தமிழகத்தில் சொத்து வாங்கிய இலங்கை அகதிகளின் விவரம் திரட்டப்படுகிறது
தமிழகத்தில் நிலம், வீடு அல்லது மோட்டார் வாகனங்கள் வாங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் குறித்த விவரங்களை தமிழக அரசு சேகரிக்கத் தொடங்கியிருககிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் கருணாநிதி, அகதிகள் இவ்வாறு சொத்துகள் வாங்குவது குற்றம், அனுமதிக்கப்படக்கூடாது, உண்மையான அகதிகளுக்கு வேண்டிய உதவிகள் செய்யலாம், ஆனால் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் அவர்கள் ஈடுபடக்கூடாது எனக் கூறியிருந்தார்.
ஆனால், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழக நிறுவனர் சந்திரஹாசன், இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் சொத்துகளை சில நியதிகளுக்கு உட்பட்டு வாங்கமுடியும் என்கிறார்.
ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அட்டை போன்றவற்றை அகதிகள் பெறுவதாகக் கூறப்படுவது தவறு என்ற அவர், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்; ஆனால் இலங்கைத் தமிழர்கள் நலனை பாதிக்கும் வகையில் தமிழக அரசு நடந்துகொள்ளாது என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கிளேமோர் தாக்குதலில் பொலிசார் 3 பேர் பலி
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பகுதியில் திங்கள் மாலை இடம்பெற்ற கிளெமோர் குண்டுத் தாக்குதலில் 3 பொலிஸார் கொல்லப்பட்டதோடு, மற்றுமொரு பொலிஸ்காரர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் கூறுகிறார்கள்.
ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இந்தப் பொலிஸ்காரர்கள் அங்குள்ள நீர்ப்பாசன வாய்க்கால் ஒன்றுக்கு குளிக்கச் சென்றிருந்தபோது, குறித்த நேரத்தில் வெடிக்கும் வகையில் இந்தக் குண்டு அங்கு பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்தப் பகுதி ஏற்கனவே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இலங்கைப் படையினரால், கடந்த ஆண்டில் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேசத்தில் பொலிஸ் காவலிலிருந்த சந்தேக நபரொருவர் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார்
ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடமொன்றை காட்டுவதற்காக இன்று அதிகாலை கிளாலிவெட்டைக்கு இந்நபர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு விடுதலைப் புலிகளுக்கும் பொலிசாருக்குமிடையில் இடம்பெற்ற மோதலின் போது துப்பாக்கிச் சூட்டில் இவர் கொல்லப்பட்டதாக சமப்வம் தொடர்பாக பொலிசார் கூறுகின்றனர்.
வட இலங்கை மோதல்கள்
![]() |
![]() |
இலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா, வெலிஓயா மற்றும் யாழ்ப்பாணம் போர்முனைப் பிரதேசங்களில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் முன்னணி காவலரண்கள் மீது ஞாயிறன்று மேற்கொண்ட தாக்குதல்களையடுத்து இடம்பெற்ற மோதல்களில் 33 விடுதலைப் புலிகளும், 5 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
இராணுவச் சிப்பாய் ஒருவரைக் காணவில்லை என்றும் அம்மையம் குறிப்பிட்டுள்ளது. கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 7 சடலங்கள் கைப்பற்றப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அது தெரிவிக்கிறது.
இதேவேளை, வவுனியா பாலமோட்டை பகுதியில் ஞாயிறு காலை 3 முனைகளில் தமது பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு மேற்கொண்ட இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், இந்தச் சண்டைகளின்போது 18 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.
இராணுவத்தினரின் 3 சடலங்களும் ஆயுதத் தளபாடங்களும் தம்மால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். நல்ல நிலையில் இருந்த ஒரு சடலம் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, இராணுவத்தினரால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட 7 விடுதலைப் புலிகளின் சடலங்களை இன்று பிற்பகல் புளியங்குளம் சோதனைச்சாவடியில் விடுதலைப் புலிகளிடம் தாங்கள் கையளித்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளிடம் இருந்து பெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவரின் சடலம் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் சர்வதேச செஞ்சிலுவைக் குழு தெரிவித்துள்ளது.
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் இடைக்காலத் தீர்வுக்கான ஆயத்தங்களைச் செய்யுமாறு இலங்கை ஜனாதிபதியிடம் சர்வ மதத்தலைவர்கள் வேண்டுகோள்
![]() |
இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தும் மதத்தலைவர்கள் |
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வை ஆராய்கின்ற சர்வகட்சிக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை ஒரு இடைக்காலத் தீர்வாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சர்வமத தலைவர்கள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்தக் குழுவில் இடம்பெற்ற மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பு கூறியுள்ளார்.
இலங்கையில் நடக்கின்ற மனித உரிமை மீறல்கள், கொலைகள், காணாமல் போதல்கள், குறிப்பாக வெள்ளை வான் கடத்தல்கள் போன்றவை குறித்து உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் சர்வமதத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையில் பொதுமக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் சிக்கி துன்பப்படுகின்ற நிலைமைகளை அறிந்து, மக்களுக்கு நிவாரணம் செய்ய வேண்டும் என்று மதத்தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரியதாகவும் மன்னார் ஆயர் தெரிவித்துள்ளார்.