Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘success’ Category

How to be successful in the Tamil Film Industry – Tips & Backgrounders: Cinema Express

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

நேர்மை வேண்டும்

புரொடக்ஷன் மேனேஜர் கம் புரொட்யூஸர் பாபுராஜா

“”சினிமா…. ஒரு நல்ல தொழில். மற்ற எல்லா தொழில்களிலும் லாபத்தை மட்டும்தான் எதிர்பார்க்க முடியும். ஆனால் சினிமாவில் மட்டுமே லாபத்துடன் சேர்த்து நல்ல பெயரையும் சம்பாதிக்க முடியும்” என்றார் தயாரிப்பாளரான ஆர்.பி.செüத்ரி.

ஒரு படத்தின் தயாரிப்பாளர் ஆக வேண்டுமெனில் பெருமளவு முதலீடு போட வேண்டியிருக்கும். பணமிருந்தால் புரொட்யூஸராகி விடலாம். ஆனால் அந்த பணத்தைக் கொண்டு வராதவர்களும் கூட தயாரிப்பாளர் ஆகிவிடும் அதிசயம் சினிமாவில் மட்டுமே சாத்தியப்படும்! தொடர்ந்து நான்கு படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக (புரொடக்ஷன் மேனேஜர்) வேலை பார்த்தால் போதும். திறமையும், நேரமும் கூடும்பட்சத்தில் அவர்கள் தயாரிப்பாளர் ஆவது சகஜமானதுதான்.

ஆர்.பி. செüத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸில் பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக புரொடக்ஷன் மேனேஜராகவும், ஜெ. ஜெ. குட் ஃபிலிம்ஸின் அதிபராகவும் இருந்து வருபவர் பாபுராஜா.

புரொடக்ஷன் மேனேஜரின் அசிஸ்டெண்ட் ஆக நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி இங்கே நமக்கு வழிகாட்டுகிறார் அவர்.

இந்த இதழில் பாபுராஜா சொல்வதைக் கேட்போம்.

“”நான் உதவி இயக்குனரா வரணும்னு நினைச்சேன். ஆனா வந்த இடத்தில் அப்படி ஆக முடியல. மலேசியா வாசுதேவன் சார் எடுத்த முதல் படமான “நீ சிரித்தால் தீபாவளி’யில் ஆஃபீஸ் பையனா வேலை பார்த்தேன். 1991-ம் வருஷம்னு நினைக்கிறேன். அப்புறம் ஒரு சில படங்கள் வொர்க் பண்ணிக்கிட்டிருந்தேன்.

டைரக்டர் ராஜகுமாரன் சார் மூலமா விக்ரமன் சார் நட்பு கிடைச்சது. அவர் என்னை செüத்ரிசார்கிட்டே அறிமுகப்படுத்தி, “பூவே உனக்காக’ படத்தில புரொடக்ஷன் மேனேஜரா வொர்க் பண்ண வச்சார். என்னோட வொர்க்கைப் பார்த்த செüத்ரி சார், விக்ரமன்கிட்டே, “இவரு இங்கேயே இருக்கட்டும்’னு கேட்டுக்கிட்டார். அதிலிருந்து இருபத்தி அஞ்சு படங்களுக்கு மேல சூப்பர் குட்ல புரொடக்ஷன் மேனேஜரா வொர்க் பண்ணிட்டிருக்கேன்.

“விண்ணுக்கும் மண்ணுக்கும்’ ஷூட்டிங் நடந்துகிட்டிருந்தபோதுதான் சரத்குமார் சாரும், செüத்ரி சாரும் நீங்க புரொட்யூஸர் ஆகிடுங்க’ன்னு சொன்னாங்க. “அரசு’ படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளரா அறிமுகமானேன். அப்புறம் “சத்ரபதி’ தயாரிச்சேன். இப்போ “நினைத்து நினைத்து பார்த்தேன்’னு ஒரு படம் பண்றேன்.

தயாரிப்பு நிர்வாகின்னா ஒரு படத்தின் தயாரிப்பாளருக்கும், டைரக்டருக்கும் பாலமா இருக்கிறவர். சினிமாவைப் பொறுத்தவரை எல்லாத்துக்கும் திறமை முக்கியம். இந்த வேலைக்கு மிகமிக முக்கியம் நேர்மை. அது இருந்தால்தான் லாங் லைஃப்பா நீடிக்க முடியும். சரியான உழைப்பும் அவசியம்.

உங்க மேல நம்பிக்கை இருந்தால்தான் நீங்க நிரந்தரமா ஒரு கம்பெனியில வொர்க் பண்ண முடியும். நம்பிக்கை இல்லைன்னா நீங்க யார்கிட்டேயும் வொர்க் பண்ண முடியாது. புரொடக்ஷன் மேனேஜர்னா நடுநிலைமை வகிப்பது நல்லது.

அதாவது நீங்க புரொட்யூசருக்கும் சப்போர்ட் பண்ணக்கூடாது. டைரக்டர், டெக்னீஷியன், ஆர்ட்டிஸ்ட்கள்னு யாருக்கும் சப்போர்ட்டா இருக்கக்கூடாது. ஒரு நடிகருக்கு இவ்வளவுதான் சம்பளம்னா அதை கரெக்ட்டா வாங்கிக் கொடுக்கணும். யாருக்காகவும் ஒருதலைபட்சமா செயல்பட்டால் பேர் கெட்டுப் போயிடும். நடிகர்- நடிகை, டெக்னீஷியன்கள் எல்லார்க்கும் சம்பளம் ஃபிக்ஸ் பண்றதும் நாங்கதான்.

எல்லா விஷயங்களையும் தயாரிப்பாளருக்கு சொல்வோம். ஒரு சில தயாரிப்பாளர்தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து பார்ப்பாங்க. செüத்ரி சாரெல்லாம் ஒரு படத்துக்கு அதிகபட்சமே நாலஞ்சு தடவைதான் ஸ்பாட்டுக்கு வந்து பார்ப்பார். úஸô, நாங்க ஒரு தயாரிப்பாளர் மாதிரிதான் அங்கே வொர்க் பண்ணிட்டிருப்போம்.

