அம்மாஞ்சி அதற்கு இணங்கவில்லை. இந்த விஷயத்தில் அம்மாஞ்சியினுடைய அபிப்பிராயம்தான் உங்களுக்குத் தெரியுமே! அவன் சொன்னதாவது: “”பரதநாட்டியம் என்பது வயது முதிர்ந்து புத்தி தெரிந்த பெண்கள் காட்டும் கலை. அந்தக் கலைக்கு வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னவென்றால் பூரணமான வளர்ச்சியுள்ள உருவமும் பகுத்தறிவை நன்றாகக் காட்டக்கூடிய முகக் குறிகளும், இவ்விரு அம்சங்களும் பருவம் முற்றின பெண்களுக்கே உள்ளவையாதலால் சிறுகுழந்தைகளிடம் இந்தக் கலை சோபிக்காது.

பகுத்தறிவு இல்லாத சிறுமிகளிடத்தில் நவரஸபாவம் ஊட்டி வைத்தாலும், ஸதசில் அவர்கள் அந்தப் பாவங்களை வெளியிடும்போது, ஸ்வானுபவம் இல்லாமல் இருக்குமே, ஆதலால் அதை எப்படி அனுபவிப்பது? ந்ருத்தியம், அதாவது அலாரிப்பு என்ற முதல் பாகத்தில் அங்கங்கள் அனைத்தும் ஏகோபித்துச் செய்யும் வேலைகளில் சரீர வளர்ச்சி பூரணமாக இல்லாத குழந்தைகள் ஆடினால், கேவலம் பொம்மலாட்டம் போல் காணப்படுமே அல்லாது, பரதநாட்டியம் ஆகாது. ஆதலால் பதினேழு பதினெட்டு வயதிற்குக் குறைந்த பெண் குழந்தைகளை ஸதசில் பரதநாட்டியம் ஆட வைப்பது, பத்து நாள் குழந்தைக்கு இட்லியும் கொழுக்கட்டையும் ஊட்டி வைப்பதுபோல் ஆகும். சிறு குழந்தைகள் என்ன செய்தாலும் தமாஷாகத்தான் இருக்கும். ஆனால், பருவம் முதிரும் முன் அவர்களை ஸதசில் நிற்கவைத்துக் கரகோஷம் செய்து மாலைகள் போட்டுப் பரிசுகளும் கொடுத்துவிட்டால், குழந்தைகள் உற்சாகப்படலாம். அவர்களுடைய தாய் தந்தையர்களுக்கும் அமோகப் பூரிப்பு உண்டாகலாம். ஆனால், அது கலையாகாது; நாகரிகமும் குன்றித்தான் போகும். பரதநாட்டியத்தில் ஊக்கமுள்ள பெண் குழந்தைகள் எல்லாம் சிறுவயது முதல் சிட்சை பயில வேண்டியதுதான். சிட்சை பயிலுங்கால் அவர்களை உற்சாகப்படுத்த அவரவர்களுடைய வீட்டுக்குள்ளேயே கோஷ்டிகளும் சேரலாம். ஆனால் ஸதசில் வந்து ஆடக்கூடிய தருணமும், பருவமும், பகுத்தறிவும், முதிர்ந்த பிறகுதான் வருமே அல்லாது பசும் பிராயத்தில் வாரா. சிறுமிகளுடைய தாய் தந்தையர்களுக்கு அம்மாஞ்சி சொல்லும் எச்சரிக்கை, ஆக்கப் பொறுத்தபின் ஆறப் பொறுக்க வேண்டும்.”

Posted in Tamil | Leave a Comment »

Sujatha Vijayaraghavan – Amma : Ananthalakshmi : Dinamani Kathir Music Season Special

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006

சுஜாதா விஜயராகவன்: அம்மா!

அந்த நாள் இசையுலகின் தாரகையும் இன்னாள் இசையுலகின் மூத்த கலைஞருமாக விளங்குபவர் அனந்தலட்சுமி சடகோபன். இசையே மூச்சான தந்தை, உயர்ந்த ரசனைகள் கொண்ட கணவர் ஆகியோரைப் பெற்றது அனந்தலட்சுமியின் அதிருஷ்டம். தன் வழியில் இசையோடு கூடுதலாக நாட்டியத்திலும் எழுத்திலும் தடம்பதித்த பெண்ணை மகளாகப் பெற்றது அவரது கூடுதல் அதிருஷ்டம். நடனமணியும், எழுத்தாளருமான சுஜாதா விஜயராகவன் தன் தாயைப் பற்றி இங்கே எழுதுகிறார். ஓர் இசைத் தாரகையின் மகளாக அவரை மிக அருகிருந்து நுட்பமாகப் பார்த்த பாக்கியம் வாய்த்தவர் அவர். தான் கண்ட அம்மாவை, அம்மாவின் ஆளுமையை இங்கே சித்திரமாக்குகிறார் சுஜாதா விஜயராகவன்.

இந்தப் பெட்டிக்குள் உன் அம்மா உட்கார்ந்து பாடுகிறாள். எட்டிப் பார்” என்று பக்கத்து வீடு ரேடியோத் தாத்தா என்னைக் கூப்பிட்டுச் சொன்னது இன்று போல நினைவு இருக்கிறது. எனக்கு வயது ஐந்து இருக்கலாம். ரேடியோவில் பாடுவதற்காக அம்மா முதல் நாள் மதுரையிலிருந்து திருச்சி போனது தெரியும். அந்தப் பெரிய ரேடியோப் பெட்டியைச் சுற்றி சுற்றி வந்தேன். அதற்குள் அம்மா உட்கார முடியுமா என்று ஒரு பக்கம் சந்தேகம். ஆனாலும் உள்ளே இருக்கிறாளோ என்ற ஆவல். அம்மா பாடும் “”பால கனக மய” கேட்கிறது. ரேடியோவின் பின்னால் போய் “”அம்மா” என்று மெல்லக் கூப்பிட்டுப் பார்த்தேன். தாத்தா சிரிக்கிறார். அழலாமா என்று யோசிக்கும் முன் அம்மாவின் குரலில் ஆழ்ந்து போகிறேன்.

நினைவு தெரிந்த நாள் முதல் அம்மாவின் இனிமையான குரலில் ஒலிக்கும் பாட்டும், ராகமும், ஸ்வரமும் என்னைச் சுற்றிச் சுழன்று வரும். இத்தனைக்கும் பாட்டி வீட்டில் வளர்ந்த எனக்கு அம்மாவின் வரவும் சங்கீத ஒலியும் கோடை விடுமுறை போன்ற நேரங்களில் மட்டுமே கிடைக்கும். அம்மா வந்து விட்டால் தினமும் பாவுள் என்று அழைக்கப்படும் சின்னஞ்சிறிய அறையில் அம்மாவின் பாட்டு சாதகம் கேட்கும். என் பாட்டி அம்பும்மா அம்மா எதிரே அமர்ந்து தம்பூரா மீட்டுவார். விரல்கள் ஒரே சீராக மீட்டுவதில் தம்புராவின் ரீங்காரம் அந்த அறையை நிரப்பும். அம்பும்மா முகம் நிச்சலனமாக இருக்கும். அவர் பாட்டைக் கேட்கிறாரா இல்லையா என்று சந்தேகம் தோன்றும். ஆனால் ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் அம்பும்மா விவரமாகக் குறை நிறைகளை எடுத்துச் சொல்லுவார். “”காம்போதியில் நீ இன்னும் கொஞ்சம் பஞ்சமத்தில் நின்று பாடிவிட்டு அதன் பின் மேலே சஞ்சாரம் செய்… இந்தப் பாட்டு காலப்ரமாணம் இன்று சரியாக இருந்தது…” என்பது போல்.

சங்கீத பரிபாஷை இப்படித்தான் எனக்கு அறிமுகம். தினசரி வீட்டில் புழங்கும் பேச்சே சங்கீதம் பற்றித்தான். பாடாதவர்களே வீட்டில் கிடையாது. அம்பும்மா ஹார்மோனியம் வாசித்துக் கொண்டே காம்போதி அட தாள வர்ணம் பாடுவார். என் தம்பி ஸ்ரீநிவாசனும் நானும் அவரிடம் அடிக்கடி விரும்பிக் கேட்டது வேடிக்கையான காப்பி பாட்டு. காபி ராகப் பாட்டு அல்ல.

