Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Economy’ Category

Kalki Therthal Editorial: India Parliament Elections 2009

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 15, 2009

அச்சுறுத்தும் இரட்டை அபாயம்! – கல்கி தலையங்கம்

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கட்சிகளுள் ஒன்றுகூட, நம் நாடு தற்போது எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னை களைக் குறித்துப் பேசவில்லை. முதல் பிரச்னை பொருளாதார வளர்ச்சியில் அபாயகரமான பின்னடைவு. இரண்டாவது பிரச்னை, அண்டை நாடான பாகிஸ்தானில் வளர்ந்து வரும் தலிபான் ஆதிக்கம்.

உலகம் முழுவதுமே பொருளாதார நலிவைச் சந்தித்து வருவதால் அது குறித்துப் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என நம் அரசியல் கட்சிகள் முடிவு செய்துவிட்டன போலும்! அதனால்தான் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பற்றியோ வேலை வாய்ப்பு பெருக்கத்துக்கான திட்டங்கள் குறித்தோ பேசுவதற்குப் பதிலாக, மேலும் பல இலவசங்கள், மானியங்கள், சலுகைகள் பற்றி அறிக்கைகள் வருகின்றன.

கடந்த பிப்ரவாி மாதத்தில் மட்டுமே ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 22 சதவிகிதம் குறைந்துள்ளன. ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் அடைந்து வரும் நஷ்டத்தால் இதுவரை பத்து மில்லியன் நபர்கள் வேலை இழந்துள்ளனர். இவ்வெண்ணிக்கை மேலும் துாிதமாக அதிகாிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் ஐந்து சதவிகிதமாகக் குறையும் என்றும், அன்னியச் செலாவணி கையிருப்பு அதல பாதாளத்துக்குச் செல்லும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

இவை யாவுமே, சராசாி இந்தியனின் வாழ்க்கை, சொல்ல முடியாத அளவுக்குக் கடினமாகப் போகிறது என்பதற்கான அறிகுறிகள். ஆனால் இவை பற்றியெல்லாம் ஆலோசிக்க நமது அரசியல்வாதிகளுக்கு ஏது நேரம்? அவர்கள் தங்களுடைய சகிப்புத்தன்மையற்ற பேச்சிலும் நடத்தையிலும் தலிபானுடன் போட்டி போடத் தயாராகிவிட்டார்கள்!

தலிபான், பாகிஸ்தானில் காலூன்றியிருப்பதால் நாம் எதிர்கொள்ளப் போகும் அபாயம் என்னவென்று நம் அரசியல்வாதிகள் சிந்திக்காவிட்டாலும் நாம் விழிப்புற்று எச்சாிக்கை கொள்ள வேண்டும். பாகிஸ்தானில் தலிபான் கை ஓங்கினாலும் இந்தியாவுக்கு ஆபத்து (ஏற்கெனவே பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்ப் பகுதியில் அவர்கள் ஊடுருவி விட்டார்கள்); அந்நாட்டில் தலிபான் ஒடுக்கப்பட்டாலும் நமக்கு ஆபத்து – அங்கிருந்து விரட்டப்படுவோர் அண்டை நாடான இந்தியாவுக்குத்தான் வேகமாக வந்து சேர்வர்.

சகிப்புத்தன்மைக்கே இடங்கொடாத, அடிப்படைவாதமும் பிற்போக்குச் சிந்தனையும் வன்முறையும் காட்டுமிராண்டிச் சட்டங்களும் கொண்ட தலிபான், இந்த நாட்டின் அழகான மதச்சார்பின்மை கவசத்தை நொடியில் தகர்த்துவிடும். இங்கு தழைக்கும் பலமத கலாசாரத்தை நாசமாக்கிவிடும்.

ஒரு பக்கம் பொருளாதாரச் சீர்குலைவு அச்சுறுத்தல்; இன்னொரு பக்கம் இந்தத் தலிபான் அபாயம். இதை உணர்வதற்கு, பாிெய தீர்கதாிசனமெல்லாம் தேவையில்லை; சராசாி கவனமும் எச்சாிக்கை உணர்வும் போதும். ஆனால், நம் அரசியல்வாதிகளிடம் அதைக்கூட இனி எதிர்பார்க்க முடியாது போலிருக்கிறது.

ஒரே தீர்வுதான் உள்ளது: இந்தியாவெங்கிலும் உள்ள மூத்த சான்றோர்கள் ஒன்றுகூடி, நாட்டு நலனில் அக்கறை உள்ள ஐம்பது தனி நபர்களை, அரசியல் ஆதாய நோக்கு இன்றி தேர்தலில் நிறுத்தி, அவர்கள் மூலம் நாட்டுக்கான நல்ல திட்டங்களை எடுத்துரைக்கலாம். அந்த நேர்மையாளர் களுள் 25 பேர் வென்றால்கூட அது இந்திய அரசியலில் திருப்புமுனையாக அமையும். ஊழலில் ஊறிப்போன சுயநல அரசியல்வாதிகளுக்கு ஓர் எச்சாிக்கையாகவும் விளங்கும்.

Posted in Economy, Govt, India, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

CPI(M) Election Manifeto released

Posted by Snapjudge மேல் மார்ச் 17, 2009

ஆட்சியில் பங்கு பெறுவோம்: காரத்

தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத். உடன் கட்சியின் முன்னணித் தலைவர்கள் (இடமிருந்து) பிருந்தா காரத், சீதாராம் யெச்சூரி, எம்.கே. பாண்டே, முகமது அமின்.

புது தில்லி, மார்ச் 16: மத்தியில் மூன்றாவது அணி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்தால், அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.

மத்தியில் பாஜக, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக கூறிய அவர், அதை விவரிக்க மறுத்து விட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை தில்லியில் திங்கள்கிழமை வெளியிட்டு அவர் மேலும் கூறியது:

மூன்றாவது அணி ஆட்சியமைத்தால் வழக்கம்போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிலிருந்து ஆதரவு தருமா? அல்லது அமைச்சரவையில் இடம்பெறுமா? என்று கேட்டதற்கு, அமைச்சரவையில் சேரும் வாய்ப்புகளை புறக்கணிக்க முடியாது என்றார்.

இதற்கு முன்னர் ஏற்பட்ட காங்கிரஸ் அல்லாத மத்திய அமைச்சரவையில் (தேவ கெüட மற்றும் ஐ.கே. குஜ்ரால்) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி (ஆர்எஸ்பி) இடம்பெறவில்லை. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றது.

மூன்றாவது அணியில் மேலும் சில கட்சிகள் சேரும் என்று குறிப்பிட்ட காரத், இந்த அணிக்கு யார் வருவார்கள், யார் வரமாட்டார்கள் என்பதை இப்போதே கூற முடியாது. மூன்றாவது அணி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தால் அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். அதேபோல இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தில் நமது நாட்டை பாதிக்கும் விஷயங்கள் மாற்றப்படும்.

ஸ்விட்சர்லாந்து வங்கியில் கோடிக்கணக்கில் பணம் போட்டுள்ள இந்தியர்களின் பட்டியலை வெளிக் கொணர காங்கிரஸ் அரசு முயற்சிக்க வேண்டும். மூன்றாவது அணியில் ஒன்று திரண்டுள்ள கட்சிகள் அனைத்தும் ஒரு பொது நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இணைந்துள்ளன. தில்லியில் மாயாவதி ஞாயிற்றுக்கிழமை அளித்த விருந்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை என்றாலும், விருந்தில் பேசப்பட்ட விஷயங்கள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகளில் அவருக்கு முழு உடன்பாடு உள்ளது.

மதச்சார்பின்மையைக் காப்பது, கட்டுப்படுத்தப்பட்ட தாராளமயம், சுயசார்புடனான வெளியுறவுக் கொள்கை ஆகியன மூன்றாவது அணி ஏற்றுக் கொண்ட முக்கியமான கொள்கைகளாகும்.

