ஒரு படத்தின் படப்பிடிப்பு… ஒரு குழந்தை படிக்கட்டிலிருந்து உருண்டு விழுந்து அழுகிற மாதிரி காட்சி. குழந்தை பயந்து, தயங்கியது. அந்தக் குழந்தையின் தந்தையே படத்தின் இயக்குநர்.
அவரே தைரியம் கொடுத்து குழந்தையை மாடிப் படிகளில் தள்ளிவிடுகிறார். குழந்தை படிகளில் உருண்டு விழும் காட்சி மிக இயல்பாக அமைந்து பலராலும் பாராட்டப்பட்டது.
அந்த இயக்குநர் கே. சுப்ரமணியம். குழந்தை நட்சத்திரம் பத்மா சுப்ரமணியம். அவருக்கு அப்போது வயது நான்கு. எதையும் பர்ஃபெக்டாகச் செய்ய வேண்டும் என்பது அந்தச் சிறுவயதிலேயே தனது தந்தையிடமிருந்து பத்மா கற்றுக் கொண்டது.
இயக்குநர் கே. சுப்பிரமணியம் _ மீனாட்சி, இவர்களது ஒன்பது வாரிசுகளில் நான்கு பேர் பெண்கள். அவர்களில் கடைக்குட்டிதான் பத்மா.
பத்மா பிறப்பதற்கு முன்பே மைலாப்பூரில் பிரமாண்டமான தனது வீட்டின் ஒரு போர்ஷனில் நிருத்யோதயா என்ற பெயரில் நாட்டியப்பள்ளி நடத்திவந்தார் சுப்பிரமணியம். இங்கு பரதம் உட்பட பல்வேறுவிதமான நடனங்களும் சொல்லித் தரப்பட்டன.
கருவிலிருந்த போது, தாயின் கருப்பையில் இருந்து கொண்டே அபிமன்யு சக்கர வியூகத்தைக் கற்றதுபோல், பத்மாவும் நிருத்யோதயா மாணவிகளின் ஜதி ஒலிகேட்டு, கருவறையிலேயே பிஞ்சு மலர்ப்பாதம் உதைந்து நடனம் கற்றிருப்பாரோ? அதனால்தானோ என்னவோ, சிறுவயதிலேயே நாட்டியத்தின் மீது பத்மாவுக்கு அலாதிப் பிரியம்.
அம்மா மீனாட்சி ஓர் இசைக் கலைஞர். வீணை, வயலின் வாசிப்பார். நல்ல குரல் வளம் கொண்ட பாடகியும் கூட. தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நிறைய பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார். கணவர் எடுத்த சில படங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறார்.
வழுவூர் ராமையாப்பிள்ளை
பத்மா சிறு வயதிலிருந்தே சூட்டிகை. அழகான வட்ட நிலா முகம். நிலவின் நடுவே இரண்டு நட்சத்திரங்கள் போல் மின்னும் அகன்ற கண்கள். எதையும் ஒருமுறை பார்த்தால் உடனே பற்றிக் கொள்வார். எதிலும் தீவிர ஆர்வம். அவரது நடன ஆர்வம் கண்டு தந்தை சுப்பிரமணியம் பரதம் கற்க ஒப்புதல் அளித்தார். மைலாப்பூரில் வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் கற்க அனுப்பினார்கள். அப்போது அவரது வயது ஆறு.
அந்த நேரத்தில், பரதத்தில் பிரபலமாயிருந்த குமாரி கமலா, வைஜயந்திமாலா, லலிதா, பத்மினி அனைவரும் வழுவூராரிடம் பரதம் பயின்ற முத்திரை மாணவிகள். பத்மா நடனம் கற்றுக்கொண்டபோது, உடனிருந்து உதவியவர் நடிகை ஈ.வி. சரோஜா. நடனத்தில் நடைமுறை இலக்கணங்களை மீறி ஜதிகளின் புதிய விதிகளைக் காற்று வெளியில் எழுதத் தொடங்கியது பத்மாவின் தங்க மலர்ப் பாதங்கள்.
அரங்கேற்றம்!
வழுவூர்ப் பாணி நாட்டியத்தில் அழகுச்சுவை அதிகம். லயசுத்தம், அங்க சுத்தம் ஆகியவற்றில்தான் அதிகப்படி கவனம் இருக்கும். அழகுப் பெண்ணான இவருக்கு அவை மிக எளிதாகக் கைவந்தன.
பதினொரு வயதிலேயே அரங்கேற்றம்_மைலாப்பூர் ஆர்.ஆர். சபாவில். எப்போதும், அரங்கேற்றத்தின்போது புதிதாக சலங்கை கட்டிக் கொள்ளமாட்டார்கள். ராசியான ஒருவரின் சலங்கையைக் கட்டிக் கொண்டு மேடையேறுவதுதான் அன்றைய மரபு. இவர் அணிந்து ஆடியது நாட்டியப் பேரொளி பத்மினியின் காற்சலங்கைகளை.
மேடையின் முன் வரிசையில் நடிகர் திலகம், ராஜரத்னம் பிள்ளை, எஸ்.வி. சகஸ்ரநாமம் என்று ஜாம்பவான்களின் ஜமா. அனைவரின் பார்வைகளும் பத்மாவின் மீதே. ஆடத் தொடங்கினார் பத்மா. நடனம் கண்டு மெய் சிலிர்த்தனர் பார்வையாளர்கள். பாராட்டு மழை குவிந்தது.
