ஜார்க்கண்ட் மாநிலத்தில் மகன் பிறந்தநாள் விழாவுக்கு ரூ.50 லட்சம் செலவழித்த மந்திரி
ராஞ்சி, அக். 31-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரியாக இருப்பவர் இனோஸ்இக்கா. இவரது மகன் சந்தேஷ். இவன் கோரகானில் உள்ள ஜிடி கோயங்கா பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இவனுக்கு கடந்த வெள்ளிக்கிழமை பிறந்தநாள். இதையொட்டி மந்திரி இனோஸ் ஜார்க்கண்ட் மாநிலம் கண்டிராத வகையில் கோலாகல பிறந்த நாள் விழா நடத்தினார்.
மந்திரி இனோசின் சொந்த மாவட்டமான சிம்தேகாவில் இந்த விழா நடந்தது. இதற்காக அந்த மாவட்டத்தை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு 50 ஆடுகள் வெட்டப்பட்டு விசேஷ விருந்து கொடுக்கப்பட்டது.
அசைவத்தை விரும்பாத வர்களுக்கு என தனியே சைவ உணவுகள் தயாரித்து வழங்கப்பட்டன. இனிப்புகள், ஐஸ்கிரீம்கள் விதம்விதமாக வழங்கப்பட்டன. இந்த பிரமாண்ட பிறந்தநாள் விழாவை பார்த்து சிம் தேகா மாவட்ட ஏழை மக்கள் ஆச்சரியத்தில் பிரமதித்துப்போனார்கள்.
மகன் பிறந்த நாளுக்காக மந்திரி இனோஸ் ரூ.50 லட்சத்துக்கு மேல் செல வழித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதை எதிர்க் கட்சிக்காரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
சிம்தேகா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. நியால் கூறுகையில், “இந்த விழாவால் பெருமைப்பட என்ன இருக்கிறது. இப்படி பணத்தை வீணடித்ததற்காக மந்திரி வெட்கப்பட வேண்டும். மகன் பிறந்தநாளுக்கு செலவழித்த பணத்தை வைத்து சிம்தேகா மாவட்ட மக்களுக்கு ஒரு ஆயில் மில் தொடங்கி கொடுத்து இருக்கலாம்” என்றார்.
ஆனால் மந்திரி இனோஸ் இதை கண்டு கொள்ளவில்லை. “என் வளர்ச்சியைக்கண்டு பொறாமைப்படுபவர்கள் இப்படி சொல்கிறார்கள்” என்றார். மந்திரி இனோசின் தந்தை இன்னமும் வறுமையில்தான் வாழ்ந்து வருகிறார். அரசு கட்டி கொடுத்த சாதாரண வீட்டில்தான் அவர் வசித்து வருகிறார்.