Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘FDI’ Category

Former Prime Minister Chandrasekhar – Biosketch, Anjali

Posted by Snapjudge மேல் ஜூலை 8, 2007

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைவு

புதுதில்லி, ஜூலை 9: முன்னாள் பிரதமர் சந்திரசேகர் (80) ஞாயிற்றுக்கிழமை காலை, தில்லியில் காலமானார்.

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சந்திரசேகர், 3 மாதங்களுக்கு முன் தில்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை காலை மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மறைந்த சந்திரசேகருக்கு 2 மகன்கள் உள்ளனர். சந்திரசேகரின் தில்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

1927-ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் பிறந்த இவர், 1950-ல் ஆச்சார்யா நரேந்திர தேவால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் 1962-ல் மாநிலங்களவை உறுப்பினராக பிரஜா சோசலிஸ்ட் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1965-ல் காங்கிரஸில் இணைந்து கட்சியில் “இளம் துருக்கியராக’ இருந்தார். பின்னர், நெருக்கடி நிலையின்போது கைது செய்யப்பட்டார்.

ஜனதா கட்சி நிறுவியதில் முக்கிய பங்காற்றியவர். பின்னர், அக் கட்சியின் தலைவரானார். 1989-ல் வி.பி.சிங்குடன் இணைந்து ஜனதா தளத்தை உருவாக்கினார். 1990-ல் பிரதமரானார். சுமார் 6 மாதம் காலம் அவர் பிரதமராக பதவி வகித்தார்.

8 முறை எம்.பி.யாக இருந்தவர்:

அவர் இதுவரை 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். எந்தவொரு மத்திய அமைச்சரவையிலும் அவர் அமைச்சராக பணியாற்றாமலே பிரதமராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த சந்திரசேகரின் உடல், முழு அரசு மரியாதையுடன் தில்லியில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ஜெயில் சிங், சங்கர் தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன் ஆகியோரின் நினைவிடங்களுக்கு அருகில், சந்திரசேகரின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

7 நாள் அரசு துக்கம்:

7 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். தில்லியில் திங்கள்கிழமை மதியம் 1 மணி முதல் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி தெரிவித்தார்.

——————————————————————————————————————-
“கிளார்க் பணிக்கு’ முயற்சித்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர்

பாலியா, ஜூலை 9: மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர் வயது குறைவால் கிளார்க் பணி வாய்ப்பை இழந்தார் என அவரது குடும்பத்தார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

சந்திரசேகர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். அப்போது அவரின் மாமாவின் நண்பர் ஒருவர் நீதிமன்றத்தில் முன்ஷியாக பணியாற்றினார். அவர் மூலம் நீதிமன்றத்தில் கிளார்க் பணியில் சேர சந்திரசேகர் முயற்சித்தார்.

கிளார்க் பணியில் சேர குறைந்தபட்சம் 18-வயது நிரம்பியிருக்க வேண்டும் என விதிமுறை இருந்தது.

ஆனால், சந்திரசேகருக்கு பிற தகுதிகள் அனைத்தும் இருந்தும் அப்போது 18-வயது நிரம்பாததால், கிளார்க் பணி கிடைக்கும் வாய்ப்பை இழந்தார் என்றும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

அரசியலைப் போல் கலைத்துறையிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்த சந்திரசேகர், அவரது கிராமத்தில் ராமலீலா பண்டிகை கொண்டாட்டத்தின் போது குரங்காகவும், கரடியாகவும் வேடம் தாங்கி நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

——————————————————————————————————————-

சந்திரசேகர் ~ எனது பேட்டியிலிருந்து…

சென்னை, ஜூலை 9: மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர், ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு கடந்த 30 ஆண்டுகளில் அளித்த பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்த கருத்துகளில் இருந்து சில பகுதிகள்:

பிரதமர் பதவி:

4 மாதங்களில் இந்தியாவின் ஒட்டுமொத்த முகத்தையே மாற்றியமைத்துவிட்டதாக நான் கூறிக்கொள்ள முடியாது. ஆனால் அந்த 4 மாதங்களில், நாட்டில் எழுந்த சூடான பிரச்னைகளைத் தணிக்க முயற்சி செய்திருக்கிறேன். நான் பிரதமராக பதவி ஏற்றபோது கிட்டத்தட்ட 80 அல்லது 90 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இரண்டு நாட்களில் (அமைதி ஏற்படுத்தப்பட்டு) ஊரடங்கு உத்தரவுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டன.

பெரும்பான்மையான மக்களிடம் பற்றிக் கொண்ட “மண்டல்’ மற்றும் “அயோத்தி’ பிரச்னைகளால் மொத்த தேசமும் கொந்தளிப்பான நிலையில் இருந்தது. அப்போது இருந்த ஒரே கேள்வி பூனைக்கு மணி கட்டுவது யார்? என்பதே. அதற்கு முன் இருந்த அரசு தானே உருவாக்கிவிட்ட கொந்தளிப்பை கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. வேறு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்கும் நிலையில் இல்லை. அப்போதிருந்த ஒரே ஒரு மாற்று தேர்தல்தான்.

அத்தகைய சூழ்நிலையில் நான் ஆட்சி அமைத்தது சந்தர்ப்பவாதம் அல்ல; நாடு தேர்தலைச் சந்திப்பதற்கு முன்னர் மக்கள் மத்தியில் இருந்த கொதிப்பு அடங்க வேண்டும் என நான் உறுதியாக நம்பினேன். அதனால்தான் காங்கிரஸ் வெளியிலிருந்து தரும் ஆதரவுடன் ஆட்சி அமைத்தேன். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

பிரதமர் பதவி பேரங்களுக்கு அப்பாற்பட்டது. என்னைப் பொருத்தவரையில் பிரதமராக இருப்பதே வெற்றி அல்ல. எதுவும் செய்யாமல் அல்லது கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டு அதிகாரத்தில் இருப்பதால் என்ன பயன்? ஒரு பிரதமராக, பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதற்காக ஒருமுறைகூட நான் சமரசம் செய்துகொண்டதில்லை.

முடிவெடுக்கும் அதிகாரத்தில் சமரசம் செய்துகொண்டு, கொள்கைகளைத் தியாகம் செய்துவிட்டு ஒருவர் அரசாங்கத்தை நடத்த முடியாது; வேண்டுமானால் வெறுமனே பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கலாம். ஒரு அரசியல்வாதி அரசாங்கத்தை நடத்தும் முறைக்காகத்தான் பாராட்டப்பட வேண்டுமே தவிர, பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதற்காக அல்ல.

அயோத்திப் பிரச்னை:

பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை எனில் அதன் பிறகு தீர்வுக்கு வழியே இல்லாமல் போய்விடும். இதுபோன்ற சூழ்நிலைகளில் பொறுமைதான் கைகொடுக்கும். விட்டுக்கொடுக்கும் குணம் மற்றும் சரியான அணுகுமுறையைப் பயன்படுத்தி, பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என எனக்கு எல்லா வகையிலும் நம்பிக்கை உள்ளது.

பிரதமராக இன்னும் சிறிது காலம் இருந்திருந்தால் இந்தப் பிரச்னைக்கு நிச்சயமாக ஒரு தீர்வு கண்டிருப்பேன் என்பது மட்டும் நிச்சயம். அப்படி ஒரு தீர்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் பலருடைய எண்ணமாக இருந்தது.

இடஒதுக்கீடு:

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யார் எனத் தீர்மானிப்பதற்கு அறிவியல் ஆய்வுமுறை ஏதும் இல்லை என மண்டல் கமிஷன் தனது அறிக்கையில் கூறியுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், இன்றைய சூழ்நிலையில் இடஒதுக்கீட்டுக் கொள்கை என்பது சமூக, பொருளாதார அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும்.

கருத்துக்கள்:

சிக்கலான சூழ்நிலைகளில் நான் கருத்துச் சொல்லத் தயங்கியதில்லை. அதே நேரம் மக்கள் மீது எனது கருத்துகளை திணிப்பதில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஆலோசனைகளைத்தான் கூற முடியும். அவை ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் அதை சகித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பிரச்னைகள் எல்லை கடந்து போகும்போது கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்.

போஃபர்ஸ்:

1989 பொதுத்தேர்தலில் போஃபர்ஸ் விவகாரத்துக்கு தேவையில்லாத முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவிட்டது. நாம் கவனம் செலுத்த வேண்டிய வேறு முக்கியப் பிரச்னைகள் உள்ளன; அரசியல் கட்சிகளுக்கு இது முக்கிய பிரச்னை அல்ல என நான் அப்போதே எடுத்துக் கூறினேன். சுவிட்சர்லாந்து மற்றும் சுவீடன் போன்ற வெளிநாடுகளின் கையில் சிக்கிக்கொண்டுள்ள பிரச்னை போஃபர்ஸ். பிறகு எந்த அடிப்படையில் போஃபர்ஸ் பேரத்தின் மூலம் லாபம் பெற்றவர்களை அடையாளம் காட்டுவதாக மக்களுக்கு உறுதியளிக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

பன்னாட்டு நிறுவனங்கள்: இன்றைய உலகில் எந்த ஒரு நாடும் தனித்திருக்க முடியாது. சில முக்கியமான -முதுகெலும்பு போன்ற -துறைகளில் கூட்டுமுயற்சிகளை நாம் நாட வேண்டும். அதே சமயம் நமக்கான எல்லை எது என்பதையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

கூட்டணி அரசுகள்:

மாநிலங்களில் கூட்டணி அரசுகள் செயல்படுவது போல், மத்தியில் கூட்டணி அரசுகள் வெற்றிகரமாகச் செயல்பட முடியாது. பிராந்தியக் கட்சிகள் கொடுக்கும் நெருக்கடிகள், கூட்டணி அரசு சந்திக்கும் முக்கியப் பிரச்னையாக இருக்கும். குறைந்தபட்ச செயல்திட்டம், கொள்கைகள் இல்லாமல் ஒரு அரசு பொறுப்பேற்றுக்கொள்வது, நாட்டின் நலனுக்கு உகந்ததாக இருக்காது.

வகுப்புவாதம்:

மத அடிப்படைவாதம் நாட்டின் அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் என்றால், மத அடிப்படையிலான அரசியல் அதைவிட அபாயகரமானது. மக்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்களில் அக்கறையில்லாமல், சாதி, மதம், மொழி போன்ற மக்களைக் கொந்தளிக்கச் செய்யும் விஷயங்களை அரசியல்வாதிகள் எழுப்புகிறார்கள்.