பி.யூசி. படித்து முடித்ததும் பத்மாவுக்கு டாக்டருக்குப் படிக்க ஆசை. ஆனால், அப்பாவுக்கோ மகள் பெரிய நடனக் கலைஞராக வேண்டும் என்று விருப்பம். அப்போது, கல்வியமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம் பத்மாவிடம், ‘டாக்டர்கள் பலபேர் கிடைக்கலாம். ஆனால், உன்னை மாதிரி டான்ஸர் கிடைக்க மாட்டா. டாக்டர் படிப்பு வேணாம்..’ என்று கூற, அவரது பதிலில் நியாயம் இருந்ததால், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படிப்பு. கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பிரபல நடனக் கலைஞராகப் புகழ் பெற்றிருந்தார் பத்மா.
ரசவாதம்!
கல்லூரியில் படிப்பு; வீட்டில் நடனம். இரண்டிலுமே பத்மா சிறந்தார். நாட்டிய உடையணிந்து பத்மா மேடையேறினால், ஆண்டாள் மீண்டும் பிறந்து வந்தாளா என்று வியக்க வைக்கும். நவரச முத்திரைகள் ஒரு ரசவாதம் போல், அவரது முகங்களில் மாறி மாறி உணர்வுகள் ஆட்டம் போடும். ஜதிக்கு இவர் ஆட்டமா? அல்லது இவரது ஆட்டத்துக்கு ஜதியா என்று தீர்மானிக்க முடியாத நுணுக்கப் பிறழ்வுகள் இல்லாத இயைந்த நடனம் இவருடையது.
பத்மா கல்லூரி படித்துக்கொண்டிருந்த பருவம். இந்திய எல்லை லடாக்கில் போர்வீரர்களுக்காக ஒரு நாட்டிய நிகழ்ச்சி. அங்கு பனி அதிகம். ஆக்ஸிஜன் அளவு 40 சதவிகிதம் இங்கிருப்பதைவிட குறைவு. அங்கு போய் சூழ்நிலையைப் பழகிக் கொள்ளவே ஐந்து நாட்கள் ஆனது. கொஞ்சநேரம் ஆடினாலே மூச்சு வாங்கியது. ஒரு வழியாக வெற்றிகரமாக நிகழ்ச்சியை நடத்திவிட்டுத் திரும்பினார் பத்மா.
‘எவ்வளவோ தடவை வெளிநாடுகளுக்குப் போய் ஆடியிருக்கேன். ஆனால், தாய்நாட்டு எல்லையில் ஆடியது மறக்க முடியாத அனுபவம்’ என்கிறார் பத்மா.
அண்ணன்!
உலகின் பல்வேறு நாடுகளின் மேடைகளை பத்மாவின் சலங்கைகள் அதிர வைத்திருக்கின்றன. நடனத்தில் புதுமை விரும்பியான இவர், ரஷ்ய மியூசிக் கம்போஸர் ஒருவரின் இசைத்தொகுப்பில் ஒரு பகுதியைப் பயன்படுத்தி, ராமாயண ஜடாயு மோட்சத்தை ரஷ்யாவில் நடத்திக் காட்டியபோது, நடனப் பிரியர்கள் ஆனந்த உச்சமெய்தினர். இது ஓர் உதாரணம்தான். பத்மாவின் சாதனைப் பேரேட்டில் இதுபோல் புதுமைகள் ஏராளம் … ஏராளம்!
ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் கால நீட்டம் கொண்டது பத்மாவின் சலங்கை ஒலி. நடனத்தையே உயிர் மூச்சாகவும், உணர்வாகவும் கொண்டதால், திருமணத்தைப் பற்றி நினைக்கவே அவருக்கு நேரமிருந்திருக்காது போலும். பத்மா இப்போது இருப்பது தனது அண்ணன் பாலகிருஷ்ணன் வீட்டில். இன்னொரு தாயாக இருந்து பத்மாவைக் கவனித்துக்கொண்டவர் அண்ணி சியாமளா. ‘இவங்க ரெண்டு பேரும் இல்லேன்னா, நான் சாதிச்சிருக்க முடியாது’ என்று பெருமைப்படுகிறார் பத்மா. அண்ணி சியாமளா மறைந்தபோது, ஆறாத் துயரில் வீழ்ந்தார் பத்மா.
நடிப்பு!
எம்.ஜி.ஆர். உட்பட பல முன்னணி நடிகர்கள் இவரைக் கதாநாயகியாக நடிக்க அழைத்த போதும் மறுத்தார். அவரது முழுக் கவனமும் நடனக்கலையின் மீதே பதிந்திருந்தது. ஓயாத நடனம், அப்பா ஆரம்பித்த நிருத்யோதயா நடனப் பள்ளியை அண்ணன் பாலகிருஷ்ணனுடன் இருந்து கவனித்துக்கொள்ளுதல் என்று கடிகார முட்களைப்போல் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது பத்மாவின் வாழ்க்கை.
கண்ணனுக்கு கவச குண்டலம் மாதிரி பத்மாவுக்கு சலங்கை. நாட்டியத் தாரகை, பாடகி, இசையமைப்பாளர், ஆராய்ச்சியாளர், நடனகுரு என்று பன்முகத் தன்மை கொண்டது பத்மாவின் சாதனைச் சங்கிலி. பத்மஸ்ரீ, பத்மபூஷன், சங்கீத நாடக அகாதமி விருது உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகள் இந்த நடனத் தாரகையால் பெருமை கொண்டன.
‘‘என்னோட அப்பா காலமானபோது, இந்தக் கலையை வசதியற்ற ஏழைகளுக்கு இலவசமாக கற்றுக்கொடுக்கணும்னார். அதைத்தான் நான் பண்ணிக்கிட்டிருக்கேன்’ என்று கூறுகிறார் பத்மா.
பரத முனிவர் இன்றிருந்தால் பத்மாவை நினைத்துப் பெருமைப்பட்டிருப்பார்; ஆனந்தக் கண்ணீர் விட்டிருப்பார்.
_பெ. கருணாகரன்