Panikkudam – Tamil Magazine Details
Posted by Snapjudge மேல் மே 3, 2007
பெண்ணியச் சிந்தனைகளையும் பெண் எழுத்தையும் கலந்து தருகிறது பனிக்குடம் இதழ்
– இளமதி
எண்ணற்ற நாளிதழ்களும் வார, மாத இதழ்களும் வாசிப்புத் தளத்திற்கும் அறிவுத் தளத்திற்கும் வளம் சேர்க்கும் விதமாய்த் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன. கலைச் சேவை செய்யப் பிறந்த பத்திரிகைகள்கூட வியாபார ரீதியாக வெற்றி பெறப் பரபரப்பைத் தேடித் தேடி எழுதிக்கொண்டிருக்கின்றன.
இத்தகைய வியாபாரமும் பரபரப்பும் ஒரு புறம். மறுபுறம் உலக இலக்கியத்தைத் தமிழ் மக்களின் இலக்கிய அறிவுக்கு எட்டச் செய்வதற்காகவே தொடங்கப்பட்டு இரண்டு, மூன்று இதழ்களோடு நின்றுபோகும் சிறுபத்திரிகைகள். இவற்றில் சில பத்திரிகைகள் மட்டுமே வியாபாரமயமாகிப்போன இந்தப் பத்திரிகை உலகில் தமது இருப்பை நிலைநிறுத்திக்கொண்டிருக்கின்றன. சில பத்திரிகைகள் படைப்புலகில் நிலைபெறத் தமது நோக்கங்களையும் லட்சியங்களையும் சமரசம் செய்துகொண்டு தொடர்ந்து வெளிவருகின்றன
சிறுபத்திரிகைத் தளத்தில் புதிதாகச் செயல்படும் முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை. ஏனென்றால், தனக்கு முன்பாக வந்து நின்றுபோன இதழ்களின் வெற்றியும் தோல்வியும் எந்தத் தயக்கத்தையும் இந்தப் பத்திரிகைக்கு ஏற்படுத்தவில்லை.
இன்றைய சிற்றிதழ்களின் வரிசையில் பனிக்குடம் என்ற காலாண்டிதழ் குறிப்பிடப்பட வேண்டியது. பனிக்குடத்தின் ஆசிரியர், கவிஞர் குட்டி ரேவதி. இது வரை ஆறு இதழ்கள் வெளிவந்திருக்கின்றன.
“பெண் எழுத்தின் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால வடிவங்களைப் பதிப்பிக்கும் முயற்சி”யைப் பனிக்குடம் தொடர்வதாகக் கூறுகிறது இந்த இதழின் ஆசிரியர் குறிப்பு.
பெண் வெளி, பெண்ணியம், பண்போவியம், நேர்காணல், உரையாடல், நூல் அறிமுகம், மதிப்புரை, கவிதை, சிறுகதை, இதழியல் பார்வை, புகைப்படம், ஓவியக் கலைஞர்களின் அறிமுகம் என்று பல்வேறு பகுதிகள் இந்த இதழில் இடம்பெற்றிருக்கின்றன.
புகைப்படம், ஓவியம் என்ற இரண்டு துறைகளிலும் உள்ள பெண் கலைஞர்களைப் பற்றிய அறிமுகப் பக்கம் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. இது மேலைநாட்டுக் கலைஞர்களைப் பற்றிய அறிமுகமாக இருக்கிறது. அம்பை, மகாஸ்வேதாதேவி போன்றவர்களுடைய நேர்காணல்களும் குறிப்பிடத்தக்கவை.
இது வரை வந்த இதழ்களில்
- அம்பை,
- கமலா தாஸ்,
- வ. கீதா,
- க்ருஷாங்கினி,
- பூரணி,
- பாமா,
- சிவகாமி,
- பிரசன்னா ராமசாமி,
- கனிமொழி,
- வெண்ணிலா,
- சல்மா,
- உமா மகேஸ்வரி,
- சுகிர்தராணி,
- தமிழச்சி,
- தமிழ்ச் செல்வி,
- புதிய மாதவி,
- காயத்திரி காமஸ்,
- சி.பி. கிருஷ்ணப்பிரியா,
- குட்டி ரேவதி போன்ற குறிப்பிடத்தக்க படைப்பாளிகள் பங்களித்திருக்கிறார்கள்.
நல்ல நவீன கவிதைகளின் பொருட்செறிவைக் கொண்ட நவீன ஓவியங்களைத் தாங்கிய பனிக்குடத்தின் முன் அட்டைகள் மீண்டும் கவனிக்க வைப்பவை.
பெண் எழுத்தைத் தனது இயக்கக் களமாகக் கொண்டு வெளிவரும் பனிக்குடம் இதழில், ‘இதழியல் பார்வை’ என்னும் பகுதி, பத்தொன்பதாம் நூற்றாண்டில் இதழியல் துறையில் (குறிப்பாகத் தமிழ்ப் பத்திரிக்கைகளில்) பங்களித்த பெண் ஆளுமைகள் குறித்த அரிய தகவல்களைத் தருகிறது. நேர்காணல்கள் இடம்பெறும் ‘பண்பாளுமை’ பகுதியில் பெண் படைப்பாளிகள் மற்றும் ஆளுமைகளின் விரிவான வெளிப்பாட்டைக் காண முடிகிறது.
‘பெண்வெளி’ என்ற பகுதியில் சிறப்பான விவாதங்கள், ஆரோக்கியமான உரையாடல்கள் தரப்பட்டிருக்கின்றன. பனிக்குடத்தில் இடம்பெறும் மொழிபெயர்ப்புகளைக் கொண்டு, இந்தப் பத்திரிகை தமிழ்ப் பெண் எழுத்துக்கான வெளியைக் கடந்து பிற மொழி எழுத்துக்குமான வெளியாகவும் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
பெண் இலக்கிய உலகிற்குப் பனிக்குடம் குறிப்பிடத் தகுந்த பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கிறது.
பனிக்குடம்
பனிக்குடம் பதிப்பகம்,
பெண்ணிலக்கிய வெளியீட்டாளர்,
137 (54), இரண்டாம் தளம்,
ஜானி ஜான் கான் சாலை,
சென்னை – 14.
விலை: ரூ. 10
மறுமொழியொன்றை இடுங்கள்