“”அரைக் காசுக்கு காப்பி அரை லோட்டா
பித்தளை லோட்டா, வெங்கல லோட்டா, வெள்ளி லோட்டா…
அது பங்கு பிரிக்கும் காப்பி
அது பணத்தையழிக்கும் காப்பி
அது பைத்தியமாக்கும் காப்பி…”

என்று அவர் பாடுவதைக் கேட்டுக் குழந்தைகளான நாங்கள் விழுந்து விழுந்து சிரிப்போம். மீண்டும் மீண்டும் “”ஒன்ஸ்மோர்” கேட்டு நச்சரிப்போம்.


அனந்தலட்சுமி} அந்த நாளில்…

என்னுடைய பாட்டியின் தந்தை ராமையா என்று வாஞ்சையுடன் அழைக்கப் பெற்ற ராமஸ்வாமி ஐயங்கார் ரசிக சிரோமணி என்று புகழத் தகுந்தவர். மதுரை புஷ்பவனம், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மதுரை ஸ்ரீரங்கம் ஐயங்கார் ஆகிய வித்வான்களை ஆதரித்த வள்ளல். அவரே அருமையாகப் பாடுவாராம். அவரைத் தானம் பாடச் சொல்லி வித்வான்களே கேட்பார்களாம். பூச்சி ஐயங்கார் பாடிய கமாஸ் ராகத்தில் மயங்கி இரும்புப் பெட்டியையே திறந்து போட்டு “”விரும்பும் வெள்ளிப் பாத்திரங்களை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றாராம்.

“”என் பெண் அம்புவை மூன்று மாதத்தில் “பரிமளரங்கபதே’ ராகம் தாளம் பல்லவி பாட வைத்தால் உம் கைக்குத் தங்கத் தோடா போடுகிறேன்” என்று அவர் சொன்னது பெரிதில்லை. பாட்டு வாத்தியார் அதை ஏற்றுக் கொண்டு பத்து வயதுப் பெண்ணை மூன்றே மாதத்தில் பாட வைத்துத் தோடாவையும் வாங்கிப் போட்டுக் கொண்டார் என்பதுதான் விசேஷம். என் அம்மாவின் சித்தப்பா ஸ்ரீனிவாசனின் வாய் ஓயாமல் ஏதாவது பாடிக் கொண்டே இருக்கும்.

“”தயை புரிய இன்னும் தாமதமா? தயாநிதே!” என்ற வேதநாயகம் பிள்ளையின் மலயமாருத ராகப் பாட்டு அடிக்கடி பாடுவார்.

“”சின்னத் தாத்தா! “தமதமா’ பாடுங்கோ ப்ளீஸ்” என்று அவரையும் விட்டு வைக்க மாட்டோம்.

இதில் பாட்டோ ராகமோ முனகாமல் இருப்பவர் என் அம்மாதான். தம்பூராவுடன் சாதகம் செய்யும் போது மட்டும்தான் பாடுவார். நான் ஏதாவது சினிமாப் பாட்டுப் பாடினால் கூட, “”கள்ளத் தொண்டையில் பாடாதே. அதுவே படிந்து விடும்” என்று அடிக்கடி எச்சரிப்பார். தியாகராஜர் “”úஸôபில்லு ஸப்தஸ்வர” என்ற கிருதியில் கூறியுள்ளது போல் நாபியிலிருந்து மூச்சை இழுத்து முழு வீச்சுடன் வாய்விட்டுப் பாடுவது அவரது பழக்கம். அதனால் அவரது குரலின் இனிமை எள்ளளவும் குறைந்ததில்லை. ஐந்தரைக் கட்டை சுருதியில் பாடிய அவரது குரலில் காத்திரமும் இனிமையும் ஆண்டவன் தந்த வரப்ரசாதமாக அமைந்தன. உச்சஸ்தாயில் பாடும்போதும் வலிமை தேயாத கம்பியாய் இழையும் சாரீரம்.

“”எம்.எஸ்., வசந்தகோகிலம் ஆகிய இருவரோடு உங்களையும் அதே வரிசையில் எங்கள் கம்பெனி வைத்திருக்கிறது” என்று அம்மாவின் இசைத் தட்டுக்களை வெளியிட்ட ஹெச்.எம்.வி. நிறுவனத்தினர் கூறுவார்களாம். 1943-ம் ஆண்டு அம்மா சென்னை மியூசிக் அகாடமி இசைப் போட்டிகளில் பெற்ற தங்க மெடல்களில் தமிழ்ப் பாட்டுக்களுக்காக ஹெச்.எம்.வி. நிறுவனம் வழங்கிய மெடலும் ஒன்று. ஆரபி ராக “”அன்னமே” வர்ணம், “”சங்கரா பரணனை அழைத்தோடி வாடி கல்யாணி தர்பாருக்கு” என்ற நான்கு ராக, ராகம் தாளம் பல்லவி முதலிய அடங்கிய அம்மாவின் கச்சேரி செட்தான் தமிழில் முதன் முதலாக வெளி வந்தது என்று சொல்லுவார்கள். அதன் பின் “”கானமழை பொழிகின்றான்” என்ற அம்புஜம் கிருஷ்ணாவின் ராகமாலிகை பாடல் இசைத் தட்டாக வெளிவந்து அம்மாவுக்குப் பெரும் புகழ் தேடித் தந்தது. அந்தப் பாட்டுக்கு இசை அமைத்தவர் என் அப்பாவின் பெரியம்மா மகன் வித்வான் வி.வி.சடகோபன் என்பது குறிப்பிடத்தக்கது.


அனந்தலட்சுமி}இன்று

அம்மாவுக்குப் பிறந்தகத்தைப் போலவே புக்ககமும் சங்கீதப் பித்துப் பிடித்த குடும்பமாக அமைந்தது ஓர் அதிருஷ்டம்தான். இரண்டு பக்கமும் குடும்பத்தினர் கூடும்போதெல்லாம் பேச்சு முழுக்க முழுக்க சங்கீதம் பற்றித்தான். நல்ல பாட்டை சங்கதி சங்கதியாகச் சிலாகிப்பார்கள். மட்டமான பாட்டை நார் நாராகக் கிழித்து விடுவார்கள். அம்மா பாடும் போது பேப்பரும் பேனாவுமாக அமர்ந்து குறிப்பெடுத்துக் கொண்டு முடிவில் விமரிசனத்தில் இறங்குவார்களாம். வீடு பூராவும் சுப்புடுக்கள்! பாடுபவர்களுக்கு எப்படி உதறல் எடுக்கும்! இந்த எக்ஸ்பர்ட்ஸ் கமிட்டியிடம் பாஸ் மார்க் வாங்குவது சுலபத்தில் முடிகிற காரியமில்லை.

அம்மாவின் குரு சங்கீதபூஷணம் சாத்தூர் ஏ.ஜி.சுப்ரமண்யம் திருச்சியிலிருந்து வந்து பாட்டுக் கற்றுக் கொடுப்பார். இரண்டு அல்லது மூன்று நாட்கள் எங்கள் வீட்டிலேயே தங்குவார். மணிக்கணக்கில் வகுப்பு நடக்கும். காலை ஏழு மணி முதல் இரவு ஒன்பது வரை இசை வெள்ளம்தான். குழந்தைகளான எங்களுக்குத் தடா. கப்சிப் கபர்தார்! வகுப்பு நடக்கும் கூடத்தை மாடியிலிருந்து மட்டும் பார்க்கலாம். எடுத்துக் கட்டிய கூடம் சங்கீதத்தால் நிரம்பிப் பொங்குவதை நிஜமாகவே பார்க்கவும் உணரவும் எங்களுக்கு அந்த வயதிலேயே முடிந்தது. அந்தச் சமயத்தில் எங்கள் சாப்பாடு, கூப்பாடு எல்லாம் ஒட்டினாற்போல் இருந்த பக்கத்து வீட்டில்தான்.

