Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘IAS’ Category

District Collectors: Sales Tax vs Income Tax – Loopholes, Corruption, Kickbacks in Local Administration

Posted by Snapjudge மேல் மார்ச் 10, 2008

புன்னகைக்கும் பொய் ரசீதுகள்

இரா. சோமசுந்தரம்

சில நாள்களுக்கு முன் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகா அலுவலகம் சென்றபோது, அங்கே ஒரு வட்டாட்சியரிடம் ஒருவர் கடுமையான கோபத்தில் திட்டிக் கொண்டிருந்தார்.

ஆனால் அந்த வட்டாட்சியரோ, “”ஒண்ணும் ஆயிடாதுங்க” என்று சமாதானம் செய்து, பேசுபவரின் குரலை மட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

இருந்தும்கூட, அடக்கமுடியாத கோபமும் அச்சமுமாக தொடர்ந்து கொட்டித் தீர்த்த அந்த நபர், “”இன்னும் எந்தெந்த டிபார்ட்மென்ட்லிருந்து எனக்கு என்கொயரி வருமோ? என் ரசீது புஸ்தகத்தை கொடுங்கய்யா” என்று கேட்டும் கிடைக்காததால், மறுபடியும் திட்டிக்கொண்டே வெளியேறினார்.

சுமார் அரைமணி நேரத்துக்கு அந்த அலுவலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இச்சம்பவம் குறித்து விசாரித்ததில் தெரியவந்தது இதுதான்:

2006-ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது, இந்த தாலுகா அலுவலகம் சில படிவங்களை அச்சிட்டதாக சுமார் ரூ.80 ஆயிரத்துக்கு ரசீதுகள் செலவுக் கணக்கில் காட்டப்பட்டுள்ளன.

உள்ளாட்சித் தணிக்கைத் துறை அலுவலர்கள் இதனைத் தணிக்கை செய்தபோது, யாரோ ஒரு நேர்மையான அலுவலர், இந்த செலவுக்கு ஆட்சேபக் குறிப்பை எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் – “”எல்லா படிவங்களும் தேர்தல் ஆணையம் அச்சிட்டுத் தரும்போது, தாலுகா அளவில் எத்தகைய படிவம் அச்சிடப்பட்டது என்பதற்கான சான்றுகள் அளிக்கப்படவில்லை. வாக்காளர்களுக்கு அறிவுரை என்ற நோட்டீஸ் அச்சிடப்பட்டதாக கூறப்பட்டபோதிலும், அதற்கு ரூ.2000-க்கு மேல் செலவாகியிருக்க வாய்ப்பு இல்லை. ஆகவே இந்தச் செலவினத்தை ஆட்சேபிக்கிறேன்” என்று அந்தக் குறிப்பில் அவர் எழுதியுள்ளார்.

உள்ளாட்சித் தணிக்கைத் துறையின் அறிக்கைகள் வழக்கமாக உயர்அதிகாரிகளுக்கும் அரசுக்கும் அனுப்பப்படும் என்பதோடு, தலைமை கணக்கு தணிக்கை (ஏ.ஜி.) அலுவலகத்துக்கும் ஒரு நகல் அனுப்பப்பட வேண்டும்.

அப்படி அனுப்பப்பட்ட இந்த ஆட்சேபக் குறிப்பை கண்ட, தலைமை கணக்கு தணிக்கை அலுவலக அதிகாரி ஒருவர், “”சுமார் 15 நாள்களில் ரூ.80 ஆயிரத்துக்கு அச்சிடும் இத்தகைய அச்சகம், ஓராண்டுக்கு எவ்வளவு சம்பாதிக்கக்கூடும்! இந்த அச்சகம் முறையாக வருமான வரி செலுத்தியுள்ளதா என்பதை ஆய்வு செய்யலாம்” என்று மற்றொரு குறிப்புடன் வருமான வரித்துறைக்கு அனுப்பிவிட்டார்.

வருமான வரித்துறை இத்தனை விஷயங்களையும் குறிப்பிட்டு, மொத்தக் கணக்குகளுடன் நேரில் வரவும் என்று அச்சக உரிமையாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

வட்டாட்சியரிடம் கடும் கோபத்தில் கத்திக் கொண்டிருந்தவர் அச்சகத்தின் உரிமையாளர். அந்த அச்சகமோ அந்த நகரத்திலேயே மிகச் சிறிய அச்சு இயந்திரத்தை வைத்து, கல்யாணப் பத்திரிகை அச்சடித்து வருவாய் ஈட்டும் மிகச் சிறிய அச்சுக்கூடம். வருமானத்துக்கே திண்டாடும் அவருக்கு வருமான வரித்துறையின் நோட்டீஸ் வந்தால் எப்படி இருக்கும்?

இச்சம்பவம் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சியைத் தந்தது. நியாயம் செத்துப்போவதில்லை. உண்மைகள் கொஞ்ச காலம் உறங்கலாம். ஆனால் அது ஒரு நாள் விழிக்கவே செய்கிறது. “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகிறது’. ஆனால் அப்போதே, உடனே அல்ல. சரி, வாழ்க்கையொன்றும் திரைப்படம் அல்லவே, உச்சக் காட்சியில் நொடியில் தர்மம் வெற்றிபெற!

இது குறித்து மேலும் விசாரித்தபோது இன்னொரு தகவலும் தெரியவந்தது. இத்தகைய ரசீதுகள் தொடர்பான ஆட்சேபக் குறிப்புகளை, விற்பனை வரிப்பிரிவினர்தான் முதலில் கையில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் வருமான வரித்துறை கையில் எடுத்திருப்பதைப் பார்க்கும்போது, மாநில அரசு, விழிப்புடன் இல்லை என்றாகிறது.

இத்தகைய போலி ரசீதுகள் உள்ளாட்சி முழுவதிலும் அதிக அளவில் இருக்கின்றன. விற்பனை வரித் துறை அதிகாரிகள் விசாரித்தால், பல பூதங்கள் வெளிக்கிளம்பும் என்கிறார்கள்.

உள்ளாட்சித் துறைகளில் ரசீதுகள் மூலம் பல கோடி ரூபாய் திசைமாறுகிறது. இதற்கு அடிப்படையான காரணம் மாவட்ட ஆட்சியர் வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட விலைப்பட்டியல்தான்.
அரசுக்குத் தேவையான பொருள்கள் வாங்கும்போது கூட்டுறவுத் துறை நிறுவனங்கள் நீங்கலாக அங்கீகரிக்கப்பட்ட பிற நிறுவனங்கள் எவை, அவற்றில் எந்தெந்த பொருள்களுக்கு என்ன விலை என்று மாவட்ட ஆட்சியர் அங்கீகரிக்கும் இந்த விலைப்பட்டியலை ஆதாரமாக வைத்துத்தான் தணிக்கை செய்யப்படுகிறது.

நிறுவனம் பட்டியலில் உள்ளதா, விலை சரியா என்பதை மட்டுமே தணிக்கை அலுவலர்கள் சரிபார்க்க முடியும். இந்த நிறுவனம் வெறும் “”ரசீது நிறுவனமா” என்பதை ஆய்வு செய்ய இயலாது.

பொதுச்சந்தையில் ஒரு பொருள் விற்கப்படும் விலையைக் காட்டிலும் குறைந்தது 10 சதவீதம் கூடுதல் விலையே இந்த அங்கீகரிக்கப்பட்ட விலைப் பட்டியலில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதில் சந்தேகம் இருக்குமானால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரூ.10 செலுத்தி, அந்தப் பட்டியலை வாங்கிப் பார்த்தால் நிறுவனங்களும் விலைகளும் வெளிச்சமாகிவிடும் என்கிறார்கள்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத்தான் போறேன். வர்றீங்களா?

Posted in Administration, administrative units, Audit, Bribery, Bribes, Circle Inspector, Collections, Collector, Collectorate, Corruption, Departments, Dept, District, District Collectors, Elections, Govt, IAS, Income, Inefficiency, Inspection, Inspectors, Investigations, IT, kickbacks, local, Local Body, Local Body election, local body elections, Local Body Polls, Local Civic Body, Local Elections, Local Polls, Local self Governance, Loopholes, Notices, officers, Politics, Polls, revenue collection, Revenue District, Revenues, Reviews, sarkeel, Somasundaram, Somasundharam, Somasuntharam, ST, Tahsil, Taluk, Taluka, Taluq, Tax, Union, zilla collector | Leave a Comment »

Public Administration: Accountant General’s Office: IAAS – Indian Audit and Accounts Service

Posted by Snapjudge மேல் திசெம்பர் 13, 2007

தணிக்கை முறையில் தப்புக் கணக்கு!

இரா. செழியன்

இந்தியா கடைப்பிடித்துவரும் நாடாளுமன்ற முறையின் அடிப்படைக் குறிக்கோள் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய பேரவையின் கட்டுப்பாட்டிற்குட்பட்டு அரசு நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதுதான்.

குறிப்பாக, அரசு நிர்வாகத்துக்கும் அரசால் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்கும் நாடாளுமன்றம் மானியங்களை வழங்குகிறது. அந்த மானியத் தொகைகளைக் குறிப்பிட்ட திட்டங்களுக்காகச் சரியாக, சிக்கனமாக, திறமையாக, அரசு நிறைவேற்றுகிறதா என்பதை நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்குக் குழு, மதிப்பீட்டுக் குழு, பொதுத்துறை நிறுவனக் குழு போன்ற கண்காணிப்பு அமைப்புகள் மூலம் ஆராய்கின்றன.

இந்தவகையில், பொதுத்தணிக்கை அமைப்பு என்பது அரசின் வரவு, செலவுக் கணக்குகளைத் தணிக்கை செய்து, அதிலுள்ள குறைபாடுகள் அடங்கிய அறிக்கைகளை குடியரசுத் தலைவர் மூலம் நாடாளுமன்ற அவைகளின் முன் வைக்கிறது.

இந்த வகையில் தலைமைத் தணிக்கை அதிகாரியின் பணி நாடாளுமன்றத்திற்கு மிகவும் முக்கியமானது. இது குறித்து அரசியல்நிர்ணய சபையில் அம்பேத்கர் கூறியதாவது: “”இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள மிக முக்கியமான அதிகாரி, தணிக்கைக் குழுத் தலைவர் என்பதுதான் என் கருத்து. இன்னும் கவனித்தால், தலைமை நீதிபதிக்கு இருப்பதைவிட அதிகமான அளவு தணிக்கைக்குழுத் தலைவருக்கு முக்கியத்துவம் இருக்கிறது. நீதி அமைப்பு இருப்பதைப் போன்று தணிக்கை அமைப்பும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.”

தணிக்கை அமைப்பின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி நீண்ட விவாதம் அரசியல்நிர்ணய சபையில் 1949, மே மாதத்தில் வந்தது. தணிக்கைத் துறையில் திறமையும், நல்ல பயிற்சியும் உள்ளவர்களைத்தான் தணிக்கை அமைப்பின் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் வந்தபொழுது, “”பொதுவாக மாநிலத்தில் கணக்குத் தணிக்கை அதிகாரியாக ( Accountant General) உள்ளவர்களில் தலைசிறந்து விளங்குபவர்களைத்தான் மத்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரியாக நியமிப்போம்” என்று அரசமைப்புச் சட்ட ஆக்கக்குழுவின் சார்பில் டி.டி. கிருஷ்ணமாச்சாரி உறுதிமொழி தந்தார்.

ஆறாண்டு காலம் அல்லது 65 வயதுவரை இவற்றில் எவை முன்னதாக வருகிறதோ அதுவரையில் பணியாற்ற, தலைமைத் தணிக்கைக் குழுத் தலைவர் நியமிக்கப்படுகிறார். அரசியல் நிர்ணயசபையில் தரப்பட்ட உறுதிமொழியின்படி 1948 தொடங்கி 1966 வரை மூன்று கணக்குத் தணிக்கை அதிகாரிகள், வி. நரஹரி ராவ், ஏ.கே. சந்தா, ஏ.கே. ராய் போன்ற இந்திய தணிக்கைப் பிரிவின் உயர் அதிகாரிகள் தணிக்கை அமைப்புத் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

ஆனால், அதன்பிறகு கடந்த 42 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட 7 தணிக்கைத் தலைவர்களில் ஒரே ஒருவர் மட்டும்தான் இந்திய கணக்குத் தணிக்கை ( IAAS – Indian Audit and Accounts Service) பிரிவில் உயர் அதிகாரியாக இருந்தார். மற்ற 6 தடவைகளில் தணிக்கைக் குழுத் தலைவர் பதவி இந்திய ஆட்சிப் பணியாளர் ( IAS – Indian Administrative Service்) பிரிவைச் சேர்ந்தவர்களுக்குத் தரப்பட்டது. இது சரியானதல்ல.

ஓய்வுபெறும் நிலையிலுள்ள இந்திய ஆட்சிப் பணியாளருக்கு கணக்கு – தணிக்கைத் துறைகளில் எத்தகைய பயிற்சியும், திறமையும் இல்லாத நிலைமையில், இந்திய கணக்குத் தணிக்கைக் குழுவின் தலைவராக நியமிக்கப்படுவது நாடாளுமன்ற முறைக்கு மிகவும் முரண்பட்ட ஒன்றாகும்.

உலகில் ஜனநாயக நடைமுறையைப் பின்பற்றும் முக்கியமான நாடுகளில் எவற்றிலும் தணிக்கை அதிகாரியை அரசு தன் விருப்பப்படி நியமித்துவிட முடியாது.

இங்கிலாந்து நாட்டில், மக்கள்சபையின் பொதுக்கணக்குக் குழுவின் ஆலோசனைப்படிதான் தணிக்கை அமைப்பின் தலைவரை நியமிக்கும் தீர்மானத்தை பிரதமர் மக்கள்சபையின் முன் வைப்பார். எவ்வித விவாதமுமின்றி பேரவை அதை ஏற்றுக்கொள்ளும்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உள்ள பொதுக் கணக்கு – தணிக்கைக் குழுவின் தீர்மானத்தையொட்டி மத்தியத் தணிக்கைக் குழுத் தலைவர் நியமிக்கப்படுகிறார்.

ஜெர்மன் நாட்டின் நாடாளுமன்றத்தில் உள்ள உயர்நிலை தணிக்கை அமைப்பின் ஆலோசனையின் பேரில்தான் தணிக்கைக் குழுவின் தலைவர் – துணைத் தலைவர் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

அமெரிக்காவின் மேல்சபையான செனட்டின் தீர்மானத்தின் மீதுதான் தணிக்கை அமைப்புத் தலைவரை, அந்நாட்டின் அதிபர் நியமிக்க முடியும். அப்படி அதிபர் நியமித்தாலும் தணிக்கைக் குழுத் தலைவரை நீக்கும் அதிகாரம் அவருக்குக் கிடையாது. செனட் சபை நிறைவேற்றுகிற குற்றச்சாட்டுத் தீர்மானப்படிதான் அவரை நீக்க முடியும்.

ஆக, மற்ற நாடுகளில் உள்ள முறையைப் போன்று இந்தியாவிலும் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியை மத்திய அரசு தன்போக்கில் எந்த வகையிலும் நியமிப்பது கூடாது. மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றின் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளடக்கிய பாரபட்சமற்ற ஒரு குழு மூலமாகத்தான் அந்தப் பதவிக்கான தலைவர் நியமிக்கப்பட வேண்டும்.

தலைமைக் கணக்குத் தணிக்கை அமைப்பின் முக்கியத்துவம் பற்றி 1950 ஜூலை 21 ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் பின்வருமாறு கூறினார்: “”இந்தியா ஓர் ஏழைநாடு. இங்குள்ள அரசு மூலம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அளவில் செலவு செய்யப்படுகிற நிலைமையில், ஒவ்வொரு ரூபாயும் எவ்வாறு செலவாகிறது என்பதைக் கவனிக்கும் பொறுப்பு தணிக்கைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி அதிகமாகக் கூறத் தேவையில்லை.”

1954 ஆம் ஆண்டு மத்திய – மாநில அரசுகளின் மொத்த செலவு ரூ. 1,254 கோடி. தற்போதைய நிலவரப்படி, 2005 – 2006-இல் மத்திய – மாநில அரசுகளின் மொத்த செலவின் அளவு ரூ. 15,92,000 கோடி.

அப்போது இருந்ததைவிட 1,270 பங்கு அதிகமான அரசு செலவுகளைத் தற்போது தணிக்கை பார்க்க வேண்டிய பொறுப்பு பொதுத்தணிக்கை அமைப்புக்கு இருக்கிறது. ஆனால், முன்பிருந்த தணிக்கைத் துறையின் திறமையாளர்கள் தற்போது அரசால் தணிக்கைத் தலைவராக நியமிக்கப்படுவதில்லை.

அரசு நிர்வாகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வீணாக்கப்படுகிறது அல்லது ஊழலில் கரைக்கப்படுகிறது என்றால், அவை அங்குள்ள அதிகாரிகளின் நிர்வாகத்தில்தான் நடைபெறுகின்றன.

அப்படிப்பட்ட அதிகாரி ஒருவரை திடீரென்று அவருக்குப் பின்னணியான பயிற்சியும், திறமையும் இல்லாத நிலைமையில், தணிக்கைத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுவிட்டால் அவர் சம்பந்தப்பட்ட அரசின் செலவு ஒழுங்கீனங்களின் மீது அவருடைய தலைமையின்கீழ் வரும் தணிக்கைத்துறையால் எப்படி வெளிப்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியும்?

தணிக்கை முறைக்குக் கட்டுப்பட்டு அரசு நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதற்குப் பதில், அரசு நிர்வாகத்துக்குக் கட்டுப்பட்டுத் தணிக்கைத்துறை கொண்டு வரப்படுகிறது.

தற்போதைய தணிக்கைத்துறைத் தலைவர் – அவரும் இந்திய ஆட்சிப் பணி ( IAS) அதிகாரியாக இருந்து இந்தப் பதவிக்கு வந்தவர் – அவருடைய பதவிக்காலம் வருகிற 2008 ஜனவரி 6 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

தணிக்கைக்குழுத் தலைவராக ஒருவரை நியமிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் இந்தச் சமயத்திலாவது மக்களாட்சி முறையில் நம்பிக்கையுள்ள நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களும், அவற்றின் கண்காணிப்புக் குழுவினரும், பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் ஒன்றுபட்டு, பயிற்சிபெற்ற திறமையுள்ள, தணிக்கைக் கணக்குத்துறை பிரிவைச் சேர்ந்த ஒருவரை, பாரபட்சமற்ற முறையில் தேர்ந்தெடுப்பதற்கான கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டும்.

சரியானபடி அரசின் செலவு விவரங்கள் கவனிக்கப்படவில்லை என்றால் தணிக்கை முறை வெற்றி பெறாது.

சரியானபடி தணிக்கை முறை இல்லையென்றால் நாடாளுமன்றக் கண்காணிப்பு வெற்றி பெறாது. இந்த நிலைமை வளர்ந்தால் ஜனநாயக முறையில் மக்களின் பணத்துக்குப் பாதுகாப்புத் தரும் நாடாளுமன்றம் என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

உச்ச நீதிமன்றத்தைவிட முக்கியமான இடத்தை தணிக்கை அமைப்புக்கு அரசமைப்பு ஆசான் அம்பேத்கர் தந்தார். ஆனால் தமது போக்கில் தணிக்கை அமைப்பின் தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத் தொடர்ந்து மத்திய அரசு நியமித்துக்கொண்டே இருந்தால், விரைவில் சட்டப்படிப்பு அறவே இல்லாத ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு பின்வாங்காது.

அதன் பிறகு, நீதிமன்றம், நாடாளுமன்றம், தணிக்கைத்துறை ஆகியவைகளுக்கு உள்ள சுதந்திரமும், தனித்தன்மையும் நீக்கப்பட்டு, எல்லாவற்றுக்கும் ஏகபோக சர்வாதிகாரமாக மத்திய நிர்வாகத்துறை ஆகிவிடும்.

(கட்டுரையாளர்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)

—————————————————————————————————————————————————————-

பொதுத்துறையில் புதிய பார்வை!

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதுதான் பொருளாதாரச் சீர்திருத்தவாதிகளின் முதல் கோஷமாக இருந்தது. ஏதோ, நல்ல புத்தி தோன்றி, நஷ்டத்தில் இயங்கும் சில நிறுவனங்கள் தவிர மற்ற பொதுத்துறை நிறுவனங்களின்மீது மத்திய அரசு கைவைக்காததன் பலன், இப்போது பல நிறுவனங்கள் லாபகரமாக நடக்கின்றன. இதற்கு, தனியார்மயமாக்கப்படுவோம் என்கிற பயம் காரணமா அல்லது நிர்வாகம் முடுக்கி விடப்பட்டது காரணமா என்று தெரியவில்லை.

தற்போது சுமார் 250 பொதுத்துறை நிறுவனங்கள் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் இருந்து வருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவைகளில் 120 நிறுவனங்கள் மட்டும்தான் லாபகரமாக இருந்தன. சமீபத்திய ஆய்வின்படி, கணக்கெடுக்கப்பட்ட 215 நிறுவனங்களில் 157 நிறுவனங்கள் லாபகரமாக நடப்பதாகத் தெரிகிறது. 35 நிறுவனங்களின் தணிக்கை இன்னும் முடிந்தபாடில்லை.

இந்தப் புள்ளிவிவரங்கள் சற்று ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் என்பவை, தேசத்தின் சமச்சீர் வளர்ச்சியையும், நாட்டின் அடிப்படைத் தேவைகளையும் கருத்தில்கொண்டு நிறுவப்பட்டவை. பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ், இந்தியன் ஏரோநாட்டிக்ஸ், செய்ல், ஆயுதத் தொழிற்சாலை போன்றவை, இந்தியாவின் தன்னம்பிக்கையை வளர்த்தன என்பது மட்டுமல்ல, நாம் சுயசார்புடைய நாடாக வளர வழிவகுத்தன என்பதையும் மறந்துவிடக் கூடாது.

சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டிருப்பதுபோல, பண்டித ஜவாஹர்லால் நேரு இந்தியாவுக்கு அமைத்துத் தந்த கலப்புப் பொருளாதாரத்தின் பலன்தான் இப்போது இந்தியா உலகமயமாகி இருக்கும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்க வழிகோலியிருக்கிறது. அதுமட்டுமல்ல, திருச்சி, ராஞ்சி, போபால், புணே, ரூர்கேலா, நாசிக் போன்ற நகரங்களைத் தொழில் நகரங்களாக உருவாக்க முடிந்ததன் காரணம், அங்கெல்லாம் பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவப்பட்டதால்தான்.

ஒரு சில பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் தொடர்ந்தன என்பதும், லாபம் ஈட்டும் நவரத்னங்கள் என்று அழைக்கப்படும் நிறுவனங்களும்கூட, தங்களது முழுமையான உற்பத்தித் திறனை எட்டவில்லை என்பதும் உண்மை. ஆனால், அதற்குக் காரணம் நிர்வாகச் சீர்கேடும், அரசியல் தலையீடும், தொழிலாளர்கள் மத்தியில் காணப்பட்ட மெத்தனமும்தானே தவிர, அந்த நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களாக இருந்ததால் அல்ல. அதைத்தான், இந்த நிறுவனங்களின் தற்போதைய அதிகரித்த உற்பத்தித் திறனும், லாபமும் நிரூபிக்கின்றன.

இந்தப் பொதுத்துறை நிறுவனங்கள் நவீனப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும், அவைகளின் நிர்வாகத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்த நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களைப்போல, லாப நோக்குடனும், திறமையின் அடிப்படையிலும் செயல்பட வேண்டும் என்பதும், மக்கள் வரிப்பணம் இந்த நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுசெய்ய வீணடிக்கப்படக் கூடாது என்பதும் உறுதி. அதற்கு வழி இந்த நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதல்ல. தனியார் முதலீடுகளை குறிப்பிட்ட அளவு வரவேற்பதும், அரசு அதிகாரிகள் மட்டுமன்றி முதலீட்டாளர்களின் பிரதிநிதிகளும் நிர்வாகத்தில் பங்கு பெறுவதும்தான்.

முப்பது அல்லது நாற்பது சதவிகிதம் பங்குகளைத் தனிநபர்களுக்கு பங்குச்சந்தை வழியே விற்பதன் மூலம் இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பங்குதாரர்கள் கேள்வி கேட்க முடியும் என்பதும், நிர்வாகத்தில் பங்குதாரர்களின் பிரதிநிதிகள் இயக்குநர்களாகப் பங்கு பெற முடியும் என்பதும், இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமல்ல, பங்குகளை பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிப்பதால் லாபம் காட்ட வேண்டிய கட்டாயம் நிர்வாகத்துக்கு ஏற்படும். நிறுவனத்தை நவீனப்படுத்த முதலீடும் கிடைக்கும்.

சிறிய அளவில் நமது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள், பங்குச்சந்தை மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவது என்பது காலத்தின் கட்டாயம். அப்போதுதான் அவை உண்மையிலேயே மக்கள் நிறுவனமாகச் செயல்படும். அதுமட்டுமல்ல, இந்த நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படும் அபாயமும் தவிர்க்கப்படும்!

—————————————————————————————

அரசியல்வாதிகளுக்கும் நடத்தை நெறிமுறைகள்

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்


கடந்த வாரம் நமது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சம்பந்தப்பட்ட இரு சம்பவங்கள் செய்தி ஊடகங்களில் இடம்பிடித்திருந்தன. ஜம்மு ~ காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அவைக் காவலர்களுடன் கடுமையாக மோதும் காட்சியை ~ கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு அவைக் காவலர்களுக்குக் குத்து விடும் காட்சியை ~ தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பின. விளையாட்டு தொலைக்காட்சி சேனல்களில் காட்டப்படும் மல்யுத்தப் போட்டி போல இருந்தது அது.

நமது கவனத்தைக் கவர்ந்த மற்றொரு செய்தி, 35-க்கு மேற்பட்ட குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவரும் 8 மாதங்களாக, ஆம்; எட்டு மாதங்களாக தான், குண்டர் படைத் தலைவர்போல தலைமறைவாக இருந்துகொண்டிருந்தவருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டது தொடர்பானதாகும்.

அந்த ஜம்மு ~ காஷ்மீர் எம்எல்ஏவை ஒரு தொலைக்காட்சி சேனல் பேட்டி கண்டு ஒளிபரப்பியது. அவரது கேவலமான நடவடிக்கைக்காக ஒரு துளி வருத்தத்தைக்கூட அப்போது அவர் தெரிவிக்கவில்லை. மாறாக, தேவைப்பட்டால் மீண்டும் அவ்வாறே நடப்பேன் என்று திட்டவட்டமாகக் கூறினார் அந்த எம்எல்ஏ. ஒருவகையில் பார்த்தால், சட்டம் ~ ஒழுங்கைப் பராமரிக்கின்ற காவல் துறையினரைப் போன்றவர்கள்தான் சட்டப் பேரவைக் காவலர்களும். அவையின் கண்ணியத்தைக் காக்கவும் அவைக்குள் நன்னடத்தையை உறுதிசெய்யவும் அவைத் தலைவரின் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுப்பவர்கள் அவர்கள். எனவே அவைக் காவலரை ஓர் எம்எல்ஏ தாக்குவதென்பது, காவல் துறையைச் சேர்ந்த ஒரு காவலரை பொதுஜனம் ஒருவர் தாக்குவதற்குச் சமமாகும். அப்படிச் செய்திருந்தால் பொதுஜனத்துக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் அந்த எம்எல்ஏவோ எவ்விதத் தண்டனையுமின்றித் தப்பிவிடக்கூடும். எம்.பி., எம்எல்ஏக்களுக்கு ஒரு குற்றவியல் சட்டம், சாதாரண மக்களுக்கு வேறொரு குற்றவியல் சட்டமா அமலில் இருக்கிறது?

8 மாதங்களாகத் தலைமறைவாகி ஓடிக்கொண்டிருந்த அந்த எம்.பி., அலாகாபாதில் உள்ள ஃபூல்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒரு காலத்தில் பண்டித ஜவாஹர்லால் நேருவைத் தேர்ந்தெடுத்த பெருமைக்குரியது அத் தொகுதி. அதே தொகுதியின் பிரதிநிதியாக இன்று, நாட்டின் பிரச்னைகளை விவாதித்து முடிவெடுக்கக்கூடிய தேசத்தின் மிக உயர்ந்த அமைப்பான நாடாளுமன்றத்துக்கு குற்றப் பின்னணியைக் கொண்ட ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செல்கிறார் என்றால் அது காலக்கொடுமைதான்.

அரசியல்வாதிகள் மீதும் சாதாரணப் பொதுமக்கள் மீதும் பழிவாங்கும் எண்ணத்தோடு அதிகாரத்தில் இருப்பவர்களால் பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை. அரசியல் எதிரிகள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்குகள் தொடரப்படுவதும் நடக்காமல் இல்லை.

தனக்கு எதிராக 35-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், ஓர் எம்.பி. தொகுதியின் பிரதிநிதியாகவும் இருக்கக்கூடிய கெüரவத்தை ஒருவர் பெற்றிருப்பதென்றால் அவர் உண்மையிலேயே பெரிய மனிதர்தான்! ஒருவர் எம்எல்ஏயாகவோ, எம்.பி.யாகவோ ஆக விரும்பினால், அவருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதைக் காட்டக்கூடியதாகவும் இருக்கிறது இது. ‘கெüரவமான’ நடுத்தர வர்க்கத்தினர், தொழில் நிபுணர்கள் மற்றும் இதைப் போன்ற சமுதாயத்தின் இதர பிரிவினரெல்லாம் வன்முறை தலைவிரித்தாடும் அரசியல் களத்துக்குள் ஏன் வர விரும்பவில்லை என்பதையும் இது எடுத்துக் காட்டுகிறது. சமுதாயத்தின் கணிசமான பகுதியினர் பொதுவாழ்க்கையில் ஈடுபட முடியாத அளவுக்கு ஒரு மோசமான நிலைமையை அரசியலில் உருவாக்கி விட்டார்கள்.

அந்த எம்.பி., எம்எல்ஏவைப் பற்றி அதே தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான அதே நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான ஜெயந்தி நடராஜனும் பங்குகொண்டிருந்தார். அச் சம்பவங்கள் குறித்து அவரிடம் கேட்டபோது, ‘ஒருவர் குற்றவாளி என்பது நிரூபணமானால், சட்டப்படி அவர் தண்டிக்கப்பட வேண்டியவர்தான்’ என்று சாதாரணமாகக் கூறிவிட்டுச் சென்றார் அவர். சாதாரணமாகப் பார்க்கும்போது, அவர் கூறியது நியாயமானதுதான், சரியானதுதான் என்று தோன்றக்கூடும். அரசியல்வாதிகளைப் பொருத்தவரை அதன் அர்த்தம் சரிதானா என்பதைப் பார்ப்போம்.

மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் மீதான எத்தனையோ வழக்குகள் எத்தனையோ நீதிமன்றங்களில், வெவ்வேறு நிலைகளில் பல ஆண்டுகளாக, ஏன் பத்து ஆண்டுகளுக்கு மேலாகக்கூட விசாரணையில் இருந்துகொண்டு இருப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

பிகார் கால்நடைத் தீவன ஊழல் வழக்கை சுமார் 20 ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் குற்றம் சாட்டப்பட்ட மூத்த அரசியல்வாதிகள் அவ் வழக்குகளில் தண்டிக்கப்படவும் இல்லை, அதிலிருந்து விடுதலை ஆகவுமில்லை. இதைப்போல எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.

எடுத்துக்காட்டாக சுக்ராம் வழக்கை எடுத்துக்கொள்வோம். அவரது வீட்டிலிருந்து ரொக்கமாகப் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அரசிடம் அத்தனை புலன்விசாரணை அமைப்புகள் இருந்தபோதிலும் அவர் மீதான குற்றச்சாட்டுகளை வெற்றிகரமாக நிரூபிக்க முடியவில்லை. சம்பந்தப்பட்ட அரசியல்வாதியோ சட்டையைக் கழற்றி மாட்டுவதைப்போல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்சிக்குத் தாவிக்கொண்டு சந்தோஷமாகக் காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறார். மிகப் பலவீனமான புலனாய்வு அமைப்புகள், ஓட்டைகளுடன்கூடிய அரசுத் தரப்பு இயந்திரங்கள், மென்மைப் போக்கு கொண்ட (வளைந்து கொடுக்கக்கூடிய என்றுதான் குறிப்பிட நினைத்தேன்) நீதித் துறை இவற்றாலெல்லாம் அரசியல்வாதிகளுக்கு எதிரான எந்த வழக்கையும் விசாரணை நடத்தி, அதை உரிய வகையில் முடிவுக்குக் கொண்டுவர முடியாது.

