Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஒக்ரோபர் 6th, 2006

Local self Governance – Maanagaratchi, Ullaatchi Importance

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 6, 2006

மக்களாட்சியின் ஆணிவேர்

தி. இராசகோபாலன்

மக்களாட்சி என்ற பசுமரத்தின் இலையும் கிளையும் பசுமையாக இருக்க வேண்டுமானால், உள்ளாட்சி என்ற ஆணிவேர் வலுவாக இருக்க வேண்டும். இலைக்கும் கிளைக்கும் வேண்டிய நீரையும் எருவையும் ஆணிவேர் வாங்கித் தருவதைப்போல, சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் வேண்டிய பக்குவத்தையும் பயிற்சியையும் உள்ளாட்சியே பெற்றுத் தரும்.

மக்களாட்சி, நான்கு முகங்களைக் கொண்ட ஒரு பிரம்மா எனச் சொல்லலாம்.

1) நேரடிக் குடியாட்சி

2) பிரதிநிதித்துவக் குடியாட்சி

3) முடியாட்சியை ஏற்றுக்கொண்ட குடியாட்சி

4) முதலாளித்துவத்தை ஏற்றுக்கொண்ட குடியாட்சி என நான்கு வகைப்படும். மக்களாட்சியின் முழுமையான பண்புகள் அனைத்தையும் தாங்கியது, நேரடிக் குடியரசு. ஆனால், அதைக் கனவு கண்ட கிரேக்க நாடுகளிலேயே அது சாத்தியப்படவில்லை. இன்றைக்குச் சுவிட்சர்லாந்திலே மட்டும் அக்குடியரசின் பண்புகளைத் தாங்கிய அரசு நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளிலே தான் மக்களாட்சிப் பண்புகள் அடித்தளத்து மக்களிடம் தொடர்பு கொண்டிருப்பதால் (grassroot level) ராஜீவ் காந்தி போன்ற பிரதமர்கள், அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.

நாட்டு மக்களின் நலனுக்காகத் தொலைநோக்குத் திட்டங்களைக் கருதி, மாநில அரசும் மைய அரசும் கூட நிதி ஒதுக்கீடுகள் செய்கின்றன; ஒப்பந்தங்களைத் திறக்கின்றன. ஆனால், நிதி ஒதுக்கீடு செய்கின்ற அமைச்சரகம் வேறு; ஒப்பந்தப்படி திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா எனப் பார்க்கின்ற அமைச்சரகம் வேறு. மேலும், நாட்டின் எங்கோ ஒரு மூலையில் நிறைவேற்றப்படும் திட்டங்களை, எல்லா மக்களாலும் அளந்தறிய முடியாது. மற்றும் எல்லா முனைகளிலும் வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தால், எதிர்பார்க்கப்படும் பலன்கள் கிடைக்காமல் போகின்றன. “”பொதுத் திட்டங்களுக்குச் செலவிடப்படும் ஒரு ரூபாயில், 15 காசுகள்தாம் மக்களைச் சென்றடைகின்றன” என இந்திய நாட்டின் தலைமை அமைச்சரே முன்பு தெரிவித்திருக்கும் கருத்து, மேற்குறித்த செய்தியை வலுப்படுத்துகின்றது.

உள்ளாட்சித் துறையில் அங்கங்கு நிறைவேற்றப்படும் திட்டங்கள், அங்கங்கு இருக்கும் மக்களுடைய பார்வையில் படுவதால், தவறுகள் நடப்பதற்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லை. தவறுகள் நேர்ந்தால், அவை மக்களுடைய கவனத்திற்கு வராமல் போகாது. மேலும், நகர்மன்றக் கூட்டங்களின் நடைமுறையில், சட்டமன்ற உறுப்பினருடைய பார்வையும் இருப்பதால், மாநில அரசின் அங்குசமும் தண்டிக்கும் என்ற அச்சமும் தவறு செய்பவர்களை எச்சரித்துக் கொண்டேயிருக்கும். எனவே உள்ளாட்சி அமைப்பில் மக்களாட்சியின் வேர்களும் விழுதுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்திக் கொண்டே செல்கின்றன எனலாம்.

