Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Committee’ Category

Public Administration: Accountant General’s Office: IAAS – Indian Audit and Accounts Service

Posted by Snapjudge மேல் திசெம்பர் 13, 2007

தணிக்கை முறையில் தப்புக் கணக்கு!

இரா. செழியன்

இந்தியா கடைப்பிடித்துவரும் நாடாளுமன்ற முறையின் அடிப்படைக் குறிக்கோள் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய பேரவையின் கட்டுப்பாட்டிற்குட்பட்டு அரசு நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதுதான்.

குறிப்பாக, அரசு நிர்வாகத்துக்கும் அரசால் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்கும் நாடாளுமன்றம் மானியங்களை வழங்குகிறது. அந்த மானியத் தொகைகளைக் குறிப்பிட்ட திட்டங்களுக்காகச் சரியாக, சிக்கனமாக, திறமையாக, அரசு நிறைவேற்றுகிறதா என்பதை நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்குக் குழு, மதிப்பீட்டுக் குழு, பொதுத்துறை நிறுவனக் குழு போன்ற கண்காணிப்பு அமைப்புகள் மூலம் ஆராய்கின்றன.

இந்தவகையில், பொதுத்தணிக்கை அமைப்பு என்பது அரசின் வரவு, செலவுக் கணக்குகளைத் தணிக்கை செய்து, அதிலுள்ள குறைபாடுகள் அடங்கிய அறிக்கைகளை குடியரசுத் தலைவர் மூலம் நாடாளுமன்ற அவைகளின் முன் வைக்கிறது.

இந்த வகையில் தலைமைத் தணிக்கை அதிகாரியின் பணி நாடாளுமன்றத்திற்கு மிகவும் முக்கியமானது. இது குறித்து அரசியல்நிர்ணய சபையில் அம்பேத்கர் கூறியதாவது: “”இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள மிக முக்கியமான அதிகாரி, தணிக்கைக் குழுத் தலைவர் என்பதுதான் என் கருத்து. இன்னும் கவனித்தால், தலைமை நீதிபதிக்கு இருப்பதைவிட அதிகமான அளவு தணிக்கைக்குழுத் தலைவருக்கு முக்கியத்துவம் இருக்கிறது. நீதி அமைப்பு இருப்பதைப் போன்று தணிக்கை அமைப்பும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.”

தணிக்கை அமைப்பின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி நீண்ட விவாதம் அரசியல்நிர்ணய சபையில் 1949, மே மாதத்தில் வந்தது. தணிக்கைத் துறையில் திறமையும், நல்ல பயிற்சியும் உள்ளவர்களைத்தான் தணிக்கை அமைப்பின் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் வந்தபொழுது, “”பொதுவாக மாநிலத்தில் கணக்குத் தணிக்கை அதிகாரியாக ( Accountant General) உள்ளவர்களில் தலைசிறந்து விளங்குபவர்களைத்தான் மத்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரியாக நியமிப்போம்” என்று அரசமைப்புச் சட்ட ஆக்கக்குழுவின் சார்பில் டி.டி. கிருஷ்ணமாச்சாரி உறுதிமொழி தந்தார்.

ஆறாண்டு காலம் அல்லது 65 வயதுவரை இவற்றில் எவை முன்னதாக வருகிறதோ அதுவரையில் பணியாற்ற, தலைமைத் தணிக்கைக் குழுத் தலைவர் நியமிக்கப்படுகிறார். அரசியல் நிர்ணயசபையில் தரப்பட்ட உறுதிமொழியின்படி 1948 தொடங்கி 1966 வரை மூன்று கணக்குத் தணிக்கை அதிகாரிகள், வி. நரஹரி ராவ், ஏ.கே. சந்தா, ஏ.கே. ராய் போன்ற இந்திய தணிக்கைப் பிரிவின் உயர் அதிகாரிகள் தணிக்கை அமைப்புத் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

ஆனால், அதன்பிறகு கடந்த 42 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட 7 தணிக்கைத் தலைவர்களில் ஒரே ஒருவர் மட்டும்தான் இந்திய கணக்குத் தணிக்கை ( IAAS – Indian Audit and Accounts Service) பிரிவில் உயர் அதிகாரியாக இருந்தார். மற்ற 6 தடவைகளில் தணிக்கைக் குழுத் தலைவர் பதவி இந்திய ஆட்சிப் பணியாளர் ( IAS – Indian Administrative Service்) பிரிவைச் சேர்ந்தவர்களுக்குத் தரப்பட்டது. இது சரியானதல்ல.

ஓய்வுபெறும் நிலையிலுள்ள இந்திய ஆட்சிப் பணியாளருக்கு கணக்கு – தணிக்கைத் துறைகளில் எத்தகைய பயிற்சியும், திறமையும் இல்லாத நிலைமையில், இந்திய கணக்குத் தணிக்கைக் குழுவின் தலைவராக நியமிக்கப்படுவது நாடாளுமன்ற முறைக்கு மிகவும் முரண்பட்ட ஒன்றாகும்.

உலகில் ஜனநாயக நடைமுறையைப் பின்பற்றும் முக்கியமான நாடுகளில் எவற்றிலும் தணிக்கை அதிகாரியை அரசு தன் விருப்பப்படி நியமித்துவிட முடியாது.

இங்கிலாந்து நாட்டில், மக்கள்சபையின் பொதுக்கணக்குக் குழுவின் ஆலோசனைப்படிதான் தணிக்கை அமைப்பின் தலைவரை நியமிக்கும் தீர்மானத்தை பிரதமர் மக்கள்சபையின் முன் வைப்பார். எவ்வித விவாதமுமின்றி பேரவை அதை ஏற்றுக்கொள்ளும்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உள்ள பொதுக் கணக்கு – தணிக்கைக் குழுவின் தீர்மானத்தையொட்டி மத்தியத் தணிக்கைக் குழுத் தலைவர் நியமிக்கப்படுகிறார்.

ஜெர்மன் நாட்டின் நாடாளுமன்றத்தில் உள்ள உயர்நிலை தணிக்கை அமைப்பின் ஆலோசனையின் பேரில்தான் தணிக்கைக் குழுவின் தலைவர் – துணைத் தலைவர் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

அமெரிக்காவின் மேல்சபையான செனட்டின் தீர்மானத்தின் மீதுதான் தணிக்கை அமைப்புத் தலைவரை, அந்நாட்டின் அதிபர் நியமிக்க முடியும். அப்படி அதிபர் நியமித்தாலும் தணிக்கைக் குழுத் தலைவரை நீக்கும் அதிகாரம் அவருக்குக் கிடையாது. செனட் சபை நிறைவேற்றுகிற குற்றச்சாட்டுத் தீர்மானப்படிதான் அவரை நீக்க முடியும்.

ஆக, மற்ற நாடுகளில் உள்ள முறையைப் போன்று இந்தியாவிலும் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியை மத்திய அரசு தன்போக்கில் எந்த வகையிலும் நியமிப்பது கூடாது. மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றின் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளடக்கிய பாரபட்சமற்ற ஒரு குழு மூலமாகத்தான் அந்தப் பதவிக்கான தலைவர் நியமிக்கப்பட வேண்டும்.

தலைமைக் கணக்குத் தணிக்கை அமைப்பின் முக்கியத்துவம் பற்றி 1950 ஜூலை 21 ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் பின்வருமாறு கூறினார்: “”இந்தியா ஓர் ஏழைநாடு. இங்குள்ள அரசு மூலம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அளவில் செலவு செய்யப்படுகிற நிலைமையில், ஒவ்வொரு ரூபாயும் எவ்வாறு செலவாகிறது என்பதைக் கவனிக்கும் பொறுப்பு தணிக்கைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி அதிகமாகக் கூறத் தேவையில்லை.”

1954 ஆம் ஆண்டு மத்திய – மாநில அரசுகளின் மொத்த செலவு ரூ. 1,254 கோடி. தற்போதைய நிலவரப்படி, 2005 – 2006-இல் மத்திய – மாநில அரசுகளின் மொத்த செலவின் அளவு ரூ. 15,92,000 கோடி.

அப்போது இருந்ததைவிட 1,270 பங்கு அதிகமான அரசு செலவுகளைத் தற்போது தணிக்கை பார்க்க வேண்டிய பொறுப்பு பொதுத்தணிக்கை அமைப்புக்கு இருக்கிறது. ஆனால், முன்பிருந்த தணிக்கைத் துறையின் திறமையாளர்கள் தற்போது அரசால் தணிக்கைத் தலைவராக நியமிக்கப்படுவதில்லை.

அரசு நிர்வாகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வீணாக்கப்படுகிறது அல்லது ஊழலில் கரைக்கப்படுகிறது என்றால், அவை அங்குள்ள அதிகாரிகளின் நிர்வாகத்தில்தான் நடைபெறுகின்றன.

அப்படிப்பட்ட அதிகாரி ஒருவரை திடீரென்று அவருக்குப் பின்னணியான பயிற்சியும், திறமையும் இல்லாத நிலைமையில், தணிக்கைத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுவிட்டால் அவர் சம்பந்தப்பட்ட அரசின் செலவு ஒழுங்கீனங்களின் மீது அவருடைய தலைமையின்கீழ் வரும் தணிக்கைத்துறையால் எப்படி வெளிப்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியும்?

தணிக்கை முறைக்குக் கட்டுப்பட்டு அரசு நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதற்குப் பதில், அரசு நிர்வாகத்துக்குக் கட்டுப்பட்டுத் தணிக்கைத்துறை கொண்டு வரப்படுகிறது.

தற்போதைய தணிக்கைத்துறைத் தலைவர் – அவரும் இந்திய ஆட்சிப் பணி ( IAS) அதிகாரியாக இருந்து இந்தப் பதவிக்கு வந்தவர் – அவருடைய பதவிக்காலம் வருகிற 2008 ஜனவரி 6 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

தணிக்கைக்குழுத் தலைவராக ஒருவரை நியமிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் இந்தச் சமயத்திலாவது மக்களாட்சி முறையில் நம்பிக்கையுள்ள நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களும், அவற்றின் கண்காணிப்புக் குழுவினரும், பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் ஒன்றுபட்டு, பயிற்சிபெற்ற திறமையுள்ள, தணிக்கைக் கணக்குத்துறை பிரிவைச் சேர்ந்த ஒருவரை, பாரபட்சமற்ற முறையில் தேர்ந்தெடுப்பதற்கான கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டும்.

சரியானபடி அரசின் செலவு விவரங்கள் கவனிக்கப்படவில்லை என்றால் தணிக்கை முறை வெற்றி பெறாது.

சரியானபடி தணிக்கை முறை இல்லையென்றால் நாடாளுமன்றக் கண்காணிப்பு வெற்றி பெறாது. இந்த நிலைமை வளர்ந்தால் ஜனநாயக முறையில் மக்களின் பணத்துக்குப் பாதுகாப்புத் தரும் நாடாளுமன்றம் என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

உச்ச நீதிமன்றத்தைவிட முக்கியமான இடத்தை தணிக்கை அமைப்புக்கு அரசமைப்பு ஆசான் அம்பேத்கர் தந்தார். ஆனால் தமது போக்கில் தணிக்கை அமைப்பின் தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத் தொடர்ந்து மத்திய அரசு நியமித்துக்கொண்டே இருந்தால், விரைவில் சட்டப்படிப்பு அறவே இல்லாத ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு பின்வாங்காது.