ஓர் அரசு ஊழியர் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டால், உடனடியாக அவர் பணியிடைநீக்கம் செய்யப்படுவது நடைமுறை விதியாக இருந்து வருகிறது. ஒருவேளை அவர் குற்றமற்றவர் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்த காலத்தில் ~ வருமானம், பதவி உயர்வு போன்ற ~ இழந்தவையெல்லாம் இழந்ததுதான். அதாவது, மக்கள் பணியாளர்களாக, அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்ற வழக்கு விசாரணையில் இருக்கும் பொழுது அவர்கள் அரசுப் பணியை ஆற்றுவதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள் என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம். ஆனால், அரசியல்வாதிகள் விஷயத்தில் இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்காமல் இருப்பதற்கு எந்த நியாயமான காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. சொல்லப் போனால், அமைச்சர்களும் எம்எல்ஏ, எம்.பி.க்களும்கூட மக்கள் பணியாளர்கள்தான்; அரசாங்க ஊழியர்களையும்விட கூடுதலாக மக்கள் பணியாளர்கள் அவர்கள். (பலர் தம்மை மாமன்னர்களாகவும் நவாபுகளாகவும் நினைத்துக்கொள்கின்றனர் என்பது வேறு விஷயம்). எனவே, அரசு ஊழியர்கள் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படும் அதே கொள்கை, அரசியல்வாதிகள் விஷயத்திலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்; குற்ற வழக்குகளில் இருந்து விடுதலை ஆகும் வரையில் அரசுப் பதவிகளை அவர்கள் வகிப்பதற்கும், எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கான பணியை ஆற்றுவதற்கும் அவர்களை அனுமதிக்கக் கூடாது. இந்த ஒரே நடவடிக்கை மூலமாகவே சட்ட மன்றங்களும் நாடாளுமன்றமும் குறிப்பிடத் தக்க அளவுக்குத் தூய்மைப்படுத்தப்பட்டுவிடும்.

அரசுப் பதவிகளை வகிப்போர் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க தனி நீதிமன்றங்களையோ, பிரத்தியேக நீதி அமைப்புகளையோ ஏற்படுத்த வேண்டும் என்று பலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. சாதாரணக் குடிமகனாக இருந்தாலும், சமுதாயத்தில் முக்கியமானவர்களாக இருந்தாலும் சட்டம் யாரையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை; எனவே ஒரே மாதிரியான நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது என்னும் வாதம் முன்வைக்கப்படுகிறது. இது சரியானதுபோலத் தோன்றினாலும் உண்மையில் தவறானதாகும்.

முதலாவதாக, சாதாரணக் குடிமகனுக்கும் விரைந்து நீதி கிடைக்க வேண்டியது அவசியம்தான். ஏராளமான வழக்குகள் பல பத்தாண்டுகளாக நீதிமன்றங்களின் விசாரணையில் இருந்துகொண்டு இருக்கின்றன. ஏராளமான விசாரணக் கைதிகள் சிறையில் இருந்துகொண்டு இருக்கின்றனர். கடைசியில் அவர்களில் பலர் வழக்கில் விடுதலை செய்யப்படக்கூடும் அல்லது மிகக் குறைந்த அளவு தண்டனை விதிக்கப்படவும்கூடும்.

இரண்டாவதாக, நமது சமுதாயத்தில் செல்வாக்குடன் இருக்கக்கூடிய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் போன்றோர் புலனாய்வு அமைப்புகள், விசாரணை அமைப்புகள், நீதி நடைமுறைகள் போன்றவற்றின் மீது தமது செல்வாக்கைச் செலுத்தக்கூடிய நிலையில் இருப்பவர்களாவர் என்பதே உண்மை. அவர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க முடியாமல் இருப்பதற்கு எந்தவிதக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை.

எடுத்துக்காட்டாக, குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பதவியில் இருக்க அனுமதிப்பதாக வைத்துக்கொள்வோம். ஒருவேளை பல ஆண்டு விசாரணைக்குப் பிறகு இறுதியில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டால், கறைபடிந்த ஒருவரை அரசின் உயர் பதவியில் அமரவும் அதன் மூலம் சமுதாயத்தின் செல்வாக்கு செலுத்தவும் அனுமதித்தவர்களாகிவிடுவோம் நாம். இந்தக் காரணங்களால்தான் அரசியல்வாதிகள், எம்.பி., எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க விரைவு நீதிமன்றங்கள் தேவை என வலியுறுத்தப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கிய முறைகேடு, நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி முறைகேடு ஆகிய ‘முன்மாதிரியான’ செயல்களெல்லாம் தண்டிக்கப்பட வேண்டியவை அல்ல என்று இன்றைய அமைப்பு முறை முடிவு செய்துவிட்டது.

இத்தகைய அரசியல்வாதிகளை முறைப்படுத்த நமது அரசியல் அமைப்புச் சட்டச் சிற்பிகள், எந்த ஏற்பாட்டையும் செய்யாமல் போனது நமது துரதிருஷ்டம்தான். அரசியல்வாதிகளெல்லாம் தம்மைப்போல நியாயவான்களாக, சுயநலமற்றவர்களாக, சுத்தமானவர்களாக இருப்பார்கள் என்று ஜவாஹர்லால் நேரு நினைத்திருக்கலாம். அன்று அவர்கள் அந்த ஏற்பாட்டைச் செய்யாமல் போனதற்கான விலையை நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின் நாம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கென குறைந்தபட்ச நன்னடத்தை விதிகள்கூட வகுக்கப்படவில்லை. அத்துமீறல்களை நடத்திவிட்டு எவ்விதத் தண்டனையுமின்றி அவர்கள் தப்புவது வாடிக்கையாகிவிட்டது. சொல்லப் போனால், கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இந்தியாவில் ஜனநாயகப் பாரம்பரியம் என்று ஏதும் இருந்ததில்லை. நமது அரசியல்வாதிகளும் தம்மை முகலாயச் சக்கரவர்த்திகளைப்போல் நினைத்துக்கொள்கின்றனர்.

ஜனநாயக உணர்வுகளும் சிந்தனைகளும் வளர்த்தெடுக்கப்படவும் இல்லை; மாற்றங்களை உருவாக்கும் வகையில் மக்களின் கருத்துகள் நெறிப்படுத்தப்படவும் இல்லை. எனவே, அரசியல்வாதிகளுக்கென குறைந்தபட்ச நடத்தை நெறிமுறைகள் வகுக்கப்பட்டாக வேண்டியது அவசியமாகும். ஆனால் அதை யார் செய்வதென்பதே கேள்வி.

(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவைச் செயலர்.)

Posted in Accountant General, Accounts, Admin, Administration, AGO, Allegations, Arms, Audit, BHEL, Bribes, Cabinet, Capitalization, Collector, Collectorate, Commission, Committee, Corruption, Deficit, Economy, Employment, Finance, financial, Funds, Globalization, Govt, HAL, Hindustan, Hindusthan, IAL, IAS, IMF, Income, Inquiry, Jobs, Lokpal, markets, NLC, parliament, Planning, Poor, Private, PubAd, Pubic, Public Administration, Rich, SAIL, service, SEZ, Shares, Statements, Statistics, Statz, Stocks, Verification, Wages, WB, Wealth, Weapons | Leave a Comment »

Chennai’s new Commissioner of Police Nanjil Kumaran

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

காசிப்ஸ்: கூடுதல் கமிஷனரை காப்பாற்றிய தாதா

சென்னை மாநகரில் புதிய கமிஷனராக நாஞ்சில் குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் என்ன விஷேசம் என்று நீங்கள் கேட்கலாம். இவர் கோவை மாநகர் கமிஷனராக இருந்த போதுதான், தீவிரவாதிகள் தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தினர். அந்த சம்பவத்துக்கு தண்டனை கடந்த 1ம் தேதி வழங்கப்பட்டது. அதே நாளில் நாஞ்சில் குமரன் சென்னை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். என்ன ஒரு பொருத்தம்.

கமிஷனர் லத்திகாவை மாற்றும் போதே, கூடுதல் கமிஷனர் ஜாங்கிட்டையும் மாற்ற அரசு நினைத்தது. இதை எப்படியோ அறிந்து கொண்ட ஜாங்கிட், வெள்ளை ரவியை சுட்டு தனது பதவியை தக்க வைத்துக் கொண்டார். முதல் நாள் தூத்துக்குடியில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள சென்று இருந்தார். ஆனால் வெள்ளை ரவி சுட்டுக் கொன்ற போது, அவர் அங்கு இருந்ததாக கமிஷனர் லத்திகா சொல்லவில்லை. ஆனால் பத்திரிகைகளில் அவருக்கு காயம் இருந்ததாக செய்திகள் வந்தது. தூத்துக்குடியிலும் ஓசூரிலும் ஓரே நபர் எப்படி இருந்திருக்க முடியும். இது மெடல் பெறுவதற்காக போட்ட நாடகம் என்று ஜாங்கிட்டுக்கு எதிர் தரப்பினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஜான்கிட்டுக்கும் குமரனுக்கும் அவ்வளவாக ஆகாது. எனவே அவர் விரைவில் மாற்றப்படுவார். வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருக்கும், ராதாகிருஷ்ணன் கூடுதல் கமிஷனராக பதவி ஏற்க கூடும் என்றும் சொல்லப் படுகிறது.


சென்னை போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன்சென்னை, ஆக. 2:சென்னை நகர போலீஸ் கமிஷனராக ஜி. நாஞ்சில் குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ். மாலதி பிறப்பித்துள்ளார்.உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக பதவி வகிக்கும் ஜி. நாஞ்சில் குமரன், தற்போது சென்னை நகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை நகர கமிஷனராக இருந்து வந்த லத்திகா சரண் தற்போது கூடுதல் டிஜிபியாக நிர்வாகத் துறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அதேபோல நிர்வாகத் துறையில் ஏடிஜிபியாக பணியாற்றி வந்த கே. ராமானுஜம் தற்போது தமிழ்நாடு 3-வது போலீஸ் கமிஷனின் முழுநேர உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நிர்வாகத் துறையுடன் 3-வது போலீஸ் கமிஷனின் உறுப்பினர் செயலர் பதவியை கூடுதல் பொறுப்பாக இவர் கவனித்து வந்தார். தற்போதைய உத்தரவின்படி, இவர் முழுநேர உறுப்பினர் செயலராக பணியாற்றுவார்.—————————————————————————————————–

சென்னை கமிஷனர் இன்று பதவி ஏற்றார்: பதவி சவாலானது- நாஞ்சில் குமரன் பேட்டி

சென்னை, ஆக. 2-

சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள நாஞ்சில் குமரன் இன்று பொறுப்பேற்று கொண்டார். அவரிடம் மாறுதலாகி செல்லும் கமிஷனர் லத்திகாசரண் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

புதிய கமிஷனராக பொறுப்பேற்றதும் நாஞ்சில் குமரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறியதாவது:-

தமிழக அரசும், முதல்- அமைச்சரும் என் மீது நம்பிக்கை வைத்து மிகப்பெரிய பொறுப்பான கமிஷனர் பதவியை வழங்கி உள்ளனர். சவாலான இந்த பணியை பொதுமக்கள் திருப்திபடும் அளவுக்கு உழைத்து நிறைவேற்றுவேன்.

பொதுமக்களுக்கு சேவை செய்ய கிடைத்த நல்ல வாய்ப்பாக கருகிறேன். சட்டத்துக்கு உட்பட்டு குற்றங்களை தடுக்க நிலுவையில் உள்ள வழக்கு களை விரைந்து முடிக்க தீவிர கவனம் செலுத்துவேன்.

குறிப்பாக சென்னை மாநகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சிக்கி திணறும் சூழ்நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய அனைத்து முயற்சி களையும் எடுப்பேன். சென்னையில் குற்றங்களை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த தனிப்படைகள் விரிவாக்கப்பட்டு வலுவூட்டப்படும்.

கேள்வி: போலீஸ் நிலையங்களில் அரசியல் குறுக்கீடு அதிகமாக உள்ளதே?

பதில்: இது பொதுப்படையான கேள்வி. போலீஸ் நிலையங்களுக்கு அனைத்து தரப்பினரும் வருவார்கள். இதில் குறுக்கீடு என்பது பணிகள் செய்யாதே என்று தடுப்பதாகும். ஆனால் போலீஸ் நிலையத்துக்கு வந்து பொதுமக்களுக்கு பயன் தரும் விஷயங்களை செய்யுங்கள் என்று சொல்வது வேறு. பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அனைவரும் தேடி வரும் இடமாகத்தான் போலீஸ் நிலையங்கள் இருக்கிறது.

கேள்வி: லஞ்ச ஊழல் அதிகரித்துள்ளதே?

பதில்: லஞ்சம் உலகளாவியது. தனிப்பட்ட முறையில் யார் மீது புகார் செய்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி: போலீஸ் பொது மக்கள் நல்லுறவு எப்படி உள்ளது?

பதில்: ரவுடிகள் அட்டகாசம் இல்லை. பொதுமக்கள் இரவு நேரங்களிலும் பயமில்லாமல் நடமாடும் சூழ்நிலை நிலவுகிறது. பொதுமக்களுடனான உறவுக்கு இதுவே சாட்சி.

கேள்வி: மத்திய குற்றப்பிரிவு போலீசில் நில மோசடி வழக்குகள் ஏராளமாக நிலுவையில் உள்ளது. நில மோசடியை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

பதில்: இந்த விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரிடம் ஒரு நிருபர் எல்லோரும் கமிஷனர் பதவிக்கு வர ஆசைப்படுவார்கள். இந்த பதவிக்கு நீங்கள் வந்துள்ளீர்கள். என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த நாஞ்சில்குமரன், போலீஸ் வேலையை செய்ய போகிறேன் என்றார்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுனில்குமார், இணைகமிஷனர்கள் ரவி, பாலசுப்பிரமணியம், துரைராஜ், சந்தீப்ராய் ரத்தோர், உளவுபிரிவு போலீஸ் துணை கமிஷனர் நல்லசிவம், உதவி கமிஷனர்கள் இளங்கோ, பன்னீர் செல்வம் மற்றும் துணை கமிஷனர்கள் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்கள்.—

———————————————————————————————-
புதிய டிஜிபி ராஜேந்திரன்

சென்னை, ஆக. 30: தமிழக காவல்துறை தலைவராக பி.ராஜேந்திரன் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை, தமிழக உள்துறை செயலர் எஸ்.மாலதி புதன்கிழமை பிறப்பித்துள்ளார்.

தமிழக காவல்துறை தலைவராக உள்ள டி.முகர்ஜியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் (யுஎஸ்ஆர்பி) தலைவராக உள்ள பி.ராஜேந்திரன், புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்கிறார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பயோ-டேட்டா: 7.12.1947-ல் திருநெல்வேலியில் பிறந்த பி.ராஜேந்திரன், இந்தியக் காவல் பணியில் (ஐபிஎஸ்) 1973-ம் ஆண்டு தமிழக பிரிவில் தேர்ச்சி பெற்றார். இவர் ஏஎஸ்பியாக வேலூரில் பணிக்குச் சேர்ந்தார். பின்னர் ராமநாதபுரம் எஸ்பியாகப் பணியாற்றியுள்ளார். அதைத்தொடர்ந்து கியூ பிரிவு எஸ்பியாகவும் இருந்துள்ளார்.

சிவில் சப்ளை பிரிவில் டிஐஜி ஆகவும், கடலோரப் பாதுகாப்பு பிரிவு டிஐஜி ஆகவும் இருந்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிரிவில் ஐ.ஜி.யாகப் பணிபுரிந்துள்ளார். கோவை நகர கமிஷனராகவும், தலைமை அலுவலகத்தில் கூடுதல் டிஜிபியாகவும் (நிர்வாகம்) பணிபுரிந்துள்ளார்.

Posted in Action, Additional Director General of Police, Arms, Bombs, Bribery, Bribes, CB-CID, CBI, Charan, Chat, Chennai, CID, Citizen, Commissioner, Common, Congestion, CoP, Correctional, Corrections, Corruption, CP, Dada, DGP, Force, IAS, Intelligence, Interview, Investigation, IPS, Jaangid, Jaangit, Jaangittu, Jangid, Jangittu, Jankittu, Karunanidhi, kickbacks, Kumaran, Lathika, Latika, Law, Lethika, Letika, Letika Saran, Madras, Naanjil, Nanjil, Nanjil Kumaran, Official, Opinions, Order, Plan, Police, Rajendhiran, Rajendhran, Rajendran, Rajenthiran, Rajenthran, Ravi, Rowdyism, Saran, Traffic, Uniform, USRB, Vellai, Vellai Ravi, Violence, Weapons | Leave a Comment »

China’s outrageous claim – Denies visa, Arunachal Pradesh vents anger on UPA

Posted by Snapjudge மேல் மே 27, 2007

அருணாசலப் பிரதேசம் எங்களுடையதே: சீனா

இட்டாநகர், மே 27:அருணாசலப் பிரதேசம் தொடர்பாக சீனா- இந்தியா இடையே ஏற்கெனவே சர்ச்சை உள்ள நிலையில் இப்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. சீனா செல்லவிருந்த குழுவில் இடம்பெற்றிருந்த அருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு விசா அளிக்க சீனா மறுத்துவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீனாவுக்கு செல்ல இருந்த 102 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பயணத்தை இந்திய அரசு ரத்து செய்து விட்டது. இவர்கள் சனிக்கிழமை காலையில் சீனப் பயணம் மேற்கொள்ள இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய பகுதியாக இருப்பதால் அருணாசலப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரிக்கு விசா வழங்க இயலாது என்று சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி கன்டு, அதிர்ச்சி தெரிவித்ததுடன் கடும் கண்டனமும் வெளியிட்டுள்ளார்.

அருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சீனா விசா தர மறுத்தது குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மாநில முதல்வர் ஆலோசனை நடத்தினார். வெளியுறவு அமைச்சகம் இந்த விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, அருணாசலப் பிரதேச மாநிலம் முழுவதும் இந்தியாவின் பகுதியே ஆகும். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தன.

சீன தூதர் பேட்டி: “இந்தியர்கள் யாரும் சீனா வருவதை மகிழ்சியுடன் வரவேற்கிறோம். ஆனால் சர்ச்சைக்குரிய பகுதியான அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்த அதிகாரிகளை நாங்கள் அதிகாரிகள் என்று ஏற்றுக் கொள்வது கடினம்’ என்று இந்தியாவுக்கான சீன தூதர் சுன் யுக்ஸி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அருணாசலப் பிரதேசம் தொடர்பாக ஓர் ஆண்டில் இரண்டாவது முறையாக சர்ச்சை எழும் வகையில் சீன தூதர் சுன் யுக்ஸி கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா- சீனா இடையிலான எல்லைப் பிரச்சினையை தீர்க்க இருதரப்பும் ஒருபக்கம் முயன்று வருகின்றன. இந்திய ராணுவத் தலைமை தளபதி ஜே.ஜே. சிங், சீனாவுக்கு தற்போதுதான் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் அருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு விசா அளிக்க சீனா மறுத்தது, அருணாசலப் பிரதேசம் எங்களுடையதே என்ற அதன் அடாவடியான போக்கு இருதரப்பு உறவில் விரிசலுக்கு வழிவகுத்துவிடக்கூடாது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

——————————————————————————

மரியாதைக்குரிய அண்டை நாடு!

எம். மணிகண்டன்

அண்மையில் அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு விசா வழங்க சீனா மறுத்தது.

இதையடுத்து, அங்கு செல்ல இருந்த இந்தியக் குழு தனது பயணத்தை ரத்து செய்துவிட்டது. “விசா மறுக்கப்படவில்லை; சீனாவில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல விசா தேவையில்லை என்றுதான் கூறினோம். அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விசா இல்லாமலேயே சீனாவின் எந்தப் பகுதிக்கும் செல்லலாம்’ என்பதுதான் சீனாவின் நிலை.

இதன் மூலம், அருணாசலப் பிரதேசம் தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என்று சீனா மீண்டும் உரிமை கோர முயற்சிக்கிறது என்று இந்தியாவின் தரப்பில் கூறப்பட்டது. வழக்கம்போல், இந்திய அரசியல்வாதிகள், “எந்த நிலையிலும் அருணாசலப் பிரதேசத்தை சீனாவுக்கு விட்டுத் தர முடியாது’ என வீர வசனம் பேசினர்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் ஜெர்மனியில் நடந்த ஜி-8 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சீன அதிபர் ஹூ ஜிண்டாவ் ஆகியோர் சந்தித்துப் பேசிக் கொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது அருணாசலப் பிரதேச விவகாரம் குறித்து “அனல் பறக்கும் விவாதம்’ நடக்கும் என பெரும்பாலானோர் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்ததோ வேறு.

“சீனா எங்கள் மரியாதைக்குரிய அண்டைநாடு’ என மன்மோகன் சிங் வர்ணிக்க, “இரு தரப்பு உறவுகள் மேம்பட ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுத்து வருகிறோம்’ என்று பதிலுக்கு ஐஸ் வைத்தார் சீன அதிபர். இப்படியாக, இந்த விவகாரம் திடீரென எழுவதும், சில நாள்களில் மறக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

அருணாசலப் பிரதேசத்தின் மீது சீனாவுக்கு “அதீத ஆசை’ ஏற்பட, அதன் புவியியல் அமைவே முதல் காரணம். அருணாசலப் பிரதேசத்தைக் கைப்பற்றிவிட்டால், மேற்குவங்கத்தில் உள்ள குறுகிய “சிலிகுரி’ துண்டுப் பகுதியை ஆக்கிரமித்து விடலாம்.

இந்தப் பகுதிதான் இந்தியாவின் பெரும்பான்மை பகுதியை, வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கிறது. இப் பகுதியை இழந்துவிட்டால், வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் கையை விட்டுப் போய்விடும் அபாயம் இருக்கிறது.

மணிப்பூர், அசாம் மாநிலங்களில் நடக்கும் இந்திய அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தூண்டிவிடுவதற்கும் அருணாசலப் பிரதேசம் பயன்படும். அருணாசலப் பிரதேசத்தில் உள்ள நீர்மின் திட்டங்கள் அமைப்பதற்கான வாய்ப்புகள், அதிக கனிம வளங்கள் போன்றவையும் அப்பகுதி மீது சீனா கண் வைக்க காரணங்களாகும்.

இப்படியெல்லாம் செய்வதற்கு சீனா திட்டமிட்டிருக்கிறதோ இல்லையோ, இவை நடப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருப்பதால் இந்தியத் தரப்பு, அருணாசலப் பிரதேச விவகாரத்தில் உஷாராகவே உள்ளது.

ஏற்கெனவே, வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் போராட்டங்களுக்கு சீனா நிதியுதவி செய்கிறது என பரவலாக நம்பப்பட்டு வருகிறது. இதுவும், அருணாசலப் பிரதேசம் மீது சீனா கோரி வரும் உரிமையை, இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருவதற்கு மற்றுமொரு காரணம்.

1962 போருக்குப் பிறகு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட நீண்ட காலம் ஆனது. சீனாவின் “ஐந்து விரல் கொள்கையே’ இதற்குக் காரணம்.

திபெத் பகுதியை சீனாவின் உள்ளங் கையாக வைத்துக் கொண்டால், நேபாளம், பூடான், சிக்கிம், லடாக், அருணாசலப் பிரதேசம் ஆகியவையே அந்த ஐந்து விரல்கள். இந்தப் பகுதிகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் சீனாவின் “ஐந்து விரல் கொள்கை’.

அதே சமயம், இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் நாடு என ஒரேயடியாக சீனாவை ஒதுக்கிவிட முடியாது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இருதரப்பு உறவுகளில் நல்ல முன்னேற்றம் இருந்தது.

ஆனால், பொக்ரான்-2 அணு குண்டு சோதனை நடத்தியபோது, மீண்டும் முடங்கிப் போன அரசு முறை உறவுகள், கடந்த சில ஆண்டுகளாக மேம்பட்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.

கடந்த பத்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் 15 மடங்காக உயர்ந்திருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக வர்த்தகம் செய்வது சீனாவுடன்தான்.

சீனாவின் “ஒரே சீனா’ கொள்கையை இந்தியா ஆதரித்து வருகிறது. அந்நாட்டின் வேண்டுகோளுக்கு இணங்கி, தைவானை இதுவரை தனி நாடு என இந்தியா அங்கீகரிக்கவில்லை. அந்நாட்டுடன் ராஜீய உறவுகள் எதையும் இந்தியா ஏற்படுத்திக் கொள்ளவில்லை. சீனாவுடன் நட்புறவோடு இருப்பதை இந்தியாவும் விரும்புகிறது என்பதற்கான சிறந்த சான்றுகள் இவை.

என்னதான் இருந்தாலும், பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்வது, அருணாசலப் பிரதேசத்துக்கு உரிமை கோருவது போன்றவை இந்தியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகின்றன.

இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டுதான், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகளை இந்தியா ஆராய்ந்து வருகிறது.

ஆனால் அண்மையில் சீனா சூசகமாகத் தெரிவித்திருக்கும் கருத்துகள், அவ்வளவு எளிதாகக் எடுத்துக் கொள்ளத் தக்கவை அல்ல. “ஐந்து விரல் கொள்கையை’ சீனா இன்னும் விட்டுவிடவில்லை என்பதற்கான அறிகுறிகள் இவை.

மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, “இந்தியாவின் முதல் எதிரி சீனாதான்’ என்று வெளிப்படையாகவே பேசினார் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.

“இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மீண்டும் பகையை ஏற்படுத்திவிட்டார் பெர்னாண்டஸ்’ என பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தியாவுக்குள் இவ்வளவு எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்காத அவர், கடைசியில் தனது கருத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டியதாயிற்று.

பெர்னாண்டஸ் கூறியது போல, சீனா முதல் எதிரியா? அல்லது இன்றைய பிரதமர் கூறுவது போல மரியாதைக்குரிய அண்டை நாடா? என்பதுதான் தற்போது நம்முன் நிற்கும் கேள்வி.

Posted in Aggression, AP, Arms, Arunachal Pradesh, Assam, Bhutan, BRIC, China, Claim, Country, Extremism, Foreign, G8, IAS, India, Integration, Manipur, Missiles, Mizoram, Nagaland, Nation, National, Nepal, North East, Northeast, Nuclear, Op-Ed, Pokharan, Pokhran, Pokran, Power, Rajeev, Rajeev Gandhi, Rajiv, Rajiv Gandhi, Rajiv Gandi, Risk, SAARC, Security, South Asia, State, Superpower, Terrorism, Tibet, Tripura, ULFA, UPA, Violence, Visa, War, Weapons | Leave a Comment »

The rise and fall of Dayanidhi Maran – Biosketch

Posted by Snapjudge மேல் மே 14, 2007

பதவி ஏற்ற 3 ஆண்டுகளில் பதவி இழப்பு

சென்னை, மே 14: மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் 3 ஆண்டுகளில் தனது பதவியை இழக்கிறார்.

முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு, 2004-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் தயாநிதி மாறன். 2004 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை சன் டி.வி. நிர்வாகத்தின் அங்கமான சுமங்கலி கேபிள் விஷன் இயக்குநர்களில் ஒருவராக இருந்தார் தயாநிதி மாறன்.

அரசியலுக்கு முதன்முதலில் அடியெடுத்து வைத்த அவருக்கு, அமோக வெற்றியை மத்திய சென்னை வாக்காளர்கள் அள்ளித் தந்தனர்.

தொடர்ந்து, மத்தியில் அமைந்த கூட்டணி அமைச்சரவையில், மிக முக்கிய பொறுப்பான தகவல் தொழில்நுட்பத் துறை இவருக்கு வழங்கப்பட்டது. முதல்வர் கருணாநிதியின் ஆசியுடன் மிகக் குறுகிய காலத்தில் இவர் அரசியலில் மிகுந்த செல்வாக்கு பெற்றவராக வளர்ந்தார்.

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மட்டுமின்றி ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியிடமும் மிகுந்த செல்வாக்குப் பெற்றவரானார்.

ஒரு கருத்துக்கணிப்பின் விளைவாகத் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட கட்சிக் குழப்பத்தில் நாலாவது நாளில் பதவி பறிக்கப்படுகிறார் தயாநிதி மாறன்.
———————————————————————————————————-

கிட்டத்தட்ட மூன்றாண்டு காலம் மத்திய அமைச்சராக பணியாற்றியுள்ளேன்.

கடந்த 26 மாதங்களில் என் துறை மூலம் நம் நாட்டுக்கு 2 லட்சத்து 66 கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது. இதில் பெரும் பகுதி நமது தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் என் தலைவரும், பிரதமரும், சோனியா காந்தியும் அளித்த வாய்ப்புதான்.
———————————————————————————————————-
தயாநிதி மாறன் பதவி யாருக்கு கிடைக்கும்?:

அழகிரிக்கோ அவரது ஆதரவாளருக்கோ கிடைக்கலாம் ::

பா. ஜெகதீசன்

சென்னை, மே 14மத்திய அமைச்சர் பதவியை தயாநிதி மாறன் ராஜிநாமா செய்துவிட்டார்.

இந் நிலையில், இதுவரை அவர் வகித்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பதவி யாருக்குக் கிடைக்கும் என்பது தொடர்பாக பல்வேறு யூகங்கள் உலா வரத் தொடங்கி உள்ளன.

தயாநிதிக்கு பதிலாக அவர் வகித்த பதவிக்கு திமுகவின் மத்திய அமைச்சர்களான டி.ஆர். பாலு, அ. ராசா ஆகியோரில் ஒருவருக்கு கூடுதல் பொறுப்பு தரப்படலாம் என அக்கட்சியின் ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.

மன்னிப்பு கிடைக்குமா:

Mallikaதயாநிதி மாறனின் தாய் மல்லிகா மாறன் தற்போது வெளிநாட்டில் உள்ளார். அவர் சென்னைக்கு திரும்பியதும் அவரும், தயாநிதி மாறனும், சன் டிவி நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறனும் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து நடைபெற்ற சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்கும் வாய்ப்பும் உள்ளது.

அப்படி நடைபெறும்போது இப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு ஏற்படக் கூடும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும்போது தயாநிதி மாறன் மீண்டும் மத்திய அமைச்சராக தொடர்ந்து நீடிக்கும் சாத்தியம் உள்ளது.

இதற்கு ஒரு முன்னுதாரணமாக, திமுகவில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை நினைவு கூருகின்றனர்.

கடந்த 2001-ல் சட்டப் பேரவைத் தேர்தலின்போது திமுகவுக்கு எதிராக அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் செயல்பட்டனர்.

இதனால், தேர்தலில் தென் மாவட்டங்களில் திமுக தோல்வியைத் தழுவியது.

அப்போது கட்சியில் அழகிரிக்கு எதிரான நிலை எடுக்கப்பட்டு அவர் ஒதுக்கி வைக்கப்பட்டார். கட்சிக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்றுகூட திமுக தலைமை கூறியது. ஆனால், சிலமாதங்கள் சென்றபின் நிலைமை மாறியது.

2002 பிப்ரவரியில் ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட்டார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வைகை சேகரை ஆதரித்து அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் தீவிர பிரசாரம் செய்தனர்.

இன்னும் சொல்லப்போனால் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து அழகிரி பிரசாரம் செய்தார். அத்தேர்தலில் தனது மனைவியுடன் வீடு வீடாகச் சென்று அழகிரி வாக்கு சேகரித்தார்.

இதைத் தொடர்ந்து திமுகவில் தனக்கு இருந்த செல்வாக்கை அழகிரி வலுப்படுத்திக் கொண்டார் என்பதை திமுகவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

அழகிரிக்கு சாதகம்:

இதற்கிடையே அழகிரியோ அல்லது அவர் சுட்டிக்காட்டும் அவரது ஆதரவாளர் ஒருவரையோ தயாநிதி மாறன் வகித்த பதவியில் நியமிக்க வாய்ப்பு உள்ளது. அப்படி மத்திய அமைச்சராக நியமிக்கப்படுபவர் வரும் ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

நாடார் சமுதாயத்துக்குப் பிரதிநிதித்தும் கிடைக்குமா?

மத்திய அமைச்சரவையில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த எவரும் இடம்பெறவில்லை. இந்தக் குறையைப் போக்கும் வகையிலும், சமீபத்தில் காமராஜரின் பெயரை முன்னிறுத்தி நடிகர் சரத்குமார் மேற்கொண்டுள்ள பிரசாரத்துக்கு ஈடுகொடுக்கும் விதத்திலும் திமுக செயல்பட வாய்ப்பு உள்ளது.

தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள

  • தினகரன் பத்திரிகையின் முன்னாள் உரிமையாளர் குமரன்,
  • வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோரில் ஒருவருக்கு தயாநிதி மாறன் வகித்த பதவி கிடைக்கக் கூடும்.

குமரன், சண்முகசுந்தரம் ஆகிய இருவரின் பதவிக்காலமும் வரும் ஜூலையுடன் முடிகிறது. இருந்தாலும் மத்திய அமைச்சராக, இருவரில் எவர் நியமிக்கப்படுகிறாரோ அவருக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் சாத்தியமும் உள்ளது.
———————————————————————————————————-
அப்பாவைப் போல இல்லையே பிள்ளை!

