Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜனவரி, 2009

Nadars: Era Manigandan

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2009

07.01.09    தொடர்கள்
ந்தச் சமுதாய மக்களாக இருந்தாலும் உறவின்முறையோடு `அண்ணாச்சி’ என்று அன்போடு அழைக்கும் நாடார் சமூகத்தார், தாங்கள் இடுப்புக்குமேல் ஆடை உடுத்தக் கூடாது என்று பிரகடனப் படுத்தியதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தாங்கள் சத்திரிய குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கப் புறப்பட்டுவிட்டார்கள்.இதனால் பல்வேறு இடங்களில் புதிதாக கலகம் மூண்டது. நாடார்கள் ஒன்று சேர்ந்து கலகத்தில் ஈடுபட்டனர். சுமார் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தப் போராட்டம் நடந்தது. ஆட்சியாளர்களின் அடக்குமுறையை எதிர்த்து ஆண்களும், பெண்களும் இடுப்புக்கு மேலே ஆடை உடுத்திக்கொண்டனர். பொது இடங்களில் தங்களது மேல் ஆடையைப் பறிக்க முயன்றவர்களை எதிர்த்துத் தாக்கினர். இதில் பலர் கொல்லப்பட்டனர். ஆதிக்க சாதிகள் நாடார் இனமக்களின் வீரத்தைக் கண்டு அஞ்சி நடுங்கத் தொடங்கினர்.

கலவரம் மேலும் மேலும் பரவி பலர் கொல்லப்படுவதைக்கண்டு  சென்னை அரசே அஞ்சியது. அதனால் உடனே தலையிட்டு, 1859_ல் `நாடார் பெண்கள் மேலாடை அணியக்கூடாது’ என்ற பிரகடனத்தை அரசு ரத்து செய்தது. இதன் அடிப்படையில் பெண் கல்விக்கென நாகர்கோவிலில் ஆங்கிலேயரால் ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழகத்தில் பெண் கல்விக்காக மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி இது.

தங்கள் இனம் இப்படி பல இன்னல்களுக்கு ஆட்படுவதற்குக் காரணமே, தங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதை நாடார் மக்கள் உணர்ந்தனர். அதன் பொருட்டு உருவாக்கப்பட்டதுதான் `நாடார் உறவின் முறை’ என்ற அமைப்பு.அனைத்து வழக்குகளிலும் போலீசைத் தலையிடவிடாமல் உறவின் முறையே விசாரித்து தீர்ப்பு கூறியது.

நாடார் மக்களின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க, தங்களது பரம்பரை பழக்கவழக்கங்களையும் சடங்கு சம்பிரதாயங்களையும் மாற்றியமைக்க முற்பட்டனர். ஆண்கள் பார்ப்பனர் போன்று வேட்டி கட்டவும்,  பூணூல் போடவும் தொடங்கினர். பெண்கள் பாரம்பரியமான கனத்த ஆபரணங்களையும், காது வளையங்களையும்  தவிர்த்தனர்.

விதவைகள் வெள்ளைச் சீலை கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். விதவைகள் மறுமணம் தடை செய்யப்பட்டது. (இப்போது மறுமணத்தை ஆதரிக்கிறார்கள்.) பெண்கள் தண்ணீரை தலையில் எடுத்துச் செல்வதைத் தடுத்து, இடுப்பில் எடுத்துவரப் பணிக்கப்பட்டனர்.

திருமண ஊர்வலங்களின்போது செல்வ செழிப்பினைக் காட்ட பல்லக்குகளைப் பயன்படுத்தினர். பெரும்பாலான நாடார்கள் சைவ மதத்தைச் சார்ந்தவர்கள். சிலர் வைணவர்களாகவும் இருந்தனர். முருகக் கடவுள் நாடார் சமூகத்தின் சிறப்பு தெய்வம். பத்ரகாளி, மாரியம்மன், அய்யனார் என்று சிறுதெய்வ வழிபாடும் இவர்களிடம் உண்டு. கோயில் திருவிழாவின்போது முளைப்பாரி எடுப்பது பிரசித்தம்.

நாடார் திருமணத்தின்போது தாய்மாமனுக்கு முக்கியத்துவம் உண்டு. கன்னியாகுமரி, சிவகாசி, விருதுநகர் பகுதிகளில் பெண் வீட்டார் கிலோ கணக்கில் நகை போடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தங்களுக்கு எவ்வளவு பெரிய சொந்தம் இருக்கிறது என்பதைக் காட்ட திருமணத்தின்போது நடத்தப்படும் `அலந்தரம் செய்வது’ என்ற சடங்கு மிக முக்கியமானது.

கோயில்களுக்கு நன்கொடைகளை  வாரி வழங்கினர். சிவன் கோயில்கள் கட்டினர். தங்களை சத்திரியர்கள் என்று அடையாளம் காணும்படி நடந்துகொண்டனர்.நாடார்குலத்தின் பொருளாதார உயர்வும், பொதுமதிப்புக்காக அவர்கள் செய்த முயற்சியும் உயர்சாதிக்காரர்களுக்கு எரிச்சலைத் தந்தது. அதனால் பிரச்னை உருவானது.