அதன் பிறகு, நீதிமன்றம், நாடாளுமன்றம், தணிக்கைத்துறை ஆகியவைகளுக்கு உள்ள சுதந்திரமும், தனித்தன்மையும் நீக்கப்பட்டு, எல்லாவற்றுக்கும் ஏகபோக சர்வாதிகாரமாக மத்திய நிர்வாகத்துறை ஆகிவிடும்.

(கட்டுரையாளர்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)

—————————————————————————————————————————————————————-

பொதுத்துறையில் புதிய பார்வை!

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதுதான் பொருளாதாரச் சீர்திருத்தவாதிகளின் முதல் கோஷமாக இருந்தது. ஏதோ, நல்ல புத்தி தோன்றி, நஷ்டத்தில் இயங்கும் சில நிறுவனங்கள் தவிர மற்ற பொதுத்துறை நிறுவனங்களின்மீது மத்திய அரசு கைவைக்காததன் பலன், இப்போது பல நிறுவனங்கள் லாபகரமாக நடக்கின்றன. இதற்கு, தனியார்மயமாக்கப்படுவோம் என்கிற பயம் காரணமா அல்லது நிர்வாகம் முடுக்கி விடப்பட்டது காரணமா என்று தெரியவில்லை.

தற்போது சுமார் 250 பொதுத்துறை நிறுவனங்கள் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் இருந்து வருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவைகளில் 120 நிறுவனங்கள் மட்டும்தான் லாபகரமாக இருந்தன. சமீபத்திய ஆய்வின்படி, கணக்கெடுக்கப்பட்ட 215 நிறுவனங்களில் 157 நிறுவனங்கள் லாபகரமாக நடப்பதாகத் தெரிகிறது. 35 நிறுவனங்களின் தணிக்கை இன்னும் முடிந்தபாடில்லை.

இந்தப் புள்ளிவிவரங்கள் சற்று ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் என்பவை, தேசத்தின் சமச்சீர் வளர்ச்சியையும், நாட்டின் அடிப்படைத் தேவைகளையும் கருத்தில்கொண்டு நிறுவப்பட்டவை. பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ், இந்தியன் ஏரோநாட்டிக்ஸ், செய்ல், ஆயுதத் தொழிற்சாலை போன்றவை, இந்தியாவின் தன்னம்பிக்கையை வளர்த்தன என்பது மட்டுமல்ல, நாம் சுயசார்புடைய நாடாக வளர வழிவகுத்தன என்பதையும் மறந்துவிடக் கூடாது.

சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டிருப்பதுபோல, பண்டித ஜவாஹர்லால் நேரு இந்தியாவுக்கு அமைத்துத் தந்த கலப்புப் பொருளாதாரத்தின் பலன்தான் இப்போது இந்தியா உலகமயமாகி இருக்கும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்க வழிகோலியிருக்கிறது. அதுமட்டுமல்ல, திருச்சி, ராஞ்சி, போபால், புணே, ரூர்கேலா, நாசிக் போன்ற நகரங்களைத் தொழில் நகரங்களாக உருவாக்க முடிந்ததன் காரணம், அங்கெல்லாம் பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவப்பட்டதால்தான்.

ஒரு சில பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் தொடர்ந்தன என்பதும், லாபம் ஈட்டும் நவரத்னங்கள் என்று அழைக்கப்படும் நிறுவனங்களும்கூட, தங்களது முழுமையான உற்பத்தித் திறனை எட்டவில்லை என்பதும் உண்மை. ஆனால், அதற்குக் காரணம் நிர்வாகச் சீர்கேடும், அரசியல் தலையீடும், தொழிலாளர்கள் மத்தியில் காணப்பட்ட மெத்தனமும்தானே தவிர, அந்த நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களாக இருந்ததால் அல்ல. அதைத்தான், இந்த நிறுவனங்களின் தற்போதைய அதிகரித்த உற்பத்தித் திறனும், லாபமும் நிரூபிக்கின்றன.

இந்தப் பொதுத்துறை நிறுவனங்கள் நவீனப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும், அவைகளின் நிர்வாகத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்த நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களைப்போல, லாப நோக்குடனும், திறமையின் அடிப்படையிலும் செயல்பட வேண்டும் என்பதும், மக்கள் வரிப்பணம் இந்த நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுசெய்ய வீணடிக்கப்படக் கூடாது என்பதும் உறுதி. அதற்கு வழி இந்த நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதல்ல. தனியார் முதலீடுகளை குறிப்பிட்ட அளவு வரவேற்பதும், அரசு அதிகாரிகள் மட்டுமன்றி முதலீட்டாளர்களின் பிரதிநிதிகளும் நிர்வாகத்தில் பங்கு பெறுவதும்தான்.

முப்பது அல்லது நாற்பது சதவிகிதம் பங்குகளைத் தனிநபர்களுக்கு பங்குச்சந்தை வழியே விற்பதன் மூலம் இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பங்குதாரர்கள் கேள்வி கேட்க முடியும் என்பதும், நிர்வாகத்தில் பங்குதாரர்களின் பிரதிநிதிகள் இயக்குநர்களாகப் பங்கு பெற முடியும் என்பதும், இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமல்ல, பங்குகளை பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிப்பதால் லாபம் காட்ட வேண்டிய கட்டாயம் நிர்வாகத்துக்கு ஏற்படும். நிறுவனத்தை நவீனப்படுத்த முதலீடும் கிடைக்கும்.

சிறிய அளவில் நமது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள், பங்குச்சந்தை மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவது என்பது காலத்தின் கட்டாயம். அப்போதுதான் அவை உண்மையிலேயே மக்கள் நிறுவனமாகச் செயல்படும். அதுமட்டுமல்ல, இந்த நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படும் அபாயமும் தவிர்க்கப்படும்!

—————————————————————————————

அரசியல்வாதிகளுக்கும் நடத்தை நெறிமுறைகள்

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்


கடந்த வாரம் நமது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சம்பந்தப்பட்ட இரு சம்பவங்கள் செய்தி ஊடகங்களில் இடம்பிடித்திருந்தன. ஜம்மு ~ காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அவைக் காவலர்களுடன் கடுமையாக மோதும் காட்சியை ~ கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு அவைக் காவலர்களுக்குக் குத்து விடும் காட்சியை ~ தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பின. விளையாட்டு தொலைக்காட்சி சேனல்களில் காட்டப்படும் மல்யுத்தப் போட்டி போல இருந்தது அது.

நமது கவனத்தைக் கவர்ந்த மற்றொரு செய்தி, 35-க்கு மேற்பட்ட குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவரும் 8 மாதங்களாக, ஆம்; எட்டு மாதங்களாக தான், குண்டர் படைத் தலைவர்போல தலைமறைவாக இருந்துகொண்டிருந்தவருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டது தொடர்பானதாகும்.

அந்த ஜம்மு ~ காஷ்மீர் எம்எல்ஏவை ஒரு தொலைக்காட்சி சேனல் பேட்டி கண்டு ஒளிபரப்பியது. அவரது கேவலமான நடவடிக்கைக்காக ஒரு துளி வருத்தத்தைக்கூட அப்போது அவர் தெரிவிக்கவில்லை. மாறாக, தேவைப்பட்டால் மீண்டும் அவ்வாறே நடப்பேன் என்று திட்டவட்டமாகக் கூறினார் அந்த எம்எல்ஏ. ஒருவகையில் பார்த்தால், சட்டம் ~ ஒழுங்கைப் பராமரிக்கின்ற காவல் துறையினரைப் போன்றவர்கள்தான் சட்டப் பேரவைக் காவலர்களும். அவையின் கண்ணியத்தைக் காக்கவும் அவைக்குள் நன்னடத்தையை உறுதிசெய்யவும் அவைத் தலைவரின் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுப்பவர்கள் அவர்கள். எனவே அவைக் காவலரை ஓர் எம்எல்ஏ தாக்குவதென்பது, காவல் துறையைச் சேர்ந்த ஒரு காவலரை பொதுஜனம் ஒருவர் தாக்குவதற்குச் சமமாகும். அப்படிச் செய்திருந்தால் பொதுஜனத்துக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் அந்த எம்எல்ஏவோ எவ்விதத் தண்டனையுமின்றித் தப்பிவிடக்கூடும். எம்.பி., எம்எல்ஏக்களுக்கு ஒரு குற்றவியல் சட்டம், சாதாரண மக்களுக்கு வேறொரு குற்றவியல் சட்டமா அமலில் இருக்கிறது?

8 மாதங்களாகத் தலைமறைவாகி ஓடிக்கொண்டிருந்த அந்த எம்.பி., அலாகாபாதில் உள்ள ஃபூல்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒரு காலத்தில் பண்டித ஜவாஹர்லால் நேருவைத் தேர்ந்தெடுத்த பெருமைக்குரியது அத் தொகுதி. அதே தொகுதியின் பிரதிநிதியாக இன்று, நாட்டின் பிரச்னைகளை விவாதித்து முடிவெடுக்கக்கூடிய தேசத்தின் மிக உயர்ந்த அமைப்பான நாடாளுமன்றத்துக்கு குற்றப் பின்னணியைக் கொண்ட ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செல்கிறார் என்றால் அது காலக்கொடுமைதான்.

அரசியல்வாதிகள் மீதும் சாதாரணப் பொதுமக்கள் மீதும் பழிவாங்கும் எண்ணத்தோடு அதிகாரத்தில் இருப்பவர்களால் பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை. அரசியல் எதிரிகள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்குகள் தொடரப்படுவதும் நடக்காமல் இல்லை.

தனக்கு எதிராக 35-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், ஓர் எம்.பி. தொகுதியின் பிரதிநிதியாகவும் இருக்கக்கூடிய கெüரவத்தை ஒருவர் பெற்றிருப்பதென்றால் அவர் உண்மையிலேயே பெரிய மனிதர்தான்! ஒருவர் எம்எல்ஏயாகவோ, எம்.பி.யாகவோ ஆக விரும்பினால், அவருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதைக் காட்டக்கூடியதாகவும் இருக்கிறது இது. ‘கெüரவமான’ நடுத்தர வர்க்கத்தினர், தொழில் நிபுணர்கள் மற்றும் இதைப் போன்ற சமுதாயத்தின் இதர பிரிவினரெல்லாம் வன்முறை தலைவிரித்தாடும் அரசியல் களத்துக்குள் ஏன் வர விரும்பவில்லை என்பதையும் இது எடுத்துக் காட்டுகிறது. சமுதாயத்தின் கணிசமான பகுதியினர் பொதுவாழ்க்கையில் ஈடுபட முடியாத அளவுக்கு ஒரு மோசமான நிலைமையை அரசியலில் உருவாக்கி விட்டார்கள்.

