தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியருக்கும் வேலைநிறுத்த உரிமை உண்டு: ஜோதி பாசு
கோல்கத்தா, அக். 28: தொழிலாளர்களிடம் இருந்து வேலைநிறுத்த உரிமையைப் பறிக்கக் கூடாது; தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் வேலைநிறுத்த உரிமை உண்டு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான ஜோதி பாசு கூறினார்.
தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமை தொடர்பாக கட்சிக்குள் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை. தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமையை நாம் பறிக்க முடியாது; அதே நேரத்தில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அடிக்கடி வேலைநிறுத்தம் ஏற்பட்டு, உற்பத்தி பாதிக்கப்பட்டுவிடாமல் தடுக்க, அத் துறையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கலாமா என்பது குறித்து ஆராயலாம் என்றும் அவர் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம், கோல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடந்தது. அதில் பங்கேற்ற ஜோதி பாசு, பின்னர் நிருபர்களிடம் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தார்.
ஆனால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை வலுக்கட்டாயமாக, பலத்தைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்தக் கூடாது என்று கூறியுள்ளார் மேற்கு வங்க மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா. மேற்கு வங்கத்தில் புதிதாக பல தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கும் புத்ததேவ், வேலைநிறுத்தத்தால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுவிடாமல் தடுப்பதிலும் அக்கறை காட்டிவருகிறார்.
அண்மையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தியது. அப்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொண்டார் புத்ததேவ்.
மத்திய அரசின் மக்கள்~விரோத பொருளாதாரக் கொள்கைகளையும் தனியார்மயமாக்கல் மற்றும் அரசு நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கும் விற்கும் கொள்கையையும் எதிர்த்து டிசம்பர் 14-ம் தேதி பொது வேலைநிறுத்தம் செய்ய சிஐடியூ தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இப் பின்னணியில், வேலைநிறுத்த உரிமை குறித்து ஜோதி பாசு தெரிவித்துள்ள கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.