அதேபோல் அம்மா பம்பாயில் இருந்த போது வாமன்ராவ் ஸடோலிகர் என்ற வித்வான் எங்கள் வீட்டுக்கு வந்து அம்மாவுக்கு ஹிந்துஸ்தானி இசை கற்றுத் தந்தார். இன்றைய பிரபல பாடகி சுருதி ஸடோலிகரின் தந்தை. அவர் அம்மாவுக்குக் கற்று தரும் போது ஜன்னல் வழியே பிரவாகமாக வரும் மால்கௌன்ஸ், பூப், பெஹாக் ராக வெள்ளம் எங்களை முழுக்காட்டும். ஒன்றும் புரியாமல் ஒரு பிரமிப்போடு என் தம்பிகளும், நானும் வராந்தாவில் அமர்ந்து கேட்போம். அம்மாவின் கர்நாடக ராக ஆலாபனைகளில் ஹிந்துஸ்தானி பாணி பிருகா சஞ்சாரங்கள் அனாயாசமாக வந்து விழும். கார்வை என்று சொல்லப்படும் ஒரு ஸ்வரத்தில் நீண்ட நேரம் நிற்பதும் அம்மாவுக்குக் கை வந்த கலை. ஒவ்வொரு மூச்சும் சுருதியில் இழைய பளீரென்று அவர் மேல் ஷட்ஜமமோ, காந்தாரமோ, பஞ்சமமோ பிடிக்கும் போது பிசிர் என்பதே இல்லாமல் ஜொலிக்கும்.

“”அடிச்சுப் பாடு” என்று என்னை வாய் விட்டுப் பாடச் சொல்வார். அழுத்தம் கொடுப்பது போலவே, மென்மையும் குழைவும் பாடலின் வார்த்தைக்கு ஏற்பக் குரலில் தொனிக்க வேண்டும் என்பதிலும் அவர் மிக மிகக் கவனம் செலுத்துவார்.

பாபனாசம் சிவனின் “”கா வா வா கந்தா வா வா” என்ற பாடலின் அனுபல்லவியில் “”வள்ளி தெய்வயானை மணவாளா” என்று ஓங்கிய குரலில் பாடிய அடுத்த கணம் “”வா சரவண பவ பரம தயாளா” என்ற வரியில் “”வா” என்ற சொல்லில் கெஞ்சலும், குழைவும் ஒலிக்க வேண்டும் என்று பாடிக் காட்டுவார். அம்மா கற்றுக் கொடுக்கும் போது திரும்பத் திரும்ப ஒவ்வொரு பிடிக்கும் மெருகேற்றுவார். அனுஸ்வரங்கள் இழை பிசகாமல் வரவேண்டும் என்பதில் மிகுந்த ஜாக்கிரதை. அவர் சொல்வது போல் பாடும் வரை விட மாட்டார். அவர் இசை அமைக்கும் பாடல்களில் வார்த்தைகளின் அர்த்தத்துக்கு ஏற்றாற்போல்தான் ஒவ்வொரு பிடியும் அமைப்பார். வெறுமே ராகபாவத்தை மட்டும் மனதில் கொண்டு வார்த்தைகளை ஸ்வரங்களுக்குள் திணிக்க மாட்டவே மாட்டார்.

திருச்சி ரேடியோவில் பணிபுரிந்த கே.ஸி.தியாகராஜன், அவர் இசை அமைத்த பல இசை நாடகங்களில் அம்மாவுக்கு முக்கிய பங்கு அளிப்பார். “”உங்களுக்கு என்றே இந்த ராகங்களை எடுத்து வைத்து விட்டேன்” என்று கல்யாணி, காம்போதி, சாவேரி போன்ற ராகங்களில் பாடல்கள் தருவார். அவரது இசை அமைக்கும் திறன் ஓர் அற்புதம். அதை நேரிடையாகப் பார்த்த அனுபவம்தான் இசை அமைக்கும் போது தனக்கு உதவியது என்று அம்மா சொல்வார். அம்மா பங்கேற்றுப் பாடிய “”வல்லீ பரதம்” நாட்டிய நாடகத்தில் திருச்சி வானொலி நிலைய வராந்தாவில் பிரபல நாட்டியக் கலைஞர் கும்பகோணம் திருமதி பானுமதி கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன் ஆடியது இன்று போல் நினைவு இருக்கிறது. அதன்பின் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதே வர்ணத்தை எனது ப்ராஜெக்ட் சார்ந்த பதிவுக்காகத் திருமதி பானுமதி அவர்கள் தனது பேத்தி மங்கையர்க்கரசி மாறனுக்குப் பயிற்றுவித்து ஆட வைக்க நேர்ந்தது ஓர் ஆச்சரியம்.

அம்மா பாடுவதைக் கேட்டு அதே போல் பாடிக் கொண்டிருந்த என்னை, “”கச்சேரியில் என்னுடன் பாடு” என்று பத்து வயதில் உட்கார வைத்து விட்டார். பயம் தெரியாத பருவம். அதன்பின் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் சத்குரு சங்கீத வித்யாலயத்தில் என்னை சரளி வரிசை ஆதியான முதல் பாடங்கள் கற்றுக் கொள்ளச் செய்தார்.

முறையான பயிற்சி அவசியம் என்பதால் பின்னாளில் அம்மாவுடன் சேர்ந்து திரு.செம்மங்குடி ஸ்ரீனிவாசய்யர், திரு.டி.கே.ஜயராமன், திரு. லால்குடி ஜெயராமன் போன்ற மேதைகளிடம் சில பாடல்களைக் கற்றுக் கொள்ளும் பாக்கியமும் கிடைத்தது. அம்மா நேதுனூரி கிருஷ்ணமூர்த்தி, திருமதி முக்தா ஆகியோரிடமும் சில பாட்டுக்களைக் கற்றுக் கொண்டுள்ளார்.

நல்ல பாடாந்தரத்துடன் கூடிய புதிய பாடல்கள் எங்கு யாரிடம் கேட்டாலும் அதைப் பாடம் செய்ய ஆர்வம் காட்டுவார். பெரியம்மா ருக்மினி சுந்தரராஜன், சித்தி பத்மா பத்மநாபன், அத்தை ஜயலஷ்மி சந்தானம் என்று யாரைச் சந்தித்தாலும் அரட்டையுடன் பரஸ்பரம் பாட்டுக்கள் பரிமாறிக் கொள்ளப்படும். அத்தை வீட்டுக்குச் சென்றிருந்த போது நள்ளிரவில் தில்லானா பாடம் செய்தது வேடிக்கை.

அம்மாவுடன் கச்சேரிகளில் நான் பின்பாட்டு பாடுவது வழக்கமாகி விட்டது. மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம், விஜயவாடா, ஹைதராபாத், திருவனந்தபுரம் போன்ற நகரங்கள் தவிர வீரவநல்லூர் போன்ற கிராமங்களில் திரளாக மக்கள் வந்து மூன்று மணி நேரம் கச்சேரியை ரசித்ததைப் பார்த்திருக்கிறேன். நேயர் விருப்பச் சீட்டுகள் நிறையவே வரும். அவற்றில் தெரிந்த பாடல்களை முடிந்தவரை பாடுவார்.

குழந்தைகளை விட்டு விட்டு அடிக்கடி போக முடியாது என்பதால் வெளியூர்க் கச்சேரிகள் நிறைய ஏற்றுக் கொள்ள இயலாது. அத்துடன் அவருக்குத் துணை யாரேனும் செல்ல வேண்டும். ஒரு முறை மைசூர்க் கச்சேரிக்கு சேலத்திலிருந்து அவரையும், அவரது சித்தி லஷ்மியையும் ரயிலேற்றி அனுப்பினார் அப்பா. பெங்களூர் போய் வேறு ரயில் பிடித்து மைசூர் போக வேண்டும். இவர்கள் சென்ற ரயில் பாதி வழியில் நின்று இவர்கள் வேறு ஏதோ ரயில் பிடித்து எப்படி எல்லாமோ திண்டாடிக் கச்சேரி தொடங்க அரைமணி முன்பு மைசூர் அடைந்தார்கள். இவர்கள் போய்ச் சேரவில்லை என்ற தகவல் அப்பாவுக்கு வந்து அவர் போன் மேல் போன் செய்து தவித்தது இன்னொரு கதை. “”போதும், இந்தச் சங்கீதமே வேண்டாம். இப்படிப் பாஷை தெரியாத ஊரில் வந்து எல்லாம் கஷ்டப்பட்டு என்ன பயன்? இதை இன்றோடு விட்டு விடு” என்று கச்சேரி தொடங்கும் முன் சித்தி அலுத்துக் கொண்டாராம். சாப்பாடோ தூக்கமோ இல்லாமல் நேரே மேடையில் போய் அமர்ந்து பாடிய அந்தக் கச்சேரி அபாரமாக அமைந்ததாம். கச்சேரி முடிவில் சித்தி ஓடோடி வந்து அம்மா கையைப் பற்றிக் கொண்டு, “”நான் சொன்னதை எல்லாம் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். என்னவானாலும் இந்தப் பாட்டை மட்டும் விட்டு விடாதே” என்றாராம்.