நாங்க சரியா வொர்க் பண்ணலைன்னா அன்னிக்கு ஷூட்டிங்கே நடக்காதுன்னா பார்த்துக்குங்களேன். எங்களுக்கு அடுத்தபடியா அதிக நேரம் வொர்க் பண்றது டிரைவர்கள்தான்.

ஒரு படத்துக்கு, புரொடக்ஷன் மேனேஜர் மினிமம் மூணுபேரையாவது அசிஸ்டெண்ட்டா வச்சிருப்பார். எல்லார்க்கும் ஒவ்வொரு வேலைகள் இருக்கும். ஒருத்தர் கார் புரோக்ராம் பண்ணுவார். அதாவது ஆர்ட்டிஸ்ட்களுக்கு வண்டி அனுப்பி ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கொண்டு வரவைக்கிறது. அப்புறம் ஷூட்டிங் முடிஞ்சதும் அவங்களை ரூம்ல கொண்டு போய் ட்ராப் பண்ற வொர்க்கை கவனிப்பார்.

இன்னொருத்தர், லொக்கேஷனை பார்ப்பார். அதாவது மறுநாள் ஷூட்டிங்குக்கு… ஹீரோயின் கோவில்ல சாமி கும்பிடுற சீன் இருக்குதுன்னு டைரக்டர் எங்ககிட்டே சொல்லியிருப்பார். நாங்க, அதற்குத் தகுந்த மாதிரி கோவில் தேடி அதை டைரக்டர்கிட்ட காட்டி முதல்ல ஓ.கே. வாங்குவோம். அப்புறம் அது செட் ஆச்சுதுன்னா அங்கே பெர்மிஷன் சரியா ஏற்பாடு பண்ணி வச்சிருப்போம்.

சில நேரங்கள்ல என்னால வொர்க்கைக் கவனிக்க முடியலைன்னா ஆர்ட்டிஸ்ட்களுக்கு புரோக்ராம் சொல்றதிலிருந்து என்னோட வொர்க்கை எல்லாம் மூணாவது ஆள் கவனிச்சிக்குவார். பெரிய பட்ஜெட் படம்னாலும் மூணே மூணு அசிஸ்ட்டெண்ட் போதும்.

டைரக்டர்களுடைய தேவைகள் எல்லாத்தையுமே முழுமையா, அவர் கேட்ட நேரத்தில் அதாவது சரியான நேரங்களில் நடிகர்- நடிகைகளின் தேதிகள், டெக்னீஷியன்களின் தேதிகள், லொக்கேஷன் பெர்மிஷன் என எல்லாவற்றையும் அமைத்துக் கொடுப்பதுதான் எங்களின் வேலை.

ஆனால் டைரக்டர் சொல்வதை மட்டுமே கேட்டு, அதன்படி நடப்பது மட்டுமே வேலையின்னு நினைக்கக் கூடாது. படத்தோட முழுக்கதையையும் நாங்க தெரிஞ்சிருந்தால்தான் டைரக்டர் திருப்திபடக்கூடிய அளவிற்கு எங்களால் வொர்க் பண்ண முடியும்.

உதாரணமா, டைரக்டர் எங்ககிட்டே ஒரு லொக்கேஷன் கேட்கிறார்னா, நாங்க அவர் நினைக்கிற மாதிரியான ஏதாவது ஒரு லொக்கேஷனைத்தான் காண்பிக்க முடியும். ஆனா படத்தோட கதை எங்களுக்கும் தெரியும்போது, சரியான லொக்கேஷனை டக்குன்னு காண்பிச்சிடலாம். இப்ப உள்ள டைரக்டர்கள் யாரும் பாகுபாடு பார்க்கறதில்ல. அதனால எல்லாருமே அவங்களோட படத்தோட முழுக் கதையையும் எங்ககிட்ட சொல்லிடுறாங்க. அப்பத்தானே ஒரு கேரக்டருக்கு இவரை மாதிரி ஒரு ஆள் வேணும்னு டைரக்டர் கேட்கிறப்ப கொண்டு வர முடியும்?

புரொடக்ஷன் மேனேஜர் வேலைங்கறது ஒரு சின்ன வேலை கிடையாது. தயாரிப்பாளர் பணம் போடுறதோட சரி! சிலர் ஷூட்டிங் நடக்கற இடத்துக்கே வரமாட்டாங்க.
காலையில ஏழு மணிக்கு ஷூட்டிங் நடத்தணும்னா நாங்க அதிகாலை மூணு மணிக்கு எழுந்திரிச்சால்தான் அந்த ஷூட்டிங்கை நடத்த முடியும்.

புரொடக்ஷன் எக்ஸிகியூடிவ், புரொடக்ஷன் அசிஸ்டெண்ட்ஸ் என நாங்க எல்லாம் மூணு மணிக்கே எழுந்திரிச்சு, எல்லார்க்கும் வண்டிகள் அனுப்பிச்சிடுவோம். நடிகர்- நடிகைகள் எல்லாரையும் ஸ்பாட்டுல அசம்பிள் பண்ண வேண்டியிருக்கும். அப்படி கரெக்ட்டா ஷூட்டிங் ஏழு மணிக்கு தொடங்கிடுச்சின்னா, பல பிரச்சினைகளும் தொடங்க ஆரம்பிக்கும். சில ஆர்ட்டிஸ்ட்டுகள் மதியம் பனிரெண்டு மணிக்கு வரச் சொல்லியிருப்பாங்க.

அவங்களுக்கு தகவல் சொல்லி ரெடி பண்ணனும். அப்புறம் மறுநாள் ஷூட்டிங்கிற்கு தேவையானதையும் ரெடி பண்ணனும். கிட்டத்தட்ட நைட் பதினோரு மணி வரைக்கும் எங்க வொர்க் போயிக்கிட்டு இருக்கும்.

காலையில மூணு மணிக்கு எழுந்திரிச்சதிலிருந்து நைட்டுல பதினோரு மணிக்கு படுக்கப் போறவரைக்கும் நடைமுறை சிக்கல்களாகத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். நிம்மதியான சாப்பாடு சாப்பிட முடியாது. நிம்மதியா தூங்கிட முடியாது. டென்ஷன் இருந்துட்டே இருக்கும்.

