Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஒக்ரோபர் 23rd, 2006

AIIMS Vengopal’s corrupt practices exposed by the Healthcare Ministry

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2006

வேணுகோபாலின் ஆதரவாளர்களுக்கு வெளிநாட்டுப் பயணம், நட்சத்திர விருந்து: மக்கள் பணத்தில் “கொண்டாட்டம்’

ஏ. தங்கவேல்

புதுதில்லி, அக். 24: சர்ச்சைக்குரிய அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக (AIIMS) இயக்குநர் டாக்டர் பி. வேணுகோபால், தனது ஆதரவாளர்களுக்கு, வெளிநாட்டுப் பயண வாய்ப்புக்கள் வழங்கி, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விருந்தளித்து, பொதுமக்கள் பணத்தில் குஷிப்படுத்தியுள்ளார் என்பது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஏஐஐஎம்எஸ்-ஸின் நிர்வாக அமைப்புக் கூட்டம் கடந்த வாரம் நடந்தபோது, இதுதொடர்பான ஆவணங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன. அந்த ஆவணங்களின் மூலம், நோயாளிகளுக்கு அல்லாமல் மற்ற தேவையற்ற காரியங்களுக்கு பொதுமக்கள் பணம் விரயமாக்கப்பட்டது தெளிவாகியுள்ளது.

  • ஏஐஐஎம்எஸ் இயக்குநர்,
  • துணை இயக்குநர் அலுவலகத்தின் நான்காம் பிரிவு ஊழியர்கள்,
  • மூத்த நிதி நிர்வாக அதிகாரி ஆகியோருக்கு செல்போன்கள் மக்கள் பணத்தில் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு ஆடம்பர விருந்துகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இயக்குநருக்கு வேண்டிய நபர்களுக்கு, தகுதியில்லாவிட்டால் கூட, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்வதற்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு, விமான டிக்கெட்டுகளுக்காக பெருமளவு தொகை செலவிடப்பட்டுள்ளது. அதுபோன்ற கருத்தரங்குகளுக்கு அனுப்பப்பட்டவர்களின் பட்டியலைப் பார்க்கும்போது, அவர்களுக்கும் அந்தக் கருத்தரங்ககுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

நோயாளிகளிடமிருந்து அறுவைச் சிகிச்சை மற்றும் ஸ்கேனிங் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளுக்காக ஏஐஐஎம்எஸ் நிர்வாகத்தால் வசூலிக்கப்பட்ட டெபாசிட் தொகை சுமார் ரூ.40 கோடி, விதிகளுக்கு மாறாக, நிரந்தர டெபாசிட்டில் போடப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி அறுவைச் சிகிச்சை நடைபெறாத நிலையில், அந்தத் தொகை நோயாளிகளுக்குத் திருப்பியளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

குற்றப்பிரிவு போலீஸôரிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சகம் நடத்திய விசாரணையில் வெளியான இந்த விவரங்கள் அடங்கிய அறிக்கையும் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வேணுகோபால் உடனடியாகப் பதிலளிக்க முடியவில்லை.

அறுவைச் சிகிச்சைக்குத் தேவைப்படும் கருவிகள் மற்றும் நோயாளிகளுக்கான உணவுப் பொருள்கள், டெண்டர் முறையில் முடிவு செய்யாமல், ஒவ்வொரு ஆண்டும் ஒரே குறிப்பிட்ட சப்ளையரிடமிருந்து வாங்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும், பொதுமக்கள் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதற்கான தெளிவான ஆதாரங்கள் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in AIIMS, Anbumani, Corruption, Healthcare, India, Vengopal, Venugopal | Leave a Comment »

Who will be the next Mayor of Chennai?

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2006

சென்னை மாநகராட்சியின் புதிய மேயர் யார்?- 3 பேர் பெயர் அடிபடுகிறது

சென்னை, அக்.23-

சென்னை மாநகராட்சி தேர்தல் கடந்த 13 மற்றும் 15 தேதிகளில் நடந்து முடிந்தது. இதன் ஓட்டு எண்ணிக்கை கடந்த 20-ந்தேதி நடந்தது. மொத்தம் 155 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில்

  • 90 இடங்களில் தி.மு.க.வும்,
  • 38 இடங்களில் காங்கிரசும்,
  • 17 இடங்களில் பா.ம.க.வும்,
  • அ.தி.மு.க. 4 இடங்களிலும்,
  • இந்திய கம்ïனிஸ்டு,
  • விடுதலை சிறுத்தைகள் தலா 2 இடங்களிலும்,
  • ம.தி.மு.க.,
  • பகுஜன்சமாஜ் தலா ஒரு இடங்களிலும் வெற்றிப்பெற்றுள்ளன.

கடந்த 2001- ம் ஆண்டு மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. 67 இடங்களை கைப்பற்றியது. இதன் பின்பு மற்ற கட்சியில் இருந்து விலகி சில கவுன்சிலர்கள் அ.தி.மு.க.வில் சேர்ந்ததால் அதன் பலம் 77 ஆக உயர்ந்தது.