அந்த எம்.பி., எம்எல்ஏவைப் பற்றி அதே தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான அதே நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான ஜெயந்தி நடராஜனும் பங்குகொண்டிருந்தார். அச் சம்பவங்கள் குறித்து அவரிடம் கேட்டபோது, ‘ஒருவர் குற்றவாளி என்பது நிரூபணமானால், சட்டப்படி அவர் தண்டிக்கப்பட வேண்டியவர்தான்’ என்று சாதாரணமாகக் கூறிவிட்டுச் சென்றார் அவர். சாதாரணமாகப் பார்க்கும்போது, அவர் கூறியது நியாயமானதுதான், சரியானதுதான் என்று தோன்றக்கூடும். அரசியல்வாதிகளைப் பொருத்தவரை அதன் அர்த்தம் சரிதானா என்பதைப் பார்ப்போம்.

மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் மீதான எத்தனையோ வழக்குகள் எத்தனையோ நீதிமன்றங்களில், வெவ்வேறு நிலைகளில் பல ஆண்டுகளாக, ஏன் பத்து ஆண்டுகளுக்கு மேலாகக்கூட விசாரணையில் இருந்துகொண்டு இருப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

பிகார் கால்நடைத் தீவன ஊழல் வழக்கை சுமார் 20 ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் குற்றம் சாட்டப்பட்ட மூத்த அரசியல்வாதிகள் அவ் வழக்குகளில் தண்டிக்கப்படவும் இல்லை, அதிலிருந்து விடுதலை ஆகவுமில்லை. இதைப்போல எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.

எடுத்துக்காட்டாக சுக்ராம் வழக்கை எடுத்துக்கொள்வோம். அவரது வீட்டிலிருந்து ரொக்கமாகப் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அரசிடம் அத்தனை புலன்விசாரணை அமைப்புகள் இருந்தபோதிலும் அவர் மீதான குற்றச்சாட்டுகளை வெற்றிகரமாக நிரூபிக்க முடியவில்லை. சம்பந்தப்பட்ட அரசியல்வாதியோ சட்டையைக் கழற்றி மாட்டுவதைப்போல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்சிக்குத் தாவிக்கொண்டு சந்தோஷமாகக் காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறார். மிகப் பலவீனமான புலனாய்வு அமைப்புகள், ஓட்டைகளுடன்கூடிய அரசுத் தரப்பு இயந்திரங்கள், மென்மைப் போக்கு கொண்ட (வளைந்து கொடுக்கக்கூடிய என்றுதான் குறிப்பிட நினைத்தேன்) நீதித் துறை இவற்றாலெல்லாம் அரசியல்வாதிகளுக்கு எதிரான எந்த வழக்கையும் விசாரணை நடத்தி, அதை உரிய வகையில் முடிவுக்குக் கொண்டுவர முடியாது.

ஓர் அரசு ஊழியர் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டால், உடனடியாக அவர் பணியிடைநீக்கம் செய்யப்படுவது நடைமுறை விதியாக இருந்து வருகிறது. ஒருவேளை அவர் குற்றமற்றவர் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்த காலத்தில் ~ வருமானம், பதவி உயர்வு போன்ற ~ இழந்தவையெல்லாம் இழந்ததுதான். அதாவது, மக்கள் பணியாளர்களாக, அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்ற வழக்கு விசாரணையில் இருக்கும் பொழுது அவர்கள் அரசுப் பணியை ஆற்றுவதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள் என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம். ஆனால், அரசியல்வாதிகள் விஷயத்தில் இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்காமல் இருப்பதற்கு எந்த நியாயமான காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. சொல்லப் போனால், அமைச்சர்களும் எம்எல்ஏ, எம்.பி.க்களும்கூட மக்கள் பணியாளர்கள்தான்; அரசாங்க ஊழியர்களையும்விட கூடுதலாக மக்கள் பணியாளர்கள் அவர்கள். (பலர் தம்மை மாமன்னர்களாகவும் நவாபுகளாகவும் நினைத்துக்கொள்கின்றனர் என்பது வேறு விஷயம்). எனவே, அரசு ஊழியர்கள் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படும் அதே கொள்கை, அரசியல்வாதிகள் விஷயத்திலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்; குற்ற வழக்குகளில் இருந்து விடுதலை ஆகும் வரையில் அரசுப் பதவிகளை அவர்கள் வகிப்பதற்கும், எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கான பணியை ஆற்றுவதற்கும் அவர்களை அனுமதிக்கக் கூடாது. இந்த ஒரே நடவடிக்கை மூலமாகவே சட்ட மன்றங்களும் நாடாளுமன்றமும் குறிப்பிடத் தக்க அளவுக்குத் தூய்மைப்படுத்தப்பட்டுவிடும்.

அரசுப் பதவிகளை வகிப்போர் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க தனி நீதிமன்றங்களையோ, பிரத்தியேக நீதி அமைப்புகளையோ ஏற்படுத்த வேண்டும் என்று பலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. சாதாரணக் குடிமகனாக இருந்தாலும், சமுதாயத்தில் முக்கியமானவர்களாக இருந்தாலும் சட்டம் யாரையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை; எனவே ஒரே மாதிரியான நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது என்னும் வாதம் முன்வைக்கப்படுகிறது. இது சரியானதுபோலத் தோன்றினாலும் உண்மையில் தவறானதாகும்.

முதலாவதாக, சாதாரணக் குடிமகனுக்கும் விரைந்து நீதி கிடைக்க வேண்டியது அவசியம்தான். ஏராளமான வழக்குகள் பல பத்தாண்டுகளாக நீதிமன்றங்களின் விசாரணையில் இருந்துகொண்டு இருக்கின்றன. ஏராளமான விசாரணக் கைதிகள் சிறையில் இருந்துகொண்டு இருக்கின்றனர். கடைசியில் அவர்களில் பலர் வழக்கில் விடுதலை செய்யப்படக்கூடும் அல்லது மிகக் குறைந்த அளவு தண்டனை விதிக்கப்படவும்கூடும்.

இரண்டாவதாக, நமது சமுதாயத்தில் செல்வாக்குடன் இருக்கக்கூடிய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் போன்றோர் புலனாய்வு அமைப்புகள், விசாரணை அமைப்புகள், நீதி நடைமுறைகள் போன்றவற்றின் மீது தமது செல்வாக்கைச் செலுத்தக்கூடிய நிலையில் இருப்பவர்களாவர் என்பதே உண்மை. அவர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க முடியாமல் இருப்பதற்கு எந்தவிதக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை.

எடுத்துக்காட்டாக, குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பதவியில் இருக்க அனுமதிப்பதாக வைத்துக்கொள்வோம். ஒருவேளை பல ஆண்டு விசாரணைக்குப் பிறகு இறுதியில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டால், கறைபடிந்த ஒருவரை அரசின் உயர் பதவியில் அமரவும் அதன் மூலம் சமுதாயத்தின் செல்வாக்கு செலுத்தவும் அனுமதித்தவர்களாகிவிடுவோம் நாம். இந்தக் காரணங்களால்தான் அரசியல்வாதிகள், எம்.பி., எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க விரைவு நீதிமன்றங்கள் தேவை என வலியுறுத்தப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கிய முறைகேடு, நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி முறைகேடு ஆகிய ‘முன்மாதிரியான’ செயல்களெல்லாம் தண்டிக்கப்பட வேண்டியவை அல்ல என்று இன்றைய அமைப்பு முறை முடிவு செய்துவிட்டது.

இத்தகைய அரசியல்வாதிகளை முறைப்படுத்த நமது அரசியல் அமைப்புச் சட்டச் சிற்பிகள், எந்த ஏற்பாட்டையும் செய்யாமல் போனது நமது துரதிருஷ்டம்தான். அரசியல்வாதிகளெல்லாம் தம்மைப்போல நியாயவான்களாக, சுயநலமற்றவர்களாக, சுத்தமானவர்களாக இருப்பார்கள் என்று ஜவாஹர்லால் நேரு நினைத்திருக்கலாம். அன்று அவர்கள் அந்த ஏற்பாட்டைச் செய்யாமல் போனதற்கான விலையை நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின் நாம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கென குறைந்தபட்ச நன்னடத்தை விதிகள்கூட வகுக்கப்படவில்லை. அத்துமீறல்களை நடத்திவிட்டு எவ்விதத் தண்டனையுமின்றி அவர்கள் தப்புவது வாடிக்கையாகிவிட்டது. சொல்லப் போனால், கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இந்தியாவில் ஜனநாயகப் பாரம்பரியம் என்று ஏதும் இருந்ததில்லை. நமது அரசியல்வாதிகளும் தம்மை முகலாயச் சக்கரவர்த்திகளைப்போல் நினைத்துக்கொள்கின்றனர்.

ஜனநாயக உணர்வுகளும் சிந்தனைகளும் வளர்த்தெடுக்கப்படவும் இல்லை; மாற்றங்களை உருவாக்கும் வகையில் மக்களின் கருத்துகள் நெறிப்படுத்தப்படவும் இல்லை. எனவே, அரசியல்வாதிகளுக்கென குறைந்தபட்ச நடத்தை நெறிமுறைகள் வகுக்கப்பட்டாக வேண்டியது அவசியமாகும். ஆனால் அதை யார் செய்வதென்பதே கேள்வி.

(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவைச் செயலர்.)

Posted in Accountant General, Accounts, Admin, Administration, AGO, Allegations, Arms, Audit, BHEL, Bribes, Cabinet, Capitalization, Collector, Collectorate, Commission, Committee, Corruption, Deficit, Economy, Employment, Finance, financial, Funds, Globalization, Govt, HAL, Hindustan, Hindusthan, IAL, IAS, IMF, Income, Inquiry, Jobs, Lokpal, markets, NLC, parliament, Planning, Poor, Private, PubAd, Pubic, Public Administration, Rich, SAIL, service, SEZ, Shares, Statements, Statistics, Statz, Stocks, Verification, Wages, WB, Wealth, Weapons | Leave a Comment »

Rice prices & food security plan – Veera Jeeva Prabhakaran & KS Radhakrishnan

Posted by Snapjudge மேல் நவம்பர் 30, 2007

நெல்லுக்கு “நோ’?

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

நெல் குவிண்டாலுக்கு ரூ. 1,000 விலை கேட்டு ரயில் மறியல்! தஞ்சை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இதுகுறித்துப் போராடிய விவசாயிகள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

தில்லி நாடாளுமன்றத்தின் முன் நெல்லைக் குவித்துப் போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் ரயிலில் தில்லி பயணம் என்ற போராட்டச் செய்திகள் கடந்த இரண்டு நாள்களாக வந்தவண்ணம் இருக்கின்றன.

விவசாய இடுபொருள்களின் விலை ஏறிவிட்டதால், நெல்லுக்குக் கட்டுப்படியான விலை வேண்டுமென்று விவசாயிகள் போராடுகின்றனர்.

நெல் மற்றும் கோதுமைக்கு இந்த ஆண்டுக்கான கொள்முதல் விலையை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. கோதுமைக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 800 அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஊக்கத்தொகையாகக் குவிண்டாலுக்கு ரூ. 200 அளிக்கப்படும் என்றும் மத்திய வேளாண் அமைச்சகம் அறிவித்தது. இதன் மூலம் கோதுமைக்கு குவிண்டாலுக்கு ரூ. 1,000 விலையாகக் கிடைக்கும்.

