Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘peasants’ Category

Water supply & distribution in Tamil Nadu – Inter-state relations, Dam Construction, Rivers

Posted by Snapjudge மேல் திசெம்பர் 10, 2007

மூன்று பக்கமும் துரோகம்; ஒரு பக்கம் கடல்!

கே. மனோகரன்

தமிழகம்போல இன்று தண்ணீருக்காகத் தவித்து நிற்கும் மாநிலம் இந்தியாவில் வேறொன்று இருக்க முடியாது.

கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களும் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகின்றன. நமக்குப் பரந்து விரிந்து கிடக்கும் ஒரே நீர்ஆதாரம் கடல்தான். தாகத்துக்கு கடல்நீரைக் காய்ச்சிக் குடிக்கலாம். ஆனால் விவசாயம் செய்ய முடியுமா?

தண்ணீருக்காக கர்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களுடன் மல்லு கட்டுவதற்கே ஆண்டுகளை இழந்ததுடன், இருக்கும் ஏரி குளங்களையும் நாம் பாழாக்கி இழந்து வருகிறோம்.

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கியது பூண்டி நீர்த்தேக்கம். குசஸ்தலை ஆற்றிலிருந்துதான் இந்த நீர்த்தேக்கத்துக்குத் தண்ணீர் வரவேண்டும். இந்த ஆறு பள்ளிப்பட்டில் இருந்து ஆந்திர மாநில எல்லையில் 12 கி.மீ. தூரத்தில் தொடங்குகிறது.

அங்குள்ள அம்மபள்ளி என்ற இடத்தில் 1975-ம் ஆண்டு தொடங்கி 1982-ம் ஆண்டு வரை இருமலைகளையும் இணைத்து அணை கட்டும் பணி நடந்தது. ஆனால் இப்படி ஓர் அணை கட்டப்படுவதுகூட தெரியாமல் தமிழக அரசு அமைதியாக இருந்தது. அதன் பிறகு குசஸ்தலை ஆறு தமிழகத்துக்குத் தண்ணீர் தரவில்லை. தலைவலி தந்தது. வறண்டுபோனது பூண்டி நீர்த்தேக்கம்.

குசஸ்தலை ஆறு தடைபட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயம் குறித்து தமிழக அரசு கவலைப்படவில்லை. சென்னை நகரின் குடிநீர் தேவையைப் பற்றித்தான் கவலைப்பட்டது. ஆந்திர அரசுடன் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் செய்துகொண்டது. இதில் பல கோடிகளை தமிழக அரசிடம் பங்குத்தொகையாகப் பெற்ற ஆந்திர அரசு, அந்த நிதியில் சித்தூர், கடப்பா போன்ற வறட்சியான மாவட்டங்களில் ஏற்கெனவே உள்ள ஏரிகளைப் புனரமைத்தும், மிகப்பெரிய ஏரியான பிச்சாட்டூர் ஏரியை சீரமைத்தும், புதிய நீர்த்தேக்கங்களையும் கட்டி கால்வாய்கள் மூலம் இணைத்து தன்னை வளப்படுத்திக் கொண்டது.

சென்னைக்கு தண்ணீர் தருவதாகச் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் “ஜீரோ பாய்ண்ட்’ எனப்பட்ட கண்டலேறு வரை தண்ணீர் வந்ததே தவிர சென்னைக்கு வரவில்லை. இதனால் தவிர்க்க முடியாமல் புதிய வீராணம் திட்டத்தை தமிழகம் செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேபோல் பாலாற்றுக்கு முதல் பாதிப்பை ஏற்படுத்தியது கோலார் மாவட்டத்தில் உள்ள பேத்தமங்கலா நீர்த்தேக்கம். கர்நாடகம் படிப்படியாக அதன் கொள்ளளவையும் அதிகரித்துக் கொண்டே சென்றதால் பாலாற்றின் நீர்வரத்து குறைந்து போனது.

கர்நாடகத்துக்கும், தமிழக எல்லைக்கும் இடையில் பாலாற்றுக்கு வரும் உபநதிகளான மல்லிநாயக்கனஹள்ளி ஆறு, பெட்மடு ஆறு ஆகியவற்றின் குறுக்கே தலா 4 ஏரிகளை ஆந்திர அரசு கட்டிவிட்டது. இதேபோல் தமிழக எல்லையின் 3 கி.மீ. தூரத்தில் 2000-ம் ஆண்டில் பாலாற்றின் உப நதியான மண்ணாற்றின் குறுக்கே பெரியபள்ளம் என்ற இடத்தில் ரூ. 65 லட்சத்திலும், அதே நேரத்தில் எல்லையின் சில நூறு அடிகள் தூரத்தில் பிரம்மதேவர் கொல்லை என்ற லட்சுமிபுரத்தில் ரூ. 1.20 கோடியில் இருமலைகளை இணைத்து ஆந்திர அரசு அணைகளை கட்டியது.

இவற்றுக்கு எவ்வித எதிர்ப்பும் தமிழக அரசு தெரிவிக்காமல் இருந்ததன் விளைவுதான் தற்போது குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே பெரிய அளவிலான அணை கட்டுவதற்கு ஆந்திர அரசுக்கு தைரியத்தைக் கொடுத்துள்ளது.

ஆனால் தமிழக அரசு புதிய அணைத் திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என்று விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலங்களில் காவிரி வடிகாலில் கிடைக்கும் கூடுதல் நீர் சராசரியாக 30 டி.எம்.சி. கடலில் வீணாகக் கலக்கிறது. இந்த தண்ணீரில் மட்டுமே 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யலாம்.

ஆளியாறு மூலம் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரையே கொடுக்காத கேரளம், முல்லைப் பெரியாறு அணையில் முரண்டு பண்ணிக்கொண்டு வருகிறது. சிறுவாணி அணைக்கு வரும் நீரின் அளவு குறையும் வகையில், அதன் துணைநதிகளை தனியார் குடிநீர் ஆலைகளுக்கு தாரை வார்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது கேரளம்.

காவிரியை தமிழகத்தின் வாய்க்கால் போலக் கருதி, மிகைநீரை மட்டுமே வழங்குகிற திட்டத்தை கர்நாடகம் எப்போதோ தொடங்கி நடத்திக்கொண்டிருக்கிறது.

தமிழகத்துக்கான நீர் ஆதாரங்கள் அனைத்தையும் இந்த மூன்று மாநிலங்களும் மறித்துக் கொண்டு வருகின்றன.

இழந்த தண்ணீரைப் பெற முடியாவிட்டாலும், கிடைக்கும் நீரையாவது உருப்படியாகப் பயன்படுத்தவும், பாதுகாக்கவும் அரசு முன்வர வேண்டும். இல்லையேல், தமிழர்களின் கண்ணீரால் கடல் நீர் மேலும் கரிக்கும்.

————————————————————————————————————————–
பாலாற்றில் விளையாடும் அரசியல்!

ஆர். ராமலிங்கம்
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு விரைவில் அணை கட்டத் தொடங்கும் என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உறுதிபட கூறியுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், குப்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சந்திரபாபு நாயுடுவின் செல்வாக்கைக் குறைக்கும் முயற்சிகளில் ஒன்றாக பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது.

அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றிய விவரம் கண்ணுக்கெட்டியதூரம் வரை தெரியவில்லை. தமிழக முதல்வரும் இவ்விஷயத்தில் நம்பிக்கையூட்டும் தகவலை இதுவரை தெரிவிக்கவில்லை.

இதை எதிர்க்கட்சிகள் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, பாலாறு விவகாரத்தில் ஆளும் திமுக அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது என்ற ரீதியில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சியைத் தவிர பிற தோழமைக் கட்சிகளும் இதற்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றன.

கர்நாடக மாநிலம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு அந்த மாநிலத்தில் 40 கி.மீ. தூரமும் ஆந்திரத்தில் 31 கி.மீ. தூரமும், தமிழகத்தில் 222 கி.மீ. தூரமும் பயணிக்கிறது.

கடந்த பத்தாண்டுகளாக, அவ்வப்போது பெய்யும் கனமழைதான் தமிழக பகுதியில் உள்ள பாலாற்றுப் படுகையை ஈரப்படுத்தி வருகிறது. 30 ஆண்டுகளில் 6 முறை மட்டுமே பாலாற்றில் நீர்வரத்து இருந்துள்ளது.

பாலாற்றின் குறுக்கே கர்நாடக அரசு பேத்தமங்கலத்தில் அணை கட்டியுள்ளது. அந்த மாநிலம் வெளியேற்றும் உபரி நீரை 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டி ஆந்திர அரசு நீர்நிலைகளை நிரப்பி வருகிறது.

மழைக் காலங்களில் அதிர்ஷ்டவசமாக ஆந்திர எல்லையில் இருந்து ஒருசில தினங்கள் வரும் நீருக்கும் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. கணேசபுரம் என்ற இடத்தில் ஆந்திர அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதனால் பாலாறு பொய்த்துவிடுமே என தமிழகத்தின் வடமாவட்ட மக்களின் அச்சப்படுகின்றனர்.

தற்போது மணல் சுரண்டல், நீர்வளம் பறிபோதல், தோல் தொழிற்சாலைகளும் உள்ளாட்சி அமைப்புகளும் கழிவுநீரை வெளியேற்றுவதால் படுகை மாசுபடுதல் போன்ற மும்முனைத் தாக்குதலில் தமிழக பாலாற்றுப் பகுதி சிக்கியுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியில் 1892-ல் தமிழகத்தில் பாயும் 12 ஆறுகளுக்கு நதிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன. அவற்றில் பாலாறும் இடம் பெற்றுள்ளது.

அன்றைய மைசூர் மற்றும் மதராஸ் அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த ஒப்பந்தங்கள் 1952 வரை அமலில் இருந்தது. அன்றைக்கு சித்தூர் மாவட்டம், சென்னை மாகாணத்தில் இடம்பெற்றிருந்தது.

மொழிவாரி மாநிலங்கள் உருவானபோது சித்தூர் மாவட்டம் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் பாலாற்று நீர்வளத்தில் ஆந்திர மாநிலத்துக்கும் பங்களிக்கும் நிலை ஏற்பட்டது.

இருப்பினும் 1892 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பாரம்பரிய உரிமை அடிப்படையில்தான் இன்றைக்கு தமிழகம் பாலாற்று பிரச்னையை அணுக வேண்டியுள்ளது.

இரு மாநில எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாலாற்று பிரச்னை பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

இதில் பங்கம் ஏற்படாமல் இருப்பதற்கு, காவிரி நீர் பங்கீட்டை போன்று பாலாற்று நீரில் தனக்குள்ள பங்கீட்டு உரிமையை தமிழகம் நிலைநாட்டுவது ஒன்றே தீர்வாக அமையும்.

நதிநீர் பங்கீடு உரிமையை நிலைநாட்டுவதன் மூலம் பாலாற்று நீர்வரத்தில் 60 சதவீதத்தை தமிழகம் பெற வாய்ப்பு உள்ளது என்கின்றனர் விவசாயிகள்.

தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட, மத்திய அரசு 1956-ல் கொண்டு வந்த நதிநீர் வாரியச் சட்டத்தை பயன்படுத்த முடியும். தமிழக அரசு மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி இச்சட்டத்துக்கு உயிரூட்டலாம்.

மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்னை எழுந்தால் இச்சட்டத்தின்படி மத்திய அரசு ஒரு வாரியத்தை ஏற்படுத்த முடியும்.

அதன் மூலம் மாநிலங்களுக்கிடையே உள்ள நீர் பங்கீடு தொடர்பான பிரச்னைகளுக்கு தக்க அறிவுரையை வழங்க முடியும். புதிதாக நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ஒன்றையும் மாநிலங்களுக்கிடையே ஏற்படுத்த முடியும்.

தமிழக அரசியல் கட்சிகளிடையே மக்களின் பொதுப் பிரச்னைகளில் கூட ஒற்றுமையின்மை நிலவுவது உலகறிந்த உண்மை. இது அண்டை மாநிலங்களுக்கு பலமாக அமைந்துள்ளது.

பாலாறு விஷயத்தில் திமுக அரசும், எதிர்கட்சிகளும் ஒன்றையொன்று குறைகூறி அரசியலாக்குவதைத் தவிர்த்து ஒருங்கிணைந்த செயல்பாட்டில் இறங்கினால் மட்டுமே நதிநீர் பங்கீட்டில் அண்டை மாநிலங்களின் அடாவடித்தனத்தைத் தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

நதிநீர் பிரச்னைகளில் தமிழகம் இக்கட்டான சூழலை நோக்கி நகர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி உறுதியான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

இதன் மூலம் பாலாற்று பிரச்னையில் மத்திய அரசும், நீதிமன்றமும் தலையிடுவதற்கான நெருக்கடியை தமிழகத்தால் ஏற்படுத்த முடியும்.

ஆர்ப்பாட்ட அரசியலைக் காட்டிலும், ஆரோக்கிய அரசியலே ஆபத்தைத் தடுக்க முடியும். தமிழக அரசியல் தலைவர்கள் சிந்திப்பார்களா?

—————————————————————————————————————–
மக்கள் திரள் போராட்டம்-காலத்தின் கட்டாயம்

பழ. நெடுமாறன்


தமிழ்நாட்டில் ஏரி, குளம், ஆறுகளுக்குப் பஞ்சம் இல்லை. காடுகள் அடர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் உண்டு. தென்மேற்குப் பருவ மழை, வட கிழக்குப் பருவ மழை ஆகிய இரு பருவ மழைகள் ஒருபோதும் பொய்த்ததில்லை. முப்புறம் கடலும் உள்நாட்டில் ஏராளமான கனிம வளங்களும் உள்ளன. உழைப்பதற்குச் சலிக்காத மக்களும் உண்டு. அறிவாற்றலுக்குப் பஞ்சமில்லை. இத்தனை வளங்களும் நிறைந்திருந்த தமிழ்நாடு இன்றைக்கு என்னவாகியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் வேதனையும் விரக்தியுமே மிஞ்சுகின்றன.

நீரில்லா ஆறுகள்

தமிழ்நாடு எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி மீள முடியாதபடி தவிக்கிறது. காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளை மதிப்பதற்கு கர்நாடகமும் கேரளமும் பிடிவாதமாக மறுக்கின்றன. பாலாற்றில் தமிழகத்திற்கு வரும் தண்ணீரைத் தடுக்கும் வகையில் ஆந்திரம் தனது எல்லைக்குள் அணை கட்ட முற்பட்டுள்ளது.

இந்த மூன்று ஆறுகளின் மூலம் தமிழ்நாட்டில் இருபது மாவட்டங்கள் பயன் அடைந்து வந்தன. ஆனால் இப்போது இந்த மாவட்டங்கள் பாசனத்திற்குரிய நீரை இழந்து வறண்ட பகுதிகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் மூன்றில் இரண்டு பங்கு மாவட்டங்கள் வறண்ட பகுதிகளாக மாறினால் உணவுக்காக பிற மாநிலங்களிடம் தமிழகம் கையேந்தி நிற்கக்கூடிய நிலைமை உருவாகிவிடும்.

விவசாயத்திற்கும் குடிப்பதற்கும் போதுமான நீரில்லாமல் நாம் தவிக்கும்போது, ஆறுகளிலும் நிலத்தடியிலும் எஞ்சியுள்ள சிறிதளவு நீரையும் உறிஞ்சி எடுத்து விற்பனைப் பொருளாக “கோகோ கோலா’, “பெப்சி’ போன்ற அன்னிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் அவலமும் நடைபெறுகிறது.

நகர்ப்புற மக்கள் அன்றாடப் பயன்பாட்டிற்கே குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயச் சூழலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

மணல் கொள்ளை

அண்டை மாநிலங்களின் வஞ்சனையால் வறண்டுவிட்ட இந்த ஆறுகளிலிருந்து மணல் மிக எளிதாகக் கொள்ளை அடிக்கப்படுகிறது. எந்த மாநிலங்கள் நமக்குத் தண்ணீர் தர மறுக்கின்றனவோ அதே கேரள மாநிலத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் லாரிலாரியாகத் தமிழக ஆற்று மணல் கொண்டு செல்லப்படுகிறது. மணல் கொள்ளை அடிப்பதற்கு வசதியாக இந்த ஆறுகளில் நீரோட்டம் இல்லாமல் அண்டை மாநிலங்கள் செய்து விட்டனவோ என்றுகூட சந்தேகம் எழுகிறது. இந்த ஆறுகள் வறண்டு போவதைப் பற்றிக் கொஞ்சமும் கவலை இல்லாமல் தமிழக அரசு இருப்பதற்கு இந்த மணல் கொள்ளையில் ஈடுபட்டிருப்பவர்கள் சென்ற ஆட்சியிலும் சரி, இந்த ஆட்சியிலும் சரி ஆளும் கட்சியினரே என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தமிழகத்தின் மற்ற ஆறுகளிலும் ஓடைகளிலும் மணல் அடியோடு சுரண்டப்படுகிறது. இந்த நிலைமை தொடருமானால் எதிர்காலத்தில் தமிழக ஆறுகளின் இரு பக்கமும் உள்ள கிணறுகளும் நீரூற்றுகளும் வறண்டு போய் மக்கள் குடிநீருக்காக அவதிப்படும் நிலை உருவாகிவிடும். மேலும் இந்த ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள், பாலங்கள் ஆகியவை மணல் கொள்ளையின் விளைவாக பலவீனம் அடைந்து இடியும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. அண்மையில் சென்னைக்கு அருகே காரனோடை பாலம் இடிந்து விழுந்ததற்கு மணல் கொள்ளையே காரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறையும் ஏரிகள்

ஆறுகளின் கதி இதுதான் என்றால் தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி சுருங்கி வருகின்றன. பல ஏரிகள் உண்மையிலேயே காணாமல் போய்விட்டன. தமிழ்நாட்டில் சிறியதும் பெரியதுமான 39 ஆயிரம் ஏரிகள் உள்ளன. தமிழக நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதிக்கு இந்த ஏரிகள் பாசன வசதி அளித்து வந்தன. இவற்றின் மூலம் பத்து லட்சம் ஹெக்டேர்கள் பயன் பெற்றன.

1980-ஆம் ஆண்டில் இந்த ஏரிகளின் பாசன வசதிகளை நவீனமயப்படுத்துவதன் மூலம் மேலும் 54 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பயன் பெறும் என மதிப்பிடப்பட்டது. இத்திட்டத்திற்கு சுமார் ரூ. 200 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டபோது அந்தத் தொகையை ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பு தருவதாக ஒப்புக்கொண்டு இதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. 27 ஆண்டுகள் கழிந்த பிறகும் இந்த வேலைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இது ஏன் என்பதை ஆராய்ந்தால் திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்.

தமிழ்நாட்டில் 100 ஏக்கருக்கு மேல் பரப்பளவுள்ள ஏரிகளைப் பொதுப்பணித்துறையும் அதற்குக் குறைவாக உள்ள ஏரிகளை ஊராட்சி ஒன்றியங்களும் நிர்வகித்து வருகின்றன. இவை தவிர அணை நீரைப் பெற்று பாசனம் செய்யும் 100 ஏக்கருக்கும் குறைவான சில ஏரிகளையும் பொதுப்பணித்துறை நிர்வகிக்கிறது. பொதுப்பணித்துறையின் கீழ் 12 ஆயிரம் ஏரிகளும் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 27 ஆயிரம் ஏரிகளும் உள்ளன.

கடந்த நாற்பதாண்டுகளில் இந்த ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. ஏரிகளில் மட்டுமல்ல; ஏரிகளுக்கு மழை நீரைக் கொண்டு வரும் பகுதிகளும் ஏரியிலிருந்து நீரை நிலங்களுக்குக் கொண்டு செல்லும் கால்வாய்களும்கூட ஆக்கிரமிப்பிலிருந்து தப்பவில்லை. இதன் காரணமாக பல ஏரிகள் முற்றிலுமாக காணாமல் போய்விட்டன. தனி நபர்கள் ஆக்கிரமித்த ஏரிகளை விட அரசுத் தரப்பில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகள் இன்னும் அதிகமாகும். நீதிமன்ற அலுவலகங்கள், அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைகள், தாலுகா அலுவலகங்கள், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் வளாகங்கள், வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள், சமுதாயக் கூடங்கள், நூலகங்கள், பேருந்து நிலையங்கள் என அரசின் பல்வேறு துறை சார்ந்த கட்டடங்கள் ஏரிகளுக்குள்ளாகவே கட்டப்பட்டுள்ளன.

ஏரிகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. ஆனால் அந்த உயர் நீதிமன்றத்தின் கட்டடமே உலகநேரி கண்மாயில் கட்டப்பட்டுள்ளது என்பது வேதனையான உண்மை.

ஊராட்சி ஒன்றியங்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்த 27 ஆயிரம் கண்மாய்களில் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றின் எல்லைகள் சுருங்கி அழிந்து வரும் அபாயம் உள்ளது. ஏரிகளிலும் கண்மாய்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றிச் சீரமைக்கவும் அதன் நீர் வழி எல்லைகளை வகுக்கவும் அண்மையில் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆனால் இந்தச் சட்டம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளது. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை ஆக்கிரமித்திருப்பவர்களை வெளியேற்றும் அதிகாரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கோ அல்லது ஊராட்சித் தலைவர்களுக்கோ இல்லை.

ஆக்கிரமிப்புகள் திடீரென்று ஓரிரு நாள்களில் நடைபெற்றுவிடவில்லை. ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் கையூட்டுப் பெற்றுக் கொண்டோ அல்லது அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு அஞ்சியோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு கடமை தவறிய இந்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து உயர் நீதிமன்ற ஆணையில் எதுவும் கூறப்படவில்லை என்பது திடுக்கிட வைக்கும் உண்மையாகும்.

காடுகள் அழிப்பு

1967-ஆம் ஆண்டுக்கு முன், தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் காடுகள் 23 விழுக்காடாக இருந்தது. இப்போது தமிழகக் காடுகளின் பரப்பளவு என்பது 17 விழுக்காடாகும். 6 விழுக்காட்டிற்கு மேற்பட்ட காடுகள் வெட்டப்பட்டுவிட்டன. காடுகளில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்படுகின்றன. இவற்றைக் கண்காணிக்க வேண்டிய வனத்துறை அதிகாரிகளின் ஊழலால் இது நடைபெறுகிறது. அரசியல்வாதிகளின் ஒப்புதல் இல்லாமல் இது நடைபெறாது. இதன் விளைவாக பருவ மழை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது. மலையின் அடர்ந்த காட்டில் உற்பத்தியாகும் ஆறுகள் வற்றத் தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் கடற்கரை 1000 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்ளது. பல இடங்களில் கரையோரமாக அலையாற்றுக் காடுகள் இருந்தன. தென் மாவட்டங்களில் கடற்கரை நெடுகிலும் தேரிகள் என அழைக்கப்படும் மணற்குன்றுகள் இயற்கையாக அமைந்திருந்தன. ஆனால் இந்தக் காடுகளையும் மரம் வெட்டுபவர்கள் விட்டு வைக்கவில்லை. மணற்குன்றுகளையும் சிதைத்து விட்டார்கள். இதன் விளைவாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சுனாமி அலைகள் வீசியபோது அவற்றைத் தடுக்கும் அலையாற்றுக் காடுகளும் தேரிகளும் இல்லாததன் விளைவாக பேரழிவு ஏற்பட்டது.

மோதல் சாவுகள்

காவல்துறை மக்களை வேட்டையாடும் துறையாக மாறிவிட்டது. ஆளும் கட்சியினரின் ஏவல்படையாக காவல்துறை மாற்றப்பட்டு நீண்ட நாள்களாகிவிட்டது. ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள் மறுக்கப்படுகின்றன. ஊடகங்களுக்கு எதிரான பல்வேறு வகையான அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன.

சொல்லாமலேயே மற்றொரு பெரும் கொடுமை தமிழகத்தில் தங்குதடையின்றி அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியிலும் தி.மு.க. ஆட்சியிலும் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் மோதல் சாவுகள் என்ற பெயரில் காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் சமூக விரோதிகள் எனக் குற்றம்சாட்டி இந்தக் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்க காவல்துறை முயல்கிறது. அது உண்மை என்று வைத்துக்கொண்டால் கூட, குற்றம் சாட்டப்பட்டவர்களை முறையாக நீதிமன்றத்தில் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தண்டனை வழங்கும் அதிகாரத்தையும் நீதிமன்றங்களிடமிருந்து காவல்துறை, தானே பறித்துக் கொண்டது. இந்தக் குற்றவாளிகளை உருவாக்கி வளர்த்துவிட்டதில் அரசியல் கட்சிகளுக்குப் பெரும் பொறுப்பு உண்டு. அதில் சமபங்கு காவல் துறைக்கும் உண்டு.

தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம், கந்து வட்டி, கட்டைப் பஞ்சாயத்து ஆகியவற்றின் மூலம் ஏழை எளிய மக்களும் நடுத்தர மக்களும் ஆட்டிப் படைக்கப்படுகிறார்கள் – சுரண்டப்படுகிறார்கள். அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம், சமூகவிரோதிகள் ஆகிய முத்தரப்பு கூட்டு உருவாகி மேற்குறிப்பிடப்பட்ட மூன்று அக்கிரமங்களையும் தங்குதடையின்றி நடத்துகிறது.

மீறப்படும் சட்டமன்ற மரபுகள்

சட்டமன்றத்தில் இந்த அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வருபவர்கள் பேச முடியாதபடி தடுக்கப்படுகின்றனர். வெவ்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லி அரசுக்கு எதிராக யாரும் எதுவும் கூறிவிடாதபடி தடுக்க முயற்சி வெளிப்படையாகவே நடத்தப்படுகிறது.