சென்னை, மே 14: திமுக தலைவர் கருணாநிதிக்கு உற்ற நண்பனாகவும், அவர் இடும் கட்டளைகளை ஏற்றுச் செயல்படுத்தும் தொண்டராகவும், சிக்கலான கட்டங்களில் ஆலோசனை கூறும் மதியூகியாகவும், அரசியல்ரீதியான சந்திப்புகளுக்கு முக்கியத் தலைவர்களை அணுகக்கூடிய நம்பத்தகுந்த தூதராகவும் செயல்பட்டவர் முரசொலி மாறன்.

கருணாநிதியின் சகோதரி மகன் என்ற உறவு இருந்தாலும் பிற தலைவர்களைப் போலவே அவரிடம் பழகி, அவருடைய முழு நம்பிக்கையையும் பெற்றிருந்தார். தில்லியில் திமுகவின் செல்வாக்குள்ள பிரதிநிதியாகத் திகழ்ந்த போதிலும் அதில் தனக்கென்று தனிப்பட்ட செல்வாக்கு தேடாமல் அனைத்தையும் கட்சிக்கென்றே பயன்படுத்தினார் முரசொலி மாறன். அவருடைய மறைவு திமுக தலைவருக்கு தாங்கமுடியாத பேரிழப்புதான்.

இந் நிலையில்தான், வயதில் இளைஞராக, அரசியல் அனுபவம் ஏதும் இல்லாதவராக, பார்ப்பதற்கு விளையாட்டுப் பிள்ளையாக இருந்த தயாநிதியை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்க கருணாநிதி முடிவு செய்தார். அதில் வெற்றி கண்டாலும், முரசொலி மாறனைப் போல அல்ல தயாநிதி மாறன் என்பதை விரைவிலேயே உணர்ந்துகொண்டார்.

தனக்கென்று அதிகார மையத்தை ஏற்படுத்த முரசொலி மாறன் விரும்பியதில்லை, ஆனால் தயாநிதியோ அப்படியல்ல. தயாநிதியின் அண்ணன் கலாநிதி மாறனின் தினகரன் பத்திரிகையில் வெளியான கருத்துக்கணிப்புகள், அவருடைய பதவி ஆசையைக் காட்டுவதாகவே கருதப்பட்டன. கழகக் குடும்பத்தின் மூத்த தலைவர் வாழும் காலத்திலேயே இப்படி என்றால் எதிர்காலத்தில் எப்படி நடப்பார் என்ற கேள்வி பிறக்கிறது. எனவே அவரைத் தண்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக தில்லியில் நிறைவேற்ற வேண்டிய வேலைகளுக்கு தயாநிதியை, கருணாநிதி மிகவும் நம்பியிருந்தார். இப்போது அவருக்குப் பதிலாக, அதே போல நம்பிக்கைக்குரிய ஒருவர் தேவை. முன்னர் டி.ஆர்.பாலு இந்த வேலைகளைச் செய்துவந்தார். ஆனால் கருணாநிதி “”முழு நம்பிக்கை” வைக்கும் அளவுக்கு ஒருவர் தேவைப்படுகிறார். அந்த இடத்தை நிரப்பக்கூடியவர் அவருடைய மகள் கனிமொழி. பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட அவருக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார் கருணாநிதி. மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு ஜூன் அல்லது ஜூலை தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. திமுக வேட்பாளர்களில் ஒருவராக கனிமொழி இருந்தால் வியப்பதற்கு ஏதும் இல்லை.
———————————————————————————————–
கட்சிக்கும், ஆட்சிக்கும் பகையை வளர்த்ததால் தான் இந்த கதி: தயாநிதி நீக்கத்தின் பின்னணி நமது சிறப்பு நிருபர்

அனைத்து தரப்பையும் பகைத்துக் கொண்டது, கட்சியில் ஆதிக்கம் செலுத்த நினைத்தது, டில்லி செல்வாக்கை தவறாக பயன்படுத்தியது போன்றவையே தயாநிதி நீக்கப்பட்டதற்கு காரணமாக அமைந்துள்ளன.

கடந்த 2004 லோக்சபா தேர்தலின் போது அரசியலுக்கு கொண்டு வரப்பட்ட தயாநிதி, முதல் முறையாக எம்.பி.,யானதும் மத்தியில் தகவல் தொழில்நுட்பத் துறையை இவருக்காக தி.மு.க., தலைவர் கேட்டுப் பெற்றார். மத்திய அமைச்சராக்கியதோடு மட்டுமன்றி, பிரதமர், சோனியா மற்றும் தேசிய தலைவர்களுடன் தி.மு.க., சார்பில் பேசுவதற்கும் தகவல்களை பரிமாறுவதற்கும் தயாநிதியை பயன்படுத்தினார். இதனால் டில்லி வட்டாரத்தில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு தயாநிதிக்கு கிடைத்தது. ஆனால், ஆரம்பம் முதல் இவரது செயல்பாடு பல்வேறு பிரிவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

குறிப்பாக,

  • சட்டசபைத் தேர்தல் சமயத்தில் தயாநிதியின் செயல்பாட்டை விமர்சித்தே தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் பிரசாரம் அமைந்தது.
  • பெரும் தொழிலதிபரான ரத்தன் டாடாவை மிரட்டிய விவகாரம்,
  • தமிழகத்தில் உள்ள மீடியாக்களை பகைத்துக் கொண்டது போன்றவை அ.தி.மு.க.,
  • கூட்டணி 69 இடங்களை பெறுவதற்கு காரணமாக அமைந்தன.

தி.மு.க., ஆட்சி அமைந்த பின் கட்சிக்குள்ளேயே இவர் மீது அதிருப்தி அதிகரிக்க துவங்கியது. குறிப்பாக, முதல்வரின் வாரிசாக கருதப்படும் ஸ்டாலினுக்கும், தயாநிதிக்கும் இடையே பல சந்தர்ப்பங்களில் மறைமுக மோதல் நடந்தது. ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர்களுக்கு எதிராக அவர்களது பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டது, ஸ்டாலினின் செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்தது போன்றவை கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முறையிட்ட போதெல்லாம் முதல்வர் சமரசப்படுத்தி வந்துள்ளார்.

கடைசியாக, கடந்த மார்ச் முதல் தேதியன்று ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடிய போது தி.மு.க.,வின் அனைத்து நிர்வாகிகளும் வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்த போதிலும், கலாநிதியோ, தயாநிதியோ அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில் மதுரையில் இருந்து தனக்கு வாழ்த்துச் சொல்ல வந்த அழகிரியுடன் இதுபற்றி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இது தவிர கீழ்மட்ட கட்சித் தொண்டர்களுடன் தயாநிதி பழகாமல் இருந்ததுடன், மூத்த தலைவர்களை கண்டுகொள்ளாமல் அரசியல் நடத்தியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தி.மு.க., சார்பாக மத்தியில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களிடையே தயாநிதி ஆதிக்கம் செலுத்தி வந்ததாகவும் புகார்கள் வந்தன

. டி.ஆர்.பாலு, ராஜா, பழனிமாணிக்கம் போன்றவர்களை பல சந்தர்ப்பங்களில் ஓரங்கட்டும் விதமாக செயல்பட்டதால், இவர் மீது அவர்கள் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், தயாநிதியை கட்சியில் முன்னிலைப்படுத்தி முதல்வர் கருணாநிதிக்கு பின்னர் கட்சியை கைப்பற்ற முயற்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தன.

மாவட்ட செயலர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் “கேபிள் டிவி’ நடத்தும் உரிமை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். தயாநிதிக்கு செல்வாக்கு இருப்பதாக காட்டுவதற்காகவே கருத்து கணிப்பு ஒன்றையும் நடத்தியதாக தி.மு.க., நிர்வாகிகள் கூறுகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் தயாநிதியே முதலிடத்தில் உள்ளதாக வெளியிடப்பட்டது. இந்த கருத்துக் கணிப்பு தி.மு.க., கூட்டணியிலேயே சலசலப்பை ஏற்படுத்தியது.

காங்கிரசை சேர்ந்த மத்திய அமைச்சர்களை களங்கப்படுத்தியதாக அக்கட்சியினர் கருதினர். அன்புமணியை வேண்டுமென்றே மட்டம் தட்டியிருப்பதாக ராமதாஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

————————————————————————————————-

தி.மு.க.,வில் தயாநிதி ஆதரவாளர்களுக்கு கல்தா!: அனுகூலம் பெற்ற அதிகாரிகள் சிக்குகின்றனர்

தயாநிதிக்கு குறுகிய காலத்தில் கட்சியில் தரப்பட்ட முக்கியத்துவம் காரணமாக கட்சியின் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட பலரும் தயாநிதியின் ஆதரவாளர்களாக மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருப்பினும், தென் மாவட்டங்களில் அழகிரியின் செல்வாக்கை மீறி, தயாநிதிக்கு, அங்கு, ஆதரவாளர்கள் கிடைக்கவில்லை. அதே போல, மூத்த அமைச்சர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களிலும் தயாநிதி ஆதரவாளர்கள் உருவாகவில்லை.

இதை மீறி

  • கோவை,
  • நீலகிரி,
  • திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மூவர், தங்களை தயாநிதியின் ஆதரவாளராக முன்னிறுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டி செயல்பட்டனர். சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் தி.மு.க.,விற்கு ஏற்பட்ட பெரும் சரிவால் கட்சித் தலைமை பொங்கலுõர் பழனிச்சாமி மேல் கடும் கோபத்தில் இருந்தது. அமைச்சர் பதவி தராமல் அவரை புறக்கணித்தது. தலைமையின் கோபத்தை உணர்ந்த ஸ்டாலின், இவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க விரும்பவில்லை.

இந்நிலையில், தயாநிதியின் மூலமாக கட்சித் தலைமையை திருப்திபடுத்தி, உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை காரணம் காட்டி அவருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டது. தனக்கு அமைச்சர் பதவி கிடைக்க தயாநிதி தான் காரணம் என்பதால், முழுமையாக அவரது ஆதரவாளர் போல் பழனிச்சாமி செயல்பட்டார். மாதத்திற்கு இரு முறை தயாநிதி கோவைக்கு வந்ததால், இந்த உறவு மேலும் பலப்பட்டது. கோவையில் அமையவுள்ள டைடல் பார்க்கை சுற்றியுள்ள நிலங்களை வளைப்பதில் பொங்கலுõர் பழனிச்சாமி பெரிதும் உதவியுள்ளார்.

பழனியின் மகன் பைந்தமிழ் பாரியை கோவை மேயராக்க, ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான வீரகோபாலை மாநகராட்சித் தேர்தலில் தோற்கடிக்க, “உள்ளடி வேலை’களைச் செய்தார். இதை தெரிந்து கொண்ட கட்சித் தலைமை, தயாநிதி வற்புறுத்தியும், மேயர் பதவியை பாரிக்கு வழங்க ஒப்புக் கொள்ளவில்லை.

மண்டலத் தலைவராக பொறுப்பேற்ற பாரி, தனது அறையில் தயாநிதியின் போட்டோவை மாட்டியதோடு, இதர கவுன்சிலர்களின் அறைகளிலும் தயாநிதி படம் மாட்ட வேண்டும் என்று வற்புறுத்தி, மாட்டி வைத்து, நன்றி விசுவாசம் காட்டினார்.

பொங்கலுõர் பழனிச்சாமி பல்வேறு தொழில்களை நடத்தி வரும் தொழிலதிபர் என்பதால், “தொழில் ரீதியாக’ தயாநிதியோடு நெருக்கம் காட்டினார். சமீபத்தில் கோவையில் நடந்த மேம்பால திறப்பு விழாவில், டி.ஆர்.பாலுவை புறக்கணித்து, தயாநிதியைக் கொண்டு விழா நடத்தினார் பழனிச்சாமி.

நகரின் பல இடங்களில் தயாநிதியின் கட் அவுட்டுகள், ஆயிரக்கணக்கான வரவேற்புத் தட்டிகள் என ஆடம்பரமாக இந்த விழாவை நடத்தினார். மற்ற தி.மு.க., பிரமுகர்கள் தயாநிதியை நெருங்க விடாமல், தாங்களே ஒட்டுமொத்த ஆதரவாளர் என காட்டிய பெங்கலுõர் பழனிச்சாமி, இப்போது கட்சித் தலைமையின், “ப்ளாக் லிஸ்ட்’டில் இடம் பெற்றுள்ளார்.

அடுத்ததாய், “ப்ளாக் லிஸ்ட்’டில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கதர் துறை அமைச்சர் இளித்துறை ராமச்சந்திரன் இடம் பிடித்துள்ளார். இவரும் தயாநிதி ஆதரவாளராக தன்னை முன்னிறுத்துவதில் ஆர்வம் காட்டியவர். கோத்தகிரியில் இருக்கும் தயாநிதியின் மாமனாருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகனின் குடும்பத்தினர் செய்து வந்தனர். இதைவிட ஒரு படி மேலாக, ஊட்டியில் தயாநிதி முகாமிடும்போதெல்லாம், கூடவே இருந்து குணசேகரன் என்பவர் உதவிகளை செய்து கொடுத்து வருகிறார்.

இந்த குணசேகரன் அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகனின் சகோதரர். தயாநிதி மேலான அமைச்சரின் பாசம் இப்படி நீடித்து வருகிறது.

அடுத்ததாய், தயாநிதி ஆதரவாளராக, வனத்துறை அமைச்சர் செல்வராஜ் இருந்துள்ளார். மறைந்த மாறனின் தீவிர ஆதரவாளராக இருந்த இவர், ம.தி.மு.க.,விற்கு போய்விட்டு வந்த நிலையில், தி.மு.க., அமைச்சரவையில் இடம் பிடிக்க தயாநிதி தான் காரணம். இதனால், செல்வராஜ் பெயரும் தயாநிதி ஆதரவாளர் பட்டியலில் உள்ளது.

இது தவிர, சட்டசபைத் தேர்தல் நேரத்தில் தி.மு.க., சார்பில் நிதி சப்ளை செய்தவர் என்ற முறையில் தயாநிதிக்கு பல எம்.எல்.ஏ.,க்களின் அறிமுகம் உண்டு. அது தொடர்பான கணக்க வழக்கு விவகாரங்களையும் தயாநிதியே கவனித்ததால், அவர்களின் தொடர்பும் இருப்பதாக கட்சித் தலைமை கருதுகிறது. குறிப்பிட்ட சில எம்.எல்.ஏ.,க்களின் மீதும் கட்சித் தலைமையின் பார்வை பதிந்துள்ளது.

அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளைக் காட்டிலும் தயாநிதியின் விசுவாசிகளாக இருந்த அரசு உயரதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் பட்டியலும் தி.மு.க., தலைமை தயாரித்து வருகிறது. இந்த பட்டியலை தயாரிக்கும் நோக்கோடு, உளவுத் துறையில் முதல்வருக்கு நெருக்கமான அதிகாரி ஜாபர்சேட் சமீபத்தில் பொறுப்பேற்றுள்ளார்.

மத்திய அமைச்சராக தயாநிதி பணியாற்றியபோது, டில்லி தொடர்பு மூலம் தமிழகத்தில் பணியாற்றும் பல வடமாநில அதிகாரிகள், தங்களுக்கு விருப்பமான பதவிகளைப் பெற்றுள்ளனர். இவ்வாறு பதவி பெற்றவர்களை தயாநிதியின் ஆதரவாளர்களாக அரசு கருதுவதால், எப்போது வேண்டுமானாலும் டிரான்ஸ்பர் செய்யப்படலாம் என்ற கலக்கத்தில் இவர்கள் உள்ளனர்.

கட்சியின் கீழ்நிலை பொறுப்புகளில் உள்ள தயாநிதி விசுவாசிகள், காவல்துறை, அரசுத் துறையில் உள்ள கீழ் நிலை அதிகாரிகள் வரை முழுமையான பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. “டிவி’ நிர்வாகத்துடன் நெருக்கமாக இருந்த அதிகாரிகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தயாநிதி விசுவாசிகளை கட்டம் கட்டும் பணியை கட்சித் தலைமை தீவிரமாக மேற்கொள்ளுமானால், 50க்கும் மேற்பட்ட, “அதிரடி டிரான்ஸ்பர்’கள் நடக்க வாய்ப்புள்ளது.

————————————————————————————————————

பதவி பறிப்பு – BBC

 

பத்திரிகை எரிப்பில் ஈடுபட்ட மதுரை மேயர்
மதுரையில் மேயர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பத்திரிகை தாக்குதலும் பதவி பறிப்பும்

தமிழகத்தில் மதுரையிலுள்ள தினகரன் அலுவலகம் மீது தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் மகன் அழகிரியின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படுபவர்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் பலியாயினர்.

இந்தத் தாக்குதலுக்கு பிறகு எழுந்த சர்ச்சையை அடுத்து மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறனின் பதவி பறிக்கப்பட்டதும் நேயர்கள் அறிந்ததே

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக தமிழோசை ஒலிபரப்பிய பேட்டிகள், செய்திக் குறிப்புகள் ஆகியவற்றை இந்தத் தொகுப்பில் நேயர்கள் கேட்கலாம்.

தினகரன் நாளிதழ் தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்பது குறித்து கருத்துக் கணிப்பை வெளியிட்டது. இதில் ஸ்டாலினுக்கு பெரும் ஆதரவும், அழகிரிக்கு மிகக் குறைந்த அளவே ஆதரவு இருப்பதாகவும் கூறியிருந்தது.

எரிக்கப்பட்ட தினகரன் அலுவலகத்தின் ஒரு பகுதி
எரியூட்டப்பட்ட தினகரன் அலுவலகம்

இதையடுத்து மதுரையிலுள்ள தினகரன் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடைபெற்றது. இதில் மூவர் பலியாயினர்.

நடைபெற்ற தாக்குதல் குறித்து தினகரன் பத்திரிகையின் மதுரைப் பதிப்பின் ஆசிரியர் முத்துப் பாண்டியனின் பேட்டி.

முத்துப்பாண்டியன் பேட்டி

ஆனால் இந்தத் தாக்குதலில் தமக்கு சம்பந்தம் இல்லை எனக் கூறுகிறார் மதுரை மேயர் தேன்மொழி. தங்களது எதிர்ப்பை காட்ட பத்திரிகையை எரித்ததாக மட்டுமே அவர் கூறுகிறார்.

தேன் மொழி பேட்டி

இது தினகரன் பத்திரிகை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பதனை விட பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எனக் கூறுகிறார் தினகரன் பத்திரிகையின் தலைமை நிர்வாகி ரமேஷ்.

 

ரமேஷ் பேட்டி

காவல் துறை தனது கடமையைச் செய்யும் எனவும், விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கிறார் தமிழக காவல்துறை தலைவர். இது தொடர்பாக கைதுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

காவல்துறை தலைவர் பேட்டி

கோபத்தின் வெளிப்பாடும் பத்திரை எரிப்பும்
கோபத்தின் வெளிப்பாடும் பத்திரிகை எரிப்பும்

இது கருத்துச் சுதந்திரம் குறித்த பிரச்சினை அல்ல, தமிழகத்தை ஆளும் திமுகவின் தலைவரான கருணாநிதியின் குடும்பத்திற்குள் நடைபெற்ற அதிகாரப் போட்டியினால் எழுந்த பிரச்சினை என்றும் கூறுகிறார் அரசியல் ஆய்வாளர் ஞானி

ஞானி பேட்டி

இந்தச் சமபங்களுக்கு பிறகு நடைபெற்ற திமுகவின் நிர்வாகக் குழு கூட்டத்தில், தயாநிதி மாறனை மத்திய அமைச்சரவையிலிருந்து விலக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தீர்மானித்தது. இது குறித்து எமது செய்தியாளர் கோபாலனின் செய்திக் குறிப்பு

கோபாலன் செய்திக் குறிப்பு

உறவும் பிரிவும்
உறவும் பிரிவும்

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தம்மை நீக்க கட்சி எடுத்த முடிவை அடுத்து தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். தான் எப்போதுமே திமுக விசுவாசிதான் என்றும் கருணாநிதியே தனது தலைவர் எனவும் அவர் கூறியுள்ளார். ஆனாலும் கட்சி விரோத நடவடிக்கைகள் எதிலும் தாம் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தயநிதி மாறன் பேட்டி

———————————————————————————————————-

07.06.07  கவர் ஸ்டோரி
குமுதம் ரிப்போர்ட்டர்
தயாநிதியின் புதிய அவதாரம்
கலாநிதியின் அதிரடி வியூகம்

அசுரவேகத்தில் கலைஞர்
உஷார்படுத்திய ஜோதிடம்

1997_ல் ஐ.கே. குஜ்ரால் பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்தார் முரசொலிமாறன். அப்போது லண்டன் சென்று, இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேருடன் வர்த்தக உறவுகள் பற்றி மாறன் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது.

தனது பயணத்திற்கு முன்பாக குஜ்ராலைச் சந்தித்து ஆலோசனை பெறப் போனார், மாறன். ‘நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். நீங்கள் சொல்வதுதான் நம் பாலிஸி’ என்று சொல்லி, அவரை வழியனுப்பி வைத்தார் குஜ்ரால். ஒரு பிரதமருக்குரிய அந்தஸ்துடன் அந்தச் சந்திப்பை நிகழ்த்தப் போனார் மாறன்.

இங்கிலாந்து பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான எண்:10, டவுனிங் தெரு மாளிகைக்குள் நுழையும் முன்பாக, தன்னம்பிக்கைக்காக ‘ஆத்தா! தாத்தா!’ (கலைஞரின் பெற்றோர் அஞ்சுகம் மற்றும் முத்துவேலர்) என்று முனகிக் கொண்டேதான் உள்ளே போனார் மாறன். முக்கியத்துவம் வாய்ந்த அந்தச் சந்திப்பை வெற்றிகரமாக முடித்து விட்டு, லண்டனில் இருந்தே கலைஞருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

”இங்கிலாந்து பிரதமரைச் சந்திக்கும் முன்பாக, உங்கள் வாழ்த்துக்கள் கிடைக்கும் என்று நினைத்தேன். கிடைக்கவில்லை. இதற்காக நான் அழுதேன். (இருவருக்கும் கொஞ்சம் ஊடல் இருந்த நேரம் அது…!) நேற்று உங்கள் கடிதம் கிடைத்தது. அதைப் பார்த்ததும் அழுதேன். இது ஆனந்தக் கண்ணீர். என்னுடைய இந்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. என்னாலேயே இதை நம்ப முடியவில்லை. நான் உங்கள் தயாரிப்பல்லவா!

என் சிந்தை_அணு ஒவ்வொன்றிலும் குடியிருந்து என் இதயத் துடிப்புகளாக இருந்து என்னை ஆட்டுவிக்கும் உங்கள் காலடிகளில் அனைத்தையும் சமர்ப்பிக்கிறேன்! நீங்களும் நானும்தான் இப்படி கண்ணீர்ப் பெருக்கோடு உணர்ச்சிகளைப் பரிமாறிக்கொள்ள முடியும். ஏனெனில், இது ரத்த பாசம்!” என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார் மாறன்.

கலைஞர் இன்றளவும் போற்றிப் பாதுகாக்கும் ஒருசில கடிதங்களில் இதுவும் ஒன்று.

இது நடந்து மிகச் சரியாக பத்தாண்டுகள் கடந்து விட்டன. அதே கலைஞர்… அதே ரத்த உறவுகள். ஆனால், காட்சியும் களமும் மாறிவிட்டன. ஊடல்களைத் தாண்டி உறுதியுடன் நீடித்த மாறனுடனான உறவுபோல அவரது வாரிசுகளுடன் அப்படி இருக்க முடியவில்லை கலைஞரால்! அப்பாவின் ரத்தம்தான் என்றாலும், அவர் போலவே ஓர் உறவை கலைஞருடன் தொடர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள் மாறனின் வாரிசுகளான கலாநிதியும், தயாநிதியும்! தனி சாம்ராஜ்யமாக வளர்ந்துவிட்ட மாறனின் வாரிசுகள், தங்களின் தொழில் கட்டமைப்பைக் காப்பாற்றுவது… எதிர்காலத் திட்டங்களைப் பற்றி யோசிக்க வேண்டியிருப்பது என அவர்களுக்குள்ள நிர்ப்பந்தங்களும் இதற்குக் காரணம்.

இந்தப் பின்னணிதான் கலைஞர் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் சமீப காலமாக ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்குக் கொண்டு வராமல் விரிசலை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. இளமையும் துடிப்பும் நிறைந்த மாறனின் வாரிசுகளுக்கு எதிராக, இந்த வயதிலும் கலைஞர் காய் நகர்த்தும் விதமும் வேகமும் அசாத்தியமானவை. பரபரப்புக்கும் ஆச்சர்யங்களுக்கும் பஞ்சமில்லாதவை…!

இரண்டு குடும்பங்களுக்கும் இடையேயான மனஸ்தாபங்கள் மறைய, மே_28 அன்று நடைபெற்ற மாறனின் மகள் அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சி அமையும் என்று எதிர்பார்த்தார்கள், இருதரப்புக்கும் வேண்டப்பட்ட சிலர். ஆனால், இந்நிகழ்ச்சியை கலைஞரும், ஸ்டாலினும் புறக்கணித்தார்கள். இருந்தபோதும், ஸ்டாலினின் மகன், மகள் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். சமாதான முயற்சிகளுக்கு இவர்களின் வருகை ஒரு சிறு துளியளவுக்கு நம்பிக்கை தந்தது என்பதை நினைத்து சந்தோஷப்பட்டார்கள் சில நலம் விரும்பிகள்.

இதெல்லாம், கலைஞர் தனது டெல்லி விசிட்டை முடித்துக் கொண்டு மே_29 அன்று இரவு சென்னை திரும்பும் வரையில்தான்! அன்றிரவு கோபாலபுரத்தில் இருந்த கலைஞரைச் சந்திக்க ஸ்டாலினின் மகன், மகள் உள்ளிட்ட சிலர் போயிருக்கிறார்கள். இவர்கள் வந்திருக்கும் விஷயத்தைக் கேள்விப்பட்ட கலைஞர், ‘அவர்களை அங்கேயே போகச் சொல்லுங்க. இங்கு அவர்களுக்கு என்ன வேலை?’ என்று கோபமாகக் கேட்டிருக்கிறார்.

வளைகாப்பு நிகழ்ச்சிக்குத் தாங்கள் போனதுதான் தாத்தாவின் கோபத்திற்குக் காரணம் என்பதைப் புரிந்துகொண்ட ஸ்டாலின் வாரிசுகள், ‘நாங்கள் போனதற்கான காரணம் சமாதானத்திற்காக அல்ல… விரும்பி அழைத்ததை மறுக்க முடியவில்லை. தவிர, இது ஒரு சுபநிகழ்ச்சி…’ என்றெல்லாம் சொல்லிச் சமாதானப்படுத்திய பிறகே அமைதியாகியிருக்கிறார் கலைஞர்.

” ‘என்னை மீறி யாரும் சமாதான முயற்சிகளில் இறங்கக் கூடாது. அத்தகைய முயற்சிகளை நான் விரும்பவுமில்லை’ என்பதை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு இதன் மூலம் உணர்த்தினார் கலைஞர்” என்கிறார் அந்தச் சமயத்தில் அங்கிருந்த ஒரு பிரமுகர்.

கொஞ்சம் ஆறப்போட்டால் வேகம் குறைந்துவிடும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு, கலைஞரின் இந்த வேகம் ஆச்சர்யத்தைத் தரத் தவறவில்லை. மாறாக, எதிர்ப்பு வேகமும் அதிகரித்ததில் அவர்களுக்கு அதிர்ச்சிதான். இதற்குப் பின்னணியாக, கடந்த பத்து நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள் சிலர்.

2005 நவம்பரில் சன் டி.வி.யில் தனது பெயரில் இருந்த 20 சதவிகிதப் பங்குகளை மாறன் சகோதரர்களுக்கே விற்றார், கலைஞரின் மனைவி தயாளு அம்மாள். சன் டி.வி.யின் மொத்த மதிப்பு சுமார் ஆயிரம் கோடி என்று மதிப்பிடப்பட்டு, அதனடிப்படையில் தயாளு அம்மாவின் 20 சதவிகிதப் பங்குகளுக்கான பணம் (சுமார் 200 கோடி) தரப்பட்டது என்றொரு தகவல் உண்டு. பண விவரங்களை வெளியிடாவிட்டாலும், இந்தப் பரிவர்த்தனை விஷயத்தை அப்போதே பத்திரிகையாளர்களிடம் சொன்னார் கலைஞர்.

இது நடந்து இரண்டாண்டுகள் ஆகவுள்ள நிலையில்தான், இப்போது மீண்டும் அந்த விஷயம் கிளறப்பட்டிருக்கிறது. ‘நமது பங்குகளுக்கு ஒரு விலையை நிர்ணயம் செய்து, அதைத் தந்து நம்மை விலக்கி விட்ட பிறகு, சன் டி.வி.யின் மதிப்பு சுமார் ஆறாயிரம் கோடி என்று நிர்ணயித்து பங்குகளை வெளியிட்டார்கள். இந்த விஷயத்தில் நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம்’ என்று கலைஞரின் ரத்த உறவுகள் சிலர் கலைஞரிடம் குமுறியிருக்கிறார்கள்.

”இதில் ஓரளவு நியாயமிருப்பதாக உணர்ந்த கலைஞர், சமீபத்தில் மகாபலிபுரத்திற்கு ஓய்வுக்காகச் சென்றபோது, சன் குழுமத்தின் ஆடிட்டரை வரவழைத்து சில விவரங்களைக் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பிறகே கலைஞரின் கோபம் இன்னும் அதிகமானது” என்கிறார் இந்த சம்பாஷணைகளின் பின்னணிகளை அறிந்த ஒருவர்.

‘பங்குப் பரிவர்த்தனையில் எந்தத் தவறும் நடக்கவில்லை. நியாயப்படியே எல்லாம் நடந்தது’ என்று சன் குழுமத்தினர் தங்கள் தரப்பை மீண்டும் வலியுறுத்திய போதும், தங்கள் ஆடிட்டரையே அழைத்து விசாரிக்கிறார்கள் என்பதை அறிந்து, அறிவாலயத்தில் உள்ள சன் டி.வி. அலுவலகத்தில் இருந்த சில கணக்கு வழக்கு விவரங்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி, பிரபல பத்திரிகை அலுவலகம் ஒன்றில் கொண்டு போய் வைத்தார்கள்.

இந்த விஷயத்தைப் பிறகு பார்க்கலாம் என்று நினைத்தோ என்னவோ… புதிதாக தாங்கள் தொடங்கவுள்ள கலைஞர் டி.வி.க்கான ஏற்பாடுகளை முடுக்கி விடும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் கலைஞர். சன் டி.வி. தொடங்கப்பட்ட காலத்தில் ஒரு பங்குதாரராக கலாநிதியுடன் இணைந்து பணியாற்றி, பின்பு பிரிந்துவிட்ட சரத் ரெட்டிதான், கலைஞர் டி.வி. நிர்வாகத்திற்காக கலைஞர் தேர்வு செய்திருக்கும் நபர். இவரைத் தேர்வு செய்த போதே கலைஞரின் வேகமும், கோபமும் எந்தளவுக்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்கள் தி.மு.க. முன்னோடிகள். இதே வேகத்தில் கலைஞர் டி.வி.க்கும் சரத்திற்கும் தனித்தனியே அறிவாலயத்தின் கீழ்த்தளத்தில் அறைகளும் ஒதுக்கப்பட்டன.

இவ்வளவு அரசியல் பணிகளுக்கிடையிலும் தினசரி ஓரிரு மணி நேரங்களாவது சரத்துடன் ஆலோசனை நடத்துகிறார். இதுதவிர, புதிய டி.வி.யில் பொழுதுபோக்கு அம்சங்களும் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக பாலசந்தர், ராதிகா உள்ளிட்ட சின்னத்திரை ஜாம்பவான்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார் கலைஞர்.

இது ஒருபுறம் இருக்க, தங்களின் புதிய சேனலை ஒளிபரப்ப, மாறன் சகோதரர்களின் ஆதிக்கத்தில் உள்ள சுமங்கலி கேபிள்ஸை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்பதால், தனியாக ஒரு கேபிள் நெட்வொர்க்கைத் தொடங்கவும் யோசனை செய்திருக்கிறார்கள். ஆற்காட்டாரின் தம்பி தேவராஜ் இதற்கான ஏற்பாடுகளில் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.

சமாதான முயற்சிகளைத் தடுப்பது மட்டுமல்ல… அதைச் செய்ய முனைவோர் மீதும் கலைஞர் கோபம் காட்டுகிறார் என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள் தயாநிதியும் கலாநிதியும். இளமையும், மூளையும் கைகொடுக்க… அவர்களும் சில காய் நகர்த்தல்களைச் செய்யத் தயாராகிறார்கள்.