ஏழை பணக்காரர்:

இந்த நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் நல்ல உணவு, பாதுகாப்பான குடிநீர், தேவையான மருத்துவ வசதி, உடை, உறைவிடம், கல்வி அளிக்க வேண்டியது அவசியமாகும். ஏழைகளுக்கு இந்த வசதிகள் சென்று சேருவதற்கு, வசதி படைத்தோர் சில தியாகங்களைச் செய்துதான் ஆகவேண்டும்.

உலகிலேயே அரசிடம் வெறும் அடிப்படை வசதிகளை மட்டும் எதிர்பார்க்கும் மக்கள் இருப்பார்களேயானால் அது நமது இந்திய மக்கள் மட்டும்தான். இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு, குடிக்க நீர், அடிப்படை சுகாதார வசதி, ஆரம்பக் கல்வி, தெருவிளக்கு, சாலைகள் இவையெல்லாம் அடிப்படைத் தேவைகள். இதைக்கூட நம்மால் இதுவரை முழுமையாகத் தர இயலவில்லை என்பது வருத்தமான விஷயம்.

ஐனதா அரசு:

மக்களாட்சியை மலரச் செய்யும் நோக்கில்தான் ஜனதா கட்சி உருவானது. ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவில்லை. மக்களின் அதீத எதிர்பார்ப்புகளை ஜனதா அரசால் நிறைவேற்ற முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. என்னைப் பொறுத்தவரையில் ஜனதா கட்சியின் சோதனை முயற்சி தோற்றுப்போகவில்லை.

அன்னிய முதலீடு:

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மின் உற்பத்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் அன்னிய முதலீடுகள் அனுமதிக்கப்படுவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் நுகர்வோர் சந்தை உள்ளிட்டவற்றில் அன்னிய முதலீடு தேவையில்லாதது. இது இப்படியே தொடர்ந்தால், வர்த்தகர்களாக இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டினர், நாட்டை ஆட்சி செய்யும் அளவுக்குப் போனார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது.

கார்கில்:

கார்கில் வெற்றியைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் ஏதோ பெரிய சாதனை படைத்ததுபோலக் கூறுகிறார்கள். ஆனால், நமது எல்லைக்குள் இத்தனை தீவிரவாதிகள் எப்படி ஊடுருவினார்கள் என்றோ, முக்கியமான இடங்களைப் பிடித்துக் கொண்டார்கள் என்றோ யாரும் கேட்பதில்லை. அரசுக்கும் அரசின் உளவுத் துறைக்கும் ராணுவத்துக்கும் கொஞ்சம்கூட சந்தேகம் ஏற்படவில்லை என்றால் அது அரசின் கையாலாகத்தனத்தின் வெளிப்பாடே தவிர வெற்றியல்ல. எல்லையில் ஏற்பட்ட ஊடுருவலைக்கூடத் தெரிந்து கொள்ளாமல் இருக்கும் ஓர் அரசின் செயல் மன்னிக்கக் கூடியதல்ல.

தங்கத்தை அடமானம் வைத்தது ஏன்?

எனது அரசு நாட்டின் தங்கத்தை எல்லாம் அடமானம் வைத்துவிட்டது, விற்றுவிட்டது என்றெல்லாம் தவறான செய்தியை வேண்டுமென்றே பரப்பினார்கள். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? நாங்கள் அடமானம் வைத்தது நம்மிடமிருந்த கையிருப்புத் தங்கத்தை அல்ல. வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்ட தங்கத்தை நமது சுங்க இலாகா பறிமுதல் செய்து வைத்திருந்தது. அந்தத் தங்கம்தான் அடமானம் வைக்கப்பட்டது.

எதற்காக அடமானம் வைக்கப்பட்டது? என்று கேட்பீர்கள். அந்த நேரத்தில் எனது அரசு காபந்து அரசாக செயல்பட்டுக் கொண்டிருந்த நேரம். நமது அரசு வாங்கியிருந்த கடன்களுக்கு வட்டி கட்ட வேண்டிய கெடு நெருங்கிவிட்டது. முந்தைய அரசு அதற்கு எந்தவித ஏற்பாடும் செய்யாமல் விட்டுவிட்டது. காபந்து அரசு என்றால் எந்தவிதக் கொள்கை முடிவுகளும் எடுக்க முடியாது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க பட்ஜெட் தாக்கல் செய்யவும் முடியாது. ஏதாவது முடிவு எடுத்து குறித்த நேரத்தில் வட்டியைக் கட்டாமல் விட்டால், உலக அரங்கில் இந்தியாவின் மானம் கப்பலேறி விடும்.

அப்படி ஓர் இக்கட்டான நிலையில், கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றிய தங்கத்தை அடமானம் வைத்து நிலைமையைச் சமாளிப்பது என்று முடிவெடுத்தோம். அந்த முடிவினால் இந்தியாவின் மானத்தை உலக அரங்கில் காப்பாற்றினோம் என்பதை மறந்து, எனது அரசு தங்கத்தை விற்றுவிட்டது என்று அவதூறு சொல்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்ற முடிந்தது என்று பெருமைப்படுகிறேன்.

ஊழல்:

ஊழல் பெருகிவிட்டது. எங்கு பார்த்தாலும் லஞ்சம். இந்தக் கூக்குரல்களில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், இந்தியா ஒரு லஞ்ச ஊழல் மலிந்த நாடு என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் போன்றவர்கள்தான் இந்த லஞ்ச ஊழலில் ஈடுபடுகிறார்களே தவிர, சாதாரண விசவாயியோ, ஏழைத் தொழிலாளியோ, மாதச் சம்பளம் வாங்கும் பணியாளியோ லஞ்சம் பெறுவதுமில்லை, கொடுப்பதுமில்லை. அவர்களது எண்ணிக்கைதான் இந்தியாவில் அதிகம். ஒரு சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதற்காக இந்தியாவே லஞ்ச ஊழலில் மூழ்கிக் கிடக்கிறது என்பது பொறுப்பற்ற பேச்சு.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே லஞ்ச ஊழலை அகற்றிட போராட்டம் நடத்த வேண்டும் என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. லஞ்ச ஊழல் இல்லாமல் நிர்வாகம் நடத்துவது அவர்களது பொறுப்பு. இதை எதிர்த்துப் போராடுவது என்றால், அவர்களை எதிர்த்து அவர்களே போராடுவது என்றுதானே அர்த்தம்?

இந்தியாவின் எதிர்காலம்:

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சுதந்திரம் பெற்று ஜனநாயம் சீராக சிறப்பாக செயல்படும் ஒரே நாடு இந்தியாதான். இந்தப் புகழ் இந்திய மக்களின் மேதமையையே சாரும். அரசியல்வாதிகள் தோற்றிருக்கலாம். நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அரசியல்வாதிகளின் தோல்வி இந்த நாட்டின் தோல்வி அல்ல.

நமது மக்களின் திறனில் வைத்துள்ள உறுதி மற்றும் நம்பிக்கையின் மூலம் எல்லாப் பிரச்சினைகளையும் நாம் தீர்க்க முடியும். 1947-ல் நாம் ஒரு ஆணியைக்கூட உற்பத்தி செய்யவில்லை. ஆனால் 1994-ல், உலகின் 13 முக்கிய தொழில்துறை நாடுகளில் நமது நாடும் ஒன்று. கிட்டத்தட்ட நாம் எல்லாவற்றையுமே உற்பத்தி செய்கிறோம். விவசாயத் துறையில் தன்னிறைவு பெற்றுள்ளோம்.

இந்தியாவின் மிகப்பெரிய பலம் இந்தியக் குடிமகன்தான். அவன் படிக்காதவனாக இருக்கலாம். ஆனால் புத்திசாலி. நமது அரசியல்வாதிகள் அவனை ஏமாற்றுவதாக நினைத்தால் முதலில் ஏமாறப்போவது அவர்கள்தான். இந்தியாவால் மட்டும்தான் உலகுக்கு வழிகாட்ட முடியும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் இந்தியாவை நோக்கி படையெடுத்தது ஏன்? அது உலகமே பார்த்து பிரமித்த பொருளாதாரமாக இருந்ததால்தான். அதே நிலைமை விரைவிலேயே திரும்பும். நாளைய தலைமுறை இளைஞர்களிடம் இருக்கும் தேசப்பற்று இந்தியாவுக்கு அதன் இழந்த அருமை பெருமைகளை மீட்டெடுத்துத் தரும். இந்த விஷயத்தில் எனக்கு நம்பிக்கை நிறையவே இருக்கிறது.

—————————————————————————————————————
சந்திரசேகரின் வாழ்க்கைக் குறிப்பு…

1927-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள இப்ராஹிம்பாடியாவில் பிறந்தார். இவரது குடும்பம் விவசாயக் குடும்பம். அலாகாபாத் பல்கலைக் கழகத்தில் மாணவராக இருந்தபோதே, பொதுவுடைமை கருத்துகளால் ஈர்க்கப்பட்டார்.

1950-ம் ஆண்டுகளில் ஆச்சார்யா நரேந்திர தேவின் கருத்துகளால் கவரப்பட்ட சந்திரசேகர், பிரஜா சோசலிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பிரஜா சோசலிஸ்ட் கட்சி சார்பில் 1962-ல், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1965-ல் காங்கிரஸில் இணைந்தார். சில ஆண்டுகளில் அவர், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலாளித்துவத்தை எதிர்த்து மக்களவையில் குரல் கொடுத்தார் சந்திரசேகர். காங்கிரஸில் “இளம் துருக்கியர்’ என்றழைக்கப்பட்ட அணியில் இவர் இடம் பெற்றிருந்தார். இவருடன் மோகன் தாரியா, ராம் தன் உள்ளிட்ட எம்.பி.க்கள் இணைந்து காங்கிரஸின் தலைமையை எதிர்த்து வந்தனர். இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தி கூட, இந்த இளம் துருக்கியர் அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1975-ல் நெருக்கடி நிலை பிரகடனத்தின்போது இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து காங்கிரஸில் இருந்து வெளியேறி ஜெய்பிரகாஷ் நாராயணன் தலைமையிலான இயக்கத்தில் இணைந்து நெருக்கடி நிலையை எதிர்த்தார். இதையடுத்து ஜனதா கட்சி உருவானது. இக் கட்சிக்கு ஏர் உழவன் சின்னம் கிடைத்தது.