குறைந்தபட்ச செயல்திட்டத்தை அமல்படுத்தும் ஒரு அணியாக மத்தியில் மூன்றாவது அணி ஆட்சியமைக்கும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்தபோதிலும், தொடர்ந்து எதிர்ப்பையும் மீறி பணக்காரர்களுக்கு சாதகமான கொள்கைகளையே மன்மோகன் சிங் செயல்படுத்தினார் என்று கடுமையாக சாடினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாகிவிட்டனர். குறைந்தபட்ச செயல்திட்டத்திலிருந்து விலகியதே இதற்குக் காரணம். நாட்டில் ஏழை, பணக்காரர்களிடையிலான இடைவெளி அதிகரித்ததற்கு மன்மோகன் சிங் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான் காரணமாகும்.

இருப்பினும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததால்தான் தனியார் வங்கிகளின் முதலீட்டு வரம்பை 74 சதவீதமாக உயர்த்தாமல் விட்டனர். அதேபோல காப்பீட்டு நிறுவனங்களில் அன்னிய முதலீடு 49 சதவீதமாக உயர்த்துவது தடுக்கப்பட்டது.

பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே தேர்தலை சந்திப்பது புதிய விஷயமல்ல. இந்த முடிவை கடந்த செப்டம்பரிலேயே மாயாவதி கூறிவிட்டார். மூன்றாவது அணியில் உள்ள கட்சிகள் தேர்தலுக்குப் பிறகு ஒன்றிணைவது என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியுடன் கம்யூனிஸ்ட் கூட்டு சேருமா? என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் காரத்.

சந்தர்ப்ப வசத்தால் பாஜகவுடன் கூட்டு சேர்ந்திருந்த தெலுங்கு தேசம் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் முந்தைய கூட்டணியிலிருந்து பாடம் கற்றுவிட்டன. அவை கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நிச்சயம் இருக்கும்.

ஜார்க்கண்ட் விகாஸ் மஞ்ச் மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சிகள் தற்போது மூன்றாவது அணியில் இணைந்துள்ளது மேலும் வலுசேர்த்துள்ளது என்றார் காரத்.

பொது விநியோகத் திட்டம் நாடு முழுவதும் ஒரே சீராக அமல்படுத்தப்படும். பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைக்கப்படும். சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் நுழைவது தடுக்கப்படும். காப்பீட்டுத் துறை தனியார் மயமாகாது. ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தடுக்கப்படும். தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும். கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க சட்டம் கொண்டு வரப்படும். தேர்தலுக்கு தனி நிதியம் ஏற்படுத்தப்பட்டு அரசியல் கட்சிகளுக்கு தனியார் நிறுவனங்கள் நிதி அளிப்பது தடுத்து நிறுத்தப்படும். ஒட்டுமொத்த உற்பத்தியில் 6 சதவீதம் கல்வி வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Posted in Economy, India, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | 1 Comment »

Angry north Indians torch train to protest attacks: Anti-MNS (Maharashtra Navnirman Sena) protesters go on rampage in Bihar: Raj Thackeray

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2008


பீஹார் மாநிலத்தில் ரயில்களுக்கு தீ வைப்பு

தலைநகர் பாட்னாவில் ஆர்ப்பாட்டங்கள்
தலைநகர் பாட்னாவில் ஆர்ப்பாட்டங்கள்

இந்தியாவின் மும்பை நகருக்கு வேலை தேடி வந்த வட மாநிலமான பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக பிகார் மாநிலத்தில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன.

சாலைகளில் மறியல் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். கல்லெரிந்த கலகக் காரர்களை கலைக்க காவல் துறையினர் ஒரு இடத்தில் துப்பாக்கிச் சூடு செய்துள்ளனர். ஒரு போலீஸ்காரர் உட்பட, ஒரு டஜனுக்கு மேற்பட்டோர் அங்கே காயமடைந்துள்ளனர்.

அதே நேரத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மும்பைக்கு வருவதை எதிர்க்கும் கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரேவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற வன்முறைகளை தூண்டியதாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


Posted in Economy, Govt, India, Law, Order, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | Leave a Comment »

Chattisgarh naxal attack leaves 12 CRPF personnel dead

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 21, 2008


இந்தியாவில் மாவோயியவாதிகள் தாக்குதலில் பொலிஸார் பலி

சத்தீஸ்கர் வனப் பகுதியில் தங்கி மாவோயிய கிளர்ச்சிக்காரர்கள் தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.

இந்தியாவின் மத்தியப் பகுதியிலுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் 12 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய அரசின் காவல் படையினர் மீது மாவோயிய கிளர்ச்சியாளர்கள் மறைந்திருந்து தாக்குதலை நடத்தியதாக அந்த அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஏழை விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தாங்கள் போராடி வருவதாகக் கூறும் அந்த கிளர்ச்சியாளர்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் செயற்பட்டு வருகிறார்கள்.

ஆனால் இதுவரை இந்தத் தாக்குதலுக்கு யாரும் உரிமை கோரவில்லை.

Posted in Economy, Finance, Govt, India, Law, Order, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

French government probing Sarkozy bank theft: President Nicolas bank account is hacked & raided in internet scam

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2008


பிரான்ஸ் அதிபரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு

பிரான்ஸ் அதிபர் நிகோலா சர்கோசி
பிரான்ஸ் அதிபர் நிகோலா சர்கோசி

இணையதளங்களில் அத்துமீறும் நபர்கள் பிரான்ஸ் அதிபர் நிகோலா சர்கோசி அவர்களின் வங்கி கணக்கிற்குள் உட்புகுந்து சிறிது பணத்தை திருடி விட்டதாக பிரான்ஸ் அரசாங்கம் கூறியுள்ளது.

இதன் மூலம் இணையம் மூலம் வங்கி பரிமாற்றம் நடைபெறுவதில் இன்னும் ஒட்டைகள் இருப்பது உறுதியாகிறது என அரசாங்கத்தின் சார்பில் பேசவல்லர் பிரான்ஸ் வானொலி ஒன்றில் கூறியுள்ளார்.

பணம் திருடப்பட்டது குறித்து கடந்த மாதம் நிகோலா சர்கோசி புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. எனினும் எவ்வளவு பணம் திருடப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.

Posted in Economy | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Bollywood: Shooting schedules hit as cine strike enters second day: Film workers begin stir over pay, timings: Strike by 100,000 Movie Employees

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 2, 2008

இந்தியாவில் திரைப்படத் துறையினர் வேலை நிறுத்தம்

திரைப்படத் துறையினர் வேலை நிறுத்தம்
வேலை நிறுத்தத்தில் இந்திய திரைத் துறையினர்

ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஹிந்தி திரைப்படத் துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் மிகவும் குறைவாக உள்ளது அல்லது ஊதியமே தரப்படுவதில்லை என்று கூறி நடிகர்கள், நடனக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் கதையாசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக நாற்பது படங்களின் படப்படிப்பு தடை பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. இந்த காலவரையரையற்ற வேலைநிறுத்தம் தொடர்ந்தால் வரவிருக்கும் விழாக்கால வசூல் பாதிக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

திரைப்பட ஊழியர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் முக்கியச் சங்கங்களின் பொறுப்பாளர்கள் சங்கங்களில் இல்லாதவர்களை வேலைக்கு எடுப்பது தொடர்பாக தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இப்படிச் செய்வதன் காரணமாக ஊதியங்கள் குறைவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

Posted in Economy, Finance, India | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Hurricane Ike: Haiti in crisis after tropical Hurricane claims more than 500 lives – Floods caused by tropical storm Hanna

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2008

கரீபியன் தீவுகளைத் தாக்கிய சூறாவளி ஐக்

கரீபிய பிராந்தியத்தை தாக்கிய புதிய பலம் மிக்க சூறாவளியான ஹரிக்கேன் ஐக், கரீபிய தீவுகளை தாக்கியதில் அங்கு பெருத்த சேதம் ஏற்பட்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

தேர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளில் 80 வீதமான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், தங்குமிடத்துக்காக மக்கள் மிகுந்த சிரமப்படுவதாகவும், அந்த தீவுகளின் பிரதமர் கூறியுள்ளார்.

