ரிசர்வ் வங்கியின் கை வைத்தியம்!
ரிசர்வ் வங்கிக்கு உள்ள பல கடமைகளில் தலையாய கடமை, பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதுதான் என்பது அதன் சமீபகால நடவடிக்கைகளைக் கவனிக்கும்போது எளிதில் புலனாகிறது.
நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5%-க்கும் மேல் இருக்கிறது, பணவீக்க விகிதம் 5%-க்கும் குறைவாக இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சமீபகாலத்தில் அதிகரித்து சராசரியாக 40 ரூபாயாக இருக்கிறது. வங்கிகளிடம் டெபாசிட் பணம் அபரிமிதமாக இருக்கிறது. இத்தனை இருந்தும் மக்களிடம் நிம்மதியோ, வாங்கும் சக்தியோ குறிப்பிடும்படி இல்லை.
“”மக்கள்” என்று இங்கே நாம் குறிப்பிடுவது பெரும்பாலானவர்களான நடுத்தர, ஏழை மக்களைத்தான். நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் சக்திக்கே சவால் விடுவதைப் போல தங்கத்தின் விலையும், நிலத்தின் விலையும் (வீட்டுமனை) உயர்ந்துகொண்டே வருகின்றன. இந்நிலையில் அவர்களுடைய சேமிப்பைப் பாதுகாக்கவும், அதற்கு சுமாரான வருமானத்தையும் தருவது வங்கிகள் தரும் வட்டிவீதம்தான். ஆனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அந்த வட்டிவீதத்துக்குத்தான் ரிசர்வ் வங்கி குறிவைக்கிறது என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம்.
உலக அரங்கில், இந்தியப் பொருளாதாரத்தின் வலிமைக்கான காரணங்களாக உள்ள அம்சங்களை ஆராய்ந்த வல்லுநர்கள், வருவாயில் ஒரு பகுதியைப் பிற்காலத்துக்காகச் சேமித்துவைக்க வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவின் ஏழைகளிடம்கூட இருப்பதையும், அதைச் செயல்படுத்துவதையும் சுட்டிக்காட்டி, பாராட்டியுள்ளனர். ரிசர்வ் வங்கி இந்த சேமிப்புப் பழக்கத்தை மேலும் ஊக்குவிக்க முயல வேண்டுமே தவிர, மக்களை விரக்தியின் விளிம்புக்கு விரட்டக் கூடாது.
நஷ்டம் வரக்கூடாது என்று மத்திய அரசே முனைப்புக் காட்டி வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியைக் குறைப்பதும், வங்கிகளில் போடப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டியைக் குறைப்பதும் நல்லதல்ல. அந்த நடவடிக்கைகளை நடுத்தர, ஏழை மக்களின் சேமிப்பு மீதான “”மறைமுக வரி” என்றே கூற வேண்டும்.
வங்கிகளிடம் மிதமிஞ்சி சேர்ந்துவிட்ட டெபாசிட்டுகளால் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உபரிப் பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. அதை உறிஞ்சுவதற்காக, வங்கிகளின் ரொக்கக் கையிருப்பை மேலும் 0.5% அதிகரித்து, 7% ஆக்கியிருக்கிறது. இப்படி ரொக்கக் கையிருப்பு விகிதத்தை உயர்த்திய பிறகும்கூட அதிகபட்சம் 16 ஆயிரம் கோடி ரூபாயைத்தான் புழக்கத்திலிருந்து உறிஞ்ச முடியும். வங்கிகளிடம் உள்ள மொத்த டெபாசிட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.4,90,000 கோடியாகும்.
வீடுகட்ட கடன் வாங்கியவர்களும், இனி வாங்க நினைப்பவர்களும் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் மனம் தளர்ந்து போய்விட்டார்கள். வீட்டுக் கடனுக்கான வட்டி வீதத்தைக் குறைத்து, வீடமைப்புத் திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்வேகத்தைத் தரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அது பொய்த்துவிட்டது. இனி வீட்டுக் கடனுக்கான வட்டி உயர்ந்தாலும் வியப்பதற்கு ஏதும் இல்லை.
விலைவாசியைக் கட்டுப்படுத்த, பண அச்சடிப்பைக் கட்டுப்படுத்துவது ஒரு வழி என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது. விலைவாசியைக் குறைக்க வேண்டும் என்றால் உற்பத்தியைப் பெருக்குவதும், பொது விநியோக முறையை வலுப்படுத்துவதும்தான் உற்ற வழிகள்.
இடைத்தரகர்கள், ஊகபேர வியாபாரிகள், கள்ளச்சந்தைக்காரர்கள், முன்பேர வர்த்தகர்கள் ஆகியோரை ஒடுக்காவிட்டாலும், எச்சரிக்கும் விதத்திலாவது ஓரிரு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தால் சற்று ஆறுதலாக இருக்கும்.
சிக்கனத்துக்கும் சேமிப்புக்கும் பெயர்பெற்ற இந்தியர்களைக் கடன் சுமையில் ஆழ்த்தவே பன்னாட்டு வங்கிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் 24 மணி நேரமும் தீவிரமாக உழைக்கின்றன. நம் மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும் விதத்தில் ரிசர்வ் வங்கியாவது செயல்படலாம் இல்லையா? இதனால் சில நூறு கோடி ரூபாய்கள் வருமானம் குறைந்தாலும்கூட அதைப் பெரிய இழப்பாக மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கருதலாமா?
