Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Indices’ Category

Nothing macho about India’s forex reserves – Impact on growth and prices: Varadharajan

Posted by Snapjudge மேல் திசெம்பர் 7, 2007

அன்னியச் செலாவணி கையிருப்பு “நீர்க்குமிழியா’?

உ .ரா. வரதராசன்

“இந்திய நாட்டின் பொருளாதாரம் இமயமென உயர்ந்து நிற்கிறது’ என்று வளர்ச்சியின் பரிணாமங்களை வியந்து போற்றுகிற ஆட்சியாளர்களும் வல்லுநர்களும் அதற்கான சான்றாகச் சுட்டிக்காட்டுவது நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு பற்றிய புள்ளிவிவரங்களாகும்.

உலகமய, தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து அமல்படுத்தத் தொடங்கியது 1991 ஆம் ஆண்டில்தான். அந்த ஆண்டு மார்ச் இறுதியில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் அன்னியச் செலாவணிக் கையிருப்பாக இருந்த தொகை 580 கோடி அமெரிக்க டாலர் மட்டுமே. இது படிப்படியாக உயர்ந்து 2007 மார்ச் இறுதியில் 19,920 கோடி டாலராக ரிசர்வ் வங்கியில் அம்பாரமாகக் குவிந்து கிடப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.

பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்தத் தொடங்கியதற்குப் பிரதான காரணங்களாகச் சொல்லப்பட்டவற்றில் ஒன்று, நாடு சந்தித்த அன்னியச் செலாவணி நெருக்கடி. மறைந்த சந்திரசேகர் பிரதமராக இருந்த காலகட்டத்தில், அன்னியச் செலாவணி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு வேறு வழியில்லாமல், மத்திய அரசு ரிசர்வ் வங்கியிலிருந்த தங்கத்தை டன் கணக்கில் எடுத்துக்கொண்டு போய் இங்கிலாந்து (மத்திய) வங்கியில் அடமானம் வைக்க நேரிட்டது என்பது சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குத் தலைக்குனிவை ஏற்படுத்திய நிகழ்வு. அந்த நிலைமை இப்போது தலைகீழாய் மாறியிருக்கிறது என்பதையே தற்போதைய அன்னியச் செலாவணிக் கையிருப்பு விவரங்கள் உணர்த்தும் நிலவரம்.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கையில், இது மிகவும் திருப்திகரமானதொரு நிலைமை என்றே தோற்றமளிக்கலாம். இதை அளவுகோலாகக் கொண்டால், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பெரும் வெற்றியை நம் நாட்டுக்குத் தேடித் தந்துள்ளதாகவே முடிவுக்கு வரத் தோன்றும். ஆனால், இந்தக் கையிருப்பின் கணக்குகளை சற்றுக் கருத்தூன்றிப் பரிசீலித்தால், கவலையே மிஞ்சுகிறது.

1991 முதல் 2007 வரையிலான 16 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் நமக்குச் சாதகமான பலன்கள் விளைந்தனவா என்பது முதலில் பார்க்க வேண்டிய கணக்கு.

  • 1990 – 91ஆம் ஆண்டில் நமது இறக்குமதிகளின் மொத்த மதிப்பு ரூ. 50,086 கோடி;
  • ஏற்றுமதிகளின் மதிப்பு ரூ. 33,152 கோடி மட்டுமே.
  • நிகர பற்றாக்குறை ரூ. 16,934 கோடி!
  • இது டாலர் கணக்கில் 944 கோடி.
  • இதுவே, 2005-06ஆம் ஆண்டில் ரூ. 2,29,000 கோடி பற்றாக்குறையாக உயர்ந்தது;
  • டாலர் கணக்கில் இந்தப் பற்றாக்குறை 5,184 கோடியாகும்.

கடந்த பதினாறு ஆண்டுகளில் ஓர் ஆண்டில்கூட நம் நாட்டின் மொத்த ஏற்றுமதி மதிப்பு, இறக்குமதி மதிப்பைவிடக் கூடுதலாக இல்லை என்பதுதான் புள்ளிவிவரங்கள் கூறும் உண்மை.

இந்தப் பதினாறு ஆண்டுகளில் சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்ட நிகர பற்றாக்குறை – ஏற்றுமதியை விஞ்சிய இறக்குமதியால் சந்திக்க வேண்டிய சுமை – 3,410 கோடி டாலர் என்று ரிசர்வ் வங்கிக் கணக்கு கூறுகிறது. (ரூபாய் மதிப்பில் இன்றைய நிலவரப்படி இது 1,37,000 கோடி ரூபாய் பற்றாக்குறையாகும்!)

இப்படியிருக்கையில், நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு மட்டும் உயர்ந்து கொண்டே இருப்பது எப்படி என்ற கேள்வி எழுவது இயல்பே!