மிகவும் பயங்கரமான, வகை நான்கைச் சேர்ந்த சூறாவளியான ஹரிக்கேன் ஐக், மணிக்கு இருநூறு கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்துடன் தாக்கியதில், தாழ்வான பகுதிகளே முதலில் பாதிக்கப்பட்டன.

இந்த சூறாவளி காரணமாக கரீபியன் பிராந்தியத்தில் பெரும்பாலான பகுதிகளில் உசார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் தாக்கிய கடும் சூறாவளியால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஹெய்ட்டி மற்றும் கியூபா ஆகியவற்றின் ஊடாகவே இந்த சூறாவளி செல்லும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.


சூறாவளியினால் ஹெய்தியில் 500 பேர் பலி

சூறாவளியினால் சின்னாபின்னமான ஹெய்தி
சூறாவளியினால் சின்னாபின்னமான ஹெய்தி

ஹெய்தியில் வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில் ஹன்னா சூறாவளியினால் சுமார் 500 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் இன்னும் ஏராளமானவர்கள் காணாமல் போயிருப்பதால், எண்ணிக்கை அதிகரிக்க கூடும்.

ஹெய்தியில் இருக்கும் ஐ.நா மனிதாபிமான பணிகள் ஒருங்கிணைப்பாளரான ஜோயல் போட்ரூ, மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று நிவாரண உதவிகளை கொடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த சூறாவளி தற்போது அமெரிக்காவின் கிழக்கு கடற்பகுதியை தாக்கியுள்ளது.

இதற்கிடையே இன்னும் வலுவான சூறாவளியான எல்க்கி டர்க்ஸ்,காய்கோஸ் மற்றும் தெற்கு பஹாமாஸ் பகுதியை தாக்கும் வாய்ப்புகள் உள்ளதால், அங்குள்ளவர்கள் இடம்பெயர்கின்றனர்.

Posted in Economy, Govt | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , | Leave a Comment »

DMK Internal Squabbles: Govt told to pay relief for police apathy – Mu Ka Alagiri

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2008

முதல்வர் மகன் அழகிரி தொடர்பான வன்முறைக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

முதல்வரின் புதல்வர் மு.க அழகிரி
முதல்வரின் புதல்வர் மு.க அழகிரி

2000மாவது ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திமுக தொண்டர்கள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து மதுரையில் நிகழ்ந்த வன்முறையின்போது தீக்கிரையான ஒரு தனியார் பேருந்திற்கான இழப்பீட்டை தமிழக அரசு வழங்கவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டிருக்கிறது.

அப்பேருந்தின் உரிமையாளர்களான தனக்கன்குளம் வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சி கழகத்திற்கு 2 லட்ச ரூபாய் இழப்பீட்டை இன்னும் எட்டு வாரங்களுக்குள் செலுத்திவிடவேண்டுமென நீதிபதி சந்துரு கூறியிருக்கிறார்.

அழகிரிக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் மோதல் முற்றிவந்த நேரத்தில் அழகிரியுடன் தொண்டர்கள் தொடர்பை துண்டித்துக்கொள்ளவேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. அப்போது அழகிரி ஆதரவாளர்களின் எதிர்ப்பே பரவலான வன்முறையாக வெளிப்பட்டதாக செய்திகள் கூறின.

வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சிக்கழகம் எரிக்கப்பட்ட பேருந்திற்கு வாகன காப்பீடு இல்லை என்று முறையிட்டும் அதற்கு எவ்வித இழப்பீட்டையும் வழங்க தமிழக அரசு முன்வரவில்லை. கடந்த மூன்றாண்டுகளாக அக்கழகத்தின் மனுவிற்கு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையிலேயே நீதிபதி சந்துரு தனது தீர்ப்பினை அளித்திருக்கிறார்.

அப்போது நிகழ்ந்த வன்முறைகள் குறித்தும், குடிமக்களுக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்காதது குறித்தும் நீதிபதி கடும் அதிருப்தியினை தெரிவித்திருக்கிறார். எந்த ஒரு தனிநபரின் பிரச்சினைகளுக்காகவும் மற்ற குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது, கும்பல்கள் வன்முறையில் இறங்கும்போது ஒன்றும் செய்ய இயலவில்லை என்று அரசு ஒதுங்கிக்கொள்ளமுடியாது என்று நீதிபதி சந்துரு கூறியிருக்கின்றார்.

Posted in DMK, Economy, Govt, Law, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

Russia-EU seek common energy pact: Russia’s President Dmitry Medvedev Discuss Security – Agree to work on partnership agreement

Posted by Snapjudge மேல் ஜூன் 30, 2008

ரஷ்யா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய உடன்பாடு

ஐ. ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜாவியர் சொலோனா மற்றும் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ்
ஐ. ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜாவியர் சொலோனா மற்றும் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ்

ரஷ்யாவும், ஐரோப்பிய ஒன்றியமும் தமக்கு இடையேயான ஒரு புதிய உடன்பாட்டை அதிகாரபூர்வமாக ஏற்படுத்தியுள்ளன. நீண்ட காலமாக தாமதமான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

சைபீரிய நகரமான காண்டி மான்சியிஸ்கில் ரஷ்ய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களிடையே நடைபெற்ற ஒரு உச்சி மாநாட்டிலேயே முட்டுக்கட்டை நீங்கி இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து அறிவிக்கப்பட்டது.

விளாடிமிர் புடினை அடுத்து ரஷ்யாவின் அதிபராக பொறுபேற்ற டிமிட்ரி மெட்வடேவ் பங்கு பெறும் முதல் உச்சி மாநாடு இதுவே.

போலந்து மற்றும் லித்துவேனியா நாட்டுடன் ரஷ்யாவுக்கு எழுந்த சர்ச்சைகளின் காரணமாக புதிய பேச்சுவார்த்தைகள் தடைபட்டிருந்தன.

ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் பழைய பிரச்சினைகள் பின்புலத்தில் இருந்து கொண்டுதான் உள்ளன என்று மாஸ்கோவில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.

Posted in Economy, Finance, Govt, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

BBC shuts down Romanian service

Posted by Snapjudge மேல் ஜூன் 27, 2008

பிபிசியின் ருமேனிய சேவை நிறுத்தப்படுகிறது

கடந்த 69 ஆண்டுகளாக ஒலிபரப்பாகிவரும் பிபிசியின் ருமேனிய மொழி வானோலி சேவை எதிர்வரும் ஆகஸ்ட் முதல் திகதியுடன் மூடப்படும் என்று பிபிசி உலக சேவை அறிவித்துள்ளது.

உலக சேவையின் இயக்குனர் நைஜல் சேப்மேன், தடையற்ற, சுதந்திரமான தகவல்களை தருவதில் ருமேனிய சேவை முன்னணியில் இருந்ததாக புகழாரம் சூட்டியுள்ளார்.

ருமேனியாவில் அதிகரித்துள்ள ஊடகங்களுக்கு இடையேயான போட்டி மற்றும் ருமேனிய சேவை கேட்கும் நேயர்கள் குறைந்தமை, உலக சேவையின் அனைத்துப் பிரிவுகளிலும் பணத்தை சேமிக்க வேண்டிய கட்டாயம் போன்றவைதான் இந்த முடிவுக்கு காரணங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூடப்படும் ருமேனிய சேவையின் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நேஷ்னல் யூனியன் ஆப் ஜேர்னலிஸ்ட் அமைப்பு இந்த முடிவு ஏற்க முடியாத ஒன்று என்று கூறியுள்ளது.