டைரக்டர்தான் கேப்டன் ஆஃப் த ஷிப்னு சொல்லுவாங்க. úஸô, படம் ஜெயிக்கணும்ங்கற டென்ஷன்ல டைரக்டர் இருப்பார். ஒரு டைரக்டருக்கு அடுத்தபடியா அத்தனை டென்ஷன்களும் எங்களுக்குத்தான் இருக்கும். சரியான டயத்துல சரியா எடுக்கணுமேங்கற டென்ஷன் அவருக்கு… ஒரு ஆர்ட்டிஸ்ட் வர்றதுக்கு பத்து நிமிஷம் லேட் ஆனாக்கூட டைரக்டருக்கு நாங்க பதில் சொல்லி ஆகணும்.

காலையில உள்ள ஷூட்டிங்கிற்கு வர வேண்டிய நடிகருக்கு நாங்க கார் அனுப்பிச்சிருப்போம். ஆனா அது போய் எங்கேயாவது பிரேக் டவுன் ஆகி நிற்கும். அந்த நடிகர் வரலைன்னு டைரக்டர் எங்க மேல டென்ஷனாயிடுவார். அதுக்கு பதில் சொல்லணும்.

ஒரு லொக்கேஷனை ஃபிக்ஸ் பண்ணி வச்சிருப்போம். அங்கே ஏதோ ஒரு குழப்பத்துல வேற யாருக்காவது அன்னிக்கு அந்த லொக்கேஷனை கொடுத்து வச்சிருப்பாங்க. அதை க்ளீயர் பண்ணி வாங்க வேண்டியிருக்கும். úஸô, எல்லா வகையிலும் எங்களுக்கு டென்ஷன் இருக்கும்.

யூனிட்ல உள்ள யாராவது ஒருத்தர் வர லேட்டானாக்கூட சிரமம்தான். ஒரு படத்துக்கு நூறு பேர் வொர்க் பண்றாங்கன்னா அத்தனை பேரும் ஸ்பாட்டுல இருந்தால்தான் வொர்க் நடக்கும். டைரக்ஷன், எடிட்டிங், கேமரான்னு எல்லாத்தையும் நீங்க இன்ஸ்ட்டியூட்ல படிச்சிட்டு, இல்ல புத்தகங்களை படிச்சு தெரிஞ்சுகிட்டோ வந்திடலாம்.

ஆனா இதுக்கு அப்படி கிடையாது. அனுபவம்தான் அவசியம். இந்த தொழிலுக்கு மெமரி பவர் ரொம்ப முக்கியம். ரொம்பப் பேச வேண்டியிருக்கும். உதாரணமா, நமக்கு தேவைப்படுற லொக்கேஷனுக்கு ரொம்ப அமெüண்ட் கேட்பாங்க. பேரம் பேசி கம்மியான அமெüண்ட்ல அதை முடிக்கணும். செலவை சுருக்கணும்.

டைரக்டர் தன்னோட ஸ்கிரிப்ட் ரெடியானதும், அதை எத்தனை நாள்ல முடிச்சிடலாம்னு ப்ளான் பண்ணிட்டார்ன்னா… அந்த ஸ்கிரிப்ட்டுக்கு எவ்வளவு செலவு பண்ணவேண்டியிருக்கும்னு நாங்க கரெக்டா சொல்லிடுவோம். முன்னாடியெல்லாம் பட்ஜெட் போட்டு, படங்கள் பண்ணினாங்க. ஆனா இப்ப பட்ஜெட்ங்கறது யாரு கையிலேயும் கிடையாது. ஆனா டைரக்டர் நினைச்சா சாத்தியம்.

டைரக்டர் நினைச்சால்தான் பட்ஜெட்டை ஏத்தவோ, இறக்கவோ முடியும். புரொடக்ஷன் மேனேஜர் ஓரளவுதான் செலவுகளை மிச்சப்படுத்த முடியும். பட்ஜெட் அதிகமாகுறதும், கம்மியாகுறதும் டைரக்டர் கையிலதான் இருக்கு. இப்ப யாரும் பட்ஜெட் பத்தி பேசுறதில்ல. டைரக்டர்கிட்டே கதையை கேட்கிறப்பவே, இதை நம்பளால பண்ண முடியுமான்னு புரொட்யூசர்கள் யோசிக்க ஆரம்பிச்சிடுவாங்க. டைரக்டர் சொன்ன கதைக்கு தகுந்த செலவுகளை பண்ணினால் மட்டுமே குவாலிட்டியை எதிர்பார்க்க முடியும்.

அதனால இப்ப செலவு பண்ணிதான் ஆகவேண்டிய கட்டாயம் இருக்கு. நியாயமா ஒரு படத்தோட கதைக்கு என்னென்ன தேவையோ அதற்கு செலவு பண்ணித்தான் ஆகணும். ஆனால் எங்கே பட்ஜெட்டைக் குறைக்க முடியும்னா…. நெகட்டிவ், அப்புறம் ஷூட்டிங் டேட்ஸ் இதுலதான் செலவை கம்மி பண்ண முடியும்.

அதாவது ஒரு படத்துக்கு பதிமூணாயிரம் அடி ஃபிலிம் போதும். ஆனா சிலர் லட்சக்கணக்கான அடி ஃபிலிமை வீணடிப்பாங்க. ஐம்பது சீன் இருக்கிற ஒரு ஸ்கிரிப்ட், கதையைப் பொறுத்து எழுபது நாளைக்குள்ள மொத்த ஷூட்டிங்கை முடிச்சிடலாம். ஆனா அதுக்கு மேல நாட்கள் போறப்பத்தான் பட்ஜெட்டும் மீறிப்போகுது.