ஆனால், சாதாரண ரக நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 645-ம் சூர்ப்பர்பைன் எனப்படும் உயர் ரக நெல்லுக்கு ரூ. 675-ம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊக்கத்தொகை 100 ரூபாயையும் சேர்த்து நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 745 முதல் ரூ. 775 மட்டுமே கிடைக்கும்.

இந்த அறிவிப்பு நெல் விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நெல்லுக்குக் குறைந்தபட்சம் குவிண்டாலுக்கு ரூ. 1,000 வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நடப்பு குறுவை சாகுபடி காலத்தில் குவிண்டாலுக்கு 1,000 ரூபாயும், சம்பா சாகுபடி நெல்லுக்கு 1,500 ரூபாயும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

ஆந்திரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இதுகுறித்து கடும் போராட்டங்களை நடத்தி வருகிறார். தென்மாநிலங்கள் முழுவதும் இதுகுறித்தான விவாதங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவாரும், குவிண்டாலுக்கு ரூ. 1,000 கோதுமைக்கு வழங்கியது சரிதான் என்றும், நூறு சதவீதம் கோதுமை பயன்பாட்டில் உள்ளது என்றும், 65 சதவீதம்தான் நெல் பயன்பாட்டில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

1996 – 97-ல் நெல்லுக்கும் கோதுமைக்கும் இணையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 380 நிர்ணயிக்கப்பட்டது. 1997-98-ல் குவிண்டால் ஒன்றுக்கு நெல்லுக்கு ரூ. 415, கோதுமைக்கு ரூ. 475 என்றும் வித்தியாசப்பட்டு பின் ஒவ்வோர் ஆண்டும் நெல்லைவிட, கோதுமைக்கு விலை கூடுதல் தரப்பட்டது.

இந்த விலை நிர்ணயம் செய்யும் அமைப்பு நடந்து கொள்ளும் விதம் நெல் உற்பத்தி விவசாயிகளின் முதுகில் குத்துகின்ற காரியம்தான். பலமுறை இதுகுறித்து எடுத்துச் சொல்லியும் செவிடன் காதில் சங்கு ஊதுகின்ற அவலநிலைதான். தற்போது கோதுமைக்கு ரூ. 750 + 250 (போனஸ்) = 1,000 என்றும் அரிசிக்கு 645 + 50 (போனஸ்) = 695 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த பாரபட்சமான போக்கு தென்மாநிலங்களை பாதிக்கின்றது. மாற்றாந்தாய் போக்கில் மத்திய அரசு நடந்து கொள்வதைக் கண்டித்து தமிழக அரசும், ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. தமிழக உணவுத்துறை அமைச்சர் ஒரு குவிண்டாலுக்கு சன்ன ரக அரிசி ரூ. 725-ம், சாதா ரக அரிசி ரூ. 695 என்றும் கூறி 75 ரூபாய் அரிசிக்குக் கூட்டிள்ளோம் என்ற அவருடைய அறிவிப்பு வேதனையாக இருக்கிறது.

மத்திய அரசு ஆயிரம் ரூபாய் தரவில்லை என்பதைக் குறித்த எவ்விதக் கருத்துகளும் அவர் அறிவிப்பில் இல்லை. நெல் உற்பத்தி பஞ்சாபில் அதிகமாக இருந்தாலும், பயன்பாடு தென்மாநிலங்களில்தான் அதிகம்.

நெல் சாகுபடி ஏக்கர் ஒன்றுக்குச் செலவு 1997-2007-ல் விதை நெல் ரூ. 267 – ரூ. 400. உரம் ரூ. 1,200 – ரூ. 1,700. பூச்சிக்கொல்லி மருந்து வகைகள் ரூ. 150 – ரூ. 300. பணியாள் கூலி செலவு ரூ. 4,600 – ரூ. 7,000. அறுவடை செலவு ரூ. 230 – ரூ. 950.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயச் சங்க செயலர் வே.துரைமாணிக்கம் கணக்கீட்டின்படியும், வேளாண்மைத் துறையின் பரிந்துரையின்படியும் கீழ்குறிப்பிட்டவாறு ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு ஆகும் செலவு விவரம்.

நெல்விதை கிலோ ரூ. 15 வீதம் 15 கிலோவிற்கு ரூ. 450. 8 சென்ட் நாற்றங்கால் தயார் செய்ய இரண்டு ஆண் கூலி ரூ. 240. ஒரு பெண் கூலி ரூ. 80. தொழுஉரம் ஒரு டன் ரூ. 200. அசோஸ்பைரில்லம் 7 பாக்கெட் பாஸ்யோபாக்டீரியா 7 பாக்கெட் ரூ. 84. ரசாயன உரம் டி.ஏ.பி. 30 கிலோ, யூரியா 20 கிலோ ரூ. 400. நாற்றுப்பறித்து வயலில் எடுத்து வைக்க ஆள் கூலி ரூ. 1,100. நடவு வயல் உழவு டிராக்டர் 2 சால் டிராக்டர் உழவு ரூ. 550. நடவு வயலுக்கான தொழு உரம் 3 டன் ரூ. 600.

வரப்பு மற்றும் வயல் சமன் செய்ய 3 ஆள் கூலி ரூ. 360. நெல் நுண்ணூட்டம் 5 கிலோ ரூ. 93. ரசாயன உரம் டி.ஏ.பி. 50 கி. யூரியா 75 கி. பொட்டாஷ் 50 கி. ரூ. 1,125. நடவுப் பெண்கள் 18 பேருக்கு ரூ. 80 சதவீதம் ரூ. 1,440. 2 தடவை களை எடுக்கச் செலவு ரூ. 980. பூச்சிமருந்துச் செலவு ரூ. 250. காவல் மற்றும் தண்ணீர் பாசனம் செய்ய ஆள் செலவு ரூ. 250. அறுவடை ஆள்கள் கூலி ரூ. 1,750. கதிர் அடிக்கும் இயந்திர வாடகை ரூ. 525. ஓர் ஏக்கருக்கான கடன் பெறும் தொகைக்கான வட்டி கூட்டுறவு என்றால் 7 சதவீதம் (5 மாதம்) ரூ. 245. தனியார் என்றால் ரூ. 500. காப்பீடு பிரிமியம் தொகை 2 சதவீதம் ரூ. 167. விலை மதிப்பீட்டுக்குழு பரிந்துரைப்படி பார்த்தால் நிலமதிப்பிற்கான வட்டி 7 சதவீதம் ரூ. 3,500. மொத்தம் ரூ. 14,689.

இவ்வளவு செலவு கடன் வாங்கிச் செய்தாலும், விலை இல்லை. சிலசமயம் தண்ணீர் இல்லாமல், பூச்சித் தாக்குதலாலும் நெல் பயிர்கள் கருகி விடுகின்றன. பயிர் இன்சூரன்ஸ் என்பது வெறும் வெட்டிப்பேச்சாக உள்ளது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

நாட்டின் முதுகெலும்பு விவசாயம்தான். ஆனால் அதை நம்பியுள்ள 65 சதவீத விவசாயிகளின் நிலைமை மிகவும் வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. இதுவரை இந்தியாவில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடந்த 1960 களில் ஒரு மூட்டை நெல் ரூ. 50. அன்றைக்கு இது ஒரு கட்டுபடியான நல்ல விலை. அதைக் கொண்டு சிரமம் இல்லாமல் விவசாயிகள் நிம்மதியாக வாழ்ந்தனர். அன்று உழவு மாடு ஒரு ஜோடி ரூ. 800தான். ஆனால், இன்றைக்கு ஒரு ஜோடி ரூ. 20,000. அன்று டிராக்டர் ரூ. 25,000 இன்றைக்கு அதன் விலை லட்சங்களாகும். ஆலைகளில் உற்பத்தியாகும் நுகர்வோர் பொருள்கள் நாற்பது மடங்கு அதிகரித்துள்ளன. அரசு ஊழியர்களின் ஊதியம் ஆறு மடங்கு வரை கூடுதலாகி உள்ளது. ஆனால், நெல்லின் விலை திருப்தியாக கூடுதலாக்கப்படவில்லை.

நெல் உற்பத்திச் செலவு கோதுமையைவிட அதிகம். உழைப்பும் அதிகம். நெல் நன்செய் பயிர்; கோதுமை புன்செய் பயிர். நெல் உற்பத்திக்கு பஞ்சாபில் ரூ. 816-ம், மகாராஷ்டிரத்தில் ரூ. 937-ம் செலவாகிறது.

ஒரு குவிண்டால் நெல்லை அரைத்தால் 65 கிலோ அரிசி கிடைக்கும். 35 கிலோ தவிடு மாட்டுத் தீவனமாகப் பயன்படும். நான்கு லிட்டர் எண்ணெய் கிடைக்கும். எண்ணெய் கழிவுகளை மீன்களுக்கு உணவாகப் பயன்படுத்தலாம். இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் உற்பத்தி செய்யப்படும் நெல் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் அதற்கான விலையும் அதை ஊக்குவிக்கின்ற அக்கறையும் மத்திய – மாநில அரசுகளுக்கு இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.

மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு விவசாயிகளின் வேதனை குறித்த அக்கறை இல்லை. பெரிய தொழிலதிபர்களுக்கு ரூ. 1,400 கோடி வரை சலுகைகள் வழங்கி உள்ளார். கொள்ளை லாபம் ஈட்டும் இந்த முதலாளிகளுக்கு கடன் வட்டியை 45 சதவீதம் குறைத்துள்ளார்.

நாட்டின் விவசாய வளர்ச்சி வெறும் 2.3 சதவீதம். மேற்கொண்டு வளர்ச்சி இல்லை. இன்னும் வேதனை என்னவென்றால், அதிகார வர்க்கத்தில் உள்ள சிலர் விவசாயத்தை விட்டு ஒழியுங்கள் என்ற இலவச ஆலோசனை வழங்குவதுதான் கொடுமையிலும் கொடுமை.

நெல்லைப் போன்றே கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலைமையும் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு விவசாயி தான் வளர்த்த கரும்பை கட்டுபடியான விலை இல்லாததால் யார் வேண்டுமானாலும், வெட்டி எடுத்துச் செல்லலாம் என்று தண்டோரா போட்டு கூவி அழைத்தார். அப்படியாவது அந்தக் கரும்பு நிலத்தை விட்டு அகன்றால்போதும் என்ற அவலநிலை.

நெஞ்சு பொறுக்கவில்லை என்ற நிலையில் நெல் விலை கேட்டு விவசாயிகள் களத்தில் போராடுகின்றனர். நீரிழிவு நோயாளிகள், “நெல் அரிசிக்கு நோ’ என்று சொல்வதைப்போல மத்திய அரசும், “நெல்லுக்கு நோ’ என்று சொல்லிவிட்டதோ என்ற ஏக்கம்தான் நமக்கு ஏற்படுகிறது.