சர்வதேச ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தக நிலவரம் நமக்குச் சாதகமாக அமையாத பின்னணியில், நம் நாட்டின் ஆட்சியாளர்கள் அன்னியச் செலாவணி வரத்தைக் குறியாகக் கொண்டு, நிதித்துறை சீர்திருத்தங்கள் பலவற்றையும் அமலாக்கி வந்துள்ளனர்.

இதன் முதல் கட்டமாக 1991 ஆம் ஆண்டு தொடங்கி நமது நாட்டுப் பொருளாதாரத்தின் சகல துறைகளும் – பாதுகாப்புத்துறை உள்பட – அன்னிய முதலீட்டுக்காகத் திறந்துவிடப்பட்டு வந்துள்ளன. புதிதாகத் தொழில் தொடங்க நூற்றுக்கு நூறு சதவீத முதலீட்டுக்கு மட்டுமன்றி, இந்தியாவின் தொழில் நிறுவனங்களை விலைபேசி கையகப்படுத்துவதற்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டது.

இரண்டாவதாக 1993 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொழில் முதலீட்டுக்கு மட்டுமன்றி, பங்குச் சந்தை வர்த்தகத்திலும் அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் நுழைய அனுமதிக்கப்பட்டன.

இந்த இரண்டு வகையிலும், பன்னாட்டு நிதி மூலதனம் நம் நாட்டுக்கு வருவதற்கு ஊக்கம் அளிப்பதற்காக அடுக்கடுக்கான சலுகைகளும் வாரி வழங்கப்பட்டன.

இவற்றில், முதல் வகையில் நேரடித் தொழில் முதலீடுகளாக வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, இரண்டாவது வகையில், பங்குச் சந்தை வர்த்தகத்திற்காக வந்த தொகைகள் பல மடங்காகும்.

நேரடித் தொழில் முதலீட்டிலும், புதிய தொழில்களைத் தொடங்க வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, உள்நாட்டு நிறுவனங்களை கபளீகரம் செய்வதற்காக வந்த மூலதனமே மிகுதியாகும்.

இரண்டாவது வகையாக பங்குச் சந்தை வர்த்தகத்தில் (சூதாட்டத்தில்) நுழைந்துள்ள அன்னிய மூலதனத்தின் வளர்ச்சி திகைப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இதற்கு அனுமதி வழங்கப்பட்ட 1993 ஆம் ஆண்டில், அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் இந்தியாவின் பங்குச் சந்தையில் ஈடுபடுத்திய தொகை 83 கோடி அமெரிக்க டாலர்கள். இதுவே 2007 மார்ச் இறுதியில் 5200 கோடி டாலர்களாக “விசுவரூபம்’ எடுத்தது! இப்படி மூலதனக் கணக்கில் வரவாக வந்த அன்னியச் செலாவணிதான் ரிசர்வ் வங்கியில் ஏகபோகமாக குவிந்து நிற்கிறது!

இதற்கு விலையாக நமது நாடு கொடுத்தவை ஏராளம், ஏராளம்!

இந்த அன்னிய மூலதன வரவுக்கு எந்தக் கட்டுப்பாடும், நிபந்தனையும் கிடையாது. அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் கொண்டு வரும் நிதி மூலதனத்தின் உண்மையான சொந்தக்காரர்கள் யார் என்று தெரிவிக்க வேண்டியது கட்டாயமில்லை!

இந்த முதலீடுகள் கொழிக்கும் லாபத்துக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்கு உண்டு. இதற்காக மொரிஷியஸ் நாட்டோடு பாஜக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டு, அந்த நாட்டின் வழியாக வந்து போகும் அன்னிய மூலதனம் எந்த வரிவிதிப்புக்கும் உட்படாது. (இதை மறுபரிசீலனை செய்வோம் என்று குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் கூறியுள்ள இன்றைய மத்திய அரசு, கடந்த மூன்றரை ஆண்டுகளாக இதைக் கண்டுகொள்ளவே இல்லை!)

இந்த அன்னிய மூலதனம்தான் நமது நாட்டின் பங்குச் சந்தையை ஆட்டிப் படைக்கிறது. இந்தியாவின் பெரிய தொழில் நிறுவனங்களில் 30 கம்பெனிகளின் பங்குகளின் விலை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படும் “சென்செக்ஸ்’ குறியீடு ஒரு மாயாஜால விளையாட்டாக மாறியுள்ளது.

