கறுப்பு நாள்
மேற்கு வங்கத்தின் நந்திகிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பான பிரச்சினையில் வன்முறை ஏற்பட்டு போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் இறந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இடதுசாரி முன்னணியின் 29 ஆண்டுகால ஆட்சியில் இதற்கு முன் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்ததில்லை என்பதால் இது ஒரு கறுப்பு நாள் என்று மாநில அமைச்சர் ஒருவரே குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்கள் போராட்டத்தை ஒடுக்க போலீûஸப் பயன்படுத்துவதற்கு தாங்கள் எதிரானவர்கள் என்று கூறிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, இச் சம்பவம் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தி உள்ளது.
கோல்கத்தாவுக்கு தென்மேற்கில் 150 கிலோ மீட்டர் தொலைவில் நந்திகிராமம் உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் இந்தோனேசியாவின் சலீம் குழுமத்துக்கும் மாநில அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி அரசும், அந்த நிறுவனமும் தலா 50 சதவீத முதலீட்டில் 10 ஆயிரம் ஏக்கரில் ரசாயனத் தொழில் பூங்கா அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதற்கான நிலத்தை நந்திகிராமம் பகுதியில் கையகப்படுத்தப்போவதாக கடந்த டிசம்பரில் தகவல் வெளியானது. இதையடுத்து பிரச்சினை உருவானது. எனினும், உள்ளூர் மக்கள் சம்மதம் தெரிவித்தாலன்றி எந்த நிலமும் கையகப்படுத்தப்படமாட்டாது என்று முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறிவந்தார். மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் இத் திட்டம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.
இதற்கிடையே, விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்த முயற்சி மேற்கொள்வதாக தகவல் வெளியானதை அடுத்து அரசுக்கு எதிராக கடந்த ஜனவரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது 6 பேர் இறந்தனர்.
இந்த நிலையில் நந்திகிராமத்தின் முதல் பிளாக்கில் உள்ள 5 கிராமங்கள், நிர்வாகத்துடன் கடந்த இரண்டரை மாதங்களாக எவ்விதத் தொடர்பும் இன்றி இருந்தன. நிலம் கையகப்படுத்தப்படலாம் என்ற ஊகத்தில் அன்னியர் எவரும் கிராமப் பகுதியில் நுழைவதைத் தடுக்க சிலர் சாலைகளின் குறுக்கே பள்ளங்கள் தோண்டினர். பாலங்களை உடைத்தனர். நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று தெளிவுபடுத்தப்பட்ட பின்னரும் போலீஸôர் அல்லது அரசு ஊழியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
எனவே சாலைகள், பாலங்களைச் சீரமைக்க புதன்கிழமை பெரும் எண்ணிக்கையில் அக் கிராமப்பகுதியில் போலீஸôர் நுழைந்தனர். அவர்கள் மீது கற்கள், கையெறிகுண்டுகள் சகிதம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாயிற்று என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
சர்வதேச அளவில் போட்டியிடும் தன்மையை உருவாக்கவும், ஏற்றுமதிக்குச் சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தவும் நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க வகை செய்யும் கொள்கை 2000-ம் ஆண்டு ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மண்டலங்களில் உற்பத்தியாகும் பொருள்கள் அனைத்தும் முழுக்க முழுக்க அன்னியச் செலாவணிக்காகவும், ஏற்றுமதியை நோக்கமாகவும் கொண்டவை. ஆண்டுதோறும் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அன்னியச் செலாவணி பெருகி நாட்டின் பொருளாதாரம் மேம்பட இது உதவிகரமாக இருக்கலாம். ஆனால் அதற்காக விளை நிலங்களை அழித்து அதன் மீது தொழிற்சாலைகளை அமைக்கக்கூடாது. அது வேளாண் பொருள் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்தி, அவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு வழி வகுத்துவிடுவதோடு மட்டுமன்றி அத் தொழிலை நம்பியுள்ள பல கோடி மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதை அரசுகள் நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் இதுபோன்ற முக்கியமான பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட பகுதி மக்களுடன் ஆலோசனை செய்த பின்பே முடிவு எதையும் மேற்கொள்ள வேண்டும்.
————————————————————————————————————————–
Monday November 26 2007
மதிப்பை இழந்த மார்க்சிஸ்ட்
நீரஜா சௌத்ரி
மேற்கு வங்க மாநிலம், மிதுனபுரியில் உள்ள ஏதோ ஓர் இடம் என்பதைவிட கூடுதல் அர்த்தத்தைப் பெற்றுவிட்டது நந்திகிராமம்.
சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக நிலத்தைக் கையகப்படுத்த எடுத்த நடவடிக்கைக்கு எதிரான “போராட்டத்தின் மறுபெயர்’ என்பதைவிட விரிவான அர்த்தத்தைப் பெற்றுவிட்டது நந்திகிராமம்.