ஒரு ஸ்கிரிப்ட் பக்காவா இருந்து, தேவையில்லாத எதையும் (பாட்டு, சீன்கள்) எடுக்காமல் இருந்தால் படத்தோட பட்ஜெட் பக்காவா குறையும். இந்த கேரக்டருக்கு குறிப்பிட்ட நடிகர்தான் வேணும்னு டைரக்டர் நினைச்சார்னா அந்த நடிகருக்கான சம்பளத்தை கொடுத்துத்தான் ஆகணும். எல்லாமே டைரக்டர் கையில தான் இருக்கு.

ஒரு நடிகருக்கு 5 லட்ச ரூபாய் சம்பளம்னு வச்சுக்குங்க. அதுக்குப் பதில் அவரை போடாமல் புதுமுகம் யாரையாவது நடிக்க வச்சுகூட அந்த அஞ்சு லட்ச ரூபாயை மிச்சப்படுத்துறது டைரக்டர் கையிலதான் இருக்கு. தொடர்ந்து படங்கள் எடுத்து வரும் கம்பெனிகள்ல புரொடக்ஷன் மேனேஜர் இருப்பாங்க.

ஆனா புதுசா படம் பண்ண வர்றவங்ககிட்டே படத்தோட டைரக்டர்தான் புரொடக்ஷன் மேனேஜரை சொல்லுவாங்க. காரணம் டைரக்டர்தான் அந்த புரொட்யூஸரை இண்டஸ்ட்ரிக்குக் கூட்டிட்டு வந்திருப்பார். அதனால யார் நல்லா வொர்க் பண்ணு வாங்கறது டைரக்டருக்குத் தெரியும்.

லொக்கேஷன்கள் சரியா ஃபிக்ஸ் பண்ணனும்னா, ஸ்கிரிப்ட், புரோக்ராம் லிட்ஸ்கள் பக்காவா இருக்கணும். புரோக்ராம் லிஸ்ட் சரியில்லைன்னாத்தான் கொஞ்சம் தடுமாற்றங்கள் இருக்கும். லொக்கேஷன்கள் கிடைக்கிறதில ஒருநாள், ரெண்டு நாள் தள்ளி போகலாம்.

கவர்மென்ட் லொக்கேஷன்கள் எல்லாம் முன்கூட்டியே சொல்லி, பெர்மிஷன் வாங்கணும். ரெயில்வே பெர்மிஷன் எல்லாம் ரெண்டு மாசத்துக்கு முன்பே அப்ளை பண்ணினால்தான் கிடைக்கும். அதை வாங்கி வச்சிருப்போம். ஆனா அன்னிக்கு யாராவது ஒரு ஆர்ட்டிஸ்ட்டோட டேட்ஸ் குழப்பமா வரும்.

úஸô, ஷூட்டிங்கை தள்ளிப்போடமுடியாது. காரணம் அப்ப அந்த லொக்கேஷன் பெர்மிஷனை வேற யாருக்காவது கொடுத்து வச்சிருக்கலாம். இந்த மாதிரி நடைமுறை சிக்கல்கள் வரும். அதே சமயம் பிரைவேட் லொக்கேஷன்னா சரி பண்ணிக்கலாம். ரெயில்வே, ஏர்போர்ட் லொக்கேஷன்கள்னா பெர்மிஷன் வாங்கறது கஷ்டமானது. இதெல்லாம் எங்களோட வேலைகள். இதுல குளறுபடி வந்தா ஷூட்டிங் கேன்சலாகக்கூட ஆயிடும்..

சினிமாவைப் பொறுத்தவரை எதற்குமே கல்வித் தகுதி தேவையில்லைன்னுதான் நான் சொல்லுவேன். அதுக்காக எழுதப் படிக்க தெரியாதுன்னு சொல்லக்கூடாது. தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தில உறுப்பினரா சேர்ந்தால்தான் நீங்க புரொடக்ஷன் அசிஸ்டெண்ட்டாக சேரமுடியும். ஒரு தயாரிப்பாளர் அல்லது டைரக்டரோட சிபாரிசு இருந்தால் மட்டுமே உங்களை புரொடக்ஷன் பாயாகவோ / எக்ஸிகியூட்டிவ்வாகவோ சேர்த்துக் கொள்வார்கள்.

அதாவது அதில் மெம்பரானால்தான் நீங்க படத்துக்கு வொர்க் பண்ண முடியும்.
நாங்க வொர்க் பண்ற படத்தோட அசிஸ்டெண்ட் டைரக்டர் தனியா படம் பண்ணும்போது எங்களை கூப்பிட்டுக்குவாங்க. அதனால எங்களுக்கு தொடர்ந்து வொர்க் பண்றதுக்கான வாய்ப்புகள் வரும். கிட்டத்தட்ட பதினேழு வருஷமா சூப்பர்குட்லதான் நான் வொர்க் பண்றேன்.

ஒவ்வொரு படத்துக்கும் நாங்க சிரமப்பட்டுத்தான் ஆகணும். படத்தோட டெக்னீஷியன்கள் படம் ஆரம்பிக்கிறதுக்கு நாலு நாளைக்கு முன்பிருந்து… படம் முடிஞ்சு, பூசணிக்காய் உடைச்சதுக்கு அப்புறம் போயிடலாம். கேமராமேன்னா ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு பத்து நாளைக்கு முன்பே லொக்கேஷன் பார்க்க அப்படி இப்படின்னு வொர்க் இருக்கும்.

ஆனா எங்க புரொடக்ஷன் வொர்க் எப்படின்னா நாங்க படம் தொடங்கறதுக்கு 3 மாசத்துக்கு முன்பே எங்க வொர்க்கை ஆரம்பிக்க வேண்டியிருக்கும். அதே மாதிரி படம் முடிஞ்சும் போஸ்ட் புரொடக்ஷன் அது இதுன்னு 3 மாசம் வொர்க் இருக்கும். ஒரு தயாரிப்பு நிர்வாகிக்குத்தான் அதாவது எங்களுக்குத்தான் சினிமாவில வேலை ஜாஸ்தி.

நான் சரியா வொர்க் பண்ணினதினாலதான் இன்னிக்கு நான் புரொட்யூஸரா புரொமோஷன் ஆகியிருக்கேன். பெரிய முதலீட்டோட வந்தால்தான் படத்தயாரிப்பாளர் ஆக முடியும். ஆனா என்னை மாதிரி மேனேஜர்கள் தயாரிப்பாளர்கள் ஆகுறதுக்குக் காரணம் எக்ஸ்பீரியன்ஸ்களும், சின்ஸியாரிட்டியும் தான்”.