ஆளும் கட்சிதான் இவ்வாறு சட்டமன்ற மரபுகளைத் துச்சமாகக் கருதி மதிக்காமல் போனால் முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அவ்வாறே நடந்து கொள்கிறது. எதிர்க்கட்சித் தலைவியான ஜெயலலிதா சட்டமன்றத்திற்கு பெரும்பாலும் வருவதே கிடையாது. வெளியே இருந்து கொண்டு ஆளும் கட்சியை விமர்சனம் செய்து அறிக்கை வெளியிடுவதோடு தன் ஜனநாயகக் கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறார். அவர் முதலமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு. கருணாநிதியும் சட்டமன்றக் கூட்டத்தை அறவே புறக்கணித்தார். முதலமைச்சராக இருந்தால்தான் சட்டமன்றத்திற்கு வருவது. இல்லையேல் வருவது தங்கள் கௌரவத்திற்கு இழுக்கு என்று இருவருமே கருதுகிறார்கள். சட்டமன்ற ஜனநாயகத்தை உண்மையிலேயே இவர்கள் மதிப்பவர்களாக இருந்தால் சட்டமன்ற கூட்டங்களில் தவறாது கலந்துகொள்ள வேண்டும். முடியவில்லை என்றால் தங்கள் பதவியை விட்டு விலகி வெளியேற வேண்டும்.

மக்கள் போராட்டம்

சட்டமன்ற மரபுகள் துச்சமாக மதிக்கப்பட்டு மக்கள் பிரச்னைகள் பற்றி அங்கே பேச முடியாத நிலைமையில் வெளியில் மக்கள் போராட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. மத்திய – மாநில அரசுகளின் ஜனநாயக விரோதப் போக்குகளையும் ஒடுக்குமுறைகளையும் சர்வாதிகார சட்டங்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் முன் எப்போதும் இல்லாதவகையில் இப்போது எழுந்துள்ளது.

பதவிகளைக் காப்பாற்றுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தேர்தலுக்குத் தேர்தல் கொள்கையற்ற கூட்டணிகளை அமைத்துக்கொள்ளும் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

தமிழக அரசியல் சீர்கேடுகளை எதிர்த்தும் மக்கள் விரோதப் போக்குகளைக் கண்டித்தும் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் மக்கள் திரண்டு எழுந்து போராட முன்வர வேண்டும். அந்தந்த ஊரில் இந்த அநீதிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து போராடினால், எத்தகைய அடக்குமுறையாலும் அப்போராட்டத்தை ஒடுக்க முடியாது.

1965ஆம் ஆண்டில் இந்தி திணிப்புக்கு எதிராகத் தமிழக மாணவர்கள் ஒன்றுபட்டு நடத்திய போராட்டம் வரலாறு காணாத மக்கள் திரள் போராட்டமாக நடைபெற்றது. இந்தியை எதிர்த்த திராவிடக் கட்சிகள்கூட அந்தப் போராட்டத்தோடு தங்களை இணைத்துக் கொள்ள முன்வராமல் பதுங்கின. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ் அறிஞர்களான கி.ஆ.பெ. விசுவநாதம், பேராசிரியர் சி. இலக்குவனார், பெருஞ்சித்திரனார் போன்றவர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்களே நடத்திய இந்தப் போராட்டம் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. 1970களின் பிற்பகுதியில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக நாராயணசாமி நாயுடுவின் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு அனைத்து விவசாயிகளின் ஆதரவும் கிடைத்தது. கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் விவசாயிகள் ஒன்றுபட்டுப் போராடினார்கள். 1975ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிராகவும் ஜனநாயகத்தைக் காக்கவும் ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கம் தொடங்கியபோது மக்கள் பேராதரவு அளித்தனர். பெரும் தியாகசீலரும் தன்னலமற்றவருமான அவரை மக்கள் நம்பினார்கள். மக்கள் திரள் போராட்டங்களை நடத்தி இந்திராவின் சர்வாதிகார ஆட்சியை அகற்றி மீண்டும் ஜனநாயக ஆட்சியை அவர் நிலைநாட்டினார்.

மேற்கண்ட போராட்டங்களில் மக்கள் தாமாகவே முன்வந்து கொதிப்புணர்வுடன் போராடினார்கள். இந்த மக்கள் திரள் போராட்டங்களின் விளைவாகத்தான் ஆட்சியாளர்கள் அடிபணிய நேரிட்டது என்பதை நாம் மறக்கக் கூடாது. நாடு பூராவிலும் உள்ள மக்கள் ஒன்றுபட்டு திரண்டு எழுந்து போராடுவதென்பது அத்தனை எளிதானதல்ல. மக்கள் தங்கள் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் லஞ்ச ஊழல், கள்ளச் சாராயம், மணல் கொள்ளை, ஏரிகள் ஆக்கிரமிப்பு, காடுகள் அழிப்பு, காவல் துறையின் காட்டாட்சி மற்றும் சமூகக் கேடுகளை எதிர்த்து அந்தந்தப் பகுதிகளில் மக்கள் திரள் போராட்டங்களை நடத்த வேண்டும். இந்தப் போராட்டங்கள் ஒரு கட்டத்தில் நாடு தழுவிய பெரும் போராட்டமாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

மக்களுக்கு விழிப்புணர்வையும் ஊட்டி அவர்களைத் திரட்டி இத்தகைய வேண்டாத சக்திகளை எதிர்த்துப் போராட முயற்சி எடுக்க வேண்டிய கடமை தன்னலமற்ற மக்கள் தொண்டர்களுக்கு உண்டு.

ஜனநாயகச் சிதைவு, தமிழ்நாட்டின் உரிமைகளை இழந்து நிற்றல் போன்றவற்றிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டுமானால் தமிழக மக்களைத் திரட்டி மக்கள் திரள் போராட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை. மக்கள் திரள் போராட்டம் நமது கடமை மட்டுமல்ல. வரலாற்றுக் கட்டாயமும் ஆகும்.

இந்த வேலையை நாம் செய்யாமல் நமது சந்ததியினர் செய்யட்டும் என்று விட்டுவிடுவோமானால் எதிர்காலத் தலைமுறை நம்மை ஒருபோதும் மன்னிக்காது.

Posted in Agreements, Agriculture, Alliance, Andhra, AP, Bengaluru, Bethamangala, Blind, Border, Cauvery, Center, Chennai, Construction, Dam, Distribution, DMK, Drink, Drinking, Drinking Water, Farming, Farmlands, Flood, Flow, Govt, Inter-state, Interstate, Intrastate, Karnataka, Kaveri, Kerala, Krishna, Kuchasthalai, Kusasthalai, Lakes, Limits, Madras, Management, Mullai, Mullai Periyar, Mullai Periyaru, Mysore, Nature, Nedumaaran, Nedumaran, Paalar, Paalaru, Palar, Palaru, peasants, Periyar, Periyaru, Pethamangala, Pichathoor, Pichathur, Pichatoor, Pichatur, Politics, Poondi, reservoir, River, Rivers, Sea, Shortage, State, Storage, Supply, Tamil Nadu, TamilNadu, TMC, TN, Waste, Water | Leave a Comment »

Rice prices & food security plan – Veera Jeeva Prabhakaran & KS Radhakrishnan

Posted by Snapjudge மேல் நவம்பர் 30, 2007

நெல்லுக்கு “நோ’?

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

நெல் குவிண்டாலுக்கு ரூ. 1,000 விலை கேட்டு ரயில் மறியல்! தஞ்சை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இதுகுறித்துப் போராடிய விவசாயிகள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

தில்லி நாடாளுமன்றத்தின் முன் நெல்லைக் குவித்துப் போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் ரயிலில் தில்லி பயணம் என்ற போராட்டச் செய்திகள் கடந்த இரண்டு நாள்களாக வந்தவண்ணம் இருக்கின்றன.

விவசாய இடுபொருள்களின் விலை ஏறிவிட்டதால், நெல்லுக்குக் கட்டுப்படியான விலை வேண்டுமென்று விவசாயிகள் போராடுகின்றனர்.

நெல் மற்றும் கோதுமைக்கு இந்த ஆண்டுக்கான கொள்முதல் விலையை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. கோதுமைக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 800 அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஊக்கத்தொகையாகக் குவிண்டாலுக்கு ரூ. 200 அளிக்கப்படும் என்றும் மத்திய வேளாண் அமைச்சகம் அறிவித்தது. இதன் மூலம் கோதுமைக்கு குவிண்டாலுக்கு ரூ. 1,000 விலையாகக் கிடைக்கும்.

ஆனால், சாதாரண ரக நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 645-ம் சூர்ப்பர்பைன் எனப்படும் உயர் ரக நெல்லுக்கு ரூ. 675-ம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊக்கத்தொகை 100 ரூபாயையும் சேர்த்து நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 745 முதல் ரூ. 775 மட்டுமே கிடைக்கும்.

இந்த அறிவிப்பு நெல் விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நெல்லுக்குக் குறைந்தபட்சம் குவிண்டாலுக்கு ரூ. 1,000 வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நடப்பு குறுவை சாகுபடி காலத்தில் குவிண்டாலுக்கு 1,000 ரூபாயும், சம்பா சாகுபடி நெல்லுக்கு 1,500 ரூபாயும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

ஆந்திரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இதுகுறித்து கடும் போராட்டங்களை நடத்தி வருகிறார். தென்மாநிலங்கள் முழுவதும் இதுகுறித்தான விவாதங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவாரும், குவிண்டாலுக்கு ரூ. 1,000 கோதுமைக்கு வழங்கியது சரிதான் என்றும், நூறு சதவீதம் கோதுமை பயன்பாட்டில் உள்ளது என்றும், 65 சதவீதம்தான் நெல் பயன்பாட்டில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

1996 – 97-ல் நெல்லுக்கும் கோதுமைக்கும் இணையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 380 நிர்ணயிக்கப்பட்டது. 1997-98-ல் குவிண்டால் ஒன்றுக்கு நெல்லுக்கு ரூ. 415, கோதுமைக்கு ரூ. 475 என்றும் வித்தியாசப்பட்டு பின் ஒவ்வோர் ஆண்டும் நெல்லைவிட, கோதுமைக்கு விலை கூடுதல் தரப்பட்டது.

இந்த விலை நிர்ணயம் செய்யும் அமைப்பு நடந்து கொள்ளும் விதம் நெல் உற்பத்தி விவசாயிகளின் முதுகில் குத்துகின்ற காரியம்தான். பலமுறை இதுகுறித்து எடுத்துச் சொல்லியும் செவிடன் காதில் சங்கு ஊதுகின்ற அவலநிலைதான். தற்போது கோதுமைக்கு ரூ. 750 + 250 (போனஸ்) = 1,000 என்றும் அரிசிக்கு 645 + 50 (போனஸ்) = 695 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த பாரபட்சமான போக்கு தென்மாநிலங்களை பாதிக்கின்றது. மாற்றாந்தாய் போக்கில் மத்திய அரசு நடந்து கொள்வதைக் கண்டித்து தமிழக அரசும், ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. தமிழக உணவுத்துறை அமைச்சர் ஒரு குவிண்டாலுக்கு சன்ன ரக அரிசி ரூ. 725-ம், சாதா ரக அரிசி ரூ. 695 என்றும் கூறி 75 ரூபாய் அரிசிக்குக் கூட்டிள்ளோம் என்ற அவருடைய அறிவிப்பு வேதனையாக இருக்கிறது.

மத்திய அரசு ஆயிரம் ரூபாய் தரவில்லை என்பதைக் குறித்த எவ்விதக் கருத்துகளும் அவர் அறிவிப்பில் இல்லை. நெல் உற்பத்தி பஞ்சாபில் அதிகமாக இருந்தாலும், பயன்பாடு தென்மாநிலங்களில்தான் அதிகம்.

நெல் சாகுபடி ஏக்கர் ஒன்றுக்குச் செலவு 1997-2007-ல் விதை நெல் ரூ. 267 – ரூ. 400. உரம் ரூ. 1,200 – ரூ. 1,700. பூச்சிக்கொல்லி மருந்து வகைகள் ரூ. 150 – ரூ. 300. பணியாள் கூலி செலவு ரூ. 4,600 – ரூ. 7,000. அறுவடை செலவு ரூ. 230 – ரூ. 950.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயச் சங்க செயலர் வே.துரைமாணிக்கம் கணக்கீட்டின்படியும், வேளாண்மைத் துறையின் பரிந்துரையின்படியும் கீழ்குறிப்பிட்டவாறு ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு ஆகும் செலவு விவரம்.

நெல்விதை கிலோ ரூ. 15 வீதம் 15 கிலோவிற்கு ரூ. 450. 8 சென்ட் நாற்றங்கால் தயார் செய்ய இரண்டு ஆண் கூலி ரூ. 240. ஒரு பெண் கூலி ரூ. 80. தொழுஉரம் ஒரு டன் ரூ. 200. அசோஸ்பைரில்லம் 7 பாக்கெட் பாஸ்யோபாக்டீரியா 7 பாக்கெட் ரூ. 84. ரசாயன உரம் டி.ஏ.பி. 30 கிலோ, யூரியா 20 கிலோ ரூ. 400. நாற்றுப்பறித்து வயலில் எடுத்து வைக்க ஆள் கூலி ரூ. 1,100. நடவு வயல் உழவு டிராக்டர் 2 சால் டிராக்டர் உழவு ரூ. 550. நடவு வயலுக்கான தொழு உரம் 3 டன் ரூ. 600.

வரப்பு மற்றும் வயல் சமன் செய்ய 3 ஆள் கூலி ரூ. 360. நெல் நுண்ணூட்டம் 5 கிலோ ரூ. 93. ரசாயன உரம் டி.ஏ.பி. 50 கி. யூரியா 75 கி. பொட்டாஷ் 50 கி. ரூ. 1,125. நடவுப் பெண்கள் 18 பேருக்கு ரூ. 80 சதவீதம் ரூ. 1,440. 2 தடவை களை எடுக்கச் செலவு ரூ. 980. பூச்சிமருந்துச் செலவு ரூ. 250. காவல் மற்றும் தண்ணீர் பாசனம் செய்ய ஆள் செலவு ரூ. 250. அறுவடை ஆள்கள் கூலி ரூ. 1,750. கதிர் அடிக்கும் இயந்திர வாடகை ரூ. 525. ஓர் ஏக்கருக்கான கடன் பெறும் தொகைக்கான வட்டி கூட்டுறவு என்றால் 7 சதவீதம் (5 மாதம்) ரூ. 245. தனியார் என்றால் ரூ. 500. காப்பீடு பிரிமியம் தொகை 2 சதவீதம் ரூ. 167. விலை மதிப்பீட்டுக்குழு பரிந்துரைப்படி பார்த்தால் நிலமதிப்பிற்கான வட்டி 7 சதவீதம் ரூ. 3,500. மொத்தம் ரூ. 14,689.

இவ்வளவு செலவு கடன் வாங்கிச் செய்தாலும், விலை இல்லை. சிலசமயம் தண்ணீர் இல்லாமல், பூச்சித் தாக்குதலாலும் நெல் பயிர்கள் கருகி விடுகின்றன. பயிர் இன்சூரன்ஸ் என்பது வெறும் வெட்டிப்பேச்சாக உள்ளது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

நாட்டின் முதுகெலும்பு விவசாயம்தான். ஆனால் அதை நம்பியுள்ள 65 சதவீத விவசாயிகளின் நிலைமை மிகவும் வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. இதுவரை இந்தியாவில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடந்த 1960 களில் ஒரு மூட்டை நெல் ரூ. 50. அன்றைக்கு இது ஒரு கட்டுபடியான நல்ல விலை. அதைக் கொண்டு சிரமம் இல்லாமல் விவசாயிகள் நிம்மதியாக வாழ்ந்தனர். அன்று உழவு மாடு ஒரு ஜோடி ரூ. 800தான். ஆனால், இன்றைக்கு ஒரு ஜோடி ரூ. 20,000. அன்று டிராக்டர் ரூ. 25,000 இன்றைக்கு அதன் விலை லட்சங்களாகும். ஆலைகளில் உற்பத்தியாகும் நுகர்வோர் பொருள்கள் நாற்பது மடங்கு அதிகரித்துள்ளன. அரசு ஊழியர்களின் ஊதியம் ஆறு மடங்கு வரை கூடுதலாகி உள்ளது. ஆனால், நெல்லின் விலை திருப்தியாக கூடுதலாக்கப்படவில்லை.

நெல் உற்பத்திச் செலவு கோதுமையைவிட அதிகம். உழைப்பும் அதிகம். நெல் நன்செய் பயிர்; கோதுமை புன்செய் பயிர். நெல் உற்பத்திக்கு பஞ்சாபில் ரூ. 816-ம், மகாராஷ்டிரத்தில் ரூ. 937-ம் செலவாகிறது.

ஒரு குவிண்டால் நெல்லை அரைத்தால் 65 கிலோ அரிசி கிடைக்கும். 35 கிலோ தவிடு மாட்டுத் தீவனமாகப் பயன்படும். நான்கு லிட்டர் எண்ணெய் கிடைக்கும். எண்ணெய் கழிவுகளை மீன்களுக்கு உணவாகப் பயன்படுத்தலாம். இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் உற்பத்தி செய்யப்படும் நெல் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் அதற்கான விலையும் அதை ஊக்குவிக்கின்ற அக்கறையும் மத்திய – மாநில அரசுகளுக்கு இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.

மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு விவசாயிகளின் வேதனை குறித்த அக்கறை இல்லை. பெரிய தொழிலதிபர்களுக்கு ரூ. 1,400 கோடி வரை சலுகைகள் வழங்கி உள்ளார். கொள்ளை லாபம் ஈட்டும் இந்த முதலாளிகளுக்கு கடன் வட்டியை 45 சதவீதம் குறைத்துள்ளார்.

நாட்டின் விவசாய வளர்ச்சி வெறும் 2.3 சதவீதம். மேற்கொண்டு வளர்ச்சி இல்லை. இன்னும் வேதனை என்னவென்றால், அதிகார வர்க்கத்தில் உள்ள சிலர் விவசாயத்தை விட்டு ஒழியுங்கள் என்ற இலவச ஆலோசனை வழங்குவதுதான் கொடுமையிலும் கொடுமை.

நெல்லைப் போன்றே கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலைமையும் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு விவசாயி தான் வளர்த்த கரும்பை கட்டுபடியான விலை இல்லாததால் யார் வேண்டுமானாலும், வெட்டி எடுத்துச் செல்லலாம் என்று தண்டோரா போட்டு கூவி அழைத்தார். அப்படியாவது அந்தக் கரும்பு நிலத்தை விட்டு அகன்றால்போதும் என்ற அவலநிலை.

நெஞ்சு பொறுக்கவில்லை என்ற நிலையில் நெல் விலை கேட்டு விவசாயிகள் களத்தில் போராடுகின்றனர். நீரிழிவு நோயாளிகள், “நெல் அரிசிக்கு நோ’ என்று சொல்வதைப்போல மத்திய அரசும், “நெல்லுக்கு நோ’ என்று சொல்லிவிட்டதோ என்ற ஏக்கம்தான் நமக்கு ஏற்படுகிறது.

வள்ளுவர் சொன்னதைப்போல, “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்’ – என்ற நிலை மாறி விவசாயிகளுடைய பொருளாதார நிலைமை மட்டுமல்லாமல் அவர்களுடைய சமூக, சுயமரியாதையும் அடிபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. இதற்கு யார் காரணம்? ஆட்சியாளர்கள்தான்.

புதிய பொருளாதாரம் தாராளமயமாக்கல் என்ற நிலையில் விளைநிலங்கள் யாவும் அழிக்கப்பட்டு சிறப்புப் பொருளாதார மண்டலமாக மாற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், நிலங்களும் நீர்ப்பாசன ஏரிகளும்கூட வீடுகளாக மாறிவிட்ட நிலை. இந்நிலையில் எப்படி விவசாயம் இந்தியாவில் முதுகெலும்பாக இருக்க முடியும்?

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)
———————————————————————————————————————————————————-

சவாலாகும் உணவுப் பாதுகாப்பு!

வீர. ஜீவா பிரபாகரன்

உலகளவில், மக்கள்தொகை வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் நமது நாட்டில், உணவுப் பாதுகாப்பு என்பது மாபெரும் சவாலாக உருவெடுத்து வருகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் விவசாயத் துறையின் பங்கு பல ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது. இருப்பினும், மொத்த மக்கள்தொகையில் சுமார் 65 சதவீதம் பேர் தங்கள் வாழ்வாதாரமாக விவசாயத்தையே நம்பியுள்ளனர்.

உணவுத் துறையில் பிற நாடுகளைச் சார்ந்திராமல் இருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை. 1960-களில் உணவுப் பொருள்களுக்கு வெளிநாடுகளை நாம் எதிர்பார்த்த நிலை இருந்தது. ஆனால், முதலாவது பசுமைப் புரட்சியால் தன்னிறைவு காணப்பட்டது. பின்னர் ஏற்பட்ட சூழல்களால் நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.

குறிப்பாக, விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழில் நிறுவனங்களாகவும், புதிய நகரங்களாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. ஒரு சில இடங்களில் இத்தகைய நடவடிக்கைகளை விவசாயிகள் எதிர்த்தாலும் அரசுகள் அதை கண்டுகொள்வதில்லை. இதனால், விளைநிலப் பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

விவசாயத்துக்கு நீராதாரமாக விளங்கிய கண்மாய்கள் காணாமல் போய்விட்டன. பாசனத்துக்கான நீர்த் தேவையை பூர்த்தி செய்வதில் அரசுகளுக்குப் போதிய ஆர்வம் இல்லை.

நமது நாட்டில் போதிய நீர்வளம், நில வளம் இருந்தும் அதை முறைப்படுத்தி முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டுவருதற்கான முயற்சிகள் ஏட்டளவிலேயே உள்ளன.

வேளாண் இடுபொருள்கள் விலை அதிகரிக்கும் அளவுக்கு விளைபொருள்களுக்கு, போதிய விலை கிடைப்பதில்லை. இதனால், வேளாண் பணிக்கு போதிய கூலி வழங்க இயலுவதில்லை. எனவே, கிராம மக்கள் அதிக வருவாய் கிடைக்கும் நகர்ப்புறப் பணிகளுக்குச் செல்லும் நிலை உருவாகிவிட்டது. கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கிய இடப்பெயர்வு அதிகரித்து வருகிறது.

விவசாயிகள் விளைவித்த பழம், காய்கறி உள்ளிட்ட விளைபொருள்களைச் சேமித்து, பதப்படுத்தி, பொதிவு (பேக்கிங்) செய்து விற்பனை வாய்ப்பைப் பெருக்கும் திட்டங்கள் முழுவீச்சில் நடைபெறவில்லை.

கூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆறுதலான விஷயமாக இருந்தபோதிலும், விவசாயத்துக்கான பயிர் காப்பீட்டுத் திட்டங்கள், அதன் விதிமுறைகளால் பயனளிக்காத நிலையிலேயே உள்ளன.

நமது விவசாயப் பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகள், சாதனைகள் கீழ்நிலை விவசாயிகளைச் சென்றடைவதில் மிகுந்த இடைவெளி உள்ளது.

இத்தகைய கடுமையான சோதனைகளையும் தாண்டி நாம் உணவு உற்பத்தியில் போதிய சாதனைகள் நிகழ்த்தி வருகிறோம்.

இருப்பினும், கோதுமை உள்ளிட்ட சில விளைபொருள்கள் கூடுதல் விலை கொடுத்து வெளிநாடுகளிலிருந்து நடப்பாண்டில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

விவசாய நிபுணர்களின் கணக்கெடுப்புப்படி, நமது நாடு வரும் 2010-ம் ஆண்டில் 1.41 கோடி டன் உணவு தானியம் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். அதையடுத்து ஒவ்வோர் ஆண்டும் 2 சதவீதம் இறக்குமதி அளவு உயரும் என மதிப்பிடப்படுகிறது.

மக்கள்தொகை வளர்ச்சியையும் கருத்தில் கொண்டால் 2020-ம் ஆண்டில் நமது நாட்டின் உணவுப்பொருள்கள் தேவை 34 கோடி டன்னாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நமது நாட்டில் உணவுப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது. மனித உரிமைகளில் உணவு உரிமையே தலையாய உரிமை என்பது விவாதத்துக்கு இடமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், நமது நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் பலருக்கு ஒரு வேலை உணவு கிடைப்பதே அரிதாக உள்ளது.

இது ஒருபுறம் என்றால், அதிக வருவாய் ஈட்டுவதற்காக உணவுப் பொருள்களை வாங்கி “எத்தனால்’ தயாரிப்பில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இது வறுமை, பட்டினிச்சாவு, கிராமப் பொருளாதாரப் பாதிப்பு உள்ளிட்ட எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என சில அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்நிலையில் நாட்டின் வளம் பெருக்கும் வேளாண்மையில் போதிய கவனம் செலுத்தாவிடில், உணவு மானியச் செலவு அதிகரிக்கும். உணவுப் பாதுகாப்பு என்பது பெரும் சவாலாகிவிடும்.

—————————————————————————————————–

தேவையா மார்க்கெட் கமிட்டி செஸ்?

பி. சுபாஷ் சந்திரபோஸ்


தமிழக வணிக, விவசாயப் பெருங்குடி மக்களின் தலையாய பிரச்னையாக “மார்க்கெட் கமிட்டி செஸ்’ கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது.

முன்யோசனையோ, விவசாயிகள் மீது அக்கறையோ இல்லாத குழப்பான சட்டப்பிரிவுகள், விதிமுறைகள் மூலம் கடுமையான பிரச்னைகளை விவசாயிகளும், வணிகர்களும் தினமும் சந்திக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது இந்த “மார்க்கெட் கமிட்டி செஸ்.’

உணவு உற்பத்திக்காக அல்லும், பகலும் பாடுபட்டு உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கவும், உற்பத்தியான உணவுப்பொருள்களை சேமிக்கவும், உரிய விலை கிடைக்கும்போது விற்று பயன் பெறவும் வேளாண்மை விளைபொருள் விற்பனைச் சட்டம் முதலில் 1933-ல் இயற்றப்பட்டு, 1959, 1987, 1991-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.

இந்தச் சட்டத்தின்படி, அறிவிக்கப்பட்ட விற்பனை பகுதியில், அறிவிக்கப்பட்ட வேளாண் விளைபொருள் எதுவும் வாங்கப்பட்டாலோ அல்லது விற்பனை செய்யப்பட்டாலோ விற்பனைக் குழு (Marketing Committee) ஒரு சதவீத கட்டணம் (Fee/Cess) விதிக்கிறது.

விற்பனைக் கூடங்களை ஏற்படுத்தி அதில் செய்யப்படும் சேவைகளுக்குத்தான் இக்கட்டணம். ஆனால், தமிழகத்தில் மார்க்கெட் கமிட்டி விற்பனைக் கூடங்கள் இல்லாமல், வெளியே கடைகளில் நடக்கும் விற்பனைக்கும் இக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதுதான் வேடிக்கை.

தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களும் இந்தச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட விற்பனைப் பகுதிகளாகும். அந்தந்தப் பகுதியில் உள்ள மார்க்கெட் குழு இந்தச் சட்ட விதிகளை அமலாக்கம் செய்கிறது.

ஆனால், நடைமுறைகளுக்கு ஒவ்வாத குழப்பமான சட்டப் பிரிவுகள், விதிமுறைகள், அதிகாரிகளின் குழப்பமான விளக்கங்கள் காரணமாக மேற்கண்ட சட்ட விதிமுறைகளால் விவசாயிகள், வணிகர்கள் இரு பிரிவினருமே கடுமையான பிரச்னைகளைச் சந்திக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சேவை புரியாமல் வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம்: பிற மாநிலங்களில் 200 முதல் 300 ஏக்கர் பரப்பளவில் விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டு, அங்கு வணிகர்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, அதற்கான கட்டணம் மார்க்கெட் கமிட்டி செஸ் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

விவசாயிகள் தங்கள் சரக்கைக் கொண்டுவந்து வைப்பதற்கான கிடங்குகள், உலர வைப்பதற்கான களங்கள், தரம் பிரித்தல், தராசுகள், ஏலம் மூலம் விற்பனை, வணிகர்களுக்கு அலுவலகம், ஓய்வு அறைகள், விவசாயிகளுக்குப் பயிற்சி வகுப்புகள், குளிர்பதன கிடங்கு, சரக்கை வாங்கிய வியாபாரிகளிடம் பணத்தைப் பெற்று விவசாயிகளுக்குப் பட்டுவாடா செய்யும் வசதி ஆகிய பல்வேறு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், நமது மாநிலத்தில் அத்தகைய விற்பனைக்கூடங்கள் ஏதும் குறிப்பிடத்தக்க அளவில் அமைக்கப்படாமல் பெயரளவில் மிகச் சில மார்க்கெட் பகுதியில் கிடங்குகளும், உலர் களங்களும் அமைக்கப்பட்டு தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படாமல் செஸ் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வேளாண் விளைபொருள்கள் -மார்க்கெட் கமிட்டி செஸ் சட்டங்களில் உரிய மாற்றங்களைச் செய்ய பரிந்துரை செய்துள்ளது. அதில் மிக முக்கியமான மாற்றம், எந்த ஒரு வேளாண் விளைபொருளுக்கும் வேளாண் விற்பனைக் குழுவால் ஏற்படுத்தப்பட்ட விற்பனைக் கூடத்திற்குள் (மார்க்கெட்) நடக்கும் வணிகத்துக்கு மட்டுமே செஸ் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதாகும். ஆனால், தமிழகத்தில் வேளாண் பொருள் விற்பனை எங்கே நடந்தாலும் அதற்கு மார்க்கெட் கமிட்டி செஸ் வசூலிப்பது எதனால் என்பது புரியாத புதிர்.

தற்போது மாநில அரசு சட்டத் திருத்தத்தின் மூலம் பல விளைபொருள்களை அறிவிக்கும்போது அதை உருமாற்றம் செய்து பெறப்படும் ஆலைத் தயாரிப்பு பொருள்களையும் சேர்த்து “அறிவிக்கப்பட்ட பொருளாக’ அறிவிக்கிறது. உதாரணமாக, “உளுந்து’, “உளுந்தம் பருப்பு’ இரண்டுமே அறிவிக்கையிடப்படுகிறது.

இதுவே துவரைக்கும், துவரம் பருப்புக்கும் பொருந்தும். உளுந்தம் பருப்பும், துவரம் பருப்பும் விளைபொருள்கள் அல்ல. அவை பருப்பு ஆலையில் தயாரிக்கப்படும் உற்பத்திப் பொருளாகும். வேளாண் விளைபொருள்களின் விற்பனையை ஒழுங்குபடுத்தி விவசாயிகளுக்கு நன்மை செய்வதுதான் மார்க்கெட் கமிட்டி சட்டத்தின் நோக்கம். வேளாண் விளைபொருள்களுக்கு மட்டுமே செஸ் விதிக்கப்பட வேண்டும். அதிலிருந்து தயாரிக்கப்படும் உப பொருள்களுக்கு செஸ் விதிப்பது எந்த விதத்தில் நியாயம்?

பயறு, பருப்பு பற்றாக்குறையைத் தவிர்க்கும் பொருட்டு, மதுரையிலோ, திருச்சி, கோவையிலோ அல்லது விருதுநகரிலோ உள்ள ஒரு வணிகர் அயல்நாடுகளிலிருந்து உளுந்து, துவரையை இறக்குமதி செய்யும்போது அந்தக் கப்பல் சென்னைத் துறைமுகத்தில் வந்தடைந்து சரக்கு இறங்கினால், அங்கு செஸ் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அதே சரக்குக் கப்பல் சென்னைக்குப் பதிலாக தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகளை இறக்கினால் அங்கு செஸ் கட்டணம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் ஒரே சரக்குக்கு செஸ் கட்டண விதிப்பிலும் இரண்டு வித அளவுகோல் கையாளப்படுகிறது என்பது வேடிக்கை.

விற்பனைக்கூட நடைமுறைகளைப் பொருத்தவரை தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதி வணிகர்களையும், விவசாயிகளையும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாக்கி வருவது அனுமதிச் சீட்டு (பெர்மிட்) முறைதான். விற்பனை செய்யப்பட்ட வேளாண் பொருளை ஒரு மார்க்கெட் பகுதியிலிருந்து அடுத்த பகுதிக்கு எடுத்துச் செல்ல அரசு அலுவலரிடம் பெர்மிட் வாங்கித்தான் கொண்டு செல்ல வேண்டும்.

அரசு அலுவலக நேரம் முடிந்த பின்னரும் கூட, விடுமுறை நாள்கள் உள்பட வர்த்தக பரிமாற்றம் நடந்துகொண்டே இருக்கும். அவ்வப்போது அவசரத் தேவைக்கு தொலைபேசியில் வரும் ஆர்டர்களுக்கு ஏற்ப, இரவு, பகல் பாராமல் உடனுக்குடன் சரக்குகளை அனுப்பி வைப்பது நடைமுறை வழக்கம்.

இது போன்று ஒவ்வொரு நேரமும் முன் அனுமதிச் சீட்டுபெற வேண்டும் என்ற தற்போதைய விதிமுறை லஞ்சத்துக்கு உதவுமே தவிர, எந்த விதத்திலும் விவசாயிக்கோ, வியாபாரிக்கோ உதவாது என்பது நிச்சயம்.

விவசாயம் செய்வோரும், விவசாயத் தொழிலும் நாளும் நலிவடைந்துவரும் இந்நாளில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் ஒரு குன்றிமணி அளவு உணவு தானியங்களோ, காய்கறி, பழ வகைகளோ வீணாக அனுமதிக்கக்கூடாது. அனைத்து வகையான விளைபொருள்களுக்கும் முறைப்படி உலர வைக்க, தரம் பிரிக்க, பாதுகாக்கப்பட்ட களங்களும், கிடங்குகளும், குளிர்பதனக் கூடங்களும் மாநிலம் எங்கும் அமைக்கப்படவேண்டும்.

விவசாயிகள் அவர்கள் பாடுபட்ட உழைப்பிற்கான பலனாக, நல்ல விலை கிடைப்பதற்கு மார்க்கெட் கமிட்டி கூடங்கள் ஏற்பாடு செய்யுமானால் செஸ் கட்டணம் செலுத்த தமிழகத்தில் யாருமே தயங்கமாட்டார்கள்?

வெளிமாநிலங்களில் இந்த நடைமுறை வெற்றிகரமாக நடைபெறுகிறது. ஆனால், தமிழகத்தில் மார்க்கெட் கமிட்டி செஸ் என்கிற பெயரில் விவசாயிகளும், வியாபாரிகளும் அரசால் சுரண்டப்படுகிறார்கள் என்பதுதான் வேதனையான விஷயம்.

(கட்டுரையாளர்: கௌரவ செயலர், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம்)

Posted in Agriculture, Andhra, AP, Basmathi, Basmati, Bullion, cargo, Cess, Committee, Cultivation, Demand, Distribution, Distributors, Economy, Exporters, Exports, Farmers, Farming, Fee, Fees, Field, Finance, Food, Foodgrains, godowns, Grains, Growth, harvest, Imports, Jeeva Prabhakaran, JeevaPrabhakaran, Labor, Labour, Land, Marketing, markets, Naidu, Nayudu, Packaging, Packing, Paddy, PDS, peasants, Poor, Prabhakaran, Prices, procurement, Production, quintal, Radhakrishnan, Ration, Reddy, retail, retailers, rice, Rich, sacks, Security, SEZ, Suicides, Suppliers, Supply, Veera. Jeeva Prabhakaran, Villages, Wheat, Wholsale, workers | Leave a Comment »

Kalainjar Mu Karunanidhi – DMK Rule and achievements: Party Conference in Nellai

Posted by Snapjudge மேல் நவம்பர் 23, 2007

அவர்கள்: கருணாநிதி காட்டம்

Friday, 23 November , 2007, 12:49

உலகின் வரலாற்று நாயகர்களைப் பற்றி – தியாக சீலர்களைப் பற்றி – தீரர்கள், வீரர்கள் பற்றி எழுதினால்; இப்போதுதானே இதெல்லாம் இளைஞர்களைக் கவர்ந்திழுக்க எழுதுகிறார் – என்று தங்களுக்கே உரிய நாராச நடையில் பொய், புளுகு, புரட்டுகளை அறிக்கைகளாக்கி என் எழுத்துக்கு உள்நோக்கம் கற்பித்து வெளியிட்டு மகிழ்கிறார்கள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இளைஞர் எழுச்சி குறித்தும் – இளைஞர்கள் புரிந்துள்ள இமாலய சாதனைகள் பற்றியும் – இன்றுடன் நான் எழுதிய பதினைந்து கடிதங்களை, வரலாற்றுக் கருவூலமெனப் போற்றிப் பாராட்டி, புகழ்ந்துரைத்து, உன் போன்றோர் பொழிந்துள்ள வாழ்த்துகளை முத்தமிட்டுப் பையில் திணித்துக்கொள்வதில் பெருமையுறுகிறேன். அதற்குள் சில ஆத்திரக்காரர்களுக்கு; அவசரக்காரர்களுக்கு ஏற்கெனவே அவர்தம் நெஞ்சில் நிரம்பியுள்ள அசூயை, கொதிப்பேறிப் பொங்கி வழிந்து; அத்துடன் நஞ்சும் கலந்து ஏதேதோ “திருவாய்ச் சிந்து” பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் என்ன; நேற்றைய நாளில் அரசு தலைமைச் செயலகத்தில் பதினெட்டுப் பச்சிளம் குழந்தைகளின் இருதய சிகிச்சைக்காக அரசு சார்பில் சிகிச்சை கட்டணத்தில் பெரும்பகுதியை அதாவது 90 சதவிகித அளவிற்கு அரசே செலுத்துவதற்கு ஒப்புதல் அளித்து, நல் மனம் படைத்த மருத்துவமனை உரிமையாளர்கள் ஒவ்வொருவருடனும் ஒப்பந்தம் செய்து; அந்தக் குழந்தைகளுக்கு அதற்கான பதிவு அட்டைகள் வழங்கினேனே; அதைப் பற்றி நினைத்தார்களா?

நேற்றைய தினமே, 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும், பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் கே.எம். செரியரின் பிரான்டியர் லைப்லைன் நிறுவனமும் இணைந்து மருத்துவ கிராமம் ஒன்றினைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதே, அதைப் பற்றி இந்த அசூயையாளர்கள் அறிவார்களா?

அது மாத்திரமல்ல, தமிழக அரசின் சார்பில் இந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கான தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, அந்தத் திட்டங்கள் எல்லாம் நடைமுறையில் இருந்து வருகின்ற நேரத்தில், நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் மிகப்பெரிய தொழில் நிறுவனமான “போர்டு” தொழிற்சாலையின் ஆசியா பசிபிக் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கான செயல் துணைத் தலைவர் ஜான் பார்க்கர் என்னைச் சந்தித்தபோது, மேலும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்திலே திட்டம் தொடங்கிட இருப்பதாகவும் அறிவித்துச் சென்றிருக்கிறார். அன்றாடம் அறிக்கை விட்டுக்கொண்டிருப்போர் அறியமாட்டார்களா இதனை?

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து; வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாக வழங்க முடிவு செய்து, அதற்காக வெளிப்படையான ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகள் கோரி, சட்டமன்றக் கட்சித் தலைவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு எனது தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முன்னிலையில் ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டு, 25 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு; 18.11.2007 வரை 23 லட்சத்து, 79 ஆயிரத்து, 721 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அளிக்கப்பட்டு, அவற்றில் 21 லட்சத்து 32 ஆயிரத்து 956 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளனவே.

மேலும் 750 கோடி ரூபாய்ச் செலவில் 34 லட்சத்து 25 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்து வழங்குவதற்காக முடிவு செய்யப்பட்டு, வருகிற 27ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பங்கேற்று, அவைகளை வழங்கப் போவதாக அறிவித்துள்ளோமே, அதைப் பற்றிப் பாராட்டுரை பகரப் போகிறார்களா?

இது போலவே, ஏழை – எளிய தாய்மார்களுக்கு இலவசமாக எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகள் வழங்கிடுவோம் என்று அறிவித்து, 16.11.2007 வரை 3 லட்சத்து ஓர் ஆயிரத்து 560 எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகள் வழங்கப்பட்டு, தொடர்ந்து 27.11.2007 முதல் மேலும் எட்டு லட்சம் எரிவாயு அடுப்புகள் வழங்கப்படவுள்ளனவே; இதனைப் பற்றி எரிச்சல்காரர்கள் புகழப் போகிறார்களா?

ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 508 நிலமற்ற ஏழை விவசாயி – விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 688 ஏக்கர் நிலம் இலவசமாக அரசின் சார்பில் அளிக்கப்பட்டுள்ளதே, இது குறித்து பாராட்டு வழங்கப் போகிறார்களா?

2 வயது முதல் 15 வயது வரை உள்ள 71 லட்சம் குழந்தைகள், மாணவர்களுக்குச் சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டைகள் வழங்கப்படுகிறதே, அதைப் பற்றி கருத்து தெரிவிக்கப் போகிறார்களா?.

1 கோடியே 78 லட்சத்து 240 குடும்பங்களுக்கு கிலோ அரிசி 2 ரூபாய் வீதம் மாதம் ஒன்றுக்கு 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறதே, எரிச்சல்காரர்கள் அதுபற்றி என்ன சொல்லப் போகிறார்கள்?

22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு சுமார் 7000 கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறோமே, இன்றைக்கு ஆர்ப்பாட்டம் செய்வோர் அதற்காக வரவேற்பு தெரிவித்ததுண்டா?

10.11.2007 வரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 287 வீட்டு மனைப் பட்டாக்கள் இலவசமாக வழங்கப்பட்டிருப்பதோடு, கடந்த 14ஆம் தேதியன்று அதுபற்றி ஆய்வு நடைபெற்று, இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கிட எந்தவிதமான வருமான உச்ச வரம்பும் கிடையாதென்று அறிவித்திருக்கிறோமே, எது எதற்கோ வக்கணை பேசுவோர் அதைப் பற்றிப் பாராட்டு கூறியிருக்க வேண்டாமா?.

1 இலட்சத்து 60 ஆயிரத்து 531 விவசாயக் குடும்பங்களுக்கு விவசாயி – விவசாயத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு நல உதவித் திட்டத்தின்கீழ் 69 கோடியே 29 லட்சத்து 11 ஆயிரத்து 719 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதே, அதைப் பற்றி ஒரு வார்த்தை உண்டா?

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 73 ஆயிரத்து 665 ஏழைப் பெண்களின் திருமணங்களுக்காக 110 கோடியே 49 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்காக – 4 லட்சத்து 72 ஆயிரத்து 20 கர்ப்பிணி பெண்களுக்காக 206 கோடியே 14 லட்சத்து 33 ஆயிரம் ரூபாயும் நிதி உதவியாக வழங்கப்பட்டுள்ளதே, கேலி பேசுவோர் இதைப் பற்றி எல்லாம் கனவிலாவது நினைத்தது உண்டா? மக்களின் தேவைகளுக்காக நிறைவேற்றப்படும் திட்டங்கள் பற்றி அவர்களுக்கென்ன கவலை? இப்போது அவர்களது கவலையெல்லாம் திருநெல்வேலியில் விரைவில் நடைபெறவிருக்கும் மாநில இளைஞர் அணி மாநாட்டைப் பற்றித்தான்! அதற்காகத்தான் அந்த நண்பர்கள் பேசுகிறார்கள். கண்டனம் – கேலியென முழங்குகிறார்கள்.

உலகின் வரலாற்று நாயகர்களைப் பற்றி – தியாக சீலர்களைப் பற்றி – தீரர்கள், வீரர்கள் பற்றி எழுதினால்; இப்போதுதானே இதெல்லாம் இளைஞர்களைக் கவர்ந்திழுக்க எழுதுகிறார் – என்று தங்களுக்கே உரிய நாராச நடையில் பொய், புளுகு, புரட்டுகளை அறிக்கைகளாக்கி என் எழுத்துக்கு உள்நோக்கம் கற்பித்து வெளியிட்டு மகிழ்கிறார்கள்.

இளைஞர்கள், இன உணர்வு பெற வேண்டுமென்றும் – இயக்கத்தின் இலட்சியங்களை உணர்ந்து இடையறாப் பணி ஆற்ற வேண்டும் என்றும் – என் உள்ளத்தில் என் இளம் பிராயத்திலேயே (1937-1938) 13 வயதிருக்கும் போதே “செல்வ சந்திரா” எனும் புதினம் எழுதி; அதன் முன்னுரையிலேயே இவ்வாறு குறிப்பிடும் அளவுக்கு லட்சிய தாகம் இருந்துள்ளது. மேலே வெளியிடப்பட்டுள்ள என் கையெழுத்து ஆதாரம் “கலைஞரின் கவிதை மழை” என்ற பெரிய நூலில் வெளியிடப்பட்டுள்ளதை எப்போது வேண்டுமானாலும் எரிச்சல்கார நண்பர்கள் பார்த்துத் தெளிவு பெறலாம்.

அதைத் தொடர்ந்து 1942இல் அண்ணாவின் “திராவிட நாடு” இதழில், “இளமைப் பலி” என்ற எனது கட்டுரையும் வெளிவந்துள்ளது. அதன் பிறகு 1945இல் நான் எழுதிய “கிழவன் கனவு” என்ற குறுங்கதைப் புத்தகம் வெளிவந்ததில் – “எங்கு பார்க்கினும் விடுதலை விருத்தம்! எங்கும் சமதர்ம சங்க நாதம்! தமிழொளியை அரசியலில் இணைத்து திராவிடர் உரிமையோடு உடைமையோடு உண்மையோடு உள்ள எழுச்சியோடு உவகை உந்த வாழ்ந்திடும் வரலாறு! ஒரு தமிழன் தன்மானமின்றி அய்யரைச் சாமி என்றழைத்ததற்காக ஆறு மாதக் கடுங்காவல்! சாது எனக் கூறி, சூது செய்த ஒருவன் சாகும் வரையில் சிறைப்பட்டான்!.

பட்டமும், பதவியும் நமது திட்டமென ஒரு பத்திரிகாசிரியன் எழுதியதற்காக மக்கள் மன்றத்திலே அவன் மண்டூகம் எனப்பட்டான். ஏழையைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் மிகுதியாக ஏற்பட்டதாம் ஆநிரைகோ என்ற தமிழனுக்கு! சாதி, மதம், கடவுள்கள் என்ற கற்பனைப் பூச்சாண்டிகள் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் உலவின என்று உரநெஞ்சன் என்ற சரித்திர ஆசிரியர் ஒரு நூலில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தி எதிர்ப்பு! சிறைச்சாலை! தாளமுத்து நடராஜன் களப்பலி! தமிழைக் காக்கச் சிறை சென்ற பெண்மணிகளின் புறநானூறு! மானங்காக்க மாணவர் செய்த கிளர்ச்சி! ஓமான் கடல் மறைத்த சர்.ஏ. டி.பன்னீர்செல்வம்! – இதனை அந்தக் கிழவன் கனவாகக் கண்டான்” என்று குறிப்பிட்டிருப்பதை கருத்துக் குருடர் தவிர மற்றவர்கள் கண்டு மகிழ முடியும். அது என்ன; இப்போது எழுதியதா? 84 வயதில்? இல்லை; 1945இல் என் 21ஆவது வயதில் எழுதியது! நூலின் பெயர் “கிழவன் கனவு” – அப்போது விலை ரூ.1.25 – அதை அப்போது எழுதிய இந்த இளைஞனுக்கு வயது; 21 தான்! பொல்லாங்கு பேசுவோர் இதைப் புரிந்துகொள்வது நல்லது!

1942ஆம் ஆண்டு; 18 வயதிலேயே அண்ணாவின் “திராவிட நாடு” வார இதழில் “இளமைப் பலி” என்ற கட்டுரை எழுதியவன் நான். எனவே இலட்சியத்துக்காக இளமையைப் பலி கொடுக்கவும்; இதோ தயார்! என எழுந்த இளைஞர் கூட்டத்தில் ஒருவன்தான்; இன்று முதிர்ந்த வயதில் மாநில இளைஞர் அணி மாநாட்டுக்காக – வரலாற்று நாயகர்கள் பற்றி 15 கட்டுரைகள் தீட்டி; அவர்களின் நாட்டுப் பற்று – சமுதாயப் பற்று – போன்ற கொள்கை கோட்பாடுகளை, இலட்சிய வேட்கைகளை நினைவூட்டி – புதியதோர் இளைஞர் எழுச்சி பூத்துக் குலுங்கிட எழுதுகோல் எடுத்து இளைஞனே விழி; எழு! நல் – எண்ணங்களை எங்கணும் நடு! எனத் தீட்டிடுக! தீரர்களுக்கான அழைப்பு என்று வீர இளைஞர்காள்; உமை வேண்டுகிறேன்.

மாநாட்டுத் தலைவரும் மாநில இளைஞர் அணிச் செயலாளருமான தம்பி மு.க.ஸ்டாலின் காற்றினும் கடிய வேகத்தில் மாநாட்டுக்கான ஆக்கப் பணிகள் அருமையாக அமைந்திட – அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் சுற்றுப் பயணம் செய்கிறார். அவருடன் இளைஞர் அணியின் எழுச்சிப் படையும் அணிவகுத்திடக் கண்டு அக மகிழ்கிறேன்.

மாநாட்டுக்கான முதல் விளம்பர அழைப்பே; முத்துக் கோத்தது போல் நம்மை முறுவலித்திட வைக்கிறது! மேலும் அடுத்தடுத்த சிறப்புகளை டிசம்பர் 15, 16 ஆகிய நாட்களில் நெல்லையில் காண்போம்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Posted in Achievements, Agriculture, Commodity, Conference, DMK, Elections, Farmers, Farming, Freebie, infrastructure, investments, Justifications, Kalainjar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Laments, Loans, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Manifesto, Marriages, Mu Ka, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Stalin, Nellai, News, Party, peasants, Politics, Polls, Poor, Prices, Reports, rice, Rule, Sops, Statements, Thirunelveli, TIDCO, Tirunelveli, TV, Villages, Votes, Weddings, Welfare | Leave a Comment »

Agricultural Loans – Rich vs Poor farmers: Banking

Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2007

கைப்புண்ணுக்குக் கண்ணாடி!

sainath_farmer_suicides_agriculture.jpgவங்கிகள் மூலம் விவசாயத்திற்கு வழங்கப்படும் கடன்தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக, மத்திய அரசின் அறிக்கையொன்று கூறுகிறது. இந்த அறிக்கை, விவசாய முன்னேற்றத்திற்கும், விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும் எந்த அளவுக்குத் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், அரசின் விவசாயத் துறையும் முனைப்புடன் செயல்படுகின்றன என்பதை புள்ளிவிவரங்களுடன் விளக்க முற்பட்டிருக்கிறது.

ஒருபுறம், விவசாய உற்பத்தியில் பின்னடைவு, வளர்ச்சியில் தளர்ச்சி, விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி என்று செய்திகள் வந்துகொண்டிருக்கும் வேளையில், விவசாயத்துறைக்கு அளிக்கப்படும் நிதியுதவி, எதிர்பார்த்த இலக்கைவிட அதிகம் என்கிற செய்தி வியப்பை ஏற்படுத்துகிறது.

2006-2007 நிதியாண்டுக்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ. 1,75,000 கோடியைத் தாண்டி, மொத்த கடன்தொகை அளிப்பு மட்டும் ரூ. 2,03,269 கோடி கொடுக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், விவசாயக்கடன் நிவாரணத் திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு அதிக அளவு கடன் வழங்குவது என்றும், தனியார் deaths_suicides_india_farming_peasants.jpgகடன் சுமை மற்றும் விவசாய மூலதனமின்மையை அகற்றுவது என்றும் அரசு தீர்மானித்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில், நலிந்துவரும் விவசாயத்துறையை மீண்டும் புத்துயிர் பெற வைப்பது என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.

நடப்பாண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில், குறைந்தது 50 லட்சம் விவசாயிகளிடையே முறைப்படுத்தப்பட்ட வங்கிச்சேவையை அறிமுகப்படுத்துவது என்றும், ரூ. 2,25,000 கோடியை விவசாயக் கடனுக்காக ஒதுக்குவது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடன்தொகை வங்கிகள் மூலம் அளிக்கப்பட்டது என்றும், அதிக அளவில் விவசாயிகள் தனியாரிடம் கடன் வாங்கி விவசாயம் செய்வதைத் தவிர்த்து வங்கிகள் மூலம் தங்களது நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்டுகிறார்கள் என்றும், அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கான புள்ளிவிவரங்களும் தரப்படுகின்றன.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துவிட்டார்களா, விவசாயம் லாபகரமாக நடக்கிறதா, விவசாய உற்பத்தி அதிகரித்துவிட்டிருக்கிறதா என்று கேட்டால், அதைப்பற்றி இந்த அறிக்கையோ, புள்ளிவிவரங்களோ எதுவுமே பேசுவதில்லை. கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கைகளை வைத்துப்பார்த்தால், இத்தனை கோடி ரூபாய்கள் – ஒன்றா, more_deaths_dead.jpgஇரண்டா, பல லட்சம் கோடி ரூபாய்கள்-விவசாயத்துறைக்கும், விவசாயிகளுக்கும் தரப்பட்டும், கிராமங்களில் அதன் தாக்கம் காணப்படவில்லை என்பதுதான் உண்மை.