அதன் விளைவாக, 1890ஆம் ஆண்டு  ஆதிக்க சாதியினருக்கும் நாடார்களுக்கும் இடையே சிவகாசியில் மிகப் பெரிய கலவரம் மூண்டது. இக்கலவரத்தை நாடார் இனமக்கள் `சிவகாசிப் போர்’ என்றே அழைக்கிறார்கள்.

ஆலயத்திற்குள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ய தங்களுக்கும் உரிமை வேண்டும் என்று நாடார்கள்  கேட்டதுதான் கலவரத்திற்குக் காரணம். மற்ற ஆதிக்க சாதியினர், `நாடார்கள் கோயில்களுக்கு நுழையவே கூடாது’ என்று எதிர்த்ததோடு   கோயிலையும் மூடிவிட்டார்கள். அன்று இரவே  கோயில் கதவை உடைத்து நாடார்கள் கோயிலுக்குள் புகுந்துவிட்டதாக வதந்தி பரவியது. இதனால் கொதித்தெழுந்த ஆதிக்க சாதியினர் நாடார் வீடுகளுக்குத் தீ வைத்தனர். சிவகாசி நகரில் இருக்கும் நாடார்களை வேரோடு கருவருக்கவேண்டும் என்ற மூர்க்கத்தனத்தோடு  சிவகாசி மீது தாக்குதல் நடத்தினர். சுற்று கிராமங்களைக் கொள்ளை அடித்தனர். ஆனால் இதில் நாடார் இனமக்கள் ஆண் பெண் குழந்தைகள் என்ற பாகுபாடு இன்றி எதிர்த்துப் போராடினார்கள். கலவரக்காரர்களை ஓட ஓட விரட்டியடித்தார்கள்.  பலர் மடிந்தார்கள். இறுதியில் நாடார்களே இந்தப் போரில் வெற்றி பெற்றார்கள்.

1899ஆம் ஆண்டு ஜூலை மாதம் ராணுவம் கலவரத்தைக் கட்டுப்படுத்தியபோது, 150 கிராமங்கள் தாக்குதலுக்கு உள்ளாயிருந்தன. சுமார் 4000 வீடுகள் அழிக்கப்பட்டன. இரு தரப்பிலும் பலர் இறந்து போனார்கள். சிவகாசியில் நடந்த சோக சம்பவத்தை  இந்தியா முழுவதிலுமுள்ள பத்திரிகைகள் முதற்பக்கத்தில் வெளியிட்டு நாடார்களின் நியாயத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லின.

நிலைமைகளை நன்கு உணர்ந்த நாடார்கள் தங்களுக்குப் பாதுகாப்பு பெற அரசியல் அதிகாரத்தில் நேரடி அங்கம் பெற முயன்றனர்.
பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியன், வி.வி.ராமசாமி (நீதிக்கட்சி) போன்றோர் அரசியல் கதவைத் திறந்துவிட்டனர். தலைவர் கோசல்ராம் தலைமையில் ஆறுமுகநேரி, குலசேகரப்பட்டினம் போன்ற இடங்களில் உப்பு சத்தியா கிரகங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய தேசிய விடுதலைக்காக காம ராஜர் நடத்திய போராட்டங்களும் அரசியலில் அவர் காட்டிய வழிகாட்டல்களும் நாடார் சமூக மக்களை மிக உயர்ந்த இடத்திற்கு உயர்த்தியது.

நாடார் சமூகம் கல்வி முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தையே முழுவதுமாக நம்பியிருக்கவில்லை. நெல்லை மாவட்டத்தில் கிருஸ்தவ மதத்திற்கு மாறிய நாடார்களின் முன்னேற்றத்திற்காக மதகுருமார்கள் கல்வியின் சிறப்பினை அவர்களுக்குக் கற்பித்தனர். 19ஆம் நூற்றாண்டுகளில் `மகமை நிதி’ உதவியால் ஆரம்ப உயர்நிலைப் பள்ளிகளைத் தென்மாவட்டங்களில் தொடங்கினர். 20ஆம் நூற்றாண்டில் பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரி உள்ளிட்ட பல முக்கிய கல்லூரிகளையும் தொடங்கினர். நாடார்கள் சமூகத்தினரோடு மற்ற சமூகத்தினரும் அதனால் பலன் அடைந்தனர்.

“நாடார்கள் நாடாண்டவர்கள் என்பதை இன்று நிரூபித்துக்கொண்டு வருகிறார்கள். இடைவிடா உழைப்பினாலும் சிக்கனத்தாலும் நாடார்கள் சாதாரண மளிகைக்கடை முதல் கம்ப்யூட்டர் துறை வரை உலகளவில் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள். மற்ற சமூகத்தவரும் பயன்பெறும் வகையில் நாடார் சமூகம் உழைத்துக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை. நாடார்களின் வெற்றி ரகசியமும் அதுவே” என்கிறார் சென்னை, நெல்லை_தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத் தலைவர் க்ஷி.ஜி.பத்மநாபன் நாடார்.

உண்மைதான்.   இன்று நாடார்கள்  சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் தங்கள் செல்வாக்கினை நிலைநாட்ட ஆரம்பித்துவிட்டனர்..

படங்கள் : சித்ரம் மத்தியாஸ்
அரண்மனைசுப்பு

`தினத்தந்தி’யைத் தந்து தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் பாமரர்கள் எழுத்துக்கூட்டி தமிழைப் படிக்க வைத்தவர் ஆதித்தனார். நாடார் மகாஜன சங்கம் உருவாகக் காரணமாய் இருந்தவர் பொறையார் ரத்னசாமி நாடார்.   நம் நாட்டிற்கு `தமிழ்நாடு’ என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த சங்கரலிங்க நாடாரின் தியாகத்தை மறக்கமுடியாது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது குலசேகரபட்டினத்தில் லோன் துரை என்ற வெள்ளைக்காரனைக் கொன்ற குற்றத்திற்காக தூக்குத் தண்டனை பெற்ற காசிராஜன், தூக்குமேடை ராஜகோபால் ஆகியோரின் வீரம் பலருக்கு எடுத்துக்காட்டு. வானம் பார்த்த சிவகாசி பூமியில் தீப்பெட்டித் தொழிற்சாலைகளையும் பட்டாசு தொழிற்சாலைகளையும் உருவாக்கி `குட்டி ஜப்பான்’ என்று சொல்ல வைத்து அனைத்து இனமக்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தவர்கள் சிவகாசி பி.அய்யநாடாரும் ஏ.சண்முகநாடாரும் ஆவர்.

நீதிக்கட்சி வி.வி.ராமசாமி, விருதுநகர் சீமான் எம்.எஸ்.பி.ராஜா.  வெள்ளைச்சாமி நாடார், ஏ.வி.தாமஸ், ஜெயராஜ் நாடார், டாக்டர் சந்தோஷம் என்று  உழைப்பில் உயர்ந்த நாடார்களில் எண்ணற்றவர்களைக் காட்டலாம்.காவல் துறைக்கு பெருமை சேர்த்த அருள் ஐ.ஜி.யை எந்த சமூகத்தவரும் மறக்கமாட்டார்கள்.

இன்று கணினி உலகில் நுழைந்து உலகப் பணக்காரர்களுள் ஒருவராகத் திகழும் சிவ்நாடார், பழுத்த அரசியல் தலைவர் குமரிஅனந்தன், அரசியல் தலைவரும் நடிகருமான சரத்குமார் என்று பலரை இந்த சமூகத்தின் நட்சத்திரங்களாகக் காட்டலாம்.

31.12.08   தொடர்கள்
`நான் தமிழன்’ சாதிகளைப் பற்றியது அல்ல! நம் முன்னோர்களின் கலாசாரங்கள், பண்பாடுகள், வாழ்க்கை முறைகள் பற்றி அடுத்த தலைமுறைகள் தெரிந்துகொள்வதற்கான தேடல். அவர்களின் வீரத்தையும் உழைப்பையும் ஒழுக்கத்தையும் அடுத்த தலைமுறைக்கு உணர்த்தும் ஒரு வாய்ப்பு. ஒரு உண்மையான வரலாற்றை மறந்து விடாமலும் மறக்கடிக்கப்படாமலும் காக்க வைக்கும் முயற்சி.

இந்திய வரலாற்றிலேயே இல்லாத அடக்கு முறை அது. உயர்சாதியினரிடமிருந்து 36 அடிதூரம் விலகி நின்றுதான் அவர்கள் பேசவேண்டும். அவர்கள் குடை எடுத்துச் செல்லக்கூடாது. செருப்புப் போடக் கூடாது. தங்க ஆபரணங்கள் அணியக்கூடாது. மாடி வைத்து வீடு கட்டக் கூடாது. பசுக்களை வளர்க்கலாம். ஆனால் அதிலிருந்து பால் கறக்க அனுமதி இல்லை. அவர்களின் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துக்கொண்டு செல்லக்கூடாது. ஆண்களும் பெண்களும் இடுப்புக்கு மேலே மேலாடை அணிந்து கொள்ளக் கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கத்திடமும் உயர்சாதியினரிடமும் சம்பளம் வாங்காமலே அவர்களுக்கு உழைக்கவேண்டும்.

இப்படி நாளுக்கு நாள் அவர்கள் மீதான அடக்குமுறைகள் அதிகமாகிக்கொண்டே போனதன் விளைவு? பல நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்ட அந்த சமூகம் வீறுகொண்டு எழுந்தது. தங்களை அடக்கியவர்களையும் ஒடுக்கி வைத்திருந்தவர்களையும் எதிர்த்து அவர்கள் போராடினார்கள். வென்றார்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலை எத்தனை உயிர்கள், எத்தனை இன்னல்கள், எவ்வளவு அவமானங்கள். அதனால்தான் இன்றைக்கு உலகளவில் பொருளாதாரத்திலும் சமூக அந்தஸ்திலும் மிக உயர்ந்த இடத்தை அவர்களால் பிடிக்க முடிந்தது. வரலாறு காணாத அந்தப் புரட்சியை செய்தவர்கள் நாடார் சமூக மக்கள்.

திருநெல்வேலி, இராமநாதபுரத்து மண்ணின் மைந்தர்கள் இவர்கள். மதுரை, கோவை, தஞ்சாவூர், ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை என்று அவர்கள் பரந்து கிடக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிறிஸ்துவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நாடார்களே.

சான்றார், சான்றோர், நாடாள்வார் என்றழைக்கப்படும் நாடார்களிடையே கற்றறிந்தோரும், போர் வீரர்களும், வர்த்தகரும், பதனீர் இறக்குவோரும் இருந்தனர்.

மதுரையை ஆண்ட பாண்டியர்கள், இவர்களுள் ஒரு உட்பிரிவினர் எனப் பரவலாக நம்பப்படுகிறது. மகாவம்சத்தில் காணப்படும் குறிப்புகளும் சேர அரசில் பணிபுரிந்தவர்களின் பல பெயர்களும் நாடார்கள் போர்வீரர்கள் என்பதை உறுதி செய்கின்றன.

நாயக்கர்களின் படையெடுப்பால் அதிக இன்னல்களுக்கு ஆளான நாடார்கள், தங்கள் பூர்வீக பூமிகளான சிவகாசி, கமுதி, விருதுநகர், மதுரை ஆகிய ஊர்களைவிட்டு வெளியேறி திருச்செந்தூர் போன்ற வறண்ட பகுதிகளுக்கு இடம் பெயர வேண்டியதாயிற்று. அங்கு பனை மரங்களிலிருந்து பதனீர் இறக்கி வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை.
பதனீர் இறக்கி வாழ்ந்த காலம் இவர்களின் இருண்ட காலமாகக் கருதப்படுகிறது. எனினும் பனைமரம் நாடார்களின் புனித மரமாக எண்ணப்படுகிறது. பனைமரத்தை நுனி முதல் வேர் வரை பயனுள்ளதாக்கிக் காட்டியவர்கள்.

தேவகன்னிகளுக்கும் சத்திரிய மகரிஷிக்கும் இடையே பிறந்த ஏழு குழந்தைகளை பத்திரகாளி அம்மன் எடுத்து வளர்த்ததாகவும் அவர்களே நாடார்கள் என்றும் சொல்லப்படுகிறது.  `பத்திரகாளியின் மைந்தர்கள்’ என்றே இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

தங்களை உயர்ந்த எண்ணம் உள்ளவர்களாக நாடார்கள் போற்றிக் கொண்டாலும் கோயில்களுக்குள் சென்று சாமி கும்பிட உரிமை, அன்று மறுக்கப்பட்டது. அடக்குமுறை மண்டிய இந்த இருண்ட காலத்தில்தான் நாடார்களிடம் இந்த சமூகக் கொடுங்கோன்மையை எதிர்க்கும் எண்ணம் உதயமாயிற்று. சிலர் ஆதிக்க சாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சி கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். ஆனால் அங்கேயும் மேலாடை  மறுக்கப்பட்டது கண்டு மக்கள் கொதித்து எழுந்தனர். அதனால், 1820_ல் அது சமூக விடுதலைக்கான போராட்டமாக வெடித்தது.

பெண்களை மேலாடை அணிய வைத்து பொது இடங்களில் நடமாடச் செய்தனர்.இதனால் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளான நாயர்கள், 1882 மே மாதம் சந்தைகளுக்கு வந்த நாடார் பெண்களின் ஆடையைக் கிழித்து எறிந்தார்கள். திருவிழாவிற்கு வந்த பெண்களின் மேலாடைகளை அறுத்து எறிந்தார்கள். இடுப்புக்கு மேல் ஆடையில்லாமல் மற்ற ஆண்கள் முன் தாங்கள் நிற்கும் நிலையைக் கண்டு நாடார் பெண்கள் கூனிக் குறுகிப் போனார்கள். எதிர்த்த நாடார் ஆண்கள் கட்டி வைத்து அடிக்கப்பட்டனர். கொலையும் செய்யப்பட்டனர். சம்பளம் இல்லாமல் வேலை செய்ய மறுத்த ஆண்களை கொடுமைப்படுத்தினர். கோயில்களையும் பள்ளிகளையும் தீயிட்டனர். நெய்யாற்றின் கரை, எரணியல், பத்மனாபபுரம் என்று நாடார் சமூகம் வாழும் பல இடங்களில் சிறுசிறு கலகம் மூண்டது. சிலர் கொல்லப்பட்டனர்.

இதுபோதாது என்று, திருவாங்கூரை ஆண்ட ராணி பார்வதிபாய் (1815_1829) “நாடார் பெண்கள் மேலாடை அணிவது அறிவுக்குப் பொருத்தமற்றதாதலின் இனி அவர்கள் எதிர்காலத்தில் தங்கள் உடலின் மேல் பாகத்தை மூடிக்கொள்ளக்கூடாது” என்று பிரகடனம் செய்தார்.

இப்பிரகடனம்தான் நாடார் குலமக்களின் கோபத்தீயை வானளாவில் வளர்த்துவிட்டது. இனியும் பொறுக்க முடியாது என்று நாடார் சமூக மக்கள் வெகுண்டு எழுந்தார்கள். எதிரிகளை நோக்கிப் புறப்பட்டார்கள்..

படங்கள் : ஆர்.சண்முகம்,
அரண்மனை சுப்பு

`உழைத்தால் உயரலாம்’ என்பதற்கு முன் உதாரணம் நாடார் சமூகம்தான். நாடார் மக்களிடையே பெரும் சாதனை படைத்தவர்கள் மிகப் பலர்.

அய்யா வைகுண்டசுவாமி: எளிய நாடார் குடும்பத்தில் முத்துக்குட்டி என்ற பெயரில் பிறந்தவர். திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் நடந்த தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தவர். நாடார் உள்ளிட்ட சமூக மக்கள் இடுப்புக்குமேல் ஆடை உடுத்தக் கூடாது என்ற அடக்குமுறைக்கு எதிராக எல்லோரையும் தலைப்பாகை கட்ட வைத்து சாதி வெறியை எதிர்த்துப் போராடியவர்.

மார்ஷல் நேசமணி: குமரித் தந்தை, குமரி மாவட்டத்தின் சிற்பி. 1956ல் நாஞ்சில் நாட்டை கேரளாவோடு இணைக்க வேண்டும் என்று முயற்சித்த போது `நாங்கள் தமிழர்கள். இந்த மண்ணின் மைந்தர்கள். தமிழ் மரபுக்கு சொந்தக்காரர்கள்’ என்று மார் தட்டியதோடு, தமிழ் மரபு சீர் குலைந்துவிடக் கூடாது என்று போராடி நாஞ்சில் நாட்டைத் தமிழகத்தோடு இணைத்த தீரர்.

காமராஜர்: தமிழ் இனத்தில் ஒரு சாதாரண நாடார் குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் `கிங்மேக்கரான’ மாமனிதர்; பச்சைத் தமிழர். அவர் முதலமைச்சராக இருந்தபோதுதான் ஏழைகளுக்கு `கல்விக்கண்’ திறக்கப்பட்டது. சத்துணவு கிடைத்தது. சுதந்திரத்திற்காகப் போராடிய வீரர். எல்லா சமூகத்தாருக்காகவும் உழைத்த கர்ம வீரர். `நாம் பெற்ற செல்வம்’ என்று ஒவ்வொரு நாடாரையும் பெருமை கொள்ளச் செய்தவர். நாடார் இனத்துக்கே பெருமை சேர்த்தவர்.

கே.டி.கோசல்ராம்: பாலைவனம் போல் வறண்டு கிடந்த பூமி. கால்நடைகளுக்குக் கூட தண்ணீர் இல்லை. இருண்ட வாழ்வோடு மக்கள் சுருண்டு வாழத் தொடங்கிய போது மழை மேகமாய் வந்து, மணிமுத்தாறு அணையை, தன் சொந்த முயற்சியில் நாடார் சமூக மக்களிடமிருந்து வசூலித்து கட்ட வைத்த கடமை வீரர். சுதந்திரப் போராட்ட தியாகி.

பட்டிவீரன்பட்டி சௌந்தர பாண்டியன்:மற்ற இனத்தவருக்கு இருப்பது போல் நாடார் சமூகத்திற்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று போராடி முதல் மேல்சபை உறுப்பினரானவர். பேருந்துகளில் காலி இருக்கைகள் இருந்தாலும் தாழ்த்தப்பட்டோர் அமரக் கூடாது என்று இருந்த நிலையை உடைத்தெறிந்து அவர்களை சரிசமமாக உட்கார வைத்தவர். சென்னையில் உள்ள பாண்டிபஜார் இவரது பெயரில் உருவானதே.

Posted in Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | 4 Comments »

Pillaimaar: Ira Manikandan

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2009

21-01-09    தொடர்கள்
கோட்டைப் பிள்ளை மார் வைதீகப்பற்று மிக்கவர்களாக இருந்தனர். பாண்டிய மன்னர்கள் பட்டமேற்கும் விழாக்களில் முடிசூடுவதற்கு முடியை எடுத்துக் கொடுக்கும் உரிமை தங்களுக்கு இருந்ததாகக் கூறுகிறார்கள்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்கள் தங்கள் குலப்பெண்களை கோட்டையை விட்டு வெளியில் அனுப்பாததை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் சமீப காலத்தில் அந்த முறையில் சிற்சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, கோட்டைப் பிள்ளைமார் இனப் பெண்கள் வெளியில் வரத் தொடங்கினர். கல்வி கற்கத் தொடங்கினர்.

இந்த சமுதாயத்தில்  பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைகள் அந்தப் பெண்ணின் வழித் தோன்றலாகவே கருதப்படுகிறது.

பொதுவாக பிள்ளைமார் சமூகத்தில் வரதட்சணை கேட்பதும் இல்லை. கொடுப்பதும் இல்லை. தொடக்கத்தில் பிள்ளைமார் சமூகத்தார் தங்கள் சொந்தத்திலேயே திருமண உறவு கொண்டிருந்தனர். உறவு விட்டுப் போய் விடக் கூடாது என்பதால் இப்படி இருந்தனர். ஆனால் இப்போது தங்கள் சொந்தங்களில் நல்ல வரன் கிட்டாதபோது மற்ற பிள்ளைமார்களுடனும் திருமண உறவு கொள்ளும் வழக்கம் வந்து விட்டது.

திருமணங்களை இரண்டு வீட்டாரும் பேசி முடிக்கிறார்கள். இரு வீட்டாருக்கும் சம்மதம் என்றவுடன் வெற்றிலை மாற்றிக் கொள்கிறார்கள். பந்தக்கால் நடுவது, மாப்பிள்ளை அழைப்பு  உட்பட அனைத்திற்கும் அன்றே நாள் குறிக்கிறார்கள். திருமணத்தை நடத்துவது பெண் வீட்டாரின் பொறுப்பாகவே இன்றும் உள்ளது.

முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு நடக்கும். திருமணத்திற்கு அரைமணி நேரத்திற்கு முன்புதான் நிச்சயதார்த்தம் நடக்கிறது. தேசிகர் ஒருவர் சைவமுறைப்படி மந்திரங்கள் ஓதி திருமணத்தை நடத்தித் தருகிறார்.

மாப்பிள்ளை, சகலை, மைத்துனர் என்று மூன்று பேர் அமர்ந்திருக்க, மணமான புதுப் பெண் வாழை இலை போட்டு அவர்களுக்குப் பரிமாற வேண்டும். இதனை `சட்டரசம் பரிமாறுதல்’ என்கின்றனர்.

திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை  பெண்ணை தேங்காய் உருட்டச் சொல்லுதல், தலையில் வைத்து அப்பளம் உடைத்தல் போன்ற விளையாட்டுக்களை ஆடச் செய்வது, பல பிள்ளைமார் சமூகத்தாரிடம் இன்றும் காணப்படும் வழக்கம்.

மணப்பெண் வீட்டிலும் மாப்பிள்ளையின் மறுவீட்டு அழைப்பிலும் விருந்து உபசாரம் தடபுடலாக இருக்கும். இவர்களின் திருமண விருந்தில் சொதி சாப்பாடும் அவியலும் மிகப் பிரசித்தம்.

பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த பெண் பூப்படைந்த முப்பதாம் நாளில் சடங்கு நடக்கும். தாய்மாமன் சீலை எடுத்துக் கொடுத்து இந்தச் சடங்கை நடத்த வேண்டும். இந்தச் சடங்கிற்குப் பின், அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது.  ஆனால் இப்போது இந்த முறை மாறி, காலத்திற்குத் தக்கபடி நடக்கத் தொடங்கிவிட்டனர்.

பெரும்பாலான பெண்கள் முன் கொசுவம் வைத்து சேலை கட்டுவது வழக்கம். காதில் `பாம்படம்’ அணிய  காதுகளை நீண்ட அளவிற்கு வளர்ப்பது இவர்களது வழக்கம்.இன்று நாகரிகம் கருதி இந்த வழக்கம் குறையத் தொடங்கி விட்டது.

விதவைகள் திருமணத்திற்கு அனுமதி மறுத்து வந்த இவர்கள், இப்போது அதற்கு அனுமதி வழங்க ஆரம்பித்து விட்டனர். விதவைகள் வெள்ளைச் சேலை அணியும் வழக்கமும் அருகி வரத் தொடங்கி விட்டது.

கணேசருக்கு செவ்வாய் பூஜை செய்வது வழக்கம். பெண்கள் மட்டுமே இந்த பூஜை செய்வதாக சொல்லப்பட்டது. இதில் ஆண்கள், சிறுவர்கள் அனுமதி கிடையாது. அய்யனார், காளி முதலிய கிராம தெய்வ வழிபாடும் இவர்களிடம் உண்டு.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் இச்சமூகத்தினர் ஆற்றிய பங்கு மிகப் பெரியது.

இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது ஒரு வீர வரலாறு. இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றார்கள். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இதில் ஈடுபட்டோரில் பிள்ளை மார்களின் பங்கு மகத்தானது.

உறங்கிக்கிடந்த தமிழ் மக்களைத் தட்டி எழுப்பி, நாமிருக்கும் நாடு நமக்குச் சொந்தமானது என்று மக்களை எழுச்சிபெறச் செய்தவர் வ.உ.சி. நாமே கப்பல் ஓட்டி கடல் ஆதிக்கத்தைக் கைப்பற்ற முடியும் என்று முனைந்து வெள்ளையனுக்கு எதிராக சுதேசிக் கப்பல் நிறுவனத்தை நிறுவி இரண்டு கப்பல்களை விட்டார். சுதந்திரப்போரில் தென்னகத்தின் தளபதியாக இருந்து ஆங்கிலேயரை ஆட்டம் காண வைத்தார். அதனாலேயே வெள்ளையரின் அடக்குமுறைக்கு ஆளாகி, சொத்து சுகங்களை இழந்து செக்கிழுத்து கல் உடைத்து சொல்லொணாத் துன்பங்களைச் சுமந்தார்.

நமது பாரதநாட்டின் விடுதலை வரலாற்றில் மாவீரர் சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் பெயர் அழுத்தமாகப் பதிந்துள்ளது.

தமிழ்நாட்டில் நிகழ்ந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் தளபதியாக இருந்து வெள்ளையர்களை அச்சுறுத்தியதால் பலமுறை சிறை சென்றார். காந்தியடிகளின் தலைமையின்கீழ் போராடிய அகிம்சா வீரர்.

பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய பிள்ளைமார் சமூகத்தவர்களின் பட்டியல் மிகப் பெரியது.

அதேபோல், இச் சமூகத்தினர் சைவத்திற்கும் தமிழுக்கும் ஆற்றிய தொண்டு அளப்பரியது.

14-01-09    தொடர்கள்
ந்த இளைஞனைப் பார்த்து வெள்ளையர்கள் பயந்துதான் போனார்கள். அவனது அஞ்சா நெஞ்சுரமும் விடுதலை வேட்கையும் கண்டு பரங்கியர் நடுநடுங்கினார்கள். அவனோடு நேருக்குநேர் பேசியோ போரிட்டோ அவனை வெல்லமுடியாது என்று  முடிவு கட்டிய வெள்ளையர்கள், அவனை சிறைப் பிடித்தவுடன் தூக்கிலிட்டார்கள். அப்போதும் ஆத்திரம் அடங்கவில்லை. அவன் தலையை வெட்டித் துண்டித்து ஈட்டியில் குத்தி காட்சிப் பொருளாக நடுச்சந்தியில் நட்டு வைத்தார்கள்.

“கட்டபொம்மு நாயக்கர் பிடிபடுவதிலும், அவரது மந்திரியான சுப்ரமணியபிள்ளை பிடிபட்டதே நமக்கு வெற்றி” என்று வெள்ளையர்கள் மேலே நடந்த நிகழ்ச்சியை மேலிடத்திற்கு இப்படித்தான் தெரிவித்தார்கள்.
கட்டபொம்முவின் மந்திரியாக இருந்த தானாபதிப் பிள்ளைதான் அந்த இளைஞன். பெயர் சுப்ரமணிய பிள்ளை. தூக்கிலிட்டாலும் மீண்டும் எழுந்து வந்துவிடுவாரோ என்று பரங்கியரை அஞ்சி நடுங்க வைத்த இந்த சுத்த வீரரைத் தந்த சமூகம் `பிள்ளைமார்’ என்று அழைக்கும் வேளாளர் சமூகம்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களுள் தொன்மை வாய்ந்தது பிள்ளைமார் சமூகம்.

கன்னியாகுமாரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள வேளாளர்கள்தான் பெரும்பாலும் பிள்ளைமார் என்று அழைக்கப்படுகிறார்கள். பிள்ளை என்ற குலப்பட்டம் பூண்டுள்ள இவர்கள் பாண்டிய வேளாளர், நாஞ்சில் நாட்டு வேளாளர், நாமதாரி பிள்ளைமார்,  நாங்குடி வேளாளர்கள், கோட்டை வேளாளர், நீர்பூசி வேளாளர், கார்காத்த (அல்லது) காரைக்கட்டு வேளாளர், அரும்பு கோத்த வேளாளர், அகமுடைய வேளாளர் என்று பலவாறாக வழங்கி வருகிறார்கள்.

தென் தமிழகம்தான் இவர்களின் பூர்வீகம் என்றாலும் வேலை நிமித்தமாக இப்போது தமிழகம் முழுவதும் இவர்கள் பரவி இருக்கிறார்கள். எங்கு சென்று வாழ்ந்தாலும் `பிள்ளைமார்’ தங்கள் அடையாளத்தையும் பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் விடாமல்  பாதுகாத்து வருகிறார்கள்.