Posted in Economy, Finance | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | Leave a Comment »

C Vezhavendhan: The need for quality Instructors – Teacher Training Schools

Posted by Snapjudge மேல் ஜூன் 25, 2008

தேவை தரமான ஆசிரியர்களின் சேவை

சி. வேழவேந்தன்

தமிழகத்தில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்கள் உள்பட அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை சொற்ப அளவில் மட்டுமே இருந்தன.

எனவே, அப்போது பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகள் மட்டுமே ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேரும் நிலை இருந்தது.

மருத்துவம், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து அங்கே இடம் கிடைக்காத மாணவர்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேருவது வழக்கம்.

ஆனால், இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 18 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை அரசு மேலும் குறைத்துள்ளது.

இதன் மூலம் விண்ணப்பித்த அனைவருக்கும் (குறைந்த மதிப்பெண்கள் பெற்றால்கூட) பொறியியல் கல்லூரிகளில் அரசின் கலந்தாய்வு மூலம் இடம் கிடைக்கும் நிலை உள்ளது.

மேலும், சில ஆண்டுகளுக்கு முன்னர் சுயநிதி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் (ரூ. 2 லட்சம் வரை) சீட் கிடைக்தாத நிலையே இருந்துவந்தது.

ஆனால், தற்போது தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இதன்மூலம் ஆண்டுதோறும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர் சேர்க்கைக்கு மொத்தம் உள்ள 40 ஆயிரம் இடங்களில் 25 ஆயிரம் இடங்களை அரசு கலந்தாய்வு மூலம் நிரப்பி வருகிறது.

மீதம் உள்ள 15 ஆயிரம் இடங்களுக்கு தனியார் பள்ளி நிர்வாகத்தினர் நேரடியாக மாணவர்களைச் சேர்த்து வருகின்றனர்.

அரசின் கலந்தாய்வு மூலம் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர் அரசு ஒதுக்கிய கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.

போட்டி அதிகமாக இருந்தபோது தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள இடங்கள் தானாக நிரம்பின.

ஆனால் இன்று தனியார் பொறியியல் கல்லூரிகளைப் போலவே, தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோட்டாவிற்கே மாணவர்கள் இல்லாமல் இடத்தை காலியாக வைத்துள்ளன.

எனவே தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் முன்னர் ரூ. 2 லட்சத்திற்கு விலை போன இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்புக்கான இடம், தற்போது ஆண்டுக்கு ரூ. 35 ஆயிரம் என குறைந்துள்ளது.

இதையும் தவணை முறையில் கொடுக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அரசு சார்பில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வுக்கு 70 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த ஆண்டு 40 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மாணவர்கள் பிரிவில் ஒரு குறிப்பிட்ட இடஒதுக்கீட்டில் குறைந்த பட்ச கட்-ஆப் மதிப்பெண் 470.

இதேபோல, மாணவிகள் பொதுப் பிரிவில் அறிவியல் பிரிவுக்கு 835, கலைப் பிரிவுக்கு 952, தொழில் பிரிவுக்கு 971 என கட்-ஆப் மதிப்பெண் இருந்தது.

பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 470 மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவர் அரசு ஒதுக்கீட்டில் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்வதற்கான வாய்ப்பை கடந்த ஆண்டு பெற்றுள்ளார்.

இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட 30 ஆயிரம் பேர் குறைவாகவே கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

தரமான ஆசிரியர்களால்தான் தரமான மாணவர்களை உருவாக்க முடியும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆங்கில மோகத்தாலும், தரமான கல்வி கிடைக்குமா என்ற சந்தேகத்தாலும் தமிழகத்தில் மொத்தம் உள்ள 34,208 அரசு, தனியார் தொடக்கப் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிந்துவருகிறது.

ஆனால், அரசிடம் அனுமதிபெற்று இயங்கிவரும் 4622 நர்சரி, பிரைமரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் தொடர்ந்து ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது.

300, 400 மாணவர்கள் படித்துவந்த சில தமிழ்வழிப் பள்ளிகள் தற்போது ஒரு மாணவர் கூட இல்லாமல் மூடப்பட்டுவரும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதைத் தடுக்க ஆங்கில வழியில் கற்பிக்கப்படும் பள்ளிகளுக்கு இணையாக தமிழ் வழிப் பள்ளிகளிலும் கற்றல் முறைகளை மாற்றவேண்டும். அதோடு தரமான ஆசிரியர்களின் சேவையும் இன்றைய முக்கியத் தேவையாக உள்ளது.

மேலும், நமது அண்டை மாநிலமான புதுச்சேரியைப்போல தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை அரசு தொடங்கி ஆங்கிலத்தில் புலமை பெற்ற ஆசிரியர்களை அந்த வகுப்புகளுக்கு நியமிக்கலாம்.

இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைவதைத் தடுக்க முடியும்.

மேலும், பணக்காரர் வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டுமே கிடைத்துவரும் தரமான கல்வி சாமானிய ஏழைக் குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்யலாம்.

இன்றைய போட்டி நிறைந்த உலகில் ஆங்கில அறிவும், கணினி அறிவும் அவசியம் என்பதால் அதற்கேற்ப மாணவர்களை உருவாக்க வேண்டும்.

Posted in Economy, Finance, India, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

One fatal accident every five minutes on Indian roads: Motor Vehicles Amendment Bill

Posted by Snapjudge மேல் ஜூன் 25, 2008

சாலை விபத்து உயிரிழப்புகளில் இந்தியா முதலிடம்

உலகில் வாகன விபத்துகளில் அதிகம் பேர் உயிரிழக்கும் நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்திக்ககொண்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது இந்தியா.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோர் இந்தியச் சாலைகளில் அகால மரணம் அடைகின்றனர். இருபது லட்சம் பேர் மோசமாக காயமடைகின்றனர்.

இந்தச் சாலை விபத்துகளினால் சமூகமும் பொருளாதாரமும் சந்திக்கும் இழப்பு மிகப்பெரியது.

ஆனால் இப்போதுதான் இந்திய அரசு இவ்விவகாரத்திற்கு முக்கியத்துவம் தருவதாகத் தெரிகிறது

தேசிய சாலை பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ள உயர்- அதிகார ஆணையம் ஒன்று பரிந்துரைத்துள்ளது.

சாலை பாதுகாப்பு, பாதுகாப்புமிக்க சாலைகள் பாதுகாப்புமிக்க வாகனங்கள் தொடர்பான பொறுப்பு அனைத்தையும் ஒருங்கிணைக்கிற ஒரு முயற்சி இது.

மலேரியா, காசநோய், எய்ட்ஸ் இவை எல்லாமும் சேர்ந்து பலிகொள்ளும் உயிர்களின் எண்ணிக்கையைவிட இந்தியாவில் வாகன விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். ஆதலால் இவ்விவகாரத்தை இனியாவது கண்டுகொள்வதே இந்தியாவுக்கு நல்லது.

Posted in Economy, Finance, Govt, India | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

U Ra Varadarasan: Rural Economy – Agriculture, Industry, Services

Posted by Snapjudge மேல் ஜூன் 21, 2008

கிராமப்புற பொருளாதாரம் – சில கவலைகள்!

உ . ரா. வரதராசன்

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் பல்வேறு துறைகளின் பங்கு (2001 – 02ஆம் ஆண்டில்) கீழ்வருமாறு அமைந்திருந்தது.

விவசாயம் – 15 சதவிகிதம், தொழில் – 31 சதவிகிதம், சேவைப்பணிகள் – 54 சதவிகிதம்.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு 15 சதவிகித அளவிலேயே வேளாண்துறையின் பங்களிப்பு இருக்கிறது.

ஆனால் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் சற்றொப்ப 60 சதவிகிதத்தினர் வேளாண் துறையையே சார்ந்து வாழ்பவர்களாக உள்ளனர்.

தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பான 1.30 லட்சம் கிலோ மீட்டரில் 17.59 சதவிகிதம் காடுகளாகும்.