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு என்பது இன்னும் சட்டவடிவு பெறவில்லை. ஆனால், உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு 33 விழுக்காடுகள் என்பதை ஏற்கெனவே மாநில அரசு அமல்படுத்தியதோடு, அது நடைமுறையிலும் இருக்கின்றது. புறக்கணிக்கப்பட்டுக் கிடந்த மகளிர்குலம், இன்று ஊராட்சிகளிலும் நகராட்சிகளிலும், மாநகராட்சிகளிலும் தலைவர்களாக அமர்ந்து பரிபாலனம் செய்வது, பெண்மைக்குக் கிடைத்த வெற்றியல்லவா! எதிர்காலத்தில் அவர்கள் சட்டமன்றத்தில் அமைச்சர் ஆவதற்கும் மைய அரசில் அமைச்சர் ஆவதற்கும், ஊராட்சியும் நகராட்சியும் பயிற்சிக்களங்களாக அமையுமே!

பெண்களுக்குத் தரப்பட்டு வரும் தற்போதைய உரிமையிலும், இப்பொழுது ஒரு விபரீதம் புகுந்திருக்கிறது. இரண்டு முறை ஆடவர்க்குரியதாக இருந்த பேரூராட்சித் தலைவர் பதவி, மூன்றாவது முறை மகளிர்க்குரியதாக மாற்றப்படுகிறது. அந்நேரத்தில் இரண்டு முறை பதவியைச் சுவைத்த ஆணாதிக்கம், வேறு யாருக்கும் அப்பதவி போய்விடக்கூடாது என்பதற்காகத் தங்கள் மனைவியரையோ, மகளையோ அப்பதவிக்குப் போட்டியிடச் செய்கின்றது. சமூகத்தில் வலிமை படைத்தவர்கள் தாங்கள் நிறுத்திய மனைவியை அல்லது மகளை வெற்றி பெறச் செய்யவும் முடிகிறது. இப்படிச் செய்வதால், பெண்களுக்குரிய இடம் பறிக்கப்படுகிறதே தவிர, அங்கீகரிக்கப்படுவதில்லை.

மகாபாரதத்தில் பீஷ்மரை வதம் செய்ய நினைத்த அர்ச்சுனன், சிகண்டியை (பெண்) முன்னாலே நிறுத்தி, பின்னால் தானிருந்து அம்பு போட்டுக் காரியத்தை முடித்ததுபோல், இன்றைக்கு ஆணாதிக்கம் பெண்ணை முன்னிலைப்படுத்திப் பெண்ணுரிமையைக் கொச்சைப்படுத்துகின்றது. இதனை எதிர்த்து முதல் குரல் கொடுக்க வேண்டிய பெண்களே ஊமையாகவும் ஆமையாகவும் அடங்கிப் போகும்நிலைதான், வலிமை படைத்த மக்களாட்சி முகத்தில் விழுந்த கரும்புள்ளியாகும்.

உள்ளாட்சியமைப்புகள் காலங்காலமாகச் சமூகத்தில் படிந்திருக்கும் சாதியிழிவைத் துடைப்பதற்கும் வழிவகுக்கின்றன. சட்டமன்றத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்தொகுதிகள் இருந்தாலும், அவற்றில் சர்வபலம் பொருந்தியவர்களை அனுசரித்துப் போகிறவர்களுக்கே வாய்ப்புகள் கிட்டுகின்றன. ஆனால் கீரிப்பட்டி, பாப்பாபட்டி போன்ற சில விதிவிலக்குகள் இருந்தாலும், பெரும்பாலான பஞ்சாயத்துகளிலும், நகர்மன்றங்களிலும் ஒடுக்கப்பட்டவர்கள் கோலோச்சி வருவதைப் பார்க்க முடிகிறது.