இதில் முதல் ஸ்டெப் எடுத்து வைத்திருப்பவர் தயாநிதிமாறன். இதற்காக ‘தினகரன் நாளிதழின் நிர்வாகி’ என்ற அடையாளத்தோடு புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் தயாநிதி! மே_28 அன்று தனது தங்கையின் வளைகாப்பு முடிந்த உடனேயே, அன்று காலை தினகரன் நாளிதழ் அலுவலகத்திற்கு வந்தார். ‘இனி நான்தான் நிர்வாகத்தைக் கவனிக்கப் போகிறேன். நாம் இனி தினசரி சந்திக்கலாம்’ என்று ஆசிரியர் குழுவினரிடம் அவர் சொன்னபோது, அங்கிருந்தவர்களால் ஆச்சர்யத்தை மறைக்க முடியவில்லை.

சர்ச்சைக்குரிய தினகரன் நாளிதழ் கருத்துக்கணிப்பு வெளியான சமயத்தில், ‘எனக்கும் தினகரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று சொன்ன தயாநிதிமாறன், இன்று இப்படி வெளிப்படையாக வந்து நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளப் போவதாகச் சொன்னது சிலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

”எந்த வகையிலும் தலைவருடன் (கலைஞர்) மோதல் போக்கு வேண்டாம். நாம் மூன்று மாதங்களுக்கு (ஆகஸ்ட் வரை) அமைதியாக, நமது வேலைகளைக் கவனிப்போம். கொஞ்சம் பொறுமையாக இருந்து செயலாற்றத் தவறிவிட்டோம். மதுரை வன்முறைச் சம்பவம் நடந்த நாளில் நாம் அமைதியாக இருந்திருந்தாலே அல்லது இவ்வளவு வேகமாக அழகிரி மீது விமர்சனம் செய்யாமல் இருந்திருந்தாலே மற்ற பத்திரிகைகள் தாங்களாகவே அழகிரியின் செயலை விமர்சித்திருப்பார்கள். ஆனால், நாம் முழுவேகம் காட்டவும் மற்றவர்கள் அமைதியாகி விட்டார்கள். நாம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம். இங்கேதான் தவறு நடந்து விட்டது. பரவாயில்லை. நம்பிக்கையோடு பணியாற்றுங்கள். மூன்று மாதம்தான். எல்லாம் சரியாகிவிடும்!” என்று நம்பிக்கையளிக்கும் வகையில், தனது கருத்துக்களை அப்போது சொல்லியிருக்கிறார் தயாநிதி.

அன்றிலிருந்து தினசரி தினகரன் அலுவலகத்திற்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது சில செய்திகள் எப்படி வரவேண்டும் என்று ஆலோசனை சொல்லவும் தவறுவதில்லை. இந்தப் பணிகளுக்கிடையே தாத்தாவை எப்படியும் சமாதானப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் தயாநிதிக்குத் தீவிரமாக இருக்கிறது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இது ஒருபுறம் இருக்க… பலரது பார்வையும் இப்போது திரும்பியிருப்பது கலாநிதி மாறனை நோக்கித்தான். அதற்குக் காரணம் இருக்கிறது. தயாநிதி வெளி உலகிற்கு அறிமுகம் ஆனதே அரசியலை வைத்துத்தான். அந்த அரசியல் அங்கீகாரம், தனது தந்தை விட்டுச் சென்ற மத்திய சென்னை எம்.பி. பதவியில் ஆரம்பித்து, தி.மு.க. தலைவரான தனது தாத்தாவின் அரவணைப்பால் கிடைத்ததுதான் தயாநிதிக்கு.

கலாநிதி மாறன் இதற்கு நேர்மாறானவர். தனது சொந்த வாழ்க்கையாகட்டும், தனது தொழிலாகட்டும், அதில் அரசியலையும், அரசியல்வாதிகளையும் கொஞ்சம் தள்ளிவைத்தே பழக்கப்பட்டவர் அவர்.

”நான் கூச்ச சுபாவம் உள்ளவனும் அல்ல. நெருங்கிப் பழகுபவனும் அல்ல. நான் சாதாரண ஒரு நபர். அவ்வளவுதான். எனது தேவைகளுக்காக எனது குடும்பப் பின்னணிகளைச் சொல்லி அவற்றைப் பூர்த்தி செய்து கொள்வது எனக்கு உடன்பாடான விஷயமல்ல. நம்புங்கள்… நான் அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்தபோது, எனது பணத்தேவைக்காக ஒரு ரெஸ்டாரெண்டில் வேலை பார்த்தேனே தவிர, என் குடும்பத்தை எதிர்பார்க்கவில்லை” என்று அடிக்கடி சொல்வார் கலாநிதி மாறன்.

இப்போது அரசியல் சூறாவளி தன்னையும் தன் குடும்பத்தினரையும் மையமாக வைத்துச் சுழலும்போதும் அதே மனநிலையில்தான் இருக்கிறார் கலாநிதி. ‘தனது டி.வி. சாம்ராஜ்யத்திற்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தனது மூளையை மட்டுமே பயன்படுத்தி சிலவற்றைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார் கலாநிதி’ என்கிறார்கள் சன் நெட்வொர்க் வட்டாரத்தில்.

கலைஞர் டி.வி.க்காக தனியாக கேபிள் நெட்வொர்க் ஆரம்பிக்கப் போகிறார்கள் என்பது மட்டுமல்ல… ஏற்கெனவே உள்ள சுமங்கலி கேபிள் நெட்வொர்க்கின் கேபிள்களை ஆங்காங்கே சிலர் வெட்டிவிடுவதாகவும் கலாநிதிக்குத் தகவல்கள் வருகின்றன. ‘கேபிள் டி.வி. சர்வீஸை’ அரசே எடுத்து நடத்தலாம் என்று லயோலா கல்லூரியின் கருத்துக் கணிப்பில் பெரும்பாலான மக்கள் சொல்லியிருந்ததை எடுத்துக்காட்டி கலைஞர் வெளியிட்ட கருத்துக்களும், கேபிள் டி.வி. விரைவில் அரசுடைமை ஆகவும் வாய்ப்பிருக்கிறது என்ற செய்தியும் கலாநிதியை நிறையவே யோசிக்க வைத்திருக்கிறது.

இனியும் தனது டி.வி. ஒளிபரப்புக்கு கேபிளை நம்பிப் பயனில்லை என்ற யதார்த்தத்தை உணர்ந்துள்ள கலாநிதி, இன்னும் மூன்று மாதங்களுக்குள் சன் நெட்வொர்க்கின் சார்பில் செயற்கைக் கோள் மூலம் (சிறிய ஆண்டெனா உதவியுடன்) வீடுகளுக்கே நேரடியாக டி.வி. நிகழ்ச்சிகளைக் கொண்டு சேர்க்கும் DTH  சேவையைத் தொடங்க முடிவெடுத்து, அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறாராம்! இதை நிறைவேற்றிவிட்டாலே சன் டி.வி.யின் பயணத்தை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் நம்புகிறாராம் கலாநிதி.

‘தனது இந்த நடவடிக்கைகளைத் தெரிந்து கொண்டு, சன் டி.வி.க்கு DTH  சேவைக்கான உரிமத்தை வழங்கக் கூடாது என்று டெல்லியில் இப்போது சிலர் காய் நகர்த்துவதையும் உணர்ந்துள்ள கலாநிதி, அதை எதிர்கொண்டு சமாளித்து, வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் தனது நோக்கத்தை நிறைவேற்றவும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்!’ என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

இப்படி… மூன்று மாதங்கள் அமைதியாக இருங்கள் என்று தினகரன் ஊழியர்களுக்கு தயாநிதி ஆலோசனை சொல்கிறார்… கலாநிதி, மூன்று மாதத்திற்குள் DTH  சர்வீஸைத் தொடங்கி, எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார்…. கலைஞர் குடும்பத்திலும் ஆகஸ்ட் மாதத்திற்குள்ளாக கனிமொழிக்கு ஏதாவது செய்யுங்கள்… ஸ்டாலினை ஆட்சி பீடத்தில் அமர்த்துங்கள்… என்றும் கலைஞருக்கு நெருக்கடி தந்திருக்கிறார்கள். அதனால்தான் இவ்வளவு விரைவாக கனிமொழி எம்.பி.யாக்கப்பட்டிருக்கிறார். ஸ்டாலினும் மிக விரைவில் பதவி உயர்வு அடைவார் என்றும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

”ஏன் எல்லோரும் ஆகஸ்டையே குறிவைக்கிறார்கள்…?” என்ற கேள்வியோடு கலைஞர் குடும்பத்திற்கும் மாறன் குடும்பத்திற்கும் நெருக்கமானவர்களை வலம் வந்தால், ‘எல்லாம் ஜோதிடம்தான் காரணம்!’ என்ற பதில் வந்து நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.

கலைஞர்_மாறன் இருவர் குடும்பத்திலும் உள்ள பெண்கள் கோயில், குளம் என்று போவதை வழக்கமாகக் கொண்டுள்ளவர்கள் என்பது தவிர, ஜோதிடத்திலும் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள் என்பதும் உள்வட்டாரத்தில் அனைவரும் அறிந்ததே.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்த இரண்டு தரப்பும் தங்களுக்கு நெருக்கமான ஜோதிடர்களை ஆலோசித்ததில் ஒரே மாதிரியாக அவர்கள் சொன்ன தகவல், ‘வரும் ஆகஸ்ட் 5_ம் தேதியன்று நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி, ஆட்சியாளர்களுக்கு நல்லதல்ல. அதனால் ஆட்சி அதிகாரம் கைமாறும். எதிரும் புதிருமானவர்கள் ஒன்றுசேரும் வகையில் விநோதமான அரசியல் மாற்றங்களும் நிகழும்!’ என்பதுதான்!

”ஜோதிட ரீதியாக மட்டுமல்ல, யதார்த்தமும் அதை நோக்கித்தான் போகிறது என்பதால்தான் ஆகஸ்டுக்குள் சிலவற்றைச் செய்யச் சொல்லி கலைஞர் குடும்பத்தினர் வற்புறுத்த…. ‘ஆகஸ்ட் வரை பொறுத்திருங்கள். அதன்பிறகு நமது திட்டங்களைச் செயல்படுத்தலாம்’ என்று மாறன் சகோதரர்களும் அணை போடுகிறார்கள்” என்கிறார்கள் பிரச்னையின் இந்தப் பரிணாமத்தை உணர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிலர்!

இப்படி, பகுத்தறிவைத் தாண்டி ஜோதிடம் தனது பங்களிப்பைச் செய்ய…. அரசியல் அனுபவம் கொண்ட கலைஞரும், இளமை ரத்தம் துள்ளும் மாறன் சகோதரர்களும் தங்கள் எண்ணங்களுக்குச் செயல்வடிவம் தர முனைந்திருக்கும் இந்த இரண்டாவது காண்டத்தின் முடிவை அறிந்துகொள்ள இரு குடும்பங்களின் உறுப்பினர்கள் மட்டுமல்ல; அதிர்ச்சி கலந்த, உணர்ச்சிகள் நிறைந்த மனநிலையோடு கழக உடன்பிறப்புகளும் காத்திருக்கிறார்கள்! ஸீ

சில மாதங்களுக்கு முன்பு, போயஸ் கார்டனுக்குள் காரில் தனது நண்பரோடு போய்க் கொண்டிருந்தார் தயாநிதி மாறன். அங்கே ஜெயலலிதாவின் வீட்டிற்குப் பாதுகாப்பாக இருக்கும் போலீஸார், ஷிப்ட் மாறும் நேரத்தில் கும்பலாக ஒரு வேனில் இருந்து இறங்குவதைப் பார்த்தார் தயாநிதி. அதன்பிறகு ‘முன்னாள் முதல்வருக்கு எதற்கு இவ்வளவு பாதுகாப்பு?’ என்று கேள்விகள் எழ, அடுத்த சில நாட்களிலேயே ஜெ.வின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. இதையடுத்து, எழுந்த விமர்சனங்களை அரசியல்ரீதியாக கலைஞர் சமாளித்தார் என்பது வேறு விஷயம்.

இப்போது காட்சிகள் மாறிவிட்டன. மத்திய அமைச்சராக இருந்தபோது இருந்த பாதுகாப்புடனேயே இப்போதும் வலம் வருகிறார் தயாநிதி. ‘பதவி போன பின்பும் எதற்கு இவ்வளவு பாதுகாப்பு?’ என்று கோபாலபுரத்திலிருந்து குரல் கேட்கிறதாம் இப்போது! அதனால், எந்த நேரத்திலும் தயாநிதியின் பாதுகாப்பு வாபஸாகும் என்கிறார்கள் கோபாலபுரத்தின் குரலை அருகில் இருந்து கேட்டவர்கள்.

– எஸ்.பி. லட்சுமணன்

—————————————————————————————-

Posted in Alagiri, Alakiri, Analysis, Anbumani, Andipatti, Arcot, Astrology, Azhagiri, Azhakiri, Backgrounder, Balachander, Balu, Belief, Biosketch, CB-CID, CBI, Chidamabram, CID, Coimbatore, Congress, Dayaalu Ammal, Dayalu Ammaal, Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, Devaraj, Devraj, Dhinakaran, Dinagaran, Dinakaran, DMK, Faces, Gujral, History, IAS, IPS, Jaffer sait, Jaffer seth, Kalainjar TV, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kavithalaya, Kovai, Kumaran, Lok Saba, LokSaba, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Mallika, Manmohan, Maran, MP, Mu Ka, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Murasoli, Nagma, Nilagiri, Nilgiris, officers, P Chidamabram, Pa Chidamabram, Palanichami, Palanisami, Palanisamy, Pazanisamy, Pazhanisami, Pazhanisamy, PC, people, PMK, Police, Pongaloor, Pongalur, Radaan, radan, Radhika, Ramadas, Ramadoss, RAW, Sarath, Sarath Reddy, Sarathkumar, SCV, Selvaraj, Shanmugasundaram, Shanmukasundaram, Shanmukasundharam, Shanumugasundaram, Shanumughasundaram, Sharath, Sharath Reddy, Sharathkumar, Simran, Sonia, Sumangali, Sumangali Cable, Sumangali Cable Vision, Sumankali, Sun, Temple, Thevaraj, Thinakaran, Thiruchi, Thiruchirappalli, Thiruchy, TR Balu, Transfer, Trichirappalli, Trichy, TV, Veeragopal, Veerasami, Veerasamy | 4 Comments »

Mayawati takes Uttar Pradesh – Biosketch

Posted by Snapjudge மேல் மே 11, 2007

உ.பி.யில் நான்காவது முறையாக முதல்வராகிறார் மாயாவதி: பள்ளி ஆசிரியையாக பணி புரிந்தவர்

லக்னெü, மே 12: இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நான்காவது முறையாக முதல்வராகிறார் மாயாவதி (51).

இவர் பகுஜன் சமாஜ் கட்சியை (பிஎஸ்பி) நிறுவிய கான்சி ராமின் நிழலில் வளர்ந்தவர். அவரிடம் இருந்து அரசியல் பாடம் கற்றவர். எதிரிகளின் கூட்டணியை தனி ஆளாக நின்று சமாளித்தவர்.

உ.பி. சட்டப் பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் பிராமண வகுப்பைச் சேர்ந்த 94 பேருக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு தந்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. தனிப்பெரும்பான்மையுடன் அவர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.

முந்தைய மூன்று முறையும் கூட்டணி ஆட்சியை நடத்திய மாயாவதி, தற்போது அசுர பலம் பெற்று கூட்டணி தயவு தேவை இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளார்.

தில்லியில் தபால்-தந்தி துறை ஊழியரின் மகளாக பிறந்த மாயாவதி, உ.பி.யின் முதல்வராக 1995-ல் அரியணை ஏறினார். அப்போது அவரால் 4 மாதமே பதவியில் நீடிக்க முடிந்தது. சமாஜவாதி கட்சியின் முலாயம் சிங்குடனான கூட்டணி திடுமென முடிந்ததே அதற்கு காரணம்.

பின்னர் இரண்டாவது முறையாக 1997-ல் முதல்வரானார். இம்முறை 6 மாதங்களுக்குத் தாக்குப்பிடித்தார். அப்போது பாஜகவுடன் “விரும்பத்தகாத’ ஒப்பந்த அடிப்படையில் ஆட்சி பொறுப்பேற்றார். ஒப்பந்தம் முறிவுக்கு வந்ததால் மாநிலத்தில் அரசியல் குழப்பமே மிஞ்சியது.

ஊழல் வழக்கில் சிக்கியதால் ராஜிநாமா

மூன்றாவது முறையாக 2002-ல் முதல்வரானார். பாஜகவின் ஆதரவுடன் 18 மாதங்கள் ஆட்சி செய்தார். இருப்பினும் தாஜ் வணிக வளாக ஊழல் வழக்கில் சிக்கி உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளானதை அடுத்து 2003-ல் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய நிர்பந்தம் மாயாவதிக்கு ஏற்பட்டது.

மாயாவதிக்கு 6 சகோதரர்கள், 2 சகோதரிகள் உள்ளனர். பள்ளி பருவத்திலேயே பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார். தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு சிறு வயது முதலே இருந்தது.

தில்லியில் 1977 முதல் 1984வரை பல்வேறு அரசு பள்ளிகளில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளார். அப்போதே பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஊழியர் கூட்டமைப்பின் செயல்பாடுகளிலும் தன்னை இணைத்துக்கொண்டார்.

1984 முதல் தீவிர அரசியல்

1984-ம் ஆண்டு தனது ஆசிரியைப் பணியை விட்டுவிட்டு முழு நேர அரசியலில் இறங்கினார். கான்சி ராம் தொடங்கிய பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து, 1984 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். அதன்பிறகு நடைபெற்ற 2 இடைத் தேர்தல்களிலும் தோற்றார்.

இருப்பினும் மனம் தளராமல் 1988-ல் மூன்றாவது முறையாக பிஜ்னூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவைக்குள் நுழைந்தார். 1994-ல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நலிவடைந்த பிரிவினரின் நலனுக்காக உரக்க குரல் கொடுத்தார்.

கல்லூரி நாள்களில் மேல்சாதி மாணவர்கள் அவரை ஏளனமாக நடத்தியதாக கூறப்படுகிறது. இதனாலேயே அவருக்கு தாழ்த்தப்பட்டவர்கள், பலவீனப் பிரிவினருக்காக போராட வேண்டும் என்ற வேகம் பிறந்ததாம். தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த மாயாவதி, சட்டப்படிப்பையும், பின்னர் மீரட் பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பையும் முடித்தார்.
———————————————————————-
வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் – ஊழல், குற்றம், அச்சம் அடியோடு ஒழிக்கப்படும்: மாயாவதி

லக்னெü, மே 12: உத்தரப் பிரதேசத்தில் ஊழல், கிரிமினல்கள் அடியோடு ஒழிக்கப்படும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.

தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள மாயாவதி, லக்னெüவில் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:

மக்கள் அச்சமின்றி வாழவும், ஊழல், குற்ற நடவடிக்கைகளுக்கு இடமளிக்காத வகையில் புதிய அரசு ஆட்சி புரியம். அதேசமயம் மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு போர்க்கால அடிப்படையில் முன்னுரிமைத் தரப்படும். இத்தேர்தலில் உயர்சாதியினரும், முஸ்லிம்களும் பகுஜன் சமாஜுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இம்முறை முஸ்லிம்கள் அதிக அளவில் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் பகுஜன் சமாஜுக்கு வாக்களித்துள்ளனர். மாஃபியா, தீவிரவாத மற்றும் காட்டு ராஜாக்களின் ஆதிக்கம் இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளன. ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வீண்போகவில்லை. தேர்தல் ஆணையம் சுதந்திரமான நேர்மையான தேர்தலை நடத்தியுள்ளது என்றார்.

சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரணை

உ.பி.யில் சமாஜவாதி ஆட்சியில் இருந்தபோது நடந்த அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்று மாயாவதி தெரிவித்தார்.

இது அரசியல் ஆக்கப்படமாட்டாது; எதிரிகள் மீதான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையும் அல்ல. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையே நாங்கள் நிறைவேற்ற உள்ளோம். வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த ஆசாம் கான், தனது அலுவலகத்தில் இருந்த அனைத்து ஆவணங்களையும் அழித்துவிட்டதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றார். முலாயம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, “ஏற்கெனவே அவர் தோற்கடிக்கப்பட்டுள்ளார். இறந்தபோனவரை மீண்டும் கொல்லமுடியாது. மக்கள் அவருக்கு தண்டனை வழங்கிவிட்டனர்’ என்றார்.
———————————————————————————-

உத்தரப் பிரதேச முதல்வரானார் மாயாவதி: 50 உறுப்பினர்களுடன் அமைச்சரவை பதவிஏற்பு

லக்னௌ, மே 14: உத்தரப் பிரதேச முதல்வராக மாயாவதி (51) பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருடன் 50 உறுப்பினர்கள் கொண்ட மிகப் பெரிய அமைச்சரவையும் பதவி ஏற்றது.

உ.பி. முதல்வராக நான்காவது முறையாக பதவி ஏற்றுள்ள மாயாவதி, இம்மாநிலத்தின் 40-வது முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. பதவி ஏற்பு விழா, ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. மாயாவதி உள்பட அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஆளுநர் டி.வி. ராஜேஸ்வர் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ், மாநில காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட அக் கட்சித் தலைவர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பதவி ஏற்பு முடிந்ததும் மாயாவதி தனது பெற்றோரை ஆளுநருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

பகுஜன் சமாஜ் கட்சிக்கு பிராமணர்களின் ஆதரவைப் பெற்றுத்தர முக்கிய காரணமாக இருந்த அக் கட்சியின் பொதுச் செயலர் சதீஷ் சந்திர மிஸ்ர மட்டும் பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது மேடையில் மாயாவதியுடன் அமர்ந்திருந்தார்.

பகுஜன் சமாஜ் தேசிய செயலர் சித்திக், மாநிலத் தலைவர் லால்ஜி வர்மா, மூத்த தலைவர்கள் சுவாமி பிரசாத் மெüர்யா, முன்னாள் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆகியோருக்கும் அமைச்சரவையில் இடம் தரப்பட்டுள்ளது.

நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலம் பெற்று, 14 ஆண்டுகளுக்குப் பின் கூட்டணி கட்சிகளின் தயவை நாடாத தனி ஒரு கட்சியின் ஆட்சியை ஏற்படுத்தியுள்ளார் மாயாவதி.

தேர்தலில் மேல்சாதியினருக்கும் வாய்ப்பளித்து வெற்றிக்கொடி நாட்டிய மாயாவதி, அமைச்சரவையில் மேல்சாதியினர் பலருக்கும் இடம் அளித்துள்ளார்.

7 பிராமணர்கள், 6 தாக்கூர்கள், 5 முஸ்லிம்கள், யாதவ குலத்தைச் சேர்ந்த இருவருக்கும் அமைச்சரவையில் இடமளித்துள்ளார்.

50 பேர் கொண்ட மிகப்பெரிய அமைச்சரவையில் 19 பேர் கேபினட் அந்தஸ்துடையவர்கள்; 21 இணை அமைச்சர்களுக்கு தனிப்பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது; 9 பேர் இணை அமைச்சர்கள்.

மாநிலத்தின் 40-வது முதல்வர்

1993-ல் உ.பி. முதல்வராக மாயாவதி பொறுப்பேற்ற போது இந்தியாவின் முதல் தலித் முதல்வர் என்ற சிறப்பைப் பெற்றார். நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உ.பி.யில் முதல்வர் பதவி ஏற்கும் 40-வது முதல்வர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.

என்.டி. திவாரிக்கு இணையாக..

உ.பி.யில் காங்கிரஸ் தலைவர் என்.டி. திவாரி 4 முறை முதல்வர் பதவியை வகித்துள்ளார். அவருக்கு இணையாக மாயாவதியும் 4-வது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் மாயாவதி, இன்னும் 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை உறுப்பினராகவோ மேல்சபை உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, பகுஜன் சமாஜ் சட்டமன்றக் கட்சியின் தலைவராக சனிக்கிழமை ஒருமனதாக மாயாவதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை அடுத்து அவரை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர்.

403 உறுப்பினர்களைக் கொண்ட உ.பி. சட்டப்பேரவையில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 206 இடங்கள் கிடைத்துள்ளன.

———————————————————————————————————

ஆட்டம் போட்டவர்கள் கொட்டம் அடங்கியது

லக்னோ:உ.பி.,யில் முலாயம் சிங் ஆட்சியில் ஆட்டம் போட்ட அதிகாரிகளின் கொட்டம் அடக்கப்பட்டது.

முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளே 100க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பந்தாடினார் மாயாவதி. மேலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலுள்ள உயர் வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு சலுகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

உ.பி., முதல்வராக நேற்று பதவியேற்ற உடன் மாயாவதி, நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

  • உ.பி., சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், முலாயம் சிங் தலைமையிலான அரசு எடுத்த நிர்வாக முடிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
  • இதில், ஜாகர் பல்கலைக் கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து அளித்தது,
  • அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஏற்றுமதி செய்ய உத்தரவு பிறப்பித்தது,
  • ஷாபி கிராமத்துக்கு (முலாயமின் சொந்த கிராமம்) ரூ.10 கோடி ஒதுக்கியது ஆகிய நிர்வாக முடிவுகள் உட்பட பல முடிவுகள் ரத்து செய்யப்படும்.
  • மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கும். கிரிமினல்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்படுகிறது.
  • முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட துப்பாக்கி லைசென்சுகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்படுகிறது.

எனது அரசு, அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கவில்லை. மாநிலத்தின் நலனே அனைத்திலும் முதன்மையானது.

  • சமாஜ்வாடி பொதுச்செயலர் அமர் சிங் தலைமையிலான உ.பி., மேம்பாட்டு கவுன்சில் கலைக்கப்படுகிறது.
  • அம்பேத்கர் பூங்காவை முறையாக பராமரிக்காத இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்.
  • உயர் வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும்.

இவ்வாறு முதல்வர் மாயாவதி கூறினார்.உ.பி., மேம்பாட்டு கவுன்சில் மூலம் தான் நடிகர் அமிதாப் பச்சன், மாநிலத்தின் விளம்பர மாடலாக நியமிக்கப்பட்டு இருந்தார். மேலும், பல கலாசார நிகழ்ச்சிகள் பல கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்டிருந்தன. தற்போது, இதற்கு மூடு விழா காணப்பட்டுள்ளது.

இந்த கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து அமர் சிங் நேற்று முன்தினமே ராஜினாமா செய்து விட்டார். பதவியேற்ற முதல் நாளே பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மாற்றி முதல்வர் மாயாவதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முலாயம் சிங்கின் நண்பரும், தொழிலதிபருமான அனில் அம்பானியின் தாத்ரி மின் திட்டம் தொடருவது குறித்து முதல்வர் மாயாவதி எதிர்ப்பாக எதுவும் கூறவில்லை. “இப்போது தான் பதவியேற்றுள்ளேன். இது குறித்து பதிலளிக்க இப்போது முடியாது’ என்று கூறி விட்டார்.

அதுபோல, ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்து விட்டார். “இப்போது தான் முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ளேன். இந்த விஷயத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முடிவு எடுக்கப்பட்ட பின், உங்களிடம்(நிருபர்கள்) கண்டிப்பாக கூறுவேன்’ என்று மாயாவதி தெரிவித்து விட்டார்.

நிருபர்களுக்கு பேட்டி அளித்து முடித்த உடன், உ.பி.,யில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த 100க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் பி.பி.எஸ்., அதிகாரிகளை அதிரடியாக இடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இவர்கள் முலாயம் சிங் ஆட்சியில் ஆட்டம் போட்டவர் கள் என்று பகுஜன் சமாஜ் கட்சி தரப் பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தவிர கேபினட் செயலர் என்ற புதிய பதவியையும் மாயாவதி உருவாக்கியுள்ளார்.

எம்.எல்.ஏ., தாராளம்:

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய எம்.எல்.ஏ., சுபாஷ் பாண்டே. இவர், தனது எம்.எல்.ஏ., பதவிக்கான சம்பளம் மற்றும் இதர சலுகைகள் அனைத்தையும் பதவிக்காலம் முடியும் வரை புற்றுநோய் மற்றும் பிற கொடிய நோய்களால் பாதிக்கப்படும் மக்களுக்காக அளிக்க முன்வந்துள்ளார். “தேர்தலில் வெற்றி பெற்றால், இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று கடவுளிடம் உறுதி கூறியிருந்தேன். அதன்படி இப்போது அறிவிப்பு செய்துள்ளேன்’ என்று சுபாஷ் பாண்டே கூறினார்.
————————————————————————————————–

மாயாவதிக்கு சாதனை, காங்கிரஸýக்கு சோதனை

நீரஜா செüத்ரி:

தமிழில்- ஜி.கணபதி

மாயாவதி பிறரது ஆதரவு இன்றித் தனித்து நின்றே வெற்றி பெற்றுள்ளார். இது இந்தியா முழுவதும் உள்ள தலித்துகளை உற்சாகமூட்டித் தட்டி எழுப்பப் போகிறது.

சமூகத்தில் நசுக்கப்பட்ட தலித் இனத்தைச் சேர்ந்த மாயாவதி, இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தைக் கட்டி ஆளப்போகிறார்.

இது அரசியல் அம்சங்களையும் சமூக உறவையும் மாற்றப் போகிறது. மாயாவதிக்குக் கிடைத்த வெற்றி இந்திய அரசியல் இனி என்ன வடிவத்தை எடுக்கும் என்பதை நிர்ணயிக்கக் கூடியது.

தலித்துகள், பிராமணர்களை உள்ளடக்கி மாயாவதி அமைத்த வெற்றிக் கூட்டணியில் முஸ்லிம்களும் மிகவும் பிற்பட்ட வகுப்பினரும் இணைந்தனர். இத்தகைய கூட்டணி புதிது அல்ல. 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் இருந்துள்ளது.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல் முறையாக நிருபர்களிடம் பேசும்போது, தனக்கு உறுதுணையாக இருந்த

  • சதீஷ் சந்திர மிஸ்ர (பிராமணர்),
  • நசீமுதீன் சித்திக்கி (முஸ்லிம்),
  • பாபு சிங் குஷ்வஹா (மிகவும் பிற்பட்ட வகுப்பு) ஆகியோருக்குத் திறந்த மனதுடன் வெளிப்படையாக நன்றி தெரிவித்தன்மூலம் இது பல வண்ணக் கூட்டணி என்பதை மாயாவதியே ஒப்புக்கொண்டுள்ளார். பேட்டியின்போது அவர்களைத் தனக்குப் பக்கத்திலும் அமரச் செய்திருந்தார்.

கடந்த காலங்களில் காங்கிரஸ் வசம் பிராமணர்கள் ஈர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் சாதி கண்ணோட்ட அடிப்படையில் அது அமையவில்லை.

அயோத்தி இயக்கம் உச்சகட்டத்தில் இருந்தபோது தம் பக்கமாக பிராமணர்கள் கவர்ந்திழுக்கப்பட்டிருந்தபோதிலும் உயர்சாதி உணர்வை வெளிப்படையாகத் தட்டி எழுப்பி ஆதாயம் தேட பாஜக முயற்சி செய்யவில்லை.

ஆனால் இப்போதுதான் பிராமணர்கள் வகுப்பு அடிப்படையில் வெளிப்படையாக ஈர்க்கப்பட்டுள்ளனர். பிராமணர்கள் மாநாட்டை, மாவட்ட நிலையில் நடத்திய மாயாவதி லக்னெüவில் மாபெரும் மாநாடு ஒன்றையும் நடத்தினார்.

இப்போதைய முக்கிய கேள்வி இதுதான். பாஜகதான் பிராமணர்களின் புகலிடமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்த உயர் சாதியினர், மாயாவதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனரே? இது ஏன் என்பதே.

பாஜகவை விட்டு விலகி உயர்சாதியினர் நீண்ட தொலைவு சென்று விட்டனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இல்லையெனில் பாஜகவின் 2002 தேர்தல் வெற்றி முடிவுடன் ஒப்பிடுகையில் தற்போதைக்கு அதன் வெற்றிக் கணக்கு பாதியாகக் குறைந்திருக்காதே.

சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று மேல்சாதியினர் விரும்பினர். மேலும் அந்தக் கட்சிக்கு மாற்றாக மாயாவதியைக் கருதினர். உயர்சாதியினரை அலறவைத்த குண்டர்கள் ராஜ்ஜியம், பாதுகாப்பின்மை போன்ற பிரச்சினைகளை நன்கு புரிந்துவைத்திருந்தார் மாயாவதி.

ஆரம்பம் முதலே முலாயம், அமர்சிங் ஆகியோரைக் கடுமையாகச் சாடி வந்தார் மாயாவதி. ஆனால், பாஜகவோ சமாஜவாதி மீது மெத்தனம் காட்டியது. இதை பாஜக தலைவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.