மாநகராட்சி மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தின் காரணமாக அவர் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த தேர்தலில் 54 வார்டுகளை கைப்பற்றிய தி.மு.க. இந்த தேர்தலில் 90 வார்டுகளை கைப்பற்றி தனி மெஜாரிட்டி பெற்றுள்ளது.

சென்னை மாநகராட்சி மேயர்பதவி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே மேயர், துணைமேயர் ஆகியோர் தி.மு.க. கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களால் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.

மேயர்பதவி தென்சென்னையை சேர்ந்த கவுன்சிலர் ஒருவருக்கும், துணைமேயர் பதவி வடசென்னையை சேர்ந்த கவுன்சிலருக்கும் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேயர் பதவிக்கு

  • மா.சுப்பிரமணியம்,
  • தனசேகரன்,
  • சுரேஷ்குமார் ஆகியோர் பெயர் அடிபடுகிறது.

மேயர் பதவிக்கு பெயர் அடிபடும் மா.சுப்பிரமணியம் தென்சென்னை மாவட்டத்தில் 140-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இவர் கடந்த முறை மாநகராட்சி மண்டலக்குழு தலைவராக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் தி.மு.க. மாநில இளைஞரணி துணைச்செயலாளராக சிறப்பாக பணியாற்றியுள்ளார். சைதாப்பேட்டை சட்டமன்றத்திற்கு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ராதாரவியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அந்த தேர்தலில் இவரை ஆதரித்து கருணாநிதி பிரசாரம் செய்தபோது மா.சுப்பிரமணி மாசற்றவர் என்று பாராட்டி பேசினார். மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக பணியாற்றியபோது அவருடன் இணைந்து சிறப்பாக பணியாற்றியவர். எனவே சென்னை மாநகராட்சி மேயராக இவரை தேர்ந்தெடுக்க அதிகவாய்ப்புகள் இருப்பதாக தி.மு.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இது பற்றி மா.சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, “மேயர் பதவி பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் முதல்-அமைச்சர் கருணாநிதிதான் முடிவு செய்வார்” என்றும் கூறினார்.

இதேபோல் 130-வது வார்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தனசேகரன் மேயராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது. தனசேகரன் தி.மு.க. வுக்கு சோதனைஏற்பட்ட காலத்தில் எல்லாம் களத்தில் இறங்கி கட்சிக்காக தீவிரமாக பணியாற்றுபவர். தி.மு.க. பகுதிகழக செயலாளராக இருந்து வருகிறார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் குண்டர்கள் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆட்சியில் மழைக்காலத்தில் எம்.ஜி.ஆர் நகரில் வெள்ள நிவாரண நிதி வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டநெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு தனசேகரன் தான் காரணம் என்று கூறி போலீசார் அவரை கைதுசெய்தனர். இவர் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது என்று கூறி கருணாநிதி போராட்டம் நடத்தினார். உச்சநீதிமன்றம் வரை சென்று, இவர் மீது போடப்பட்டது பொய்வழக்கு என்பதை நிரூபித்து காட்டினார். கே.கே.நகர் பகுதியில் தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்காக அரும்பாடு பட்டவர். ஆகவே இவர் மேயராக தேர்ந்தெடுக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

இது மட்டுமில்லாமல் 86-வது வார்டில் இருந்து கவுன்சிலராக தேர்தெடுக்கப்பட்ட சுரேஷ்குமார் பெயரும் மேயர்பதவிக்கு அடிபடுகிறது. காரணம் அவர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றிபெற்ற சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் பகுதிகழக செயலாளராக இருந்து பொதுமக்களின் பல்வேறு பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு உதவினார்.

சென்னை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்னும் 2 நாட்களில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் மேயர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று தி.மு.க. தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

துணைமேயர் பதவிக்கு

  • 111-வது வார்டு கவுன்சிலர் செல்வி,
  • 69-வது வார்டு சாந்திபாய்,
  • 68-வது வார்டு கவுன்சிலர் வசந்தி

ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. 25-ந்தேதி சென்னை மாநகராட்சி கவுன்சிலராக தேர்வுசெய்யப்பட்ட 155 பேரும் பதவியேற்றுக்கொள்கிறார்கள்.
29-ந்தேதி காலை சென்னை மாநகராட்சி மன்றத்தில் மேயர்தேர்தல் நடைபெறுகிறது.