1950களிலே தென்மாவட்டங்களில், “புறக்கணிக்கப்பட்டவர்கள் பேருந்துகளில் ஏறக்கூடாது’ என்ற கட்டுப்பாடு இருந்தது. மாநில அரசால் அக் கொடுமையை ஒழிக்க முடியவில்லை. என்றாலும், அப்போது ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத்தில் நிர்வாகத் தலைவராக (டிஸ்டிரிக் போர்டு பிரசிடெண்ட்) இருந்த பட்டிவீரன்பட்டி இ.டபிள்யூ. சௌந்தரபாண்டியனார் அச் சாதியிழிவைத் துடைத்தார். தவணை முடிந்து புதுப்பிக்க வரும் (எப்.சி) பேருந்து முதலாளிகளிடம் “இனி ஒடுக்கப்பட்டவரையும் பேருந்தில் ஏற்றுவோம்; மீறினால் தண்டனைக்கு உள்ளாவோம்’ என எழுதி வாங்கிக் கொண்டுதான், புதிய உரிமத்தை (லைசென்ஸ்) வழங்கினார். அதனால் அம் மாவட்டத்தில் சாதியிழிவு அறவே துடைக்கப்பட்டது. அச் சாதனை, அமரர் சௌந்திரபாண்டியனாருக்கு மட்டுமன்றி, உள்ளாட்சிக்கும் பெருமை சேர்த்தது.

என்றாலும், பஞ்சாயத்துத் தலைவர் பதவியும் பேரூராட்சி உறுப்பினர் பதவியும் ஏலம் போடப்படுகின்ற அவல நிலையைக் காண்கின்றோம். மீன் பிடித்தலையும் தோப்பில் காய் பறித்தலையும் ஏலம் விடலாம்; உள்ளாட்சி அமைப்பையுமா ஏலம் விடுவது? கோயில் திருப்பணிக்காக எனக் காரணம் சொல்லப்பட்டாலும், இவர்கள் ஊர்நலனைக் கொச்சைப்படுத்துவதோடு, இறைக்கொள்கையையும் அல்லவா கொச்சைப்படுத்துகிறார்கள்!

உள்ளாட்சித் தேர்தல்களில் பணம் கொடுப்பதையோ, வாங்குவதையோ அரசியல் சட்டம் (இ.பி.கோ. ஒன்பதாவது படலம் எ-ல் 171-ஏ யிலிருந்து ஐ வரையுள்ள விதிகள்) வன்மையாகக் கண்டித்திருக்கிறதே! மேலும், “பணம் கொடுத்து வாங்கினால் குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளுவோம்’ என மாநிலத் தேர்தல் ஆணையம் அச்சுறுத்தியிருக்கிறதே! இவற்றையெல்லாம் மதிக்க மறந்த மக்களுக்கு, உள்ளாட்சி ஏன் என்ற கேள்வி எழுவது நியாயந்தானே!

விடுதலைப் போராட்டக் காலத்தில் “”இரகுபதி இராகவ… ஈஸ்வர அல்லா” எனப் பாடிய காந்தியடிகள் தாம் காண விரும்பிய ராஜ்ஜியம் “இராமராஜ்ஜியம்’ என்றார். இதனை முன்னுக்குப் பின் முரணாகத் தோன்றுவதாக நினைத்த சிலர், “”என்ன தேசப்பிதாவே! அல்லா பெயரை உச்சரித்துவிட்டுக் கடைசியில் இராமராஜ்ஜியம் என்று சொல்லுகிறீர்களே”, எனக் கேட்டபொழுது, மகாத்மா “நான் இராமராஜ்ஜியம் என்று சொல்வது, கிராம ராஜ்ஜியத்தைத்தான்’ என்றார்.

அவ்வாறு தேசப்பிதா காண விரும்பிய கிராம ராஜ்ஜியத்தை ஏலத்திலா எடுப்பது? சங்ககாலத்திலிருந்து தோட்ட வாரியம், ஏரிவாரியம், பஞ்சவாரியம் என அமைத்துக் காத்த ஊராட்சி – உள்ளாட்சி அமைப்புகளை ஏலத்திலா விடுவது? உள்ளாட்சி அமைப்புகளில், குடியாட்சிக் கோட்பாட்டைப் பயன்படுத்தி வரங்களைப் பெறுவோமாக; சாபங்களை அறுவடை செய்யாதிருப்போமாக!