Posted in Actors, Actress, Backgrounders, Chowdhry, Cinema, Directors, executives, Express, Faces, Films, Industry, Kollywood, Life, Managers, Movies, people, Producer, success, Supergood, Tips | Leave a Comment »

Farmer suicides – Turning risk into an opportunity: Case study of a Agriculture Success Story

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

முகங்கள்: பத்து லட்சம் கடன்… முப்பது லட்சம் வட்டி!

ந.ஜீவா

“கடன் பெற்றார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பது கம்பராமாயண வரிகள். ஆனால் கடன் பெற்றவர்கள் கலங்கினால் அது தற்கொலையில்தான் முடியும். நாடெங்கும் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. அதற்கு முக்கியக் காரணம், கடன்… வட்டி… விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமை அல்லது தண்ணீர்ப் பஞ்சம், பூச்சிகளினால் விவசாயம் பாதிக்கப்படல் இன்னும் பல.

ஆனால் கோவை ஏ.ஜி.புதூரைச் சேர்ந்த சுப்பையன் என்கிற விவசாயி கலங்கவில்லை. வட்டியும் கடனுமான நாற்பது லட்சம் ரூபாயைத் தனது கலங்காத மன உறுதியாலும் தெளிவாகத் திட்டமிடும் திறனாலும் கடுமையான உழைப்பாலும் திருப்பி அடைத்து வெற்றிகரமாக கடன் தொல்லையில் இருந்து மீண்டிருக்கிறார். அவரிடம் பேசினோம்…

நாற்பது லட்சம் ரூபாய் கடன் எப்படி ஆனது?

நான் நான்கு வருடத்துக்கு முன் கோவையில் இருந்து மைசூர் அருகே உள்ள குண்டன்பேட்டைக்குப் போய் 35 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பண்ணினேன். அதற்காக எங்கள் பகுதியில் உள்ளவர்களிடம் நான்கு வட்டிக்கும் மூன்று வட்டிக்குமாகப் பத்து லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். நானும் இன்னும் நான்கு பேரும் சேர்ந்து மைசூர்-குண்டன்பேட்டைக்குப் போனோம். அங்கே போய் வெங்காயம், கனகாம்பரம், கரும்பு, மஞ்சள் எல்லாம் பயிர் செய்தோம். ஆனால் நாங்கள் விவசாயம் பண்ணின நேரம் உற்பத்தி பண்ணின பொருள்களெல்லாம் விலை குறைந்துபோனது. பத்துலட்சம் வாங்கின கடன் இரண்டு வருடத்துக்குள்ளே வட்டியெல்லாம் சேர்த்து நாற்பது லட்சம் ரூபாய் ஆகிவிட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் ஊருக்குத் திரும்பி வந்துவிட்டேன்.

திரும்பி வந்து என்ன செய்தீர்கள்?

இங்கே எனக்குப் பத்து ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விவசாயம் செய்ய முடியவில்லை. நிலத்தடி நீர் விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாத அளவுக்குக் கெட்டுப் போயிருந்தது. நொய்யல் ஆற்று நீரில் கோயம்புத்தூர் நகர்க் கழிவு எல்லாம் கலந்ததால் அது ஓடுகிற எங்கள் பகுதியில் நிலத்தடி நீரும் உப்பாகப் போய்விட்டது. செடி வளர்க்க இந்தத் தண்ணீர் ஆரோக்கியம் இல்லை.

இந்தக் கெட்டுப் போன தண்ணீரை வைத்துக் கொண்டு எப்படி விவசாயம் பண்ணுவது? என்ன விவசாயம் பண்ணுவது? கடனையெல்லாம் எப்படி அடைப்பது? யோசனை பண்ணிப் பார்த்தேன்.

எங்கள் பகுதிக்குத் தோட்டக்கலைத்துறை, விரிவாக்கத்துறை அதிகாரிகள் எல்லாரும் வருவார்கள். வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் சி.ராமசாமி அடிக்கடி வருவார். அவர்களிடம் கேட்டதில் எங்கள் பகுதியில் நெல், கரும்பு போன்றதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது என்று தெரிய வந்தது. வேறு எந்த வேளாண்மை பண்ண வேண்டும் என்று யோசித்து கீரை விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். இந்தத் தண்ணீருக்குக் கீரை நன்றாக வரும். குதிரை மசால் நன்றாக வரும். தென்னை நன்றாக வரும்.

அரைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, சிறுகீரை என விவசாயம் செய்தேன். இதில் 30 சதம் செலவு ஆகும். 70 சதம் லாபம் வரும்.

குதிரை மசால் என்பது கால்நடைகளுக்கானத் தீனி. இது தவிர கறிவேப்பிலை இரண்டரை ஏக்கரில் விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். எனது 10 ஏக்கர் நிலம் தவிர மேலும் 20 ஏக்கர் நிலத்தைக் குத்தகை எடுத்தேன். 12.5 எச்பி மோட்டார் போட்டு கிணற்றில் தண்ணீர் எடுத்து விவசாயம் பண்ணினேன். கிணற்று தண்ணீர் நாளொன்றுக்கு 3 ஏக்கர் நிலத்திற்குப் பாயும்.

எங்கள் விவசாயத்தில் அதிக அளவு ரசாயன உரங்கள் போடுவதில்லை. மண்புழு உரம், மாட்டுச்சாணம் போடுவோம். கோயம்புத்தூரில் ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் பகுதியில் நிறைய மாடுகள் வளர்க்கிறார்கள். அதனால் மாட்டுச் சாணிக்கென்று நாங்கள் அலைய வேண்டியதில்லை.

விவசாயம் செய்து விளைவித்த பொருள்களை எங்கே விற்பனை செய்கிறீர்கள்?