Posted in Chennai, Chepauk, Civic Polls, Dhanasekaran, Elections, KK Nagar, Local Body election, Ma Subramaniam, Madras, Mayor, Radha Ravi, Saidapet, Santhi bai, Selvi, South Madras, Sureshkumar, Tamil Nadu, Vasanthi | Leave a Comment »

DMDK >> MDMK, CPI(M) + CPI & BJP

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2006

உள்ளாட்சி தேர்தலிலும் விஜயகாந்த் கட்சிக்கு புதிய செல்வாக்கு: ம.தி.மு.க., கம்ï. கட்சிகளை விட கூடுதல் ஓட்டுகள்

சென்னை, அக். 23-

விஜயகாந்த் தொடங்கியுள்ள தே.மு.தி.க. கட்சி சட்டசபை தேர்தலில் முதன் முதலாக அடியெடுத்து வைத்தது. விருத்தாசலத்தில் போட்டியிட்ட விஜயகாந்த் எம்.எல்.ஏ. வாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

போட்டியிட்ட மற்ற தொகுதிகளில் விஜயகாந்த் கட்சி வெற்றிபெறவில்லை என்றாலும் அனைத்து தொகுதிகளிலும் இந்த கட்சி வேட்பாளர்கள் அதிக ஓட்டுகளைப் பெற்று முக்கிய இடத்தைப் பிடித்தனர். இது போல மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலிலும் தே.மு.தி.க. வுக்கு 3-வது இடம் கிடைத்தது.

முதன் முறையாக உள்ளாட்சி தேர்தலை சந்தித்துள்ள இந்த கட்சி அதிரடியாக 607 உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றி தனது புதிய செல்வாக்கை நிரூபித்துள்ளது.

தே.மு.தி.க சார்பில் போட்டியிட்ட 16 பேர் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஆகி இருக்கிறார்கள். நகராட்சி கவுன்சிலர் பதவி 71 பேருக்கும், மூன்றாம் நிலை நகராட்சி பதவி 27 பேருக்கும், பேரூராட்சி கவுன்சிலர் பதவி 234 பேருக்கும் கிடைத்துள்ளது. இதுவரை 244 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவியும் 15 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியும் இந்த கட்சிக்கு கிடைத்திருக்கிறது.

பல தேர்தல்களை சந்தித்துள்ள

  • ம.தி.மு.க. 527 இடங்களிலும்,
  • மார்க்சிஸ்டு கம்ïனிஸ்டு 349 இடங்களிலும்,
  • பா.ஜனதா கட்சி 228 இடங்களிலும்,
  • இந்திய கம்ïனிஸ்டு கட்சி 196 இடங்களிலும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளன.

ஆனால் தே.மு.தி.க. 607 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பெரிய கட்சிகளின் வெற்றி வாய்ப்பை கேள்விக்குறி ஆக்கிய விஜயகாந்த் கட்சி உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க., கம்ïனிஸ்டு, பாரதீய ஜனதா கட்சிகளின் வெற்றியை தட்டிப் பறித்துள்ளது.

இந்த கட்சியின் புதிய செல்வாக்கை எடுத்துக் காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் ëகருத்து தெரிவிக்கின்றனர்.

Posted in BJP, Civic Polls, CPI, CPI(M), DMDK, local body elections, MDMK, Tamil Nadu, Vijayakanth, Vijayganth | 6 Comments »

DMK Alliance apportions Tamil Nadu civic election leaderships

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2006

நகரசபை தலைவர் பதவி: தி.மு.க. கூட்டணி கட்சிகள் தீவிரம்

சென்னை, அக். 23-

உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. கட்சி அடிப்படையில் தேர்தல் நடந்த சுமார் 20 ஆயிரம் உள்ளாட்சி பதவிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் தி.மு.க. வசமாகி உள்ளது.

6 மாநகராட்சிகளிலும் வெற்றி பெற்றுள்ள தி.மு.க., மொத்தம் உள்ள 152 நகர சபைகளில் சுமார் 120 நகர சபைகளில் ஜெயித்துள்ளது. இதே போல பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றிலும் தி.மு.க. சுமார் 70 சதவீத இடங்களில் ஆதிக்கம் செலுத்தி உள்ளது.

இதையடுத்து மாநகராட்சி மேயர் பதவி நீங்கலாக மற்ற பதவிகளுக்கான இடப்பங்கீடு பேச்சுவார்த்தையை கூட்டணிக் கட்சிகளுடன் தி.மு.க. நடத்தியது. அதில் உடன்பாடு எட்டப்பட்டது.

மொத்தம் உள்ள 152 நகர சபைகளில் 25 நகரசபை கள் காங்கிரசுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. 561 பேரூராட்சி களில் 95 பேரூராட்சி வழங்கப் பட்டுள்ளது. 29 மாவட்ட ஊராட்சிகளில் திருவள்ளூர், ராமநாதபுரம், சிவகங்கை, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய 5 மாவட்ட ஊராட்சிகள் காங்கிரசுக்கு கிடைத்துள்ளது.

அது போல 385 ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளில் 72 ஊராட்சித் தலைவர்கள் பதவி காங்கிரசுக்கு வழங்கப் பட்டுள்ளது.
————————————————–
பா.ம.க.வுக்கு 14 நகர சபை தலைவர் பதவி கிடைத் துள்ளது. மேலும் காஞ்சீபுரம், சேலம், கடலூர், தர்மபுரி, விழுப்புரம் ஆகிய 5 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி யும் பா.ம.க.வுக்கு கிடைத்துள்ளது.