Posted in Administration, Dinamani, Governance, Government, History, Ills, Local Body, Maanagaratchi, Op-Ed, Positives, self Governance, Ullaatchi | Leave a Comment »

Meningo encephalitis & Chikun Kunya – Dinamani Editorial

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 6, 2006

சிக்குன் குனியாவும் சுற்றுப்புறத் தூய்மையும்

“”என் மகள் சிக்கன் சாப்பிடுவதே இல்லைங்க. அவளுக்குப் போய் “சிக்கன் குனியா’ வந்துவிட்டது” என்று புலம்பினார் கிராமத்து நண்பர். “”ஐயா, அது சிக்கன் குனியாவும் அல்ல; மட்டன் குனியாவும் அல்ல; சிக்குன் குனியா” என்று திருத்தினேன்.

கிழக்கு ஆப்பிரிக்க பாண்டு இன மக்களின் மொழியாகிய ஸ்வாஹிலி (Swahili) யில் “சிக்குன் குனியா’ என்பதற்கு “வளைத்துப் போட்டுவிடுவது’ (that which bends up) என்று பொருள். இந் நோயால் தாக்கப்படுபவர்களின் மூட்டுகள் பாதிக்கப்பட்டு முடக்கப்படுவதால் சிக்குன் குனியா என்ற பெயர் படைத்தது.

ஏடெஸ் எஜிப்டி (Aedes aegypti) என்ற வகைக் கொசுக்கள் கடிப்பதனால் இந்தக் கொடிய நோய் ஏற்படுகிறது. குளிர்காய்ச்சல், தலைவலி, வாந்தி, மயக்கம், மூட்டுக்கு மூட்டு வலி, வாய்க்கசப்பு எனப் பல்வேறு சிரமங்களை இந்த நோய் உண்டாக்குகிறது.

சிக்குன் குனியாவின் பூர்வீகம் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாடுதான். இங்குதான் 1952 – 53 ஆண்டுகளில் இந்நோய் கண்டறியப்பட்டது. 1999ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள க்ளாங் (Klang) துறைமுகத்திலும் சிக்குன் குனியாவால் 27 பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்துமாக் கடலில் மடகாஸ்கர் தீவுக்குக் கிழக்கே பிரான்சுக்குச் சொந்தமான “ரியூனியன்’ (Reunion) என்று ஒரு தீவு உள்ளது. இங்கு கடந்த 2005 ஆம் ஆண்டு கொள்ளை நோயாக சிக்குன் குனியா கோரத் தாண்டவம் ஆடியது. தீவில் வாழும் 7 லட்சத்து 50 ஆயிரம் மக்களில், ஒரு லட்சத்துப் பத்தாயிரம் பேர் சிக்குன் குனியாவால் கடுமையாக முடக்கப்பட்டனர். அருகே இருந்த மொரிஷியஸ் தீவையும் இந்நோய் விட்டு வைக்கவில்லை. இங்கு சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை மூவாயிரத்து ஐநூறு.

இந்த ஆண்டிலும் (2006) ரியூனியன் தீவில் எழுபதாயிரம் பேர் இந்நோயினால் அவதிக்கு உள்ளாயினர். பிரான்சு நாடு போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்பட்டு, கொசுக்களை அழித்திட 3,600 பேரைப் பணியில் ஈடுபடுத்தியது. மேலும் ராணுவ வீரர்களும் இப்பணியில் பங்கேற்க அழைக்கப்பட்டனர்.

