சோஷலிஸத்துக்குத் துரோகம் செய்யும் சோஷலிஸ்டுகள்
டி.ஜே.எஸ். ஜார்ஜ்
சோஷலிஸத்தை ஒழித்துக்கட்டியவர்கள் யார்? வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், சோஷலிஸத்தை சோஷலிஸ்டுகளே, அதிலும் குறிப்பாக உலகின் பல பகுதிகளில் கம்யூனிஸ்டு அரசுகளை அமைத்தவர்களே ஒழித்துக் கட்டியிருக்கின்றனர் என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டியிருக்கும்.
உலக நாடுகளில் கம்யூனிஸ ஆட்சி நடைபெற்றுவந்த அனைத்து நாடுகளும் ~ ஒன்றே ஒன்றைத் தவிர ~ தம் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு முதலாளித்துவப் பாதையைத் தழுவிக்கொண்டுவிட்டன. விதி விலக்கான அந்த நாடு இந்தியா. அதனால்தான், ஜோதி பாசுவால் தொடங்கிவைக்கப்பட்டிருப்பதை ஆரோக்கியமான விவாதம் என நாம் வரவேற்க வேண்டும்.
நாம் முதலாளித்துவ சமுதாயத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கும் பொழுது, சோஷலிஸம் சாத்தியமல்ல என்றே அவர் கூறியிருக்கிறார். கடுமையான சுரண்டல் நிலவும் சமூகமுறையான முதலாளித்துவத்தை அங்கீகரிப்பதாக அதைக் கொள்ள முடியாது.
எனினும், இந்தியாவின் மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான அவர், மார்க்ஸ் உருவாக்க எண்ணிய சோஷலிஸ சமுதாய முறைக்கு எந்த நாட்டிலும், கம்யூனிஸ ஆட்சிமுறை அமலில் இருந்த நாடுகளில்கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதை உணரத் தவறிவிட்டார்.
எடுத்துக்காட்டாக, சோவியத் ஒன்றியத்தில் மார்க்சிஸம் ஒருபொழுதும் நடைமுறைப்படுத்தப்படவேயில்லை. தொடக்கத்திலிருந்தே அங்கு லெனினிஸம்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. நடைமுறை அரசியலுக்கு ஏற்ப அக் கொள்கையைத் தகவமைப்பதாகக் கூறி, மார்க்சிஸத்துக்கு மறுவிளக்கம் அளித்து, முற்றிலும் புதியதான கொள்கைகளை அறிமுகப்படுத்தினார் லெனின். சோவியத் கம்யூனிஸத்தின் அடிப்படைக் கொள்கையானது, “மார்க்சிஸம் ~ லெனினிஸம்’ என அழைக்கப்பட்டது.
சீனாவில் அது, “மார்க்சிஸம் ~ லெனினிஸம் ~ மா சே துங் சிந்தனைகள்’ என மாறியது. அதன் உட்பொருள் தெளிவானது: சீனாவில் சோஷலிஸக் கொள்கையைப் பொருத்தவரை “மா சே துங் சிந்தனை’களே இறுதியானவை. அந்த நிலைமை மாவோவின் காலத்தோடு முடிந்துபோய்விட்டன. அதன் பிறகு, சிறந்த யதார்த்தவாதியான டெங் சியாவோபிங், “மனிதாபிமானத்துடன்கூடிய சோஷலிஸம்’ என்ற கொள்கையைக் கொண்டுவந்தார். அது ஒரு முக்கியமான கோஷமாகும்.
எந்தப் பெருந்திரளான மக்களை சோஷலிஸத்தை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமோ அவர்களையே கம்யூனிஸம் கவர்ந்திழுக்காமல் போனதற்கு, அதில் மனிதாபிமான அம்சம் குறைவுபட்டிருந்ததே காரணமாகும்.