வள்ளுவர் சொன்னதைப்போல, “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்’ – என்ற நிலை மாறி விவசாயிகளுடைய பொருளாதார நிலைமை மட்டுமல்லாமல் அவர்களுடைய சமூக, சுயமரியாதையும் அடிபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. இதற்கு யார் காரணம்? ஆட்சியாளர்கள்தான்.

புதிய பொருளாதாரம் தாராளமயமாக்கல் என்ற நிலையில் விளைநிலங்கள் யாவும் அழிக்கப்பட்டு சிறப்புப் பொருளாதார மண்டலமாக மாற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், நிலங்களும் நீர்ப்பாசன ஏரிகளும்கூட வீடுகளாக மாறிவிட்ட நிலை. இந்நிலையில் எப்படி விவசாயம் இந்தியாவில் முதுகெலும்பாக இருக்க முடியும்?

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)
———————————————————————————————————————————————————-

சவாலாகும் உணவுப் பாதுகாப்பு!

வீர. ஜீவா பிரபாகரன்

உலகளவில், மக்கள்தொகை வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் நமது நாட்டில், உணவுப் பாதுகாப்பு என்பது மாபெரும் சவாலாக உருவெடுத்து வருகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் விவசாயத் துறையின் பங்கு பல ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது. இருப்பினும், மொத்த மக்கள்தொகையில் சுமார் 65 சதவீதம் பேர் தங்கள் வாழ்வாதாரமாக விவசாயத்தையே நம்பியுள்ளனர்.

உணவுத் துறையில் பிற நாடுகளைச் சார்ந்திராமல் இருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை. 1960-களில் உணவுப் பொருள்களுக்கு வெளிநாடுகளை நாம் எதிர்பார்த்த நிலை இருந்தது. ஆனால், முதலாவது பசுமைப் புரட்சியால் தன்னிறைவு காணப்பட்டது. பின்னர் ஏற்பட்ட சூழல்களால் நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.

குறிப்பாக, விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழில் நிறுவனங்களாகவும், புதிய நகரங்களாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. ஒரு சில இடங்களில் இத்தகைய நடவடிக்கைகளை விவசாயிகள் எதிர்த்தாலும் அரசுகள் அதை கண்டுகொள்வதில்லை. இதனால், விளைநிலப் பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

விவசாயத்துக்கு நீராதாரமாக விளங்கிய கண்மாய்கள் காணாமல் போய்விட்டன. பாசனத்துக்கான நீர்த் தேவையை பூர்த்தி செய்வதில் அரசுகளுக்குப் போதிய ஆர்வம் இல்லை.

நமது நாட்டில் போதிய நீர்வளம், நில வளம் இருந்தும் அதை முறைப்படுத்தி முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டுவருதற்கான முயற்சிகள் ஏட்டளவிலேயே உள்ளன.

வேளாண் இடுபொருள்கள் விலை அதிகரிக்கும் அளவுக்கு விளைபொருள்களுக்கு, போதிய விலை கிடைப்பதில்லை. இதனால், வேளாண் பணிக்கு போதிய கூலி வழங்க இயலுவதில்லை. எனவே, கிராம மக்கள் அதிக வருவாய் கிடைக்கும் நகர்ப்புறப் பணிகளுக்குச் செல்லும் நிலை உருவாகிவிட்டது. கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கிய இடப்பெயர்வு அதிகரித்து வருகிறது.

விவசாயிகள் விளைவித்த பழம், காய்கறி உள்ளிட்ட விளைபொருள்களைச் சேமித்து, பதப்படுத்தி, பொதிவு (பேக்கிங்) செய்து விற்பனை வாய்ப்பைப் பெருக்கும் திட்டங்கள் முழுவீச்சில் நடைபெறவில்லை.

கூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆறுதலான விஷயமாக இருந்தபோதிலும், விவசாயத்துக்கான பயிர் காப்பீட்டுத் திட்டங்கள், அதன் விதிமுறைகளால் பயனளிக்காத நிலையிலேயே உள்ளன.

நமது விவசாயப் பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகள், சாதனைகள் கீழ்நிலை விவசாயிகளைச் சென்றடைவதில் மிகுந்த இடைவெளி உள்ளது.

இத்தகைய கடுமையான சோதனைகளையும் தாண்டி நாம் உணவு உற்பத்தியில் போதிய சாதனைகள் நிகழ்த்தி வருகிறோம்.

இருப்பினும், கோதுமை உள்ளிட்ட சில விளைபொருள்கள் கூடுதல் விலை கொடுத்து வெளிநாடுகளிலிருந்து நடப்பாண்டில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

விவசாய நிபுணர்களின் கணக்கெடுப்புப்படி, நமது நாடு வரும் 2010-ம் ஆண்டில் 1.41 கோடி டன் உணவு தானியம் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். அதையடுத்து ஒவ்வோர் ஆண்டும் 2 சதவீதம் இறக்குமதி அளவு உயரும் என மதிப்பிடப்படுகிறது.

மக்கள்தொகை வளர்ச்சியையும் கருத்தில் கொண்டால் 2020-ம் ஆண்டில் நமது நாட்டின் உணவுப்பொருள்கள் தேவை 34 கோடி டன்னாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நமது நாட்டில் உணவுப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது. மனித உரிமைகளில் உணவு உரிமையே தலையாய உரிமை என்பது விவாதத்துக்கு இடமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், நமது நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் பலருக்கு ஒரு வேலை உணவு கிடைப்பதே அரிதாக உள்ளது.

இது ஒருபுறம் என்றால், அதிக வருவாய் ஈட்டுவதற்காக உணவுப் பொருள்களை வாங்கி “எத்தனால்’ தயாரிப்பில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இது வறுமை, பட்டினிச்சாவு, கிராமப் பொருளாதாரப் பாதிப்பு உள்ளிட்ட எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என சில அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்நிலையில் நாட்டின் வளம் பெருக்கும் வேளாண்மையில் போதிய கவனம் செலுத்தாவிடில், உணவு மானியச் செலவு அதிகரிக்கும். உணவுப் பாதுகாப்பு என்பது பெரும் சவாலாகிவிடும்.

—————————————————————————————————–

தேவையா மார்க்கெட் கமிட்டி செஸ்?

பி. சுபாஷ் சந்திரபோஸ்


தமிழக வணிக, விவசாயப் பெருங்குடி மக்களின் தலையாய பிரச்னையாக “மார்க்கெட் கமிட்டி செஸ்’ கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது.

முன்யோசனையோ, விவசாயிகள் மீது அக்கறையோ இல்லாத குழப்பான சட்டப்பிரிவுகள், விதிமுறைகள் மூலம் கடுமையான பிரச்னைகளை விவசாயிகளும், வணிகர்களும் தினமும் சந்திக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது இந்த “மார்க்கெட் கமிட்டி செஸ்.’

உணவு உற்பத்திக்காக அல்லும், பகலும் பாடுபட்டு உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கவும், உற்பத்தியான உணவுப்பொருள்களை சேமிக்கவும், உரிய விலை கிடைக்கும்போது விற்று பயன் பெறவும் வேளாண்மை விளைபொருள் விற்பனைச் சட்டம் முதலில் 1933-ல் இயற்றப்பட்டு, 1959, 1987, 1991-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.

இந்தச் சட்டத்தின்படி, அறிவிக்கப்பட்ட விற்பனை பகுதியில், அறிவிக்கப்பட்ட வேளாண் விளைபொருள் எதுவும் வாங்கப்பட்டாலோ அல்லது விற்பனை செய்யப்பட்டாலோ விற்பனைக் குழு (Marketing Committee) ஒரு சதவீத கட்டணம் (Fee/Cess) விதிக்கிறது.

விற்பனைக் கூடங்களை ஏற்படுத்தி அதில் செய்யப்படும் சேவைகளுக்குத்தான் இக்கட்டணம். ஆனால், தமிழகத்தில் மார்க்கெட் கமிட்டி விற்பனைக் கூடங்கள் இல்லாமல், வெளியே கடைகளில் நடக்கும் விற்பனைக்கும் இக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதுதான் வேடிக்கை.

தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களும் இந்தச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட விற்பனைப் பகுதிகளாகும். அந்தந்தப் பகுதியில் உள்ள மார்க்கெட் குழு இந்தச் சட்ட விதிகளை அமலாக்கம் செய்கிறது.

ஆனால், நடைமுறைகளுக்கு ஒவ்வாத குழப்பமான சட்டப் பிரிவுகள், விதிமுறைகள், அதிகாரிகளின் குழப்பமான விளக்கங்கள் காரணமாக மேற்கண்ட சட்ட விதிமுறைகளால் விவசாயிகள், வணிகர்கள் இரு பிரிவினருமே கடுமையான பிரச்னைகளைச் சந்திக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சேவை புரியாமல் வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம்: பிற மாநிலங்களில் 200 முதல் 300 ஏக்கர் பரப்பளவில் விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டு, அங்கு வணிகர்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, அதற்கான கட்டணம் மார்க்கெட் கமிட்டி செஸ் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

விவசாயிகள் தங்கள் சரக்கைக் கொண்டுவந்து வைப்பதற்கான கிடங்குகள், உலர வைப்பதற்கான களங்கள், தரம் பிரித்தல், தராசுகள், ஏலம் மூலம் விற்பனை, வணிகர்களுக்கு அலுவலகம், ஓய்வு அறைகள், விவசாயிகளுக்குப் பயிற்சி வகுப்புகள், குளிர்பதன கிடங்கு, சரக்கை வாங்கிய வியாபாரிகளிடம் பணத்தைப் பெற்று விவசாயிகளுக்குப் பட்டுவாடா செய்யும் வசதி ஆகிய பல்வேறு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், நமது மாநிலத்தில் அத்தகைய விற்பனைக்கூடங்கள் ஏதும் குறிப்பிடத்தக்க அளவில் அமைக்கப்படாமல் பெயரளவில் மிகச் சில மார்க்கெட் பகுதியில் கிடங்குகளும், உலர் களங்களும் அமைக்கப்பட்டு தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படாமல் செஸ் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வேளாண் விளைபொருள்கள் -மார்க்கெட் கமிட்டி செஸ் சட்டங்களில் உரிய மாற்றங்களைச் செய்ய பரிந்துரை செய்துள்ளது. அதில் மிக முக்கியமான மாற்றம், எந்த ஒரு வேளாண் விளைபொருளுக்கும் வேளாண் விற்பனைக் குழுவால் ஏற்படுத்தப்பட்ட விற்பனைக் கூடத்திற்குள் (மார்க்கெட்) நடக்கும் வணிகத்துக்கு மட்டுமே செஸ் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதாகும். ஆனால், தமிழகத்தில் வேளாண் பொருள் விற்பனை எங்கே நடந்தாலும் அதற்கு மார்க்கெட் கமிட்டி செஸ் வசூலிப்பது எதனால் என்பது புரியாத புதிர்.

தற்போது மாநில அரசு சட்டத் திருத்தத்தின் மூலம் பல விளைபொருள்களை அறிவிக்கும்போது அதை உருமாற்றம் செய்து பெறப்படும் ஆலைத் தயாரிப்பு பொருள்களையும் சேர்த்து “அறிவிக்கப்பட்ட பொருளாக’ அறிவிக்கிறது. உதாரணமாக, “உளுந்து’, “உளுந்தம் பருப்பு’ இரண்டுமே அறிவிக்கையிடப்படுகிறது.