தொடக்கத்தில் பிள்ளை என்ற பட்டம் இவர்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தது. இடைக்காலத்தில் பிற சமூகத்தினரும்கூட இப்பட்டத்தைப் போட்டுக் கொள்வதைப் பெருமையாகக் கருதத் தொடங்கி விட்டனர். ஆனால் அவர்களுடன் பண்பாட்டு ரீதியில் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை.

சேர சோழ பாண்டியர்களின் அமைச்சர்களாக இருந்து வழி நடத்திச் சென்றவர்களாக இவர்களைச் சொல்வதுண்டு. மன்னர்களுக்கு முடிசூட்டு விழாவில் முடி எடுத்துக்கொடுக்கும் உரிமை இருந்ததாகக் கூறுவோரும் உண்டு.

பிள்ளைமார்களின் அடிப்படைத் தொழில் விவசாயம். என்றாலும் நேரடியாக விவசாயத்தில் ஈடுபடாமல் ஆட்களை வைத்து விவசாயத் தொழில் செய்கின்றனர்.

அன்றைய பாண்டிய நாட்டில் மழையின்றி பஞ்சம் தலைவிரித்தாடியது. தனது நாட்டில் மழையைப் பொழிவிக்காத மேகங்களைப் பிடித்து வந்து பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதி சிறையில் அடைத்து விட்டான். தேவர்கள் உட்பட அனைவரும் கார்முகில்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இனிமேல் மேகங்கள் தங்களது வேலையை ஒழுங்காகச்  செய்யும் என்று யாராவது ஒப்புதல் கொடுத்து பிணையக் கைதியாக இருந்தால் மட்டுமே மேகங்களை விடுவிப்பேன் என்றான் மன்னன். அப்போது  வேளாளர் ஒருவர்தான் மேகங்களுக்குப் பதில் தான் சிறையில் இருப்பதாக வாக்குறுதி அளித்து மேகங்களை விடுவித்தாராம்.

இதனால் அவர்கள் கார்காத்த வேளாளர் என்று அழைக்கப்பட்டதாக செவிவழிக் கதை உண்டு. அந்தளவிற்கு பிறரின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக பிள்ளைமார் சமூகத்தார் இருந்திருக்கிறார்கள்.

வேளாளர்களில் ஒரு  பிரிவினர் சைவப் பிள்ளைமார். இவர்கள் அதிகாலை சிவநாமத்தை உச்சரித்துவிட்டுத்தான் விழிக்கிறார்கள். காலை, மதிய, இரவு உணவுக்கு முன்னும் இறைவழிபாடு நடத்துவதை இவர்கள் மறப்பதே இல்லை.

இவர்களுக்கு பல குலதெய்வங்கள் இருக்கின்றன.  பிள்ளைமார்களில் வைணவத்தைக் கடைப்பிடிப்போரும் இருக்கிறார்கள். நாமதாரி பிள்ளைமார்கள் திருமண் இட்டுக்கொள்கிறார்கள். இப்போது சைவம், வைணவம் கடைப்பிடிப்போரிடையே திருமண உறவு வைத்துக்கொள்வதும் உண்டு.

திருச்செந்தூர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், தென்காசி, குற்றாலம் கோயில்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்வது சைவப் பிள்ளைமார்களின் வழக்கம். அதேசமயம், வைணவத்தில் ஈடுபாடுடைய பிள்ளைமார்கள் ஷ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாங்குனேரி போன்ற நவ திருப்பதி ஸ்தலங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவது பிரசித்தம்.

இவர்களுள் கோட்டைப் பிள்ளைமார் நெல்லை மாவட்டம் ஷ்ரீவைகுண்டம் வடபகுதியில் உள்ளனர். இக்கோட்டைக்குள் இருக்கும் கல்வெட்டில் `பிள்ளைமார்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.

இச்சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கோட்டைக்குள்ளிருந்து வெளியே வருவதே இல்லை. வெளிஉலகம் என்னவென்றே தெரியாமல் இவர்கள் வாழவேண்டிய சூழ்நிலை. கோட்டைக்குள் மற்ற எந்த சமூகத்தவரும் நுழையத் தடை விதித்திருந்தனர். ஒரு பெண் பூப்படைந்தபின்னர் உடன்பிறந்த சகோதரன், தந்தை, தாய்மாமன் தவிர மற்ற ஆண்களைப் பார்க்கக் கூடாது. கணவனை இழந்த பெண்கள் கடுமையான விரதங்கள் இருந்து கணவன் காலமான சிறிது காலத்திற்குள்ளேயே உயிர்விடும் நிலை இருந்தது.

இன்று அவர்களின் நிலை என்ன?.

Posted in India, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | 15 Comments »