கீரை ஒரு நாளைக்கு 5000 கட்டிலிருந்து 10000 கட்டு வரை விற்பனையாகும். ஒரு நாளைக்கு சுமார் பத்தாயிரம் ரூபாய்க்கு கீரை விற்பனையாகும். கறிவேப்பிலை ரூ.1500 க்கு விற்பனையாகும். கடைகளுக்கு வாடிக்கையாக கறிவேப்பிலையைக் கொடுத்துவிடுவோம். கிலோ ரூ.10 இலிருந்து ரூ.15 வரை போகும். குதிரைமசால் 400 கிராம் கட்டு சுமார் 3000 கட்டுவரை விற்பனையாகும்.

காலையிலே எங்கள் காட்டுக்குள்ளிருந்து இந்தப் பொருள்களை ஏற்றிக் கொண்டு வண்டிகள் வெளியே போகும். எத்தனை வண்டி எவ்வளவு பொருள் என்பதையெல்லாம் கணக்கு வைத்துக் கொள்வார்கள்.

கால்நடைத் தீவனமாக நாங்கள் விவசாயம் செய்யும் குதிரை மசாலை சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் பகுதியில் மாடு வளர்ப்பவர்களே வாங்கிக் கொள்வார்கள்.

காலையில் டெம்போவில் குதிரை மசாலை ஏற்றிக் கொண்டு கிளம்புவோம். சிட்டி பஸ் குறித்த நேரத்தில் எந்த ஸ்டாப்பில் எந்த நேரத்தில் நிற்குமோ அதைப் போல இந்த டெம்போ ஒவ்வொரு பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிற்கும். அந்தப் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்கள் அங்கு வந்து வாங்கிக் கொள்வார்கள்.

கோயம்புத்தூரில் உள்ள வாடிக்கையாளர்கள் தவிர கொடைக்கானலிலும் எங்கள் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அங்கே உள்ள ஒரு கால்நடைப் பண்ணையில் 67 மாடுகள் வைத்திருக்கிறார்கள். 10 ரேஸ் குதிரைகள் வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய கால்நடைகளுக்குத் தேவையான தீவனத்திற்காக எங்களிடம் ரெகுலராக குதிரை மசால் வாங்குகிறார்கள்.

இவ்வளவு வேலைகளையும் செய்ய வேண்டுமென்றால் ஆட்களை வேலைக்கு வைக்க வேண்டுமே?

எங்களிடம் முதலில் 40 பேர் வேலை பார்த்தார்கள். இப்போது 20 பேர் பார்க்கிறார்கள். வேலைக்கு ஆள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. இத்தனைக்கும் பெண்களே ஒரு நாளைக்கு ரூ.140 வரை சம்பளம் வாங்குகிறார்கள்.

எங்களிடம் வேலை செய்பவர்களை நாங்கள் மரியாதையாக நடத்துகிறோம். வாடா, போடா என்றெல்லாம் பேசுவது கிடையாது. அவர்கள் எல்லாரும் ரொம்பவும் விசுவாசமான ஆட்கள்.

வழக்கமாகப் பயிர் செய்யும் நெல், கரும்பு, வாழை போன்றவற்றைப் பயிர்செய்யாமல் இப்படிக் கீரைகளை விவசாயம் பண்ண வேண்டும் என்று எப்படித் தோன்றியது?

நான் விவசாயத்துக்கு முதன்முதல் வந்த போது எங்கள் ஏரியாவில் பருத்திதான் அதிகம் போடுவார்கள். நான்தான் முதன் முதலில் கனகாம்பரம் துணிந்து பயிர் செய்தேன். எதையும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். எங்கள் பகுதியில் நெல், கரும்பு போன்றவை விளைவிக்க நல்ல தண்ணீர் இல்லாததும் ஒரு காரணம்.

நமது அண்டை மாநிலமான ஆந்திரா, வடமாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்களே?

இந்தியாவில் விவசாயிகள் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகப் பேப்பரில் படிக்கிறோம். எனக்கு மாதிரி அவர்களுக்கு 10 ஏக்கர் நிலம் இருந்திருந்தால் ஒருவேளை என்னைப் போலவே அவர்களும் கடினமாக உழைத்துக் கடனை அடைத்திருப்பார்களோ, என்னவோ. எல்லாருக்கும் எனக்கு போலவே வாய்ப்புக் கிடைக்க வேண்டுமே.

இப்போது மார்க்கெட் வசதி அபாரமாக இருக்கிறது. அரசாங்கம் நிறையக் கடன் கொடுக்கலாம். கந்துவட்டியை ஒழிக்கச் சட்டம் போட்டிருந்தாலும் நாடு முழுக்க கந்துவட்டி இருக்கிறது. அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுத்தால் கந்துவட்டியை ஒழிக்கலாம். பத்துலட்சம் வாங்கின கடனுக்கு முப்பது லட்சம் வட்டி கட்டணும் என்றால் விவசாயி தற்கொலை பண்ணிக் கொள்ளாமல் என்ன செய்வான்?

Posted in Agriculture, Analysis, Banking, Banks, Case study, deaths, Economy, Faces, Farmers, Farming, Farmlands, Finance, Foodgrains, Forests, Fruits, Greens, harvest, horticulture, Incidents, Interview, Life, Loans, markets, Opportunity, Paddy, people, Persons, Prices, Real, rice, Risk, Saline, Salt, success, Suicides, Trees, Turnaround, Vegetables, Vidharaba, Vidharaba Jan Andolan Samithi, Vidharabha, Vidharba, Vidharba Jana Andolan, Vidharbha, Vidhrabha, Vitharabha, Vitharba, Vitharbha, Waste, Water, Wheat | 2 Comments »

Director Tharani – Story behind the silver jubilee

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

ஒரு படம் கிடைக்க 18 வருஷம் டைரக்டர் தரணியின் போராட்டக் கதை

எத்தனை போராட்டங் களுக்குப்பிறகு ஒருவர் டைரக்டராக முடிகிறது- உதாரணம் `தரணி’

தில், தூள், கில்லி என மூன்று மெகா ஹிட்’ படங்களை கொடுத்தவர். ஆக்ஷன், கமர்சி யல் என்பது இவரது `ஸ்பெஷாலிட்டி’ என்பது தவிர ஒரு கால் ஊனமுற்றவர். கைப்பிடியுடன் தான் நடக்க முடியும்.