இன்னும் சொல்லப்போனால், இத்தனை லட்சம் கோடி ரூபாய்கள் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கிராமப்புறங்களிலுள்ள விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டதாகச் சொன்னாலும், விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன. கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறங்களுக்கு மக்களின் இடம்பெயர்தல் தொடர்கிறது. இதற்கு என்ன அர்த்தம்? ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அதிகம் படிக்காத அரைகுறைப் பாமரனுக்கு இதற்கான காரணம் தெரியும்.

இந்தியாவில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான விவசாயிகள் இரண்டு அல்லது மூன்று ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிட்டுதான் தங்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த விவசாயிகளில் பத்து சதவிகிதத்தினர்கூட வங்கிச்சேவையைப் பற்றித் தெரியாதவர்களாகவே இருந்து வருகிறார்கள். அப்படியே தெரிந்திருந்தாலும், தனியாரிடம் வாங்கிய கடனுக்குக் கட்டுப்பட்டு, அவர்களது பிடியிலிருந்து தப்பமுடியாமல் தவிப்பவர்களாக இருப்பவர்கள். வங்கிகளிலிருந்து இவ்வளவு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி அனுபவிப்பவர்கள் பெரிய நிலச்சுவான்தார்களே தவிர இதுபோன்ற ஏழை விவசாயிகள் அல்லர்.

எங்கே போயிற்று இத்தனை லட்சம் கோடி ரூபாய்களும் என்று ஆராய்ச்சி செய்வது கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேடும் வேலை. ஆட்சியாளர்களின் ஆராய்ச்சி தொடரும்வரை, ஏழை விவசாயிகளின் தற்கொலைகளும் தொடரும்.

—————————————————————————————————————————————————

விவசாயத்தில் ரசாயனங்கள் ஆதிக்கம்

இரா. மகாதேவன்

இயற்கை வேளாண் முறைகளை பெரும்பான்மையான விவசாயிகள் தவிர்த்து வருவதால் விவசாயத்தில் ரசாயனங்களின் ஆதிக்கம் தொடர்கிறது.

நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஏராளமான வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகும் உழவர்கள் வாங்கிய கூட்டுறவு வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டிய நிலையே நீடித்து வருகிறது.

விவசாயத்தையும், உழவர்களையும் முன்னேற்றுவதற்காக ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, மின்சாரம் போன்றவற்றுக்கு மானியம் அளித்தும் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தபாடில்லை.

நாடு முழுவதும் பரவலாக விவசாயிகளின் பட்டினிச் சாவுகள் தெரிந்தும், தெரியாமலும் நடந்துகொண்டே இருக்கின்றன.

இந்நிலைக்கு காரணங்கள் ஆராயப்பட்டு வந்தாலும், விவசாயம் உழவர்களுக்கு லாபகரமானதாக இல்லை என்பதும், நவீன விவசாய முறைகள் அவர்களை உயர்வுக்கு இட்டுச் செல்லவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மையாக விளங்கி வருகிறது.

இந்நிலையின்தான் விவசாயத்தை லாபகரமானதாகவும், கேடு இல்லாததாகவும் மாற்ற இயற்கை வேளாண் ஆர்வலர்கள் அதீத முயற்சி எடுத்து வருகின்றனர்.

விவசாயம் மனித வாழ்விற்கு அடிப்படையான உணவு உற்பத்தி மையம் என்ற நிலை மாறி, தற்போது சந்தைப் பொருளான பிறகு அதன் தன்மை என்ன என்பதையும், உணவு தானியங்களே மனித நோய்களின் தோற்றுவாய் என்ற நிலை எவ்வாறு உருவானது என்பதற்கும் இயற்கை வேளாண் ஆர்வலர்கள் பல காரணங்களைக் கூறுகின்றனர்.

இயற்கை உழவிற்கு முக்கிய அடிப்படையான கால்நடைகள் வளர்ப்பு பெருமளவில் குறைந்து, அவை இறைச்சிக்காக உற்பத்தி செய்யப்பட்டு, அழிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக ரசாயன உர உபயோகமும், பூச்சிக்கொல்லியின் பயன்பாடும் பல மடங்காக உயர்ந்துள்ளன.

உதாரணமாக, 1960-61 ஆம் ஆண்டு காலகட்டத்தில், வயல்களில் 5000 டன் ரசாயன உரம் இடப்பட்டது. இது 1998-99-ல் 13 லட்சம் டன்னாக (சுமார் 260 மடங்கு) உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய நிலையில் பயன்பாடு மேலும் உயர்ந்துகொண்டே உள்ளது.

ஆனால், ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளின் விலை உயர்ந்த அளவிற்கு விளைச்சலோ அல்லது விளைபொருள்களின் விலையோ உயரவில்லை என்பது நிதர்சனம்.

இயற்கை விவசாயத்திற்கான ஆய்வுகளுக்கும், இடுபொருள்களுக்கும் அரசின் முழுமையான உதவி தேவை என்கின்றனர் இயற்கை வேளாண் ஆர்வலர்கள்.

இயந்திரங்களும், ரசாயனங்களும் மக்களின் வேலைவாய்ப்பை பறித்துக் கொண்டதால் போதிய உணவு அல்லது சத்தான உணவு இல்லாமல் கோடிக்கணக்கான மக்கள் நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அயல் நாட்டு நிறுவனங்கள் மரபணு மாற்ற விதைகளைத் திணித்ததன் விளைவாக நம் நாட்டின் பாரம்பரிய விதைகள் வழக்கொழிந்து போய்விட்டன.

நவீன விவசாயத்தைக் கைவிட்டு, நிலைத்து நீடித்திருக்கவல்ல ஓர் உழவாண்மையை நாம் கையிலெடுக்க வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

கடுமையான, உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட அதேசமயம் நமது நாட்டில் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் பூச்சிமருந்துகளால் இன்று நாம் உண்ணும் ஒவ்வொரு உணவுப் பொருளும் எஞ்சிய நஞ்சின் மிச்சங்களால் நிறைந்திருக்கின்றன.

இந்த நஞ்சுகள் விதவிதமான புற்றுநோய்களையும், சிறுநீரகக் கோளாறுகளையும், பிறவி நோய்களையும், மூளை வளர்ச்சியற்ற குழந்தைகளையும் நடமாடச் செய்கின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.

இயற்கை வேளாண் ஆர்வலர்களின் கூற்றுப்படி, மூதாதையர்கள் கண்டறிந்த இயற்கை வேளாண் முறை மனிதர்கள், கால்நடைகள், பயிர்கள் ஆகிய 3 துறைகளிலும் மருந்தாகவும், வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுகிறது.

நோயில்லாத உலகை உருவாக்கவும், விவசாய முதலீடு லாபம் சார்ந்த தொழிலாக மாறவும் உழவர்கள் இயற்கை வேளாண் முறைகளுக்கு முழுமையாக மாற வேண்டும் என்பது இயற்கை வேளாண் ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

இதை உழவர்கள் முழுமையாக உணர்ந்து அந்நிலைக்கு மாற நீண்ட காலம் பிடிக்கலாம். அவர்களை இயற்கை வேளாண்மைக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

இயற்கை வேளாண் முறைகளைக் கடைப்பிடிக்கும் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு நில வரியை தள்ளுபடி செய்வது, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், ஊக்கிகளை விற்பனை செய்வதற்குப் பதிலாக மண்புழு உரம், இயற்கை பூச்சிவிரட்டிகள், ஊக்கிகளை விற்பனை செய்தல்.

சுயஉதவிக் குழுக்களுக்குப் பயிற்சியளித்து மக்கும் உரங்கள், மண்புழு உரங்கள் உள்ளிட்ட இயற்கை வேளாண் முறைகளுக்கான இடுபொருள்களை தயாரிக்க கடன் வழங்குதல்.

அவ்வாறான பொருள்களை வணிக நோக்கில் உற்பத்தி செய்து விற்க முனைவோருக்கு விற்பனை வரி உள்ளிட்டவற்றில் சலுகைகளை வழங்குதல்.

வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் கல்வியின்போது, கிராமங்களில் உதவித்தொகையுடன் சேவையாற்ற வேண்டும் என்ற முறையைக் கொண்டுவந்து, அவர்கள் மூலம் இயற்கை வேளாண் நுட்பங்களை உழவர்களிடம் கொண்டுசெல்லுதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரசு நேரடியாகவும், மறைமுகமாகவும் இயற்கை வேளாண் முறைகளை ஊக்குவித்து வந்த போதிலும், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், மரபணு மாற்ற விதைகளை அனுமதித்தல் உள்ளிட்டவற்றிலும் தீவிரம் காட்டுவதன் காரணம் தெரியவில்லை.

ரசாயனங்களால் கிடைக்கும் உடனடி பலன்களைப் போல், இயற்கை வேளாண் முறைகளில் கிடைப்பதில்லை என்ற சிலரின் தவறான பிரசாரமும் உழவர்களை இதன்பால் செல்ல யோசிக்க வைத்திருக்கிறது.

இவற்றையெல்லாம் கடந்து நோயில்லாத உலகை உருவாக்கவும், விவசாயம் லாபகரமானதாக மாறவும் அவற்றுக்கான மானியங்களை சுமந்து செல்வதிலிருந்து அரசு விடுபடவும் இயற்கை வேளாண் முறைகளே உதவும் என்ற ஆர்வலர்களின் கூற்றை அரசு கூர்ந்து கவனித்து ஆவன செய்ய வேண்டும்.

—————————————————————————————————————————————————-

தேவை புதியதொரு பார்வை!

எம். ரமேஷ்

ஏழை மக்களுக்கான மானிய உதவிகள் உரியவர்களைச் சென்றடையவில்லை. எனவே இதைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளது, ஏழைகள் வயிற்றில் நிச்சயம் புளியைக் கரைத்திருக்கும்.

இந்த ஆண்டு மானிய ஒதுக்கீடு ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் என நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ள நிலையில் பிரதமரின் இந்தப் பேச்சு, ஏழைகளுக்குப் பேரிடியாய் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

“”பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் அமல்படுத்தப்பட்ட மானியத் திட்டங்கள் உரிய பலனை அளிக்கவில்லை. மானியத் திட்டங்கள் தோல்வியடைந்துள்ளதை நமது முந்தைய அனுபவங்கள் உணர்த்துகின்றன. எனவே நாம் அத்தகைய மானியத் திட்டங்கள் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று பிரதமர் கூறியுள்ளதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள ஏழை எளிய மக்களுக்கானத் திட்டங்களில் மானியம் அளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் அத்தகைய மானியத் திட்டங்களால் எந்தப் பலனும் இல்லையென பிரதமர் கூறுவது அவர் மனத்தில் மற்றொரு திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளார் என்பதையே உணர்த்துகிறது.

அரசின் மிக மோசமான பொருளாதாரக் கொள்கைகளால்தான் மானியத் திட்டங்கள் தோல்வியடைந்தன என்பதை மறைக்க பிரதமர் முயல்கிறார். இதைக் கருத்தில் கொண்டே, மானியத் திட்டங்கள் பலன் தராததற்கு நிர்வாக முறைகளே காரணம் எனத் தவறாகப் பிரசாரம் செய்வதாகக் பொருளாதார நிபுணர்கள் கூறும் வாதத்தில் பொருள் இல்லாமல் இல்லை.

பிரதமர் மற்றும் நிதியமைச்சரின் இத்தகைய பிரசாரத்துக்கு, மானியத் திட்டங்களை மேலும் திறம்படச் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கம் காரணம் அல்ல. மாறாக ஏழைகள் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதியை மாற்றி பெரும் பணக்கார நிறுவனங்களுக்குச் சலுகைகள் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செயல்படுகின்றனரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோலியப் பொருள்களுக்கு அளிக்கும் மானியம் முழுவதையும் எக்ûஸஸ் வரி, “வாட்’ வரி என்று பல்வேறு வரிகளின் பெயர்களில் மத்திய அரசு திரும்ப வசூலித்துக் கொள்கிறது என்பதையும் பிரதமர் சுட்டிக் காட்டியுள்ளார். அந்த வகையில் ரூ. 1 லட்சம் கோடியில் அரசுக்கு வரியாகத் திரும்பக் கிடைக்கும் தொகை எவ்வளவு என்பதைத் தெரிவிக்க வேண்டிய கடமையும் பிரதமருக்கு உள்ளது.

நேரடி மானியம், மறைமுக மானியம், வர்த்தக மானியம், கொள்முதல் மானியம், நுகர்வு மானியம் என பல வகையில் மத்திய அரசு மானியம் அளிக்கிறது.

மானியத்துக்காக அரசு செலவிடும் தொகையில் 38 சதவீதம் உணவு, உரம் மற்றும் பெட்ரோலியப் பொருள்களுக்கே ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

உணவுக்கான மானியம் என்பது ரேஷனில் வழங்கப்படும் அரிசிக்கு அளிக்கப்படுவது, விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும்போது அளிப்பது ஆகியனவாகும்.

இது தவிர வேளாண்துறையை ஊக்குவிக்க உர மானியம் அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் பெட்ரோலியப் பொருள் நுகர்வு அதிகமாக உள்ளது. ஆனால் பெட்ரோலியப் பொருள்களைப் பொருத்தமட்டில் பெருமளவு இறக்குமதியைச் சார்ந்தே இருக்க வேண்டிய சூழ்நிலை நமக்கு. இதனால் மானியத்தில் 50 சதவீதத்துக்கு மேல் பெட்ரோலியப் பொருள்களுக்கு வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தாராளமயமாக்கல் அறிமுகம் ஆவதற்கு முன்னர் அதாவது 1990-91-ம் ஆண்டில் உணவுக்கான மானியம் ரூ. 2,450 கோடி மட்டுமே. தற்போது அது ரூ. 30 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது.

உரத்துக்கான மானியம் ரூ. 4,389 கோடியிலிருந்து படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ. 15 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டு ஏற்றுமதியாளர்களுக்கு மட்டும் சலுகையாக ரூ. 1,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

60 ஆண்டுகளான சுதந்திர இந்தியா சுபிட்சமாக இருக்கிறதா? இல்லை, நிச்சயமாக இல்லை. சுபிட்சமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இல்லை.

60 ஆண்டுக்கான மக்களாட்சிக்குப் பிறகும் ஏனிந்த நிலைமை?

1947-ல் இந்திய மக்களின் வாழ்க்கைத் தரம் எப்படியிருந்தது? 2007-ல் எப்படியிருக்கிறது? 60 ஆண்டுக்கால இடைவெளியில் பொருளாதார ரீதியாக மக்களின் வாழ்க்கைத் தரம் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது? நாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிய பங்கு போய்ச் சேர்ந்திருக்கிறதா? இல்லையெனில் அதற்குக் காரணம் என்ன? அது சேராததற்கு என்ன காரணம்? இடையில் என்ன நடந்தது என்கிற ரீதியில் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

பிரதமர் குறிப்பிடும் கலப்புப் பொருளாதாரம் பலன் தரவில்லை எனில் அது கலப்படப் பொருளாதாரம்தானே? ஏழைகளுக்கு அளிக்கும் மானியங்களைக் குறைத்து பெரும் நிறுவனங்களுக்குச் சலுகை அளிக்கும் “முதலாளித்துவ பொருளாதாரத்தை’ எப்படி ஏற்க முடியும்.

இந்த அரசுக்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால் லத்தீன் அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா முதலான நாடுகளைப் போல சுயசார்பான பொருளாதார வளர்ச்சிக்கு முயல வேண்டும். இதை ஆட்சியாளர்கள் உணர வேண்டிய தருணமிது.

மானியத்தைக் குறைக்க வேண்டும் என உலக வங்கி நிர்பந்திப்பதால், அரசுக்கு இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை, நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் வேளாண் துறைக்கு இன்னமும் மானியம் அளிக்கப்படுகிறது. ஆனால் அங்கு ஊக்கத் தொகை என்ற பெயரில் அது தொடர்கிறது.

நிர்பந்தம் தொடர்ந்தால், வெளிநாடுகளில் உள்ளதைப் போல ஊக்கத் தொகை என்ற பெயரில் மானிய உதவிகள் தொடர வேண்டும்.

அடித்தட்டு மக்களுக்கான மானிய உதவிகளையும், அவர்களின் மேம்பாட்டுக்கான ஊக்கத் தொகை என்ற பெயரில் தொடர்வதை யாரும் தடுக்க முடியாது.

உலக மக்கள் தொகையில் வறுமையில் வாடுவோரில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் உள்ளனர். இவர்களின் வறுமையை அகற்றாமல் தாராள பொருளாதாரமயம் என்ற போர்வையில் தொழிலதிபர்களுக்குச் சலுகை வழங்க முற்பட்டுவிட்டு, மானியத்தின் பலன் உரியவர்களைச் சென்றடையவில்லை என்று கூறும் பிரதமர், அரசின் உதவிகள் உரியவர்களைச் சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

——————————————————————————————————————
விவசாயக் கடன் யாருக்கு?

எஸ். கோபாலகிருஷ்ணன்

விவசாயிகளுக்கு வழங்கப்படும் வங்கிக் கடனுதவி, கடந்த மூன்று ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு கூறுகிறது. துல்லியமாகச் சொல்லவேண்டுமெனில், 2006 – 2007 நிதியாண்டில், நிர்ணயிக்கப்பட்ட விவசாயக் கடன் இலக்கு ரூ. 1,75,000 கோடி. ஆனால் அந்த ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடனுதவி ரூ. 2,03,269 கோடி என அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புதிய விவசாயக் கடன் நிவாரணத் திட்டம் ஒன்றை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அதிக அளவு வங்கிக்கடன் வழங்கப்படும் என்றும், அடுத்த மூன்று ஆண்டுகளில் வங்கிக்கடன் தொகையை இரண்டு மடங்காக உயர்த்துவதே இலக்கு என்றும் மத்திய அரசு தெரிவித்தது. இந்தத் திட்டத்தின் மூலம் நலிந்து வரும் விவசாயிகளுக்குப் புத்துயிர் ஊட்டுவதுதான் அரசின் நோக்கம் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில், விவசாயத்துறைக்கு வழங்கப்பட்ட வங்கிக்கடன் தொகை அரசு நிர்ணயித்திருந்த இலக்கையும் தாண்டிவிட்டது என்பது என்னவோ உண்மை. ஆனால், நலிந்து வரும் விவசாயத் துறை மீண்டும் புத்துயிர் பெற்றுவிட்டதா என்பதே கேள்வி. இந்தத் திட்டத்தின் பயனாக, விவசாயிகள் தனியார் கடன் தொல்லையிலிருந்து மீட்சி அடைந்து விட்டார்களா? விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளதா? கிராமப்புறங்களில் இருந்து வேலைதேடி நகர்ப்புறங்களுக்கு மக்கள் இடம்பெயர்தல் குறைந்துள்ளதா? “”இல்லை” என்பதே இந்தக் கேள்விகளுக்கான பதில். மாறாக, நாட்டின் சில பகுதிகளில், கடந்த காலங்களில் நிகழ்ந்த, விவசாயிகளின் தற்கொலைகள் இன்னமும் தொடர்கின்றன என்பதுதான் சோகம். பல லட்சம் கோடி ரூபாய்கள் விவசாயத்துறைக்கு வங்கிக் கடனாக வழங்கப்பட்ட பின்னரும், மேலே குறிப்பிட்ட எந்த ஒரு பயனும் கிடைக்காமல் போனதற்கு என்னதான் காரணம்?

இந்தியாவில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு இரண்டு அல்லது மூன்று ஏக்கர் விவசாய நிலமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததுதான். இவர்களில் பெரும்பாலானவர்கள் வங்கிகளில் நுழைந்ததுகூட இல்லை. இவர்கள் காலம் காலமாக அதிக வட்டிக்கு தனியாரிடமிருந்து கடன் வாங்கி நாள்களைக் கழித்துக்கொண்டு இருப்பவர்கள். அதுமட்டுமல்லாமல், வட்டிக்கடைக்காரர்களின் உடும்புப் பிடியிலிருந்து தப்புவது எப்படி என்று தெரியாமல் தவிக்கிறவர்கள்.

சமீபத்தில் வெளியாகியுள்ள பாரத ரிசர்வ் வங்கியின் மாதாந்திர செய்தி அறிக்கையில் காணப்படும் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இப்பிரச்னையின் மற்றோர் அம்சம் பளிச்சிடுகிறது.

1991-92ஆம் ஆண்டில், அதாவது பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அறிமுகமாவதற்கு முந்தைய ஆண்டில், ஒட்டுமொத்த வங்கிக்கடன் தொகையில் 15 சதவிகிதம் விவசாயத்துறைக்குக் கடனாகக் கிடைத்தது. ஆனால் 1999 – 2000 ஆம் ஆண்டில், வங்கிக் கடன்தொகையில், வெறும் 10 சதவிகிதம் மட்டுமே விவசாயத்துறைக்குக் கடனாகக் கிடைத்தது. பொருளாதாரச் சீர்திருத்தம் தொடங்கிய முதல் எட்டு ஆண்டுகளில் விவசாயக் கடன் அளவு 5 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தது. பெரிய தொழில்துறைக்கு வங்கிக்கடன் அதிகரித்தபோது, விவசாயக் கடன் சுருங்கியது. இந்த காலகட்டத்தில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறு விவசாயிகளின் புகலிடமாக இருந்தது தனியார் வட்டிக் கடைகளே.

2004 ஆம் ஆண்டில் விவசாயக் கடன் நிவாரணத் திட்டம் செயல்படுத்தப்பட்டதன் விளைவாக 2005 – 2006 ஆம் ஆண்டில் வங்கிக்கடனில் 11 சதவிகிதம் அளவுக்கு விவசாயக் கடன் அதிகரித்தது. அடுத்த ஆண்டுகளில் இது மேலும் உயர்ந்தது.

ஆக, விவசாயக் கடன் நிவாரணத் திட்டத்தின் கீழ், வங்கிக் கடனாக பல லட்சம் கோடி ரூபாய் வழங்கிய பின்னரும், அது சிறு விவசாயிகளது பிரச்னையின் விளிம்பைக் கூட தொட முடியவில்லை எனில், அந்தப் பணம் எங்கே போனது?

விவசாயக் கடன் திட்டத்தால் பயன் அடைந்திருப்பவர்கள், அதிக அளவில் நிலம் வைத்துள்ள பெரிய நிலச்சுவான்தார்களே அல்லாமல் ஏழை விவசாயிகள் அல்ல என்பது வெளிப்படை.

இந்நிலையில், உண்மையிலேயே சிறு விவசாயிகளை கைதூக்கிவிட வேண்டுமானால், கடன் திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதாது. நீண்டகாலமாக, தனியாரிடமிருந்து கடன் பெற்று, வட்டியைக்கூட செலுத்த முடியாமல், லேவா தேவிக்காரர்களின் பிடியில் சிக்கி இருக்கும் விவசாயிகளை முதலில் அவர்களிடமிருந்து விடுவிக்க வேண்டும்.

இந்த முயற்சியை சுயமாக மேற்கொள்ளும் நிலையில் விவசாயிகள் இல்லை. எனவே, இதற்கென சிறு விவசாயிகளிடையே ஒரு விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். வங்கிக்கடன் வாயிலாக, தனியார் கடனிலிருந்து விடுபட்டு, தங்கள் வாழ்க்கையை புதிய பாதையில் அமைத்துக்கொள்வதற்கான ஊக்கத்தையும், அதைச் செய்வது சாத்தியமே என்ற நம்பிக்கையையும் அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.

ஆக, வெறும் கடன் வழங்குவதோடு நின்றுவிடாமல், தேசிய வங்கிகள் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்கான சூழலையும், இதர உதவிகளையும், மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் வங்கிகளுக்கு வழங்க வேண்டும்.

சிறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்தொகை பயிர்க்கடனாக மட்டும் இல்லாமல் தனியார் கடனை அடைப்பதற்கும் போதுமானதாக இருத்தல் வேண்டும்.

விவசாயம் லாபகரமானதாக அமைவதற்கு ஏதுவாக, இடுபொருள்கள், சந்தை சார்ந்த தகவல்கள், சந்தைப்படுத்துதலில் உள்ள நெளிவு, சுளிவுகள் மற்றும் விலை நிலவரங்கள் ஆகிய விவசாயம் பற்றிய அனைத்து அம்சங்களிலும் அவர்களுக்குப் பயிற்சி அளித்து, விவசாயிகளின் மனநிலையிலும், செயல்முறைகளிலும் ஒரு புதிய உத்வேகத்தை வங்கிகள் உருவாக்க வேண்டும்.

இதைக் கருத்தில்கொண்டு, வெறும் கடன் வழங்கும் இயந்திரங்களாகச் செயல்படாமல் கிராமங்களிலும், குறிப்பாக விவசாயத்திலும், ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கும் உந்துசக்தியாக வங்கிகள் திகழ வேண்டும். இது எளிய காரியம் அல்ல.

கடந்த காலங்களில் சிறப்பாகச் செயல்பட்டு, நாளடைவில் நீர்த்துப் போய்விட்ட “விரிவாக்க சேவையை’ (உஷ்ற்ங்ய்ள்ண்ர்ய் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்) வங்கிகளில் விவசாயக் கடன் அதிகாரிகள் மற்றும் கள அலுவலர்கள், புதிய சூழலுக்கு ஏற்ப அளிக்க முன்வர வேண்டும்.

எப்படி அரசு மானியங்களின் பலன் உரியவர்களைச் சென்றடையாமல், வசதி படைத்தவர்களுக்குப் போய்ச் சேரும் நிலை திருத்தி அமைக்கப்பட வேண்டுமோ, அதுபோல், விவசாயக் கடன் சிறு விவசாயிகளுக்குப் போய்ச் சேராமல் பெரும் நிலச்சுவான்தாரர்களுக்கு மட்டுமே போய்ச் சேரும் நிலை உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டும்.