43 பேரூராட்சிகள், 51 ஊராட்சி ஒன்றியங்களும் பா.ம.க.வுக்கு கொடுக்கப் பட்டுள்ளது.

————————————————–

மார்க்சிஸ்ட் கம்ï னிஸ்டு கட்சிக்கு 7 நகர சபை, 1 மாவட்ட ஊராட்சி, 24 பேரூராட்சி, 9 ஊராட்சி ஒன்றியங்கள் ஒதுக்கப்பட்டுள் ளது.
————————————————–
இந்திய கம்ïனிஸ்டு கட்சிக்கு 4 நகரசபை, 2 மாவட்ட ஊராட்சி அமைப்பு, 8 பேரூராட்சி, 13 ஊராட்சி ஒன்றியங் கள் வழங்கப்பட்டுள்ளது. விடுலைசிறுத்தைகளுக்கு நெல்லிக்குப்பம், திண்டிவனம் ஆகிய 2 நகரசபைகளும், 5 பேரூராட்சிகள், 2 ஊராட்சி ஒன்றியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

————————————————–
புரட்சி பாரதம் கட்சிக்கு திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியமும்,

————————————————–
உழவர் உழைப் பாளர் கட்சிக்கு தாராபுரம் ஊராட்சி ஒன்றியமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதி உள்ள உள்ளாட்சி பதவிகளை தி.மு.க. தன் வசம் வைத்துள்ளது.

இடப்பங்கீடு முடிந்து விட்டதால் அடுத்தக்கட்டமாக தலைவர், துணைத் தலை வர் பதவியை பெற தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகி களிடம் கடும் போட்டி ஏற்பட் டுள்ளது. எப்படியாவது தலைவர் பதவியை பெற்று விட வேண்டும் என்று பலரும் தற்போது தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

சில இடங்களில் சுயேட்சை களை தங்களுக்கு ஆதரவாக இழுக்கும் மறைமுக வேலை யும் ரகசியமாக நடந்து வரு கிறது. இடப்பங்கீடு செய்யப் பட்டுள்ள இடங்களில் பதவி களை உரியவர்கள் பெறும் வகையில் ஒத்துழைக்க வேண்டும் என்று தி.மு.க. கூட்டணித் தலைவர்கள் அறிவுறுத் தினார்கள்.

எனவே தலைவர், துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் மோதல்களும், சிக் கல்களும் வராமல் இருக்க மாவட்ட அளவில் தி.மு.க. கூட் டணிக் கட்சிகளின் நிர்வாகி கள் பேசி வருகிறார்கள்.

நகரசபைகளில் 52ஐ கூட் டணிகளுக்கு ஒதுக்கி உள்ள தி.மு.க. சுமார் 70 நகரசபை தலைவர் பதவிகளில் போட்டி யிட உள்ளது. இந்த 70 நகரசபை தலைவர் யார், யார் என்பதை தேர்வு செய்யும் பணி மாவட்ட நிர்வாகிகள் துணையுடன் நடந்து வருகிறது.

பல இடங்களில் ஏற் கனவே இவர்தான் தலை வர் வேட்பாளர் என்று கூறப் பட்டிருந்தது. எனவே தலைவர், துணைத் தலைவர் பதவிகள் யார், யாருக்கு கிடைக்கும் என்பது இன்னும் ஓரிரு நாட் களில் அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிடும்.

இதே போல பா.ம.க., கம்ïனிஸ்டு கட்சிகளும் சிக்கலின்றி தங்களுக்குரிய நகரசபை தலைவர்களை அறிவிக்க உள்ளன. ஆனால் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை பிரித்துக் கொள்வ தில் காங்கிரசில் கடும் இழுபறி இப்போதே ஏற்பட்டு விட்டது.

காங்கிரசுக்கு ஒதுக்கப்பட் டுள்ள 25 நகரசபை தலைவர் பதவியை பெற அந்த கட்சி யில் உள்ள அனைத்து கோஷ் டியினரும் வரிந்து கட்டிக் கொண்டு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

Posted in civic poll, Cong(I), Congress (I), CPI, CPI(M), DMK, Elections, leadership, Local Body election, Marxist Communist, PMK, Polls | Leave a Comment »

Sri Mathivaanan – Casteism, Society Dwellings, Certificates, Oppression

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2006

விஞ்ஞான வழியில் ஜாதீயம்!

ஸ்ரீ.மதிவாணன்

நாடாளுமன்றங்களிலும் சட்டமன்றங்களிலும் சட்டத்தின் ஆட்சி, கைலையங்கிரி நோக்கி நாவுக்கரசர் சென்றது போல் நெஞ்சினால் ஊர்ந்தேனும் நடக்க வகையுள்ளது. அவற்றின் இயக்கங்கள் உடனுக்குடன் ஊடகங்களில் வெளியாகும் வாய்ப்புகள் மிக்கதாயுள்ளன. ஆனால், அவ்வவ்வுறுப்பினர்களின் ஊர்களில் – அவையும் கிராமங்களெனில் – ஒட்டு மொத்த அதிகாரங்களும் ஜாதிய குண்டாயிஸத்தின் அடிப்படையில் மட்டுமே கைப்பற்றப்பட்டு ஆண்டு அனுபவிக்கப்படுகின்றன. ஆங்காங்கே நடப்பவை வெளியில் தெரிய வாய்ப்புகள் மிக மிக மிகக் குறைவு. இவ்விடங்களில் அரசுகளைவிட வலிமை மிக்கதும் அரசினையே வரையறுப்பதுமாகிய ஜாதியமே சட்டம்! வேதம்! சாஸ்திரம்!

