Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘ratio’ Category

The price of brides in Uttar Pradesh: Causes of the discrepancy in female-male Sex Ratio

Posted by Snapjudge மேல் நவம்பர் 3, 2007

விலை கொடுத்து வாங்கப்படும் மணமகள்கள்: உ.பி.,யில் அவல நிலை 

ஷாஜன்பூர்: பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததைத் தொடர்ந்து, மணமகளை வேறு மாநிலங்களில் இருந்து விலை கொடுத்து வாங்கும் மாநிலங்கள் வரிசையில் அரியானா, ராஜஸ்தானைத் தொடர்ந்து உ.பி.,யும் சேர்ந்துள்ளது.உ.பி., மாநிலம் ஷாஜன்பூர் மாவட்டத்தில் தான் ஆண்களை விட, பெண்களின் விகிதம் மிகக்குறைந்து உள்ளது. இங்குள்ள நகர்ப்புறங்களில் ஆயிரம் ஆண்களுக்கு 678 என்ற விகிதத்தில் பெண்கள் உள்ளனர். கிராமப்புற நிலை இன்னும் படுமோசம்.

இங்கு ஆயிரம் ஆண்களுக்கு 535 பெண்களே உள்ளனர். இந்த மாவட்டத்தில் தான், நாட்டிலேயே ஆண்களை விட, பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது.

இதனால், திருமண வயதுக்கு வரும் ஆண்கள், மணமகள் கிடைக்காமல் திண்டாடும் நிலை உருவாகி உள்ளது. மேற்கு வங்கம், ஒரிசா, ஜார்கண்ட், பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து விலை கொடுத்து மணமகளை வாங்கி, திருமணம் செய்து கொள்ளும் நிலை உருவாகி உள்ளது. ரூ. 7,000 முதல் ரூ.10ஆயிரம் வரை மணமகளுக்கு விலை கொடுக்கப்படுகிறது.

ஷாஜன்பூர் மாவட்டத்தில் உள்ள ஷாகஞ்ச் கிராமத்தில் வசிக்கும் 250 குடும்பத்தில் 60 சதவீதத்தினர் இது போலத் தான் திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த கிராமத்தில் விசாரித்த போது பலரது, “சோகக் கதைகள்’ தெரியவந்தது. ஒரிசாவில் உள்ள ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவர் அனிதா. இவரை, உ.பி., மாநிலம் ஷாஜன்பூர் மாவட்டம் ஷாகஞ்ச் கிராமத்தை சேர்ந்த மகிந்தர் என்பவர், ரூ.7,500 விலை கொடுத்து மணமகளாக வாங்கி வந்தார். மாமியாரையும் அழைத்து வந்து வீட்டில் உட்கார வைத்து சோறு போட்டு வருகிறார்.

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். கணவருடன் அனிதா சரிவர பேசுவதில்லை. காரணம்: இருவருக்கு இடையே உள்ள பாஷை பிரச்னை தான். மகிந்தர் பேசும் ஹிந்தி அனிதாவுக்கும், அனிதா பேசும் ஒரிய மொழி மகிந்தருக்கும் புரிவது இல்லை. பீகாரைச் சேர்ந்த மீரா தேவி என்ற பெண்ணின் கதை இன்னும் மோசம். இரண்டரை ஆண்டுக்கு முன் ராஜிவ் என்பவர் ரூ.8 ஆயிரம் விலை கொடுத்து மணமகளாக கொண்டு வந்தார். மீரா இன்னும் கர்ப்பம் தரிக்காததால், “வீணாக செலவு செய்துவிட்டோமோ’ என்று ராஜிவின் குடும்பத்தினர் வருத்தப்படுகின்றனர்.

இந்த கிராமத்தில், மனைவியை இழந்த பிராமணர், நாராயண் லால், மறுமணம் செய்து கொள்ளவிரும்பினார். ஆனால், மணமகள் கிடைக்கவில்லை. தேடித்தேடிப் பார்த்து, இறுதியில் கோல்கட்டாவை சேர்ந்த ஆஷா தேவி என்ற 45 வயது விதவையை ரூ.10 ஆயிரம் கொடுத்து வாங்கி வந்தார். அந்ததொகை ஆஷாதேவியின் மகனுக்கு கொடுக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளாக இவருடன் தான் குடும்பம் நடத்தி வருகிறார். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை கோல்கட்டா சென்று தன் மகனை பார்த்து விட்டு வருகிறார் ஆஷா தேவி. இவருக்கு சரளமாக இந்தி பேச வராது. இருப்பினும், நாராயண் லாலின் குடும்பத்தினர் படித்தவர்கள் என்பதால், பெங்காலி மொழி பேசும் ஆஷா,, என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்கின்றனர்.