பல லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்ட பின்னரும், விவசாயிகளின் ஏழ்மை நீடிப்பதும், தற்கொலைகள் தொடருவதும் பொறுத்துக் கொள்ளக்கூடியது அல்ல.

எனவே, வழங்கப்படும் விவசாயக் கடன் தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டால் மட்டும் போதாது. அது சரியான நபர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கையில் இருள் நீங்கி, ஒளி பிறக்கும்படி செய்ய வேண்டும்.

பாரத ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் துணையுடன், தேசிய வங்கிகள் இதை ஒரு சவாலாக ஏற்று, கிராமப்புற மேம்பாட்டுப் பணியை, அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

——————————————————————————————————————

Posted in Agriculture, Artificial, Assets, Banking, Banks, BT, chemicals, Commerce, dead, Death, Economy, Farmers, Farming, Farmlands, Fertilizers, genes, Heritage, Inorganic, Labor, Land, Loans, Modern, Monsanto, Natural, organic, peasants, Suicide, Tariffs, Tax, Urea, Vidarba, Vidarbha, Vidharaba, Vidharaba Jan Andolan Samithi, Vidharabha, Vidharba, Vidharba Jana Andolan, Vidharbha, Vidhrabha, Villages, Vitharabha, Vitharba, Vitharbha | Leave a Comment »

Thanks to Nandhigram – Dinamani op-ed

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007

நந்திகிராமுக்கு நன்றி!

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்கிற பெயரில், ஏற்றுமதியை மட்டும் கருத்தில்கொண்டு தொடங்கப்படும் தொழிற்சாலைகளுக்கு சில சிறப்பு சலுகைகளை வழங்குவது என்கிற மத்திய வணிகம் மற்றும் தொழில்துறையின் முடிவுக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்புகள் இருந்து வந்தன. வரிச்சலுகை, குறைந்த கட்டணத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகள், தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமான தொழிலாளர் நலச் சட்டங்கள் என்று பல்வேறு சலுகைகளை இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அளிப்பது தேவைதானா என்கிற கேள்வி பரவலாகவே காணப்பட்டது.

ஏதாவது ஒரு குறிப்பிட்ட தொழில் சார்ந்த அத்தனை தொழிற்சாலைகளும் ஒரே இடத்தில் நிறுவப்படுகிற ஏற்பாடுதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். அதாவது, ஜவுளித்துறை சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களில், பஞ்சில் தொடங்கி ரெடிமேட் ஆடைகள் வரை ஜவுளி சம்பந்தப்பட்ட எல்லா தொழிற்சாலைகளும் இருக்கும். இதனால், மதிப்புக் கூட்டுவரியிலிருந்து விலக்குக் கிடைக்கும். வரி பளு மற்றும் போக்குவரத்துச் செலவு இல்லாமல் இருப்பதால் தயாரிக்கப்படும் பொருள்களின் விலை குறைவாக இருக்கும்.

சீனாவில் ஏற்றுமதியை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இந்தியாவில் வேறுவிதமாக உருவாக்கப்பட்டன. மொத்த நிலப்பரப்பில் நாற்பது சதவிகிதம் தொழிற்சாலைகளும், இருபது சதவிகிதம் சிறப்புப் பொருளாதார மண்டல ஊழியர்களின் வசதிக்காக அமைந்த வணிக வளாகங்களும் அமைவது பற்றி யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், மீதமுள்ள நாற்பது சதவிகித இடத்தில் அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டி விற்பனை செய்யும் திட்டம்தான் இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சந்தேகப்பட வைத்துவிட்டது.

தனிநபரின் விளைநிலங்களையும், பரம்பரை பரம்பரையாக இருந்துவந்த இடங்களையும் குறைந்தவிலைக்கு அரசு கையகப்படுத்தி, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் தனியாருக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? ஏற்றுமதியின் மூலம் அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பார்களே என்பதுகூட வருத்தமான விஷயமல்ல. அப்பாவி மக்களின் விளைநிலங்களைக் குறைந்தவிலைக்கு வாங்கி, அடுக்குமாடி வீடுகள் கட்டி அதில் கொள்ளை லாபம் அடிக்க விரும்புகிறார்களே என்பதுதான் எதிர்ப்புக்கான அடிப்படைக் காரணம்.

மேற்கு வங்கம் நந்திகிராமில் நடந்த கலவரமும் துப்பாக்கிச் சூடும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பற்றி அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியின் விளைவாக, ஒரு கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் உறுப்பினர்கள் இப்போது சில பரிந்துரைகளையும் செய்திருக்கின்றனர்.

அதன்படி, முன்பு திட்டமிட்டதுபோல வளர்ச்சித்துறை இயக்குநரின் முழுப்பொறுப்பில் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கும் என்றாலும், தொழிலாளர் நலச் சட்டங்களைப் பொருத்தவரை மாநில அரசின் தொழிலாளர் துறையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மட்டும்தான் எதையும் செய்ய முடியும்.

நாடாளுமன்றக் கமிட்டியின் இன்னொரு பரிந்துரை உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பல்வேறு உயர் நீதிமன்றங்களில் சுமார் 1,254 சிறுதொழில்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுமார் எழுபது அரசு நிறுவனங்கள் பல்வேறு பிரச்னைகளால் மூடிக் கிடக்கின்றன. செயல்படாத பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும் இடங்களையும், தொழிற்பேட்டைகளையும் சிறப்புப் பொருளாதார மண்டலமாக மாற்றுவது குறித்துப் பரிசீலனை செய்ய விழைகிறது நாடாளுமன்றக் கமிட்டியின் பரிந்துரை.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு இடமும் கிடைத்துவிட்டது. தொழிலாளர் நலச் சட்டங்களில் எந்தவித மாற்றங்களையும் செய்ய வேண்டாம். நந்திகிராமில் தங்களது உரிமைக்காகப் போராடியதன் விளைவுதான் இப்போது இந்தப் பிரச்னைக்கு நல்லதொரு முடிவைத் தந்திருக்கிறது. நிச்சயமாக, நன்றி நந்திகிராமத்து ஏழை விவசாயிகளுக்குத்தான்!

————————————————————————————————————————————-

முரண்பாடு தேவையில்லை


சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பொருத்தவரை, மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிலைப்பாட்டை, காங்கிரஸ் கட்சியிலேயே பலர் ஆதரிக்கத் தயாராக இல்லை என்பது தெரிகிறது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் கோவா மாநிலத்தின் தற்போதைய முதல்வரான திகம்பர் காமத், முந்தைய பிரதாப் சிங் ரானே தலைமையிலான காங்கிரஸ் அரசு அனுமதி அளித்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களைக் கலைப்பது என்று முடிவெடுத்திருப்பது அதைத் தெளிவுபடுத்துகிறது.

கோவா மாநிலத்தில் 15 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டு, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் ஒத்துழைப்புடன் மூன்று மண்டலங்களில் பணிகளும் தொடங்கிவிட்டன. சுமார் 500 கோடி ரூபாய் மூலதனம் வர இருப்பதாக சம்பந்தப்பட்டவர்கள் கூறுகின்றனர். 12 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசின் அனுமதி இன்னும் பெறப்படவில்லை என்றாலும் இடம் ஒதுக்கப்பட்டு விட்டது.

ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம், மருந்து தயாரிப்புக்காக உருவாக்கப்படுகிறது. இந்த மண்டலத்தில் சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளுக்கான அதிநவீன இயந்திரங்களையும் இறக்குமதி செய்து விட்டோம் என்று பரிதாபக் குரல் கொடுக்கின்றன. சட்டப்படி, அனுமதி பெற்ற மூன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும் நிராகரிக்கும் உரிமை மாநில அரசுக்குக் கிடையாது என்கிறார்கள் இந்த உரிமையாளர்கள்.

மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், கோவா என்று பல மாநிலங்களில் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் பொதுமக்களே போர்க்கொடி தூக்குகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. பெரிய அளவில் தனியாரிடம் இடங்களை வாங்கி இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவது என்பது இயலாத விஷயம். காரணம், ஒரே இடத்தில் 1000 ஏக்கர் இடம் கிடைப்பதில்லை. இந்த விஷயத்தில் அரசின் தலையீடு நிச்சயம் தேவைப்படுகிறது.

அதேநேரத்தில், தனியார் லாபம் சம்பாதிக்க ஏழை விவசாயிகள் தங்களது வாழ்வாதாரங்களை ஏன் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. அதுமட்டுமல்ல, இதற்கு ஏன் நிலத்தைக் குறைந்த விலைக்கு அரசு கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இல்லாமல், சிறப்புச் சலுகைகள் பெறாமல், இந்தத் தயாரிப்பாளர்கள் ஏன் உலகச் சந்தையில் போட்டிபோட முடியாது என்கிற கேள்விக்கும் அவர்கள் தரப்பில் சரியான பதில் தரப்படுவதில்லை. சீனாவுடன் போட்டி போட வேண்டும் என்று பயமுறுத்துகிறார்களே தவிர அதற்குச் சரியான காரணங்கள் தருவதில்லை.

போதிய மகசூல் தராத விளைநிலங்களும், தண்ணீர் இல்லாத விவசாய நிலங்களும் தொழில் மண்டலங்களாக மாறுவது தவறு என்று சொல்லிவிட முடியாது. நமது உணவு உற்பத்தி பாதிக்கப்படாத வரையில், தன்னிறைவுக்குப் பங்கம் ஏற்படாதவகையில் இந்த விவசாயத்திற்குப் பயன்படாத நிலங்கள் தொழில் மண்டலங்களாகவோ, அறுபதுகளில் செய்ததுபோலத் தொழிற்பேட்டைகளாகவோ மாற்றப்படுவதில் தவறில்லை. ஆனால், அந்தத் தொழில் மண்டலங்கள் தனியாருடையதாக இல்லாமல், அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதும், அதில் தங்களது வாழ்வாதாரங்களை இழந்த நிலத்தின் சொந்தக்காரர்களுக்கும், அந்த நிலத்தை நம்பி வாழ்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் அங்கே நிறுவப்படும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிப்பது அரசின் கடமை.

தெளிவான கொள்கையோ, தொலைநோக்குப் பார்வையோ இல்லாத நிலைமை, சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பொருத்தவரை தொடர்வது நல்லதல்ல. ஆளும் கூட்டணிக்குள்ளும், காங்கிரஸ் கட்சிக்குள்ளும் காணப்படும் முரண்பாடும், தெளிவின்மையும் மக்கள் மத்தியில் குழப்பத்தையும், தேவையற்ற பயத்தையும் ஏற்படுத்துவதுதான் மிச்சம். தொழில் வளமும், பொருளாதார முன்னேற்றமும் அடிப்படை இந்தியனின் வயிற்றில் அடிப்பதாக அமைந்தால் அதனால் என்ன பயன்?

சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பொருத்தவரை, தேவை தெளிவும், தொலைநோக்குப் பார்வையும், மக்களின் உணர்வுகளை மதிக்கும் மனோபாவமும். அரசிடம் இவை காணப்படவில்லை என்பதற்கு உதாரணம்தான் கோவாவில் ஏற்பட்டிருக்கும் குழப்பம்!

Posted in Agriculture, Assets, Bengal, China, Clothes, Commerce, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Concessions, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Economy, Employment, Exports, Farmer, Farmers, Farming, Garments, Goa, HR, Industry, IT, Jobs, Knit, Knitwear, Land, maharashtra, Mamta, Mamtha, Manufacturing, Nandhigram, Nandigram, Nanthigram, Op-Ed, peasant, peasants, Property, Resources, Sale, Sector, SEZ, States, Tariffs, Tax, Textiles, VAT, WB, workers | Leave a Comment »

The Forward Bloc-controlled agriculture marketing board proposes to do what Reliance would have done

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

ரிலையன்ஸ் வேலையை செய்கிறது பார்வர்டு பிளாக்

கோல்கட்டா :

ரிலையன்ஸ் சில்லரை கடைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த, ஆளும் இடதுசாரி கூட்டணியில் உள்ள பார்வர்டு பிளாக் கட்சி, “ரிலையன்ஸ் கடை’ போல, அமைக்க திட்டமிட்டுள்ளது.

நேரடி கொள்முதல் :

மேற்கு வங்க மாநிலத்தில், விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்து காய்கறி முதல் கம்ப் யூட்டர் வரை விற்க, சில்லரை கடைகளை அமைக்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அதற்கு அரசு அனுமதிக்க தயாராக இருந்தும், ஆளும் கூட்டணியில் உள்ள பார்வர்டு பிளாக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

“ரிலையன்ஸ் நிறுவனம், அமைப் பது போல நாங்களே கடைகளை அமைக்க தயார். அரசு எங்களுக்கு அனுமதிக்க வேண்டும்’ என்று, முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு வேண்டுகோள் விடுத்தது. அரசும் இதற்கு பச்சைக்கொடி காட்டி உள்ளது.

பார்வர்டு பிளாக் கட்டுப்பாட்டில் உள்ள, “விவசாய மார்க்கெட்டிங் போர்டு’ இதற்கான ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

போர்டின் தலைவர் நரேன் சாட்டர்ஜி கூறுகையில், “விவசாயிகளிடம் இருந்து அரிசி, கோதுமை உட்பட உணவுப்பொருட்களை கொள்முதல் செய்து, அவர்களுக்கு நல்ல விலை தரவும், நியாயமான விலையில் மக்களிடம் விற்கவும் போர்டு திட்டமிட்டு வருகிறது. இந்த திட்டத்துக்காக, முதல்வரிடம் 100 கோடி ரூபாய் உதவித்தொகை கேட்டுள்ளோம்’ என்றார்.

இதுகுறித்து உணவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், “வடக்கு மாவட்டம், ஹால்திபாரியில், வடக்கு 24 பர்கானா ஆகிய பகுதிகளில், முதல் கட்டமாக, பார்வர்டு பிளாக் போர்டு, கடைகளை ஆரம் பிக்கும். ஹால்திபாரியில், தக்காளி, மிளகாய் விளைச்சல் அதிகம். அதனால், அவற்றை வாங்கி, மொத்த விலையில் விற்க நடவடிக்கை எடுக்கும்’ என்று கூறினர்.

“ரிலையன்ஸ் கடைகளை ஆரம்பிக்கப்படுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். தொழில் செய்ய எந்த கம்பெனிக்கும் தடை விதிக்க முடியாது. விவசாயிகளிடம் இருந்து பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்யவும் முடியும். ஆனால், விவசாய கொள்முதல் சட்டத்தை பொறுத்தவரை, விவசாய மார்க்கெட்டிங் போர்டு நேரடியாக கொள்முதல் செய்ய முடியாது. அதனால் தான், விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய சில தன்னார்வ அமைப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளோம்’ என்றும் சாட்டர்ஜி கூறினார்.

தன்னார்வ அமைப்புகள் மூலம், ரிலையன்ஸ் கடைகள் போல கடைகளை உருவாக்கும் பார்வர்டு பிளாக் திட்டத்துக்கு முதல்வர் புத்ததேவ் பச்சைக்கொடி காட்டினாலும், விவசாயிகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Posted in agri-marketing, Agriculture, Bengal, Biz, Business, Center, Commerce, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Direct, Economy, Farmers, Forward Bloc, Fresh, Govt, Haldibari, infrastructure, job, Jobs, Marketing, Middlemen, Parganas, peasants, Purchases, Purchasing, Reliance, Shop, Shops, Small Biz, State, Vendors, Wal-Mart, Walmart, WB, West Bengal, WestBengal, workers | Leave a Comment »

PMK Ramadoss to lead protest against NLC land acquisition

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

கேள்விக்குறியாகும் என்.எல்.சி.யின் எதிர்காலம்

என்.முருகவேல்

நெய்வேலி, அக். 16: பல தேசியத் தலைவர்களின் தொலைநோக்குப்பார்வையாலும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடின உழைப்பாலும் உருவாக்கப்பட்ட என்.எல்.சி. நிறுவனம் தற்போது பழுப்பு நிலக்கரி தோண்டி எடுப்பதற்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்னையால் தொடர்ந்து செயல்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

சுதந்திர இந்தியாவில் தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் என்.எல்.சி.யும் ஒன்று. 1957-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந் நிறுவனம் ஒரு சுரங்கத்தையும், ஒரு மின் நிலையத்தையும் கொண்டு 600 மெகாவாட் மின்னுற்பத்தியுடன் செயல்படத் துவங்கி, இன்று சுரங்கம் 1ஏ, 2-ம் சுரங்கம், முதல் அனல்மின் நிலைய விரிவாக்கம், 2-ம் அனல்மின் நிலையம் என வளர்ந்து, தற்போது 2,500 மெகாவாட் மின்னுற்பத்தி செய்து தென் மாநிலங்களுக்கு விநியோகம் செய்துவருகிறது.

இதுதவிர ராஜஸ்தான், ஒரிசா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 45 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கியுள்ளது. இதில் சுமார் 25 ஆயிரம் பேர் படிப்படியாக ஓய்வு பெற்றுள்ளனர். இவர்கள் தவிர சுமார் 10 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர்.

கடந்த ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை அழைத்து தனது பொன்விழா ஆண்டை சிறப்பாகக் கொண்டாடி, ஊழியர்களுக்கு பொன்விழா ஆண்டு வெகுமதியையும் அளித்தது. இவ்விழாவின் போது, நெய்வேலியில் ரூ.4,200 கோடி செலவில் அமையவுள்ள 2-ம் சுரங்க விரிவாக்கம் மற்றும் 2-ம் அனல்மின் நிலையம் விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றார்.

2-ம் அனல்மின் நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அதன் கட்டுமானப் பணிகள் 50 சதம் முடிந்துள்ளது. அதேநேரத்தில் 2-ம் சுரங்கம் விரிவாக்கத்துக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கப்பட்டு, அதன் இயந்திரக் கட்டுமானப் பணிகளும் வேகமாக நடைபெறுகின்றன.

இதனிடையே சுரங்கம் தோண்டுவதற்கான நிலத்தை கையகப்படுத்துவதில் தற்போது பிரச்னை எழுந்துள்ளது. முதல் சுரங்கத்துக்குத் தேவையான 250 ஏக்கர் நிலங்கள் கெங்கைகொண்டான் பகுதியில் அளவீடு செய்து, சம்பந்தப்பட்ட நில உரிமைதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும், மாற்றுக் குடியிருப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் அப்பகுதியிலிருந்து காலிசெய்ய மறுக்கின்றனர். இன்னும் 6 மாதத்துக்குள் இப்பகுதியை கையகப்படுத்தவில்லையெனில் முதல் சுரங்கத்தில் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் பணி தடைபட நேரிடும்.

இதேபோன்று சுரங்கம் 2-ம் மற்றும் 2-ம் சுரங்க விரிவாக்கத்துக்காக வளையமாதேவி, கீழ்பாதி, மேல்பாதி, கோட்டகம், கோ.ஆதனூர், கம்மாபுரம், சாத்தப்பாடி உள்ளிட்ட 69 கிராமங்களில் இருந்து சுமார் 25,000 ஏக்கர் நிலங்களை அளவீடு செய்து, இவற்றில் ஒரு சிலருக்கு இழப்பீட்டுத் தொகையை என்.எல்.சி. வழங்கியுள்ளது.

இந்நிலையில் சுரங்க விரிவாக்கத்துக்கு அளவீடு செய்யப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நில உரிமைதாரர்கள் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும், மேலும் பல நிவாரண உதவிகளை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதுதொடர்பாக பல்வேறு போராட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கண்ட பகுதியில் நிலத்தை கையகப்படுத்தினால் ஒரு ஏக்கருக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவேண்டும் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தவுள்ளனர். இதனால் 2-ம் சுரங்க விரிவாக்கப் பணியின் தொடக்கம் தடைபட்டுள்ளது.

இதனிடையே நிறுவன தலைவர் எஸ்.ஜெயராமன், நிறுவன அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளை வெள்ளிக்கிழமை சந்தித்து, நிறுவனத்தின் தற்போதைய நிலைமையை விளக்கியுள்ளார். இதனால் தொழிற்சங்கத் தலைவர்கள் சற்று அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இன்னும் 6 மாதத்திற்குள் சுரங்கத்துக்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்தவில்லை எனில் நிறுவனம் தொடர்ந்து செயல்படுவது கடினம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல் படி தான் இழப்பீடு வழங்கமுடியும், நிர்வாகமாக எதையும் செய்ய இயலாது. தற்போது கையகப்படுத்தவுள்ள நிலங்களுக்கு கோரப்படும் இழப்பீட்டுத் தொகையை கொடுத்து பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்க இயலாது.

மேலும் நிறுவனத்தை முன்னிறுத்தித்தான் சுற்றுப்புற கிராம நிலங்களின் மதிப்பு உயர்ந்துள்ளது. இன்றைய போட்டி உலகில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே கையகப்படுத்தும் நிலங்களுக்குத் தேவையான இழப்பீட்டுத் தொகையை உயர்த்த மத்திய அரசைத்தான் வலியுறுத்த வேண்டும்

“”மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டண விகிதப்படி தான் நாம் மின்சாரத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிலையில் உள்ளோம். அதற்கேற்றபடி தான் இழப்பீடு, நிவாரண உதவிகள் வழங்க முடியும். எனவே நிறுவன நிலையைக் கருத்தில் கொண்டு செயல்படுங்கள். கடந்த காலாண்டில் நிறுவனத்தின் லாபம் சொற்ப அளவைத் தான் எட்டியுள்ளது” என்றும் கோடிட்டு காட்டியிருக்கிறார்.

இதற்கு தொழிற்சங்கத் தலைவர்களும் சில சந்தேகங்களையும் எழுப்பத் தவறவில்லை. நிறுவனத்தின் நிலையை நிறுவனத் தலைவரே வெளிப்படையாக அதிகாரிகளிடமும், தொழிற்சங்க நிர்வாகிகளிடமும் பகிர்ந்து கொண்டிருப்பது நிறுவன வரலாற்றில் இதுதான் முதல்முறை.

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக கடந்த காலங்களில் பல பிரச்னைகளை நிர்வாகம் கையாண்டிருந்தாலும், இன்றைய சூழலில் அரசியல் கட்சிகளை சமாளிப்பதில் நிறுவனத்தின் தற்போதைய உயரதிகாரிகளுக்கு போதிய அனுபவம் இல்லை என்றே சொல்லலாம்.

கடந்த காலங்களில் நிலங்களை கையகப்படுத்தும் போது, நில உரிமைதாரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு என்.எல்.சி. மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் கிராமங்களில் உள்ள மக்களின் குறைகளை அறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய மறைமுக தொடர்பாளர் ஒருவரை நியமித்து அதன்மூலம் பல்வேறு உதவிகளையும் மாற்றுக் குடியிருப்பையும் என்.எல்.சி. செய்துவந்ததால் இந்த அளவுக்கு எதிர்ப்பு எழவில்லை.

ஆனால் தற்போது வேலைவாய்ப்பு கிடையாது, அப்படியே வழங்கப்பட்டாலும், மிகுந்த சிரமத்திற்கு இடையே ஒப்பந்தப் பணி மட்டுமே வழங்கப்படுகிறது. சுற்றுப்புற மேம்பாட்டுக்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதன்மூலம் சாலை, குடிநீர் வசதி, பள்ளிக் கட்டட வசதி செய்து கொடுத்தாலும், அவை முழுமையாக பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடையவில்லை.

பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால், தற்போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தித் தரவேண்டும், என்.எல்.சி. மருத்துவமனையில் இலவச மருத்துவ வசதி செய்து தரவேண்டும் என்பது போன்ற அடிப்படை வசதிகளே கிராம மக்களின் பிரதான எதிர்பார்ப்பு.

கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடும், மாற்றுக்குடியிருப்பும் வழங்கியாயிற்று, அதன் பின்னர் அவர்கள் யாரோ நாம் யாரோ என்ற எண்ணம் உதித்ததன் விளைவுதான் இன்று நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்.

இந் நிறுவனத்தை நிர்வகித்து ஓய்வுபெற்ற அதிகாரிகளும், ஊழியர்களும் சுற்றுப்புற கிராம மக்களை அனுசரித்து, அவர்களின் தேவைகளை அறிந்து பூர்த்திசெய்து, நிறுவனத்தை பொன்விழா ஆண்டு கொண்டாடும் நிலைக்கு உயர்த்தி வந்துள்ளனர்.

அடுத்து இந்நிறுவனம் வைரவிழா ஆண்டையும் கொண்டாட வேண்டும் எனில், நிலம் கையகப்படுத்துதலில் நிர்வாகம் கடந்த காலங்களில் கையாண்ட உத்திகளை மீண்டும் தொடர வேண்டும். காலத்திற்கேற்ப எவ்வாறு தொழில் துறையில் மாற்றம் ஏற்படுகிறதோ அதற்கு ஏற்றாற்போல் நிலம் கையகப்படுத்தும்போது நில உரிமைதாரர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகளையும் இன்றைய காலத்திற்கேற்ப மாற்றிக்கொண்டு செயல்பட நிர்வாகம் முன்வரவேண்டும்.

நிர்வாகத் திறன் படைத்தவர்கள் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டுமே தவிர அவற்றிலிருந்து விலகிச் செல்ல முற்படுவது அழகல்ல. தமிழகம் மட்டுமன்றி, தென் மாநிலங்களுக்கும் ஒளி வழங்கும் என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலப் பிரச்னை ஒரு கேள்விக்குறியாக இருந்து விடக்கூடாது. இந் நிறுவனத்தை நம்பி இன்று ஒரு லட்சம் பேர் வாழ்கின்றனர். நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக மாநில அரசும், மத்திய அரசும் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு சரியான வழிகாட்டவேண்டும்.

அதேநேரத்தில் சுமார் 19,000 நிரந்தர ஊழியர்கள் மற்றும் 10,000 ஒப்பந்தத் தொழிலாளர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு நிறுவனத்துக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கவேண்டும் என்பதே பொதுநலத்தில் அக்கறை கொண்டவர்களின் எதிர்பார்ப்பு.

———————————————————————————————————————————

நிலத்திற்கு நிலம்!

கே.எஸ். அழகிரி

அரசின் பொது நோக்கங்களுக்காகவும், தனியார் துறையின் தொழிலியல் நோக்கங்களுக்காகவும், அரசு மூலம் நிலங்களைக் கையகப்படுத்தும் நிகழ்வு, சமீபகாலங்களில் பெரும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறது. மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமத்தில் ஏற்பட்ட எதிர்ப்புணர்வானது, போராட்ட குணம் நிறைந்த இடதுசாரிகளையே திகைக்க வைத்துள்ளது.