இவை நீங்கலாக உள்ள நிலப்பரப்பில் வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படும் நிலங்களில் பாசன வசதி அமையப்பெற்றது 48 சதவிகிதம் மட்டுமே; மீதமுள்ள 52 சதவிகித நிலங்கள் பாசன வசதியற்றவையாகும்.

1979 – 80இல் தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 48.1 சதவிகிதம் பயிர் சாகுபடிக்குப் பயன்படுத்தப்பட்ட நிலை இருந்தது.

இது 2005 – 06இல் 38.5 சதவிகிதமாகச் சுருங்கிவிட்டது என்பது அலட்சியப்படுத்த முடியாததோர் அபாய அறிவிப்பாகும்.

தமிழ்நாட்டில் பயிரிடப்படும் மொத்த நிலத்தில், பாசன வசதி கிடைக்கப்பெறும் நிலங்கள் சரிபாதிக்கும் குறைவு என்பது ஒன்று.

இந்தப் பாசன வசதியும், பருவமழையைப் பொறுத்ததுதான் என்பது இங்கே நினைவில் கொள்ள வேண்டிய மற்றொன்று.

பருவமழை பொய்க்கும்போது, தமிழ்நாடு வறட்சி நிலைமைகளைச் சந்திப்பது தொடர்ந்து நாம் அனுபவித்து வந்துள்ள துயரமான நிகழ்வுகள் என்பது மறக்கக்கூடியதல்ல.

தமிழ்நாட்டு விவசாயத்திற்குப் பாசன வசதியைப் பெருக்குவது என்பது, நமது அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னை மிகவும் சிக்கலாக நீடித்து வருவதால், உடனடியாக சாத்தியப்பாடு இல்லாத விஷயம்.

எனினும், சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவது, பருவமழை சராசரி அளவுக்கும் அதிகமாகப் பெய்யும் காலங்களில் மாநிலத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை மீறி நீர் வெளியேறிக் கடலில் கலப்பதைத் தடுப்பது, பாசனக் கால்வாய்கள் தூர்வாரப்படுவது, நீர் சேதாரத்தைத் தவிர்க்கும் வகையிலான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது, பயன்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றின் கொள்ளளவை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வேளாண்துறையைப் பலப்படுத்த உதவும்.

மாநிலத்தில் விவசாயிகள் கையில் உள்ள நில அளவு மற்றோர் அடிப்படையான அம்சமாகும்.

1995 – 96ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் 74.3 சதவிகிதம் உள்ள ஏழை – குறு விவசாயிகளிடத்தில் மொத்த விளைநிலத்தில் 30 சதவிகிதமே இருந்தது என்று அறியப்பட்டுள்ளது.

சிறிய – நடுத்தர – பெரும் விவசாயிகளின் சதவிகிதம் 10 மட்டுமே; ஆனால் அவர்கள் கையில் உள்ள நிலம் 46.1 சதவிகிதம் என்று அதே கணக்கீடு எடுத்துச் சொல்கிறது.

இந்தக் குறு விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடிவருவதும், இதனால் தமிழ்நாட்டின் விவசாயப் பெருங்குடிகளில் ஒரு பெரும் பகுதி ஏழ்மையில் தள்ளப்படுவதும் தொடர்கிறது என்பதையும் அரசுத்தரப்பு ஆவணங்களே ஒப்புக்கொள்கின்றன.

இந்த நிலைமைகளைக் கணக்கில் கொண்டு எடுக்கப்பட வேண்டிய முன்னுரிமை நடவடிக்கை என்பது அடிப்படை நிலச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதாகும்.

தமிழ்நாட்டில் இன்றைய திமுக அரசு அறிவித்துள்ள இலவச நில விநியோகத் திட்டம் விரிவாக்கப்படுவதும், விரைவுபடுத்தப்படுவதும் அவசர அவசியத் தேவையாகும்.

இதில் செல்வாக்குப் படைத்த தனியாரிடத்தில் உள்ள புறம்போக்கு மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களைக் கண்டறிந்து கையகப்படுத்தும் முயற்சிகளில் அரசு இறங்க வேண்டியது உடனடிக் கடமையாக முன்நிற்கிறது.

இந்த இலவச நில விநியோகத் திட்டத்தையும் தாண்டிச் சென்று, தமிழகத்தின் கிராமப்புறங்களில் இன்று நிலவுகிற நிலக் குவியலைத் தகர்ப்பதற்கான நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டியவையாக உள்ளன.

தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் பயிர் சாகுபடிக்குப் பயன்படுத்தப்படும் நிலத்தின் அளவு 1979 – 80இல் 62.59 லட்சம் ஹெக்டேராக இருந்தது; இது 2005 – 06இல் 50.10 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துவிட்டது.

சதவிகிதக் கணக்கில் 48.56}லிருந்து 38.46ஆக இதே காலகட்டத்தில் சுருங்கியுள்ளது. இந்தப் பின்புலத்தில், சிறப்புப் பொருளாதார மண்டலங்களும், “ரியல் எஸ்டேட்’ கட்டுமானத் துறையில் வேகவேகமாக நுழைய அனுமதிக்கப்படும் வெளிநாட்டு – உள்நாட்டுப் பெரு முதலாளிகளின் நிறுவனங்களும், சாகுபடிக்கு உட்படுத்தப்படும் நிலத்தின் அளவை மேலும் வெட்டிச் சுருக்க அனுமதிப்பது. கிராமப்புறங்களில் ஒரு ஆபத்தான சூழலை உருவாக்கிவிடும்.

இதே போக்கு இந்தியா முழுவதிலும் நிகழ்ந்து வருவது கண்கூடு. எனவே இந்த நிகழ்ச்சிப் போக்கைத் தடுத்து நிறுத்தாவிட்டால், 100 கோடியைத் தாண்டிவிட்ட இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.

பொருளாதார வளர்ச்சியில் வேளாண்துறையின் பங்கு குறைந்து வருவதையடுத்து, இதைச் சார்ந்து நிற்கும் சற்றொப்ப 60 சதவிகித மக்களைப் படிப்படியாக வேறு துறைகளுக்கு மாற்றுவது என்பது தவிர்க்க முடியாதது.

ஆனால் இன்று இந்தக் கணிசமான மக்கள் பகுதியினருக்குப் பயனுள்ள – வருவாய் ஈட்டத் தகுந்த – மாற்று வேலைகள் பெற்றுத் தருவது என்பது சுலபமல்ல.

எனவே கிராமப்புறங்களிலேயே வேளாண்துறையைச் சார்ந்த இதர தொழில்களை வளர்ப்பதில் ஒரு திட்டமிட்ட முயற்சி மேற்கொள்ளப்படுவது இன்றியமையாததாகும்.

தமிழக கிராமப் பொருளாதாரம் தொடர்பான இந்தக் கவலைக்குரிய அம்சங்களில் மாநில அரசு உடனடியாகக் கவனம் செலுத்துமா என்பதே கேள்வி!

(கட்டுரையாளர்: தேசியச் செயலர், சி.ஐ.டி.யூ.)

Posted in Economy, Finance, Govt, India, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Primary School Education: Nursery kids admission – Tamil Nadu, Children

Posted by Snapjudge மேல் ஜூன் 20, 2008

இது விதியல்ல, சதி!

சமீபத்தில் சென்னை முகப்பேரில் நடந்த சம்பவம் ஒன்று நமது சமுதாயத்தின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் ஏன் நம்மீதே நமக்குக் கோபத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது. 24-வயது அனிதா என்ற பெண்மணி தனது மூன்று வயதுப் பெண் குழந்தையை நர்சரி பள்ளியில் சேர்க்க நன்கொடை கொடுக்க முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டாள் என்பதுதான் அந்தத் திடுக்கிடும் செய்தி.