இந்தச் சிக்குன் குனியா ஓர் ஆட்கொல்லி நோயன்று என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் ரியூனியன் தீவில் டைலான் (Dylan), ட்ரிசியா (Tricia) என்ற பத்து வயது சிறார்கள் இருவர் இறந்து போயினர். டைலான், சிக்குன் குனியா பாதித்த இரண்டு நாள்களிலும், ட்ரிசியா ஒரு வாரம் கழித்தும் மரணத்தைத் தழுவினர். மொரிஷியஸ் தீவிலும் சங்கீத் எம்ரித் (Sangeet Emrith) என்ற முப்பத்து மூன்று வயது நபரும் இந் நோய் தாக்கி மரணமடைந்தார். மூளையின் நரம்புகளை சிக்குன் குனியா வைரஸ் பாதித்ததால் மெனிங்கோ என்செஃபாலிட்டிஸ் (Meningo encephalitis) நோயினால் இவர்கள் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த மரணங்கள்தான் சிக்குன் குனியா ஓர் ஆட்கொல்லி நோயாக இருக்கக் கூடும் என்ற ஐயப்பாட்டை முதன்முதலாக மருத்துவ உலகில் விதைத்தன எனலாம். 2004-ல் 3884 ஆக இருந்த இத்தகைய மரணங்கள் 2005ஆம் ஆண்டில் 4272 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேரிலாந்து (Maryland) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் இடெல்மேன் (Robert Edelman) அமெரிக்க ராணுவத்தின் பயன்பாட்டுக்காக தடுப்பூசி (Vaccine) மருந்து ஒன்றைக் கண்டுபிடித்தார். இந்தத் தடுப்பூசி சிக்குன் குனியாவைத் தடுக்கும் ஆற்றல் கொண்டதாகக் கருதப்படுகிறது. இதுவரை இருபது பேருக்கு மட்டுமே சோதனை முயற்சியாகப் போடப்பட்டிருக்கிறது. பேராசிரியர் ராபர்ட் இடெல்மேனின் இந்த முயற்சி முழுமையாக வெற்றி பெற்றால் உலக அளவில் இந்நோயின் பாதிப்பைத் தடுத்து நிறுத்த முடியும். சிக்குன் குனியா வைரஸ் வேறு வேறு மனிதர்கள் மீது வேறு வேறு வகையான உயிரியல் அறிகுறிகளை (different biological symptoms on different persons) உருவாக்கக் கூடும் என்கிறார் இடெல்மேன்.

சிக்குன் குனியா மட்டுமல்ல டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு ஆட்கொல்லி நோய்களுக்கும் கொசுக்களே மூலகாரணம். அதுவும் ஏடெஸ் எஜிப்டி கொசுவுக்கு “மாவீரன் ஏடெஸ்’ என்று விருதே வழங்கலாம். தமிழக எதிர்க்கட்சிகளைக் கைகோர்த்து வீதிக்கு வந்து போராட வைத்துவிட்டதே!

கொசுக்களை மனிதர் ஒழித்துக் கட்ட வேண்டும். இல்லையேல் கொசுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மனிதரை ஒழிக்க முற்படும்.

சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதும், தேங்கியுள்ள நீர் நிலைகளில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்வதும் இன்றைய அவசரத் தேவைகள்.

கொசு ஆசான், நம்மை “முட்டிக்கு முட்டி தட்டி’ச் சொல்லிக் கொடுத்திருக்கும் பாடம் இது; கற்போமா?

Posted in Background, Chicken Kunya, Chikan Kunya, Chikun Kunya, Clenaliness, Dinamani, Editorial, Healthcare, History, Meningo encephalitis, Op-Ed, World | Leave a Comment »

Anbumani Ramadoss visits Kerala – Chikun Kunya

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 6, 2006

சிக்குன் குனியாவை தடுக்க கேரளத்துக்கு மத்திய அரசு சிறப்பு உதவி: அன்புமணி

ஆலப்புழை, அக். 7: சிக்குன் குனியா காய்ச்சலைக் கட்டுப்படுத்த கேரளத்துக்கு மத்திய அரசு சிறப்பு உதவி அறிவித்துள்ளது.

கேரளத்தில் இந்த காய்ச்சலால் 81 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. மாநிலத்தில் ஆலப்புழை பகுதி இக் காய்ச்சலால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆலப்புழையில் மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளிகளைப் பார்வையிட்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

சிறப்பு உதவியாக கேரளத்துக்கு

  • புகைஅடிக்கும் சாதனங்கள்,
  • கொசுவலை,
  • காய்ச்சல் கண்டறியும் சோதனைக் கருவிகளை மத்திய அரசு வழங்கும். பரிசோதனை கருவிகளை புணேவில் உள்ள தேசிய வைரஸ் கிருமி ஆய்வு நிலையம் வழங்கும்.