விவசாயியைப் பொருத்தவரை, நிலம் என்பது அவனுடைய உயிருக்கும் மேலானது. சொத்துடமையின் சின்னமே நிலம்தான். சமூகத்தின் மரியாதை, அவனுக்குள்ள நில உடமையை வைத்தே இன்னும் கிராமங்களில் அளவிடப்படுகிறது.

ஒரு விவசாயி தன்னுடைய சொத்துகளை விற்கவேண்டிய நிலை வரும்போது நிலத்தைத் தவிர பிற சொத்துகளை விற்கவே விருப்பப்படுகிறான்.

நிலத்தை இழந்து விட்டால் தன்னுடைய இருப்பையே இழந்துவிட்ட உணர்வு விவசாயிக்கு ஏற்படுகிறது. எனவே நிலங்களைக் கையகப்படுத்தும்போது, அரசுகள் மிகுந்த மனிதாபிமான உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.

கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் தொழிலதிபர்களுக்காக, தனக்கிருக்கிற ஒரே ஆதாரமான நிலத்தையும் தனது குடிசையையும் இழந்து எவ்வாறு வாழ்வது என்ற கவலை விவசாயியை நிலைகுலையச் செய்து விடுகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். ஓர் ஆக்கத்திற்காக ஓர் இருப்பை அழித்துவிடக் கூடாது.

ஆலைகளுக்காக நிலங்களைக் கையகப்படுத்துதல் கூடாது எனில், நாம் மீண்டும் களப்பிரர்களின் இருண்ட காலத்திற்குத்தான் செல்ல வேண்டி வரும். இதற்கான மாற்று வழிதான் என்ன? நிலத்திற்குப் பதில் நிலம்!

1957-ல் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் எடுத்தபோது, ஏக்கருக்கு ரூ. 250 முதல் ரூ. 500 வரை ஈட்டுத்தொகையும், குடும்பத்திற்கு 10 சென்ட் வீட்டுமனையும், அதுபோக, குடும்பத்திற்கு இரண்டரை ஏக்கர் மாற்று நிலமும் கூரைப்பேட்டை, மெகாசா பரூர், பூவனூர் போன்ற இடங்களில் கொடுத்தனர். இன்று அந்த நிலங்கள் ஏக்கர் 10 லட்சம்வரை விலைபோகின்றன. எனவே அப்போது நிலம் கொடுத்த விவசாயிகள் இன்று வசதியாக வாழ்கின்றனர்.

ஆனால் இரண்டாம் சுரங்கம் தோண்டும்போது கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு புன்செய் நிலத்துக்கு ரூ. 3000-மும் நன்செய் நிலத்துக்கு ரூ. 7000-மும் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டன. இந்தத் தொகை போதுமானதல்ல என்று கங்கைகொண்டான் ராமசாமி நாயுடு, ஊமங்கலம் ரங்கசாமி ரெட்டியார் ஆகியோர் நிதிமன்றம் சென்று ஏக்கருக்கு ரூ. 60 ஆயிரம் ஈட்டுத்தொகை கோரி தீர்ப்பு பெற்றனர்.

ஆனால் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் உயர் நீதிமன்றம் சென்று ரூ. 60 ஆயிரத்துக்குப் பதில் ரூ. 30 ஆயிரம் என்று குறைத்து ஒரு தீர்ப்பைப் பெற்றுவிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல அந்தப் பகுதி விவசாயிகளின் ஏழ்மைநிலை இடம் தரவில்லை. மேலும் அப்போது அவர்களுக்கு விழிப்புணர்வோ, போராட்டக்குணமோ இல்லை.

அதன் பிறகு, மறைந்த நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி இரண்டாம் சுரங்கத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் வாழ்க்கைநிலை குறித்து ஆய்வு நடத்தியபோது அச்சமூட்டும் உண்மை வெளிப்படத் தொடங்கியது. நிலம்கொடுத்தவர்களில் 90 சதவிகிதத்தினர் கூலித்தொழிலாளிகளாக மாறியுள்ளது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தமிழக, தேசிய விவசாயிகள், தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர் நெய்வேலி ஜான் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், பொதுவுடமைக் கட்சிகளின் தலைவர்கள் விவசாயிகளின் பிரச்னைகளுக்காகப் போராடி வருகின்றனர். ஊருக்கெல்லாம் ஒளிகொடுக்க நிலம் கொடுத்தவர்களின் வாழ்வு இருண்டுபோகக் காரணம் திட்டமிடலில் உள்ள குறைபாடா, மனசாட்சியற்ற அதிகாரவர்க்கமா என மக்கள் மன்றம் தீர்மானிக்க வேண்டும்.

நெய்வேலி விவசாயிகளின் பிரச்னையை 1996-ல் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் எழுப்பினேன். பிரச்னையின் பரிமாணத்தை முதல்வர் கருணாநிதி புரிந்துகொண்டு என்னையும், விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினர் குழந்தை தமிழரசனையும் கொண்ட ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்தார். உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஈட்டுத்தொகையை ரூ. 70 ஆயிரமாக அறிவித்து, விவசாயிகளை இன்ப அதிர்ச்சியில் திளைக்க வைத்தார்.

மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் காந்திசிங்கை சென்னைக்கு வரவழைத்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்து, மூன்று மாதத்தில் விவசாயிகளுக்கு பணத்தையும் வழங்கச் செய்தார். அரசுகளின் ஆமைவேக நடைமுறைகளில் மாறுபட்ட இந்த துரித செயல், மாபெரும் புரட்சியாக அன்று விவசாயிகளால் கருதப்பட்டது.

ஆயினும்கூட, இந்தப் பணத்தைக் கொண்டு விவசாயிகளால் அன்றைய நிலையில் மாற்று நிலங்களை வாங்க முடியவில்லை.

ஆலைகளுக்கு நிலம் கையகப்படுத்தும்போது ஈட்டுத்தொகையாக மாற்று நிலங்களைக் கொடுத்து, ஒரு புதிய குடியிருப்பை உருவாக்கித் தருவதே விவசாயக் குடும்பங்களைக் காக்கும் நல்வழியாகும். திட்டச் செலவோடு இந்தச் செலவையும் இணைத்தே, திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும்.

நிலத்திற்கு இணையாக மாற்று நிலம் வழங்க முடியாத சூழ்நிலையில், தற்போது வழங்குவதுபோல் பத்து மடங்கு வழங்குதல் வேண்டும்.

பொதுவாகவே ஒரு நிலத்தை விற்கும் போது மாவடை மரவடை என்று பத்திரத்தில் சேர்த்து எழுதுவார்கள். நிலத்தின் மதிப்பு வேறு. நிலத்தில் உள்ள மதிப்புமிக்க மரங்களின் விலை தனி. எனவே நிலத்தில் உள்ள மாவடை மரவடைக்குத் தனியாக விலை தருதல் வேண்டும். அந்தவகையில், நெய்வேலியில் நிலங்களுக்கு அடியில் உள்ள பழுப்பு நிலக்கரிக்கும் ஏதாவது ஒரு விலையை நில உடமையாளர்களுக்கு வழங்குதல் வேண்டும்.

விவசாயிகளின் குடும்பங்களில் படித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அப்படி படித்தவர்களிலும் 10-ம் வகுப்பைத் தாண்டியவர்களின் எண்ணிக்கை அதைவிடவும் குறைவு. எனவே நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு வேலை அளிக்க வேண்டும். வேலைபெறத் தகுதியற்ற குடும்பங்களுக்கு ஓர் ஈட்டுத்தொகையை நிலத்தின் விலையோடு சேர்த்து வழங்குதல் வேண்டும். படிப்பறிவற்ற குடும்பங்களை விட்டுவிடக் கூடாது.

இவ்வளவு நிபந்தனைகளை விதித்தால் தொழில் வளருமா என்ற கேள்வி எழுவது இயல்புதான். தொழில்வளர்ச்சி தேசத்தின் வளர்ச்சி; தேசத்தின் வளர்ச்சிக்காக தங்களது சொத்தை அளித்தவர்களும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் இந்தக் கோரிக்கைகளின் மையக்கரு ஆகும்.

அணைகள் கட்ட நிலம் கொடுத்த பழங்குடி விவசாயிகள் – அனல்மின் நிலையம் கட்ட, சுரங்கம் வெட்ட, தொழிற்சாலைகள் அமைக்க நிலம் கொடுத்த விவசாயக் குடும்பங்கள் அனைத்துமே, குடும்ப அமைப்பு சிதைந்து – புலம் பெயர்ந்த நாடோடிக் குடும்பங்களாக மாறியுள்ள அவலம்தான் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன.

இந்த நிலையை மாற்ற தமிழக முதல்வர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பல்வேறு துறைகளில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. நாடு முழுவதும் முக்கியப் பிரச்னையாக உருவாகிவரும் “நிலம் கையகப்படுத்துதலை’ விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் மேற்கொள்ள வழிவகை காண வேண்டும்.

(கட்டுரையாளர்: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்)

Posted in acquisition, Agriculture, Anbumani, arbitrary, Arbitration, Asset, Ban, Bengal, Coal, Commerce, Compensation, Deplete, Depletion, Economy, Electricity, Employment, Farmer, Fight, Govt, Industry, Insurance, Irrigation, Jobs, Land, Lignite, Management, Megawatt, Mgmt, Mine, Minerals, MW, Nandigram, Neiveli, Neyveli, Neyveli Lignite Corporation, peasants, PMK, Power, Private, Protest, Public, Ramadas, Ramadoss, resettlement, rights, Rural, Security, Settlement, Stocks, Strike, Thermal, Trade Union, TU, Union, Uzhavar Paadhukappu Peravai, Valuation, Village, villagers, WB, Work, Worker | Leave a Comment »

Law on protection of waterbodies vs Govt buildings encroachment – Environment

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

நீர்நிலை ஆக்கிரமிப்பில் அரசு கட்டடங்கள்

வி. கிருஷ்ணமூர்த்தி

தமிழகம் முழுவதும் ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் அகற்றுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு வெளியாவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்னர்தான் ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வழி வகுக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சுமார் 38 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வசித்து வருவதாகத் தெரிய வருகிறது. இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் நீர்நிலைகளின் ஏதாவது ஒரு பகுதியில் மட்டும்தான் இருக்கின்றன. ஆனால், நீர்நிலைகளை ஒட்டுமொத்தமாக அழிக்கும் வகையில் பல்வேறு அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதுதான் அதிர்ச்சியூட்டும் செய்தி.

நீதிமன்ற அலுவலகங்கள், அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைகள், தாலுகா அலுவலகங்கள், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்கள், பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகளின் வணிக வளாகங்கள், வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள், சமுதாயக்கூடங்கள், நூலகங்கள், பஸ் நிலையங்கள் என அரசின் பல்வேறு துறை சார்ந்த கட்டடங்கள் நீர்நிலைகளையொட்டியே அமைந்துள்ளன.

மதுரை உலகனேரி கண்மாயில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் உள்ள அத்திகுளம், செங்குளம் கண்மாயில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட அப்போதைய தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தலைமையில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. தாம்பரத்தை அடுத்த கோவிலம்பாக்கம் ஏரி என பல்வேறு நீர்நிலைகளில் அரசு பள்ளி உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டுக்கான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

2006 ஆகஸ்டில் சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் துரைப்பாக்கத்தில் “ரெட்டைக் குளத்தை’ வணிக வளாகமாக்கும் அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “”அரசியல் சட்டத்தின் 51-ஏ (ஜி) பிரிவின்படி ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. எனவே, அவற்றில் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்காமல், ஏற்கெனவே இடம்பெற்றிருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும்” என்றனர்.

இருப்பினும், இந்த வழக்கில் தொடர்புடைய குளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

2005 ஜூன் 27-ல் ஆக்கிரமிப்பு தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, இப்ராஹிம் கலிஃபுல்லா ஆகியோர் அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர். இப்போது போலவே அப்போதும் கால வரம்பு நிர்ணயித்தனர்.

1997-ல் உச்ச நீதிமன்றம், நீர்நிலைகளை பொதுப் பயன்பாடு என்ற காரணத்துக்காக எடுப்பதும் தவறு என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது.

2005 ஜூனில் ஏரி பாதுகாப்பு தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கற்பகவிநாயகம், சி. நாகப்பன் ஆகியோர் மேற்கூறிய தீர்ப்பை தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டி நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மதிக்காத அதிகாரிகளை நீதித்துறையினரும், நீர்நிலைகளில் அரசு சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களை தங்கள் அலுவலகங்களாக ஏற்றுக்கொள்ளும் நீதித்துறையினரை அதிகாரிகளும் எப்படி பார்க்கிறார்கள் என்பதே மக்களிடம் எழுந்துள்ள கேள்வி.

நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த அரசும் குறிப்பாக, வருவாய்த்துறையினரும் ஆர்வம் காட்டுவதில்லை. தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தாததும் ஒருவகையில் நீதிமன்ற அவமதிப்பே. எனவே, இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகளின் செயலை நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து, அவமதிப்பு வழக்காக ஏன் எடுத்துக்கொள்வதில்லை?

எத்தனை தீர்ப்பு வந்தாலும், எத்தனை சட்டம் போட்டாலும் நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்ற அதிகாரிகளின் மனப்போக்கு மாற வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு உறுப்பினர்களும் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டனர். இதற்கு அதிகாரம் அளிப்பதற்காகவே தற்போது சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஏழைகள் என்பதற்காக ஏரி, குளங்களை ஆக்கிரமித்தவர்களை விட்டுவிட முடியாது. என்றாலும், அவர்களுக்கு உரிய விலையில் உறைவிட வசதிகளை அரசு அளிக்கத் தவறுவதே, பிரச்னைக்கு அடிப்படைக் காரணம். அதேவேளையில், நீர்நிலைகளைப் பொதுப் பயன்பாட்டுக்காக அரசுத் துறைகள் ஆக்கிரமிப்பதை எந்த விதத்திலும் அனுமதிக்கவும் கூடாது.

விவசாயம், நீர்ப்பாசனம் என்பதோடு நிற்காமல் நிலத்தடி நீர் வளப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சமநிலை ஆகியவையும் இந்த நீர்நிலைகளைச் சார்ந்தே இருக்கிறது. ஏரி, குளங்களை நமது முன்னோர் உருவாக்கியது ஏன் என்பதை அனைவருக்கும் குறிப்பாக, நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு. அரசு கட்டடமோ, தனியார் குடியிருப்போ எதுவாக இருந்தாலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் புதிய ஆக்கிரமிப்புகள் வராமல் தடுப்பதும்தான் தற்போதைய அவசர, அவசியத் தேவை.

————————————————————————————–

ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் மவுனம்: ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்துமா அரசு?


சென்னை: ஏரி, குளம், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற காலக்கெடு விதித்துள்ள ஐகோர்ட் உத்தரவை அரசு செயல்படுத்த வேண்டும் என்பது ஒட்டு மொத்த பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் குடிநீர் ஆதாரமாக 300 ஏரிகள் உள்ளன. இதில், சென்னை நகரில் 30 ஏரிகளும், புறநகரில் 270 ஏரிகளும் உள்ளன. ஒவ்வொரு ஏரியும் குறைந்தபட்சம் நுõறு ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவு கொண்டது.

ஏரிகள் அனைத்தும் “மராமத்து’ முறையில் அந்தந்த கிராம மக்களே துõர்வாரி, கரையை பலப்படுத்தி வந்தனர். இப்பணி பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. 30 ஆண்டுகளில் சென்னை மற்றும் புறநகர் பகுதி அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்தது. குடியிருப்புகளும் அதிகரிக்க ஆரம்பித்தன. இதன் விளைவாக விவசாய நிலங்கள் அனைத்தும் பட்டா நிலங்களாக மாற்றப்பட் டன.

ஏரியை சுற்றி குடியிருப்புகள் வளர்ந்ததால் ஒவ்வொரு ஆண்டு பருவ மழைக்கும் ஏரி நிரம்பி உபரி நீர் கலங்கலில் வெளியேறி போக்கு கால்வாய் வழியாக கடலில் கலந்தது.

ஏரிகள், நீர் இல்லாமல் தரிசு நிலம் போல காட்சியளித்தன. அரசும் சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள சில ஏரி நிலங்களின் ஒரு பகுதியை வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் என பல தரப்பட்ட துறைக்கு பிரித்து கொடுத்தது. ஏரியின் பரப்பளவு மூன்றில் ஒரு பங்காக சுருங்கியது. இதைப் பார்த்த அரசியல்வாதிகள், உள்ளூர் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக விரோத கும்பல்களுக்கு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வழி கிடைத்தது.

சென்னை புறநகரில் உள்ள பல ஏரிகளின் ஒரு பக்க கரையை உடைத்து ஆக்கிரமிக்கப்பட்டது. அந்த இடங்கள் கூறு போட்டு அப்பாவி பொதுமக்களுக்கு சொற்ப விலைக்கு விற்கப்பட்டன. ஆக்கிரமித்த இடங்களுக்கு பல துறையினர் “மாமுல்’ பெற்று சாலை வசதி, மின் இணைப்பு மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்டவை வழங்கி ஆக்கிரமிப்பு இடங்களில் குடியிருக்க அனுமதியும் அளிக்கப் பட்டது.

இதனால், சென்னை மற்றும் புறநகரில் நீர்நிலைகளுக்கு ஆதாரமாக உள்ள பல நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் ஏரிகள் காணாமல் போயின. மிகப்பெரிய ஏரிகளாக விளங்கிய வேளச்சேரி ஏரி, பள்ளிக்கரணை ஏரி, போரூர் ஏரி உள்ளிட்ட பல ஏரிகள் பல மடங்கு சுருங்கின.அதேபோல, ஒவ்வொரு ஏரிக் கும் கலங்கல் இருந்தது. அந்த கலங்கல் வழியாக வெளியேறும் உபரிநீர் கடலில் கலக்க நுõறடிக்கும் மேற்பட்ட அகலம் கொண்ட போக்கு கால்வாய் இருந்தது.

சில ஆண்டுகளாக மழை பொய்த் ததால் பெரும்பாலான வாய்க் கால்கள் இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு ஆக்கிரமித்து விட்டனர். நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு ஐகோர்ட் காலக்கெடு விடுத்துள் ளது. ஐகோர்ட்டின் உத்தரவை தமிழக அரசு மதித்து ஏரிகள், போக்கு கால் வாய் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாவண்ணம் ஏரி யை கம்பிவேலி போட்டு பாதுகாக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. இதனால், குடிநீர் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

ஆக்கிரமிப்புகள் அகற்ற கெடு:

ஏரியை காப்பாற்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுநல அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

* நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வரும் நவம்பர் மாதத்திற்குள் ஒரு திட்டம் இறுதி செய்யப்பட வேண்டும்.

* ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்க அரசு பரிசீலிக்கலாம்.

* நீர் நிலை ஆக்கிரமிப்புகளை எதிர்த்து தொடரப்படும் வழக்குகளை சிவில் கோர்ட் அனுமதிக்கக்கூடாது.

* பாதிக்கப்பட்டவர் ஐகோர்ட் டை அணுகலாம்.

* நீர் நிலைகளை ஆக்கிரமித்து நிலங்களை விற்றவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* எதிர்காலத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்தால் நோட்டீஸ் வழங்காமலே ஆக்கிரமிப்புகளை அகற்றலாம்.

* ஆக்கிரமிப்புகள் அகற்றியது குறித்து வரும் 2008ம் ஆண்டு ஜூன் 15ம் தேதிக்குள் பொதுப்பணித்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Posted in activism, Activists, Adambakkam, Agriculture, Assets, Boundary, Buildings, Civic, Drink, Drinking, encroachers, encroachment, encroachments, Enforcement, Environment, Evict, Eviction, Farmers, Govt, Ground water, groundwater, harvest, harvesting, Irrigation, KANCHEEPURAM, Lakes, Land, Law, Order, Original, Pallavaram, peasants, Peerkankaranai, penal, Private, Protection, Public, Rain, Rajakilpakkam, resettlement, rice, River, structures, Tambaram, Tanks, Temple, Ullagaram, Water, waterbodies, waterbody | Leave a Comment »

Fund allocations for River water inter-linking project – Pe Chidhambaranathan

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007

நதிகள் இணைப்புக்கு நிதி இல்லையா?

பெ. சிதம்பரநாதன்

நமது நாடு 6 லட்சம் கிராமங்களைக் கொண்டது.

110 கோடி இந்திய மக்களில் விவசாயத்தைச் சார்ந்து இருப்பவர்கள் ஏறக்குறைய 70 கோடி பேர். இவர்களில் பெரும்பாலானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருந்து வருகின்றனர். வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் 70 கோடிப் பேரை முன்னேற்றிவிட முடியும்.

உத்தமர் காந்திஜி, “”இந்தியாவின் உயிர், கிராமங்களில்தான் உள்ளது” என்று அறிவித்தார். தான் காண விரும்பிய ராஜ்யம் சின்னஞ்சிறு கிராம ராஜ்யம்தான் என்றே அறிவித்தார். அதை மேலும் அழகுபடுத்தி, அதுதான் தனது “ராமராஜ்யம்’ என்றும் கூறினார்.

அவரது சிந்தனைக்கு முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு செயல்வடிவம் கொடுக்க முற்பட்டார்.

முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண்மைக்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில் ரூ. 2 ஆயிரத்து 69 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.

அத்தொகையில் 1956-க்குள் கட்டப்பட்டதுதான் ஆசியாவிலேயே மிகப்பெரிய பஞ்சாப் மாநில பக்ராநங்கல் அணைக்கட்டு.

ஆனால் 1957-க்குப் பிறகு வேளாண்மை முன்னேற்றத்துக்கு அரசின் முக்கியத்துவம் வெகுவாகக் குறைந்துவிட்டது. தொழில் வளர்ச்சிதான் முதன்மையானது.

சென்ற 5 ஆண்டுக்காலத்தில் வேளாண்மை வளர்ச்சி நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4 சதவீதம்தான். தொழில்துறை வளர்ச்சியோ 8.5 சதவீதம். விவசாயம் வீழ்ச்சியடைந்தது, தாழ்ச்சியடைந்தது.

இன்றைய உண்மை நிலை என்ன?

மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்ப்பா பிராந்தியம், கர்நாடகத்தின் சில பகுதிகள், ஆந்திரத்தின் தெலங்கானா பகுதி, தமிழகத்தின் தஞ்சைப் பகுதி ஆகிய இடங்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் விவசாயிகள், வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 2001-2006 க்கு இடைப்பட்ட ஐந்தாண்டுக் காலத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவங்கள் இவை.

கடன் சுமையால் சென்ற ஆண்டு மட்டும் 15 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதில் பெரும்பாலானோர் ஆந்திர மாநிலப் பருத்தி விவசாயிகள்.

இந்தப் பின்னணியில் மத்திய நிதியமைச்சர் சமர்ப்பித்த மத்திய நிதிநிலை அறிக்கை, விவசாயத்திற்கு முதலிடம் தருகிற அறிக்கை என கூறப்பட்டது.

ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி கடனாக விவசாயிகளுக்கு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் அறிவித்திருந்தார். கேட்பதற்கு இது ஆனந்தமாகத்தான் இருக்கிறது. நடைமுறையில் இந்த ஒதுக்கீட்டில் விவசாயிகளுக்கு உரிய பலன் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் இதேபோல ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி விவசாயக் கடனுக்கு ஒதுக்கப்பட்ட பிறகு, அந்த ஓராண்டில் மட்டும் 15 ஆயிரம் பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது ஏன்?

ஐந்து காரணங்களால் நமது நாட்டின் விவசாயம் இத்தகைய இழிநிலைக்கு வந்துவிட்டதாக மத்திய நிதியமைச்சர் கூறுகிறார்.

முதல் காரணம், அதிக வட்டிக்கு விவசாயி கடன் வாங்கியதால்தான் தற்கொலை செய்து கொள்கிறான். ஆகவே 7 சதவீதம் வட்டிக்கு விவசாயக் கடன் கிடைக்க வங்கிகளின் வாசல்கள் திறந்துவிடப்பட்டிருக்கின்றன என்று அறிவிக்கிறார்.

இரண்டாவதாக, அவர்களுக்குத் தரமான விதைகள் கிடைக்காத காரணத்தால்தான், அதிக உற்பத்தியைச் செய்ய முடியவில்லையென்றார். இதற்காக தரமுள்ள விதைகள் கிடைக்க வழி வகுத்துத் தந்துள்ளதாகக் கூறுகிறார்.

மூன்றாவதாக, விவசாயப் பயிர்களுக்கு உரம் தேவை. உர விலையோ உயர்ந்து கொண்டே போகிறது. விவசாயிக்கோ வாங்கும் சக்தி இல்லை. ஆகவே, உரத்திற்கான ஒரு பாதி விலையை அரசே மானியமாகக் கொடுத்து, குறைந்த விலையில் உரம் கிடைக்கச் செய்ய ரூ. 22 ஆயிரத்து 450 கோடியை உர மானியமாக அரசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

நான்காவதாக, விவசாயிகளுக்கு முறையான மின்சாரம் இலவசமாகத் தருவதாகவும் அறிவித்துள்ளார்.

ஐந்தாவதாக, பாசன நீர் வசதி. இந்தியாவின் 6 லட்சம் கிராமங்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் கிணறுகள் மற்றும் ஏரி, குளங்களைத் தூர்வாரி, ஆழப்படுத்தி, அதிக மழை நீரைத் தேக்கி விவசாயம் செய்வதற்காக சுமார் ரூ. 12 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாகத் தெரிவிக்கிறார்.

உண்மையில், விவசாயத்திற்குத் தேவையான பாசனநீர் மழையால் மட்டும் கிடைப்பதாகக் கருதி, மழை வரும்பொழுதே கிணறுகள், ஏரிகள், குளங்களில் மழை நீரை நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார். இவையெல்லாம் நடைமுறையில் சாத்தியமா? அவ்வாறு செய்தாலும் ஆண்டு முழுவதும் பாசனத்துக்குத் தேவையான நீர் போதிய அளவில் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

எனவே, தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்க ஒரு சிறப்பான மாற்றுத் திட்டம் உள்ளது. அதுதான் நதிகள் இணைப்பு.