இதே போல, ராம்பஜன் என்பவரும் கோல்கட்டாவில் இருந்து அனிதா என்ற பெண்ணை, நான்கு ஆண்டுக்கு முன் ரூ.10 ஆயிரம் விலை கொடுத்து வாங்கினார். இவரும் விதவை தான். திருமணத்துக்கு பின் அனிதாவின் பெயரை ராம் லாலி என்று மாற்றிவைத்தார் ராம் பஜன். “”இந்த வாழ்க்கை எனக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது. விதவையாக வீட்டில் முடங்கிக்கிடந்த எனக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. என் கணவர் கொடுத்த பணம், குடும்பத்தாருக்கும் உதவியாக உள்ளது,” என்கிறார், ராம் லாலி என்கிற அனிதா. சமூக சேவை அமைப்பைச் சேர்ந்த நீலம் சிங் என்பவர், “அடுத்து வரும் ஆண்டுகளில், பெண்சிசுக் கொலைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்காவிட்டால், நிலைமை இன்னும் மோசமாகிப்போகும்’ என்று கூறினார்.

Posted in Bridegrooms, brides, Death, Discrepancy, Economy, Female, male, Marriage, Price, Rates, ratio, sales, Sell, Sex, Society, Uthar Pradesh, Utharakand, Utharakhand, Utharanchal, Utharkhand, Utharpradesh, Uttar Pradesh, Uttarakand, Uttarakhand, Uttaranchal, Uttarkand, Uttarkhand, UttarPradesh, Wedding | Leave a Comment »

India to curb foreign funds deluge – Volatile stock market & Participatory note policy

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2007

பாடாய்ப்படுத்தும் பங்குச்சந்தை!

பங்குச் சந்தை என்பது நாட்டின் தொழில், வர்த்தகத் துறைகளின் ஆரோக்கியத்தையும், மக்களுடைய வருமானம், சேமிப்பு, முதலீடு ஆகியவற்றின் வளத்தையும் ஒருசேர உணர்த்தும் உரைகல். ஆனால் சமீப காலமாக -அன்னிய நேரடி முதலீடு காரணமாக -பங்குச் சந்தையில் பங்கு பரிவர்த்தனை மதிப்பும், பங்குகளின் தனி மதிப்பும் மிக அதிகமாக உயர்ந்து வருகின்றன.

செவ்வாய்க்கிழமை 19,000 புள்ளிகளை எட்டிய குறியீட்டெண் புதன்கிழமை 20,000-ஐ எட்டிவிடும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் 1,744 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது. பங்கேற்புப் பத்திரத்தை “செபி’ என்கிற பங்குச் சந்தை கண்காணிப்பு -கட்டுப்பாட்டு அமைப்பு தடை செய்துவிடும் என்ற வதந்தி காரணமாக இப்படிக் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

வெளிநாடுகளிலிருந்துகொண்டு, தரகர்கள் மூலம் முதலீடு செய்கிறவர்கள் பயன்படுத்தும் புதுவகை அடையாள பங்குப் பத்திரமே, “பங்கேற்பு பத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. அவற்றைத் தடை செய்யும் எண்ணம் ஏதும் அரசுக்கு இல்லை என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உறுதி அளித்த பிறகே சந்தையில் விற்பனை மீண்டும் உயர்ந்தது.

கடந்த வாரம்தான் பங்குச் சந்தையில் குறியீட்டெண் வேகவேகமாக உயர்ந்து வருவது குறித்து நிதி அமைச்சர் சிதம்பரம் வியப்பும் கவலையும் ஒருங்கே தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. “சிறிய முதலீட்டாளர்கள் இந்த நேரத்தில் அசட்டுத் துணிச்சலில் அதிகப் பணத்தை முதலீடு செய்து, கையைச் சுட்டுக்கொள்ள வேண்டாம்’ என்று உரிய நேரத்தில் அவர் எச்சரித்திருந்தார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவழியினரும், ஊக வணிகர்களும் தங்களிடம் உள்ள மிதமிஞ்சிய பணத்தை இந்தியச் சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். இதை வேண்டாம் என்று சொல்வது சரியான வணிக உத்தி இல்லை. இந்த முதலீடு இருவகைப்படும். வெளிநாடுகளில் உள்ள தனி முதலீட்டாளர்கள் நேரடியாக நமது பங்குகளை வாங்குவது ஒருவகை. வெளிநாடுகளைச் சேர்ந்த நிதி நிறுவனங்கள் நம்முடைய பங்குகளை வாங்குவது மற்றொரு வகை. இவ்விருவகையிலான நேரடி முதலீடுமே நமக்கு அவசியம்தான்.

இந்த முதலீட்டாளர்கள், லாபம் வரும் என்றால் முதலீடு செய்வார்கள். நஷ்டம் வரும் என்றால் முதலீட்டை விலக்கிக் கொள்வார்கள். இது பங்குச் சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு நல்லதல்ல. எனவே இவ்வகை முதலீட்டாளர்களின் முதலீட்டில் 10% தொகையை, ஓராண்டுக்குத் திரும்ப எடுக்க முடியாமல் கட்டாய டெபாசிட்டாகப் பெற வேண்டும் என்று அரசுக்கு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னரும், பொருளாதார வல்லுநருமான எஸ்.எஸ். தாராபூர் ஆலோசனை கூறியிருக்கிறார். இதை அமல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.