கேரளத்தில் தற்போது உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள் ஆய்வுசெய்ய வந்துள்ளனர். அவர்களின் அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது. 3 தினங்களில் அறிக்கை தாக்கலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிக்குன் குனியா காய்ச்சலால் பொதுவாக உயிரிழப்பு ஏற்பட சாத்தியம் இல்லை என்று எனது நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கேரளத்தில் சிக்குன் குனியா என்று சந்தேகிக்கப்படும் காய்ச்சலால் இறந்தவர்களில் 70 சதவீதம் பேர் 60 வயதைத் தாண்டியவர்கள்.

ஆலப்புழையில் உள்ள கொசு கட்டுப்பாட்டு ஆய்வு நிறுவனத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமே ஏற்று நவீனப்படுத்தும். கூடுதல் கட்டமைப்பு வசதி செய்யப்படும். இதன் மூலம் கேரளத்திலேயே சிக்குன் குனியா, மலேரியா, பைலேரியா நோய்களுக்கான சோதனைகளை செய்யலாம்.

நாடு முழுவதும் மாவட்ட மருத்துவமனை மேம்பாடு

தேசிய ஊரக சுகாதார திட்டத்தின்கீழ் நாட்டில் உள்ள சமுதாய சுகாதார மையங்கள், மாவட்ட மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும். ஆபரேஷன் தியேட்டர்கள், பிரசவ மையங்கள் நவீனப்படுத்தப்படும். இன்னும் ஒரு ஆண்டுக்குள் நாட்டில் சிறந்த வசதி கிடைக்கும்.

கேரளத்துக்கு பாராட்டு

சிக்குன் குனியாவை கட்டுப்படுத்த கேரளம் சிறந்த முறையில் செயலாற்றியுள்ளது. இதற்காக பாராட்டுகள். சிக்குன் குனியாவை கட்டுப்படுத்தமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது. 32 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த காய்ச்சல் இந்தியாவில் மீண்டும் தலைகாட்டியுள்ளது. கேரளத்தில் பரந்துவிரிந்த நீர் நிலைகள் ஆங்காங்கே இருப்பதால் தண்ணீரால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த கால தாமதம் ஆகும்.

கொசு உற்பத்தியை தடுக்க லார்வாக்களை உண்ணும் மீன்களால் நல்ல பலன் ஏற்பட்டுள்ளது மகாராஷ்டிரம், ராஜஸ்தான் மாநிலங்களின் அனுபவம். அதை பின்பற்றி செயல்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றார் அன்புமணி.

Posted in Anbumani, Chicken gunya, Chikun kanya, Chikun Kunya, Healthcare, Kerala, Outbreak | Leave a Comment »

Four Villages – 2000 Affected by Chikun Kunya

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 6, 2006

மே. வங்க கிராமங்களில் 2 ஆயிரம் பேருக்கு சிக்குன் குனியா?

கோல்கத்தா, அக். 7: மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் பதூரியா-ராம்சந்திராபூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட 4 கிராமங்களில் 2 ஆயிரம் பேர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

Posted in Chicken Kunya, Chikun Gunya, Chikun Kunya, Healthcare, Outbreak, Villages, West Bengal | Leave a Comment »

Sitaram Yechuri wants Lagaan style Cricket Match with England

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 6, 2006

லகான் ஸ்டைலில் கிரிக்கெட் போட்டி: கம்ïனிஸ்டு வற்புறுத்தல்

புதுடெல்லி, அக். 6-

அமீர்கான் நடித்த லகான் படத்தில் இந்திய மக்களை கொண்ட கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியை தோற் கடிப்பது போல காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.

அதே போன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இந்தியா முதல் சுதந்திர போராட்டம் 150-வது ஆண்டு விழாவையொட்டி நடத்த வேண்டும் என்று மாரக்சிஸ்டு கம்ïனிஸ்டு மூத்த தலைவர் சீதாராம் எச்சூரி வற்புறுத்தி இருக்கிறார்.