“”இந்திய நதிகளை எல்லாம் இணைத்து விடுங்கள். வெள்ளச் சேதத்தையும் தடுக்கும் – வறட்சியையும் அது போக்கும்” என கடந்த ஐந்து ஆண்டுகளாக குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறி வருகிறார்.

அவர் மட்டுமல்ல, வடமாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கையே தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் மத்திய அரசு சமர்ப்பித்த பதில் மனுவில் 2045-ஆம் ஆண்டுக்குள் நதிகள் இணைப்புக்கு ஆவன செய்யப்படும் என குறிப்பிடப்பட்டது.

நதிகளை இணைக்க 40 ஆண்டுகளா என்று ஆச்சரியப்பட்ட தலைமை நீதிபதி, 10 ஆண்டுக் காலத்திற்குள் இணைத்தாக வேண்டும் என்றும் அதற்கான ஒரு வரைவுத் திட்டத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

முந்தைய பாஜக ஆட்சியில் அப்படி வந்ததுதான் தேசிய நதிகளை இணைப்பதற்கான குழு. ஆனால் 2004-ல் ஆட்சி மாறியது. அதன்பிறகு சமர்ப்பிக்கப்பட்ட மூன்று மத்திய பட்ஜெட்களிலும் நதிகள் இணைப்பிற்கு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதே உண்மை.

தேசிய நதிகளுக்குப் பதிலாக தென்னக நதிகளான மகாநதி முதல் காவிரி வரையாவது நதிகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுமாறு கோரிக்கைகள் பல வந்தன. ஆனால் நதிகள் இணைப்புத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

தென்னக நதிகளை இணைத்தால்தான் தென்மாநில விவசாயத்திற்கான பாசன நீர் பன்மடங்கு அதிகரிக்கும் என்ற உண்மையும் உணரப்படுகிறது.

அவ்வாறு தென்னக நதிகளை இணைத்தால், தென்மாநிலங்களில் ஏறக்குறைய 150 லட்சம் ஏக்கரில் இரு போக சாகுபடி செய்யலாம். விவசாயம் செழிப்படையும்போது கிராமப்புற மக்கள் அனைவருக்கும் போதிய அளவில் வேலை கிடைக்கும். நூல் ஆலைகளுக்குத் தேவையான மூலப் பொருளான பஞ்சுப் பற்றாக்குறையும் தீரும். எண்ணெய் வித்து உற்பத்தியிலும் தன்னிறைவு பெற முடியும்.

விவசாயத்திற்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மத்திய நிதிநிலை அறிக்கையில், நதிகள் தரும் பாசன நீரை மறந்துவிட்டால், ஆகாயத்தில்தான் விவசாயத்தை வளர்ச்சி அடையச் செய்ய முடியும்!

=========================================

நதிகள் இணைக்கப்படுவது எதற்காக?

சி.எஸ். குப்புராஜ்

இந்திய நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்ற கருத்து கடந்த 150 ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது.

சர் ஆர்தர் காட்டன் என்ற பிரபல பொறியாளர் இக் கருத்தை 19-ம் நூற்றாண்டிலேயே தெரிவித்தார். ஆனால் அப்போதிருந்த கிழக்கு இந்திய கம்பெனியாரின் அரசு அதை ஏற்கவில்லை. அதற்குப் பின் பிரிட்டிஷ் அரசும், சுதந்திர இந்திய அரசும்கூட இந்தத் திட்டத்தை பரிசீலித்தன. ஆனால் செயல்படுத்த முற்படவில்லை.

இறுதியாக 1982 ஆம் ஆண்டு இதற்காகவே தேசிய நீர்வள மேம்பாடு நிறுவனம் உருவாக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வரைபடங்களும் மதிப்பீடும் தயாரிக்கப்பட்டன. இத் திட்டத்தை உடனடியாக எடுத்துக் கொண்டு விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு ஆணையிட்டுள்ளது.

இத்திட்டத்தின் அடிப்படைத் தத்துவம் என்னவென்றால், தண்ணீர் அதிகமாக ஓடிக் கடலில் கலந்து வீணாகும் நதிப்படுகைகளிலிருந்து, பற்றாக்குறையாக உள்ள நதிப்படுகைகளுக்குத் திருப்பி விட்டு வீணாகும் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என்பதே. இந்த அடிப்படையில் தான் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வடநாட்டு நதிகளை இணைப்பதற்கு, அயல்நாட்டு அரசுகளின் சம்மதம் பெற வேண்டி இருப்பதால் தாமதம் ஆகிறது. எனவே தென்னாட்டு நதிகளையாவது முதல் கட்டமாக இணைத்து விடலாம் என்று ஆலோசனை கூறப்பட்டது.

இதுவும் தாமதம் ஆவதால் தமிழ்நாடு நதிகளையாவது இணைத்து விடலாம் என்று நமது குடியரசுத் தலைவர் யோசனை தெரிவித்தார். இந்த அடிப்படையில் பார்த்தால் மூன்று இணைப்புகள் செயல்படுத்தலாம் என்றும் இவற்றைத் தமிழ்நாடு அரசே செயல்படுத்தும் என்றும் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் தமிழ்நாடு சட்டப் பேரவையில் கூறினார். இந்த மூன்று இணைப்புகள் எவை என்றால்;

  • 1. தென் பெண்ணை ஆற்றையும் செய்யாற்றையும் இணைத்தல்.
  • 2. கோரை ஆற்றையும் அக்கினியாற்றையும் இணைத்தல்.
  • 3. தாமிரபரணி ஆற்றையும் நம்பியாற்றையும் இணைத்தல்

தமிழ்நாட்டில் உள்ள நதிகள் எல்லாம் பற்றாக்குறை நதிகளே; உபரி நீர் உள்ள நதிகள் எவையும் இல்லை. எனவே இரண்டு பற்றாக்குறை நதிகளை இணைப்பதால் பயன் ஒன்றுமில்லை.

ஆனால் ஒரு சில நதிகளில் 25 சதவீத நம்பகத்தன்மையின் அடிப்படையில் பார்த்தால் ஓரளவு உபரி நீர் இருப்பதாக 2001 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழு 2002 ஆம் ஆண்டில் ஓர் அறிக்கையை அரசுக்கு அளித்தது. அக் குழுவின் அறிக்கையில் கீழ்க்கண்ட நதிகளில் இருக்கும் உபரி நீர் பற்றியும் அந்த உபரி நீரை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன.

25 சதவீத நம்பகத்தன்மையின் அடிப்படையில் உபரி நீர் உள்ள நதிப்படுகைகள் பின்வருமாறு:

  • 1. பாலாறு – 24.34 டி.எம்.சி.
  • 2. வெள்ளாறு – 41.21 டி.எம்.சி.
  • 3. தென் பெண்ணையாறு – 26.40 டி.எம்.சி.
  • 4. காவிரி நதி – 103.56 டி.எம்.சி.
  • 5. தாமிரபரணி நதி – 24.0 டி.எம்.சி.

இந்த உபரி நீர் எல்லாம் ஆற்றின் கடைசிப் பகுதியில் தான் உள்ளன. இந்த நதிகளை இணைப்பதற்கு அந்தக் குழு எந்த ஆலோசனையும் கூறவில்லை. எனவே இந்த இணைப்புகள் பற்றித் தெரிந்து கொள்வதற்காக, பொதுப்பணித்துறையில் விசாரித்து கீழ்க்கண்ட விவரங்கள் பெறப்பட்டன.

இணைப்பு – 1: சாத்தனூர் உயர்நிலைக் கால்வாய் திட்டம்

சாத்தனூர் அணையிலிருந்து உயர்நிலைக் கால்வாய் அமைத்து பல ஏரிகளுக்குத் தண்ணீர் அளித்துவிட்டு இறுதியாக விழுப்புரம் வட்டத்தில் உள்ள நந்தன் கால்வாயுடன் இணைத்தல். தென்பெண்ணை ஆற்றில் சாத்தானூரில் உபரி நீர் இல்லை. திருக்கோவிலூர் அணைக்கட்டிற்கு கீழேதான் உபரிநீர் உள்ளது.

இணைப்பு – 2: கோரையாறு தனிப்படுகையல்ல, காவிரியின் உபநதி. வெள்ளக் காலங்களில் திருச்சி நகரத்திற்கு வெள்ள அபாயம் உண்டாக்குகிறது. எனவே கோரையாற்றையும் ஆரியாற்றையும் கால்வாய் மூலம் இணைத்து அதிலிருந்து 15 ஆயிரம் கனஅடி வெள்ள நீரை அக்னியாறு படுகைக்குத் திருப்புதல்.

இணைப்பு – 3: தாமிரபரணி ஆற்றின் வெள்ள நீரைச் சாத்தான்குளம் மற்றும் திசையன்வினை பகுதிகளுக்குத் திருப்புதல்.

சில பொறியாளர்கள் நதிகள் இணைப்பின் தத்துவத்தை உணராமல் இந்தியாவின் நதிகள் அனைத்தையும் சமமட்டக் கால்வாய்கள் மூலம் இணைக்க முடியும் என்றும், அவற்றில் இரண்டு பக்கமும் தண்ணீர் பாயும் என்றும், இத்திட்டம் மத்திய அரசு தயாரித்துள்ள திட்டத்தைவிட மேலானது என்றும் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இது செயல்முறைப்படுத்த முடியாத திட்டம். ஓர் ஆற்றிலோ அல்லது கால்வாயிலோ, தண்ணீர் ஓட வேண்டும் என்றால் அடிமட்டச் சாய்வு இருக்க வேண்டும். சாய்வு இல்லாத கால்வாய் எப்படி செயல்படும்? வெறும் பிரசாரத்தால் மட்டும் தண்ணீர் ஓடாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

———————————————————————————————————————————————————–

100 கோடிக்கு 36 லட்சம் கோடி!

பதினோராவது ஐந்தாண்டுத் திட்ட ஆவணத்துக்கு தேசிய வளர்ச்சிமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து மாநில முதலமைச்சர்களும் ஒப்புதல் அளித்துவிட்டனர். 5 ஆண்டுகளில் மொத்தம் 36 லட்சம் கோடி ரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நம் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியை பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் 4 ஆண்டுகளில் 9% என்றும், கடைசி ஆண்டில் (2011-12) 10% என்றும் பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை திட்டக்குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா பின்னர் நிருபர்களிடம் விவரித்தார்.

கல்வி, சுகாதாரம், வறுமையை ஒழிப்பதற்கான வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் ஆகியவற்றின் மூலம் சமூக அடித்தளக் கட்டமைப்பை வலுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அலுவாலியா கூறியுள்ளார்.

நம்முடைய ஐந்தாண்டுத் திட்ட இலக்குகளை எட்ட முடியாதவாறு 3 விஷயங்கள் தடுக்கின்றன.

1. ஐந்தாண்டுத் திட்டங்களை வகுப்பதிலும், அமல் செய்வதிலும், அதன் பலன்களைத் தணிக்கை செய்வதிலும் மக்களை ஈடுபடுத்தத் தொடர்ந்து தவறி வருகிறோம்.

2. அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் கூடி தயாரித்து, நிதி ஒதுக்கி, நிறைவேற்றும் திட்டங்களாகவே இவை நீடிக்கின்றன.

3. திட்டங்களை வகுப்பதில் காட்டும் ஆர்வத்தை அமல்படுத்துவதில் தொடர்ச்சியாகக் காட்டத் தவறுவதால் எல்லா திட்டங்களும் தொய்வடைந்து, பிறகு தோல்வியைத் தழுவுகின்றன.

நதிநீர் இணைப்பு சாத்தியமா என்பது ஒருபுறம் இருக்கட்டும், இருக்கும் நீர்நிலைகளைக் குறைந்த செலவில் பராமரிக்க நம்மிடம் உள்ள தேசியத் திட்டம்தான் என்ன?

ஐந்தாண்டுத் திட்டத் தயாரிப்பு என்பது இன்றளவும் வெறும் சடங்காக மட்டுமே இருக்கிறது. குறைந்த செலவில் அதிக பலன்களைப் பெறும் வகையில் திட்டங்கள் இருக்க வேண்டும். கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழித்து, ஆயிரக்கணக்கில் பணத்தைத் திருப்பி எடுப்பதாகவே திட்டங்கள் முடிகின்றன. திட்ட அமல்களில் ஏற்படும் காலதாமதத்தால்தான் கோடிக்கணக்கான ரூபாய்கள் விரயம் ஆகின்றன என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் சமீபத்தில் பேசியிருக்கிறார். அதைத் தவிர்க்க என்ன திட்டத்தை இந்தக் கூட்டம் பரிசீலித்தது?

“”கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கிவிட்டது, இது மாநில முதலமைச்சரின் -நிதி அமைச்சரின் வாதத்திறமைக்குச் சான்று” என்று போலியாக பெருமைப்படுவதே வழக்கமாகி வருகிறது.

நபர்வாரி வருமானம் எவ்வளவு உயர்ந்தது, அணைகள் எத்தனை உயர்ந்தன, எத்தனை லட்சம் ஏக்கர்கள் கூடுதலாக பாசன வசதி பெற்றன, எத்தனை ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி ஆனது, எத்தனை லட்சம் பேருக்குக் கூடுதலாக, நிரந்தர வேலைவாய்ப்புக் கிடைத்தது, தொழில், வர்த்தகத்துறையில் ஒட்டுமொத்த விற்றுமுதல் எத்தனை லட்சம் கோடி ரூபாய்கள் அதிகரித்தன என்ற ஆக்கபூர்வமான முடிவுகளே இந்த திட்டங்களின் வெற்றிக்கு உரைகல். அப்படியொரு அறிக்கையையும் இந்த தேசிய வளர்ச்சி மன்றக் கவுன்சிலில் முன்வைத்தால், ஐந்தாண்டுத் திட்ட வெற்றியை நம்மால் மதிப்பிட முடியும்.

நீர்நிலைகளையும், நிலத்தடி நீரையும் பாழ்படுத்தும் தோல் தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள், பின்னலாடைத் தொழிற்சாலைகள், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ரசாயன ஆலைகள் போன்றவைதான் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் முக்கியத்துவம் பெறுகின்றன. இப்படிப்பட்ட வளர்ச்சி மாநிலத்துக்கு மட்டும் அல்ல, நாட்டுக்கே தேவை இல்லை என்பதை தேசிய அளவில் விவாதிக்க வேண்டும்.

குறிப்பிட்ட சில இனங்களில் மட்டும் வரிவிதிப்பு அதிகாரத்தை வைத்திருந்த மத்திய அரசு மதிப்புக் கூட்டப்பட்ட விற்பனை வரி (வாட்), சேவை வரி மூலம் தன்னுடைய கரத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டுவிட்டது. இனி போகப்போக ஐந்தாண்டுத் திட்டமிடல் என்பது மத்திய அரசின் தனியுரிமை ஆனாலும் வியப்பதற்கு ஏதும் இல்லை.

Posted in 11, 5, Agriculture, Budget, Cauvery, Cheyaar, Cheyyaar, Cheyyaaru, Civil, Connection, CS Kuppuraj, Damirabarani, Dhamirabharani, doctors, Drinking Water, Economy, Education, Farming, Farmlands, Finance, Five Year Plans, Floods, Food, Fund, Government, Govt, harvest, Health, Healthcare, Hospital, Hygiene, IAS, inter-link, IPS, Kaviri, Korai, Lakes, medical, Nambiyar, officers, Paalar, Paddy, Palaar, Palar, peasants, Pennai, Planning, Plans, Politics, Poor, Project, Rain, rice, River, Sathanoor, Sathanur, service, Seyaar, Seyyaar, Seyyaaru, South Pennai, Tamirabarani, Tamirabharani, Thamirabarani, Thamirabharani, Vellaar, Village, Water, Watersources, Wheat, Year | 1 Comment »

Economic impact of Industrialization of Agricultural Farmlands

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

தொடரும் நிலப் பறிப்பால் துன்புறும் மக்கள்

மா.பா. குருசாமி

தொழில் வளர்ச்சி என்ற பெயரால் நாட்டின் பல்வேறு இடங்களில் வேளாண் நிலங்களை விவசாயிகளிடமிருந்து பறிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மட்டுமன்றி வேளாண்மையைச் சார்ந்து வாழும் மக்களும் பெருத்த இடர்ப்பாடுகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

பாதிக்கப்படும் மக்கள் வலுவற்றவர்களாக இருந்து வருவதால் அவர்களின் குரல் ஓங்கி ஒலிப்பதில்லை; ஆனால் தற்போது நிலைமை சற்று மாறிவருகிறது. நிலத்தை இழந்த விவசாயிகள் வீதிக்கு வந்து பெரும் கிளர்ச்சி செய்து வருகின்றனர்.

விவசாயிகளை திடீரென நிலமற்ற நாடோடிகளாக விரட்டியடிப்பது பெரிய சிக்கலின் தொடக்க வெளிப்பாடாகும். இதைத் தடுக்காவிட்டால் கிராம மக்களின் வாழ்வில் பெரும் பாதிப்பு ஏற்படும்.

கிராம மக்களின் வாழ்க்கை ஆதாரத்தையே இழக்கச் செய்யும் ஒரு “வளர்ச்சி’ முறையை ஆதரிக்கின்றவர்கள் இந்தச் சிக்கலை மேலோட்டமாகப் பார்க்கின்றனர். நிலத்தை மதிப்புள்ள ஒரு சொத்தாக மட்டும் கருதி, அதற்கு இழப்பீடு கொடுத்து விட்டால் போதுமென்று கருதுகின்றனர்.

இந்தியா தொழில்மயமான நாடாக மாற, சில தியாகங்கள் செய்ய வேண்டுமென்றும் அப்படிப்பட்ட தியாகங்களில் ஒன்றுதான் சில கடைநிலை விவசாயிகள் நிலத்தை இழப்பதும் என்று வாதிடுகின்றனர்.

சின்னஞ்சிறு விவசாயிகளுக்கு நிலம் வெறும் சொத்து மட்டுமல்ல; அது அவர்களுக்கு அமுதசுரபி. ஆண்டாண்டு காலமாக அந்த பூமித்தாயை நம்பித்தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஒரு குடும்பத்துக்கு ஐந்து ஏக்கர் நிலம், இரண்டு காளை மாடுகள், நான்கைந்து பசு – எருமை மாடுகள் இருந்தால் உழைப்பை நம்பி, வளமாகவும் நலமாகவும் வாழ்ந்த காலம் இருந்தது. கிராம வாழ்வின் ஆதாரமாக வேளாண்மையும், வேளாண்சார் தொழில்களும் இருந்தவரை வாழ்க்கை ஒரு சீராக இருந்தது.

இந்நிலையில், நகரங்களின் விரிவாக்கமும், தொழிற்சாலைகளின் பெருக்கமும் நகரங்களை ஒட்டிய வேளாண் நிலங்களை விழுங்கத் தொடங்கின.

வீட்டடி நிலத்திற்காக இருபோகம், முப்போகம் விளைந்த நிலங்கள் வாங்கப்பட்டன. நிலத்தை வாங்கி விற்பவர்கள் நூற்றுக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவுள்ள நிலத்தை வாங்கி, வளைத்துப் போட்டு, வீட்டுமனைகளாக்கி, அவற்றை விற்று, கோடி கோடியாகப் பணம் குவிப்பதும், அடுத்தடுத்து இருக்கும் நிலங்களை, அக்கம் பக்கம் தெரியாமல் வாங்கிச் சேர்ப்பதும் தொடர்ந்து நடக்கிறது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

பெருஞ் செல்வந்தர்கள் தங்களது கருப்புப் பணத்தை வெளியில் தெரியாமல் மறைப்பதற்காக நிலத்தில் முதலீடு செய்கின்றனர். நிலத்தின் மதிப்பு நாளுக்குநாள் கூடுவது இதனை ஊக்குவிக்கிறது. தங்கத்துக்கு அடுத்தபடியாக நிலமுதலீடுதான் கருப்புப் பணத்தைக் கவர்ந்து ஈர்த்தது.

குடியிருப்புக்கு அடுத்து வாணிப, தொழில் நிறுவனங்கள் பெரிய அளவில் வேளாண் நிலங்களைக் கையகப்படுத்திக் கொள்கின்றன. நிலத்தை வாங்க, விற்க உரிமை இருப்பதால் இதில் யாரும் தலையிட முயல்வதுமில்லை; முடிவதுமில்லை.

மேலும் நமது நாட்டில் நிலத்தை இப்படித்தான் பயன்படுத்த வேண்டுமென்ற கொள்கை இதுவரை உருவாகவில்லை. ஆதலால் நிலத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துகின்றனர்.

கணிசமான கிராம மக்கள் சொந்த நிலத்தை, வாழ்வை இழந்து வெளியேறுவதை “வளர்ச்சிப் போக்கு’ என்று அரசியல்வாதிகள் வாதிடுகின்றனர்.

நமது நாட்டில் சராசரி நில உடைமையளவு 1.41 ஹெக்டேர். இது ஒரு வேளாண் குடும்பத்துக்கு வாழ்வளிக்காது. இப்பொழுது 74 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர்.

வேளாண்மையை நம்பி இருக்கின்றவர்களில் 20 சதவீத மக்களை வேறு துறைகளுக்கு மாற்ற வேண்டுமென்று வற்புறுத்துகின்றனர். எப்படி, எந்தத் துறைக்கு மாற்றுவதென்று யாரும் திட்டவட்டமாகக் கூறவில்லை; கூற முடிவதில்லை.

இந்நிலையில் பொருளாதாரச் சிறப்பு மண்டலங்களை அமைத்து கிராமங்களைத் தொழில் மயமாக்க அரசு முயன்று வருகிறது. பொருளாதாரச் சிறப்பு மண்டலங்களை அமைக்கும் பொறுப்பு நமது உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இந்த அடிப்படையில்தான் மேற்கு வங்கத்தில் சிங்குரில் டாடா கார் தொழிற்சாலைக்கும், மிதுனபுரி மாவட்டம் நந்தி கிராமத்தில் இந்தோனேசியா நிறுவனத்துக்கும் நிலத்தைக் கையகப்படுத்துவதில் மேற்குவங்க அரசு முனைப்புக்காட்டி வருகிறது.

இப்பொழுது அனுமதி பெற்றிருக்கிற 237 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குத் தரப் போகிற நிலம் 37,400 ஹெக்டேர். இதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்ட திட்டங்கள் 340. மேலும் 300 திட்டங்கள் ஒப்புதலுக்குக் காத்திருக்கின்றன. இவற்றில் கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்யப்பட உள்ளது என்றும் எராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமென்றும் உறுதி கூறுகின்றனர்.

நிலத்தை இழக்கின்றவர்களுக்கெல்லாம் இந்த நிறுவனங்களில் வேலை கிடைக்கப் போவதில்லை. இவர்களில் சிலருக்கு தொடக்க காலத்தில் உடல் உழைப்புச் செய்யும் பணிகள் கிடைக்கலாம். ஆனால் இவற்றில் தொடர்ந்து வேலை செய்யக்கூடியவர்கள் திறன்மிக்க பயிற்சி பெற்ற தொழிலாளர்களாகத்தான் இருப்பார்கள்.

நமது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 63 சதவீதம் நிலத்தில்தான் வேளாண்மை செய்கிறோம். இன்னும் 37 சதவீத நிலம் மேய்ச்சல் நிலமாக, தரிசு நிலமாக, வேளாண்மை செய்யத் தகுதியற்ற நிலமாக இருக்கிறது. தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சாகுபடி செய்யும் நிலத்தின் அளவைக் கூட்டி, உணவு உற்பத்தியைப் பெருக்க முயல்கிறோம்.

இந்நிலையில் ஏராளமாக இருக்கும் சாகுபடி செய்ய முடியாத இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவலாம். ஆனால் பெரிய தொழில் நிறுவனங்கள் அகக் கட்டுமானங்கள் உள்ள நகரங்களை அடுத்த கிராமப்புறங்களை விரும்புமே தவிர, தூரத்திலுள்ள இடங்களை நாடாது.

நிலம் கையகப்படுத்தும் சட்டம் மத்திய, மாநில அரசுக்கு, “”பொது நோக்கிற்காகவும், நிறுவனங்களுக்காகவும், இழப்பீடு அளித்து கையகப்படுத்தும் முழு உரிமையை அளிக்கிறது”. இந்தச் சட்டத்தின் அடிப்படையில்தான் இப்பொழுது மாநில அரசுகள் நிலத்தின் விலையை நிர்ணயித்து வேளாண் நிலத்தைக் கைப்பற்றுகின்றன.

இந்தச் சட்டம் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேய நிறுவனங்களுக்கு மொத்தமாக நிலத்தைத் தாரை வார்க்க உருவாக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் இப்பொழுதும் நமது விவசாயிகளை மொட்டையடிக்க இந்தச் சட்டம் பயன்படுவது வேடிக்கை.

இப்படிக் கையகப்படுத்தும் நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை (விலையை) மாவட்ட ஆட்சியாளர் நிர்ணயம் செய்கிறார். அது நடைமுறை பத்திரப்பதிவு விலையாக இருக்கும். அந்த நிலம் தொழில் நிறுவனத்திற்குக் கை மாறியபின் எத்தனை மடங்கு உயரும் என்பதைக் கூற முடியாது.

இழப்பீடாக பல ஆயிரம் ரூபாய் பெறுகிற விவசாயியின் எதிர்காலம் எப்படி இருக்கும்? அவன் நிலத்திலிருந்து வேரோடு பிடுங்கிப்போட்ட செடியாக இருப்பான். உடனே வேறு இடத்தில் நடப்பட்டால் செடி தழைக்கும். இல்லையேல் காய்ந்து கருகிப் போகும். கையிலுள்ள பணம் செலவானபின் விவசாயி வெறும்கையுடன் வேலை தேடி அலைய வேண்டும். லஞ்ச ஊழல் நிர்வாகத்தில் நிர்ணயிக்கப் பெற்ற இழப்பீட்டுத் தொகை முழுமையாகக் கிடைக்குமென்ற உறுதிப்பாடும் இல்லை.

2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 6,38,365 கிராமங்கள் இருக்கின்றன. இவற்றில் 5,93,643 கிராமங்களில்தான் மக்கள் வாழ்கின்றனர். மேலும் இரண்டு லட்சம் கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறி நகரங்களில் குடியேறுவதாக வைத்துக் கொள்வோம். நகரங்கள் எல்லாம் நரகங்களாகும் நிலை தானே ஏற்படும்.