இத்தகைய சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. 1984-ல், சீக்கியரான தனது பாதுகாவலராலேயே இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்களின் தூண்டுதலின்பேரில் அப்பாவி சீக்கியர்கள் மீது அராஜகக் கும்பல்கள் தாக்குதல் நடத்தியதுடன் அவர்களை உயிரோடு எரித்துக் கொன்றனர். மூன்று நாள்களாக இந்த அராஜகம் தொடர்ந்துகொண்டு இருந்தபோதிலும் அரசுகள் கண்டுகொள்ளாமல் இருந்தன.
2002-ல் கோத்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த கரசேவகர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பழிதீர்க்கும் வகையில் குஜராத்தில் விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்க தளம், பாஜக ஆகிய அமைப்புகள் வன்முறையில் இறங்கின. இச்செயல்களுக்கு குஜராத் முதல்வரின் ஆதரவும் தூண்டுதலும் இருந்தன என்பது, அண்மையில் “தெஹல்கா’ பத்திரிகை நடத்திய புலனாய்விலிருந்து தெரியவந்துள்ளது.
நந்திகிராமத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் தலைமையில் பல கிராமங்களை மீண்டும் கைப்பற்றச் சென்ற ஆயுதம் தாங்கிய குண்டர்கள் பல பெண்களைக் கற்பழித்ததுடன், அப்பாவி மக்களைக் கொலை செய்து, அவர்களது வீடுகளையும் தீயிட்டுக் கொளுத்தியிருக்கின்றனர் என்பது அப் பகுதிக்குச் சென்று வந்த நிருபர்களின் செய்திகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேற்கண்ட மூன்று சம்பவங்களிலுமே “எதிர்ப் பிரிவினரு’க்குப் பாடம் புகட்டுவதற்காக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அரசும் துணைபோயிருக்கிறது அல்லது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அத் தாக்குதல்களுக்கு உதவி செய்திருக்கிறது.
ஆனால், நந்திகிராமத்தில் அரசு மேலும் ஒரு படி மேலே சென்றுவிட்டது. “”தார்மிக ரீதியில் சரியானது; நியாயமானது” என்று கூறி, அந்த வன்முறைத் தாக்குதல்களுக்குப் பகிரங்கமாக வக்காலத்து வாங்கியிருக்கிறது அரசு.
எதிர்க்கட்சியினருக்கு அவர்களது “”மொழியிலேயே பதிலடி” கொடுத்திருக்கின்றனர் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் என்று கூறியிருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா.
எந்தக் கட்சியையும் சாராதவரும், இடதுசாரிக் கட்சிகளின் ஒப்புதலுடன், அரசியல் சட்டப்படி நியமிக்கப்பட்ட நிர்வாகியுமான மேற்கு வங்க ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, “நந்திகிராமம் யுத்தகளமாகிவிட்டது’ என்று கூறிய பிறகும் மேற்கண்டவாறு பேசியிருக்கிறார் முதல்வர். மாநில உள்துறைச் செயலரும் ஆளுநரைப் போலவே கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
நந்திகிராமத்தில் அப்புறப்படுத்தும் வேலைகள் நடந்துகொண்டு இருந்தபொழுது, எந்த நிருபரும் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. 1984-ல் தில்லியிலோ அல்லது 2002-ல் குஜராத்திலோ இந்த நிலை இருக்கவில்லை.
“நந்திகிராமத்தில் உள்ள கிராமங்களின் கட்டுப்பாட்டை மாவோயிஸ்டுகள் தமது கைகளில் எடுத்துக்கொண்டுவிட்டனர்; ஒரு மாநிலத்துக்குள்ளேயே அப் பகுதியில் தனி அரசை அவர்கள் ஏற்படுத்தியிருந்தனர்; மார்ச் மாதம் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினரை மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்ப அவர்கள் அனுமதிக்கவில்லை’ என்று கூறி, இப்போது நடந்திருக்கும் சம்பவங்களை மார்க்சிஸ்ட் தலைவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.
நந்திகிராமத்தில் வேதியியல் தொழில்பேட்டையை அமைப்பதை எதிர்த்து முதன்முதலில் கட்சி ஆதரவாளர்களைத் திரட்டி போராட்டத்தைத் தொடங்கியது மார்க்சிஸ்ட் கட்சிதான். முதலில் மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு எதிரான மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டமாகத்தான் அது இருந்தது. பிறகுதான் மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ், ஜமாத்-இ-உலேமா ஹிந்த், எஸ்யுசிஐ மற்றும் மாவோயிஸ்டுகள் ஆகியோர் நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து போராடிக்கொண்டு இருந்தவர்களுடன் இணைந்தனர்.
ஒரு பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இரு குழுக்கள் மோதிக்கொண்டதல்ல இங்கு பிரச்னை. ஒரு ஜனநாயக அமைப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் ஓர் அரசு செயல்பட்டு இருப்பதுதான் இங்கு பிரச்னை. சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படுவதற்கு எதிரான போராட்டத்தை நசுக்க மார்ச் மாதம் மாநில போலீûஸ மார்க்சிஸ்ட் அரசு பயன்படுத்தியபோது, துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியாயினர்; அது உயர் நீதிமன்றத்தால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது.