எஸ்.டி. (ST) எனப்படும் பழங்குடி – மலைவாழ் மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்குவதை மிகப் பெரிய துணிச்சல் எடுப்பு நடவடிக்கையாகவே கீழ்நிலை மற்றும் நடுநிலை அதிகார வர்க்கங்கள் கருதி வந்துள்ளன. அவர்களைப் பொறுத்தவரை எஸ்.டி. சான்றிதழ் வழங்குவது என்பது வேண்டாத தலைவலி! சான்றிதழ்கோரி வருபவர்களிடம், “இந்த ஜாதியே இந்த ஊரில் இல்லையே’ என அடிவயிற்றில் இடியைப் பாய்ச்சுவது மிக இயல்பான “நடைமுறை’. குறிப்பிட்ட கலாசாரமுறை பயிற்றும் எஸ்.டி. வகையினர் குறிப்பிட்ட இடங்களில்தான் வசிப்பார்கள் என்பது ஆளும் வர்க்கத்தின் பிடிவாதம்.

ஜாதிச் சான்றிதழ் வழங்க, நில உரிமைப் பத்திரங்களில் காணப்படக்கூடிய ஜாதிக்குறிப்பை மட்டுமே அழுத்திக் கோருவது, அப்பட்டமான சட்ட உடைப்பு நடவடிக்கை! கால்காணி நிலமுமற்ற கூலித் தொழிலாளியின் பிள்ளைகள் எந்தப் பத்திரத்தைக் காட்டுவார்கள்? அதைப் பெற நிலம் வாங்கி, அந்த ஆவணத்தில் ஜாதிப் பதிவு செய்த பிறகுதான் சான்றிதழ் கிடைக்கும் என்பது, அம்மக்களைத் தற்கொலைக்கோ தவறான வழிகளுக்கோ மறைமுகமாகத் தூண்டும் குற்ற நடவடிக்கையே!

இருளர் மட்டுமல்ல, குறும்பர், சங்கிலிக்குறும்பர், குருமன்ஸ், மலைக்குறவர், மலையாளி, காட்டுநாயக்கன் நரிக்குறவர், புதிரைவண்ணார், பளியர், பளிஞர் – என, ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடியினர் சார்ந்த பலப்பல பிரிவுகளுக்கு ஜாதிச் சான்றிதழ் கிடைப்பது தவமாய்த் தவமிருந்தும் பலப் பல நேரங்களில் கானல் நீராகவே இருக்கிறது. காரணம், ஜனநாயகம் என்ற பெயரில் துறைதோறும் குறுநில மற்றும் பெருநில மன்னராட்சிகள் நடந்து வருவதே! ஆளும் வர்க்க ஆண்டைகள் தத்தங்களைப் புரவலர்களாகவும், தம்மிடம் கோரிக்கை வைக்க வரும் ஏழை மக்களை இரவலராகவும் நினைத்தும் நடத்தியும் வருவதை அறிந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாமல் அழுத்தமான மௌனத்தில் மறுகுகிறார்கள், பிரித்தாளப்படும் மக்கள்!

காலங்காலமாக “மேல்’ ஜாதியினரால் அமுக்கப்பட்டும் அறியாமை மற்றும் மூட நம்பிக்கைகளில் மூழ்கடிக்கப்பட்டும் கிடக்கும் தலித் மற்றும் பழங்குடியினரால் தத்தம் ஜாதிகளுக்கான ஆவணச் சான்றுகளை எப்படிப் பாதுகாத்து வைத்திருக்க இயலும்? அரசின் மேல்நிலை மாந்தர்தம் வழிகாட்டலின்கீழ் இடைநிலை – அடிநிலை அதிகார வர்க்கங்களல்லவா ஜமாபந்திகள் மற்றும் கள ஆய்வுகளின் மூலம் ஊரில் ஜாதிப் பிரிவுகளைக் கணக்கெடுத்துத் தேவையான பிரிவினர்க்குச் சான்றிதழ்களை வழங்க வேண்டும்? வரிகளின் மீதான தாக்கீது அறிக்கைகளை அனுப்பும் முறையில் இதையும் செய்யலாமே!

ஒரு பக்கம் சலுகைகளுக்காக அரசிடம் தங்களைப் பின்தங்கிய பட்டியலில் சேர்க்கக்கோரும் ஜாதிகள், தலித் – பழங்குடிகளைப் பொறுத்து மட்டும் “மேல்ஜாதி’, “உயர் ஜாதியினர்’, “ஜாதி ஹிந்துக்கள்’ என்ற தலைப்புகளில் மட்டுமே உலா வருகின்றன. அவர்களுக்கு எஜமானர்களாகத் தங்களைத்தாமே நியமித்துக் கொள்கின்றன.