————————————————————————————————–
கவலைப்பட யாருமே இல்லையா?
Dinamani op-ed (August 7 2007)
வீட்டுக் கடன்களுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை என்று அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம். பணவீக்க விகிதம் குறைந்தால் மட்டுமே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும் என்றும் கூறியிருக்கிறார்.
இருக்க இடம் என்பது, உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் இயற்கையான லட்சியம். ஆனால், சொந்த வீடு என்கிற இந்த கனவு நனவானதுடன் நிற்காமல், ஒரு நிரந்தர நரகமாகவும் ஆகிவிட்டால் எப்படி இருக்கும்? வீட்டுக் கடன் வாங்கிக் கனவு நனவானவர்களின் நிலைமை அதுதான்.
ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர், அத்தனை வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வீட்டுக் கடன் வழங்க முன்வந்தன. நகர்ப்புறங்களில் திரும்பிய இடத்திலெல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் காளான்கள்போல முளைத்தன.
வாடிக்கையாளர்களிடம் இரண்டு வகையான வீட்டுக் கடன் வசதி முன்வைக்கப்பட்டது. முதலாவது வகை வீட்டுக் கடனில் வட்டி விகிதம் அதிகம். ஆனால், கடன் அடைந்து முடியும்வரை இந்த வட்டி விகிதம் மாறாது என்பதால் திருப்பி அடைக்க வேண்டிய மாதாந்திரத் தவணைத் தொகையும் மாறாது. ஆனால், இரண்டாவது வகை வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம், அவ்வப்போது வங்கியின் வட்டிவிகித ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்றபடி மாறும் தன்மையது. இதற்கான வட்டி குறைவு என்பதால், பலரும் இந்த முறையிலான வீட்டுக் கடனையே விரும்பி ஏற்றனர்.
அப்போதிருந்த நிலையில், வங்கிகளின் வட்டி விகிதம் குறைந்து வந்த நேரம். அதனால், மேலும் வட்டி குறையும்போது அதன் பயன் கிடைக்குமே என்கிற நம்பிக்கையில் இந்த முறை வட்டிக் கடனைத் தேர்ந்தெடுத்தவர்களே அதிகம். ஆனால், இப்போது இந்த இரண்டாவது வகை வீட்டுக் கடன் முறையைத் தேர்ந்தெடுத்து வீடு வாங்கியவர்கள் நிலைமை மிகவும் பரிதாபகரமாகிவிட்டது.
வட்டி விகிதம் குறைவதற்குப் பதிலாக, வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி விட்டிருக்கின்றன. அதனால், வீட்டுக் கடன் வாங்கியவர்கள் உடனடியாக தங்களது கடனில் ஒரு பகுதியைத் திருப்பிக் கட்டினால் ஒழிய, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவே முடியாது. இந்தத் தவணைகள் வட்டிக்குத்தான் சரியாக இருக்குமே தவிர அசல் குறையாது. அதாவது, வாழ்நாள் முழுவதும் வட்டி மட்டும் கட்டிக் கொண்டிருக்கலாம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்து வருகிறது. 6.5 சதவிகிதத்திலிருந்து இப்போது 11 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. ஆரம்பத்தில், அதிகரித்த வட்டி விகிதத்தை ஈடுகட்ட வங்கிகள் தவணைகளை அதிகப்படுத்தின. இன்றைய நிலையில், தவணைகள் 25 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்பட்டாலும் கடன் அடைந்து தீராது என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது.
மாறும் வட்டி விகித முறையில், ஒரு லட்ச ரூபாய்க்கான 20 ஆண்டு வீட்டுக் கடனுக்கு 7.25% வட்டியானால் மாதாந்திரத் தவணை ரூ. 790. இப்போதைய 11.25% வட்டிப்படி கணக்கிட்டால், மாதாந்திரத் தவணைத்தொகை ரூ. 900. ஆரம்ப ஆண்டுகளில், சுமார் ஐந்து ஆண்டு வரை, ஒருவர் அடைக்கும் ரூ. 790 தவணைத்தொகையில் அசலுக்குப் போகும் பணம் வெறும் ரூ. 79 மட்டுமே. அதனால், இப்போது வட்டி விகிதம் அதிகரித்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடன் வாங்கிய பலருடைய அசல் தொகையில் பெரிய அளவு பணம் திருப்பி அடைக்கப்படாத நிலைமை.
வீட்டுக் கடன் வாங்கிய லட்சக்கணக்கான மத்தியதர வகுப்பினர் மனநிம்மதி இழந்து, தூக்கம்கெட்டுத் தவிக்கும் நிலைமை. வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள் அழுபவர்கள் பலர். இதற்கெல்லாம் காரணம், சராசரி மனிதனின் உணர்வுகளையும் கஷ்டங்களையும் புரிந்துகொள்ளாத மத்திய நிதியமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் வங்கித் துறையும்தான்.
இந்த நிலைமையைப் பற்றிக் கவலைப்பட யாருமே இல்லையா?