2003-ல் முலாயம்சிங் தலைமையில் ஆட்சி அமைய உதவியது, பகுஜன் சமாஜ கட்சி இரண்டாக உடைந்தபோது அதை அப்போதைய சட்டப்பேரவைத் தலைவரான கேசரிநாத் திரிபாதி (பாஜக) அங்கீகரித்தது ஆகியவை உயர்சாதியினர் மத்தியில் சந்தேகம் எழ வைத்தது. உள்ளுக்குள் சமாஜவாதி கட்சியுடன் பாஜக ரகசிய உறவை வைத்துக்கொண்டதோ என்ற கண்ணோட்டம் ஏற்படச் செய்தது. தாங்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் பலவீனப்படுத்தப்படுவதாகவும் அநீதி இழைக்கப்படுவதாகவும் பிராமணர்கள் வேதனைப்பட ஆரம்பித்தனர்.

தலித்துகள், ஜாட் வகுப்பினர், யாதவர், குர்மிஸ் ஆகிய எல்லா வகுப்பினருக்குமே அரசியல் புகலிடம் உள்ளது. சமாஜவாதியின் அமர்சிங், வெளிப்படையாகவே, தாக்குர் வகுப்பினர் நலனுக்காகப் பாடுபட்டார். ஆனால் பிராமணர்கள் பற்றி யாரும் வாய் திறந்ததில்லை. அதைத் தமக்கு ஆதரவாகப் பயன்படுத்திய மாயாவதி “சர்வஜன சமாஜ்’ பற்றிப் பேச ஆரம்பித்தார்.

இந்நிலையில், பிராமணர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற தலைவராக சதீஷ் சந்திர மிஸ்ர உயர்ந்தார்.

வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளுக்குள் சிறந்த பிராமணத் தலைவராகக் கருதப்பட்ட வாஜபேயியையும் மிஞ்சினார் மிஸ்ர.

மாயாவதியுடனான அவரது நெருக்கம், செல்வாக்கு ஆகியவற்றால் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது மாநிலத்தை ஆட்சி செய்ய வழி கிடைத்துள்ளது என்ற எண்ணம் பிராமணர்கள் மத்தியில் ஏற்பட்டது.

தாக்குர் இனத்தைச் சார்ந்த ராஜ்நாத் சிங் தலைமை வகிக்கும் பாஜகவைவிட விரும்பப்பட்டவரானார் மாயாவதி. லோத் இனத்தைச் சேர்ந்த கல்யாண் சிங்கை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியது பாஜக.

2007 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு சாதி அடிப்படையில் அரசியல் சமூகம் மண்டல் மயமாகி உள்ளதை முழுமையாகப் பிரதிபலிக்கிறது. பிராமணர்களும் வைசியர்களும் சிறந்த வியூகத்துடன் வாக்களித்துள்ளனர்.

சில வழியில் வகுப்புவாத கண்ணோட்டத்துக்கு சாதி நோக்கம் வலிமை சேர்த்துள்ளது என்று கூறலாம். முஸ்லிம் விரோத பிரசார சி.டி. அல்லது அப்சல் குரு விவகாரம் மூலம் உத்தரப் பிரதேசத்தைக் கலக்கி ஆதாயம் பெற முயன்றது பாஜக. ஆனால் பலன் இல்லை. என்றாலும் ஹிந்து மத உணர்வைத் தூண்டுவதன் மூலம் பலன் கிடைக்காது என்ற முடிவுக்கு வருவது சரியானதல்ல.

இந்த ஆண்டு பிற்பகுதி வாக்கில் குஜராத்தில் நடக்கவுள்ள தேர்தலில் இது தெரிந்துவிடும்.

மாயாவதியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது மக்கள் நாடித்துடிப்பை அறிந்து சமூக சக்திகளை ஒன்றிணைத்து அவர் வகுத்த கூட்டணி.

வெற்றி பெற்றாக வேண்டும் என்ற மனோதிடமும் அவரிடம் ஓங்கிக் காணப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு முன்பே பிரசாரத்தைத் தொடக்கிய அவர் நன்கு திட்டமிட்டு தொகுதி, தொகுதியாகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

இத்தகைய நடவடிக்கைகளில் பாஜகவும் காங்கிரஸýம் தேர்தலுக்கு 6 வாரங்களுக்கு முன்புதான் இறங்கின. மேலும் வேட்பாளர்கள் தேர்வைப் பிறரைவிட முன்கூட்டியே முடித்துவிட்டார் மாயாவதி.

பாரம்பரியமாகத் தமக்கு ஆதரவு தந்து வந்தவர்களின் மன கண்ணோட்டம் பற்றித் தப்புக்கணக்கு போட்டது பாஜக. தனக்கு ஆதரவாக ஹிந்துக்களை அணி திரள வைக்கவும் அது தவறிவிட்டது. கணிசமான முஸ்லிம்கள் முலாயம் நோக்கி அலறி அடித்து ஓடும் வகையிலும் செயல்பட்டது. இவை, முலாயமின் வேகமான வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த உதவியுள்ளன.

மாயாவதி பெற்றுள்ள வெற்றி இதர மாநிலங்களில் குறிப்பாக, 2008ல் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி ஆகிய மாநிலங்களில் தீவிர தொடர்விளைவை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையானது.

தில்லியில் பகுஜன் சமாஜ கட்சி வேர் விட்டுள்ளது. அங்கு அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதன் செயல்பாடு சிறப்பாக அமைந்ததே காங்கிரஸ் தோல்வியடைய முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

ஜூலையில் நடக்கவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது வேட்பாளரை மாயாவதி ஆதரவுடன் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது. என்றாலும் மாயாவதியின் வளர்ச்சி நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸýக்கு தொல்லை தரக்கூடியதுதான்.

———————————————————————————————-

.மாயாவதி வெற்றியின் பின்னணியில் மூன்று முகங்கள்!

உ.பி., சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பெற்ற பிரமாண்டமான வெற்றிக்கு மூன்று பேர் முக்கிய தளபதிகளாகச் இருந்துள்ளனர். இவர்களின் உதவியுடன் பிராமணர்கள், வைசியர்கள் செயல்பட்டதால் கருத்துக் கணிப்புகளை முறியடித்து மாயாவதி வெற்றியை அள்ளிக் குவித்து விட்டார்.

எஸ்.சி.மிஸ்ரா: உ.பி.,யில் சீனியர் வக்கீலாக இருப்பவர் எஸ்.சி.மிஸ்ரா. பிராமணர் குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு அரசியல் அனுபவம் சிறிதும் கிடையாது. முன்பு 1976ல் எச்.என்.பகுகுணாவிடம் தேர்தல் மேலாளராக சிறிது காலம் பணியாற்றியுள்ளார். உ.பியில் பகுகுணா செல்வாக்கு மிகுந்த காங்கிரஸ் தலைவர். பின் நீண்ட இடைவெளக்குப் பின் 2004ல் மாயாவதி முதல்வர் பதவியை துறந்த போது, அவரது கட்சியுடன் தன்னை இணைத்து கொண்டார் மிஸ்ரா.

இது குறித்து மிஸ்ராவிடம் கேட்ட போது “தாஜ்மகால் வழக்கில் மாயாவதியை பா.ஜ., மிரட்ட தொடங்கியது. ஆனால், அதற்கு மாயாவதி அடிபணியவில்லை. அவரது போராட்ட குணம் எனக்கு பிடித்து விட்டது. எனவே தீவிர அரசியலில் இறங்கிவிட்டேன்’ என்றார்.

இந்த தேர்தலில் பிராமணர்களின் ஓட்டுகளை கட்சிக்கு பெற்று தரும் பணி மிஸ்ராவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான களப்பணியை 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேரணி ஒன்றை நடத்தி மிஸ்ரா முதலில் துவக்கினார். “பா.ஜ., “கமண்டல’த்தை விட்டு விட்டு “மண்டல்’ பிரச்னையை கையில் எடுத்து விட்டது. எனவே மாற்று கட்சியை பிராமணர்கள் தேட தொடங்கினர். அவர்களின் எண்ணத்தை நான் பூர்த்தி செய்தேன்’ என்று மிஸ்ரா இப்போது கூறுகிறார்.

அந்த ஆண்டில் மட்டும் பிராமணர்கள் பங்கேற்ற 21 பேரணிகளை நடத்தினார். இது தவிர ஒவ்வொரு தொகுதியிலும், பிராமணர்கள் மற்றும் ஆதிதிராவிட மக்கள் அடங்கிய கமிட்டியையும் உருவாக்கினார். அவரது செயல்பாட்டை அப்போது பலரும் கிண்டல் அடித்தனர். ஆனால், இறுதியில் மிஸ்ரா வெற்றி பெற்று காட்டி விட்டார். இதற்கு பரிசாக மிஸ்ராவை அட்வகேட் ஜெனரலாக, மாயாவதி நியமிக்க உள்ளார்.

“பிராமணரான என்னை இப்பதவிக்கு தேர்ந்தெடுத்தது ஏன்?’ என்று மிஸ்ராவே வினோதமாகக் கேட்கிறார். அதற்கு மாயாவதி பதிலாக “நான் ஜாதியை பார்த்து பதவியை தருவதில்லை. தகுதியை பார்த்து தான் தருகிறேன்’ என்று கூறி விட்டார்.

நசீம்முதீன் சித்திக்: மாயாவதியின் தீவிர விசுவாசி நசீம்முதீன் சித்திக். அரசியல் உலகை தவிர வெளியுலக தொடர்பே இவருக்கு இல்லை. பத்திரிகையாளர்களை பார்த்தால் ஓடி விடுவார். ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்.இந்த தகுதிகளின் காரணமாகவே மாயாவதியின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்குகிறார். சித்திக்.

“பேகன்ஜி'(மாயாவதி) சொல்வதை மட்டுமே செய்வார். மாயாவதி 1980ம் ஆண்டுகளில் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கு அறிமுகமானவர் சித்திக். மாயாவதியை பாதுகாக்கும் பொறுப்பு அப்போது அவருக்கு வழங்கப்பட்டது. அது முதல் மாயாவதியின் நிழல் போலவே இருந்து வருகிறார்.

இந்த தேர்தலில் முஸ்லிம்களை கட்சிக்கு பெற்று தரும் பொறுப்பு சித்திக்கிடம் வழங்கப்பட்டது. இதற்காக கட்சியின் முஸ்லிம் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். முஸ்லிம் உலாமாக்களை சந்தித்து பேசி, அவர்களின் ஆதரவை பெறும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது போன்ற பெரிய பணியை சித்திக் ஏற்பது இதுவே முதல் முறை. இருப்பினும், அதை சிறப்பாகவே செய்தார். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சிறு சிறு கூட்டங்கள் நடத்தி ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக செயல்பட்டார். இந்த முயற்சி இறுதியில் அவருக்கு மட்டும் அல்ல, மாயாவதிக்கு வெற்றியை ஏற்படுத்தி கொடுத்தது.

சுதீர் கோயல்: உ.பி.,யில் உயர் ஜாதி வகுப்பை சேர்ந்த தலைவர் சுதீர் கோயல். ஜெய்பிரகாஷ் நாராயணனின் இயக்கத்தில் முதலில் தொடர்பு கொண்டவர் . பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்த, முதல் உயர் ஜாதி வகுப்பு தலைவர் என்ற பெருமைக்கு உரியவர். கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் மற்றும் தலைவர் மாயாவதிக்கு மிகவும் நெருக்கமானவர்.

டில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தேர்தலில் கட்சியின் செய்தி தொடர்பாளராக சுதீர் கோயல் பணியாற்றினார். பத்திரிகையாளர்களுடன் நெருங்கிப் பழகி, பிற கட்சிகளின் தகவல்களை அறிவது இவரது பணி. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியின் தகவல்களை சிறிது கூட கசிய மாட்டார். அந்த அளவுக்கு உஷார் பேர்வழி சுதீர் கோயல். இது தவிர உ.பி.,யில் ஓரளவுக்கு பெரும்பான்மையாக உள்ள வைஸ்ய சமுதாயத்தினருடன் நெருங்கி பழகும் படி சுதீர் கோயல் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

இந்த சமுதாயத்தினரில் ஒரு பகுதியினர் சமாஜ்வாடி கட்சிக்கும், மற்றொரு பகுதியினர் பாரதிய ஜனதாவுக்கும் ஆதரவு அளித்து வந்தனர். மாநிலம் முழுவதும் இதே நிலை தான் காணப்பட்டது. மாநிலம் முழுவதும் சுதீர் கோயல் பயணம் செய்து வைஸ்ய சமுதாயத்தினரின் ஆதரவை பகுஜன் சமாஜ் கட்சியின் பக்கம் திருப்பினார்.

குறிப்பாக அலகாபாத் மாவட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பெற்ற வெற்றிக்கு வைஸ்ய சமுதாயத்தினர் அளித்த ஆதரவே காரணம் . “மாயாவதி மட்டுமே தங்களை பாதுகாக்க முடியும் என்ற எண்ணம் வைஸ்ய சமுதாயத்தினரிடம் ஏற்பட்டு விட்டது’ என்று இதற்கு சுதீர் கோயல் விளக்கம் அளித்துள்ளார். இதற்காக கோயலை கேபினட் அமைச்சராக்கியுள்ளார் மாயாவதி.

———————————————————————————————–

“மனுவாதி-மாயாவாதி’ உடன்பாடு!

எஸ். குருமூர்த்தி

“”பத்திரிகைகளை அந்த அம்மா மதிப்பதே இல்லை” என்று நிருபர்கள் புலம்புகின்றனர். உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தனியொரு கட்சியாகவே பெரும்பான்மையைப் பெற்றுவிட்ட பிறகும் அதே நிலைதான்!

பேட்டி தருமாறு கோரி பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் விடுத்த அழைப்புகளை ஏற்று பதில்கூட தரவில்லை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி. அந்த நிறுவனங்கள் தன்னைப் பேட்டி காண அழைப்பு விடுக்காதா என்று ஏங்கும் அரசியல் தலைவர்கள் எத்தனையோ பேர்; ஆனால், மாயாவதி அப்படியல்ல.

“”தேர்தல் அறிக்கை என்று எதையுமே அந்த அம்மா வெளியிடவில்லையே” என்பது சிலரின் அங்கலாய்ப்பு! தேர்தல் களத்தில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அரசியல் கட்சிகள், வாக்காளர்களில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏதாவதொரு வாக்குறுதியை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தன. ஆனால் தன்னைத் தலைவியாக ஏற்றுக்கொண்ட ஏழை மக்களுக்கு, 2 வேளை சாப்பாடு, வறுமைக் கோட்டிலிருந்து விடுபட உற்ற வழி என்ற குறைந்தபட்ச அத்தியாவசியத் தேவைகள் இருந்தபோதிலும் மாயாவதி எந்தவித இலவச அறிவிப்பையும் வெளியிடவில்லை.

“”ஆட்சிக்கு வந்தால், இலவசமாக வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, புடவை, வேஷ்டி, இலவச கேஸ் ஸ்டவ், கடன் தள்ளுபடி” என்று எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. இந்த எல்லாச் சலுகைகளும் தேவைப்படும் நிலையில் உள்ளவர்கள்தான் அவருடைய ஆதரவாளர்கள்.

மற்றவர்கள் இலவசங்களை அறிவித்து ஆசை காட்டினாலும் அந்தப் பக்கம் போக விரும்பாத அளவுக்கு அவர்கள் ஏன் அவருக்குப் பின்னே நின்றார்கள்?

இதற்கான விடை, பகுஜன் சமாஜ் கட்சியின் (பி.எஸ்.பி.) வரலாற்றில் இருக்கிறது. மாயாவதியின் அரசியல் குருவான கான்ஷிராம், சமூகப் படிநிலையில் 5-வது, 6-வது இடத்தில் இருந்த சூத்திரர்களையும் தீண்டத் தகாதவர்களையும் கொண்டு கட்சியை நிறுவினார். தங்களையும் ஏறெடுத்துப் பார்க்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்ற அவர்களுடைய ஏக்கம் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்தது. அவர்களுடைய அந்த ஏக்கமே தன்னுடைய கட்சியின் ஆன்மாவாகத் திகழ்வதை கான்ஷிராம் உறுதி செய்தார். பகுஜன் சமாஜத்தின் ஆன்மாவை இலவச டி.வி.க்கள் மூலமோ, புடவைகள் மூலமோ பிற கட்சிகளால் வாங்கிவிட முடியாது.

அது அவர்களுக்கு வெறும் அரசியல் கட்சி மட்டும் அல்ல; சமூகத்தின் படிநிலையில் முதல் 3 இடங்களில் உள்ள பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோருக்கு எதிரான வெளிப்படையான, வலிமை மிகுந்த ஆயுதமாகும். இந்த 3 சாதியினரையும் மாயாவதி வெளிப்படையாகவே “”மனுவாதிகள்” என்று சாடி வந்தார்.

“”அவர்களைச் செருப்பால் அடியுங்கள்” என்பதுதான் பி.எஸ்.பி.யின் போர் முழக்கமாகவே இருந்தது. சாதிய அமைப்பு முறையையே ஒழித்துக் கட்டுவேன் என்று கான்ஷிராம் சபதம் செய்தார். கடைசியில், ஒரு பிரிவு சாதிக்கு எதிராக மற்றொரு பிரிவு சாதியினரைக் கொண்டு வலுவான அரசியல் கட்சியை உருவாக்கிவிட்டார்.

சாதிகளை ஒழிக்கப் புறப்பட்ட எல்லா சீர்திருத்த இயக்கங்களுமே இப்படித்தான் கடைசியில் சாதிய அடையாளங்களுடன் முடிந்துள்ளன.

“”கீழ்ச் சாதியினர் ஒற்றுமையாகச் செயல்பட்டுத் தங்களை வலுப்படுத்திக் கொண்டு மேல்நோக்கி முன்னேறுவதற்கு சாதி என்பது ஜனநாயகத்தில் ஒரு தடையல்ல, ஒரு வாகனம்” என்று அவர் முதலில் உணர்ந்தார். ஜனநாயகம் இல்லாத சமூகங்களில்தான் சாதிய அடையாளம், முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தது.

இப்படித்தான் கோபத்திலும் வெறுப்பிலும் பகுஜன் சமாஜ் கட்சி பிறந்தது. அது வளர்ந்தபோது அதன் கோபமும் வளர்ந்தது. வெகுவிரைவிலேயே பகுஜன் சமாஜ் அபார வெற்றி கண்டு, அதன் ஆதரவு சக்திகளிடையே அபார செல்வாக்குப் பெற்றது. ஆனால் பெரும்பான்மை என்ற இலக்கைத் தொட அதற்கு ஒரு பாலம் தேவைப்பட்டது. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற, வெளியில் யாரிடமிருந்து ஆதரவு கிடைக்கும் என்று அது பார்த்தது.

“”லட்சியத்தை நிறைவேற்றப் பேயுடனும் கூட்டு சேர்ந்தாக வேண்டும்” என்பதுதான் ஜனநாயகத்தின் பாலபாடம். பகுஜன் சமாஜ் விஷயத்தில், இதுநாள்வரை அது பேயாகக் கருதிய, தனது எதிரியான “”மனுவாதிகளோடு” கூட்டு சேர வேண்டியது அவசியம் என்று உணரப்பட்டது. இது காரியசாத்தியமில்லாத விஷயமாகவே கருதப்பட்டது. ஆனால் மாயாவதி இதை வெகு எளிதாகச் செய்து முடித்துவிட்டார்.

“”மனு”வாதிகளுக்கும் “”மாயா”வாதிகளுக்கும் உள்ள பொதுவான வேராக ஹிந்து மதம் திகழ்வதை அவர் வலியுறுத்தினார். மேல்சாதியினருக்குக் கடவுளைப் பற்றிய சிந்தனை, பேச்சு எல்லாம் “”போதை தரும் விஷயம்” என்ற பலவீனத்தை அவர் புரிந்துகொண்டார்.

“”பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் வெறும் யானை அல்ல, கணேசப் பெருமான்தான்” என்று ஒரே போடாகப் போட்டார். இணைப்புக்கு ஒரு கடவுள் போதவில்லை, எனவே பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் (சிவன்) என்ற மூவரையும் உடன் சேர்த்துக் கொண்டார்.

“”அவர்களைச் செருப்பால் அடியுங்கள்” என்று ஒரு காலத்தில் சொன்னதால் மனுவாதிகளுக்கு ஏற்பட்ட மனப்புண்ணுக்கு ஒரே ஒரு செயல்மூலம் மருந்து போட்டுவிட்டார். மனுவாதிகளுக்கும், மாயாவாதிகளுக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட கடவுளர்கள், மத்தியஸ்தர்களாக இருந்தனர்.

மாயாவதியின் இச்செயல் பிராமணர்களை முதலில் திருப்திப்படுத்தியது. உத்தரப் பிரதேசத்தில் 14% வாக்குவங்கியான பிராமணர்களை முதலில் வசப்படுத்தியது மாயாவதியின் மிகப் பெரிய வெற்றி.

உத்தரப் பிரதேசத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் “”பிராமண மகாசபை” கூட்டங்களை நடத்தி, ஹிந்துக் கடவுளர்கள் மீது தங்களுக்கிருக்கும் மரியாதையை அவர் வெளிப்படுத்தினார். இப்படித்தான் மனுவாதி-மாயாவாதி (பிராமணர், தலித்) கூட்டணி உருவானது.

பிராமணர்களுக்கு 80 தொகுதிகளையும் பிற மேல்சாதியினருக்குக் கணிசமான தொகுதிகளையும் கூட்டணியில் ஒதுக்கியிருப்பதை ஒவ்வொரு தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் மறக்காமல் அவர் கூறினார். இப்படியெல்லாம் கூறவோ, செயல்படவோ காங்கிரஸ், பாரதீய ஜனதா போன்ற கட்சிகளால் கனவிலும் முடியாது. மாயாவதியால் மட்டுமே அப்படிச் செய்யவும் முடியும், அதை பகிரங்கமாகச் சொல்லவும் முடியும்.

இப்படித்தான் பகுஜன் சமாஜின் முக்கிய எதிரிகளாகத் திகழ்ந்த மனுவாதிகள், அவர்களுடைய கூட்டாளிகளானார்கள். தீவிர எதிர்ப்பாளராக இருந்த மாயாவதியை அரவணைக்கும் தலைவராக ஜனநாயகம்தான் மாற்றியது.

உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை இது கட்சிகளின் கூட்டணி இல்லை, சாதிகளின் கூட்டணி. “”குறைந்தபட்ச பொது செயல்திட்டம்” (சி.எம்.பி.) அல்ல, கடவுளர்கள்தான் இங்கு இணைப்புப் பாலமாகச் செயல்பட்டுள்ளனர். மனுவாதிகளும் மாயாவாதிகளும் செய்துகொண்ட தொகுதி உடன்பாடு அரசியல்ரீதியாக லாபகரமான பலன்களைத் தந்தது.

நீதி: உத்தரப்பிரதேசத்தில் மனுவாதி-மாயாவாதிகள் இடையிலான கூட்டணி ஜனநாயகத்தால் உருவானது, கடவுளர்களால் இணைக்கப்பட்டது. அது கடைசியில் மகத்தான வெற்றியையும் பெற்றுவிட்டது. மனுவாதிகளைத் தீவிரமாக எதிர்த்துவந்த பகுஜன் சமாஜ், மிதவாத கட்சியாக மாறிவிட்டது; இனி அது எந்தக் காலத்திலும், பழையபடி “”அனல் கக்கும்” மனுவாதிகள் எதிர்ப்பாளராக மாறவே முடியாது.

———————————————————————————————

கங்கா தீரமும் காவிரி ஓரமும்…

செ.கு. தமிழரசன்

இந்தியாவின் ஒட்டுமொத்தப் பார்வையும் இன்று உத்தரப் பிரதேசத்தை நோக்கியே திரும்பியுள்ளது.

இழுபறி அமைச்சரவைதான் ஏற்படும், குதிரை பேரம் நடக்கும், விரைவில் மறுதேர்தலும் வரலாம் என்ற ஐயப்பாடுகளுக்கு எல்லாம் சற்றும் இடம்தராமல், கணிப்புகளையெல்லாம் பொய்யாக்கிவிட்டு, மக்கள் திரளின் மகத்தான ஆதரவுடன், பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் பெரும்பான்மை பலத்துடன், ஒரு கட்சி ஆட்சியை நிறுவியுள்ளார் தலித் சமூகத் தலைவி மாயாவதி. இது ஒரு பாராட்டத்தக்க செயல்பாடுதான், சந்தேகமில்லை.

இந்த அளவிற்கு அனைத்து அரசியல் சக்திகளையும், திறனிழக்கச் செய்யக் காரணம் மாயாவதி கையாண்ட தேர்தல் சாதுர்யம்தான் என்று எல்லா ஊடகங்களும் அடையாளப்படுத்துகின்றன. எனவே அவர் அப்படி என்னதான் புதிய வழிமுறையைத் தேர்தல் வியூகமாக வகுத்தார் என்று பார்த்தாக வேண்டும். ஏனெனில் இன்று மாயாவதியின் வெற்றியை மற்ற மாநிலத் தேர்தலுக்கும் முன்னுதாரணமாக்கும் போக்கு வலுக்கிறது.

பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கை வழியில், சமூகரீதியாக ஒடுக்கப்பட்டிருக்கும் தலித் மக்களும், கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கி நிற்கும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒருங்கிணைந்தால், நமது ஆட்சியை நிலைநாட்ட முடியும் என்ற கான்ஷிராமின் சித்தாந்தம், உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரையில் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனால் அவரது “பகுஜன் சமாஜ் கட்சி’ ஒரு மாற்று அரசியல் சக்தியாகப் பரிணமித்தது.

கான்ஷிராமின் அரசியல் பார்வையின் அடிப்படையிலேயே முந்தைய தேர்தல் கூட்டணிகள் அமைந்தன. 1993 தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி கண்ட மாயாவதி 1996-ல் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்தார். பின்னர் பாஜகவுடன் கூட்டணி ஆட்சியையும் அரங்கேற்றிப் பார்த்தார்.

ஆனால் ஒவ்வொரு முறையும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு எம்.எல்.ஏ.க்கள் தனக்கும், கட்சிக்கும் நம்பிக்கைத் துரோகமிழைத்துவிட்டு, எதிர் அணிக்குத் தாவி தங்களது சாதிய சுயரூபத்தை வெளிப்படுத்தினார்கள். தனது முதுகில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு எம்.எல்.ஏ.க்கள் குத்திய வலியை அவரால் மறக்க முடியவில்லை. தலித் – பிற்பட்டோர் ஒற்றுமை என்பது, ஆட்சித்தலைமைத் தேர்வின்போது, நல்ல குதிரைபேர வியாபாரத்திற்கே வழிவகுக்கிறது என்ற அப்பட்டமான உண்மை வெட்ட வெளிச்சமாகியது.

எனவே, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு மாற்றுவழியைத் தேட வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானார் மாயாவதி. பார்ப்பன, க்ஷத்ரிய, பனியாக்களை செருப்பால் அடிக்க வேண்டுமென்ற அவரது முழக்கம், ஆட்சி அதிகாரப் பகிர்வின்போது, தன்னிடமே செய்முறை விளக்கப் பயிற்சி பெறுவதை உணர்ந்தார். இனி பிற்படுத்தப்பட்டவரை நம்பிப் பயனில்லை என்ற முடிவிற்கே வந்துவிட்டார்.

இதுவரை மேல்மட்ட வர்க்கத்தை மட்டந்தட்ட வேண்டிய எதிரிகளாகவே பாவித்த மாயாவதியின் போக்கில், ஒரு மாறுதல் தோன்றியது. அவர்களையும் அரவணைக்கும் எண்ணம் உதயமாயிற்று.

இதற்கேற்றபடி, பிராமணர், வைசியர், தாக்கூர் ஆகிய இந்து இனச் சமூகங்கள் பெரிதாக நம்பிக் கொண்டிருந்த பாரதீய ஜனதா கட்சியோ, மத்தியில் வலுவிழந்து, மாநிலத்தில் மரியாதையிழந்து, அவ்வப்போது இந்துத்துவா, ராமர் கோயில் என்று ஈனஸ்வரத்தில் முனங்கிக் கொண்டிருந்தது.

காங்கிரஸ் கட்சியோ, காந்தியின் காலத்திலிருந்து தனது வாக்குவங்கியாக வைத்திருந்த இந்து – முஸ்லிம் – ஹரிஜன ஓட்டுகளை பெரும்பாலும் இழந்து கட்சியும் கரைந்துவிட்டிருந்தது.

ஆகவே மேல்தட்டு வர்க்கமான பிராமண, வைசிய, தாக்கூர் சாதியினர் எங்கே போவது, யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்திற்கு இயல்பாகவே வந்துவிட்டனர். இந்தச் சூழ்நிலையில் மாயாவதியின் மனமாறுதல் அவர்களை பகுஜன் சமாஜ் கட்சியை நெருங்கச் செய்தது.

மாயாவதியும் பிற்படுத்தப்பட்ட மாயையிலிருந்து விடுபட்டு முற்படுத்தப்பட்டவர்களை ஆதரிக்க முன்வந்தார்; வரவேற்று 83 பேரை வேட்பாளர்களாக்கினார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் பயன்களை, யாதவ் மற்றும் குர்மி சாதியினர் மட்டுமே அனுபவிப்பதைப் பார்த்துப் பொருமும் ஏனைய பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் மாயாவதியின் பின்னால் அணிவகுக்க முற்பட்டனர்.

ஆக, பகுஜன் சமாஜ் கட்சிக்குரிய வாக்கு வங்கியான தலித் மக்கள், புதுவிருந்தாளியான மேல்தட்டு வர்க்கம், இதோடு இஸ்லாமிய சமூகம் மற்றும் யாதவ், குர்மி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஆகிய புதிய ஐக்கியம் தேர்தலில் பதியமிட்டது. நல்லாட்சி அமைகிறதோ இல்லையோ, ஒரு ஸ்திரமான ஆட்சி, அதாவது ஐந்தாண்டுகளுக்கு அறுதிப் பெரும்பான்மையோடு நடைபெறும் ஆட்சி அமைய வேண்டும். அதற்கான ஒரு கட்சியைத் தேர்ந்தெடுத்தே தீர வேண்டுமென்ற உறுதியான எண்ணம் மக்களிடையே பரவிக் கிடந்தது. அதற்கு கண்முன் நிற்கும் சாட்சியாக “பகுஜன் சமாஜ் கட்சி’ காட்சியளித்தது. மக்கள் வாக்களித்தனர். மாயாவதி வெற்றி பெற்றார்.

அண்ணல் அம்பேத்கரின் பெயரை உச்சரித்தபடியே ஒரு கட்சி, தன் ஆட்சியை நிறுவியுள்ளது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால் இது நிலைத்து நீடிக்குமா?

மாயாவதியின் வெற்றியைக் கண்டு மற்ற மாநிலத்திலுள்ள அம்பேத்கரிய இயக்கவாதிகளுக்கு ஒரு புத்துணர்ச்சியும் எழுச்சியும் ஏற்படுவது இயல்புதான். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், உத்தரப் பிரதேசத் தேர்தல் பரிசோதனை எடுபடுமா?

இங்கு “”தாழ்த்தப்பட்டோர் – பிற்படுத்தப்பட்டோர்” ஐக்கியம் என்ற சிந்தனை உருவாக்கம் பெற்று ஒரு நூற்றாண்டுக்கு மேலாகிறது. அந்த அடிப்படையில்தான் இங்கு 40 ஆண்டுகாலமாக ஆட்சியே நடைபெறுகிறது. ஆனால் என்ன ஒரு வேறுபாடு என்றால், தாழ்த்தப்பட்டோரும் முதல்வராக வந்ததில்லை. பிற்படுத்தப்பட்டோரிலும், பெரும்பான்மைச் சமூகங்களைச் சார்ந்த எவரும் முதல்வராக வந்ததில்லை. தமிழகத்தில் பெரும்பாலான சாதிகள் (70 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், முற்பட்ட மக்கள் பலம் மிகவும் குறைவு. எனவே, உ.பி. பாணியில் தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் – அந்தணர் ஐக்கியம் எந்த மாற்றத்திற்கும் வித்திட்டு விடாது. ஏமாற்றத்திற்கே இலக்காகும்.

மேலும், மாயாவதியின் “வெற்றிசூட்சுமம்’ ஏதோ அவரால் மட்டுமே கண்டுபிடித்து கையாளப்பட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு மாயை என்பதை முதலில் புரிந்துகொண்டாக வேண்டும்.