எனவே, இப்போது போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீஸýக்குப் பதிலாகத் தனது கட்சித் தொண்டர்களையும் சமூகவிரோத சக்திகளையும் ஈடுபடுத்திவிடலாம் என்று மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்துவிட்டதுபோலும். போலீஸ் அதில் நேரடியாக ஈடுபடவில்லையென்றபோதிலும், வன்முறைத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டவர்களுக்கு ஆதரவாக பகிரங்கமாக முதல்வரே பேசிய பிறகு, நிராயுதபாணியான அப்பாவி மக்களைக் காக்க வேண்டிய கடமையிலிருந்து முற்றிலுமாகத் தவறிவிட்டது போலீஸ்.
அடுத்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், தனது கட்டுப்பாட்டை அப் பகுதியில் மீண்டும் நிலைநாட்ட மார்க்சிஸ்ட் கட்சி நினைத்திருந்தாலும் சரி, கட்சிக்கு எதிராகச் சென்றால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை உணர்த்த நினைத்திருந்தாலும் சரி, அது இப்போது அக் கட்சிக்கு எதிர்விளைவை ஏற்படுத்திவிட்டுவிட்டது.
நந்திகிராமத்தில் உள்ள கிராமங்களை மீண்டும் கைப்பற்றி, அங்கு மார்க்சிஸ்ட் கட்சி தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டிவிட்டால், இப்போதைக்கு அதற்கு எதிர்ப்புக் குரல் எழுந்தாலும், இறுதியில் யதார்த்த நிலையை அனைவரும் ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்று அக் கட்சி கருதியிருக்கக்கூடும்.
நந்திகிராம வன்முறை குறித்து எதுவும் கூறாமல் மெüனமாக இருக்கிறது காங்கிரஸ். பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி போன்றவர்களின் வற்புறுத்தலால்தான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் இந்த வன்முறை குறித்து ஒரு தீர்மானம், அதுவும் மார்க்சிஸ்ட் பற்றி குறிப்பிடாமல் நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆதரவாளராக இடதுசாரிகள் இல்லாதிருந்திருந்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது தாக்குதல் தொடுப்பதற்குக் கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல் விட்டிருக்காது, மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ்.
கோல்கத்தாவில் ஒரு லட்சம் பேர் நடத்திய மெüன ஊர்வலத்தில் எழுத்தாளர்களும் ஓவியர்களும் திரைப்பட நட்சத்திரங்களும் பங்கேற்று இருப்பதிலிருந்தே மக்களின் கோபம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உணர முடியும்.
இடதுசாரி முன்னணியில் இருந்து விலகிவிடவில்லையெனினும், மார்க்சிஸ்ட் கட்சியின் கூட்டணிக் கட்சிகளேகூட அதன் நடவடிக்கையை விரும்பவில்லை. புரட்சிகர சோசலிஸ்ட் சிறிய கட்சியாக இருந்தபோதிலும், ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அமைச்சரவையில் இருந்து தனது அமைச்சர்களைத் திரும்பப் பெறப் போவதாக எச்சரித்தது.
நந்திகிராம கறையைக் கழுவ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நீண்ட காலம் ஆகும். தேர்தலில் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். 30 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கிறது அக் கட்சி. ஆனால், அதற்கு எதிராக உருவாகிக்கொண்டு இருக்கும் எதிர்ப்புக்கு ஒரு புதிய கோணத்தைக் கொடுத்திருக்கிறது நந்திகிராமம்.
ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் மீது அக்கறை கொண்ட கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சி இனம் காணப்பட்டு இருந்தபோதிலும், அதுவும் தனது சொந்த குறுகிய நலனைக் கருத்தில் கொண்டு செயல்படக்கூடியதே என்பதைக் கடந்த இரு வாரங்களாக நடந்துவரும் சம்பவங்கள் காட்டிவிட்டன.
அணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் அக் கட்சி எடுத்த நிலையை இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையையும் முடிவெடுக்கும் இறையாண்மை அதிகாரத்தையும் உறுதி செய்வதற்கான போராட்டமாகப் பலர் கருதினர்; அது மக்களில் குறிப்பிட்ட பகுதியினரிடம் அக் கட்சிக்கு நற்பெயரையும் பெற்றுத் தந்திருக்கும் நேரத்தில் இச் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறது அக் கட்சி.
தனது அதிகாரத்தை நிலைநாட்ட எந்த அளவுக்கு அக் கட்சி தரம்தாழ்ந்து செல்லும் என்பதை நந்திகிராம நடவடிக்கை காட்டிவிட்டது. அதைவிட முக்கியமாக, சட்டத்தின் ஆட்சிக்கும் ஜனநாயக முறைகளுக்கும் அக் கட்சி என்ன மதிப்பு கொடுக்கிறது என்பதையும் அச் சம்பவம் அம்பலப்படுத்திவிட்டது.