1990 ஜனவரியில் 1000 என்று இருந்த சென்செக்ஸ் புள்ளிகள் 2004 ஆம் ஆண்டு வரை 7000 புள்ளிகளுக்குக் கீழாகவே இருந்தது. 2005 ஜூன் மாதம் 7000 புள்ளியை எட்டிப்பிடித்த சென்செக்ஸ், இப்போது 20,000 புள்ளிகள் வரை நாலு கால் பாய்ச்சலில் எகிறிக் குதித்துள்ளது! இதன் ஏற்ற இறக்கங்களில் பல லட்சம் கோடி ரூபாய்கள் நாள்தோறும் ஒரு பிரிவினருக்கு லாபமாகவும், இன்னொரு பிரிவினருக்கு இழப்பாகவும் பரிமாற்றமாகின்றன.

சென்செக்ஸ் பற்றி நாட்டின் நிதியமைச்சர் ப. சிதம்பரம் “சில நேரங்களில் வியப்பாகவும், சில நேரங்களில் கவலையளிப்பதாகவும்’ இருக்கிறது என்று அண்மையில் கூறியிருந்தார். அதைத் தாண்டி இந்த “மாயா பஜார்’ விளையாட்டைக் கட்டுக்குள் கொண்டு வருவது பற்றி சிந்திக்கக்கூட அரசு மறுப்பதுதான் வேதனை!

எனவேதான், அரசுத் தரப்பில் ஆர்ப்பரிப்போடு பேசப்படுகிற அன்னியச் செலாவணிக் கையிருப்புப் பெருக்கம், பொருளாதார வளர்ச்சிக்கு அளவுகோல் அல்ல; அது சோகை பிடித்த பொருளாதார நீரோட்டத்தின் மேற்பரப்பில் தென்படும் நீர்க்குமிழி போன்றதே!

பொருளாதாரச் சீர்திருத்தங்களின் எதிர்ப்பாளர்கள் மட்டுமல்ல – ஆதரவாளர்களே ஆழ்ந்த கவலையோடு பரிசீலிக்க வேண்டிய நிலைமை இது!

(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)

Posted in ADR, Agflation, America, APR, Balance, Balance sheet, Balancesheet, Banks, Benefits, Budget, Conversion, Currency, Deficit, Deflation, Dollar, Economy, Exchange, Exports, FDR, Finance, financial, forex, Funds, GDP, Growth, Imbalance, IMF, Impact, Imports, Index, India, Indices, Inflation, Interest, investments, Loans, Loss, markets, MNC, Monetary, Numbers, PC, Policy, Prices, Profit, Rates, RBI, reserves, Return, ROI, Shares, Statistics, Statz, Stocks, Tariffs, Tax, US, USA, Varadharajan, Varadharasan, WB | Leave a Comment »

Don’t rush to cut policy rates: Monetary, fiscal recipe for overheating India

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 22, 2007

வங்கிகளில் அரசு தலையீடு?

எஸ். கோபாலகிருஷ்ணன்

வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மோட்டார் வாகனத் தொழில் சார்ந்த மூத்த நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், வங்கிக் கடன்களுக்கான வட்டிவீதத்தைக் குறைக்க வேண்டும் என்று யோசனை கூறினார். இது வெறும் யோசனை அல்ல, அரசின் ஆணை என்றே பலர் கருதினர்.

அதற்கேற்ப, ஓரிரு தினங்களில், சில வங்கிகளின் உயர்நிலை நிர்வாகிகள் வட்டி குறைக்கப்பட வேண்டியதுதான் என்று வழிமொழிந்தனர். அக்டோபர் 10, பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன், மோட்டார் வாகனக் கடன், டிரக் கடன் ஆகியவற்றுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்தது. இதர வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வட்டியைக் குறைத்தன.

வங்கிகள் தங்கள் கடனுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், இந்த நிகழ்வு, வேறு சில கருத்துகளுக்கும் இடம் அளித்துவிட்டது. பொதுமக்களிடமிருந்து டெபாசிட் திரட்டுவதும், திரட்டிய பணத்தை வாடிக்கையாளர்களுக்குக் கடனாக வழங்குவதும் வங்கிகளின் தலையாய தொழில். அதேபோல், பொதுமக்களின் டெபாசிட் தொகைக்கு எவ்வளவு வட்டி கொடுப்பது மற்றும் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு எவ்வளவு வட்டி வசூலிப்பது என்பதை நிர்ணயிப்பதும் வங்கிகளின் பணியே.

இந்த நியதி, அரசு உள்பட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால், பொருளாதார சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டபின்னர், மத்திய அரசு இந்த நியதியைப் பெரும்பாலும் கடைப்பிடிக்கவும் செய்தது.

விவசாயக் கடன், சிறுதொழில் கடன், மாணவர்களுக்குக் கல்விக் கடன் உள்ளிட்ட முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் கடன்கள் தொடர்பான விதிமுறைகள் தவிர பிறகடன்களுக்கான வட்டிவீதத்தை வங்கிகளே வணிகரீதியில் நிர்ணயிக்கின்றன.