நிலத்தை – வேளாண்மையை – நம்பியிருக்கின்ற மக்களுக்கு வாழ மாற்று ஏற்பாடு செய்யாமல் நிலத்தை இழந்து வெளியேறச் செய்வது குளவிக்கூட்டில் கல்லெறிந்து கூட்டைக் கலைப்பதைப் போன்ற விளைவை ஏற்படுத்தும்.

சரியான பொருளாதார வளர்ச்சியை முறையாக மேற்கொண்டு எல்லா மக்களையும் வாழ வைப்பதுதான் நல்ல, ஏற்றுக்கொள்ளத்தக்க வளர்ச்சியாக இருக்கும்.

Posted in Agriculture, Analysis, Asset, City, Commerce, Dinamani, Economy, encroachment, Farmers, Farmlands, Finance, Globalization, Growth, Industrialization, Industry, Land, Op-Ed, Opinion, peasants, Property, Rural, Urbanization, Village | 1 Comment »

Tamil nadu Agricultural Workers Board reconstituted

Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2007

விவசாய தொழிலாளர் நல வாரியம் மீண்டும் அமைக்க அரசு ஆணை: உழவர் திருநாளில் முதல்வர் உத்தரவு

சென்னை, ஜன. 17: விவசாயத் தொழிலாளர் வாரியம் மீண்டும் அமைக்கப்படுகிறது. இதற்கான உத்தரவை முதல்வர் கருணாநிதி பிறப்பித்துள்ளார்.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் இவ்வாரியம் கலைக்கப்பட்டது. திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளபடி இந்த வாரியம் மீண்டும் அமைக்கப்படுகிறது.

வாரியத் தலைவராக வருவாய் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர் விவரம்:

அலுவல் சாரா உறுப்பினர்கள்:

  • நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.பி. ராமலிங்கம்,
  • பூதலூர் கலியமூர்த்தி,
  • கீழானூர் ராஜேந்திரன்,
  • இல.க. சடகோபன்,
  • கே. பாலகிருஷ்ணன்,
  • வே. துரைமாணிக்கம்,
  • எஸ். செல்லமுத்து,
  • பொன்குமார்.

அலுவலர் சார்ந்த உறுப்பினர்கள்:

  • வருவாய்த்துறைச் செயலர்,
  • நிதித்துறைச் செயலர்,
  • வேளாண்துறைச் செயலர்,
  • வருவாய் நிர்வாக ஆணையர்,
  • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைவர்,
  • சர்க்கரைத் துறை ஆணையர்,
  • வேளாண் விற்பனை மற்றும் சந்தைக்குழு ஆணையர்,
  • நிலச்சீர்திருத்த ஆணையர்.

Posted in ADMK, agricultural workers, Agriculture, AIADMK, Board memebers, DMK, Farmers, I Periyasami, I Periyasamy, Law Minister, Officials, peasants, Periasami, Periasamy, Periyasamy | Leave a Comment »

Mamata’s hunger strike enters eleventh day over TATA car project Singur issue

Posted by Snapjudge மேல் திசெம்பர் 15, 2006

திசைமாறும் போராட்டம்

மம்தா பானர்ஜி 11 வது நாளாக தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் ஹூப்ளி மாவட்டத்தில் சிங்குர் என்ற இடத்தில் டாடா நிறுவனம் தொடங்கவுள்ள சிறு கார் தொழிற்சாலைக்காக விவசாயிகளை மாநில அரசு கட்டாயப்படுத்தி நிலத்தைக் கையகப்படுத்துகிறது என்பது மம்தாவின் குற்றச்சாட்டு.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய அரசின் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது, அக்கட்சி ஆளும் மேற்கு வங்கத்தில் 12,000 விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி 1000 ஏக்கர் நிலத்தை வாங்குவது நியாயமா? என்பது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கேள்வி.

இதனை மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ய மறுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் விரிவான “கட்டுரை-பதில்’ கொடுத்துள்ளார். “”மம்தாவின் குற்றச்சாட்டு உண்மையல்ல. அனைவரும் நிலத்தை விற்க ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளனர். சுமார் 9000 விவசாயிகள் ரூ.131 கோடி இழப்பீடு பெற்றுள்ளனர். இந்த நிலம் ஒரு போகம் விளையும் பூமிதான். சிங்குரில் விவசாய நிலங்கள் விற்கப்படுவது புதிதல்ல. கடந்த ஆண்டில் 572 பேர், 300 ஏக்கர் நிலத்தை விற்றிருக்கிறார்கள். சிங்குரில் நிலத்தை விற்க யாரும் விரும்பவில்லை, நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பது பொய்” என்று விரிவான ஆதாரங்களுடன், புள்ளிவிவரங்களுடன் பதில் கொடுத்துள்ளார். இனி, சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அனுமதிக்கப் போகும் மாநிலங்கள், பிருந்தா காரத்தின் பதில்களை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொண்டால் ஆச்சரியமில்லை.

மாநில அரசுக்கு எதிரான போராட்டத்திலிருந்து இப்போது பிரச்சினை வர்த்தக திசைக்குப் பாய்ந்துள்ளது. டாடா பொருள்களைப் புறக்கணிப்போம் என்று கூறியுள்ளார் மம்தா.

விவசாயிகளுக்கு ஆதரவாக, மாநில அரசுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், ஒரு மாநிலத்தில் தொழில் தொடங்க வரும் நிறுவனத்துக்கு எதிரான போராட்டமாக மாறியிருப்பது யாரும் எதிர்பார்க்காதது. இந்த போராட்டத்துக்கு முன்பே, நிருபர்களிடம் பேட்டி அளித்த மம்தா, தாங்கள் டாடா நிறுவனத்தையோ தொழில்மயமாக்கலையோ எதிர்க்கவில்லை என்றார்.

டாடா நிறுவன பொருள்களைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்படும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு டாடா கார் தொழிற்சாலையின் பங்குகளைத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் அது விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

சிங்குர் பகுதியில் நிலத்தை இழப்போர், வேலையிழக்கும் விவசாயத் தொழிலாளர்கள் என சுமார் 35000 பேர் வேறு இடங்களுக்குச் செல்ல நேரிடும். விவசாயத்தை மட்டுமே அறிந்த, வேறு தொழில் தெரியாத இந்த ஏழை மக்களின் கைகளில் இழப்பீட்டுத் தொகை வெகுசீக்கிரத்தில் கரைந்துவிடும். மீண்டும் வறுமையில் வாடுவார்கள்.

டாடா நிறுவனம் பல தொழில்களில் முன்னணியில் உள்ள பெரிய நிறுவனம். இரும்புத் தொழிலை உலக அளவில் விரிவு செய்யவுள்ளது. நிலத்தை விற்கும் மற்றும் வேலைவாய்ப்பை இழக்கும் விவசாயிகளின் இழப்பீட்டுத் தொகையில் 75 சதவீதத்தை சம-பங்குகளாக டாடா நிறுவனம் வழங்க வலியுறுத்தினால், அது உண்ணாவிரதம், புறக்கணிப்பு இவற்றைவிட உண்மையான காந்தியமாக அமையும்.

1000 ஏக்கரில் சிங்குர் கார் தொழிற்சாலை நில குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது டாடா நிறுவனம்

கோல்கத்தா, மார்ச் 10: மேற்கு வங்க மாநிலம் சிங்குரில், ரூ. 1 லட்சம் சிறிய கார் தொழிற்சாலை அமைப்பதற்கான 997 ஏக்கர் நில குத்தகை ஒப்பந்தத்தில் டாடா நிறுவனம் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டது.

ஒப்பந்தத்தில் டாடா நிறுவனம் சார்பில் அதன் துணைத் தலைவர் (நிதி) ஆர்.எஸ். தாக்குர், மேற்கு வங்க தொழில் வளர்ச்சிக் கார்ப்பரேஷன் சார்பில் மாநில தொழில்துறைச் செயலர் சபியாசச்சி சென் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

நிலக்குத்தகை ஒப்பந்த விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இந்தக் கார் தொழிற்சாலைத் திட்டத்துக்கு விவசாயிகளிடம் வலுக்கட்டாயமாக பயிர் செய்யும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாகக் கூறி திரிணமூல் காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, 25 நாள்களுக்கு மேல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

உண்ணாவிரதத்தை மம்தா பானர்ஜி ஜனவரி 25-ம் தேதி கைவிட்ட ஒரு வாரத்தில், கார் தொழிற்சாலை அமைக்க நிலத்தை சமன்படுத்துதல் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கும் டாடா நிறுவனத்தை மேற்கு வங்க அரசு அனுமதித்தது.

திரிணமூல் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளின் போராட்டம் படிப்படியாக வலுவிழந்த நிலையில், நில குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

கையகப்படுத்தப்பட்ட 997.11 ஏக்கர் நிலத்துக்காக ரூ. 120 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு மத்தியில் ரூ. 1 லட்சம் கார் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Posted in Agriculture, Communism, Communists, CPI, CPI (M), deal, Displaced, Economy, Factory, Farmers, Farming, Industrialization, Kolkata, Mamata Banerjee, Mamtha, Marxist, Marxist Communist, Medha Patkar, peasants, Pozhichaloor, Protest, residents, Singur, Strikes, Tamil, TATA, TMC, Trinamool Congress, Trinamul, WB, West Bengal, workers | 1 Comment »

Medha Patkar likens Left and Tata Motors Project with Bush and Iraq

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2006

சமூக சேவகி மேதா பட்கர் கைது

கோல்கத்தா, டிச. 3: மேற்குவங்க மாநிலம், சிங்குரில் டாடா கார் நிறுவனத்துக்காக நிலம் கையகப்படுத்தும் இடத்தைப் பார்வையிட சனிக்கிழமை சென்ற சமூக சேவகி மேதா பட்கர் கைது செய்யப்பட்டார்.

சிங்குரில் கார் நிறுவனத்துக்காக 1000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், நிலங்களை அரசு கட்டாயப்படுத்தி கையகப்படுத்துவதாகவும், அங்குள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை போலீஸôர் துன்புறுத்துவதாகவும் தகவல்கள் வந்தன.

இதனால், நிலைமையை ஆராய்வதற்காக மேதா பட்கர், மனித உரிமைக்காக போராடும் தீபங்கர் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் சிங்குருக்கு சென்றுகொண்டிருந்தனர். காசர்பேரி அருகே சென்றபோது அவர்களை போலீஸôர் தடுத்துநிறுத்தினர்.

இதையும் மீறி செல்ல முயன்ற அவர்களை கைதுசெய்தனர்.

———————————————————————————————-

டாடா கார் ஆலைக்கு எதிர்ப்பு: கிராமத்தினர் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு

சிங்குர் (மேற்குவங்கம்), டிச. 3: டாடா நிறுவனத்தின் சிறிய கார் தயாரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் மீது போலீஸôர் ரப்பர் குண்டுகள் நிரப்பிய துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் காயமடைந்தனர்.

மேற்குவங்க மாநிலம் சிங்குர் பகுதியில் ஜாய்மொல்லா கிராமத்தில் டாடா சிறிய கார் தயாரிப்பு ஆலைக்காக நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய நிலத்தில் ஆலையைத் தொடங்குவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி திரிணமூல் காங்கிரஸ் தலைமையில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆலைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சனிக்கிழமை முள்வேலி அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது கிராம மக்கள் சிலர் போலீஸôர் மீது கற்களை வீசினர். அவர்களைக் கலைக்க போலீஸôர் தடியடி நடத்தினர். இதில் 5 பேர் காயமடைந்தனர். இதனால் பதற்றம் அதிகமாகி மேலும் பலர் அங்கு வரத்தொடங்கினர். இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸôர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்தனர், ரப்பர் குண்டு நிரப்பப்பட்ட துப்பாக்கியால் சுட்டனர்.

போலீஸôர் தங்களின் வீடுகளுக்குள் புகுந்து அடித்ததாகவும், வைக்கோல் போருக்கு தீ வைத்ததாகவும் கிராமத்தினர் சிலர் கூறினர். டிஐஜி தலைமையில் பெரும் போலீஸ் படை அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது.

———————————————————————————————-

மேற்குவங்க பேரவையில் திரிணமூல் வன்முறை: ‘ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்’ – சோம்நாத் சட்டர்ஜி

கோல்கத்தா, டிச. 3: மேற்கு வங்க சட்டப்பேரவைக்குள் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அரங்கேற்றிய வன்முறைகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும் என மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலம் சிங்குரில் டாடா கார் தொழிற்சாலை அமைக்கிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கு கார் தயாரித்து விற்பனை செய்ய டாடா முடிவெடுத்துள்ளது. இந்தத் தொழிற்சாலைக்கு மேற்கு வங்க மாநில அரசு நிலம் கையகப்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்திற்கு விளைநிலத்தை கையகப்படுத்தக் கூடாது என திரிணமூல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் தவிர்க்க முடியாமல் சிறிதளவு விளைநிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது என மேற்கு வங்க மாநில அரசு தெரிவித்துள்ளது. பெருமளவு வேலைவாய்ப்பை உருவாக்கும் இந்தத் திட்டத்தை மக்கள் ஆதரிப்பதாகவும் விவசாயிகளை தூண்டிவிட்டு குளிர்காய திரிணமூல் காங்கிரஸ் முயற்சி செய்வதாகவும் மாநில அரசு கூறியது.

இந்நிலையில் வியாழக்கிழமை பேரவைக்குள் அத்துமீறி மம்தா நுழைந்தார். அதைத் தொடர்ந்து அவரது கட்சி உறுப்பினர்கள் பயங்கர வன்முறையை அரங்கேற்றினர். மைக்குகளை பிடுங்கி தாக்கினர். நாற்காலிகள் பெஞ்ச்சுகளை உடைத்து நொறுக்கினர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய தாக்குதலை நேரில் பார்வையிட வரும்படி மக்களவைத் தலைவருக்கு மேற்கு வங்கப் பேரவைத் தலைவர் ஹாசிம் அப்துல் ஹலீம் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று சனிக்கிழமை பேரவையை சோம்நாத் சட்டர்ஜி பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியது:

பேரவைக்குள் நடந்துள்ள தாக்குதல் அதிர்ச்சி அளிக்கக்கூடியது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். காட்டுமிராண்டித்தனமாக செயல்படும் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்றுவது அனுமதிக்கக் கூடியதுதான்.

ஆனால் சம்பந்தப்பட்ட பேரவைகளின் தலைவர்கள்தான் இதுகுறித்து முடிவு செய்யவேண்டும். பேரவைத் தலைவர்களின் அமைப்பில் இதுகுறித்து விவாதித்து முடிவெடுப்போம்.

மேற்கு வங்க பேரவைக்கு பெருமைமிகு வரலாறும் பாரம்பரியமும் உண்டு. பேரவை என்பது மக்களுக்கு சொந்தமானது. அரசுக்கு சொந்தமானதல்ல என்பதை தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

அரசுக்கு எதிராக குறைகள் இருக்கலாம். ஆனால் பேரவைமீது தாக்குதல் நடத்தி அதை நியாயப்படுத்த முடியுமா? பேரவையை பாதுகாக்க முடியாவிட்டால் மேற்கு வங்க ஜனநாயகத்தின்மீது கறைபடிந்து விடாதா?

பேரவை நடத்தை விதிகளை கடைப்பிடிக்காத உறுப்பினர்கள் தங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களின் நம்பிக்கையை அவமதிக்கிறார்கள். உறுப்பினர்களின் இத்தகைய நடவடிக்கைகள்தான் சாதாரண கிரிக்கெட் பயிற்சியாளர்கூட மக்கள் பிரதிநிதிகளை நோக்கி குறைகூறும் நிலையை உருவாக்குகிறது என்றார் சோம்நாத்.

Medha Patkar Interview in Kalki (March first week issue)

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்க அண்மையில் கன்னியாகுமரிக்கு வந்திருந்த சமூகப் போராளி மேதாபட்கர். நமது கேள்விகளுக்கும் சளைக்காமல் பதிலளித்தார்…

நாடு முழுவதும் ஏற்கெனவே எட்டு அணு உலைகள் உள்ள
நிலையில் கூடங்குளத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

‘‘இந்தியாவில் எங்கெல்லாம் அணு உலைகள் இயங்குகின்றனவோ, அங்கெல்லாம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கூடங்குளத்தை மட்டுமல்ல, அனைத்து அணு உலை நிலையங்களையும் தடைசெய்ய வேண்டும் என்பதே எங்கள் போராட்டத்தின் நோக்கம். அதன் தொடர்ச்சியாக, வரும் மார்ச் 19ஆம் தேதி புதுதில்லி ஜந்தர் மந்திரில் அணு உலை எதிர்ப்பு நடவடிக்கை ஒரு தொடர் போராட்டமாக நடக்க உள்ளது. அதற்கு முன்பான அடையாள எதிர்ப்புதான் கூடங்குளத்தில் நடைபெறுகிறது. அணு ஆயுதங்களும், அணுசக்தியும் நாட்டுக்குப் பெரும் ஆபத்து. ஜார்க்கண்ட் மாநிலம் சடுகுடாவில் யுரேனியம் எடுப்பதால் அங்குள்ள ஆதிவாசி மக்கள் புற்றுநோய், வாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் பலவும் அணு ஆயுத ஒப்பந்தத்தைப் புறக்கணித்து வரும் நிலையில்
அமெரிக்காவுடன் நாம் கையெழுத்துப் போட்டுள்ளது தவறு. அதைத் தவிர்த்து, ‘அணு உலை’ என நினைவுச் சின்னமாக்குவதற்கு ஆவன செய்யலாமே!’’

சிங்கூர் பிரச்னையில் உங்கள் போராட்டமும், அரசின் அணுகுமுறையும் எதிரெதிர் திசைகளில் உள்ளனவே?

‘‘மேற்கு வங்காளத்தின் தொழில் துறை அமைச்சர் நிரூபன்சென்கூட எங்கள் தரப்பு நியாயத்தை ஒப்புக்கொண்டார். ஆனால் என்ன செய்வது? அதை அமல்படுத்தும் அதிகாரம் அவரிடம் இல்லையே. காரணம், அரசுக்குப் பெரும் பணக்காரர்களின், ஒப்பந்தக்காரர்களின் பணம் தேர்தல் நேரத்தில் தேவைப்படுகிறதே!

சிங்கூர் பிரச்னையின்போது மேற்கு வங்கக் காவல்துறை என்னை ஒரு சமூக விரோதியைப் போல் நடத்தியது. அன்றைய ஜெயலலிதாவின் காவல்துறையையும், நரேந்திர மோடியின் காவல்துறையையும் விட புத்ததேவின் காவல்துறை நடவடிக்கை மோசமானது. ஒரே வாரத்தில் என்னை மூன்று முறை கைது செய்தார்கள். கொல்கத்தாவுக்கு உள்ளே வரக்கூடாது என்றார்கள். கொல் கத்தாவுக்கு வெளியே என் நண்பர் இல்லத்தில் இருந்தேன். அங்கேயும் வந்து கைது செய்தார்கள். நான் நீதிமன்றத்தை நாடினேன். என்னைக் கைது செய்தது தவறு என்றது நீதிமன்றம். மேற்கு வங்காளத்தில் நான் எங்கும் சுதந்திரமாகச் செல்லலாம் என்றது.

சிங்கூரில் தினம்தோறும் மோதல்கள் ஏற்படுகின்றன. நிலத்தை
விற்றவர்கள், நிலத்தை விற்காதவர்கள் எனப் பிளவுபட்டுக்
கிடக்கிறார்கள். புத்த தேவ் பட்டாச்சாரியாவை அவர் கட்சியினரே சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறார்கள். அவர்களே போராட்டத்தில் ஈடுபட்டது, தொழிற்சங் கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது,
மாநிலத்தில் ஐ.டி. துறை உட்பட பல்வேறு துறைகளை ஸ்தம்பிக்கச் செய்தது எல்லாம் எங்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றிதான்.’’

இன்றைக்கு, பெரும் நகரம் முதல் சிற்றூர் வரை விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாற்றப்படுகின்றனவே…

‘‘இது ஒரு சமூகக் கொடுமை. எதிர்கால விளைவு பற்றித் தெரியாமல் நடக்கும் அக்கிரமம். நம்முடைய விவசாய விளைநிலங்கள் அரசின், அதிகாரவர்க்கத்தின், ஒப்பந்தக்காரர்களின் வேட்டைக் காடுகளாக மாறி வருகின்றன. ஒரு விவசாயியின் விவசாயத்தில் முதலீடு அதிகம். ஆனால், விளைபொருட்களுக்கு அதற்கான விலை இல்லை. கொள்ளை வியாபாரிகள் விவசாயிகளின் வறுமைச் சூழ்நிலையைப் பயன்படுத்தி அவர்களுடைய நிலத்தைக் குறைந்த விலைக்கு வாங்கிவிடுகின்றனர். விவசாயியின் ஏழ்மை நிலையைப் போக்க வேண்டிய அரசு, அதிகாரத் தரகர்களுக்கு ஆதரவாகக் செயல்படுகிறது.’’

Posted in Agriculture, Automotive, Becharam Manna, Cars, Communism, Communist, Communist parties, Communists, CPI, CPI (M), CPI(M), Dankuni, Factory, Farming, Farmlands, Hooghly, Industry, Interview, Kalki, Koodangulam, Koodankulam, Mamata Banerjee, Medha Patkar, Narmada Bachao Andolan, Nuclear, peasants, Rabindranath Bhattacharya, Singur, Singur Krishijami Bachao Committee, Somnath, Somnath Chatterjee, Tata Motors Project, TMC, Trinamool Congress, West Bengal | Leave a Comment »

Spurious Bt cotton seeds drive hundreds of farmer suicides

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006

போலி பி.டி. பருத்தி விதையால் ஏற்பட்ட நஷ்டமே விதர்பா விவசாயிகள் தற்கொலைக்கு காரணம்!

புதுதில்லி, நவ. 27: மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியில் போலியான பி.டி. ரக பருத்தி விதைகளை பயிரிட்டதன் விளைவாக ஏற்பட்ட நஷ்டத்தால் தான் விவசாயிகள் பெருமளவில் தற்கொலை செய்து கொண்டதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தாண்டில் விதர்பா, மற்றும் மாநிலத்தின் மற்றப் பகுதிகளிலும் மொத்தம் 746 விவசாயிகள் (கேரளாவில் 52) தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெருத்த சர்ச்சையை கிளப்பியது. பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சம்பவ இடங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும், விதர்பா பகுதிக்கென தனி நிவாரண உதவிகளை பிரதமர் அறிவித்தார். அதேபோல, மகாராஷ்டிர மாநில அரசும் விவசாயிகளுக்கு பல்வேறு கடன் திட்டங்களை அறிவித்திருந்தது.

மகாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய விவசாயமே பருத்தி தான். அதனால், தான் மும்பை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.

மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவன ஆய்வு: விவசாயிகள் தற்கொலை கொண்டது ஏன் என்பது குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய வேளாண் அமைச்சகம் நாகபுரியில் உள்ள மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, இப் பகுதியில் ஆய்வினை மேற்கொண்ட இந்நிறுவனம் அதன் அறிக்கையை வேளாண் அமைச்சகத்திடம் அளித்தது.

அதில், போலியான பி.டி. ரக பருத்தி விதைகளை விநியோகம் செய்ததால் அவற்றை நம்பி பயிரிட்ட விவசாயிகள் பெருமளவு நஷ்டத்தை சந்திக்க வேண்டியதாயிற்று. பருத்தி பயிரிட வாங்கிய கடன்களை கட்ட முடியாமலும், மறுபடியும் பயிரிட முடியாமலும் ஏற்பட்ட மன உளைச்சலால் தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

80 சதவீதம் போலியானவை: குறிப்பாக, பயிரிட்ட பருத்தியில் 20 சதவீத விதைகள் பி.டி. விதைகளே அல்ல என்றும் தெரிய வந்துள்ளது. மற்ற 60 சதவீத விதைகள் கலப்பட விதைகள் என்றும், மீதி 20 சதவீத விதைகள் தான் தரமான விதைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பருத்தி பயிரிடும் விவசாயிகள் போலியான விதைகளை கண்டறியும் விதத்திலான கருவிகளை அளிக்குமாறு மாநில அரசை மத்திய வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் 11 விவசாயிகள் தற்கொலை

நாகபுரி, நவ. 27: மகாராஷ்டிரத்தில் கடன்சுமை காரணமாக மேலும் 11 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

விதர்பா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்த தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.

இத்துடன், கடந்த ஜூனிலிருந்து அப்பகுதியில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை ஆயிரத்து 136 ஆக உயர்ந்துள்ளது.

இத் தகவலை அப்பகுதியில் செயல்படும் அரசு சாரா தொண்டு நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது.

Posted in Agriculture, Bollgard worm, Bt paddy, BT Rice, Central Institute for Cotton Research, Cotton, Farmers, Genetic Crops, ICAR, Kerala, maharashtra, Monsanto, Nagpur, peasants, Suicide, Vidarba, Vidarbha, Vidharbha | Leave a Comment »

Seven more suicides in Vidharba region

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 27, 2006

விதர்பா பகுதியில் 7 விவசாயிகள் தற்கொலை

நாகபுரி, அக். 28: கடன்தொல்லையால் மகாராஷ்டிரத்தின் விதர்பா பகுதியில் வியாழக்கிழமை வரை 7 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதி விவசாயிகளுக்காக பாடுபடும் விதர்பா ஜன அந்தோலன் என்ற தன்னார்வ அமைப்பு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

  • அகோலா
  • அமராவதி,
  • யவத்மால் மாவட்டங்களில்

இருந்து தலா 2 பேரும் புல்தானா மாவட்டத்தில் இருந்து ஒருவரும் தற்கொலை செய்துகொண்டதாக கூறி, அவர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது அந்த அமைப்பு.
இதன்மூலம் கடந்த ஆண்டு ஜூன் முதல் அப்பகுதியில் 1,035 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக அந்த அமைப்பு மேலும் கூறுகிறது.

Posted in Agriculture, Farmers, Irrigation, NGO, peasants, Poor, Poverty, Suicides, Vidarba, Vidharba, Vidharba Jana Andolan | Leave a Comment »