1977-ல் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைந்தது.

அதே ஆண்டில், ஜனதா கட்சியின் தலைவராக சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1977-ல் இருந்து அனைத்து மக்களவைத் தேர்தலிலும் (1984-ல் இந்திரா காந்தி மறைவின்போது நடந்த தேர்தலைத் தவிர) வெற்றிப் பெற்றார்.

1980-க்கு முன் ஜனதா கட்சி உடைந்ததும், அக் கட்சியின் தலைவராகவே 1989-வரை நீடித்தார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1983-ல் காஷ்மீரில் தொடங்கி தில்லி வரை பல ஆயிரக்கணக்கான கி.மீ. தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார்.

1989-ல் வி.பி.சிங்குடன் இணைந்து ஜனதா தளத்தை உருவாக்கி காங்கிரஸ் அல்லாத அரசை அமைத்தார். பிரதமராக வேண்டிய வாய்ப்பு கிடைக்காததால் அவர் அமைச்சர் பதவியையும் மறுத்தார்.

1990-ல் மண்டல் கமிஷன் விவகாரத்தால் ஆட்சியை இழந்தார் வி.பி.சிங்.

இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவுடன் 1990-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி பிரதமராக பதவியேற்றார்.

6 மாத காலம் பிரதமராக இருந்த சந்திரசேகர் ஆட்சியில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தில்லி வீட்டை சில் போலீஸôர் வேவு பார்த்ததாக எழுந்த விவகாரத்தால் அவரது ஆட்சிக்கு ஆதரவை விலக்கி கொண்டது காங்கிரஸ்.

1991-ம் ஆண்டு மார்ச் 6-ல், பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார் சந்திரசேகர். அன்று அவர் நாடாளுமன்றக் கட்டத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தனியாக நடந்து சென்று ராஜிநாமா கடிதத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அவர், அரசியலில் அதிக ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், 2004 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

கடந்த 1-ம் தேதி (1-7-2007) தனது 80-வது பிறந்தநாளை அவர் கொண்டாடினார்.

தேசியத் தலைவர்கள் இரங்கல்

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் துணைத் தலைவர்: குடியரசுத் துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், எனக்கு நல்ல நண்பராக இருந்தவர். சோசலிஷ கொள்கையிலும், ஜனநாயகத்துக்கு குரல் கொடுப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. ஏழைகளின் வாழ்வு உயர இறுதி வரை உழைத்தவர் சந்திரசேகர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன்: காந்தியக் கொள்கையில் தீவிர பற்றுக் கொண்டவர். கிராமப் புற மக்கள், கிராமத் தொழில்கள் முன்னேற்றத்தில் அதிக அக்கறைக் கொண்டவர்.

பிரதமர் மன்மோகன் சிங்: மதசார்பற்ற தேசியவாதி. மக்களின் தலைவராக மதிக்கப்பட்டவர். சிறந்த அரசியல்வாதியை நாடு இழந்து விட்டது. அரசியலிலும், ஆட்சியிலும் பல புதுமைகளை கொண்டு வந்தவர்.

முன்னாள் பிரதமர் வாஜபேயி: நீண்ட நாள் அரசியல் நண்பர். அச்சற்ற முறையில் எதற்கும் துணிந்து போராடக் கூடியவர். நீதிக்காக குரல் கொடுத்தவர்.

முன்னாள் பிரதமர் குஜ்ரால்: நாடு நல்ல தலைவரை இழந்து விட்டது. அவருடைய அரசியல் வாழ்க்கை துணிச்சல் மிக்கது.

சோம்நாத் சாட்டர்ஜி: நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிப்பதில் மிகச் சிறந்தவர். 30 ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகமானவர். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: அரசியலில் துணிச்சலுடன் போராடியவர். இளம் வயதில் அரசியலில் பங்கேற்று நாட்டின் பிரதமராக உயர்ந்தவர். நீண்ட அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர்.

பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்: தனது கொள்கைகளை என்றைக்குமே அவர் விட்டுக் கொடுத்ததில்லை. பல்வேறு தரப்பு மக்களுக்காக குரல் கொடுத்தவர்.

லாலு பிரசாத்: விடுதலைக்காக போராடிய வீரர். நெருக்கடி நிலைக் காலத்தில் அவரது பங்கு மகத்தானது.

சீதாராம் யெச்சூரி: பல ஆண்டுகளாக இந்திய அரசியலில் தனி முத்திரை பதித்தவர் சந்திரசேகர். கூட்டணி ஆட்சிக்கு வழிவகை கொடுத்தவர்.

சரத் யாதவ்: இந்திய ஜனநாயகத்தின் தூணாக விளங்கியவர் சந்திரசேகர்.

————————————————————————————————

Dinamani op-ed

தேசிய இழப்பு!

உங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே!

சுதந்திர இந்திய வரலாறு பல பிரதமர்களைச் சந்தித்துவிட்டது. சந்திக்கவும் இருக்கிறது. அந்தப் பதவியை அலங்கரித்த ஒவ்வொரு பிரதமருக்கும் ஒரு தனித்தன்மை இருந்தது என்பது மட்டுமல்ல; அந்தப் பதவியில் அமர்ந்தவர்கள், அவரவர் வகையில் சிறப்புகள் சேர்த்தனர். இந்த விஷயத்தில் சதானந்த்சிங் சந்திரசேகர் விதிவிலக்கல்ல.

மிகக் குறைந்த நாள்களே பிரதமராக இருந்தபோதிலும், அவரது பதவிக்காலம் இரண்டு மிகப்பெரிய பிரச்னைகளின் வேகத்தைத் தணித்து, இந்தியாவில் இனக்கலவரம் ஏற்படாமல் பாதுகாத்தது என்று வரலாறு நிச்சயமாக சந்திரசேகருக்குப் புகழாரம் சூட்டும். ஒருபுறம் மண்டல் கமிஷன் அறிவிப்பின் எதிரொலியாக வடமாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்த வன்முறைகள்; மறுபுறம், அயோத்திப் பிரச்னையால் ஏற்பட்ட மதக்கலவரங்களும், அதனால் ஏற்பட்ட இனவாத விரோதங்களும்.

நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்த வேளையில், இனியும் ஒரு பிரிவினைக்கால மதக்கலவரச் சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்று சந்தேகப்பட்ட சூழ்நிலையில் சந்திரசேகரின் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றது. அப்படியொரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால், ஜாதிக் கலவரங்கள் ஒருபுறமும், மதக்கலவரங்கள் மறுபுறமும் என்று உள்நாட்டுக் கலகமே வெடித்திருக்கும் சாத்தியம் நிலவியது. சந்திரசேகர் பதவியில் தொடர்ந்திருந்தால் அயோத்திப் பிரச்னைக்கு சுமுகமான முடிவு ஏற்பட்டிருக்கும் என்பதுதான் நமது கருத்து.

தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட காரணத்தால் சிலருக்கு சந்திரசேகர் மீது மனவருத்தம் இருக்கலாம். ஆனால், பிரதமர் என்ற முறையில் சந்திரசேகர் எடுத்த எந்தவொரு முடிவுமே பாரபட்சமற்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறு என்று சொல்ல முடியாதது.

பதவியில் இருந்தபோதும் சரி, பதவியை இழந்த பிறகும் சரி, சந்திரசேகர் என்கிற பெயர் தனி அந்தஸ்துடனும், மரியாதையுடனும்தான் வலம் வந்தது. என்னதான் கூச்சலும் குழப்பமும் இருந்தாலும் சந்திரசேகர் பேச எழுந்தார் என்றால் நாடாளுமன்றம் கப்சிப்பென்று நிசப்தமாகிவிடும். பிரதமர் தொடங்கி அத்தனை உறுப்பினர்களும் அவரிடமிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். கட்சி பேதமின்றி எந்த ஓர் உறுப்பினரும் இடைமறித்துப் பேசாத ஒரே ஒரு பேச்சாளர் நாடாளுமன்றத்தில் இருந்தார் என்றால் அது சந்திரசேகர் மட்டும்தான்.

வீம்புக்காரர், முன்கோபி, பிடிவாதக்காரர் – என்ற கோணங்களில் அவரைப் பார்ப்பவர்கள் உண்டு. அத்தனையும் உண்மையும்கூட. அதேசமயம், எந்தவொரு விஷயத்தையும் விவாதிக்க விரும்புபவர் என்பது மட்டுமல்ல, எதிர்தரப்பு வாதத்தில் நியாயமிருந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் அவருக்கு இருந்தது. எந்தவொரு காரணத்துக்காகவும் தனது தன்மானத்தையும் தனக்குச் சரியென்றுபட்ட கொள்கையையும் விட்டுக்கொடுக்காத அவரது பிடிவாதம், சந்திரசேகரை மற்ற தலைவர்களிடமிருந்து வேறுபட வைத்தது. அவருக்குப் பல எதிரிகளையும் ஏற்படுத்தியது.

“”நான் எத்தனை நாள்கள் பிரதமராக இருந்தேன் என்பதைவிட பிரதமராக எப்படிச் செயல்பட்டேன் என்பதுதான் முக்கியம்”~சந்திரசேகர் தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறும் விஷயம் இது. “”எந்தவொரு காரணத்துக்காகவும் பிரதமர் பதவியின் மரியாதையும் கௌரவமும் குலைந்துவிடக் கூடாது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன். அதற்குக் களங்கம் வரும் விதத்தில் நான் செயல்பட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு எனது ஒரே பதில் – எனது ராஜிநாமா கடிதம்தான்” – தனக்கு ஆதரவளித்த ராஜீவ் காந்தியிடம் சந்திரசேகர் சொன்ன விஷயம் இது.

அறுபது ஆண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றின் ஏடுகளை யார் புரட்டிப் பார்த்தாலும், சிறிது காலமே பிரதமராக இருந்த சந்திரசேகரின் கருத்துகளும், பிரச்னைகளுக்கு அவர் எடுத்த தீர்வுகளும் ஒவ்வொரு பக்கத்திலும் நிழலாடும். இந்திய ஜனநாயகம் அழிந்துவிடாமல் பாதுகாத்த பெருமைக்குரிய தலைவர்களில் அவரது பங்கு கொஞ்சநஞ்சமல்ல.