வைப்புத்தொகைகளுக்கான வட்டிவீதத்தையும் ஒவ்வொரு வங்கியும் அவ்வப்போது தனது தேவைகளுக்குத் தகுந்தபடி கூட்டியோ குறைத்தோ வழங்குகிறது. எல்லா வங்கிகளுக்கும் ஒரே சீரான வட்டிவீதத்தை நிர்ணயிக்கும் வழக்கத்தை ரிசர்வ் வங்கி கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விதிவிலக்காக, சேமிப்பு கணக்குக்கான வட்டிவீதம் மட்டுமே அனைத்து வங்கிகளுக்கும் ஒரே சீராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் வட்டிவீதத்தைக் குறைக்கும்படி யோசனை கூறியதும், அதை வங்கிகள் விரைந்து செயல்படுத்தியதும், ஒரு பொது விவாதத்திற்கு இடமளித்திருப்பதில் வியப்பேதும் இல்லை.

பொதுத்துறை வங்கிகளின் பெரும்பான்மைப் பங்குதாரர் மத்திய அரசுதான். முன்னதாக பாரத ஸ்டேட் வங்கியின் பெரும்பான்மைப் பங்குகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்தன. ஆனால், அண்மையில் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளை மத்திய அரசு வாங்கிக் கொண்டது.

நாட்டின் 80 சதவிகித வங்கிப் பணிகளை பொதுத்துறை வங்கிகள்தான் மேற்கொள்கின்றன. புதிய தலைமுறை தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி போன்றவை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தபோதிலும், நாட்டின் ஒட்டமொத்த வங்கிச்சேவையில் தனியார்துறை வங்கிகளின் பங்கு குறைவாகவே உள்ளது.

இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளின் கடன்களுக்கான வட்டிவீதம் உயர்ந்ததால் மோட்டார் வாகன உற்பத்தியும் விற்பனையும் சரிந்துள்ளன. புதிய வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனை நம்பியிருந்தவர்கள் மனம் தளர்ந்து போனார்கள். காரணம், வட்டிவீதம் அதிகரித்ததால் மோட்டார் வாகனங்கள் மற்றும் வீடுகளின் அடக்கவிலைகளும் அதிகரித்துவிட்டன. இது பொருளாதார மந்தநிலைக்கு வழி வகுக்கக்கூடும் என்ற கவலை மேலீட்டால் மத்திய நிதி அமைச்சர் தமது யோசனையை வெளியிட்டிருக்கக்கூடும். ஆகவே, இதை அரசியல் தலையீடாகக் கருதக்கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.

இது ஒருபுறமிருக்க, பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கும், இயக்குநர் குழுக்களுக்கும் சமுதாயக் கடமை உண்டு. வணிக ரீதியில் வெறும் லாபநோக்கோடு மட்டுமல்லாமல், பொருளாதார மந்தநிலை ஏற்படும் நிலைமை தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பு பொதுத்துறை வங்கிகளுக்கு இருக்கிறது.

அண்மையில் நிகழ்ந்த கடன்களுக்கான வட்டி உயர்வுக்கு காரணம், வங்கிகள் அல்ல; ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கையே என்பது புலனாகும்.

ரிசர்வ் வங்கியின் தலையாய கடமைகளில் ஒன்று, நிதி மற்றும் கடன் கொள்கையை முடிவு செய்து 6 மாதங்களுக்கு ஒரு முறை அறிவிப்பதாகும். இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, விலைவாசியையும் பணவீக்க வீதத்தையும் கட்டுப்படுத்துவது. இரண்டாவது, தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடனைத் தங்குதடையின்றி கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது.

முன்னதாக, அசுர வேகத்தில் உயர்ந்து கொண்டிருந்த பணவீக்கவீதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

வங்கிகளின் உபரிப் பணத்தை உறிஞ்சுவதற்காக, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பை மேலும் அரை சதவிகிதம் அதிகரித்தது. அதற்கு முன்பு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டிவீதத்தையும் (ரெப்போ ரேட்) உயர்த்தியது.

இந்த நடவடிக்கைகளால் பணவீக்கவீதம் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில், வங்கிகளின் கடனுக்கான வட்டிவீதம் உயர்வதற்கும் அது வழிவகுத்துவிட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கிகளில் வைப்புத்தொகை அதிகரித்ததைவிட, வங்கிக்கடன் தொகையே அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 30 சதவீதம் அளவுக்கு வங்கிக்கடன் அதிகரித்து வந்துள்ளது. வட்டி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

இந்நிலையில், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற சமிக்ஞை ரிசர்வ் வங்கியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டுமே அல்லாமல், அரசுத் தரப்பிலிருந்து அல்ல என்பது தெளிவு.