பல வித்வான்கள் அம்மாவுக்குப் பக்க வாத்யம் வாசித்திருக்கிறார்கள். டி.ருக்மினி அல்லது கன்யாகுமாரி வயலின் என்றால் எனக்கு உற்சாகம். இரவு செகண்ட் ஷோ தமிழ்ப் படம் அழைத்துப் போக வேண்டும் என்பது ருக்மிணியின் நிபந்தனை. எட்டரை மணிக்குப் பிறகு அம்மா கச்சேரியில் பெரிய ராகம் ஏதாவது பாடத் தொடங்கினால் வில்லைக் கீழே வைத்து விடப் போவதாக ஜாடை காட்டிச் சிரிப்பார். கன்யாகுமாரி பயணங்களில் எல்லோரையும் கலாட்டா பண்ணிக் கொண்டே வருவார்.

பிரபல சாஹித்யகர்த்தா திருமதி அம்புஜம் கிருஷ்ணாவுக்கும் அம்மாவுக்கும் இடையே இருந்த உன்னதமான உறவும் நட்பும் அம்மாவுக்கு ஒரு நங்கூரம். அம்புஜம் மாமி அவர்களது பக்தி, புலமை, மனித நேயம் அவரது ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் வெளிப்படும். அம்மாவிடமும், எங்கள் அனைவரிடமும் அன்பைப் பொழிந்தவர். அவரது பாடல்கள் பலவும் அம்மாவால் பாடப் பட்டுப் பரவலாக வெளிவந்தன. அவரது பாடல்களுக்கு அம்மாவும் இசை அமைத்துக் குறுந்தகடாக வெளிவந்துள்ளன.

இசை கற்றுக் கொடுப்பதில் அம்மாவுக்குத் தணியாத ஆர்வம். ஜுரமாக இருந்தாலும் சிஷ்யைகள் வந்தால் எழுந்து விடுவார். அவரிடம் நெடுநாட்கள் பயின்று கச்சேரிகள் செய்து வரும் தாரா ரங்கராஜன், ஜனனி போன்றவர்களுக்கு அவர் பாடம் சொல்லும் போது மணிக்கணக்கு என்பதெல்லாம் கிடையாது. வித்வான் மதுரை சேஷகோபாலன் சிஷ்யனான என் மாமா மகன் மதுரை சுந்தர், அம்மாவிடமும் நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறான். என் மகள் சுமித்ரா நித்தினுக்கு பாடம் சொல்லும்போது பாட்டி என்ற உறவைத் தாண்டி, அக்கறை கொண்ட ஒரு குருவாகவே செயல்படுவார்.

யாரிடமும் பாட வாய்ப்புக் கேட்கக் கூடாது என்பது என் தந்தையின் கொள்கை. என் அம்மாவின் குரு திரு.சாத்தூர் ஏ.ஜி.சுப்ரமண்யமும் அந்தக் கொள்கையில் உறுதி கொண்டவர். இதனாலும் அடிக்கடி மாற்றலாகும் வருமானவரித் துறையில் அப்பா பணிபுரிந்ததாலும் அம்மா சென்னையில் அடிக்கடி பாட இயலாது போயிற்று.

ஆனாலும் அவரது ரசிகர்கள் அவரை இன்னும் மறக்கவில்லை என்று தெரிந்து கொள்கிறோம். “”நீங்கள் அனந்தலஷ்மி சடகோபன் மகளா?” என்று வியப்பும், மதிப்புமாக யார் யாரோ என்னைக் கேட்கும் போது அம்மாவின் சங்கீதத்தின் உயர்வு எங்களுக்கே உறைக்கிறது. அம்மாவுக்கு இன்று சங்கீதமே மூச்சு, பேச்சு, உணவு, சஞ்சீவி மருந்து. நல்ல பாட்டு எங்கிருந்து வந்தாலும் அதை மனமார ரசித்துப் பாராட்டுவார். அவருக்குப் பிடித்த கர்நாடக இசைக் கலைஞர்கள், ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர்கள் என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு.

அப்பா சங்கீதம் பற்றிப் பேசுவது கவிதையாக மலரும். அம்மாவோ அதில் உள்ள நுணுக்கங்களை எங்களுக்குப் புரிய வைப்பார். “”இந்தச் சங்கதி எப்படிப் பேசறது கவனி” என்பார். டி.வி.ஆக்கிரமிப்பால் எல்லாம் அடிபட்டுப் போன இந்த நாளில் நாள்தோறும் விடாமல் வானொலியில் வரும் இசைக் கச்சேரிகளைக் கேட்கத் தவறவே மாட்டார்.

அதே அம்மாவிடமிருந்து போன். “”உடனே சென்னை வைத்துக் கேள். … அபாரமாகப் பாடிக் கொண்டு இருக்கிறார். கேட்கத் தவறி விடாதே…”

Posted in Tamil | Leave a Comment »

Women Representation Reservation Bill in Parliament & Female MPs

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006

மகளிர்க்கு “இடம்’ கொடுப்போம்

பி. சக்திவேல்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் மகளிர் இட ஒதுக்கீடு விவகாரமும் இடம் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் கூட்டணி அரசு மேற்கொண்டு வருகிறது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்குவது, அவர்களை சமூக, அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாகும்.

நாடு சுதந்திரம் பெற்று இதுவரை 14 பொதுத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. 1952-ம் ஆண்டு நடந்த முதல் பொதுத் தேர்தலிலேயே பெண்கள் வாக்குரிமை பெற்றுத் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர்.

ஆனால் பிரிட்டன், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து மற்ற மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமையானது அந் நாடுகள் சுதந்திரம் பெற்றுப் பல ஆண்டுகள் ஆன பிறகு, பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தான் கொடுக்கப்பட்டது.

உதாரணமாக, பிரிட்டனில் 1918 மற்றும் 1928-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்கள் மூலம் தான் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. அமெரிக்காவில் 1922-ம் ஆண்டும், சுவிட்சர்லாந்தில் 1971-ம் ஆண்டும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. ஒரு சில வளைகுடா நாடுகளில் 21-ம் நூற்றாண்டில்தான் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால் நம் நாட்டில் ஜனவரி 26, 1950-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த அரசியலமைப்புச் சட்டத்திலேயே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு, அரசியல் சமத்துவம் நிலைநாட்டப்பட்டது. இது நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய விஷயமாகும்.