அகில இந்திய அளவில், காந்திதான் இந்து – முஸ்லிம் – ஹரிஜன் முக்கூட்டு ஒற்றுமையை வலியுறுத்தி அதற்கான வழியமைத்தவர். இந்தத் தளத்தில்தான் காங்கிரஸ் கட்சி நீண்டகாலமாகத் தேர்தலைச் சந்தித்து இந்தியா முழுமையையும் தன் ஆட்சிக்குள் வைத்திருந்தது. ஆக, காந்தியின் இந்து – முஸ்லிம் – ஹரிஜன ஐக்கியம், தலித் தலைவியான மாயாவதியால் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.

ஆனால் இதற்கு மாயாவதி கொடுத்துள்ள விலை அதிகம் என்பதைக் காலம் விரைவில் உணர்த்தும். அதற்கான அடையாளங்கள் இப்போதே தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டன.

அண்ணல் அம்பேத்கரின் கொள்கைவழியில் தோன்றியதாகத் தென்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி, இன்று அதே அண்ணலின் எதிர்நிலையான இந்துத்துவாவை தூக்கிச் சுமக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, உருவாக்கப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சி, இனி எல்லா இனமக்களுக்குமான சர்வஜன சமாஜ் கட்சியாகச் செயல்படும் என்று பொய் வேடம் புனைய வேண்டிய நிலைக்கு மாயாவதி ஆளாகியுள்ளார். முதல்வராகப் பதவியேற்றவுடன் புரட்சியாளர் அம்பேத்கர் பெற்றுத் தந்த சமூகரீதியான இடஒதுக்கீட்டைப் புறந்தள்ளி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிராமணர்களுக்கும் இடஒதுக்கீடு என்று மாயாவதி அறிவித்ததன் மூலம், சமூகநீதியையே வஞ்சித்துவிட்டார்.

மேலும் ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால் மாயாவதியின் 206 எம்.எல்.ஏக்களில் ஒரு தலித் எம்.எல்.ஏ.கூட பொதுத்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதுதான் தலித் – பிராமண ஐக்கியத்தின் லட்சணம். இத்தகைய நிலையில், இங்கு தமிழ்நாட்டில் மாயாவதியின் சூத்திரத்தை அமல்படுத்த முயற்சிக்கலாமா என்று சிந்திப்பதே ஆரோக்கியமானதல்ல என்றே தோன்றுகிறது.

மாயாவதியின் வெற்றி மகத்தானதுதான். அது, உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை. அதைத் தமிழ்நாட்டிலும் பொருத்திப் பார்க்க நினைத்தால் எதையோ பார்த்து எதுவோ சூடுபோட்ட கதையும், எதையோ பார்த்து எதுவோ ஆடவந்த கதையும்தான் அரங்கேறும்.

(கட்டுரையாளர்: இந்திய குடியரசுக் கட்சியின் தேசியப் பொதுச் செயலர், அதன் தமிழ் மாநிலத் தலைவர்.)

—————————————————————————————
உ.பி. முதல்வர் மாயாவதிக்கு ரூ.52 கோடி சொத்து

லக்னெü, ஜூன் 26: உத்தரப்பிரதேச முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.52 கோடி என தெரியவந்துள்ளது.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட மாயாவதி தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் அவர் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.

ரூ.12.88 கோடியை பல்வேறு நிதி நிறுவனங்கள், வங்கியல்லாத நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ரூ.51 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், ரூ.52.27 லட்சம் ரொக்கம், ரூ.15 லட்சம் விலை மதிப்பு உள்ள ஓவியங்கள் ஆகியவை தன்னிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுதில்லியில் தனக்கு சொந்தமாக 3 வணிக வளாகங்கள், 2 வீடுகள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.37.82 கோடி என்றும் தனக்கு சொந்தமாக விவசாய நிலங்களும் வாகனங்களும் இல்லை என்றும் அவர் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
—————————————————————————————
உ.பி.யில் இடைத்தேர்தல்: மாயாவதி வேட்புமனு தாக்கல்

லக்னெü, ஜூன் 26: உத்தரபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 2 சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

இதில் ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்காக அந்த மாநில முதலமைச்சர் மாயாவதி திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் பி.ஆர்.வர்மா, சமாஜவாடி கட்சி உறுப்பினர் விக்ரமாதித்ய பாண்டே ஆகிய இருவரும் மரணமடைந்தனர்.

இதையடுத்து வர்மாவின் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை மாயாவதி தாக்கல் செய்தார். அவரது மனுவை 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்மொழிந்தனர்.

வேட்பு மனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற ஜூன்28-ந் தேதி கடைசி நாளாகும்.

மாயாவதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதால், அண்மையில் நடைபெற்ற உத்தரபிரதேச தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
—————————————————————————————

Kumudam Reporter – Solai

08.07.07

இனி, மையத்திலும் மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சிதான். இந்திய அரசியல் இப்படி புதிய பரிணாமத்தை எட்டியிருக்கிறது என்று அரசியல் விற்பன்னர்கள் அறிவித்தார்கள். ஆனால், இருபது ஆண்டுகளுக்கு மேலாக, கூட்டணி ஆட்சி கண்ட உத்தரப்பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சி தனித்து ஆட்சி அமைத்திருக்கிறது. எப்படி?

அந்த மாநிலத்தில் மீண்டும் கூட்டணி ஆட்சிதான் என்று அனைத்து அரசியல் ஆரூடக்காரர்களும் சொன்னார்கள். ஆனால், கூட்டணி அமைப்பதில் மாயம் செய்த மாயாவதி, தனிப் பெரும்பான்மை பெற்று, தனித்து ஆட்சி அமைத்திருக்கிறார். என்ன காரணம்?

நாடு விடுதலை பெற்றாலும் தலித் மக்களுக்கு விடுதலை இல்லை. அரசியல் சட்டம் வழங்கும் உரிமைகளெல்லாம் அவர்கள் வீட்டு வாசலை எட்டிப் பார்த்ததில்லை. எனவே, அந்தச் சமுதாயத்தின் எழுச்சிக்காக அண்ணல் அம்பேத்கர் பாடுபட்டார். அதன் வழியில் தலித் மக்களுக்காக கன்ஷிராம், பகுஜன் சமாஜ் கட்சியை உருவாக்கினார். அந்தக் கட்சியில் அவருக்கு அடுத்த தலைவராக மாயாவதி உயர்ந்தார். டெல்லி மின் வாரியத்தில் லைன் மேனாகப் பணி செய்த ஒரு தலித்தின் புதல்விதான் அவர்.

தமிழகத்தில் எப்படி பிராமண சமுதாயத்தை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதோ, அதே போல் உத்தரப்பிரதேசத்துப் பிராமண சமுதாயத்தையும் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்வா அமைப்புகளையும் எதிர்த்துத் தொடங்கப்பட்டதுதான் பகுஜன் சமாஜ் கட்சி.

உத்தரப்பிரதேச வாக்காளர்களில் பிராமணர்களும் இதர முற்படுத்தப்பட்ட வகுப்பினர்களும் 30 சதவிகிதம் பேர் இருக்கின்றனர். எனவே, இவர்களைப் பகைத்துக்கொண்டு இவர்களுக்கு எதிராக அரசியல் நடத்தினால் ஆட்சி என்பது கனவாகத்தான் இருக்கும் என்பது மாயாவதியின் கணிப்பு.

எனவே, அந்தச் சமுதாயத்தினரின் நம்பிக்கையைப் பெறுவதில் மாயாவதி நாட்டம் கொண்டார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளராக சதீஷ் சந்திர மிஸ்ரா என்ற பிராமணரை மாயாவதி நியமித்தார். அவர் சட்டமேதை. உத்தரப்பிரதேச அரசின் அட்வகேட் ஜெனரலாக இருந்தவர். அவர்தான் இன்றைக்கு மாயாவதிக்கு அரசியல் வழிகாட்டி.

ஒரு காலத்தில் உத்தரப்பிரதேச அரசியல், அலகாபாத் நேரு பவனத்தில் தவழ்ந்து கொண்டிருந்தது. பிராமணர்களே காங்கிரஸ் முதல்வர்களாக வந்தனர். இஸ்லாமிய மக்களும் தலித் மக்களும் காங்கிரஸ் அரசுகளின் காவலர்களாக இருந்தனர்.

இப்போது பிராமண சமுதாய மக்களும் இஸ்லாமிய மக்களும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் அரணாக மாறியிருக்கின்றனர். இவைதான் மாயாவதி செய்த மாயம்.

‘தலித் மக்களுக்கான கட்சி பகுஜன்’ என்றால் மாயாவதிக்கே கோபம் கொப்புளிக்கிறது. ‘சர்வ சமூகத்தினருக்கான கட்சி என்று சொல்லுங்கள்’ என்கிறார்.

தலித் மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் என்ன தனி ஒதுக்கீடு? முற்படுத்தப்பட்ட சமுதாயங்களில் பொருளாதார ரீதியாக தலித்துகளை விடப் பின்தங்கியவர்கள் இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களை விட, முற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் அழுந்திக் கிடக்கின்றவர்கள் இருக்கிறார்கள் என்று அவர் கண்டுபிடித்திருக்கிறார். அந்த வாதம் முற்படுத்தப்பட்ட சமுதாய மக்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து எந்த அளவிற்கு மாயாவதி இறங்கிப் போக முடியுமோ, அந்த அளவிற்கு இறங்கி வந்து அதிகார அரசியலில் வெற்றி பெற்றிருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு சக்தியாக இருந்தது. அடுத்து பி.ஜே.பி. ஒரு சக்தியாக உருவானது. அந்தக் கட்சி அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த பின்னர், அந்த வலிமையைப் பெற்றது. அதனைத் தடுக்க மையத்தில் இருந்த காங்கிரஸ் அரசு தவறியது. எனவே, இஸ்லாமிய மக்கள் காங்கிரஸ் உறவைக் கத்தரித்துக் கொண்டது மட்டுமல்ல; கடுங்கோபமும் கொண்டனர். அதனை, இன்னொரு சக்தியாக எழுந்த முலாயமின் சமாஜ்வாதி கட்சி பயன்படுத்திக் கொண்டது.

காங்கிரஸ் மீது இஸ்லாமிய மக்கள் கோபம் கொண்டது போல தலித் மக்களும் ஆவேசம் கொள்ளவே செய்தனர். தங்கள் சமுதாயத்தை வாக்கு வங்கியாகப் பயன்படுத்திக் கொள்ளும் அந்தக் கட்சி தங்களைக் கரம் கொடுத்துத் தூக்கி விடவில்லை என்று அவர்களுக்கு ஆதங்கம் ஏற்பட்டது.

இந்தச் சூழலில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் அறிக்கையைச் செயல்படுத்த பிரதமர் வி.பி.சிங் முன்வந்தார். அந்த அறிக்கையை ஆதிக்க சமூகங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் ஆயுதமாக சமாஜ்வாதி கட்சி பயன்படுத்திக் கொண்டது. அதே சமயத்தில், பகுஜன் சமாஜ் கட்சியும் எழுச்சி பெற்றது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸைப் போல் பி.ஜே.பி.யும் பெரிய சரிவைச் சந்தித்தது. ஒருமுறை தனியாகவும் இருமுறை கூட்டணியாகவும், அரசு கண்ட பி.ஜே.பி., பிற்படுத்தப்பட்ட மக்களைத் திருப்தி செய்வதிலேயே கவனம் செலுத்தியது. ஆகவே, முப்பது சதவிகிதமாக இருக்கும் முற்படுத்தப்பட்ட சமூகம் அதனை விட்டு வெகு தூரம் விலகிச் சென்று விட்டது. அவர்கள் இன்றைக்கு மாயாவதியை நம்புகிறார்கள்.

அதே சமயத்தில், இதற்கு முன் பிருந்த முலாயம் சிங் ஆட்சி ஊழலின் உறைவிடம் என்று முத்திரை பெற்றுவிட்டது. அந்தக் கட்சியை அரியணைக்கு அழைத்துச் சென்ற பிற்படுத்தப்பட்ட மக்கள் விழி பிதுங்கி நின்றனர். மாநில அரசே முலாயம் சிங் குடும்பத்தின் மொத்தக் குத்தகையானது.

இந்தச் சூழலில், தலித் அரசியலைப் பரண் மீது வைத்து விட்டு, ஜாதி வாரியாக மாயாவதி மாநாடுகளை நடத்தினார். மாவட்டம் தோறும் பிராமணர் மாநாடு, வைசியர் மாநாடு என்று ஆரம்பித்து அனைத்து ஜாதியினருக்கும் மாநாடு நடத்தினார்.

முற்படுத்தப்பட்ட சமுதாயம் (30 சதவிகிதம்), தலித் சமுதாயம் (21 சதவிகிதம்), இஸ்லாமிய சமுதாயம் (17 சதவிகிதம்) என்று எழுதப்படாத அணி உருவானது. சட்டமன்றத் தேர்தலில் தொகுதிகளையும் இதே அளவில் பிரித்து அளித்தார்.

வெற்றிக்குப் பின்னர் அவர் வெளியிட்ட அமைச்சர்களின் பட்டியலைப் பாருங்கள். விகிதாச்சாரப்படி அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் இடம் பெற்றிருக்கிறார்கள். பி.ஜே.பி. ஆட்சியில் கூட இவ்வளவு பேர் இடம் பெற்றதில்லை. அதே சமயத்தில், தலித் சமுதாயத்தைத் திருப்திப்படுத்த 19 பேர் அமைச்சர்களாகி இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த 11 பேரும் இஸ்லாமியர்கள் ஐவரும் அமைச்சர்களாகி இருக்கிறார்கள்.

இப்படி தேர்தல் வெற்றிக்கு ஜாதிகளின் சங்கமத்தைப் பயன்படுத்திக் கொண்ட மாயாவதி, ஜாதிகளுக்குமேல் உயர்ந்திருக்கிறார் என்று சொல்லலாமா? வீழ்ந்து வந்த சமூக ஆதிக்க சக்திகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாமா? இப்படி மாயாவதியின் வெற்றி ரகசியங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் வெற்றிக்குப் பின்னர், மாயாவதி முதன்முதலாக நிருபர்களைச் சந்தித்தார். ‘பிராமணர்களில் ஏழைகள் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும்’ என்றார் பி.ஜே.பி.கூடத் துணிந்து இப்படிக் கேட்டதில்லை. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அவர் மயானத்திற்கு அனுப்பி விட்டார். உறங்கிய உண்மைகளைத் தட்டி எழுப்பிவிட்டதாகக் கூறுகிறார்.

‘டி.வி. சுந்தரம் அய்யங்கார் பிறப்பால் முற்படுத்தப்பட்டவர்தான். அவர்களது பிள்ளைகள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள்தான். ஆனால், அவர்கள் வீட்டில் காரோட்டும் சங்கர அய்யர் எப்படி? பிறப்பால் முற்பட்டவர்தான். பொருளாதார வசதியில்…? தலித்துகளின் நிலைதான் அவரது நிலையும்’ என்கிறார் மாயாவதி.

இத்தகைய வாதங்கள் அரசியலில் பெரும்புயலைக் கிளப்பியிருக்கின்றன. கசப்பான உண்மைகளைக் கூறுகிறார் என்பதா? பகுஜன் சமாஜ் கட்சி முற்போக்கு சமுதாயங்களின் முரசமாகிவிட்டது என்று சொல்வதா?

எதிர்கால அரசியல் ஜாதிக் கூட்டணிகளுக்குத்தான் என்று சொல்வதா? அடுத்து மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சிக்குப் பெரும் செல்வாக்கு இல்லைதான். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் அமைத்த ஜாதிக் கூட்டணியை அமைக்க மாயாவதி முயற்சிப்பார். ஏனெனில், அவருடைய இலட்சியம் மாநில முதல்வர் என்பதல்ல; நாட்டின் பிரதமராக வேண்டும் என்பதுதான்!

——————————————————————————————-

உத்தரபிரதேசம் முழுவதும் மாயாவதி சிலைகள்: கன்சிராம் விருப்பம் நிறைவேறுகிறது

லக்னோ, ஆக. 6-

உத்தரபிரதேசத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார். கன்சிராமின் கொள்கை கள், திட்டங்கள் அனைத் தையும் நிறைவேற்ற முதல்- மந்திரி மாயாவதி ஏராள மான திட்டங்களை அறிவித் துள்ளார்.

கன்சிராம் பற்றி ஆய்வு செய்து கட்டுரை எழுதும் மாணவ-மாணவிகளுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. “கன்சிராம் மாணவர் சுவா பிமான் விருது” என்ற பெயரில் ரூ.2.5 லட்சம் பரிசு வழங் கப்படும் என்று மாயாவதி கூறி உள்ளார்.

கன்சிராம் பெயரில் மிகப் பெரிய மருத்துவம் மற்றும் வீட்டு வசதி திட்டத்தையும் மாயாவதி அறிவித்துள்ளார். அதன்படி அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட மிகப் பெரிய மருத்துவமனை கட்டப்படும். அங்கு 40 சதவீத ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்.

வீட்டு வசதி திட்டங்கள் “கன்சிராம் நகர்” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அனைத்து சாதி யினருக்கும் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

4 ஆண்டுகளுக்கு முன்பு, மரணம் அடைவதற்கு முன்பு ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய கன்சிராம், உத்தரபிரதேசம் முழுவதும் என் சிலை அருகில் மாயாவதியின் சிலைகளும் நிறுவப்பட வேண்டும்” என்று கூறி இருந்தார். அவரது இந்த ஆசையை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள ஆயிரக் கணக்கான கன்சிராம் சிலை கள் அருகில் மாயாவதி சிலைகள் வைக்க மந்திரி சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கு கோடிக் கணக்கில் பணம் செலவிடப்பட உள்ளது. லக்னோவில் கன்சிராம் நினைவிடத்தில் மாயாவதி சிலை நிறுவப்படும்.

—————————————————————————————————————————–
“சோனியாவை விட நானே பெரிய தலைவர்’
புதுதில்லி, ஜன.16: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விட நான்தான் பெரிய தலைவர் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தரப்பிரதேச முதல்வருமான மாயாவதி கூறியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நான் பிரதமர் பதவியை அடைய ஆசைப்படுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

“எனது போராட்டமும் பகுஜன் சமாஜ் கட்சியின் பயணமும்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய சுயசரிதையில் இதுபற்றி கூறியுள்ளார். சுமார் 1000 பக்கங்கள் உள்ள இப்புத்தகத்தை தனது 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தில்லியில் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டார். ஹிந்தியில் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகத்தின் விலை ரூ.1100.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு புத்தகம் எழுதி தனது பிறந்த நாளன்று கட்சித் தொண்டர்களுக்காக வெளியிடுவேன் என்றார் அவர்.

சோனியா காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல், அவரை விட நான் உயர்ந்த தலைவர் என்று மாயாவதி தனது புத்தகத்தில் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

2006-ம் ஆண்டிலிருந்து சமீபத்தில் நடந்த உத்தரப்பிரதேசத் தேர்தல் வரை பகுஜன் சமாஜ் கட்சிக்கு சோதனைக் காலம் ஆகும். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் உத்தரப் பிரதேசத்தில் 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய ஆதரவு தருவதாக 2003 ல் பா.ஜ.க. உறுதி அளித்தது. அப்போது பொதுத்தேர்தலை முன் கூட்டியே நடத்த பா.ஜ.க. திட்டமிட்டது. உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகளில் 60 தொகுதிகளை பா.ஜ.க. கேட்டது. இதுதான் எனக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரிய சதியின் ஆரம்பம் என்று தனது புத்தகத்தில் மாயாவதி கூறியுள்ளார்.

அரசியல் மற்றும் சமூகப் பொறுப்புகளை ஏற்று நடத்தும் பல பெண்கள் நம் நாட்டில் உள்ளனர். ஆனால் நான் மட்டுமே ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்து, அந்த சமுதாயத்தின் சுயமரியாதை போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி வருகிறேன். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் பதவிக்கு வந்து, மக்களுக்கு சமூக மாற்றத்தையும், பொருளாதார சுதந்திரத்தையும் தர வேண்டும் என்பது என் நோக்கமாகும்.

நியூஸ்வீக் பத்திரிகை வெளியிட்ட, பெரிய பொறுப்பில் உள்ள உலகின் முக்கிய 8 பெண்கள் பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றுள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இத்தகைய கெüரவம் கிடைப்பது மிகவும் அரிது. எனக்கு எதிரான சதியை அச்சமின்றி எதிர்கொண்டது, நானும் என் இயக்கமும் வளர உதவியது.

நாம் வாக்களிக்க மற்றவர்கள் ஆட்சி செய்யும் முறை, இனிமேல் நடக்காது. நாம் நாடாளுமன்றத்தைத் தேர்தல் மூலம் கைப்பற்றி நாமே ஆட்சி செய்ய வேண்டும் என்று சாதாரண மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அம்பேத்கரின் சிலை, நாடாளுமன்றத்தை நோக்கி கையைக் காட்டுகிறது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் மேல்ஜாதியில் ஏழைகளாக இருப்போர், கிளர்ந்தெழுந்து, வாக்குப் பெட்டிகள் மூலமாக ஆட்சியைப் பிடித்து, தங்களது அடிமைத் தனத்தை உடைத்து, தங்கள் சொந்த முயற்சியால் தங்களை மேன்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அம்பேத்கர் சிலை நமக்கு உணர்த்தும் பாடம் ஆகும்.

காங்கிரசும், பாரதிய ஜனதா கட்சியும், தற்போதுள்ள சமூக நிலை அப்படியே நீடிக்க வேண்டும் என்று விரும்பும் கட்சிகள் ஆகும். அக்கட்சிகளின் கோட்டையாகத் திகழ்ந்த உத்தரப்பிரதேசத்தில் அரசியல் நிலையை மாற்ற நான் காரணமாக இருந்திருக்கிறேன் என்று தனது சுயசரிதையில் மாயாவதி கூறியுள்ளார்.

———————————————————————————————————————————————————
உத்தரபிரதேச மாநிலத்தை 3 ஆக பிரிக்க ஆதரவு
பிறந்தநாள் விழாவில் முதல்-மந்திரி மாயாவதி அறிவிப்பு

புதுடெல்லி, ஜன.17-

உத்தரபிரதேச முதல்-மந்திரி மாயாவதியின் 52-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அவர், உத்தரபிரதேச மாநிலத்தை 3 மாநிலங்களாக மத்திய அரசு பிரித்தால் ஆதரவு அளிக்க தயார் என்று அறிவித்தார்.

பிரமாண்ட கேக்

உத்தரபிரதேச முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின் 52-வது பிறந்தநாள் விழா, லக்னோவில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. முதல்-மந்திரியாக மீண்டும் பதவி ஏற்ற பிறகு நடைபெறும் முதல் பிறந்தநாள் விழா என்பதால் ஏராளமான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. லக்னோ நகரமே, அவரது கட்சி கொடியின் நிறமான நீல வண்ணம் பூசியது போல இருந்தது.

நகரம் முழுவதும் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. பிறந்தநாளை முன்னிட்டு தயாரிக்கப்பட்டு இருந்த பிரமாண்டமான `கேக்’கை மாயாவதி வெட்டினார். அவருடைய தந்தை, குடும்பத்தினர், கட்சியின் மூத்த தலைவர்கள், தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., உட்பட மாநில அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அனல் மின்திட்டம்

பிறந்த நாளுக்காக பல்வேறு திட்டங்களையும் மாயாவதி தொடங்கி வைத்தார். குறிப்பாக, சர்ச்சைக்குரிய ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான நொய்டா-பாலியா விரைவு நெடுஞ்சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ரூ.1,600 கோடி மதிப்பிலான நிவாரண திட்டங்களை அறிவித்தார்.

இது தவிர, வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு இலவச சுகாதார காப்பீடு, மாநில அரசு ஊழியர்களுக்கான பயிற்சி மையம் ஆகியவற்றையும் அவர் அறிவித்தார். மேலும் லலித்பூர் என்ற இடத்தில் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

இதற்கிடையே, மாயாவதி பிறந்தநாளுக்காக செய்யப்படும் பிரமாண்டமான செலவு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. இது குறித்து மாயாவதி கூறியதாவது:-

இது தலித் சமுதாயத்துக்கு எதிராக சில அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும் செய்துவரும் அவதூறு பிரசாரம் ஆகும். பிறந்தநாளுக்கு அரசு பணம் எதையும் செலவழிக்கவில்லை. பிறந்தநாள் `கேக்’ கூட பணம் கொடுத்து வாங்கியதுதான். பொதுத்துறை மற்றும் மின்சார துறைக்கு கட்சியில் இருந்து பணம் செலுத்தப்பட்டுள்ளது.

3 மாநிலங்கள்

உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் பிரிக்கப்பட்ட போதிலும், இன்னமும் உத்தரபிரதேசம்தான் பெரிய மாநிலமாக இருந்து வருகிறது. எனவே, இதை பூர்வாஞ்சல், பண்டல்கண்ட், ஹரித் பிரதேசம் என 3 மாநிலங்களாக பிரிப்பதற்கு பகுஜன்சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும்.

சிறிய மாநிலங்களை உருவாக்குவதற்கு மத்திய அரசு சம்மதித்தால், இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற தயாராக இருக்கிறோம். எனவே, இந்த விவகாரத்தில் முடிவு காண்பது, மத்திய அரசு கையில்தான் உள்ளது.

இவ்வாறு மாயாவதி கூறினார்.

மத்திய அரசு ஆதரவு

ஆனால், உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான திக் விஜய்சிங் கூறுகையில், `உத்தர பிரதேசத்தை சிறிய மாநிலங்களாக பிரிப்பது தொடர்பாக முதலில் மாநில அரசு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றட்டும்’ என்று தெரிவித்தார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு பிறகு மாயாவதி, டெல்லி சென்றார். அங்கு மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து கேட்டபோது, `தற்போது, எனக்கு அதிக அலுவல்கள் இருக்கின்றன. எனவே, இது குறித்து முடிவு எடுப்பதற்காக கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை கட்சித்தலைவர்கள் விரைவில் கூட்டுவார்கள்’ என்று பதிலளித்தார்.

இதற்கிடையே, மாயாவதி மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய நேரடி வரித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த வழக்கு குறித்து பதிலளித்த மாயாவதி, `கட்சியினர் கொடுத்த பணம்தான் என்னிடம் உள்ளது’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Posted in abuse, Action, Aiswarya, Allahabad, Alliance, Allocations, Amar Singh, Amarsingh, Ambani, Amitab, Amitabh, Anil, Assembly, Assets, Ayodhya, Ayodya, Bachan, Bahuguna, Bahujan Samaj Party, Biosketch, BJP, Brahmin, Brahmins, Bribes, BSP, Caste, Casteism, CM, Congress, Constituency, Corrupt, Corruption, Creamy, Creamy Layer, Dalit, Delhi, Disproportionate, Economic, Election, Elections, Faces, Free, Goel, Govt, Gujarat, Guru, Gurumoorthy, Gurumurthy, Health, Healthcare, Hindu, Hinduism, Hindutva, Homes, Hospitals, Hosuing, IAS, IPS, Islam, Jaiprakash, Jaiprakash Narain, Jats, JP, Kanshi, Kanshi ram, Kanshiraam, Kanshiram, Kansi ram, Kansiraam, Kansiram, kickbacks, Kurmis, Land, Lucknow, Mandal, Manifesto, Manu, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MBC, medical, Medicine, Mishra, Misra, Moslem, Mulayam, Muslim, Naseemuddin, Naseemudhin, Nasimuddin, Nasimudhin, New Delhi, OBC, Op-Ed, people, Plan, Planning, Poll, Polls, Power, PRO, promises, Property, Rajnath, Rajnath Singh, Ramjenmabhoomi, Ramjenmabhumi, Ramjenmaboomi, Ramjenmabumi, Reliance, Religion, Reservation, Reservations, Reserved, Rowdy, Rule, Sathish Chandra Mirs, SathishChandra Miras, SC Mishra, Siddik, Siddiq, Sidhik, Sidhiq, Slum, SP, Statue, Students, Study, Sudhir, Sudir, Taj, Taj mahal, Thakur, Thakurs, UP, Uttar Pradesh, Vaisya, Vajpayee, Vajpayi, Varanasi, Yadavs | 2 Comments »

How to stop Corruption using Law and Order – Formation of higher level Committees

Posted by Snapjudge மேல் மே 3, 2007

ஊழலை ஒழிக்க உயர்நிலை அமைப்புகள்

கே.வீ. ராமராஜ்

ஐக்கிய நாடுகள் சபையின் ஊழல் எதிர்ப்பு ஒப்பந்தமானது கடந்த 2005 டிசம்பர் 5 அன்று நடைமுறைக்கு வந்தது. இதற்கு இந்தியாவும் ஒப்புதல் அளித்தது. எனவே ஊழல் ஒழிப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டியது இந்தியாவின் முக்கியக் கடமையாகும்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த குழு இந்தியாவில் “லோக்பால்’, “லோக் ஆயுக்தா’ அமைப்புகளை உருவாக்கப் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

  • திட்டமிட்ட, உள்நோக்கத்துடன் ஒருவர் தனது பதவி அல்லது தகுதி ஆதாரங்களை நேரடியாகவோ அல்லது
  • மறைமுகமாகவோ சுய லாபத்திற்குத் தவறாகப் பயன்படுத்துவதே ஊழலாகும் என வரையறுக்கப்படுகிறது.
  1. பதவி அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்துதல்,
  2. விதிகள் – சட்டங்கள் – நியதிகள் முதலானவற்றை மீறுதல்,
  3. நடவடிக்கை எடுக்க வேண்டிய பணிகளில் செயல்படாமல் இருத்தல்,
  4. சுயநல நோக்கத்துடன் ஆதாரங்களைத் தேடுதல்,
  5. ஒரு செயலைச் செய்வதற்கு அல்லது செய்யாமல் இருப்பதற்கு பணமாகவோ அல்லது பொருளாகவோ பெறுதல்,
  6. பொது நலனுக்கு ஊறு விளைவித்தல் போன்ற வகைகளில் ஊழல் நடைபெறுகிறது.

இத்தருணத்தில் “லோக்பால்’ அமைப்பைக் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதும் அலசி ஆராய்வதும் அவசியமாகும். “லோக்பால்’ அமைப்பானது முதல்முதலாக 1809 ஆம் ஆண்டு ஸ்வீடனில் ஏற்படுத்தப்பட்டது. இம்முறையானது இன்று எல்லா நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பல நாடுகளில் தீவிரமாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமை வகித்த நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் 1966 ஆம் ஆண்டு தமது அறிக்கையில் தேசிய அளவில் “லோக்பால்’, மாநில அளவில் “லோக்ஆயுக்தா’ என்ற இரு வகையான லஞ்சத்தை களையும் அமைப்புகளை ஏற்படுத்துவதற்கு நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டுமெனப் பரிந்துரை செய்தது.

இதற்கான மசோதா 1968, 1971, 1977, 1985, 1989, 1996, 1998 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் இன்னும் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும் மாநில அளவில்

  • கர்நாடகம்,
  • மத்தியப் பிரதேசம்,
  • ராஜஸ்தான்,
  • பஞ்சாப்,
  • அசாம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் “லோக்ஆயுக்தாக்களை’ ஏற்படுத்தியுள்ளன.

மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையர் அலுவலகமும் பல மாநிலங்களில் “லோக்ஆயுக்தா’ அமைப்பு முறையும் சில மாநிலங்களில் மாநில லஞ்ச ஒழிப்புத் துறைகளும் இயங்கி வருகின்றபோதிலும் இவற்றின் அமைப்பு முறைகளிலும் நடைமுறைகளிலும் அதிகாரங்களிலும் ஒருமித்த தன்மை இல்லை.

இதனால் தேசிய அளவிலும் மாநிலங்களிடையேயும் ஒத்துழைப்பும் தகவல் தொடர்பும் மிக்கதாக உள்ள வகையில் “லோக்பால்’, “லோக்ஆயுக்தா’ என்ற இரண்டடுக்கு முறையை நாடாளுமன்றச் சட்டம் மூலம் உருவாக்க வேண்டிய காலம் இதுவாகும். இவ்வமைப்பு முறையை உருவாக்கத் தேவைப்பட்டால் அரசியல்சாசன சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளலாமென அரசியல்சாசன மறு ஆய்வு குழு தெரிவித்துள்ளது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

“லோக்பால்’ மூலம் பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசின் உயர் பதவி வகிப்பவர்கள் உள்ளிட்டோர் மீதான லஞ்சக் குற்றச்சாட்டுகளையும் “லோக்ஆயுக்தா’ மூலம் முதல்வர், மாநில அமைச்சர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் மீதான குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க வழி செய்வதன் மூலமாக நாடு முழுவதும் லஞ்சத்தை ஒழிப்பதற்கான ஒருமித்த அமைப்பு முறை உருவாகும். இத்தகைய அமைப்பு முறையை உருவாக்க 40 ஆண்டுகளுக்கு முன்பே நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் பரிந்துரைத்தபோதிலும் மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் முழுமையான ஆதரவு இல்லாததால்தான் இம் மசோதா நிறைவேறவில்லையென மாநில “லோக்ஆயுக்தா’ அமைப்புகளின் ஏழாவது மாநாட்டில் மத்தியப் பிரதேச “லோக்ஆயுக்தா’ அமைப்பு தெரிவித்துள்ளது.