இதுவே துவரைக்கும், துவரம் பருப்புக்கும் பொருந்தும். உளுந்தம் பருப்பும், துவரம் பருப்பும் விளைபொருள்கள் அல்ல. அவை பருப்பு ஆலையில் தயாரிக்கப்படும் உற்பத்திப் பொருளாகும். வேளாண் விளைபொருள்களின் விற்பனையை ஒழுங்குபடுத்தி விவசாயிகளுக்கு நன்மை செய்வதுதான் மார்க்கெட் கமிட்டி சட்டத்தின் நோக்கம். வேளாண் விளைபொருள்களுக்கு மட்டுமே செஸ் விதிக்கப்பட வேண்டும். அதிலிருந்து தயாரிக்கப்படும் உப பொருள்களுக்கு செஸ் விதிப்பது எந்த விதத்தில் நியாயம்?

பயறு, பருப்பு பற்றாக்குறையைத் தவிர்க்கும் பொருட்டு, மதுரையிலோ, திருச்சி, கோவையிலோ அல்லது விருதுநகரிலோ உள்ள ஒரு வணிகர் அயல்நாடுகளிலிருந்து உளுந்து, துவரையை இறக்குமதி செய்யும்போது அந்தக் கப்பல் சென்னைத் துறைமுகத்தில் வந்தடைந்து சரக்கு இறங்கினால், அங்கு செஸ் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அதே சரக்குக் கப்பல் சென்னைக்குப் பதிலாக தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகளை இறக்கினால் அங்கு செஸ் கட்டணம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் ஒரே சரக்குக்கு செஸ் கட்டண விதிப்பிலும் இரண்டு வித அளவுகோல் கையாளப்படுகிறது என்பது வேடிக்கை.

விற்பனைக்கூட நடைமுறைகளைப் பொருத்தவரை தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதி வணிகர்களையும், விவசாயிகளையும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாக்கி வருவது அனுமதிச் சீட்டு (பெர்மிட்) முறைதான். விற்பனை செய்யப்பட்ட வேளாண் பொருளை ஒரு மார்க்கெட் பகுதியிலிருந்து அடுத்த பகுதிக்கு எடுத்துச் செல்ல அரசு அலுவலரிடம் பெர்மிட் வாங்கித்தான் கொண்டு செல்ல வேண்டும்.

அரசு அலுவலக நேரம் முடிந்த பின்னரும் கூட, விடுமுறை நாள்கள் உள்பட வர்த்தக பரிமாற்றம் நடந்துகொண்டே இருக்கும். அவ்வப்போது அவசரத் தேவைக்கு தொலைபேசியில் வரும் ஆர்டர்களுக்கு ஏற்ப, இரவு, பகல் பாராமல் உடனுக்குடன் சரக்குகளை அனுப்பி வைப்பது நடைமுறை வழக்கம்.

இது போன்று ஒவ்வொரு நேரமும் முன் அனுமதிச் சீட்டுபெற வேண்டும் என்ற தற்போதைய விதிமுறை லஞ்சத்துக்கு உதவுமே தவிர, எந்த விதத்திலும் விவசாயிக்கோ, வியாபாரிக்கோ உதவாது என்பது நிச்சயம்.

விவசாயம் செய்வோரும், விவசாயத் தொழிலும் நாளும் நலிவடைந்துவரும் இந்நாளில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் ஒரு குன்றிமணி அளவு உணவு தானியங்களோ, காய்கறி, பழ வகைகளோ வீணாக அனுமதிக்கக்கூடாது. அனைத்து வகையான விளைபொருள்களுக்கும் முறைப்படி உலர வைக்க, தரம் பிரிக்க, பாதுகாக்கப்பட்ட களங்களும், கிடங்குகளும், குளிர்பதனக் கூடங்களும் மாநிலம் எங்கும் அமைக்கப்படவேண்டும்.

விவசாயிகள் அவர்கள் பாடுபட்ட உழைப்பிற்கான பலனாக, நல்ல விலை கிடைப்பதற்கு மார்க்கெட் கமிட்டி கூடங்கள் ஏற்பாடு செய்யுமானால் செஸ் கட்டணம் செலுத்த தமிழகத்தில் யாருமே தயங்கமாட்டார்கள்?

வெளிமாநிலங்களில் இந்த நடைமுறை வெற்றிகரமாக நடைபெறுகிறது. ஆனால், தமிழகத்தில் மார்க்கெட் கமிட்டி செஸ் என்கிற பெயரில் விவசாயிகளும், வியாபாரிகளும் அரசால் சுரண்டப்படுகிறார்கள் என்பதுதான் வேதனையான விஷயம்.

(கட்டுரையாளர்: கௌரவ செயலர், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம்)

Posted in Agriculture, Andhra, AP, Basmathi, Basmati, Bullion, cargo, Cess, Committee, Cultivation, Demand, Distribution, Distributors, Economy, Exporters, Exports, Farmers, Farming, Fee, Fees, Field, Finance, Food, Foodgrains, godowns, Grains, Growth, harvest, Imports, Jeeva Prabhakaran, JeevaPrabhakaran, Labor, Labour, Land, Marketing, markets, Naidu, Nayudu, Packaging, Packing, Paddy, PDS, peasants, Poor, Prabhakaran, Prices, procurement, Production, quintal, Radhakrishnan, Ration, Reddy, retail, retailers, rice, Rich, sacks, Security, SEZ, Suicides, Suppliers, Supply, Veera. Jeeva Prabhakaran, Villages, Wheat, Wholsale, workers | Leave a Comment »

‘Discrepancy among different communities in higher studies should be resolved first’ – Lok Saba Committee

Posted by Snapjudge மேல் மே 2, 2007

உயர் கல்வியை பெறுவதில் பல்வேறு சமூகங்களுக்கு இடையே நிலவும் இடைவெளியை முதலில் சரிப்படுத்த வேண்டும்: நாடாளுமன்ற நிலைக்குழு

புதுதில்லி, மே 3: உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அளிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இவ் விவகாரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் அளித்தது.

அதில், உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கிடையே இடையே நிலவும் இடைவெளிகளை சரிப்படுத்தினால் தான் இட ஒதுக்கீடு என்ற நோக்கத்தின் இலக்கு வெற்றிகரமாக அமையும் என்று கருத்து தெரிவித்துள்ளது.

முன்னதாக, உயர் கல்வி நிறுவனங்களின் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளித்திட உச்ச நீதிமன்றம் அண்மையில் தடை விதித்தது.

மேலும், இட ஒதுக்கீடு தொடர்பாக தேவையான புள்ளி விவரங்கள் ஏதும் அரசால் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு மீதும் உச்ச நீதிமன்றம் தனது கருத்து தெரிவிக்கையில், ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் அறிவித்த தடை நீடிக்கும் என உத்தரவிடப்பட்டது.

அதேவேளையில், நாடாளுமன்ற நிலைக்குழு பல்வேறு மாநிலங்கள், சமூக மக்கள் உள்ளிட்டோரிடம் நடத்திய ஆய்வில் ஏராளமான தகவல்களை திரட்டினர்.

அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது. அதில், உயர் கல்வி பெறுவதில் பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஏராளமான இடைவெளிகள் நிலவுகின்றன. இவற்றை சரிசெய்தால் தான் சமூக நீதி முதலில் கிடைக்கும்.

இடைவெளி:

  • உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்களின் சதவீதம் 6.7 தான்.
  • பழங்குடியினரின் எண்ணிக்கை 4.9 சதவீதம்.
  • அதேபோல 10 சதவீதத்துக்கும் குறைவான அளவில் பிற்படுத்தப்பட்டோர் உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கின்றனர்.

இவ்வாறு பல்வேறு சமூகத்துக்குள்ளே உயர் கல்வி சேர்க்கையின்போது நிலவும் இடைவெளியை முதலில் சரிப்படுத்த வேண்டும். அப்போது தான் பிற்பட்டோருக்கு 11-வது திட்டக் காலத்தில் அளிக்க வேண்டிய 15 சதவீத இட ஒதுககீடு அளிக்க இயலும் எனவும் குழு கருத்து தெரிவித்துள்ளது.

Posted in Assembly, Caste, Committee, Community, Courts, Creamy, Education, Law, layer, Lok Saba, LokSaba, Order, Reservation, Reservations, Study | Leave a Comment »

BJP president names new team of party officials – Thirunavukkarasar in & Modi out

Posted by Snapjudge மேல் ஜனவரி 30, 2007

சு. திருநாவுக்கரசர் பாஜக செயலர்; ஆட்சிமன்றக் குழுவிலிருந்து மோடி நீக்கம்

புது தில்லி, ஜன. 30: பாரதீய ஜனதா கட்சியின் தேசியச் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சு. திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டிருக்கிறார். குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கட்சியின் உயர் அதிகார அமைப்பான ஆட்சிமன்றக் குழுவில் இம் முறை இடம் பெறவில்லை. முன்னாள் பிரதமர் வாஜபேயியின் சகோதரி மகளான கருணா சுக்லா கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அத்வானியை வெளிப்படையாக விமர்சித்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஆபாச சி.டி.யில் இடம் பெற்றதாக பத்திரிகைகளிலும் மொபைல் எஸ்எம்எஸ்களிலும் பிரபலமான சஞ்சய் ஜோஷி கட்சியின் பொதுச் செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார்.

கட்சித் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்நாத் சிங் நிர்வாகிகள் குழுவில் பெருத்த மாற்றங்களைச் செய்திருக்கிறார். புதிய நிர்வாகிகள் விவரம் வருமாறு:

கட்சியின் தேசிய துணைத் தலைவர்கள்:

  • கல்யாண் சிங்,
  • பாளாசாஹேப் ஆப்தே,
  • சாந்தகுமார்,
  • சாஹிப்சிங் வர்மா,
  • யஷ்வந்த் சின்ஹா,
  • முக்தார் அப்பாஸ் நக்வி,
  • ஜுயல் ஓரம்,
  • கைலாஷ் மேக்வால்,
  • கருணா சுக்லா.

பொதுச் செயலாளர்கள்:

  • அருண் ஜேட்லி,
  • அனந்த குமார்,
  • கோபிநாத் முண்டே,
  • வினய் கட்டியார்,
  • தாவர்சந்த் கெலோட்,
  • ஓம்பிரகாஷ் மாத்துர்,
  • ராம்லால்,
  • ஜகதீஷ் ஷெட்டிகர்,
  • அனில் ஜெயின்,
  • ஹுகும்தேவ் நாராயண் யாதவ்,
  • ராஜீவ் பிரதாப் ரூடி,
  • காந்த நளவாடே.

