Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Fulltime’ Category

The Future of Public Sector Undertaking – Govt, Private Organizations & Management

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

பொதுத்துறை நிறுவனங்களின் எதிர்காலம்

எஸ். கோபாலகிருஷ்ணன்
(முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).

உணர்வுபூர்வமாக பொதுத்துறை நிறுவனங்களை உயர்த்திப் பிடித்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இப்போது, நிறுவனங்களின் செயல்பாடு, திறன், லாப – நஷ்டக் கணக்கு ஆகிய அம்சங்களைப் பொருத்துதான், அவற்றின் பயன்பாடு மதிப்பிடப்படுகிறது.

1931-ம் ஆண்டில் – இந்திய தேசிய காங்கிரஸின் கராச்சி மாநாடு ஒரு முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றியது. “”பொதுத்துறை மூலமே, இந்தியா தொழில் வளம் பெற்றிட இயலும்” என்பதே அது.

இதற்கேற்ப, நாடு சுதந்திரம் அடைந்தபோது, தொழில் வளர்ச்சியிலும் அறிவியல், தொழில் நுட்பத்திலும் மிகவும் பின்தங்கியிருந்தது. தொழில், விவசாயம், போக்குவரத்து ஆகியவற்றுக்குத் தேவையான சாதனங்களையும், தளவாடங்களையும் தயாரிக்க நம் நாட்டில் தொழிற்சாலைகள் அப்போது இல்லை. தனியாரிடம் அத்தகைய தொழில் கூடங்களை அமைப்பதற்கான முதலீடோ, அனுபவமோ இல்லை. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, அரசுத்துறை நிறுவனங்களை உருவாக்குவதில் முனைப்பு காட்டினார்.

கனரக இயந்திரங்கள் முதல் பொதுமக்கள் பயன்படுத்தும் சாதாரண பொருள்கள்வரை, அனைத்தும் தட்டுப்பாடில்லாமல் நியாயமான விலைக்குக் கிடைக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.

1951-ல் 5 நிறுவனங்களே பொதுத்துறையில் இருந்தன. முதலீடு ரூ. 29 கோடி. 1961-ல் 48 நிறுவனங்களாகவும், 1971-ல் 100 ஆகவும் 1983-ல் 209 ஆகவும் இவை வளர்ந்தன. இப்போது கிட்டத்தட்ட 250 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மொத்த முதலீடு சுமார் ரூ. 3 லட்சம் கோடி.

இந்நிறுவனங்களின் மூலம் தொழில் வளர்ச்சியும் கணிசமான அளவு வேலைவாய்ப்புகளும் பெருகின. 1970-களில் 27 சதவிகித வேலைவாய்ப்புகளும் 1980களில் 37 சதவிகித மேலைவாய்ப்புகளும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் கிடைத்தன. தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடிகள், ஊனமுற்றோர், முன்னாள் ராணுவ வீரர்கள் போன்றோருக்கும் வேலைவாய்ப்பு அளித்து சமூக நீதி காப்பதிலும் பொதுத்துறை நிறுவனங்கள் முன்னிலை வகித்தன.

இறக்குமதிப் பொருள்களை உள்நாட்டில் உற்பத்தி செய்து அன்னியச் செலாவணியை மிச்சப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த பல ஆண்டுகளாக கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், சுமார் 250 நிறுவனங்களில் 125 நிறுவனங்கள் மட்டுமே லாபம் ஈட்டுகின்றன. மற்றவை நஷ்டத்தில் இயங்குகின்றன. இத்துறையில் அரசு செய்துள்ள மிகப்பெரிய முதலீட்டுத் தொகையிலிருந்து வெறும் 3.5 சதவிகித லாபம்தான் கிடைக்கிறது.

திறமையின்மை, மெத்தனப்போக்கு, ஊழல், ஊதாரித்தனம், தேவையற்ற தாமதம் ஆகியவை பொதுத்துறை நிறுவனங்களின் அடையாளங்களாக அமைந்துவிட்டன. பல நிறுவனங்கள் 75 சதவிகித உற்பத்தித் திறனுடன்தான் இயங்குகின்றன.

இவை போதாதென்று, அரசு அதிகாரிகளின் கெடுபிடி, அரசியல்வாதிகளின் தேவையற்ற குறுக்கீடுகள், உள்ளூர்ப் புள்ளிகளின் தலையீடு ஆகியவையும் பொதுத்துறை நிறுவனங்களின் செம்மையான செயல்பாட்டுக்குக் குந்தகமாக உள்ளன.

இவற்றையெல்லாம்மீறி மிகச்சில நிறுவனங்கள் திறம்படச் செயல்பட்டு “நவரத்தினங்களாக’ மிளிருகின்றன. ஆனால் அவை அனேகமாக ஏகபோக நிறுவனங்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

“”பவர் கிரிட் கார்ப்பொரேஷன் ஆப் இந்தியா” (டர்ஜ்ங்ழ் எழ்ண்க் இர்ழ்ல்ர்ழ்ஹற்ண்ர்ய் ர்ச் ஐய்க்ண்ஹ) என்னும் நிறுவனத்தின் 14 சதவிகித பங்குகள், சில தினங்களுக்கு முன், பொதுச் சந்தையில் விற்பனைக்காக வெளியிடப்பட்டன. இந்தப் பங்குகளை வாங்குவதற்கு, பங்குகளின் நிர்ணயிக்கப்பட்ட விலையைப் போல் 64 மடங்கு அதிகமாக தொகை வந்து குவிந்தது.