இதற்கிடையே, டெபாசிட்களுக்கான வட்டியும் குறையத் தொடங்கியுள்ளது என்பது கவலை தரும் விஷயம். தங்களது வாழ்நாள் சேமிப்பிலிருந்து கிடைக்கக்கூடிய வட்டியை மட்டுமே நம்பி வாழ்க்கைநடத்தும், பணி ஓய்வுபெற்றவர்களுக்கும், நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் யார்?

நடுத்தர மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும்விதத்தில் அவர்களுடைய வைப்புத்தொகைக்கான வட்டிவீதத்தைக் குறைக்காமல் பார்த்துக்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

இந்த உயிர்நாடிப் பிரச்னையை வெறும் வணிகரீதியில் அணுகாமல், மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய இழப்பை ஒரு சுமையாக ரிசர்வ் வங்கி கருதலாகாது. ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் உதவுவதை ஒரு சமுதாயக் கடமையாகக் கருத வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

Posted in Agriculture, Assets, Auto, Automotive, Banking, Banks, BOB, Bonds, BSE, Cars, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chit Funds, Chitfunds, Chithambaram, Commerce, Cooperative, Credit, CRR, Deflation, Deposits, Dollar, Economy, Enforcement, Exchange, Farmers, FD, Finance, Financing, fiscal, Govt, HDFC, ICICI, Index, Indices, Inflation, Insurance, Interest, investments, IOB, KVB, Land, liquidity, Loans, markets, Micro-financing, Microloans, Minister, Monetary, Motor, NIFTY, NSE, Overnight, Overnite, Parts, Policy, Property, Rates, RBI, reserves, ROI, Rupee, Rupees, Rupya, SBI, Schemes, Shares, Spare, Stocks, Student, Treasury | Leave a Comment »

India to curb foreign funds deluge – Volatile stock market & Participatory note policy

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2007

பாடாய்ப்படுத்தும் பங்குச்சந்தை!

பங்குச் சந்தை என்பது நாட்டின் தொழில், வர்த்தகத் துறைகளின் ஆரோக்கியத்தையும், மக்களுடைய வருமானம், சேமிப்பு, முதலீடு ஆகியவற்றின் வளத்தையும் ஒருசேர உணர்த்தும் உரைகல். ஆனால் சமீப காலமாக -அன்னிய நேரடி முதலீடு காரணமாக -பங்குச் சந்தையில் பங்கு பரிவர்த்தனை மதிப்பும், பங்குகளின் தனி மதிப்பும் மிக அதிகமாக உயர்ந்து வருகின்றன.

செவ்வாய்க்கிழமை 19,000 புள்ளிகளை எட்டிய குறியீட்டெண் புதன்கிழமை 20,000-ஐ எட்டிவிடும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் 1,744 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது. பங்கேற்புப் பத்திரத்தை “செபி’ என்கிற பங்குச் சந்தை கண்காணிப்பு -கட்டுப்பாட்டு அமைப்பு தடை செய்துவிடும் என்ற வதந்தி காரணமாக இப்படிக் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

வெளிநாடுகளிலிருந்துகொண்டு, தரகர்கள் மூலம் முதலீடு செய்கிறவர்கள் பயன்படுத்தும் புதுவகை அடையாள பங்குப் பத்திரமே, “பங்கேற்பு பத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. அவற்றைத் தடை செய்யும் எண்ணம் ஏதும் அரசுக்கு இல்லை என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உறுதி அளித்த பிறகே சந்தையில் விற்பனை மீண்டும் உயர்ந்தது.

கடந்த வாரம்தான் பங்குச் சந்தையில் குறியீட்டெண் வேகவேகமாக உயர்ந்து வருவது குறித்து நிதி அமைச்சர் சிதம்பரம் வியப்பும் கவலையும் ஒருங்கே தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. “சிறிய முதலீட்டாளர்கள் இந்த நேரத்தில் அசட்டுத் துணிச்சலில் அதிகப் பணத்தை முதலீடு செய்து, கையைச் சுட்டுக்கொள்ள வேண்டாம்’ என்று உரிய நேரத்தில் அவர் எச்சரித்திருந்தார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவழியினரும், ஊக வணிகர்களும் தங்களிடம் உள்ள மிதமிஞ்சிய பணத்தை இந்தியச் சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். இதை வேண்டாம் என்று சொல்வது சரியான வணிக உத்தி இல்லை. இந்த முதலீடு இருவகைப்படும். வெளிநாடுகளில் உள்ள தனி முதலீட்டாளர்கள் நேரடியாக நமது பங்குகளை வாங்குவது ஒருவகை. வெளிநாடுகளைச் சேர்ந்த நிதி நிறுவனங்கள் நம்முடைய பங்குகளை வாங்குவது மற்றொரு வகை. இவ்விருவகையிலான நேரடி முதலீடுமே நமக்கு அவசியம்தான்.