“லோக்பால்’ பதவியில் நியமனம் செய்யப்படுபவர் உச்ச நீதிமன்ற நீதிபதி நிலைக்கும் “லோக்ஆயுக்தா’ பதவியில் நியமனம் செய்யப்படுபவர் உயர் நீதிமன்ற நீதிபதி நிலைக்கும் குறையாத தகுதி படைத்தவர்களாக இருக்க வேண்டும்.

தேவைக்கேற்ப மத்தியிலும் மாநிலத்திலும் “உப லோக்பால்’, “உபலோக் ஆயுக்தா’ அமைப்புகளை நியமிக்கலாம். இவர்களை குடியரசுத் தலைவர், பிரதமர், தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை உள்ளடக்கிய குழு நியமனம் செய்ய வேண்டும். இப்பதவிகளில் காலியிடம் ஏற்படும்போது நீண்ட காலம் யாரும் பணியில் அமர்த்தப்படாமல் இருப்பதைத் தடுக்கும் வகையில் காலக்கெடுவும் மாற்றுத் திட்டமும் சட்டத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும். இவர்கள் மீது குற்றம் சுமத்தப்படும் சூழ்நிலை ஏற்படுமானால், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால் கையாளும் விசாரணை முறையைப் பின்பற்றலாம்.

“லோக்பால்’, “லோக்ஆயுக்தா’ அமைப்புகள் தன்னாட்சி பெற்றவைகளாக விளங்குவதோடு இவற்றின் நியமனங்களில் அரசியல் தலையீடுகளும் செயல்பாடுகளில் நீதிமன்றக் குறுக்கீடுகளும் இல்லாமல் இருக்க வேண்டும். இவ்வமைப்புகளுக்குத் தக்க அதிகாரங்களும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும். இப் பதவியிலிருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு எத்தகைய அரசுப் பணியும் வழங்கப்படக் கூடாது.

மாநிலங்களில் தற்போது உள்ள “லோக்ஆயுக்தா’ அமைப்புகள் தம்மிடம் சமர்ப்பிக்கப்படும் புகார்களின் மீது விசாரணை நடத்தி தமது பரிந்துரைகளை மாநில அரசுக்குத் தெரிவிக்கின்றனர். ஆனால் இப்பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநில அரசிடமே எஞ்சியுள்ளது. இதைப்போல உத்தேசிக்கப்பட்டுள்ள “லோக்பால்’ அமைப்புகள் செயல்படக் கூடாது. மாறாக “லோக்பால்’, “லோக்ஆயுக்தா’ ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கு நீதிமன்றத் தீர்ப்புகளைப் போன்ற சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும். இப் பரிந்துரைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அல்லது உயர் நீதிமன்றத்தில் மட்டுமே மேல் முறையீடு செய்யும் வகையில் புதிய சட்டம் இருக்க வேண்டும். தம்மிடம் தாக்கல் செய்யப்படும் முறையீடுகள் மீது ஓராண்டுக்குள் தீர்வு காண சட்டத்தில் கால நிர்ணயம் செய்யப்பட்டாலும் அதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது மத்திய அரசின் கடமையாகும்.

வேலியே பயிரை மேய்வதுபோல அரசு மற்றும் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் சிலர் கடமையைச் செய்யாமல் இருப்பதாலும் பிறர் கடமைகளில் குறுக்கிடுவதாலும் அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்துவதாலும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. நேர்மையான அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும் தவறு செய்பவர்களை இனம் காண உதவ வேண்டும்.

லஞ்சத்தைக் களைய வேண்டுமாயின் லஞ்சம் கொடுப்பதை நிறுத்தினாலே போதுமானது. நாடு தன்னிறைவு அடையவும் வல்லரசாக மாறவும் நாம் கனவு காணும்போது லஞ்சத்தை ஒழிக்க “லோக்பால்’ போன்ற அமைப்புகளை நம் நாட்டில் இன்னும் உருவாக்காமல் காலதாமதம் செய்வது சரியல்ல. மேலும் லஞ்ச லாவண்யமற்ற அரசைப் பெறும் உரிமை நாட்டின் குடிமக்களுக்கு உண்டு என்றால் மிகையல்ல.

சரியான பணிகளை முடிப்பதில்கூட அரசு அலுவலகங்களில் ஏற்படும் கால தாமதம் ஊழலுக்கு வழி வகுக்கிறது. ஆட்சி நிர்வாக அமைப்பில் எந்தவொரு நிலையிலும் ஊழல் என்ற பேச்சுக்கே இடம் இருக்கக்கூடாது என்பதே நல்லாட்சித் தத்துவம்.

முதலாவது நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரையை போலவே இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த குழுவின் பரிந்துரையை மத்திய அரசு கிடப்பில் போடாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பொதுமக்களும் தன்னார்வ அமைப்புகளும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.

(கட்டுரையாளர்: ஒசூர் நகர வழக்கறிஞர்.)

—————————————————————————————-

நிர்வாகத்தில் பொறுப்புணர்வு!

கே. ராமமூர்த்தி
“”நிர்வாகத்தில் பொறுப்புணர்வு” என்பது இப்போது பரவலாகப் பேசப்படும் விஷயம். அரசு நிர்வாகத்தின் மீது இப்போது பொதுவாகவே எல்லோருக்கும் அதிருப்தி நிலவுகிறது; அத்துடன் ஜனநாயக உரிமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருப்பதால் இந்த விஷயம் முக்கியத்துவம் பெறுகிறது.

“மேலை நாட்டவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் பொறுப்புணர்வு; அலுவலகத்திலோ, நிர்வாகத்திலோ உங்களுடைய நிலை எதுவாக இருந்தாலும் உங்களுடைய வேலைக்கு நீங்கள்தான் பொறுப்பு. இந்தியாவிலோ, உயர் பதவியில் நீங்கள் இருந்தால் உங்களுக்கு பொறுப்பு குறைவு!

மத்திய அரசில் முக்கிய பதவியில் இருந்த மூத்த அமைச்சர் ஒருவர் வெளிப்படையாகக் கூறினார், “”வருமான வரி செலுத்த வேண்டும் என்பதையே நான் தொடர்ந்து 10 ஆண்டுகளாக மறந்துவிட்டேன்” என்று. அதற்குப் பிறகும் தண்டனை, நடவடிக்கை ஏதும் இல்லாமல் அவர்பாட்டுக்கு செயல்பட்டு வந்தார்.

நூற்றுக்கும் மேற்பட்ட அரசுத்துறை நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தில் தொடர்ந்து செயல்பட்டு வந்தாலும், ஒரு தலைமை நிர்வாகிமீது கூட இங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதே இல்லை!

அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்பதாலேயே, அரசியல் சட்டத்தில் அதற்கு உரிய ஏற்பாடுகளை நமது முன்னோர் செய்துள்ளனர்.

நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பட்ட அரசாங்கம் என்பதே அதிகபட்ச திறமை, அதிகபட்ச பொறுப்புணர்வு ஆகியவற்றுடன் நிர்வாகத்தை நடத்தவேண்டும் என்பதற்காகத்தான். அரசின் வரவு, செலவுகளை ஆராய்ந்து நாட்டு மக்களுக்கும் தெரிவித்து, அரசையும் தட்டிக்கேட்கத்தான், “”தலைமைக் கணக்கு – தணிக்கையாளர்” என்ற உயர் கண்காணிப்புப் பதவி அரசியல் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றம் என்பது பொதுக்கணக்குக்குழு என்ற அமைப்பைக் கொண்டு இதே பணியைச் செய்கிறது. அதற்கு தலைமைக் கணக்கு தணிக்கையாளர் நண்பனாய், நல்லாசிரியனாய், வழிகாட்டியாய் செயல்படுகிறது.

“நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் செலவுகள் முறையாகச் செய்யப்படுகின்றனவா, திட்டங்கள் ஒழுங்காக நிறைவேற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க பொதுக் கணக்குக்குழுவுடன், மதிப்பீட்டுக் குழு, அரசின் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும் குழு போன்றவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அரசுத்துறை நிறுவனங்களின் பொறுப்புணர்வை உறுதி செய்ய, கம்பெனிகள் சட்டத்தில் 1956-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. உள்ளாட்சி மன்றங்களைப் பொருத்தவரை சிறப்பு தணிக்கை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நிர்வாகமே தனது ஊழியர்களின் பொறுப்புணர்வைச் சோதிக்கவும், மேம்படுத்தவும் அக அமைப்புகளையும் வழி முறைகளையும் கொண்டுள்ளது. புற ஏற்பாடாக, பொதுமக்களுடன் தினமும் குறிப்பிட்ட நேரங்களில் சந்திப்பு, புகார்-ஆலோசனைகளைப் பெறுவதற்கான நேரடி சந்திப்புக் கூட்டங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துகிறது.

அரசு நிர்வாகத்தின் உள்ளேயும் வெளியேயும் இத்தனை ஏற்பாடுகள் இருந்தபோதும், அரசுத்துறையிலும் அரசு நிறுவனங்களிலும் யாருமே பொறுப்பானவர்கள் இல்லை என்ற எண்ணம்தான் மக்களிடம் வலுத்திருக்கிறது.

ஒரு வேலையை எடுத்தால் குறிப்பிட்ட நேரத்துக்குள் அதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற உணர்வு ராணுவத்தில்தான் அதிகமாக இருக்கிறது; நீதித்துறையில்தான் அது மிகமிகக் குறைவாக இருக்கிறது. இதில் அதிகாரக் கட்டமைப்பு மட்டும் இந்த வேறுபாட்டுக்குக் காரணம் அல்ல, அமைப்பு ரீதியாகவே செய்துள்ள ஏற்பாடும், நிர்வாக நடைமுறைகளும்தான் இதற்கு முக்கியக் காரணம்.

நிர்வாகத்தைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் உள்ள ஏற்பாடுகள் அனைத்தும் “”பெயரளவுக்குத்தான்” செயல்படுகின்றன என்றே மக்கள் கருதுகின்றனர். தவறுகளையும் தாமதத்தையும் தண்டிக்கவோ, கண்டிக்கவோ, திருத்தவோ நிர்வாகத்தில் எந்தவித ஏற்பாடும் இல்லை என்பதே அவர்களுடைய மனக்குமுறல்.

நிர்வாகத்தைக் கண்காணிக்கும் அமைப்புகளின் செயல்பாட்டில் பளிச்செனத் தெரியும் அம்சங்கள் இரண்டு.

பொறுப்பாக்குவதும் தணிக்கை செய்வதும், சம்பவம் நடந்து முடிந்த பிறகு தரும் ஆய்வறிக்கையாகவே இருக்கின்றன. எனவே, தவறு நடந்துவிடுகிறது அல்லது உரிய காலத்தில் நடைபெறாமல் மிகவும் தாமதமாக நடக்கிறது. இதற்குக் காரணமானவர்களை அல்லது தவறு செய்தவர்களை அடையாளம் கண்டு தண்டிப்பதற்குக்கூட நீண்ட காலம் பிடிக்கிறது.

ஒரு செயலுக்கு யார் பொறுப்பு என்பதை அறிய, மறைமுகமாக கேள்விகளைக் கேட்பதும், அதையும் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களைக் கேட்காமல் -அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்களைக் கேட்பதாகவும் இருக்கிறது.

இந்தியாவில் பொது நிர்வாகத்தின் மீது நாடாளுமன்றத்துக்கு உள்ள கட்டுப்பாடு குறித்து 1952-1966 வரை மேற்கொண்ட ஆய்விலிருந்து பெறப்பட்ட தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

“”அரசியல்சட்டப்படி, அரசு நிர்வாகத்தின்மீது நாடாளுமன்றத்துக்கு முழு கட்டுப்பாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. நடைமுறையில் அப்படி ஏதும் இல்லை. அப்படியே அதற்கு அதிகாரம் இருந்தாலும் அதை அமல் செய்யும் உள்ள உறுதி அதனிடம் இல்லை.

இதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. நிர்வாகத்தை முழுமையாக ஆராய்ந்து, தவறுகளைக் கண்டுபிடித்து, உரிய திருத்த நடவடிக்கைகளையோ, தண்டனை நடவடிக்கைகளையோ எடுக்க நாடாளுமன்றத்துக்கு அவகாசம் இல்லை. நீண்ட நேரம் அமர்ந்து பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை ஆராயவோ, விவாதிக்கவோ அவை உறுப்பினர்களுக்கு ஆர்வம் இல்லை. அவையின் கூட்ட நேரத்தை அதிகப்படுத்த அரசுக்கும் விருப்பம் இல்லை. அவை நடவடிக்கைகளில் உறுப்பினர்களுக்கு ஆர்வம் குறைவு; இதனாலேயே பல நேரங்களில் அவையில் குறைந்தபட்ச (மொத்த உறுப்பினர்களில் 10 சதவீதம்) “”கோரம்” கூட இல்லை என்று மணி அடிக்கப்படுகிறது. பெரும்பாலான உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பயிற்சியோ, அரசியல் விழிப்புணர்வோ, நிர்வாகத்தை நாடாளுமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஆர்வமோ கிடையாது.

நிர்வாகத்தின் நெளிவுசுளிவுகளைத் தெரிந்துகொண்டு அதன் செயல்களை ஆராய்ந்து குறைகளைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பலருக்குக் கிடையாது. நிர்வாகத்தின் பிரச்னைகள், அமைப்புமுறை, நிர்வாக நடைமுறை போன்றவை பெரும்பாலான உறுப்பினர்களுக்குத் தெரியாது. பெரும்பாலானவர்களுக்கு சுயேச்சையான சிந்தனை உணர்வும் கிடையாது. இந்த அறிக்கை வந்து 40 ஆண்டுகள் ஆனபிறகும் கூட, நிலைமை பெருமளவுக்கு மாறிவிடவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல்படி செய்யப்படும் தொகுதி வளர்ச்சி நிதி என்ற செலவினத்தை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். 1993-ல் தலா ரூ.5 லட்சம் என்று மொத்தம் ரூ.37.5 கோடி ஒதுக்கப்பட்டது. 1994-ல் தலா ரூ.1 கோடி என்று உயர்த்தப்பட்டு ரூ.790 கோடியானது. பிறகு அதுவே ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டு ரூ.1,500 கோடியானது. இதே திட்டம் சட்டமன்றங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு ரூ.1,500 கோடியானது. இந்த திட்டங்களிலும் இறுதிப்பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டதில் 25% தான் போய்ச் சேருகிறது என்று தெரியவருகிறது.

இந்த நிலைமாற பின்வரும் பரிந்துரைகளைப் பரிசீலிக்கலாம்:

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். இதற்கு முரணாக உள்ள, அரசு ரகசியங்கள் காப்புச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். பொதுமக்கள் தகவல் அறியும் சட்டம் வலுப்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்பட வேண்டும். ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்ட உடனேயே அது உருவான விதம், அதற்காக முதலில் மதிப்பிடப்பட்ட தொகை, செலவழிக்கப்பட்ட தொகை, அடைந்த பயன், திட்டம் தோல்வியா, வெற்றியா, சாதகம் அதிகமா பாதகம் அதிகமா என்பதைத் தொகுத்து மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.

நிர்வாக நடுவர் மன்றம் போன்றவை வலுப்படுத்தப்பட்டு, விரைவாக நீதி வழங்கப்பட வேண்டும். மனித வள மேம்பாட்டை அளக்கும் வழிமுறையைப் பின்பற்றி, ஒவ்வொரு சமூக நலத் திட்டத்தின் வளர்ச்சியையும் அளக்க வேண்டும். அரசு என்ற அமைப்புக்குப் பதிலாக, சமூகம் என்பதை ஊக்குவித்து அவர்களின் நன்மைக்கான திட்டங்களை அவர்களைக் கொண்டே அமல்படுத்தும் நவீன முறையைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.

காலாவதியாகிவிட்ட திட்டங்களையும் நடைமுறைகளையும் முடிவுக்குக் கொண்டுவர தனிச்சட்டம் இயற்ற வேண்டும். ஆம்புட்ஸ்மேன், லோக்பால் என்பது வெறும் புகார்களைப்பெறும் அமைப்பாக நின்றுவிடாமல், நிர்வாகத்தினரைப் பதில்சொல்ல வைக்கும் அமைப்பாகச் செயல்பட வலுப்படுத்தப்பட வேண்டும். பொறுப்பாக்குதல் என்ற பெயரில் அரசு நிர்வாகப்பணியாளர்களின் செயல்பாட்டுச் சுதந்திரம், திறமை, நேர்மை, நியாயமான அணுகுமுறை ஆகியவற்றை நசுக்கும்படியான கட்டுப்பாடுகளைத் திணித்துவிடக்கூடாது.

(கட்டுரையாளர்: உறுப்பினர் – மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம்.)

———————————————————————————————-

ஊழல், திறமையின்மை, நிர்வாகச் சீர்கேட்டை சகித்துக் கொள்ளும் மனப்பான்மை: ப.சிதம்பரம் வேதனை

திண்டுக்கல், ஜூலை 10: ஊழல், திறமையின்மை, நிர்வாகச் சீர்கேடுகள் ஆகியவற்றை சகித்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டதுதான் நம்முடைய மிகப் பெரிய தோல்வி என மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வேதனை தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் 25-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் திங்கள்கிழமை அவர் ஆற்றிய உரை:

கடந்த 3 ஆண்டுகளாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.5 சதவிகிதத்துக்கும் கூடுதலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பொருளாதாரம் குறித்து உலக நாடுகள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளன. ஆனால், நமது மக்களிடம் எப்படி இந்த நம்பிக்கையை ஏற்படுத்துவது என்பதுதான் அனைவரிடமும் உள்ள முக்கியக் கேள்வி.

உலகமயமாக்குதலின் பயன்கள் கிராமப்புற இந்தியாவையும் சென்று அடைந்திருப்பது தெளிவு. பல்வேறு நிறுவனங்கள் நடத்தியுள்ள கருத்துக் கணிப்புகளில் இந்தியாவின் ஏழ்மை விகிதம் கிராமப்புறங்களில் 37.3 சதவிகிதத்தில் இருந்து 28.3 சதவிகிதமாகக் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதேபோன்று வேலைவாய்ப்பும், குறிப்பாக மகளிர் வேலைவாய்ப்பு கிராமப்புறங்களில் அதிகரித்து இருப்பதும் புள்ளிவிவரங்கள் மூலம் தெளிவாகி உள்ளது.

கிராமப்புறங்களில் வளர்ச்சி இருந்தாலும், அது உணரும்படியாக இல்லாததற்குக் காரணம் மாற்றம் மிக மெதுவாக நடைபெற்று வருவதுதான். வளர்ச்சியை வேகப்படுத்துவதுதான் நம்முன் இருக்கும் சவாலாகும். இதற்கு முக்கியமாக கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள், நல்ல கல்வி, கூடுதலான வருவாய் ஆகியவை வழங்கப்பட வேண்டும்.

இந்திய கிராமங்களில் குறைவான தொழில் முதலீடு, குறைந்த தொழில்நுட்ப வசதி, சந்தையை தொடர்பு கொள்வதில் உள்ள சிரமங்கள் ஆகியவைதான் தடைக்கற்களாக உள்ளன.

ஒதுக்கப்பட்ட கோடிகள் எங்கே?

  • கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 7 லட்சம் கிராமங்களுக்காக ரூ. 1.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ. 88 ஆயிரம் கோடியும்,
  • குடிநீர் வசதிக்காக ரூ. 21 ஆயிரம் கோடியும்,
  • தரிசு நில மேம்பாட்டுக்காக ரூ. 5 ஆயிரம் கோடியும்,
  • பின்தங்கிய பகுதிகளை முன்னேற்றுவதற்காக ரூ. 6,700 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சராசரியாக இதன் மூலம் 7 லட்சம் கிராமங்களுக்கும் தலா ரூ. 17 லட்சம் கிடைத்திருக்க வேண்டும். இதன் மூலம் பள்ளி, குடிநீர் வசதி, கிராமச் சாலைகள் எளிதாக ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், உண்மையில் அவ்வாறு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் என்ன? பதில் கிடைக்க வேண்டும்.

கிராமப்புற இந்தியாவுக்கு முக்கியத்துவம் வழங்கி பாரத் நிர்மாண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ. 1.74 லட்சம் கோடி செலவில் 2009-ம் ஆண்டுக்குள் இத் திட்டத்தின் இலக்குகளை நிறைவேற்றப் பாடுபடுவோம்.

இத் திட்டத்தின் மூலம் கூடுதலாக நீர்ப்பாசன வசதியுடன் ஒரு கோடி ஹெக்டேர் பயிர் நிலத்தை உருவாக்கவும், 1,000 பேருக்கு மேல் வசிக்கும் கிராமங்களுக்கு இணைப்புச் சாலை வழங்கவும், 60 லட்சம் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரவும் இன்னும் குடிநீர் வசதி பெறாத 74 ஆயிரம் குடியிருப்புகளுக்குக் குடிநீர் வசதி செய்து தரவும், மின் இணைப்பு இல்லாத 2.3 கோடி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கவும், தொலைபேசி வசதி இல்லாத 66,822 கிராமங்களுக்குத் தொலைபேசி வசதி செய்து தரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நமது தவறுகள்

சாலைகளைப் போடுகிறோம். ஆனால், அவற்றைப் பராமரிக்க நிதி ஒதுக்குவதில்லை. மின்சாரத்தை வழங்குகிறோம். ஆனால், மின் திருட்டைத் தடுக்கவோ, மின்சாரக் கட்டணத்தை வசூலிக்கவோ தவறுகிறோம். வீடுகளைக் கட்டித் தருகிறோம். ஆனால், அவை குடியிருப்பதற்கு தகுதியில்லாத அளவுக்குக் கட்டப்படுகின்றன.

நீர்ப் பாசனத் திட்டங்களை உருவாக்குகிறோம். ஆனால், அதில் மக்கள் பங்களிப்பு இல்லை.

எல்லாவற்றையும்விட நாம் ஒதுக்கும் நிதியை தவறாக செலவிடுபவர்கள் மற்றும் முறைகேடு செய்பவர்களைக் தண்டிப்பதில்லை. அதோடு ஊழல், நிர்வாகச் சீர்கேடு மற்றும் திறமையின்மை ஆகியவற்றை சகித்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டோம்.

புதிய நிர்வாக முû

மாநில அரசு என்பது மிகப் பெரிய நிர்வாகம் ஆகவும், ஊராட்சி மிகச் சிறிய நிர்வாகமாகவும் இருப்பதால் இடைப்பட்ட ஒரு நிர்வாகம் தேவை. எனவே ஒவ்வொரு 10 லட்சம் மக்கள்தொகைக்கும் ஒரு மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். இதற்கான 10 உறுப்பினர்களை மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். கல்வி, சுகாதாரம், சாலைகள், குடிநீர் போன்ற அனைத்துத் துறைகளையும் மாவட்ட நிர்வாகம் கவனிக்கும். தேவைப்படும் நிதியை அரசு ஒதுக்கும். இதை நடைமுறைப்படுத்த அரசியல் சட்டத் திருத்தம் தேவையில்லை.

மத்திய, மாநில அரசுகள் தங்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள முன்வந்தால் போதும் என்றார் அமைச்சர் ப. சிதம்பரம்.

—————————————————————————————————————————

ஊழல் விசாரணை பணிகளுக்கும் “அவுட் சோர்சிங்’ மகாராஷ்டிராவில் புரட்சி

மும்பை: நிறுவனங்கள், வங்கிகள் உட்பட பல நிறுவனங்களும், தங்கள் பணிகளில் சிலவற்றை இன்னொரு நிறுவனத்திடம், ஒப்படைத்து, “அவுட் சோர்சிங்’ முறையில் செய்து கொள்வதை பார்த்திருக்கிறோம்; ஆனால், அரசு ஊழியர் நடத்தை, ஊழல் குறித்து விசாரிக்கும் பொறுப்பை, “அவுட் சோர்சிங்’ முறையில் செய்து கொள்வது பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஆம், இப்படி ஒரு புரட்சியை செய்துள்ளது மகாராஷ்டிர அரசு.

இதனால், ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை கொந்தளித்துள்ளனர். இந்த அமைப்பு, முழு சுதந்திரமாக இயங்கும். ஓய்வு பெற்ற துணை கலெக்டர் தலைமையில் இயங்கும். அவருக்கு உதவ, ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் நியமிக்கப்படுவர். அவர்களுக்கு சம்பளம் தரப்படும். இந்த அமைப்பிடம், எல்லா துறையைச் சேர்ந்த ஊழியர்களின் விவகாரங்களும் ஒப்படைக்கப்படும். அதை விசாரித்து, அரசின் ஊழியர் நலத்துறைக்கு அறிக்கையை அனுப்பிவிடும். அதன் பேரில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த அமைப்பு உருவாக்கப்படுவது தொடர்பான அறிவிப்பை, ஊழியர் நலத்துறை வெளியிட்டவுடன், ஊழியர்கள் பலரும் கொதித்தனர். “அரசுக்கு தொடர்பே இல்லாத மாஜி அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தினால், நியாயம் கிடைக்காது. மேலும், ஊழல் தான் அதிகரிக்கும்’ என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், ஊழியர்கள் சொல்வதை ஏற்க அரசு தயாரில்லை. பல துறைகளில் உள்ள விசாரணை பிரிவுகளை அரசு கலைத்துவிட்டது. “ஊழியர்கள் பற்றிய எந்த ஒரு விசாரணையும் புதிய அமைப்பிடம் தான் ஒப்படைக்க வேண்டும்’ என்று துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

——————————————————————————————————-
தூய்மையாகுமா பொதுவாழ்க்கை?

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

“”முறையற்ற செயல்களை மேற்கொண்டு குடிமக்களை வருத்தும் அரசன் கொலைகாரர்களைவிட கொடியவன்.” – என்ற குறட்பாவின்படி ஆட்சியாளர்களுடைய நேர்மையின் கீழ்தான் நாடு நலம் பெறும்.

ஆளவந்தவர்களும் நிர்வாகத்தில் இருப்போரும் மக்களுக்குப் புகார் அற்ற தூய்மையான ஆட்சியை வழங்க வேண்டும்.

இன்றைக்கு பொது வாழ்க்கையில் ஆரோக்கியமற்ற சூழல் நிலவுகிறது. ஆட்சிக்கு வந்தவர்கள் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்றும் தங்களால், தங்களுக்காக ஆளப்படுகின்ற ஆட்சி என்ற நோக்கிலும் அரசை நடத்துகின்றனர்.

இந்த அவலப்போக்கை மாற்ற லோக்பால் மசோதா 1968, 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்ட வடிவம் ஆகாமல் நின்றுபோனது. ஆனால் ஒப்புக்கு நாடாளுமன்றத்தில் பலமுறை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊழலின் ஊற்றுக்கண்ணாக மேல்தட்டில் இருக்கின்றவர்களையும் தட்டிக் கேட்கின்ற மசோதா இன்றைய சூழலில் அவசியம் தேவை. பொது வாழ்வில் தூய்மையை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான அரசியல் வளரவும் இம்மசோதா வழிசெய்யும்.

பங்குபேர ஊழல், சர்க்கரைப்பேர ஊழல், டெலிகாம் ஒப்பந்த ஊழல், ஹவாலா ஊழல் என்று தொடங்கி இந்தியாவில் சர்வநிலையிலும் புரையோடிவிட்டது.

பிகாரில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீது கூறப்பட்ட ரூ. 950 கோடி தீவன ஊழல் இந்தியாவையே ஆட்டி வைத்தது.

முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் மருமகளுக்கு சட்டத்திற்குப் புறம்பாக பெட்ரோல் விற்பனை நிலையங்களை சதீஷ் சர்மா ஒதுக்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டு நீதிமன்றம் மூலம் உண்மை எனத் தெரியவந்தது. இன்று சரத்பவார் மீது கோதுமை இறக்குமதி ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.

இந்திய வரலாற்றில் ஊழல்கள் தொடர் கதையாக இருக்கின்றன. பஞ்சாப் மாநில அன்றைய முதல்வர் பிரதாப் சிங் கைரான் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நேரு பிரதமராக இருந்தபோது அதுபற்றி விசாரிக்க எஸ்.ஆர். தாஸ் கமிஷன் அமைக்கப்பட்டது.

1958-ஆம் ஆண்டு பெரோஸ் காந்தி மக்களவையில் முந்திரா ஊழல் பிரச்னையை கிளப்பினார். ரூ. 1.25 கோடி மதிப்புள்ள பங்குகளை ஆயுள் காப்பீட்டுக் கழகம் முறைகேடாக விற்பனை செய்தது சம்பந்தமாக ஊழல் குற்றச்சாட்டை பெரோஸ் காந்தி பேசினார். இது சம்பந்தமாக ஆவணங்களை மக்களவையில் வைக்கும்படி வேண்டி அன்றைய மக்களவைத் தலைவர் அனந்தசயன அய்யங்காரிடம் கோரினார். ரகசியக் கோப்புகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கக் கூடாது என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், அய்யங்கார் முந்திரா ஊழல் சம்பந்தமான ரகசியக் கோப்புகள் அனைத்தையும் அவையில் வைக்கும்படி தீர்ப்பு வழங்கினார்.

இதன் பின்பு, பண்டித நேரு ஆணையின் பேரில் அன்றைய பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த எம்.சி. சுக்லா இதுகுறித்து விசாரணை நடத்தினார். இறுதியில் பங்கு பேர ஊழலில் முந்திரா சம்பந்தப்பட்டுள்ளார் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக அன்றைய நிதியமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரி பதவியில் இருந்து விலகினார். அம்மாதிரி கிருஷ்ணமேனன் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பிரதாப் சிங் கைரோனுக்குப் பிறகு பக்ஷி குலாம் முகமது மீதும், 1957-ல் கேரளத்தை ஆண்ட கம்யூனிஸ்ட் அரசு, ஆந்திரத்திலிருந்து அரிசி வாங்கப்பட்ட ஊழல் முதல் இன்றைக்கு ஆட்சியில் உள்ளவர்கள் வரை செய்த ஊழல்களை ஒரு நீண்ட பட்டியலாக இடலாம்.

புகழ்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வி. காமத் மூன்றாவது மக்களவையில் சி.பி.ஐ. அறிக்கையின் அடிப்படையில் சீராஜின் ஊழலை அம்பலப்படுத்தினார். ஐந்தாவது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய வணிகத் துறை அமைச்சர் எல்.என். மிஸ்ரா ஏற்றுமதி உரிமம் வழங்கியதில் ஊழல் செய்துள்ளார் என்ற பிரச்னை எழுப்பப்பட்டது. அன்றைய மக்களவைத் தலைவர் ஜி.எஸ். தில்லான், இது சம்பந்தமான ரகசிய ஆவணங்களைப் பார்வையிட அனுமதி வழங்கினார். இறுதியில், இந்தப் பிரச்னையில் ஊழல் நடந்தது என்று நாடாளுமன்றம் உறுதிபட கூறியது.

பாரத ஸ்டேட் வங்கியில் நடந்த நகர்வாலா ஊழலை அனைவரும் அறிவார்கள். ரூ. 60 லட்சம் தில்லி நாடாளுமன்றத் தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு வேண்டப்பட்டவர் என்ற காரணத்தினால் அந்த வங்கியின் அதிகாரி மல்கோத்ரா மூலம் வழங்கப்பட்டது என்ற பிரச்னை நாடு முழுவதும் எதிரொலித்தது.

இந்தச் சூழலில் நகர்வாலா மர்மமாக இறந்துவிட்டார். இந்தக் கிரிமினல் வழக்கு 32 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. யார் குற்றவாளி என்று இதுவரை நீதிமன்றம் தீர்ப்பு தரவில்லை என்பது வேதனையான செய்தி ஆகும். அந்தப் பணம் கொடுத்த வங்கி அதிகாரி மல்கோத்ரா கைது செய்யப்பட்டு பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, சஞ்சய் காந்தியின் மாருதி கார் தொழிற்சாலையில் பணியில் அமர்த்தப்பட்டார்.

ஐந்தாவது மக்களவையில் மாருதி கார் ஊழல் சம்பந்தமாக பல சட்ட விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்டது என நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. இந்தப் பிரச்னை சம்பந்தமான விவரங்களைத் தொழில் அமைச்சகம் மக்களவையில் வைக்கவிடாமல் தடுத்தது என்ற குற்றச்சாட்டு அன்றைய இந்திரா காந்தி மீது சுமத்தப்பட்டது. அவசர நிலை காலத்தில் ஊழல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்கு ஷா கமிஷன் அமைக்கப்பட்டது.