போக்குவரத்து, சாலை வசதிகள், தகவல்தொடர்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சார உற்பத்தி போன்ற அடித்தளக் கட்டமைப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்கிறோம் என்று அரசு பலமுறை கூறி ஓய்ந்துவிட்டது. ஆனால் அத்தகைய முதலீட்டை ஏற்கும் நிறுவனங்களோ, பங்கு வெளியீடுகளோ, கடன் பத்திரங்களோ சந்தையில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

இப்படியொரு ஏற்பாட்டைத் தனியார் நிறுவனங்கள் செய்யாது; அரசுதான் முயற்சி எடுக்க வேண்டும். வங்கிகளில் தரப்படும் வட்டிவீதத்தைவிட கவர்ச்சிகரமான வருவாயை அளிப்பதாக அரசு உறுதி கூறினால் உள்நாட்டிலிருந்து மட்டும் அல்ல, வெளிநாடுகளிலிருந்தும் இந்தியர்கள் முதலீட்டைக் கொண்டுவந்து கொட்டுவார்கள். இனியாவது அரசு அத்தகையதொரு முயற்சியைத் தொடங்குமா?

Posted in ADR, Assets, Biz, Bonds, Brokers, BSE, Commerce, crash, DJIA, Economy, FII, Finance, fiscal, Foreign, Funds, GE, GM, Goldman Sachs, Govt, Index, Indices, Infy, Interest, International, investors, Invsetors, IPO, Loss, markets, Merryll Lunch, MF, MNC, Morgan Stanley, NRI, NSE, PE, PIO, Planning, Portfolio, Profit, Rates, ratio, Shares, Stocks, Traders, Trading, Wipro, World | Leave a Comment »

Female Infanticide – Gender selections & Abortions in India: Law

Posted by Snapjudge மேல் ஜூலை 27, 2007

பிறப்பது எங்கள் பிறப்புரிமை!

உ . நிர்மலா ராணி, வழக்கறிஞர்

கருவிலிருப்பது ஆணா, பெண்ணா என்று கண்டறிவதற்கான தடையை நீக்க வேண்டும் என்று கோரி மகாராஷ்டிர மாநில உயர் நீதிமன்றத்தில் ஒரு தம்பதி பொதுநல வழக்குத் தொடர்ந்தனர். அம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்ற தாய், மூன்றாவது ஆண் குழந்தை பெற விரும்புவதில் என்ன தவறு என்று வினவியிருப்பது நாடெங்கிலும் அதிர்ச்சியையும், கண்டனக் குரல்களையும் எழுப்பியுள்ளது.

இந்த வழக்கு போடப்பட்ட ஓரிரண்டு தினங்களுக்குள் ஹைதராபாதின் ஒரு பகுதியில் தனது எட்டாவது மகளுக்குப் பிறந்த பெண் குழந்தையைச் சுமையாகக் கருதி அதை, அப்துல் ரஹீம் என்பவர் உயிருடன் மண்ணில் புதைத்த சம்பவம் நடந்திருக்கிறது. புதைக்கப்பட்ட குழந்தையின் கை வெளியே தெரிந்ததைப் பார்த்து, விவசாயி ஒருவர் காப்பாற்ற, அக்குழந்தை அதிசயமாய் உயிர் பிழைத்துக் கொண்டது.

இரண்டாவது சம்பவத்தில் குற்றம் நடந்து விட்டது. முதல் சம்பவத்தில் குற்றம் செய்ய கோர்ட் அனுமதி கேட்கப்படுகிறது. இவை இரண்டிலும் உள்ள பொதுவான அம்சம் என்னவென்றால் – மக்கள்தொகையில் பெண்ணினத்தின் வீழ்ச்சிக்கும் அழிவுக்கும் வழிவகுக்கும் காரணிதான் அது.

மக்கள்தொகையில் ஆண் பெண் விகிதம் என்பது 103:100 இருக்க வேண்டும். அதாவது 1000 ஆண் குழந்தைகளுக்கு 971 பெண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஏனென்றால், ஆண் கரு, பெண் கருவை விட பலவீனமானது. உருவான ஓர் ஆண்டுக்குள் வியாதிகளால் இறந்துவிடக் கூடியது. அவ்வாறு இறந்துவிட்டால் ஆண் – பெண் விகிதம் சமநிலையை அடையும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் நமது நாட்டில் மக்கள்தொகையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. 1901-ல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 972 பெண் குழந்தைகள் இருந்தன. 1991-ல் 945 ஆக குறைந்து 2001-ல் 927-க்கு சரிந்துவிட்டது. பெண்களுக்கெதிராக இந்நாட்டில் நிலவும் பாரபட்சத்தால் அவர்கள் இறந்து போகிறார்கள் என்று நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கான சர்வதேச நிறுவனமாகிய யூனிசெஃப்பும் இதை உறுதி செய்கிறது. இந்தியாவில் இவ்வாறு மாயமான பெண்களின் எண்ணிக்கை 5 கோடியாம்.

“லான்செட்’ என்ற இதழுக்காக இந்திய மற்றும் கனடா ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவிலுள்ள 11 லட்சம் குடும்பங்களில் ஆய்வு மேற்கொண்டதில், ஆண்டுக்கு 5 லட்சம் பெண் குழந்தைகள் கருக்கொலை காரணமாகவும், கருவுறுவதற்கு முன்பே பாலினத்தைத் தேர்வு செய்யும் முறையாலும் அழிந்து போகின்றனர் என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

இவ்வாறு பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் கொள்ளை நோய்களாகக் கருக்கொலைகளும், சிசுக்கொலைகளும் சமுதாயத்தில் வெகுவேகமாகப் பரவி வருகின்றன. இந்த நோய்களை உற்பத்தி செய்யும் விஷக்கிருமிகள் நமது ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பில் புரையோடிப் போயிருக்கின்றன.