இந்த முதலீட்டாளர்கள், லாபம் வரும் என்றால் முதலீடு செய்வார்கள். நஷ்டம் வரும் என்றால் முதலீட்டை விலக்கிக் கொள்வார்கள். இது பங்குச் சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு நல்லதல்ல. எனவே இவ்வகை முதலீட்டாளர்களின் முதலீட்டில் 10% தொகையை, ஓராண்டுக்குத் திரும்ப எடுக்க முடியாமல் கட்டாய டெபாசிட்டாகப் பெற வேண்டும் என்று அரசுக்கு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னரும், பொருளாதார வல்லுநருமான எஸ்.எஸ். தாராபூர் ஆலோசனை கூறியிருக்கிறார். இதை அமல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.

போக்குவரத்து, சாலை வசதிகள், தகவல்தொடர்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சார உற்பத்தி போன்ற அடித்தளக் கட்டமைப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்கிறோம் என்று அரசு பலமுறை கூறி ஓய்ந்துவிட்டது. ஆனால் அத்தகைய முதலீட்டை ஏற்கும் நிறுவனங்களோ, பங்கு வெளியீடுகளோ, கடன் பத்திரங்களோ சந்தையில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

இப்படியொரு ஏற்பாட்டைத் தனியார் நிறுவனங்கள் செய்யாது; அரசுதான் முயற்சி எடுக்க வேண்டும். வங்கிகளில் தரப்படும் வட்டிவீதத்தைவிட கவர்ச்சிகரமான வருவாயை அளிப்பதாக அரசு உறுதி கூறினால் உள்நாட்டிலிருந்து மட்டும் அல்ல, வெளிநாடுகளிலிருந்தும் இந்தியர்கள் முதலீட்டைக் கொண்டுவந்து கொட்டுவார்கள். இனியாவது அரசு அத்தகையதொரு முயற்சியைத் தொடங்குமா?

Posted in ADR, Assets, Biz, Bonds, Brokers, BSE, Commerce, crash, DJIA, Economy, FII, Finance, fiscal, Foreign, Funds, GE, GM, Goldman Sachs, Govt, Index, Indices, Infy, Interest, International, investors, Invsetors, IPO, Loss, markets, Merryll Lunch, MF, MNC, Morgan Stanley, NRI, NSE, PE, PIO, Planning, Portfolio, Profit, Rates, ratio, Shares, Stocks, Traders, Trading, Wipro, World | Leave a Comment »

International Financial Instituitions and their influence in Indian Govt Policymaking

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2007

வரலாறு திரும்பிவிடக் கூடாது!

அடுத்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வரலாம் என்று ஓர் ஆய்வுக் குறிப்பு கூறுகிறது. இப்படி ஓர் ஆய்வுக் குறிப்பைச் செய்திருப்பது ஏதாவது அரசியல் கட்சியா, அரசியல் ஆய்வாளரா அல்லது பத்திரிகையாளரா என்றால் இல்லை. ஒரு நிதி நிறுவனம், அதிலும் ஒரு சர்வதேச வங்கியின் தனியார் நிதி நிறுவனம்தான் இப்படி ஓர் ஆய்வறிக்கையைத் தயாரித்து, எல்லா நாளேடுகளுக்கும் பத்திரிகைக் குறிப்பாக அனுப்பி இருக்கிறது.

அடுத்த நிதிநிலை அறிக்கையில் பல சமூக நலத் திட்டங்களை அறிவிப்பதன் மூலம் மக்களின் நல்லெண்ணத்தை மன்மோகன் சிங் அரசு பெற முடியும் என்று அந்த அறிக்கை யோசனை கூறுகிறது. தங்களது நல்ல பல திட்டங்களை நிறைவேற்ற இடதுசாரிகளும் எதிர்க்கட்சிகளும் முட்டுக்கட்டை போடுகின்றன என்கிற ஆதங்கத்துக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் என்று மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கருதுவதாகவும் அந்தக் குறிப்பு மேலும் விவரிக்கிறது.