இளம் துருக்கியராக, ஜனதா கட்சியின் தலைவராக, பிரதமராக, மூத்த அரசியல்வாதியாக எல்லாவற்றுக்கும் மேலாக கொள்கைப் பிடிப்புள்ள ஒரு தலைவராக, அன்புடனும் பாசத்துடனும் பழகும் மனிதனாக வாழ்ந்து மறைந்துவிட்டார் சதானந்த்சிங் சந்திரசேகர்.

எந்தவொரு விஷயத்திலும் தீர்க்கமான சிந்தனையும், தெளிவான தீர்வும் கொண்டிருந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மறைவு, ஈடுகட்ட முடியாத தேசிய இழப்பு!

Posted in Agriculture, Allahabad, Alliance, Anjali, Ayodhya, Biography, Biosketch, BJP, Bofors, Bribery, Bribes, Cabinet, Capitalism, Cargil, Caste, Chandrasekar, Chandrasekhar, CharanSingh, Chat, Coalition, Communism, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Corrupt, Corruption, Democracy, Economy, Emergency, Faces, Farming, FDI, Feroze, Finance, Freedom, Fundamentalism, Gandhi, Govt, Incidents, Income, Independence, Indhira, Indira, Indra, infrastructure, Inquiry, Interview, investments, Jan Morcha, Janata, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, JanSakthi, JanSakti, JanShakthi, JanShakti, JP narayan, Kargil, kickbacks, Liberation, Life, LokSaba, LokSabha, Mandal, Manmohan, Marxism, MNC, Morarji, MP, Musharaf, Musharaff, Narain, Narasimha Rao, Narasimharao, Narayan, Nehru, NRI, Opinions, Pakistan, people, PM, Poor, Praja Socialist, PVNR, Rajeev, Rajiv, Rajya Sabha, Rajyasabha, Religion, Republic, Reservations, Rich, Socialism, Sonia, Tax, UP, Uttar Pradesh, UttarPradesh, VP Singh, Wealth | Leave a Comment »

Living with a strong rupee – Impact on Exports & Commerce

Posted by Snapjudge மேல் ஜூலை 5, 2007

ரூபாய் மதிப்பின் ஏற்றமும் விளைவுகளும்

எஸ். கோபாலகிருஷ்ணன்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த 9 ஆண்டுகளில், முன் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. ஜனவரி மாதம் ஒரு டாலர் ரூ. 44.12 ஆக இருந்த மதிப்பு, தற்போது ரூ. 40.50 என்ற அளவை எட்டியுள்ளது. கடந்த 6 மாதங்களில் ரூபாயின் மதிப்பு 9 சதவீதம் உயர்ந்துள்ளது.

ரூபாயின் மதிப்பு உயருவதால் நன்மை, தீமை இரண்டும் உண்டு. வெளிநாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதற்கு ஆகும் செலவு குறையும். ரூபாயின் மதிப்பு உயர்ந்து டாலரின் மதிப்பு சரிவதால், இறக்குமதி செய்பவர்கள் செலுத்த வேண்டிய பணம் குறைகிறது. இது நன்மை.

அதேநேரம், நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு விலை நமக்கு டாலரில் வருகிறது. டாலரின் மதிப்பு சரிந்திருப்பதால் நமக்கு இழப்பு ஏற்படுகிறது. இது நமக்குப் பாதகமானது.

கடந்த காலங்களில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்தபோது, ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையை எடுப்பது வழக்கம். அதாவது, சந்தையில் பெரிய அளவில் டாலரை வாங்குவதன் மூலம் வீழ்ச்சி அடைந்த டாலரின் மதிப்பை ரிசர்வ் வங்கி சரி செய்துவிடும். ஆனால், இந்த முறை ரிசர்வ் வங்கி அவ்விதம் செய்யவில்லை. ஏன் என்ற கேள்வி எழுகிறது.

அண்மைக் காலமாக, ரிசர்வ் வங்கியும் சரி, மத்திய அரசும் சரி, கடுமையாக உயர்ந்திருந்த பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ரூபாய் மதிப்பின் உயர்வை, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்திக்கொண்டன.

டாலர் சரிந்திருப்பதால் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதி விலை குறைந்துள்ளது. இது விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கு உதவியது.

இதனாலும் ரிசர்வ் வங்கியின் இதர நடவடிக்கைகளாலும் பணவீக்கம் தற்போது 4.03 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பணவீக்கம் மற்றும் விலைவாசியைக் கட்டுப்படுத்தும் அதேநேரம், ரூபாய் மதிப்பின் உயர்வால் விளைந்துள்ள பாதகங்களை இனியும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருக்கலாகாது. ஏற்றுமதி கடுமையாக சரிந்து வருகிறது. 2005-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி 26.3 சதவிகித அளவு வளர்ச்சி கண்டது. 2006-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி வளர்ச்சி 19.3 சதவிகிதமாகச் சரிந்தது. ரூபாய் மதிப்பு அபரிமிதமாக உயர்ந்திருக்கும் நடப்பாண்டின் முன்பாதியில் எந்த அளவுக்கு ஏற்றுமதி சரிந்துள்ளது என்னும் விவரங்கள் அடுத்த ஓரிரு மாதங்களில்தான் தெரியவரும்.

ரூபாயின் மதிப்பு உயர்ந்திருப்பதன் விளைவாக, ஏற்றுமதியாளர்கள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, ஜவுளி, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், மருந்து உற்பத்தியாளர்கள், ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதியாளர்கள் பொறியியல் தொடர்பான தொழில்கள் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 35 சதவிகிதம் அமெரிக்காவுக்குத்தான் அனுப்பப்படுகிறது. ஜவுளி ஏற்றுமதியில் கோட்டா முறை ரத்து செய்யப்பட்டது இந்தியாவுக்கு நல்லவாய்ப்பாக அமைந்தது. உற்சாகமாக, உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையில், ஏற்றுமதி ஒப்பந்தங்களைப் பெற்று, உற்பத்தியில் ஈடுபட்டனர். இந்திய ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி ஆர்டர்களைப் பெறும்போது டாலரின் மதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால், சரக்கை அனுப்ப வேண்டிய நேரத்தில் டாலரின் மதிப்பு சரிந்துவிட்டது. இதனால் பலகோடி ரூபாய் இழப்பைச் சந்திக்க வேண்டிய நிலைக்கு ஏற்றுமதியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு மட்டும் தினசரி ரூ. 3.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் தொழில் முக்கியப்பங்கு வகிக்கிறது. வேளாண் துறைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் ஜவுளித்துறையில் 3.50 கோடி பேர் பணியாற்றுகின்றனர். எனவே தற்போதைய நிலை கவலை அளிக்கக்கூடியாதக உள்ளது.

சீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்றுமதியாளர்கள் நாணயப் பரிமாற்றத்தால் பாதிக்கப்படவில்லை. அந்த நாடுகள் தங்கள் நாணயத்தின் மதிப்பை கடந்த பல ஆண்டுகளாக ஒரேநிலையில் வைத்திருக்கின்றன. இதனால் அமெரிக்கச் சந்தையில் சீனாவின் ஜவுளி விலை உயராது. ஆனால் இந்தியாவின் ஜவுளி விலை அதிகரிக்கும்.

தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ள பெரிய நிறுவனங்களைப் பொருத்தவரை, அவர்களது ஏற்றுமதிக்கான லாபம் கணிசமாகச் குறைந்துள்ளது. இதனால், பன்னாட்டுச் சந்தையில் போட்டியிடும் சக்தி அவர்களுக்கும் குறையும்.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் ஈடுபடும் தொழில்கள் கடும் பாதிப்பிலிருந்து தப்பியுள்ளன. அந்த வகையில், ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரணங்களை ஏற்றுமதி செய்வோர் நிலை சற்று ஆறுதல் அளிக்கக் கூடியது. இவர்கள் உற்பத்திக்குத் தேவையான கச்சாப் பொருள்களை வெளிநாடுளிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். கற்களை பட்டைதீட்டியும் புதிய ஆபரணங்களாகத் தயாரித்தும் ஏற்றுமதி செய்கிறார்கள். இவர்களுக்கு இறக்குமதிச் செலவு கணிசமாகக் குறைகிறது. இந்த உபரி லாபம் ஏற்றுமதி இழப்பை ஈடு செய்ய உதவுகிறது.

பொறியியல் ஏற்றுமதியைப் பொருத்தவரை, 2006-07-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 30 சதவிகிதம் அதிகரித்தது. கடந்த ஏப்ரலில் இந்த வளர்ச்சி 23.92 சதவிகிதம் சரிந்துள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ஒருபுறமிருக்க, புதிய வேலைவாய்ப்புகள் பறிபோனதுதான் பெரும் சோகம். ஜவுளி ஏற்றுமதி குறைந்ததால், 2007-08ம் ஆண்டில் 5,79,000 புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்று இந்திய ஜவுளி சம்மேளனத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதில் 2.72 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளும் மற்றும் தொடர்புடைய தொழில்களில் உருவாகக்கூடிய வேலைவாய்ப்புகளும் அடங்கும்.

விசைத்தறி நெசவாளர்களும் புதிய சூழ்நிலையில் வருவாய் இழப்பை எதிர்கொள்ள நேரும். ரூபாய் மதிப்பின் ஏற்றம் மற்றும் டாலரின் சரிவு, இந்திய ஏற்றுமதியை, தொழில் வளர்ச்சியை குறிப்பாக, வேலைவாய்ப்புகளை மோசமாகப் பாதித்துள்ளது என்பது கண்கூடு. எனவே இதற்குரிய பரிகாரம் தேடியாக வேண்டும். பணவீக்கம் ரூபாய் மதிப்பு ஆகிய இரு பிரச்னைகளையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது கம்பிமேல் நடப்பது போல்தான். எனினும் பாரத ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் இதில் தீவிரகவனம் செலுத்தும் நேரம் வந்துவிட்டது.

இது ஒருபுறமிருக்க, நீண்டகால அடிப்படையில் மின்சாரம், போக்குவரத்து, துறைமுகங்களில் நேரும் காலதாமத்தைத் தவிர்த்தல் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளின் மேம்பாடுதான் ஏற்றுமதிக்கு உதவும். ஏற்றுமதியாளர்களும் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக்கொண்டு, உற்பத்திச் செலவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். தங்கள் லாபத்துக்கு எல்லா நேரங்களிலும் அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்க முடியாது.