இதில் சரித்திரம் படைத்த விஷயம், இதுவரை வேறு எந்த இந்திய பங்குகளின் விற்பனைக்கும் இல்லாத அளவு வெளிநாடுகளிலிருந்து வந்து குவிந்த தொகைதான்! அதாவது 30 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் நூறு கோடி) இத்தனைக்கும் இந்த நிறுவனம் ஒரு முழு “”நவரத்தினம்” அல்ல; “”மினி நவரத்தினம்”தான்.

இந்நிறுவனத்தின் 14 சதவிகித பங்குகளின் விற்பனை மூலம் மத்திய அரசு கஜானாவுக்கு ரூ. 994.81 கோடி கிடைத்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் உள்ளார்ந்த வலுவைக் காட்டுகிறது.

பொதுத்துறை நிறுவனங்கள் திறம்படச் செயல்பட வேண்டுமெனில், சில வணிகரீதியிலான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாறிவரும் சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்திப் பொருள்களை மாற்றி அமைத்தல்; உற்பத்தி முறைகளை நவீனமயமாக்குதல்; தாமதங்களைத் தவிர்த்து பணவிரயத்தைக் குறைத்தல்; தேவைக்கு அதிகமான மூலப்பொருள்களை இருப்பில் வைத்து கோடிக்கணக்கான பணத்தை முடக்குவதைத் தவிர்த்தல்; தொழில்நுட்ப மேம்பாடுகளை அறிமுகம் செய்தல்; ஊழியர்களின் ஊதியத்தை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்துகையில், கூடவே உற்பத்தித் திறனையும் உயர்த்துவதற்கு வழிவகை காணுதல்; ஊழல் மற்றும் நிதி விரயத்தைக் களைவதற்குக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட செயல்திட்டங்களைப் போர்க்கால அடிப்படையில் கொண்டுவர வேண்டும்.

நிறுவனங்களின் தலைவர்களாக, சாதனை வேட்கை கொண்ட துடிப்பான நிர்வாகிகளையே நியமிக்க வேண்டும். அவர்கள் எம்.பி.ஏ. போன்ற மேலாண்மை படிப்பும் பயிற்சியும் கொண்டவர்களாக இருப்பது பொருத்தமாக இருக்கும்.

பல பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் பணிஓய்வு பெற்ற பின், உடனுக்குடன் புதிய தலைவர்களை நியமிக்காமல் அரசு காலம் தாழ்த்தும் நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

சிறப்பான சாதனைகளுக்கு பதவிஉயர்வு போன்ற ஊக்குவிப்பு; தோல்விக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பு ஏற்பு ( அஸ்ரீஸ்ரீர்ன்ய்ற்ஹக்ஷண்ப்ண்ற்ஹ்) என்ற நியதி, மூத்த நிர்வாகிகளுக்கும், தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களுக்கும் செயல்படுத்தப்பட வேண்டும். தற்போது தனியார் துறையில் மூத்த நிர்வாகிகளின் சம்பளங்கள் உச்சத்தில் உள்ளன. அந்த அளவுக்கு அரசுத்துறையில் கொடுக்க முடியாது எனினும், தகுதிமிக்க நிர்வாகிகளுக்கு ஊதிய உயர்வு கொடுப்பதில் சற்று தாராளம் காட்டலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அரசின் தேவையற்ற குறுக்கீடுகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். ஆரோக்கியமற்ற குறுக்கீடுகளுக்கு அண்மைக்கால உதாரணம் – பி.எஸ்.என்.எல். நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டலாம். அதற்கு முன்பு ஓ.என்.ஜி.சி.யில் நிகழ்ந்ததையும் குறிப்பிடலாம்.

என்ன செய்தாலும், சில பொதுத்துறை நிறுவனங்களைச் சீரமைக்க இயலாது. நஷ்டத்தையும் தவிர்க்க முடியாது. அவற்றால் எந்த பொதுநன்மையும் ஏற்படாது என்ற நிலையிருந்தால், அவற்றை மூடுவதில் தவறில்லை. அதேசமயம் லாபத்தில் இயங்கும் சிறப்பான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் முயற்சி கைவிடப்பட வேண்டும்.

கடந்த ஜூலை மாதம், பிரதமர் மன்மோகன் சிங், ஒரு பொது நிகழ்ச்சியில் பேசுகையில், பொதுத்துறை நிறுவனங்களுக்கு சுய அதிகாரம் வழங்கி, அவை சிறப்பாகச் செயல்பட வழி செய்ய வேண்டும் என்று யோசனை தெரிவித்தார். பிரதமரின் இந்த யோசனை பரவலாக வரவேற்கப்பட்டது. ஆனால், பிரதமர் அவ்விதம் கூறி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிய நிலையில், இந்த இலக்கில், மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையை நாடு வெகு ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

Posted in acquisition, Assets, Balance, Commerce, Compensation, Consultant, Contractors, Corporations, Corruption, Economy, employees, Employment, Fulltime, GDP, Govt, Growth, Hire, Industry, Investment, Jobs, kickbacks, Lethargy, Loss, Machinery, Management, markets, ONGC, Organizations, Permanent, Power, Private, Productivity, Profits, PSU, PSUs, Public, Reservation, rights, Science, Shares, Society, Stocks, Tamil, Tech, Technology, Undertaking | Leave a Comment »