வரதட்சிணை என்ற பெயரிலும், சடங்கு சம்பிரதாயங்கள் என்ற பெயரிலும், பெண்கள், பெற்றோர்களால் ஒரு பொருளாதாரச் சுமையாகவே கருதப்படுகிறார்கள். சொத்துரிமையும் பெற்றோருடனே வாழும் உரிமையும், இறுதிச்சடங்கு செய்யும் உரிமையும், ஆண்களுக்கே அளிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் பெண்களைப் புறக்கணிக்கும் போக்கும் ஆண்குழந்தைகளை விரும்பும் மனப்பாங்கும் நியாயப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றன.

முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்து, இரண்டாவது கருவும் பெண்ணாக உருவாகிவிட்டால் ஆண் குழந்தை வேண்டி கருக்கொலை செய்வதில் என்ன தவறு என்று சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் முதல் குழந்தை ஆணாக உருவானால் யாரும் பெண் குழந்தை வேண்டி ஆண் கருவை அழிப்பதில்லையே? “லான்செட்’ ஆய்வின்படி, முதல் குழந்தை பெண்ணாக இருக்கும்பட்சத்தில் இரண்டாவது பெண் குழந்தைகளின் விகிதம் 759 ஆகவும் மூன்றாவது பெண் குழந்தைகள் விகிதம் 719 ஆகவும் குறைந்து விடுகின்றன. ஆனால் இதுவே முதல் குழந்தை ஆணாக இருந்துவிட்டால் அதன்பிறகு ஆண் பெண் விகிதம் சமமாகவே இருக்கிறது என்று அந்த ஆய்வு பாரபட்சத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

பெண் கருக்கொலை, சிசுக்கொலை என்பது ஏதோ படிக்காத பாமர மக்கள் வசிக்கும் பகுதிகளில்தான் அதிகம் என்பதில்லை. நாட்டின் வளமான மாநிலங்கள் என்று போற்றப்படும் பஞ்சாப், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், குஜராத்தில்தான் மிகக் குறைந்த பாலின விகிதத்தில் பெண்கள் பிறக்கிறார்கள்.

தனிநபர் வருமானத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ள தில்லியில் பெண்களின் விகிதம் 868. மகாராஷ்டிரத்தில் 1991-ல் 946 ஆக இருந்த விகிதம் இன்று 913 ஆக மாறிவிட்டது. மகாபாரதப் புகழ் குருஷேத்ரத்தில் பாலின விகிதம் 770. எங்கெல்லாம் ஸ்கேன் மையங்கள் அதிகமிருக்கின்றனவோ அங்கெல்லாம் பெண்களின் விகிதம் குறைந்தே காணப்படுவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

“”பிறக்கப்போகும் குழந்தைகளின் குறைபாடுகளைக் கண்டறிய உதவும் தொழில் நுட்பம் (முறைப்படுத்துதல் மற்றும் தவறாகப் பயன்படுத்துதலைத் தடுக்கும்) சட்டம்” 1994-ல் கொண்டு வரப்பட்டது. இதன்படி ஸ்கேன் மையங்கள் அரசிடம் பதிவு செய்யப்பட வேண்டும். கருவிலிருப்பது ஆணா பெண்ணா என்று கண்டறிந்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. இதைப் பற்றி விளம்பரம் செய்தாலும் அது குற்றம். முதல் 10 ஆண்டுகளுக்கு எவ்வித அசைவுமில்லை. உச்ச நீதிமன்றத் தலையீட்டிற்கு பிறகு ஓரளவு முன்னேற்றம் உள்ளது. இந்நிலையில்தான் இந்தச் சட்டத்தை எதிர்த்து வழக்குப் போடப்பட்டுள்ளது.

“”ஆணும் பெண்ணும் சமம்” என்கிறது அரசியல் சட்டம். ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்கிறது சமூகச் சட்டம். நீதி பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசியல் சட்டத்தைத்தான் உயர்த்திப் பிடிக்க வேண்டுமே தவிர சமூகச் சட்டத்தை அல்ல. ஒரு சட்டம் எந்தப் பின்னணியில் யாருக்காக உருவாக்கப்பட்டது என்பதை உணராமல் எதிர்மறையான கருத்துகளைக் கூறும்போது சமூகத்தில் குற்றத்தை நியாயப்படுத்துபவர்களுக்கு அவை ஒரு வழிகாட்டுதலாக அமைந்துவிடும் அபாயம் உள்ளது.

சீனாவிலும் பெண் கருக்கொலைகள் அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் 2020-க்குள், திருமணம் செய்ய முடியாத 3 கோடி ஆண்கள் இருப்பர் என்று கூறப்படுகிறது. அங்கும் பாலினத் தேர்வு தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த “”நாமிருவர் நமக்கொருவர்” போன்ற திட்டங்களைக் கடைப்பிடித்ததில் பெண் கருக்கொலைகள் அதிகரித்துள்ளன.

ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட பாலினத்தை விரும்பும் போக்கு மக்களிடம் இல்லாததால் பிரச்னை இல்லை. கரு உருவாவதற்கு முன்னரே பாலினத்தைத் தேர்வு செய்து உருவாக்கிக் கொள்ளும் முறைப்படி, வர்ஜினியாவில் 11 பெற்றோர்களில் 10 பேர் பெண் குழந்தையைத்தான் தேர்வு செய்துள்ளனர். ஐரோப்பிய நாடுகள் பல, பாலினத் தேர்வு செய்யும் முறையைத் தடை செய்துள்ளன.

சமூகவியலாளர், அமித்தாய் எட்ஸியோனி கூறுகிறார்: “”பாலினத் தேர்வு என்பது பாலின விகிதாசாரத்தில் ஒரு கடுமையான அசமத்துவ நிலையை ஏற்படுத்தும். கோடிக்கணக்கான ஆண்களைப் பாலியல் குற்றங்களில் குற்றவாளிகளாக்கும் அல்லது பிரம்மசாரிகளாக்கும்.” ஒரு பெண் பல ஆண்களை மணந்து கொள்ளக் கட்டாயப்படுத்தப்படுவாள்; கடத்தப்படுவாள்; மறுத்தால் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவாள்.

இந்நிலையில், இந்தியாவில் பெண் குழந்தைகளின் சமூக அந்தஸ்து உயர்த்தப்பட வேண்டும். பாதகமான சமூகப் பழக்கவழக்கங்களை, சடங்கு சம்பிரதாயங்களை நாம் புறக்கணிக்க வேண்டும். பெண் குழந்தைகளைக் காக்க, அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவரை கருவிலே அழிக்கப்பட்டாலும், பூமிக்குள் புதைக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் எழுவோம் – ஃபீனிக்ஸ் பறவைகளாய்!

———————————————————————————————————————————————–

ஆண்டுக்கு 10 லட்சம் பெண் கருக்கள் அழிக்கப்படுகின்றன: மத்திய சமூகநல வாரியத் தலைவி தகவல்

புதுச்சேரி, நவ. 4: இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர் என்று மத்திய சமூக நல வாரியத் தலைவி ரஜனி பாட்டீல் தெரிவித்தார்.

புதுச்சேரி மாநில சமூக நல வாரியம் சார்பில் பெண் கரு பாதுகாப்பு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியை புதுவை முதல்வர் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தார். இந் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மத்திய சமூக நல வாரியத் தலைவி ரஜனி பாட்டீல் பேசியது:

21-ம் நூற்றாண்டில் நாம் இதுபோல் ஒரு கருத்தரங்கம் நடத்த வேண்டியிருப்பது வேதனைக்குரியது. இந்தியாவில் பெண் குழந்தைகள் கருவில் அழிக்கப்படுவது குறித்து மார்ச் 8-ம் தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பேசப்பட்டது.

இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர். கருவில் இருக்கும் பெண் ஆணா, பெண் என்பதை கண்டறிவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் சட்டம் கொண்டு வந்தும், அதிலிருந்து தப்பிக்க டாக்டர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாள்கின்றனர். 2020-ம் ஆண்டு இந்தியா வல்லரசாகும் என்று கூறுகின்றனர். பெண் விகிதம் 50 சதவீதம் இல்லாமல் இந்தியா வல்லரசாகி என்ன பயன்? தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் பெண்கள் விகிதம் ஓரளவு உயர்ந்துள்ளது. ஆனால் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பெண்கள் விகிதம் உயரவில்லை என்றார்.

புதுவை முதல்வர் என்.ரங்கசாமி பேசும்போது, புதுச்சேரியில் 1000 ஆண்களுக்கு 1001 பெண்கள் உள்ளனர். பெண்கள் முன்னேற்றத்துக்கு நாங்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். புதுச்சேரியில் பெண்கள் பெயரில் சொத்துகள் வாங்கினால் பதிவுக் கட்டணத்தில் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது. பெண்கள் நிறுவனங்களை நிறுவினால் 25 சதவீதம் மானியம் அளிக்கிறோம். தலித் பெண்களின் முன்னேற்றத்துக்கும் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறோம் என்றார்.

சமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி பேசும்போது, பெண்கள் கருவுறும் நாளில் இருந்து இறக்கும் வரை அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. நவம்பர் மாதத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு நாளாக அறிவிக்க உள்ளோம். அந்த நாளில் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம் என்றார்.

இக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் பேராசிரியர் மு.ராமதாஸ், எம்எல்ஏ ஆர்.விசுவநாதன், புதுச்சேரி சமூக நல வாரியத் தலைவி ழான் பூரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

“பொறுப்பும் செயல்திறனும் கொண்ட தன்னார்வ அமைப்புகளை அரசு தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் பெண் குழந்தை பிறப்பை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். கிராமப் புறங்களில் தன்னார்வ அமைப்புகள் மூலம் பெண் சிசுக்கள் கொல்லப்படுவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பிறந்தது முதல் பெண் குழந்தைகளுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டம் இயற்றிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் கல்வியுடன் இணைந்த வாழ்க்கை கல்வியை பள்ளிகளில் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியே 8-ம் வகுப்பு முதல் கற்றுத்தர வேண்டும்’ உள்ளிட்ட கருத்துக்கள் இக் கருத்தரங்கில் பரிந்துரைக்கப்பட்டன.