எனினும், தற்போது எழுந்துள்ள பிரச்னைக்கு உடனடி தீர்வாக ஏற்றுமதியாளர்களுக்கு சில சலுகைகளை வழங்குவது பொருத்தமாக இருக்கும். உதாரணமாக, Duty Drawback எனப்படும் ஏற்றுமதிக்கான சலுகைத் தொகையை அதிகரிக்கலாம். ஏற்றுமதிக்கான பொருள்களை உற்பத்தி செய்வதற்கு குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக் கடன் வழங்குதல் மற்றும் வருமான வரிச் சட்டத்தின் 80 ஏ.ஏ.இ. பிரிவின் கீழ் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரிச்சலுகை, சேவை வரித் தள்ளுபடி ஆகிய நடவடிக்கைகளின் மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)

Posted in Agriculture, Appreciation, APR, Balancesheet, Banks, Biz, Call-Centers, Call-Centre, Capital, Commerce, Commodity, Currency, Deals, Deflation, Deposits, Diesel, Dollar, Duty, Economy, Employment, Euro, Exchange, Expenses, Exports, FDI, Finance, Fluctuations, forecasts, Garment, Gas, GDP, Growth, IMF, Imports, Industry, Inflation, Inflows, InfoTech, Interest, International, investments, Jobs, Loans, markets, MNC, Money, oil, Outflows, Outsourcing, Petrol, Portfolio, pound, Pricing, Productivity, Profit, Profits, Rates, RBI, Recession, Rupee, Sales Tax, service tax, slowdown, Software, Statement, Strength, Tax, Telecom, Textiles, Trading, Transfer, US, USA, Valuation, volatility, WB, World, Yen | Leave a Comment »

Foreign Instituitional Investors – Lucrative opportunities in Emerging Indian markets & sectors

Posted by Snapjudge மேல் ஜூன் 13, 2007

முதலீடுகளுக்கு காத்திருக்கும் தொழில்கள்

எஸ். கோபாலகிருஷ்ணன்

சமீபகாலத்தில், பங்குச்சந்தை ஏறினாலும் இறங்கினாலும் எஃப்.ஐ.ஐ.கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இவர்கள் யார்? “ஃபாரின் இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்ட்டார்ஸ்’ என்பதன் சுருக்கம்தான் ஊஐஐ. அதாவது அன்னிய முதலீட்டு நிறுவனங்கள்.

இந்த நிறுவன முதலீட்டாளர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் நாட்டில் உள்ளவர்களிடமிருந்து பணம் திரட்டி, அதை எந்த நாட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தேடித் திரிபவர்கள்.

அந்தவகையில், இந்திய பங்குச் சந்தையில் கணிசமான தொகையை முதலீடு செய்திருக்கிறார்கள். இவர்கள் பங்குகளை வாங்கினால், விலை ஏறுகிறது. விற்றால் விலை குறைகிறது.

இந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதன்முதலாக 1994-ல் தான் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டன. அது முதல் 2005-ம் ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சத்து, எழுபது ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை இந்தியாவில் கொண்டு வந்து கொட்டியிருக்கின்றன. இந்த பங்குகளின் சந்தை மதிப்பு மேலும் அதிகம் என்று சொல்லத் தேவையில்லை.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பெரிய 500 இந்திய நிறுவனங்களில் அன்னிய நாட்டைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனங்கள் வைத்திருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பு இரண்டு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இது மும்பை பங்குச் சந்தையின் பெரிய 500 நிறுவனப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பில் 35 சதவீதம். அதாவது, மூன்றில் ஒரு பங்குக்கு மேல் எஃப்.ஐ.ஐ.களிடம் உள்ளது!

ஜனவரி 2007 வரையிலான கணக்குப்படி, 1059 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. எனினும், எச்.எஸ்.பி.சி. மார்கன் ஸ்டான்லி, மெரில் விஞ்ச், கோல்ட்மென் சாக்ஸ், சிட்டி வங்கி போன்றவை தான் முதலீடு செய்வதில் முன்னணியில் உள்ளன. உலகநாடுகள் என்று பார்த்தால், அமெரிக்கா முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இந்நிறுவனங்கள் ஏன் இந்தியாவைத் தேடி வருகின்றன? மேலை நாடுகளின் பொருளாதாரம் ஏற்கெனவே நன்கு வளர்ந்துவிட்டது. அதனால், அங்கு முதலீடு செய்யும் பணம், மேலும் பெரிய வளர்ச்சி காண முடியாது. அதேசமயம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அந்த வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு வந்து கடை விரிக்கின்றன.

அவர்கள் முதலீடு செய்வது பங்குச் சந்தையில்தான். ஆகஸ்ட் 2005-ல் பங்குச் சந்தை குறியீடு எண் (சென்செக்ஸ்) 7816 ஆக இருந்தது. டிசம்பர் 2005-ல் 9020 புள்ளிகளாக உயர்ந்தது. இது 17 சதவீத வளர்ச்சி. மே 2006-ல் 12 ஆயிரம் என்னும் மகத்தான உயரத்தை எட்டியது. இப்போது – அதாவது ஓர் ஆண்டில் – 14,500க்குப் பக்கத்தில் மேலும் கீழும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த வெற்றிக்கதை தொடர்ந்தால் அந்நிறுவனங்கள் இங்கு நிலைகொண்டிருக்கும். தொடராதபட்சத்தில், “”அற்ற குளத்து அருநீர் பறவை” போல் பறந்து போய்விடும். ஆக, இந்த முதலீடுகளால், நம் நாட்டு தொழில்களுக்குக் கிடைத்தது என்ன? எத்தனை ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைத்தது?

இது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம், வேறு ஒரு தளத்தில் அன்னிய நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்தியாவில் ஏராளமான அன்னிய நேரடி முதலீடுகள் செய்கிறார்கள். சுருக்கமாக எஃப்.டி.ஐ. என்கிறோம். பல்வேறு தொழில் துறைகளில் நேரடியாக முதலீடு செய்கிறார்கள். இவர்கள் கதை என்ன?

அடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளில், ஆதஐஇ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உலக அளவில் மிகப்பெரிய நாடுகளாக வளர்ந்து விடும் என்று பொருளாதார நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், அன்னிய நேரடி முதலீடுகள் இந்தியாவின் பல்வேறு தொழில்களுக்கு வரத் தொடங்கியுள்ளன.

அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு சில நியதிகளையும், உச்ச வரம்புகளையும் விதித்துள்ளது. உதாரணமாக வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அதிகபட்சம் இவ்வளவு சதவீதம்தான் முதலீடு செய்யலாம் என்று உள்ளது. சில துறைகளில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதில்லை.

கடந்த 16 ஆண்டுகளாக, அதாவது பொருளாதார சீர்திருத்தம் அறிமுகமானது முதல், அன்னிய நேரடி முதலீடு வரத் தொடங்கியுள்ளது. நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், எந்தத் தொழிலில் முதலீடு வந்தால் நமது தொழில் வளம் பெறுமோ, நமக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிட்டுமோ அந்தத் துறைகளில் அன்னிய முதலீடுகள் கணிசமான அளவில் வருவதில்லை.

மாறாக, எந்தத் துறைகளில் முதலீடு செய்தால், உள்நாட்டில் விற்பனை அல்லது வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பெருகி உடனடி லாபம் காண முடியுமோ அந்தத் துறைகளில்தான் அன்னிய நேரடி முதலீடு வருகிறது.

உதாரணமாக, மோட்டார் வாகனத் தொழில், தகவல் தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு ஆகியவை. 1991 முதல் 2007 மார்ச் வரை இந்தியா பெற்றுள்ள அன்னிய நேரடி முதலீடு 55 பில்லியன் டாலர். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி). இதில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 15 பில்லியன் டாலர் இந்தியாவுக்குள் எப்.டி.ஐ. ஆக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல, பெருமிதம் கொள்ளத்தக்கதும்கூட.

ஆனால், கவலையளிப்பது என்னவெனில், இந்தியாவின் பாரம்பரியத் தொழில்களில் ஒன்றான தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தித் தொழிலுக்கு இத்தனை ஆண்டுகளில் கிடைத்த அன்னிய நேரடி முதலீடு வெறும் ஆறு கோடி டாலர்தான். இது ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 0.12 சதவீதம்தான். இந்த தோல் தொழிலை நம்பி 20 லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன.

இந்தியாவின் இன்னொரு முக்கியமான பாரம்பரியத் தொழில் ஜவுளி. எட்டு கோடியே 50 லட்சம் தொழிலாளர்கள் இத் தொழிலை நம்பி உள்ளனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகபட்ச வேலைவாய்ப்பு வழங்கும் தொழில் ஜவுளியே. இந்த மாபெரும் தொழில் ஈர்த்த அன்னிய நேரடி முதலீடு 57 கோடியே 50 லட்சம் டாலர்தான். அதாவது மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 1.22 சதவீதமே.

சரி, அப்படியானால் இதுவரை வந்துள்ள அன்னிய முதலீடுகள் எங்கே போகின்றன? மின்சாரக் கருவிகள் சார்ந்த தொழிலுக்கு 800 கோடி 27 லட்சம் டாலர்கள். அதாவது மொத்த முதலீட்டில் 15 சதவீதம்.

அடுத்து, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட சேவைத்துறைக்கு 700 கோடி, 84 லட்சம் டாலர் (14 சதவீதம்); மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தொலைத்தொடர்பு 3 கோடி, 89 லட்சம் டாலர். (7.12 சதவீதம்).

ஆக, தொழில் நுட்பத்துறையில் முன்னணியில் உள்ள துறைகளுக்கு மட்டுமே அன்னிய நேரடி முதலீடு கணிசமாகக் கிடைத்துள்ளது. சீனாவும், தைவானும் வேலைவாய்ப்புகளை வாரி வழங்கும் துறைகளான ஜவுளி போன்றவற்றில் அதிக முதலீட்டின் மூலம் குறைந்த விலையில் உற்பத்தி செய்து, சந்தையில் போட்டியிட்டு இந்தியாவை ஓரம் கட்ட முடிகிறது.

இன்னொருபக்கம், வங்கதேசம் தங்கள் நாட்டில் ஊழியர்களுக்கான ஊதியம் மிகக் குறைவு என்று பறைசாற்றி, இதே ஜவுளி மற்றும் தோல்துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டியுள்ளது.

இந்நிலையில் கோட்டா முறை ஒழிந்த பின்னரும் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா தனது நியாயமான பங்கைப் பெற இயலவில்லை. இந்தியாவின் இதர துறைகளின் ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது ஜவுளித்துறை ஏற்றுமதி குறைவே.