அனிதா தற்கொலை செய்து கொண்டு விட்டாள். ஆயிரக்கணக்கான அனிதாக்கள் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்குப் பல்வேறு தியாகங்களைச் செய்து கொண்டும், வெளியில் சொல்ல முடியாத நரக வேதனையை மனதில் சுமந்து கொண்டும், கடன்காரர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் அவமானத்தை மென்று விழுங்கிக் கொண்டும் வாழ்கிறார்கள் என்பது ஒன்றும் ரகசியமல்ல. பள்ளிக்கூடம் திறக்கிறது என்கிறபோதே வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு பதைபதைக்கும் பெற்றோரும், உற்றார், உறவினர், நட்பு என்று அனைவரிடமும் கைநீட்டிக் கெஞ்சும் பெற்றோரும் ஏராளம் ஏராளம்.

“தம்மிற் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது’ என்பது வள்ளுவப் பேராசானே எழுதி வைத்த குறள். அக்கம்பக்கத்துப் பெண்டிரும், உற்றார் உறவினரும் தத்தம் குழந்தைகளைப் பெரிய பணக்காரக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு அனுப்பும்போது, தங்களது குழந்தைகளுக்கும் அந்தக் கல்வி தரப்பட வேண்டும் என்று எந்தவொரு பெற்றோரும் விழைவது இயல்பு. அப்படித் தர முடியாத நிலையில், விரக்தியும் வேதனையும் ஏற்படுவது தவிர்க்க முடியாதுதான்.

கிராமப்புறங்களிலிருந்து படித்துப் பட்டம் பெற்றுத் தங்கள் வாழ்க்கைத் தரத்தைப் பன்மடங்கு உயர்த்திக் கொண்ட கையோடு, தத்தம் குழந்தைகளை மிகப்பெரிய பணக்காரக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் படிக்க வைக்க, தங்களுக்கு இயலாமல் போன கனவுகளைப் பூர்த்தி செய்து கொள்ளப் பலர் துடிக்கிறார்கள். அதற்காக எந்த விலையையும் கொடுக்க அவர்கள் தயாராகிறார்கள் என்பதைத்தான் மேலே கூறிய செய்தி உறுதிப்படுத்துகிறது.

சமச்சீர் கல்வி, உயர்கல்வி, மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் என்றெல்லாம் பேசுகிறோமே தவிர, இந்தத் தனியார் பள்ளிகளின் கட்டணத்தையும், நன்கொடையையும் முறைப்படுத்த நமது அரசு ஏன் முன்வருவதில்லை என்பது புதிராகவே இருக்கிறது. காளான்கள் போலத் தனியார் பள்ளிகள் ஆங்காங்கே முளைக்கின்றன. இந்தப் பள்ளிகள் நன்கொடை வசூலித்துத் தங்களது கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கிக் கொள்கின்றன. கேள்வி கேட்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், இது தனியார் முயற்சி என்றும் கூறுகிறார்கள். நாமும் பார்த்துக் கொண்டு வாளாவிருக்கிறோம்.

தனியார் பள்ளிகளை விடுங்கள். அரசு நடத்தும் பள்ளிகள் மற்றும் அரசின் உதவியுடன் நடத்தப்படும் பள்ளிகளில் அதிகாரபூர்வமற்ற வகையில் நன்கொடைகள் வசூலிக்கப்படுகின்றன. இது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமலா நடைபெறுகிறது? இத்தனைக்கும் தமிழக அரசின் 1972ஆம் ஆண்டு சட்டப்படி இந்த நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது தடுக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் இட ஒதுக்கீடு மூலம் சமூக நீதியை நிலைநாட்டுகிறோம் என்று சொல்லிக் கொள்பவர்கள், இன்னொருபுறம் பள்ளிக் கல்வியில் தனியார் தலையீட்டை அதிகரித்து சமூக ஏற்றத் தாழ்வு என்கிற நஞ்சைப் பிஞ்சு உள்ளங்களில் விதைக்கின்றனர். பணக்காரக் குழந்தைகள் மட்டுமே படிக்கும் தனியார் பள்ளிகள் ஒருபுறம், ஏழைகள் மட்டுமே படிக்கும் அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துப் பள்ளிகளும், அரசு உதவியுடன் நடத்தப்படும் பள்ளிகளும் மறுபுறம்.

பசி, வறுமை, ஏழ்மை என்றால் என்னவென்றே தெரியாமல் வளரும் சமுதாயம் ஒருபுறம். கல்வியில்கூட வறுமையே கதி என்கிற விதியை வரித்துக் கொண்ட குழந்தைகள் மறுபுறம். இட ஒதுக்கீட்டால் ஏற்படும் சமூகநீதிகூட பணக்காரப் பள்ளிகளில் படித்தால் மட்டுமே கைகொடுக்கும் துர்பாக்கிய நிலை. ஏழையாகப் பிறந்த குற்றத்திற்காக அந்தக் குழந்தையும், அந்தக் குழந்தையைப் பெற்ற குற்றத்திற்காக அந்தப் பெற்றோரும் இதையெல்லாம் விதியென்று கருதி வாளாவிருப்பதுதான் சமுதாய நீதியா?

மேலே எழுப்பிய கேள்விகளைப் பெருந்தலைவர் என்று அழைக்கப்படும் முன்னாள் முதல்வர் கு. காமராஜ் உணர்ந்திருந்தார். அதனால்தான் கட்டாயக் கல்வி என்கிற பெயரில் அனைவருக்கும் கல்வி அளித்தது மட்டுமல்லாமல் பள்ளிக் கல்வியை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். தனியார் பள்ளிகளும் அரசின் சட்ட மற்றும் பாடத்திட்டங்களுக்கு உள்பட வைத்தார். தமிழகத்தில் சாதி பேதம் மறைந்து சமூக ஏற்றத்தாழ்வுகள் பெருமளவில் குறைந்ததற்குக் காமராஜின் கல்விக் கொள்கைதான் தலையாய காரணம்.

பள்ளிக் கல்வியை தனியாரிடமிருந்து அகற்றி அரசே ஏற்று நடத்துவது மட்டும்தான் இதற்கு ஒரே தீர்வு. அதைச் செய்யாத வரையில் சமூக நீதியும் சமச்சீர் கல்வியும், அனைவருக்கும் கல்வியும் உதட்டளவு உபந்நியாசமாகத்தான் தொடரும்!

Posted in Economy, Finance, Govt, India, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

N Murugan: Economic Depression & Inflation in India: Sensex, Finance, Markets

Posted by Snapjudge மேல் ஜூன் 20, 2008

பணவீக்கமும் பொருளாதார வீழ்ச்சியும்

என். முருகன்

நம் எல்லோரின் கவனத்தையும் முழுமையாக ஈர்த்துள்ள சமீபத்திய பிரச்னை பணவீக்கம். வேறு எந்த அம்சமும் உண்டாக்காத தலைவலியை ஆளும் கட்சிக்கு உருவாக்கும் பிரச்னை இது.

காரணம், இந்தியா போன்ற ஒரு வளர்ந்து வரும் ஏழைகள் நிறைந்த நாட்டில் மிக அதிகமாக மக்களைப் பாதிப்பது பொருள்களின் விலைவாசிதான்.

பணவீக்கம் என்பது பொருள்களின் விலை ஏற்றத்தைக் குறிக்கும் என்பதால் தான் இவ்வளவு அதிகமான விளம்பரத்துடன் அன்றாடம் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் அது அலசப்படுகிறது.

வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாத ஒன்று பணவீக்கம் என்பது பொருளாதாரம் பற்றி ஓரளவு விவரம் தெரிந்தவர்களுக்குப் புரியும். இரண்டு முக்கியமான காரணங்களினால் பணவீக்கம் உருவாகிறது. மக்கள் பொருள்களை அதிகம் வாங்குவதால் உருவாகும் விலை ஏற்றம் முதலாவது ஆகும்.