ஸ்டாலினும் மாவோவும் தனிநபர் சர்வாதிகாரத்தைத்தான் நிறுவினார்களே தவிர, தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தையல்ல. அந்தக் கால கட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பெருமளவிலான மரணதண்டனைகள் சோஷலிஸத்தின் முகத்தையே கோரமாக்கிவிட்டன.
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது மாநாட்டில் நிகிடா குருஷ்சேவ் ஆற்றிய வரலாற்றுப் புகழ்மிக்க உரை அதை அம்பலப்படுத்தியது. அது உணர்ச்சிபூர்வமான உரை. ஆனால், அவர் ஆற்றியது அவரது வரைவு உரையைவிட சற்று மென்மையாக்கப்பட்ட வடிவமாகும்.
மாலட்டோவ் போன்ற பழைய ஸ்டாலினிசவாதிகளின் வற்புறுத்தலை அடுத்து, ஸ்டாலின் “கட்சிக்கு ஆற்றிய பெரும் சேவைகளை’ குருஷ்சேவ் அங்கீகரித்தார். ஆனால், பூர்வாங்க விவாதங்களிலும் மூல வரைவு அறிக்கையிலும், “”கட்சியை ஸ்டாலின் அழித்துவிட்டார். அவர் மார்க்சியவாதியே அல்ல. மனிதன் புனிதமானவை எனக் கருதுவனவற்றையெல்லாம் அவர் அழித்தொழித்துவிட்டார்” என்று குருஷ்சேவ் குறிப்பிட்டிருந்தார். (2007-ல் “த கார்டியன்’ இதழில் கொர்பச்சேவ் எழுதியிருந்த கட்டுரையில் இதைத் தெரிவித்துள்ளார்)
அமைதியின் மீதான விருப்பம், பாதுகாப்பு உணர்வு, உழைப்பின் மூலமாக தானும் தனது குடும்பமும் வளம் பெற முடியும் என்னும் நம்பிக்கை போன்ற, மனிதன் புனிதமாகக் கருதுவனவற்றை எந்தக் கொள்கையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்டுகள் இதைப் புறக்கணித்தனர். அதன் விளைவாக அவர்கள் அதிகாரத்திலிருந்து வீழ்ந்தார்கள் அல்லது அவர்கள் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
60 ஆண்டுகளாகியும் ஏன் வளர்ச்சி அடையவில்லை என்ற கேள்வியை இந்திய இடதுசாரிகள் தமக்குத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.
உண்மையில், மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் அவர்கள் தமது செல்வாக்கை இழந்திருக்கின்றனர். மிகச் சிலரால், பெருவாரியான மக்கள் சொல்ல முடியாத அளவுக்குச் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையிலும் அவர்களால் வளர முடியவில்லை.
இடதுசாரித் தலைவர்களில் பலர் தமது தனிப்பட்ட வாழ்க்கையில் முதலாளித்துவ ரசனைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், சுரண்டலுக்கு ஆளான மக்களோ நக்சலிஸம் போன்ற இயக்கங்களை நோக்கியும், மத அடிப்படைவாதத்தை நோக்கியும் சென்றுகொண்டிருக்கின்றனர்.
இடதுசாரிகள் சோஷலிஸத்துக்குத் துரோகம் இழைத்துவிட்டனர். சமத்துவம், சமதர்மம் என்ற அடிப்படையில் ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகள் சோஷலிஸத்தை நெருங்கிச் சென்றுகொண்டிருக்கின்றன.
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 30 ஆண்டுகளாகப் பதவியில் இருந்தபோதிலும் வறுமையின், சிறுமையின் அடையாளமாக விளங்கும் கைரிக்ஷாவை இந்திய இடதுசாரிகளால் ஒழிக்க முடியவில்லை.
இடதுசாரிகளின் தோல்வியானது, அபாயகரமான ஓர் அரசியல் தோன்றுவதற்கு ~ ஜமீன்தாரி சிந்தனை கொண்ட வகுப்புவாத அரசியலுக்கு ~ வழிவகுத்துக் கொண்டிருக்கிறது. என்னே துயரம்!