நமது நாடாளுமன்றத்துக்கு இதுவரை நடைபெற்றுள்ள 14 பொதுத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்து வருகிறது. அதிகபட்சமாக 2004-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 355 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டு 45 பேர் (8.3 சதவீதம்) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஜெனீவாவிலிருந்து செயல்படும் நாடாளுமன்றங்களின் ஒருங்கிணைந்த அமைப்பு “”உலக அரசியல் வரைபடத்தில் பெண்கள் – 2005” என்ற தலைப்பில், 186 நாடுகளில் நாடாளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் பற்றி ஆராய்ந்து ஓர் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் அதிக அளவு பிரதிநிதித்துவம் அளித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 104-வது இடத்தில்தான் உள்ளது. பாகிஸ்தான் 21.3 சதவீதம் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் அளித்ததன் மூலமாக 42-வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் ருவாண்டா 48.8 சதவீதமும், சுவீடன் 47.3 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. பெல்ஜியம் போன்ற நாடுகளில் ஏற்கெனவே பெண்களுக்கு 33.3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மகளிர் பிரதிநிதித்துவம் இவ்வாறு இருக்கையில், தமிழக சட்டப்பேரவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பார்த்தோமேயானால் நிலைமை திருப்தி அளிக்கக்கூடியதாக இல்லை. அதிகபட்சமாக 1991-ம் ஆண்டு 31 பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 22 பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தமிழகத்தில் திருத்தி அமைக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்களை (2,32,35,167) விட பெண் வாக்காளர்கள் (2,39,72,873) அதிகம் என்பதை நாம் நினைவுகூர வேண்டும். அதேபோல் பல தேர்தல்களில், குறிப்பாக கிராமப்புறங்களில், பெண்களின் வாக்கு சதவீதம் அதிக அளவில் பதிவானது நிதர்சனமான உண்மையாகும்.

பெண்கள் அதிக அளவில் சட்டப்பேரவைக்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்படாமைக்கு முக்கியக் காரணம் உள்ளது. கட்சியில் பெரும் அளவில் பெண் உறுப்பினர்கள் இருந்தபோதிலும் கட்சியின் பல்வேறு பதவிகளுக்குப் பெண்கள் நியமனம் செய்யப்படாததும், பெரும் அளவில் பெண்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் அளிக்கப்படாததுமே காரணம் ஆகும். ஒரு சில கட்சிகள் ஒரு பெண் வேட்பாளரைக்கூட தேர்தலில் போட்டியிட வைக்காதது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

சென்ற ஆண்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்படாமைக்கு முக்கியக் காரணம்: 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படக் கூடாது. 10-லிருந்து 15 சதவீதம் மட்டும் அளிக்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்பட்ட மற்றும் முஸ்லிம் பெண்களுக்கு இந்த 33 சதவீதத்தில் உள் ஒதுக்கீடு வழங்கலாமா அல்லது வழங்கக் கூடாதா. நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதா அல்லது உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்திய பிறகு இட ஒதுக்கீடு வழங்குவதா?

மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளை மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது என்று கொள்கை அளவில் ஏற்றுக்கொண்ட பிறகு மேற்கூறிய பிரச்சினைகளை விவாதித்து ஒருமனதான கருத்து எட்டப்படலாம்.

மகளிர் இட ஒதுக்கீடு விஷயமானது 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தீர்வு காணப்படாத பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இன்றைய சமுதாயத்தில் பெரும்பான்மையான மக்களின் விருப்பம் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதேயாகும். இதை வலியுறுத்திதான் பல மகளிர் அமைப்புகள் போராடி வருகின்றன. பெண்களை சமூக, அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக மேம்படுத்தவும், அவர்களின் அரசியல் பங்கேற்பு அதிகரிக்கப்படவும் வேண்டுமென்றால் மகளிர் இட ஒதுக்கீடு மிகவும் அவசியமாகிறது. இதன் மூலம் மக்களாட்சித் தத்துவம் முழுமை பெறுவதோடு மட்டுமல்லாமல் ஜனநாயகம் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புகள் உருவாகும்.

மகளிர் பெரும் அளவில் நாடாளுமன்றத்துக்கும் சட்டப்பேரவைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால் இட ஒதுக்கீடு ஒன்றே தீர்வாகும். சர்வதேச அளவில் மகளிருக்குப் பிரதிநிதித்துவம் அளித்த பட்டியலில் 104-வது இடத்தைத்தான் இந்தியா பெற முடிந்தது. இந்த நிலை மாற வேண்டும்.

(கட்டுரையாளர்: துணை பேராசிரியர், அரசியல் அறிவியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்).

Posted in Cong (I), Congress, Female, Manmohan Singh, MP, parliament, Representation, Reservation, Sonia Gandhi, Women | Leave a Comment »

Two rupees as Fees – 60 year Doctor practice & service by VS Jayaraman in Vellore

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006

60 ஆண்டு மருத்துவ சேவையில் “2 ரூபாய் டாக்டர்’

வேலூர், டிச.21: வேலூர் அடுத்த காந்தி நகரில் வசிக்கும் டாக்டர் வி.எஸ். ஜெயராமன் (85) ரூ.2 என்ற குறைந்த கட்டணத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

காந்தி நகரில் 2 ரூபாய் டாக்டர் என்றால் ஜெயராமனை தெரியாதவர்கள் இருக்க முடியாது என்ற அளவுக்கு இவர் பிரபலம்.

1946-ல் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்து தனது சேவையைத் தொடங்கிய இவர் இன்று வரை மாலை நேரங்களில் 50-க்கும் மேற்பட்ட நோயாளிகளை பரிசோதித்து மருந்துகளை வழங்குகிறார்.

சாதாரண ஜுரம், சளி, இருமல் உள்ளிட்ட வியாதிகளுக்கு இவரே மாத்திரை, மருந்துகளை வழங்குகிறார். இதற்கு ரூ.2 கட்டணம் வசூலிக்கும் அவர் பரிசோதனைக்கு பணம் பெறுவதில்லை. மஞ்சள் காமாலை, டைஃபாய்டு உள்ளிட்ட தொடர் சிகிச்சைக்கு மருந்தளித்து ரூ.3 கட்டணம் பெறுகிறார்.

தவிர்க்க இயலாத நிலையில் மட்டுமே மருந்துக் கடைகளில் சற்று கூடுதலான விலையில் கிடைக்கும் மருந்துகளை எழுதித் தருகிறார். அவையும் ரூ.10-க்கு மிகாமல் கிடைத்து விடும். இவர் பரிந்துரைக்கும் மருந்துகளை சில மருந்துக் கடைக்காரர்கள் தனியாக வரவழைத்து விற்பனை செய்வதும் உண்டு.

“மருந்துக் கடைகளில் மிகக் குறைந்த விலையில் பல வீரியமாக செயல்படக்கூடிய மருந்துகள் கிடைக்கின்றன. அதனால் நான் குறிப்பிட்டு எழுதிக் கொடுக்கும் மருந்துகளுக்கு பதில் மாற்று மருந்துகளை தருவதற்கு மருந்துக் கடைக்காரர்கள் தயங்குவதுண்டு’ என்கிறார் ஜெயராமன்.

மருத்துவர்களுக்கு மிகக் குறைந்த விலையில் மருந்துகளை மருந்து நிறுவனங்கள் அளிப்பதுண்டு. அந்த முறையில் அவற்றை வாங்கி நோயாளிகளுக்கு தருவதால் ரூ.2 கட்டணம் எனக்கு கட்டுப்படியாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Posted in +2, 60+, Aashish Vithiyaarthi, Aashish Vithyarthi, Cool, Doctor, E, Good, Health, medical, Medicine, Noble, PCP, people, profile, Quote, Read, service, Tamil, Theomen, Unknown, Vellore, VS Jayaraman | Leave a Comment »

CS Kuppuraj – Mullai Periyar Solutions : Kerala vs Tamil Nadu

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006

முல்லைப் பெரியாறு – இரண்டாம் சமரசத் திட்டம்

சி.எஸ். குப்புராஜ்

முல்லைப் பெரியாறு அணை பற்றிய இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது.

இந்தப் பிரச்சினையை சமரச முயற்சியின் மூலம் தான் முடிவு செய்ய முடியும். நீதிமன்றங்கள் மூலமும் மத்திய அரசு செலுத்தக்கூடிய அதிகாரத்தின் மூலமும் தீர்வு காண முடியாது என்பது தெளிவாகி விட்டது. கேரள மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையே மனக்கசப்பும் பகைமை உணர்ச்சியும்தான் வளருமே தவிர சுமுகத் தீர்வு ஏற்படாது.

இதற்காக சமரச முயற்சியாகச் சென்ற மாதம் எழுதிய கட்டுரையில் ஒரு தீர்வு சொல்லியிருந்தேன்.