———————————————————————————————————————————————————–

ஆடாமல் நிற்குமா அரசுத் தொட்டில்?

எஸ். ஜெய்சங்கர்

உள்ளாட்சி முதல் உலக அளவில், பல நிலைகளில் பெண்கள் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளனர். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் எனப் பல துறைகளில் காலடி எடுத்து வைத்துள்ளனர். வர்த்தக நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுள்ளனர். பாரத நாட்டின் முதல் குடிமகள் முதல் நாட்டின் பல்வேறு பொறுப்புகளைப் பெண்கள் வகித்து வருகின்றனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் என்றாலும், பாரதியின் கனவை நனவாக்க, விண்கலமேறி விண்வெளிக்குப் புறப்பட்ட கல்பனா சாவ்லா, திரும்பி வரும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், காற்றோடு கலந்தார். அவரது வரிசையில் சுனிதா வில்லியம்ஸ், தொழில்நுட்பத்தையும் தாண்டி வெற்றி பெற்றார். இந்திய நாடே அவரைப் போற்றுகிறது. இது பெண்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் செய்தி.

அண்டவெளியில், காற்றில்லா இடத்தில், காலடி எடுத்து வைத்து, நடைபழகிய பெண்கள் நம் பாரதப் பெண்கள் என எண்ணி மகிழ்ந்தாலும், தாயின் கருப்பை எனும் இருண்ட பிரதேசத்தில் தோன்றி, வெளிச்சத்தைப் பார்த்தும், பார்க்காமலும் கருகிய மொட்டுகள் நம் தமிழகத்தில் ஏராளம்.

மிகவும் பின்தங்கிய மாவட்டமான தருமபுரியில், 1999 ஆம் ஆண்டு 657 பெண் சிசுக்கள் கொல்லப்பட்டன. 2000 ஆம் ஆண்டு 439 பெண் சிசுக்கள் உயிரிழக்க நேரிட்டது. மற்ற மாவட்டங்களிலும் இச்சம்பவங்கள் நிகழ்ந்தன.

தமிழகத்தின் ஆண் -பெண் குழந்தைகளின் விகிதத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாறுதல், பெண் சிசுக்கொலை ஆகியவை தமிழக அரசை கவலையடையச் செய்தது.

இதன் விளைவாக, 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொட்டில் குழந்தைகள் திட்டம், முழுவீச்சில் 2001 ஆம் ஆண்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. திட்டம் தொடங்கப்பட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகும், தருமபுரியில் 2001 ஆம் ஆண்டு 178 பெண் சிசுக் கொலைகள் நடந்துள்ளன எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பெண் சிசுவைக் கொல்வோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதை அறிந்த பொதுமக்கள், தாங்களாகவே முன்வந்து, விரும்பாத பெண் சிசுக்களை அரசுத் தொட்டிலில் போட்டுச் சென்றுவிட்டனர். அக்குழந்தைகளைப் பராமரிக்கும் அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம், விரும்புவோருக்குத் தத்து கொடுக்கிறது.

மேலும், 2-வது பிரசவத்தைக் கண்காணிப்பது, பெண் குழந்தை பிறந்தால் பெற்றோருக்குக் கவுன்சலிங் தந்து, குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சைக்கு அறிவுறுத்துவது போன்றவற்றால் பெண் சிசுக்கொலைகள் படிப்படியாகக் குறைந்தன.

பெண் சிசுக்கொலை குறைந்தாலும், தொட்டிலுக்கு வரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறையவில்லை. அண்மையில் 1000-மாவது தொட்டில் குழந்தையைப் பெற்றுள்ளது தருமபுரி அரசுத் தொட்டில் குழந்தைகள் மையம். இதில் சுமார் 120 குழந்தைகள் மட்டுமே ஆண் சிசுக்கள். ஆண் சிசுக்கள் தொட்டிலுக்கு வந்ததற்கும் சமுதாயச் சீர்கேடே காரணம்; தவறான உறவால் பிறந்த குழந்தைகளை வெளிக்காட்ட முடியாமல், அவை தொட்டிலில் போடப்பட்டன.

பெண் குழந்தை விஷயத்தில், அவர்களைப் படிக்க வைத்து, வரதட்சிணை, நகை எனச் செலவு செய்து திருமணம் செய்து வைக்க வேண்டும்; ஆண் குழந்தையாக இருந்தால், மாற்றான் வீட்டுப் பெண் மூலம் குடும்பத்துக்கு வரவு என வரவு- செலவு கணக்கு பார்க்கும் எண்ணம், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களிடமும், கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கத்தினரிடம் அதிகம். அதனால், பெண் குழந்தை என்றால் வளர்ப்பது கடினம் என்ற சலிப்பு. தொட்டில் குழந்தைகள் மையம் தொடங்கப்பட்டு, தருமபுரியில் மட்டுமே 1000 குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கிறோம் எனும் தகவல் பெண்ணினத்துக்குப் பெருமை அளிப்பதாக இல்லை. காரணம், பெண் சிசுவைக் கொன்றால் சிறைத்தண்டனை உறுதி என்ற பயம் மட்டுமே, சிசுக்கொலைகளைக் குறைத்து, அவற்றை அரசுத் தொட்டிலில் போடச் செய்திருக்கிறது.