தற்போது ஜவுளித்துறையில் கிடைக்கும் உள்நாட்டு முதலீடுகள் கூட “சிறப்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி’ என்னும் மத்திய அரசின் திட்டத்தின் வாயிலாகவே என்றால் மிகை ஆகாது.

இந்நிலையில், நடப்பாண்டில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டுவதற்கான இலக்கு 30 பில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இலக்கை கடந்த ஆண்டைப்போல் இரண்டு மடங்காக உயர்த்தினால் மட்டும் போதாது.

கணிசமான அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ஜவுளி மற்றும் தோல் தொழில்களில் கூடுதல் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அதிகபட்ச முனைப்பு காட்டி, முதலீடுகளுக்காக காத்திருக்கும் – தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ள – இத் துறைகளுக்கு புத்துயிர் அளிப்பது அவசியம் மட்டுமல்ல; அவசரமும்கூட.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது

மேலாளர்.)

Posted in Analysis, Auto, Backgrounders, Bonds, Brazil, BRIC, BSE, Bus, Cars, China, Defaltion, Deflation, Diversify, ECE, Economy, EEE, Electrical, Electronics, Emerging, Employment, Exchanges, Exports, FDI, FEMA, FERA, FII, Finance, Funds, GDP, Globalization, Growth, Imports, Index, Industry, Inflation, InfoTech, Instrumentation, investments, job, Leather, Luxury, Manufacturing, markets, Metro, MNC, Model, Motors, NIFTY, NSE, Op-Ed, Opportunities, Options, Outsourcing, pension, Primers, Recession, Retirement, revenue, Risk, Russia, sectors, service, Shares, Stagflation, Stats, Stocks, Taiwan, Tech, Technology, Telecom, Textiles, Trucks | Leave a Comment »

Reserve Bank of India’s Loan Policy – Updates, Analysis, Options

Posted by Snapjudge மேல் மே 7, 2007

ரிசர்வ் வங்கியின் புதிய கடன் கொள்கை

எஸ். கோபாலகிருஷ்ணன்

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டுக்கான நிதி மற்றும் கடன் கொள்கையை ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி. ரெட்டி ஏப்ரல் 24-ம் தேதி அறிவித்தார்.

நிதித்துறையில் மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு அடுத்தபடியாக மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுவது ரிசர்வ வங்கியின் கடன் கொள்கையே. இது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அறிவிக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, ரிசர்வ் வங்கியின் நடைமுறையில் வரவேற்கத்தக்க மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தொழில் துறையினரின் தேவைகள், விலைவாசி நிலவரம், பணவீக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப, கடன் கொள்கையில் உடனுக்குடன் சிறு, சிறு மாற்றங்களை அறிவித்து விட்டு, தொலைநோக்கு மாற்றங்களை மட்டுமே அரையாண்டு நிதி மற்றும் கடன் கொள்கையில் அறிவிக்கத் தொடங்கியுள்ளது ரிசர்வ் வங்கி. இதனால், இப்போது நிதிக் கொள்கை அறிவிப்பில் பரபரப்பான அம்சங்கள் இடம்பெறுவதில்லை.

நிதி மற்றும் கடன் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, விலைவாசியையும் பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவது. இரண்டு, தொழில், விவசாயம், சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடன் தங்கு தடையின்றி கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது.

தற்சமயம், உயர்ந்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதே அவசரத் தேவை. எனினும் அண்மையில் அறிவிக்கப்பட்ட கடன் கொள்கையில் ரிசர்வ் வங்கியின் பிரதானமான விகிதங்கள் மாற்றப்படவில்லை.

ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் 6 சதவிகிதமாகவே தொடர்கிறது. சி.ஆர்.ஆர். எனப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு 6.5 சதவிகிதமாகவே இருக்கும்.

அதேபோல், ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால அவசரக் கடன்களுக்கு வட்டி விகிதம் 7.75 சதவிகிதமாகவே உள்ளது.

மாறாக, இந்த விகிதங்கள் உயர்த்தப்பட்டிருந்தால் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கு வட்டி உயர்த்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். சி.ஆர்.ஆர். எனப்படும் ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வைக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதத்தில் அரை சதவிகிதம் உயர்த்தி இருந்தாலும், வங்கிகளின் நிதி ஆதாரத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முடக்கப்பட்டிருக்கும்.

அதே அளவுக்கு பொது மக்களுக்குக் கடன் கொடுப்பது குறைந்திருக்கும். ஆக, கடன்களுக்கு வட்டி விகிதம் உயராமலும், கடன்தொகை குறையாமலும் புதிய கடன் கொள்கை பார்த்துக் கொண்டது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் அதேநேரம், வளர்ச்சியின் வேகம் தடைபட்டுவிடக் கூடாது என்பதில் ரிசர்வ் வங்கி உறுதியாக இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, சி.ஆர்.ஆர். மற்றும் ரெப்போ விகிதம் (வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால அவசரக் கடனுக்கான வட்டி விகிதம்) கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உயர்த்தப்பட்டது. எனவே அவற்றை மேலும் உயர்த்திக் கடன் பெறுவோர்களின் சுமையை இன்னும் அதிகரிக்க ரிசர்வ் வங்கி விரும்பவில்லை என்பது கண்கூடு.

அப்படியானால், இந்தப் புதிய நிதிக் கொள்கையில் என்னதான் சிறப்பு அம்சம்? நிதிக் கொள்கையில் அனைவரும் முக்கியமாக எதிர்பார்ப்பது ஒன்று உண்டு. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலை குறித்து ரிசர்வ வங்கியின் கணிப்பு என்ன என்று அறிந்து கொள்வதுதான் அது. அந்தவகையில், ஜி.டி.பி. எனப்படும் நாட்டின் மொத்த உற்பத்தியின் மதிப்பு 2007 – 08-ஆம் ஆண்டில் 8.5 சதவிகிதமாக உயரும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. அத்துடன், தற்சமயம் 6 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ள பணவீக்கம், 5 சதவிகிதமாகக் குறைக்கப்படுவதே ரிசர்வ் வங்கியின் குறிக்கோள்.

பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதலாண்டு தற்போது நடந்து வருகிறது. இந்த நிதி ஆண்டில் ஜி.டி.பி. 9 சதவிகிதமாக உயர்த்தப்பட வேண்டும் என்பது இலக்கு. எனினும், ரிசர்வ் வங்கி 8.5 சதவிகிதமாக இருக்கும் என்று அடக்கி வாசிப்பதற்கு காரணம் என்ன?

உலக அளவில், நடப்பாண்டு வளர்ச்சி விகிதம் சற்று குறைவாகவே இருக்கும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அடுத்து, இந்தியாவில் பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகளின் பலன் வெளிப்பட கொஞ்சம் கால அவகாசம் தேவை.

கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து வங்கி டெபாசிட்டுகள் 20 சதவிகிதமாகவும், வங்கிக் கடன்கள் 30 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளன. ஏற்கெனவே இப்படி அதிகரித்துள்ள விரிவான அடித்தளத்தில், மேலும் இதே அளவு வங்கி டெபாசிட்டுகள் அதிகரிக்கும் என்றும், வங்கிக் கடன்கள் 30 சதவிகிதம் உயரும் என்றும் எதிர்பார்க்க முடியாது. வங்கிக்கடன் 24 அல்லது 25 சதவிகிதமே உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிக் கடன் வட்டி விகிதம் உயர்ந்துள்ளதும் இதற்கு ஒரு காரணம். நல்லவேளையாக, ரூ. 20 லட்சத்துக்குக் குறைவான வீட்டுக் கடன்களுக்கு வட்டி உயராது. மாறாக, குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

மேலும், முதல்முறையாக, ரூ. 20 லட்சத்துக்குக் குறைவான வீட்டுக்கடன்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆணை பிறப்பித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவு ரூபாயின் மதிப்பு வலுவடைந்துள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது நாம் இதற்காக பெருமிதம் கொள்ளக்கூடும்.

கச்சா எண்ணெய் உள்ளிட்ட நமது இறக்குமதிப் பொருள்களுக்குக் குறைந்த ரூபாய் கொடுத்தால் போதுமானது. ஆனால், இன்னொரு பக்கம், ரூபாயின் மதிப்பு வலிவடைவதால், நமது ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் குறையும். காரணம், அவர்களுக்குக் கிடைக்கும் டாலர்களின் மதிப்பு குறைகிறதல்லவா?

இது நமது ஏற்றுமதியை இரண்டு வகையில் பாதிக்கக் கூடும். ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் குறையும். இரண்டாவதாக, நஷ்டப்பட்டுக் கொண்டு ஏன் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற மனநிலை ஏற்படக்கூடும். இதனால் ஏற்றுமதி அளவு சரியும். ஏற்றுமதி குறைந்தால், தொழிற்சாலைகளில் உற்பத்தி குறையும். இது தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கும்.

இன்னொரு பக்கம், ஏற்றுமதியாகும் ஒரு பகுதி பண்டங்களின் மூலப்பொருள்கள் இறக்குமதி செய்தவை. இவற்றின் விலை குறைவதால் ஏற்றுமதியாளருக்கு வேறு ஒருவகையில் ஆதாயம் கிடைக்கத்தான் செய்கிறது. ஆகவே, ஏற்றுமதியையும், இறக்குமதியையும் இருவேறு கூறுகளாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.

எப்போது ரூபாயின் மதிப்பு ஓர் அளவுக்கு மேல் உயரும்போது, மேற்கூறிய காரணங்களுக்காக, ரிசர்வ் வங்கி தலையிட்டு, அதனைச் சீர்படுத்த முனைவது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படிச் செய்வதற்கு இதுவரை முன் வரவில்லை. இன்னும் காலம் கனியவில்லை என்று ரிசர்வ் வங்கி கருதுகிறதுபோலும்.

அன்னியச் செலாவணி தளத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் வங்கி டெபாசிட்டுகளுக்கு வட்டி குறைக்கப்பட்டுள்ளது போன்ற மிகச் சிறிய அளவிலான செயல்பாடுகளை காண முடிகிறது. அதேபோல், இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கான தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

அதிவேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியா ஒன்று. இந்நிலையில் நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக இல்லாமல், விலைவாசியையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவதே புதிய நிதிக் கொள்கையின் நோக்கம் என்பது வெளிப்படை.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் முன்னாள் செனட் உறுப்பினர்.)

================================================

ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி வர்த்தகம்: குருமூர்த்தி வலியுறுத்தல்

திருப்பூர், மே 9: டாலர் வீழ்ச்சியால் பாதிப்பு ஏற்படுவதால், ஏற்றுமதியாளர்கள் ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி வர்த்தகம் செய்ய வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை திருப்பூரில் ஏற்றுமதியாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்தார். டாலர் வீழ்ச்சி காரணமாக திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதுடன், தொடர்ந்து இந்நிலையில் ஏற்றுமதி செய்வதில் ஏற்றுமதியாளர்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில், ஏற்றுமதியாளர்கள் கையாளவேண்டிய உத்திகள் குறித்து ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், எஸ்.குருமூர்த்தி ஆலோசனை வழங்கினார்.

குருமூர்த்தி கூறியது: டாலர் வீழ்ச்சியை எதிர்பார்க்கவில்லை என ஏற்றுமதியாளர்கள் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது. நம்நாட்டில், கடந்த ஒரு ஆண்டாக விலைவாசி உயர்ந்துள்ளது. இதற்கு பெட்ரோல் விலை உயர்வும் காரணமாக உள்ளது. நமது தேவையில் முக்கால் பங்கு பெட்ரோல் இறக்குமதி செய்கிறோம். பஸ் கட்டணம், உரம் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் பெட்ரோல் விலை உயர்வு பாதிக்கிறது.

ஆதாரமான பொருளாக இருக்கும் பெட்ரோல் விலை அதிகரிக்கும்போது, அது பொருளாதாரத்தை முழு அளவில் பாதிக்கிறது. பெட்ரோல் விலை 5% உயர்ந்தால், மற்ற பொருள்களின் விலை 10% வரை உயர்ந்துவிடுகிறது. பெட்ரோல் விலை உயர்ந்த நிலையிலும், நமது பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை இருந்தது. ஆனாலும் அரசு சரியாக நிர்வாகிக்காத காரணத்தால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. விலைவாசி உயரும் என ரிசர்வ் வங்கிக்கு முன்கூட்டியே தெரியும்.

கடந்த 2 மாதங்களில் டாலர் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு காரணம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் நம்நாட்டில் முதலீடு செய்வதும், ஏற்றுமதி அதிகரித்துள்ளதும், வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு அனுப்பும் பணத்தாலும் அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகமாக உள்ளது.

ரிசர்வ் வங்கி அதிக அளவில் டாலரை வாங்கியதன் காரணமாக நாட்டில் பணப்புழக்கம் அதிகரித்தது. தொழிலுக்கு தேவையான பணத்திற்கும் கூடுதலாக பணம் வரும்போது, அதை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கின்றனர். இப்படி, ரூ.2.60 லட்சம் கோடி ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி அதிகம் இருப்பதால், அதை அமெரிக்காவிற்கு 2% அல்லது 2.5% என மிகக் குறைந்த வட்டிக்கு கடனாக தருகிறோம். இதனால் ரிசர்வ் வங்கிக்கு நஷ்டம்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அரசை சார்ந்திருக்கும் நிலை இனி இருக்கக்கூடாது. ஏற்றுமதியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடும் நிலை மாறி, இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அரசுக்கு ஆலோசனை சொல்கின்ற நிலைக்கு வரவேண்டும். இதற்காக, ஏற்றுமதியாளர்கள் சிந்தனைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். ஏற்றுமதி வர்த்தகத்தை டாலர் மதிப்பில் நிர்ணயித்து வர்த்தகம் செய்வதைவிட ரூபாய் மதிப்பில் நிர்ணயம் செய்து ஏற்றுமதியாளர்கள் வர்த்தகம் செய்ய வேண்டும் என்றார்.

Posted in Agriculture, Analysis, Banking, Banks, Biz, Bonds, Business, Central Bank, Commerce, Commodity, CRR, Currency, Deflation, Deposits, Dollar, Economy, Employment, Exchange, Export, Exports, FDI, Finance, Foreign, GDP, Growth, House, Housing, Imports, Industry, Inflation, Insurance, Interest, job, Loans, markets, MNC, Money, NRI, Planning, Policy, RBI, Real Estate, Recession, Reserve Bank, Rupee, Rupees, Scheme, SEZ, Shares, Stagflation, Stocks, Thiruppoor, Thiruppur, Thirupur, Tirupoor, Tirupur, Value, workers | Leave a Comment »

Small business needs to be protected – Tamil Nadu Traders Association

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

சில்லறை வணிகத்தை காப்பாற்ற தமிழக அளவில் போராட்டம்: வணிகர் பேரவை மாநாட்டில் தீர்மானம்

கன்னியாகுமரி, பிப். 15: சில்லறை வணிகத்தைக் காப்பாற்ற அனைத்துத் தரப்பு மக்களையும் இணைத்து, தமிழக அளவில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்போவதாக கன்னியாகுமரியில் புதன்கிழமை நடைபெற்ற வணிகர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கன்னியாகுமரியில் இந்த மாநாடு நடைபெற்றது.

மாவட்ட வணிகர்கள் பேரவைத் தலைவர் கே.ஏ. குமாரவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சி. சுகந்தராஜன், மாநிலத் துணைத் தலைவர் எம்.ஆர். சுப்பிரமணியம் இதில் பங்கேற்றனர்.

பின்னர் நடைபெற்ற நெல்லை மண்டல சிறப்பு மாநாட்டுக்கு மாநில வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் தலைமை வகித்தார்.

மாநிலப் பொதுச் செயலர் க. மோகன், மாநிலப் பொருளாளர் த. அரிகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்ட வணிகர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் பா. தம்பித்தங்கம் உள்ளிட்டோர் பேசினர்.

வெள்ளையன் பேசுகையில், வணிகர்கள் அரசியல் வேறுபாடுகளைக் கைவிட்டு ஒற்றுமையுடன் போராட வேண்டும். தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் வணிகர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை. நமது தொழிலைக் காப்பாற்ற நாம் எந்தத் தியாகமும் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

  • சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதைக் கைவிட வேண்டும்.
  • வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு ஏகபோக சக்திகள் சில்லறை வணிகத்தில் நுழைவதைத் தடை செய்ய வேண்டும்.
  • தமிழகத்தில் மதிப்புக் கூட்டு வரியை அரசு அமல்படுத்திய பிறகு விலைவாசி உயர்ந்துள்ளது. எனவே, இதன்மூலம் ஏற்பட்டுள்ள தேவையற்ற விளைவுகளைப் புரிந்துகொண்டு மதிப்பு கூட்டு வரியைத் திரும்பப் பெற வேண்டும்.
  • கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்காக வரிகள் இல்லாத சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அரசு அமைக்கிறது.

இதனால், விளை நிலங்கள் விற்பனை நிலங்களாக மாறி வருகின்றன. எனவே, இதை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

  • ஆன்லைன் வர்த்தக சூதாட்டம் இயல்பான வணிகத்தை சீர்குலைத்து வருகிறது. இதனால், பல்வேறு பொருள்கள் நிமிஷத்திற்கு நிமிஷம் விலை மாறுதல் அடைகிறது.

இதைப் பயன்படுத்தி சில நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த அரசு முன்வர வேண்டும்.

  • தற்போது சேவை வரி மூலமாக மத்திய அரசு பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானமாக வசூலித்து வருகிறது. இதனால், வணிகர்கள், சுய தொழில் புரிவோர், பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வரியையும் அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Posted in Biz, Budget, Business, Commerce, Economy, Exchanges, Exports, Farmlands, FDI, Finance, Globalization, Government, Impact, investments, markets, Online Trading, service tax, SEZ, Small Business, Speculation, Tamil Nadu, Tax, TN, Traders | Leave a Comment »

Inflation, Deflation & Recession: Indian Monetary Policy – S Janakiraman

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007

மீண்டும் பணவீக்கம்

எஸ். ஜானகிராமன்

மீண்டும் பணவீக்கப் பிரச்சினை இந்தியப் பொருளாதாரத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

1960ல் தொடங்கி 2000 – 01ஆம் ஆண்டுவரை 8 முதல் 9 சதவீதமாக இருந்த பணவீக்க அளவு, மத்திய அரசின் விரைவான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் 4லிருந்து 5 சதவீதமாகக் குறைந்தது.

தற்போது மிக அதிக அளவிலான பணஅளிப்பு மற்றும் வங்கிக்கடனில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக பணவீக்கம் 6 சதவீதத்தைத் தாண்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

பங்குச் சந்தையின் தொடர்ந்த ஏறுமுகம் மற்றும் அசையா சொத்துகளின் அபரிமித விலைஉயர்வு ஆகியன இதன் விளைவே என்பதில் ஐயமில்லை.

தற்போதைய பணவீக்கப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில் மத்திய அரசு, அதாவது நிதி அமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் எதிர்கொண்டுள்ள சவால்களை இரண்டாகப் பிரிக்கலாம்.

ஒன்று, இந்த பணவீக்க உயர்வை எவ்வாறு கட்டுப்படுத்துவது; அடுத்து 9 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காதவண்ணம் பணவீக்கத்தை எங்ஙனம் கட்டுப்படுத்துவது என்பதாகும்.

அடிப்படையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு பொதுவாக நான்கு வித நடவடிக்கைகளை எடுப்பதுண்டு. அவை

  • பணக்கொள்கை,
  • நிதிக்கொள்கை,
  • வர்த்தக மற்றும்
  • செலாவணிக் கொள்கை என்பவை ஆகும்.

பணக்கொள்கை தொடர்பான நடவடிக்கையின் மூலம் பண அளிப்பையோ அல்லது வட்டி விகிதத்தையோ கட்டுப்படுத்த இயலும்.

நிதிக்கொள்கை தொடர்பான நடவடிக்கையின் மூலம் தீர்வை தளர்வுகளுக்கு வழிவகுப்பது; வர்த்தகக் கொள்கையின் மூலம் ஏற்றுமதி, இறக்குமதிக் கட்டுப்பாடு மற்றும் தளர்வுக்கு வழிகோலுவது; செலாவணிக் கொள்கையின் மூலம் ரூபாய் மதிப்பை வலுப்படுத்தி, இறக்குமதிப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது ஆகும்.

பணவீக்கத்திற்குக் காரணமான பணசுழற்சி மற்றும் பண உருவாக்கம், பொருள்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கிறது என்பது பரவலான கருத்து. ஆகவே பணவீக்கப் பிரச்சினையை பணவளர்ச்சியை மட்டுப்படுத்துவதன் மூலமோ அல்லது வட்டி விகிதத்தின் மூலமோதான் கட்டுப்படுத்த இயலும்.