அதன்படி தமிழ்நாடு தனது சொந்தச் செலவில் ஒரு புதிய அணையைக் கட்டிக் கொள்ள வேண்டும். இப்போது இருக்கும் அணையை ஒட்டினாற்போல் இப்போதைய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தற்காலத் தொழில் நுட்ப அடிப்படையில் 152 அடி தண்ணீரைத் தாங்கக் கூடிய பலத்துடன் அது வடிவமைக்கப்படுதல் வேண்டும்.

அதற்காகும் செலவை ஈடுகட்டுவதற்காகப் புதிதாக ஒரு டன்னலும் புதிதாக ஒரு மின்நிலையமும் தமிழ்நாடு தனது செலவில் அமைத்துக் கொள்ள வேண்டும். வைகை நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு போதாது என்பதற்காக அதற்கு மேற்புறத்திலேயே ஒரு புதிய அணையைக் கட்டிக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது சமரசத் திட்டம்: “”இப்போது இருக்கும் அணை 136 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கக்கூடிய அளவுக்குப் பலம் பெற்றிருக்கவில்லை. அதனால் 136 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கக் கூடாது” என்று கேரள அரசு சொல்கிறது.

இது உண்மை அல்ல; என்றாலும் அவர்களுடைய காரணமில்லாத பயத்தைப் போக்க, நீர்த் தேக்க அளவு எப்போதும் 136 அடிக்குமேல் போகாமல் பார்த்துக் கொள்ளலாம். அப்படி 136 அடி மட்டும் நீர்த்தேக்கும் பட்சத்தில், தமிழகம் முழுமையான பலன்களைப் பெற வேண்டுமெனில் அதற்கு சில வசதிகள் செய்து கொள்ள வேண்டும்.

இப்போதிருக்கும் டன்னலுக்குச் சற்று தூரத்தில் மற்றொரு டன்னல் அமைக்கப்படுதல் வேண்டும். அதன் அடிமட்டம் +80 அடியாக இருத்தல் வேண்டும். அதன் தண்ணீர் செலுத்தும் அளவு வினாடிக்கு 3000 கன அடியாக இருத்தல் வேண்டும்.

மற்றும் இந்த இரண்டாவது டன்னல் மூலம் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு இரண்டாவது மின்நிலையம் அமைக்கப்படுதல் வேண்டும். இதில் 60 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட ஐந்து ஜெனரேட்டர்கள் (மொத்தம் 300 மெகாவாட்) இருத்தல் வேண்டும்.

இரண்டாவது மின்நிலையத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரைத் தேக்கி வைக்க வைகை அணைக்கு மேற்புறத்தில் 8.0 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஒரு நீர்த்தேக்கம் அமைக்கப்படுதல் வேண்டும்.

இரண்டாவது டன்னலுக்கு 3000 கோடி ரூபாயும், இரண்டாவது மின்நிலையத்திற்கு 12,000 கோடி ரூபாயும், புதிய வைகை அணைக்கு 2000 கோடி ரூபாயும் செலவாகும். ஆக மொத்தம் இந்த மூன்று வேலைகளுக்கும் 17,000 கோடி ரூபாய் செலவாகும். இவ்வளவு செலவும் கேரளத்தின் அச்சத்தைப் போக்குவதற்காகவும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்க அளவை 136 அடிக்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ளவும்தான் தேவைப்படுகிறது.

எனவே இதற்கான செலவில் ஒரு பகுதியையாவது கேரளம் கொடுத்தால் நலமாக இருக்கும். அவர்கள் அச்சமின்றி இருக்கலாம். அவர்களது கற்பனை பயத்திலிருந்து விடுபடலாம். மேலே குறிப்பிட்ட மதிப்பீட்டுத் தொகைகள் மிகவும் தோராயமானவை. விவரமாக ஆராயும்போது கூடலாம் அல்லது குறையலாம். இதனால் தமிழ்நாட்டிற்கு கூடுதல் மின்சாரமும், கூடுதல் பாசன வசதிகளும் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.

இந்த இரண்டு சமரசத் திட்டங்களில் எதையாவது கேரளம் ஏற்கலாம். முதல் திட்டத்தில் அவர்கள் விரும்புவதுபோல் புதிய அணை கட்டிக் கொண்டு நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்துவதற்கு வசதி செய்தல்.

இரண்டாவது திட்டத்திலும் அவர்கள் விரும்புவதுபோல் அணையின் நீர்த் தேக்க அளவை 136 அடி வரை மட்டுமே நிறுத்திக் கொள்வது.

இவற்றிற்காகும் செலவுகளையும் செயல்பாடுகளையும் இப்போதிருக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே செய்தல் வேண்டும். திட்டப் பணிக்கான வசதிகளை கேரளம் செய்து தருதல் வேண்டும். அதற்காகத் துணை ஒப்பந்தங்கள் செய்து கொள்ளலாம்.

இரண்டு சமரசத் திட்டங்களுமே கேரளத்தின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யவே வகுக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாட்டிற்கு ஏராளமான பொருள்செலவு ஏற்படும்.

இரண்டு திட்டங்களையுமே கேரளம் ஏற்க மறுத்தால், அது வீண்பிடிவாதமே தவிர வேறல்ல. அப்போது நாம் வேறு வழிகளை நாட வேண்டி வரும்.

Posted in Agriculture, CS Kuppuraj, Dam, Developments, Dinamani, Electricity, Future, History, hydro-electric, India, Interlink, Irrigation, Kerala, Megawatt, Mullai Periyar, Periyaar River, Periyaaru, Periyar, Power Generation, Power plant, solutions, Tamil Nadu, Water | Leave a Comment »

Anton Balasingham’s Demise – LTTE Aftermath & Eezham’s Future

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006

பாலசிங்கம் மறைவு ஏற்படுத்தும் கவலைகள்

பா. கிருஷ்ணன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர், சித்தாந்தவாதி என்று போற்றப்பட்ட ஆன்டன் பாலசிங்கம் மறைவு இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் சமாதான முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்துமோ என்ற கவலை தோன்றியுள்ளது.

ஆன்டன் ஸ்தானிஸ்லாஸ் பாலசிங்கம் தொடக்கத்தில் “வீரகேசரி’ நாளேட்டில் பணிபுரிந்தவர். அதன் பின் பிரிட்டிஷ் தூதரகத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்திருக்கிறார்.

அவரது பின்னணியே புதுமையானது. பாலசிங்கத்தின் தந்தை இலங்கை கிழக்குப் பகுதியையும் தாய் வடக்குப் பகுதியையும் சேர்ந்தவர்கள். தந்தை ஹிந்து. தாய் கிறிஸ்தவர். சிங்கள இனவாதத்தை எதிர்க்கும் புலிகள் அமைப்பைச் சேர்ந்த அவருக்கு புத்தரின் தத்துவங்கள் மீதும் ஈடுபாடு உண்டு. பாலசிங்கத்தின் தாத்தா கோயில் குருக்களாக இருந்தவர் என்பது இன்னொரு சுவையான தகவல்.

வீரகேசரியில் பணியாற்றிய பாலசிங்கம் சிறிது காலத்தில் அந்தப் பத்திரிகையின் வெளிநாட்டுச் செய்திப் பகுதிகளின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இது உலகளாவிய தகவல்கள் மீது அவருக்கு ஏற்கெனவே இருந்த தாகத்தை அதிகரிக்கச் செய்தது.

அதன் பிறகு, கொழும்பில் பிரிட்டிஷ் தூதரகத்தில் மொழி பெயர்ப்பாளராகப் பணியில் சேர்ந்தார். அப்போது, யாழ்ப்பாணத் தமிழ்ப் பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார். ஆனால், மனைவி நோய் வாய்ப்பட்டதால், அவருக்குச் சிகிச்சை அளிப்பதற்காக பிரிட்டன் செல்ல நேர்ந்தது. முதல் மனைவி சில ஆண்டுகளில் நோய் முற்றி பிரிட்டனில் இறந்தார். அங்கே ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வந்த அடேல் ஆனி என்ற ஆஸ்திரேலிய பெண்ணின் நட்பு, காதலாக மாறி, பின்னர் திருமணமாக மலர்ந்தது.