தேசிய செயற்குழு உறுப்பினர்கள்:

  • அடல் பிகாரி வாஜபேயி,
  • லால் கிருஷ்ண அத்வானி,
  • ஜஸ்வந்த் சிங்,
  • முரளி மனோகர் ஜோஷி,
  • வி. வெங்கைய நாயுடு,
  • கே. ஜனா கிருஷ்ணமூர்த்தி,
  • பங்காரு லட்சுமணன்,
  • சுஷ்மா ஸ்வராஜ்,
  • விஜய்குமார் மல்ஹோத்ரா,
  • ஜே.பி. மாத்துர்,
  • சி.பி. தாக்குர்,
  • நஜ்மா ஹெப்துல்லா,
  • சுமித்ரா மகாஜன்,
  • பி.சி. கந்தூரி,
  • அருண் செüரி,
  • சத்ருகன் சின்ஹா,
  • மேனகா காந்தி,
  • கல்ராஜ் மிஸ்ரா.

Posted in AB Vajbayee, Atal Bihari Vajpayi, Bharatiya Janata Party, BJP, central parliamentary board, Committee, Elections, general secretary, Gopinath Munde, key functionaries, Lal Krishna Advani, LK Advani, Members, Modi, Narendra Modi, Nominations, Office bearers, Officebearers, organisational affair, organisational affairs, Party, Politburo, Politics, Pramod Mahajan, Rajnath Singh, Ramlal Agarwal, Rashtriya Swayamsevak Sangh, RSS, Sanjay Joshi, spokesman, tenure, Thirunavukkarasar, Thirunavukkarasu, Uttar Pradesh, Vajpayee, vice-president, Yashwant Sinha | Leave a Comment »

Tamil Nadu Government’s Movie Award Committee nominated

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

திரைப்பட விருது: தேர்வுக்குழு நியமனம் 

சென்னை, ஜன.16-

தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2005-ஆம் ஆண்டு மற்றும் 2006-ஆம் ஆண்டுக்குரிய தமிழ்நாடு அரசு திரைப் பட விருதுகளையும், 2004- 2005, 2005-2006 கல்வி யாண்டுகளுக்குரிய தமிழ் நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொழில் நுட்ப பயிற்சி நிறுவன மாண வர் விருதுகளையும் தேர்வு செய்ய புதிய தேர்வுக்குழு ஒன்றை இன்று அமைத்து முதல்-அமைச்சர் அறிவித் துள்ளார்.

  • நீதியரசர் மோகன் தேர்வுக் குழுவின் தலைவராக இருப் பார்.
  • இயக்குனர் எஸ்.பி.முத்து ராமன்,
  • நடிகர்கள் சிவ குமார்,
  • சாருஹாசன்,
  • ஒய்.ஜி.மகேந்திரன்,
  • தியாகு,
  • இயக்குனர் அமிர்தம்,
  • கவிஞர் மு.மேத்தா,
  • தொலைக்காட்சி முன்னாள் இயக்குனர் நட ராஜன்,
  • இசையமைப்பாளர் தேவா,
  • நடிகை ஸ்ரீபிரியா,
  • தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன முதல்வர் என்.ரமேஷ்,
  • செய்தித்துறை இயக்குனர் ஆகியோர் தேர்வுக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பார் கள்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Posted in Amirtham, Awards, Chaaruhaasan, Chaaruhasan, Charuhassan, Committee, Films, Government, Judge Mohan, Justice Mohan, Mu Mehta, Mu Mehtha, N Ramesh, Natarajan, Pictures, Prizes, Saruhasan, Selection Commission, Sivakumar, SP Muthuraman, srividya, Tamil Cinema, Tamil Movies, Tamil Nadu, Television, Thyagu, Thyaku, TV, YG Mahendran, YGee Mahendra | Leave a Comment »

TN Govt announces cash award to Santhi Soundarajan – 800 Meters Race Silver Medalist

Posted by Snapjudge மேல் திசெம்பர் 11, 2006

ஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை சாந்திக்கு ரூ. 15 லட்சம் பரிசு: முதல்வர்

சென்னை, டிச. 11: ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை சாந்திக்கு ரூ. 15 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த சாந்தி, புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருடைய பெற்றோர் கூலித் தொழிலாளி.

போட்டியின் போது சாந்தி

போட்டியின் போது சாந்தி

தற்போது தோஹாவில் நடைபெற்றுவரும் 15-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாந்தி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் தடகளத்தில் இந்தியா தனது பதக்கக் கணக்கைத் தொடங்கியுள்ளது. அத்துடன் தமிழகத்திலிருந்து பதக்கம் வென்றவர் என்ற பெருமையையும் சாந்தி ஏற்படுத்தியுள்ளார்.

இத்தகைய சாதனை படைத்துள்ள சாந்தியின் பெற்றோர்கள் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகின்றனர்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஆசிய அளவில் தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை தேடித் தந்துள்ள விளையாட்டு வீராங்கனை சாந்தியின் சாதனையைப் பாராட்டி அவருக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.

சாந்திக்கு தமிழக முதல்வர் பரிசு வழங்குகிறார்

சாந்திக்கு தமிழக முதல்வர் பரிசு வழங்குகிறார்இப்போட்டியில் பந்தய தூரத்தை 2 நிமிடம் 3.16 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

சென்னையில் உள்ள செயின்ட் ஜோசப் என்ஜினியரிங் பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாதமியில் பயிற்சி பெற்றவர்.

வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து சாந்தி கூறுகையில், “”தகுதிச் சுற்றில் நான் சற்று பின்தங்கியிருந்தேன். இருப்பினும் இறுதிப் போட்டியில் நம்பிக்கையுடன் பங்கேற்றேன். பயிற்சியாளர் நாகராஜனின் ஆலோசனைப்படி புதிய உத்திகளைப் பயன்படுத்தினேன். இதனால் வெள்ளிப் பதக்கம் வசமானது,” என்றார் சாந்தி.

25 வயதான சாந்தி இதற்கு முன்னர் கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதேபோல 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாந்தி விவகாரம் குறித்து விளையாட்டுத் துறையினரின் கருத்துகள்

சாந்தியின் குடும்பத்தினர் பணியாற்றும் செங்கல் சூளை
சாந்தியின் குடும்பத்தினர் பணியாற்றும் செங்கல் சூளை

இந்த சர்ச்சை குறித்து இது வரை இந்திய தடகள சங்கத்திற்கோ அல்லது தமிழ்நாடு தடகள சங்கத்திற்கோ எந்த வகையிலும் அதிகாரப்பூர்வமான தகவல் வரவில்லை என அகில இந்திய தடகள சங்கத்தின் துணைத் தலைவர் வால்டர் தேவாரம் கூறுகிறார்.

அவ்வாறு ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை கிடைக்க பெற்றால் பிறகு அவரால் மகளிர் பிரிவில் பங்குபெற முடியாது எனவும் அவர் கூறுகிறார். மேல் முறையீடு செய்வது தனிப்பட்ட வீரர் வீராங்கனையின் பொறுப்பு எனவும், சங்கத்திற்கு அதில் எந்த பொறுப்பும் கிடையாது என்றும் கூறினார் தேவாரம்.

இந்த வருடம் கொரியாவிலும், இலங்கையிலும் இரண்டு சர்வதேச போட்டிகளில் அவர் பங்கு பெற்றிருந்தாலும், இவ்வாறான பிரச்சினை ஏதும் எழவில்லை எனவும் கூறும் தேவாரம், ஒரு போட்டியில் பங்குபெற ஒரு வீராங்கனை வரும் போது அவர் ஆணா அல்லது பெண்ணா என்று பார்ப்பது ஒழுங்கற்ற செயல் எனவும் அவர் மேலும் கூறினார்.

சாந்தியின் செம்மண் வீடு
சாந்தியின் செம்மண் வீடு

1986 வரை பாலியல் தொடர்பான சோதனை நடத்தப்பட்டன எனவும், அது பெண்மைக்கு இழுக்கு எனக் கருதப்பட்டதால், அதன் பிறகு அந்தச் சோதனை நடத்தப்படுவதில்லை எனக் கூறுகிறார் தோஹா போட்டிகளுக்கு தொழிற்நுட்ப நடுவராக சென்றிருந்த சி.கே.வல்சன். போட்டியில் பங்கு பெற்ற யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே பெண்மை குறித்த இந்த பாலியல் சோதனை நடத்தப்படும் எனவும் அவர் கூறினார். ஆனால் சாந்தி விடயத்தில் அவ்வாறு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தம்மால் உறுதியாக் கூறமுடியும் எனவும் மேலும் கூறினார் வல்சன்.

அறிவியல் ரீதியாக ஹார்மோன்களின் அளவின் அடிப்படையிலேயே ஆணா பெண்ணா எனத் தீர்மானிக்கப்படும் எனக் கூறுகிறார் விளையாட்டு மருத்துவ வல்லுநர் டாகடர். கண்ணன் புகழேந்தி.

சாதாரணமாக சிறுநீர் தான் பரிசோதிக்கப்படும் எனவும் இது போன்ற சிக்கலான சூழலில் ரத்தப் பரிசோதனை அவசியம் எனவும், அதில் தான் ஹார்மோன்களின் அளவு தெரியவரும் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

இவ்வாறான சோதனைகளுக்கு அப்பாற்பட்டு மரபணு சோதனை நடத்தப்பட்டால் அதன் மூலம் ஒருவரது பாலியல் தன்மை உறுதியாக தெரிந்துவிடும் எனவும் அவர் கூறினார்.

 

 

சாந்தியின் பதக்கம் திரும்பப் பெறப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சாந்திக்கு ஏற்பட்ட சரிவு
சாந்திக்கு ஏற்பட்ட சரிவு

அண்மையில் முடிவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த சாந்தி சவுந்திரராஜனின் பதக்கம் திரும்பப் பெறப்படும் என இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்த ஆசிய ஒலிம்பிக் சங்கத்தின் கடிதம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மூலம் தமக்கு கிடைத்திருப்பதாக இந்திய தடகள சங்கத்தின் செயலர் லலித் பானோட் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் யாரும் தனிப்பட்ட பொறுப்பேற்க முடியாது எனக் கூறும் அவர், சாந்தியின் பிறப்புச் சான்றிதழில் அவர் பெண் என்று குறிபிடப்பட்டுள்ளது எனவும், அவரது கடவுச்சீட்டிலும் அவ்வாறே உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இது தனிப்பட்ட நபருக்கும், சங்கத்திற்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், இதனால் நாட்டிற்கு எந்த ஒரு களங்கமும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறுகிறார்.

போட்டியாளரின் பாலியல் குறித்து கண்டறிய சர்வதேச சங்கம் தடைவிதித்துள்ள காரணத்தால், இது குறித்து போட்டிக்கு முன்னர் சோதிக்க இயலாது எனவும் கூறுகிறார் பானோட். ஒரு ஆணிடம், அவர் ஆடவர் தானா எனக் கேட்க முடியாத போது எப்படி ஒரு பெண்ணிடம் அப்படி கேட்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இருப்பினும் இனிவரும் காலங்களில் இது போன்ற அசாதாராண விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

 

 

 

தமிழக வீராங்கனை சாந்திக்கு ரூ.15 லட்சம்- டெலிவிஷன் பரிசு கருணாநிதி வழங்கினார்

சென்னை, டிச. 18-

கத்தார் நாட்டில் நடந்த 15-வது ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழ் நாட்டை சேர்ந்த 4 பேர் பதக்கம் வென்றனர்.