சிசுக்கொலைகளைத் தடுக்கவும்; பெண் குழந்தைகளைத் தத்து பெறவும் எடுக்கப்பட்ட முயற்சிகள் முதல்கட்ட நடவடிக்கைகளே. பெண் குழந்தைகளைத் தத்து பெறுவதோடு தனது கடமை முடிந்தது என அரசு ஒதுங்கிக்கொள்ளாமல், அரசுத் தொட்டிலுக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான, ஆக்கபூர்வ முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இதற்கான அடுத்தகட்ட திட்டங்கள் தேவை.

மேலும், பெண் குழந்தைகளை அரசுத் தொட்டிலில் போடுவதைத் தவிர்க்கும் எண்ணம் பெற்றோருக்கு வர வேண்டும். இதற்கு, சமூக, பொருளாதார மாற்றம் மிக அவசியம். பொருளாதார வசதி கொண்ட எவரும் தங்களது பெண் சிசுக்களைக் கொல்வதும், அரசுத் தொட்டிலில் போடுவதும் கிடையாது. வருவாயற்ற ஏழைகளே பெரும்பாலும் இச்செயலில் ஈடுபடுகின்றனர்.

அரசின் முயற்சியாலும், பொதுமக்களிடையே ஏற்படும் மன மாற்றத்தாலும், “அரசுத் தொட்டிலுக்கு பெண் சிசுக்கள் வருவது நின்று 1000 நாள்களாகின்றன’ என்ற அறிவிப்பு வெளியாகுமானால், அது நிச்சயமாக பெண் சமுதாயத்துக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக இருக்கும்.

Posted in Abortion, Analysis, Backgrounders, Birth, Census, Child, Childbirth, Children, Conservative, Culture, Disease, Equal, Female, Feminism, Gender, Growth, Health, Infanticide, Insights, Kids, Law, Liberal, male, Malnutrition, Needy, Op-Ed, Opportunities, Opportunity, Order, parents, Poor, Population, ratio, Rich, rights, Sex, solutions, State, Stats, Statz, Values, Wealthy | Leave a Comment »

Rupee appreciates against Dollar – Financial pressures & Trade imbalance in Pricing disparities

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

உயரும் ரூபாய் மதிப்பு; குமுறும் ஏற்றுமதியாளர்கள்

ஆர். அறிவானந்தம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருகிறது.

கடந்த 3 முதல் 4 மாதங்களில் ரூபாயின் மதிப்பு 8 முதல் 9 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஒரு டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கடந்த ஆண்டில் ரூ.44 முதல் ரூ.45 அளவில் இருந்தது தற்போது 40 ரூபாய் அளவுக்குக் குறைந்துள்ளது.

செல்வந்த நாடுகளே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் ராக்கெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டே இருக்கிறது.

இதற்கெல்லாம் தொழிற்படிப்பு படித்த இளைஞர்களும் இளைஞிகளும் ஆண்டுதோறும் அதிக அளவில் உருவாவதே முக்கியக் காரணம்.

ரூபாய் மதிப்பு உயர்வால்

  • ஆட்டோமொபைல்,
  • உணவு மற்றும் உணவுப் பதப்படுத்துதல்,
  • டிவி, பிரிட்ஜ் போன்ற நுகர்பொருள்கள்,
  • ஜவுளி, வைரம் மற்றும் தங்க நகைகள்,
  • கைவினைப் பொருள்

உள்பட 304 நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதை அடுத்து, யூரோ டாலர் மூலம் கிடைக்கும் ஏற்றுமதி ஆர்டர்களைத் தேடி அலைய வேண்டிய நிலைக்கு இந்திய நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன என்று இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு வரை ஒரு டாலருக்கு ரூ.5 வரை கூடுதல் லாபம் சம்பாதித்து வந்த ஏற்றுமதி நிறுவனங்கள் தற்போது அதை இழக்கத் தயாராக இல்லை.

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்வதால்

  • சாப்ட்வேர் நிறுவனங்கள்,
  • பிபிஓ நிறுவனங்கள்,
  • ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்கள்,
  • கிரானைட்,
  • கடல் உணவு,
  • தேயிலை,
  • என்ஜினீயரிங்,
  • முந்திரி,
  • மாம்பழம் மற்றும்
  • நார் பொருள்களை

தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் தங்களது லாபம் குறையும் என்று குமுறுகின்றன.
இப்பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் உயராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பல்வேறு ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்புகள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சர் கமல் நாத்தை சந்தித்து, ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளதால் ஏற்படும் இழப்பைச் சரிகட்ட பல்வேறு வரிச்சலுகைகளை அளிக்குமாறும் கோரியுள்ளன.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 4 மாதங்களில் 9.4 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் சாப்ட்வேர் ஏற்றுமதியில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்து வரும் இன்போஸிஸ், டிசிஎஸ், சத்யம், எச்சிஎல் டெக்னாலஜீஸ் உள்பட பல்வேறு நிறுவனங்களின் லாபம் வெகுவாகக் குறையும்.