இப்போதெல்லாம் ஜாதீயம் விஞ்ஞான வழியில் வளர்க்கப்படுகிறது. ஜாதிய வன்முறை, உயர்கல்வி, பதவி, அரசியல் செல்வாக்கு, பொய்ப்புகழ்ப் பரவல் போன்றன ஒருங்கிணைந்து, அறிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் தலைகளின்மேல் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. “அடிக்கும் படைகள்’, ” அடிப்படை உரிமைகளைக் கெல்லியெயெறிந்து கொண்டிருக்கின்றன.

பாப்பாப்பட்டிகளும், கீரிப்பட்டிகளும் நாட்டார்மங்கலங்களும் கொட்டாங்கச்சியேந்தல்களும் வெறும் உதாரணங்கள்தாம். அவற்றையொட்டிய ஊர்களை அளக்க முயன்றால், மிகப் பெரும் அடையாள அணிவகுப்பே நடக்க வேண்டி வரும். ஆனால், அதிகார வர்க்கங்களும் அரசியல் ஆண்டைகளும் மிக எளிதாக இந்த அடிமை மக்களின் மீதான ஆளுகை மற்றும் அதன் மூல காரணமாகிய அறியாமைத் திணிப்பை விட்டுவிட மாட்டார்கள். அவர்கள் ஜாதிச் சான்றிதழ் கொடுக்கிறார்களோ இல்லையோ கிராமங்களின் ஜாதீய துர்தேவதைகள் சான்றிதழ் தந்து கொண்டுதான் உள்ளன. அச்சான்றிதழ், “ஜாதி கெட்ட பயலுக’ என்பதே!

Posted in Casteism, Certificates, Dinamani, Op-Ed, Oppression, SC, Society, Sri Mathivaanan, ST | 1 Comment »

DMK & Congress(I) negotiations continue for Mayor candidate Election

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2006

மாநகராட்சி மேயர் பதவி: திமுக – காங். போட்டி

சென்னை, அக். 23: தமிழகத்தில் உள்ள 6 மாநகராட்சிகளில் மேயர் பதவிகளை ஒதுக்குவது தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் ஆகிய 6 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.

இதில் 4 மேயர் பதவிகள் திமுகவுக்கும் 2 மேயர் பதவிகள் காங்கிரஸýக்கும் என தேர்தலுக்கு முன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவானது. இருப்பினும் எந்த மாநகராட்சி யாருக்கு என்பதை தேர்தலுக்குப் பிறகு தீர்மானிக்கலாம் என்று இரு கட்சிகளும் ஒப்புக்கொண்டன.

ஆனால் தற்போது எந்த இரு இடங்களை காங்கிரஸýக்கு ஒதுக்குவது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றின் தலைவர் பதவிகளிலும் யாருக்கு எந்த ஊர் என்பது தேர்தலுக்குப் பின்னர்தான் முடிவு செய்யப்பட்டது. ஆனால் மேயர் பதவியில் மட்டும் யாருக்கு எந்த இடம் என்பதை முடிவு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.

சென்னையில் திமுக 90 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, சென்னையில் திமுகவைச் சேர்ந்தவரே மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது.

இதுபோல் மதுரை மாநகராட்சியிலும் திமுவைச் சேர்ந்தவரே மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். எஞ்சியுள்ள 4 இடங்களில் 2 காங்கிரஸýக்கு ஒதுக்கவேண்டும். திருச்சி, கோவை மேயர் பதவிகள் காங்கிரஸýக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த இரு இடங்களையும் உள்ளூர் திமுகவினர் கோரி வருகின்றனர்.

இது தொடர்பாக 4 நாள்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

கோவையில் திமுக தனிப் பெரும்பான்மை: எல்லா மாநகராட்சிகளிலும் திமுக வலுவான வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக திருச்சி, கோவை மாநகராட்சிகளிலும் திமுக கவுன்சிலர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் கோவையில் திமுக தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. எனவே உள்ளூர் திமுகவினர் கோவை மேயர் பதவி வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

சேலம், திருநெல்வேலியை காங்கிரஸýக்கு ஒதுக்கலாம் என்றும் திமுகவினர் யோசனை தெரிவிக்கின்றனர். ஆனால் அதை காங்கிரஸ் ஏற்க மறுக்கிறது.