அதில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த சாந்தி வெள்ளிப் பதக்கம் வென்று உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பாராட்டும், பரிசும் குவிந்த நிலையில் சாந்தி பாலின சோதனையில் தோல்வி அடைந்ததாக திடீர் சர்ச்சை எழுந்தது. அவருக்கு வழங்கப்பட்ட வெள்ளிப் பதக்கம் திரும்ப பெறப்படக்கூடும் என்று தகவல் வெளியானது.

இதனால் அவருக்கு தமிழக அரசின் ரூ.15 லட்சம் பரிசு கிடைக்குமா என்ற கேள்விக் குறி எழுந்தது. ஆனால் தங்களுக்கு இது தொடர்பாக எந்த தகவலும் வரவில்லை என்று அறிவித்த தமிழக அரசு, இன்று திட்டமிடப்படி சாந்திக்கு ரொக்கப் பரிசு வழங்கி கவுரவித்தது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தோஹாவில் நடைபெற்று முடிந்துள்ள பதினைந்தாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியில் இடம் பெற்றுத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டு சாதனைகள் படைத்த வீரர்களில், தடகளப் பிரிவில் மகளிருக்கான 800 மீட்டர் ஓட் டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை சாந்திக்கு 15 லட்சம் ரூபாயும், சதுரங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த வீரர் சசிகிரன்கிருஷ்ணனுக்கு 20 லட்சம் ரூபாயும், வீராங்கனை அஞ்சு பி. ஜார்ஜ் நீளம் தாண்டுதல் போட் டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மைக்கு 15 லட்சம் ரூபாயும், ஸ்குவாஷ் ஒற்றையர் போட் டியில் வெண்கலப் பதக் கம் வென்ற வீரர் சௌரவ் கோசலுக்கு 10 லட்சம் ரூபா யும் பரிசுத் தொகையாக வழங் கப்படும் எனத் தமிழக அரசினால் ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தது.

அந்த அறிவிப்பின்படி இன்று தலைமைச் செயலகத்தில், தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகள் படைத்த தமிழக விளையாட்டு வீரர்களான சசிகிரன்கிருஷ்ணனுக்கு 20 லட்சம் ரூபாயையும், அஞ்சு பி. ஜார்ஜ×க்கு 15 லட்சம் ரூபாயையும், சாந்திக்கு 15 லட்ச ரூபாயையும், சௌரவ் கோசலுக்கு 10 லட்சம் ரூபா யையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி தமது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை சாந்தியின் பெற்றோர்கள் தம்வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இல்லாததால் தமது மகள் தோஹாவில் நிகழ்த்திய சாதனையைக் காண முடியாமல் போனது எனக்கூறியதன் அடிப்படையில், வீராங்கனை சாந்திக்கு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றையும் முதல்-அமைச்சர் கருணாநிதி பரிசாக வழங்கினார்.

இந்நிகழ்வின் போது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டி.பி.எம். மொய்தீன்கான், விளையாட் டுத் துறை செயலாளர் அம் பேத்கர் ராஜ்குமார், தமிழ் நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் -செயலர் அபூர்வா ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள் ளது.

சாந்திக்கு பரிசு வழங்கியது பற்றி அமைச்சர் மொய்தீன் கான் நிருபர்களிடம் கூறியதாவது:-

வீராங்கனை சாந்தி குறித்து வேறுவிதமான செய்திகள் வந்துள்ளன. என்றாலும் ஆசிய விளையாட்டு போட்டி அமைப்பாளர்களிடம் இருந்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை.

சாந்திக்கு மனிதாபிமான அடிப்படையில் முதல்-அமைச்சர் அறிவித்த பரிசை கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண் ஆசிய அளவில் பரிசு பெற்று வந்து இருப்பதை நாம் பாராட்டி, வாழ்த்தி, ஊக்குவிக்க வேண்டும். இதை விடுத்து எதற்கு பரிசு கொடுக்க வேண்டும் என்று கேள்வி கேட்கக்கூடாது.

இவ்வாறு அமைச்சர் மொய்தீன்கான் கூறினார்.

 வெள்ளிப்பதக்கம் என்னிடம்தான் உள்ளது: வீராங்கனை சாந்தி பேட்டி

முதல் அமைச்சர் கருணாநிதியிடம் பரிசு பெற்று திரும்பியதும் ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

கேள்வி:- முதல் அமைச்சரை சந்தித்து இருக்கிறீர்களே…?

பதில்:- முதல் அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றேன். அவர் தந்த பரிசையும் பெற்றுக் கொண்டேன்.

கேள்வி:- ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று தமிழ் நாட்டுக்கு பெருமை தேடி தந்ததாக நேற்று வரை செய்திகள் வந்தன. இன்று உங்கள் பதக்கத்தை திரும்ப பெறப் போவதாக தகவல் வெளியாகி உள்ளதே?

பதில்:- தோகாவில் நான் வெள்ளிப்பதக்கம் பெற்றது பெருமையாக இருந்தது. அந்த வெள்ளிப்பதக்கம் இப்போதும் கூட என்னிடம்தான் இருக்கிறது. பத்திரிகைகளில் இன்று வந்த செய்திகளை நானும் படித்தேன். ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் எனக்கு வரவில்லை.

இவ்வாறு சாந்தி கூறினார்.

தோகாவில் நடந்த பாலின சோதனை குறித்து சாந்தியிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகள் கேட்டனர். ஆனால் எந்த கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை.

இது தொடர்பாக இப்போது நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்றார். முன்னதாக பரிசு பெற வந்த சாந்தியிடம் கருணாநிதி அக்கறையுடன் விசாரித்தார். டிவி பெட்டி கொடுத்து இருப்பதாக கூறி உற்சாகப்படுத்தினார். அவருக்கு சாந்தியின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Posted in 800 M, 800M, Allegation, Answers, Asiad, Asian Games, Asian Grand Prix, athletics, championships, Charges, Committee, Doha, Doping, Gender, Interview, IOA, Karunanidhi, Kathakurichi, Manimekelai, Mariam Yusuf Jamal, Operation, Opinion, Puthukottai, Saanthi, Santhi Soundarajan, Santhi Sounthararajan, Santhy, Santhy Soundararajan, Sex, Shaanthi, silver medal, South Korea, Sports, St. Joseph’s College of Engineering, Stripped, Tamil Nadu, Test | 10 Comments »

Congress & Communist Govt.’s Coordination Committee

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006

ஒருங்கிணைப்புக் கமிட்டி

மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றிருக்கும் ஒருங்கிணைப்புக் கமிட்டியை விரிவுபடுத்தி கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளுக்கும் இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி நிராகரித்துள்ளார். நைனிதாலில் நடந்த காங்கிரஸ் முதல்வர்கள் மாநாட்டுக்குப் பிறகு நிருபர்களிடம் பேசுகையில் அவர் இது சாத்தியமில்லை என்றார். கடந்த 2004-ல் தேசிய முற்போக்குக் கூட்டணி மன்மோகன் சிங் தலைமையில் அரசு அமைத்தபோது அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக இடதுசாரிகள் அறிவித்தனர்.

இடதுசாரிகள் அரசுக்கு வெளியே இருப்பதால் அரசின் கொள்கைத் திட்டங்கள் குறித்து அவ்வப்போது இடதுசாரிகளுடன் கலந்து ஆலோசிக்க ஒருங்கிணைப்புக் கமிட்டி ஒன்று சோனியா காந்தி தலைமையில் அமைக்கப்பட்டது. இக் கமிட்டியில் இடதுசாரிகள் சார்பில் ஆறு பேர் நியமிக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஆறு பேர் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இது தேசிய முற்போக்குக் கூட்டணியும் இடதுசாரிகளும் அடங்கிய ஒருங்கிணைப்புக் கமிட்டி என்று தொடர்ந்து வர்ணிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் ஆளும் கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சி மட்டுமே இதில் இடம்பெற்றுள்ளது. இக் கமிட்டியில் தேசிய முற்போக்குக் கூட்டணியில் அடங்கிய இதர கட்சிகளுக்கும் இடமளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கடந்த சிலகாலமாகவே கோரி வருகிறது. கடந்த வாரம் டேராடூனில் நடந்த அக் கட்சியின் மாநாட்டில் இக் கோரிக்கை தீவிரமாக வற்புறுத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி ஒன்று மட்டும் தேசிய முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதியாக விளங்க முடியாது என்று அக் கட்சி கூறியது.

ஆனால் மன்மோகன் சிங் அரசை ஆதரிக்கிற கட்சிகள் பலவும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும்போது அக் கட்சிகள் ஒருங்கிணைப்புக் கமிட்டியில் இடம்பெறத் தேவையில்லை என்பது காங்கிரஸின் வாதமாகும். எனினும் பல முக்கிய விஷயங்களிலும் முடிவுகள் எடுக்கப்பட்ட பிறகுதான் அவை அமைச்சரவையின் முன் வைக்கப்படுகின்றன. அவ்வித நிலையில் முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்பு ஆலோசனைகள் நடைபெற வழியில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் அறிவிக்கப்பட்ட சில முடிவுகளைக் கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தம் காரணமாக அரசு மாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. நெய்வேலி நிறுவனப் பங்குகள் விவகாரத்தை இதற்கு ஓர் உதாரணமாகக் கூறலாம்.

எனினும் ஒருங்கிணைப்புக் கமிட்டியை விரிவுபடுத்த வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் ஒன்றுதான் தீவிரமாக வற்புறுத்தி வருகிறது. ஆளும் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைப்போல இரண்டு மடங்கு உறுப்பினர்களைக் கொண்ட பிற கட்சிகள் இக் கோரிக்கையை – குறைந்தபட்சம் பகிரங்கமாக எழுப்பவில்லை. இது காங்கிரஸ் கட்சிக்கு வசதியாக உள்ளது.

ஒருங்கிணைப்புக் கமிட்டியை விரிவுபடுத்துவது என்றால் அதில் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. மன்மோகன் சிங் அரசை பத்துக்கும் மேற்பட்ட கட்சிகள் ஆதரிக்கின்றன. ஒரே ஒரு உறுப்பினரைக் கொண்ட கட்சிகளும் உண்டு. இக் கட்சிகளில் யாரைச் சேர்த்துக் கொள்வது, யாரை விடுவது என்ற பிரச்சினை உள்ளது.

இடதுசாரிகளைப்போலவே தாங்களும் வெளியிலிருந்து ஆதரிப்பதால் தங்களையும் அக் கமிட்டியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முலாயம் சிங்கின் சமாஜவாதிக் கட்சியும் மாயாவதிக் கட்சியும் கோரினால் அதைத் தவறு என்று சொல்ல முடியாது.

இடதுசாரிகளுடன் ஏன் இப்படி ஓர் ஏற்பாட்டைச் செய்து கொண்டோம் என்று காங்கிரஸ் கட்சி வருந்தினாலும் வியப்பில்லை என்ற நிலையில், ஒருங்கிணைப்புக் கமிட்டி விரிவுபடுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தோன்றவில்லை.

Posted in Central, Coalition, Committee, Communist, Cong (I), Congress, Coordination, Government, India, NDA, Tamil, UDA | Leave a Comment »