இதற்காக இந்தியா, பாகிஸ் தான், வங்காளதேசம் கொண்ட தனி கிரிக்கெட் அணியை உருவாக்க வேண்டும். இந்த அணி இங்கிலாந்துடன் மோத வேண்டும் என்று கூறி உள்ளார். இதற்காக அவர் இந்திய கிரிக்கெட் சங்கத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

Posted in Bangladesh, CPI (M), Cricket, England, ICC, Lagaan, Pakistan, Sitaram Yechuri, Tamil | Leave a Comment »

Laloo tries unsuccessfully to upset Anbumani Ramadoss

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 6, 2006

அமைச்சரவைக் கூட்டத்தில் அன்புமணியை சீண்டிய லாலு

புது தில்லி, அக். 6: தில்லியில் வியாழக்கிழமை நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியை சீண்டி, கோபப்படுத்த முயன்று, அதில் தோல்வியடைந்தார் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்.

அமைச்சரவைக் கூட்டம் நடந்தபோது, டெங்கு பிரச்சினையைக் கிளப்பினார் லாலு. “”நாடு முழுவதும் டெங்கு பற்றிய பேச்சாக இருக்கிறது. மக்கள் பெரும் பீதி அடைந்திருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. விவரத்தைச் சொல்லுங்கள்” என்று ஹிந்தியில் சற்று வேகமாகக் கேட்டார் லாலு.

ஆனால் அன்புமணி அதற்காக கோபப்படவில்லை. டெங்கு பற்றிய விவரங்களைத் தெளிவாக எடுத்துக் கூறினார். இது அடிப்படையில் சுகாதாரம் தொடர்பான பிரச்சினை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவைக் கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது, லாலுவின் கட்சியைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ரகுவம்ச பிரசாத் சிங், “”அமைச்சரவைக் கூட்டத்தில் அன்புமணியை எங்கள் தலைவர் (லாலு) ஒரு பிடி பிடித்துவிட்டார்” என்று ரகசியமாக செய்தியாளர்களிடம் “ஊதிவிட்டுச்’ சென்றார்.

அன்புமணியை லாலு சீண்ட முயற்சி செய்ததற்கு, மக்கள் மீது அவருக்கு இருக்கும் அக்கறையைவிட, அரசியல்தான் உண்மையான காரணம் என்று கூறப்படுகிறது.

சாலையோர உணவகங்கள் தொடர்பான ஆய்வறிக்கையை அன்புமணி புதன்கிழமை வெளியிட்டபோது, செய்தியாளர்கள் சிலர், “சாலையோர உணவகங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால் ரயில்களில் உணவு வழங்கும் பெட்டிகள் (பேன்ட்ரி கார்) மிக மோசமாகவும் தூய்மையின்றியும் பராமரிக்கப்படுவதைப் பற்றி நீங்கள் ஏன் கேட்கவில்லை? அது பற்றி ரயில்வே அமைச்சர் லாலுவிடம் பேசுவீர்களா?’ என்று கேட்டபோது, “அது பற்றி லாலுவிடம் பேசுவேன்’ என்று பதிலளித்தார்.

அதனால் கோபமடைந்த லாலு, வேண்டுமென்றே அன்புமணியைச் சீண்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அது மட்டுமன்றி, ஓரிரு மாதங்களுக்கு முன்பு தில்லி வந்திருந்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் லாலுவின் போக்கை வன்மையாகச் சாடியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில், “யாரும் எனக்குச் சான்றிதழ் தர வேண்டிய அவசியம் இல்லை’ என லாலு அடுத்த நாளே சொன்னார்.

அந்தக் கோபத்தை மனத்தில் வைத்துக்கொண்டு, அன்புமணியை அமைச்சரவைக் கூட்டத்தில் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்க முயற்சி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், அந்த முயற்சியில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

Posted in Anbumani, Cabinet, Dengue, Laloo Prasad Yadav, Lalu, Ministers, Ministry, PMK, Politics, Railways, Ramadoss, Reservations | Leave a Comment »

Chikun Kunya in Kerala – Anbumani Ramadoss gets condemned by Achuthananthan

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 6, 2006

சிக்குன்-குனியாவால் யாரும் சாகவில்லையா? அன்புமணிக்கு கேரள முதல்வர் கண்டனம்

திருவனந்தபுரம், அக். 6: சிக்குன்-குனியா காய்ச்சல் வந்து இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று அறிக்கை விடுத்ததற்காக மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணிக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார் கேரள முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன்.