விஷயம் அத்துடன் முடிந்துவிட்டதா என்றால் அதுதான் இல்லை. தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெற்று தனது வளர்ச்சித் திட்டங்களைத் தங்குதடையின்றி செயல்படுத்த மக்கள் ஆதரவளிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பையும், எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் எதிரான கொள்கைகளை உடைய இடதுசாரிகளும் பின்னடைவைச் சந்திப்பார்கள் என்கிற நம்பிக்கையையும் அந்தக் குறிப்பு கூறுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற பெயரில் சர்வதேச நிதி நிறுவனங்களும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும் மிகப்பெரிய முதலீடுகளுடன் இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நுழைந்தபோது எழுப்பப்பட்ட முதல் எச்சரிக்கை என்ன தெரியுமா? “அன்னிய நிதி நிறுவனங்களை இங்கே தங்குதடையின்றி செயல்பட அனுமதிக்கும்போது, அவை நமது நாட்டு நிர்வாக விஷயங்களிலும், அரசியலிலும் தங்குதடையின்றி செயல்படும் உரிமையைப் பெற்றுவிடும் என்பதுதான். தங்களது முதலீட்டுக்கான அதிகபட்ச லாபத்தை மட்டும் குறிக்கோளாக வைத்துச் செயல்படும் வியாபார நிறுவனங்கள் அவை என்பதை மறந்துவிடலாகாது!’ என்கிற எச்சரிக்கையை நாடாளுமன்றத்திலேயே பல முதிர்ந்த அரசியல் தலைவர்கள் எழுப்பியது இப்போது நினைவில் நிழலாடுகிறது.

பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பணம் ஒரு பொருட்டல்ல. ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் பத்து கோடி ரூபாய் என்று நிதி ஒதுக்கி, போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுக்கு உதவி செய்வதன் மூலம், பெருவாரியான நாடாளுமன்ற உறுப்பினர்களை வருங்காலத்தில் இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் விலைக்கு வாங்கிவிடாது என்பது என்ன நிச்சயம்? கணிசமான உறுப்பினர்களைத் தங்களது வலையில் வீழ்த்தி, இந்திய அரசையே நமது அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு ஆட்டிப் படைக்க நினைத்தால் அதை எப்படித் தடுக்க முடியும்?

இந்திய அரசியலின் போக்கு எப்படி இருக்க வேண்டும், நமது அரசின் திட்டங்கள் எப்படிச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை இந்திய வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டுமே தவிர, வியாபாரம் செய்ய வருகின்ற அன்னிய நிதி நிறுவனங்களும், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும் நிச்சயிக்கும் நிலைமை ஏற்படுவது இந்திய இறையாண்மைக்கே ஏற்படும் மிகப்பெரிய அச்சுறுத்தல்.

மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசு, அன்னிய முதலாளிகளால் அன்னிய முதலீட்டாளர்களுக்காக நடத்தப்படும் அரசாக மாறிவிடுமோ என்கிற பயத்தை அந்தப் பன்னாட்டு நிதி நிறுவனத்தின் சுற்றறிக்கை ஏற்படுத்துகிறது. கிழக்கிந்தியக் கம்பெனியின் வரலாறு நமக்குக் கற்றுத் தந்த பாடத்தை நாம் மறந்துவிட மாட்டோம் என்கிற நம்பிக்கைதான் இப்போதைக்கு ஒரே ஒரு ஆறுதல்!

——————————————————————————————————————

அமெரிக்காவைப் பின்பற்றலாமே…!

ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை என்பது பொருளாதார நிபுணர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் விஷயமாகி விட்டது.

மற்ற நிதி நிறுவனங்களும், அமைப்புகளும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒன்பது விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்ந்திருப்பதாகத் தெரிவித்தாலும், இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைப்படி 2007-08-க்கான வளர்ச்சி 8.5 சதவிகிதம் என்றுதான் அறிவிக்கிறது. கடந்த ஆண்டு 9.4 சதவிகிதமும் அதற்கு முந்தைய ஆண்டு 9 சதவிகிதமும் இருந்த வளர்ச்சி 8.5 சதவிகிதமாகக் குறைந்துவிட்டதே என்று வருத்தப்படத் தேவையில்லை. கடந்த நான்கு ஆண்டு சராசரி வளர்ச்சி 8.6 சதவிகிதம்தான் என்பதால், இந்த வளர்ச்சியே நல்ல அறிகுறி என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த அறிக்கையில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், நமது விவசாயத்திற்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு. எண்பதுகளின் தொடக்கத்தில் இந்தியாவின் மொத்த வருமானத்தில் 40 சதவிகிதம் இருந்த விவசாயத்தின் பங்கு இப்போது வெறும் 20 சதவிகிதமாகக் குறைந்துவிட்டிருக்கிறது. விவசாய வளர்ச்சி 2.8 சதவிகிதத்திலிருந்து இப்போது 3.8 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது என்று நாம் பெருமைபட்டுக்கொள்ளலாமே தவிர, அடிப்படையில் விவசாயமும் விவசாயிகளும் மற்ற துறைகளின் வளர்ச்சியை வைத்துப் பார்க்கும்போது மிகவும் பின்தங்கியிருப்பது நன்றாகவே தெரிகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி, விவசாயிகளின் பிரச்னைகளை ஆராய சிண்டிகேட் வங்கித் தலைவர் சி.பி. ஸ்வர்ஸ்கர் தலைமையில் அமைத்த குழுவின் அறிக்கையும் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. விவசாயிகளுக்கு எளிய முறையில் எப்படிக் கடன் வழங்குவது என்பதைப் பரிசீலித்து, வழிமுறைகளை ஏற்படுத்துவதுதான் இந்தக் குழுவின் நோக்கம்.