பொருளாதாரம் பற்றிய பாடங்களைக் கல்லூரிகளில் கற்பிக்கும் போது இரண்டு அடிப்படை விஷயங்கள் விவாதிக்கப்படும். ஒன்று டிமாண்ட் எனப்படும் பொருள்களின் தேவை. மற்றொன்று அப்பொருள்களை உற்பத்தி செய்து விநியோகிக்கும் சப்ளை எனப்படுவதாகும். மக்களின் தேவை அதிகமாகி விநியோகிக்கும் பொருள்கள் குறைவாகத்தான் கிடைக்கும் எனில் அவற்றின் விலைவாசி உயர்ந்துவிடும். இதனை டிமாண்ட் விலையை மேலே இழுத்துச் சென்று விட்டதால் உருவான பணவீக்கம் (Demand- Pull Inflation) என்கிறோம்.

இரண்டாவதாக உற்பத்தியாகும் பொருள்களுக்கு உபயோகிக்கப்படும் மூலப்பொருள்களின் விலை அதிகமாகும்போது, அப்பொருள்களின் விற்பனை விலை தானாக ஏறி அதனால் உண்டாகும் பணவீக்கம் (Cost- Push Inflation). பொருளாதாரம் வளர்ச்சி அடைய ஓரளவு பணவீக்கத்தை நாம் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று சொல்லலாம். அல்லது நமது நாட்டை வேறு எந்த அன்னிய நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளும் தொடாதவகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு தனியாக நமது பொருளாதாரம் இருக்க வேண்டும்.

1990-க்கு முன்னர் நமது பொருளாதாரத்தை அடைபட்ட ஒரு பொருளாதாரம் (Closed- Economy) என கூறுவார்கள். ஏற்றுமதி- இறக்குமதி கட்டுப்பாடுகள், சில பொருள்களை பொதுத்துறையில், பல தொழில்களை சிறு தொழில்களாக தனியாரிடம், எல்லா தொழில்களையும் லைசென்ஸ் முறையில் என பல கடுமையான சட்டதிட்டங்களை நாம் நிறைவேற்றிக் கையாண்டோம். இதில் பல நன்மைகள் உண்டு. நமது பொருளாதாரத்தின் முழுப்பலனும் நமது மக்களைச் சென்றடையும்படி பல வளர்ச்சித் திட்டங்களுடன், ஏழை எளிய மக்களுக்கு மானியச் சலுகைகளும் வழங்கப்பட்டன.

ஆனால், மற்றைய நாடுகளில் தாராளமயமாக்கலின் மூலம் வேகமான வளர்ச்சி ஏற்பட்டதை, நமது மூடி அடைக்கப்பட்ட பொருளாதாரத்தில் இறக்குமதிக்கு அதிகமான அன்னியச் செலாவணி தேவை என்பதால் நமது டாலர் கையிருப்பு குறைந்து நமது வெளிநாட்டுக் கடன்களுக்கு வட்டியும் முதலும் செலுத்தப்படாத ஒரு நிலைமையில் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தி அன்னிய முதலீடுகள் வரவேற்கப்பட்டன. உலக மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் மிக வேகமாக நிறைவேற்றப்பட்டது.

இதன் பலனாக தேசிய வருமானம் பெருகி நிறைய வேலை வாய்ப்புகள் உருவாயின. உலகின் பல நாடுகள் போல இங்கேயும் ஆண்டு வளர்ச்சி விகிதாசாரம் 8, 9 சதவிகிதங்கள் என்ற உயரிய இலக்குகள் அடைந்த பெருமிதம் நம் எல்லோரிடமும் பரவியது.

பலர் நாம் சுதந்திரம் அடைந்த பின், 1990 வரை கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கைகள் தவறு எனவும், அப்போதிருந்தே நாம் இப்போது கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்திருந்தால் நாம் இதைவிட அதிகமான முன்னேறிய நிலையில் இருந்திருக்கலாமே என கூறினார்கள். ஆனால், நமது பணவீக்கம் திடீரென நாலுகால் பாய்ச்சலில் சென்றதால் எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கிறோம்!

பணவீக்கமும் பொருளாதார வளர்ச்சியும் பிரிக்க முடியாதவை. ஆனால் வளர்ந்துவிட்ட பல மேலை நாடுகளில் மக்களுக்கிடையில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உள்நாட்டில் அதிகம் இல்லை என்பதால் விலை ஏற்றத்தை மக்கள் எளிதாகச் சமாளிப்பார்கள். அதாவது, சிறிது காலம் விலையேற்றம் இருக்கும். பின்னர் அது சரிக்கட்டப்பட்டுவிடும். ஆனால் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் உள்ள நமது நாட்டில் விலைவாசி ஏற்றம் என்பது மிகக் கடுமையாக ஏழை மக்களை வெகுவாகப் பாதித்து விடும் என்பதால்தான் நாம் இவ்வளவு அதிகமாக பணவீக்கம் பற்றிக் கவலைப்படுகிறோம்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளை முடுக்கிவிடலாம். பணப்புழக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால், பணவீக்கம் ஓரளவு குறையும். ஆனால், இதனால் பொருளாதார வளர்ச்சி உடனடியாகப் பாதிக்கப்படும். ஏனென்றால் வங்கிக் கடன்களின் வட்டி விகிதம் பொருள்களின் உற்பத்தியையும், தனியார் கடன் பெறுவதையும் பாதித்து பொருளாதார வளர்ச்சியையும் வேலை வாய்ப்பையும் குறைத்து விடும்.

எனவே மிக கவனமாக இப் பிரச்னை கையாளப்பட வேண்டும். பணவீக்கம் அரசியல் ரீதியாக பல பிரச்னைகளை ஆட்சியில் இருப்பவர்களுக்கு உருவாக்கும். இது தேர்தல் காலம் என்பதால் ஆளும் கட்சி அரசியல் வாதிகளுக்கு கடுமையான சோதனைகளையும், எதிர்க்கட்சியினருக்கு ஆளும் கட்சியினரைச் சாட ஒரு சரியான ஆயுதத்தையும் பணவீக்கம் அளிக்கிறது.

ஆனால் நம் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டியது பணவீக்கம் கட்டுப்படமுடியாமல்போய் பழங்காலத்தில் சிதறுண்டுபோன அரசுகள் பற்றிய தகவல்கள்தான். இதைக் “”கட்டுப்படுத்த முடியாத ஹைபர்இன்ஃப்ளேஷன் (Hyper inflation்) மற்றும் பொருளாதார வீழ்ச்சி (Economic Collapse) என கூறலாம்.

1946- ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஹங்கேரியில் நிலவிய பணவீக்கம்தான் இதுவரை உலகிலேயே அதிகமான பணவீக்கம் என கணக்கிடப்பட்டுள்ளது. இரண்டாம் உலக யுத்தத்தின் விளைவாக பெங்கோ எனும் ஹங்கேரிய பணம் வீழ்ச்சியடைந்து, ஒரு பெங்கோ பின்னர் 828,000,000,000,000,000,000,000,000,000 பெங்கோவுக்கு சமமானது. (ஆம்! 828 எனும் நம்பருக்கு அடுத்து 27 சைஃபர்கள்)

அதேபோல் 1920 ஆம் ஆண்டில் ஜனநாயக முறையில் வெய்மெர் குடியரசு ஜெர்மனியில் மிக மோசமான அரசாங்க நடவடிக்கைகளின் சின்னமாக விளங்கி, அந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. அதற்கு ஒரு முக்கியமான காரணம் முதல் உலகப்போர் முடிந்த பின்னர் ஜெர்மனியின் மீது 132 கோடி மார்க் நஷ்டஈடு வழங்க போரில் வெற்றி பெற்ற நாடுகள் வலியுறுத்தியதால் பணவீக்கம் அதிகரித்தது. 1922- ஆம் ஆண்டு பணவீக்கம் 5470 சதவிகிதம் ஆனது! (நமது பணவீக்கம் தற்போது 8.2 சதவிகிதம்). இதனால் ஜெர்மனியில் பொருள்களின் விலையேற்றம் 1,300,000,000,000 மடங்கு அதிகமானது. (ஆம்,13 எனும் நம்பருக்கு அடுத்து 11 சைஃபர்கள்தான்).