பாலசிங்கத்தைப் போலவே அடேலும் அறிவுஜீவி. இருவரும் யாழ்ப்பாணம் திரும்பியபோது, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காகப் பாடுபட்டனர். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தபோதெல்லாம் முக்கியப் பங்கை ஆற்றி வந்தவர் பாலசிங்கம்.

இலங்கை இனப் பிரச்சினையில் போராளிகளுக்கு முதல் முறையாக அங்கீகாரம் கிடைத்தது 1985-ல் நடந்த திம்பு பேச்சுவார்த்தையில்தான். அதில் ஈழப் போராளிக் குழுக்கள் முன்வைத்த கோரிக்கைகள் தனித் தமிழீழக் கோரிக்கைக்கு மாற்றாக அமைந்தன.

1) தமிழரைத் தேசிய இனமாக அங்கீகரித்தல்;2) இலங்கையில் தமிழர்களுக்குத் தனிநிலப் பகுதியை அங்கீகரித்தல்;

3) தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்தல்;

4) மலையகத் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தமிழர்களுக்கும் குடியுரிமை, அடிப்படை உரிமைகள் வழங்குதல்.

சர்வதேச அரசியல் ஆர்வலர்கள் பலர் வரவேற்ற இக்கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாததால், பேச்சுவார்த்தை முறிந்தது.

இதன் பிறகு, பாலசிங்கம் இந்தியாவிலிருந்து வெளியேறும்படி அரசு உத்தரவிட்டது. அவருடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத் (டெலோ) தலைவர் சத்தியேந்திரா, ஈழத் தமிழர் பாதுகாப்புக் கழக அமைப்பாளர் எஸ்.சி. சந்திரஹாசன் ஆகியோரையும் வெளியேற இந்திய அரசு உத்தரவிட்டது.

ஆனால், இதற்கு தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தன. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி தலைமையில் தமிழீழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) நடத்திய போராட்டத்தை அடுத்து, மத்திய அரசு மூன்று தலைவர்களுக்கு எதிரான நாடு கடத்தல் உத்தரவை விலக்கிக் கொண்டது.

திம்பு பேச்சுவார்த்தை தொடங்கி, இந்திய இலங்கை உடன்பாடு, இலங்கை அதிபர் பிரேமதாசாவுடன் பேச்சுவார்த்தை, நார்வே முயற்சியில் அமைந்த பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் பாலசிங்கத்தின் பங்களிப்பு மிகப் பெரியது. இலங்கை அதிபராக இருந்த பிரேமதாசாவுடன், புலிகள் 1990-ல் நடத்திய பேச்சுவார்த்தைக்கும் முக்கியக் காரணம் பாலசிங்கம்தான். அவருடன் பிரிட்டிஷ் தூதரகத்தில் பணியாற்றியவர்தான் பிரேமதாசா. தனது பழைய நட்பைப் பேச்சுவார்த்தைக்காகப் பயன்படுத்தினார் பாலசிங்கம்.

1980-ம் ஆண்டுகளில் சென்னையில் விடுதலைப் புலிகளின் வயர்லெஸ் சாதனங்களைத் தமிழக போலீஸôர் கைப்பற்றியபோது, இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது குவிந்த அனைத்து மாநிலப் பத்திரிகையாளர்களிடம் பிரபாகரன் பேசியதை மொழிபெயர்த்தவர் பாலசிங்கம்.

அதன் பிறகு, 1987-ம் ஆண்டு இந்திய -இலங்கை உடன்பாடு ஏற்பட்ட வரையில் சென்னை இந்திரா நகரில் செயல்பட்டு வந்த புலிகளின் அலுவலகத்தில் தினந்தோறும் நிருபர்களிடம் பேசிக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வார் பாலசிங்கம்.

ஒரு முறை பிரான்ஸ் நாட்டுப் பத்திரிகையாளர்களைக் கடல் வழியாகத் தனது இயக்கத்தினர் மூலம் அழைத்துச் சென்று இலங்கைத் தமிழர் பகுதிகளில் நடைபெறும் தாக்குதல்களை நேரடியாகப் பார்த்து, செய்தி சேகரிக்கச் செய்தவர் பாலசிங்கம். அந்த பிரான்ஸ் நிருபர்கள் சென்னை திரும்பியதும் சென்னையில் சில பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளிக்கவும் ஏற்பாடு செய்தார் அவர்.

1987-ம் ஆண்டு ராஜீவ் காந்திக்கும் ஜெயவர்த்தனவுக்கும் இடையில் இந்திய -இலங்கை உடன்பாடு உருவாகும் தருணத்தில், மிகக் கவனமாக நிருபர்களிடம் பேசியவர் பாலசிங்கம்.

“”பத்திரிகையாளராக இருந்திருக்கிறேன். பத்திரிகைகளின் போக்கு, அணுகுமுறை அவர்களது செய்தித் தேவை குறித்து நன்றாக அறிவேன். அதே சமயம் தமிழ் மக்களின் துயரத்தை எப்படி பத்திரிகைகளுக்குத் தெரிவிக்கவேண்டும் என்பதும் தெரியும்” என்று ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.

1987-ம் ஆண்டு இலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியாகத் தலையிடும் சூழல் கனிந்து வரும் சமயத்தில், இந்திய அரசுடன் தொடர்பு கொண்டவர்களில் பாலசிங்கம் குறிப்பிடத் தக்கவர். ராஜீவ் காந்தியை பிரபாகரன் தில்லியில் சந்தித்தபோது இருவருக்கும் இடையே பாலமாக இருந்தவர் பாலசிங்கம். அந்தத் தருணத்தில், சென்னையில் இருந்தபோது, பாலசிங்கத்திடம் ஒரு முறை நிருபர்கள் “”தமிழீழத்தைப் பெற்றுத் தரவேண்டும் என்று வலியுறுத்துவீர்களா?” என்று கேட்டனர்.

“”ஈழத் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் எந்தத் தீர்வுமே ஏற்கத் தக்கது. இதுதான் வேண்டும் என்று இப்போது வலியுறுத்த மாட்டோம்” என்றார் அவர்.

2002-ம் ஆண்டில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்டு, இரு தரப்பினருக்கும் நேரடிப் பேச்சுவார்த்தை தொடங்கத் திட்டமிடப்பட்டது.

பாலசிங்கத்தின் உடல்நிலையைக் கருதி, இந்தியாவில் தங்கி அவர் சிகிச்சை பெற்றபடி பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்ற யோசனை தெரிவிக்கப்பட்டது.

“”பாலசிங்கத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யலாம்” என்று அப்போதைய பிரதமர் வாஜபேயி கருத்துத் தெரிவித்தார்.

ஆனால், இந்த யோசனை கடைசியில் ஏற்கப்படவில்லை. இதையடுத்து, தாய்லாந்து, நார்வே, ஜப்பான் ஆகிய நாடுகளில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

அந்தப் பேச்சுவார்த்தைகளில் ஒரு முறை “”தனித் தமிழீழக் கோரிக்கையைக் கைவிடுகிறோம்” என்று முதன் முறையாக அறிவித்தார் பாலசிங்கம். இதையே பின்னர் நவம்பரில் மாவீரர் தினத்தில் வே. பிரபாகரன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

போராளிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்திரிக்கப்பட்டு வரும் விடுதலைப் புலிகளுக்கு “பாலசிங்கத்தின் மறைவினால், நல்ல வழிகாட்டி, சித்தாந்தவாதியை இழந்துவிட்டோம்’ என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

புலிகளை அரசியல் தீர்வுக்கு இட்டுச் செல்லவும், அரசியல் ஆலோசனை கூறி, வழிப்படுத்தவும் மூத்த தலைவர் இப்போது இல்லாததால், புலிகள் எத்தகைய செயலில் ஈடுபடுவார்களோ என்ற கவலை சிலருக்கு ஏற்படும். அரசியல் ராஜதந்திரத்தைக் கையாள புலிகள் தரப்பில் முக்கியமானவர் இல்லையே என்ற கவலையை இப்போதைய வெற்றிடம் இலங்கை அரசுக்கும் ஏற்படுத்தும்.

Posted in Anton Balasingham, Colombo, Eelam, Eezham, France, LTTE, Prabakharan, Prabhakaran, Premadasa, Sri lanka, TELO, TESO, Veerakesari, Viduthalai Puli, Vituthalai Pulikal | Leave a Comment »

Rajni acts in Kaavalar – Ungal Sevakar by the Tamil Nadu Police department

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006

ரஜினி-இன்காவலர் உங்கள் சேவகர்

சென்னை மாநகரக் காவல் துறையின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு ரஜினி, கமல், நயனதாரா, அசின் உள்ளிட்ட பிரபலங்களுடன் மற்றும் முதல்வர் கருணாநிதி, மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண், இணை ஆணையர் ரவி உள்ளிட்டோர் இணைந்து நடிப்பில் காவலர் உங்கள் சேவகர் என்ற படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகர காவல்துறையின் வயது 150. ஜனவரி 4ம் தேதி முதல் 3 நாட்களுக்கு இதையொட்டி சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழா கொண்டாட்டப் பணிகளைக் கவனிப்பதற்காக 19 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையிலும், சென்னை மாநகர காவல்துறையின் சிறப்புகளை விளக்கும் வகையிலும் காவலர் உங்கள் சேவகர் என்ற டாகுமென்டரி தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதில்

  • ரஜினிகாந்த்,
  • கமல்ஹாசன்,
  • விக்ரம்,
  • சூர்யா,
  • நயனதாரா,
  • அசின் உள்ளிட்டோர் நடிக்கினறனர். முக்கிய வேடத்தில் வழக்கமான காமெடி வெடிகளுடன்
  • வடிவேலுவும் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் ஷýட்டிங் அபிராமி தியேட்டரில் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் ஷýட்டிங்கில் வட சென்னை இணை ஆணையர் ரவி, துப்பாக்கி முனையில் ரவுடிகளை சுட்டுப் பிடிப்பது போன்ற காட்சியை படமாக்கினர். இதில் இணை ஆணையர் ரவி படு தத்ரூபமாக நடித்தார்.

அதேபோல கிழக்குக் கடற்கரைச் சாலையில், கொள்ளைக் கும்பலை துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடிப்பது போன்ற காட்சியில் மத்திய சென்னை இணை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நடித்தார்.

இந்தக் காட்சிகளை பொதுமக்களும் திரளாக கூடி வேடிக்கை பார்த்தனர். போலீஸ் என்கவுண்டர்கள் குறித்து செய்தித்தாளில் படித்த அனுபவத்தை மனதில் ஓட்டியவாறு இந்த சினிமா என்கவுண்டரைப் பார்த்து மெய் சிலிர்த்தனர்.

அதேபோல ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளான பெண்ணிடம் நடத்தப்படும் விசாரணை தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.

தரமணி டைடல் பூங்கா பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு காட்சியில், ஷேர் ஆட்டோவில் கடத்திச் செல்லப்படும் பெண்ணை மீட்பது போன்ற காட்சி ஷýட் செய்யப்பட்டது. இந்தக் காட்சியில் ஆணையர் லத்திகா சரண், போலீஸாருக்கு வயர்லஸ் மூலம் உத்தரவிடுவது போல நடித்தார்.

மற்றொரு காட்சியில், குடிபோதையில் வானம் ஓட்டும் நபரை போலீஸார் பிடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதில் போக்குவரத்து இணை ஆணையர் சுனில் குமார் கலந்து கொண்டு நடித்தார்.

வடிவேலுவின் பகுதிதான் படு சுவாரஸ்யமானது. செல்போன்களில் பெண்களை ஆபாசமாக படம் பிடிப்பது, ஆபாசப் படங்களை எஸ்.எம்.எஸ். மூலம் ரவுண்டு விடுவது ஆகியவை தவறு என்று விளக்கும் காட்சியில் வடிவேலு நடிக்கிறாராம். அதை தனக்கே உரிய பாணியில் நகைச்சுவை ததும்ப நடித்துக் கொடுக்கவுள்ளாராம் வடிவேலு.

உச்சகட்டமாக முதல்வர் கருணாநிதியும் ஒரு காட்சியில் நடிக்கவுள்ளாராம். இப்படி திரையுலகின் ஒத்துழைப்போடு காவல்துறை அதிகாரிகள் மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோரது நடிப்பில் உருவாகும் இந்த டாகுமென்டரி படத்தை ஜனவரி 4ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவுள்ளனராம்.

சென்னை மாநகர காவல்துறையின் பெருமைகள், சிறப்புகளை விளக்கும் வகையில் இருக்கும் படம் என்பதால் இப்படத்தைப் பார்க்க சென்னை போலீஸாரே படு ஆவலாக இருக்கிறார்கள்.

சினிமாக்காரர்களின் ஷýட்டிங்குகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் போலீஸாரே ஷýட்டிங்கில் கலந்து கொண்டு நடித்ததைப் பார்த்து பொதுமக்கள் ஆச்சரியப்பட்டுப் போயினர்.

இந்தப் படத்தில்

  • கவர்ச்சி நடிகை ரிஷா, ஷேர் ஆட்டோவில் கடத்தப்படும் சாப்ட்வேர் என்ஜீனியராக நடித்தார். இவர்கள் தவிர
  • கே.ஆர்.விஜயாவின் தங்கச்சியான கே.ஆர்.வத்சலா,
  • அப்சரா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
  • வைரமுத்து டைட்டில் பாடலை எழுதியுள்ளார்.
  • மணிசர்மா இசையமைத்துள்ளார்.

Posted in Amnsetry International, Asin, Correctional, Docu Drama, Documentary, Drunken driving, DUI, ECR, Encounter, Human Rights, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kizhakku Kadarkarai Saalai, Lathika Charan, Latika Saran, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Mani Sharma, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, Nayan Dhara, Nayanthara, Order, Police, Rajini, Rajiniganth, Rajinikanth, Sandeep Roy Rathore, Tamil Cinema, Tamil Films, Tamil Movies, Tamil Nadu, Tharamani, TIDEL Park, Variramuthu, Vikram | Leave a Comment »

70 Hindu Temples to be destroyed in Malaysia – National Heritage Act

Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006

மலேசியாவில் 70 இந்து கோவில்களை இடித்து அகற்ற உத்தரவு

கோலாலம்பூர், டிச. 19-

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலே சியா 1957-ம் ஆண்டு ஆங்கி லேயரிடம் இருந்து விடு தலை பெற்றது. 1965-ம் ஆண்டு சில பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு முழுமையாக மலேசியா உருவானது. 3 லட்சத்து 30 ஆயிரத்து 434 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த நாட்டில் 2 கோடியே 75 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.

இதில் 8 சதவீதம் பேர் இந்தியர் களாகும். குறிப்பாக தென் இந்தியாவை சேர்ந்த வர்கள் அதிகமாக வசிக்கி றார்கள். இவர்கள் அங்குள்ள தங்கள் வசிக்கும் பகுதிகளில் இந்து கோவில்களை கட்டி வழிபாடு செய்து வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான கோவில் கள் சாலை ஓரங்களில் உள்ளன. பூங்காக்களில் உள்ள மரங்களை இணைத்தும் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கோவில்கள் அனுமதி பெறா மல் கட்டப்பட்டவை ஆகும்.

தற்போது சாலை மேம்பாடு பணி நடந்து வருவதால், விதி முறையை மீறி கட்டப்பட்ட இந்து கோவில்களை இடித்து அகற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். முதல்கட்டமாக 70 இந்து கோவில் கள் இடிக்கப்படும் என்று தெரிகிறது.

கோவில்களை இடிக்க கூடாது என்று மலேசியா வாழ்இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கடந்த சில தினங்களாக போராட்டம் நடந்தது. இதற்கிடையே உதய குமார் என்பவர் இந்து கோவில்களை இடிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோலாலம்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கில் வரும் தீர்ப்பை பொறுத்தே இந்து கோவில்கள் இடிக்கப்படுமா இல்லையா என்பது தெரிய வரும்.

Posted in Asean, Construction, Hindu, Hinduism, Illegal, Immigrants, India, Malaysia, South east Asia, Tamil, Temples, Worship | 4 Comments »