ஏ.ஆர். அந்துலே, “”இந்திராகாந்தி அறக்கட்டளை அமைப்புக்கு’ பணம் வசூல் செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இது சம்பந்தமான ஆவணங்கள் மக்களவையில் வைக்கப்பட்டது. இறுதியாக நீதிபதி லின்டன் தீர்ப்பின்படி மகாராஷ்டிர முதல்வர் பதவியிலிருந்து அந்துலே விலகினார்.

பரபரப்பான போபர்ஸ் ஊழல் நாடாளுமன்றத்தில் பிரதிபலித்தது. இதனால் ராஜீவ் காந்தி தலைமையில் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசை மக்கள் அகற்றினார்கள். இந்த பேரத்தில் அவர் ரூ. 64 கோடி கமிஷனாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. ஒன்பதாவது மக்களவையில் தேசிய முன்னணி அரசு ஆட்சியில் இருந்தபோது போபர்ஸ் சம்பந்தமான முதல் தகவல் அறிக்கை வழங்கப்பட்டது.

போபர்ஸ் ஊழல் விசாரணை முடிவுறாத நிலையில் இன்றைக்கும் நிலுவையில் உள்ளது. குவாத்ரோச்சியை ஆட்சியில் உள்ளவர்கள் தற்போது பாதுகாக்கின்ற நிலை.

செயிண்ட் கிட்ஸ் பிரச்னை, வீட்டு வசதி ஊழல், ஜெ.எம்.எம். ஊழல், யூரியா இறக்குமதி ஊழல், ஹெக்டே மீது கர்நாடகத்தில் நில மோசடி குற்றச்சாட்டு என ஊழல்கள் பட்டியலும் நீண்டு கொண்டுள்ளன.

10-வது மக்களவையில் பங்கு வியாபாரி ஹர்ஷத் மேத்தா நேரிடையாக பல அரசியல் தலைவர்களிடம் பணம் கொடுத்தேன் என்று கூறினார். இறுதியாக, இது சம்பந்தமாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு விடப்பட்டது. இப் பிரச்னை நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

சர்க்கரை பேர ஊழல், டெலிகாம் ஊழல் விவகாரம் போன்றவை கடுமையாக நாடாளுமன்றத்தில் பேசப்பட்டன. இது சம்பந்தமாக, அன்றைய அமைச்சர் சுக்ராம் டெண்டர்களை கடைசி நிமிடத்தில் மாற்றி ஊழல் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அரசுக்கு ரூ. 20,000 கோடி இழப்பு ஏற்பட்டது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து பெரும் புள்ளிகளும், தொழிலதிபர்களும் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களாக 5729 நபர்கள் அடங்கிய பட்டியல் இருக்கிறது. இன்றும் அந்த ரகசியப் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தவறு செய்யும் ஆட்சியாளர்களை விசாரிக்க “லோக்பால்’ போன்ற அமைப்பு தேவை என வலியுறுத்தப்பட்டது. 1960-ம் ஆண்டு கே. சந்தானம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஊழல்கள் அதிகமாகிப் பரவி வருவதைப்பற்றியும் அதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் அரசுக்குப் பரிந்துரை செய்தது.

அதனடிப்படையில் பல்வேறு நிர்வாகச் சீர்திருத்தக் குழுக்கள் அனுமந்தையா, வெல்லோடு உன்னிநாதன், மாத்துர் போன்றோர் தலைமையில் அமைக்கப்பட்டன. 1966-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தக் குழுவும் மக்கள் தெரிவிக்கும் ஆட்சியாளர்களின் ஊழல், தவறுகளைப் பற்றிய புகார்களை ஆராய ஓர் அமைப்பு தேவையென வலியுறுத்தியது.

“லோக்பால்’ போன்ற அமைப்பு செயல்படாமல் இருப்பதற்குக் காரணம் மக்கள் பிரதிநிதிகள் இதயசுத்தியோடு அணுகவில்லை என்பதே ஆகும்.

மக்கள் மத்தியில் லோக்பால் பற்றி பல்வேறு உறுதிமொழிகள் அளிக்கப்பட்டும் நடைமுறைக்கு வராத அளவில் அணை போடப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம்தான் வலுத்துள்ளது.

“”இதோ புலி வருகிறது…” என்பது போன்று லோக்பால் மசோதாவின் கதையும் உள்ளது. லோக்பாலுக்கு எப்போது விடிவுகாலம் வரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

Posted in abuse, Chidhambaram, Collector, Commissioner, Corruption, Court, Democracy, Economy, Education, Election, Employment, Finance, Gandhi, GDP, Governor, Govt, Growth, Honesty, IAS, Improvements, Inflation, Influence, infrastructure, IPS, Jobs, Judge, Jury, Justice, kickbacks, Law, Lecture, Lok Ayuktha, Lokpal, Metro, Money, Officer, Order, Party, Planning, Police, Politics, Poor, Poverty, Power, Public, Ramamurthy, Ramaraj, Recession, Republic, responsibility, revenue, Rich, Rural, service, Suburban, Wealthy | Leave a Comment »

Joy at Sohrabuddin`s home after arrest of three IPS officers

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 26, 2007

3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை கைது செய்யவைத்த சோரபுதீன் குடும்பத்தார் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி

போலி துப்பாக்கிச் சண்டையில் சோரபுதீன் ஷேக் என்பவரை சுட்டுக் கொன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஆமதாபாத் நீதிமன்றத்துக்கு புதன்கிழமை அழைத்துவரப்பட்ட காவல்துறை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.ஜி. வன்சாரா (டி ஷர்ட், கண்ணாடி அணிந்தவர்).

இந்தூர், ஏப். 26: குஜராத் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.ஜி. வன்சாரா, காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆர்.கே. பாண்டியன், எம்.என். தினேஷ்குமார் (ராஜஸ்தான்) என்ற 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கைது செய்யப்பட்டதை, சோரபுதீன் ஷேக் குடும்பத்தார் தங்களுடைய சொந்த கிராமத்தில் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் ஜிர்னியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சோரபுதீன் ஷேக். ஜிர்னியா கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக சோரபுதீனின் அம்மா ஜெபுன்னிசா பீவி பதவி வகிக்கிறார்.

1995-ம் ஆண்டு சோரபுதீன் பெயர் முதல்முறையாக பத்திரிகைகளில் வந்தது. அந்த கிராமத்து கிணறு ஒன்றிலிருந்து 2 டஜனுக்கும் மேற்பட்ட ஏ.கே.-56 ரக தானியங்கி துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. அவரை சிபிஐ போலீஸôர் சந்தேகத்தின்பேரில் கைது செய்து அழைத்துச் சென்றனர். பிறகு அவரை நிரபராதி என்று விட்டுவிட்டனர்.

பிறகு அவரை 2005 நவம்பர் 26-ம் தேதி குஜராத் மாநில பயங்கரவாத எதிர்ப்புப்படை போலீஸôரும் ராஜஸ்தான் மாநில சிறப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி எம்.என். தினேஷ் குமாரும் ஆமாதாபாத் நகருக்கு வெளியே சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றனர்.

அவருக்கும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அத்வானி மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் தலைவர்களைக் கொலை செய்ய அவர் சதித்திட்டம் தீட்டி, அதை நிறைவேற்ற குஜராத்துக்கு வந்தார் என்றும் கூறப்பட்டது.

பிறகு சோரபுதீனின் சகோதரர் ருபாபுதீன் இச் சம்பவத்தை விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றம், குஜராத் போலீஸôருக்கு ஆணையிட்டு இதைத் தீவிரமாக விசாரிக்கும்படி கூறியது. பிறகு உண்மை அம்பலமானது. 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் வேண்டுமென்றே சதி செய்து அவரைக் கொன்றிருப்பதாக, விசாரித்த அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். அதன் பேரில் 3 பேரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

மே 1 வரை போலீஸ் காவல்: கைதான 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளும் ஆமதாபாத் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விசாரிக்க 14 நாள்கள் வேண்டும் என்று அரசு தரப்பில் கோரப்பட்டது. நீதிபதி மே முதல் தேதி வரை மட்டும் அவகாசம் தந்தார்.

3 அதிகாரிகளும் நீதிமன்றத்தில் அமைதியாக நின்று கொண்டிருந்தனர். நிருபர்கள் ஏதேதோ கேள்விகள் கேட்டும் அவர்கள் யாரும் பதில் அளிக்கவில்லை. கைதான வன்சாரா, முதல்வர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

Posted in Abdul Latif, abuse, anti-terrorist, Courts, Encounter, Fake, Govt, Gujarat, IAS, IPS, Jhirnya, Judge, Jury, Justice, Lashkar-e-Toiba, Law, LeT, Madhya Pradesh, Modi, MP, Narendra Modi, officers, Order, Police, Sohrabuddin, Terrorism, terrorist, Ujjain | 1 Comment »

Fund allocations for River water inter-linking project – Pe Chidhambaranathan

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007

நதிகள் இணைப்புக்கு நிதி இல்லையா?

பெ. சிதம்பரநாதன்

நமது நாடு 6 லட்சம் கிராமங்களைக் கொண்டது.

110 கோடி இந்திய மக்களில் விவசாயத்தைச் சார்ந்து இருப்பவர்கள் ஏறக்குறைய 70 கோடி பேர். இவர்களில் பெரும்பாலானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருந்து வருகின்றனர். வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் 70 கோடிப் பேரை முன்னேற்றிவிட முடியும்.

உத்தமர் காந்திஜி, “”இந்தியாவின் உயிர், கிராமங்களில்தான் உள்ளது” என்று அறிவித்தார். தான் காண விரும்பிய ராஜ்யம் சின்னஞ்சிறு கிராம ராஜ்யம்தான் என்றே அறிவித்தார். அதை மேலும் அழகுபடுத்தி, அதுதான் தனது “ராமராஜ்யம்’ என்றும் கூறினார்.

அவரது சிந்தனைக்கு முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு செயல்வடிவம் கொடுக்க முற்பட்டார்.

முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண்மைக்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில் ரூ. 2 ஆயிரத்து 69 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.

அத்தொகையில் 1956-க்குள் கட்டப்பட்டதுதான் ஆசியாவிலேயே மிகப்பெரிய பஞ்சாப் மாநில பக்ராநங்கல் அணைக்கட்டு.

ஆனால் 1957-க்குப் பிறகு வேளாண்மை முன்னேற்றத்துக்கு அரசின் முக்கியத்துவம் வெகுவாகக் குறைந்துவிட்டது. தொழில் வளர்ச்சிதான் முதன்மையானது.

சென்ற 5 ஆண்டுக்காலத்தில் வேளாண்மை வளர்ச்சி நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4 சதவீதம்தான். தொழில்துறை வளர்ச்சியோ 8.5 சதவீதம். விவசாயம் வீழ்ச்சியடைந்தது, தாழ்ச்சியடைந்தது.

இன்றைய உண்மை நிலை என்ன?

மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்ப்பா பிராந்தியம், கர்நாடகத்தின் சில பகுதிகள், ஆந்திரத்தின் தெலங்கானா பகுதி, தமிழகத்தின் தஞ்சைப் பகுதி ஆகிய இடங்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் விவசாயிகள், வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 2001-2006 க்கு இடைப்பட்ட ஐந்தாண்டுக் காலத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவங்கள் இவை.

கடன் சுமையால் சென்ற ஆண்டு மட்டும் 15 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதில் பெரும்பாலானோர் ஆந்திர மாநிலப் பருத்தி விவசாயிகள்.

இந்தப் பின்னணியில் மத்திய நிதியமைச்சர் சமர்ப்பித்த மத்திய நிதிநிலை அறிக்கை, விவசாயத்திற்கு முதலிடம் தருகிற அறிக்கை என கூறப்பட்டது.

ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி கடனாக விவசாயிகளுக்கு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் அறிவித்திருந்தார். கேட்பதற்கு இது ஆனந்தமாகத்தான் இருக்கிறது. நடைமுறையில் இந்த ஒதுக்கீட்டில் விவசாயிகளுக்கு உரிய பலன் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் இதேபோல ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி விவசாயக் கடனுக்கு ஒதுக்கப்பட்ட பிறகு, அந்த ஓராண்டில் மட்டும் 15 ஆயிரம் பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது ஏன்?

ஐந்து காரணங்களால் நமது நாட்டின் விவசாயம் இத்தகைய இழிநிலைக்கு வந்துவிட்டதாக மத்திய நிதியமைச்சர் கூறுகிறார்.

முதல் காரணம், அதிக வட்டிக்கு விவசாயி கடன் வாங்கியதால்தான் தற்கொலை செய்து கொள்கிறான். ஆகவே 7 சதவீதம் வட்டிக்கு விவசாயக் கடன் கிடைக்க வங்கிகளின் வாசல்கள் திறந்துவிடப்பட்டிருக்கின்றன என்று அறிவிக்கிறார்.

இரண்டாவதாக, அவர்களுக்குத் தரமான விதைகள் கிடைக்காத காரணத்தால்தான், அதிக உற்பத்தியைச் செய்ய முடியவில்லையென்றார். இதற்காக தரமுள்ள விதைகள் கிடைக்க வழி வகுத்துத் தந்துள்ளதாகக் கூறுகிறார்.

மூன்றாவதாக, விவசாயப் பயிர்களுக்கு உரம் தேவை. உர விலையோ உயர்ந்து கொண்டே போகிறது. விவசாயிக்கோ வாங்கும் சக்தி இல்லை. ஆகவே, உரத்திற்கான ஒரு பாதி விலையை அரசே மானியமாகக் கொடுத்து, குறைந்த விலையில் உரம் கிடைக்கச் செய்ய ரூ. 22 ஆயிரத்து 450 கோடியை உர மானியமாக அரசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

நான்காவதாக, விவசாயிகளுக்கு முறையான மின்சாரம் இலவசமாகத் தருவதாகவும் அறிவித்துள்ளார்.

ஐந்தாவதாக, பாசன நீர் வசதி. இந்தியாவின் 6 லட்சம் கிராமங்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் கிணறுகள் மற்றும் ஏரி, குளங்களைத் தூர்வாரி, ஆழப்படுத்தி, அதிக மழை நீரைத் தேக்கி விவசாயம் செய்வதற்காக சுமார் ரூ. 12 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாகத் தெரிவிக்கிறார்.

உண்மையில், விவசாயத்திற்குத் தேவையான பாசனநீர் மழையால் மட்டும் கிடைப்பதாகக் கருதி, மழை வரும்பொழுதே கிணறுகள், ஏரிகள், குளங்களில் மழை நீரை நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார். இவையெல்லாம் நடைமுறையில் சாத்தியமா? அவ்வாறு செய்தாலும் ஆண்டு முழுவதும் பாசனத்துக்குத் தேவையான நீர் போதிய அளவில் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

எனவே, தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்க ஒரு சிறப்பான மாற்றுத் திட்டம் உள்ளது. அதுதான் நதிகள் இணைப்பு.

“”இந்திய நதிகளை எல்லாம் இணைத்து விடுங்கள். வெள்ளச் சேதத்தையும் தடுக்கும் – வறட்சியையும் அது போக்கும்” என கடந்த ஐந்து ஆண்டுகளாக குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறி வருகிறார்.

அவர் மட்டுமல்ல, வடமாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கையே தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் மத்திய அரசு சமர்ப்பித்த பதில் மனுவில் 2045-ஆம் ஆண்டுக்குள் நதிகள் இணைப்புக்கு ஆவன செய்யப்படும் என குறிப்பிடப்பட்டது.

நதிகளை இணைக்க 40 ஆண்டுகளா என்று ஆச்சரியப்பட்ட தலைமை நீதிபதி, 10 ஆண்டுக் காலத்திற்குள் இணைத்தாக வேண்டும் என்றும் அதற்கான ஒரு வரைவுத் திட்டத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

முந்தைய பாஜக ஆட்சியில் அப்படி வந்ததுதான் தேசிய நதிகளை இணைப்பதற்கான குழு. ஆனால் 2004-ல் ஆட்சி மாறியது. அதன்பிறகு சமர்ப்பிக்கப்பட்ட மூன்று மத்திய பட்ஜெட்களிலும் நதிகள் இணைப்பிற்கு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதே உண்மை.

தேசிய நதிகளுக்குப் பதிலாக தென்னக நதிகளான மகாநதி முதல் காவிரி வரையாவது நதிகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுமாறு கோரிக்கைகள் பல வந்தன. ஆனால் நதிகள் இணைப்புத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

தென்னக நதிகளை இணைத்தால்தான் தென்மாநில விவசாயத்திற்கான பாசன நீர் பன்மடங்கு அதிகரிக்கும் என்ற உண்மையும் உணரப்படுகிறது.

அவ்வாறு தென்னக நதிகளை இணைத்தால், தென்மாநிலங்களில் ஏறக்குறைய 150 லட்சம் ஏக்கரில் இரு போக சாகுபடி செய்யலாம். விவசாயம் செழிப்படையும்போது கிராமப்புற மக்கள் அனைவருக்கும் போதிய அளவில் வேலை கிடைக்கும். நூல் ஆலைகளுக்குத் தேவையான மூலப் பொருளான பஞ்சுப் பற்றாக்குறையும் தீரும். எண்ணெய் வித்து உற்பத்தியிலும் தன்னிறைவு பெற முடியும்.

விவசாயத்திற்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மத்திய நிதிநிலை அறிக்கையில், நதிகள் தரும் பாசன நீரை மறந்துவிட்டால், ஆகாயத்தில்தான் விவசாயத்தை வளர்ச்சி அடையச் செய்ய முடியும்!

=========================================

நதிகள் இணைக்கப்படுவது எதற்காக?

சி.எஸ். குப்புராஜ்

இந்திய நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்ற கருத்து கடந்த 150 ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது.

சர் ஆர்தர் காட்டன் என்ற பிரபல பொறியாளர் இக் கருத்தை 19-ம் நூற்றாண்டிலேயே தெரிவித்தார். ஆனால் அப்போதிருந்த கிழக்கு இந்திய கம்பெனியாரின் அரசு அதை ஏற்கவில்லை. அதற்குப் பின் பிரிட்டிஷ் அரசும், சுதந்திர இந்திய அரசும்கூட இந்தத் திட்டத்தை பரிசீலித்தன. ஆனால் செயல்படுத்த முற்படவில்லை.

இறுதியாக 1982 ஆம் ஆண்டு இதற்காகவே தேசிய நீர்வள மேம்பாடு நிறுவனம் உருவாக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வரைபடங்களும் மதிப்பீடும் தயாரிக்கப்பட்டன. இத் திட்டத்தை உடனடியாக எடுத்துக் கொண்டு விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு ஆணையிட்டுள்ளது.

இத்திட்டத்தின் அடிப்படைத் தத்துவம் என்னவென்றால், தண்ணீர் அதிகமாக ஓடிக் கடலில் கலந்து வீணாகும் நதிப்படுகைகளிலிருந்து, பற்றாக்குறையாக உள்ள நதிப்படுகைகளுக்குத் திருப்பி விட்டு வீணாகும் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என்பதே. இந்த அடிப்படையில் தான் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வடநாட்டு நதிகளை இணைப்பதற்கு, அயல்நாட்டு அரசுகளின் சம்மதம் பெற வேண்டி இருப்பதால் தாமதம் ஆகிறது. எனவே தென்னாட்டு நதிகளையாவது முதல் கட்டமாக இணைத்து விடலாம் என்று ஆலோசனை கூறப்பட்டது.

இதுவும் தாமதம் ஆவதால் தமிழ்நாடு நதிகளையாவது இணைத்து விடலாம் என்று நமது குடியரசுத் தலைவர் யோசனை தெரிவித்தார். இந்த அடிப்படையில் பார்த்தால் மூன்று இணைப்புகள் செயல்படுத்தலாம் என்றும் இவற்றைத் தமிழ்நாடு அரசே செயல்படுத்தும் என்றும் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் தமிழ்நாடு சட்டப் பேரவையில் கூறினார். இந்த மூன்று இணைப்புகள் எவை என்றால்;

  • 1. தென் பெண்ணை ஆற்றையும் செய்யாற்றையும் இணைத்தல்.
  • 2. கோரை ஆற்றையும் அக்கினியாற்றையும் இணைத்தல்.
  • 3. தாமிரபரணி ஆற்றையும் நம்பியாற்றையும் இணைத்தல்

தமிழ்நாட்டில் உள்ள நதிகள் எல்லாம் பற்றாக்குறை நதிகளே; உபரி நீர் உள்ள நதிகள் எவையும் இல்லை. எனவே இரண்டு பற்றாக்குறை நதிகளை இணைப்பதால் பயன் ஒன்றுமில்லை.

ஆனால் ஒரு சில நதிகளில் 25 சதவீத நம்பகத்தன்மையின் அடிப்படையில் பார்த்தால் ஓரளவு உபரி நீர் இருப்பதாக 2001 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழு 2002 ஆம் ஆண்டில் ஓர் அறிக்கையை அரசுக்கு அளித்தது. அக் குழுவின் அறிக்கையில் கீழ்க்கண்ட நதிகளில் இருக்கும் உபரி நீர் பற்றியும் அந்த உபரி நீரை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன.

25 சதவீத நம்பகத்தன்மையின் அடிப்படையில் உபரி நீர் உள்ள நதிப்படுகைகள் பின்வருமாறு:

  • 1. பாலாறு – 24.34 டி.எம்.சி.
  • 2. வெள்ளாறு – 41.21 டி.எம்.சி.
  • 3. தென் பெண்ணையாறு – 26.40 டி.எம்.சி.
  • 4. காவிரி நதி – 103.56 டி.எம்.சி.
  • 5. தாமிரபரணி நதி – 24.0 டி.எம்.சி.

இந்த உபரி நீர் எல்லாம் ஆற்றின் கடைசிப் பகுதியில் தான் உள்ளன. இந்த நதிகளை இணைப்பதற்கு அந்தக் குழு எந்த ஆலோசனையும் கூறவில்லை. எனவே இந்த இணைப்புகள் பற்றித் தெரிந்து கொள்வதற்காக, பொதுப்பணித்துறையில் விசாரித்து கீழ்க்கண்ட விவரங்கள் பெறப்பட்டன.

இணைப்பு – 1: சாத்தனூர் உயர்நிலைக் கால்வாய் திட்டம்

சாத்தனூர் அணையிலிருந்து உயர்நிலைக் கால்வாய் அமைத்து பல ஏரிகளுக்குத் தண்ணீர் அளித்துவிட்டு இறுதியாக விழுப்புரம் வட்டத்தில் உள்ள நந்தன் கால்வாயுடன் இணைத்தல். தென்பெண்ணை ஆற்றில் சாத்தானூரில் உபரி நீர் இல்லை. திருக்கோவிலூர் அணைக்கட்டிற்கு கீழேதான் உபரிநீர் உள்ளது.

இணைப்பு – 2: கோரையாறு தனிப்படுகையல்ல, காவிரியின் உபநதி. வெள்ளக் காலங்களில் திருச்சி நகரத்திற்கு வெள்ள அபாயம் உண்டாக்குகிறது. எனவே கோரையாற்றையும் ஆரியாற்றையும் கால்வாய் மூலம் இணைத்து அதிலிருந்து 15 ஆயிரம் கனஅடி வெள்ள நீரை அக்னியாறு படுகைக்குத் திருப்புதல்.

இணைப்பு – 3: தாமிரபரணி ஆற்றின் வெள்ள நீரைச் சாத்தான்குளம் மற்றும் திசையன்வினை பகுதிகளுக்குத் திருப்புதல்.

சில பொறியாளர்கள் நதிகள் இணைப்பின் தத்துவத்தை உணராமல் இந்தியாவின் நதிகள் அனைத்தையும் சமமட்டக் கால்வாய்கள் மூலம் இணைக்க முடியும் என்றும், அவற்றில் இரண்டு பக்கமும் தண்ணீர் பாயும் என்றும், இத்திட்டம் மத்திய அரசு தயாரித்துள்ள திட்டத்தைவிட மேலானது என்றும் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இது செயல்முறைப்படுத்த முடியாத திட்டம். ஓர் ஆற்றிலோ அல்லது கால்வாயிலோ, தண்ணீர் ஓட வேண்டும் என்றால் அடிமட்டச் சாய்வு இருக்க வேண்டும். சாய்வு இல்லாத கால்வாய் எப்படி செயல்படும்? வெறும் பிரசாரத்தால் மட்டும் தண்ணீர் ஓடாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

———————————————————————————————————————————————————–

100 கோடிக்கு 36 லட்சம் கோடி!

பதினோராவது ஐந்தாண்டுத் திட்ட ஆவணத்துக்கு தேசிய வளர்ச்சிமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து மாநில முதலமைச்சர்களும் ஒப்புதல் அளித்துவிட்டனர். 5 ஆண்டுகளில் மொத்தம் 36 லட்சம் கோடி ரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நம் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியை பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் 4 ஆண்டுகளில் 9% என்றும், கடைசி ஆண்டில் (2011-12) 10% என்றும் பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை திட்டக்குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா பின்னர் நிருபர்களிடம் விவரித்தார்.

கல்வி, சுகாதாரம், வறுமையை ஒழிப்பதற்கான வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் ஆகியவற்றின் மூலம் சமூக அடித்தளக் கட்டமைப்பை வலுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அலுவாலியா கூறியுள்ளார்.

நம்முடைய ஐந்தாண்டுத் திட்ட இலக்குகளை எட்ட முடியாதவாறு 3 விஷயங்கள் தடுக்கின்றன.

1. ஐந்தாண்டுத் திட்டங்களை வகுப்பதிலும், அமல் செய்வதிலும், அதன் பலன்களைத் தணிக்கை செய்வதிலும் மக்களை ஈடுபடுத்தத் தொடர்ந்து தவறி வருகிறோம்.

2. அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் கூடி தயாரித்து, நிதி ஒதுக்கி, நிறைவேற்றும் திட்டங்களாகவே இவை நீடிக்கின்றன.

3. திட்டங்களை வகுப்பதில் காட்டும் ஆர்வத்தை அமல்படுத்துவதில் தொடர்ச்சியாகக் காட்டத் தவறுவதால் எல்லா திட்டங்களும் தொய்வடைந்து, பிறகு தோல்வியைத் தழுவுகின்றன.

நதிநீர் இணைப்பு சாத்தியமா என்பது ஒருபுறம் இருக்கட்டும், இருக்கும் நீர்நிலைகளைக் குறைந்த செலவில் பராமரிக்க நம்மிடம் உள்ள தேசியத் திட்டம்தான் என்ன?

ஐந்தாண்டுத் திட்டத் தயாரிப்பு என்பது இன்றளவும் வெறும் சடங்காக மட்டுமே இருக்கிறது. குறைந்த செலவில் அதிக பலன்களைப் பெறும் வகையில் திட்டங்கள் இருக்க வேண்டும். கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழித்து, ஆயிரக்கணக்கில் பணத்தைத் திருப்பி எடுப்பதாகவே திட்டங்கள் முடிகின்றன. திட்ட அமல்களில் ஏற்படும் காலதாமதத்தால்தான் கோடிக்கணக்கான ரூபாய்கள் விரயம் ஆகின்றன என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் சமீபத்தில் பேசியிருக்கிறார். அதைத் தவிர்க்க என்ன திட்டத்தை இந்தக் கூட்டம் பரிசீலித்தது?

“”கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கிவிட்டது, இது மாநில முதலமைச்சரின் -நிதி அமைச்சரின் வாதத்திறமைக்குச் சான்று” என்று போலியாக பெருமைப்படுவதே வழக்கமாகி வருகிறது.

நபர்வாரி வருமானம் எவ்வளவு உயர்ந்தது, அணைகள் எத்தனை உயர்ந்தன, எத்தனை லட்சம் ஏக்கர்கள் கூடுதலாக பாசன வசதி பெற்றன, எத்தனை ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி ஆனது, எத்தனை லட்சம் பேருக்குக் கூடுதலாக, நிரந்தர வேலைவாய்ப்புக் கிடைத்தது, தொழில், வர்த்தகத்துறையில் ஒட்டுமொத்த விற்றுமுதல் எத்தனை லட்சம் கோடி ரூபாய்கள் அதிகரித்தன என்ற ஆக்கபூர்வமான முடிவுகளே இந்த திட்டங்களின் வெற்றிக்கு உரைகல். அப்படியொரு அறிக்கையையும் இந்த தேசிய வளர்ச்சி மன்றக் கவுன்சிலில் முன்வைத்தால், ஐந்தாண்டுத் திட்ட வெற்றியை நம்மால் மதிப்பிட முடியும்.

நீர்நிலைகளையும், நிலத்தடி நீரையும் பாழ்படுத்தும் தோல் தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள், பின்னலாடைத் தொழிற்சாலைகள், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ரசாயன ஆலைகள் போன்றவைதான் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் முக்கியத்துவம் பெறுகின்றன. இப்படிப்பட்ட வளர்ச்சி மாநிலத்துக்கு மட்டும் அல்ல, நாட்டுக்கே தேவை இல்லை என்பதை தேசிய அளவில் விவாதிக்க வேண்டும்.

குறிப்பிட்ட சில இனங்களில் மட்டும் வரிவிதிப்பு அதிகாரத்தை வைத்திருந்த மத்திய அரசு மதிப்புக் கூட்டப்பட்ட விற்பனை வரி (வாட்), சேவை வரி மூலம் தன்னுடைய கரத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டுவிட்டது. இனி போகப்போக ஐந்தாண்டுத் திட்டமிடல் என்பது மத்திய அரசின் தனியுரிமை ஆனாலும் வியப்பதற்கு ஏதும் இல்லை.

Posted in 11, 5, Agriculture, Budget, Cauvery, Cheyaar, Cheyyaar, Cheyyaaru, Civil, Connection, CS Kuppuraj, Damirabarani, Dhamirabharani, doctors, Drinking Water, Economy, Education, Farming, Farmlands, Finance, Five Year Plans, Floods, Food, Fund, Government, Govt, harvest, Health, Healthcare, Hospital, Hygiene, IAS, inter-link, IPS, Kaviri, Korai, Lakes, medical, Nambiyar, officers, Paalar, Paddy, Palaar, Palar, peasants, Pennai, Planning, Plans, Politics, Poor, Project, Rain, rice, River, Sathanoor, Sathanur, service, Seyaar, Seyyaar, Seyyaaru, South Pennai, Tamirabarani, Tamirabharani, Thamirabarani, Thamirabharani, Vellaar, Village, Water, Watersources, Wheat, Year | 1 Comment »

S Malathi appointed new TN Home Secretary

Posted by Snapjudge மேல் திசெம்பர் 1, 2006

தமிழக உள்துறைச் செயலர் பொறுப்பை ஏற்கும் 3-வது பெண்

சென்னை, டிச. 1: தமிழக அரசின் உள்துறைச் செயலர் பதவிக்கு நியமிக்கப்படும் மூன்றாவது பெண் அதிகாரி எஸ். மாலதி (52). அவர் வியாழக்கிழமை புதிய பொறுப்பை ஏற்றார்.

சாந்தா ஷீலா நாயர், ஷீலா ராணி சுங்கத் ஆகியோருக்குப் பிறகு உள்துறைச் செயலர் பதவியை ஏற்கும் 3-வது பெண் மாலதி என்பது குறிப்பிடத்தக்கது.

எத்திராஜ், பச்சையப்பன் கல்லூரி மாணவி: மாலதியின் சொந்த ஊர் தஞ்சாவூர்; சென்னையில் பிறந்தவர். எத்திராஜ் கல்லூரியில் பி.எஸ்ஸி. (விலங்கியல்) பட்டப் படிப்பு, பச்சையப்பன் கல்லூரியில் எம்.எஸ்ஸி. (விலங்கியல்) பட்ட மேற்படிப்பு படித்தார். 1977-ம் ஆண்டின் “ஐஏஎஸ் அணி’யைச் சேர்ந்தவர். திருச்சி உதவி ஆட்சியராக 1978-ல் பணியைத் தொடங்கினார்.

சென்னை மாநகராட்சி உதவி ஆணையர், வேலூர் மாவட்ட ஆட்சியர் (1987) உள்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். நேர்மையான அதிகாரி எனப் பெயரெடுத்தவர். முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் (1996-2001) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயலராக சிறப்பாகப் பணியாற்றினார். பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் ஆணையராகவும் இருந்துள்ளார்.

பஞ்சாயத்து ஆட்சி முறை மூலம் முதன் முதலில் நகராட்சிகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டபோது, உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் எந்தெந்த வரிசையில் அமர வேண்டும், மேயருக்கு எந்த இடம் ஒதுக்க வேண்டும் என்பதற்கு உரிய அரசாணையை வடிவமைத்ததில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. தற்போது சென்னை மாநகர காவல் துறை ஆணையராக லத்திகா சரண் உள்ள நிலையில், காவல் துறையை உள்ளடக்கிய உள்துறைச் செயலர் பதவிக்கு ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Posted in Commercial Taxes, Home Secretary, IAS, Maalathi, Malathy, Pavan Raina, Santha Sheela Nayar, Sheela Rani Sungath, Special Commissioner, Tamil Nadu, TN | Leave a Comment »