“ஒரு வித வைராக்கியத் தோட உழைச்சுக் கிட்டே இருக்கணும். ஓடி, ஓடி உழைச்சுக்கிட்டே இருக்கணும். என்னைக்காவது ஒரு நாள் அதுக்கு கூலி கிடைக்கும். 60 வயசுக்கு பிறகு பறவை முனியம்மாவுக்கு கிடைக்கலையாப என்கிற டைரக்டர் தரணிக்கு ஒரு படம் கிடைக்க 18 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

தரணி உங்களிடம் மனம் திறந்து பேசுகிறார்.

சின்ன வயசுலியே எனக்கு இந்த கால் ஊனம் வந்துட்டுது. போலியோ அட்டாக். இருந்தாலும் ஒரு கால் இல்லியேன்னு நான் நினைச்சு பார்த்தது கிடையாது. ஓடுவேன், ஆடுவேன் யாராவது பார்த்து “என்ன வரத்து வர்றான்னு” கேட்கிறப்ப தான் ஞாபகத்துக்கு வரும்.

விவரம் தெரிஞ்சப்பவே நான் பாரதிராஜா ரசிகன். ஒரு படம் விடமாட்டேன். அவ ரோட படங்கள் தான் எனக்கு `இன்ஸ்பிரேசன்’.

சினிமாவுல நுழையனும்னா எடிட்டிங், இசை, தொழில் நுட்பம் தெரிஞ்சிருக்கனும். அதுக்காக பிலிம் இன்ஸ்டிïட்ல சேர்ந்து படிச்சேன். மெயினா கத்துக்கிட்டது எடிட்டிங் தான்! செல்வமணி சாரோட முதல் படத்தை எடிட்டிங் செய்தது நான் தான்.

மணிரத்னம், ஆர்.வி.உதய குமார், திருப்பதி சாமின்னு நிறைய பேர்கிட்ட நான் ஒர்க் பண்ணினேன். நமக்கு ஒரு படம் கிடைக்காதான்னு ஒவ்வொரு படக்கம்பெனியா ஏறி, இறங்கினேன். எக்கச்சக் கத்துக்கும் ஏமாற்றம் தான் மிச்சம்.

அசிஸ்டென்ட் டைரக்டராக மட்டுமே 18 வருஷத்துக்கு வேலை பார்த்திருக்கேன். அப்பவெல்லாம் படாத கஷ் டம் இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாம எவ்வளவோ திண்டாடி இருக்கேன். கல் யாணம் கட்டிக் கிட்ட மனைவி, கூடவே அம்மா, அப்பா, குடும்பம்னு எப்படியும் வாழ்ந்தாகனுமேப

இதுக்காகவே கீ போர்டு வாசிக்கிறது, மேடையில பாடுறதுன்னு கத்துக்கிட்டு `லைட் மிïசிக்’ ஆரம்பிச்சேன். என்னோட மேடையில தான் உன்னிகிருஷ்ணன், சுரேஷ் பீட்டர் லாம் முதன் முதலா மைக் பிடிச்சது.

ஸ்டேஜ்ல நான் பாடுறப்போ 250 ரூபா சம்பளம் கிடைக்கும். ஏதாவது விளம்பரம் படம் கிடைச்சுதுன்னா அங்க போய் `ஒர்க்’ பண்ணுவேன். இந்த வேலைதான் இல்லை. ஏதாவது கண்ணுக்கு தெரிஞ்சா ஓடிக்கிட்டே இருப்பேன்.

ஒரு வழியா 18 வருஷம் கழிச்சு ஒரு படம் கிடைச்சது. “எதிரும், புதிரும்”. அப்ப கூட நேரம் விடலை. ஆக்சிடென்ட் ஆகி கால் முறிஞ்சு போய், 4 மாசம் படுத்த படுக்கையில இருந்தேன். பிரகாஷ்ராஜ் சாரும், நெப்போலியன் சாரும் அப்ப உதவி செஞ்சாங்க.

இப்படி கால் முறிஞ்சு போச்சே. எங்கே சினிமா கனவு தகர்ந்து போகுமோன்னு நான் நினைக்கலை. உட் கார்ந்துக்கிட்டே `ஸ்கிரிப்ட்’ ஒர்க்” பண்ணலாமேன்னு நினைச்சேன்.

`எதிரும், புதிரும்’ படத்தை பல வருஷமா எடுத்தோம். மாயாவி வீரப்பனோட கதைய வச்சு எடுத்தோம். ஒரு செட்ïல் முடிச்சு வர்றத்துக்குள்ளே வீரப்பன் அடுத்த ஆளை கொன்னுருப்பான். கதையே மாறிடும். இப்படி படாதபாடு பட்டு ஒரு வழியா அந்த படத்துக்கு அரசு விருது கிடைத்தது மிகப் பெரிய ஆறுதல்.

நடக்க முடியாம கையில 2 `கிளட்ச்’ வச்சுக் கிட்டு இருந்த கால கட்டத்துல, என் ப்ரண்ட் ரவி மூலமா லட்சுமி புரொடக்ஷன்ஸ்சில படம் எடுக்க கதை கேட்கிறாங் கன்னு சொல்லி, நான் கதை சொல்லப் போனேன்.

பூர்ணசந்திரராவ், அஜய் குமார், டி.ராமராவ் மூன்று பேருமே எனக்கு தெய்வங்கள். கதை சொல்லப்போன என்னை டைரக்டராகவும் ஆக்கிட்டாங்க. அந்தப் படம் தான் `தில்’.

என்னை மாதிரி ஆளுக்கு 10 ரூபா கடன் தந்தாலே திருப்பித்தர முடியாது. என்னை நம்பி ஒரு படமே தந்தாங்களே!

லயோலா காலேஜ்ல நான் படிக்கும் போது விக்ரம் என் கிளாஸ்மேட். “டேய் நீ ஹீரோவாயிடு. நான் டைரக்டரா வந்துடறேன்’னு சொல்லிக்கிட்டே இருப்பேன். அது `தில்’லில் நடந்தது.