மாநிலத்தின் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சரும், கேரள காங்கிரஸ் (எம்) தலைவருமான கே.எம். மணி எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினைக்குப் பதில் அளித்து கேரள சட்டப் பேரவையில் வியாழக்கிழமை பதில் அளித்தபோது இக் கண்டனத்தை அவர் வெளியிட்டார்.

“கேரள அரசிடமிருந்து எந்தத் தகவலையும் கேட்டுப் பெறாமலே அமைச்சர் தில்லியில் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்; எதிர்காலத்தில் இப்படிச் செய்யக்கூடாது என்று பிரதமர்தான் அவருக்கு அறிவுறுத்த வேண்டும். கேரளத்தில் உள்ள நிலைமையை நேரில் அறிய மத்திய அரசு அனுப்பிய நிபுணர்கள் குழு புதன்கிழமைதான் திருவனந்தபுரத்துக்கு வந்துள்ளது. இப்படி இருக்கும்போது, சிக்குன் குனியாவால் யாருமே, எங்குமே சாகவில்லை என்று அமைச்சர் அன்புமணி எப்படி அறிக்கை வெளியிட்டார் என்று தெரியவில்லை’ என்றார் முதல்வர் அச்சுதானந்தன்.

முன்னதாகப் பேசிய கே.எம். மணி, “”அன்புமணியின் அறிக்கை குழப்பத்தையே தருகிறது; கேரளத்தில் என்ன நிலைமை என்று கேட்டுத் தெரிந்துகொண்டு அவர் அறிக்கை வெளியிட்டாரா என்று தெரியவில்லை” என்றார்.

அமைச்சரவை முடிவு: கேரள அமைச்சரவை புதன்கிழமை கூடி, சிக்குன்-குனியா, டெங்கு, எலிக் காய்ச்சல் ஆகியவை கேரளத்தின் 10 மாவட்டங்களில் பரவியிருப்பது குறித்து கவலையுடன் பரிசீலித்தது. (மொத்தமே 14 மாவட்டங்கள்தான்).

மாநிலம் முழுவதும் தீவிர சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இதற்கு முதல் கட்டமாக ஒரு கோடி ரூபாயை ஒதுக்குவது என்றும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அத்துடன் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என்று 400 பதவி இடங்களுக்கு உடனே ஆள்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கேரளத்திலேயே, கிருமிகளைக் கண்டுபிடிக்கும் தனி ஆய்வகத்தை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

75 பேர் சாவு: இதுவரை கேரளத்தில் மட்டும் 75 பேர் சிக்குன்-குனியா காய்ச்சல் வந்த பிறகு இறந்திருக்கிறார்கள். அவர்களில் 68 பேர் ஆலப்புழை மாவட்டத்தில் இறந்திருக்கிறார்கள். இதுவரை ஒரு லட்சம் பேருக்கு இக் காய்ச்சல் வந்திருக்கிறது.

சுற்றுலாத் தொழிலும் பாதிப்படைந்திருக்கிறது. கேரளத்துக்கு வர சுற்றுலாப் பயணிகள் அஞ்சுகின்றனர். ஆலப்புழை, குட்டநாடு, குமரகம், கோவளம், கொல்லம் ஆகிய முக்கிய சுற்றுலா மையங்களில் சிக்குன்-குனியா பரவியிருக்கிறது.

அனைத்துக் கட்சிக் கூட்டம்: சிக்குன்-குனியா நோயைக் கட்டுப்படுத்தும் வழிகளைக் கண்டறிய முதல்வர் அச்சுதானந்தன், திருவனந்தபுரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புதன்கிழமை இரவு கூட்டியிருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் உம்மன் சாண்டி உள்ளிட்ட பிற கட்சித் தலைவர்கள் அதில் கலந்து கொண்டனர்.

முதலில் மாவட்ட அளவிலும் பிறகு வட்ட அளவிலும் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஊட்ட முடிவெடுத்தனர்.

Posted in Achuthananthan, Anbumani, Chicken Kunya, Chikun Gunya, Chikun Kunya, Chikunkunya, dead, Healthcare, Kerala, Misinformed, Outbreak, Ramadoss, Toll | Leave a Comment »