தற்போதைய நிலையில் உயர்ந்த கூலியும், அதிகரித்த உர விலையும், போதுமான அளவு தண்ணீர் இல்லாததும் விவசாயிகளை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. விளைபொருள்களுக்குப் போதிய விலை இல்லை என்பது மட்டுமல்ல, அரசுத் தரப்பில் சரியான நேரத்தில், நஷ்டம் ஏற்படாத விலையில் கொள்முதல் நடைபெறாமல் இருப்பதும் விவசாயிகளைத் துன்பத்தில் ஆழ்த்தி வருகின்றன.

ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது உணவு உற்பத்தியில் அந்த நாடு தன்னிறைவு அடைவதில்தான் இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. அதனால்தான், தனது நாட்டில் உற்பத்தியாகும் உணவுப் பொருள்களை அமெரிக்கா அதிக விலை கொடுத்து வாங்கி கடலில் கொட்டுவது, நெருப்பிட்டுக் கொளுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. விவசாயி தனது விளைபொருள்களை விற்க முடியாமல் நஷ்டப்படக் கூடாது என்பதுதான் அதன் அடிப்படை நோக்கம். மானியமாக அதிகப் பணம் போனாலும், விவசாய உற்பத்தி குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்கா போன்ற நாடுகள் முனைப்பாக இருக்கின்றன.

8.6 சதவிகித வளர்ச்சி என்று மேலெழுந்தவாறு பெருமைப்பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை. பெருவாரியான மக்கள் விவசாயம் சார்ந்து கிராமப்புறங்களில்தான் இன்றும் வசிக்கிறார்கள். விவசாயம் சார்ந்த தொழில் வளர்ச்சியும், கிராமப்புற வளர்ச்சியும் அதனால் ஏற்படும் தன்னிறைவும்தான் உண்மையான வளர்ச்சியே தவிர அன்னியச் செலாவணி இருப்பும், மேலெழுந்தவாரியான பொருளாதார வளர்ச்சியும் அல்ல.

தேவையற்ற விஷயங்களுக்கெல்லாம் அமெரிக்காவையும், வளர்ச்சி அடைந்த நாடுகளையும் பின்பற்றத் துடிக்கும் நமது மத்திய அரசின் பொருளாதார நிபுணர்கள், இந்த விஷயத்தில் அமெரிக்காவைப் பின்பற்ற முயலாதது ஏன்? நல்ல விஷயங்கள் நமக்கு வேண்டாம் என்பதாலா?

——————————————————————————————————————

Posted in Agriculture, Assets, bank, Banking, Banks, Big, City, Commerce, Deflation, Dept, Development, Economy, Farming, Foreign, GDP, Govt, Growth, History, Index, Indices, Inflation, Loans, Metro, nexus, Opportunity, Policy, Poor, RBI, Recession, Rich, Rural, solutions, Stagflation, Suburban, Syndicate, Village, WB, World | Leave a Comment »

Global markets slide in reaction to Shanghai Stock Exchange plunge

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

சீனப் பங்குச் சந்தை விலையில் பாரிய வீழ்ச்சி

பங்குச் சந்தையின் அடிப்படை இன்னமும் பலமாகவே இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்
பங்குச் சந்தையின் அடிப்படை இன்னமும் பலமாகவே இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்

சீனப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட பாரிய விலை வீழ்ச்சியை அடுத்து உலகெங்கும் பங்கு விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

சீனப் பங்குச் சந்தையில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரே நாளில் ஏற்பட்ட பெரிய வீழ்ச்சி இதுவாகும்.

ஷாங்காய் பங்குச் சுட்டெண்ணில் ஏற்பட்ட 9 வீத வீழ்ச்சி, முதலீட்டாளர்களுக்கு 100 மில்லியன் டொலர்கள் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் தடவையாக இந்தச் சுட்டெண்கள் 3000 புள்ளிகளை விட அதிகமாக வளர்ந்த மறுதினம், இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இரு வாரங்களுக்கு முன்னர் இருந்த நிலைக்கு இந்தச் சுட்டெண்கள் தற்போது சென்றுள்ளன.

Posted in Bonds, BSE, China, Currency, DJIA, Economy, Exchange, Finance, Futures, Global markets, Hongkong, Index, Indices, markets, NSE, Options, plunge, Prices, Profits, Shanghai, Shares, Shenzhen, Stock Exchange, Stocks, World | 1 Comment »