இந்நிலையில் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு கூட்டணித் தலைவர் கருணாநிதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே மேயர், நகராட்சித் தலைவர் தேர்தலில் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும். தனிப்பட்ட முறையில் எத்தனை இடங்கள் கிடைத்துள்ளன என்பதை கணக்கில் கொள்ளாமல் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களின் வெற்றிக்கும் அனைவரும் பாடுபடவேண்டும் என்று திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Posted in Alliance, candidate, Chennai, Civic, Coimbatore, Congress(I), DMK, Elections, Local Body, Madurai, Mayor, negotiations, Polls, Salem, Thirunelveli, Trichy | Leave a Comment »

IT Corridor to have public arts project displays – Panchabhootham Sculptures

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2006

ஐ.டி. காரிடார் சாலைச் சந்திப்புகளில் பிரம்மாண்டமான பஞ்சபூத சிற்பங்கள்

பா. ஜெகதீசன்

சென்னை, அக். 23: சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் தொடங்கி மாமல்லபுரம் வரை அமைக்கப்படும் ஐ.டி. காரிடார் சாலையின் முக்கிய சந்திப்புகளில் பஞ்சபூதங்களைச் சித்திரிக்கும் பிரம்மாண்டமான சிற்பங்கள் இடம் பெறுகின்றன.

திருவான்மியூர் பகுதியில் “அக்னி‘யை உருவகப்படுத்தும் வகையிலான அழகிய சிற்பம் உருவாக்கப்படுகிறது.

ஐ.டி. காரிடார் சாலை அமைக்கும் பெரும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மத்திய கைலாஷில் இருந்து சிறுசேரி வரை 20 கி.மீ. தூரத்துக்கு ரூ.205 கோடி மதிப்பீட்டுச் செலவில் சாலை உருவாக்கப்பட்டு வருகிறது. இச்சாலை 10 வழித்தடங்களைக் கொண்டதாக இருக்கும்.

இச்சாலையில் சோழிங்கநல்லூரில் இருந்து கிழக்குக் கடற்கரைச் சாலைக்குச் செல்ல சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கும் பணியும் சேர்த்து மேற்கொள்ளப்படுகிறது.

2-வது கட்டமாக சிறுசேரியில் இருந்து மாமல்லபுரம் வரை 25 கி.மீ. தூரத்துக்கு சூப்பர் சாலை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.150 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 சந்திப்புகளில்…: இச்சாலையின் 5 சந்திப்புகளில் தலா ஒன்று வீதம் மொத்தத்தில் 5 பஞ்சபூதங்களைச் சித்திரிக்கும் பிரம்மாண்டமாண சிற்பங்கள் நிறுவப்படுகின்றன என்று தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரோஹித் மோதி, துணைத் தலைவர் கே. மால்மருகன் ஆகியோர் தெரிவித்தனர்.

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவை பஞ்சபூதங்கள்.

இவற்றில் நெருப்பை உருவகப்படுத்தும் வகையில், பிரம்மாண்டமான வண்ண ஜுவாலைகளைப் போல காட்சி தரும் 30 அடி உயர சிற்பம் திருவான்மியூர் பகுதி சந்திப்பில் உருவாக்கப்படுகிறது. கான்கிரீட்டில் இச்சிற்பம் உருவாக்கப்படுகிறது.

இதற்கு ரூ.30 லட்சம் வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல சிறுசேரி பகுதியில் “நீரை’ உருவகப்படுத்தும் சிற்பம் உருவாக்கப்படுகிறது.

சுரங்கப் பாதைகள்: தரமணி -சிறுசேரி இடையேயான 17 கி.மீ. தூரத்தில் முக்கிய இடங்களில் பாதசாரிகளுக்கான நவீன சுரங்கப் பாதைகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Posted in Agni, Air, Arts, Chozhinganallur, Earth, East Coast Road, Exhibits, Fire, Kizhakku Kadarkarai Saalai, Madhya Kailash, Mahabalipuram, Mathya Kailaash, Sculpture, Siruseri, Sky, Sozhinganalloor, Statues, Thiruvanmiyur, Water | Leave a Comment »

Bank employees to observe Bandh to protest against Outsourcing & Privatization

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2006

அவுட்சோர்சிங், தனியார்மயமாக்கலை எதிர்த்து அக். 27ல் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்

புதுதில்லி, அக். 23: வெளிப் பணி ஒப்படைப்பு(அவுட் சோர்சிங்), தனியார்மயமாக்கல் ஆகியவற்றை எதிர்த்து அக்.27ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். ஒன்பது வங்கி ஊழியர் சங்கங்களின் தலைமை அமைப்பான வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக அக்.18ல் தலைமை தொழிலாளர் ஆணையாளருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பணியாளர்களை நியமித்தல், பென்ஷன் சலுகைகள் போன்ற தங்களது கோரிக்கைகளில் அரசு அலட்சியம் காட்டியதே இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடையக் காரணம் என வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து இந்த கூட்டமைப்பின் பொதுச் செயலர் வெங்கடாச்சலம் விடுத்துள்ள அறிக்கை:

மத்திய அரசு இந்தக் கொள்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், இந்த வேலை நிறுத்தம் மேலும் தீவிரமாகும். இதனைத் தவிர்க்க, அரசு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும்.

அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்வார்கள் என்றார் வெங்கடாச்சலம்

Posted in Bandh, Bank employees, Fear, Growth, Jobs, Outsourcing, Private Enterprises, Privatization, public sector, Security, Uncertainty, unemployment | 1 Comment »

Koodangulam to get Pechiparai Reservoir water? – ‘Kanniyakumari will become a desert’

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2006

கூடங்குளத்துக்கு பேச்சிப்பாறை நீரா? குமரி மாவட்டம் பாலையாகும் அபாயம்: அமைப்புகள் அச்சம்

அ. அருள்தாசன்

நாகர்கோவில், அக். 23: கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணை தண்ணீரைக் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்குக் கொடுத்தால் விவசாயத்துக்கு பெரும் ஆபத்து ஏற்படுவதுடன், மாவட்டமே பாலைவனமாகிவிடும் அபாயம் உள்ளதாக பல்வேறு அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. இந்த விஷயத்தில் அரசு தரப்பில் முடிவு எடுக்கும்போது கன்னியாகுமரி மாவட்ட மக்களின் கருத்தைக் கேட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு முக்கிய நீராதாரமாக இருப்பது பேச்சிப்பாறை அணை. இந்த அணை 1906-ல் கட்டி முடிக்கப்பட்டது. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் முழுமையாக பாசனத்திற்கு உபயோகப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளில் மழை குறைவால் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பயிர் செய்யப்படாமல் தரிசாகிவிட்டன. கொல்லங்கோடு பகுதியில் தண்ணீரின்றி கருகிய 200 ஹெக்டர் பரப்பில் பயிரிடப்பட்ட பயிர்களுக்காக அரசு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 1000 இழப்பீடு கொடுத்தது.

பேச்சிப்பாறை தண்ணீர் நூற்றுக்கணக்கான சிறு பாசன கால்வாய்மூலம் வயல் வெளிகளுக்கும் ஏறக்குறைய 1950 பொது மராமத்து குளங்களுக்கும், 1500 மானாவாரி குளங்களுக்கும் வினியோகிக்கப்படுகிறது.

பேச்சிப்பாறை அணை கன்னியாகுமரி மாவட்ட நன்னீர் நிலங்களுக்கு இதயமாக இருக்கிறது என்று கூறலாம்.

பேச்சிப்பாறை தண்ணீர் இல்லாவிட்டால் விவசாயமும் அழியும் என்றும், குடிநீருக்கே மக்கள் கஷ்டப்படுவார்கள் என்றும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

இதைத் தடுக்க ஒரு விழிப்புணர்வு இயக்கம் உருவாக்க வேண்டும். எல்லா ஊராட்சிகளிலும் பேச்சிப்பாறையில் இருந்து தண்ணீர் எடுப்பதை தடுக்க தீர்மானம் கொண்டுவர வேண்டும். அணு உலைகளுக்கு கடல்நீரை சுத்தம் செய்து ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் வழியாக நன்னீர் எடுப்போம் என்று வெளிப்படையாகக் கூறிவிட்டு பேச்சிப்பாறையில் இருந்து நன்னீர் எடுக்கப் போகிறோம் என்று சுற்றுப்புற தாக்கீடு அறிக்கையில் கூறி அதற்கான பொது விசாரணை நடத்துவது கன்னியாகுமரி மாவட்ட மக்களை ஏமாற்றுவதாகும் என்கிறார் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் ஆர்.எஸ். லால்மோகன்.

2006-ல் அணுமின் நிலையத் தலைவர் அகர்வால் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டுமென்று தெளிவாகக் கூறியிருக்கிறார். 4 அணு மின் உலைகளுக்கு நாள் ஒன்றுக்கு 20,594 கன மீட்டர் அதாவது ஓராண்டுக்கு 75,16,810 கன மீட்டர் தண்ணீர் எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 அணுமின் உலைகள் வந்தால் 1,50,38,620 கன மீட்டர் தண்ணீர் எடுக்கப்படும். இந்த தண்ணீர் ஏறக்குறைய 1000 ஹெக்டேர் பாசனத்துக்குப் போதுமானதாகும். இவ்வளவு தண்ணீர் எடுக்கப்பட்டால் கன்னியாகுமரி மாவட்டம் பாலைவனமாகிவிடும். பொது விசாரணை இந்த அடிப்படையில் வைத்திருப்பதால் இப்போது தயாரிக்கப்பட்டிருக்கும் சுற்றுப்புறச் சூழல் அறிக்கையை திரும்பப் பெறவேண்டும் என்கிறார் லால்மோகன்.

பேச்சிப்பாறை அணைநீரை கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது குறித்த தகவல்கள் மாவட்ட மக்களுக்கு இன்னும் சரிவரத் தெரியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பொது விசாரணை நடத்தினால் அதை நாகர்கோவிலில் நடத்தி முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் தற்போதைய கருத்தாகும்.

Posted in Crisis, Electricity, Environment, Kanniyakumari, Kanyakumari, Kollangode, Koodangulam, Koodankulam, Koodankulam Nuclear Power Project, Nagercoil, Nagerkovil, Nuclear, Pechiparai Dam, Pechiparai Reservoir, Power, Reverse Osmosis, Water | Leave a Comment »