ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வாரா முலாயம்?
நீரஜா சௌத்ரி
தமிழில்: சாரி.
இலவசங்களை அள்ளி வழங்க, மீரட்டுக்குக் கடந்த வாரம் சென்றிருந்தார் உத்தரப் பிரதேச முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ்.
- வேலை இல்லாத இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் ஆறாயிரம் ரூபாய்,
- இன்டர்மீடியட் வரை படித்த பெண்களுக்கு இருபதாயிரம் ரூபாய் என்ற இரட்டைச் சலுகையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறார் முலாயம்.
யாதவர்கள், முஸ்லிம்களையும் தாண்டி பிற வகுப்பினரிடையேயும் தனக்கு வாக்கு வங்கிகள் ஏற்படும் என்று அரசியல் ஆதாயக் கணக்கு போடுகிறார் முலாயம்.
அத்துடன், தனது பழைய சோஷலிஸ்ட் சகா ஜார்ஜ் பெர்னாண்டஸ் சேர்த்துக் கொள்ளவும் முற்பட்டிருக்கிறார். ராம் மனோகர் லோகியாவிடம் அரசியல் பாலபாடம் பயின்று மது லிமாயே, கர்ப்பூரி தாக்கூர், சரண் சிங் ஆகியோரிடம் குருகுலவாசம் செய்த முலாயம் சிங் சமீபத்திய காலத்தில் அமிதாப் பச்சன், சுபவிரத ராய், அனில் அம்பானி ஆகிய செல்வச் சீமான்களிடம் நட்பு கொண்டார். சட்டப் பேரவைக்கு பொதுத்தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் ஜானேஸ்வர் மிஸ்ரா, வேணி பிரசாத் வர்மா போன்ற “”மறக்கப்பட்ட சமதர்ம சகாக்களை” மீண்டும் தோளோடு தோள் சேர்க்க ஆரம்பித்துள்ளார்.
மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) என்ற அமைப்பிலிருந்து, தனது நண்பரும் ஷியா பிரிவு முஸ்லிம்களின் மத குருவுமான ஜாவத் கல்பேயை விலக்கி, மீண்டும் தன் பக்கம் அழைத்துவந்துவிட்டார்.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனேயே உத்தரப் பிரதேசத்தில் அரசியல் அரங்கு சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. காங்கிரஸ், பாரதீய ஜனதா இரண்டும் வலுவிழந்த நிலையில் இருப்பதால், அவற்றின் வசம் இருந்த நகராட்சிகளை சமாஜவாதி கட்சி கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதே சமயம், எங்கும் எதிலும் ஊழல், சட்டம்-ஒழுங்கு நிலையில் சீர்குலைவு போன்றவற்றால் நடுத்தர வர்க்கம் சமாஜவாதி கட்சிக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. எல்லா வேலையும் யாதவர்களுக்குத்தான் தரப்படுகிறது, எங்கும் முலாயமின் உறவினர்கள் ஆதிக்கமே அதிகரித்து வருகிறது என்ற எண்ணமும் மக்களிடையே பரவி வருகிறது.
ஈரான் அணுசக்தி நிலையங்களை ஐ.நா. குழு பார்வையிடத் திறந்துவிட வேண்டும் என்று கூறியதாலும், அமெரிக்காவுக்கு ஆதரவாக வெளியுறவுக் கொள்கையில் விட்டுக்கொடுப்பதாலும் முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்காமல், தன்னையே முழு மூச்சாக ஆதரிப்பார்கள் என்று கருதுகிறார் முலாயம்.
ராஜபுத்திரர்களின் ஆதரவு நீடிக்கிறது என்பது முலாயமுக்கு மகிழ்ச்சியான விஷயமாகும். ராஜபுத்திரர்களும் பிராமணர்களும் என்றைக்கும் ஒரே அணியில் இருந்தது கிடையாது. இந்த முறை பிராமணர்கள், மாயாவதியை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர்.
அஜீத் சிங் தலைமையிலான ராஷ்ட்ரீய லோக தளம் கட்சி யாருடன் கூட்டு சேரப் போகிறது என்பது கவனிக்கப்பட வேண்டும். கடந்த பேரவைத் தேர்தலில் அக்கட்சி மேற்கு மாவட்டங்களில் 15 இடங்களை எளிதாகக் கைப்பற்றியிருக்கிறது. இப்போது ஆளும் கூட்டணியில் இடம் பெற்றாலும், தேர்தல் நேரத்தில் யாருடனும் அக் கட்சி கூட்டுசேர வாய்ப்பு இருக்கிறது.
இந்த முறை தேர்தல் முடிவை நிர்ணயிக்கப்போகிற முக்கிய சக்தி வி.பி. சிங்தான். அவரைப் பற்றித்தான் முலாயம் மிகவும் கவலைப்படுகிறார். இரண்டு நாளைக்கு ஒருமுறை சிறுநீரக சுத்திகரிப்பு செய்துகொள்ள வேண்டிய மோசமான உடல் நிலையுடன் உள்ள வி.பி. சிங்கின் பொதுக்கூட்டங்களுக்கு மக்கள் தாங்களாகவே பெரும் எண்ணிக்கையில் வருகின்றனர். அவருடைய விவசாயிகள் ஆதரவு, ஏழைகள் ஆதரவு பேச்சுகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு விவசாயிகள் இடையே பலத்த எதிர்ப்பு இருக்கிறது என்று உணர்ந்து கொண்டதால் இப்போது அடக்கி வாசிக்க ஆரம்பித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி.
முலாயம் சிங் யாதவுக்கு ஆதரவாளர்கள் யாரோ, அவர்களே வி.பி. சிங்குக்கும் ஆதரவாளர்களாக உள்ளனர். வி.பி. சிங்குக்கு பதவி ஆசை கிடையாது என்பது அவருக்குக் கூடுதல் பலம். வி.பி. சிங் அமைத்துள்ள ஜன மோர்ச்சா என்ற கதம்பக் கூட்டணியில்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,
- தேசியவாத காங்கிரஸ் கட்சி,
- ராஷ்ட்ரீய ஜனதா தளம்,
- ராம்விலாஸ் பாஸ்வானின் லோக ஜனசக்தி,
- உதித் ராஜின் நீதிக்கட்சி,
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்),
- பாரதீய கிசான் யூனியன்,
- மக்கள் ஜனநாயக முன்னணி,
- ராஜ் பப்பரின் ஜன மோர்ச்சா ஆகிய சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆட்சியைப் பிடிக்கிறதோ இல்லையோ, இக் கூட்டணி முலாயம் சிங் யாதவுக்கு எதிரான உணர்வை வளர்த்துக் கொண்டிருக்கிறது. இதனால்தான் முலாயம் சிங் கலக்கம் அடைந்திருக்கிறார்.
இந்தமுறை பேரவைத் தேர்தல் முலாயமுக்கு மிகப்பெரிய அக்னிப் பரீட்சையாக அமையக்கூடும். அவர் மட்டும் அல்ல, மற்றவர்களும் நம்பிக்கையோடு இல்லை. இம் முறையும் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு “”குதிரை பேரம்தான்” தலைதூக்கும் என்று தெரிகிறது.