அண்மையில் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கையும் இதன் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.

அதேவேளையில், தற்போதைய பணவீக்கம் சந்தைத் தேவையின் அடிப்படையில் எழுந்த காரணியாக இல்லாமல் சந்தை அளிப்பின் பின்புலத்தால் எழுந்த காரணியாக இருப்பதால் இதைக் கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் ரிசர்வ் வங்கி பெரிய அளவில் பங்களிப்பது என்பது இயலாத செயலாகும்.

ஆகவே நிதியமைச்சகத்தின் நிதிக்கொள்கை தொடர்பான நடவடிக்கைகள் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

சிமெண்ட், அலுமினியம், ரசாயனப் பொருள்கள் மற்றும் சில குறிப்பிட்ட மூலதனப் பொருள்களின் மீதான சுங்கத் தீர்வையை ஏற்கெனவே கணிசமாகக் குறைத்ததன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் நிதியமைச்சகமும் களத்தில் இறங்கியுள்ளது ஆரோக்கியமான சமிக்ஞையாகும்.

இதன் மூலம் உயரும் பணவீக்கத்தின் எதிர்மறையான தாக்கத்தை வெகுவாகக் குறைக்க முடியும்.

இதுபோன்ற பன்முக நடவடிக்கைகளால் சில நேரங்களில் பணவீக்கம் காணாமல்போய் பணவாட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை.

ஆனால் இன்றைய அளவில் பணவீக்கம் என்பது உலகளாவிய பிரச்சினை. வளர்ந்த, வளர்ச்சியடைந்து வரும் மற்றும் பின்தங்கிய நாடுகள் அனைத்திலும் உள்ள மத்திய வங்கிகள் அனைத்தும் பணக்கொள்கையின் மூலம் பணவீக்கத்தை அணுகும் போக்கு தொடர்ந்து வருகிறது.

அதேவேளையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவிகிதத்தை உயர்த்துவது என்ற வழக்கமான நடவடிக்கையைத் தாண்டி சிந்திக்கவும், செயல்படவும் தொடங்க வேண்டியது அவசியமாகும். இந்தியா இதற்கு விதிவிலக்கல்ல.

மேலும் வட்டி விகித உயர்வு என்ற நடவடிக்கையைப் பெருமளவு சார்ந்திருப்பது என்பது பொருளாதாரத்தை இறக்கநிலைக்குக் கொண்டு செல்லும் என்ற வாதத்தை இந்தியா கடந்த காலங்களில் நிரூபணமாக்கியுள்ளது.

பொருளாதார உண்மை நிலவரம் பற்றிய முழுமையான தகவல்கள் ரிசர்வ் வங்கியிடம் இல்லாதது பணக்கொள்கையைக் கொண்டு மட்டும் தற்போதைய பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தலாம் என்ற வாதத்தைப் பொய்யாக்குகிறது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் இந்தியாவின் 10 சதவீத வளர்ச்சி இலக்கு பாதிக்கப்படும் என்ற ஐயத்துக்கும் அடிப்படை இல்லை.

இருப்பினும் 9 சதவீத பொருளாதார வளர்ச்சி, 6 சதவீத பணவீக்கம் என பயணத்தைத் தொடங்கியுள்ள இந்தியா, 10 சதவீத வளர்ச்சி மற்றும் 2 சதவீத பணவீக்கம் என 10 ஆண்டுகளாகப் பயணத்தைத் தொடர்ந்து வரும் சீனாவிடமிருந்து கற்க வேண்டியது நிறையவே உள்ளது.

(கட்டுரையாளர்: விரிவுரையாளர், திருவள்ளூர்).

Posted in Analysis, APR, Background, Banks, BSE, Business, Commerce, Commerce Goals, Customs, Deflation, Economy, Exports, FDI, Finance, Finance Ministry, Financial Policy, Foreign Exchange, Imports, Index, India, Inflation, Interest Rates, Invsetments, Loans, Monetary Policy, NSE, Op-Ed, Opinion, Primer, RBI, Recession, Reserve Bank of India, Rupee, Shares, Stock market, Tax | Leave a Comment »

Sonia sparks debate on ‘Wal-Mart effect’ of foreign investment

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: நடுநிலைப் பாதையே சோனியாவின் கருத்து

புது தில்லி, பிப். 8: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதில், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய நடுநிலைப் பாதையை பின்பற்ற வேண்டும் என்றுதான், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் சோனியா காந்தி வலியுறுத்தி இருப்பதாகக் கருத வேண்டும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

சில்லறை வர்த்தகத்தில் பார்தி -வால் மார்ட் கூட்டு தொழில் முயற்சியின் பின்னணியில், மன்மோகன் சிங்குக்கு எச்சரிக்கையுடன் செயல்படுமாறு ஆலோசனை கூறி சோனியா காந்தி கடிதம் எழுதியதாகக் கூறப்படுவது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி இவ்வாறு பதில் அளித்தார்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை தடை செய்ய வேண்டும் என்றோ அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளே இல்லாமல் அதை அனுமதிக்க வேண்டும் என்றோ இரு வேறு அதீதங்களை அந்தக் கடிதம் வலியுறுத்துவதாகக் கருதக் கூடாது.

சாதாரண மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் காங்கிரஸ் கட்சி ஆர்வம் கொண்டுள்ளது. ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்புகளுடன் கூடிய நடுநிலைப் பாதையைப் பின்பற்ற வேண்டும் என்பதே காங்கிரஸின் நிலை என்றார் அபிஷேக் சிங்வி.

சோனியா காந்திக்கும் மன்மோகன் சிங்குக்கும் இடையில் கலந்துரையாடல் இல்லை என்ற பாஜக குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார்.

சில்லறை வியாபாரத்துக்கு பாதிப்பு

சில்லறை வியாபாரத்தில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கும் முன் அது குறித்து முழுமையாக அலசி ஆராய வேண்டும், நாட்டையும் சாதாரண மனிதனையும் பாதுகாப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. இதைப் பரிசீலனை செய்த பிரதமர் மன்மோகன் சிங் இவ் விஷயத்தை வர்த்தக அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளதாகத் தெரிகிறது.

இந்தியாவின் விரைவான வளர்ச்சிக்கு வெளிநாட்டினர் முதலீடு தேவை என்பதால் பல்வேறு பெரிய தொழில்களில் முதலீடு செய்ய அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் சிறிய தொழில்களில் கூட அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது.

சில ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கும் சில்லறை வியாபாரிகளுக்குப் போட்டியாக சில இந்திய, வெளிநாட்டு நிறுவனங்கள் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கீரை, காய்கறி முதல் பருப்பு, உளுந்து வரை பல்வேறு பொருள்களை விற்பனை செய்யும் மையங்களைத் தொடங்கியுள்ளன. இத்தகைய மையங்களில் விற்கப்படும் பொருள்களின் விலை சந்தை விலையை விட சற்றே குறைவாக உள்ளது. காரணம் பொருள்களை உற்பத்தியாகும் இடத்துக்கே சென்று கொள்முதல் செய்து வருகின்றனர். மேலும் விற்பனை மையங்கள் அதி நவீன வசதியுடன் உள்ளன.

இது தவிர, ஒரு குறிப்பிட்ட தொகைக்கு பொருள்கள் வாங்கினால் அவற்றை வீட்டுக்கே அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. தொடர்ந்து வாங்கினால் சிறப்புச் சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. இத்தகைய கவர்ச்சிகரமான திட்டங்களால் மக்கள் சாதாரண வியாபாரிகளைப் புறக்கணிக்கும் போக்கு காணப்படுகிறது.

நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான சில்லறை வியாபாரிகள் உள்ளனர். தமிழகத்தில் சென்னையில் மட்டும் லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். பெரிய நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் சிறு வியாபாரிகள் திணறுகின்றனர். இந்த நிறுவனங்கள் இப்போது பெரிய நகரங்களில் மட்டுமே தங்கள் வியாபாரத்தைத் தொடங்கியுள்ளன. காலப்போக்கில் சிறிய நகரங்களுக்கும் அவை விரிவுபடுத்தப்படலாம்.

இதனால் வட்டிக்கு வாங்கி சில ஆயிரங்கள் அல்லது சில லட்சங்கள் முதலீடு செய்து தொடங்கப்பட்ட சிறு கடைகள் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்து விடும் என்று வணிகர் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

மேலும் காலப்போக்கில் சிறு கடைகள் அழிந்தபிறகு, பெரிய நிறுவனங்கள்தான் சந்தை விலையை நிர்ணயம் செய்யும். அப்போது மக்கள் நலன் புறந்தள்ளப்பட்டு லாபம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும். இதனால் விலைவாசி அதிகரிப்பதுடன், இந்த விற்பனையகங்களிலேயே பொருள்கள் வாங்க மக்கள் நிர்பந்திக்கப்படுவார்கள். இதன் காரணமாக, பல லட்சம் பேர் வேலையை இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும். வணிகம், விவசாயம், நெசவு போன்ற தொழில்கள் பெருமளவு பாதிக்கப்படக்கூடும் என்றும் வணிகர் அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே ஆன் லைன் என்ற ஊக வர்த்தகம் மூலம் பல்வேறு பொருள்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன.

எனவே, பல லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாக இது உள்ளது. இதில் அரசு துரிதமாகத் தலையிட்டு, பல்வேறு அமைப்புகளைக் கொண்ட குழு அமைத்து, இதன் பாதிப்பைக் கண்டறிந்து, சிறு வியாபாரிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் ஏழைகள் நிறைந்த நம் நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும். அது பல்வேறு தொடர் பிரச்சினைகளுக்கு வழி வகுத்துவிடும்.சில்லறை வியாபாரத்துக்கு பாதிப்பு

Posted in Analysis, Assets, Background, Bharti, Big Box, Biz, Business, Commerce, Cong(I), Congress, Congress (I), Congress Party, Dinamani, Economics, Economy, FDI, Finance, Foreign investment, Indira Congress, Indra Congress, Interest, Investment, Loans, Manmohan Singh, Market, Monopoly, Op-Ed, Opinion, PM, Protection, retail, Retailer, Safeguards, Small Business, Sonia Gandhi, Sonia Gandi, Sudeshi, Swades, Wal-Mart, Walmart | Leave a Comment »