ஜெர்மானியர் ஒருவர் 1923- ஆம் ஆண்டு ஒரு சாதாரண கடிதத்தை அமெரிக்காவுக்கு அனுப்ப ஆன ஸ்டாம்ப் செலவு 2 லட்சம் மார்க். ஒரு பவுண்டு வெண்ணெயின் விலை 15 லட்சம் மார்க். 1 கிலோ மாமிசம் 20 லட்சம் மார்க். ஒரு முட்டையின் விலை 60 ஆயிரம் மார்க். பொருள்களின் விலை எவ்வளவு வேகமாக மாறியது என்பதைக் குறிக்க, ஒரு ஹோட்டலில் உணவு அருந்திக் கொண்டிருக்கும் போதே உணவுப் பண்டங்களின் விலையைக் கூட்டி சர்வர்கள் கூறுவதை எடுத்துக்காட்டாகச் சொல்வார்கள். ஆக, ஹோட்டலுக்குள் நுழையும் போது இருந்ததைவிட அதிகம் விலையை ஒருவர் சாப்பிட்ட பண்டத்திற்கு வழங்க வேண்டியிருந்தது.

இவை சரித்திரபூர்வமான உண்மைகள். இவ்வளவு கடுமையான பணவீக்கமும் பொருளாதார வீழ்ச்சியும் இனி நடக்காது எனலாம். ஆனால் நம் நாட்டில் 83 கோடியே 60 லட்சம் மக்கள் ஒரு நாளைக்கு ரூ.20- க்கு கீழே வருமானம் உள்ளவர்கள் என மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அர்ஜுன் சென்குப்தா கமிட்டி சொல்லியிருப்பதை கருத்தில் கொண்டால் சிறிதளவு பண வீக்கமும் அதனால் ஏற்படும் விலைவாசி உயர்வும் நமக்கு எவ்வளவு பாதகம் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்!

(கட்டுரையாளர்: ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி).

—————————————————————————————————————————————

பதற வைக்கும் பற்றாக்குறை…

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பணவீக்க விகிதம் மட்டும் அதிகரிக்கவில்லை, மத்திய -மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இத்துடன் அரசுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பைக் குறைக்க, மத்திய அரசு அனுமதித்துள்ள ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் கடன் பத்திர வெளியீடும் கவலைதரும் அம்சமாகும்.

கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, மின்னுற்பத்தி போன்ற அவசியப் பணிகளுக்கு நிதி இல்லாமல் தவிக்கும்போது வெவ்வேறு வகை மானியச் செலவுகளை மத்திய, மாநில அரசுகள் அதிகரித்துக்கொண்டே போவது நல்லதல்ல. நல்ல திட்டங்களுக்கு பயன்படக்கூடிய நிதியே, மானியம் என்ற பெயரில் வேறு செலவுகளுக்குத் திருப்பிவிடப்படுகிறது என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெயின் விலை உயரும்போதெல்லாம் உள்நாட்டிலும் உயர்த்திக் கொள்வது என்று முன்னர் எடுத்த முடிவை, அவ்வப்போது எதிர்ப்பட்ட சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களுக்காக ஒத்திப்போட்டுக்கொண்டே வந்து எண்ணெய் நிறுவனங்கள் திவாலாகும் நிலைமைக்குக் கொண்டுவந்துவிட்டது மத்திய அரசுதான். இப்போது அரசுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்காக மட்டும் ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்புக்குக் கடன் பத்திரத்தை வெளியிட அனுமதி தந்திருக்கிறது. இது நஷ்டத்தை கணக்கில் காட்டாமல் மூடி மறைக்கும் தந்திரம் ஆகும்.

இந்தத் தொகை பொது பட்ஜெட்டில் இடம் பெறாது. அதே சமயம் இந்த நிதிச் சுமை எதிர்கால அரசின் கழுத்தை நெரிக்கும். மானியம் என்பது அரசுக்கு மக்கள் செலுத்தும் வரியிலிருந்து ஒதுக்கப்படும் தொகைதானே தவிர யாரும் இனாமாகத் தருவதில்லை. விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து வாங்க தரப்படும் மானியங்களும், ஏற்றுமதியாளர்களுக்கு சர்வதேசச் சந்தையில் போட்டிபோடத் தரப்படும் மானியங்களும் புரிந்துகொள்ளத்தக்கதே. இவற்றை வரவேற்பதில் தவறும் இல்லை. ஆனால் வாக்காளர்களைக் கவர வேண்டும் என்பதற்காக அறிவிக்கப்படும் வெற்று ஜனமயக்கு திட்டங்களுக்குச் செலவிடப்படும் மானியம் விழலுக்கு இறைத்த நீர்தான்.

மத்திய, மாநில அரசுகள் தங்களுடைய பட்ஜெட்டில் நிர்ணயித்தபடி பட்ஜெட் பற்றாக்குறையையும் நிதிப் பற்றாக்குறையையும் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதற்காக “”நிதிப்பொறுப்பு மசோதா” நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால் அதன்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற உணர்வு ஆட்சியாளர்களிடம் இல்லை. கடந்த ஆண்டு இந்த ஒட்டுமொத்தப் பற்றாக்குறை அளவு 5.7% ஆக இருந்தது. இதை 3%-க்குள் அடக்கிவிட வேண்டும் என்பதுதான் அரசின் லட்சியம் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இது 7%-ஐ தாண்டிவிடும் என்று அஞ்சப்படுகிறது. பணவீக்க விகிதம் 11%-ஐ தாண்டியதைவிட இது ஆபத்தானது.

அன்னியச் செலாவணி கையிருப்பு இதுவரைக்கும் திருப்திகரமாகவே இருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 13 லட்சம் கோடி ரூபாய். ஆனால் இந்தத் தொகை பெரிய கடல்போல காட்சி தந்தாலும் ஒன்றை நாம் மறக்கக்கூடாது. உலக வங்கியிலும் ஆசிய வளர்ச்சி வங்கியிலும் நாம் வாங்கிய கடனையும், பிற வெளிநாடுகளிடம் வாங்கிய கடன்களையும் இன்னமும் முழுதாக அடைத்துவிடவில்லை. அந்தக் கடன்களுக்கு வட்டியைத்தான் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

இந்த அன்னியச் செலாவணி கையிருப்பில் நமது தொழிலதிபர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோருக்கு மட்டும் அல்ல, நம் நாட்டில் நேரடி முதலீட்டில் இறங்கியுள்ள அன்னிய முதலீட்டாளர்களுக்கும் பங்கு உள்ளது. அவர்கள் இதைத் தங்கள் நாட்டுக்குத் திரும்ப எடுத்துச் செல்ல முற்பட்டால் இது வேகமாகக் கரைந்துவிடும்.

பருவமழை இந்த ஆண்டு மோசமாக இராது என்பதும் உணவு தானிய விளைச்சல் குறையாது என்பதும் ஆறுதல் தரும் விஷயம். ஆனால் மானியச் செலவுகள் அதிகரிப்பதும், நிதிப் பற்றாக்குறை கடுமையாக உயர்வதும் கவலைதரும் அம்சங்கள். பணவீக்க விகிதம், வங்கி வட்டி வீதம், பண சப்ளை ஆகியவற்றைத் திறம்பட நிர்வகித்துவந்த மத்திய அரசு, “”அரசியல் காரணங்களுக்காக” தடுமாற்றத்தில் சிக்கி, கட்டுப்பாடுகளைக் கோட்டைவிட்டுவிட்டது கவலையைத் தருகிறது. அடுத்துவரும் அரசு பார்த்துக் கொள்ளட்டும் என்று எண்ணாமல் கடிவாளத்தை இழுத்துப் பிடிக்க வேண்டியது அவசியம்.

Posted in Economy, Finance, India | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »