ஊருக்கு இளைத்தவன்…
உழுபவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது என்பது நம் நாட்டுப் பழமொழி.
உலக வர்த்தக ஸ்தாபனத்தின் (டபிள்யூ.டி.ஓ.) ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இந்தியா போன்ற நாடுகள், உரிய தற்காப்பு சட்டங்களை தேசிய அளவில் இயற்றாததால், கவசம் தரித்துக்கொள்ளாத காலாட்படை வீரர்களாய், வளரும் நாடுகளின் விவசாயிகள் களத்தில் பலியாகிக் கொண்டிருக்கின்றனர்.
தோஹாவில் தொடங்கி இன்றுவரை இதன் பேச்சுவார்த்தைகளில், வல்லரசு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் தங்களுக்குச் சாதகமான விஷயங்களை மட்டுமே வற்புறுத்தி சம்மதிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
பெரிய நிறுவனங்கள் தயாரித்த விதைகளைப் போட்டால்தான் சாகுபடி நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை விவசாயிகளின் மனங்களில் எப்படியோ விதைத்து விட்டார்கள். இந்தியா போன்ற வளரும் நாடுகளில்கூட மன்சான்டோ நிறுவனத்தின் விதைகளும், மரபணுவில் மாற்றம் செய்யப்பட்ட “”பீட்டா காட்டன்” பருத்தி விதைகளும் சர்வசாதாரணமாக புழக்கத்துக்கு வந்துவிட்டன.
தில்லியை மையமாகக் கொண்ட வர்த்தகம், வளர்ச்சிக்கான மையம் (சென்டாட்) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் நமது விவசாயிகளும், நுகர்வோர்களாகிய நாமும் எப்படிச் சுரண்டப்படுகிறோம் என்று ஓரளவுக்குத் தெரியவந்துள்ளது.
உலகின் பூச்சிகொல்லி விற்பனையில் 65% சந்தையை பேயர்ஸ், சின்ஜென்டா, பிஏஎஸ்எஃப், டெü, மன்சான்டோ என்ற நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.
உலகின் விதை விற்பனையில் 72%, மன்சான்டோ, டூபான்ட், சின்ஜென்டா, குரூப் லிமாகரின் என்ற 10 நிறுவனங்கள் மூலமே நடைபெறுகின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் விற்பனையில் 91% மன்சான்டோ வசம் உள்ளது.
10 நிறுவனங்கள் மட்டும், தின்பண்டங்களுக்கான உலக சில்லறை வர்த்தகத்தில் 24% சந்தையைப் பிடித்துள்ளன. அதன் மதிப்பு -மயக்கம்போட்டு விழுந்துவிடாதீர்கள் -சுமார் ஒரு கோடியே நாற்பது லட்சம் கோடி ரூபாய்கள். அதில் வால்மார்ட், கேரிஃபோர், மெட்ரோ ஏஜி, அஹோட் ஆகியவற்றின் பங்கு 64%.
வாழைப்பழ விற்பனையில் மட்டும் சிகிடா, டோல் ஃபுட்ஸ் என்ற நிறுவனங்கள் 50% சந்தையைப் பிடித்துவைத்துள்ளன.
யூனிலீவர், புரூக்பாண்ட், காட்பரி, ஸ்வெப்பீஸ், அல்லய்ட்-லியான்ஸ் ஆகியவை தேயிலை விற்பனையில் 80 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன.
கார்கில், செனக்ஸ், ஏடிஎம், ஜெனரல் மில்ஸ் ஆகிய நிறுவனங்கள் உலகின் தானிய விற்பனையில் 60 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன. கேரிஃபோர் என்ற நிறுவனத்தின் வருவாய், சிலி நாட்டின் மொத்த தேசிய வருமானத்தைவிட அதிகம். வால்மார்ட் நிறுவனத்தின் வருமானம் பாகிஸ்தானின் தேசிய வருமானத்தைவிட 3.2 மடங்கு அதிகம்.
கார்கில் நிறுவனத்தின் வருமானம் ருமேனியா நாட்டின் தேசிய வருமானத்துக்குச் சமம்.
இந்தியாவில் தேயிலையின் சில்லறை விற்பனை விலை ஒரு கிலோ ரூ.160. ஆனால் தேயிலைச் சந்தையில் ஏலத்தில் ஒரு கிலோ ரூ.50க்குத்தான் வாங்கப்படுகிறது. மூன்று மடங்கு விலையில் விற்கப்படுகிறது.
உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் அடைத்து கடைகளில் ஒரு கிலோ ரூ. 143-க்கு விற்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உருளைக்கிழங்குக்குத் தரப்படும் கொள்முதல் விலையைப்போல இது 28 மடங்கு.
கோதுமை இறக்குமதியில் தொடங்கி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எல்லா முடிவுகளுமே விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகிறது. அதன் விளைவுதான், பல்வேறு மாநிலங்களில் காணப்படும் விவசாயிகள் தற்கொலை.
மத்திய, மாநில அரசுகளில் உள்ளவர்கள் நமது விவசாயிகளின் நலனைப் பற்றி எந்த அளவுக்கு அக்கறை செலுத்துகின்றனர் என்பதைத்தான் மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் தெரியப்படுத்துகின்றன. ஊருக்கு இளைத்தவன் உழவுத் தொழில் புரிபவர் என்கிற நிலை தொடர்வது நல்லதல்ல.