அன்னிய நிறுவனங்களுக்கு சாப்ட்வேர் தயாரித்து ஏற்றுமதி செய்து வரும் இந்த நிறுவனங்கள் ஒரு பொறியாளருக்கு ஒரு மாதத்துக்கு, ஒரு நாளைக்கு அல்லது ஒரு மணி நேரத்துக்கு எனக் கணக்கிட்டு டாலரில் கட்டணம் வசூலிக்கின்றனர்.

ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சாப்ட்வேர், பிபிஓ நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்படும். எனவே, ரூபாயின் மதிப்பு மேலும் உயராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேசிய சாப்ட்வேர் மற்றும் சர்வீஸஸ் (நாஸ்காம்) தலைவர் கிரண் கார்னிக் கூறியுள்ளார்.

கடல் உணவுத் தொழிலில் 50 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். ரூபாய் மதிப்பு உயர்வால் தற்போது இருப்பில் உள்ள கடல் உணவுகளை ஏற்றுமதி செய்வதால் ரூ. 500 கோடி இழப்பு ஏற்படும் என்று இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ஏ.ஜே. தராகன் கூறியுள்ளார்.

மீன் வளர்க்கும் சீசன் தொடங்கியுள்ள நிலையில் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால், புதிதாக ஏற்றுமதி ஆர்டர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தென்னிந்தியத் தலைவர் டி.பி. ரெட்டி கூறியுள்ளார்.

நார் பொருள்கள் ஏற்றுமதி 19.2 சதவீதம் குறைந்துள்ளது. ருபாய் மதிப்பு உயர்வால் ஏற்றுமதித் தொழில் ஸ்தம்பித்துள்ளது என்று மத்திய அரசின் நார் பொருள் வாரியம் தெரிவித்துள்ளது.

முந்திரி, பிஸ்தா மற்றும் பாதாம் பருப்பு போன்றவற்றின் ஏற்றுமதி இந்த ஆண்டு ஏப்ரலில் கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட 500 டன் குறைந்துள்ளது.

ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளதால் ஏற்பட்டுள்ள ஏற்றுமதி வருவாய் இழப்பைச் சரிக்கட்ட அன்னியச் செலாவணிச் சந்தையில் மத்திய ரிசர்வ் வங்கி தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

5 சதவீத வட்டியில் ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிதிக்கடனை வழங்க வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ஏ. சக்திவேல் கோரியுள்ளார்.

ஏற்றுமதியாளர்களின் கண்ணீரைத் துடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Posted in Appreciation, Balancesheet, BPO, BRIC, Cash, China, Company, Disparity, Dollar, Economy, Exchange, Exim, Exports, Finance, fiscal, Fishery, Fixing, GDP, Imbalance, Imports, Industry, Inflation, InfoTech, Interest, Issues, markets, Monetary, Money, Outsourcing, Policy, PPP, Pressures, Pricing, Rates, ratio, RBI, Recession, Reserve, Rupees, Rupya, service, Trade, World | 1 Comment »

Population control tactics & carrots in China: $75 for 60+

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2006

சீனாவில் மக்கள் தொகைப் பெருக்கத்தினை கட்டுப்படுத்த புதிய முயற்சிகள்

சீன நாட்டவர்கள்
சீன நாட்டவர்கள்

சீனாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் மேலும் ஒரு நடவடிக்கையாக, கிராமப் புறங்களில் உள்ள மக்கள் குறைந்த அளவில் குழந்தைகளை பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கும் வகையில் அடுத்த ஆண்டு புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளன.

மக்கள் தொகை ஏறுமுகமாக உள்ள நிலையில், ஒரே ஒரு ஆண் குழந்தையோ அல்லது இரண்டு பெண் குழந்தைகளோ கொண்ட கிராமப் புறங்களில் உள்ள பெற்றோர்களுக்கு, அவர்கள் 60 வயதை எட்டும் போது மாதம் ஒன்றுக்கு 75 டாலர்கள் வழங்கப்படவுள்ளது.

இந்தத் தொகை, சராசரியாக ஒரு விவசாயி ஆண்டு ஒன்றுக்கு சம்பாதிப்பதில் ஐந்துக்கும் ஒரு பங்கு அளவை விட குறைவானதே.

இந்த உதவித் தொகை அங்கு பாரம்பரியமாக நிலவி வரும் ஆண் வாரிசுக்கான ஆதரவைச் சமன் செய்யும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சீனாவில் பாரம்பரியமாக ஆண் வாரிசுகள் குடும்பப் பெயரைத் தாங்கியும், வயதான பெற்றோர்களை பராமரிப்பவர்களாகவும் இருந்து வருகிறார்கள்.

30 ஆண்டுகளுக்கும் முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட “ஒரு குழந்தை” கொள்கையின் அடிப்படையில், சில அரிதான விதிவிலக்குடன் பெற்றோர்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டது.

Posted in 60+, Benefits, Child, Children, China, Dollar, Female, Growth, Kids, male, Population, ratio, South Asia, tactics | Leave a Comment »