விவசாயிகள் தற்கொலையைக் கண்டித்து மோகன் தாரியா உண்ணாவிரத திட்டம்
புணே, அக். 27: மகாராஷ்டிரத்தில் கடன் சுமை தாளாமல் விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க அரசு தலையிடக் கோரி, காலவரம்பற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மோகன் தாரியா (82) திட்டமிட்டிருக்கிறார்.
நேரு பிறந்த நாளான நவம்பர் 14 முதல் இக்கிளர்ச்சியை அவர் தொடங்கவிருக்கிறார்.
எனவே அதற்கு முன்னதாக, இம் மாதம் 30-ம் தேதி தில்லிக்கு வருமாறு தாரியாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் மன்மோகன்.
இது தொடர்பாக நிருபர்களிடம் மோகன் தாரியா கூறியதாவது:
“மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நிவாரண உதவிகளுக்குப் பிறகும்கூட மகாராஷ்டிரத்தில் விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்வது நிற்கவில்லை.
இந்தப் பிரச்சினையின் ஆழத்தைப் புரிந்துகொண்டு யாரும் நடவடிக்கை எடுப்பதைப் போலத் தெரியவில்லை.
நமது பொருளாதாரத்துக்கே அச்சாணியான விவசாயிகளின் மன உறுதி குலைந்தால் நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்பதைச் சுட்டிக்காட்டி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அக்டோபர் 7-ம் தேதி கடிதம் எழுதினேன். நவம்பர் 14 முதல் காலவரம்பற்ற உண்ணாவிரதத்தை மேற்கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறேன்.
அவ்வாறு செய்யவேண்டாம் என்று பிரதமர் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் நான் என் முடிவில் உறுதியாக இருக்கிறேன்.
கூட்டுறவுச் சங்கங்கள், அரசுடைமை வங்கிகள், தனியார் லேவாதேவிக்காரர்கள் ஆகியோரிடம் கடன் வாங்கியுள்ளனர் விவசாயிகள். இதில் தனியாரிடம் வாங்கிய கடனுக்குத்தான் அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கிறது.
அவர்களின் மிரட்டல் தாங்க முடியாமல்தான் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இந்தக் கடன்கள் சட்ட விரோதமானவை. இவற்றை அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகளை எடுக்காதவரை, உண்ணாவிரத முடிவை மாற்றிக்கொள்ள மாட்டேன். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டு அமைப்புகள் எனக்கு ஆதரவாக உள்ளன’ என்றார் மோகன் தாரியா.
சிறந்த நிர்வாகி: மொரார்ஜி தேசாய் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில், சிவில் சப்ளை துறை அமைச்சராக இருந்தவர் மோகன் தாரியா. நிர்வாகத் திறமை மிகுந்தவர், நேர்மையாளர். அவருடைய காலத்தில்தான் சர்க்கரைக்கு இரட்டை விலைக் கொள்கை ரத்து செய்யப்பட்டது. வெளிநாடுகளுக்கு மிகக் குறைந்த விலைக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்தது நிறுத்தப்பட்டது. இவ்விரு காரணங்களால் ரேஷன் கடைகளைவிட மளிகைக் கடைகளில் சர்க்கரை விலை குறைவாகவும், எளிதாகவும் கிடைத்தது.
அத்துடன் உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வையும் அற்புதமாக கட்டுப்படுத்தினார் அவர். ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் விலைவாசியும் பணவீக்க விகிதமும் கட்டுக்குள் இருந்தன.