அவரும் என்னை மாதிரியே நிறைய போராடினவர். எந்தப் போராட்டத்தையும் நிறுத்த மாட்டார். எதிலும் ஜெயிக்கனும். எவ்வளவு நாளானாலும் சரின்னு நினைப்பார்.

`தில்’லுக்கு பிறகு ஏ.எம்.ரத்தினம் சார் `தூள்’ படத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். மீண் டும் விக்ரமும், நானும் கூட்டணி.

எனக்கு ரொம்ப பயம். ஏதோ ஒரு படம் ஓடிருச்சு. இந்தப் படம் எப்படி வரும்னுப நேரா கும்பகோணம் போய் குலதெய்வத்த வேண்டிக் கிட்டு வந்தேன். அப்புறமா `கில்லி’ படம் வந்து அதுவும் அமோக வெற்றி.

எல்லோருமே ஜெயிக்க னும்னு நினைக்கிறவங்க தான். உழைப்பை தேடி ஓடிக்கிட்டே இருக்கிறவங்க தான் அதிர்ஷ் டம்ங்கிறது தானா ஒரு நாள் தேடி வரும் என்கிற தரணி ஆர்.வி.உதயகுமாருடன் `எஜமான்’ படத்தில் உதவி டைரக்டராக வேலை பார்த்த போது ஒரு நிகழ்ச்சி.

அந்தப் படத்தில் ரஜினி அங்க வஸ்திரத்தை ஸ்டைலாக தோளில் போட்டு நடை போட்டு வருகிற ஐடியாவைக் கொடுத்தது இந்த தரணிதான்! அதுவே இன்றுவரை ரஜினிக்கு ஒரு தனி இமேஜ் என்பது விசேஷம்.

Posted in Backgrounder, Barathiraja, Bharadhiraja, Bharathiraja, Biography, Biosketch, Chat, Chennai, Cinema, DFTech, Dharani, Dhil, Dhool, Dil, Editing, Editor, Ejamaan, Ejaman, Esamaan, Faces, Filmmaker, Films, Gilli, Institute, Interview, jubilee, Killi, Kodambakkam, Kollywood, Life, Manirathnam, Maniratnam, Movies, people, Rajini, Rajni, RV Udhayakumar, RV Uthayakumar, Selvamani, Story, Student, success, Technology, Telugu, Tharani, Thil, Thirupathisami, Thirupathysamy, Thool, Tollywood, Vikram | Leave a Comment »

Dharmapuri – Superstitious builders try to do Human Sacrifice for successful completion of the Construction

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2007

தருமபுரி அருகே பாலம் கட்டும் பணிக்கு 3 சிறுவர்களை நரபலியிட முயற்சி?

சிறுவர்களை நரபலியிட முயன்ற சம்பவத்தால் ஆத்திரம் அடைந்து தனியார் நிறுவன கிடங்குக்கு தீயிட்டுக் கொளுத்தும் பொதுமக்கள். (உள்படம்) நரபலியிட முயன்ற கும்பலிடம் இருந்து தப்பிய சிறுவர்கள் (இடமிருந்து) தமிழரசு, சந்திரபாபு, சிவமணி.

தருமபுரி, மார்ச் 16: தருமபுரி அருகே 4 வழிச்சாலை பாலப் பணிக்காக பள்ளிச் சிறுவர்கள் 3 பேரை தனியார் நிறுவன ஊழியர்கள் நரபலியிட முயன்றதாகக் கூறி, கொந்தளித்த மக்கள் வியாழக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். தனியார் நிறுவன கிடங்குக்கும் ஒரு ஜேசிபி இயந்திரத்துக்கும் தீ வைத்தனர்.

தருமபுரி, கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை 4 வழிப் பாதையாக மாற்றும் பணியை ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. பூலாப்பட்டி ஆத்துப்பாலம், பெரியாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணியிலும் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

தனியார் நிறுவனத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பூலாப்பட்டி ஆத்துப்பாலம் அருகிலும் பிற இடங்களிலும் கூடாரங்கள் அமைத்து, அந் நிறுவனம் அமைத்துள்ள கிடங்குப் பகுதியிலேயே தங்கியுள்ளனர்.

இந்நிலையில் பூலாப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயவேலின் மகன் சிவமணி (13), குமாரசாமி மகன் தமிழரசு (12), சிங்காரம் மகன் சந்திரபாபு (11) ஆகிய 3 சிறுவர்களும் வழக்கம்போல் பெரியாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வதற்காக வியாழக்கிழமை காலையில் நடந்து சென்று கொண்டு இருந்துள்ளனர். சாலையோரம் நடந்து சென்ற 3 சிறுவர்களையும் 5 பேர் கொண்ட கும்பல், வாயைப் பொத்தி தூக்கிச் சென்றுள்ளனர். தனியார் நிறுவன ஊழியர்கள் தங்கியிருந்த கிடங்கில் பிற்பகல் வரை சிறுவர்களின் கையைக் கட்டி அமர வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

பிற்பகலில் பாலம் நடைபெறும் இடத்துக்கு 3 சிறுவர்களையும் அழைத்து வந்து அங்கு பூஜைகள் செய்ததாகவும், நிலைமையை உணர்ந்த சிறுவன் சிவமணி தன்னை பிடித்திருந்த நபரின் கையை கடித்துவிட்டு தப்பி ஓடி வந்ததாகவும், அதே நேரத்தில் மற்ற சிறுவர்களும் அவர்களிடம் இருந்து தப்பி ஓடி வந்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

இந்த தகவல் கேட்டு சுற்றுப் பகுதி கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதுடன் அந்த தனியார் நிறுவனக் கிடங்குக்கு தீயிட்டுக் கொளுத்தியது. அதில் கிடங்கும் ஜேசிபி இயந்திரமும் தீக்கிரையானது.

Posted in Bridge, Builder, Child, Children, completion, Construction, Constructor, Dharmapuri, Dharmapury, flyover, Human, Kid, Sacrifice, success, Tharmapuri | Leave a Comment »